Jeyamohan's Blog, page 2265
December 14, 2011
சிறுகதைகளும் படிமங்களும்
அன்புள்ள ஜெயமோகன்,
பூமணியின் சிறுகதைகளைப்பற்றிய கட்டுரையில் ஜானகிராமன், வண்ணதாசன் , புதுமைப்பித்தன் கதைகளுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் படிமங்கள் அபாரம். ஒவ்வொருவருக்கும் இதே மாதிரி படிமங்கள் என் மனசிலும் உண்டு. எனக்கு ஜானகிராமன் கதைகள் என்றாலே காவேரியில் இருந்து ஏறிவரக்கூடிய கல்படிகள்தான் ஞாபகத்துக்கு வரும். அதேபோல வண்ணதாசன் கதைகள் என்றாலே சின்னஞ்சிறிய சிமிண்ட் திண்ணைகள். அப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம்.
பூமணிக்கு நீங்கள் கொடுத்திருக்கும் படிமம் அபாரமானது. கவிதை மாதிரி. இலக்கிய விமர்சனமே எப்படிக் கவிதையாகிறது என்பதை இந்தக் கட்டுரையிலேதான் கண்டேன்.
செம்மணி அருணாச்சலம்
ஜெ,
பூமணியின் சிறுகதைகள் கட்டுரை வாசித்தேன்
பூமணியின் கதைகளை உறைந்து கறுத்த ரத்தத்துளிகளாகவே என்னால் உணர முடிகிறது…. ஆனால் அடிபட்ட காயத்தில் இருந்து வழியும் குருதியாக அவை இல்லை. என்றோ எப்போதோ பட்ட அடியில் இருந்து சொட்டி உலந்து கருகி கரிப்பொட்டாக ஆகி எஞ்சியிருக்கும் குருதி. தொட்டு முகர்ந்தால் மட்டுமே அது குருதி என்று தெரிகிறது
அன்புள்ள ஜெயமோகன், எனக்குத்தெரிந்து ஒரு படைப்பாளியின் கதைகளுக்கு அளிக்கப்பட்டவற்றில் மிகச்சிறந்த படிமம் இதுதான். என்ன ஒரு தீவிரம். வாசிக்க வாசிக்க பதற்றமாகவும் ஈர்ப்பாவும் ஒரேசமயம் இருக்கிறது. அதற்கு உதாரணமாக நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கும் கதை இருக்கே, பயங்கரம்
செல்வன்
தொடர்புடைய பதிவுகள்
பூமணியை ருசித்தல்-கடிதம்
பூமணியின் சிறுகதைகள்
அள்ளக் கிடைக்காத அம்பாரம்
பூமணியின் அழகியல்
பூமணியின் நிலம்
பூமணி சந்திப்பு — செந்தில்குமார் தேவன்
விஷ்ணுபுரம் விருதுவிழா குறித்து…
கரிசலின் ருசி — பூமணியின் படைப்புலகுக்கு ஒரு நுழைவாயில்
யார் தரும் பணம்?
விஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்
இசையுடன் மரபைக் கொண்டாடுவோம்…
தமிழ் பாரம்பரியக் கச்சேரி 2011 – இசையைத் தாண்டிக் கொண்டாடுவோம்
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதத்தில் சென்னையே இசை விழாக் கோலம் பூணும். நூற்றுக்கணக்கான சபாக்களில் ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்கள் கலந்துகொண்டு பாடுவார்கள். இசையைத் தவிரவும் கொண்டாடப் பல விஷயங்கள் உள்ளன என்று தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையைச் சேர்ந்த நாங்கள் நம்புகிறோம். அதே நேரம், டிசம்பரின் கொண்டாட்ட மனநிலையையும் கூடும் கூட்டத்தையும் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறோம். உலகின் பல இடங்களிலிருந்தும் மக்கள் தம் விருப்பத்துக்குரிய இசைக் கலைஞர்களைக் கேட்க சென்னைக்கு வந்து குவிகின்றனர். அவர்கள் நம் பாரம்பரியத்தின் பிற கூறுகளையும் அறிந்துகொள்ள சில மணி நேரங்களை ஒதுக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
இலக்கியம், ஓவியம், சிற்பம், கோவில் கட்டுமானக் கலை, நாட்டியம் என அனைத்தையும் கொண்டாட நாங்கள் விரும்புகிறோம். இந்தத் துறையில் பிரசித்தி பெற்றவர்களை நம்மிடையே அழைத்துப் பேசவைப்பதன்மூலம் இதனைச் சாதிக்க விரும்புகிறோம்.
எனவே இந்த முதலாம் ஆண்டு நிகழ்வுக்கு, எழுத்தாளர் ஜெயமோகன், பேராசிரியர் ச.பாலுசாமி, ஸ்தபதி கே.பி. உமாபதி ஆசார்யா, முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன், நாட்டியக் கலைஞர் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஆகியோரை அழைத்துள்ளோம்.
நிகழ்ச்சிகள்
இடம் ராகசுதா அரங்கம், மைலாப்பூர்
நாள் டிசம்பர்23 முதல் 27 வரை
நேரம் :காலை 10-12 மணி
முதல்நாள்
23-12-2011 [வெள்ளி]
குறுந்தொகை – தமிழ்க் கவிமரபின் நுழைவாயில்
23 டிசம்பர் 2011 – எழுத்தாளர் ஜெயமோகன்
சங்கத் தொகை நூலான குறுந்தொகை, சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பு. அகத்திணை நூலான இதில் காதலையும் பிரிவையும் சொல்லும் பல்வேறு தனிப்பாடல்கள் உள்ளன.
இந்தப் பேச்சின்போது, எழுத்தாளர் ஜெயமோகன், தமிழ்க் கவி மரபு பற்றியும், அதன் நுணுக்கங்கள், படிமங்கள் ஆகியவை பற்றியும் விவரிப்பதோடு, எப்படி இவை அனைத்துமே குறுந்தொகையிலிருந்தே தொடங்குகின்றன என்பதை நிறுவுவார்.
கன்யாகுமரி மாவட்டத்தில், மலையாளம் பேசும் குடும்பத்தில் பிறந்த எழுத்தாளர் ஜெயமோகன், இன்று தமிழின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர். 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் குறுநாவல்களையும், 10 நாவல்களையும் இவர் எழுதியுள்ளார்.
இரண்டாம் நாள்
24-12-1011 [சனிக்கிழமை]
அருச்சுனன் தபசு – மாமல்லபுரம் சிற்பம் பற்றிய புதிய பார்வை
பேராசிரியர் சா. பாலுசாமி
யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியச் சின்னம் என்று குறிக்கப்பட்டுள்ள இடம் மாமல்லபுரம். பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டுள்ள இந்த இடத்தில் இருக்கும் பல்வேறு கலைப் புதையல்களுக்கு இடையில் அருச்சுனன் தபசு என்ற புகழ்வாய்ந்த, மாபெரும் புடைப்புச் சிற்பம், 40 மீட்டருக்கு 12 மீட்டர் என்ற அளவிலான பாறை முகப்பில் எழுப்பப்பட்டுள்ளது. இதில் 158 பாத்திரங்கள் செதுக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பெரும் பாறைச் சிற்பமே, மகாபாரதத்தின் வன பர்வத்தில் இமயமலை பற்றி எழுதப்பட்டுள்ளதன் சிற்ப வடிவம் என்கிறார் பேராசிரியர் பாலுசாமி. தன் விளக்கத்தை அவர், தமிழில் ஒரு புத்தகமாகக் கொண்டுவந்துள்ளார். இந்தச் சிற்பத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு வானவரும், கடவுளரும், மனிதர்களும், விலங்கு களும், தாவரங்களும், ஏன், பொய்த்தவப் பூனையும்கூட வியாசரின் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விளக்கங்களுக்கு ஏற்ப உள்ளன என்பதை அவர் விளக்குகிறார்.
பேராசிரியர் பாலுசாமி, சென்னை கிறித்தவக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
மூன்றாம் நாள்
25-12-2011 [ஞாயிறு]
இந்திய புனிதக் கலைப் பாரம்பரியம்
ஸ்தபதி கே.பி. உமாபதி ஆசார்யா
இந்தியச் சிந்தனையின்படி, சிறப்பான கலை என்பது வெறும் ஒரு படைப்பு அல்ல; அது ஓர் ஆன்மிக தரிசனம். இந்தியக் கலை என்பது புனிதமானதாகக் கருதப்படுகிறது. அது உருவாக்கும் பொருள் புனிதமானது என்பதால் அல்ல; அதன் இயல்பும் அதனைச் செயல்படுத்தும் முறைமையுமே உள்ளூரப் புனிதமானவை என்பதனால்.
ஸ்தபதி உமாபதி ஆசார்யா, விஸ்வகர்மா சமூகத்தின் சாஸ்திரப் பாரம்பரியத்தையும், அது எவ்வாறு ஆயிரமாயிர ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது என்பதையும், அவர்கள் எப்படி கோவில் கட்டுதல், சிற்பம் செதுக்குதல், ஓவியம் வரைதல் ஆகியவற்றை சிந்தையில் உருவாக்குவது முதல் செயல்படுத்துவதுவரை அணுகுகிறார்கள் என்பதையும் விளக்க முற்படுவார்.
உமாபதி ஆசார்யா, கோவில் கட்டுதல், கடவுளர்களின் தங்க/வெள்ளி/வெண்கலத் திருமேனிகளை வடித்தல், உலோகத் தகடுகளில் புடைப்புச் சிற்பங்கள் செய்தல் ஆகியவற்றைச் செய்துவருகிறார்.
நான்காம் நாள்
26-12-2011 [திங்கள்]
கங்கைகொண்ட சோழபுரம்: வரலாறும் கலையும்
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
முதலாம் ராஜேந்திர சோழன் தன் கங்கை வெற்றிக்குப் பிறகுக் கட்டுவித்ததே கங்கை கொண்ட சோழபுரம். அதற்குள் அவன் கடாரத்தையும் வென்றிருந்தான்.
இந்தப் பேச்சில், கங்கைகொண்ட சோழபுரக் கோவிலின் கட்டடக் கலைச் சிறப்பு, சிற்பங்களின் பேரழகு, செப்புத் திருமேனிகளின் சிறப்பு, பிற்காலத் திருப்பணிகள் ஆகியவை பற்றி படங்களுடன் விரிவாக விளக்கப்படும்.
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன், சரசுவதி மகால் நூலகத்தின் பொறுப்பாளராகப் பணியாற்றியவர். கோவில் கட்டடக் கலை, சிற்பங்கள், வெண்கலச் சிலைகள், ஓவியங்கள் ஆகியவை பற்றியும், வரலாறு, கல்வெட்டியல், பனையோலைகள், அகழ்வாராய்ச்சி ஆகியவற்றிலும் இவர் தேர்ச்சி பெற்றவர். நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள், செப்பேடுகள், காசுகள், சிலைகள், ஓவியங்கள் ஆகியவற்றை இவர் கண்டுபிடித்துள்ளார். அத்துடன் அவற்றைச் சரியான வரலாற்றுப் பின்புலத்திலும் பொருத்தியுள்ளார். பல ஆராய்ச்சி இதழ்களிலும் வெகுஜன இதழ்களிலும் கட்டுரைகளையும் பல புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார்.
ஐந்தாம் நாள்
27-12-2011
ரகுநாத நாயக்கரின் வாழ்க்கை - காணொளி உரை
நாட்டியக் கலைஞர் ஸ்வர்ணமால்யா கணேஷ்
[image error]
விஜயநகரப் பேரரசின்கீழ் தஞ்சாவூர், மதுரை, செஞ்சி ஆகிய நகரங்களிலிருந்து ஆண்ட குறுநில மன்னர் போன்றோரே நாயக்கர்கள். இவர்களில் மிகவும் பிரபலமானவர் ரகுநாத நாயக்கர் (1600-1630 பொதுயுகம்). ஒரு நல்ல அரசராக இருந்ததோடு, இவர் பலமொழிகளில் புலமை வாய்ந்தவராகவும், கவிஞராகவும், இசையமைப்பவராகவும், பாடுபவராகவும், வீணை வாசிப்பவராகவும் இருந்தார். ஜானகி கல்யாணமு, அச்சுதநாயகாத்புதயமு, சங்கீத சுதா போன்ற படைப்புகளை இவர் எழுதியுள்ளார்.
இவருடைய மகனான விஜயராகவ நாயக்கர், தன் தந்தையின் சரிதத்தை ரகுநாதப்யுதயமு என்ற பெயரில் தெலுங்கில் அற்புதமான யக்ஷகானமாக எழுதியுள்ளார். ரகுநாத நாயக்கரின் வாழ்க்கையை விவரிப்பதோடு நாயக்கர் கால அரண்மனை வாழ்க்கை, ஆட்சியமைப்பு, சமூக வாழ்க்கை ஆகியவற்றையும் விவரிக்கிறது.
நாட்டியக் கலைஞரும் ஆராய்ச்சியாளருமான ஸ்வர்ணமால்யா கணேஷ், இந்தப் படைப்பிலிருந்து சில பகுதிகளை, இசை, நாட்டியம், காணொளி ஆகியவற்றுடன் சேர்த்து நிகழ்த்திக் காட்டவுள்ளார்.
ஸ்வர்ணமால்யா, கே.ஜே. சரசாவிடம் நாட்டியம் பயின்றார். தற்போது, சென்னைப் பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை
தமிழ் மற்றும் இந்தியப் பாரம்பரியங்களை ஊக்குவிக்கவும், ஆவணப்படுத்தவும், பரப்பவும் என்று உருவாக்கப்பட்ட பதிவுபெற்ற ஓர் அறக்கட்டளை நாங்கள் (எண்: 379/2010).ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையன்று உரைநிகழ்வுகளை நாங்கள் தொடர்ந்து நடத்திவருகிறோம். ஆண்டுக்கு ஒருமுறை, பாரம்பரியச் சின்னங்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்று சில நாட்கள் செலவிட்டு, ஆழ்ந்து படிக்கிறோம். இவ்வாறாக, கடந்த இரு ஆண்டுகளில் மாமல்லபுரம், அஜந்தா/எல்லோரா ஆகிய இடங்களுக்குச் சென்றுவந்துள்ளோம். ஜனவரி 2012-ல் புதுக்கோட்டை செல்ல இருக்கிறோம்.
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன் எழுதிய, அசோக் கிருஷ்ணசாமியின் படங்களுடனான, மாமல்லபுரம் பற்றிய காஃபி மேசைப் புத்தகம் ஒன்றைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் கொண்டுவந்துள்ளோம். இதைப்போன்று புதுக்கோட்டை பற்றிய ஒரு புத்தகம் இப்போது தயாராகிக்கொண்டிருக்கிறது.
பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் பாதுகாத்து, கற்க விரும்பும் பிற அமைப்புகளுடனும் தனி நபர்களுடனும் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறோம். பள்ளி மாணவர்கள் நம் பாரம்பரியத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறோம்.
நன்கொடை வாய்ப்புகள்
தமிழ் பாரம்பரியக் கச்சேரி, தன் முதலாம் ஆண்டு உரைநிகழ்வுகளுக்கு நன்கொடையை வேண்டி நிற்கிறது. அரங்கில் 150 பேர் அமரக்கூடிய இடம் உள்ளது.
* நன்கொடை தருவோருக்குக் கீழ்க்கண்ட விளம்பர வாய்ப்புகள் உள்ளன:
* ராகசுதா அரங்கில் பேனர்கள் வைக்கலாம்.
* நன்கொடையாளர்கள் தம் கையேடுகளை பார்வையாளர்களுக்கு விநியோகிக்கலாம்.
* உரைவீச்சுகள் அச்சிடப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்படும். அவற்றில் நன்கொடையாளர்களின் அரைப்பக்க விளம்பரங்கள், லோகோ ஆகியவையும் சேர்க்கப்படும்.
மேற்கொண்டு தகவல்களுக்கு அணுகவும்:
சிவா 98842-94494,
பத்ரி 98840-66566
தமிழ் பாரம்பரியக் கச்சேரி 2011, 23-27 டிசம்பர் 2011
ராகசுதா அரங்கம், 85/2 லஸ் அவென்யூ, மைலாப்பூர்,
சென்னை 600004. தொலைபேசி: 2499-2672
தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை, 2-ம் மாடி, புது எண் 30 / பழைய எண் 16, டிசில்வா சாலை, மைலாப்பூர், சென்னை 600004, தொலைபேசி: 044-2467-1501. www://tamilheritage.in/
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
பூமணியின் சிறுகதைகள்
'பூச்சன் அப்புராணி மனுஷன்.தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பான். இருந்த இடம் தெரியாது. வாயலுங்க பேச மாட்டான். வேலைத்தனத்தில் மாடு பத்தும்போதுகூட மூக்கு முனக்கம்தான். யாராவது பேச்சுக்கொடுத்தால் நாலு வார்த்தைக்கு ஒண்ணு கிணற்றுக்குள்ளிருந்து வரும். பேசினவனுக்கு கடுப்பு தாங்காது…' என்று ஆரம்பிக்கிறது பூமணியின் கதையான நாக்கு. ஊருக்குள் பூச்சனைப்பற்றி எப்போதும் பேச்சு அடிபடும். ஊரில் ரெண்டு பேருக்கு வார்த்தை தடித்துவிட்டால் அவன் பேர்தான் வரும் 'ஆமா, பெரிய யோக்கியன். பேசவந்துட்டான். பூச்சனுக்கு தம்பிய போல'
அப்படிப்பட்ட பூச்சன் ஒருநாள் பருத்திக்கொட்டை வாங்கக் கோயில்பட்டி கடைவீதிக்குச் செல்கிறான். காட்டில் வேலையை முடித்துவிட்டுக் கிளம்புவதற்கே மாலைமயங்கிவிட்டது. நான்குகடை ஏறி இறங்கிப் பருத்திக்கொட்டை பார்த்து வாங்கிவருவதற்குள் இருட்டிவிட்டது. கடைசி பஸ் போய்விட்டது. வேறுவழியில்லாமல் கோயில்பட்டியில் பஸ் வரும் இடத்திலேயே பருத்திக்கொட்டை மூட்டையுடன் அமர்ந்திருக்கிறான். ரோந்து வரும் போலீஸ் அவனைப் பார்க்கிறது. பார்த்ததுமே அவர்களுக்குத் தெரிந்துவிட்டது ஆள் அப்புராணி என்று. ஆனால் மாசக்கடைசியில் சில்லறைக் கேஸ்களைப் போட்டு முடிக்க அவர்களுக்கு அவனைப்போன்ற அப்புராணிதான் தேவை.
பூச்சனை ஸ்டேஷனுக்குக் கொண்டு செல்கிறார்கள். மூர்க்கமாக அடிக்கிறார்கள். அவனிடம் சில குற்றங்களை ஒப்புக்கொள்ளும்படி சொல்கிறார்கள். அவன், தான் ஒரு தப்புமே செய்யவில்லை என்கிறான். ஒரு தப்பும் செய்யவில்லை என்பது உண்மைதான், ஆனால் எங்களுக்குக் கேஸ் முடிக்கவேண்டியிருக்கிறது, ஒத்துக்கொள் என்கிறார்கள். பூச்சனுக்குப் புரியவில்லை, தான் ஒரு தப்பும் செய்யவில்லை என்று கதறுகிறான். எத்தனை அடித்தாலும் அதே அழுகைதான். இன்ஸ்பெக்டர் வருகிறார். இவன் இப்படியே மாஜிஸ்டிரேட்டிடம் சொன்னால் நமக்குப் பிரச்சினைதான். ஏதாவது பார்த்துசெய்யுங்கள் என்று எரிந்துவிழுகிறார்
போலீஸ்காரர்கள் பூச்சனின் நாக்கை அறுத்துவிடுகிறார்கள். தப்பி ஓடும்போது கீழேவிழுந்து நாக்கைக் கடித்துக்கொண்டான் என்று சொல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்கள். பூச்சனால் பேசமுடியவில்லை. அவனுக்கு ஆறுமாதம் சிறைகிடைக்கிறது. ஆறுமாதம் சிறை சென்று மீண்டும் வரும் பூச்சன் வேறு ஆளாக இருக்கிறான். மூர்க்கமான கொந்தளிப்பான ஒருவனாக இருக்கிறான். அடிக்கிறான், கூச்சலிடுகிறான். அவன் உடம்பே நாக்காக ஆனதுபோல.
பூமணியின் 'நாக்கு' கதையை அவரது ஒட்டுமொத்த கதையுலகுக்கும் ஆதாரமான ஒரு படிமம் என்று சொல்லலாம். நாக்கறுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் கொந்தளிப்புகள் அக்கதைகள். ஆனால் கதைகளின் மேல்தளம் எப்போதுமே கலங்கலற்று அலைகளற்று சீரான ஒழுக்குடன் இருக்கிறது. ஆழத்தில் கால்வைப்பவர்கள் மட்டுமே ஆயிரம் மலைப்பாம்புகள் போல இழுத்துச்சுழற்றிச் செல்லும் வேகத்தை உணரமுடியும். மிக அபூர்வமாகவே கோபத்தையும்,வன்மத்தையும் வெளிப்படுத்தும் வரிகள் கதைகளில் வெளிப்படுகின்றன. அவை எப்போதுமே கதைமாந்தர் குரல்கள். பூமணியின் ஆசிரியக்குரல் சொல்லி விலகி நிற்பதாக மட்டுமே எப்போதும் ஒலிக்கிறது
பூமணியின் சிலகதைகளை வாசிக்கையில் எதிர்ப்பின், வன்மத்தின் தீவிரம் துணுக்குற வைக்குமளவுக்கு நம்மை வந்தடைகிறது. இரண்டாவது சிந்தனையில்தான் அந்தக்கதைகள் எந்த அளவுக்குக் குறைவான சொற்களுடன் எந்த அளவுக்கு எளிமையான சித்தரிப்புடன் ஒரு மளிகைக்கடைப்பட்டியல் போன்ற தகவல்தன்மையுடன் சொல்லப்பட்டிருக்கின்றன என்ற எண்ணம் ஏற்படுகிறது. அவரது புகழ்பெற்ற கதைகளில் ஒன்றாகிய 'எதிர்கொண்டு' ஒரு சிறுவனின் எதிர்ப்பைப் பற்றியது. தீண்டாமைக்குட்பட்ட சமூகத்தைச்சேர்ந்த சிறுவன். பள்ளிக்கூடம் செல்லாத கிராமத்துப்பட்டாளத்தில் .' பள்ளிக்கூடம் போகப் பிடிக்கவில்லை. குண்டி கிழிந்த கால்சட்டையைப் போட்டுக்கொண்டு எப்படிப் போவதாம். அய்யாவிடம் கேட்டால் 'அது ஒண்ணுதான் கொறச்சலாக்கும் ' என்கிறார்' என சாதாரணமாக அவன் வாழ்க்கையின் ஒட்டுமொத்தம் வந்து விடுகிறது
'ஊரில் நிறையப் பேர் ஆடுமாடு மேய்க்கிறார்கள். சாணியெடுக்கிறார்கள். எல்லாம் மத்தியான நேரம் ஊருணிக்கரையில் கூடினால் ஒரு கூட்டமே திரண்டு விடும். பள்ளிகூடப் பிள்ளைகள் அவ்வளவு இருக்காது' என்று கிராமத்துப் பிள்ளைகளின் கதை சொல்லப்படுகிறது. அவர்களுக்கு எதிரி கீழவீட்டுக்காரி. அவர்கள் கிணற்றில் இறங்கிக் குளித்தால் அவளுக்குப் பொறுப்பதில்லை. நீரைத் தீட்டாக்கிவிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு. கற்களைப் பொறுக்கி எறிகிறாள். அவள் வைதுகொண்டே இருக்கிறாள். தோட்டத்தில் நுழைந்ததற்கு. குழை ஒடித்ததற்கு.
அதற்கெதிராக சிறுவர்களின் மனதில் உருவாகும் உக்கிரமான வெறுப்பு சிறுவர்களே அறியாதது. அவள் மண்டையை உடைக்கவேண்டுமென நினைக்கிறார்கள். ஆனால் செய்யமுடியாது. அவளுடைய கோழியைப் பிடித்துக் கொன்று வேலியில் செருகிவிட்டு வந்துவிடுகிறார்கள். அதை வெருகு பாதி தின்றுவிடுகிறது. வெருகை சபித்துத் திட்டும் கீழவீட்டுக்காரியின் குரலைக் கேட்டுப் பையன் இன்புறுகிறான். அதுவும் போதவில்லை என்று அவளின் தொழுவத்திற்குள் நுழைந்து பசுக்கன்றைக் கொன்றுவிடுகிறான். ''அவள் வீட்டு வெளித் தொழுவில் பசுங்கண்ணுக்குட்டி மட்டும் கட்டிக் கிடந்தது. மதியந்தான். பசுமாட்டை அவுத்துக் கொண்டு காட்டுக்குப் போயிருந்தார்கள். வீட்டில் யாருமே இல்லை. சரி இதுதான் சமயமென்று கோலி தட்டும் கம்பியை எடுத்துப் போய் அதுக்கு நடுமண்டையில் ஒரேயடி. சொதுக்கென்று செத்து விழுந்தது. கயிற்றை அவுத்து நிறைசலுக்குத் தூக்கிக்கொண்டு போய்த் தூணோரம் நிற்கிற வாக்கில் தண்ணீர்ப் பானைக்குள் மூஞ்சியை ஒட்டிவைத்துவிட்டு மெல்ல நழுவும் வரை பிச்சமணி அடிக்கடி வெளியே வந்து ஆள் பார்த்தான்'' என்று அந்தக் கொடூரமான நிகழ்ச்சி சாதாரணமாகச் சொல்லப்பட்டுவிடுகிறது.
கீழவீட்டுக்காரி கதறுவதைக் கேட்கக் காத்திருக்கிறான். அப்போதுதான் கதை ஆரம்பிக்கிறது.'' கீழத் தெருவில் இருட்டைத் தள்ளிக் கொண்டு வசவுச் சத்தம் பெருகிவந்தது. படுக்கையை விட்டுத் துள்ளியெழுந்த சுந்தரம் வாசலிலிருந்த அய்யாவை நெரித்து அம்மாவைத் தாண்டி ஓடி வெளிப்பானையில் வாய் நிறையத் தண்ணீர் கொப்புளித்து முற்றத்தில் வட்ட வட்டமாகப் பீச்சி விளையாடினான்.'படுக்கிற முத்தத்தப் பாழாக்கிறியே ஒனக்கென்ன கோட்டியாலே இப்ப வந்தம்னாத் தெரியுமா?' என்று அம்மா வீரிடுகிறாள். வீட்டுக்குள் சிறுநீர் கழிக்கும் சின்னப்பையன்தான் அவன் இப்போதும் அம்மாவுக்கு. நாளை கீழ்விட்டுக்காரி துப்புக் கிடைத்து சண்டைக்கு வந்தால்கூட அம்மா அரிவாளைக் கையில் எடுத்துக்கொள்வாள், பிஞ்சுபாலகனைப்பற்றி அவ்வளவு பெரிய பழியைச் சொன்னதற்காக.
தீவிரமான ஒரு பழிவாங்கலின் கதை ஒரு எளிய அன்றாட நிகழ்ச்சிபோல சொல்லி முடிக்கப்படுகிறது. அந்த சித்தரிப்பில் தெரியும் பையனின் ஆளுமை , அவனுடைய துணிச்சலும் தந்திரமும் ,நாளை அவன் எப்படிப்பட்டவனாக இருக்கப்போகிறான் என்பதை சுட்டிக்காட்டுகிறது. நினைக்க நினைக்க ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பாக, வரப்போகும் ஒரு காலகட்டத்தின் எதிர்ப்பாக நமக்குள் விரிந்துகொண்டே செல்லும் கதை இது. ஒரு தூரத்து இடிமுழக்கம். இந்தக்கதையை பூமணி எழுபதுகளில் எழுதியிருக்கிறார். தொண்ணூறுகளில் இந்நிலப்பகுதியில் உருவான சமூக எதிர்ப்பியக்கத்தின் வெம்மையையும் தீவிரத்தையும் இந்தக்கதையிலேயே காணமுடிகிறது, ஆலமரத்தை விதையில் பார்ப்பது போல.
பூமணியின் கதைகளில் சிறுவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். அவரது புகழ்பெற்ற கதைகள் பலவும் சிறுவர்களைப் பற்றியது. நேரடியான காரணம் என்றால் அவர் கரிசலில் வாழ்ந்த நாட்களின் நினைவில் இருந்து எழுந்த கதைகள் அவை என்பதுதான் முக்கியமான காரணம். ஆனால் சிறுவர்களை அவர் எழுதத் தேர்வுசெய்வதற்குக் கலைரீதியான காரணம், இன்னும் நுட்பமான காரணம் இருக்கக்கூடும். 'கரிசலிலே சின்னப்பசங்கதான் அலைஞ்சுகிட்டே இருப்பாங்க.எங்க எதுன்னு அவனுகளுக்குத்தான் தெரியும். மத்தவங்க அவங்களுக்கான வழிகளிலேயும் எடங்களிலேயும் எங்கியோ செட் ஆயிட்டிருப்பாங்க…கரிசல்னா அது ஆடுமேய்க்கிற பசங்களோடதுதான்' என்றார் பூமணி. ஆடுமேய்க்கும் பையன்கள் அலையும் வெளியாகவே அவருக்குக் கரிசல் பதிவாகியிருக்கிறது. கரிசலில் இருந்து அந்தப் பையன்களைப் பிரித்துப்பார்க்க முடிவதில்லை.
கரிசலில் பையன்களின் வாழ்க்கையைச் சொல்லும்போது பூமணி அந்தப் பையன்களின் கண்கள் வழியாகவே கரிசலை விவரிக்க முயல்கிறார். ''கரிசல் புழுதியை முகர்ந்த வெள்ளாடுகள் விதறுபட்டு ஓங்கரித்தன. பட்டுக்கிடந்த இலந்தைச்செடியையும், கொம்பட்டி நெற்றையும் கொறிப்பதுடன் அவை அடங்குவதாயில்லை. ரோட்டோரம் சில தோட்டப் பசப்புக்களைத் தவிர எட்டாக் கை வரையில் ஒரே கரிசல் விரிப்புத்தான் கருகிக் கிடந்தது'' என்பது அந்த ஆடுமேய்க்கும் பையன்களின் பார்வைதான். அடுத்த வரியிலேயே அந்தப்பையன்கள் அந்தச் சுட்டெரியும் பொட்டல்வெளிக்கு அளிக்கும் எதிர்வினை உள்ளது. "செருப்புக் காலோட ஒரு ஓட்டம் ஓடி ஆட்டத் திருப்பீட்டு வந்துரு. எங்கயாச்சும் பெறப்புடுவோம்" அந்த மண்ணில் கூட அவர்கள் விளையாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். வீட்டில் கஞ்சி இல்லாமல் ஒட்டியவயிறுடன் ஆடுமேய்க்க வரும்போதுகூட.
அந்த விளையாட்டில் இருந்து அவர்கள் அப்புறப்படுத்தப்படும் கதைகளைப் பூமணி பலமுறை எழுதியிருக்கிறார். சொல்லப்போனால் அவரது திரைப்படமான கருவேலம்பூக்கள் கூட விளையாட்டு பறிக்கப்பட்ட பிள்ளைகளின் கதைதான். 'கோலி' கதையில் பள்ளிக்கூடம் செல்வதை வெறுக்கும் சிறுவனைச் சொல்லும்போது 'சுப்புவுக்குப் பள்ளிக்கூடம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. எல்லாரும் ஒரே மாதிரி உட்காருவது,நிற்பது,பாடுவது,படிப்பது,ஒரே சமயத்தில் ஒண்ணுக்குப் போவது,சாப்பிடுவது,தண்ணீர் குடிப்பது,ஒரே விளையாட்டைச் சேர்ந்து விளையாடுவது, அதென்ன படிப்பு. நெருக்கும்போது ஒண்ணுக்கடிக்கணும். தவிக்கும் போது தண்ணீர் குடிக்கணும். தோணும் போது விளையாடணும். இன்ன விளையாட்டு என்றில்லாமல் இஷ்டத்துக்கு விளையாடணும். வேப்ப மரத்தில் ஏறி ஊஞ்சலாடணும். வகுப்பில் ஒளிந்து தேடிப்பிடிக்கணும். பக்கத்திலுள்ள குமரன்கோயில் மலைக்கு ஓடிக் கால்வலிக்கப் படியேறி உச்சியில் நின்று ஊரை அளந்து விட்டு உருண்டு திரும்பணும். பள்ளிக்கூடக் கூரை விட்டத்தில் அருவியாக வடியும் குருவிக் கூட்டில் குடும்பம் நடப்பதை மல்லாந்து பார்த்தபடி கண்சொருகணும்.' என முதல் பத்தியிலேயே அவன் இழந்த கரிசல்வெளியைச் சித்தரித்துக்கொண்டுதான் கதையை ஆரம்பிக்கிறார். விளையாட்டுக்காக செய்யப்பட்ட ஒரு பெரிய சுயபலி அந்தக்கதையில் விவரிக்கப்படுகிறது.
''பூமணியின் சிறுகதைகள் மிகுந்த சொற்சிக்கனத்துடனும் செட்டான வடிவமைப்புடனும் இலக்கண சுத்தமான சங்கீதம்போல அமைந்தவை.தேவையற்ற வார்த்தை ஒன்றுகூடப் பார்க்க முடியாது.அவருடைய எழுத்தின் மற்றுமொரு சிறப்பு கதைமாந்தர்களை அவரவர் கதியில் வாழ அனுமதித்திருக்கும் பாங்கு.எக்கருத்தையும் அல்லது எத்தகைய உணர்வையும் கதாபாத்திரத்தின் மீது ஏற்றிச் சொல்லும் தன்மையை அவருடைய ஒரு கதையில் கூடக் காண முடியாது. ஆனாலும் அவர் எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான படைப்பாளிதான்.அவருடைய வர்க்கசார்பு வார்த்தைகளில் வெளிப்பட்டதேயில்லை .ஆனால் அவருடைய கதைத்தேர்வில் அது அழுத்தமாக வெளிப்பட்டு நிற்கும்.அவருடைய எழுத்து யாருக்காகவும் கண்ணீர் வடிப்பதுமில்லை.நம் கண்ணீரைக்கோரி நிற்பதுமில்லை.ஆனால் அவர் எழுதிச்செல்லும் வாழ்வின் உண்மை,துயரம் நம் வாசக மனங்களைப் பற்றி அழுத்தும்.நம்மை அறியாமல் நம் கண்களில் நீரும் கோபமும் இயலாமையின் துயரும் வழியும் ''-ச.தமிழ்ச்செல்வன்.
ஒவ்வொரு படைப்பாளியின் கதைகளையும் என்னுடைய ரசனையின் அடிப்படையில் சில படிமங்களாகவே தொகுத்து வைத்திருக்கிறேன். தி.ஜானகிராமனின் கதைகள் எனக்கு எப்படியோ வீணையை நினைவுறுத்துகின்றன. ஆழ்ந்த அரக்கு நிறத்தின் சருமப்பளபளப்புள்ள குடத்துடன் தொட்டாலே இசையை உருவாக்கும்படியாக சுருதிகூட்டி வைக்கப்பட்டிருக்கும் வீணை. வண்ணதாசன் கதைகளைப் பெட்டிக்குள் துணியுடன் சேர்த்து வைக்கப்பட்ட மல்லிகை மலர்களின் சருகுகள் என்று உருவகித்து வைத்திருக்கிறேன். அந்த வாசனை அந்தத் துணியை அந்தத் துணியணியும் மனிதரை அந்த மனிதருடனான எல்லா உறவுகளையும் நினைவில் இழுத்துவந்து நிறுத்துகிறது. புதுமைப்பித்தனின் கதைகள் விதவிதமான கூரிய ஆயுதங்களும் அழகிய தொன்மையான நகைகளும் கலந்து கொட்டப்பட்டிருக்கும் ஒரு பெட்டி. அழகின் கவர்ச்சியும் கூர்மையின் அச்சமும் கலந்த முடிவடையாத சஞ்சலத்தை அவை அளிக்கின்றன.
பூமணியின் கதைகளை உறைந்து கறுத்த ரத்தத்துளிகளாகவே என்னால் உணர முடிகிறது. இந்த மனப்பிம்பத்தை உருவாக்கிய கதைகள் எவை என்பதை அறிவதற்காக அவரது புனைவுலகுக்குள் சென்றுகொண்டே இருக்கிறேன். கரிசலில் தாகம் மேலோங்கி அலையும் சிறுவர்களா? [ரீதி],கூடை முடைந்து கொண்டுபோய் முதலாளியின் வீட்டுமுற்றத்தில் இறக்கிவிட்டு கூலித்தவசத்துக்காகக் கெஞ்சிக் கையேந்தி நிற்கும் வேலாண்டியா [தேவை],கொத்துவேலைக்கான அழைப்பை எதிர்பார்த்து அதிகாலையில் இருந்தே காத்து நிற்கும் நொண்டி முத்தையாவா ?[ஏலம்],எல்லாக் கதைகளிலும் இருப்பது தீவிரமான மானுட அவலம். ஆனால் அடிபட்ட காயத்தில் இருந்து வழியும் குருதியாக அவை இல்லை. என்றோ எப்போதோ பட்ட அடியில் இருந்து சொட்டி உலந்து கருகி கரிப்பொட்டாக ஆகி எஞ்சியிருக்கும் குருதி. தொட்டு முகர்ந்தால் மட்டுமே அது குருதி என்று தெரிகிறது
மிகச்சிறந்த உதாரணமெனச் சொல்லத்தக்க கதை 'கசிவு'. தமிழ்ச்சிறுகதையின் சாதாரணமான ஒரு வாசகன் அந்தக்கதை அளிக்கும் முடிவின் தீவிரத்தை ஊகிக்க முடியாது. 'அவருக்கு சிரிப்பாணி வந்தது. பழைய துணிக்கிழிசல் மாதிரி வாயை அகலித்து சிரித்தார். மேல்தாடையில் ரெண்டுபல் விழுந்த கொடுவாய் தெளிவாகத் தெரிந்தது' என்ற ஆரம்பிக்கிறது கதை. 'முத்துமாடனும் சொள்ளமுத்துப்பயலும் ஒருவாய் சோளத்தட்டைக்குப்போய் அப்படி மல்லுகெட்டி அடிச்சுகிட்டு கெடந்தாகளப்பா'எனப் பழைய நினைவுகளில் இனிமையாகத் தோயும் கிழட்டு சண்டியரின் கதை.சிறுவர்களால் கிண்டல் செய்யப்படும் நகரமுடியாத கிழம். ஒருவாய்க் கஞ்சியைக் குடித்துவிட்டுப் பகலெல்லாம் திண்ணையிலேயே அமர்ந்திருக்கிறது. அதன் பலவீனங்கள் வீராப்புகள்
முக்கால்வாசி கதைக்குப் பின்னர்தான் 'நான் கலியாணம் முடிக்கிறதுக்கு முந்தி பெரிய சண்டியரு. கையிலே எந்நேரமும் கம்பு இருக்கும். இல்ல அருவா இருக்கும். என் சண்டியத்தனத்தை பார்த்துத்தான் ஊரில காவலு போட்டாங்க. எவன்னு பாக்கிறதில்ல சுளிக்குத்தமா பேசிட்டான்னா படீர்னு கைநீட்டிருவேன். நம்ம கிட்ட வெரலு வைக்க முடியாது' எனக் கிழவரின் ஆழத்தில் இருந்து வாக்குமூலம் கிளம்பி வருகிறது. தன்னுடைய பழைய கூட்டாளிகளைப்பற்றி, பழைய திருட்டுகளைப்பற்றிச் சொல்ல ஆரம்பிக்கிறார். நீர் வற்றி அடிக்கிணறு கலங்கி வருவதைப்போலக் கதைகள் எழுந்து வருகின்றன. 'பருத்திக்காடு ஏராளம். ஏகக்கரிசல். மதியத்துக்கு அந்தப்பாதையிலே நடந்தோம். என்னவோ ஒரு ஊரைத்தாண்டி ரொம்பதூரத்திலே ஒருத்தி ஒத்தையிலே பருத்தி எடுத்திட்டிருந்தா. கழுத்திலயும் காதுலயும் நெறய போட்டிருந்தா. பத்து பதினைஞ்சு தேறும். மூணுநாலு வெயசுப்பய பக்கத்திலே உக்காந்து வெளையாடிட்டிருந்தான்'என ஒரு அந்தரங்கமான கதை ஆரம்பிக்கிறது.
கிணற்றில் கைகால்கள் கழுவப்போன தாயையும் மகனையும் தனியாளாக அரிவாளுடன் மறிக்கிறார். 'அவ என்னைப்பாத்ததும் பரக்கப்பரக்க முழிச்சா. பாக்கிறதுக்கு ரெம்ப லச்சணமா இருந்தா சிறு பெராயம்.நல்ல மொகக்கள..இறுகின ஒடல்கட்டு. மாராப்ப இழுத்து சொருகியிருந்தா..' என ஆரம்பிக்கும் விவரணை, அவருக்குள் எழுந்த எல்லா ஆவேசத்தையும் வெறியையும் 'எனக்கு தாகமா இருந்தது'என்ற சிறு சொற்றொடரில் முடித்துக்கொள்கிறது. பாம்படத்தையும் சங்கியலையும் கொடுத்துவிட்டுக் கையெடுத்துக் கும்பிடுகிறாள் . 'அழுதிட்டிருந்த சின்னப்பய தலைய சீவினேன். கொஞ்ச நேரம் கழிச்சு அவ தலையவும் சீவினேன். அருவாள கழுவீட்டு பட்டுன்னு கெணத்தை விட்டு வெளியேறிட்டேன்' என்று அந்த மொத்த நிகழ்ச்சியையும் சுருக்கமாகச் சொல்லி முடிக்கிறார். இரு கொலைகள் இரு சொற்றொடர்களில். மகனைக் கொன்றுபோட்டு அந்தப் பிணம் அருகே போட்டுத் தாயை கற்பழித்தது 'கொஞ்சநேரம் கழிச்சு' எனஅரைச்சொற்றொடரில்.
அந்த அளவுக்கு உலர்ந்து கருகியிருக்கிறது குருதி. சாதாரணமாக அதை எவரும் கவனிக்கமுடியாது. நெடுநாட்கள் கழித்து ஆழ்நெஞ்சின் அடித்தூரில் இருந்து அந்தக்கதை கிளம்பி வருகிறது. ஒருவரிடமும் பகிர்ந்துகொள்ளாத கதை. ஆனால் யாருக்கும் சொல்ல முடியவில்லை. காளியப்பன் மகன் என்று மட்டும் சொல்கிறார். சின்னப்பயல்களின் கூட்டத்திலிருந்து காளியப்பன் மகனைக் கொண்டு வந்து அருகே அமர்த்துகிறார்கள். 'தீக்கு முன்னால் முழிச்சமாதிரி கண்ணத்திறந்தார். கையை நீட்டிப் பயலைத் தடவித்தடவிக் கொடுத்தார். மூஞ்சி முதுகு எல்லாம் தடவியாயிற்று. கழுத்தை மட்டும் தடவிக்கொண்டே இருந்தார். கை சோர்ந்து போயிற்று' எனக் கதை முடிகிறது. தமிழிலக்கியத்தில் சொல்லப்பட்ட பெரும் கொடூரங்களில் ஒன்று ஒரு தபால்கார்டில் எழுதியனுப்புவது போல சர்வசாதாரணமாக காட்டப்படுகிறது. இந்த சுருக்கமே பூமணியின் அழகியல்.
பூமணியின் சிறுகதைகளில் பெரும்பாலானவற்றைப் பசியின் கதைகள் என்று சொல்லிவிடமுடியும். கடும் உழைப்புக்குப்பின் பட்டினிகிடக்கும் மக்களைப்பற்றியே கணிசமான கதைகள் பேசுகின்றன. அடிவயிற்றைச் சுண்டி இழுக்கும் பசியில் இருந்து விலக லேசாகக் குனிந்துகொண்டு மண் வெட்டும் சண்முகம் [கலங்கல்] ஓர் உதாரணம். நாய்சீந்தாத உணவைக்கூடக் குழந்தைகளுக்குக் கொடுக்கமுடியாதது அவன் வாழ்க்கை. குழந்தைகளுக்கு சட்டியில் கஞ்சியைத் திண்ணையில் கொண்டு வைத்துவிட்டுக் காட்டுவேலைக்குச் சென்றுவிடுகிறார்கள். அவை கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால்கூடப் பசித்தலையும் நாய்கள் அவற்றைக் குடித்துவிடும். எந்நேரமும் பசியுடன் கிராமத்தில் விளையாடிக்கொண்டிருக்கின்றன குழந்தைகள். பூமணியின் கதைகளில் வரும் கிழடுகளின் சித்திரங்கள் இன்னும் தீவிரமானவை. ஒருநாளுக்கு ஒருவேளைதான் உணவு. அந்தப் புளித்தகஞ்சியைக் குடித்தபின்னர் அடுத்தவேளைக்காக இரவுபகலாகக் காத்திருக்கிறார்கள். வாழ்நாளெல்லாம் உழைத்தவர்கள் உணவே கடவுளாகத் தவமிருக்கும் அந்தக்காட்சி அளிக்கும் ஆழமான கசப்பு பூமணியின் பல கதைகளை கனம் மிக்கவையாக ஆக்குகிறது.
பூமணியின் பக்கத்து ஊர்க்காரரும் எழுத்தாளருமான பா.செயப்பிரகாசம் ஒரு கட்டுரையில் சொல்கிறார் 'நகரம் அவருக்குள் இன்னும் பதிவாகவில்லை. அவருக்குள் கிராமத்தான் இன்னும் சப்பணமிட்டு அட்டணக்கால் போட்டு அமர்ந்திருக்கிறது.எந்த இடத்திலிருந்து முளைத்துவந்தாரோ அந்த வட்டாரமும் எந்த இடத்தில் அவர் உதயமாகி பதியமாகிப் போனாரோ அந்த வரலாறும்தான் பூமனியின் படைப்புகளாக வருகின்றன. பெருவாரிக்கதைகள் அங்கிருந்து எடுத்து மலத்திப்போட்டவை'.கரிசலின் மணம் கொண்டவை பூமணியின் கதைகள். கரிசலில் பெய்யும் புதுமழையின் மணம் கொண்டவை கி.ராஜநாராயணனின் கதைகள். கோடையில் வேகும் கரிசலின் மெல்லிய வெக்கைவாடை கொண்டவை இவை.
தொடர்புடைய பதிவுகள்
அள்ளக் கிடைக்காத அம்பாரம்
பூமணியின் அழகியல்
பூமணியின் நிலம்
பூமணி சந்திப்பு – செந்தில்குமார் தேவன்
விஷ்ணுபுரம் விருதுவிழா குறித்து…
கரிசலின் ருசி – பூமணியின் படைப்புலகுக்கு ஒரு நுழைவாயில்
யார் தரும் பணம்?
விஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்
பூமணியின் புது நாவல்
பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது
December 13, 2011
டிச 18 ஞாயிறு விஷ்ணுபுரம் விருது கோவையில்
அன்புள்ள நண்பர்களுக்கு , இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம் ,
இந்த அழைப்பிதழை உங்கள் தளத்தில் வெளியிடவும் , நண்பர்களிடம் பகிரவும் வேண்டுகிறோம்.
விஷ்ணுபுரம் விருது 2011
தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது
மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு
ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல்
பூக்கும் கருவேலம் நூல் வெளியீடு
டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை
கலந்துகொள்ளும் ஆளுமைகள்
எழுத்தாளர் ஜெயமோகன்,
வே.அலெக்ஸ் – அயோத்திதாசர் ஆய்வு நடுவம்
எழுத்தாளர் யுவன் சந்திரசேகர்,
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,
எழுத்தாளர் நாஞ்சில்நாடன்
கன்னட கவிஞர் பிரதீபா நந்தகுமார்,
இயக்குனர் பாரதிராஜா
எழுத்தாளர் பூமணி
உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுக்கு நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம்
அன்புடன் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – தொடர்புக்கு 094421 10123
(குறிப்பு:நிகழ்ச்சி குறித்த நேரத்தில் துவங்கும்)
விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா 2010 நிகழ்ச்சி பதிவு
விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா கடிதம்
விஷ்ணுபுரம் இலக்கிய விருது கடிதங்கள்
விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா -2010 கோவையில்
தொடர்புடைய பதிவுகள்
பூமணி சந்திப்பு – செந்தில்குமார் தேவன்
யார் தரும் பணம்?
விஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்
பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது
விஷ்ணுபுரம் விருது, விழா
அள்ளக் கிடைக்காத அம்பாரம்
பூமணியின் சிறுகதைகளில் இப்படிப்பட்ட ஒருமையைக் கண்டுபிடிப்பது கடினம். சில கதைகள் கிராம வாழ்வைப் பேசுகின்றன, சில நகர வாழ்வை, சில கதைகள் சாதி குறித்து, சிலவற்றில் சாதி பற்றிய பேச்சே கிடையாது. சில கதைகள் சிறுவர்கள் பார்வையில் சொல்லப்படுகின்றன, சில பெண்களின் பார்வையில் என்று ஒவ்வொரு கதையும் மாறுபட்ட ஒன்றாக இருக்கிறது. பெரும்பாலும் சாதி அடையாளங்களுடன் பேசப்படும் பூமணியின் எழுத்தில் ஒரு மெல்லிய நகைச்சுவை சில கதைகளின் அடித்தளத்தில் காணப்படுகிறது.
சொல்வனம் இதழில் பூமணியின் கதைகளைப்பற்றி மித்திலன்
தொடர்புடைய பதிவுகள்
பூமணியின் அழகியல்
பூமணியின் நிலம்
பூமணி சந்திப்பு – செந்தில்குமார் தேவன்
விஷ்ணுபுரம் விருதுவிழா குறித்து…
கரிசலின் ருசி – பூமணியின் படைப்புலகுக்கு ஒரு நுழைவாயில்
யார் தரும் பணம்?
விஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்
தவில்
பூமணியின் புது நாவல்
பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது
விஷ்ணுபுரம்- விமர்சனம்
இந்தக் கட்டுரையை விஷ்ணுபுரம் நாவல் பற்றிய என்னுடைய முழுமையான வாசிப்பனுவம் என்ற வகையில் பார்க்கலாகாது. தொலைவில் தெரியும் மலைச் சிகரத்தைக் காணும்போது மனதிற்குள் அதைப் பற்றி ஒரு சித்திரம் எழும். அது நிச்சயம் முழுமையானதன்று. நுட்பமான விஷயங்கள் தூரத்திலிருந்து நிச்சயம் கண்களுக்குப் புலப்படாது. அதற்கொப்பானதுதான் இந்தக் கட்டுரை. ஒருவேளை நான்கைந்து முறை திரும்பத் திரும்ப வாசித்தால் இந்த நாவலைப் பற்றிய தெளிவு ஓரளவிற்காவது கிடைக்கும். நாவலிலேயே வருவது போல விஷ்ணுபுரத்தின் ராஜகோபுரம் முப்பது நிலைகளுக்கு மேல் சாமான்யர்களுக்குத் தெரிவதில்லை.
விஷ்ணுபுரம் பற்றி கோபி ராமமூர்த்தி விமர்சனப்பதிவு
தொடர்புடைய பதிவுகள்
விஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்
பரிணாமவாதமும் இந்திய மதங்களும்
கடிதங்கள்
கதைகளின் வழி
சிற்பச்செய்திகள்
அறிதல்-அறிதலுக்கு அப்பால்
தீராநதி நேர்காணல்- 2006
கடிதங்கள்.
கடிதங்கள்
இரு கடிதங்கள்
சாரல் விருது
ராபர் ஆரோக்கியம் நினைவாக இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி அளித்துவரும் 2012 ஆம் வருடத்திற்கான சாரல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வண்ணதாசன், வண்ணநிலவன் இருவருக்கும் விருது அளிக்கப்படுகிறது
விழா 2012 ஜனவரி மாதம் 7 ஆம் தேதி சென்னை தேவநேயப்பாவாணர் அரங்கில் நடைபெறுகிறது. சிற்பி வித்யாசங்கர் வடிவமைத்த சிற்பமும் ரூ 50000 மும் அடங்கியது விருது.
நாஞ்சில்நாடன், பா.செயப்பிரகாசம்,எஸ்.ராமகிருஷ்ணன், நா.முத்துக்குமார் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.விழாவில் ஜேடி ஜெர்ரி இயக்கிய வண்ணதாசனின் ஜன்னல் கதையை ஒட்டிய குறும்படம் வெளியிடப்படும்
வண்ணதாசன் வண்ணநிலவன் இருவருக்கும் வாழ்த்துக்கள்
சாரல் விருது 2012 அழைப்பிதழ்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
December 12, 2011
வண்ணதாசனின் சினேகிதிகள்
வண்ணதாசன் எழுதிய 'சினேகிதிகள்' சமீபத்தில் தமிழில் வந்த மிகச்சிறந்த கதைகளில் ஒன்று. விசித்திரமான மௌனம் நிறைந்த கதை இது. ஒழுக்கத்தின் இந்தக் கரையில் நின்றுகொண்டு அந்தக்கரையை குறுகுறுப்புடன் எட்டிபபர்க்கும் ஒருவனின் நோக்கில் எழுதபப்ட்ட இக்கதையில் ஒரு நல்ல வாசகன் உய்த்தறியவேண்டிய பல நுண்ணிய தளங்கள் உள்ளன. ஒழுக்கமுறைக்குக்கு வெளியே வாழ்கிறவர்களுக்குள் ஏற்படும் ஆழமான நட்பு, அவர்களின் தனித்துவம் கொண்ட உறவுகள் மற்றும் பிரியங்கள் என.[உயிர் எழுத்து மாத இதழ்]
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
எரிக் ஹாப்ஸ்பாம்-கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
எரிக் ஹாப்ஸ்பாம் குறித்த கட்டுரைகள் ஒரு நல்ல அறிமுகத்தை அளித்தன. ஆனால் அவரின் இலட்சியவாத அழிவு குறித்த கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 'வெர்செயில்ஸ் முதல் ஹிரோஷிமா வரை' நடந்த அந்நிகழ்வுகள் அரசியல் உள்விளையாட்டுகளின் விளைவுகளை அப்பட்டமாக்கின என்றுதான் தோன்றுகிறது. அதாவது, ஒரு நல்ல நோக்கமுள்ள தொடக்கத்திற்குப் பிறகு சுய நலமிகள் தங்களின் சுயலாபத்திற்காக 'வரலாறு' என்னும் அதிகாரபூர்வ பொய்யைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவது. மாபெரும் ஃபிரெஞ்சு புரட்சி மிக விரைவில் நெப்போலியனிடம் சரணடைந்தது அல்லவா? ஜெர்மன் மக்கள் யூதர்களைப் பொய்ப்பிரசாரத்தினால் உந்தப்பட்டுக் கொன்றொழித்தனர் அல்லவா? இந்நிகழ்வுகளை முதலாளித்துவ முற்போக்கு முகமூடியணிந்த நிலப்பிரபுத்துவ அதிகாரத்தின் சரிவு எனக் கொள்ளலாம் என நினைக்கிறேன். இலட்சியவாதக் கருத்துக்கள் வலிமையான தீயவர்கள் , அதிகாரத்தை அடையும் வரை கடைபிடிக்கப்பட்டு, அதிகாரத்தில் இருக்கும் போது கைவிடப்படுவதால் மதிப்பிழந்து போகின்றன.
ஆனால் எரிக் காந்தி யுகம் குறித்து என்ன கருத்து கொண்டிருந்தார் எனத் தெரியவில்லை. நூற்றாண்டு கால லட்சியவாதத்தின் வெற்றி என கருதக்கூடிய இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பற்றி அவர் என்ன நினைத்தார் என்றும் தெரியவில்லை.
Shankaran E R
அன்புள்ள சங்கரன்
எரிக் ஹாப்ஸ்பாம் பழைய யுகத்தைச்சேர்ந்த ஒரு மார்க்ஸியர். பதினைந்தாண்டுகளுக்கு முன்னால் அவர் காலாவதியானவர் என்ற எண்ணம் எனக்கிருந்தது. இப்போது இலட்சியவாதம் அப்படிக் காலாவதியாக முடியாதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஆகவேதான் நீண்ட இடைவெளிக்குப்பின் அவரைப்பற்றி எழுதினேன்.
எரிக் ஹாப்ஸ்பாம் சொல்வதுபோல இலட்சியவாதம் காலாவதியாகவில்லை என்றே நான் நினைக்கிறேன். கிறுக்கர்களான இலட்சியவாதிகளுக்கு இருக்கும் மதிப்பு என்றுமே நடைமுறைவெற்றியாளர்களுக்கு இருப்பதில்லை. ஜூலியன் அசாஞ்சே எந்த சர்வதேச தொழிலதிபர்களைவிடவும் மக்கள் மனதுக்கு நெருக்கமானவராகவே இன்றிருக்கிறார் என்றே நினைக்கிறேன்
ஜெ
அன்புள்ள ஜெ
எரிக் ஹாப்ஸ்பாம் பற்றிய கட்டுரைகள் மிகச்சிறப்பாக இருந்தது. அடிக்கடி அந்த பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போதுதான் அவரைப்பற்றிய நீண்ட கட்டுரை ஒன்றை முதல்முறையாகத் தமிழில் வாசிக்கிறேன். அவர் அரைநூற்றாண்டாக எழுதிவருகிறார் என்ற நிலையில் அவரைப்பற்றித் தமிழில் எதுவுமே எழுதப்படவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது.
அவர் இலட்சிவாதம் பற்றி சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. எல்லாக் காலத்திலும் இலட்சியவாதம் சிறுபான்மையினரிடம்தான் இருக்கும். ஆனால் அவர்கள்தான் உலகத்தை உருவாக்குகிறார்கள். தொழில்நுட்பவாதிகள் அல்ல
சாரங்கன்
சென்னை
அன்புள்ள சாரங்கன்
உண்மைதான். எரிக் ஹாப்ஸ்பாமின் குரலில் ஒலிப்பது மார்க்ஸிய இலட்சியவாதம் பற்றிய ஏமாற்றம் மட்டுமே. சூழியல் சார்ந்த, உலக அமைதிசார்ந்த இலட்சியவாதம் முன்பை விட இன்று மேலோங்கித்தான் ஒலிக்கிறது. மார்க்ஸை விட காந்தி அதிகம் பேசப்படுகிறார் – வால்ஸ்ட்ரீட் போராட்டங்கள் அதையே காட்டுகின்றன
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
அசிங்கமான மார்க்ஸியம்
இலட்சியவாதம் அழிகிறதா?
எரிக் ஹாப்ஸ்பாம்- வரலாற்றின் மீது எஞ்சும் நம்பிக்கை
பூமணியின் அழகியல்
பூமணியின் எழுத்து இன்றைய வாசகனுக்கு என்ன உணர்வை உடனடியாக உருவாக்குகிறது? அவர் பிரபலமான இதழ்களில் எழுதியவரல்ல. நெடுங்காலமாகவே அவரது எழுத்து சிற்றிதழ்வட்டத்து வாசகர்களுக்காகவே பிரசுரிக்கப்பட்டது. அவர்கள் ஏற்கனவே இலக்கியங்களை வாசிக்கும் பயிற்சி பெற்றவர்கள். இயல்புவாத எழுத்தின் அலைகளற்ற நேரடித்தன்மையை அவர்களால் எளிதில் உள்வாங்கமுடியும். மேலும் உலகளாவிய தளத்தில் இயல்புவாதம் ஓர் அழகியல்முறைமையாகப் பெரிதும் பின்னகர்ந்துவிட்டது என்றே நினைக்கிறேன். இயல்புவாத எழுத்துக்களை மையப் போக்காகக் கொண்டிருந்த சீன எழுத்துக்களிலேயே இன்று அந்த அழகியல் இல்லை. ஆகவே நவீன உலக இலக்கியத்தில் அறிமுகத்துடன் இன்றைய தமிழிலக்கிய உலகில் நுழையும் புதுவாசகன் பூமணியைப்பற்றி என்ன நினைப்பான்?
இன்றைய வாசிப்பின் முக்கியமான ஊடகமாக இணையமே உள்ளது. சிற்றிதழ்கள் பெரும்பாலும் பழைய சிற்றிதழ்சார் எழுத்துக்களில் எஞ்சியவர்களின் களமாக மட்டுமே இன்றும் உள்ளன. பூமணியை இணையம் எப்படிப் பார்க்கிறது என்று தேடினேன்.'பூமணி எழுதிய 'பிறகு' நாவல் உண்மையிலேயே ஒரு சாதனை என்பதில் ஐயமில்லை. எத்தனை யதார்த்தமான கதை. கொஞ்சம் கூட ஜோடனைகளோ தேவையற்ற வர்ணனைகளோ இல்லாத அருமையான படைப்பு. நாமும் அந்த கிராமத்தில் உலவுவது போன்ற ஒரு இயல்பு நடை. கதாநாயகியின் தந்தை முத்து முருங்கன் செத்துப்போனதை எவ்வளவு அழகாக நம் கண்முன்னே கொண்டு வருவார். கதையின் முக்கிய பாத்திரங்களில் ஒருவராக உலவும் கந்தையாவின் மரணத்தைப்பற்றியும் கூட சொல்லாமல், ஒரு அத்தியாயத்தின் துவக்கத்தில் 'கந்தையா சிதையில் எரிந்துகொண்டிருந்தார்' என்று திடீரென்று ஆரம்பிப்பார். நமக்குத் தூக்கி வாரிப்போடும்.வெற்று ஆர்ப்பாட்டங்கள் இல்லாததால், இலக்கிய வட்டம் தவிர வெளியில் அவ்வளவு சிலாகிக்கப்படாத ஒரு நல்ல எழுத்தாளர் பூமணி' [சாரதா, சிலிகான் ஷெல்ஃப் இணையதளம்] என்ற வாசக அபிப்பிராயம் மிக இயல்பாகவும் துல்லியமாகவும் 'பிறகு' நாவலை வகுத்துரைக்கிறது. பூமணி, யார் என்பதைச் சுட்டிச் செல்கிறது.
'வெக்கை' பற்றி இன்னொரு வாசகக் கருத்து 'கிணற்றடி, பனைக்கும்பல் இருக்கும் நீரோடை, நாணல் புதர், மலையடிவாரம், உச்சிமலை இடுக்குப் பாறை, கல்பொந்து, கோவில் மச்சு என்று எங்கெல்லாம் அப்பாவும் மகனும் செல்கிறார்களோ அங்கெல்லாம் நம்மையும் அழைத்துக் கொண்டு போகிறார்கள். ஒளிந்து வாழும் இடத்தில் கிடைத்ததை சமைத்து சாப்பிடுகிறார்கள். இருவரும் தனிமையில் பேசும் சின்னச் சின்ன உரையாடல்களிலும், அளவான வாக்கியத்தாலும் கதை அழகாக நகர்கிறது. "அப்பா, அம்மா, மாமா, அத்தை, அண்ணன், தங்கை, தம்பி, சித்தி, சித்தப்பா, நாய், ஆடு" என்று நாவலே அன்பால் பிணைக்கப்பட்டுள்ளது' [கிருஷ்ணப்பிரபு] என்ற வாசகக் கருத்து வெக்கைநாவலின் சாராம்சத்தை மிக இயல்பாகத் தொட்டுக்காட்டுகிறது.
தமிழில் பூமணியின் நான்கு நாவல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் அவரது முதலிரு நாவல்களே சாதனையாகக் கொள்ளப்படுகின்றன. பிறகு,வெக்கை இருநாவல்களையும் அவ்வாறு முன்னிறுத்தியவர்கள் சிற்றிதழ் விமர்சனமரபைச் சார்ந்தவர்கள். ஆனால் இந்த விமர்சனமரபுடன் தொடர்பே இல்லாத பொதுவாசகர்களும் கச்சிதமாக அதே முடிவுக்கு வந்திருப்பது வியப்பாக இருந்தது. இலக்கியம் வாசகனைத் தொடும் விதம் என்றுமே ஒன்றுதான், அதுவே உண்மையில் படைப்புகளை நிலைநாட்டும் பொது அளவுகோலாக ஆகிறது என்ற எண்ணம் ஏற்படுகிறது. வெற்றுக்கோட்பாடுகள் மூலம் பொய்யான மதிப்பீடுகளைச் சமைக்க முடியும், நிலைநாட்டமுடியாது என்று எண்ணிக்கொண்டேன்.
மேலே சொல்லப்பட்ட விமர்சனக்குறிப்புகளில் பூமணியின் எழுத்தின் அழகியலைப் பற்றிய மிகக்கச்சிதமான வரையறை தன்னியல்பாக அமைந்து வந்திருப்பதைக் காணலாம். பூமணி தமிழின் இயல்பு வாத [naturalist] இலக்கியத்துக்குப் பெருமை சேர்த்த படைப்பாளிகளுள் முக்கியமானவர். அவரது 'பிறகு', 'வெக்கை' ஆகிய இரு நாவல்களும் ' ரீதி ' என்ற சிறுகதைத் தொகுப்பும் அவ்வகையில் முக்கியமானவை , முன்னோடியானவை.இன்றைய தலித் இலக்கியங்கள் பலவற்றிலும் உள்ள ஓங்கிய பிரச்சாரக் குரலோ, பிரச்சினைகளை எளிமைப் படுத்தும் போக்கோ இல்லாத சமநிலை கொண்ட கலைப் படைப்புகள் அவை. அவரது நாவல்கள் ஒரு வகையில் இயல்பு வாதத்தின் உச்சங்களைத் தொட்டமையினால்தான் தமிழில் தொடர்ந்து அடுத்த கட்ட எழுத்துக்கள் [யதார்த்தத்தையும் மீமெய்மையையும் பிணைக்கும் படைப்புகள் என்று இவற்றைத் தொகுத்துக் கூறலாம்]பிறக்க முடிந்தது.
இலக்கிய எழுத்துக்குப் பல அழகியல் வகைமாதிரிகள் உண்டு. பொதுவாக நாமெல்லாம் வாசிப்பது யதார்த்தவாதத்தைத்தான்[ரியலிசம்] என்ன நடந்ததோ அதை நடந்தது மாதிரியே சொல்வதே யதார்த்தவாதம். ஆனால் அதில் கதையை ஆர்வமூட்டும்படி சொல்லக்கூடிய, கதையின் மையத்தை உருவாக்கக் கூடிய, கதையைத் தொகுத்துத் தரக்கூடிய ஆசிரியன் இருந்துகொண்டே இருப்பான். நம்முடைய பொழுதுபோக்குக் கதைகள் பெரும்பாலும் யதார்த்தவாதம் சார்ந்தவை. ஆகவே இந்தவகை எழுத்தை நாம் சிரமம் இல்லாமல் புரிந்துகொள்கிறோம். இந்த இணையதளத்தில் உள்ள அனல்காற்று, ஊமைச்செந்நாய் ,மத்தகம் போன்ற கதைகள் யதார்த்தவாதக் கதைகள். தல்ஸ்தோய், அசோகமித்திரன் போன்றவர்கள் யதார்த்தவாத எழுத்தாளர்கள்.
யதார்த்தவாதத்தில் உள்ள ஆசிரியனின் பங்கேற்பைத் தவிர்த்துவிட்டால் அதுவே இயல்புவாதம் [நாச்சுரலிசம்] . இதில் கதை 'அதன்போக்கில்' விடப்படுகிரது. புறவுலகம் ஒரு புகைப்படக்கருவியில் தெரிவதுபோலப் பதிவாக்கப்படுகிறது. அக ஓட்டங்கள் அப்படியே சொல்லப்படுகின்றன. எதுவும் விளக்கப்படுவதில்லை. மையப்படுத்தப்படுவதில்லை. சுருக்கப்படுவதில்லை. [ அதாவது இப்படி ஒரு பாவனை இந்தவகை எழுத்தில் உண்டு. உண்மையில் சுருக்காமல் மையப்படுத்தாமல் எதையுமே எழுதமுடியாது] இயல்புவாதம் ஆசிரியன் இல்லாமல் இயங்கும் புனைவுலகம் எனலாம்
இயல்புவாத எழுத்து, பண்பாட்டு நுட்பங்களை மிகச்சிறப்பாகக் காட்டக்கூடியது. சிந்தனைகளை முன்வைப்பதற்கு உதவுவது அல்ல. இதற்கு ஒரு முக்கியமான இலக்கிய இடம் உண்டு. தமிழில் எம்.கோபாலகிருஷ்ணன்[ மணற்கடிகை] கண்மணி குணசேகரன் [ அஞ்சலை] .வேணுகோபால் [ வெண்ணிலை- சிறுகதைகள்] போன்றவர்கள் இயல்புவாத எழுத்தின் சிறந்த உதாரணங்கள். பூமணியே அதன் தமிழ் முன்னோடி.
இயல்புவாத எழுத்தைக் கதையோட்டத்தின் சுவாரசியத்துக்காக வாசிக்க முடியாது. அன்றாட வாழ்க்கையில் எப்படி நிகழ்ச்சிகள் செல்கின்றனவோ அதேபோல இயல்பாகத்தான் கதை 'நகரும்'. நிகழ்ச்சிகள் உத்வேகமாக இருக்காது. அன்றாடவாழ்க்கையில் உள்ள வேகமே அதற்கு இருக்கும். ஆனால் அது அன்றாட வாழ்க்கையில் நாம் காணத்தவறும் சிறு சிறு நுட்பங்களைத் தொட்டுச்செல்லும். பூதக்கண்ணாடி வைத்து அன்றாட வாழ்க்கையைப் பார்ப்பது போல என்று வைத்துக்கொள்ளுங்கள். நுட்பங்களை மட்டுமே கவனித்து வாசிப்பவர்களுக்கு உரிய இலக்கிய அழகியல் இது
இத்தகைய எந்த கோட்பாட்டுப்புரிதல்களும் இல்லாத நேரடிவாசகர்கள் புனைவின்மூலமே அழகியலைத் துல்லியமாக வந்தடைந்திருப்பதையே மேலே சுட்டிக்காட்டிய இரு கருத்துக்களும் காட்டுகின்றன. அதுவும் நெடுநாட்கள் முன்வாசித்ததை நினைவுகூர்ந்து சொல்லும்போது இன்னும் முக்கியமானதாகிறது. படைப்பில் எது காலப்போக்கில் நம் மனதில் நீடிக்கிறதோ அதுவே நம்மைப்பொறுத்தவரை அதன் சாராம்சம் என்று சொல்லமுடியும்.
சாரதாவின் பார்வையில் 1. யதார்த்தமான கதையோட்டம் 2. ஜோடனைகளோ வர்ணனைகளோ இல்லாத தன்மை. உண்மையான வாழ்க்கையனுபவத்தை அளிக்கும் இயல்பு 4. சாதாரணமாகவும் குறைத்தும் சொல்லும் முறை ஆகியவை பூமணியின் இயல்புகள். அதற்கு உதாரணமாகக் கந்தையாவின் மரணம் அவரால் சுட்டப்படுகிறது.
கிருஷ்ணப்பிரபு வெக்கைநாவலின் சாராம்சமாக சுருக்கி அளிப்பது மூன்று அம்சங்களை. .1.கதை மாந்தருடனேயே செல்லும் அனுபவத்தை அளித்தல் 2. சின்னச்சின்ன இயல்பான உரையாடல்கள் 3. அன்பால் பிணைக்கப்பட்ட ஓர் உலகத்தை சாதாரணமாக உணர்த்திச்செல்லுதல்.
இரு விமர்சனங்களும் வாசகர்கருத்தாக சுருக்கமாகச் சொல்லப்பட்டிருந்தாலும் துல்லியமாகப் பூமணியின் அழகியலைத் தொட்டுவிட்டிருக்கின்றன. இயல்புவாதத்தின் அழகியலே இதுதான் என ஒரு விமர்சகன் சொல்லிவிட முடியும். இயல்பான,மிகையற்ற, தகவல் சார்ந்த ஓர் உலகத்தை உருவாக்கிக்காட்டுவது அது. 'இது உண்மை, அவ்வளவுதான்' என்று சொல்லிச் செல்லக்கூடியது. அதில் வாசகன் நிகழ்ச்சிகளின் வேகத்தையோ,உணர்வெழுச்சிகளையோ,கவித்துவத்தையோ எதிர்பார்க்கமுடியாது. அவற்றை உருவாக்கும்போதுகூட ஆசிரியரல்ல அந்த வாழ்க்கைதான் அவ்வுணர்ச்சிகளை அளிக்கிறது என அது வாசகர்களை நம்பச்செய்தாகவேண்டும்.
தமிழின் முதல் இயல்பு வாதப் படைப்பு எது? இதற்கு பதில் பல வகைப் படலாம் என்றாலும் முக்கியமான, இலக்கண சுத்தமான, முன்னோடியான, இயல்பு வாதப் படைப்பு ஆர்.ஷண்முக சுந்தரத்தின் 'நாகம்மாள்'தான் என்பது வெளிப்படை. இயல்பு வாதத்தின் இலக்கணம் என்ன? துல்லியமான தகவல்கள், விமரிசனப் பாங்கற்ற சித்தரிப்பு நடை, முற்றிலும் நம்பகமான [அதாவது செய்திச் சித்தரிப்புத் தன்மை கொண்ட] கதையாடல் என்று சிலவற்றைக் கூறலாம். மேற்கே இயல்பு வாதம் இந்த அம்சங்களுடன் அப்பட்டமான அழுக்கு மற்றும் கொடுமைச் சித்தரிப்புகள் முதலியவற்றையும் சேர்த்துக் கொண்டது. அதாவது சித்தரிப்பாளனின் குரல் ஒழுக்க நெறிகளையோ, அழகியல் நெறிகளையோ கூடக் கணக்கில் கொள்ளாத அளவுக்கு நேரடியானதாக மாறியது.
எனினும் தமிழில் அப்படி நடக்கவில்லை. அதே சமயம் நாகம்மாள் கதையில் வரும் பேச்சுகள் அந்தக் காலத்தை வைத்துப் பார்க்கும் போது அப்பட்டமானவையேயாகும். கொங்கு வட்டார வாழ்க்கையின் அறிக்கையாகவும், அப்பட்டமான சித்தரிப்பாகவும் தன்னை பாவனை செய்து கொண்டது நாகம்மாள். [இலக்கியப் படைப்பு எந்நிலையிலும் முன்வைப்பது ஒரு புனைவுப் பாவனையையே, உண்மையை அல்ல. உண்மை அதை வாசிக்கும் வாசகனால் அவன் அந்தரங்கத்தில் உருவாக்கப்படுவது மட்டுமே]. ஆகவே அக்கால கட்ட வாசகனுக்கு அது சுவாரசியம் தரவில்லை,அத்துடன் சற்று அதிர்ச்சியையும் தந்தது. அதை ஒரு முக்கியமான இலக்கியப் படைப்பாக முன் வைத்ததும், விமரிசன பூர்வமாக நிறுவியதும் க.நா.சுப்ரமண்யமே. பிறகு வெங்கட் சாமிநாதன்.
நாகம்மாளுக்குப் பிறகு நீல.பத்மனாபனின் 'தலைமுறைகள்', 'உறவுகள்' இந்த வகை இலக்கியத்தின் முக்கியமான உதாரணங்கள் ஆகின. பிறகு ஹெப்ஸிபா ஜேசுதாசனின் ' புத்தம் வீடு',அதன் பிறகு பூமணியின் வருகை நிகழ்ந்தது. க.நா.சுவைப் பொறுத்தவரை அவர் தொடர்ந்து முன் வைத்த உதாரண இலக்கிய வடிவம் இதுவே. பிறகு வெங்கட் சாமிநாதனும் இப்பார்வையையே கொண்டிருந்தார். இரண்டு அம்சங்கள் இதில் கவனத்துக்கு உரியவை. ஒன்று அக்காலத்தில் சோஷலிச யதார்த்தவாதம் அசாதாரண முக்கியத்துவம் பெற்றிருந்தது. ரகுநாதனின் 'பஞ்சும் பசியும்' இதற்கு முன்னோடியாக இருந்தது. [கடைசியில் ரகுநாதனே இந்த அழகியல் வடிவம் பொருத்தமற்றதும், செயற்கையாக உண்டு பண்ணப் பட்டதுமான ஒன்று என்று கூற நேர்ந்தது, 1992 இல்]. செ.கணேசலிங்கனை மாபெரும் நாவலாசிரியராக முன்னிறுத்திக் கைலாசபதியும், சிவத்தம்பியும் இவ்வடிவத்தைப் பிரச்சாரம் செய்தனர். இதன் வெற்றி உச்சமாக ஜெயகாந்தனின் இலக்கிய திக் விஜயம் அமைந்தது. இவ்வடிவம் அடிப்படையில் எழுத்தாளனின் [சமூக சீர்திருத்த] நோக்கத்தையே தன் மையமாகக் கொண்டிருந்தது.
சோஷலிச யதார்த்தவாதம் என்பது இன்று பொருத்தமில்லாத சொல்லாட்சி. ஆகவே இதை விமரிசன யதார்த்தவாதம் என்று சொல்லலாம். இந்த அழகியல் வடிவம் மீது க.நா.சு மரபுக்குக் கடுமையான அவநம்பிக்கை இருந்தது. ஆசிரியன் குரலை அவர்கள் வடிவத்தில் உட்புகும் புற அம்சமாகவே கண்டனர். படைப்பு என்பது வாசகக் கற்பனையில் உருவாவது என்று நம்பிய அவர்களுக்கு ஆசிரியனின் குரலை மையமாகக் கொண்ட விமரிசன யதார்த்த வாதம் ஒரு வகைத் திரிபு நிலையாக, கலையில் அரசியலின் அத்து மீறலாகப் பட்டது. அந்நிலையில் இயல்பு வாதத்தின் துல்லியமான மெளனம் அவர்கள் விரும்பி ஏற்கும் அழகியல் வடிவமாக இருந்ததைப் புரிந்து கொள்ள முடிகிறது.
நாகம்மாள், தலைமுறைகள், பிறகு ஆகிய நூல்கள் தமிழ் அழகியல் [வடிவ வாத] விமரிசகர்களால் போற்றப் பட்டமைக்கு முக்கியமான காரணம் அவை அவர்களின் தரப்பை விளக்கும் முன்னுதாரணங்களாக அமைந்தன என்பதே. அழகியல் குறித்த பேச்சு இலக்கியத்தில் ஜனநாயகத் தன்மை உருவாவதற்கோ, எளிய மக்களின் வாழ்க்கை இலக்கியத்தின் கருப் பொருள் ஆவதற்கோ எதிரான ஒன்றல்ல என்று காட்ட இவர்கள் விரும்பினார்கள். முற்போக்கு என்பது பிரச்சாரம் மட்டுமல்ல என்று சொல்லவும் இவை பயன்பட்டன. மேலும் அன்று பிரபல இதழ்கள் மூலம் பரவலாக ரசிக்கப்பட்ட ஆர்வி, எல்லார்வி, சாண்டில்யன், பி.வி.ஆர் ரக 'அதி சுவாரசியக்' கதைகளுக்கு மாற்றாக இக்கதைகளை முன் வைக்க இவ்விமரிசகர்கள் முயன்றனர்.
க.நா.சுவுக்கும்,வெங்கட் சாமிநாதனுக்கும் அடிமனதில் இவ்வகைப் படைப்புகள் மீது தான் உண்மையான ரசனை இருந்ததோ என்று இன்று படுகிறது. குறிப்பாக வெங்கட் சாமிநாதனின் இன்றைய விமரிசனங்களைப் பார்க்கும் போது. 'பிறகு' விற்குப் பிறகு நம் இயல்புவாத மரபில் பல முக்கியமான எழுத்துக்கள் உருவாகியுள்ளன. இன்னும் சொல்லப் போனால் விமரிசன யதார்த்தம் எழுபதுகளில் முக்கியத்துவம் இழந்த பின்பு வந்த பெரும்பாலான படைப்பாளிகள் இயல்பு வாத எழுத்தையே தங்கள் பாணியாகக் கொண்டனர். மேலாண்மை பொன்னுசாமி, கந்தர்வன் போன்று சில விதி விலக்குகளே உள்ளன. முதல் தலைமுறையில் பாவண்ணன் [சிதைவுகள், பாய்மரக்கப்பல்] சுப்ர பாரதி மணியன் [மற்றும் சிலர், சுடுமணல், சாயத்திரை] சி.ஆர்.ரவீந்திரன் [ஈரம் கசிந்த நிலம்] சூரிய காந்தன் [மானாவாரி மனிதர்கள்] ஆகியவர்களையும்,அடுத்த தலைமுறையில் பெருமாள் முருகன் [ஏறு வெயில், நிழல் முற்றம், கூளமாதாரி] இமையம் [கோவேறு கழுதைகள், ஆறுமுகம்] சோ.தருமன் [தூர்வை] ஸ்ரீதர கணேசன் [உப்பு வயல், வாங்கல்,சந்தி] தங்கர் பச்சான் [ஒன்பது ரூபாய் நோட்டு] போன்றவர்களையும் முக்கியமாகச் சொல்லலாம். இவை அனைத்துமே வெங்கட் சாமிநாதனின் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளன என்பது விமரிசன ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. அவ்வகையில் பார்த்தால் ஆர். சண்முக சுந்தரம் முதல் பூமணி ஈறாக உள்ள படைப்பாளிகளின் மூலம் இயல்பு வாதத்தை இவ்விமரிசகர்கள் தமிழில் ஆழமாக நட்டு விட்டார்கள் என்பதைக் காணலாம். இன்று வெங்கட் சாமிநாதன் கொண்டாடுவது இவ்வெற்றியைத்தான்.
இவர்களில் பூமணி மேலும் அழுத்தம் பெற்ற /பெற்றாக வேண்டிய படைப்பாளி. நீல. பத்மநாபன் உயர் சாதியை சேர்ந்த வாழ்க்கையை அதன் மதிப்பீடுகளை முன் வைத்த நாவலாசிரியர். அவரது படைப்புலகம் படிப்படியான சரிவையே எப்போதும் சித்தரிக்கிறது. பூமணி தாழ்த்தப் பட்ட ஜாதியில் இருந்து வந்த, அச்சாதியைப் பற்றி எழுதிய படைப்பாளி [அருந்ததியர் அல்லது சக்கிலியர்]. ஆனால் படைப்புக்கு வெளியே இருந்து பெறப்பட்ட எந்தப் புரட்சிகர யதார்த்தங்களையும் அவர் முன் வைக்கவில்லை. கூட்டு அரசியல் குரல்களின் எதிரொலியாகவுமில்லை. இது தமிழில் மட்டுமல்ல இந்திய மொழிகளில் கூட ஒரு ஆச்சரியம்தான். கன்னட மொழியிலும், மராட்டி மொழியிலும் தலித் இலக்கிய இயக்கம் பிறந்து ஒரு தலைமுறை தாண்டிய பிறகு தான் அப்படைப்பாளிகள் கூட்டு அரசியல் குரலுக்கு இலக்கியத்தில் பெரிய இடமில்லை என்று புரிந்து கொள்ள ஆரம்பித்தனர். [சமீபத்தில் தான் தயா பவார், தேவனூரு மகாதேவ ஆகியோர் அப்படி சொல்லியிருக்கின்றனர்]. மாறாக எழுதத் தொடங்கிய காலத்திலேயே தான் எழுதுவது தன்னால் உருவாக்கப்படும் ஒரு புனைவு யதார்த்தமே என்றும், அதற்குப் படைப்பின் அந்தரங்கத் தளத்திலேயே மதிப்பு என்றும் உணர்ந்து கொண்ட படைப்பாளி பூமணி. இலக்கியம் ஒருபோதும் அரசியல் செயல்பாடுகளின் நிழலாக இருக்காது என்று உணர்ந்தவர். தலைமைப் பொறுப்பை எந்நிலையிலும் அரசியல்வாதியிடம், அது எத்தனை புரட்சிகர அரசியலாக இருந்தாலும் கூடத் தந்து விட முன் வராதவர்.
அவரது படைப்புகள் எந்தப் புறக் குரலையும் பிரதிபலிக்கும் வேலையைச் செய்யவில்லை. ஆகவேதான் தமிழில் தலித் இலக்கிய மரபு ஒன்றை உருவாக்க முயன்றவர்கள் பூமணி போன்ற ஒரு பெரும் படைப்பாளி முன்னரே இருந்த போது கூட அவரைப் பொருட்படுத்தவில்லை. அவர்கள் ஒருவேளை அளித்திருக்கக் கூடிய கெளரவங்களை ஏற்கப் பூமணி முன் வரவுமில்லை. முதலும் முடிவுமாக அவர் தன்னை ஒரு படைப்பாளியாக மட்டுமே முன் வைத்தார். அதற்கு மேல் விழும் எந்த அடையாளமும் தன் படைப்பைக் குறுக்கும் என்று அவர் உணர்ந்திருந்தார். "அழகியலுக்குப் பதிலாக அரசியலை" முன் வைக்கும் குரல்கள் எழுந்த கால கட்டத்தில் இலக்கிய அழகியலின் அடிப்படையான வலிமையைக் காட்டும் முன்னுதாரணமாகப் பூமணி இருந்தார். தமிழில் அந்த 'அரசியல்' இலக்கிய வெற்றி பெறவில்லை; பூமணியின் முன்னுதாரணம்தான் வென்றது என்பது சமீப கால வரலாறு.
இயல்புவாதத்தின் நடை மண்ணாலும் இரும்பாலும் ஆக்கப்பட்டது என்று சொல்லப்படுவதுண்டு. பிரபலமான பல ருஷ்யநாவல்களை, குறிப்பாக அலெக்ஸி தல்ஸ்தோயின் சக்ரவர்த்தி பீட்டர் போன்ற நாவல்களை, இரும்பால் உருவாக்கப்பட்ட நாவல் என்று சொல்லலாம். பூமணியின் நாவல் மண்ணால் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு கணத்திலும் மண்ணை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும் நடை அது. மண்ணின் காட்சிகள், மண் சார்ந்த தகவல்கள், மண் சார்ந்த படிமங்கள். கரிசலில் சென்றுகொண்டிருக்கும்போது சிலசமயம் கரிய மண்ணில் நிற்கும் கரிய மரங்களும் வாழும் கரிய மக்களும் மண்ணைக்குழைத்துக்கட்டிய வீடுகளுமாக அங்கே எல்லாமே அந்தக்கரிய மண்ணால் ஆனவையோ என்ற பிரமையை உருவாக்கும். அந்த அனுபவத்தைப் பூமணியின் நடை எப்போதும் அளித்துக்கொண்டிருக்கிறது.
தமிழில் அப்படி மண்ணால் ஆன நடை கொண்ட முதல் படைப்பாளிகள் என ஆர்.ஷண்முகசுந்தரம் , கி.ராஜநாராயணன் இருவரையும் சொல்லலாம். கரிசல் மண்ணில் இருந்து கி.ராவையும் கொங்குமண்ணில் இருந்து ஷண்முகசுந்தரத்தையும் பிரித்துப்பார்க்கமுடியாது. ஷண்முகசுந்தரத்தின் 'சட்டிசுட்டது' தமிழில் வேளாண்மை வாழ்க்கை பற்றி எழுதப்பட்ட முதல் பெரும்படைப்பு என்று சொல்ல முடியும். மண்ணைக் கிண்டி மண்ணில் வாழ்ந்து மறையும் பெரிய பண்ணாடி மண்ணின் ஒரு பகுதியாகவே தோன்றும் அந்த மகத்தான பிரமையே அந்நாவலை இலக்கியமாக ஆக்குகிறது. அதன்பின் மண்ணின் சுவையை ஒவ்வொரு வரியிலும் தேக்கிக்காட்டிய கி.ராஜநாராயணனின் ஆக்கங்கள்.
கி.ராஜநாராயணனுக்குப் பின் பூமணியையே சொல்லவேண்டும். ஆனால் ஒரே ஒரு தனிப்படைப்பை நடுவே வைக்கலாம். கு.சின்னப்பபாரதியின் தாகம். அந்நாவலின் பிற்பகுதி கட்சிப்பிரச்சாரத்தன்மை கொண்டதாகச் சுவைகெட்டாலும் கூட அதன் முதல்பகுதியில் மண் ஒரு தனிமனித ஆன்மாவுடன் கொண்டுள்ள உறவின் அற்புதமான சித்திரம் உள்ளது. சந்தைக்குப் போயிருந்த கதாநாயகன் மண்மணத்தை முகர்ந்ததும் தன் ஊரில் மழை பெய்திருக்கிறதென உணர்ந்து ஓடிவரும் காட்சி சட்டென்று மனதில் தோன்றுகிறது. மழை ஊறிய மண்ணின் மணத்தை அடைந்து அவன் குதூகலிப்பது அந்நாவலின் சாராம்சத்தைக் காட்டும் காட்சி.
மேலே சொல்லப்பட்ட படைப்பாளிகளின் நடையில் இருந்து பெரிதும் வேறுபட்டது பூமணியின் நடை. ஆர்.ஷண்முகசுந்தரம் இயல்புவாத அழகியல் கொண்டவர் என்றாலும் அவரது மொழிநடை,கதைசொல்லிக்குரிய சுருக்கம் கொண்டதுதான். கி.ராஜநாராயணன் மகத்தான கதைசொல்லி. ஒரு நவீன குலக்கதைப்பாடகன் அவர். அந்தக்கதைசொல்லியின் வித்தாரமும் தளுக்கும் தரிசனமும் இழைந்தோடும் நடை அவருடையது. அவரது புனைவுலகில் இருந்தே ஊக்கம் கொண்டு எழுதவந்ததாகப் பூமணி சொன்னாலும்கூட அவரது நடை முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. அது கி.ராஜநாராயணன் நடைபோலவே நேரடியான உரையாடல்தன்மை கொண்டது. ஆனால் எந்தவித அலங்காரமும் இல்லாமல் யதார்த்தமாகப் பேசுவது போலத் தெரிகிறது.
கி.ராஜநாராயணனின் மொழிநடைக்கும் பூமணியின் மொழிநடைக்கும் முதல்பார்வையில் பெரிய வேறுபாடேதும் இல்லை. கி.ராவின் மொழிநடை 'நடக்கும்போது' பூமணிபோலவே இருக்கிறது. ஆனால் சட்டென்று அது பறக்க ஆரம்பித்துவிடுகிறது. பூமணியின் நடை நடக்கும், பின் கண்ணுக்குத்தெரியாமல் மண்ணுக்கு அடியில் ஊர்ந்துசெல்ல ஆரம்பித்துவிடும். கரிசலின் இந்த இரு பெரும் ஆசிரியர்களின் நடையை ஒப்பிட்டுப்பார்ப்பதும் அந்த இலக்கியத்தையும் மண்ணையும் அறிந்துகொள்வதற்கான மிகச்சிறந்த வழிமுறையாக அமையக்கூடும்.
கி.ராஜநாராயணன் மிக சகஜமாக பேச்சுப்பாவனையில் கதையைச் சித்தரித்துச்செல்லக்கூடியவர். ' பெண்கள் இருக்கும் இடங்களில்தான் சதா அவனைப் பார்க்கலாம். ஏதாவது அதிசயமான சங்கதியைக் கேள்விப்பட்டால் பட்டென்று கையைத்தட்டி இடதுகை மணிக் கட்டின் மேல் வலது முழங்கையை ஊன்றி ஆள்காட்டி விரலைக் கொக்கிபோல் வளைத்துத் தன் மூக்கின்மேல்ஒட்டவைத்துக் கொள்வான். அகலமான கருஞ்சாந்துப் பொட்டை வைத்து வெற்றிலை போட்டுக்கொண்டு கீழ் உதட்டைத் துருத்தியும், நாக்கை நாக்கை நீட்டியபடியும் சிகப்பாகப் பிடித்திருக்கிறதா என்று அடிக்கடி பார்த்துக்கொள்வான். தலைமுடியை அள்ளிச் சொருகிக் 'கொப்பு' வைத்துப் பூவைத்துக்கொள்ளுவான். அவன் அணிந்திருக்கும் பாடி பெண்கள் அணிந்துகொள்ளும் ஜம்பரின் மாடலில் அமைந்திருக்கும். மேலே போட்டுக்கொள்ளும் துண்டை அடிக்கடி மாராப்பை சரி பண்ணுவதுபோல் இழுத்து இழுத்து
விட்டுக்கொண்டு இடுப்பை இடதும் வலதும் ஆட்டி அசல் பெண்களைப்போல் கையை ஒய்யாரமாக வீசி நடப்பான். எவ்வன புருஷர்களைக் கண்டுவிட்டால் கோமதிக்கு எங்கோ இல்லாத வெட்கம் வந்துவிடும்.' [கோமதி] என சாதாரணமாக ஒரு கதைமனிதரைக் காட்சிப்படுத்துவார்.
மன ஓட்டங்களை அல்லது மனநிலைகளைக்கூட கி.ரா நிகழ்ச்சிகளாகவும் காட்சிகளாகவும்தான் சொல்கிறார். 'ஒருநாள் தெருவில் ஒரு தீப்பெட்டிப் படம் ஒன்றை லட்சுமி கண்டெடுத்தாள். படத்தில்ஒரு நாய் இருந்தது. அழுக்காக இருந்ததால் படத்தில் எச்சிலைத் துப்பித் தன்பாவாடையால் துடைத்தாள். இதனால் சில இடங்களில் இருந்த அழுக்கு படம் பூராவும்பரவிற்று. ஆனால் லட்சுமிக்கு மிகவும் திருப்தி, படம் சுத்தமாகிவிட்டதென்று.
படத்தை முகத்துக்கு நேராகப் பிடித்துத் தலையைக் கொஞ்சம் சாய்த்துக் கொண்டு பார்த்தாள். அப்புறம் இந்தப் பக்கமாகச் சாய்த்துக் கொண்டு பார்த்தாள்.சிரித்துக் கொண்டாள். காண்பிக்கப் பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா என்றும் சுற்றும் முற்றும் பார்த்தாள். ஒருவரும் இல்லை. வீட்டை நோக்கி வேகமாக நொண்டிஅடித்துக் கொண்டே போனாள், சந்தோஷம் தாங்க முடியாமல்.'[கதவு] அந்தக்குழந்தையின் உள்ளம்தான் இந்தக்கதையில் காட்சியாக்கப்பட்டிருக்கிறது
இவ்விரு அம்சங்களையும் நாம் பூமணியின் நடையில் ஏறத்தாழ இப்படியே காணமுடியும். 'நேற்றுப் போலிருக்கிறது. இடுப்புத்துணியோடு சின்னப்பயலாக வந்தான். பம்பைத்தலையும் சொறட்டை உடம்பும். பேச்சுத்தானெ பேசுவானே. அந்தக் குறும்பு இன்றைக்கு கழுமொரடு மாதிரி வளர்ந்துவிட்டபிறகும் போகவில்லை. கலியாணம் முடித்திருந்தாலும் ரெண்டு பிள்ளைக்குத் தகப்பனாகியிருப்பான்' [பிறகு] ஒரு கதைமனிதனின் தோற்றத்தையும் இயல்பையும் சாதாரணமான பேச்சுப் போல இயல்பாக அறிமுகம் செய்கிறார் பூமணி. பெரும்பாலும் கிராமங்களில் செய்வதுபோல ஒருவரின் தோற்றத்தையும் இயல்பையும் இணைத்துக் காட்டுகிறார். நுண்ணிய அவதானிப்பு என அப்போது எதுவும் தோன்றுவதில்லை. ஆனால் கச்சிதமாக இருக்கும். கருப்பனின் இயல்பில் எப்போதுமுள்ள குறும்பு அந்த முதல் விவரணையிலேயே வந்து விடுகிறது. அவனுடைய உடல்மொழியும்.
ஒரு சிறுவனின் மன ஓட்டத்தைப் புறக்காட்சிகள் வழியாகச் சித்தரிக்கிறார் பூமணி. 'மைதானத்தைச் சுற்றி ஏகக் கூட்டம். நடுவில் விளையாட்டுக்காரர்கள் சிதறிக் கிடந்தார்கள். எல்லாரும் பெரிய பெரிய ஆட்கள். சிலருக்கு மண்டை வழுக்கை சாயங்கால வெயிலுக்கு மின்னியது. வற்றிய குளத்து அயிரை மீன்களாக அவர்கள் துள்ளி விளையாடும்போது பையன்களாகிவிட்டார்கள். அவன் விளையாட்டைச் சொகமாகச் சுமந்து கொண்டு வீட்டுக்கு வந்தான். மேச் காய்ச்சல் சின்னப்பையன்களைப் பிடித்துக் கொண்டது. வாழைத்தார்க் காம்பு வைத்து ரோட்டில் ஹாக்கி விளையாடினார்கள். கல்லு கூட பந்துதான். அப்படி விளையாடணும் போல் எச்சூறும். அம்மா விடணுமே. சே இந்த அம்மா ரொம்ப மோசம்' [நிலை] இந்த வரியை எந்த கி.ராஜநாராயணன் ஆக்கங்களுக்குள்ளும் கலந்து விடலாம். தீப்பெட்டியைக் கண்டடைந்த கிராவின் கதாபாத்திரத்துக்கும் கால்பந்தை முதலில் பார்க்கும் பூமணியின் கதாபாத்திரத்துக்கும் பெரிய வேறுபாடு ஏதுமில்லை.
அதே சமயம் மிகநுணுக்கமான பல வேறுபாடுகளை இருவர் நடையிலும் காணலாம். அந்த வேறுபாடுகளே பூமணியை இயல்புவாத அழகியல்காரராக நமக்குக் காட்டுகின்றன. கி.ரா. அபூர்வமாக நேரடியான பேச்சுவழக்கிலும் கதை சொல்வதுண்டு. 'அவருக்கு இருப்பு வாசத் திண்ணெதான். எப்படிக் கூடியும், ஓராளாவது நெல்யம் , பாக்க வந்துரும், கொஞ்சம் , வெத்திலைப் பாக்கு, ஒரு பொடிப்பட்டை, கால்ரூவா தெச்சணை. கால்ரூவாதான் .. ண்ணாலும் சும்மாப்போகுதா ? கறிக்குத் தேங்கா வாங்கிக்கிடலாமில்லெ. அந்தப் பொடிப் பட்டை தான் உசிரு' [தாச்சணியம்] பூமணியின் கதைகளில் இந்த அம்சத்தை அனேகமாகக் காணமுடியாது. ஏனென்றால் அந்தக்கதைசொல்லியின் தனியாளுமை கதைமொழியில் குடியேறிவிடுகிறது. அவரது விமர்சனமும் தரிசனமும் கதைக்குள் நிறைகிறது. இயல்புவாத அழகியலுக்குரிய உள்ளது உள்ளபடி என்ற அம்சம் பலவீனப்படுகிறது. பூமணி கதையை எப்போதும் 'பற்றற்ற' புறவயத்தன்மையுடன் காட்டவே விரும்புகிறார்.
இன்னொரு அம்சம் கி.ராஜநாராயணனின் வர்ணனைகள். 'ஒரு நாளைக்கு உருத்த பச்சை வெங்காயம் கொண்டுவந்து 'கடித்துக்' கொள்ளக் கொடுப்பாள். ஒரு நாளைக்குப் பச்சை மிளகாயும், உப்பும். பச்சை மிளகாயின் காம்பைப் பறித்துவிட்டு அந்த இடத்தில் சிறிது கம்மங்கஞ்சியைத் தொட்டு அதை உப்பில் தோய்ப்பார்கள். உப்பு அதில் தாராளமாய் ஒட்டிக்கொள்ளும். அப்படியே வாயில் போட்டுக்கொண்டு கசமுச என்று மெல்லுவார்கள். அது, கஞ்சியைக் 'கொண்டாகொண்டா' என்று சொல்லுமாம்! இரவில் அவர்களுக்கு வெதுவெதுப்பாகக் குதிரைவாலிச் சோறுபோட்டு தாராளமாய்ப் பருப்புக்கறி விட்டு நல்லெண்ணெயும் ஊற்றுவாள். இதுக்குப் புளி ஊற்றி அவித்த சீனியவரைக்காய் வெஞ்சனமாகக் கொண்டுவந்து வைப்பாள். இரண்டாந்தரம் சோற்றுக்குக் கும்பா நிறைய ரஸம். ரஸத்தில் ஊறிய உருண்டை உருண்டையான குதிரைவாலிப் பருக்கைகளை அவர்கள் கை நிறைய எடுத்துப் பிழிந்து உண்பார்கள்.' [கன்னிமை]
மிகுந்த ரசனையோடு சொல்லிச்செல்லப்படும் சுவையனுபவங்கள் கி.ராஜநாராயணனின் கதைகளின் அழகியலைத் தீர்மானிக்கின்றன. அந்தக்கதைகளின் மையத்துடன் நேரடியாக அவை சம்பந்தப்பட்டிருக்குமென ஒரு உறுதியுமில்லை. ஆனால் அவை இல்லையென்றால் அந்தக்கதை மிகப்பலவீனமாகிவிடுவதையும் காணலாம். பூமணி அந்த வரிகளை எழுதியிருந்தால் ஒருகதாபாத்திரம் என்ன சாப்பிட்டது என்ற 'தகவல்' மட்டுமே அக்கதையில் இருக்கும். ஒருபோதும் அந்த சுவையைச் சொல்ல, அந்த நேரத்து மன எழுச்சியை விவரிக்க, ஆசிரியர் முயலமாட்டார். ஆனால் 'தேவையற்ற ஒரு வர்ணனையும் இல்லை' என்று பூமணியின் கதையுலகை ரசித்துக்கூறும் அதே வாசகப்பிரக்ஞை 'தேவையற்ற' கி.ராஜநாராயணனின் வர்ணனைகளை 'அனுபவத்தை அப்படியே பகிர்ந்துகொள்ளும் வர்ணனைகள்' என்று விதந்தோதக்கூடும்.
வறண்ட கரிசலில் பசித்தலையும் சிறுவர்கள் அணில் பிடித்துச் சுட்டுத்தின்கிறார்கள். 'சுட்டெடுத்த அணில்களை சப்பையும் சதையுமாப் பிய்த்து சூடேறப் போட்ட கற்களில் ஒற்றி நீருறிஞ்ச வைத்தார்கள். பிறகு மூன்று பங்காய் வைத்துக் கல்லாங்கூறு போட்டுப் பகிர்ந்து தின்றார்கள். கையைப் புழுதியில் துடைத்துவிட்டு அவர்கள் எழுந்து பார்த்தபோது ஆடுகள் அனேகமாய்த் தென்னமரத்துக் கிணற்றை எட்டியிருந்தன' என மூன்றே வரிகளில் அந்த அனுபவத்தைப் பூமணி கறாராகக் கடந்துசெல்கிறார். கி.ராஜநாராயணன் இந்த இடத்தை எப்படி எழுதியிருப்பார் என ஒரு வாசகன் ஊகிக்கமுடிந்தால் பூமணியின் அழகியலை எளிதில் அவனால் வகுத்துக்கொள்ளமுடியும்.
காட்சியை மிகக்குறைவான தகவல்களுடன் சொல்லவே பூமணி எப்போதும் முயல்கிறார். 'கரிசல் புழுதியை முகர்ந்த வெள்ளாடுகள் விதறுபட்டு ஓங்கரித்தன. பட்டுக்கிடந்த இலந்தைச்செடியையும், கொம்பட்டி நெற்றையும் கொறிப்பதுடன் அவை அடங்குவதாயில்லை. ரோட்டோரம் சில தோட்டப் பசப்புக்களைத் தவிர எட்டாக் கை வரையில் ஒரே கரிசல் விரிப்புத்தான் கருகிக் கிடந்தது.' என்றோ ' கமலை மாடுகள் கக்கிய நுரைக்குமிழ்கள் பறந்தவண்ணமிருந்தன. கமலையடித்த கிழவர் கூனைக்கொருக்க கிணற்றுக்குள் எட்டிப் பார்த்துக்கொண்டார். ஒரு கூனை தண்ணீர் ஊற்ற மாட்டு வாலைப் பிடித்துக்கொண்டு ரொம்ப தூரம் வடத்தில் உட்கார வேண்டியிருந்தது' என்றோதான் பூமணி காட்சிகளைச் சொல்கிறார். இந்த சிறிய வரிகளுக்குள் கரிசலின் வறட்சியும் வெறுமையும் துல்லியமாகவே பதிவாகின்றன. பட்டுக்கிடந்த செடிகளின் நெற்றுக்களைக் கொறிக்கும் ஆடுகளும், கமலையில் நெடுநேரம் சோர்ந்து அமர்ந்து நீர் இறைக்கும் கிழவரும் இரு திரைப்படக் காட்சித்துணுக்குகள் போலக் கரிசலின் மொத்த விரிவையும் நமக்குக் காட்டிவிடுகின்றன.
கரிசலின் இரு கதைசொல்லிகள் கி.ராஜநாராயணனும் பூமணியும். மிக நெருக்கமானவர்கள், மிக தூரமானவர்கள். ஒருவரை ஒருவர் நிரப்பிக்கொள்ளும் இரு கலைஞர்கள். அவர்களால் கரிசல் தமிழிலக்கியத்தில் அழியாத இடம் பெற்றது. 'முள்வேலிக்குள் சிக்கிக் கொண்ட கிழிந்த துணியெனப் படபடத்தபடியே ஆகாசத்தில் ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கும் சூரியனும், ஆட்டுஉரல்களில்கூட நிரம்பி வழியும் வெயிலும், குடிநீருக்காக அலைந்து திரியும் பெண்களும், கசப்பேறிய வேம்பும், கானலைத் துரத்தியலையும் ஆடுகளும், தா
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
