Jeyamohan's Blog, page 2270
November 25, 2011
கடிதங்கள்
அன்புள்ள ஜெ
கடைசியில் கேட்டே விடுகிறேன். அந்த கடைசி முகம் என்ன? எந்த முகத்தை ஓர் ஆண் உயிரைக்கொடுத்தாவது பார்ப்பான்? கதையிலே எங்காவது க்ளூ இருக்கிறதா என பலமுறை தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை
செம்மணி அருணாச்சலம்
அன்புள்ள அருணாச்சலம்
கதையில் க்ளூ இல்லை. உங்கள் வாழ்க்கையில் இருக்கும்
பத்தாயிரம் ரூபாய் டிடியுடன் சுயவிலாசமிட்ட கடிதம் அனுப்புபவர்களுக்கு பதில் அளிக்கப்படும்
ஜெ
அன்புள்ள ஜெ, நலமா
அகந்தொட்டு புறந்தொட்டு என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விட்டாள் 'கொற்றவை'. இருமுறை வாசித்த பின்னும் இன்னும் வாசிக்க என்னை அழைக்கிறாள், பலமுறை என் உணர்வோடு கலந்தும் விட்டாள் நம் மூதன்னை.கடைசி முறையாக நான் அவளை வாசித்தது பெப்ரவரி 2011 இல், பிறகு என்னால் வேறு ஒரு நூலை வாசிக்கும் எண்ணத்தையே எண்ண இயலவில்லை. ஏதோ உங்களிடம் சொல்லத் தோன்றியது.
சக்திவேல் பழனிச்சாமி
அன்புள்ள சக்திவேல்
நன்றி
நானும் கொஞ்சநாள் கொற்றவை மனநிலையில் இருந்தேன். அடுத்த நாவலுக்காக இருபது திரில்லர்களை வாசித்து மனநிலையை மொழியை மாற்றிக்கொண்டேன்
ஜெ
அன்புள்ள திரு.ஜெயமோகன்
நலமா? இன்றுதான் உலோகம் நாவல் படித்து முடித்தேன். இந்த நாவல் எனக்குப் பிடித்திருந்தது.
ஆனால் இதை த்ரில்லிங் நாவல் என்று சொல்வதுதான் ஏன் என்று புரியவில்லை. இது அப்படி ஒன்றும்
த்ரில்லிங்கை எனக்குத் தரவில்லை. எல்லாம் முன்கூட்டியே சரியாக ஊகிக்கும்படிதானே உள்ளது?
இப்படிக்கு
பா.மாரியப்பன்
அன்புள்ள மாரியப்பன்
சஸ்பென்ஸாக எதுவுமே இருக்கக்கூடாது என்பதனால்தான் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டு நாவல் செல்கிறது. இது சஸ்பென்ஸ் திரில்லர் அல்ல.
வேண்டுமென்றால் சைக்காலஜிக்கல் திரில்லர் எனலாம். மனம்தான் இங்கே துப்பறியப்படுகிறது
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
கடைசி முகம் – சிறுகதை
பரிணாமவாதமும் இந்திய மதங்களும்
கொற்றவை- கரு. ஆறுமுகத் தமிழன்
உலோகம்,கடிதம்
உலோகம்-கடிதம்
அயோத்தி தாசர்-கடிதங்கள்
தீராநதி நேர்காணல்- 2006
ஹனீபா-கடிதம்
கொற்றவை,கடிதங்கள்
கொற்றவை கடிதம்
பாடலிபுத்திரம்
1
கி.மு. 493இல் சிரேணிக வம்சத்தைச் சார்ந்தவனாகிய அஜாத சத்ரு தன் தந்தையும் மகதமன்னனுமாகிய பிம்பிசாரனை கைது செய்து சிறையிலிட்டான். பிம்பிசாரன்அந்தப்புரத்தில், நாயகியரில் ஒருத்தியைக் கூடியபடி இருந்த நேரம், திட்டமிட்டிருந்தபடி அஜாதசத்ரு தன் வீரர்களுடன் நுழைந்தான். மஞ்சத்தில்நிர்வாணமாக இருந்த பிம்பிசாரணை அப்படியே தூக்கி கைகளைப் பின்னால் முறுக்கி அவன்உத்தரியத்தினாலேயே கட்டி வீரர்களிடம் ஒப்படைத்தான். போகத்தின் தாளத்தில்சுயமிழந்து விட்டிருந்த மன்னன் காலடியோசைகளைக் கேட்கச் சற்று பிந்திவிட்டிருந்தான். தூரத்தில் உடைகளுடன் கழட்டி வைக்கப்பட்டிருந்த உடைவாளை எடுக்கமுடியவில்லை. அந்த நாயகி அங்கேயே வெட்டி சாய்க்கப் பட்டாள்.
பிம்பிசாரன்அந்தப்புறத்தில் நீண்ட புறச்சுற்றுப் பாதை வழியாக இட்டுச் செல்லப்பட்டான். அதுகூதிர்காலம். கல்லாலான அரண்மனைச் சுவர்களும் தரையும் குளிர்ந்துவிறைத்திருந்தன. உள்ளிழுத்த மூச்சுக் காற்று மார்புக்குள் உறைந்துபனிக்கட்டியாகி, மெல்ல உருகி, நரம்புகள் வழியாகப் பரவி, உடலெங்கும் நிறைவதைபிம்பிசாரன் உணர்ந்தான். பிடரியும், மார்பும் சிலிர்த்து உடல் குலுங்கிக்கொண்டிருந்தான். விரைப்படங்காத ஆண்குறி காற்றில் துழவித் தவித்தது.அந்தப்புரத்தின் படிகளில் இறங்கி சுரங்கப் பாதையின் வாசலை அடைந்ததும்பிம்பிசாரன் திரும்பிப் பார்த்தான். ஒளி ஈரம்போல மின்னிய இலைகளை மெல்லஅசைத்தபடி நந்தவனத்து மரங்களும், சாம்பல் நிறத்தில் மெல்லிய ஒளியுடன் விரிந்திருந்த வானமும், அரண்மனைக் கோபுர முகடுகளின் ஆழ்ந்த மவுனமும் அவனை ஒருகணம் பரவசப்படுத்தின. அம்மகிழ்ச்சியை வினோதமாக உணர்ந்து அவனே திடுக்கிட்டான்.
ஆழ்ந்த பெருமூச்சுடன் படியிறங்கினான்.
சுரங்கத்தின் உள்ளிருந்து சத்தமின்றி படியேறிப் பாய்ந்து வந்த குளிர்க்காற்றுஅவன் தோளை வளைத்து இறுக்கி மார்பில் தன் அங்கங்களைப் பொருத்திக் கொண்டது.பிம்பிசாரன் மனம் வழியாக எண்ணற்ற புணர்ச்சி ஞாபகங்கள் பாய்ந்து சென்றன. நடுங்கவைக்கும் குளிர் ததும்பும் அந்த அணைப்பு அவனை உத்வேகம் கொள்ளச் செய்தது.அஞ்சவும் வைத்தது. கொன்ற மிருகத்தின் உடலைக் கிழித்துப் புசிக்கும் புலியின்பாவனை அவனுக்கு புணர்ச்சியின் போது கூடுவதுண்டு. எதிர் உடல் ஒரு தடை, உடைக்கவேண்டியது. வெல்ல வேண்டியது. பின் சுய திருப்தியுடன் வாளை எடுத்தபடி வானைப்பார்ப்பது மிகவும் பிடிக்கும் அவனுக்கு. நீ பிம்பிசாரன் என அது விரிந்திருக்கும். நிலவில் அவன் அந்தப்புரம் வருவதில்லை. லதா மண்டபத்தில்முழுத்தனிமையில் இருப்பதை விரும்பினான். மகத மன்னர்கள் அனைவருமே முழுநிலவில் தனிமையை நாடுபவர்களாகவே இருந்திருக்கின்றனர். குளிர் காற்றின் வயிற்றுக்குள்நுழைந்த தன் உறுப்பில் வாழ்க்கையின் உச்சக்கட்டத் துடிப்பை உணர்ந்தான். ஆனால்மனம் அச்சம் தாங்காமல் பின்வாங்கும்படி கூறியது. அவன் இரத்தம் முழுக்க வடிந்துகொண்டிருந்தது. உதிரும் இலையின் எடையின்மை, பின்பு களைப்புடன் தடுமாறினான்.அவன் நரம்புகள் புடைத்து நீலமாக மாறின. உடல் வெளுத்துப் பழுத்தது.
வாள் நுனிகளால் தள்ளப்பட்டு பிம்பிசாரன் சுரங்கத்திற்குள் நுழைந்தான். நரைத்ததாடி பறக்க, கட்டப்படாத தலைமயிர் பிடரியில் புரண்டு அலையடிக்க, தள்ளாடிநடந்தான். அவன் முன் அஜாத சத்ருவின் பாதங்கள் வலுவாக மண்ணை மிதித்து நகர்ந்தன.இருட்டு மணமாகவும், தொடு உணர்வாகவும், நிசப்தமாகவும் மாறி, மனதை நிறைத்தது.காவலர்கள் ஒலியாக மாறினார்கள். பின்பு கரைந்து மறைந்தார்கள். பிறகு எதுவும்ஊடுருவாத தனிமையில் பிம்பிசாரன் நடந்து கொண்டிருந்தான். பாதையெங்கும் கால்களைவிறைக்கச் செய்யும் ஈரம் நிறைந்திருந்தது. இருளுக்கு கண் பழகியபோது சுரங்கச்சுவர்கள் கசிந்து கொண்டிருப்பதைக் கண்டான். அவை மெல்ல சுருங்கி விரிந்தபடிஇருந்தன. அது ரத்தம். சிறிய நீரோடையாக மாறி அது அவன் கால்களைப் பற்றிக்கொண்டது. சுவர் வளைவுகளை மோதி கிளுகிளுத்தபடி விலகிச் சென்றது. எங்கோ வெகுஆழத்தில் பேரொலியுடன் அருவியாக விழுந்து கொண்டிருந்தது.
தன் கால்களை இடறிய ஆட்டுக்குட்டிகளைப் பற்றி அப்போது பிம்பிசாரன் எண்ணினான்.கனிந்த கண்களுடன், மார்போடு அணைத்த ஆட்டுக்குட்டியுடன் தன் யாகசாலைக்கு வந்தசாக்கிய முனியை கனவில் காண்பது போல் அவ்வளவு அருகே கண்டான். அவன் உடலின்மெல்லிய வெம்மையைக்கூட அக்கடும் குளிரில் உணர முடிந்தது. பவளம் போலச் சிவந்துயாகசாலை மையத்தில் இருந்த பலிபீடம். அதைச் சுற்றி தலை துண்டிக்கப்பட்டவெள்ளாடுகளின் கால்கள் உதைத்து புழுதியில் எழுதிய புரியாத லிபிகளை இப்போதுபடிக்க முடிவதை அறிந்தான். புத்தர் புன்னகை புரிந்தார். அவன் அவரை நோக்கிப்பாய்ந்து செல்ல விரும்பினான். ஆனால் ஓட்டம் அவன் பாதங்களைக்கரைத்துவிட்டிருந்தது. உருகும் பனிப் பொம்மை போல மிதந்து சென்றுகொண்டிருந்தான். புத்தரின் கரம் படு விழி சொக்கியிருந்த ஆட்டுக் குட்டியின்உடலின் வெண்மை மட்டும் ஒரு ஒளிப் புள்ளியாகக் கண்களுக்கு மிஞ்சியிருந்தது. பின்பு அதுவும் மறைய இருட்டு எஞ்சியது. பலி பீடத்திற்கென்று பிறவி கொண்டுஇறுதிக் கணத்தில் மீட்கப்பட்ட ஆடுகள் நந்தவனம் முழுக்க செருக்கடித்துத்திரியும் ஒலி கேட்டது. குளம்புகள் பட்டு சருகுகள் நெரிந்தன. வாழ்வின்நோக்கத்தையே இழந்துவிட்ட அவை ரத்தம் கனக்கும் உடலை என்ன செய்வது என்றுதெரியாமல் தவித்தன. மண்டை ஓடுகள் உடையும்படி பரஸ்பரம் மோதிக்கொண்டன. வழியும்ரத்தத்திலே வெறி கொண்டு மேலும் மேலும் மோதின. மரண உறுமல்கள் எதிரொலித்துசுரங்கம் ரீங்காரித்தது. பிம்பிசாரன் இருட்டின் முடிவற்ற ஆழத்தை ஒவ்வொரு கணமும்உணர்ந்தான்.
2
அஜாத சத்ருவின் முடிசூட்டு விழாவிலும் வானவர் மலர் மாரி சொரிந்தனர். அவன் தன்தந்தையின் தேவியரைத் துரத்திவிட்டு அந்தப்புரத்தை தன் தேவியரால் நிரப்பினான்.ஆனால் கூடலின்போது எப்போதும் கவசத்துடனும் வாளுடனும் இருந்தான். இரும்பின்குளுமை பெண்களை உறைய வைத்து விட்டிருந்தது. ஆழத்தில் அவள் உடல் சதைகளும், மிகஅந்தரஙகமான தருணத்தில் அவள் சொல்லும் பொருளற்றா வார்த்தையும்கூடசில்லிட்டிருந்தன. பனிக்கட்டிப் பரப்பைப் பிளந்து, காட்டுப் பொய்கையில் நீராடிஎழும் உணர்வே அஜாத சத்ரு எப்போதும் அடைந்தான். பின்பு அப்பெண்ணின் அடிவயிற்றில்காது பொருத்தி அச்சத்துடன் உற்றுக் கேட்பான். உடைவாளால் அவளைப் பிளந்து போட்டபிறகுதான் மீள்வான். அவள் கண்கள்கூட மட்கிப்போய் வெட்டுபவனுக்கு அந்த ஆதி மகாஉவகையைச் சற்றும் அளிக்காதவையாக ஆகிவிட்டிருக்கும். இரவெல்லாம் அல்லித்தடாகத்தில் தன் வாளைக் கழுவியபடி இருப்பான். அதன் ஆணிப் பொருத்துகளிலும்,சித்திர வேலைகளிலும், உறைந்த ரத்தத்தைச் சுரண்டிக் கழுவுகையில் எப்போதாவதுதலையைத் தூக்கினால் விரிந்த வானம் நீதானா என்று வினவும்.
தன் பாதத் தடங்களை இடைவாளால் கீறி அழித்துவிட வேண்டுமென்பதில் அஜாதசத்ருஎப்போதும் கவனமாக இருந்தான். ஒவ்வொரு முறையும் அவன் ஆண்மை நுழைந்து மீண்டவழியில் அது நுழைந்து சென்றது. உதிரம் பட்டு அது ஒளி பெற ஆரம்பித்தது. அவன்இடையில் அது ஒரு மின்னல் துண்டாகக் கிடந்தது. அவன் உடலில் அது செவ்வொளிபிரதிபலித்தது. அவன் அரியணையை நெருப்பு போல சுடர வைத்தது. வாள் அவனை இட்டுச்சென்றது. பாயும் குதிரைக்கு வழிகாட்டியபடி காற்றை மெல்லக் கிழித்தபடி அதுமுன்னகரும்போது பயத்துடனும், ஆர்வத்துடனும் அதைத் தொடரும் வெரும் உடலாக அஜாதசத்ரு ஆனான். கோசலத்தில் பிரசேனஜித்தின் தலையை மண்ணில் உருட்டிய பின்பு வாள்உடலைச் சிலுப்பி ரத்த மணிகளை உதறியபோது முதன்முறையாக அஜாத சத்ரு அதைக் கண்டுஅஞ்சினான். கூரிய ராவால் ரத்தத்தைச் சுழட்டி நக்கியபடி வாள் மெல்ல நெளிந்தது. அதிலிருந்து சொட்டும் துளிகள் வறண்ட மண்ணில் இதழ் விரிக்கும் அழகைக் கண்டு அஜாதசத்ரு கண்களை மூடிக் கொண்டான். லிச்சாவி வம்சத்துக் குழந்தைகளின் ரத்தம்தேங்கிய குட்டையில் தன் கையைவிட்டு குதித்து பாய்ந்து, வாளைமீன் போலமினுங்கியபடி, வால் துடிக்க, உடல் நெளித்துத் திளைக்கும் தன் வாளைப் பார்த்தபடி அஜாதசத்ரு நடுங்கினான். பின்பு திரும்பி ஓடினான். சாம்ராஜ்யப் படைப்புகளையும்வெற்றிக் கொடி பறக்கும் ொத்தளங்களையும் விட்டு விலகி காட்டுக்குள் நுழைந்தான்.அங்கு தன்னை உணர்ந்த மறுகண தாங்க முடியாத பீதிக்கு ஆளானான். நினைவு தெரிந்தநாள் முதல் வெறும் கைகளுடன் வாழ்ந்து அறிந்ததில்லை. கைகளின் எல்லா செயல்பாட்டுக்கும் வாள் தேவைப்பட்டது. ஆபாசமான சதைத் தொங்கலாக தன் தோள்களின்மீது கனத்த கரங்களைப் பார்த்து அஜாத சத்ரு அழுதான். திரும்பி வந்து தன்வாள்முன் மண்டியிட்டான்.
சிரேணிய வம்சத்து அஜாத சத்ரு கோட்டைகளைக் கட்டினான். ராஜகிருக நகரை வளைத்துஅவன் கட்டிய பாடலிகாமம் என்ற மாபெரும் மதில் அதற்குள் மவுனத்தை நிரப்பியது.பல்லாயிரம் தொண்டைகளோ முரசுகளோ கிழிக்க முடியாத மவுனம். அதன் நடுவே தன் அரண்மனைஉப்பரிகையில் வாளுடன் அஜாதசத்ரு தனித்திருந்தான். நிறம் பழுத்து முதிர்ந்த வாள்அவன் மடிமீதிருந்து தவழ்ந்து தோளில் ஊர்ந்து ஏறியது. சோம்பலுடன் சறுக்கி முதுகைவளைத்தது. அந்த நிலவில் அஜாத சத்ரு எரிந்து கொண்டிருந்தான். இரும்புக்கவசத்தின் உள்ளே அவன் தசைகள் உருகிக் கொண்டிருந்தன. புரண்டு புரண்டு படுத்தபின்விடிகாலையில் தன்மீது பரவிய தூக்கத்தின் ஆழத்திலும் அந்நிலவொளியேநிரம்பியிருப்பதை அஜாத சத்ரு கண்டான். இதமான தென்றலில் அவன் உடலில் வெம்மைஅவிந்தது. மனம் இனம்புரியாத உவகையிலும் எதிர்பார்ப்பிலும் தவிக்க அவன் ஒருவாசல் முன் நின்றிருந்தான். நரைத்த தாடி வழியாகக் கண்ணீர் மவுனமாகக் கொட்டிக்கொண்டிருந்தது. கதவு ஓசையின்றித் திறந்தது. ஒளிரும் சிறுவாளுடன் அங்கே நின்றிருந்த பொன்னுடலை அஜாத சத்ரு பரவசத்தால் விம்மியபடி பார்த்தான். அதுவாளல்ல தாழைப்பூ மடல் என்று கண்டான். தனனைக் கைது செய்து கூட்டிச் செல்லும் அப்பிஞ்சுப் பாதங்களை எக்களிப்புடன் பின்தொடர்ந்தான். மலர் உதிர்வது போன்றுஅப்பாதங்கள் அழுந்தி சென்ற மண்மீது தன் கால்களை வைக்கும் போதெல்லாம் உடல்புல்லரிக்க நடுங்கினான். சிறு தொந்தி ததும்ப மெல்லிய தோள்கள் குழைய தள்ளாடும்நடை அவனை இட்டுச் சென்றது. நீரின் ஒளிப்பிரதிபலிப்பு அலையடிக்கும் சுவர்கள் கொண்ட குகைப் பாதையில் நடந்தான். சுவர்கள் நெகிழ்ந்து வழியும் ஈரம் உடலைத்தழுவிக் குளிர்வித்தது. எல்லா பாரங்களையும் இழந்து காற்றில் மலரிதழ்போல் சென்றுகொண்டிருந்தான்.
பதறிய குரலில் ஏதோ புலம்பியபடி அஜாத சத்ரு விழித்துக் கொண்டான். அந்தப்புரத்துஅறைகள் வழியாக ஓடினான். தன் மகனைத் தனக்குக் காட்டும்படி கெஞ்சினான். பெண்முகங்கள் எல்லாம் சதைப் பதுமைகளாக மாறின. சுவர்கள் உறைந்திருந்தன.அம்மவுனத்தைத் தாங்க முடியாமல் என் மகன் என் மகன் என்று அழுதான். கற்சுவர்நெகிழ்ந்த வழியினூடே வந்த முதிய தாதி அஞ்சிய முகத்துடன் தன் மகனை அவனிடம்காட்டினாள். போதையின் கணமொன்றில் தவறிவிட்டிருந்த வள் விழித்துக்கொண்டுசுருண்டு எழுந்து தலைதூக்கியது. அவன் அதைத் தன் வலக்கையால் பற்றினான். அவன்கையைச் சுற்றி இறுக்கித் துடித்தது. அழுக்குத் துணிச் சுருளின் உள்ளே சிறுபாதங்கள் கட்டைவிரல் நெளிய உதைத்தன. அஜாத சத்ரு குனிந்த அந்த முகத்தைப்பார்த்தான். உதயபத்தன் சிரித்தான். என்றோ மறந்த இனிய கனவு ஒன்று மீண்டது போலஅஜாதசத்ரு மனமுருகினான். உதயபத்தன் மீது கண்ணீர்த் துளிகள் உதிர்ந்தன. வள்அஜாதசத்ருவை முறுக்கியது. அதன் எடை அவன் கால்களை மடங்க வைத்தது. அவன் தசைகளும்நரம்புகளும் தெறித்தன. அவன் அதை உருவி தன் மகனின் முஷ்டி சுருண்ட சிறு கைகளில்வைத்தான். காந்தள் மலர் போல அது அங்கிருந்தது. அதன் கீழ் தன் தலையைக்காட்டியபடி அஜாதசத்ரு மண்டியிட்டான். அன்றிரவுதான் அவன் மீண்டும் முழுமையானதூக்கத்தை அடைந்தான்.
3
ராஜக்ருக மாநகரம் வெள்ளத்தால் அழிந்தது. மண்ணின் ஆழத்திலிருந்து பெருகியஊற்றுக்களே அதைத் தரைமட்டமாக்கின. உதயபத்தன் பின்பு கங்கை நதிக்கரை சதுப்பில் தன் தந்தையின் உடலைப் புதைத்த இடத்தில் இன்னொரு பெரும் நகரத்தை எழுப்பினான்.சதுப்பின் மீது மரக்கட்டைகளை அடுக்கி அதன்மீது கோபுரங்களும் கோட்டைகளும் எழுப்பப்பட்டன. மிதக்கும் நகரத்தின் கீழே பூமியின் ஆறாத ரணங்களின் ஊற்றுக்கள்எப்போதும் பொங்கியபடிதான் இருந்தன. அந்த நகரம் ஒருபோதும் இருந்த இடத்தில்நிலைத்திருக்கவில்லை. எவர் கண்ணுக்கும் படாமல் அது நகர்ந்தபடியே இருந்தது;நூற்றாண்டுகள் கழித்து கங்கையை அடைந்து சிதறும்வரை. பாடலிபுத்திரம் பூமி மீது மனிதன் எழுப்பிய முதல் பெருநகர் அது.
———–
(காலச்சுவடு)
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
November 24, 2011
தெருக்கூத்து விழா
'மணல்வீடு' ஆசிரியர் ஹரிகிருஷ்ணனின் கடிதம்:
வருகிற டிசம்பர் மாதம் 24ம் தேதி மணல்வீடு சிற்றிதழும் களரி தொல்கலைகள் &கலைஞர்கள் மேம்பாட்டு மையமும் இணைந்து நிகழ்த்துகலைஞர்களை கௌரவிக்கும்விழா ஒன்றினை ஏற்பாடு செய்திருக்கிறது.அமரர் சடையன் வாத்தியார் நினைவுவிருது அறுவர்க்கும், அமரர் துரைசாமி வாத்தியார் நினைவு விருதுஒருவர்க்குமாக ஏழு மூத்த கலைஞர் பெருமக்களுக்கு விருதும் பணமுடிப்பும்வழங்கப்படவிருக்கிறது.
அவ்வமயம் கவிஞர் கறுத்தடையான் அவர்களின் ஊட்டு கவிதைப்பிரதிவெளியீடும், தோற்பாவை, கட்டபொம்மலாட்ட, கூத்துக்கலைஞர் அம்மாபேட்டைகணேசன் அவர்களை குறித்த விதைத்தவசம் என்றவோர் ஆவணப்பட திரையிடலும், அண்ணாரது சூர்ப்பனகை கர்வபங்கம் தோற்பாவைக்கூத்தும், களரி
தெருக்கூத்துப்பயிற்சிப்பட்டறை வழங்கும் பாஞ்சாலி சபதம் தெருக்கூத்தும்நிகழ்த்தப்படவிருக்கிறது.
பேராசிரியர்கள் சே.ராமாநுஜன் செ. ரவீந்திரன், அ. மார்க்ஸ்,தழிழச்சி தங்கபாண்டியன், எழுத்தாளர் இராசேந்திர சோழன்,நாஞ்சில்நாடன் ஆகியோர் விழாவை சிறப்பிக்க வருகின்றனர்.மற்றும் எங்கள் பெருமைக்குரிய
வாத்தியார்கள் ஜெயா செல்லப்பன்,மாயவன், ஏகாபுரம் சுப்ரு, கூலிப்பட்டி சுப்ரமணி ஆகியோரும் வருகை தரவிருக்கிறார்கள். இவ்விழாவில் பங்குபற்ற அன்புடன் அழைக்கிறேன்.விழா அழைப்பிதழ் தயாரிப்பில்
உள்ளது. பின்னர் அனுப்பி வைக்கப்படும்.
இவண்
மு.ஹரிகிருஷ்ணன்
9894605371
9677520060
குறிப்பு:
பெரும் நிதிவேண்டும் இக்காரியத்திற்கு அன்பர்கள் குறைந்தபட்சம் ரூபாய்
ஐநூறு அளவில் கீழ்காணும் வங்கி கணக்கெண்ணிற்கு பணம் அனுப்பி உதவினால் அதை
மணல்வீட்டிற்கான ஐந்தாண்டு சந்தாவாக பதிந்து அவர்களுக்கு வரும் ஜனவரி
முதல் மணல்வீடு இதழ் அனுப்பி வைக்கப்படும். அத்துடன் விதைத்தவசம் ஆவணப்பட
வட்டும் ஒரு பிரதி உண்டு.
kalari heritage and charitable trust
,a\c.no.31467515260
sb-account
state bank of india
mecheri branch
branch code-12786.
ifsc code-SBIN0012786
MICRCODE-636002023
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
இந்துமதம்,சம்ஸ்கிருதம்,பிராமணர்
அன்பின் ஜெ.
சமஸ்கிருதம் குறித்தான உங்கள் பதிவைப் படித்தேன்.
"சமஸ்கிருதம் ஒரு பொதுவான மொழி. இந்தியாவின் ஏன் உலகின் அனைத்து இந்துக் கோவில்களிலும் பொதுமைக்காக சமஸ்கிருத வழிபாடு செய்யப்படுகிறது. அய்யப்பன் கோவிலில் சமஸ்கிருதம் வந்தபின்புதான் அனைவரும் அங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள்" என்கிறீர்கள்.
இந்து மதம் பொதுவாகவே பொதுமைக்கு எதிரானது என்பதை இன்றும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உட்பட பல கோவில்களில் 'அந்நிய மதத்தினர் பிரவேசிக்கக் கூடாது' என்று எழுதி வைக்கப்பட்டுள்ள பலகைகள் மூலம் அறியலாம். அவ்வளவு ஏன், இன்றும் கூட சில இந்துக் கோவில்களில் எல்லா சாதியினரும் நுழைய முடியாது. ஆக மதத்தில், சாதியில் பிரிவினையைக் கடைப்பிடிக்கும் இந்து மதம் மொழியில் மட்டும் பொதுமையை எப்படிக் கடைப்பிடிக்கும் ?
'மையத்தில் சம்ஸ்கிருத வழிபாட்டுமுறை இருப்பது பிறமொழிகளில் வழிபடுவதற்கான தடை அல்ல. எல்லா இந்திய வட்டார மொழிகளும் இந்து வழிபாட்டு மொழிகளாகவே உள்ளன. எல்லா மொழிகளிலும் பல்லாயிரம் தோத்திரங்களும் பாடல்களும் உள்ளன. அவை ஆலயங்களில் பாடப்படுகின்றன' என்கிறீர்கள் .சமஸ்கிருதம் அவ்வளவு நல்ல மொழியாக இருந்தால் ஏன் சிதம்பரம் கோவிலில் தமிழில் பாடிய ஆறுமுகசாமி அய்யா அடி வாங்கினார். சமஸ்கிருதம் தேவ பாஷையாகவும் ,தமிழ் நீச பாஷையாகவும் ஆனது எப்படி?
அரசியல்வாதிகளால் நமக்குச் சொல்லப்பட்டிருப்பது போல சம்ஸ்கிருதம் வடவர்களின் மொழியோ, பிராமணர்களின் மொழியோ, வைதிகத்தின் மொழியோ, இந்துமதத்தின் மொழியோ அல்ல' என்கிறீர்கள்.
பிறகு ஏன் அந்த மொழி மற்றவர்களால் பேசவோ, புழங்கவோ படவில்லை. பிராமணர் அல்லாதார் வேதம் கற்றால் காதில் ஈயம் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்ற ஸ்லோகம் எதற்கு?
பின்வரும் இன்றைய நிஜமான நிலை மாறுபட்டதாக இருக்கிறதே ஏன் ?
1. அனைத்துக் கோவில்களிலும் சமஸ்கிருதம் தான் முதன்மை மொழி. தமிழில் போனால் போகிறது என்று சில பாடல்களைப் பாடுகிறார்கள்.
2. பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகர் ஆக்கும் எண்ணம் இன்று வரை நிறைவேறவில்லை. அவர்கள் இந்தத் தொழிலைக் கற்று விட்டு இன்று சும்மா இருக்கின்றனர்.
3. திருமணம், காதுகுத்து, புதுமனை புகும் விழா எனத் தமிழர்களின் அனைத்து நிகழ்வுகளும் பிராமணர்களால், நமக்குப் புரியாத சமஸ்கிருத மொழியில்தான் நடத்தப்படுகின்றன[ இதற்கு நானும் விதி விலக்கு இல்லை]
4. எந்தக் கோவில்களில் கூட்டம் வருகிறதோ அங்கு உள்ள சாமிகளுக்கு மட்டும் ஸ்லோகங்கள் உருவாக்கப்பட்டு பிராமணர்களால் பூசை செய்யப்படுகிறது.உ.ம் …திருப்பதி, சபரிமலை, திருச்செந்தூர்…..
தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் ஏகப்பட்ட சிறுதெய்வங்கள் பலபேருக்குக் குலதெய்வங்களாக உள்ளன. ஆனால் சமஸ்கிருதத்தின் கருணைப் பார்வை அந்த தெய்வங்களுக்கு எல்லாம் ஏன் கிடைக்க வில்லை?
மேலே உள்ள கருத்துக்களில் ஏதேனும் பிழை இருப்பின் திருத்திக் கொள்கிறேன்.
என்னுடைய இந்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவீர்கள் என்ற நம்பிக்கையோடு
அன்புடன்
செல்வம்
அன்புள்ள செல்வம்,
மன்னிக்கவும், நான் ஏற்கனவே விரிவாக எழுதிய குறிப்புகளில் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில்கள் உள்ளன. அவற்றை கவனிக்காமல் மீண்டும் அதே கேள்விகளையே கேட்கிறீர்கள். இந்த வகையான கவனக்குறைவு உங்களிடம் இருப்பதில்இருந்தே உங்களுடைய மேலே சொல்லப்பட்ட எல்லா வினாக்களும் வந்துள்ளன. அவை பொதுவாக சூழலில் இருந்து வந்தடைந்த மனப்பதிவுகளே ஒழிய கொஞ்சமேனும் ஆராய்ந்து நோக்கப்பட்டவை அல்ல.
இந்துமதம் பொதுமைக்கு எதிரானது என்கிறீர்கள். பத்ரிநாத் முதல் கன்யாகுமரி வரை பல்வேறு இனம்சார்ந்த, மொழி சார்ந்த,சாதி சார்ந்த கோடிக்கணக்கான மக்களால் இந்துமதவழிபாடு கடைப்பிடிக்கப்படுகிறது என்ற கண்கூடான உண்மையையாவது மறுக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். ஒவ்வொரு ஊரிலும் ஆசாரங்களும் நம்பிக்கைகளும் சடங்குகளும் வேறுபடுவதையும் மறுக்கமாட்டீர்கள்.
இந்த மக்கள் அனைவருக்கும் பொதுவான சில வழிபாட்டு முறைகளைத் தன் மையத்தில் இந்துமதம் உருவாக்கிக்கொண்டிருக்கிறது, அது இந்தியா முழுக்கப் பொதுமொழியாக விளங்கிய சம்ஸ்கிருதத்தில் உள்ளது என்று நான் சொல்கிறேன். அதில் என்ன பிழை? அப்படி ஒரு மையமொழி எந்த மதத்துக்குமே இருக்கக்கூடாது என்கிறீர்களா? அல்லது இந்துமதத்திற்கு மட்டும் இருக்கக்கூடாது என்கிறீர்களா? என்ன சொல்ல வருகிறீர்கள்?
இக்குறிப்புகளில் நான் முன்வைப்பது ஒரு விரிவான இந்திய வரலாற்றுப் பரிணாமத்தின் சித்திரத்தை. அதன் அடிப்படையில்தான் என் விளக்கங்களை அளிக்கிறேன். அது டாக்டர் அம்பேத்கர்,டி.டி.கோசாம்பி முதல் இன்று டாக்டர் ராமச்சந்திரன் வரையிலான வரலாற்றறிஞர்கள் கூறும் ஆய்வுத்தரவுகளையும் வாதங்களையும் அடிப்படையாகக் கொண்ட, தெளிவாக விளக்கப்பட்ட, ஒரு வரலாற்றுவரைவு.
இந்து மதம் எல்லா பக்தர்களையும் சமமாக நடத்தியது, நடத்துகிறது என நான் சொல்லவில்லை. உலகில் உள்ள எந்த மதமும் அப்படி ஒரு மானுடசமத்துவத்தை உள்ளடக்கமாகக் கொண்டது அல்ல. எல்லா மதங்களுமே அதன் நம்பிக்கையாளர்களிடையே தெளிவான உயர்வுதாழ்வுகளை வரையறுத்து வைத்திருந்தவைதான். இன்றுகூட எந்த மதமும் அந்த ஏற்றத்தாழ்வுகளை முழுமையாக விட்டுவிடவும் இல்லை.
ஏனென்றால் மானுடவரலாற்றின் கடந்த காலத்தில் மனிதர்களெல்லாம் நடைமுறையில் சமம் என்ற சிந்தனையே இருந்ததில்லை. அந்தச்சிந்தனை ஒரு இலட்சியக்கனவாக உதித்துப் பல்வேறு சமூகப்போராட்டங்கள் வழியாக வளர்ந்து, சென்ற முந்நூறாண்டுகளுக்குள் உலகில் சில இடங்களில் சோதனை நடைமுறைக்கு வந்தது. இந்த நூறாண்டுக் காலத்தில்தான் உலகளாவிய ஒரு கருத்தாக அது ஏற்கப்பட்டுள்ளது. இன்னும் மானுட இனத்தில் நேர்பாதி அதை ஏற்றுக்கொண்டதில்லை. ஆணும் பெண்ணும் சமம் என்பதை ஏற்றுக்கொள்ளாத மக்களே இன்றைய உலகில் பெரும்பான்மை என்பதை மறக்கவேண்டாம்.
இதுவரையிலான மானுடப்பண்பாட்டின் வளர்ச்சி என்பது மனிதர்களைத் திரட்டி மேல்கீழாக அடுக்கி உறுதியான சமூக அமைப்புகளை உருவாக்குவதாகவே இருந்து வந்துள்ளது. உலகமெங்கும் உள்ள எல்லா சமூகங்களும் அப்படி மேல்கீழ் அடுக்குகளாகக் கட்டப்பட்டவைதான். அவ்வாறு இந்தியநிலத்தில் பல்வேறு சமூகங்கள் உருவான காலகட்டத்தில் பிறந்து வந்தது இந்துமதம்.
இந்துமதம் ஒரு தொகைமதம். இந்தியப்பெருநிலத்தில் பல்லாயிரம் வருடங்களாக இருந்துவந்த பல்லாயிரம் இனக்குழுக்கள் சாதிமுறை என்ற அமைப்புக்குள் மேல் கீழாக அடுக்கப்பட்டு இங்குள்ள சமூகமுறை உருவானது. எந்த சாதி நிலத்தையும் வணிகத்தையும் வென்றெடுத்ததோ அது மேலே சென்றது. பிற சாதிமேல் அதிகாரம் செலுத்தியது. சமூகத்தை வழிநடத்திச்சென்றது.
இவ்வாறு பல்வேறு இனக்குழுக்கள் ஒரே சமூகமாகத் தொகுக்கப்பட்டபோது அந்த இனக்குழுக்களின் வழிபாட்டுமுறைகளும் நம்பிக்கைகளும் ஆசாரங்களும் ஒன்றாகத் தொகுக்கப்பட்டன. அவ்வாறுதான் இந்துமதம் உருவானது.
பல்வேறு வழிபாட்டுமுறைகளும் சிந்தனைகளும் ஒன்றானபோது அவற்றுக்குள் ஓர் உரையாடல் நிகழ்ந்தது. பலநூறாண்டுக்காலம் பல தளங்களில் நிகழ்ந்த உரையாடல் அது. அந்த உரையாடலில் ஒவ்வொரு வழிபாட்டுமுறையும் ஒவ்வொரு சிந்தனையும் இன்னொன்றால் பாதிக்கப்பட்டன. காலப்போக்கில் அதற்கு ஒரு மையஓட்டம் உருவாகி வந்தது. அந்த மையம் பிற அனைத்தையும் இணைக்க ஆரம்பித்தது.
நடைமுறையில் இந்தப் பல்வேறு சிந்தனைகளில் எது வலுவானதோ அது பிறவற்றை விட அதிக முக்கியத்துவம் அடைந்து மையமாக ஆவதே வழக்கம். உலகமெங்கும் பார்த்தால் அந்த வலுவான தரப்பு பிற எல்லாத் தரப்புகளையும் அழித்து இல்லாமலாக்கி வெற்றிகொண்டிருப்பதையே நாம் காணமுடியும். இந்தியாவில் அது நிகழவில்லை. மாறாகப் பிறவற்றை ஒருங்கிணைத்துக்கொண்டு அந்த வலுவான தரப்பு வளர்ந்ததையே காண்கிறோம்.
இந்துமதத்தைப் பொறுத்தவரை வேதமரபு என்பதுதான் வலுவானது. ஆனால் அது பிற மரபுகள் அனைத்தையும் ஒருங்கிணைப்பதாகவே அது இருந்தது. அனைத்தில் இருந்தும் முக்கியமான அம்சங்களை வாங்கிக்கொண்டு அது வளர்ந்தது. அந்த வளர்ச்சிப்போக்கில் வேதமரபு வேதாந்தமாகவும் பின்னர் பக்திமதங்களாகவும் மாறியது.
வைதிகமரபில் இருந்த பிரம்மம் என்ற கருத்துதான் இந்த இணைப்புப்போக்கு உருவாவதற்கான காரணம். பிரம்மம் என்பது பெயரற்ற, உருவமற்ற, எங்கும் நிறைந்த, எல்லாமாக ஆகிய ஒரு தத்துவார்த்தமான தெய்வம். அந்தத் தத்துவமாக நாம் எந்தக் கடவுளையும் காணமுடியும். கல்லையும் மண்ணையும் மிருகங்களையும் எல்லாம் பிரம்மமாக விளக்கமுடியும். உங்கள் உள்ளூர் மாரியம்மனைக்கூடத் தோத்திரங்களில் பிரம்ம சொரூபிணி [பிரம்மமே உருவெடுத்து வந்தவள்] என்றுதான் சொல்லி வழிபடுவார்கள்.
இந்தியாவெங்கும் இந்தத் தொகுப்புநிகழ்வு அன்றும் இன்றும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இந்து மெய்ஞானம் எவரையும் மேலே கீழே என வரையறுக்கவில்லை. சமூகத்தில் யார் ஆதிக்கம் செலுத்துகிறார்களோ அவர்கள் இந்துமதத்திலும் மேலாதிக்கம் செலுத்துபவர்களாக ஆகிறார்கள். இந்துமதத்தின் ஆசாரங்களை அவர்கள் அதற்கேற்ப வரையறைசெய்துகொள்கிறார்கள்.
நூறுவருடம் முன்பு இங்கே வரலாற்றை எழுதிய வெள்ளையர் இந்துமதம்தான் மக்களை சாதி அடிப்படையில் பிரித்து, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியது என எழுதிவைத்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கிறித்தவ மதமாற்ற எண்ணம் கொண்டவர்கள். சென்ற நூறாண்டுக்காலத்தில் ஏராளமான வரலாற்று ஆய்வுகள் மூலம் அது பொய் என நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவில் சாதிமுறையும் ஏற்றத்தாழ்வும் உருவாகி வந்த வரலாறு துல்லியமாகவே எழுதப்பட்டுள்ளது. ஆனால் நூறுவருடமாகவே வரலாற்றை வாசிக்காத அரசியல்வாதிகளால் சொல்லப்படும் சில்லறை வரிகளே நம் மேடைகளில் உலவுகின்றன. உங்களைப்போன்றவர்கள் எந்த பரிசீலனையும் இல்லாமல் அதை நம்புகிறீர்கள்.
இந்து மதத்தின் மெய்ஞானம் ஏற்றத்தாழ்வை வரையறைசெய்கிறது என்றால் அதை இந்துமதத்தால் மாற்றிக்கொள்ளவே முடியாது. ஆனால் உண்மை அப்படி அல்ல . இந்துமதத்தின் அமைப்புக்குள்ளேயே எப்போதும் மேலே உள்ள சாதிகள் கீழே வருவதும் கீழே உள்ள சாதிகள் மேலே செல்வதும் நடந்துகொண்டே இருக்கிறது என்பதே வரலாறு. அந்த மாற்றங்களுக்கான காரணம் பொருளாதாரம் சார்ந்தது, அரசியல் சார்ந்தது. கண்டிப்பாக மதம் சார்ந்தது அல்ல
இந்தியவரலாறெங்கும் எளிய நிலைகளில் வாழ்ந்த பல்வேறு அடித்தள சாதிகள் வரலாற்றின் ஓட்டத்தில் ராணுவபலம்பெற்று மேலாதிக்கத்தை உருவாக்கிக்கொண்டதைப் பார்க்கலாம். அவர்கள் பேரரசுகளை உருவாக்கினார்கள். இந்துமதத்தில் மேலாதிக்கம் பெற்றார்கள். சந்திரகுப்த மௌரியர் முதல் இதைக் காணலாம். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பேராலயங்களைக் கட்டிய நாயக்கர்கள் ஆந்திராவில் உள்ள எளிய மாடுமேய்க்கும் சாதியினர்தான். எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் அவர்கள் தற்செயலாகக் குதிரை மேய்க்க ஆரம்பித்தார்கள். பெரிய ராணுவ சக்தியாக மாறிப் பேரரசுகளை உருவாக்கினார்கள். நாம் காணும் தமிழகக் கோயில் ஆசாரங்களை எல்லாம் அவர்கள்தான் தீர்மானித்தார்கள். இப்படித்தான் இந்திய வரலாறு செயல்படுகிறது.
ஆகவே இந்துமதத்தில் இருந்த ஏற்றத் தாழ்வுகள் இந்துமதத்தின் மையக்கருத்துக்கள் அல்ல. அவை அந்தந்தக் காலகட்டத்து சமூக யதார்த்தங்கள் மட்டுமே. எந்த ஒரு மதமும் அதைப்பின்பற்றும் மக்களின் சமூக அமைப்பையும் நம்பிக்கைகளையும் ஒட்டித்தான் செயல்பட முடியும்.
இந்துமதத்தின் மையநூல்கள் எவை என நூற்றாண்டுகளாக வரையறை செய்யப்பட்டுள்ளது. அவை சமூக ஏற்றத்தாழ்வுகளையோ அதிகாரத்தையோ பேசக்கூடியவை அல்ல. அவை முழுக்க முழுக்கத் தத்துவநூல்கள். அவற்றையே சுருதிகள் என இந்துமதம் சொல்கிறது. அவைதான் மாற்றமில்லாதவை.
சமூக ஆசாரங்களையும் சடங்குகளையும் பேசும் நூல்களை ஸ்மிருதிகள் என்றுதான் இந்துமதம் சொல்கிறது. அவை காலந்தோறும் மாறக்கூடியவை. சாதிமுறையைக் கடுமையாக வரையறை செய்யும் மனு ஸ்மிருதி அவற்றில் ஒன்று. அதில்தான் நீங்கள் சுட்டிக்காட்டியது போல வேதங்களை பிராமணரல்லாதவர்கள் கற்கக்கூடாது என சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு முன்னர் யம ஸ்மிருதி, நாரத ஸ்மிருதி, யாக்ஞவால்கிய ஸ்மிருதி போன்ற பல நூல்கள் இருந்துள்ளன. அவற்றில் எல்லா சாதியினரும் கண்டிப்பாக வேதங்களை ஓதியாகவேண்டும் என்று சொல்லும் ஸ்மிருதிகள் கூட உள்ளன. அவை மன்னர்களால் மாற்றப்பட்டு மனு ஸ்மிருதி கொண்டுவரப்பட்டது. அதாவது இவை இந்துமதத்தின் மாறாத நூல்கள் அல்ல. அவை மதநூல்களே அல்ல,ஆசார நூல்கள் மட்டுமே. மதம் அவற்றுக்குப் பயன்படுத்தப்படுகிறது
எப்படி மன்னர்கள் மனுஸ்மிருதியைக் கொண்டுவந்தார்களோ அதே போலத்தான் ஜவகர்லால் நேரு என்ற நவீன ஆட்சியாளர் மனுஸ்மிருதிக்கு நேர் எதிரான ஹிந்து சட்டத்தைக் கொண்டுவந்தார். அதை அம்பேத்கர்ஸ்மிருதி என்று சொல்லலாம். மறைந்த சித்பவானந்தர் அப்படித்தான் சொல்வார். இந்துமதம் என்ன அம்பேத்கர்ஸ்மிருதிக்கு எதிராகக் கொந்தளித்தா எழுந்தது? ஒரு சிறு திருத்தம்கூட இல்லாமல் அது இந்த சமூகத்தால் ஏற்கப்படவில்லையா? வெறும் ஐம்பதாண்டுக்காலத்தில் இந்துமதம் அதன் ஆயிரம் வருட நடைமுறைகள் பலவற்றை முற்றிலும் தலைகீழாக்கிக்கொள்ளவில்லையா? ஏனென்றால் அது ஆசாரமே ஒழிய மதத்தின் சாராம்சம் அல்ல என எல்லாருக்கும் தெரியும்.
ஆகவே இந்துமதத்தில் பொதுமை இல்லை என்பது போன்ற மேலோட்டமான வரிகளை விடுங்கள். எந்த மதத்திலும் இறந்த காலத்தில் பொதுமை இருந்ததில்லை. நவீன காலகட்டம் உருவாக்கிக்கொண்ட மானுடப் பொதுமை என்ற கருத்தை வேறெந்ந்த மதத்தை விடவும் எளிதாக இந்துமதம் ஏற்றுக்கொண்டதென்பதே வரலாறு. மானுடப்பொதுமை பேசிய சிந்தனையாளர்கள் கிறித்தவ மதத்துக்கு எதிராக முந்நூறாண்டுக்காலம் பல்வேறு தியாகங்களை செய்து போராடினர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இஸ்லாமிடம் அப்படி போராடுவதற்கான வாய்ப்பேகூட இன்றுமில்லை என்பதை நினைவுறுங்கள்.
இந்துக்கோயில்களில் எல்லா சாதியினரும் நுழைய எந்தத் தடையும் இன்றில்லை. இன்றைக்கு எண்பத்தைந்து வருடம் முன்பு அனைவரையும் ஆலயத்துக்குள் அனுமதிப்பதற்கான, பொதுமைக்கான, குரல் இந்துமதத்தின் நாயகர்களிடமிருந்தே வந்தது. அதற்கான இயக்கத்தை காந்தியும், ஆரியசமாஜமும், ராமகிருஷ்ண இயக்கமும், நாராயணகுருவும், சகஜானந்தரும் முன்னெடுத்தபோது இந்து மதத்தில் இருந்து அப்படியொன்றும் பெரும் எதிர்ப்பு கிளம்பவுமில்லை. மிகச்சில அடிப்படைவாதிகள் எதிர்த்தனர், அவர்கள் உடனே ஓரம் கட்டப்பட்டனர். ஏனென்றால், இந்து மதத்தின் மூலநூல்கள் எவையும் மானுடப்பொதுமைக்கு எதிரானவை அல்ல. அவை மானுட ஆன்மீகத்தைப்பேசும் தத்துவ நூல்கள். அந்த மூலநூல்களைச் சுட்டிக்காட்டி நாராயணகுருவும் காந்தியும் சகஜானந்தரும் எதிர்ப்புகளை வாயடைக்கச்செய்ய முடிந்தது.
இன்று அன்னியமதத்தவர் உள்ளே நுழையத் தடை உள்ளது. அது ஓர் நடைமுறைத்தடை. இந்து ஆலயங்கள் வெறும் வழிபாட்டிடங்கள் அல்ல, தொல்லியல்மையங்களும்கூட. ஆகவே அவை சுற்றுலாமையங்களாக ஆகிவிடும் வாய்ப்புள்ளது. அது வழிபாடுகளுக்குத் தடையாக இருக்கலாகாதென்ற நோக்கில் கருவறையை ஒட்டிய இடங்களில் பிற மதத்தவர்களுக்குத் தடை உள்ளது. மற்ற இடங்களில் எல்லாரும் அனுமதிக்கப்படுகிறார்கள். அந்தத் தடையும் தேவையில்லை என்பதே என் எண்ணம். அது இந்துமதத்தின் 'கொள்கை' அல்ல. மிக எளிதாக நீக்கப்படக்கூடிய ஒரு நடைமுறை மட்டுமே.
இன்னும்கூட ஒரு குறிப்பிட்ட சாதியினருக்குச் சொந்தமான கோயில்களில் பிற சாதியினர் நுழைய அச்சாதியினர் தடை செய்கிறார்கள். குலதெய்வக் கோயில்களில் பிற குலத்தவர் நுழையத் தடை உள்ள இடங்கள் உண்டு. அவை சாதிப்பிரச்சினைகள், குலப்பிரச்சினைகள். அந்நோக்கில் அவை விவாதிக்கப்பட்டுக் களையப்படவேண்டியவை. மதுரைக்கோயிலில் தலித் நுழைய அனுமதிக்கும் இந்து மதம் உத்தப்புரத்தில் மட்டும் அனுமதிக்காதா என்ன?
சிதம்பரம் கோயிலில் சைவத்திருமுறைகள் குறைந்தது ஆயிரமாண்டுகளாக ஒவ்வொருநாளும் ஓதப்பட்டு வருகின்றன என்பது தெரியுமா? என்றாவது அதைப் போய் சோதித்துப்பார்த்திருக்கிறீர்களா? நான் அழைத்துச்சென்ற ஈழத்து நண்பர்கள் அங்கே கருவறைமுன் நின்று திருப்புகழ் பாடியிருக்கிறார்கள்- பலமுறை. அங்கே இந்தியாமுழுக்க உள்ள எல்லா ஆலயங்களிலும் இருப்பதுபோல சம்ஸ்கிருதமே கருவறையின் மொழியாக இருக்கிறது, அவ்வளவுதான். இப்போது தமிழும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தியாவெங்கும் இந்து ஆலயங்களுக்கு வழிபாடுசார்ந்த தொன்மையான நடைமுறைகள் இருக்கும். அந்த நடைமுறைகளைத் தொகுத்துள்ள நூல்களை நிகமங்கள் ஆகமங்கள் என்பது வழக்கம். தமிழகத்துக்கோயில்களில் அனேகமாக அனைத்துமே ஆகம முறைப்படி வழிபடப்படுபவை. ஆகமங்களே கோயில்களுக்கு சக்தியை அளிப்பவை என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அவற்றை மாற்றுவதை அவர்கள் ஏற்பதில்லை.
சிதம்பரம் கோயில் நெடுநாட்களாகவே அதற்காக உருவாக்கப்ப்பட்ட பூசாரிக்குலங்களின் பொறுப்பில் உள்ளது. அவர்கள் ஆகமங்களை முழுமையாக நம்பி இறுக்கமாகக் கடைப்பிடிப்பவர்கள். எந்தச்சடங்குகளையும் மீற அனுமதிக்காதவர்கள். ஏனென்றால் அது அவர்களின் தொழிலும் கூட. அதில் மாற்றம் என்பது அவர்கள் தொழிலை இழப்பதுதான். ஆகவேதான் கோயிலின் வழமையான சில முறைமையை மீறி ஆறுமுகச்சாமி என்பவர் தமிழில் பாட முயன்றபோது அவர் அந்த அர்ச்சகர்களால் தாக்கப்பட்டார். அவர் தமிழில் பாடியதற்காகத் தாக்கப்படவில்லை, குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் பாடியதற்காகத் தாக்கப்பட்டார். அது ஒரு தொழில்போட்டி மட்டுமே. எந்தத் தொழிலிலும் அது நிகழும்.
அந்தத் தாக்குதல் இந்துமதத்தின் பக்தர்களால் நடத்தப்படவில்லை. அந்த அர்ச்சகர் முறை மாற்றப்பட்டபோது இந்துமதம் கொதித்தெழவும் இல்லை. அத்தகைய நூற்றுக்கணக்கான மாறுதல்கள் வழியாகத்தான் அது வளர்ந்து வந்தது, முன்னால் செல்கிறது. இந்துமதத்தின் எந்த ஒரு ஆசாரமும் நம்பிக்கையும் விவாதத்துக்கு திறந்து வைக்கப்பட்டதாகவே இன்றுவரை உள்ளது. அதை காலத்துக்கு ஏற்ப மாற்றுவது எப்போதும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. மாற்றங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.
மக்களிடம் வரும் எந்த ஒரு ஆக்கபூர்வமான மனமாற்றத்தையும் இந்து மதம் தடுக்காது. ஏனென்றால் இந்துமதத்தின் மூலநூல்கள் என்பவை நெறிநூல்கள் அல்ல, தூயஞானநூல்கள் மட்டுமே. அவை இதைச்செய் இதைச்செய்யாதே என தடுக்கவில்லை. இதை இப்படி சிந்தனைசெய்து பார்க்கலாமே, இப்படி தியானிக்கலாமே என்று மட்டுமே சொல்கின்றன. நான் இந்துவாக இருப்பது இந்த சுதந்திரத்தை இந்த மதம் அளிக்கிறது என்பதனாலேயே.
ஆகவே இந்துமதத்தைச்சேர்ந்த ஓர் அமைப்போ ஓர் அறிஞரோ சொல்வது இந்துமதத்தின் கூற்று எனக் கொள்வது மோசடி மட்டுமே. அப்படி எவரும் எதையும்சொல்லலாம். ஆனால் எவரும் விதி சொல்ல, கட்டுப்படுத்த அதிகாரம் கொண்டவர்கள் அல்ல. இந்துமதம் ஒரு அமைப்பு அல்ல. ஒரு ஞானமார்க்கம் மட்டுமே. அதில் பலநூறு வழிகள் உள்ளன. எல்லா வழிகளுமே இங்கே அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் நாத்திக ஞானமார்க்கமும் அடக்கம். வாசித்துப்பாருங்கள்
தமிழ் நீசபாஷை என்று சொன்னது யார்? இந்துமதத்தின் எந்த நூல்? எந்த ஞானி? யாரோ எங்கோ சொன்னார்கள் என நீங்கள்தான் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். உள்ளூர தமிழ் மீது உங்களுக்கிருக்கும் ஆழமான இழிவுணர்வே அதற்குக் காரணம். தமிழ் காட்டுமிராண்டிமொழி என்று செவிகளில் விஷமூற்றும் வரியைச் சொன்னவர் இப்படி அவதூறுப் பிரச்சாரம்செய்பவர்களின் வழிகாட்டியான ஈ.வெ.ராதான், எந்த இந்து ஞானியும் அல்ல.
நேர்மாறாக தெய்வத்தமிழ் என வைணவர்களாலும் சிவன் காதில் அணியும் குண்டலம் என்றும் அவன் உடுக்கின் நாதத்தால் அமைக்கப்பட்டது என்றும் சைவர்களாலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வருடங்களாக வழிபடப்படுகிறது தமிழ். ஆயிரமாண்டுகளில் ஸ்ரீரங்கத்திலோ திருமாலிருஞ்சோலையிலோ நாலாயிரத்திவ்யப் பிரபந்தம் பாடப்படாத ஒருநாள் கடந்துசென்றதுண்டா? மதுரையிலோ நெல்லையிலோ திருமுறை பாடப்படாத ஒரு நாள் உண்டா? என்ன பேசுகிறீர்கள்?
நான் முந்தைய கட்டுரையிலேயே சொல்லியிருந்தேன், சம்ஸ்கிருதம் என்றுமே அறிவுச்செயல்பாட்டுக்குரிய மொழிதான் என. பேசப்பட்ட புழக்கமொழி அல்ல அது. எஸ்பராண்டோ போலப் பொதுமொழியாக உருவாக்கப்பட்டது அது. அந்தக்கட்டுரையிலேயே சொல்லியிருந்தேன், அதன் பெரும் ஆசிரியர்கள் பிராமணர்கள் அல்ல என. அது சமணர்களுக்கும் நாத்திகர்களுக்கும்கூட மூலமொழிதான் என. எதையுமே நீங்கள் கண்டுகொள்வதில்லை.
ஏன் அனைத்துக்கோயிலிலும் சம்ஸ்கிருதம் மூலமொழியாக இருக்கிறது, அதற்கான வரலாற்றுக்காரணம் என்ன என்றுதான் நான் அக்கட்டுரையில் விளக்கியிருந்தேன். என்ன காரணத்தால் பிராமணர்கள் கோயிலில் பூஜைக்கு வைக்கப்படுகிறார்கள் என விரிவாக சமூகநோக்கில்தான் ஆராயவேண்டும். திருமணம் காதுகுத்து எல்லாவற்றுக்கும் பிராமணர்கள் வருவது என்பது இன்று நீங்களாக விரும்பித் தேர்ந்தெடுப்பது. தமிழகத்தின் பெரும்பாலான சாதிகளில் அப்படி வழக்கம் இல்லை. இன்று பணம் வரும்போது அதை ஏன் நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும்.
இந்துமதம் எங்கும் உங்களிடம் அப்படிச் சொல்லவில்லை. பிராமணர்கள் இந்துமதத்தின் பூசகர்கள் என்பது ஒரு வழிவழியான மரபு, அவ்வளவுதான். அது இந்துமத விதி அல்ல.காசி, ஸ்ரீசைலம் போன்ற பல பெருங்கோயில்களில் பக்தர்கள் அனைவருமே கருவறைசென்று தொட்டு பூஜை செய்யலாம் என்ற விதி ஆயிரமாண்டுகளாக உள்ளது.. இன்றும் இந்தியாவின் பெரும்பான்மையான கோயில்களில் பிராமணர்கள் பூஜைசெய்யவில்லை . பலநூறு பூசாரிக்குலங்கள் உள்ளன. பல சமூகங்கள் அவர்களுக்குள்ளாகவே பூசாரிக் குலங்களை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன.
சம்ஸ்கிருதம் எப்போது கருவறைக்குள் வருகிறது? ஒரு தெய்வம் குல, இன, பிராந்திய அடையாளம் விட்டுப் பெருந்தெய்வமாக ஆகும்போதுதான். அய்யா , அதைத்தானே நான் கட்டுரையிலே சொல்லியிருந்தேன். அதையே சொல்லித் திருப்பிக் கேள்வி கேட்டால் என்னய்யா செய்வேன்?
அன்புள்ள செல்வம், உங்கள் பிரச்சினைதான் என்ன? நான் எழுதியிருந்த வினாவுக்கு பதிலாக நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் எங்கெல்லாம் எதையெல்லாம் கேட்கின்றன என்று பாருங்கள். நீங்கள் இந்து என்கிறீர்கள். இந்துமதம் பொதுமைக்கு எதிரானது என்கிறீர்கள், காரணம் சாதி என்கிறீர்கள், சம்ஸ்கிருதம் என்கிறீர்கள், பிராமணர் என்கிறீர்கள். எதை வலுக்கட்டாயமாக நம்ப விரும்புகிறீர்கள்? அதற்கான உளவியல் காரணம் என்ன? அந்தக் காரணத்தை இழக்கலாகாது என்பதற்காகத்தான் எழுதிய எதையுமே வாசிக்காமல், புரிந்துகொள்ளாமல் மீண்டும் கேட்கிறீர்களா?
அந்தக்காரணம் என்ன தெரியுமா? பொதுமைக்கு எதிரானவர் நீங்கள் என்பதே. உங்கள் சாதியநோக்கைத் தாண்டிச்செல்ல உங்களால் முடியவில்லை என்பதே. அதற்கான பழியைப் போட நீங்கள் இந்துமதத்தை பிராமணர்களை தேடிக் கண்டுபிடிக்கிறீர்கள்.
இந்த எதார்த்தத்தை நீங்கள் மானசீகமாக ஒப்புக்கொண்டால் நீங்கள் முதலில் உங்கள் சாதியின், குடும்பத்தின் உளவியலில் ஊறியுள்ள பொதுமைக்கு எதிரான அம்சங்களை நோக்கித் திரும்புவீர்கள். அதற்கான ஊற்று என்ன என்று உங்கள் இனக்குழு மனநிலையில் இருந்து கண்டுகொள்வீர்கள். அதைக்களைய உங்களைத் தூய்மைப்படுத்திக்கொள்ள ஆரம்பிப்பீர்கள். மதம், பிராமணர் எனப் பழிசொல்ல இடம்தேடி அலைய மாட்டீர்கள். அதுதான் தொடக்கம்.
பிராமணர்களின் சாதியுணர்ச்சி பற்றி சொல்கிறீர்கள். நீங்கள் என்ன சாதிக்கு அப்பாற்பட்டவரா? சாதியை விட்டு விலகி விட்டீர்களா? பிராமணரல்லாதவர்களின் சாதியுணர்ச்சியைவிட பிராமணர்களின் சாதியுணர்ச்சி ஒன்றும் அதிகமில்லை. நாமெல்லாருமே ஒரே கடந்தகாலக் குட்டையில் ஊறியவர்கள்தான். அதைக் கடந்து செல்வதைப்பற்றி சிந்திப்போம். நாம் மாறினால் நம் மதமும் மாறும்.
எனக்கு முன்னால் நிற்கும் பிரச்சினை இதுதான் செல்வம். நான் பக்கம் பக்கமாக ஆதாரங்களுடன் எழுதுவேன். அதில் எதையுமே படிக்காமல், பொருட்படுத்தாமல், முன்னர் சொன்னதையே திருப்பிச்சொல்லி எனக்குச் சுடச்சுட பதில் சொல்லிவிட்டதாக நினைத்துக்கொள்வார்கள் பிறர். ஈவேராவின் வைக்கம் போராட்டம் முதல் இன்றைய காந்தி வரை இதுவே நிகழ்கிறது. நான் நிறுத்திக்கொள்ளும்போது என்னை 'வாயடைக்க' செய்துவிட்டதாகக் கொண்டாடியும் கொள்வார்கள்
அதைத்தான் நீங்கள் செய்யப்போகிறீர்கள் என்றால் சரி. இல்லையேல் திருப்பி வாசியுங்கள், புரிந்துகொள்வீர்கள்.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
நாட்டார் தெய்வங்களும் சம்ஸ்கிருதமும்
காந்தியின் எதிரிகள்
காந்தி மேலும் கடிதங்கள்
சம்ஸ்கிருதம்:கடிதங்கள்
இந்தி,சம்ஸ்கிருதம்,தமிழ்
November 23, 2011
அறம் விழா
அறம் சிறுகதைத்தொகுப்பு வெளியீட்டு விழா ஈரோடில் வரும் நவம்பர் 26 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது , நண்பர்கள் அனைவருக்கும் நல்வரவு .
அறம் – சிறுகதைத் தொகுப்பு கிடைக்குமிடங்கள்
தொடர்புடைய பதிவுகள்
அறம் – சிறுகதைத் தொகுப்பு கிடைக்குமிடங்கள்
எதற்காக அடுத்த தலைமுறை?
அறம் வாழும்-கடிதம்
மண்ணாப்பேடி
உங்கள் கதைகள்-கடிதம்
அறம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறதா?
திருவனந்தபுரத்தில் ஓர் உரை
ஈரோட்டில்…
தேவதேவன் மகள் திருமணம்
மூன்று நாட்கள் சென்னையில் இருந்தபின் ரயிலில் திருச்சிக்குச் சென்றிறங்கினேன். அருண் ஓட்டலில் அலெக்ஸ் அறைபோட்டிருந்தார். ஆனால் அவர் அவரது சொந்த ஊரான புதுக்கோட்டைக்குச் சென்றிருந்தார். ஓட்டல் அறையில் காலை எட்டு மணிவரைக்கும் நன்றாகத் தூங்கினேன். அலெக்ஸ் வந்துதான் என்னை எழுப்பினார். நானும் அலெக்ஸும் மட்டும் பேசிக்கொண்டிருந்தோம்.
பொதுவாக எனக்குத் தஞ்சை, திருச்சி வட்டாரத்தில் இருந்து வாசகர்கடிதங்களே வருவதில்லை. சென்னையை விட்டால் கொங்குவட்டாரம்தான். அதன்பின் தேனி,பெரியகுளம் வட்டாரம். ஆகவே பிற ஊர்களைப்போல என்னைப்பார்க்க எவரும் வரவில்லை என்பது ஆச்சரியமளிக்கவில்லை. காலையில் நன்றாகத்தூங்கியது உற்சாகமாக இருந்தது. அலெக்ஸுடன் நெடுநாட்களுக்குப்பின்னர் விரிவாகப்பேசமுடிந்தது. பல மொழியாக்கத் திட்டங்கள்.நாலிலே ஒன்றிரண்டு பலித்தாலே நல்ல விஷயம்தான்.
மாலையில் அருண் ஓட்டலில் கூட்டம். வழக்கம்போல ஆரம்பிக்கும்போது கால்வாசிப்பேர். முடியும்போது அரங்கு நிறைந்து வழிந்தது. ஐந்துமணி என அறிவிக்கப்பட்டிருக்கும் கூட்டத்துக்கு ஏழு மணிக்கு வருபவர்களின் உளவியலைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு வெட்டி மேடையுரைகளுக்குப் பழகிச் சலித்துவிட்டிருக்கிறார்கள் போல.
மேடையில் வழக்கம்போல ஸ்டாலின் ராஜாங்கம் மிகச்சிறப்பாகப் பேசினார். விரிவான தகவலறிவும் அவற்றைச் சிக்கலற்ற மொழியில் முன்வைக்கும் நடையும் உண்மையான உணர்ச்சிகரமும் அவரது பலங்கள். தமிழ் மேடைப்பேச்சுக்கான எந்த விதமான செயற்கைபாவனைகளும் இல்லை. தமிழ்ச்சூழலின் இன்றைய மிகச்சிறந்த இளம் அறிவுஜீவிகளில் ஒருவராக எழுந்து வருகிறார்.மதுரையில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார். காலச்சுவடில் அதிகமாக எழுதிவருகிறார்.
கூட்டத்துக்குக் கோவையில் இருந்து அரங்கசாமியும் ஈரோட்டில் இருந்து கிருஷ்ணனும் மதுரை நண்பர் ரவியும் வந்திருந்தார்கள். அவர்களுடன் இரவே கிளம்பிப் பாண்டிச்சேரிக்குச் சென்றோம். பொதுவாக இரவுகளில் காரில் பயணம் செய்வதில்லை. ஆனால் அபூர்வமாகச் செய்யும் பயணங்கள் எப்போதுமே உற்சாகமான உரையாடலாகவே அமைகின்றன. அன்றும்தான். அரங்காவைத் தூங்கவிடாமலிருக்கச் செய்ய வேடிக்கையாகப் பேசியாக வேண்டிய கட்டாயம்.
பாண்டிச்சேரிக்கு விடிகாலை மூன்றுமணிக்குச் சென்று சேர்ந்தோம். அதிகாலை ஆறுமணிக்கு தேவதேவனின் மகள் அம்மு என்கிற அமிர்தா பிரீதத்துக்கும் கட்டிடவரைவாளரான செந்திலுக்கும் திருமணம். செந்தில் கவிஞரும் கூட. அமிர்தாவை சிறுமியாக இருக்கும்போதே தெரியும். எங்கள் ஊட்டி கவியரங்குகளில் நெடுங்காலம் முன் சிறுபெண்ணாக வந்து கலந்துகொண்டிருக்கிறார். திருமணம் வழக்கமான முறையில் அல்லாமல் புதுமையாக நிகழ்ந்தது
முக்கியமான விஷயம் திருமண மண்டபம் இல்லை. பாண்டியை ஒட்டிய கடலோரத்தில் ஹாலிவுட் என்ற கடலோரக் குடியிருப்பு வளாகத்தில் கடற்கரையில் நிகழ்ந்தது. மணல்மேல் விரிப்பு போட்டு நாற்காலிகள். ஒரு சிறிய திறந்த மேடை. ஆகவே வெயில் எழுவதற்குள்ளேயே நேரம் தீர்மானித்திருந்தார்கள்.
இரண்டு மணிநேரத்தூக்கத்தை அவசரமாகக் கலைத்துக்கொண்டு வழிகேட்டு ஹாலிவுட் சென்றுசேர்ந்தோம். ஏற்கனவே இருபதுபேர்வரை வந்திருந்தார்கள். வசந்தகுமார், சூத்ரதாரி[ எம்.கோபாலகிருஷ்ணன்],க. மோகனரங்கன், இளங்கோ கல்லானை,செல்வ புவியரசன், கரு ஆறுமுகத்தமிழன் என தமிழினி கோஷ்டி ஒன்று முந்தையநாளே சிதம்பரம் சீர்காழி என சுற்றிவிட்டு வந்திருந்தது. கண்மணி குணசேகரன் விருத்தாசலத்தில் இருந்து வந்திருந்தார்.
தூத்துக்குடியில் இருந்து தேவதேவனின் இளவயது நண்பரும் புரவலருமான முத்துப்பாண்டி வந்திருந்தார். நீண்டநாள் கழித்து எழுத்தாளர் மோகனனை சந்தித்தேன். ராஜசுந்தர ராஜன் தேவதேவனின் இளவயது நண்பர். மாற்றப்படாத வீடு போன்ற ஆரம்பகால தேவதேவன் கவிதைகள் முத்துப்பாண்டி பண உதவியுடன் ராஜசுந்தரராஜன் அட்டை வரைய வெளிவந்திருக்கும். தேவதேவனின் நண்பரான காஞ்சனை சீனிவாசனும் அவரது துணைவி குட்டிரேவதியும் வந்திருந்தனர். மாப்பிள்ளை செந்திலின் நண்பர்கள் வந்திருந்தார்கள்.
ஏழுமணிக்கு மணவிழா ஆரம்பித்தபோது வெயில் வந்து விட்டது. ஆனால் பளிச்சென்ற இதமான வெயில். காலை நேரத்தில் அப்படி ஒரு கடற்கரையில் இருந்ததே அழகாக இருந்தது. நண்பர்களுடன் உற்சாகமாகப் பேசிச் சிரித்துக்கொண்டே இருந்தோம். சமீபத்தில் அப்படி ஒரு உற்சாகமான நண்பர் சந்திப்பே நிகழ்ந்ததில்லை.
தேவதேவன் எல்லா நிகழ்ச்சிகளிலும் தொலைந்துபோனவரைப்போலத்தான் இருப்பார். அப்போதும் அப்படித்தான் தென்பட்டார். திருமணத்தில் பழைய நலுங்கு போன்ற சடங்குகளுக்குப் பதிலாகப் புதியதாக சடங்குகள். வண்ணக்கூழாங்கற்கள் பல பெட்டிகளில் இருந்தன. அவற்றை எடுத்து ஒரு கண்ணாடிப் பூந்தொட்டிக்குள் போடவேண்டும். அவை மணமக்களால் நினைவுச்சின்னமாகப் பாதுகாக்கப்படுமாம். எடுத்து அட்சதையாக வீசி விடப்போகிறார்கள் என்று ஒருவர் பயந்தார்.
எல்லாருக்கும் ஹைட்ரஜன் பலூன்கள் அளிக்கப்பட்டன. நிகழ்ச்சி தொடங்கும்போது சுதந்திரத்தின் சின்னமாக அவற்றைப் பறக்கவிடும்படி நிகழ்ச்சியை நடத்திவைத்த நண்பர் அ.முத்துகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். தன் கனத்த குரலில் மணமக்களை அறிமுகம் செய்து வைத்து நிகழ்ச்சிகளையும் சடங்குகளையும் விளக்கி அவர்தான் நடத்திவைத்தார். "அண்ணா இவரு முற்போக்குப் புரோகிதரா" என ஒரு நண்பர் என் காதில் கேட்டார். அதற்கேற்ப முத்துகிருஷ்ணன் கெட்டிமேளம் கெட்டிமேளம் என்பதை வேறு சொற்களில் சொல்ல மங்கலம் முழங்க தாலிகட்டப்பட்டது.
அதன்பின் மணமக்கள் சேர்ந்து ஓர் ஓவியத்தை வரைந்தார்கள். இருவருக்கும் கொஞ்சம் கைநடுங்கியிருக்கும், திருமணம்தானே. கோட்டுப்படம்தான். வாழ்க்கைமூலம் வண்ணம் சேர்ப்பார்கள் போல.
அருகே இருந்த ஒரு அட்டையில் விருந்தினர் கையெழுத்திட்டார்கள். அதையும் நினைவுச்சின்னமாகப் பாதுகாப்பார்கள். திருமணத்தின் உண்மையான நினைவுச்சின்னங்களான இரு சுட்டிப்பிள்ளைகள் வந்து அவற்றை உடைத்தும் கிழித்தும் எறிய வேண்டுமென வாழ்த்தி நானும் கையெழுத்திட்டேன்.
மணமக்களை வாழ்த்திப் பலர் பேசினார்கள். வாழ்த்திப் பேசிய கவிஞர் ராஜசுந்தரராஜன் கடைசியில் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டார். அம்முவை அவர் கைக்குழந்தையாகத் தூக்கியிருக்கிறார். உண்மையில் ஒரு குழந்தையை நாம் குழந்தையல்லாமல் ஆக்கிக்கொள்ள முயல்வதே இல்லை. முடிந்தவரை ஒத்திப்போடுகிறோம். ஒருகட்டத்தில் இப்படி வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்ள நேர்வது அழகான தருணம்.
கண்மணி வழக்கமான உற்சாகத்துடன் பாடிப் பேசினார். நான் 'ஓரிரு சொற்கள்' பேசினேன். என் ஆதர்சக் கவிஞரும் ஆதர்ச மனிதருமான தேவதேவனின் மகள் திருமணம் எனக்கு ஓர் அபூர்வ நிகழ்ச்சி என்றேன். விருந்தினரில் ஒருவர் 'என்னது பையனின் மாமனாரும் கவிஞரா?' என ஆச்சரியப்பட்டார் என நண்பர் சொன்னார்
அந்தப்பக்கம் திறந்தவெளியில் ஷாமியானா போட்டு உணவு. காலைநேரத்துக்கு ஏற்ப இனிமையான நல்ல உணவு. பாண்டிச்சேரியில் சைவ உணவெல்லாம் இவ்வளவு சிறப்பாக சமைக்கிறார்கள் என்று இப்போதுதான் தெரிந்துகொண்டேன்.
ஒரு திருமணத்துக்கான சம்பிரதாயம் ஏதும் இல்லாத ஆனால் திருமணநிகழ்ச்சிக்கான எல்லா நிறைவும் குதூகலமும் கைகூடிய ஒரு விழா. இதைப்போன்ற புதியபாணித் திருமணங்களைப் பிறரும் முயலலாம். ஆனால் தேவதேவனைப்போலவே அவரது மருமகனும் இலக்கியவாதியாக, உறவினர்சூழலில் பேக்கு எனப் பெயர் வாங்கியவராக இருப்பதனால்தான் இதெல்லாம் சாத்தியமாகிறது. பெரும்பாலான திருமணங்கள் உறவினர்களால் உறவினர்களுக்காக நடத்தப்படுபவை.
பதினொரு மணி வாக்கில் தேவதேவனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினோம்.
தேவதேவனின் இணையதளம்
தொடர்புடைய பதிவுகள்
யுவன் வாசிப்பரங்கு
ஊட்டி- பெண்களுக்கு இடமுண்டா?
மாசு
கவிதை என்னும் கலைத்துக்கொள்ளுதல்
அறம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறதா?
கடிதங்கள்
நிழலில்லாத மனிதன்
உறவுகளின் ஆடல்
பருந்து
திருப்பரப்பு
பூமணியின் புது நாவல்
க்ரியா வெளியீடாகப் பூமணியின் புதிய நாவலான அஞ்ஞாடி... ஜனவரி 2012இல் வெளியாக இருக்கிறது .1200 பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் விலை ரூ. 925. ஆனால் முன்வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் அஞ்ஞாடி… நாவலைச் சலுகை விலையில் அஞ்சலில் பெற ரூ. 750 செலுத்திப் பதிவுசெய்துகொள்ளலாம். அப்படிப் பதிவுசெய்தவர்களுக்கு நாவல் வெளியானதும் அஞ்சலில் அனுப்பிவைக்கப்படும் என க்ரியா பதிப்பகம் தெரிவிக்கிறது.
முன்வெளியீட்டுத் திட்டத்தின்படி நேரில் வாங்க விரும்புபவர்கள் க்ரியாவிடம் ரூ. 725 செலுத்திப் பதிவுசெய்துகொள்ளலாம். அப்படிப் பதிவுசெய்தவர்கள் புத்தகம் வெளியானதும் க்ரியா கடையில் நேரில் சென்று புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
நாவலைப் பற்றி:
• 1895-1900 ஆண்டுகளுக்கிடையே தென்தமிழ்நாட்டில்
நிகழ்ந்த இரண்டு மிகப் பெரும் சாதிக் கலவரங்கள்
வாயிலாகச் சமூகத்தில் நிலவும் வன்முறையின் ஒவ்வொரு
இழையையும் இனங்கண்டு அதன் செயல்பாட்டை
விவரிக்கும் நாவல்
• மனிதர்களைப் பிரிக்கும் வன்முறையின் இடையேயும்
ஒளிரும் நட்பு, உறவுகளின் விசுவாசம், மண்ணையும்
மனிதனையும் பிணைக்கும் அன்றாட வாழ்க்கையின்
அற்புதங்கள் ஆகியவற்றை மேன்மைப்படுத்தும் நாவல்
• மொழியின் சாத்தியங்களை விரிவுபடுத்தும் படைப்பு
• நாவல் எழுதுவதற்கான ஆயத்த ஆய்வுக்கு IFAவின் மானியம்
பெற்ற இலக்கியப் படைப்பு
க்ரியா வெளியீடுகளை எளிதாகப் பெற க்ரியாவின் இந்தியன் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தலாம்.
பணத்தைச் செலுத்திவிட்டுத் தொலைபேசியிலோ மின்னஞ்சலிலோ விவரத்தைத் தெரிவித்தால் புத்தகங்களை க்ரியா அனுப்பிவைக்க்கும்.
விவரங்கள்:
Bank: Indian Bank
Branch: L.B. Road Branch
Account Name: Cre-A: Publishers
Account No.: 768660941
மின்னஞ்சல்
creapublishers@gmail.com
தொடர்புடைய பதிவுகள்
பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது
க்ரியா நூல்கள்
க்ரியா சொல்வங்கி
க்ரியாவின் 'தாவோ தே ஜிங்'
க்ரியா இணையதளம்
பூக்கும் கருவேலம் – பூமணியின் படைப்புலகம்
November 22, 2011
இரு கலைஞர்கள்
உடனே வசை வருமென்றாலும் சொல்லாமலிருக்க முடியவில்லை. பெரும்பாலான ஈழத்து நண்பர்களுக்கு இலக்கியத்தில் கலை என்ற ஒன்று உள்ளது என்று சொல்லிப்புரியவைக்க முடியவில்லை. அது நல்ல கருத்து அல்ல, உணர்ச்சிகரமான நிலைபாடுகள் அல்ல, நேர்த்தியான மொழிகூட அல்ல வேறு ஒன்று என பலமணிநேரம் பேசியபின்னரும் சர்வதாசாதாரணமாக கருத்துக்களை 'வைத்து' எழுதும் ஒருவரை மேற்கோள்காட்டி மேலே பேச ஆரம்பிப்பார்கள்.
அதைவிட கொடுமை ஈழத்து எழுத்தை விமர்சனம் செய்தால் உடனே 'அப்படியானால் இவர்கள் எழுத்து இலக்கியமில்லையா?' என நாற்பத்தெட்டு எழுத்தாளர்களின் பட்டியலை அளிக்க ஆரம்பித்துவிடுவது. எல்லாவற்றையும் படிக்காமல் பேசாதே என்று சொல்லி வாயை மூடச்செய்வது. கைலாசபதியின் ஆவியிடமிருந்து ஈழத்தமிழ் தப்பித்தாலும் சிவசேகரத்தின் உடல்பொருளிடமிருந்து தப்பிக்க முடியாத நிலை.
இன்றைய ஈழத்தமிழ் எழுத்தில் முதல்தர கலைஞர்கள் என நான் நினைப்பது அ.முத்துலிங்கம் ஷோபாசக்தி இருவரையும்தான். அதை பலமுறை சொல்லியிருக்கிறேன். ஷோபா கலையை உருவாக்க முயல்வதே இல்லை, அவருக்கு அரசியல்தான் முக்கியம். ஆனால் கலைஞன் கலையைத்தான் உருவாக்கமுடியும். கலையை உருவாக்க முயலும் அரசியல்வாதிகள் அரசியலாக எழுதிவைப்பதுபோல இதுவும் இயல்பானதுதான்.
எது இவர்களை கலைஞர்களாக்குகிறது? எது கலை? மீண்டும் மீண்டும் உதாரணம் காட்டித்தான் சொல்லவேண்டியிருக்கிறது. அ.முத்துலிங்கம் எழுதிய இன்னும் சிறிது தூரம்தான் என்ற இந்த சின்ன கட்டுரையில் கலை என்னும் சொல்லால் நான் சுட்டுவது நிகழ்ந்திருக்கிறது. அதை நாநூறு பக்கம் எழுதினாலும் வெற்றுக்கோட்பாட்டாளர்களுக்குப் புரியச்செய்துவிடமுடியாது. சுட்டிக்காட்டினாலே நல்ல வாசகர்களுக்கு புரியும்
என்னென்ன செய்யப்பட்டிருக்கிறதென சொல்லிப்பார்க்கலாம். ஒரு காட்சி. அந்தக்காட்சியின் சாராம்சமான துயரத்தில் இருந்து சங்கப்பாடல் ஒன்று சென்று தொடப்பட்டிருக்கிறது. அந்த இணைப்பின் மூலம் அக்காட்சி காலாதீதமான துயராக ஆகிறது. அந்தப்பாடல் நிகழ்கால யதார்த்தமாக ஆகிறது.
அது இயல்பாக நிகழவேண்டுமென்பதற்காக மொழி முடிந்தவரை சகஜமாக ஆக்கப்பட்டிருக்கிறது. அன்றாட விவரிப்புகள் ஒட்டாத பாவனையில் சொல்லப்பட்டுள்ளன. முக்கியமாக கடைசி வரியில் உள்ள துயரத்தை குறைத்துவிடக்கூடாது என்பதற்காக முன்னால் சொல்லப்பட்டுள்ள பாரிமகளிரின் கவிதை யாழ்ப்பாணத்தனமாக ஆக்கப்பட்டு சற்றே வேடிக்கைத்தன்மையுடன் சொல்லப்பட்டுள்ளது.
ஒருவகையில் மொழிநுட்பம் அல்லது கூறல் நுட்பம். இந்த நுட்பங்களை எல்லாம் அந்த படைப்பு நிகழும்போது இயல்பாக அடைவதற்குப்பெயரே கலைத்திறன். இதை பயில முடியாது, ஏனென்றால் இன்னொரு படைப்புக்கு இது உதவாது. படைப்பு ஒவ்வொன்றும் தனக்கேயான தனித்தன்மை கொண்டது. அதை தன் வழியாக நிகழ்த்துவதே கலை.
ஷோபா சக்தியை சந்தித்தது பற்றி அ.முத்துலிங்கம் எழுதியிருக்கும் குறிப்பு புன்னகையுடன் வாசிக்கச்செய்தது. அதனுள் ஓடும் நுண்ணிய, பிரியமான கிண்டல்!
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
சைவ வெறுப்பா?
திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
சைவ சமயத்தை ஒழுகி வாழ்பவன் என்பதால் இதை எழுதிகின்றேன்.
உங்களின் போதி கதை படித்து மிக மனவேதனை அடைந்தேன். பல ஆண்டுகளாக உங்களின் கட்டுரைகளைப் படித்து வருகிறன். தினமும் உங்களின் வலைத் தளத்திற்கு ஒருமுறையாவது செல்வதுண்டு. என் நண்பர்களுக்கும் உங்களின் எழுத்துக்களை அறிமுகம் செய்து உள்ளேன்.
ஆனால், இந்தக் கதை என்போன்ற பலரையும் வேதனை அடைய செய்துள்ளது. உங்களின் சைவ சமய நிராகரிப்பு, சைவ நூல்களின் மீதான வெறுப்பு இந்தக் கதையின் மூலமாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். இனி உங்களின் வலைத் தளத்திற்கு வருவதற்குக் கூச்சமாக உள்ளது. நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்போது அது பற்றிக் கூறுகின்றேன்.
மிக வேதனையுடன்
சோமசுந்தரம்
கோயம்புத்தூர்
அன்புள்ள சோமசுந்தரம் அவர்களுக்கு,
ஏறத்தாழ இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கதை அது.
தங்களை என்றல்ல எந்த ஒரு மதத்தைச்சேர்ந்த எவரையும் வருத்தமுறச்செய்யும் நோக்கம் எனக்கு இருந்ததில்லை. என் பணி அதுவல்ல. அதை என் எழுத்துக்களை முழுமையாக நோக்கினாலே நீங்கள் புரிந்துகொள்ளமுடியும்.அன்றும் இன்றும் என்னை செலுத்திக் கொண்டு செல்லும் அடிப்படைத்தேடல்களே அக்கதையிலும் உள்ளன.
ஆன்மீகம்-மதம்-மத நிறுவனங்கள் போன்றவற்றை ஒன்றாக நான் நினைக்கவில்லை. அவை வேறு வேறு. ஒன்றிலிருந்து ஒன்றாகக் கிளைத்தவை அவை. ஆன்மீகம் என்பது முழு உண்மைக்காக சமரசமற்றுத் தேடிச்சென்றுகொண்டிருக்கும் ஒரு பயணம். மதம் ஆன்மீகம் கண்டடைந்த விடைகளைக்கொண்டு கட்டமைக்கப்பட்ட அமைப்பு. அதில் ஆன்மீகமும் உண்டு, உலகியலும் உண்டு. மத அமைப்புகள் மதத்தை நிலைநாட்டும் நோக்கம் கொண்ட லௌகீகஅதிகார பீடங்கள். அவற்றில் குருநாதர்களும் அறிஞர்களும் இருக்கலாம். ஆனால் அந்த அமைப்பை மீறி, அந்த அமைப்பைத் தாண்டித்தான் அவர்கள் அங்கே இருக்கமுடியும்.
ஆகவே அவற்றுக்கிடையேயான உறவுகளையும் ஊடாட்டங்களையும் ஆன்மீகத்தேடல்கொண்ட எவரும் நுட்பமாகப் புரிந்துகொள்ள முயன்றபடியே இருப்பார்கள்.நானும் அதற்கான முயற்சியில் இருந்திருக்கிறேன். அந்தக்கதை அதையே சுட்டுகிறது. அந்த மூன்று தளங்களுமே அந்த கதையில் பின்னிப்பிணைந்துள்ளன.
நீங்கள் வெறும் நிறுவனவிசுவாசம் கொண்டு வாசித்திருக்கிறீர்கள். உங்கள் நோக்கில் அக்கதை ஏமாற்றத்தை அளிக்கிறது. அதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் அக்கதை உங்களைப்போன்றவர்களுக்குரியதல்ல. சைவ மடங்களைத் தாண்டி, சைவ மதத்தினூடாக, சைவ மெய்ஞானத்தை அடைய முயல்பவர்களுக்கானது.
சைவ சமயத்தையோ, சைவநூல்களையோ நான் நிராகரித்ததில்லை. எந்த மதத்தையும் நூல்களையும் நிராகரித்ததில்லை. அவற்றினூடாக என் தேடலைக் கொண்டுசெல்லவே எப்போதும் முயல்கிறேன்.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தூய அறிவு
ஆன்மீகம், போலி ஆன்மீகம்,மதம்
குரு என்னும் உறவு
சூஃபி மரபு:கடிதங்கள்
3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக!
முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் 3
முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் 2
முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்
முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்
கடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா
November 21, 2011
வெளியின் ஆடை
மனம் – தறி
வாக்கு – இழை
பூமிக்கான ஆடையை
நெய்துகொண்டிருக்கிறார் கபீர்
நெய்யும் துணியின் மறுமுனை
எங்கே முடிகிறது?
நதிபோல் கடலிலா?
வானம்போல் வெளியிலா?
என் ஆரம்பிக்கும் சுகுமாரனின் கவிதை சமீபத்தில் நிகழ்ந்த ஓர் அபூர்வ மன எழுச்சி . சச்சிதானந்தனின் சாயல்கொண்ட அவரது பழைய பாணிக்கவிதைகளை நினைவூட்டுகிறது. கவிதையின் தலைப்புகூட.ஆனால் சச்சி ஒருபோதும் இக்கவிதை தொடும் முடிவிலியை தொட்டறிய முடிந்ததில்லை. கவிதை என்பது பாணியில் உருவத்தில் நடையில் இல்லை. கவிஞன் என்ற ஆளுமையில், கவி நிகழும் கணத்தில் உள்ளது என நினைத்துக்கொண்டேன்.
கவிதை அவரது இணையதளத்தில்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
