Jeyamohan's Blog, page 2266

December 11, 2011

யோகமும் பித்தும்


அன்புள்ள ஜெ,



நவீன குருமார்களைப்பற்றி
[கார்ப்பரேட் சாமியார்கள் தேவையானவர்களா?]எழுதியிருந்தீர்கள். இந்த ஒளிநாடாக்களைப்பார்க்கும்படி கோருகிறேன். என்ன நினைக்கிறீர்கள்? இது என்னவகை யோகம்?


ஆனந்த்




அன்புள்ள ஆனந்த்


பார்த்தேன்.


இதில் ஆச்சரியமோ அதிர்ச்சியோ என்ன இருக்கிறது? நம்முடைய அம்மன் சன்னிதிகளில் சாதாரண கிராமப்பூசாரிகள் ஒரு உடுக்கையை வைத்துக்கொண்டு இதைத்தானே செய்துகொண்டிருக்கிறார்கள்?


உலகமெங்கும் அனேகமாக எல்லாப் பழங்குடிகளிலும் இந்த விஷயம் உள்ளது. சன்னதம் வந்து சாமியாடுதல் ஒரு வழிபாட்டுமுறையாகவே உலகமெங்கும் பழங்குடிகள் நடுவே இருக்கிறது. பழங்குடிகளின் கூட்டுநடனங்களின் உச்சத்தில் இந்த அம்சம் வெளிப்படுகிறது. பெரும்பாலான நாட்டார்கலைகளில் இந்தப் பித்துநிலை கைகூடுகிறது.


பழங்குடிமரபில் இருந்து பெருமத மரபுக்குள் இது குடியேறுகிறது. இந்துமதத்தில் சாக்தம் இதற்கு இடமளிக்க்கிறது. மண்டைக்காட்டிலோ சோட்டாணிக்கரையிலோ சர்வசாதாரணமாக பெண்கள் இந்த வகையான கட்டற்ற நிலைக்கு வந்து துள்ளியாடுவதைக் காணலாம். சபரிமலை சாஸ்தா வழிபாட்டில் பேட்டைதுள்ளல் போன்ற தருணங்களில் இதைக்காணலாம். குறைந்த அளவில் என்றாலும் சைவ வைணவ வழிபாடுகளிலும் பஜனைகளில் இவ்வகையான பித்துநிலை வெளிப்படுகிறது.


பெந்தேகொஸ்தே போன்ற கிறித்தவ வழிபாட்டுமுறைகள் இதை மட்டுமே வழிபாடாகச் செய்துவருகின்றன. அவர்களின் வழிபாட்டிடங்களில் வெளிப்படும் பித்துநிலை மானுடமனம் எத்தனை வன்மையானது எனக் காட்டி நம்மைப் பேதலிக்கச் செய்யக்கூடியது. பெந்தேகொஸ்தே வகை மதப்பிரிவுகள் தங்கள் உறுப்பினர்களை இழுப்பதைக்கண்ட கத்தோலிக்கர்கள் 'கரிஸ்மாட்டிக் பிரேயர்' என்ற பேரில் அதேவகையான வழிபாட்டுக்கூட்டங்களைத் தங்களுக்குள்ளும் உருவாக்கினர். பிராட்டஸ்டண்ட் கிறித்தவர்கள் எழுப்புதல்-உபவாசக்கூட்டங்கள் என்ற பேரில் அதைத் தங்களுக்குள் வளர்த்தெடுத்தனர். அங்கெல்லாம் நிகழ்வது இதுவே.


மனிதமனம் எப்போதும் விழிப்பு [ஜாக்ரத்] நிலையில்தான் தன்னை அறிந்துகொண்டிருக்கிறது. அதற்கு அடியில் ஆழ்மன [ஸ்வப்ன] நிலையை அது அவ்வப்போது சென்று தொட்டுக்கொண்டு மீள்கிறது. மனிதமனத்துக்கு ஒரு விசித்திரமான சாபம் உண்டு. அதன் பிரச்சினைகள் எல்லாமே ஆழ்மனத்தில் உருவாகக்கூடியவை. ஆனால் அதன்விளைவான வலிகளும், சஞ்சலங்களும், இன்பங்களும் மட்டும் விழிப்புநிலையால் அனுபவிக்கப்படுகின்றன. கண்ணுக்குத்தெரியாத ஒரு பெரிய மிருகத்தால் தொடர்ந்து வேட்டையாடப்படும் சின்ன மிருகம்தான் நம் பிரக்ஞை.அந்தப் பதற்றமும் அச்சமும் எப்போதும் பிரக்ஞைமனத்தில் இருந்துகொண்டிருக்கிறது.


தன் மனநிலைக்குத் தன் ஆழமே காரணம் என அறிந்தாலும் தனக்குள் சென்று ஆழத்தில் கூர்ந்து நோக்க மனிதர்களால் முடிவதில்லை. தன் ஆழத்தை அவன் எப்போதும் தொடமுயன்றபடியே தான் இருக்கிறான். சாதாரண மனிதர்கள்கூட 'என்னன்னே தெரியல' என்று சொல்லி அந்த மனநிலையை அளைந்துகொண்டே இருப்பதைக் காணலாம்.


ஆழத்து கனவுமனதை மூடியிருக்கும் நனவுமனதின் திரை மிகச்சிக்கலான ஒன்று. அதை விலக்க முயன்றால் அது விசித்திரமான ஒரு நாடகம் மூலம் அந்த முயற்சியைத் தோற்கடிக்கிறது. விலக்கிப்பார்க்க முயலும் பிரக்ஞையாக அது தன் ஒருபகுதியை மாற்றிக்கொள்கிறது. அந்தப்பகுதியால் பார்க்கப்படுவதாகத் தன் இன்னொரு பகுதியை உருமாற்றிக்கொள்கிறது. நாம் நம் ஆழ்மனதை அறிவதற்காகப் பிரக்ஞைபூர்வமாக எந்த முயற்சியை எடுத்தாலும் அந்தப் பிரக்ஞைக்கு ஏற்ப மாற்றப்பட்ட ஓர் ஆழ்மனதையே நாம் அறிகிறோம். அது ஆழ்மனமே அல்ல, மாறுவேடமிட்ட பிரக்ஞை மட்டுமே.


ஆகவே எல்லா மனிதர்களும் பிரக்ஞைநிலையை மழுங்கடிப்பதை விரும்புகிறார்கள். பிரக்ஞை விலகி ஆழத்து கனவுநிலை வெளிப்படும் கணங்களைத்தான் பெரும்பாலும் இனிய தருணங்கள் என மக்கள் சொல்கிறார்கள். கனவுகள், தூக்கத்துக்குச் செல்வதற்கு முந்தைய கணங்கள், தூக்கம் விழிப்பதன் கணங்கள், இசைகேட்கும்போது உருவாகும் கணங்கள், உடலுறவின் உச்ச கணங்கள். 'மெய்மறந்துட்டேன் 'என்னையே மறந்துட்டேன்' என்று அவ்வனுபவங்களைச் சொல்கிறார்கள். மானுடகுலத்துக்கு போதை மீதுள்ள பெரும் ஈடுபாடுக்குக் காரணமும் இதுவே. என்னென்ன வகையான போதைகள். மருந்துகள் மாத்திரைகள் புகைகள் பானங்கள்…


அவையெல்லாம் பிரக்ஞைநிலையைக் கிழித்து வீசிக் கனவுநிலையைக் கட்டில்லாமல் வெளிப்படச்செய்வதற்கான முயற்சிகளே. எப்போதும் சஞ்சலத்துடன் இருக்கும் மேல்மனம் விலகி நிற்பதே பெரும் விடுதலையுணர்ச்சியை அளிக்கிறது. அந்த விடுதலைக்கான தவிப்பே இந்தவகையான பித்துநிலைகளை நோக்கிக் கொண்டு செல்கிறது. இதைப் பிரக்ஞைநிலைமீது போடப்பட்டும் ஒரு கிழிசல் என்று சொல்லலாம்.


பிரக்ஞையை மழுங்கடிக்கக்கூடிய சில அம்சங்கள் உண்டு. முக்கியமானது சீரான தாளம். பிரக்ஞை என்பது பெருமளவுக்குத் தாளத்தால் கட்டுப்பட்டது. ஒரு குறிப்பிட்ட தாளத்தைக் கேட்டுக்கொண்டிருந்தால் நம்முள் பிரக்ஞையாக ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்கள் அந்தத் தாளத்திற்கு இயைப அமைவதைக் காணலாம் –ரயில்தாளத்தில் இதைப் பெரும்பாலானவர்கள் உணர்ந்திருப்பார்கள். தாளத்துடன் ஒளியும் காட்சிகளும் இணைக்கப்பட்டிருந்தால் அது இன்னும் தீவிரமாகிறது. ஒரு தாளத்துக்கு ஏற்பப் பத்துப்பேர் நம்மைச்சுற்றி ஆடினால், அந்தத் தாளத்துக்கு ஏற்ப வண்ணவிளக்குகள் மின்னினால் நம்மை அந்தத் தாளம் ஆட்கொள்கிறது. அது பிரக்ஞைநிலையை மழுங்கடிக்கிறது.


மழுங்கிய பிரக்ஞையைப் படிமங்கள் எளிதில் ஊடுருவமுடியும். ஆழ்மனதை அவை தீவிரமாகத் தாக்கும். அந்தப் படிமங்கள் நம்முடைய பண்பாட்டின் ஆழத்தில் தொல்படிமங்களாக இருந்துகொண்டிருப்பவற்றின் மறுவடிவங்கள் என்றால் அவற்றின் வல்லமை அளவிறந்தது. மதம் சார்ந்த படிமங்கள் நம்முடைய சிந்தனைநிலை உருவாவதற்கு முன்னரே நமக்குள் செலுத்தப்பட்டுவிட்டவை. அவற்றுக்கான வேகம் மிக அதிகம்.


இவ்வாறு பிரக்ஞை மழுங்கடிக்கப்பட்ட சூழலில், ஆழ்மனம் படிமங்களால் ஊடுருவ நேரும்போது சட்டென்று நம் பிரக்ஞைநிலை கழன்று விழக் காண்கிறோம். நம் ஆழ்மனம், ஸ்வப்னநிலை, சீண்டப்பட்டு சீறி வெளிவருகிறது. அணையை உடைத்து வரும் வெள்ளம்போல. அது வடிந்து முடிந்ததும் ஆழ்மான அமைதி. விடுதலை உணர்வு, நிறைவு. அது கொஞ்ச நேரத்துக்குத்தான். ஆனால் உண்மையில் இது நம்முடைய இறுக்கங்களை இல்லாமலாக்கிவிடுகிறது. .


பழங்குடிகளுக்கே இது தேவையாக இருக்கிறது என்னும்போது மன அழுத்தம் நிறைந்த நவீன வாழ்க்கைக்கு அது தவிர்க்கமுடியாதது ஆகிறது. ஏதோ ஒருவடிவில் இது எல்லா சமூகங்களிலும் இருந்துகொண்டிருக்கிறது. சென்னையின் சில இரவு விடுதி நடனங்களில் இதே வெறியாட்டத்தைக் கண்டிருக்கிறேன். கஞ்சா அல்லது போதைமாத்திரைகள் துணையுடன். ஹெவிமெட்டல் இசை துணைசேர்க்க ஆடித் திமிறுபவர்களுக்கும் சோட்டாணிக்கரையில் ஆடுபவர்களுக்கும் பெந்தேகொஸ்தே சபையில் கூச்சலிட்டு மயிரைப் பிய்த்துக்கொள்பவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.


அத்தகைய ஒரு வெளிப்பாட்டையே நித்யானந்தர், கல்கிசாமியார், கரிஷ்மாட்டிக் பாதிரியார் போன்றவர்கள் செய்கிறார்கள். அவரது வேடங்கள், அங்குள்ள ஒளி அமைப்பு, தாளம், அவருடைய பேச்சு, அனைத்தையும் விட முக்கியமாக முதலில் சிலர் 'செயற்கையாக' ஆட ஆரம்பிப்பது எல்லாம் சேர்ந்து பிறரைப் பித்துக் கொள்ளச்செய்கின்றன. எத்தனை அதிகம் பேர் பித்துக் கொள்கிறார்களோ அத்தனை விரைவாக அதில் உள்ளவர்களை அந்த மனநிலை பற்றிக்கொள்கிறது. பொதுவாக ஆண்களை விடப் பெண்களின் பிரக்ஞைநிலை எளிதில் சூழலுக்கு வசப்படக்கூடியது.


ஆச்சரியம் என்னவென்றால் இதையெல்லாம் அரசியல் பிரச்சார நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தலாமென ஹிட்லர் அவரது மெய்ன்காம்ப் நூலில் சொல்லியிருக்கிறார். ஒரு கூட்டம் பெரிதாக இருக்கும்தோறும், இசை ஒளியமைப்பு மற்றும் சூழலின் உணர்ச்சிகரம் மூலம் அதை ஒரே வெறிநிலை கொண்டதாக ஆக்கமுடியும் என்கிறார் அவர்.


நான் இந்தியச்சூழலில் இந்தவகையான எந்த பாதிப்புக்கும் ஆளாவதில்லை, ஏனென்றால் அறிவார்ந்த ஒரு எதிர்நிலை எனக்குள் உண்டு. ஆனால் அமெரிக்காவில் லாஸ்வேகாஸில் சூதாட்ட விடுதிகள் நடுவே செல்கையில் அங்கிருந்த துடிப்பான இசை, ஒளியசைவுகள், போதையூட்டும் சூழல் ஆகியவற்றை வேடிக்கைபார்க்க ஆரம்பித்து ஒருகட்டத்தில் சற்று பிரக்ஞையழிந்த நிலைக்கு வந்துவிட்டேன். அதை நானே உணர்ந்து என்னை மீட்டுக்கொண்டேன். நம் ஆழ்மனம் நம்முடையதல்ல. நாம் அந்தப் பெருவிலங்கின் கழுத்தில் கட்டப்பட்ட பலவீனமான சங்கிலியை மட்டுமே கையில் பிடித்துக்கொண்டிருக்கிறோம்.


இந்த வகையில் ஆழ்மனதைக் கட்டவிழ்த்துவிடும் பித்துநிலைக்கும் யோகம் கூறும் கடந்தநிலைக்கும் என்ன வேறுபாடு? இது ஜாக்ரத்தை தற்காலிகமாக ரத்துசெய்யும் ஒரு முயற்சி மட்டுமே. இதற்கு யோகம் தேவையே இல்லை. இதை கஞ்சாப் புகை மூலமே எளிதில் அடைய முடியும். யோகம் என்பது முற்றிலும் மாறுபட்டது.


என்ன வேறுபாடு? இதை ஏரியின் கரையை உடைத்துவிடுதல் எனலாம். யோகம் என்பது ஏரிநீரை மடைகள் வழியாக சீராக முழுமையாக வெளியேற்றுதல். ஜாக்ரத்தை 'ரத்து' செய்வதல்ல யோகம். ஜாக்ரத்தை மெல்லமெல்லப் பழக்கி ஸ்வப்னத்தைக் கண்டறிய முயல்வதே யோகம். ஆழ்மனதை அவிழ்த்துவிடுவதல்ல, ஆழ்மனதை அறிதலே யோகத்தின் வழி. அது இப்படி ஒரேநாளில் நிகழாது. மிகமிக கவனமாக, நெடுநாள் பழகிப்பழகி செய்யவேண்டியது. ஜாக்ரத் மூலம் ஸ்வப்னத்தையும் ஸ்வப்னம் மூலம் சுஷுப்தியையும் சுஷுப்திமூலம் துரியத்தையும் அறியும் நிலை. அறிதலும் அமைதலும் ஒன்றாக ஆகும் நிலை.


யோகத்தை இப்படிக் கூட்டாகச் செய்ய முடியாது. எளிய தியானப்பயிற்சிகளை மட்டுமே இப்படிச் செய்யமுடியும். யோகத்தின் வழி ஒவ்வொருவருக்கும் ஒன்று. அதில் பல்வேறு பிழைகள் நிகழும், அவற்றை நேரடி குரு வழிகாட்டல்மூலம் களைந்து முன்னகர வேண்டும். ஒருவரின் சிக்கல் இன்னொருவருக்கு இருக்காது.ஒவ்வொன்றும் ஒவ்வொருமுறையும் புதியவை.


யோகப்பயிற்சியில் இரண்டாவது நிலையில் ஸ்வப்னநிலை சீண்டப்படும்போது கொந்தளிப்பு உண்டு. சரியான வழிகாட்டல் இல்லாத பலர் அந்நிலையில் பித்துக் கொள்வதும், மீளமுடியாது செல்வதும் உண்டு. ஆனால் அதுகூட மிரண்டு துள்ளும் காட்டுக் குதிரைக்குட்டியை அடக்கி வசப்படுத்தும் முயற்சி மட்டுமே. அங்கே கட்டுப்படுத்தும் சக்தியாக நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஜாக்ரத் கூடவே வரவேண்டும்.


ஆக, நவீன காலகட்டத்தில் தேவையாக இருக்கும் ஒரு 'சேவை'யை நித்யானந்தா கொடுக்கிறார் என்றே எனக்குப்படுகிறது. மூடிய அறைக்குள் கிறுக்காகக் கொஞ்ச நேரம் இருப்பது பொதுவெளியில் நிதானமாக இருக்க உதவக்கூடியது. அதை எந்தவகையான குறியீடுகள் சாத்தியமாக்குகிறதோ அதை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். சிலருக்கு டிஸ்கோதே, சிலருக்கு நித்யானந்தா, சிலருக்கு பெந்தெகொஸ்தே. மற்றபடி இதற்கும் இந்து மதத்துக்கும் தியானத்துக்கும் யோகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.


ஜெ



[ பெந்தெகொஸ்தே. ஃபாதர் கே ஏ ஆபிரகாம்]



[கரிஷ்மாட்டிக் பிரேயர். பினு ஜோஸ் சாக்கோ]



எதியோப்பியாவில் ஒரு பெந்தேகொஸ்தே கூட்டம்



அமெரிக்கா தேவாலயமொன்றில் பரிசுத்த ஆவி வந்த பெண்கள்



கைகளின் நீளத்தை சரிசெய்கிறார் பாதிரியார்




கார்ப்பரேட் சாமியார்கள் தேவையானவர்களா?


கடவுளை நேரில் காணுதல்


ஆன்மீகம் தேவையா?



நான் இந்துவா?




தத்துவம் தியானம்-கடித
ம்


யோகம் ஒருகடிதம்


ஆன்மீகம் போலி ஆன்மீகம்



தியானம்




தியானம் ஒரு கடிதம்


பொம்மையும் சிலையும்


ஆன்மீகம் போலி ஆன்மீகம் மதம்

தொடர்புடைய பதிவுகள்

யோகம்,ஞானம்
யோகம், ஒரு கடிதம்
கார்ப்பரேட் சாமியார்கள் தேவையானவர்களா?
இந்துமதம் சம்ஸ்கிருதம் பிராமணர்-கடிதங்கள்
நாட்டார் தெய்வங்களும் சம்ஸ்கிருதமும்
கடவுளின் உருவம்-கடிதம்
கடவுளை நேரில் காணுதல்
பரிணாமவாதமும் இந்திய மதங்களும்
யார் இந்து?-கடிதம்
யோகமும் கிறித்தவமும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 11, 2011 10:30

கடிதங்கள்

அழகிய பெண்,அன்னை, ஆதர்ச பெண்…


ஒவ்வொரு ஆணும் ஜூலியா ராபர்ட்ஸ் வடிவில் தன் அன்னையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறான் என்று ஓஷோ ஒருமுறை சொன்னார்…


நாலாவது முறை அவன் கண்டது தன் ஆதர்சப் பெண்ணின் வடிவில் தன் அன்னையைத்தான்.. திரும்பிப் பார்க்கும் முன்பே அது அவனுக்கும் நன்றாகத் தெரியும்…


இதுதான் என்னுடைய புரிதல்… ஆயினும் மோனோலிசா புன்னகை போல விளக்கியும் விளக்க முடியாத ஒரு புதிர் இந்தக் கதையில்(அந்தமுகம்) உள்ளது… ஒருவேளை நம் அந்தரங்கத்திற்குத் தெரியுமோ என்னவோ…


நன்றி

ரத்தன்


அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,


என் கடிதத்தை உங்கள் இனையதளத்தில் பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.நீங்கள் கூறுவது 100% உண்மையே..என் சித்தப்பா 6 ஆண்டு முன்னர் குடியினால் உயிர் இறந்தார், அவரது குடும்பம் இன்னும் பொருளாதார சிக்கலில் இருந்து மீளவில்லை..


என் வயது 29 தான், நான் இன்றைய தலைமுறை என்று பள்ளி மற்றும் கால்லுரி மாணவர்களை மனதில் வைத்துக் கூறிவிட்டேன். என் சொந்த ஊர் விழுப்புரம் MBA முடித்துவிட்டு 15 மாதம் சென்னயில் வேலை செய்தேன், பிறகு 6 ஆண்டு முன்னர் நான் பெங்களூரு வந்தேன்.தனியார் கம்பெனியில் மார்க்கெட்டிங் பிரிவில் துணை மேனேஜர் ஆக உள்ளேன்.எனக்கும் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் புகை மற்றும் மதுப் பழக்கம் இருந்தது..பெங்களுரு வந்த பின் 5 ஆண்டு முன்னர் அப்பழக்கத்தை அறவே விட்டுவிட்டேன்.ஒரு முறை ஆனந்த விகடனில் நடிகர் திரு.சிவகுமார் அவர்களின் கட்டுரை ஒன்று படிக்க நேர்ந்தது.அதில் இருந்து நான் இன்று வரை புகைப்பதில்லை,

குடிபதில்லை.உங்களின் எழுத்து மற்றும் திரு.எஸ்.ராமகிருஷ்ணன், திரு.நாஞ்சில் நாடன் போன்றோர்களின் எழுதுக்களைப் படிக்கும் போது நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ ஓர் ஒழுக்கத்தைக் கற்கின்றேன்.


கடத்த ஆண்டு டிசம்பர் 31 இரவு குடி போதையில் தமிழகத்தில் இறந்த மாணவர்கள் எண்ணிக்கை கிட்டதட்ட 15 அதனால் அந்த ஆதங்கத்தில் அப்படிக் கூறிவிட்டேன்.என் புத்தக வாசிப்புப் பழக்கம் ஆனந்த விகடனில் இருந்து தொடங்கியது.எனக்கு உங்களின் முதல் அறிமுகம் ஆனந்த விகடனில் "நான் கடவுள்" படத்தைப் பற்றிய உங்களின் கட்டுரை.


இப்போதும் எனக்கு ஓர் ஆசை உண்டு, அது நீங்கள் திரும்பவும் ஆனந்த விகடனில் எழுத வேண்டும் என்று(உங்களின் எழுத்து பலருக்கும் சென்று சேரவேண்டும் அதற்காக அப்படிக் கூறினேன்).உங்களின் ஊரில் உங்களை நேரில் சந்தித்து உரையாட வேண்டும் என்ற ஆசை உண்டு.உங்களுக்கு பெங்களூருக்கு வரும் திட்டம் ஏதும் உள்ளதா,தெரிவு படுத்தவும்.எழுத்துப் பிழைக்கு மன்னிக்கவும்.


இப்படிக்கு


அன்புடன்

ரா. அ.பாலாஜி

பெங்களூரு.


வாழ்த்துக்கள் ஜே எம்.


உங்கள் அறம் தொகுப்பைப் பற்றி

நேற்று தான் டாக்டர் ராமானுஜம் என்னிடம்

அலைபேசியில் பேசுகையில் குறிப்பிட்டிருந்தார்

இன்று காஞ்சிபுரம் தோழர் மோகன் அவசரமாக அந்தப்

புத்தகத்தை வாங்கி அவருக்கு இன்றே அனுப்ப முடியுமா

என்று கேட்கவும், தி நகர் புக் லேண்ட்ஸ் சென்று வாங்கினேன்.


வேண்டுமென்றே தவறவிட்ட ஒரு பேருந்து, பிறகு தொற்றிக் கொண்டு

ஏறிய அடுத்தது இவற்றில் பயணம் செய்தபடியும் இறங்கிக் கொஞ்சமுமாக

கூரியரில் (வருத்ததோடு!) சேர்க்குமுன் அறம் வாசித்து முடித்து

அசந்து போனேன்…(எழுத்தாளர் எம் வி வெங்கட்ராம் கதை என்று பிறகு

மாலையில் ராமானுஜம் பேசுகையில் சொன்னார்)…அப்புறம் இந்தக்

கதைகள் எழுதப் புகுந்த வரலாறும், இலட்சிய மனிதர்கள் மீதான

கனிவான பார்வையுமாக உங்கள் அறிமுகப் பக்கத்தையும் வாசித்தேன்.


மதிப்பிற்குரிய எளிய மனிதர் தோழர் ஜே ஹெச் அவர்களை நீங்கள் நினைவு

கூர்ந்திருப்பதும், அவருக்கு இந்தப் புத்தகத்தை அன்போடு சமர்ப்பித்திருப்பதும்

மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது….கூடவே சில கேள்விகளையும்.. அவரைக் குறித்தான உங்கள் முழு புனைவுக் கதையை வாசிக்கக் காத்திருக்கிறேன்..


யாரையும் கவர்ந்துவிடும் அந்தப் பெருந்தகையை

எங்கள் வாழ்விலும் மறக்க இயலாது..


ஏற்கெனவே சோற்றுக் கணக்கு கதையில் என் உள்ளத்தைப் பறிகொடுத்திருக்கிறேன்.

யானை டாக்டர் பற்றிப் பேசத் தனிக் கட்டுரை எழுத வேண்டும்…அறம் தொகுப்பை முழுமையாக வாசித்து விட்டு எழுதுகிறேன்..

வாழ்த்துக்கள் ஜே.எம்.


எஸ் வி வேணுகோபாலன்

தொடர்புடைய பதிவுகள்

அறம் வாழும்-கடிதம்
பின்தொடரும் நிழலின்குரலும் அறமும்
கடிதங்கள்
அறம் விழா
அறம் – சிறுகதைத் தொகுப்பு கிடைக்குமிடங்கள்
எதற்காக அடுத்த தலைமுறை?
யானை- கடிதம்
யானைடாக்டர்-ஓர் உரை
வாழும் கணங்கள்-கடிதங்கள்
மண்ணாப்பேடி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 11, 2011 10:30

December 10, 2011

எண்ணியிருப்பேனோ

இன்று பாரதி நினைவுநாள். வழக்கம்போல கொஞ்சம் பாரதி கவிதைகள் வாசித்தேன், பாடல்கள் கேட்டேன். இந்தப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்டேன். நெடுநாள்களாயிற்று இதைக்கேட்டு. சந்தானம் எனக்கு என்றுமே பிரியத்துக்குரிய குரல். ஆனால் இசையைவிட வழக்கம்போல வரிகள்தான் எனக்குள் சென்றன. ஏக்கமும் தனிமையுமாக இந்தப்பாடலில் இருக்கிறேன்.



சென்ற சிலவருடங்களாகவே இந்தப்பாடல் முன்வைக்கும் உணர்வுக்கு நேரெதிரான உணர்வுநிலை கொண்டிருக்கிறேன். உலகியல்சார்ந்த எல்லாவற்றிலும் சலிப்பும் விலகலும் உருவாகிறது. அப்பால் ஒன்றை நோக்கிய கனவாகவே ஒவ்வொருநாளும் செல்கிறது. ஆனால் நீரில் பந்தை அழுத்துவதுபோல என் முழு அகவிசையாலும் நான் என்னை இவற்றில் எல்லாம் அழுத்திக்கொள்கிறேன். வேண்டுமென்றே அதிகம் எழுதுகிறேன், அதிகம் வாசிக்கிறேன். வேண்டுமென்றே அதிகமான உலகியல் பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறேன். அதன் பொருட்டு பயணங்கள், சந்திப்புகள், நட்சத்திரவிடுதிகளின் சுகவாசங்கள். ஆனால் அது மேலும் மேலும் என்னை வெளியே தள்ளுகிறது. இது இருபது வயதில் என்னை வெளியே தள்ளிய அதே தவிப்பு.


மோகத்தைக்கொன்றுவிடு என்றல்ல, இன்னும் கொஞ்சம் மோகத்துடன் இருக்கவிடு என்றுதான் நான் ஏகத்திருந்து எல்லாவற்றையும் ஆற்றுபவளிடம் கோரவேண்டும். நான் செய்யவேண்டியவை என எண்ணுபவை, செய்தேயாகவேண்டுமென இவ்வுலகம் எனக்குச் சொல்பவை நிறைய மீதமுள்ளன. ஆனாலும் 'இந்தப்பதர்களையே எல்லாமென எண்ணியிருப்பேனா?' என்று மனம் ஏங்கிக்கொண்டே இருக்கிறது. ஒரு நிலம், ஒரு இடம் கற்பனைக்கு தெரிகிறது. சென்று சேரவேண்டிய இடம் என தோன்றுகிறது. ஆனால் 'இப்போது இங்கிருக்கிறேன்..' என்ற சொல்லாக மட்டுமே இருக்கிறது இருப்பு.


மீண்டும் மீண்டும் இந்தப்பாடல்.


http://www.youtube.com/watch?v=q_X-9S...

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 10, 2011 10:48

மேளம்-கடிதங்கள்

ஜெ,


இந்தப் பதிவு(மேளம்)வண்ணதாசன் அவர்களின் ஒரு சிறுகதையை சட்டென்று நினைவிற்கு கொண்டுவந்ததில் ஆச்சரியமில்லை.


ஒரு டவுண் பஸ் பிரயாணத்தில் பல வருடங்களுக்கு முன் தனது திருமணத்திற்கு நாதஸ்வரம் வாசித்தவரை அடையாளம் கண்டு கொண்டு நினைவுகள் அங்கே போய்விடும்…



"

எங்களுடைய கல்யாணத்துக்கு நாதஸ்வரம் வாசித்தவரைப்பார்த்த மாத்திரத்திலேயே அடையாளம் தெரிந்துவிட்டது. ரெண்டு தவில், ரெண்டு நாதஸ்வரம், ஒரு சுருதிப்பெட்டி, ஐந்தாறு பேர் என்று டவுண் பஸ் நெரிசலுக்குள் ஏறுவது என்பது சிரமமானதுதான். "மனுஷன் நிற்கிறதுக்கே இடத்தைக் காணோம். பிசுங்கிக்கிட்டு இருக்கு, இதிலே இது வேறு இடைஞ்சல்" என்று கிளம்பின எரிச்சலையும் முனகல்களையும் பிளந்து வகிர்ந்து கொண்டு காவித்துணி போர்த்திய தவில், காவித்துணி உறை போட்ட நாயனம் எல்லாம் ஒவ்வொன்றாக நகர, இந்த மாதிரி நெரிசலையும் எரிச்சலையும் எவ்வளவு பார்த்தாயிற்று என்கிற மாதிரி ஒரு குறுஞ்சிரிப்புடன் அவர் மேலே கம்பியைப்பிடித்துக்கொண்டு வரும்போதே எனக்கு ஞாபகம் வந்துவிட்டது.


முந்தின நாள் கொலு மேளத்திலிருந்து, கல்யாணத்தன்றைக்குக்காலையில் ஆரம்பித்து சாயந்திரம் வரை கேட்டுக்கேட்டு வாசிப்பில் ரொம்ப குளிர்ந்து போயிருந்த நேரம். வரவேற்பு முடிந்து, புகைப்படக்காரர் க்ரூப் போட்டோக்களுக்குக் குடும்பத்தினரைத் தயார் படுத்திக்கொண்டிருந்தார். அவ்வளவு நன்றாக வாசிக்கிறவரை எனக்குத் தெரிந்து கொள்ள வேண்டும் போல இருந்தது. பக்கத்தில் இருந்த பாலுவைக் கேட்டேன். 'மாப்பிள்ளை உங்ககூடப்பேசணும்கிறாரு' என்று அவன் கையோடு கூப்பிட்டுக் கொண்டே வந்துவிட்டான். அவர் வருவதைப்பார்த்து நான் எழுந்திருந்தேன்.


….


இவர் 'சிங்காரவேலனே தேவா' வாசிக்கவில்லை. 'நலந்தானா' வாசிக்கவில்லை. அதெல்லாம் வாசித்திருந்தால் கொஞ்சம் ஏறிட்டாவது பார்த்திருப்பார்கள். 'அலை பாயுதே' வாசித்தார். கேட்டுக்கேட்டு எல்லோருக்கும் தெரிந்த பாட்டு, அல்லது தெரிந்தது போல தலையசைக்கிற பாட்டு.


"

நடேசக்கம்பர் மகனும், அகிலாண்டத்தின் அத்தானும்


எஸ்ஸெக்ஸ் சிவா


***


அன்புள்ள ஜெ


மேளம் என்ற சொல்லை மிக அவமரியாதையாகத் தமிழிலே பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை எழுதியிருந்தீர்கள். அப்படிப் பயன்படுத்தியவர்களில் கவிஞர் பாரதிதாசனும் உண்டு. அறிஞர் அண்ணா பற்றி அவர் எழுதி அவரது பத்திரிகையிலேயே வெளியான கட்டுரையில் அவர் அந்த வார்த்தையை எப்படிக் கேவலமாக கையாள்கிறார் என்று பாருங்கள்



புரட்சிக்கவியின் சாதிய மனோபாவமும் கழகக் கணக்குகளும்


சிவராமன்


**


திரு ஜெயமோகன் அவர்களுக்கு,


திரு சிவாஜி அவர்கள் மிகச்சிறந்த நடிகர்தான்.அனால், 'தில்லானா மோகனாம்பாள்' கதைக்கு திரு கோபுலு அவர்கள் வரைந்த சித்திரங்களின் பாவங்கள் ….! சிக்கல் சண்முக சுந்தரத்தின் இளமையும், துடிப்பும், துள்ளலும் அழகும் , நாதஸ்வர வாசிப்பின் போது வெளிப்படும் உணர்ச்சிகளும் , கோபுலுவின் கோட்டோவியங்கள் மூலம் உயிர் பெற்றன. மோகனாம்பாளின் எழிலும், நாட்டிய மிடுக்கும், உள்ளக் கொந்தளிப்புகளும் கலைமணி அவர்களின் கதையை ஒரு அமரசித்திரம் ஆக்கிற்று. எத்தனை , எத்தனை வகையில் நாட்டிய முத்திரைகள் …! ஒவ்வொரு பாத்திரத்தையும் கண் முன் கொண்டுவரும் அற்புதப் படைப்புகள்.


அதனால், திரைப்படம் பார்க்கும் பொழுது திரு சிவாஜி கணேசனும், நாட்டியப் பேரொளி பத்மினியும் தங்கள் பங்கை சிறப்பாக செய்தார்கள் என்றாலும், அந்தத் திரைப்படம் எனக்கு ஓர் ஏமாற்றமாகவே இருந்தது.


அன்புடன்,

சங்கரநாராயணன்

தொடர்புடைய பதிவுகள்

மேளம்
தவில்
தமிழர்மேளம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 10, 2011 10:30

இந்தியாவில் ஏசு

அன்புள்ள ஜெயமோகன் சமீபத்தில் இணையத்தில் ஒரு பதிவைப் படித்தேன். இயேசு இந்தியாவில் வசித்தார் என்று கூறும் பதிவு அது. வேறு யாராவது சொல்லியிருந்தால் இந்துத்துவா உளறல் என்று ஒதுக்கி இருப்பேன். ஆனால் இது ஓஷோவின் உரை.அதற்கான லிங்கைக் கீழே கொடுத்துள்ளேன் இது வெறும் யூகம் தானா? இல்லை இதற்கு ஆதரங்கள் இருக்கிறதா? இது பற்றி தங்கள் கருத்தை அறிய ஆவல் ஏற்கனவே இது பற்றி எழுதியிருந்தால் சுட்டியை மட்டுமாவது அனுப்பவும்.


http://www.google.co.in/gwt/x?output=wml&wsc=tb&wsi=f09c03b46b640fee&source=m&u=http://www.messagefrommasters.com/Hidden-Mysteries/Jesus-lived-in-india.htm&ei=oxzbTrGXBsiEkQWjgemkAg


நன்றி,

அன்புடன்

கார்த்திகேயன்.J


[image error]


அன்புள்ள கார்த்திகேயன்


ஏசுவின் வாழ்க்கையில் அவரது குழந்தைப்பருவத்துக்கும் இளமைப்பருவத்திற்கும் நடுவே ஒரு அறியப்படாத பகுதி உள்ளது. அந்தப்பகுதியில் அவர் இந்தியாவுக்கு வந்திருக்கலாம். அவர் வாழ்ந்த பகுதி இந்தியாவும் சீனாவும் ஐரோப்பாவுடன் தொடர்புகொள்ளும் வழியில் , பட்டுப்பாதை ஓரமாக, இருந்தது. இந்தியாவின் ஞானமரபு கிறிஸ்துவுக்கு முன்னரே அப்பகுதியெங்கும் அறியப்பட்டிருந்தது. குறிப்பாக பௌத்தமும் சமணமும். பௌத்தர்களும் சமணர்களும் வணிகர்கள் என்பதனாலும், அவர்கள் மதத்தைப்பரப்புவதில் தீவிரமான ஈடுபாடும் அதற்கான அமைப்பும் கொண்டவர்கள் என்பதனாலும் அது நிகழ்ந்திருக்கலாம். கிறிஸ்துவின் போதனைகளில் சமணத் தாக்கம் அதிகம் உண்டு.


இந்தியா அக்காலகட்டத்தில் ஒரு ஞானபூமியாக, கல்வி மற்றும் தத்துவம் ஓங்கிய பகுதியாக எண்ணப்பட்டது. ஏசு பிறந்தபோது கிழக்கிலிருந்து வந்த மூன்று ஞானியரால் அவர் அடையாளம் காணப்பட்டார் என்ற தொன்மத்திற்குப் பின்னாலுள்ள மனநிலையும் இதுவே. ஆகவே ஏராளமானவர்கள் இந்தியாவுக்குக் கல்விகற்க வருவது வழக்கமாக இருந்தது. அவ்வாறு ஏசு வந்திருக்கலாம் என ஊகிக்கிறார்கள்.


ஆனால் இந்தக் கருத்துக்குத் திட்டவட்டமான சான்றுகள் ஏதுமில்லை. இவை சந்தர்ப்பம் சார்ந்த ஊகங்கள் மட்டுமே. எனவே நான் இவற்றைப் பெரிதாக நினைப்பதில்லை. ஏசு இந்தியாவுக்கு வந்திருந்தாலும் வராவிட்டாலும் பெரிய வேறுபாடு ஏதும் இல்லை. அவரை அறிவதிலும் அணுகுவதிலும் அது ஒரு விஷயமே அல்ல. எங்கு பிறந்திருந்தாலும் எங்கே கல்விகற்றாலும் அவர் மானுடத்க்குச் சொந்தமானவர்.


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

ஆன்மீகம்,கடவுள், மதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 10, 2011 10:30

December 9, 2011

விஷ்ணுபுரம் விருது பற்றி…

ஒரு பதிப்பாளனுக்கு ஏற்படும் பண / மன நெருக்கடியில்லாமல் மிகச்சுதந்திரமாக அவர் செய்யும் இலக்கியச் செயல்பாடுகள் கவனிக்கத்தக்கது. குறிப்பாக விஷ்ணுபுரம் விருது வழங்கும் நிகழ்வு. எவ்வித இதழ்/ இயக்க பலமில்லாமல் தொடரும் இச்செயல்பாடு ஒரு எழுத்தாளன் தான் வாழும் காலத்தில் இன்னொரு எழுத்தாளனைப் போற்றி அவன் படைப்பை முன்னெடுக்கும் முயற்சிகளில் முக்கியமானது. மலேசிய சூழலில் இதுபோன்ற முயற்சிகளே தொடங்கப்பட வேண்டும் என நான் விரும்புவதுண்டு


விஷ்ணுபுரம் விருது விழா பற்றி வல்லினம் இதழில் நவீன்

தொடர்புடைய பதிவுகள்

ஓர் உரை
கடிதங்கள்
சந்திப்புகள் கடிதங்கள்
நாவல் உரை
வல்லினம்
ஏ.ஆர்.ரஹ்மான்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 09, 2011 10:30

பூமணியின் நிலம்

பூமணியும் அவருக்கு முன் கி.ராஜநாராயணனும் எழுதி உருவாக்கிய கரிசல் நிலத்தை நான் முதன்முதலாகப் பார்த்தது ஒன்பதாம் வகுப்பு மாணவனாக எட்டயபுரத்தில் பாரதி விழாவுக்குச் செல்லும்போதுதான். பாரதியார் பற்றிய பேச்சுப் போட்டியில் பரிசு பெற்றிருந்தேன். அதுவரை நான் தமிழ்மைய நிலத்திற்குள் வந்ததில்லை. நான் பார்த்திருந்த இரு பெரு நகரங்கள்' திருவனந்தபுரமும் நாகர்கோயிலும்தான். அதாவது நான் அறிந்ததெல்லாம் நீர்வளம் மிக்க நிலம் மட்டுமே.



ஆரல்வாய் மொழி தாண்டிப் பணகுடியை அடைந்தபோது நான் ஆழமானதோர் மன எழுச்சிக்கு ஆளானேன். நிலம் எப்படிப்பட்டதாக இருந்தாலும், முதலில் பார்க்கும்போது அது மன எழுச்சியையே உருவாக்கும் என்று நான் பின்னர் வாழ்வின் பல்வேறு தருணங்களில் அறிந்திருக்கிறேன். முதல்முறையாகப் பார்த்தபோது ராஜஸ்தானின் பிரம்மாண்டமான தார் பாலைநிலமும் எனக்குப் பெரும் மனவிரிவையே அளித்தது. நிலம் எதுவானாலும் அது மனிதனுக்கு அன்னை என்று அப்போது என் பயணக்கடிதம் ஒன்றில் எழுதினேன். அதைப் பெற்ற சுந்தரராமசாமி 'ஆம் எந்த நிலத்திலும் அங்கு வாழும் மனிதர்களுக்கான உணவும் நீரும் இருக்கும்' என்று எனக்கு பதில் எழுதினார்.


இருமருங்கும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்து கிடந்த மேடுபள்ளம் அற்ற விரிந்த பொட்டல் அது. தேவதச்சனின் கவிதைபோலக் குனிந்து நாற்று நடும் பெண்ணுடன் தானும் குனிந்திருக்கும் பிரம்மாண்டமான வானம். உண்மையில் நிலத்தை மட்டுமல்ல, வானத்தையும் அன்று நான் புத்தம் புதியதாகக் கண்டுகொண்டேன் அன்றுவரை நானறிந்திருந்த வானம் எப்போதும் பச்சை மரக்கூட்டங்களின் விரிவாகவே காணக்கிடைப்பது. செறிந்த மேகங்கள் கரை கண்டு நகர்வது. இந்த வானம் ஒளிக்கடலாக இருந்தது. வானம் அத்தனை துல்லியமாக நீலம் கொண்டிருக்கும் என்று அப்போதுதான் அறிந்தேன். கீழே பசுமையே இல்லாத செம்மண் நிலம். தொலைவில் அது சிறிய மேடுகளாக எழுந்து வானில் இணைந்தது. உடைமுள் பரப்புகள் வெயிலில் உலர்ந்து கிளைபின்னிக் கிடந்தன. பனைமரக் கூட்டங்கள் வானத்தின் தூண்கள் போல, யானைக்கால்கள் போல, பொட்டலில் முளைத்த மயிர்கற்றைகள் போல நின்றன.


நெடுநாட்களுக்குப் பின்னர் கி.ராஜநாராயணனின் கதைகள் வழியாக அந்த நிலத்தை நான் மீண்டும் கண்டடைந்தேன். இம்முறை பேரழகு மிக்க உயிர்வெளியாக மனிதர்கள் வாழ்ந்து வாழ்ந்து அந்த நிலத்தை ஒரு உயிர்ப்படலமாக ஆக்கிவிட்டிருந்தார்கள். அதன்பின் கரிசலை எப்போது கடந்து சென்றாலும் அதன் கதாபாத்திரங்களை நினைவு கூர்ந்துதான் செல்ல முடிந்தது. உண்மையில், கரிசலில் மழை பெய்யும் அழகை நான் கி.ராஜநாராயணனின் சொற்கள் வழியாகவே அறிந்தேன். கரியமண் முதலில் ஆவி உமிழ்ந்து புகைகிறது. பின் அதன் உயிர்மணம் வெளிவருகிறது. ஒரு கடிதத்தில் கி.ரா அது விந்துவின் வாசனை போன்றது என்று கூறியிருப்பார். பிறகு கரிய, கன்னங்கரிய சேறாக இருக்கிறது அந்த மண். எள்ளுப் புண்ணாக்கு போல என்று என்று அதை வர்ணிக்கிறார் கி.ராஜநாராயணன். அதன்பின் அங்கே மானுட உழைப்பு நிகழ்கிறது. கரிசல் இளகி நெகிழ்ந்து வயல்பரப்பாகிறது. கம்பும் கேழ்வரகும் பருத்தியும் முளைத்தெழுகின்றன. சில பருவங்களில் கரிசல் நிலம் பசுமையன்றி வேறு நிறமே இல்லாததாக விரிந்து கிடப்பதைக் கண்டிருக்கிறேன்.



பின்னர் நான்கு வருடம் கழித்துதான் நான் பூமணியின் நாவலை வாசித்தேன். 1988ல் நண்பர் யுவன் சந்திரசேகர் பூமணியின் 'பிறகு' நாவலை நான் வாசிக்கும்படி சொல்லி அவரே காக்கி நிற அட்டை போட்டுப் பெயர் எழுதிப் பாதுகாப்பாக வைத்திருந்த பிரதியைக் கொண்டுவந்து தந்தார். நான் அந்நாவலை ஒரு ஐம்பது பக்கம்தான் வாசித்தேன். என்னால் அதை மேலே வாசிக்க முடியவில்லை. மிக ஆழமான ஒரு தடையை அந்நாவல் எனக்கு அளித்தது. திருப்பிக் கொடுத்தபோது யுவன் ஏமாற்றத்துடன் 'இல்லைடா நீ இன்னும் கொஞ்சம் பொறுமையா வாசிக்கலாம். ரொம்ப முக்கியமான ஆதர்டா' என்றார். நான் 'என்னால முடியல. இது என்னை ரொம்பத் தடுக்குது' என்றேன். 'என்ன பிரச்சினை?' என்றார். 'கரிசல் வயலில் கம்புப்பயிர் நடுவே வரப்பில வர்ற மாதிரி இருக்கு கி.ராவோட கதைகளைப் படிக்கிறப்ப. இந்தக் கதைகளைப் படிக்கிறப்ப சட்டுன்னு உடைமுள் பரப்பில மாட்டிக்கிட்ட மாதிரி இருக்கு. உள்ளங்கால் சுட்டு வேகிறது மாதிரி இருக்கு' என்றேன்.


யுவன் 'அதான் அதோட அழகியலே. நீ கி.ராவ ரொம்ப சிலாகிச்சு சொல்றே அது கி.ராவோட உலகம். நைனா அறிஞ்ச யதார்த்ததுக்கு நேர் எதிரான யதார்த்தம் பூமணி காட்டுகிறது. கம்பு மட்டுமில்ல கூட முள்ளும் கரிசலோட பயிர்தான்' என்றார்.எனக்குப் பூமணியின் வட்டார வழக்கும் தடையாக இருந்ததைச் சொன்னேன். 'எனக்கும் அப்படி இருந்தது. கோயில்பட்டியில் ஒரு வாரம் வாழ்ந்தா அந்த பாஷை நம்மோடது ஆயிடுதுல்ல, அதே மாதிரித்தான். கொஞ்சம் கவனமா அம்பது பக்கம் தாண்டி அழகிரிப் பகடை நம்மகிட்ட பேச ஆரம்பிச்சிருவார். அவரு பேசறதப் புரிஞ்சுக்கிட பாஷையே தேவையில்லை' என்றார்.


அதன்பின் ஒருமுறை, 1989 வாக்கில் எஸ்.ராமகிருஷ்ணன் கோணங்கி இருவரையும் திருவண்ணாமலையில் பவா செல்லத்துரை வீட்டில் சந்தித்தேன். கி.ராஜநாராயணின் அறுபதாவது வயது நிறைவை ஒட்டி அகரம்(அன்னம்) பதிப்பகம் வெளியிட்ட ராஜநாராயணியம் என்ற நூல் அப்போது வந்திருந்தது. அதில்தான் பூமணி கி.ராஜநாராயணனை முன்னத்தி ஏர் என்று கூறியிருந்தார். கோணங்கி வேடிக்கையாகச் சொன்னார், 'நைனா முன்னத்தி ஏரை தளுக்கா கொண்டு போயிட்டார். ஏரு புடிக்கற சம்சாரி நாயக்கருங்க அப்பிடித்தான் செய்வாங்க. பின்னால் வர்ற ஆள்காரங்களுக்குத்தான் பெரியபெரிய தூரெல்லாம் சிக்கிக்கும். நாமதான் ஒவ்வொண்ணா எடுத்து மறிச்சுப் போட்டு உழணும்' . அவருடைய தன்னம்பிக்கையை நான் எப்போதும் மிகவும் ரசிப்பவன். கோணங்கி கரிசல் பின்னணியில் எழுதிய கம்மங்கதிரு, கருப்பு ரயில் போன்ற கதைகள் வெளிவந்திருந்த காலம் அது. எஸ்.ராமகிருஷ்ணன் பூமணியின் பிறகு நாவலைப் பற்றிச் சொன்னார். பூமணி கரிசல் மண்ணின் வெக்கையை எழுத முடிந்த படைப்பாளி என்றார். பிறகு வாசித்தபோது அதற்கு வெக்கை என்று பெயர் வைத்திருக்கலாம் என்று நினைத்ததாகவும் அதேபோலப் பூமணி அவரது அடுத்த நாவலுக்கு வெக்கை என்றே தலைப்பு வைத்ததாகவும் சொன்னார்.


உண்மையில் அதன்பிறகுதான் நான் பூமணியின் பிறகு நாவலை வாசித்தேன். இப்போது அந்த மண்ணும் மொழியும் கூறுமுறையும் எனக்கு அன்னியமானதாக இருக்கவில்லை கி.ராஜநாராயணன்,கோணங்கி இருவராலும் பூமணி எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது போலிருந்தது. கி.ராவும் கோணங்கியும் அடிப்படையான ஒரு கவித்துவம் கொண்டவர்கள். மண்ணையும் மானுட நிகழ்வுகளையும் அவற்றுக்கு அப்பாற்பட்ட ஏதோ சிலவற்றின் குறியீடுகளாக ஆக்கும் திறன் கொண்டவர்கள். அவர்களின் உலகில் வருவது அவர்களின் கரிசல், அவர்களின் மனிதர்கள். அவர்களின் கனவுலகிலிருந்து எழும் பிம்பங்கள். அவற்றில் ஊறித்திளைத்து அறிந்த பிறகு நான் 'வெறும்' கரிசலை அறிய விரும்பியிருக்கலாம் எவரும் ஊடாடாத கரிசலில் தனியாக ஒரு நடை சென்றுவர, அந்த மக்களுடன் சிலநாட்கள் இருந்துவர விரும்பியிருக்கலாம் அவ்வாறுதான் எனக்குப் பூமணி பிடித்தமானவராக ஆனார். பிறகு எனக்குத் திறந்து கொண்டது.



பூமணியின் படைப்புலகு வழியாகவே எனக்கு இயல்புவாதமும் உகந்த அழகியலானது என்று நினைக்கிறேன். அதற்கு முன்னரே நான் நீல பத்மநாபனை வாசித்திருந்தாலும் எந்த வண்ணங்களும் இல்லாத அவரது உலகுக்குள் முழுக்க நுழைந்திருக்கவில்லை. ஆ.மாதவனை அப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருந்தேன். வாசித்து நிராகரித்திருந்த ஆர்.ஷண்முகசுந்தரத்தைப் புதிய வெளிச்சத்தில் திரும்பவும் கண்டடைந்தேன். இல்லாமலிருக்கும் ஆசிரியன் இருப்பவனை விட வல்லமை கொள்ள முடியும் என்று கண்டுகொண்டேன். கூறப்பட்டவற்றை விடக் கூறப்படாதவைக்கு அழகும் வீச்சும் அதிகம் என்று புரிந்துகொண்டேன்.


பூமணியின் புனைவுலகம் விமர்சனங்கள் அற்றது அல்ல. மிக வீச்சுள்ள சமூக விமரிசனப் படைப்புகள் என்றே 'பிறகு', 'வெக்கை' இரண்டையும் கூறிவிடமுடியும். அந்த விமரிசனத்தின் முனை அவற்றின் தலைப்பிலேயே உள்ளது. 'பிறகு' மிக விரிவான ஒரு தொகுப்புத்தன்மை கொண்ட ஆக்கம். சுதந்திரத்திற்குப் பிந்தைய அரை நூற்றாண்டுக்காலத்தை அது ஒட்டுமொத்தமாக அழகிரிப் பகடையின் வாழ்க்கை மூலம் காட்டுகிறது. இந்திய சுதந்திரம் இங்குள்ள அடித்தளத்துக் குடிமகன் ஒருவனுக்கு உண்மையில் என்னதான் அளித்தது என்று அழகிரிப் பகடை மூலம் அந்நாவல் விசாரணை செய்கிறது. மாற்றங்கள் நிகழ்கின்றன. மண்ணும் மனிதர்களும் மாறுகிறார்கள். பழையன கழிகிறது. பிறகு? நாவலின் அழுத்தம் அங்குதான் ஆழமாகப் பதிகிறது.


'பிறகு' வெளிவந்த முப்பதாண்டுக் காலத்துக்குப்பிறகு வெளிவந்த இமையத்தின் 'கோவேறு கழுதைகள்' அதே வினாவை இன்னொரு சூழலில் இன்னொரு கோணத்தில் மீண்டும் எழுப்பிக்கொள்கிறது. அழகிரிப் பகடைக்கும் ஆரோக்கியத்துக்குமான ஓர் ஒப்புநோக்கு ஆய்வு தமிழிலக்கியத்தின் பரிணாமத்தை மட்டுமல்லாது கடந்த ஐம்பதாண்டுக்காலத் தமிழ் வாழ்க்கையின் பரிமாணத்தையும் நுட்பமாகப் பரிசீலிப்பதற்கான ஒரு வாய்ப்பாகும். இவ்விரு நாவல்களுடனும் இணையக் கூடிய இன்னொரு முக்கியமான படைப்பு கண்மணி குணசேகரன் எழுதிய அஞ்சலை. ஒர் எல்லை வரை சிவகாமியின் 'ஆனந்தாயி'யையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனந்தாயி பிற மூன்று நாவல்களைப் போலன்றி இன்றும் வெளிப்படையான அரசியல் உரையாடல் கொண்டது.


ஆர்வமூட்டும் ஒரு வினா. தமிழில் 'பிறகு?' என்ற வினாவுடன் ஆரம்பித்த முதல் நாவல் ஒரு அடித்தட்டு ஆண்மகனைக் கதாநாயகனாக ஆக்கியது. அனால் அதற்குப் பின் வெளிவந்து அதே வினாவை எழுப்பிய எல்லா நாவல்களும் பெண்ணையே கதை மையமாகக் கொண்டவை. ஏன்? அடித்தளமக்களிலும் அடித்தளத்தினர் அவர்களுக்குள் உள்ள பெண்கள்தான் என்று புரிதலா அது? அழகிரிப்பகடையின் வாழ்வில் என்ன நடந்தது என்பதை விட அவர் மனைவியின் வாழ்வில் என்ன நடந்தது என்பதைத்தான் பிற்காலத்துப் புனைவிலக்கியவாதிகள் முக்கியமானதாகக் கருதுகிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்? சமூகவியலா இல்லை நம் அடித்தள வாழ்வின் உளவியலா அதற்கான பதில் உள்ளது?



இயல்பாக இப்படி ஒரு வரிசை உருவாகி வந்திருப்பதைப் பார்க்கும்போது ஒன்று தெரிகிறது. பூமணி தமிழுக்கு மிகமிக முக்கியமான ஒரு முன்னோடியாக இருந்திருக்கிறார். காய்ந்து காத்திருந்த காட்டில் தீப்பொறி விழுந்ததைப்போல அவரது அழகியல் மிக விரைவாகத் தமிழில் பற்றிக்கொண்டுவிட்டது. பூமணியின் இயல்புவாத அழகியல் நோக்கில் நேர் வாரிசுகள் எனத் தமிழில் ஒரு பெரிய இலக்கிய வரிசையே இன்று உள்ளது. முக்கியமாகத் தமிழில் பின்னர் எழுதவந்த அடித்தள வர்க்கத்துப் படைப்பாளிகள், தளத்தியர்கள் பூமணியின் மொழியையும் பாஷையையுமே தங்களுக்குரிய வழியாகக் கொண்டிருக்கிறார்கள் என்றுபடுகிறது. இமையம், சொ.தருமன், கண்மணிகுணசேகரன், சிவகாமி என அந்தப் பட்டியல் நீள்கிறது. தமிழுக்குப் பூமணியின் பங்களிப்பை விட இந்த ஒட்டுமொத்த பாதிப்பை வைத்தே மதிப்பிட வேண்டுமென்று படுகிறது.


இயல்புவாதத்தை ஒருவகையில் புகைப்படக் கலையுடன் ஒப்பிடலாம். பற்றற்ற ஆவணப்படுத்தலையே தன் அழகியலாக அது கொண்டுள்ளது.ஆனால் அப்படி முழுமையான 'பற்றற்ற' நிலை அதற்கு இல்லை. எதைக் காட்டவேண்டும், எந்தச் சட்டகத்திற்குள் நிறுத்தவேண்டும் என்று தீர்மானிக்கும் புகைப்படக்கலைஞன் ஒருவன் அதன்பின் இருக்கிறான். அது ஆவணம்தான், செயற்கையானது அல்ல, ஆனால் உருவாக்கப்பட்டதும்கூட. இந்தியாவில் புகைப்படம் வந்தபோது என்ன நிகழ்ந்ததோ அதுவே இயல்புவாதம் வந்தபோதும் நிகழ்ந்தது. இந்திய வாழ்க்கை ஒரு மாபெரும் நிலைக்கண்ணாடியில் பதிவாவதுபோல அதில் பதிவாக ஆரம்பித்தது. அதன் அவலங்கள் துயரங்கள். ஆம், அவையே அதிகமும் பதிவாயின. ஏனென்றால் அவைதான் அன்றுவரை அதிகமும் மூடி வைக்கப்பட்டிருந்தன. அலங்காரம் மூலம் மறைக்கப்பட்டிருந்தன. இன்றுவரை உலகின் வேறெங்குமில்லாத அளவுக்கு இயல்புவாதம் இந்தியாவில் வலுவாக இருப்பதும் இதனால்தான். இன்றும் நம்மை நாம் பாசாங்குகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள ஆரம்பிக்கவில்லை.


இந்தியா ஒரு பிரம்மாண்டமான தொகைச்சமூகம். பல்லாயிரம் இனக்குழுக்கள் மொழிக்குழுக்கள் இங்கே அருகருகே வாழ்கின்றன. ஒரு பொதுச் சமூகப்புரிதலால் அவை தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் அதற்குரிய இடத்தை வரலாற்றுப் போக்கில் உருவாக்கிக் கொண்டுள்ளது. அதே சமயம் ஒரே குழு பெரும்பாலும் இன்னொன்றை அறியாமல் தங்கள் வட்டத்திற்குள் சுருண்டு சுருங்கி வாழ்ந்து கொண்டுமிருக்கிறது. வியப்பான ஒரு விஷயம் இது. நூற்றாண்டுகளாக ஒரு ஊரில் சேர்ந்து வாழும் சாதிகளில் ஒரு சாதிக்கு இன்னொரு சாதியின் வாழ்க்கையின் உள்ள்ளூர உறையும் நுட்பங்கள் எவையுமே தெரிந்திருக்காது. அவர்களுக்கிடையேயான பொதுவான தளத்தில் ஒரு சாதி எப்படித் தன்னை முன்வைக்கிறதோ அதுவே பிற சாதிக்குத் தெரிந்திருக்கும். ஒரு சாதியினரிடம் அவரது சக ஜாதியினரின் உணவுப்பழக்கம், சாவுச்சடங்குகள், திருமணச்சடங்குகள் என்ன என்று கேட்டால் பெரும்பாலும் சரியானபதிலை அவர்களால் கூறமுடியாது.


நூற்றாண்டுகளாக வேரோடிப்போன இந்த சமூக அமைப்பில் நவீன வாழ்வு மிகப்பெரிய சவால்களை உருவாக்கியது. நவீனத்துவம் கொண்டு வந்த ஒவ்வொன்றம் அனைவருக்குமான பொது வெளியை உருவாக்க முயன்றது. சாலைகள், பள்ளிக்கூடங்கள், கேளிக்கைக்கூடங்கள், உணவுவிடுதிகள், அரசியல் கூட்டங்கள். இந்தப் பொதுக்களம் விரிவடைய விரிவடைய ஒவ்வொரு சாதியும் இன்னொன்றைப் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒவ்வொன்றும் அந்தப் புரிதலுக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் அதைத் தொடர்ந்து வந்தது. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பித்த இந்த பரிணாம மாற்றம் இன்றும் நடந்து கொண்டே இருக்கிறது. இதற்காகவே இங்கே இயல்புவாதம் இன்று பயன்படுகிறது. இதனால் இன்றும் அது இத்தனை பெரும் முக்கியத்துவத்துடன் உள்ளது.


தன்னுடைய உடம்பில் முதுகைப்பார்ப்பதற்கு ஒருவன் கண்ணாடியைப் பயன்படுத்துவதைப் போலத்தான் இந்திய சமூகம் இயல்புவாதத்தைப் பயன்படுத்துகிறது என்று கூறலாம். இன்னமும் இதன் கண்களில் பார்க்கப்படாத பல பகுதிகள் இதன் உடலில் உள்ளன. ஆகவேதான் கேரள இலக்கியத்தில் அல்லது வங்க இலக்கியத்தில் உள்ளதை விடவும் தமிழிலக்கியத்திலும் கன்னட இலக்கியத்திலும் இயல்புவாதம் இன்றும் பெரிய முக்கியத்துவத்துடன் உள்ளது. காரணம் கேரளமும் வங்கமும் சிறிய சமூகங்கள். மொழியாலும் சாதிகளாலும் பெரிய உள்வேறுபாடுகள் இல்லாதவை. இதற்குக் காரணம் அவை பெரும்பாலும் வெளியே இருந்து வந்து குடியேற்றங்கள் நிகழாத வனபூமிகளாக அல்லது சதுப்புகளாக சமீபகாலம் வரை இருந்தன. தமிழகமும் கர்நாடகமும் அப்படி அல்ல. அவற்றில் பல நூற்றாண்டுகளாகப் படையெடுப்பும் குடியேற்றமும் மக்கள் பெயர்வும் நிகழ்ந்தபடியே இருந்தது. ஆகவே பல்வேறு மொழிகள் பேசும் பல்வேறு வகையான சாதி சமூகங்களின் தொகையாக அவை உருவாயின. அச்சமூகங்களுக்கு ஒன்றை ஒன்று தெரியாது. ஆகவே அவை ஒன்றை ஒன்று காட்டிக் கொள்வது என்பது இலக்கியத்தின் முக்கியமான பணிகளில் ஒன்றாக ஆகியது.


பிறகு நாவலின் முதல் வரியே பல வாசகர்களுக்கு ஆழமான அதிர்ச்சியை ஊட்டியது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்நாவல் தன் கைக்குக் கிடைத்தபோது அதைப் பிரித்துப் படித்ததுமே மின்னதிர்ச்சி போல அந்த வரி தன்னைத் தாக்கியது என்று சுந்தர ராமசாமி சொன்னார். 'ஏலேய் சக்கிலித் தாயாளி மாடுபாருடா படப்புல மேயிறத பாரு, கண்ணைவிஞ்சா போச்சு' என்ற வரி. அதற்கடுத்த வரி இன்னும் அதிர்ச்சி அளிப்பது. அது ஒரு வசையாக, கோபத்துடனும் வெறுப்புடனும் முன்வைக்கப்படவில்லை. மிக இயல்பாக ஒரு விளிப்பாக மட்டுமே கூறப்படுகிறது. அந்த வரியில் இப்போது மேலும் முன்னகர்பவர் இன்றும் அதிகமான அதிர்ச்சியை அல்லது ஆயாசத்தை அடையக்கூடும். அவ்வாறு விளிக்கப்பட்டவர் அதை மிக இயல்பாக, சொல்லப்போனால் நட்பாகக்கூட, எடுத்துக் கொள்கிறார். அவமதிக்கப்படுதல் என்பதே அன்றாட வாழ்வாக ஆகிப்போன ஒரு சமூகச் சூழலை நோக்கிச் சரேலென்று திறந்து கொள்கிறது பூமணியின் பிறகு.


பூமணியின் நிலம் கி.ராஜநாராயணனின் நிலமேதான். அதுவும் சுவைகளால்தான் அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால் இன்னும் குறைவாகச்சொல்லப்பட்ட சுவைகளால் ஆனது அது. பூமணி அவரது நிலத்தை இரண்டு நுட்பமான தளங்கள் வழியாக நமக்கு அனுபவமாக ஆக்குகிறார். ஒன்று, மொழி. அறிவார்ந்த அம்சமே இல்லாமல் அந்த நிலத்து மக்களின் மொழியாகவே அது வெளிப்படவேண்டும் என்பதில் அவர் ஆரம்பம் முதலே கவனம் கொண்டிருந்தார். பூமணியின் நிலத்தை நமக்கு அனுபவமாக ஆக்குவது வாயிலிருந்து நேராக வருவது போன்ற அந்த மொழி. ஆசிரியரின் வர்ணனையாக வரும்போது 'கிழக்காமல் பார்த்தால் அடித்துப் போட்ட பாம்பாய் சக்கிலியத்தெரு கோணிக் கிடந்தது. பெரும்பாலும் ஒற்றை முகடு போட்ட வீடுகள் கட்டையாக இருபது தேறும். வீட்டுக் கொட்டாரங்களில் குளம்புத் தடம்பட்டு, உளம்பட்டு உளம்பலாடிய எருமைச் சாணி நசநசப்பு' [பிறகு] என இயல்பான பேச்சுமொழியாகவே அது ஒலிக்கிறது.


பூமணியின் உலகில் உரையாடலுக்கும் ஆசிரியர் கூற்றுக்கும் இடையே வேறுபாடே இல்லையென்பதைக் கவனிக்கலாம். 'விடியக்காலையில் சக்கிலியக்குடியிலும் மம்பட்டி தட்டும் சத்தங்கள் கேட்டன. சம்சாரிகளிடத்தில் பகடைகள் தண்ணீர் பங்கு சேர்த்தார்கள், ஆணும் பெண்ணும் நிலங்களில் கிடந்ததைப் பார்க்க நேரும் போது அழகிரி வேம்படியில் முனங்கிக் கொள்வான்! '`என்னத்த கெட்டி அள்ளப் போறாங்களோ' [பிறகு] ஆசிரியரின் மொழியே சற்றே ஒலிவேறுபாடுடன் கதைமாந்தரின் மொழியாகவும் ஆகிறது. கரிசலுக்கே உரிய பேச்சுவழக்குகளைக் கதாபாத்திரங்கள் பேசிக்கொள்கிறார்கள் 'ஒறக்கச் சடவுல புளியங்கொப்புன்னு நெனைச்சு முருங்கக் கொம்பப் புடிச்சிட்டேன்.' 'மேயிற கழுதையைக் கெடுக்குமாம் மெனக்கிட்ட கழுத' 'வண்ணாக்குடிநாயி வெள்ளாவிமேலே கெம்பிரியம் பண்ணுது' ஆனால் ஆசிரியரின் சித்தரிப்புமொழியிலும் அவை இயல்பாகவே வந்துகொண்டிருக்கின்றன என்பதுதான் பூமணியின் தனித்தன்மை. 'முத்துமாரி சொடித்துப்போய் அமர்ந்திருந்தாள்' போல சாதாரணமாகவே ஆசிரியரும் சொலவடைகளையும் சொல்லாட்சிகளையும் கையாள்கிறார்.


கரிசலின் ருசி பூமணியின் படைப்புகளிலும்தான் ஊறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் இது வேறு ருசி. செத்தமாட்டைக் கால்கள்கட்டி மூங்கில் நுழைத்துத் தூக்கிக் கொண்டு வந்து வகுந்து தோலை எடுத்துப்பரப்பி அதில் கறியை வெட்டி வெட்டி வைத்து மொத்தக்குடிசனமும் பகிர்ந்து உண்கிற கொண்டாட்டமும் கரிசலின் வாழ்க்கைதானே.


'காத்துட்டுக்குக் கறியெடுத்து

காலநீட்டித் திங்கயிலே

துண்டு வுழுகலன்னு

துக்கிப் போட்டு ஒதச்சானே'


என்ற கருப்பனின் கொண்டாட்டமான பாடலில் ஒலிப்பதும் கரிசலின் குரல் அல்லவா? அதுதான் பூமணி அவருக்கென உருவாக்கிக்கொண்ட உலகம். மிக எளிய உணர்வுகளால், சுவைகளாலானதாகப் பூமணியின் புனைவுலகம் விரிந்துகொண்டே இருக்கிறது. கம்பங்கூழ்மீது படரும் ஆடை, கலத்தில் இருந்து கையால் அள்ளி வைக்கும் புளித்த கஞ்சியின் வாடை, பலவகையான சிறு பறவைகள், அணில்கள் கறிச்சுவைகள். 'சக்கணன் கோவைக் கொடியிலிருந்து இலைகளை ஆய்ந்து கொண்டிருந்தான்.கல்லை வாங்கி அவக்கென்று இழுத்தரைத்து இலை நசுக்கலை விரலால் வழித்தான் கருப்பன்… அதைப் புழிஞ்சு உப்புல ஒரு செரங்க குடிச்சா தாவல' என வரும் மருத்துவச்சுவைகள்.


இதற்கும் அப்பால் துல்லியமான காட்சிச் சித்தரிப்பால் கரிசல், காட்சிவெளியாக வந்தபடியே இருக்கிறது. 'பொழுதடைய இன்னும் கொஞ்சநேரந்தான் இருந்தது. எலுமிச்சம்பழத்தை மெல்லமெல்ல விழுங்கியமாதிரி மலைமுகடுகளுக்கிடையில் பொழுது நழுவிக்கொண்டிருந்தது' எனக் கரிசலில் அந்தி பொன்னிறம் கொள்வதைக்கூட சர்வசாதாரணமான அழகியலுடன் சொல்லிச்செல்கிறது பூமணியின் பார்வை.'தண்ணீர் வாய்க்கால் வழியாகக் கிழக்காமல் அலுப்புத் தீர ஓடி தெற்கே அடர்ந்து வளர்ந்த மிளகாய்ச்செடித் தோட்டத்துக்குள் நுழைந்தது. பூவும் பிஞ்சுமாகப் பூரித்து நிற்கும் செடிகளூடே தண்ணீர் ஓடுவதைப்பார்த்தால் ஒரு கானகத்துக்குள் ஆறு ஓடுவது போல பிரமை' எனக் குழந்தைத்தனமான விவரணை சட்டென்று 'காய்ந்து சிறுவிருவோடிய நிலத்தில் நீர் நனைக்கவும் ஆவிவிட்டு நீர்த்து பொருமிப்பூரிக்கும் கண்ணிலிருந்து குளுமையான மணம் கிளம்பியது' என நுண்ணிய அனுபவப்பதிவாகவும் ஆகிறது.


'இயற்கை' என்ற புகழ்பெற்ற பேருரையில் எமர்சன் நிலமே மொழியாகிறது என்று சொல்லியிருக்கிறார். பூமணியின் கரிசலே அவரது மொழியாக இலக்கியமாக ஆகியிருக்கிறது. அவரது படைப்புலகின் எல்லாச் சுவைகளும் அந்நிலத்தின் சுவைகளே.

தொடர்புடைய பதிவுகள்

கரிசலின் ருசி – பூமணியின் படைப்புலகுக்கு ஒரு நுழைவாயில்
பூமணி சந்திப்பு – செந்தில்குமார் தேவன்
விஷ்ணுபுரம் விருதுவிழா குறித்து…
யார் தரும் பணம்?
விஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்
பூமணியின் புது நாவல்
ஆர்.கே.நாராயணன், மீண்டும்
பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது
சு.வேணுகோபால், ஒரு கடிதம்
இலக்கியத்தில் இன்று …

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 09, 2011 10:30

December 8, 2011

ரவிசங்கர்,ஜக்கி-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,


என்னளவில் என் அனுபவத்தைப் பதிவு செய்ய விழைகிறேன்… முதலில் தத்துவத்தையும் நம் ஆன்மீகத்தையும் ஓரளவு பயின்ற பிறகு யோகா செய்பவர்களுக்கு அதிகக் குழப்பங்கள் வருவதில்லை என்று நினைக்கிறேன்… அந்த வகையில் ஓஷோவிற்கு நான் கடன்பட்டவன். பல வருடங்களாக ஈஷா யோகாவை செய்து வருகிறேன்.. ஈஷாவின் பல நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறேன்… லொளகீக ரீதியாக யோகா நான் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே வேலை செய்கிறது (நான் அதை ஒழுங்காகப் பயிலும் பட்சத்தில்).


இதற்கு முன் வேதாத்ரி மகரிஷியின் யோகாவைப் பயின்றேன்.. ஆனால் அவரது தத்துவங்களுடன் என்னால் உடன்பட முடியவில்லை… ஆகவே அவரது யோகாவும் அதிகப் பலன்களை எனக்குத் தரவில்லை…


யோகாவையும் குருவையும் பிரித்துப்பார்க்க முடியாது என்பது மிகவும் உண்மை.


மற்றபடி, ஜக்கியிடமோ, தியான லிங்கத்திலோ, பிற நிகழ்ச்சிகளிலோ நான் எந்தவித அதிர்வுகளையோ அனுபவத்தையோ உணர்ந்ததில்லை… ஆனால் ஜக்கியை வசிஷ்டவிசுவாமித்ரபரமஹம்சர்களுடன் ஒப்பிடுவதில்லை. அவர் புத்தஞானத்தை அடைந்தவரா இல்லையா என்பது என் அறிவுக்கு அப்பாற்பட்ட விஷ்யம்.


ஆனால், குறுக்கு வழியில் செல்லாமல், மந்திரவித்தைகளைக் காட்டாமல், போலி நம்பிக்கைகளை விதைக்காமல், யோகாவின் மூலம் அவர் பணமே சம்பாதித்தாலும் அதில் என்ன தவறு இருக்க முடியும்…


நன்றி

ரத்தன்


அன்புள்ள ஜெ


வழக்கம்போல கார்ப்பரேட் குருக்களைப்பற்றிய உங்கள் பதிவு துல்லியமானதாக இருந்தது. இந்தவினாக்களுக்கு ஒன்று இந்தப்பக்கம் அல்லது அந்தப்பக்கம் என்றுதான் பதில்கள் சொல்லப்பட்டு வருகின்றன. துல்லியமாக எது ஏன் என்று சொல்லியிருக்கும் இந்தப் பதிவு முக்கியமானது


ஆனால் அந்தக் கடிதத்தில் ரவிசங்கர், ஜக்கி, நித்யானந்தா என்று ஒரு ஒப்புமை சொல்லப்பட்டிருந்தது. இது அறியாமை. அப்படிப்பார்த்தால் ஏன் பிரேமானந்தாவை சேர்க்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஜக்கி, ரவிசங்கர் இருவரும் தங்களைக் கடவுள் என்றோ கடவுள் அவதாரம் என்றோ பரமஹம்சர்கள் என்றோ சொல்லிக்கொள்ளவில்லை. அற்புதங்கள் செய்கிறோம் என்று கிளெய்ம் பண்னவில்லை. அவர்கள் யோக-தியான குருநாதர்களாக மட்டுமே தங்களை முன்வைக்கிறார்கள். அவர்களின் நிகழ்ச்சிகளில் பொய்யான வாக்குறுதி எதையும் வழங்குவதில்லை. உண்மையில் குறைத்துதான் சொல்கிறார்கள். நோய்களை இது தீர்க்கும் என்றுகூட சொல்வதில்லை. நோய்களைத் தீர்ப்பது நீங்கள் செய்யும் யோகம்தானே ஒழிய குருவோ அமைப்போ அல்ல என்றுதான் சொல்கிறார்கள். நிறைய எச்சரிக்கைகள்தான் கொடுக்கிறார்கள். இது கடினமான மார்க்கம் என்றுதான் சொல்கிறார்கள். அவர்கள் எதைச் சொல்கிறார்களோ அதைத்தான் செய்கிறார்கள்


அப்படியென்றால் இவர்கள்மீது ஏன் இத்தனை கொலைவெறி? முடவர்கள் நடக்கிறார்கள் குருடர்கள் பார்க்கிறார்கள் என்று விளம்பரம்செய்து ஆள்திரட்டும் பாதிரியார்களுக்கு இங்கே உள்ள நாத்திக அமைப்புகளே மைதானங்களைக் கொடுக்கிறார்கள். அவர்களை கௌரவிக்கிறார்கள். இவர்கள் என்ன தப்பு செய்கிறார்கள் என்கிறார்கள்? ஒரே குற்றச்சாட்டு கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பது. அது ஒருசேவை. ஆகவே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டாய வசூல் இல்லையே. அந்தப் பணம் கூட இங்கே ஆன்மீகசேவைக்கும் ஏழைஎளியமக்களுக்கான சேவைக்கும்தானே செலவிடப்படுகிறது? சுனாமி வந்தபோது எந்தக் கிறித்தவ அமைப்பும் அல்லது அரசாங்கமும் அங்கே வரவில்லை. முதலில் வந்தது ரவிசங்கரும் ஜக்கியும் அமிர்தானந்தமயியும் தானே? அவர்கள் செலவிட்ட பணமெல்லாம் அவர்கள் இப்படிக் கட்டணம் வசூலித்து உண்டுபண்ணிய பணம்தானே? அதாவது கொடுக்கமுடிந்தவர்களின் பணம் இப்படி ஏழைகளுக்குச் செல்கிறது. இதுதானே நியாயமானது


வெறும் வெறுப்புப்பிரச்சாரம் நடக்கிறது. ஜக்கியும் ரவிசங்கரும் நாத்திகர்களின் அரைவேக்காட்டுப் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை அறிவுபூர்வமாக முறியடிக்கிறார்கள். ஆகவேதான் இந்தப் பிரச்சாரம்


ரவி கண்ணன்


சென்னை

தொடர்புடைய பதிவுகள்

கார்ப்பரேட் சாமியார்கள் தேவையானவர்களா?
தத்துவம், தியானம்-கடிதம்
நம் அறிவியல்- கடிதம்
ஜக்கி-கடிதங்கள்
ஜக்கி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 08, 2011 10:30

காளிகாம்பாள்

ஜெ..


சென்னை காளிகாம்பாள் கோவிலுக்குப் போயிருக்கிறீர்களா??


ஒரு காலத்தில் கடற்கரைக் காவல் தெய்வமாக இருந்திருக்கலாம்.. இன்று வணிக வளாகங்களால் சூழப்பட்டு விட்டாலும், அங்கு செல்வது மனதுக்கு இதம் தருவதாக இருக்கிறது.


பாரதி, "யாதுமாகி நின்றாய்" பாடியது இக்கோவிலில் தான் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.. சிவாஜி இங்கு வந்து வழிபட்டுச் சென்றதாகக் கோவில் குறிப்பு உள்ளது. எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை..


காலை வணக்கம்..


அன்புடன்


பாலா

[image error]


அன்புள்ள பாலா


காளிகாம்பாள் கோயிலைப்பற்றி இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் நான் சென்னையில் சிலகாலம் பணியாற்றிய அச்சகத்தின் கம்பாசிட்டர் மிகுந்த பிரியத்துடன் சொல்வார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட அவர் சென்னையின் பூர்வகுடிகளில் ஒருவர். தமிழறிஞரும்கூட. விஸ்வகர்மா சமூகத்தினர் நாயக்கர் காலகட்டத்தில் பார்த்தசாரதிப்பெருமாள் கோயில் திருப்பணிகளுக்காக இப்பகுதியில் குடியேறியபோது திருவண்ணாமலையில் இருந்து கல் எடுத்துவந்து கட்டிய ஆலயம் அது என்பார். அதன் மூலவர் அண்ணாமலையார். ஆனால் அம்பாள் காளிகாம்பாள் என்று புகழ்பெற்றார்


தெலுங்கில் இந்த ஆலயம் சென்றாய ஆலயம் என்றும் அம்மன் சென்னம்மன் என்றும் சொல்லப்படுவதாகவும் அப்பகுதி [புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் உயர்நீதிமன்றம் இருக்குமிடம்] சென்றாயபட்ணம் என அழைக்கப்பட்டதாகவும், சென்னை என்ற பெயர் அந்தச் சொற்களில் இருந்து வந்தது என்றும் அந்தப் பெரியவர் சொல்வார்.


அந்த ஆலயத்திற்கு மராட்டிய சத்ரபதி சிவாஜி வந்து வழிபட்டுச் சென்றதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையாக இருக்கவே வாய்ப்பதிகம். சிவாஜி 1674ல் அவரது தென்னகப்படையெடுப்பின்போது செஞ்சியையும் வேலூரையும் ஆர்க்காட்டையும் கைப்பற்றிக் கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் இங்கே முகாமிட்டிருக்கிறார். தாயார் வழிபாட்டில் பெரும் ஈடுபாடுள்ள சிவாஜி அங்கே வந்திருக்கலாம். சென்னையின் இன்றும் பெரும் எண்ணிக்கையில் இருக்கும் தெலுங்குமக்களுக்கு காளிகாம்பாள் முக்கியமான தெய்வம். விஸ்வகர்மா சமூகத்தின் பொறுப்பிலேயே இக்கோயில் இருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் இக்கோயில் இடிக்கப்பட்டு இடமாற்றம்செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது


பாரதியார் சென்னையில் வாழ்ந்த நாட்களில் காளிகாம்பாள் கோயிலுக்கு அடிக்கடி வருவதுண்டு என்று சொல்லப்படுகிறது 'யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய். தீது நன்மையெல்லாம் – நின்றன் செயல்களின்றி இல்லை' என ஆரம்பிக்கும் பாடல் காளிகாம்பாளை நோக்கி எழுதப்பட்டது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்


ஆனால் இன்றுவரை நான் காளிகாம்பாள் கோயிலுக்குச் செல்ல நேரவில்லை. மறுமுறை வரும்போது செல்லவேண்டும் என நினைத்துக்கொண்டேன்


ஜெ




சென்னைக்கு எப்படி பெயர் வந்தது- முத்துகிருஷ்ணன்




காளிகாம்பாள் கோயில் தலம்


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 08, 2011 10:30

December 7, 2011

பூமணி சந்திப்பு – செந்தில்குமார் தேவன்

கடந்தவாரம் அரங்கசாமி அழைத்து கோவில்பட்டியில் யாராவது இருக்கிறார்களா? அவசரமாக பூமணி அவர்களின் புகைப்படம் தேவைப்படுகிறது எனக் கேட்டிருந்தார்.


வாரக்கடைசியில் நான் விருதுநகர் செல்வதாக இருந்ததால் ஞாயிறு காலை 10 மணி அளவில் கோவில்பட்டி- பாரதி நகரிலுள்ள பூமணி அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.


பூமணி அவர்களின் மனைவி தொலைபேசியில் சொன்ன குறிப்புகளின் படி வீட்டைக் கண்டுபிடிப்பது எளிதாகவே இருந்தது.  அவரும், அவர் மனைவியும் 1 வயதிருக்கும் பேரனும் இருந்தார்கள். பூமணி புன்னைகையுடன் வரவேற்றார். ஜெ சொல்லியிருந்தது போல பூமணி முதுமையின் தளர்ச்சியுடன் உடல்  மெலிந்தவராக மெல்லிய கை நடுக்கத்துடனும் இருந்தார்.


 


எழுத்தாளர் பூமணி

எழுத்தாளர் பூமணி


'இளைஞராக இருப்பீர்கள் என எதிர்பார்த்தேன், ரொம்ப சின்னப்பையனா இருக்கீங்களே'என்றார். 'சென்னையில் என்ன பண்றீங்க, சொந்த ஊர் எது? உங்களுக்கு எப்படி என்னைத் தெரியும், எப்ப இருந்து இலக்கியப் பக்கம்' என்றார்.உண்மையில் இந்த விருது விழா அறிவிப்பு வரும் முன் அவர் பற்றி எனக்கு அவர் பெயர் தவிர்த்து எதுவும் தெரியாது. அவரை சந்திக்கச் செல்லத் திட்டமிட்டவுடன் அழியாச்சுடர்கள் தளத்தில் வெளியாகியுள்ள அவரது சிறுகதைகளை வாசித்துவிட்டுச் சென்றேன். சுய விவரங்களும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் பற்றியும் அதில் நான் கத்துக் குட்டி என்பதையும் சொன்னேன். அரங்கசாமி போனில் அழைத்ததாகக் கூறி அவர் பற்றி மேலும் கேட்டறிந்து கொண்டார்.


அவர் கூட்டுறவுத்துறையில் இணைப்பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றதாகச் சொன்னார். சொந்த ஊர் கோவில்பட்டி அருகே கிராமம். சென்னையில் 30 வருடம் பணியாற்றி ஓய்வு பெற்றபின் கோவில்பட்டி வந்துவிட்டதாகச் சொன்னார். என் அம்மா அதே துறையில் தற்போது அதே பணியில் இருப்பதைத் தெரிவித்தேன். மகிழ்ந்து விவரங்கள் கேட்டுக்கொண்டார்.


அவரது 'அஞ்ஞாடி' நாவல் பற்றி கேட்டேன். உற்சாகமாகப் பேசத்தொடங்கினார். கதைக்களன் குறித்தும் நாவல் தொட்டுச் செல்லும் இடங்கள் குறித்தும் சில சில குறிப்புகள் சொன்னார். இரண்டு மூன்று நூற்றாண்டுகளில் கதை சுழலுகிறது. இந்திராகாந்தியின் காலத்தில் கதை முடிவடைகிறது, ஆயிரத்து ஐநூறு பக்கங்களில் க்ரியா  புத்தகக் கண்காட்சியில் வெளியிடுகிறது, விலை தான் 900 ரூபாய் யாரும் வாங்குவாங்களா? என்றார். விலையெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை சார், உள்ளருக்க விசயம் தான் முக்கியம், என்ன விலைனாலும் வாங்க வாசகர்கள் இருக்காங்க என்றேன்.


'நல்ல வாசிப்புப் புலம் உள்ளவர்கள்னு நான் நம்புபவர்களுக்கு நாவலை அனுப்பிருந்தேன். நாவலைப் படிச்சவங்க எல்லாரும் தமிழில் முக்கியமான நாவல்னு சொல்றாங்க' என புன்னகையுடன் சொன்னார்.


'இவ்வள்ளவு பெரிய நாவல்னா நிறைய ரிசர்ச் பண்ணவேண்டியது இருந்திருக்குமே'என்றேன். 'ஆமா டெல்லி,கல்கட்டா, சென்னைனு நிறைய லைப்ரரி, ஆவணங்கள்னு தேடியிருக்கேன்.

திருஞானசம்பந்தர் நூற்றுக்கணக்கான சமணர்கள் கழுவேறக் காரணமாக இருந்தார்' எனப் பெரியபுராணத்தில் இருந்து குறிப்பெடுத்து நாவலில் பயன்படுத்தியிருக்கிறேன். யார் யார் அதுக்கு என்ன சொல்லித் திட்டப் போகிறார்களோ' என சொல்லிச் சிரித்தார்.


'எப்படி சார் அரசு அதிகாரியாக இருந்து கொண்டே எழுத நேரம் கிடைத்தது? உங்களது எல்லா நாவல்களுக்குமே இதே அளவு ரிசர்ச் செய்திருக்கீர்களா'என்றேன். 'இல்லை இல்லை அப்போதெல்லாம் நேரம் கிடையாது. சொல்லப்போனால் அவற்றிற்காக எந்த ஆராய்ச்சியும் செய்ததில்லை.


மேலும் நான் அதிகம் எழுதுபனும் அல்ல. என் வாழ்நாளில் இதுவரை மொத்தம் 51 சிறுகதைகள் மட்டுமே எழுதியுள்ளேன் என்றார்.  அது சரிதான். அரசு வேலையில் இருக்கும் போது நம் நேரமெல்லாம் அதிலேயே போய்விடும் ஆனால் குடும்பம் நடத்த வருமானம் வேண்டுமே. என்ன செய்ய? கோவில்பட்டி வந்த பின் வாசிக்க நிறைய நேரம் கிடைக்கிறது. மூர்க்கமாக இன்னும் இன்னும் என எழுத மனம் தவிக்கிறது. ஆனால் உடல் தான் ஒத்துழைக்க மறுக்கிறது. சொல்லப்போனால் தினம் தினம் உடலுக்கும் மனதிற்கும் தான் போராட்டமாகத்தான் கழிகிறது.'


'கோவில்பட்டியிலிருந்து சம காலத்திலேயே இவ்வளவு எழுத்தாளர்கள் இருக்கிறீர்களே சார்? என்ன காரணம்?'  'கிரா தான். வேறென்ன' (உற்சாகமாக சொல்கிறார்).. 'நாங்கள்ளாம் பள்ளி கல்லூரிகளில் இருக்கும் போது அவர் தான் எங்களுக்கு ஆதர்சம். பெரியவர் மிக அற்புதமான எழுத்தாளர். எங்கள் ஊரை எழுத்தில் வடித்தவர். அவரைத்தொடர்ந்தே நாங்கள் வந்தோம்.  எல்லாம் இங்கிருந்து தொடங்கியவர்கள் தான். பின்னர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.'


'எந்தக்கல்லூரியில் சார் படித்தீர்கள்'என்றேன். 'விருதுநகர் கல்லூரியில் தான், கல்லூரியில் படிக்கும் போது யாப்பில் செய்யுள் எழுதுவது மிகவும் பிடித்தமான விசயம். எழுதித் தள்ளியிருக்கிறேன். இப்பொழுது எல்லாம் மறந்து விட்டது. தளை தட்டுகிறது.'முக்கியமான தமிழாசிரியர்கள் என சில பெயர்களைக் குறிப்பிட்டார். நினைவில் இல்லை.


இருவாரம் முன்பு ஜெயமோகன் மற்றும் நண்பர்களுடன் கிராவை சந்தித்தோம் என சொன்னேன். மகிழ்ந்து கிராவின் உடல் நலம் கேட்டுக்கொண்டார். வேறு என்ன என்ன இலக்கிய நிகழ்வுகள் நடக்கிறது என்றார். விஷ்ணுபுரம் அமைப்பு நடத்தும் இலக்கிய அரங்குகள் குறித்து விவரித்தேன். சென்னையில் எஸ்ரா வழங்கிய உலக இலக்கிய அறிமுக சொற்பொழிவு குறித்தும் சொன்னேன். எல்லா இலக்கியக் கூட்டங்களுக்குமே தற்போது அரங்கம் நிறைந்து விடுகிறது என்றேன்.


உலக இலக்கியம் குறித்துப் பேசுவது நல்லதுதான் ஆனால் அதே வாசகர்களுக்கு, இங்குள்ளவர்கள் குறித்த அறிமுகம் தேவையில்லையா? ரஷ்யாவையும் ஜப்பானையும் தெரிந்து கொள்ளும் வாசகர்கள் இங்குள்ள கிராவையும் பூமணியையும் தெரிந்து வைத்துள்ளார்களா? உலக இலக்கிய அறிமுகத்திற்கு ஒரு வாரம் செலவழிக்கும் போது நமது எழுத்தாளர்களுக்கு இரண்டு நாள் ஒதுக்கக்கூடாதா?


இதுவே ஒருவகையில் புதிய வாசகர்களை உலக இலக்கியத்தை வியந்தோதவும் உள்ளூர் இலக்கியவாதிகளை  கவனம் பெறாமல் செய்யவும் வழிவகுக்கும் என்றார். முதலில் நம்மவர்களைப் பற்றிப் பேசிவிட்டுத்தானே வெளியூருக்குப் போக வேண்டும் என்றார். சரிதான் எனப் பட்டது. அரங்காவிடமும் ஜெமோவிடம் சொல்லி நாம் ஒரு நிகழ்வை நிகழ்த்த வேண்டும் என எண்ணிக்கொண்டேன்.


'சார் ஜெயமோகன் இலக்கிய முன்னோடிகள் வரிசையில் முன்னோடிகள் அனைவரைப் பற்றியும் எழுதியிருக்கிறார்'என்றேன். சிரித்தபடி, 'ஆம் கேள்விப்பட்டேன் வாசிக்க வேண்டும்'என்றார்.


'பயணங்களெல்லாம் அடிக்கடி செல்வீர்களா சார்?.' 'ட்ரெயின் டிக்கெட் கிடைத்தால் மட்டுமே பயணம், இல்லையேல் தவிர்த்துவிடுவேன் என்றார்.  கோவைக்கு எப்போ வரீங்க? டிக்கெட் வந்துசேர்ந்ததா' என்றேன்? 'அரங்கசாமி டிக்கெட் போட்டதாக சொன்னார். இன்னும் வந்து சேரவில்லை. விருது தினத்தன்று கோவை ஞானியைப் பார்க்க வேண்டும். நான் மதிக்கும், முக்கியமான ஆளுமை, பார்க்கவேண்டும்' என்றார்.


''உங்களுக்குத் தெரியுமான்னு தெரியல, எனக்கு விஷ்ணுபுரம் விருதுனு செய்தி வந்தவுடனேயே பாராட்டு சொன்னவங்களவிட அதை வாங்க வேண்டாம்னு சொன்னவங்க தான் அதிகம். ஜெயமோகன் உங்கள் பெயரை வைத்து ஆதாயம் தேடப்பார்க்கிறார் என்று சொன்னார்கள். இந்துத்துவா என்றார்கள்.''


"சிறிய எழுத்தாளர் பெரிய எழுத்தாளர்களுக்கு விருது கொடுத்து ஆதாயம் தேடப்பார்க்கிறார்" என்று போன வருடமே சொன்னார்கள் சார். "சிறிய எழுத்தாளர்கள் எல்லாராலும் விருது கொடுக்கமுடியும் என்றால்  எல்லாரும் கொடுக்கட்டுமே அப்படியாவது நம் இலக்கிய முன்னோடிகளுக்கு இன்னும் கவுரவம் கிடைக்கட்டுமே' என ஜெயமோகன் பதில் சொல்லியிருந்தார் சார் 'என்றேன்.


'சரிதான் சரிதான்.. 'என சத்தமாக சிரித்தார்.


தாங்கள் எதுவும் செய்யவில்லையென்றாலும் இங்கே எந்த முயற்சியையும் குறை சொல்வதற்குதான் சார் ஆள் இருக்கிறார்கள் என்றேன். அகாடமி விருதுகள் எல்லாம் அரசியலாகிப்போன நிலையில் விஷ்ணுபுரம் விருது என்ற ஐடியா எப்படி உருவானது என சுருக்கமாக சொன்னேன். கவிப்பேரரசர்கள் எல்லாம் நாவலுக்கான சாகித்திய அகாடமி வாங்குகிறார்கள் என ஒரு நிமிடம் உணர்ச்சி வசப் பட்டார்.


அவர் மனைவி காஃபி கொடுத்து விட்டுத் தம்பிக்கு நீங்கள் சொல்வதிலெல்லாம் ஆர்வமிருக்கிறதோ இல்லையோ அவர் வந்த வேலையைப் பார்க்க விட வேண்டியதுதானே என்றார். ஆர்வமில்லையா! அவருடன் பேசியதில் எனக்கு வந்த வேலையே மறந்து விட்டதும்மா, என்றபடி புகைப்படம் எடுப்பதற்காக அவரை வீட்டின் வெளியே அழைத்து வந்தேன்.


'இயல்பா இருக்கணும் தம்பி. போஸ் கொடுக்கறதெல்லாம் வேணாம். ரொம்ப நேரம் நிக்க வைக்காதிங்க'என்றார். ஆஹா ! அரங்கா திட்டுவாரே.. சரி.. சமாளித்துக்கொள்வோம் என அவரை சேரில் அமரவைத்து சில புகைப்படங்கள் மட்டும் எடுத்துக் கொண்டேன்.


அவர் மனைவி என் பின்னால் வந்து நின்றபடி அவரிடம், 'அவங்க இண்டர்னெட்லலாம் போடுவாங்க…  இப்படியா உர்ர்ர்னு நிக்கறது.. கொஞ்சம் சிரிச்சா என்னங்க'என்றார்? இவர் 'அதெப்படி கேமெராவைப் பார்த்தா தன்னால சிரிப்பு வருமா? அது செயற்கையா இருக்கும்'னார்.


'சார், சிரிச்சா இன்னும் இளமையா தெரியிரீங்க'ன்னேன். சிரிக்கத் தொடங்கிவிட்டார்.


'சார் நீங்க ஏன் இண்டர்னெட்டில் எழுதக் கூடாது நாங்கல்லாம் படிக்க வாய்ப்பு கிடைக்குமே'என்றேன்.

'எனக்குக் கையில பேனாவும் பேப்பரும் இருந்தாதான் எழுத வரும். கம்ப்யூட்டர பாத்து உட்காந்தா என்னமோ எதிரிய பாக்கிற மாதிரியே இருக்கு.. தமிழ்த் தட்டச்சும் தெரியாது. அது எனக்கு சரியா வரல..


இண்டெர்னெட்ல எழுதுறது ஒருவகையில விளம்பரம் பண்ணிக்கிற மாதிரியோனு தோணுது, நான் ஆரம்பத்திலிருந்தே சிறுபத்திரிக்கைகளில் மட்டுமே எழுதிப் பழகிட்டேன்.அதுபோகநான் நாவலை இண்டர்னெட்டில் போட்டுவிட்டால் பப்ளிசர் என்ன செய்வார்''என்று உண்மையான அக்கறையுடன் கேட்டார். 'சார் நெட்ல பெரும்பாலும் யாரும் முழு நாவல் வெளியிடுவதில்லை சார். கட்டுரைகள் சிறுகதைகள் கடிதங்கள் போன்றவை தான்'என்றேன். 'என் வாசகர் ஒருவர் எனது எழுத்துக்களை ப்ளாக் ஆரம்பித்து போட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டிருக்கிறார், பார்க்கலாம்'என்றார்.


'இப்பக் கூட ஆனந்த விகடனிலிருந்தும் குமுதத்திலிருந்தும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். "நட்சத்திர எழுத்தாளர்கள் கதை வரிசைக்காக" என சிறுகதைகள் கேட்டார்கள். ஆனால் நடிகை தொடை பக்கத்தில நமக்கு என்ன வேலைனு வேணாம்னுட்டேன். இத்தன வருசம் சிறுபத்திரிக்கைகளில் எழுதிட்டோம். இனிமேலும் அதிலேயே எழுதுவோம். அதான் இப்போ பேர்லல் (parallel)  மேகசின்ஸ்லாம் வந்திடுச்சுல்ல.தீவிரமான வாசகர்கள் எங்கிருந்தாலும் இப்பவும் தேடி வரத்தான் செய்ராங்க, நமக்கு அது போதும்'என்றார்.


அவர் மனைவி தம்பி சும்மாவாவது இவர் படத்தை இணையத்திலே அவர் பெயரோட போட்டு வைய்யுங்க. இவர் வாசகர்களுக்குக்கூட அவர் முகம் தெரியாது என்றார்.


போட்டோ எடுத்துமுடித்தவுடன், 'விஷ்ணுபுரம் படிச்சீங்களா சார்' என்றேன். 'நான் ஜெயமோகனது நூல்கள் அதிகம் படித்ததில்லை. ஆரம்பத்தில் அவரது ரப்பர் படித்தேன். அது பெரிய அளவில் கவரவில்லை, அப்புறம் சில வருடம் கழித்துக் காடு தொடங்கினேன். பாதியில் நிறுத்திவிட்டேன். எனது நாவல் வேலையில் இருந்தேன். பின்னர் தொடராமல் விட்டுப்போய்விட்டது'என்றார்.


விஷ்ணுபுரம் பற்றிய ஒரு அறிமுகம் கொடுத்து அதன் சாரத்தைத் தொகுத்து சொல்ல ஆரம்பித்தேன். 'விஷ்ணுபுரம்னு தலைப்பை மட்டும் பார்த்து இந்த்துவா நாவல்னு சொல்றவங்களும் இருக்காங்க சார், ஆனா நாவல் அது விஷ்ணுவே இல்லைனு சொல்லுது'என்றேன்.


'அப்படியா.. தெரியாமப் போச்சே,  நான் எனது அடுத்த நாவலில் ஆண்டாள் பற்றி எழுதப் போகிறேன். நீங்க சொல்றதப்பாத்தா விஷ்ணுபுரம் தான் முதல்ல படிக்கணும் போலயே' என்றார்.


'விருதை வாங்கவேணாம்னு இவ்வளவு பேர் சொல்லும் போது எனக்குக் கொஞ்சம் தயக்கமிருந்தது, முக்கியமான நண்பர்களிடம் கேட்டேன். இறுதியில் கோவை ஞானியிடம் பேசினேன்.அவர் "நான் செய்ய வேண்டிய வேலை. என்னால முடியல.. அவன் செய்றான். ஆயிரம்மடங்கு சந்தோசத்தோட, யோசிக்காம ஏத்துக்கோ என்றார்" அப்பறம் யோசிக்கவே இல்லை (ஞானியும் அஞ்ஞாடியைப்படித்துப் பாராட்டியவர்களில் ஒருவர் )என்றார்.


பேச்சு இயல்பாக ஜெயமோகன் பற்றி வந்தது. 'விருது குறித்து ஜெயமோகன் போனில் அழைத்து விவரம் சொல்லி விருதை ஏற்கிறீர்களா என்றார். நான் அவரிடம் நேரில் பேசியது இல்லை. அதனால் நேர்ல வாங்க பேசுவோம்னு அழைத்தேன்' என்றார். என் வீட்டருகே கட்டிட வேலை நடைபெறுவதால் ரொம்ப சத்தம். வீட்டில் அமர்ந்து பேசுவதற்குத் தொந்திரவாக இருக்கும். எனவே  வந்திருந்த இரண்டு நாட்களும் ஜெயமோகன் ஹோட்டலில் தங்கியிருந்தார். அவருடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த வயதிலேயே(?) மிகப்பரந்த வாசிப்புப்புலம் வைத்திருக்கிறார் எனத் தெரிந்தது என்றார். நல்ல விமரிசனப் பார்வையும் இருக்கிறது.


குமரகுருபரரின் பிள்ளைத்தமிழ் பேரனைக் கொஞ்சும் தாத்தாவாக, ஒரு துறவி, மடாதிபதி  சிறப்பாக எழுதியுள்ளதாக ஜெயமோகன் சொன்னார், நான் பெரியாழ்வாரின் பிள்ளைத்தமிழில் அவர் ஒரு குழந்தையாகவே மாறி எழுதியிருக்கிறார் அதுவே சிறந்தது என்றேன் என்றார்.


'எனக்கு பக்தி கிடையாது சார், நான் நாத்திகன், ஆனால் பெரிய முத்திரை விழுந்துவிட்டது'என ஜெயமோகன் சொன்னார் என்றார். 'நீங்க என்ன சார் நினைக்கிறீங்க'என்றேன்.  இரண்டு நாள் அவருடன் பேசியதில் இலக்கியத்தில் மட்டுமல்ல மற்றும் பல கருத்துக்களிலும் எனக்கு அவருடன் உடன்பாடு இருந்தாகப் பட்டது என்றார். 'விஷ்ணுபுரம்னு தலைப்பு வைக்க எவருக்கும் உரிமை உண்டு'என்றார். 'ஆனால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார்'என்றார். 'சார் அவர் சர்ச்சைகளில் சிக்குவதில்லை அவர் தன் கருத்தை வெளிப்படையாக வைக்கிறார், அதை சர்ச்சையாக ஆக்குகிறார்கள்' என்றேன். உதாரண்மாக பாரதி விவாதத்தை சொன்னேன்.


'அப்ப யார மகாகவினு சொல்றார்?'ன்னார். மகாகவி என்பதை ஒரு பட்டமாக வழங்குவதில் தனக்குப் பிரச்சனையில்லை ஆனால் அது ஒரு அளவுகோல் எனில் கம்பனே தமிழில் அதன் உச்சம். பாரதியின் தரவரிசைப்படி கம்பனுக்கே அவரும் முதலிடம் கொடுத்ததையும் சுட்டிக்காட்டுகிறார் என்றேன்.


உற்று கவனித்தவரிடமிருந்து சில நொடிகள் பதிலில்லையென்றவுடன், ஐயயோ தேவையில்லாத டாப்பிக்க ஆரம்பிச்சுட்டமோ என உள்ளுக்குள் பதறினேன்.


'சரிதான். கம்பன் பக்கத்தில வர இங்க யாரும் இல்ல. மானுட வாழ்க்கைய அவனவிட சொன்னவன் தமிழ்ல யாரும் இல்ல.. 'பாரதியென்ன அப்படிப் பெரிய விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட கவிஞனா? பாரதியை மட்டும் படித்த எவரும் அவனைப் புகழத்தான் செய்வார்கள். நமது இலக்கிய மரபு மிகப்பெரியது. அவை அனைத்தையும் படித்தவர்களால் மட்டுமே உண்மையில் அவன் இடம் என்ன என உணர முடியும்'என்றார்.


'இல்ல சார் இவர் அதப் பத்தி சொல்லல,  நவீன தமிழ் உரைநடையில் பாரதியே முன்னோடி. ஆனால் பாரதியின் காலத்தில் அவரது சமகால இந்திய படைப்பாளிகளின் மத்தியில் அவரது இடமென்ன, மொத்த தமிழ் இலக்கிய மரபில் பாரதியின் இடம் என்ன என விரிவாக விவாதித்திருக்கிறார்'என்றேன். முக்கியமானதாக இருக்கும் போலயே எனக்கு அந்தக் கட்டுரையைப் படிக்க வேண்டுமே, கிடைக்குமா என்றார். அனுப்பிவைப்பதாகச் சொன்னேன்.


அப்படியே பின் தொடரும் நிழலின் குரல் பற்றியும் சொல்லி ஏன் இடது சாரிகள் இவரைத்திட்டுகிறார்கள் எனவும் சொன்னேன். 'சரிதான் சரிதான் இதெல்லாம் அடித்துப்பேச ஒரு ஆள் வேணும் தான்.

எனது அடுத்த நாவல் வேலை ஆரம்பிக்கும் முன் ஜெயமோகன் படைப்புகள் அனைத்தையும் படித்து முடித்துவிட வேண்டும் என இருக்கிறேன். (நேற்று தொலைபேசியில் பேசும் போது மீண்டும் அதையே சொன்னார், முடிந்தால் கோவைக்கு ஜெயமோகன் நூல்களில் முக்கியமானவற்றின் பட்டியல் கொண்டுவாருங்கள் என்றார்.) புத்தகக் கண்காட்சியில் அவரது அத்தனை புத்தகங்களையும் வாங்கிவர வேண்டும்'என்றார்.


'ஜெயமோகன் அவரது அடுத்த நாவல் குறித்துச் சொல்லும் போது அவர் சொன்ன விசயங்கள் எனது நாவலிலும்  வருவது போல் இருந்தது. நல்ல வேளை எனது நாவல் அவர் நாவலுக்கு முன்பே வெளிவந்துவிடும்.' (சிரிக்கிறார்)


'இளைய தலைமுறையில் வாசகர்கள் உங்களைப் பார்க்க வருகிறார்களா? இளைஞர்களிடம் இலக்கிய ஆர்வமிருகிறதா, ஆங்கிலக் கல்வியின் மோகம் அவர்களை இலக்கியத்திடம் அன்னியப்படுத்துகிறதா' என்றேன்.


'ஒரு வகையில உண்மைதான். என் பையன் மெட்ரிகுலேசன் படிச்சு இஞ்சினியரா இருக்கான், அவனுக்கு நான் என்ன எழுதியிருக்கேன்னு பெரிசா ஒண்ணும் தெரியாது. அப்பா ஏதோ எழுத்தாளர், என்னமோ எழுதுறார், யார் யாரோ பார்க்க வாரங்க அவ்வளவு தான். ஆனா நீங்களும் இளைஞர் தான் விசயம் தெரிந்து பார்க்க வரீங்க.. கொஞ்சம் வாசகர்கள்னாலும் தீவிரமானவர்கள் இருக்கத்தான செய்யறாங்க.


ஆனா எல்லாருக்கும் நாம பேசும் விசயங்களில் ஆர்வம் கிடையாது. தொந்திரவாக நினைக்கிறார்கள்.

ஒரு ஊருக்குள் சிமெண்ட் தொழிற்சாலை வந்தவுடன் சுற்றியுள்ள மரங்கள் எல்லாம் முக்காடு போட்டது போல் தலையைக் கவிழ்த்து நிற்கின்றன. அது போல தான் பல விசயங்கள். வயல்ல மயில் வருதுனு மயிலுக்கு விசம் வச்சுக் கொல்றாங்க. இதல்லாம் எங்க போய் சொல்றது.. நெனச்சா மனசுக்கு ரொம்ப பாரமா இருக்கு. எழுத்தாளன் என்ன செய்யலாம். ஒரு சைலண்ட் ஸ்பெக்டேடரா இருந்து எல்லாத்தையும் பதிவு செய்துவிட்டு போகலாம். நான் அதைத்தான் செய்றேன்'என்றார்.


'நம்ம இலக்கிய மரபு ரொம்பப் பெரியது. அத்தனையும் படிக்க முடியலன்னாலும் எல்லாத்துலயும் கொஞ்சம் கொஞ்சம் ருசி பார்த்து விடுங்கள்'என்றார். பகல் 12க்கு மேல் ஆகிவிட்டது. நான் விடைபெற்றுக் கொண்டு 'கோவையில் சந்திப்போம் சார்'என விருதுநகர் கிளம்பினேன்.


மதியம் வீட்டில் வந்து அம்மாவிடம் 'கோவில்பட்டியில் உங்கள் துறை அதிகாரி மாணிக்கவாசகம் சாரைப் பார்த்தேன்'என்றேன். 'அட, நல்லாத் தெரியுமே சார் எப்படி இருக்கிறார்? நேர்மையான அதிகாரி அவர்' எனப் பேசிவிட்டு அரைமணி நேரம் கழித்து 'நீ எதற்கு அவர் வீட்டுக்கு போயிருந்த'என்றார்.


'இந்த வருசம் அவருக்குத்தான் விருது கொடுக்கிறாங்கமா'என்றேன். 'பூமணிக்குத்தான விருதுன்னு சொன்ன…' சட்டென முன்தலையில் தட்டிக் கொண்டு 'மாணிக்கவாசகம் சார்தான் பூமணியா? இத்தன  வருசமா இது தெரியாமப் போச்சே' என்றார்.

தொடர்புடைய பதிவுகள்

யார் தரும் பணம்?
விஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்
பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது
விஷ்ணுபுரம் விருதுவிழா குறித்து…
கரிசலின் ருசி – பூமணியின் படைப்புலகுக்கு ஒரு நுழைவாயில்
பூமணியின் புது நாவல்
விஷ்ணுபுரம் விருது, விழா
பூக்கும் கருவேலம் – பூமணியின் படைப்புலகம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 07, 2011 21:40

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.