Jeyamohan's Blog, page 2273
November 9, 2011
கடவுளை நேரில் காணுதல்
அன்புள்ள ஜெமோ,
வணக்கம். எனக்கு வெகு நாட்களாக உள்ள ஒரு சந்தேகம் , சில சமயம் அபத்தமாகவும் உள்ளது, சில சமயம் சுவாரஸ்யமாகவும் உள்ளது. அதாவது இந்து புராணங்களில் திரும்ப திரும்ப வருவது 'தவம் செய்தான் , கடவுள் தரிசனம் தந்தார்' என்ற காட்சி. புத்தரின் சரித்திரத்தில் அவர் நிர்வாண நிலை அடைவதற்கு முன்பு 5 பேருடன் சேர்ந்து உக்கிரமான தவத்தில் ஈடுபட்டார் என்றும் , மிகக்குறைந்த உணவினால் ஏறக்குறைய சாகும் நிலைக்கு வந்து பிறகு வேறு பாதைக்கு மாறினார் என்றும் படித்தேன். புராணங்களில் இப்படி இருக்கிறது என்றால் , அதற்கு முன்பே இது போல கடவுளை நேரில் கண்ட தொனமங்கள் இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.
இது போன்ற தொனமங்கள் தோன்றுவதற்கு அடிப்படை அதீத கற்பனையா,இல்லை உண்மையிலேயே தியானத்தில் / ஒரே சிந்தனையில் பல நாள் இருந்ததினால் 'கடவுளை' காண முடிந்த ஒரு பிரம்மையா அல்லது தவத்தை முடிக்க வேண்டிய கட்டாயமா அல்லது ஒருவித மனத்திருப்தியா அல்லது ஒருவிதமான illusion or hallucination or delusion தோன்றி இருக்குமா?
இது பற்றி நீங்கள் எழுதி உள்ளீர்களா என்று தேடினேன் , கிடைக்கவில்லை.இது பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவலாய் இருக்கிறேன். புராணங்கள் எப்போதோ நடந்தவை என்ற என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த கேள்வி இல்லை, மாறாக அப்படி எழுத/கற்பிக்க தூண்டிய psychological feature பற்றியே எனது ஆவல்.
பணிவன்புடன்
கோகுல்
[image error]
அன்புள்ள கோகுல்,
சுவாரசியமான ஒரு கதையுடன் தொடங்கலாம். கார்ல் சகன் எழுதிய தொடர்பு [contact] என்ற அறிவியல்புனைகதையில் கதைநாயகி எல்லி ஓர் ஆய்வகத்தில் விண்வெளியில் வேற்றுயிர்கள் உள்ளனவா என்ற ஆய்வில் ஈடுபட்டிருக்கிறாள். விண்ணில் இருந்து வரும் சமிக்ஞைகளை கண்காணிக்கும் கருவிகளில் ஒருநாள் ஒரு செய்தி வர ஆரம்பிக்கிறது. அச்செய்தியை புரிந்துகொள்கிறார்கள். அது ஒரு இயந்திரத்துக்கான வரைபடம்.
அந்த இயந்திரம் செய்யப்படுகிறது. அதில் எல்லி நுழைந்து பிரபஞ்சத்தின் வெப்பத்துளைகள் வழியாக அதன் குறுக்காக அகாலத்தில் பயணம் செய்து பால்வழியைத்தாண்டி ஒளிவருடக்கணக்குகளுக்கு அப்பால் செல்கிறாள். அங்கே அவள் பிரபஞ்சத்தில் மிகமிக ஆரம்பத்தில் தோன்றிய உயிர்களை, அல்லது பிரக்ஞைகளை சந்திக்கிறாள். அவர்கள் பரிணாமத்தில் பற்பல படிகள் முன்னால் சென்றிருக்கிறார்கள். பல்வேறு பால்வீதிகளில் வாழ்ந்து வாழ்ந்து கைவிட்டுச்சென்றிருக்கிறார்கள். இப்போது அவர்கள் பிரபஞ்சத்தின் அதிபர்களாக, பிரபஞ்சத்தை மேலும் மேலும் கட்டி எழுப்பிக்கொண்டிருக்கும் படைப்பாளிகளாக இருக்கிறார்கள்.
அந்தப் பரிணாமத்தில் அவர்களின் அகம் விரிவடைந்து பேரறிவாகவும் ஒட்டு மொத்தபிரக்ஞையாகவும் மாறி விட்டிருக்கிறது. அதற்குமேல் உடல் தேவை இல்லை என்பதனால் உடலற்றவர்களாக ஆகிவிட்டிருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு காலமும் இடமும் இல்லை. தூயபிரக்ஞையாகவே அவர்களால் எல்லியின் பிரக்ஞையுடன் உரையாட முடிகிறது. ஆனால் எல்லியால் அவர்களை தன்னுடைய எல்லைக்குட்பட்ட பிரக்ஞையால் அறியமுடியவில்லை. அது அவளுக்கு பெரும் தவிப்பை உருவாக்குகிறது.
ஆகவே அவர்களில் ஒருவர் அவளுக்கு ஒரு பெரிய மெய்நிகர் உலகை உருவாக்குகிறார். எல்லி சிறுவயதில் தந்தையை இழந்தவள். அவள் நினைவில் அவள் தன் தந்தையுடன் செலவிட்ட கடற்கரை இளவெயிலொளியுடன் அழியா நினைவாக இருந்துகொண்டிருக்கிறது. அந்த நினைவை அவள் பிரக்ஞையில் இருந்தே எடுத்துக்கொள்ளும் அந்த பிரபஞ்சப்படைப்பாளிகளில் ஒருவர் அந்த கடற்கரையை 'உண்மையில்' உருவாக்கி அந்த கடற்கரையில் அவளுடைய தந்தையாக 'உண்மையாக' வந்து அவளுடன் உரையாடுகிறார்.
உலகப்புகழ்பெற்ற அறிவியல் அறிஞரான கார்ல் சகனால் துல்லியமான அறிவியல் தகவல்களுடன் எழுதப்பட்ட இந்த நாவல் அதன் அறிவியலின் எல்லையை மீறி கவித்துவம் நோக்கிச் செல்லும் தருணம் இது. பொதுவாக எந்த அறிவியல் புனைகதைக்கும் இல்லாத இலக்கியத்தகுதியை இந்நாவல் அடைந்தது.
இந்த உச்சகட்டம் மிக முக்கியமான ஒரு சாத்தியப்புள்ளியை தொட்டுக்காட்டுகிறது. காலத்தின், பிரபஞ்சத்தின், ஆற்றலின், பிரபஞ்சக்கருத்தின் முடிவின்மையைச் சந்திக்க நேரும் மானுடப்பிரக்ஞை எவ்வாறு அதை உள்வாங்க முடியும்? எந்த அளவுக்கு அதை தன் பிரக்ஞையால் அள்ள முடியும்? எந்த அளவுக்கு அதை வெளிப்படுத்த முடியும்?
மனிதப்பிரக்ஞை என்பது மனித உடலில் இருந்து விடுபட முடியாதது. விடுபடும் என்றுகொண்டாலும்கூட அது ஓர் உச்சநிலையில் மட்டுமே சாத்தியம். நாம் நம் இருப்பை நம் உடலைக்கொண்டே உணர்கிறோம். அதுவே நம்முடைய சாத்தியங்களின் எல்லை.. மானுட உடல் கால-இடத்தில் அமைந்திருப்பது. ஆகவே நம் அகம் என்பது நாம் நம் உடலின் புலன்கள் மூலம் உணரும் தூலஅறிதலின் நுண்வடிவமாகவே உள்ளது. படிமங்களாலும் மொழியுருவகங்களாலும்தான் நாம் நம் அகத்தை உணரமுடிகிறது, வெளிப்படுத்த முடிகிறது. அகால இருப்பு, தூலமே அற்ற நுண் இருப்பு என்பது சாதாரணமாக நம் அறிதல்களுக்கு அப்பாலுள்ளது.
எல்லியின் அறிதலின் எல்லையும் அதுதான். அவளால் அவளுடைய உடல்சார்ந்த இருப்பைவிட்டு வெளியே பிரக்ஞையை கொண்டுசெல்லமுடியவில்லை. ஆகவே அந்த பிரபஞ்சபிரக்ஞைகளை அவளால் உள்வாங்க முடியவில்லை. அதனால் அவர்கள் கனிந்து இறங்கி வந்து ,அவளுடைய எல்லைக்குள் நுழைந்து, தங்களை அவகளுக்காக உருவாக்கிக் காட்டுகிறார்கள்.
அந்த பிரபஞ்ச ஆளுமைகளை ஒரு வசதிக்காக கடவுள்கள் என உருவகித்துக்கொண்டால் கார்ல் சாகன் காட்டும் இந்நிகழ்வு அப்படியே எந்த ஒரு இந்து தொன்மத்துக்கும் சமானமானதாக ஆகிவிடுகிறதல்லவா? வேறு வழியே இல்லை, இந்நாவலின் உச்சத்தை இப்படி மட்டுமே சித்தரிக்கமுடியும்.
இன்னொரு வழி உள்ளது . எல்லி அவளுடைய உடல்சார் இருப்பை உதறி பிரபஞ்ச பிரக்ஞையாக அவளே மாறி அவர்களைச் சந்திக்கமுடியும்.
அதாவது கடவுள் மனிதனாக வேண்டும். அல்லது மனிதன் கடவுளாகவேண்டும். அந்த இருவழிகளிலும் இந்து புராணமரபு கடவுளை சந்திக்கும் தருணத்தை எழுதியிருக்கிறது. புராணம் எழுதிய ரிஷி எப்படி அதை சொல்ல முயல்கிறாரோ அதைத்தான் நவீன வானியலறிஞரும் முயல்கிறார்.
இந்திய ஞானிகளின் இறையுணர்ச்சியை மேலைநாட்டு அறிவியலாளர்கள் அவர்களின் நிரூபணவாத அறிவியல் நோக்குடன் ஆராய்ந்து நிறையவே எழுதியிருக்கிறார்கள். தியானம் போன்றவை தொடர்ச்சியான தனிமை மூலமும், செயலின்மை மூலமும் கடுமையான சலிப்புணர்ச்சியை உருவாக்கிக்கொண்டு அடையப்படும் பிரமைக்காட்சிகள் என்பதே அவர்கள் பொதுவாகச் சொல்லும் விளக்கமாக இருக்கிறது.
ஆனால் ஒவ்வொரு இலக்கியவாசகனும் அன்றாடம் அடையும் சாதாரண இலக்கிய அனுபவத்தை அந்த அறிவியல் மூலம் அவர்கள் விளக்கும்போதே அது எந்த அளவுக்கு அபத்தமானதாகவும் போதாததாகவும் இருக்கிறது என நாம் உணர்கிறோம். அவர்களே பத்து வருடத்துக்கு ஒருமுறை ஒரு விளக்கத்தை மறுத்து அடுத்த விளக்கத்தை முன்வைக்கவும் செய்கிறார்கள். பிரபஞ்சஅனுபவம் போன்ற ஒன்றை எப்படி அவர்கள் தங்கள் தர்க்கங்கள் மூலம் விளக்கிவிடமுடியும்?
எல்லி அவளுடைய பிரபஞ்சப்பயணம் முடித்து திரும்பி வருகிறாள். அவள் பலப்பல ஒளிவருடங்கள் பயணம் செய்து வந்திருக்கிறாள். ஆனால் எல்லா பதிவுகளும் அழிந்துவிட்டிருக்கின்றன. காரணம் இந்த உலகின் எளிய தொழில்நுட்பத்தால் அந்த பயணத்தை பதிவுசெய்ய முடியாது. அவள் இயந்திரத்துக்குள் இருந்த காலம் பூமியின் கணக்குப்படி இருபது நிமிடங்கள். அவள் சொன்னதை எவருமே நம்பவில்லை. அவள் மட்டுமே அறிந்த ரகசியமாக, ஒரு மெல்லிய புன்னகையாக அவளில் தங்கிப்போன ஒன்றாக அந்த ஞானம் எஞ்சுகிறது.
அதுதான் ஞானிகளின் நிலை. அவர்கள் எப்படி அந்த அலகிலா அறிதலை உள்வாங்கிக்கொள்ளமுடியும்? ஒன்று தங்கள் அறிதலின் எல்லைக்குள் அதைக் கொண்டுவந்து அள்ளிக்கொள்ள முடியும். அதாவது தங்களுக்குள் இருக்கும் படிமங்களால் அதை தனக்கென அறிந்து கொள்ளமுடியும். அல்லது தங்கள் சுயத்தை முழுமையாக அழித்துக்கொண்டு அதுமட்டுமாக ஆகி அதை அறிய முடியும். அந்த இருவகை அறிதல்களையுமே இந்திய மதங்களில் நாம் காணலாம். பலசமயம் அருகருகே காணலாம். ஏராளமான பாடல்களில் அவ்விரு அறிதல்களுமே ஊடும்பாவுமாக பின்னி வெளிப்படுவதைக் காணலாம்.
புத்தரின் கதையில்கூட அவர் அடைந்த உச்ச அனுபவம் தூய அறிதலாக, தன்னை இழந்து அதுவாக ஆகி விரித்துக்கொள்ளும் நிலையாக முன்வைக்கப்படுகிறது. ஆனால் அதுவரையிலான பயணம் எல்லாமே உருவகங்களின் தரிசனங்களகவே இருக்கிறது. அவர் தன் தியானத்தில் மாரனை நேரில் காண்கிறார்.
ஒரு பிரபஞ்ச அனுபவத்தை ஒரு மெய்ஞானி முருகனாக, பெருமாளாக, ஏசுவாக 'நேரில்' காண்பதை நான் இப்படித்தான் புரிந்துகொள்கிறேன். அந்த வடிவங்கள் இங்கே உள்ள மதமரபால் அவர் ஆழ்மனத்தில் மிகச்சிறிய வயதிலேயே நடப்பட்டவை. அவரது கற்பனையால் ,தியானத்தால், நீரூற்றி வளர்க்கப்பட்டவை. அவர் அவ்வடிவங்கள் வழியாகவே சென்றார் என்றால் உச்சகணத்தில் பிரபஞ்ச அனுபவம் அவருக்கு மிக அந்தரங்கமான அந்த வடிவத்தை அடைகிறது.
அதாவது அந்த வடிவங்களை குவளையாகக் கொண்டு அவர் அந்த கடலை அள்ளுகிறார். அந்த அனுபவம் தன்னை அவ்வடிவங்கள் மூலம் அவருக்குள் நிகழ்த்திக்கொள்கிறது. எல்லிக்கு நிகழ்ந்தது போல. அவரால் அதை அந்த படிமங்கள் அல்லது உருவகங்கள் வழியாகச் வெளிப்படுத்த முடியலாம்.
அலகிலா வெளியாக அந்த பிரபஞ்ச அனுபவத்தை உணர்பவர் தன்னை முழுமையாக இழக்கிறார். அவரால் தன்னிலையை உணர முடிவதில்லை. நாராயணகுரு சொல்வதுபோல 'அறிவும் அறிபவனும் அறிதலும் அறிபடுபொருளும் ஒன்றேயாகும் நிலை' அது. உப்புபொம்மை கடலை அறிதல் போல என ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்கிறார். அந்த அனுபவத்தை அவர் தத்துவார்த்தமாக ஓர் எல்லைவரை விளக்கலாம். ஒருவேளை ஒரு தகுதியான மாணவனுக்கு கொஞ்சம் புரியவைக்கவும் கூடும்.
பிரமை அல்லது மனப்பிறழ்வுக்காட்சி அல்லது சுயஏமாற்று என்றெல்லாம் இந்த பேரனுபவத்தை முத்திரைகுத்திவிட்டு செல்லலாம்தான். அதை தங்கள் நிரூபணவாத அறிவியல் மீது முடிவிலா நம்பிக்கை கொண்ட வெள்ளையர் சிலர் செய்வதில் ஆச்சரியமும் இல்லை. ஆனால் அது அறிய விரும்புபவனின் வழி அல்ல. அது நிராகரிக்க விரும்புவனின் வழி.
அந்த பேரனுபவத்தை பெற்றவர்கள் என அறியப்படுபம் ஞானிகள் எவரும் பிரமைக்கும், மனப்பிறழ்வுக்கும், மெய்யனுபவத்துக்கும் வேறுபாடு சொல்லத்தெரியாத அசடுகளோ மனநோயாளிகளோ எத்தர்களோ ஆக இருக்கவில்லை. நம்மில் மிகச்சிறந்த அறிவியலாளர்களை விட தெளிவான தர்க்கக் கொண்டவர்களாக, நம்மில் மிகச்சிறந்த கவிஞர்களை விட துல்லியமான கற்பனை கொண்டவர்களாக, நாம் ஒவ்வொருவரையும் விட தெளிந்த நடைமுறைப்பிரக்ஞை கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். தத்துவநூல்களையும் கவிதைகளையும் எழுதியிருக்கிறார்கள். சர்வசாதாரணமான லௌகீக விஷயங்களில்கூட மிக நுட்பமான நடைமுறை தீர்வுகளைச் சொல்லியிருக்கிறார்கள்.
அவர்கள் அடைந்த அந்த அனுபவம் இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதை அறியமுடியாதவர்களின் பிடியில் இருந்து ஒவ்வொருமுறையும் நழுவிக்கொண்டிருக்கிறது. அந்த பிரபஞ்ச அனுபவம் அனுபவம் என்ன? அதை என்னால் சொல்லமுடியாது. நான் அதை அறிந்தவனல்ல. ஆனால் நான் முழு உறுதியுடன் சொல்கிறேன், அந்த அனுபவம் மானுட சாத்தியமென்பதை நான் என் சொந்த அனுபவத்தால் அறிவேன்
தியானத்தின் இரண்டாம் படிகளில் அந்த உச்ச அனுபவத்தின் சிதறலனுபவங்கள் பலவற்றை அடைவோம். பலசமயம் அவை எதிர்மறையானவை. மிகத்துல்லியமான மெய்யனுபவங்கள் அவை. நம் எல்லா புலன்களும் உண்மையாகவே அபாரமான, பயங்கரமான பல வடிவங்களை அறியும். நம் முன் நம்மருகே அவை 'உண்மையிலேயே' இருக்கும்.
அவை என்ன? பிரமைகள் என எளிதாகச் சொல்லிவிடலாம். மனப்பிறழ்வு என்று விளக்கலாம். ஆனால் அந்த அனுபவத்தை அறிந்தவனுக்கு தெரியும் அவை பிரமைகளோ பிறழ்வோ அல்ல என. அவன் மிகத்தெளிவாக மிக சமநிலையுடன் இருப்பதை அவன் அறிவான். நித்யா அதை The Projection என்று சொல்வார். நம்முள் உள்ள, நம்மைச்சுற்றி உள்ள ஒரு விஷயம் தன்னை அந்த வடிவில் வெளிப்படுத்திக்கொள்கிறது. ஒரு மரக்கிளையை அசைத்து காற்று தன்னை காட்டிக்கொள்வதுபோல
அந்த தூலவடிவம் நம்முடைய ஆழ்மனதில் எங்கோ உள்ளது. நமக்கு நம் மரபு தருவது. நம் அனுபவங்கள் மூலம் நாம் திரட்டி உள்ளே வைத்திருப்பது. நாம் அறியும் அந்த அருவமான அகக்கூறு தன்னிச்சையாக அந்த தூலவடிவத்தை அந்தக் கணத்தில் எடுத்துக்கொண்டு, தன்னைக் காட்டுகிறது, அவ்வளவுதான். அவ்வாறு நூற்றுக்கணக்கான அகநிகழ்வுகள் தன்னை வெளிப்படுத்தும் அந்த கட்டம் தியானத்தில் மிக ஆபத்தானது. சரியான வழிகளினூடாக கடந்துசெல்லவேண்டியது.
ஹரி சிங்கமுகமூடியுடன் தன் தங்கை முன் வருகிறான். தங்கை பயந்து அலறுகிறாள். ஹரி முகமூடியை அகற்றியதும் தங்கை சிரிக்கிறாள். ராமகிருஷ்ணர் சொன்ன உதாரணகதை இது. அந்த சிதறும் பிம்பபெருவெளியை ஒற்றை பிம்பமாக தொகுத்துக்கொள்ள இங்கே அவர் வழிகாட்டுகிறார். எல்லா வடிவங்களும் ஒன்றின் முகங்களே என உணர்வதே ராமகிருஷ்ணர் அளிக்கும் நெறி. அது ஓர் உச்சநிலை அறிதல்.
புராணங்களில் 'தவம் செய்து கடவுளைக் கண்டான்' என மிக எளிதாக அந்த அறிதலே சொல்லப்பட்டுள்ளது. புராணங்களைப்பொறுத்தவரை ஓர் உண்மை உள்ளது, அவற்றில் மிக எளிதாக எது சொல்லப்படுகிறதோ எது மிக அடிக்கடி வருகிறதோ அதுவே மிக முக்கியமானது, மிகமிக நுட்பமானது
ஆன்மீகம் தேவையா?
நான் இந்துவா?
தத்துவம் தியானம்-கடிதம்
யோகம் ஞானம்
யோகம் ஒருகடிதம்
ஆன்மீகம் போலி ஆன்மீகம்
தியானம்
தியானம் ஒரு கடிதம்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
November 8, 2011
சமணம்,சாதிகள்-கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் இயற்பியலில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறேன். நேற்று நான் உங்களை புதுச்சேரி இல் சந்தித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
உங்களுடைய பயண கட்டுரைகளின் தூண்டுதலினால் நானும் வாரம் ஒருமுறை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு சென்று வருகிறேன். அப்படி சென்ற இடங்களில், சிலவற்றை குறிப்பாக பழைய தொண்டை நாட்டு சமண கோவில்களை பற்றி நான் இணையத்தில் பதிவு செய்தவற்றை இங்கு இணைத்து இருக்கிறேன்.கடந்த ஓராண்டு காலமாக இணையம் வழியாக உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். உங்கள் பெரும்பாலான கட்டுரை நூல்களை படித்துவிட்டேன். குறிப்பாக இன்றைய காந்தி என்னை மிகவும் பாதித்த நூல்.விஷ்ணுபுரம் எனக்கு ஒரு சவாலாகவே இருக்கிறது. எப்படியும் படிப்பேன்.
I) Wikipedia article
Thirakoil wikipedia article
II) Wikimapia Additions
1) Arugan jain temple, Poondi, Arani.
2) Ponnur jain Temple
3) Elangadu Jain Temple
4) Kilsathamangalam Jain temple
5) Thunandar Rock cut jain temple, Seeyamangalam
6) Perumal Parai (jain inscriptions)
7) Thirakoil Jain temple
8.) Seenapuram Jain Temple
9) Jain Ahimsa Trust, Kund kund nagar
10) vizhukkam jain temple
11) Jain-Cave-Parsawanathar
இதில் திறக்கோயில் பற்றி எழுதியது என்னுடைய நண்பர் ராஜேஷ் கண்ணன். மேல்சித்தாமூர்- ஐ போலவே போளூர்க்கு அருகில் இருக்கும் திருமலை சமண மடமும் முக்கியமானது ( http://www.youtube.com/watch?v=zQAjry...). இந்த சமணர் கோவிலுக்கு அருகில் வாழும் சமணர்கள் அனைவருமே நூறு சதம் விவசாயிகள் (எனினும் இப்போது இருக்கும் தலைமுறையினர் கல்வி கற்று வெளியூர் சென்று விட்டனர்)என்பது எனக்கு ஆச்சரியம் ஊட்டியது. இன்னும் பல இடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது. கண்டிப்பாக அதை பற்றி உங்களுக்கு மெயில் செய்வேன்.
தமிழ்நாட்டில் இருக்கும் சமணர் கோவில் புகைப்படங்களுக்கு கீழ்கண்ட இணையத்தளம் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
(http://www.jainworld.com/jaintemples/...)
நேற்று நடந்த கூட்டத்தில் நான் கேட்க விரும்பிய கேள்வி இப்போது கேட்க விரும்புகிறேன். பௌத்த சமண மதங்கள் கோலோச்சிய காலகட்டங்களில் பஞ்சமர்கள் என்றொரு பிரிவு இருந்ததா? அல்லது நால் வருண பாகுபாடு மட்டும் இருந்ததா? நாள் வருண பாகுபாடு மட்டும் இருந்தது என்றால், சூத்திரர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள்? தீண்டாமை என்பது வைதீகத்தின் உருவாக்கமா?
என்றும் தங்கள் அன்புள்ள,
க. சரவணக்குமார்
அன்புள்ள சரவணக்குமார்
மிக முக்கியமான பணி. நான் இந்த எல்லா இடங்களுக்குமே செல்லவேண்டுமென்ற திட்டத்துடன் இருக்கிறேன்
உங்கள் கேள்விக்கு மிக விரிவாகவே பதில் சொல்லவேண்டும். மூன்று அடிப்படைப்புரிதல்களை மட்டும் சொல்லிவிடுகிறேன்
ஒன்று, சாதிக்கும் வருணத்துக்கும் சம்பந்தமில்லை. சாதி இந்தியாவிலிருந்த பலநூறு பழங்குடி இனங்கள், குலக்குழுக்கள் ஒரு பொது சமூகமாக திரட்டப்பட்டபோது உருவானது. மேல் கீழ் அடுக்கு உருவாகாமல் நிலவுடைமைச் சமூக அமைப்பு உருவாக முடியாது என்பதனால் சாதி அதிகார அமைப்பாகவே உருவாகி அப்படியே நீடித்தது. வருணம் என்பது அந்த சாதிகள் மேல் போடப்பட்ட ஒரு பொதுவான அடையாளம் மட்டுமே. எந்த சாதி எந்த வருணத்தைச் சேர்ந்தது என்பது எப்போதுமே பிரச்சினைக்குரியதாக, தோராயமானதாக மட்டுமே இருந்தது.
இரண்டு, சாதி ஒடுக்குமுறைக்காக உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல. சமூகத்தை கட்டி எழுப்புவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று. அதன் பங்களிப்பு முற்றிலும் எதிர்மறையானது அல்ல. அதுதான் பலவகைப்பட்ட மக்களால் ஆன இந்திய சமூகத்தை ஒரே சமூகமாக நாடுகளாக ஆக்கியது. கூடவே அது மேல் கீழ் அமைப்பை உருவாக்கியது. அடிமைத்தனத்தையும் சுரண்டலையும் உருவாக்கியது.
மூன்று, சாதிக்கும் நில உடைமை அதிகாரத்துக்கும் நேரடி தொடர்பு உண்டு. எந்தச் சாதி நிலம் வைத்திருக்கிறதோ அது மேலே செல்லும். நிலத்தை இழந்தால் கீழே செல்லும்
சாதியமுறை தமிழகத்தில் வரலாற்றின் ஆரம்பம் முதல், சங்ககாலத்துக்கும் முன்னாலேயே, இருந்து வந்தது. சொல்லப்போனால் சாதி வழியாகவே நம் சமூகம் உருவாகி வந்தது. அதுதான் நம் சமூகத்தை தொகுத்தது. நில அதிகாரம் மாறமாற சாதிகள் சில மேலே சென்றன , சில கீழே சென்றன.
பௌத்த சமண காலகட்டத்தில் நில உடைமையுடன் மேலே நின்ற சாதிகள் பௌத்தமும் சமணமும் வீழ்ந்தபோது நிலத்தை இழந்து கீழே சென்றன என்பதுதான் பரவலாக பேசப்படும் கொள்கையாக உள்ளது
நாம் மீண்டும் சந்திப்போம்.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
துயரம்
கல்கியின் சமணம்
அயோத்தி தாசர்-கடிதங்கள்
அயோத்திதாசர் என்னும் முதல்சிந்தனையாளர்-5
அயோத்திதாசர் என்னும் முதல்சிந்தனையாளர்-4
மதங்களின் தொகுப்புத்தன்மை
நோபல் பரிசு இந்தியருக்கு
அன்புள்ள ஜெ,
அடுத்த சில ஆண்டுகளில் யாராவது இந்தியருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா? யாருக்கு அத்தகைய வாய்ப்பு அதிகம் உள்ளதாக நினைக்கிறீர்கள்? மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தனுக்கு இருப்பதாகக் கூறப் படுவது உண்மையா?
சரவணன்
[கெ.சச்சிதானந்தன்]
அன்புள்ள சரவணன்
சச்சிதானந்தன் இந்தவருடம் சிபாரிசுசெய்யப்பட்டார் என்று கேள்விப்பட்டேன். அவர் நெடுங்காலம் சாகித்ய அக்காதமி செயலர், தலைவர் பொறுப்பில் இருந்தார். உலக அளவில் நூற்றுக்கணக்கான இலக்கிய நிகழ்வுகளில் பங்கெடுத்தவர். அத்துடன் சுயமுன்னேற்றத்துக்காக ஓயாது உழைப்பவர். ஆகவே அவருக்கு நிறுவன பின்புலம் உண்டு. அவரது கவிதைகள் ஒரு உலகசராசரியைக் கொண்டவை– வடிவத்தில் முற்போக்கு உள்ளடக்கத்தில். ஆகவே அவருக்குக் கிடைக்கவும் கூடும்.
ஆனால் அப்படி நோபல்பரிசு கிடைத்தால் அது தவறான நிகழ்வு என்றே நான் சொல்வேன். தனிப்பட்ட முறையில் எனக்கு இலக்கியத்தை விரிவாக அறிமுகம் செய்தவரென்ற முறையில் நான் பெருமதிப்புக் கொண்டிருக்கும் சச்சிதானந்தன் அத்தகைய முக்கியத்துவம் உள்ள கவிஞரே அல்ல. அவரது கவிதைகள் பெரும்பாலும் செயற்கையானவை, அவற்றின் உள்ளடக்கம் காலாவதியானது. அவருக்கு ஞானபீடம் அளிக்கப்பட்டால்கூட அது பொருத்தமற்ற விருது என்றே நினைப்பேன்.
ஆனால் இந்தவகை சிபாரிசுகளுக்கு பெரிய பொருளேதுமில்லை. நெடுங்காலமாகவே இம்மாதிரி சிபாரிசுகள் செய்யப்படுகின்றன. பத்தாண்டுகளுக்கும் மேலாகக் கமலாதாஸ் தொடர்ந்து நோபல்பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டார். இதழியலில் இருந்த அவரது குடும்பச்செல்வாக்கு உதவியது. மாதவிக்குட்டி நல்ல படைப்பாளி என்றாலும் அவரது கலை மிகமிக எல்லைக்குட்பட்ட ஒன்று.
அதேபோல கிட்டத்தட்ட நெருங்கிவிட்டார் என்று சொல்லப்பட்டவர் வங்க எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி. சர்வசாதாரணமான பிரச்சார எழுத்து அவருடையது. அவரை சர்வதேசப்புகழ்பெற்ற மொழியியலாளர் காயத்ரி ஸ்பிவாக் உலக அரங்கில் நிலைநாட்ட முயன்றுகொண்டே இருந்தார். இவர்கள் எவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டிருந்தாலும் அது தகுதியற்ற பரிசாகவே அமைந்திருக்கும்.
[அமிதவ் கோஷ்]
விருதுகள் ரசனையும் விமர்சனத்திறனும் கொண்ட குழுவால் வழங்கப்படுபவை அல்ல. அவை நிறுவனங்களுக்குள் நுழைந்து அதிகாரத்தில் இருப்பவர்களால் அளிக்கப்படுபவை. அவர்களில் நல்ல நோக்கம் கொண்டவர்கள் இருக்கலாம். ரசனை கொண்டவர்களும் இருக்கலாம். அவர்களின் கவனத்துக்கு ஓர் இலக்கியவாதியைக் கொண்டுசென்றுசேர்க்கும் இலக்கியச்செயல்பாட்டாளர்கள்தான் விருதுகளுக்குக் காரணமாக அமைகிறார்கள். அதாவது ஒரு தகுதியான எழுத்தாளர் சரியான முறையில் இலக்கியச்செயல்பாட்டாளர்களால் நெடுங்காலமாகப் படிப்படியாகப் பரிசுகளை நோக்கி முன்னகர்த்திக்கொண்டுசெல்லப்படவேண்டும்.
கன்னடத்துக்கும் மலையாளத்துக்கும் வங்கமொழிக்கும் அப்படிப்பட்ட இலக்கியச்செயல்பாட்டாளர்கள் உண்டு. அவர்கள் பெரும்பாலும் தகுதியானவர்களை முன்னெடுக்கிறார்கள். தமிழில் அது நிகழ்வதில்லை. இங்கே பெரும் விசையுடன் அப்படி முன்னெடுத்துச்செல்லும் எழுத்தாளர்கள் மிக மேலோட்டமான வணிக எழுத்தாளர்கள், அல்லது அரசியல்வாதிகள். ஆகவேதான் தரமான எழுத்தாளர்கள் இங்கே விருதுகள் பெறுவதில்லை.
ஞானபீடத்துக்கான போட்டியிலேயே தமிழின் நல்ல படைப்பாளிகளைக் கொண்டுசென்று சேர்க்கமுடியவில்லை என்னும்போது நோபல்பரிசுக்கான போட்டிகளைப்பற்றி சொல்லவே வேண்டியதில்லை. தகுதியை மட்டும் வைத்துப்பார்த்தால் அசோகமித்திரன் நோபல்பரிசுக்குரியவர். கன்னட எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா, வங்க எழுத்தாளரான அதீன் பந்யோபாத்யாய, இந்தி எழுத்தாளர் கிரிராஜ் கிஷோர் எனப் பலரை சுட்டிக்காட்டமுடியும். இப்போதைக்குச் சாத்தியங்களும் தகுதியும் இணைந்த எழுத்தாளர் என்றால் யு.ஆர்.அனந்தமூர்த்தியைச் சொல்லலாம்.
ஆனால் நோபல்பரிசு இந்தியாவுக்கு அளிக்கப்படுமென்றால் தொண்ணூற்றொன்பது விழுக்காடு இந்திய ஆங்கில எழுத்தாளர்களில் எவருக்கேனும்தான் அளிக்கப்படும். அருந்ததி ராய் சீராக அதற்கான பிம்ப உருவாக்க வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். அவருக்கு ஐரோப்பிய கிறித்தவப்பின்புலமுள்ள பல அமைப்புகள் உதவிவருகின்றன. ஆகவே தொடர்ந்து பல்வேறு அமைப்புகளால் அவர் சிபாரிசும் செய்யப்படுகிறார். தகுதி அடிப்படையில் நெருங்கிச் செல்லக்கூடியவர் என்றால் அமிதவ் கோஷ்.
என்ன காரணம் என்றால் உலக அளவில் இந்திய இலக்கியம் என்றால் இந்திய ஆங்கில இலக்கியமே முன்வைக்கப்படுகிறது. நான் கண்டவரை பிற இந்திய எழுத்தாளர்கள் எவரையுமே மேலைநாட்டு நல்ல வாசகர்கூட கேள்விப்பட்டதில்லை.
[யூ.ஆர்.அனந்தமூர்த்தி]
காரணம் இந்திய ஆங்கில இலக்கியம் மேலைவாசகர்களின் பொது ருசிக்கு ஏற்ப எழுதப்படுகிறது. அதன் மொழிநடை ஆங்கில நவீன இலக்கிய நடையில் அமைந்துள்ளது. அதேசமயம் வங்க இலக்கிய மேதைகளின் நூல்கள் கூட இன்னமும் நல்ல ஆங்கிலநடையில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. இந்தியாவில் பிரபலமாக உள்ள பாடப்புத்தக நடையில் மொழியாக்கம் செய்யப்பட்டமையால் அனேகமாக எந்த இந்திய எழுத்தாளரும் உலகளாவிய கவனத்தைப்பெறவில்லை. சிறிய விதிவிலக்கு ஏ.கே.ராமானுஜனால் மொழியாக்கம்செய்யப்பட்ட யு.ஆர்.அனந்தமூர்த்தி.
முக்கியமான உதாரணம் என்றால் விபூதிபூஷன் பந்த்யோபாத்யாயவின் 'பாதேர் பாஞ்சாலி' நாவலைச் சொல்லலாம். அந்நாவலின் திரைவடிவம் சத்யஜித் ரேயால் உலகமெங்கும் கொண்டு செல்லப்பட்டது. உலகமெங்கும் அந்த சினிமாமூலம் அந்நாவலின் கதையும் கதாபத்திரங்களும் ரசிக்கப்பட்டனர். ஆனால் அதற்கான ஆங்கில மொழியாக்கமோ பிற ஐரோப்பிய மொழிகளில் வந்த மொழியாக்கங்களோ எவ்வகையான கவனத்தையும் பெறவில்லை.
அவ்வாறு இந்திய ஆங்கில எழுத்துக்கு இந்தியாவுக்கான இலக்கிய நோபல்பரிசு அளிக்கப்படுமென்றால் அது இந்தியப்பண்பாட்டுக்கு இழைக்கப்படும் அவமதிப்பே. இந்தியாவின் மகத்தான இலக்கியப்பாரம்பரியம் புறக்கணிக்கப்படுவதுதான் அது . 'உங்கள் இலக்கியங்களை கவனிக்கவோ அங்கீகரிக்கவோ முற்படமாட்டோம், அவற்றுக்காக சிறிய அளவில்கூட கவனம் கொள்ள மாட்டோம் , அந்த பெரும் குவையில் கைப்பிடி அள்ளி அதை எங்களுக்குப்பிடித்தமுறையில் மறுசமையல் செய்கிறவர்களை மட்டுமே நாங்கள் அங்கீகரிப்போம்' என்ற ஐரோப்பிய மேட்டிமை நிலைப்பாடுதான் அது.
[அசோகமித்திரன்]
ஆனால் அதுதான் நிகழப்போகிறது. அனேகமாக இன்னும் சில வருடங்களில். இந்திய ஆங்கில எழுத்தாளர் ஒருவர் நோபல் பரிசு பெறப்போகிறார். இந்திய இலக்கியத்தின் உச்சகட்ட சாதனையாளர் அவர்தான் என்று நமக்கு நம் ஆங்கில ஊடகங்களால் மீண்டும் மீண்டும் சொல்லப்படும். இந்திய ஆங்கில இலக்கியவாதிகளில் அசோகமித்திரனுக்கு நிகரான ஒருவர் இன்னும் உருவாகவில்லை என்று நாம் எத்தனை சொன்னாலும் அது ஏற்கப்படாது.
ஆகவே இன்றைய சூழலில் இந்திய இலக்கிய வாசகன் நிறைவும்கொள்ளக்கூடிய ஒரு இலக்கிய நோபல்பரிசு இந்தியாவுக்கு கிடைக்கக் கூடிய வாய்ப்பே கண்ணுக்குத் தெரியவில்லை. முண்டி முண்டி முன்னால் சென்றுகொண்டிருப்பவர்கள் எல்லாருமே அமைப்பை வெல்லத்தெரிந்த இரண்டாம்தர எழுத்தாளர்கள்தான்.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
கடிதங்கள்
டோமஸ் ட்ரான்ஸ்ட்ருமர் கவிதைகள்
காந்தி,அனந்தமூர்த்தி
நகுலனும் சில்லறைப்பூசல்களும்
அருந்ததியின் பொய்கள்
அண்ணா ஹசாரே- அரசியல் ஆய்வுகள்
அண்ணா ஹசாரே-கடிதங்கள்
அண்ணா-கடிதங்கள்
அருந்ததி
அண்ணா-எதிர்வினைகள்
November 7, 2011
பரிணாமவாதமும் இந்திய மதங்களும்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு
உங்களுக்கு எனது முதல் கடிதம் இது. தவறுகள் இருப்பின் தயவு செய்து பொறுத்துக் கொள்ளவும். நான் கடந்த 20 வருடங்களாக Software துறையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். சமீப காலம் வரை ஆங்கில fiction , non – fiction எழுத்துக்கள் வாசித்து வந்தேன் (Carl Sagan , Stephen Hawkins , Malcolm Gladwell , Richard Feynman , James Rollins ஆகியோர் என் குறைந்த வாசிப்பில், என்னை கவர்ந்த எழுத்தளர்கள்). 2008 வரை தமிழ் வாசிப்பு மிக குறைவு. 80s இல் சுஜாதா, வாசித்ததோடு அவ்வப்போது விகடனில் எஸ் ராமகிருஷ்ணன் , நாஞ்சில் நாடன் வாசிப்பதுண்டு. அலுவலக நண்பர் ஒருவர் உயிர்மையில் தங்களது ஊமைச்செந்நாய் வாசிக்க அறிமுகப்படுத்தினார். என்னை மிகவும் பாதித்த கதைகளுள் ஒன்று அது. பல முறை வாசித்து விட்டேன்.
நான் தங்களது ப்ளாக் கடந்த மூன்று வருடங்களாக படித்து வருகிறேன். தங்களது சிறுகதை தொகுப்பு (முழு தொகுப்பு) , மண் சிறுகதை தொகுப்பு, விஷ்ணுபுரம் , இந்திய ஞான மரபில் ஆறு தரிசனங்கள், இரவு, உலோகம் ஆகிய புத்தகங்களை வாசித்திருக்கிறேன். தங்கள் எழுத்துக்கள் எப்போதும் என் மனதில் ஒரு ஆழமான பாதிப்பை , தேடலை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன. தங்கள் அனைத்துப் புத்தகங்களையும் வாங்கி வைத்துவிட்டேன் , படிக்கத்தான் நேரம் ஒதுக்க வேண்டும்:-)
தற்போது நான் Richard Dawkins இன் "The Greatest show on earth " புத்தகம் வாசித்து வருகிறேன். Evolution பற்றி மிக அழகாக படங்களுடன், ஆதரங்களுடன் விவரித்திருக்கிறார். Charles Darwin இன் புத்தகத்தையும் Richard Dawkins இன் இதர புத்தகங்களையும் படிக்கத் தூண்டுகிறது. புத்தகம் படிக்கும் போது ஒரு சந்தேகம் மனதில் தோன்றியது. இந்திய தரிசனங்களில் , இந்து மதத்தில் , பரிணாம வளர்ச்சியைப் பற்றி என்ன கூறபட்டிருக்கிறது ? அவை evolution theory உடன் ஒத்துப் போகின்றனவா ? நண்பருடன் உரையாடிக் கொண்டிருக்கையில் அவர் இந்து மதம் "ஆன்ம வளர்ச்சியில் evolution theory உடன் ஒத்துப் போவதாகக் கூறினார் அதை ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் "physical" level இல் பரிணாம வளர்ச்சியை இந்து மதம் எவ்வாறு நோக்குகிறது? தங்களது கருத்தை அறிய ஆவல். இது தொடர்பாக நான் படிக்கக் கூடிய நல்ல புத்தகங்களைத் தாங்கள் பரிந்துரைத்தால் மகிழ்ச்சி அடைவேன்.
முதல் முறை கணினியில் தமிழில் இவ்வளவு நீண்ட கடிதம் எழுதி உள்ளேன். பிழை ஏதும் இருப்பின் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.
நன்றி
வெண்ணி
அன்புள்ள வெண்ணி,
ரிசர்ட் டாக்கின்ஸின் "The Greatest show on earth' சமீபத்தில்தான் நானும் வாசித்தேன். அற்புதமான நூல். என் மகனின் புத்தகம். நீங்கள் அதை வாசித்திருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதைப்பற்றி எழுதக் கை துறுதுறுக்கிறது, ஆனால் என் விஷயங்களின் எல்லையைத்தாண்டி எதையும் எழுதக்கூடாதென்பதனால் பேசாமலிருக்கிறேன்.
சில பிரபஞ்ச இயங்குவிதிகள் பற்றிய புரிதல் மனிதர்களுக்கு இயற்கையில் இருந்து இயல்பிலேயே கிடைத்திருக்கலாம். அனேகமாக உலகின் எல்லாச் சிந்தனைகளிலும் ஏதேனும் வகையில் அவை காணப்படுகின்றன. உதாரணமாக டைலடிக்ஸ் என கிரேக்க சிந்தனை சொல்லும் முரணியக்கம். அது இந்திய சிந்தனையில் யோகாத்மதரிசனம் அல்லது யோகாத்ம வாதம் என்ற பேரில் சுட்டப்படுகிறது. கீதை அதனடிப்படையில் அமைந்த நூல்.
அதேபோல பரிணாமம் என்ற இயங்குவிதியைப்பற்றியும் அனேகமாக எல்லா அசல் சிந்தனை மரபுகளும் அறிந்திருக்கின்றன. பல பழங்குடி சிந்தனைகளில் கூட பரிணாமவாதம் பற்றிய எளிமையான சில கொள்கைகள் உள்ளன. ஒன்று அதன் உள்ளியல்புகளின் வளர்ச்சி காரணமாக இன்னொன்றாக ஆவதுதான் பரிணாமம். அதைப் பல்வேறு வகையில் இயற்கையில் கண்டுணர்ந்துள்ளார்கள்.
இந்திய சிந்தனையில் பரிணாமவாதம் என்ற ஒன்று உண்டு. எப்போதும் அதைப்பற்றிய விவாதம் நிகழ்ந்துகொண்டும் இருந்தது. பரிணாமவாதத்தின் மிகத்தீவிர ஆதரவாளர்கள் சமணர்கள். உண்மையில் சமணத்தின் ஆதாரக்கோட்பாடுகளில் ஒன்று அது. அதை சார்வாகர்கள் தொட்டு பெரும்பாலும் எல்லா ஜடவாதிகளும் மறுத்தார்கள். வேதாந்தம் அதில் சார்பில்லா நிலை எடுத்தது.
ஆனால் அது சார்ல்ஸ் டார்வினின் பரிணாமவாதம் அல்ல. டார்வினின் பரிணாமவாதத்தை உயிர்ப்பரிணாமவாதம் என்றும் இதை ஆன்மபரிணாமவாதம் என்றும் வேறுபடுத்திச் சொல்லலாம்.
டார்வின் உயிர்கள் தங்கள் தகவமைவால் ஒன்றில் இருந்து இன்னொன்றாகப் பரிணாமம் கொண்டதைச் சொல்கிறார். இந்திய மரபில் உள்ள பரிணாமவாதம் என்பது ஒரு ஆன்மா தன் செயல்கள் மூலம் இன்னும் மேலானதாகப் பரிணாமம் கொண்டு கடைசியில் முழுமை அடைவதைப்பற்றிச் சொல்கிறது.
[பிற்கால வேதாந்திகள் சொல்லும் பரிணாமவாதம் வேறு. பிரம்மம் தன் இச்சையால் பிரபஞ்சமாக ஆனதை அவர்கள் பரிணாமம் என்கிறார்கள்]
இந்த ஆன்மப்பரிணாமத்தைப்பற்றி சமண,பௌத்த,இந்து மூலநூல்களில் எல்லாமே சொல்லப்பட்டுள்ளது.மண்ணில் உள்ள எல்லாத் தாவரங்களுக்கும் புழு,பூச்சி போன்ற பிற உயிர்களுக்கும் உணர்ச்சிகளும் ஆன்மாவும் உண்டு என்பது இந்த மதங்களின் பொது நம்பிக்கை. ஆகவே அவற்றுக்கு மீட்பும் உண்டு. சமணத்தைப் பொறுத்தவரை சிற்றுயிர் என்பது சிறிய ஆன்மா கொண்டது. ஆகவே ஒரு புழுவுக்கான மீட்பு என்பது அதன் ஆன்மா இன்னும் பெரிதாவதே. ஆகவே பூமியில் உள்ள எல்லா உயிர்களும் தங்கள் செயல்கள் மூலம் ஓர் நிரந்தரமான ஆன்ம பரிணாமத்தில் உள்ளன என்ற கொள்கை உருவானது.
இதற்காகவே இங்கே மறுபிறப்புக்கொள்கை உருவானது. ஓர் ஆன்மா தன்னை உடலில் இருந்து விடுவித்து இன்னும் மேலான உடலை எடுத்துக்கொண்டு பரிணாமம் அடைந்து செல்வதே மறுபிறப்பு. அப்படி அது மேலே செல்ல முந்தைய பிறவியின் செயல்களின் விளைவுகள் காரணமாக அமைகின்றன. அதுவே ஊழ்.
இந்தக் கொள்கையைத்தான் 'புல்லாகிப் பூடாகிப் புழுவாய் மரமாய் பல்விருகமாய் பறவையாய் பாம்பாய்ப் பேயாய் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய் தேவராய் சொல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்'போன்ற வரிகள் சுட்டுகின்றன. இத்தகைய ஏராளமான பாடல்களை, ஓவியங்களை நாம் காணமுடியும்.
இந்த நோக்கு பெருமாளின் தசாவதாரத்திலும் உள்ளது. மண்ணில் உள்ள எல்லா உயிர்களிலும் பெருமாள் அவதரித்தார் என்று காட்டுவதற்காகவே மீன் முதல் கல்கி வரை அவதாரங்கள் கற்பனைசெய்யப்பட்டன.
சொல்லப்போனால் டார்வின் சொல்வது உடலின் பரிணாமம். இந்த மதங்கள் சொல்வது ஆன்மாவின் பரிணாமம். மேலோட்டமாகப் பார்த்து இந்திய மதங்கள் பரிணாமத்தை ஏற்கனவே பேசிவிட்டன என்று சிலர் சொல்வது பிழை. உயிர்க்குலங்கள் தங்கள் உடலை மாற்றிக்கொண்டு ஒன்று இன்னொன்றாகப் பரிணாமம் அடைவதைப்பற்றி எந்த இந்திய நூலிலும் நான் வாசித்ததில்லை.

சார்ல்ஸ் டார்வின்
செமிட்டிக் மதங்கள் படைப்புவாத நம்பிக்கை கொண்டவை. அவர்களின் படைப்புவாதத்தின் அடிப்படைகள் மூன்று.
1. இந்த உலகை இப்படியே இறைவன் படைத்தான்.
2. எல்லையற்ற பிரபஞ்சம் என்ற கருதுகோள் இல்லை. வானமும் பூமியும் மட்டுமே உள்ளது. வானம் பூமிக்கு மேலே உள்ளது. வானத்தின் விண்மீன்களும் கோள்களும் பூமிக்காகப் படைக்கப்பட்டவை. பூமியே மையமானது.
3. மனிதனே உயிர்க்குலங்களில் முதல்வன். பிற எல்லாப் படைப்பும் அவனுக்காகவே உருவாக்கப்பட்டன.
இந்த மூன்று அடிப்படைகளுடன் நவீன அறிவியல் மோதுவதனால்தான் இஸ்லாமும் கிறித்தவமும் நவீன அறிவியலை எதிர்த்தன. இரண்டாவது கொள்கைக்காக புருனோவும் கலிலியோவும் பலியிடப்பட்டாலும் அந்த உண்மை இருநூறாண்டுகளாகப் புறவயமாக நிரூபிக்கப்பட்டுவிட்டமையால் அதை மட்டும் இப்போது இவர்கள் திருத்திக்கொண்டார்கள். பிற இரண்டையும் இன்றும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள். அவையும் புறவயமாக நிரூபிக்கப்பட்டுவிட்டன.ஆனால் ஏற்கத்தயங்குகிறார்கள். டாக்கின்ஸின் நூலில் முதல் அத்தியாயம் அதைப்பற்றித்தான் விரிவாகப் பேசுகிறது.
அந்த இரு கொள்கைகளின் அடிப்படையில் செமிட்டிக் மதங்கள் டார்வினின் பரிணாமக் கொள்கையை நிராகரிக்கிறார்கள். படைப்புவாதப் பரிணாமக் கொள்கை போன்ற போலி அறிவியல்களை உருவாக்கிக்கொள்கிறார்கள்.
இந்தியமதங்களைப் பொறுத்தவரை மேலே சொன்ன மூன்று கொள்கைகளுமே அவர்களுக்கு இல்லை.
1. இந்தப் பிரபஞ்சம் பிறிது ஒன்றில் இருந்து பரிணாமம் கொண்டு வந்தது என்பதை ஏறத்தாழ எல்லாருமே ஏற்கிறார்கள். வேதாந்தத்தைப் பொறுத்தவரை அருவமான எல்லையற்ற பிரம்மத்தில் இருந்து மாயையாக உருவம் கொண்டு வந்தது பிரபஞ்சம். சாங்கியத்தின்படிஆதி இயற்கையில் இருந்து பருவடிவில் பரிணாமம் கொண்டு வந்தது பிரபஞ்சம். பௌத்த,சமண மதங்களின்படி எப்போதுமிருக்கும் பொருளின் மீது மகாதர்மம் அல்லது பேரூழ் உருவாக்கும் அலைகளே இப்பிரபஞ்சம். மொத்தத்தில் இது பரிணாமம் கொண்டு வந்தது, மாறிக்கொண்டிருக்கிறது என்பதில் ஐயமே இல்லை.
2. பிரபஞ்சம் என்ற எல்லையற்ற கால-பரு வெளி பற்றி மிக ஆரம்பத்திலேயே, ரிக்வேதத்திலேயே, பேசப்பட்டுவிட்டது. முடிவற்ற பிரபஞ்ச வெளியில் பூமி ஒரு சிறு துகள் மட்டுமே என்ற நம்பிக்கை இந்திய மதங்களுக்குப் பொது. உலகங்கள் முடிவே இல்லாதவை. அந்தக் கோடானுகோடி உலகங்களில் ஒன்றுதான் பூமி.
3. இந்திய மதங்களின் நோக்கில் பூமியில் உள்ள எல்லா உயிர்களுக்கும் ஆன்மா உண்டு. வாழ்க்கை உண்டு. ஒவ்வொன்றும் தன்னளவில் பிரபஞ்ச விதிகளுக்கும் தன் செயல்களுக்கும் கட்டுப்பட்டது. சமண பௌத்த மதங்களில் மனிதன் ஒப்புநோக்க முதன்மையானவன். காரணம் அவனுக்கு சிந்தனை உண்டு. ஆனால் வேதாந்தத்தில் மனிதனுக்கும் புழுவுக்கும் அணுவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
ஆகவே இந்திய மதங்களுக்குப் பரிணாமக் கொள்கையை ஏற்பதில் எந்தத் தயக்கமும் இல்லை. டார்வினின் உயிர்ப்பரிணாமக் கொள்கை இந்திய மதங்களின் ஆன்ம பரிணாமக் கொள்கையை மறுக்கவில்லை. சொல்லப்போனால் அதை இன்னும் வலுவாக்கிக் கொடுக்கிறது. உடலைப்போலவே ஆன்மாவும் பரிணாமம் அடைகிறது என்ற வாதத்தை அது வலுப்படுத்துகிறது. உடலைத் தன் இச்சை மூலம் ஆன்மா மாற்ற முடியும் என்றால் ஆன்மாவை ஏன் உடலின் செயல்கள் மாற்றமுடியாது என்று வாதிட வழி ஏற்படுத்திக்கொடுக்கிறது.
ஆகவே இந்திய மதங்கள் டார்வின் கொள்கையை, விண்வெளி ஆய்வுகளை, உயிரியல் ஆய்வுகளை, மூளைநரம்பியல் ஆய்வுகளை எதையும் மறுத்து வாதிடவேண்டிய இடத்தில் இல்லை. அந்தக் கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரமான கொள்கைகளுடன் இந்திய மதங்களின் ஆதாரமான கொள்கைகள் முரண்படவில்லை. விளக்கங்கள் முரண்படலாம். உதாரணமாக மறுபிறவி போன்றவை. ஆனால் அவற்றை எளிதாக மாற்றிக்கொண்டு மேலே செல்ல இந்தியமதங்களில் எப்போதும் இடமுள்ளது
ஜெ
குருகு
தொடர்புடைய பதிவுகள்
துயரம்
கதைகளின் வழி
புதிய புத்தகங்கள்-கடிதங்கள்
காதல் ஒரு கடிதம்
கடிதங்கள்
யார் இந்து?-கடிதம்
சிற்பச்செய்திகள்
மாசு
உலோகம்,கடிதம்
உலோகம்-கடிதம்
ஆதமிண்டே மகன் அபு
அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் தங்களின் நீண்டநாள் வாசகன், "ஆதமின்டே மகன் அபு" திரைப்படம் பற்றி ஓர் அறிமுக கட்டுரை எழுத முயற்சித்தேன், இந்த வாரம் உயிரோசையில் வெளிவந்துள்ள அக்கட்டுரை இங்கு தாங்கள் பார்வைக்கு,
http://www.uyirmmai.com/Uyirosai/Cont...
It can be readable in my blog also,
http://bhilalraja.blogspot.com/2011/1...
அன்புடன்
பிலால் ராஜா
அன்புள்ள பிலால்ராஜா
இன்னும் கூட விரிவாகவே அந்தப்படத்தைப்பற்றி எழுதியிருக்கலாம். படத்தைப்பற்றி எழுதும்போது நம்மை விகடன் குமுதம் வகை எழுத்துக்கள் கட்டுப்படுத்துகின்றன. படத்தின் கதையை சொல்லி, ஒரு மதிப்பீட்டை முன்வைத்து முடிக்கிறோம். இணையத்தில் அதிகம் தென்படுவது இத்தகைய விமர்சனங்கள்தான்
உண்மையில் திரைப்படத்தைப்பற்றிய நம்முடைய புரிதல்களை மட்டுப்படுத்துவதே இந்தவகையான சுருக்கமான பேச்சுதான். ஒரு படம் அளித்த எல்லா சிந்தனைகளையும் முன்வைக்க முயலவேண்டும். அதன் எல்லா சிறு அம்சங்களையும் கருத்தில்கொண்டு பேசவேண்டும். அப்போதுதான் சினிமா பற்றிய நம்முடைய விவாதம் பயனுள்ளதாக அமையும்.
ஆதமிண்டே மகன் அபு ஒரு நல்ல படம். ஆனால் உணர்ச்சிகரமான படம் மட்டும் அல்ல. மிக மென்மையாக அது சில சிந்தனைகளை முன்வைக்கிறது. மதமும் பாரம்பரியமும் நமக்கு அளிக்கும் அறத்தை அப்படியே கடைப்பிடிப்பதல்ல சரியான வழி என்று சொல்கிறது இல்லையா? நம் சொந்த வாழ்க்கையின் அனுபவங்கள் மூலம் அந்த அறத்தை இன்னும் நீட்டித்துக்கொள்ள அது அறைகூவுகிறது. அபு சென்று சேர்வது மதம் சார்ந்த அறத்தை அல்ல. மதம் சார்ந்த அறத்தில் வேரூன்றி நின்றுகொண்டு மனிதம் சார்ந்த நவீன அறம் ஒன்றை அவர் தொடுகிறார்.
அந்த மையம் சார்ந்த சிந்தனைகளை முன்வைத்து விவாதிக்கும்போதுதான் நாம் அந்தப்படத்தைப்பற்றிய உண்மையான எதிர்வினையை ஆற்றுகிறோம். அதுவே அந்தப் படத்துக்கு நாம் ஆற்றும் கௌரவம்.
சலீம்குமார் அற்புதமான நடிகர். நான் எழுதும் எல்லா படங்களுக்கும் அவரை இங்கே பரிந்துரை செய்திருக்கிறேன். நடக்கவில்லை.
சமீபத்தில்கூட பல நல்ல படங்கள் வெளிவந்தன. பிராஞ்சியேட்டன் ஆண்ட் த செயிண்ட் [இயக்கம் ரஞ்சித்] முக்கியமான படம். இன்னொரு தளத்தில் சால்ட் ஆண்ட் பெப்பர் [இயக்குநர் ஆஷிக் அபு] முக்கியமான படம்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
November 6, 2011
காதல் ஒரு கடிதம்
அன்புள்ள ஜெயன் அவர்களுக்கு,
நலமா? வீட்டில் அனைவரும் நலம் தானே?
எங்கோ ஒரு மூலையில் உங்களின் கதைகளையும் நாவல்களையும் படித்து, அனுபவித்து, ரசித்து, தீவிர உணர்வெழுச்சியில் ஆட்பட்டுக்கொண்டிருக்கும் லட்சகணக்கான தீவிர வாசகர்களில் நானும் ஒருவன். 26 வயது. நல்ல வேலை. நல்ல நண்பர்கள். ஆனால், ஒரு இழந்த காதல். வாழ்வின் மிகவும் குழப்பமான கட்டத்தில் இருப்பது போல் இருக்கிறது.
நான் தற்போது வாசித்துகொண்டிருக்கும் 'இரவு' நாவலும் சரி, என்னை மிகவும் பாதித்த 'காடு', 'அனல்காற்று' நாவலிலும் சரி, பார்த்த உடன் ஒரு தீவிரமான காதல் அனுபவம் கிடைத்துவிடுகிறது. ஆனால் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்று நான் மிகவும் விரும்பிய பெண் என்னிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.நான் அவளை மிகவும் நேசித்து அவள் என்னை இப்பொழுது என்னை 'இது காதலே அல்ல' என்று நிராகரித்திருக்கிறாள். அவளை நான் நேரில் ஒரு நான்கைந்து முறை சந்தித்திருப்பேன், அதுவும் சில நிமிடங்கள் மட்டுமே. என்னை விட 5 வயது இளையவள்.'அண்ணா' என்று கூப்பிட ஆரம்பித்து உருவான உறவு தான் இது. ஆனால் ஆரம்பம் முதலே என் ஆழ்மனதில் நான் உணர்ந்தேன், அவள் தங்கை இல்ல என்று. 'அண்ணா' என்று கூப்பிட்டாளே தவிர எங்கள் இருவரின் இடையேயும் ஒரு ஆழமான நட்பு தான் உருவாகியிருந்தது.
ஆரம்பத்திலேயே சொல்லிவிட முடியவில்லை ஜெயன், அவளை நான் விரும்புகிறேன் என்று. ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத பயம். அவள் என்னை விட்டு வெகு தூரம் சென்று விடுவாளோ என்று. நிறையப் பேசினோம் செல்போனில். நிறைய என்றால், அவ்வளவு நிறைய. தொடர்ந்து 7 மணி நேரம் எல்லாம் பேசியிருக்கிறோம்.உங்களுக்குத் தெரியுமா, உங்களது 'அனல் காற்று' நாவலை அவளுக்கு முழுமையாகப் படித்துக் காண்பித்து இருக்கிறேன் செல்போனில். சுமார் 7 மாதங்கள். இனி என்னால் கட்டுபடுத்தவே முடியாது என்ற நிலையில், அவளிடம் சொன்னேன் என் காதலை.
'நேரில் நாம் சந்தித்து, கண் பார்த்து பேசியதே இல்லை நீங்களும் நானும். இது எப்படி காதலாகும்?' என்றாள். 'எனக்கு உங்கள் மேல் காதல் என்ற எண்ணம் வரவே இல்லை. என் வாழ்வில் என்னை மிகவும் புரிந்து கொண்ட ஆண் நீங்கள் தான். ஆனால், இது கண்டிப்பாகக் காதல் அல்ல. ஒரு ஈர்ப்பு மட்டுமே' என்று மிகவும் தர்கபூர்வமாகவே பேசினாள். நேரில் அடிக்கடி சந்தித்துப் பேசிப் பழகிக் கைகள் கோர்த்து, இப்படிப்பட்ட அனுபவங்கள் இருந்தால் மட்டுமே காதல் உருவாகும் என்று எனக்கு விளக்கம் வேறு கூறுகிறாள். Ten steps to fall in love என்பது போல். எனக்கு அவளைப் பார்த்தஉடனே பிடித்தது. அவளின் நினைவுகளைக் கொண்ட கனவுகள் எனக்கு அதிகம் வந்திருக்கிறது, அவளிடம் அதிகம் பழகுவதற்கு முன்பே. எனக்கே தெரியாமல் என் ஆழ்மனதில் தீவிரமாக விரும்ப ஆரம்பித்து இருக்கிறேன்.
அவளை என் நினைவில் இருந்து ஒரு கணமும் பிரிய முடியவில்லை. அதனால், அவளிடம் ஒரு பொய்யைச் சொன்னேன், ஆண்கள் சொல்லும் அற்பமான பொய் தான், 'நான் நண்பனாகவே இருக்கிறேன் இனி ' என்று. எங்கள் இருவருக்குமே தெரியும், இப்படி ஒரு பொய்யான வேடம் எத்தனை நாளுக்கு செல்லும் என்று. மறுபடியும் ஒரு மிக நீண்ட இரவின் பேச்சின் முடிவில், அவளிடம் அழுது விட்டேன். 'உன்னை நான் என் தாயை நேசிப்பது போல் நேசிக்கிறேன்' என்று. அவளும் அழ ஆரம்பித்து விட்டாள். அந்த முனையில் அவள் அழும்போது அவளை இறுக அணைத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. 'இனி நீங்களும் நானும் பேசவே வேண்டாம். என்னால் நீங்கள் உங்கள் வாழ்வில் மிகவும் துக்கப்படப் போகிறீர்கள்' என்று என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டாள்.
சூன்யம் பிடித்தது போல் இருந்தது ஜெயன். 40 முறைக்கும் மேல் கால் செய்திருப்பேன். போனை எடுக்கவே இல்லை. என்னால் என் அன்பை எப்படி அவளிடம் புரிய வைப்பது என்றே தெரியாமல், என் மணிக்கட்டில் பிளேடால் அறுத்துக் கொண்டேன். 'என்னை நீங்கள் emotional blackmail' செய்கிறீர்கள் என்று, 'இனி உங்களிடம் எந்தக் காரணம் கொண்டும் பேசமாட்டேன். என்னை விட்டு விலகிப் போய்விடுங்கள். நான் உங்கள் வாழ்வில் எதுவும் செய்துவிடவில்லை. ஏன் என் மேல் இப்படி ஒரு காதல்? நீங்கள் என்னைப் புரிந்து கொண்டீர்கள் என்ற ஒரே காரணத்துக்காக என்னால் உங்களைக் காதலித்து விட முடியாது. எனக்கு பயமாகவும் இருக்கிறது. ப்ளீஸ் என்னிடம் இனி பேச வேண்டாம். " என்று என்னை நிராகரிக்க ஆரம்பித்தாள்.
நீங்கள் உங்கள் கதைகளில் எழுதியது போல்தான் எனக்கும், ஒரு காதல் வந்தது. பார்த்த முதல் பார்வையிலேயே அவளிடம் என் அகம் சென்றுவிட்டது.
என்னை விட்டு வெகுதூரம் சென்று விட்டாள் இன்று. இன்றும் என் கனவுகளில் எல்லாம் என்னை அலைக்கழிக்கிறாள். ஆனால் நான் என்னைத் தடுமாறவிடவில்லை. நான் ஒரு ஓவியனும் கூட. அவள் மேல் கொண்ட அன்பை இனி நான் மிகவும் நேசிக்கும் ஓவியத்தில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன் ஜெயன். எனக்கு நன்றாகத் தெரியும் அவள் இனி என்னிடம் வரப் போவதில்லை.
வண்ணதாசன் எழுதியிருப்பது போல், 'என்னைப் பொறுத்தவரை குரல்கள் எனக்கு முக்கியமானவை. அவரவர்களைக் காட்டுகிற அவரவர் குரல்கள், முகம் மாதிரி, முகத்தை விடவும் எல்லாம் காட்டவல்லவை.' அவளது குரல் தான் என்னை இப்பொழுது அலைக்கழிக்கிறது. அவளிடம் கூறினேன். உன் குரல் தான் நீ.. நான் விரும்பும் நீ முழுவதும் உன் குரலில் தான் இருக்கிறாய் என்று. முற்றாக என்னை ஒதுக்கிவிட்டாள்.
என்னால் இதைத் தாங்கிக்கொள்ள நிறைய அவகாசம் தேவைப்பட்டது. அற்பமான எண்ணங்கள் எனக்கு அடிக்கடி உதிக்கும். சாலையைக் கடக்கும் எனக்கு ஒரு விபத்து நேர்ந்து, அதன் பின்பு என்னை பார்க்க வரமாட்டாளா? சாவின் தருவாயில், அவள் கைகளைப் பிடித்து அழுது கொண்டிருக்க அவள் நெற்றியில் ஒரு முத்தமிட்டால் எப்படி இருக்கும்? ஏதோ ஒரு விளிம்பில் என்னை நோக்கி அவளது நிழல் என்னை சேர்ந்து விடாதா?
நான் இறந்து போய்விட்டால் அவள் என்ன நினைத்துக் கொண்டிருப்பாள்? இவரை முற்றாக இழந்து போய்விட்டோம் என்று நினைப்பாளோ?
சில நண்பர்கள் ஆறுதல் சொன்னார்கள். 'ஆயிரம் பிகர் மடியும் மச்சி. free a vidu.' என்று சிலர். உற்ற நண்பர்கள் என் நிலையைக் கண்டு, 'நீ அவளைத்தான் டார்ச்சர் செய்கிறாய். அவளை விட்டு விடு' என்றனர்.
ஒரு நண்பன் மிகவும் தர்க்கபூர்வமாகக் கூறினான், 'நான் உனக்கு ஒன்று சொல்கிறேன். நீ இது நாள் வரை அவள் இல்லை என்று துக்கபட்டுக்கொண்டிருப்பதும், அவளின் பிரிவை நீ தாங்கமுடியாமல் இருப்பதும் ஒரு பயம் மட்டுமே. அவள் கிடைக்க மாட்டாள் என்பதை விட அவளைப்போல் ஒருத்தி உன் வாழ்வில் அமைந்துவிடாமல் போய் விடுவாளோ என்ற ஒரு பயம். இதுவே அவளை விட அழகிலும் அறிவிலும் அவளை விட சிறந்த ஒருத்தி உன்னிடம் வந்து 'நான் உங்களை விரும்புகிறேன்' என்றாள் நீ அவளை வேண்டாம் என்பாயா? மாட்டாய்தானே. அதனால் நீ வேண்டும் என்று நினைப்பது, அவளைப் போன்ற உடல்வடிவும், அவளைப் போன்ற ஒரே அலைவரிசை கொண்ட ஒரு பெண் தானே தவிர, அவளே அல்ல.'எனக்கு சட்டென்று தூக்கி வாரிப் போட்டது. அவன் என்னிடம்,'நீ எமோஷனல்-ஆ தின்க் பண்ணாம, யதார்த்தமா யோசி' என்றான்.
ஒரு கணம் சரி என்றும், மறுகணம் 'இல்லை. அவள் தான் என் மனம் முழுதும். அவளைப் போன்று வேறு யாராக இருப்பினும் என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது' என்பது போல்தான் இருந்தது.
இப்போது நான், நிறைய வரைய ஆரம்பித்திருக்கிறேன் ஜெயன். ஒரு ஓவியரிடம் பயின்று கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். நிறைவாக இருக்கிறது.
ஒவ்வொரு ஓவியமும் நிறைவாக வரும்போது, அவளை நினைத்துக் கொள்கிறேன். சின்னு, இது உனக்காகத்தான்.. உன் மேல் கொண்ட இந்த ப்ரியம் தான், என் ஓவியங்கள் அனைத்தும் என்று அவளிடம் சொல்ல வேண்டும் போல் உள்ளது.
ஒரு விஷயம், ஜெயன். நான் சுயஇன்பம் காணும்போது அவளின் நினைவுகள் என்னைக் கடந்ததே இல்லை. எப்படிச் சொல்வது? எல்லாவற்றையும் தாண்டி, ஒரு உச்சத்தில் நிற்கிறாள், என் மனதில். கிரியின் நீலி போல.. கிரி அய்யரிடம் பேசும் அந்த உரையாடல் நினைவுக்கு வருகிறது.
இந்தக் காதலை நான் 'the most painfully beautiful thing that ever happened in my life' என்று சொல்வேன். அதன் அழகையும், உக்கிரத்தையும் அனுபவித்து விட்டேன். என்னை ஏற்றம் புரிய வந்தவளாகத்தான் இருக்கிறாள். அவள் என் வாழ்வில் என்னுடனே இருந்தால் எவ்வளவு பெரிய மனிதனாக, ஓவியனாக உருவாவேன் என்று உணர முடிகிறது.
ஜெயன், நான் ஒரு நல்ல மனிதன். என்னால் உறுதியாகக் கூற முடியும். ஆனால் ஏன் நான் நிராகரிக்கப்பட்டேன் அவளால். அது மட்டும் தான் என்னை மிகவும் உறுத்துகிறது.
உங்களிடம் இதையெல்லாம் சொல்லும்போது, ஒரு நிறைவைத் தருகிறது. என்னுடைய நெருங்கிய சிநேகிதனிடம் பகிர்ந்து கொள்ளும் ஒரு அற்புதமான, கைகளைப் பற்றிக் கொள்ளும் ஒரு தருணம் போல் இருக்கிறது. நான் இருக்கிறேன்டா, நீ ஏன் கவலைப்படற என்பது போல்.
நான் உங்களையும், வண்ணதாசன் அவர்களையும் மிகவும் நேசிப்பவன். உங்கள் எழுத்து என்னை ஒரு நல்ல மனிதனாக மேம்படுத்தியது.
எல்லா மனிதர்களிடமும் பிரியத்துடன் இருக்க முடிகிறது.
உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.
மிக்க அன்புடன்,
கெ
பி.கு: என்னுடைய sketches சில இந்த மின்னஞ்சலுடன் இணைத்துள்ளேன்.
அன்புள்ள கெ,
வெண்ணிலா கபடிக்குழு என்ற படத்தில் எனக்குப் பிடித்த ஒருகாட்சித்துளி. ஒரு பெண்ணை அவளைக் காதலிக்கும் ஒருவன் துரத்திச்செல்வான். பதற்றமும் பரவசமும் அழுகையுமாக. அப்போது சுவர் பிடித்து நடந்துசெல்லும் ஒரு 90 வயது பாட்டா பார்த்து சிரித்துக்கொள்வார். பாட்டாவும் அந்த வயதைக் கடந்து வந்திருப்பார், இந்த வயதில் திரும்பிப்பார்க்கையில் அது சிரிப்பாகவே தோன்றும்.
காதலின் உணர்வெழுச்சியை நான் நன்றாக அறிவேன். நான் இருபதாண்டுகளுக்கு முன்னர் எழுதிய கடிதங்களை இன்று வாசித்தால் அந்த வேகமும் நெகிழ்ச்சியும் புன்னகையை வரவழைக்கின்றன. அது ஒரு பருவம், ஒரு காலம். அவ்வளவுதான். அதுவே முழு வாழ்க்கை அல்ல. வாழ்க்கையின் மையமும் அது அல்ல. வாழ்க்கைக்கு எதுவுமே மையம் அல்ல. அது ஒரு தொடர்நிகழ்வு. அதன் எல்லாப் புள்ளியும் எல்லாக் கணமும் முக்கியமானதே
அதற்கான பருவத்தில் அது நிகழாது போவதன் வெறுமையை விட எப்படியானாலும் நிகழ்ந்து முடிவதன் நிறைவு மேலானதே. இப்போது நீங்கள் எந்தத் துயரத்தை அனுபவித்தாலும் பின்னர் நினைக்கையில் மகிழ்ச்சியையே அறிவீர்கள். காதல் எல்லாவகையிலும் அழகானதே. இது உங்கள் வாழ்க்கையின் உணர்ச்சிகரமான ஓர் அத்தியாயம். உங்கள் இளமையின் ஒரு நல்ல நினைவு. வாழ்த்துக்கள்.
உங்கள் வலிக்கான உண்மையான காரணம் என்பது உங்கள் அகங்காரம் அடிபட்டதே. காதல்தோல்வியில் ஆண்கள் பெண்களை விட அதிகமாக பாதிக்கப்படுவதும் இதனால்தான். பெண்களின் அகங்காரம் கொஞ்சம் வளைந்துகொடுப்பது. நிராகரிப்பையும் அவமதிப்பையும் நம் சூழலில் அவர்கள் அறிந்தே வளர்கிறார்கள்.நம் சமூகத்தில் ஆண் அடையும் முதல் நிராகரிப்பு காதல் தோல்வியாகவே இருக்கும். தன்னம்பிக்கை அழிந்து அவன் சுருண்டு விடுகிறான்.
ஆனால் உண்மையில் இந்த விஷயத்தில் அப்படி தன்னம்பிக்கை அழிய ஏதும் இல்லை. கடந்த இருபதாண்டுகளாக நான் நூற்றுக்கணக்கான வாசகிகளுடன் உரையாடி வருகிறேன். பெண்கள் இச்சந்தர்ப்பத்தில் நடந்துகொள்ளும் முறையில் எந்தவகையான தர்க்க ஒழுங்கும் இல்லை. அவர்களின் சூழலை வைத்து அவர்கள் என்ன செய்தார்கள் எனப் புரிந்துகொள்ளமுடியும் ,அவ்வளவுதான்
அனேகமாக அத்தனை பெண்களுக்கும் இந்தத் தருணத்தில் என்ன செய்வது, எப்படி நடந்துகொள்வது என்றே தெரிவதில்லை. காரணம் பெரும்பாலும் முடிவெடுக்கும் இடத்தில் நம் குடும்ப அமைப்பு பெண்களை வைத்திருப்பதில்லை. சட்டென்று அப்படி ஒரு தருணம் முன்னால்வந்து நிற்கும்போது மனம் மரத்துவிடுகிறார்கள். வழக்கமாக எல்லா விஷயத்திலும் அவர்கள் என்ன செய்வார்களோ அதைச் செய்வார்கள். அதாவது தீ பட்டால் கையை உதறுவதுபோல ஒரு இயல்பான எதிர்வினையாக.
அது இருவகை. ஒன்று, அப்படியே உடன்படுவது. பாதிப்பங்கு பெண்கள் வழக்கமாக அவர்களுக்கு சொல்லப்படுவனவற்றை எல்லாம் செய்பவர்கள். எப்போதும் எதற்கும் உடன்படுபவர்கள். ஆகவே காதல் வற்புறுத்தப்பட்டால் மிரண்டு விலக முயன்று முடியாமல் திரும்பி வந்து அதை எந்த யோசனையும் இல்லாமல் அப்படியே வாங்கிக்கொள்வார்கள். காதலிப்பவனின் தகுதியோ நேர்மையோகூட அவர்களால் பரிசீலிக்கப்படுவதில்லை. இது உண்மையில் முடிவெடுக்கத் தெரியாமை.
இரண்டாம்வகைப் பெண்கள் அவர்கள் அறியாத, புதிய எதையுமே உடனே அஞ்சி நிராகரித்து விடுவார்கள். காதல் தெரிவிக்கப்பட்டதுமே என்ன ஏது என்று தெரியாமல் நிராகரித்துத் தன் ஓட்டுக்குள் சுருங்கிவிடும் பெண்கள் உண்டு. ஒரு வேலி போல அபாரமான எச்சரிக்கையுணர்ச்சியைத் தன்னைச்சுற்றி வைத்து உள்ளே தன்னை இறுக்கிக் கொண்டிருப்பார்கள். முழுக்கவும் கூட. இது முடிவெடுக்க முடியாமை.
யோசித்து, பரிசீலித்து முடிவெடுக்கும் மிகச்சில பெண்கள்கூடப் பெரும்பாலும் சரியான முடிவை எடுப்பதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு என்னதான் வேண்டும் என அவர்கள் அப்போது அறிந்திருப்பதில்லை. வாழ்க்கையை அறியாத, அனுபவங்கள் எதற்குள்ளும் நுழையாத காலத்தில் எடுக்கும் முடிவு.
ஆக இங்கே காதல் என்பது ஒரு இனிய, அபாயகரமான பகடையாட்டம் மட்டுமே. அதில் ஏன் பன்னிரண்டு விழுகிறது ஏன் பூஜ்யம் வருகிறது என்பதற்கு எந்தத் தர்க்கமும் இல்லை. அதை அப்படியே விட்டுவிட்டு அடுத்த வாழ்க்கைக் கட்டத்துக்கு நகர்வதே நல்லது.
உங்களுக்குக் கலைமனம் இருந்தால் அந்தக் கலைமனம் மேலும் நெகிழ்ச்சியும் உத்வேகமும் கொள்வதற்காக நிகழ்ந்தது இது என நினைத்துக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
இளமாறனின் காடு
காடு-ஒருகடிதம்
காடு, களம்-கடிதங்கள்
இரவு ஒரு கடிதம்
காடு,வாசிப்பு – கடிதங்கள்
புதிய புத்தகங்கள்-கடிதங்கள்
இரவு, முன்னுரை
நூல்கள்,கடிதங்கள்
காடு -கடிதம்
அன்பு என்ற நோய்-கடிதம்
குற்றமும் தண்டனையும்
அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
தஸ்தாயெவ்ஸ்கி இடமிருந்து செய்யப்பட இலக்கியத் திருட்டு பற்றிய கடிதம் கண்டதும், எனக்கு தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவல் நினைவுக்கு வந்து விட்டது. அந்நாவலை வாசிக்கும் முன் உங்களது பரிந்துரையையும், எஸ். ராமகிருஷ்ணனின் பரிந்துரையையும் வாசித்தேன். நீங்கள் அந்நாவலைப் பற்றி கொஞ்சமே குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்பது என் அபிப்ராயம். எஸ். ராமகிருஷ்ணன் ரஸ்கோல்நிகாஃப் காணும் அந்தக் குதிரைக்காரன் கனவை முக்கியமானதாகக் குறிப்பிட்டு எழுதியிருந்தார்.
எனக்கு குற்றமும் தண்டனையும் கொடுத்த வாசிப்பனுபவம் அபாரமாக இருந்தது. எல்லாக் கதை மாந்தர்களுமே உணர்ச்சிப் பிழம்பாகக் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். ரஸ்கோல்நிகாஃப் அதன் உச்ச கட்டம். பல்வேறு நற்குணங்களின் இருப்பிடமாகத் திகழும் ரஸ்கோல்நிகாஃப் ஏன் கொலை செய்கிறான் என்பது புதிராகவே இருக்கிறது. நாவலின் வாசிப்பனுபவம் குறித்து நான் எழுதியதைத் திரும்ப வாசிக்கும் போது பல இடங்களில் இந்தக் குழப்பமே எதிரொலிப்பதை உணர்கிறேன்.
அந்தப் பதிவு : http://jekay2ab.blogspot.com/2011/09/...
எனக்கு ரஸ்கோல்நிகாஃப் எழுதி பத்திரிகையில் வெளியான கட்டுரை முக்கியமாகப் படுகிறது. அக்கட்டுரையில் அவன் குற்றம் பற்றியும், குற்றச்செயல்களில் ஈடுபடத் தூண்டும் காரணிகள் பற்றியும் விவரிக்கிறான். ரஸ்கோல்நிகாஃபைப் பின்தொடரும் காவல்துறை அவனது அப்போதைய நடவடிக்கைகளை இந்தக் கட்டுரையோடு தொடர்புபடுத்திப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறது.
இருவகையான மனிதர்களைப் பற்றி அந்தக் கட்டுரையில் பேசுகிறான் ரஸ்கோல்நிகாஃப். அன்றாட வாழ்க்கைச் சூழ்நிலைகளுக்குக் கைதியாகி, வாழ்வை எவ்வித எதிர்ச்செயலுமின்றி வாழ்ந்து மடிபவர்கள் ஒருவகை; தான் வாழும் காலத்திலேயே காலம் தாண்டிச் சிந்திக்கும், தங்கள் சிந்தனைகளால் எதிர்கால உலகின் அமைப்பை மாற்ற எத்தனிக்கும் மனிதர்கள் மற்றொரு வகை. சட்டம், ஒழுங்கு, விதிமுறைகள், கட்டுப்பாடுகள் அனைத்தும் முதல் வகை மனிதர்களுக்காகவே அமைக்கப்பட்டிருக்கின்றன. உலகின் பெரும்பான்மை மக்கள் இவர்களே. ஆனால் ஒரு சிறுதொகையிலேயே காணப்படும் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள் எந்த வரையறைக்குள்ளும் தங்களை இருத்திக் கொள்ளாதவர்கள். தங்களது அரிய சிந்தனைகளை நிலைநாட்டுவதற்காகச் சட்டங்களை மீற அவர்களுக்கு இயற்கையே அனுமதி வழங்குகிறது. அவர்கள் இழைக்கும் எந்தக் குற்றமும் மானுட இனத்தின் மேன்மை கருதியே. அப்படிப்பட்ட மனிதர்களில் ஒருவனுக்குக் கொலை செய்வதற்குக்கூட உரிமை இருக்கிறது என்ற அடிப்படையில் இந்தக் கட்டுரை அமைக்கபட்டிருக்கிறது. தன்னை இந்த இரண்டாவது மனிதர்களில் ஒருவனாகவே கருதிக் கொள்வதால், ரஸ்கோல்நிகாஃப்தான் இந்தக் கொலையைப் புரிந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.
அடுத்ததாக ஸ்விட்ரிகாலோஃபின் பாத்திர வடிவமைப்பு. துப்பாக்கி முனையில் டூநியாவைத் தன்னைக் காதலிக்கும்படிக் கேட்கிறார். டூனியா தன்னைக் காதலிக்கவில்லை என்று அறிந்ததும் அவளை விட்டு விலகி விடுகிறார். இதற்குப் பிறகான ஸ்விட்ரிகாலோஃபின் மனநிலையை தோஸ்தோயெவ்ஸ்கி அற்புதமாக வர்ணித்திருக்கிறார். என்னைப் பொருத்தவரை நாவலின் எழுச்சி மிகுந்த இடம் இது. என்னை நெகிழச் செய்த இடமும் இதுதான்.
எனக்கு இருக்கும் ஐயங்கள் இவைதாம். ரஸ்கோல்நிகாஃப் ஏன் கொலை செய்தான்? டூனியாதான் அவன் மனமாற்றமடைந்து சரணடையக் காரணமா?
அவள் அவனை எவ்வகையில் பாதிக்கிறாள். அந்த பாதிப்பை அறிந்து கொள்கிற மாதிரி சம்பவங்கள் எதுவும் அழுத்தமாகப் பதிவு செய்யபட்டிருக்கின்றவா?
ஜெகதீஷ் குமார்.
மாலத்தீவுகள்
அன்புள்ள ஜெகதீஷ் குமார்
நான் வெவ்வேறு கட்டுரைகளிலாக குற்றமும் தண்டனையும் பற்றி நிறையவே எழுதியிருக்கிறேன். ஆனால் பெரும்பாலும் மிக ஆரம்பகாலத்தில். ஆகவே திரும்பத்திரும்ப எழுதுவதை பின்னாளில் தவிர்த்துவிட்டேன். இரு மேதைகளையும் பற்றி ஒரு நூலளவில் எழுதும் எண்ணம் நெடுநாட்களாக உள்ளது.
குற்றமும் தண்டனையும் ஒரு பேரிலக்கியம். பேரிலக்கியம் அளிக்கும் அனுபவமென்பது நாம் அதுவரை உருவாக்கியிருக்கும் சிந்தனைக்கட்டுமானத்தைச் சிதறடிப்பதே. அந்தச் சிதறல்களை நாமேதான் பொறுக்கி அடுக்கி மீண்டும் நம் அகத்தைக் கட்டிக்கொள்ளவேண்டும். அதுவே அந்த பேரிலக்கியம் நமக்களிக்கும் கொடை. ஆகவே பலசமயம் பிறர் கருத்துக்களுக்கு பெரிய மதிப்பில்லை. அவற்றை நாம் விவாதிப்பதே முக்கியமானது.
குற்றமும் தண்டனையும் நாவலில் எல்லா பகுதிகளுமே மையத்துக்கு பல வகைகளில் பங்களிப்பாற்றுகின்றன. நீங்கள் குறிப்பிடும் அந்த கட்டுரை ரஸ்கால்நிகாபின் சிந்தனையோட்டத்தை, அவனுடைய மேல் மனதைக் காட்டுகிறது. அதில் அவன் தன் வாழ்க்கை மற்றும் செயல்களுக்கான நியாயப்படுத்தல்களை செய்துகொண்டு இருக்கிறான். அந்த தளத்துக்கு நேர் எதிரான அவன் ஆழ்மனமே அந்த கனவில் வெளிப்படுகிறது. அந்த கனவு அவனுடைய சிந்தனைகளுக்கு நேர் மாறாக அவனுக்குள் இருக்கும் அடிப்படையான கருணையை அன்பை வெளிப்படுத்துகிறது. அந்த குதிரை கொல்லப்படுவது பிற்பாடு அவன் செய்யும் கொலையைப்போலவே இருப்பதை கவனிக்கவும். அங்கே அந்தக்கொலையை மன்னிக்கமுடியாத பாவமாகவே ரஸ்கால்நிகாஃபுக்குள் உறையும் குழந்தை காண்கிறது. நாம் செய்யும் செயலை நம்ம்முள் உள்ள சிந்தனையாளன் ஒப்புக்கொள்ளலாம் நமக்குள் உள்ள குழந்தை ஒப்புக்கொள்ளுமா என்பதே முக்கியமான வினா.
இவ்வாறு நாவலின் எல்லா பகுதிகளையும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படுத்திக்கொண்டு வாசியுங்கள். நிகழ்வுகளை தனித்தனியாக பிரித்துக்கொள்ளாதீர்கள். இன்னொரு உதாரணம், மார்மல்டோஃப் ஆற்றும் அந்த மதுக்கடைப் பிரசங்கம். அந்த குடிகாரனின் கண்ணீர் பேச்சில் உள்ள அப்பட்டமான களங்கமற்ற வேகத்தை நாம் ஸ்விட்ரிகைலாஃபின் பேச்சுகளில் உள்ள அறிவார்ந்த கபடத்துடன் இணைத்து வாசிக்கலாம்.
ரஸ்கால்நிகாபின் போராட்டம் நான் ஏற்கனவே சொன்னதுபோல அவனுடைய உள்ளே உள்ள அறிஞனுக்கும் குழந்தைக்குமான சமர். அவனுள் உள்ள தர்க்கத்துக்கும் கருணைக்குமான விவாதம். கருணையே வெல்கிறது. ஆகவேதான் அவன் சோஃபியா மார்மல்டோவாவை நோக்கிச்சென்று மண்டியிடுகிறான். அந்த விவாதத்தில் எல்லாருமே ஏதேனும் வகையில் பங்களிப்பாற்றியிருக்கிறார்கள். டூனியாவும்தான். ஆனால் சோபியாவின் பங்கே முக்கியமானது
நாவலை உங்களுக்குள் ஒரு பெரிய சதுரங்கமாக ஆக்கிக்கொண்டு விளையாடிக்கொண்டே இருங்கள். பல வருடங்களுக்கு
வாழ்த்துக்கள்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
November 5, 2011
பாரதி விவாதம்- ஒரு கடிதம்
அன்புள்ள ஜெ.மோ,
இக்கடிதம் "பாரதி விவாதம்" பற்றியதே அன்றி "பாரதி பற்றியது" அல்ல என்பதை முதலிலேயே தெளிவு படுத்திவிடுகிறேன்.
பாரதி பற்றிய விவாதத்தை மூன்று பேர் மட்டுமே முன் எடுத்து சென்றதாகவும் அது எதிர் பார்த்ததே என்றும் தெரிவித்திருந்தீர்கள். அது தொடர்பாக கீழ்க்கண்டவற்றை நான் குறிப்பிட விரும்புகிறேன்.
1. எதிராளியின் பலத்தில் பாதியை வாலியைப் போல் நீங்கள் வாங்கி கொண்டு விடுகிறீர்கள்? எதிராளிக்கு மூச்சு முட்டுகிறது. அசுர பலம் சார் உங்களுக்கு. எதிராளி எங்கே வாதத்தை எடுத்து செல்வது?
2. தாங்கள் விவாதத்தை எடுத்தும் செல்லும் விதம் சாதாரண வாசகனுக்கு புரிவதில்லை. ஆனால், உங்களுடன் எதிர் வினை புரிந்த மூவரின் எதிர்வினைகளும் ஒரு மிக சாதாரண வாசகனுக்கும் புரியும் விதத்தில் இருக்கிறது. மிக அதிகமான ஆழமான விவரங்களுடன் வாசகனை திணற அடிக்கிறீர்கள். அப்புறம் எப்படி சார், சாதாரண வாசகன் எதிர் வினை புரிவான்? உங்களை பார்த்தால் பயமாக இருக்கிறது சார்.
3. தாங்கள், பாரதி பற்றிய விவாதம் இலக்கிய ஆளுமை உள்ளவர்களுக்கு மட்டுமே என்ற முடிவுக்கு வந்து விவாதத்தை எடுத்து சென்றிருப்பதாக சொன்னால், அங்கே தங்களின் நோக்கம் அடிபட்டு போய்விடுகிறது. பாரதி பற்றிய விவாதமே பாரதியை மேலும் புரிந்து கொள்வதற்கும் அடுத்த தலைமுறைக்கு கடத்துவதும் தான் என்பது என் தாழ்மையான எண்ணம்.
4. வெகு ஜன ஊடகத்தில் எல்லாம் எளிமையான வசனங்களை கையாலும் நீங்கள், உங்கள் இலக்கிய ஆளுமையை காட்டுவதற்காக அல்லது சொல்ல வந்த கருத்தை ஆணித்தரமாக சொல்வதற்காக கடினமான மொழியை விவாதத்தில் தேர்ந்தெடுத்து விடுகிறீர்கள்.
5. பாரதி என்பவன் ஒரு பேரிலக்கிய மரபில் இலக்கியத்தின் அடுத்த தலைமுறைக்கான போக்கை நிர்ணயிக்கும் தொடக்க புள்ளியாக (Trend Setter) இருந்திருக்கிறான் என்பது தங்களால் ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. அப்படி வைத்துப் பார்க்கும் போது பாரதி ஒரு பேரிலக்கிய மரபை அடுத்த தலைமுறைக்கு கடத்தி இருக்கிறான். தங்களின் பாரதி விவாதம் அதை செய்திருக்கிறதா? — அவையே தமிழ் இலக்கிய பாரம்பரியம் பாரதியிடத்து சங்கமிப்பது மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறை நவீன கவிகளுக்கும் வெகுஜன கவிகளுக்கும் தோற்றுவாயாய் இருக்கிறது — குமாரசாமி சார்
6. பாரதியே ஒரு பேரிலக்கிய மரபை கட்டுடைத்து இலக்கியம் சாதரண மனிதனை சென்றடைய செய்திருக்கிறான் தானே? அவனைப்பற்றிய விவாதம் ஒரு சாதரண வாசகனை சென்றடைந்து இருக்கிறதா? -பேசப்படும் பொருளுக்கு சம்பந்தமில்லாத அதிகப்படி தகவல்களையும் தவிர்ப்பது நல்லது – குமாரசாமி சார்
7. ஒரு பேரிலக்கிய மரபின் நீட்சியாக இருக்கும் நீங்கள் அடுத்த தலைமுறைக்கு இந்த இலக்கியத்தை கடத்த வேண்டாமா? அதிகப்படியான விபரங்களால் மூச்சு திணற அடிக்காமல், எல்லோருக்கும் புரியும்படி துல்லியமாக கேட்ட கேள்விகளுக்கு பதிலை எழுதுங்கள்.- இது நான் சொல்லலை சார். குமாரசாமி சார் சொல்லி இருக்காங்க.
8. வாதம் புரிபவர் ஒரு திறமையான வக்கீல் என்பதால் வாதம் ஒரு போதும் உண்மையாகிவிடாது. பாம்பு போன்று நீளும் தங்களின் கட்டுரைகள் தங்களின் இலக்கிய ஆளுமையை வேண்டுமானால் நிறுவலாமே தவிர பாரதியை சாதாரண வாசகனிடம் சென்று சேர்க்காது.
9. பாரதியை அடுத்த தலைமுறைக்கு(வெகு ஜனத்திற்கு) கடத்துபவர்களாக யாரை கருதலாம் சார்? நான் கீழ்க்கண்டவற்றை குறிப்பிடுகிறேன்.
பாரதி தமிழ் சங்கங்கள்
பள்ளி சிறுவர்களின் பாட நூல்கள்
மேடை பேச்சாளர்கள்
10.உலகத்தில் மிக மேன்மை அடைந்த விசயங்கள் எல்லாமே மிக எளிமையானதாகவும் அவை வெகு ஜனத்தை கவர்ந்ததாகவும் இருந்திருக்கிறது. காந்தியை விட எளிமையை நிரூபித்தவர் உண்டா?
அடுத்த முறை கம்பனை கட்டுடைக்கும் போதும், காந்தியின் காலை வாரும் போதும் தங்களின் கட்டுரைகளின் அடி நாதமாக ஒரு சாதாரண வாசகன் இருக்கட்டும்.
தாங்கள் எழுதும் வேகம் ஆச்சர்யப்பட வைக்கிறது சார்.
என்றும் அன்புடன்,
அ.லெட்சுமணன்
அன்புள்ள லட்சுமணன்,
பாரதி விவாதம் மட்டுமல்ல எந்த ஒரு விவாதமுமே நம்முடைய புரிதல்களை அகலப்படுத்திக்கொள்வதற்காகவே. அதற்காகச் சொல்லப்படும் வாதங்கள் , தகவல்கள் எல்லாமே முக்கியமானவை.
நான் என்னுடைய விவாதத்தில் பாரதியைப்பற்றி மட்டும் விவாதிக்கவில்லை. விவாதத் தலைப்பே பாரதி மகாகவியா என்பதுதான். தமிழ் மரபில், இந்திய இலக்கிய சூழலில், உலக இலக்கிய விவாதத்தில் அந்த மதிப்பீட்டுக்கு என்ன இடம் என்பதே என் முன் இருந்த வினா. அந்நிலையில் அந்த களங்களை எல்லாம் கருத்தில்கொண்டுதான் விவாதிக்க முடியும். அதுதான் முறை. அதையே செய்திருக்கிறேன்.
என்னுடைய விவாதத்தை புரிந்துகொண்டவர்கள் எவரும் நான் மிகையாக அல்லது தேவையில்லாமல் ஒரு தகவலை அல்லது ஒரு வாதத்தைச் சொல்லியிருப்பதாகச் சொல்லமாட்டார்கள். நான் ஒன்றைச் சொல்லவருகையில் முழுமையாக என் தரப்பை சொல்லி முடிப்பதையே விரும்புவேன்.
தெளிவான எளிய மொழியில் சீரான வாதங்களாகவே என் தரப்பைச் சொல்லியிருந்தேன் என்றே நினைக்கிறேன். ஆனால் அவை ஏற்கனவே இலக்கிய விவாதங்களை கவனித்து, கலைச்சொற்களையும் மொழியையும் அறிந்துகொண்டு, வாசிப்பவர்களுக்கானவை. எதையும் முன்னர் வாசித்திராமல் நடுவே வந்து சேர்பவர்களுக்கானவை அல்ல. அப்படி எந்த அறிவார்ந்த விவாதத்திலும் ஒருவர் நுழைந்துவிடமுடியாது
நீங்கள் சொல்ல வருவதுபோல எனக்கு எதிர்வினை ஆற்றியவர்களின் பேச்சுகள் பள்ளிப்பிள்ளைகள் புரிந்துகொள்ளும் அளவில் எளிமையாக இருந்தன என நான் நம்பவில்லை
பள்ளிசிறுவர்களும் பிறரும் பாரதி மகாகவி என சொல்லிக்கொள்வது அல்ல இங்கே பிரச்சினை. இலக்கியமறிந்தவர்களின் மதிப்பீடு பற்றியே பேசப்பட்டது. இலக்கிய முன்னோடிகள் சொன்ன கருத்துக்களே விவாதிக்கப்பட்டன.
எந்த பண்பாட்டிலும் எல்லா விஷயங்களும் எளிமையாகவும் அடித்தட்டிலும் மட்டுமே நிகழவேண்டும் என்ற விதி செயல்பட முடியாது. ஆரம்பக்கல்வி மட்டும் போதும் என சொல்வதற்கு நிகரானது அது. ஆரம்பப்பள்ளியில் வென்று தாண்டி வருபவர்களுக்காக உயர்நிலைக் கல்வியும் கல்லூரிக்கல்வியும் இருந்தாகவேண்டும். ஆரம்பக்கல்வி நிலையில் நின்றபடி உயர்நிலைக்கல்வி புரியாத மொழியில் இருக்கிறது, அது 'மக்களு'க்கானதல்ல என்றெல்லாம் சொல்வது சரியானதாக இருக்காது.
ஈராயிரம் வருட தொன்மை கொண்ட தமிழ்ப்பண்பாட்டின் அறிவுத்தளம் என்பது எளிமையாக பள்ளிக்கூட தளத்திலோ டீக்கடை தரத்திலோ பேசப்படக்கூடிய ஒன்று அல்ல. எளிமையான விஷயங்கள் மட்டுமே இங்கே எப்போதும் பேசப்பட்டன என்பதும் பிழை. இங்கே இதுவரை நிகழ்ந்த விவாதங்கள் மிகமிக நுட்பமானவை, பேரறிஞர் சபைகளில் நிகழ்ந்தவை. அந்த விவாதங்களின் அளவிலும் தரத்திலும் துளிகூட இப்போதில்லை. இது பெரிய வீழ்ச்சி.
அந்த வீழ்ச்சியை உணராமல் அதை ஒரு சிறப்பாக எடுத்துக்கொண்டு எல்லா விவாதங்களும் அந்த தளத்திலேயே நிகழவேண்டுமென கோருவதை அறிவார்ந்த கோரிக்கையாக எடுத்துக்கொள்ள முடியாது. அது தமிழின் பெரிய அறிவுமரபை நிராகரிப்பது. உலக சிந்தனையை நிராகரிப்பது. ஏன் அறிவையே நிராகரிப்பது.
கடைசியாக காந்தியைப்பற்றி நீங்கள் சொல்வது. இதுவும் ஒரு பள்ளிக்கூடம் சார்ந்த மனப்பிரமையே. காந்தி பேசிய விஷயங்களில் ஒரு சிறு பகுதியே எளிமையானது. காந்தி தன் காலகட்டத்துச் சிந்தனைகளையும் பிரச்சினைகளையும் மிக விரிவாக எதிர்கொண்டு பேசிய தத்துவஞானி. பள்ளித்தளத்தில் எல்லாம் காந்தியின் சிந்தனைகளின் பெரும்பகுதியை விவாதிக்க முடியாது.
பள்ளிக்கூட பாடத்திலுள்ள சில கதைகளோ பொன்மொழிகளோ அல்ல காந்தியின் சிந்தனை. காந்தி பல்லாயிரம் பக்கம் எழுதிய எழுத்தாளர். உலக சிந்தனையாளர்களிலேயே மிக அதிகமாக எழுதியவர்களில் ஒருவர். காந்தியை வாழ்நாள் முழுக்க செலவிட்டு, மிக கூர்ந்து வாசித்து, ஆழமாக விவாதித்தே முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். காந்திபற்றிய ஆழமான கட்டுரைகளுக்கு காந்தி இன்று தளத்தை வாசியுங்கள்.
உங்கள் மனநிலையை நான் தினமும் பலரிடமிருந்து கண்டுகொண்டிருக்கிறேன். அதை அறிவின் மீதான அச்சம் என சொல்லலாம். அந்த அச்சம் காரணமாக அறிவார்ந்த விவாதங்கள் மீதான ஒரு மனத்தடை உருவாகிறது. அதை தன்னிடமுள்ள குறையாக, அல்லது தன்னுடைய தகுதியின்மையாகக் காண அகங்காரம் மறுக்கிறது. ஆகவே அறிவார்ந்த விஷயங்களை குறைசொல்லும் மனநிலை உருவாகிறது.
இவ்வாறு குறைசொல்பவர்களில் சிலர் தங்கள் இயலாமையை நக்கல், கிண்டல் என ஆக்கிக்கொள்கிறார்கள். சிலர் எழுத்தாளர்களுக்கு அறிவுரை சொல்லுமிடத்தில் தங்களை அமர்த்திக்கொள்கிறார்கள்.
இதெல்லாம் 'மக்களுக்கு' புரியுமா என்ற கேள்வியை எந்த தமிழ் எழுத்தாளனும் அடிக்கடி எதிர்கொள்வான். முதலில் உங்களுக்கு புரிகிறதா என்று பாருங்கள், புரியாவிட்டால் உங்களை தகுதிப்படுத்திக்கொள்ள என்ன செய்யலாம் என்று பாருங்கள் என்பதே பதிலாக இருக்கமுடியும்.
இதற்கான காரணம் நம் கல்விமுறை. எதையும் புரிந்து விவாதித்து வாசிக்க அவை நம்மை பயிற்றவில்லை. மேற்கோள்காட்ட தொகுத்துச்சொல்லவே பழக்குகின்றன. ஆகவே எளிய அறிவுத்தளம் கூட நமக்கு மிரட்சியை அளிக்கிறது
உலக அளவில் நிகழும் இலக்கிய விவாதங்கள் , தத்துவ விவாதங்களை நாமும் நிகழ்த்திக்கொள்ள நாம் இன்னமும் நுட்பமாகவும் செறிவாகவும் இன்னும் பலமடங்கு விரிவாகவுமே செல்லவேண்டும்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
பாரதி மகாகவியே
மகாகவி விவாதம்
நன்றி, முத்துக்குமாரசாமி
பாரதி-கடிதங்கள்
பாரதி-கடிதங்கள்
எட்டாத எலியட்? -எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு…
ரசனை விமர்சனமும் வரலாறும்-எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு…
எம்.டி.முத்துக்குமாரசாமியும் பாரதியும்
பாரதி விவாதம் 8 – விமர்சனம் எதற்காக ?
பாரதி விவாதம்-7 – கநாசு
இறந்தவர்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கத்துடன் எழுதிக்கொள்வது.
தங்களின் ஆக்கங்களையும், வலைத்தள எழுத்துக்களையும் வெகுநாட்களாக வாசித்து வருகிறேன். எனது வாழ்வில் தொடரும் ஒரு நிகழ்வினைப் பற்றிய சந்தேகம், தங்களால் தெளிவு படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் இந்தக் கடிதம்.
எனது தந்தை காலமாகி 10 மாதங்கள் ஆகின்றது. என் தந்தை இறந்த போது அவரின் வயது 70. எனது வயது 41. எனது சிறு வயது முதல், எனது தந்தை எனக்கு ஒரு சிறந்த நண்பர். எங்களிடம் எந்த ஒரு நிமிடமும் தலைமுறை இடைவெளி இருந்தது இல்லை. அவ்வளவு நெருக்கம். இப்பொழுது, என் கனவில் என் தந்தை வரும் பொழுதெல்லாம், அது கனவாக இருந்தாலும், கனவில் என் தந்தையைப் பார்க்கும் போதும், தந்தையுடன் பேசிக்கொண்டிருக்கும் போதும், என் தந்தை இறந்து விட்டார் என்ன நினைப்பும் உடன் வந்து விடுகிறது. அதனால் கனவில் வரும் என் தந்தையை, அவரின் உருவத்தையும் மீண்டும் பார்ப்பதற்கும், அவரின் குரலைக் கேட்பதற்கும் கிடைக்கும் வாய்ப்பாக எண்ணி, என் தந்தையைக் கூர்ந்து கவனிக்கின்றேன். பிறகு தூக்கம் கலைந்து விடுகிறது.
இது எதனால்? என் தந்தை இறந்து விட்டார் என்பது என் ஆழ்மனதில் பதிந்து விட்டதா?
தங்களால் இதற்கு விளக்கம் சொல்ல இயலும் என்று இக்கடிதத்தை எழுதியுள்ளேன்.
அன்புடன்,
ஜீவன், மதுரை.
அன்புள்ள ஜீவன்
என்னுடைய அம்மா அப்பா இருவருமே கனவில் வருவதுண்டு. பல கனவுகள் உண்மையானவையாகவே தோன்றும். அவர்கள் சார்ந்த அன்றாட நிகழ்வுகள் கனவில் வரும். ஆனால் அந்நேரத்தில்கூட அவர்கள் இறந்துவிட்டார்கள் என்ற பிரக்ஞையும் இருக்கும். பெரும்பாலான கனவுகளில் அவை கனவு என்ற பிரக்ஞையும் உள்ளூர ஓடிக்கொண்டிருப்பதைப்போலத்தான் இதுவும். அனேகமாக அனைவருக்கும் இப்படித்தான்.
சென்றகாலங்களில் ஒரு நம்பிக்கை இருந்தது, இறந்தவர்கள் அடிக்கடி கனவில் வரக்கூடாது. வருவது இங்கே அவர்கள் எதையோ மிச்சம் வைத்துச் சென்றிருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம். உளவியல் ரீதியாகச் சொன்னால், நாம் அவர்களிடம் எதையோ மிச்சம் வைத்திருக்கிறோம் என்று நம் ஆழ்மனம் உணர்வதனால்தான் அது.
உங்கள் மனம் உங்கள் தந்தையைப்பற்றி என்ன நினைக்கிறது எனக் கூர்ந்து பாருங்கள். ஏதேனும் மனக்குறையோ அல்லது முழுமையின்மையோ உணரப்படுகிறதா? அதை சரிசெய்யலாம். அல்லது சம்பிரதாயமான சடங்குகள் ஏதேனும் இருந்தால் செய்யலாம். குறியீட்டு ரீதியாக அவை ஆழ்மனதை ஊடுருவி நம்மை நிறைவடையச்செய்கின்றன என்பது என் அனுபவமும்கூட
இறந்தவர்கள் இவ்வுலகில் முற்றிலும் மிச்சமின்றி ஆவதே இயற்கையின் விதி என நினைக்கின்றன இந்திய மதங்கள்.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
ஜெ.சைதன்யா
ஜெயமோகனின் படைப்புக்களில் நான் வாசித்தவற்றுள் வித்யாசமானதும் அவருடைய சாயல்கள் அதிகமின்றியும் இருந்த புத்தகங்கள், 'அனல்காற்று' மற்றும் 'ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு' 'அனல்காற்றில்' காதல் மற்றும் காமத்தின் தீவிர நிலையை எழுத்துக்களுக்கு வலுக்கும்படியாக சொல்லியிருப்பார். ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு முற்றிலும் மாறுபட்டு மயில் இறகைக் கொண்டு எழுதிவிட்டாரோ எனும்படியான மென்மையான எழுத்துக்களால் ஆனது.
உமா ஷக்தி 'ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு' நூல் பற்றி எழுதிய விமர்சனம்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
