Jeyamohan's Blog, page 2262
December 25, 2011
அன்பை வாங்கிக்கொள்ளுதல்…[கடலூர் சீனு]
20-2-2011
இனிய ஜெ.எம்.,
'யானை டாக்டர்' எடுப்பிலேயே க்ளைமேக்ஸ் பாராவைத்தான் படித்தேன். கதை வரிசையைப் படித்த பாதிப்பு. யானை டாக்டர் அதிலும் வித்தியாசம். வெல்லத்தை எந்தப்பக்கம் கடித்தாலும் இனிக்கும் என்பதுபோல உச்சங்களால் மட்டுமேயான கதை. யானை விரும்பி நண்பர் ஒருவரிடம் அக்கதை பற்றிப் பேசினேன். அவர் முதுமலையில் எடுத்த வீடியோ ஒன்றைக் காட்டினார். ஜீப்பில் இருந்தவாறே, பிறந்து சிலவாரமான யானைக் குட்டியை வீடியோ எடுக்கிறார். தூரத்திலிருந்து அம்மா யானை, குட்டிக்கு ஆபத்து என்று கருதி ஓடி வருகிறது. நம் நண்பர் ஜீப்பைக் கிளப்பி ஓட்டியபடி படம் எடுக்கிறார்.
செடிகள் முறிய, புழுதி பறக்க, உடம்பெல்லாம் ஏதோ களிமண் பூச்சு உதறிப் பறக்க, யானை ஓடி வருகிறது. ஓடிவரும் யானை இத்தனை வேகமாக வரும் என்பதையே இப்போதுதான் பார்த்தேன். உருண்டுவரும் பெரும்பாறை எனத் தோன்றவைக்கும், அடிவயிற்றில் கிலி கிளப்பும் காட்சி. இதுதான் கோயிலில் பிச்சை எடுக்கிறது என்பதை நினைத்தால் அடப்பாவமே என்றுதான் இருக்கிறது. ஒரு மிருகம், ஒரு மனிதன் சக மனிதனை எந்த அளவு புரிந்து கொள்கிறானோ அதைக்காட்டிலும் நுட்பமாகப் புரிந்து கொள்கிறது தன் எஜமானை என்பதைப் பலமுறை கண்டிருக்கிறேன்.
மற்றொரு வீடியோ. ஆப்பிரிக்கக் காட்டில் பெண்சிங்கங்களின் எண்ணிக்கை குறைகிறதா என ஆராய ஒரு மனிதர் செல்கிறார். சிங்கங்களின் எண்ணிக்கையைக் கூட்டும் முயற்சியில் இருக்கிறார் அவர். அவரிடம் கால் ஒடிந்த சிங்கக்குட்டி ஒன்று இருக்கிறது. அதை குணமாக்கி கழுத்தில் சிப் மாட்டி மீண்டும் காட்டுக்குள் சில மாதம் கழித்து விட்டுவிடுகிறார்.
சில வருடங்கள் கழித்து அதே காட்டுக்கு வருகிறார். சிப் தரும் சிக்னல் மூலமாக அந்த சிங்கம் உள்ள இடத்தை அடைகிறார். காத்திருக்கிறார். சிங்கம் வருகிறது. தூரத்தில் இருந்து அவரைப் பார்க்கிறது. உடல் விரைக்கிறது. கூர்ந்து பார்க்கிறது. அதன் உடல்மொழி சட்டென மாறுகிறது. அட நீயா? என்பதான பாவம். துள்ளி ஓடிவந்து, அவர் மீதேறி விழுந்து புரண்டு நக்கி, உருமி, செல்லக் கடி கடித்து – ஒரே கணம் 100 வயலினின் ஒலி நம்மை சுழற்றி அடிக்கிறது.
உருண்டு புரண்டு இருவரும் ஆசுவாசம் ஆனபின்தான் கிளைமேக்ஸ். தூரத்துப் புதருக்குள் இருந்து அதன் 2 குட்டிகள் தத்தித் தத்தி நடந்து வருகின்றன. அவற்றை வாஞ்சையோடு கொஞ்சுகிறார். தூரத்துப் புல்வெளிக்குள் நின்றபடி வேடிக்கை பார்க்கின்றன மற்ற சிங்கங்கள். அதில் பெண்குட்டி ஒன்றுக்கு சிப் மாட்டுகிறார். விட்டுவிட்டுத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி மீள்கிறார். இசையருவி வீழ அந்த பி பி சி டாகுமெண்டரி முடிந்தது. எனக்குள் படிமங்களாகிப் போனவைகளில் ஒன்று அந்த டாகுமெண்டரி.
வீட்டுக்கு எப்போதும் லட்சுமி என்ற மாடு வரும். அதன் எஜமான் வீடு 2 கி.மீ. தள்ளி. நகர்முடிவில் கெடிலம் ஆற்றுப் புல்வெளி ரயில்வே பாலம். யாரும் இருக்கமாட்டார்கள். அங்கேதான் லட்சுமி புல்மேயும். ஒருமுறை ரத்தம் ஒழுக ஒழுக நொண்டியபடி மிகமிகப் பக்கம் இருக்கும் அதன் எஜமானர் வீட்டை விட்டுவிட்டு, 2கிமீ தள்ளி இருக்கும் எங்கள் வீட்டுக்கு வந்து வராண்டாவில் படுத்துவிட்டது. பின்காலில் பதிந்திருந்தது ஒரு முழு பீர்பாட்டில் மூடி. லாடம் அடிப்பவரைக் கூட்டிவந்து அதன் குளம்பை சரி செய்தோம். மாட்டு ஓனர் ரொம்ப ஆச்சர்யப்பட்டார். லட்சுமி இங்க ஏன் வந்தது அப்படின்னு.
தாத்தா (அம்மாவோட அப்பா) ஒரு குரங்கு வளர்த்தார். மரத்தில்இருந்து விழுந்த குட்டி. அண்ணன் அதற்குக் கூடவே வளர்ந்தார். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நம் இந்தியப் பண்பாடு எனத் திரும்பத்திரும்ப சத்தம் போட்டு மனதுக்குள் உருவேற்றுவார். குட்டி, அண்ணன் மடியில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கும். என் அண்ணனின் பள்ளி நாட்கள் அந்தக் குட்டியோடுதான் கழிந்தது. அதன் பேர் ரஜி. தாத்தா என்றால் அதற்கு உயிர். யாருக்கும் அடங்காக ரஜி,தாத்தா ஒரு அதட்டுப் போட்டால் நின்றுவிடும். வயது ஏற அதன் தொல்லைகளும் ஏறின. பற்கள் எல்லாம் ராவிய பின்னும் பிடிக்காதவர்களை ரத்தம் வரக் கடித்து வைத்தது. தொல்லை தாங்கமுடியவில்லை. ஒருநாள் அதுவாகவே காணாமல் போய்விட்டது. எல்லாரும் சில நாள் கவலைப்பட்டுவிட்டு விட்டுவிட்டனர்.
சில வருடம் கழிந்தது. தாத்தாவுக்கு ஹார்ட் அட்டாக். ஆஸ்பிடலில் சேர்த்தோம். ஒரு மாதப்படுக்கை. அங்கே ஜன்னலுக்கு வெளியே ஓர் குரங்கு. தாத்தா அறையையே சுற்றிச் சுற்றி வரும். யார் எது கொடுத்தாலும் சாப்பிடாது. ஆனால் இரவுபகலாக அதே அறையைச் சுற்றிச் சுற்றி வரும். தாத்தா தேறியபின் கண்டுகொண்டார். அது ரஜி. டிஸ்சார்ஜ் ஆகி ஆட்டோவில் ஏறினார். சாலை பூராப் பக்கத்து மரம், காம்பவுண்ட், கட்டிடம் என துரத்தி வந்தது. தாத்தா, வீட்டு வாசல் ஏறினார். ரஜி வந்து காலடியில் அமர்ந்தது. தாத்தா ஒரு கேரட்டை எடுத்துத் தந்தார். வாங்கிக் கடித்துத் தொண்டையில் அதக்கியது. அவரைப் பார்த்தது. அவரும் கலங்கி இருந்தார். மெல்ல அதன் தலையில் செல்லமாகத் தட்டினார். நிமிர்ந்து ஒருமுறை அவர் முகத்தைப் பார்த்துவிட்டு விறுவிறு என எதிர்சாரி மரத்தில் ஏறி ஓடி மறைந்தது. ரஜி குரங்குக் கூட்டத்தோடு சேரமுடியாத ரஜி.
இரவு நடுஜாமம் வீடு திரும்புவேன் என நகர்நாய் முழுக்க வால்குழைத்து என் பின்னால் வரும். எல்லா நாய்க்கும் என்னைத் தெரியும். ஆம் அவைகளுக்கு என்னைத் தெரியும். எந்த ஊரிலும் நாயோடு உண்டு உறங்கும் ஒரு பிளாட்பாரப் பரதேசியைப் பார்க்கலாம். ஒரே ஒரு நாய்க்குட்டி போதும். நாம் அனாதை அல்ல என்று புரிந்துகொள்ள. நாம் இயற்கையால் கைவிடப்பட்ட மிருகங்களல்ல. மிருகங்களால் நேசிக்கப்பட்ட, நேசிக்கப்படும் நாம். "மகத்தான நாம்" நாம் நாம்! 'வானில் பறக்கும் புள்ளெலாம் நாம்'. எப்போதும் நான் தொட்டு மீளும் இந்த மனவிரிவை இன்னொருமுறை உங்கள் எழுத்தால் உண்டாக்கித் தந்தீர்கள்.
மனங்களை உள்ளடக்கிய மகாமனம். பிரிவேயற்ற தன்மை இந்தக்கணம். மானசீகமாக உங்களைக் கட்டியணைத்து முத்தமிடுகிறேன்.
சீனு
கடலூர்
தொடர்புடைய பதிவுகள்
முகம் விருது
அன்புள்ள ஜெயமோகன் — ஒரு நூல்
கடிதங்கள்
கடிதங்கள்
அறம் வாழும்-கடிதம்
யானை- கடிதம்
யானைடாக்டர்-ஓர் உரை
வாழும் கணங்கள்-கடிதங்கள்
இலங்கையில் இருந்து ஒரு கடிதம்
யானை டாக்டர் இலவச நூல் வினியோகம்
காந்தி ஒரு கட்டுரைப்போட்டி
காந்தி இன்று இணையதளத்தை நடத்திவரும் நண்பர் சுநீல் கிருஷ்ணன் காந்தியைப் பள்ளி மாணவர்களிடம் அறிமுகம் செய்வதற்காக ஒரு கட்டுரைப்போட்டி நடத்தினார். அந்த திட்டம் பற்றி அவர் ஒரு கடிதத்தில் இவ்வாறு விவரித்திருந்தார்
"ஜெ எழுதி சென்ற வருடம் நான் வாசித்த முதல் புத்தகம் இன்றைய காந்தி.பாடப் புத்தகங்களிலும் நண்பர்களுடனான பேச்சுக்கள் மூலமும் நான் அறிந்த காந்தி மறைந்து வேறொரு காந்தியாக அவர் உயிர் பெறத் தொடங்கினார்.பின்பு காந்தியத்தின் நடைமுறை சாத்தியத்தை எடுத்து இயம்பும் விதமாக ஹசாரே போராட்டம் அமைந்தது.ஹசாரேவுக்காகத் தளம் தொடங்கிப் பின்பு அது காந்திக்காக மாறியது.
காந்தி , உண்மையில் எனக்கு வியப்பளித்த ஆளுமை, இது தான் காந்தி என்று வரையறுக்க முடியாத ஒரு ஆளுமையாக , தோண்டத் தோண்டப் பெரும் வியப்பாக வளர்ந்தது.தினமும் அவருடைய ஆளுமை சார்ந்து ஏதோ ஓர் புதிய பரிமாணத்தைத் தொடர்ந்து கண்டுகொண்டே இருக்கிறேன்.ஒரு குழந்தை கையில் கிடைக்கும் க்யூப் போல காந்தியின் மிகப் புதிரான ஆளுமையைப் புரட்டிக் கொண்டே இருக்கிறேன். காந்தியை அறிதலும், புரிதலும் காந்தி தளத்திற்காகத் தேடித்தேடி வாசிக்கத் தொடங்கிய பின்பு என்று தான் கூறவேண்டும்.
பின்னர் யுவன் கவிதையரங்கு நிகழ்ந்த பொழுது- நான் அரங்கரிடத்திலும், கிருஷ்ணன் இடத்திலும்- விஷ்ணுபுர இலக்கிய வட்டம் போல நாம் இன்றைய காந்தி சமூக வட்டம் என்று ஒன்று தொடங்க வேண்டும் என்று சொன்னேன், காந்தியை சரியான விதத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே அதன் நோக்கம். கிருஷ்ணன் சொன்னது- முதலில் தளம் அதே ஆர்வத்தோடு அடுத்த வருடம் வரை தாக்குப் பிடிக்கிறதா என்று பார்ப்போம் என்பதே.அது நியாயமாகவே பட்டது. காந்தியை வாசிக்க வாசிக்க அவர் உண்மையில் பெரும் பொறுமையின்மையை ஏற்படுத்தினார், ஏதாவது செய்தாக வேண்டும் எனும் எண்ணம் அரித்துக்கொண்டே இருந்தது. நான் உறுப்பினராக உள்ள லயன்ஸ் சங்கத்தில் மாணவர்களுக்கு அக்டோபர் 2 போட்டி நடத்த வேண்டும் என்று கேட்டேன், முதலில் சரியென்று சொன்னவர்கள் பின்னர் ஆர்வமிழந்து விட்டனர்.
இறந்துபோன பள்ளி நண்பனின் நினைவாக நாங்கள் சில நண்பர்கள் மற்றும் அந்த நண்பனின் தாயார் இணைந்து ஒரு அறக்கட்டளையை இரண்டு வருடங்களாக நடத்தி வருகிறோம்.இது ஒரு சிறு அறக்கட்டளை தான், கல்வி உதவி அளிப்பதே முக்கிய நோக்கம், வேறு சில சிறிய பணிகளிலும் ஈடுபட்டு வந்தோம்.மணியம்மா ( நண்பனின் அம்மா ) அவர்களிடம் லயன்ஸ் சங்கம் கவிழ்த்ததைப் பற்றி வருந்திக் கொண்டிருந்தேன், அப்பொழுது நமது அறக்கட்டளை சார்பாக இதை எடுத்து நடத்தலாம் என்றார். அதன் பிறகு காந்தி தள நிர்வாகி நண்பர்களுடன் கலந்து கொண்டு , தலைப்பை முடிவு செய்தோம். எங்கள் பகுதியில் உள்ள ஐந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கட்டுரைப் போட்டியை மட்டுமேனும் நடத்துவதாக முடிவானது.
மேலும் இதை இனிவரும் காலங்களில் பெரிய அளவில் செய்ய வேண்டும் எனும் திட்டம், அதனால் சிறிய அளவிலேனும் இங்கு முயற்சித்துப் பார்க்கலாம் , மாணவர்கள் மத்தியில் காந்தியைப் பற்றிய புரிதல் என்ன என்பதப் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு. மேலும் பள்ளியில் காந்தியைப் பற்றி இருக்கும் நேர்மறை சித்திரம், பொதுவாகக் கல்லூரி நுழைந்தவுடன் எதிர்மறையாக மாறிவிடுகிறது, அதற்குப் பொதுவில் காந்தியைப் பற்றி முன்வைக்கப்படும் அடிப்படையற்ற வசைகளும் , அவதூறுகளும் காரணம்.இதை உடைக்க வேண்டுமெனில் அதற்கு முன்பே காந்தியை சரியாகச் சென்று சேர்க்க வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியிலும் வெவ்வேறு அனுபவம் . தலைப்பு மற்றும் விதிமுறைகளை ஒரு கடிதமாக அச்செடுத்துத் தலைமை ஆசிரியரிடத்தில் நேரில் கொண்டு சேர்த்து விளக்கிக் கூறினோம். பள்ளியிலிருந்து எத்தனை பேர் வேண்டுமானாலும் பங்குபெறலாம், கட்டுரைக்கான தாள் நாங்களே கொடுத்து விடுகிறோம். பள்ளிக்குத் தோதான தேதியில், அங்கே ஒரு அறையில் வைத்துப் போட்டியை நடத்தி முடித்துக் கொள்ளலாம் என்பதாகத் திட்டம்.பள்ளி செய்ய வேண்டியது, எங்களுக்குத் தேதி குறித்துக் கொடுப்பதும், மாணவர்களிடம் தெரிவிப்பதும் மட்டும் தான்
ஆனால் பள்ளி ஆசிரியர்களின் விட்டேற்றி மனோபாவம் உண்மையில் விரக்தியை ஏற்படுத்தியது, ஒவ்வொரு பள்ளிக்கும் மூன்று முறைக்குக் குறையாமல் திரும்பத் திரும்பச் சென்று நினைவு கூர்ந்து வர வேண்டி இருந்தது. பரிசுத் தொகையாக 1000, 750, 500 கொடுப்பதாக அறிவித்து இருந்தோம். அதைத் தவிரக் கலந்து கொள்ளும் அனைவருக்கும், சான்றிதழ் , மற்றும் யானை டாக்டர் கொடுப்பதாக முடிவானது. பள்ளியளவில் சிறந்த கட்டுரைக்குப் புத்தகம் பரிசாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இப்பொழுது பள்ளியளவில் முதலிரண்டு இடங்களுக்குப் பரிசு கொடுப்பதாக உள்ளோம்.எட்டாம் வகுப்போ அதற்கு மேலுள்ள மாணவர்கள் இதற்கு தகுதியானவர்கள்.
முதலிரண்டு பள்ளிகள் உண்மையில் மனதை முறித்தது, அபத்தமான கட்டுரைகள், சுத்தமாக ஒத்துழைப்பு இல்லாதது என்று, ஆனால் அடுத்தடுத்து நன்றாக நடந்தது. கட்டுரைக்கான விதிமுறைகளை ஒரு பள்ளித் தமிழ் ஆசிரியரிடம் விளக்கிக் கூறினேன்- பின்னர் அவர் கேட்டது " எல்லாம் சரி சார், மெட்டீரியல் எப்ப கொடுப்பீங்க ?" அதைப் படித்து மனனம் செய்து எழுத வைக்கத் திட்டம்!
மற்றொரு தமிழ் ஆசிரியர் " ஏன் சார், தலைப்பு இவளவு நெகடிவா இருக்கு?" – இன்றைய சூழலில் காந்தியம் என்பதே எதிர்மறையாக உணரப்படுகிறது.
வெவ்வேறு நாட்களில், நானும் எனது நண்பனும் பள்ளிகளில் சென்று ஒரு மணிநேரம் மேற்பார்வை பார்த்துப் போட்டிகளை நடத்தினோம்.மொத்தம் 87 மாணவர்கள் கலந்துகொண்டனர், சரிபாதி கட்டுரைகள் சுமாராக இருந்தது, பலரும் தலைப்பை சரியாக உள்வாங்கவில்லை, காந்தி பிறந்தது , வளர்ந்தது என்று வரலாற்றையே எழுதினர்.மாணவர்களிடம் கட்டுரை முடிந்தவுடன் பேசினேன், தமிழ் நோட்ஸில் உள்ள கட்டுரையை எழுதியதாகச் சொன்னார்கள். ஒரு பள்ளியில் அனேக மாணவர்கள் ஒரே கருத்தை வார்த்தை பிசகாமல் எழுதியுள்ளனர்.
கட்டுரைகளைப் பரிசீலிக்கத் தமிழ் ஆசிரியரை நாங்கள் அணுகவில்லை, அவர்கள் சொல் அலங்காரங்களுக்கு முன்னுரிமை வழங்கிவிடுவார்கள்,கருத்துக்கே முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்பது நோக்கம். விஷ்ணுபுர விழாவிற்குத் தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கொண்டு வந்து இருந்தேன். ஜெ, எஸ் ரா மற்றும் நண்பர்களுக்கு சில கட்டுரைகளை வாசித்துக் காண்பித்தேன், பரிசை அவர்கள் முடிவு செய்ய வேண்டும் என்று எண்ணினாலும் நேரமின்மை காரணமாக நாங்களே முடிவு செய்துவிட்டோம்.
அப்படியே- காந்தி இன்று தளம் பற்றிய கருத்துகளையும், விமரிசனங்களையும் முன்வைக்குமாறு நண்பர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்..
நன்றி
சுனில்
காந்தி இன்று இணையதளத்தில் விரிவாகவே இப்போட்டி பற்றி எழுதியிருக்கிறார் சுனீல்
தொடர்புடைய பதிவுகள்
காந்தி-வாசிப்பு-சுயம்:ஒரு கடிதம்
கடிதங்கள்
கோவை
இன்றைய காந்தி -கடிதம்
"இன்றைய காந்தி" புத்தக விமர்சன நிகழ்ச்சி
இன்றைய காந்தி ஆய்வுக்கூட்டம்
ஈரோட்டில்…
இன்று ஈரோடு நூல்வெளியீட்டுவிழா.
ஈரோடு நூல் வெளியீடு
ஈரோடு நூல்வெளியீடு பங்கேற்பாளர்கள்
December 24, 2011
பூமணி- உறவுகள்
பூமணி அவரது அம்மாவிடம் எட்டுவயதுவரை பால்குடித்தவர். தமிழ் எழுத்தாளர்களில் இந்த தனித்தன்மை வேறு எவருக்காவது இருக்கிறதா என்பது சந்தேகம்தான். ஒரு நல்வாய்ப்புதான் அது . 'அம்மா பாடும் தாலாட்டுகளை கேட்டுக்கொண்டிருப்பேன். அவற்றின் பொருள் முழுக்க புரிகிற வயது வந்தபிறகும்கூட அம்மா என்னை தொட்டிலில் போட்டு ஆட்டி தாலாட்டு பாடுவதுண்டு' என்று பூமணி சொன்னார். நடந்து திரியும் வயதில் அவர் அம்மாவிடம் பால்குடித்தார். பூமணி மேலூர் பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில்கூட அம்மாவிடம் பால்குடிப்பார். அம்மாவை உறிஞ்சி உரித்தெடுப்பார். பள்ளிக்கூடம் விட்டுவந்ததும் அம்மாவின் மடியில் படுத்து அவள் உள்மூச்சை கேட்டுக்கொண்டே வாய்வலிக்க பால்குடித்தாகவேண்டும். முற்றம்பெருக்கினாலும் காடுகழனியில் வேலைசெய்துகொண்டிருந்தாலும் அந்த இடத்திலேயே முந்தானையை அவிழ்த்தாகவேண்டும். இல்லையேல் புத்தகப்பையை தூக்கி வீசிவிட்டு அழுகை ஆர்ப்பாட்டம். கோழிப்பீ என்று ஊரில் பெண்கள் கிண்டல்செய்வார்கள்.
வளர்ந்தபின் பால்குடித்தால் பையனுக்கு சோறு இறங்காது என்று ஊரிலே சொல்கிறார்கள். ஒருநாள் முலைக்கண்ணில் கரியபவளத்தை தடவி வைத்தாள். ஆசையாக பால்குடிக்க வந்த பூமணி அந்த கசப்பில் குமட்டி குமட்டி வாந்தி எடுத்ததைக் கண்டு அவள் கண்கள் கசிந்த்துவிட்டன. அதற்குப்பின் முடிவுசெய்து விட்டாள். 'குடிக்கட்டும் குடிக்கட்டும் இனிமே எந்தப்புள்ளைக்கு குடுக்கப்போறம்' என்று சொல்லிவிட்டாள்.
பாச்சக்கயறுகளாம்- என் கண்ணே
பலநாயும் சங்கிலியாம்
வேட்டைக்கோ போறாங்க- என் கண்ணே
வீரப்புலி ஒம்மாங்க
என்ற அம்மாவின் குரலை எந்த வயதிலும் கண்மூடினால் கேட்கக்கூடியவராகவே பூமணி இருந்திருக்கிறார். 'இவனுக்கு புள்ள பெறக்கிறவரை ஆட்டீட்டே இரு தாயீ' என்று சொன்ன ஊர்ப்பெண்டுகளுக்கு அம்மா பதில் சொன்னாள். 'தகப்பனத்தான் அநியாயமா தூக்கிக்குடுத்தாச்சு. புள்ளிகளாச்சும் சொகமா பெழச்சு கெடக்கட்டுமே..நமக்கு அதுகள வச்சு தெம்புதானே?' அம்மா பூமணியை தன் வாழ்க்கையின் முக்கியமான பற்றுக்கோடாகக் கொண்டிருக்கவேண்டும். ஆறுகுழந்தைகளைப் பெற்றவள் இனிமேல் திரும்பிவராது என உணர்ந்துகொண்ட தாய்மைக்காலகட்டத்தை தாண்டிச்செல்லவே விரும்பியிருக்கமாட்டாள் போலும்.
பூமணி நினைவில் அம்மா ஒரு முழுமையான ஆளுமையாக, கிட்டத்தட்ட தெய்வ உருவமாக இருந்து வருகிறார். ஆனால் ஆசசரியமாக அவரது புனைவுலகில் அவரது அம்மாவைப்போன்ற வலிமையான தீவிரமான பெண் கதாபாத்திரங்கள் இல்லை. அழகிரி போன்ற ஆண்களே அவரது கதைமாந்தர்களில் தலைசிறந்தவர்களாக இருக்கிறார்கள். படைப்பாக்கத்தின் புரிந்துகொள்ளமுடியாத புதிர்களில் ஒன்றுதான் இது.
பூமணி அவரது அம்மாவுக்கு ஆறாவது குழந்தை. அவருக்கு நான்கு அக்காக்கள் ஒரு அண்ணா. அண்ணா காவல்துறை அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்று கோயில்பட்டியில் வாழ்கிறார். பூமணி கடைக்குட்டி. பூமணியின் இயற்பெயர் பூ.மாணிக்கவாசகம். பூமணி முழுக்கமுழுக்க அம்மாவால் வளர்க்கப்பட்ட பிள்ளை. அப்பா பூலித்துரை அவர் சிறுவனாக இருக்கும்போதே மறைந்துவிட்டார். ஊரில் அவர் ஒரு சண்டியராக இருந்தார். கணக்குவழக்குகளை பேசிமுடித்துவைப்பது பஞ்சாயத்துக்களை சரிசெய்வது என்று எந்நேரமும் அவருக்கு அடிதடி வேலைகள் இருந்தன. கம்புசுற்றுவதில் தேர்ந்தவர் என்று ஊருக்குள் அவருக்கு ஒரு அடையாளம் இருந்தது. ஆனால் அநியாயக்காரர் அல்ல. களவு திருட்டு வேலைகளுக்கும் அவருக்கும் வெகுதூரம்.
பூமணியின் அப்பா குடும்பத்திலேயே அடிதடிப் பின்னணி உண்டு. அவரது மூத்த அப்பச்சி, அவரை ஆட்டுக்காரப்பச்சி என்று சொல்கிறார், ஊரில் புகழ்பெற்ற அடிதடிவீரர். அவர்காலகட்டத்தில் ஊரில் தீவட்டிக்கொள்ளையர்களை நுழைய விட்டதில்லை. நகைகளையும் பணத்தையும் ஒளித்துவைத்துக்கொள்ள நேரிட்டதில்லை. ஆனால் நாளடைவில் எதிரிகள் அதிகரித்தார்கள். உள்ளூரிலேயே சிலர் அவர் தூங்கும்போது வெட்டிப்போட்டார்கள். துண்டு துண்டாக பொட்டணம் கட்டிவிட்டார்கள். ஆட்டுக்காரப்பச்சியின் பட்டத்தைத்தான் பூலித்துரை வரித்துக்கொண்டார். மலையோரம் கள்ளுக்கடையில் நடந்த சண்டையில் மண்டை உடைந்து கட்டிலில் கொண்டுவந்து கிடத்தப்பட்ட சம்பவத்தை அம்மா சொல்லி பூமணி கேட்டிருக்கிறார்.
கம்புக்காரருக்கு வாழ்க்கைப்பட்டவர் அம்மா தேனம்மாள். ஆனால் தாய்மாமன் மகன். சொந்தம் விட்டுப்போய்விடக்கூடாதென கொடுத்தது. ஆனால் அப்பாவின் நேர்மையும் தைரியமும் அம்மாவுக்குப் பிடித்துதான் இருந்தது. பூமணிக்கு ஐந்து அப்பச்சிகள். ஐந்து அப்பச்சிமாருடன் பிறந்த ஒரே தங்கைதான் அம்மாவைப்பெற்ற பேத்தி. பேத்தியைப்போலவே அம்மாவும் பேத்திக்கு ஒரேமகள். பேத்தி மிக வெள்ளந்தியானவள். 'ஆட்டுக்கு அஞ்சுகால்' என்றால் அப்படியா என்று கேட்பவள். அவளுக்கு மகளாக வளர்ந்தமையால் அம்மா கைக்குழந்தையாக இருக்கும்போதே சூட்டிகையாக இருந்தாள். தன் காரியங்களை தானே கணக்கு பார்த்துசெய்பவளாக இருந்தாள். பேத்தியின் காரியங்களைக்கூட அம்மாவிடம் கேட்டுத்தான் முடிவெடுப்பார்கள்
அம்மாபிறந்த வீடு சொத்துக்கு குறைவற்றதாக இருந்தது. எப்போதும் தானியக்குலுக்கைகள் நிறைந்திருக்கும் கிராமத்து வீடுகளில் ஒன்று அது. நூறுவருடம் முன்பு அது சாதாரண விஷயமில்லை. பூமணியின் முன்னோர்களின் கிராமங்களில் அனேகமாக அவரது சமூகம் மட்டும்தான் இருக்கும். ஆகையால் அவர்களுக்குமேலே அதிகாரம்செலுத்த அங்கே எவருமில்லை. ஆனால் கம்புக்காரனுக்கு வாழ்க்கைப்பட்ட மகளுக்கு வறுமை வருவதை அம்மா பார்க்க நேர்ந்தது. எந்நேரமும் கம்புடன் சுற்றிய மருமகனால் மகள் சுகப்படவில்லை. ஆனால் மருமகனை சண்டியரான மூத்த அண்ணனின் வடிவில்தான் மாமியாரால் பார்க்கமுடிந்தது. தானியங்களும் காய்கறிகளும் கொண்டுவந்து மருமகனுக்குக் கொடுத்துவிட்டு போவாள்.
மெல்ல மெல்ல அப்பா நடைமுறைச் சிக்கல்களை உணர்ந்துகொண்டார். அதிக நிலம் கைவசம் இல்லை. மண்வெட்டி தூக்கி கூலிவேலைக்குச் செல்லக்கூடியவரும் அல்ல. ஒருகட்டத்தில் அம்மாவும் அப்பாவும் கலந்துபேசி ஒரு கடைவைக்க முடிவெடுத்தார்கள். அப்பா அடிதடிகளில் இருந்து சட்டென்று ஒதுங்கிக்கொண்டார். கோயில்பட்டிக்கு அதிகாலையில் நடந்துசென்று சாக்குநிறைய சாமான்களை வாங்கி தலையில் சுமந்துகொண்டு திரும்பி வந்தார். கடை மெல்ல சூடுபிடித்தது. அம்மா செட்டாக குடும்பம் நடத்தி சேமித்துக்கொண்டிருந்தாள். மேலக்காட்டில் ஏழுகுறுக்கம் கரிசல் நிலம் வாங்கினார்கள். கீழூர் முதலாளியிடம் கொஞ்சம் தோட்டம் வாங்கினார்கள். அப்பா கோபத்தைக் குறைத்து நிதானமானார். வம்புச்சண்டைகளை வீட்டில் வைத்து பேசியே முடித்தார். வீட்டில் பணப்புழக்கம் குடியேறியது.
அந்நிலையில்தான் இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. ஊரெல்லாம் ராணுவத்துக்குப் போவதைப்பற்றியே பேச்சு எழுந்தது. சட்டென்று அப்பா கிளம்பிப் போய் ராணுவத்தில் சேர்ந்துகொண்டார். ஆச்சரியமான நிகழ்வு அது. பூமணியால் அதற்கான காரணத்தைச் சொல்ல முடியவில்லை. அன்று ராணுவத்தில் சேர்ந்தவர்கள் உள்ளூரில் பிழைப்பு இல்லாமல் அல்லது உள்ளூர் சாதியாதிக்கத்தில் இருந்து தப்ப அதைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் பூலித்துரைக்கு இரண்டுமே கிடையாது. அவருக்கு எப்போதுமே வீரம் என்பதைப்பற்றி ஒரு மயக்கம் உண்டு, ராணுவத்தில் வீரசாகசங்கள் செய்யலாமென நினைத்திருக்கலாம் என்றார் பூமணி. ஆனால் அதை விட நுட்பமான ஒன்று அது என எனக்குப்பட்டது. ஒரு மனிதனுக்குள் இன்னும் இன்னும் என்றும் இங்கிருந்து அப்பால் இங்கிருந்து அப்பால் என்றும் துடித்துக்கொண்டிருக்கும் மன வேகத்துக்கு பெரிய காரணம் எதுவும் தேவையில்லை. பூலித்துரை அந்த ஊரின் சிறிய வட்டத்தை தாண்ட நினைத்திருக்கலாம்
அம்மாவுக்கு அது பெரிய அடி. ஆனால் மனம்தளரக்கூடியவரல்ல அவர். பிடிவாதமாக கடையை நடத்தி பிள்ளைகளை பார்த்துக்கொண்டாள். அப்பா பட்டாளத்துக்குச் சென்றதும் அந்தச் சீருடையை அணிந்துகொண்டு புகைப்படமெடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தார். அவரது அந்தரங்கத்தைக் காட்டும் நிகழ்ச்சி இது. அந்தச்சீருடை அவருக்கு அளித்த தன்னம்பிக்கையை அடையாளத்தை அந்த நிகழ்ச்சியில் இருந்து ஊகிக்க முடிகிறது. அம்மாவுக்கு அது ஆம்புளையின் கோட்டிக்காரத்தனமாகவே தெரிந்திருக்கும். ஆணும் பெண்ணும் வாழ்வது இருவேறு உலகங்களில் அல்லவா? ஆனால் அவர் எங்கோ உயிருடன் இருப்பதன் சான்றாக இருந்தது அந்த புகைப்படம்.
வெளியே முரடர்கள் உள்ளே விசித்திரமான முறையில் மென்மையானவர்களாக இருப்பது அன்றாடம் நாம் காண்பது. பூலித்துரையும் அப்படித்தான். உண்மையில் ராணுவத்தின் கடுமை அவருக்கு ஒத்துக்கொள்ளவில்லை. இரவுபகலாக தன் குழந்தைகளை நினைத்துக்கொண்டிருந்தார். ஒருமுறை எங்கோ காட்டுக்குள் காவலிருந்தபோது குழந்தை ஒன்று ஓடிவந்து கழுத்தைக் கட்டிக்கொள்வதுபோல பிரமை ஏற்பட்டது. அப்படியே கிளம்பி ஊருக்கு வந்து சேர்ந்துவிட்டார். அவரைத்தேடி ராணுவம் வந்தது. அவர் அவர்களிடமிருந்து ஒளிந்து தப்பினார். நிரந்தரமாக தப்ப ஒருவழி இருந்தது. அப்பாவுக்கு ஒரு கிறித்தவப்பெயர் இருந்தது. அவர் ராணுவத்தில் சேர்ந்தபோது அந்தப் பெயரையே கொடுத்திருந்தார். அந்தப்பேரில் ஊரில் எவரும் இல்லை என ஊர்த்தலைவர் சாட்சி சொன்னபிறகுதான் ராணுவத்தேடல் இல்லாமலாயிற்று
ஆனால் வெளியுலகம் பூலித்துரைக்கு காசநோயை அளித்தது. சண்டியராக கம்புசுழற்றி திரிந்தவர் இருமி இளைத்து ஓய்ந்து திண்ணையில் அமர்ந்தார். அன்று காசநோய்க்கு சரியான மருந்து இருக்கவில்லை. மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்குக் கொண்டுச்சென்று வைத்திருந்தார்கள். அங்கே வேலைசெய்த பெருமாள் பகடை உதவிசெய்தார். அப்பாவால் ஆஸ்பத்திரியிலும் இருக்க முடியவில்லை. எந்நேரமும் பிள்ளைகள் நினைப்பாகவே இருந்தார். அங்கிருந்தும் திரும்பிவிட்டார்கள். மெல்லமெல்ல அப்பா கண்ணெதிரே வற்றி உலர்ந்து இல்லாமலானார். பூமணியின் நினைவில் மெல்லிய சித்திரமாக அப்பாவின் கடைசிநாட்கள் இருந்தன. நோய் காரணமாக அப்பாவை அவர் அண்டியதில்லை என்பதனால் தொடுகையும் சிரிப்பும் எதுவும் எஞ்சவில்லை.
அம்மாவின் வாழ்க்கை எல்லாவகையிலும் ஏமாற்றங்களும் சோதனைகளும் நிறைந்த ஒன்றாக இருந்தது என்கிறார் பூமணி. 'கட்டாந்தரிசில் கருகிப்போன புல்லைக்கரம்பி வயிறு நிரப்பும் பசுவின் பிழைப்புதான் அம்மாவுக்கு லபித்தது' என்கிறார் பூமணி. அம்மா ஆறுபிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்குவதை ஓர் அறைகூவலாகவே எடுத்துக்கொண்டு போராட ஆரம்பித்தார். கொஞ்சம் நிலத்தையும் சில ஆடுமாடுகளையும் கொண்டு இரு பையன்களையும் பட்டப்படிப்புவரை படிக்க அம்மா என்னென்ன செய்திருப்பார் என்பதை எளிதில் ஊகிக்கமுடியும். வடக்கூர் பள்ளிக்கூடத்தில் பூமணி ஆரம்பப்பள்ளி படித்தார்.
'அம்மாவுக்கு சிரிப்பதைப்போலவே அழவும் பிடிக்கும்.. யார் வீட்டில் சாவு விழுந்தாலும் முதல் ஆளாகப்போய் உடகார்ந்து அழுகை தொடுப்பாள். அய்யாவை நினைத்து நினைத்து ஒப்பாரி மழைவெள்ளமாக வந்துகொண்டே இருக்கும்' என்கிறார் பூமணி. அது ஒரு வெளிப்பாடு.
பட்டுத்துணியுடுத்தி – நான்
பாதவழி போனாலும்
எனக்குவாச்ச மந்திரியே -நீ
இல்லாத நாளையிலே
பட்ட வெலமதிப்பார்-என்
பாதரவ யாரறிவார்?
ஈனாத எருமையிட்ட- நான்
என்சோகம் சொன்னமின்னா
எஞ்சாமி எந்தொரையே
எனக்கு வாச்ச மந்திரியே
ஈனாத எருமைகூட
எடுத்த புல்லை கீழ போடும்
அம்மாவின் வரிகளில் வெளிப்படும் அந்தக்குரல், என் பாதரவ யாரறிவார் என்ற ஏக்கம், ஒரு நுட்பமான பாவனையும்கூட. அவள் வாழ்க்கையில் ஒவ்வொன்றாக வென்று சென்றுகொண்டிருப்பதை, பிள்ளைகளை ஆளாக்கி எடுத்துக்கொண்டிருப்பதை, அம்மாவின் ஆழ்மனம் அறியாமலா இருக்கும்? அதை எங்கோ எப்போதோ அந்த ஒப்பாரியில் அவள் தன் கணவனிடம் சொல்லிக்காட்டாமலா இருந்திருப்பாள்?
அம்மாவை ஊருக்கெல்லாம் அம்மாவாகத்தான் பூமணி அவரது ஏலேய் என்ற கட்டுரையில் சித்தரிக்கிறார். எந்நேரமும் ஏதேனும் குழந்தைக்குச் சோறூட்டிக்கொண்டிருப்பவளாக 'அடி என் கள்ளச்சிறுக்கி, சிரிச்சு சிரிச்சு மயக்காம தின்னு…மாராயம் பண்ணினே கொமட்டுல குத்தீருவேன். கண்ண சிமிட்டுறத பாரு..எந்தப்புருசங்கிட்ட போயி இழுபடப்போறியோ' என்ற வரியில் அம்மாவின் ஆழம் நுட்பமாக வெளிப்பட்டுக்கொண்டேதான் இருக்கும். 'அம்மா கடனுக்காக போட்ட ரேகைகள் ஏராளம். பேனா மையென்றால் அழுத்தமாக விழாதென்று வண்டிமையை ஓலையில் எடுத்து வந்து கொடுக்கவேண்டும். அவள் அழுத்திப் போட்டுவிட்டு கேட்பாள். நல்லா விழுந்திருக்கா, இல்ல இன்னியும் அமுக்கிப்போடணுமா?'
அம்மாவுக்கு வீரம்மாள் என்று இன்னொரு பெயரும் உண்டு என்றார் பூமணி. தேனம்மாள் வீரம்மாள் என்ற இரு பெயர்களும் அவளுக்குப் பொருத்தம்தான். அவளுடைய இரு முகங்களுக்கும் பொருந்தும் பெயர்கள் அவை. பூமணி படித்து வேலைக்குச் சென்று கோயில்பட்டியில் குடியேறின பிறகு அம்மாவுக்காக அந்த வீட்டை இடித்து மீண்டும் கட்ட ஏற்பாடு செய்தார். நெடுங்காலம் முன்பு ஓலைக்கூரையுடன் இருந்தது. ஓலை வேயமுடியாமலானபோது அம்மா கூரையை தகரமாக ஆக்கிவிட்டாள். பூமணிக்கு அந்த தகரக்கூரை வந்தபின்னர் வீடே அன்னியமாக, இரைச்சலிட்டுக்கொண்டே இருக்கும் ஒவ்வாத இடமாக, ஆகிவிட்டது. வீட்டை கொத்தனார் இடித்தார். தலைமுறையின் விரிசல்கள் பசைவைத்து ஒட்டி பூசி பூசி பாதுகாத்த வீடு மண்மேடாகியது. அம்மாவுக்குள் ஏதோ ஒன்று இடிந்துவிட்டிருக்கவேண்டும். அவள் பேச்சு கூட திக்கியது.
அடுத்தவாரம் இரவு பூமணி சலூனில் முடிவெட்டிக்கொண்டிருந்தபோது ஊர்க்காரர்கள் காத்திருந்தார்கள். அம்மா இறந்துவிட்ட செய்தி வந்திருந்தது. அம்மாவின் மரணத்தை வீட்டின் இடிப்புடன் நுட்பமாக பூமணி சம்பந்தப்படுத்திக்கூறுகிறார். அது ஒரு விடைகொடுத்தல். அவளுடைய கர்மகாண்டம் முடிந்தது என அவளுக்குள் ஏதோ உள்ளுணர்வு சொல்லியிருக்குமோ? அப்பாவைப்போல கம்பை கீழேபோட்டு ஓய்ந்தமர்ந்து சாகும் நிலை அவளுக்கு ஏற்படவில்லை. 1947ல் பிறந்த பூமணிக்கு இன்று அறுபத்து ஐந்துவயது. இன்றும் கண்மூடினால் பூமணி அம்மாவின்குரலை கேட்க முடியும் 'ஏலேய்'.
பூமணியின் புனைவுலகுக்குள் செல்லும் வாசகன் அங்கே அவன் எதிர்பார்த்த தீண்டாமை அல்லது சாதிக்கொடுமைகளின் சித்திரத்தை காணமுடியாமல் ஏமாற்றமடைவான். தீண்டாமைக் கொடுமைகளைச் சொல்வதற்கு ஒரு நிரந்தரமான கதைவடிவத்தை நம்முடைய பிரச்சார எழுத்தாளர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அவற்றை அவன் வாசித்துப் பழகிவிட்டிருப்பதுதான் காரணம். பூமணியின் நினவுகளில் எப்போதுமே சாதி சார்ந்த ஏற்றத்தாழ்வுகளைப்பற்றிய அனுபவங்கள் உள்ளன. ஆனால் நேரடியான அப்பட்டமான சாதி இழிவுகளை அவர் அனுபவித்ததில்லை. அவர்களின் கிராமமே தேவேந்திரர்களுடையது என்பதனாலாக இருக்கலாம். அத்துடன் அவர்களின் குடும்பம் பாரம்பரிய பெருமையும் நிலபுலன்களும் கொண்டதாக இருந்திருக்கிறது. பூமணி சொல்வதை வைத்துப்பார்த்தால் அவர்களின் எல்லைக்குள் ஒரு வகையில் கிராமநிலக்கிழார்களாகவே இருந்திருக்கிறார்கள்
ஆனாலும் சாதி இருந்தது. சில நிகழ்வுகளை பூமணி பகிர்ந்துகொண்டார். பள்ளிப்பருவத்தில் ஒரு பிராமணத்தோழியின் வீட்டுக்குச்சென்று அவளுடன் அவள் வீட்டு கூடத்தில் தூணைச்சுற்றி விளையாடிவிட்டு வீட்டுக்குவந்து அம்மாவிடம் அதைச் சொல்லும்போது அம்மா பரிதவித்துப்போகிறாள். தீட்டு பார்ப்பவர்களாயிற்றே, பாவம் நடந்துவிட்டதே என்று வருந்துகிறாள். ஆனால் தீட்டு பிராமணர்களுக்கு மட்டும் அல்ல. வயலுக்கு வரும்வழியில் சேற்றில் தொடைவரை மூழ்கி தத்தளித்த ஓர் அய்யரை அம்மா இழுத்துவிட்டு காப்பாற்றுகிறாள். அய்யர் ஓடைநீரில் தீட்டை கழுவிக்கொள்ளும்போது அம்மா வீட்டுக்குவந்து குளித்து தன் தீட்டை கழுவிக்கொள்கிறாள்!
இன்னொரு நுட்பமான நிகழ்வில் சாதியின் இன்னொரு முகத்தைப் பார்க்கிறோம். அப்பா உடல்நலமில்லாமலிருக்கையில் பூமணியின் அம்மா அவரை மதுரை ஆஸ்பத்திரியில்சேர்க்கிறாள். அதற்கு ஒரு அருந்ததியர் உதவுகிறார். அந்த அருந்ததியர் வீட்டிலேயே அம்மா பிள்ளையுடன் தங்குகிறாள். அதற்கெல்லாம் சாதி தடையாக இல்லை. தீட்டும் இல்லை. ஆனால் அன்று அங்கே மாட்டுக்கறி சமைத்திருக்கிறார்கள். அதை தன்பிள்ளை சாப்பிட்டுவிடுமோ என்ற எச்சரிக்கை மட்டுமே அம்மாவுக்கு இருக்கிறது, அதுமட்டும்தான் அவளுக்கு தீட்டு. இந்த இரு எல்லைகளுக்கு நடுவே இருந்தது அவரது சாதியின் வரையறுக்கப்பட்ட புழங்குதளம். பூமணியின் கிராமத்தில் சில நாயக்கர் நிலக்கிழார்கள் இருந்திருக்கலாம். சிறிய சாதிய அவமதிப்புகளை அவர் அடைந்துமிருக்கலாம். அவற்றை அனேகமாக எல்லா சாதியினரும் ஏதேனும் வடிவில் அவர்களை விட மேலான சாதியினரிடமிருந்து பெற்றிருப்பார்கள். அதற்கு அப்பால் அந்த கிராமிய வாழ்க்கை சாதியடுக்கத்தின் எடை எதையும் அறியாத ஒன்றாகவே இருந்தது என்கிறார் பூமணி
பூமணியின் புனைவுலகில் உள்ள சகஜமான சாதிய சித்தரிப்பை அவர் இந்த யதார்த்தத்தில் இருந்தே பெற்றுக்கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. அன்றைய முற்போக்கு இலக்கியம் அத்தகைய சமூக முரண்பாடுகளை பெரிதுபடுத்தி மோதல்களாகச் சித்தரிக்கும் வழிமுறையை வலியுறுத்தியது. நிலக்கிழார்- கூலித்தொழிலாளி மோதலையே வர்க்கப்போராட்டம் என்ற அளவுக்குக் கொண்டுசென்றது அது. பூமணி அதிகமாக எழுதிய தாமரை போன்ற இதழ்களில் அத்தகைய கதைகள் வெளிவந்துகொண்டே இருந்தன. தி.க.சிவசங்கரன் அந்தவகையான எழுத்தை வலியுறுத்தக்கூடியவரும்கூட. ஆனால் பூமணி முற்போக்கு முகாமுக்குள் செல்லவில்லை. ஆகவே அவரது ஆக்கங்களில் செயற்கையான மோதல்களும் இல்லை. சாதியும் சுரண்டலும் மோதல்களும் உள்ளனதான், ஆனால் அவர் அவற்றை எல்லாம் மானுட உறவுகளுக்குள் பொருத்தித்தான் எப்போதுமே ஆராய்கிறார். ஆகவே அவை நம்பகமான வாழ்க்கைச் சித்திரங்களாகவே இருக்கின்றன. அவற்றை வாசிப்பவன் அவற்றை சமூகச்சித்திரங்களாக விரித்தெடுத்துக்கொள்ளமுடியும், அவ்வளவுதான்.
தொடர்புடைய பதிவுகள்
பூமணி- மண்ணும் மனிதர்களும்
பூமணியின் வழியில்
விஷ்ணுபுரம் விருது விழாவில் பூமணி உரை
பூமணியின் நாவல்கள்
பூமணியை ருசித்தல்-கடிதம்
சிறுகதைகளும் படிமங்களும்
பூமணியின் சிறுகதைகள்
அள்ளக் கிடைக்காத அம்பாரம்
பூமணியின் அழகியல்
பூமணியின் நிலம்
நாதஸ்வரம் தவில்-கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
நானும் என்னுடைய நண்பர் நாகசுர வித்வான் இஞ்சிக்குடி சுப்ரமணியமும் இரண்டு நாள்களுக்கு முன்னால் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவர் ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார். நகைக் கடன் வேண்டுமா என்று கேட்டு ஒரு தனியார் வங்கியின் இளம் முகவர் அவரை அணுகியிருக்கிறார். சற்றுநேரத்தில் இருவரும் ஒருவரையொருவர் அடையாளம் கண்டு கொண்டனர்.
அந்த இளைஞரின் சகோதரி இஞ்சிக்குடி சுப்பிரமணியத்திடம் திருவாரூர் இசைப் பள்ளியில் நாகசுரம் பயின்றவர். அந்த இளைஞரும் அதே பள்ளியில் தவில் கற்றிருக்கிறார். பூம் பூம் மாடுகளை அழைத்துச் சென்று பணம் வசூலிக்கும் சாதியைச் சேர்ந்தவர் அந்த இளைஞர். பேசிக் கொண்டிருக்கும் போது, தனக்குத் தவில் வாசிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனதைப் பற்றி விரக்தியுடன் பேசியிருக்கிறார். குடும்பச் சூழல் தன்னை வேறு பாதைக்குத் திருப்பி விட்டது என்றும் புலம்பியிருக்கிறார்.
இஞ்சிக்குடி சுப்பிரமணியத்தின் வாதம் என்னவென்றால், இது போன்று எத்தனையோ இளைஞர்கள் வறுமையின் காரணமாகவும் குடும்பச் சூழலில் காரணமாகவும் திசைமாறி எங்கோ போய் விடுகிறார்கள். சுப்பிரமணியத்திடம் நாகசுரம் பயின்ற மாணவர்களில் மிகவும் சிறிய வயதில் ஒரு பையன் உண்டு. வயது 12 முடிவதற்கு முன்னதாகவே அவனைப் பள்ளியில் சேர்த்தமைக்காக உயர் அதிகாரிகள் அவரைக் கடிந்து கொண்டனர். அந்த மாணவனும் பூம் பூம் மாட்டுக்காரக் குடும்பம். இசை வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்த பலர் படித்தாலும், சுப்பிரமணியத்துக்கு இணை நாயனம் வாசிக்கும் அளவுக்கு அந்தப் பொடியன்தான் தேறியிருந்தான். பல இடங்களில் அவர் கூட வாசிப்பதற்காக அவனை அழைத்து சென்றிருக்கிறார்.
இங்கே இன்னொரு கருத்தையும் நான் தெரிவித்தாக வேண்டும். வாய்ப்பாட்டு கற்றுக் கொள்பவர்களும் மற்ற இசைக்கருவிகளை வாசிப்பவர்களும் முறையாகக் கல்வி பயின்று கொண்டேதான இசைத்துறையில் ஈடுபடுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் உள்ள 17 அரசு இசைப் பள்ளிகளிலும் பயிலும் பெரும்பான்மையான மாணவர்களில் 10-ஆம் வகுப்பைத் தாண்டியவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படியானால் அவர்கள் எத்தகைய குடும்பப் பின்னணியில் இருந்து வருகிறார்கள் என்பது நமக்குப் புரிந்து விடும்.
நீங்கள் தெரிவித்திருப்பது போல, மேளக்காரன் என்றால் இளக்காரமாக வெளிப்படையாகப் பார்க்கிறோமோ இல்லையோ, மனதளவில் ஒரு இளக்காரம் இந்த சமூகத்திடம் இருக்கத்தான் செய்கிறது. சென்னையில் மிகப் பிரமாதமாக வாசிக்கும் வியாசர்பாடி கோதண்டராமனுக்கு இந்த இசை விழாவில் ஒரு கச்சேரிக்குக்கூட வாய்ப்பு இல்லை என்று கேள்விப்பட்டேன்.
நாகசுர, தவில் இசையை சம்பிரதாயமாக மட்டுமே நாம் இன்று அணுகுகிறோம். கல்யாண வீட்டுக்கு சமையலுக்கு அட்வான்ஸ் கொடுக்கும் போது, மேளக்காரர்களையும் அழைத்து வந்து விடுமாறு ஏற்பாடு செய்து விடுகிறோம். நாகசுர தவில் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் இப்படித்தான் வருகின்றன. சென்னையில் கருமாதிக்கும் நாகசுரம் தவில் வைக்கிறார்கள். இப்படி கல்யாணம், கருமாதி என்று வித்தியாசம் இல்லாமல் வாசிக்க ஒப்புக் கொண்டால் பணம் வரும்.
இன்று காலமாற்றம் வேறு மாதிரியாக இருக்கிறது. பேர் பெற்ற தவில் கலைஞர்கள், பேர் பெற்ற நாகசுரக் கலைஞர்களை விட அதிகமாக சம்பாதிக்கிறார்கள். எல்லோரும் இன்று சிறப்பு தவில்தான். நாகசுரம் தவில் இணைந்த ஒரு இசைக்குழுவைப் பார்க்க முடியவில்லை.
கோலப்பன்
தொடர்புடைய பதிவுகள்
மேளம்-கடிதங்கள்
மேளம்
தவில்
தமிழர்மேளம்
December 23, 2011
உரை; கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
கோதை ஆற்று வெள்ளம் பாய்ந்து வந்து சென்னையில் எங்களை நிலை குலையச் செய்தது. குறுந்தொகை மூலம் கவிதையை மட்டும் அல்ல, வாழ்வையும் மீண்டும் புதிதாக அறிமுகம் செய்து வைத்தது உங்கள் உரை. 'காடு' தந்த பேரெழுச்சியை விட இன்னும் தீவிரமானதாக இருந்தது என்றே சொல்வேன். தொடக்கத்தில் இருந்தே உவமைகளும் படிமங்களும் கொட்டியபடியே இருந்தன. எதுவுமே வலிந்து புனைந்ததாக இல்லாமல் வெகு இயல்பாக அமைந்தன. இவ்வளவு உணர்ச்சிகரமான ஒரு உரையை நான் என் வாழ்நாளில் கேட்டதில்லை. ஒரு பத்து நிமிடங்கள் கடந்த பின் 'யோவ் தாங்கலை! நிறுத்துய்யா' என்று கூவத் தோன்றியது.
இன்னும் ஒரு பித்து நிலையிலேயே இருப்பதாக உணர்கிறேன்!
நன்றி ஜெ.
சீனிவாசன் ராகவன்
அன்புள்ள ஜெ
குறுந்தொகை பற்றி நீங்கள் பேசிய உரையை கேட்டது மகத்தான அனுபவம். என் வாழ்க்கையில் கேட்ட மிகச்சிறந்த உரை இதுதான். இதற்குமுன் நான் நீங்கள் பேசிய பல உரைகளை கேட்டிருந்தாலும் இந்த உரை வேறு ஒரு தளத்தில் இருந்தது
குறுந்தொகையின் மௌனத்தைப்பற்றிச் சொன்னீர்கள். அப்படி சூட்சுமமான ஒரு விஷயத்தைப்பற்றி இன்று கத்தி ,கூச்சல் போட்டு, கைகால்களை ஆட்டி, ஆவேசமாக பேசுவதைத்தானே கேட்கிறோம். அது கூச்சலுக்கு நேர் எதிரானது என்றே நீங்கள் சொன்னீர்கள். அதற்கு ஏற்ப உங்கள் உரை மிக மிக அமைதியானதாக மெல்லிய நீரோடை போல இருந்தது.குரலை உயர்த்தவே இல்லை. மனதோடு ரகசியம் பேசுவதுபோல உங்கள் குரல் ஒரு மணிநேரம் ஒலித்துக்கொண்டேஇருந்தது
நல்ல உரை என்றால் அது அனுபவங்களையும் கதைகளையும் நிறைய கலந்து நகைச்சுவையுடன் சொல்லப்படுவதாக இருக்கும், இதுதான் ஃபார்முலா. ஆனால் உங்கள் உரையிலே நீங்கள் கவிதையை தொடுவதற்கு மட்டுமே முயற்சி செய்தீர்கள். கவித்துவத்தை மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தீர்கள். முதல் வரிமுதல் உவமைகள், உருவகங்கள் என்று கொட்டிக்கொண்டே இருந்தன. 'அவன் மார்பில் பச்சைகுத்தப்பட்டவள் போல அவள் இருந்தாள்' என்று சாதாரணமாகச் சொல்லி சென்றீர்கள். அந்த பெண் கறுப்பு அந்தப்பையன் சிவப்பு என நான் ஊகித்து அந்த வரியின் மயக்கத்தை விட்டு வருவதற்குள் இன்னும் நாலைந்து படிமங்கள் சென்று விட்டன. பிறகு பத்ரி சேஷாத்ரியின் உரைப்பதிவிலேதான் மீண்டும் கேட்டேன். கவிதையைப்பற்றி கவிதையாலேயே ஆன உரை என்று சொல்லலாம். ஒரு இசைக்கச்சேரி மாதிரியே இருந்தது. பலபேர் சொன்னார்கள். ஒரு அற்புதமான ராக ஆலாபனை மாதிரி இருந்தது என்று சொன்னார்கள். வந்துகொண்டே இருந்த அழகான வரிகளை அருவிக்கு கீழே நின்று குளிப்பதுபோல அனுபவித்துக்கொண்டே இருந்தேன்
கவிதையை பேசும்போது தத்துவம் இல்லாமலா? பலபல கிளைகளாக பிரிந்து போன உரை அற்புதமான தத்துவ தர்சனங்களாக மாறியதை ஆச்சரியம் என்றுதான் சொல்லுவேன். முழுமையான உறவு மானுடனுக்கு சாத்தியமா என்ற ஒரு வரியை வைத்தே ஒரு உரை செய்யலாம். பூக்களின் வரலாறே மானுட ஆன்மீகத்தின் வரலாறு என்று இன்னொரு உரை செய்யலாம். அகம்புறம் பற்றிய விவரிப்பு இன்னொரு சிகரம். எதையும் அதிகநேரம் ஆலாபனைசெய்யவில்லை. சிந்திக்க ஒரு வரைபடத்தை கொடுத்து மேலே சென்று கொண்டேஇருந்தீர்கள்.
அற்புதமான உரை. இந்த உரையை ரசிக்கவும் உள்ளே செல்லவும் ஒரு தகுதி வேண்டும். அந்த தகுதி எங்களுக்கு இருக்கிறது என நம்பி இந்த உரையைச்செய்தீர்கள் பாருங்கள் அதற்காகவே நாங்கள் நன்றி சொல்லவேண்டும். பெரும்பாலான உரை சபையில் கடைக்கோடியினரை அளவு வைத்து செய்வதாக இருக்கும். அதுதான் சாதாரணம், அதுதான் ஒரு வகையிலே நியாயமும் கூட. நீங்கள் சபையின் மிகச்சிறந்தமனிதர்களை குறிவைத்து பேசினீர்கள். அதுதான் இந்த நல்ல உரைக்குக் காரணம். ஒருவேளை சிலருக்கு உரைக்குள் முழுசாக வரமுடியாமல் போகலாம். ஆனாலும் உரை அவர்களை கற்பனைகளுக்கும் மன விரிவுக்கும்தான் எடுத்துச்சென்றிருக்கும் என நினைக்கிறேன். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜெயமோகன்
சீனிவாசன்
தொடர்புடைய பதிவுகள்
குறுந்தொகை உரை
இசையுடன் மரபைக் கொண்டாடுவோம்…
முகம் விருது
எனக்கு ஓர் இலக்கிய விருது அளிக்கப்பட்டுள்ளது.குக்கூ என்னும் சேவை அமைப்பை நடத்திவரும் நண்பர்கள் அளிக்கும் முகம் விருது.அறம் சிறுகதைத் தொகுப்பிற்காக இந்த விருது அளிக்கப்படுகிறது. வாழ்த்து மட்டும் அடங்கிய விருது.
இதுவரை யானை டாக்டர் கதையை மிக அதிகமாக வினியோகித்தவர்கள் குக்கூ அமைப்பினர். மாற்றுத்திறனாளிகளுக்கான கல்விக்கும் அடித்தள மக்களுக்கான கல்விக்குமாக ஆத்மார்த்தமாக சேவை செய்து வரும் நண்பர்களின் அமைப்பு இது.
நாள் : 27.12.2011,செவ்வாய் கிழமை மாலை 4 மணி
இடம் : அவினாசி அருகே உள்ள கோதபாளையம் கிராமத்தில் உள்ள திருப்பூர் காது கேளாதோர் பள்ளி .
திருப்பூர் காது கேளாதோர் பள்ளி .
இயல்வாகை சூழலியல் இயக்கம்
குக்கூ குழந்தைகள் நூலகம்
தொடர்புக்கு :9965689020, 9942118080 , 9994846491
http://www.thecuckoo.co.in/">...
http://www.facebook.com/cuckoochildre...
ஒரு கடிதம்
அன்புள்ள ஜெ.,
சமீப காலமாக ஒரு வழக்கம் வைத்திருக்கிறேன்… ஏதாவது வேண்டுதல் என்றால், கோவிலுக்கு நேர்வது போல், ஏதாவது நற்பணி அமைப்புக்கு ஒரு தொகை அளிப்பதாக உறுதி செய்துகொள்வேன்.
இதை விரிவாக்கி, தொடர்ந்து இது போல் செய்ய வேண்டும் என்றும் விரும்புகிறேன்.
என் பிரச்னை என்னவெனில், எப்படி அது போன்ற அமைப்புகளைக் கண்டுணர்வது. பல்வேறு மோசடிகள் நடக்கும் "தொழிலாக' இதைப் பலர் நடத்துகிறார்கள்.
உங்களுக்குத் தெரிந்த அமைப்புகள் எதுவாயினும் இருப்பின் சொல்ல முடியுமா? அது பொது நலத்திற்காக, எந்த வகையில் பணியாற்றும் அமைப்பாக இருப்பினும் சரிதான்.
பிகு: பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு ஒதுங்கிவிடுவது தவறுதான். இருப்பினும் something is better than nothing என்ற வகையில் கேட்கிறேன்.
நன்றி
ரத்தன்
அன்புள்ள ரத்தன்
இந்த அமைப்பை நான் சிபாரிசு செய்கிறேன்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
கடிதங்கள்
கடிதங்கள்
அறம் வாழும்-கடிதம்
யானை- கடிதம்
யானைடாக்டர்-ஓர் உரை
வாழும் கணங்கள்-கடிதங்கள்
இலங்கையில் இருந்து ஒரு கடிதம்
யானை டாக்டர் இலவச நூல் வினியோகம்
அசடன், யானைடாக்டர்- கடிதங்கள்
யானைடாக்டர் இலவச நூல்
ஞானக்கூத்தன்
திருப்தி
சஞ்சிகையைப் பிரித்தான். அங்கே
முப்பதாம் பக்கத்தைப் பார்த்தான்.
இரண்டு வரிகளில் ஒருகவிதை.
அதற்குக் கீழே இருந்த பெயரைப்
படித்ததும் அவனுக்கு ரத்தம் கொதித்தது.
கவிதை
எல்லோரும் நல்லவரே
அவரவர் நாட்டில் அவரவர் வாழ்ந்திருந்தால்
இரண்டு வார்த்தை ஆசிரியர்க்கு
எழுதிப் போடணும் ஆனால்
ஒன்றைப் பற்றி மட்டும் எழுதினால்
நன்றாய் இருக்காது. தெரிந்து விடும்
எனவே எழுதினான்.
சென்ற இதழில் கொய்ராலா
படத்தைப் போட்டு அசத்திவிட்டீர்
வாசுவின் எழுத்தில் முதிர்ச்சி கண்டேன்.
இறைச்சி கவுச்சி ஓரினப்புணர்ச்சி
பற்றிய கட்டுரை மொழிக்குப் புதிது.
கதைகளில் மாவு தோசை படித்ததும்
நாக்கில் எச்சில் ஊறிற்று
நல்ல கவிதைகள் கிடைக்கவில்லையா?
[ஞானக்கூத்தனின் இணையதளமான ஞானக்கூத்தன்.காம் அவரது கவிதைகள் கட்டுரைகளுடன் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து]
தொடர்புடைய பதிவுகள்
ஞானக்கூத்தன்
குறுந்தொகை உரை
23-12-2011 அன்று நான் சென்னை ராக சுதா அரங்கில் குறுந்தொகை பற்றி ஆற்றிய உரையின் ஒலிவடிவம் இந்த இணைப்பில் உள்ளது
பத்ரி சேஷாத்ரியின் இணைய தளம்- ஒலிப்பதிவு
தொடர்புடைய பதிவுகள்
இசையுடன் மரபைக் கொண்டாடுவோம்…
December 22, 2011
பூமணி- மண்ணும் மனிதர்களும்
பூமணிக்கு விருது அளிப்பதாக முடிவுசெய்தபின்னர் அச்செய்தியை அவரிடம் நேரில் சொல்வதற்காகக் கோயில்பட்டி சென்றிருந்தேன். அதற்கு முன்னர் அவரை நான் ஒருமுறைதான் நேரில் பாத்திருக்கிறேன், ஏறத்தாழ ஏழு வருடங்களுக்கு முன்னர் வண்ணதாசனின் மகள் திருமணத்தில். ஒரு எளிமையான கைகுலுக்கல். அப்போது பூமணி ஓர் எழுத்தாளர் போலிருக்கவில்லை, நானறிந்த பல நூறு அரசு அதிகாரிகளில் ஒருவரைப்போலிருந்தார். நேர்த்தியான ஆடைகள். படியவாரிய தலைமயிர். கண்ணாடிக்குள் அளவெடுக்கும் கண்கள். மெல்லிய குரலில் பேச்சு. நிதானமான பாவனைகள். ஒரு சில சொற்கள் பேசிக்கொண்டோம்.
நான் பூமணியிடம் அன்று அவரது 'பிறகு','வெக்கை' ஆகிய இருநாவல்களைப் பற்றி சில சொற்கள் சொன்னேன். சிரித்துக்கொண்டே 'அதெல்லாம் எழுதி ரொம்ப நாளாச்சு' என்றார். அப்போது அவர் 'கருவேலம்பூக்கள்' படம் எடுத்து முடித்திருந்தார். படம் எப்படி வந்திருக்கிறது என்று கேட்டேன். நன்றாக வந்திருப்பதாக எல்லாரும் சொல்கிறார்கள் என்றார். மீண்டும் இலக்கியத்துக்கு எப்போது வருகிறீர்கள் என்றேன். சிரித்துக்கொண்டு எப்போதுமே இலக்கியத்தில்தான் இருப்பதாகவும் ஒரு பெரிய நாவலை எழுதிக்கொண்டிருப்பதகாவும் சொன்னார். மேடையின் மெல்லிசை முழக்கத்தில் பாதிகேட்டுப் பாதி உதட்டசைவால் ஒரு சிறிய உரையாடல்.
கோயில்பட்டிக்கு வருகிறேன் என்றதும் பூமணி வரவேற்றார். ஆனால் அவரது வீட்டுக் கட்டுமான வேலை நடந்துகொண்டிருப்பதனால் வெளியே சந்திக்கலாம் என்றார். நான் அவரை நான் தங்கியிருந்த விடுதிக்கு வரமுடியுமா என்றேன். மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டார். அவர் இல்லம் தேடிச்சென்று சந்திக்கவேண்டுமென்ற ஆசை நிறைவேறாமல் போனதில் கொஞ்சம் வருத்தம்தான். விடுதியறையில் காத்திருந்தேன். கதவு தட்டப்பட்டது. நான் 'யார்?' என்றேன். 'நான்தான் பூமணி' என்றார். சற்று அதிர்ச்சியாக இருந்தது. பூமணி முற்றிலும் இன்னொருவராக இருந்தார். அக்கறையே இல்லாத ஆடைகள். நன்றாக நரைத்த தலை. நரைத்த மீசை. சட்டென்று வயோதிகம் வந்து கூடியது போல.. பூமணியின் கைகால்கள் மெல்ல நடுங்கின. நரம்புத்தளர்ச்சி நோயால் அவதிப்படுவதாகச் சொன்னார். அது அவரது நடை பாவனை எல்லாவற்றையும் மாற்றி அவரை இன்னொருவராக ஆக்கிவிட்டிருந்தது. சென்னையை நிரந்தரமாகத் துறந்து கோயில்பட்டிக்கே வந்துவிட்டதாகச் சொன்னார். ஏனென்று கேட்டேன். 'எப்பவுமே சென்னையிலே இருக்கிற ஐடியா இருந்ததில்லை. சரி, கடமைகள் முடிஞ்சது வந்திட்டேன்' என்றார்
அன்று மாலை வரை பூமணியிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவரது இளமைக்காலம், இலக்கிய வாசிப்பு, அரசுத்துறை ஊழியம், எல்லாவற்றைப்பற்றியும். ஒரு பதிவுக்கருவி கொண்டுசென்றிருந்தேன். அதுவேலைசெய்யவில்லை. ஆகவே அவர் பேசுவதை முழுக்கக் கையாலேயே குறிப்பெடுத்தேன். வழக்கமாகக் கரிசல் நிலத்தில் வெயில் எரிந்துகொண்டிருக்கும். ஆனால் அன்று இதமான சாரல்மழை இருந்தது. மாலையில் தேவதச்சனின் சேது ஜுவல்லரிஸ் என்ற நகைக்கடையைத் தேடிசென்றேன். அதைக்கண்டுபிடிப்பது அப்படி சிரமமாக இல்லை, ஆனால் நானறிந்த கோயில்பட்டி நிறைய மாறியிருந்தது. புதிய பெரிய கட்டிடங்கள். பரபரப்பான சாலை. தேவதச்சனின் கடையே மாறியிருந்தது, ஏதோ நகையைப் பரிசீலித்துக்கொண்டிருந்தவர் என்னை ஏறிட்டுப்பார்த்தார். கண்ணாடிக்குள் தெறித்த கண்களில் சட்டென்று வியப்பு.
''பூமணி சொன்னார், வருவீங்கன்னு சொன்னார். உக்காருங்க' என்றார் தேவதச்சன். நான் அவர் முன்னால் அமர்ந்துகோண்டேன். 'நகைவியாபாரமெல்லாம் எப்படிப் போகுது' என்றேன். 'போய்ட்டிருக்கு' என்றார் தேவதச்சன்.'இப்ப பெரிய பெரிய கார்ப்பரேட் கடைகள் வந்தாச்சு. ஜனங்களுக்கு அவங்க விளம்பரம் மேலே மயக்கம். விலையிலயும் கொஞ்சம் குறைச்சுக்க முடியும்…முன்னெல்லாம் பொற்கொல்லர்னா ஒரு குடும்ப உறவு இருக்கும். கல்யாணம் நிச்சயிச்சா உடனே செய்றது ஆசாரிய வந்து பாக்கிறதுதான். பெரும்பாலான சமயங்களிலே பொண்ணையும் கூட்டிட்டு வருவாங்க. பொண்ணோட அம்மாவுக்குப் போட்ட நகைகளைக் கொண்டு வருவாங்க. உருக்கிப் புதுசா செய்றதுக்காக…அந்த நகையும் இதே கடையிலேதான் செஞ்சிருப்போம்…இங்கதான் செஞ்சதுன்னு சொல்லிக் குடுப்பாங்க…அந்த உறவு இப்ப இல்லை. நேத்து ஒருத்தர் வந்தார். ரெண்டுதலைமுறையா எங்க கஸ்டமர். எவ்வளவோ வேலைசெஞ்சு குடுத்திருக்கோம். கொஞ்சம் விலை வித்தியாசம், சட்டுன்னு அங்க போறம்னு கெளம்பிட்டார். பல தலைமுறைப் பழக்கம் , அதுக்கு ஒரு பிரயோசனமும் இல்லைன்னு ஆயிட்டுது' என்றார்
கடையில் இருந்து கிளம்பித் தேவதச்சனுடன் நடந்துசென்றேன். இருபதாண்டுகளுக்கு முன்னால் அவரிடம் அப்படிக் கவிதையின் படிமங்களையும் உருவகங்களையும் பற்றிப் பேசிக்கொண்டே சென்ற நாட்கள் நினைவுக்கு வந்தன. செண்பகவல்லி அம்மன் கோயிலுக்குப் பின்னாலுள்ள மைதானத்துக்குச் செல்லும் படிகளில் ஏறிச்சென்றோம். பழமையான வீடுகள் இன்னும் மிச்சமிருந்தன. சில வக்கீல்கள் அங்கே குடியிருப்பதாகச் சொன்னார். ஒரு வீட்டில் வ.உ.சி கொஞ்சகாலம் குடியிருந்தாராம். வீடு பழைமைகொண்டு மூடிப் போடப்பட்டிருந்தது. அதன் படிகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். செண்பகவல்லி அம்மன் எப்படி கோயில்பட்டி என்ற சிற்றூரின் குடிதெய்வமாக உருவாகி வந்தாள் என்று தேவதச்சன் சொன்னார். இரவு நெடுநேரம் வரை கோயில்பட்டியின் வளர்ச்சியைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தோம். ஒரு சிறிய சாலையோரத்து கிராமமாக இருந்தது, ஒரு தொழில்நகரமாக வளர்ந்த கதையைச் சொன்னார்.
மறுநாள் தேவதச்சன் அதிகாலையில் விடுதிக்கு வந்தார். கதிரேசன்கோயில் மலைக்கு ஒரு ஆட்டோவில் சென்றோம். கரடு என்றுதான் சொல்லவேண்டும். மலைக்குமேல் உள்ள முருகன் கோயில் வெறும் ஒரு வேலாக இருந்த காலம் எல்லாம் தேவதச்சனுக்குத் தெரியும். அன்றெல்லாம் பிள்ளைகளுடன் அவர் அங்கே வந்து விளையாடியதுண்டு. நெடுங்காலம் குடிகாரர்களின் மையமாக இருந்த இடம். கீழே சின்னக் குற்றவாளிகளும் உதிரித்தொழிலாளர்களும் வாழும் தெருக்கள். இன்று எல்லாமே மாறிவிட்டன. அப்பகுதி எங்கும் புதிதாக 'நகர்'கள் முளைத்துப் பரவிக்கொண்டிருந்தன.அந்தக் கோயிலை எடுத்துக்கட்டுவது அப்பகுதிக்கு ஓர் அடையாளத்தைக்கொடுத்து அங்கே நிலத்தின் மதிப்பை ஏற்றும் என நினைத்த நில வியாபாரிகளால் கோயில் பெரிதாகக் கட்டப்பட்டு சிமிண்ட் படிகளும் அமைக்கப்பட்டது. அதற்குப்பலனும் இருந்தது, கதிரேசன்கோயில் நகர் இன்று மிகவும் மதிக்கப்படும் பகுதி. அருகேதான் இன்னும் அந்தக் குடிசைப்பகுதி இருக்கிறதென்றாலும்.
ஆனால் அது இன்று குடிசைப்பகுதியல்ல என்று தோன்றியது. சில ஓட்டு வீடுகள் இருந்தன. மிச்சமெல்லாம் புதியதாகக் கட்டப்பட்ட சிமிண்ட் வீடுகள். கண்ணுக்கெட்டிய தூரம்வரை கிடந்த கோயில்பட்டியை இந்திய அளவுகோலின்படி செல்வச் செழிப்பான நகரமென்றே சொல்லவேண்டும். ஏராளமான புதிய வீடுகள் டிஸ்டெம்பர் அடித்த சுவர்களுடன் இளமழைக்குப்பின் முளைத்த பசுமையுடன் நின்றன. சுற்றி விரிந்திருந்த கரிசல் நிலம் தொடுவானில் சற்றே உயர்ந்திருந்த மண்மேட்டை அடைந்து வானுக்கேறியது. கோயில்பட்டி கண்ணெதிரே வளர்ந்துகோண்டிருப்பதுபோல எனக்கு பிரமை ஏற்பட்டது. பெயர் சுட்டுவதுபோலக் கோயில்பட்டி ஒரு கூடுமிடமாகவே இருந்திருக்கிறது. மங்கம்மாள்சாலையில் வணிகர்கள் இளைப்பாறும் ஒரு சின்ன மையம். கேப்பைக்களியும் பதநீரும் விற்கும் வியாபாரிகள் அங்கே மரத்தடிநிழலில் அமர்ந்திருந்திருக்கலாம்.
1689 முதல் 1704 வரை மதுரையை ஆண்ட ராணிமங்கம்மாளால் உருவாக்கப்பட்டது தென்னகத்துக்கான நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை 47. இன்றும்கூட இப்பகுதிகளில் இதை மங்கம்மாசாலை என்றுதான் சொல்கிறார்கள். மங்கம்மாள் இந்தியாவை ஆண்ட அபூர்வமான பேரரசிகளில் ஒருவர். அவருடன் ஒப்பிடுவதற்கு இன்னொரு அரசிதான், காகதீயப்பேரரசி ராணி ருத்ராம்பாள். மங்கம்மாளின் காலகட்டத்தில் திருச்சிமுதல் குமரிவரை அவளுடைய கட்டுப்பாட்டில்தான் இருந்தது, அனேகமாகத் தமிழகத்தின் முக்காற்பங்கு. வரிவசூல் அமைப்புகள் முழுமை பெற்றிருந்தன. பெரிய படையெடுப்புகள் ஏதும் நிகழவில்லை, படைகொண்டுவந்த ஔரங்கசீபின் தளபதியைக் கப்பம் கொடுத்துத் திருப்பியனுப்பினாள் மங்கம்மாள். பிற மன்னர்களைப்போல மங்கம்மாள் கோயில்களைக் கட்டவில்லை. சாலைகள், சந்தைகள், ஏரிகள் ஆகியவற்றிலேயே அவர் கவனம் செலுத்தினார். தென்னாட்டில் உள்ள பல ஊர்கள் அவரால் உருவாக்கப்பட்டவையே.
ஏசுசபைக் குறிப்புகளை வைத்துப்பார்த்தால் மங்கம்மாளுக்கு முன்னர் மதுரையில் இருந்து குமரிக்கு வரும் பாதையானது கிழக்குமலைத்தொடர்களை ஒட்டி அமைந்திருந்தது. முக்கியமான காரணம் இப்பகுதி நிலம் வளமானது என்பதும் ஆகவே இங்கே சிற்றரசுகள் உருவாகியிருந்தன என்பதும்தான். மக்கள் வாழும் நிலம் வழியாகவே சாலைகள் அமையமுடியும். வண்டிகளுக்கு நீரும் உணவும் தேவைப்பட்டது. இன்றைய சாலை இருக்குமிடம் வெறும் பொட்டல். இன்று கரிசல் என்று சொல்லப்படும் நிலம் நீரற்றபாலையாக, கைவிடப்பட்ட தரிசாகக் கிடந்திருக்கும். அங்கே இருந்தவர்கள் பெரும்பாலும் பாலையை நம்பி வாழும் மக்கள். அவர்களுக்குத் திருட்டு குற்றமல்ல.
அத்துடன் மதுரையை நாயக்கர்கள் கைப்பற்றிக்கொண்டபோது தோற்கடிக்கப்பட்ட பாண்டியவம்சம் தென்னாட்டில் கயத்தாறிலும் தென்காசியிலும்தான் குடியேறியது. நெடுங்காலம் கயத்தாறு அவர்களின் மையமாக இருந்தது. விஸ்வநாதநாயக்கனின் பேரமைச்சர் அரியநாதமுதலியார் கயத்தாறைச் சுற்றி ஆண்டிருந்த பஞ்சவழுதிகள் என்ற சிற்றரசர்களைத் தோற்கடித்தார் என்று சொல்லப்படுகிறது. இவர்களெல்லாருமே தங்களைப் பாண்டிய வம்சத்தவர் என சொல்லிக்கொண்டவர்கள். பாண்டியர்களின் மறவப்படையின் பெரும்பகுதி இங்கே சிதறி வாழ்ந்தனர். நிலத்தின் வளமின்மை அவர்களைக் கொள்ளையர்களாக ஆக்கியிருந்தது. எப்போதாவது குமரிக்குப் பெரும்படையுடன் வரும்போதுமட்டுமே இந்த விரிந்த பொட்டல்நிலம் பாதையாகப் பயன்படுத்தப்பட்டது.
மங்கம்மாள் இங்கே ஒருசாலையை அமைக்க முடிவெடுத்தபோது கடுமையான எதிர்ப்ப்பு வந்ததாகச் சொல்லப்படுகிறது. வாய்மொழிக்கதைகளின்படி மங்கம்மாள் பெண்களுக்கே உரிய மதிநுட்பத்துடன் முடிவெடுத்தார். இப்பகுதியில் ஆங்காங்கே ஆதிக்கம் செலுத்திய கள்வர் குலங்களையே தேர்ந்தெடுத்துக் குலப்பட்டமும் அடையாளமும் கொடுத்து அப்பகுதிகளின் காவலர்களாக நியமித்தார். அவர்கள் அங்கே பயணிகளுக்குப் பாதுகாப்புக் கொடுக்கவேண்டும், அவர்கள் சிறு சுங்கம் வசூலித்துக்கொள்ளலாம். மங்கம்மாள் கட்டிய நூற்றுக்கணக்கான கல்மண்டபங்கள் சமீபத்தில் நாற்கரச்சாலை வரும்வரைக்கும்கூட இச்சாலையின் இருமருங்கும் இருந்தன.
மங்கம்மாள் சாலை மிகவிரைவிலேயே முக்கியமான வணிகப்பாதையாக ஆகியது. அதனூடாக வந்த வண்டிகள் தங்குமிடங்கள் ஊர்களாக ஆயின. தெற்கே உவரி புன்னைக்காயல் பகுதிகளில் இருந்து வந்த நாடார் வணிகர்கள் குடியேறிய சாத்தூர் சிவகாசி விருதுபட்டி போன்ற ஊர்கள் வளர்ந்து பேரூர்களாக நகரங்களாக மாறின. அவ்வாறுதான் கோயில்பட்டியும் உருவெடுத்தது. ஒப்புநோக்கக் கோயில்பட்டிக்கு அருகே உள்ள கழுகுமலை, கயத்தாறு , கங்கைகொண்டான் போன்ற ஊர்களே முக்கியமானவை. அங்கேதான் கோயில்கள் இருந்தன. ஆனால் கோயில்பட்டி சட்டென்று வளர ஆரம்பித்து அவ்வூர்களைத் தாண்டிச் சென்றது.
திருநெல்வேலி கண்ட்ரி மேனுவல் எழுதிய எச்.ஆர்.பேட் கோயில்பட்டியின் வளர்ச்சியை முன்னரே ஊகித்தவர்களில் ஒருவர். கோயில்பட்டியைச் சுற்றியிருக்கும் கரிசல்நிலம் பருத்தி விவசாயத்துக்கு மிகமிக ஏற்றது என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த நிலப்பகுதியில் உள்ள வறண்ட காலநிலையும் இதமான மழையும் கூடப் பருத்திக்கு ஏற்றதுதான். பருத்தி விவசாயம் அப்போதே கோயில்பட்டி சுற்றுவட்டாரக் கிராமங்களின் முக்கியமான தொழிலாக ஆகிவிட்டிருந்தது. பருத்தியை வாங்கி விற்கும் வணிகமையமாகக் கோயில்பட்டி உருவம் கொள்ள ஆரம்பித்தது. பருத்தியை நூலாக்கும் மில்கள் கோயில்பட்டியில் உருவானபோது அது தொழில்நகரமாகவும் ஆகியது. 1891 இல் வந்த லாயல் மில்லும் 1926 இல் வந்த லட்சுமி மில்லும் இன்றும் கோயில்பட்டியின் அடையாளங்கள்.
மெல்லமெல்ல மில் தொழில் வலுவிழந்தபோதுதான் கோயில்பட்டியில் தீப்பெட்டித்தொழில் ஆரம்பித்து வேகம் கொண்டது. கோயில்பட்டியின் வறண்ட காலநிலை தீப்பெட்டித்தொழிலுக்கு மிகமிக உகந்தது. ஏராளமான மலிவான உழைப்பு கிடைத்தது இன்னொருகாரணம்,. இன்றைய கோயில்பட்டியின் செழிப்பு தீப்பெட்டித்தொழிலினால்தான் என்பதை மறுக்கமுடியாது. கோயில்பட்டியின் விவசாயம் சமூகக் கட்டமைப்பு எல்லாவற்றையுமே தீப்பெட்டித்தொழில் முற்றாக மாற்றியமைத்துவிட்டது. கோயில்பட்டி குறைந்தகாலத்துக்குத் தரமான பேனா நிப்புகள் செய்யக்கூடிய இடமாகவும் அறியப்பட்டது. அதிகமும் கையாலேயே செய்யவேண்டிய இவ்வேலையை இங்கே கிடைக்கும் மலிவான குழந்தைத்தொழிலாளர்களின் உழைப்புக்காகவே கொண்டுவந்தார்கள். இத்தொழில் இன்று நசிந்துவிட்டது.
கோயில்பட்டியைச்சுற்றிய நூற்றுக்கணக்கான கிராமங்களுக்குக் கோயில்பட்டிதான் மையம். சுற்றியுள்ள கிராமங்களில் இடைசெவல் இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கேதான் தமிழின் இரு முக்கியமான பெரும்படைப்பாளிகள் உருவானார்கள். கு.அழகிரிசாமியும் கி.ராஜநாராயணனும். கி.ராஜநாராயணன் வழியாக இந்த நிலம் இலக்கியத்தில் அழியாத இடம் பெற்றது. கரிசல் இலக்கியம் என்ற சொல்லாட்சி உருவானது. கரிசல் இலக்கியத்திற்கு இன்று ஒரு நீண்ட படைப்பாளி வரிசையே உள்ளது. கோயில்பட்டியை ஒட்டிய ஆண்டிபட்டி என்ற கிராமம்தான் பூமணிக்கும். அந்தக் கரிசல் மண்ணயே அவரும் எழுதினார். அவ்வகையில் அவரும் கரிசல் எழுத்தாளர் என்று சொல்லலாம்.
பூமணி தேவேந்திரகுல வேளாளர் என்று சொல்லப்படும் பள்ளர் [அல்லது மள்ளர்] சமூகத்தைச் சேர்ந்தவர். தேவேந்திரகுலத்தவர் அட்டவணைச்சாதிகளில் சேர்ந்தவர் என்பதனால் பூமணியை தலித் எழுத்தாளர் என்பது வழக்கம். ஆனால் இவ்வகை அடையாளங்களை முழுக்க நிராகரிக்கக்கூடியவராகவே எப்போதும் பூமணி இருந்திருக்கிறார். "தலித் என்ற வார்த்தை எனக்கு அன்னியமானது. அந்த வார்த்தைக்கு ஒடுக்கப்பட்டவன் என்ற அர்த்தம் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். எந்தச்சாதியில்தான் ஒடுக்கப்பட்டவன் இல்லை? எல்லாச்சாதியிலும் ஒடுக்குகிறவனும் ஒடுக்கப்பட்டவனும் உண்டு. ஆனால் அந்த வார்த்தை குறிப்பிட்ட சில சாதிகளை ஒட்டுமொத்தமாகக் குறிப்பிடுவதற்காக முன்வைக்கப்படுகிறது. இதில் ஓர் அசிங்கமான உள்நோக்கம் உண்டு
அன்றைக்கு சூத்திரனுக்குக் கீழே வைக்கப்பட்டிருந்தவன் பின்னர் ஒரு புண்ணியவானின் கருணையால் அரிசனன் ஆனான்,அப்புறம் பட்டியல்சாதிக்காரன், தாழ்த்தப்பட்டவன், ஆதி திராவிடன் என்று மாறினான். இன்று தலித் கூட்டில் அடைத்திருக்கிறார்கள், ஆக தூரத்தில் நின்று சுட்டிக்காட்டுவதற்கு ஒரு நிரந்தர அடையாளம் வேண்டியிருக்கிறது. இந்த லட்சணத்தில் சமபந்தி போஜனம் சமத்துவபுரம் எல்லா இழவும் உண்டு
சௌக்கியமா என்று வழக்கமாகக் குசலம் விசாரிப்பதுபோல தலித் இலக்கியம் பற்றி எல்லாரும் விசாரிக்கிறார்கள். முற்பட்ட பிற்பட்ட அட்டவணைச்சாதி என்று இலக்கியத்தைத் தரம்பிரிக்கமுடியாது. அனுபவங்களும் உணர்வுகளும் எந்த சாதிக்காரர்களால் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன என்பதைவிட அவை என்ன என்பதுதான் முக்கியம். என்னைப்பொறுத்தவரை அழகிரிப்பகடை,சங்கரய்யர் இருவருடைய உணர்வுகளுக்கும் சாதியில்லை.
கிடையாடுகளைத் துண்டந்துண்டமாகப் பிரித்து வேலிகளுக்குள் அடைத்துவைப்பதுபோல இலக்கியத்தை சாதிவேலிகளுக்குள் அடைத்து அதன் நோக்கங்களைக் குறுக்கிவிடக்கூடாது. எழுத்தாளனின் விரல்களுக்கு விலங்கிடமுடியாது,சாதி அடையாளத்துடன் இனம் காட்டப்படும் தலித் இலக்கியத்தில் எனக்கு உடன்பாடில்லை. அந்த வார்த்த்தையின் உண்மையான அர்த்தத்தில் இலக்கியம் இருந்தால் அது வரவேற்கப்படவேண்டியதே.
என்னை தலித் என்று கூறிக்கொள்ள விரும்பவில்லை. அந்தக் கடன்வாங்கிய பட்டம் எனக்குத் தேவையுமில்லை. எழுத்தாளனை இப்படி சிறுகூண்டுகளுக்குள் அடைத்து நிறுத்திவைப்பது இலக்கியத்துக்குச் செய்யும் பெரிய துரோகமாகும். இதுதான் தொடர்ந்து நடக்கிறது
தலித் என்ற வார்த்தை இறக்குமதிசெய்யப்படுவதற்கு முன்பே நான் சமூக ரீதியாக பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களைப்பற்றி எழுதியவன். என்னை இச்சாதிக்காரன் என்று சொல்லிக்கொள்வதில் கூச்சமோ தயக்கமோ கிடையாது,. அதற்காக நான் வேறு எந்த இனத்தினரைப்பற்றியும் எழுதக்கூடாது என்று தடைவிதிப்பதற்கு எந்தக் கொம்பனுக்கும் உரிமை இல்லை. ஏனென்றால் அடிப்படையால் நான் ஒரு மனுசன்' என்று பூமணி தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார்.
பூமணி சொல்வதை அவரது வாசகன் முழுமையாக ஏற்றுக்கொள்வான். அவரை தலித் எழுத்தாளர் என்று சொல்லமுடியுமா என்றால் அவர் அவர்களைப்பற்றி மட்டும் எழுதியவரல்ல. கரிசல் எழுத்தாளார் என்று சொல்லமுடியுமா என்றால் அவரது எழுத்தின் எல்லை அதுவும் அல்ல. அவரை ஒடுக்கப்பட்ட மக்களின் கதைசொல்லி என்று சொல்லக்கூட முடியாது, அவர் எல்லா மக்களையும் கதைமாந்தர்களாக ஆக்கி எழுதியிருக்கிறார். சரி, முற்போக்கு எழுத்து என அவரது எழுத்ததைச் சொல்லிவிடமுடியுமா என்றால் அவர் எங்கும் அரசியலை அடையாளப்படுத்தியவரல்ல. ஆகவே அவரை இலக்கியவாதி என்று மட்டுமே அடையாளப்படுத்தமுடியும்
ஆனால் பூமணி எழுதும் வாழ்க்கையை முழுமையாகப் புரிந்துகொள்ள அப்பகுதியின் சாதி சமூக அமைப்பின் ஒரு சித்திரம் நமக்குத் தேவையாக உள்ளது. இது தமிழ்நாட்டின் பிறபகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு உருவாகும் பலவகையான புரிதல்பிழைகளைத் தவிர்க்கும். இந்தவாழ்க்கைச்சித்திரத்தின் நுட்பமான பல உள்ளோட்டங்களை அடையாளம் காணவும் செய்யும். அந்தத் தேவைக்காக, அந்த எல்லைக்குள் நின்றுகொண்டு பூமணியின் சமூகப்பின்னணியை நாம் ஆராயலாம். தமிழில் சமூக யதார்த்ததை எழுதிய எந்தக் கலைஞனையும் இந்த விரிவான பின்னணியில் வைத்து ஆராய்வது அவசியம்.
சங்க காலத்தில் மள்ளர்கள் என்று அழைக்கப்பட்டவர்களே இன்று பள்ளர்கள் என்றும் காலாடி,குடும்பர்,மூப்பர்,பண்ணாடி என்ற பிற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்களைத் தேவேந்திர குலத்தவர் என்ற பொருளில் தேவேந்திரகுல வேளாளர் என்று சொல்லிக்கொள்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் சங்கரநாயினார் கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்ப்பக்கம் உள்ள கல்வெட்டு
விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 14 நாள்
திங்கட்கிழமையும் உத்திராடமும் பெற்ற நாள்
தெய்வேந்திரக் குடும்பன் பலாத்துப்படி : முன்
துவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும்
சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு
இருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை
கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம்
மகிழ்ந்து இரும் என்ன சேரனும் சோழனும்
வணங்கியிருக்க பாண்டியன் தெய்வேந்திரனுடனே
கூடியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல
கவடு நினைக்க. பாண்டியன் கோபித்து எழுந்து
தேவ கன்னிகை மக்கள் நாலு குடும்பத்தாரை
கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு சென்னல்
விதையும், கன்னல் விதையும் (கதலி) விதையும்
பனைவிதையும் முதலான பல வித்தும் ஒரு ரிசபமும்
ஒரு சாவியும் கொண்டு பூமியில் வந்தான்
நால்வரில் முதல்வனுக்கு தேவேந்திரக் குடும்பப்
பட்டமும் கட்டி, மூன்று பேருக்கு வாரியன்,
அக்கசாலை, (இளந்தாரியன்) என்று வரிசைப்
பட்டமும் கட்டி ஒரு நாளையிலே 12000 கிணறு
வெட்டி வேளாண்மை கண்ட படியினாலே
ராஜாவும் மனம் மகிழ்ந்து வெள்ளானையும்
வெள்ளை வட்டக் குடையும் சேறாடியும் பகல் பந்தம்
பாவாடை ரெட்டைச் சிலம்பும் ரெட்டைக்
கொடுக்கும் நன்மைக்கு 16 பந்தக்காலும் துன்மைக்கு
2 தேரும் பஞ்சவன் விருந்தும் . . . . .18 மேளமும்
கட்டளையிட்டு நடக்கிற காலத்திலெ . . . . . "
—- தென்னிந்திய கோயிற் சாசனங்கள்ஃ பாகம் 2, எண் 863ஃ பக்கம் 803
கூறும் ஆதாரத்தின் அடிப்படையில் இவர்களை தேவேந்திர குலத்தவர் என்று சொல்வது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மள்ளர்களின் பூர்வீகநிலம் இப்பகுதியல்ல என்றே சொல்லவேண்டும். ஏனென்றால் அவர்கள் நெல்விவசாயிகள் என்றே சொல்லப்பட்டுள்ளது. ஆகவே மருதநிலத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்திருக்கக்கூடும். அவர்களின் வரலாற்றில் இரு பெரும் சரிவுக்காலங்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன. ஒன்று, ஏழு எட்டாம் நூற்றாண்டு முதல் பிற்காலச் சோழர்- பாண்டியர் ஆட்சியில் நிகழ்ந்தது. இந்தக்காலகட்டத்தைத் தமிழகத்தில் பெரிய ஆலயங்களை மையமாக்கிப் பொருளியலமைப்புகள் உருவான காலகட்டம் என்று சொல்லமுடியும். அன்றைய நில உரிமை முறைப்படி வேளாண் நிலங்கள் கிராமங்களுக்குரியவையாக, கூட்டு உரிமை கொண்டவையாக இருந்தன. தனிநபர் உரிமை இல்லை. வேளாண்மைக்குத் தேவையான நிலம் அந்தந்தப் பருவத்தின் தேவைக்கு ஏற்ப அளந்து பயன்படுத்தப்பட்டது. வேளாண்மை செய்யப்படாத நிலங்கள் ஏராளமாகக் கிடந்தன.
அன்று பெரும்பாலான வேளாண்நிலங்கள் மள்ளர் கிராமங்களுக்குரியவையாக இருந்திருக்கலாம். சோழ-பாண்டிய ஆட்சிக்காலத்தில் ஆலயங்கள் நில உடைமை மையங்களாக ஆனபோது கிராமநிலங்கள் முழுக்கக் கோயில்சொத்துக்களாக ஆயின. அவற்றின் நிர்வாக உரிமை சைவ-வைணவ மடங்களுக்கும், அம்மடங்களிடமிருந்து வேளாளர்களுக்கும் சென்று சேர்ந்தது. இந்தக் காலகட்டம் வேளாளர்களின் பொற்காலம். ஏராளமான வேளாளகுலங்கள் உருவாகி வந்த காலகட்டம் இது. மள்ளர்கள் நிலங்களை இழந்து குத்தகைக்காரர்களாக, நிலங்களில் வேலைசெய்பவர்களாக ஆக நேர்ந்தது.
இரண்டாவது சரிவுக்காலகட்டம் என்பது பதினைந்தாம் நூற்றாண்டு முதல் நாயக்கர்களின் குடியேற்றத்தை ஒட்டி நிகழ்ந்தது. இருநூறாண்டுகளுக்கும் மேலாக நாயக்கர்கள் ஆந்திரநிலப்பகுதியில் இருந்து வந்து தென்னகத்தில் குடியேறியபடியே இருந்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பெரும்பாலும் மள்ளர்களின் நிலங்களே அளிக்கப்பட்டன. மள்ளர்கள் மேலும் மேலும் பண்படாத தரிசுகளை நோக்கித் தள்ளப்பட்டார்கள். நாயக்கர்களின் பிந்தைய தலைமுறைகள் தரிசுகளைப் பயிர்செய்யவேண்டிய கட்டாயத்துக்காளானார்கள். நாயக்கமன்னர்கள் இவர்களுக்காகவே ஏரிகளையும் குளங்களையும் தொடர்ந்து உருவாக்கினார்கள்.
இவ்விரு சரிவுக்காலகட்டங்களைத் தாண்டி மள்ளர்கள் நவீனகாலகட்டத்துக்குள் நுழையும்போது அவர்களின் சமூக நிலை குழம்பியதாகவே இருந்தது.1770 லும் 1874 லும் ஏற்பட்ட இரு பெரும் பஞ்சங்களால் ஏராளமான மக்கள் பஞ்சப்பராரிகளாக ஆகி விவசாயக்கூலிகளாகவும் நில அடிமைகளாகவும் ஆகிவிட்டிருந்தனர். அந்த அவலநிலையில் இருந்தமையால்தான் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகக் கணிக்கப்பட்டார்கள். அந்தச் சலுகை அவர்களுக்குத் தேவையாகவும் இருந்தது.சுதந்திரத்துக்குப்பின் அவர்களின் பொருளியல் மேம்பாடு அடைந்தமைக்கு அந்த அடையாளமும் அது அளித்த முன்னுரிமைகளும் பெரும் உதவி புரிந்தன.
ஆனால் எங்கெல்லாம் தேவேந்திரர் மட்டும் வாழ்ந்த கிராமங்கள் இருந்தனவோ அங்கெல்லாம் அவர்கள் நில உரிமையாளர்களாகவும் நீடித்தனர். பருத்தி போன்ற பணப்பயிர்கள் வந்தபோது அல்லது நவீன பாசனவசதிகள் வந்தபோது வசதியான நிலக்கிழார்களாகவும் இருந்தார்கள். இந்த முரண்பாடு பூமணியின் படைப்புலகிலேயே காணக்கிடைக்கிறது. அவர் தலித் வாழ்க்கையை எழுதுகிறார் என்ற எண்ணத்தில் வாசிப்பவர்கள், குறிப்பாக வடதமிழகத்து வாசகர்கள், பூமணி ஒருபக்கம் அம்மக்களின் கடுமையான வறுமையை எழுதும்போதே மறுபக்கம் அவர்கள் நிலம் வைத்து விவசாயம் செய்வதையும் எழுதுவதைக் கண்டு குழப்பம் கொள்கிறார்கள். இந்த சாதிப்பின்புலத்தைப் புரிந்துகொள்வது பூமணியின் கதைகள் காட்டும் உலகை நுணுக்கமாக அறிய உதவிகரமானது. அதாவது பூமணி நில அடிமைகளின் கதையை எழுதவில்லை. சிறு நில உடைமையாளர்களை, வறட்சியால் அல்லது வேறு காரணங்களால் கூலிவிவசாயத்துக்குச் செல்லும் மக்களையே காட்டுகிறார்.
பூமணி எழுதும் சமூகப்புலத்தில் வேளாளர்கள் அனேகமாகக் கண்ணுக்குப்படவில்லை. அவர்கள் பெரும்பாலும் கோயில் இருக்கும் ஊர்களிலேயே இருந்தார்கள் என்று தோன்றுகிறது. பிராமணர்களின் ஊர் இன்று பூமணியின் புனைவுப்பரப்புக்குள் வருகிறது. குத்தகைக்காரர்களால் கைவிடப்பட்டு மெல்லமெல்ல அழிகிறது அந்த அக்ரஹாரம். அதன் கதையை 'நைவேத்யம்' என்ற நாவலில் அவர் எழுதியிருக்கிறார். ஊரில் மறவர்களின் இடமும் குறைவே. கரிசலில் மறவர்கள் முக்கியமான சாதி என்றே திருநெல்வேலி கெஜட்டீர் கூறுகிறது. என்றாலும் பூமணி எழுதும் நிலப்பகுதியில் அவர்கள் அதிகமில்லை.
பூமணியின் சமூகசித்திரத்தில் முக்கியமான சாதிகளாக இருப்பவர்கள் மூவரே. பெரும்பாலும் நிலக்கிழார்களாக இருப்பவர்கள் நாயக்கர்கள்.நாயக்கர்களுக்கிடையே உள்ள சாதி வேறுபாடுகளைப் பூமணி காட்டுவதில்லை. அவரது புனைவுலகில் நாயக்கர்கள் சிக்கனத்தில் பிடிவாதமும் உழைப்பில் தீவிரமும்கொண்ட நில உடைமையாளர்களாகவே வருகிறார்கள். நாயக்கர்களின் வயல்களில் வேலைசெய்யக்கூடியவர்களாகவே தேவேந்திரர் அதிகமும் காட்டப்படுகிறார்கள். ஆனால் அவர்களிலும் நில உரிமையாளர்கள் உண்டு. தேவேந்திரர்களுக்கு நிகரான பொருளியல் தகுதியுடன் ஆனால் மேலான சமூகநிலையுடன் கோனார்கள். அவர்கள் வேளாண்மைச்சமூகத்துடன் இணக்கமாக ஆனால் அதற்கு வெளியே இருக்கிறார்கள்.
தேவேந்திரர்களுக்குக் கீழே இருப்பவர்கள் பகடைகள் அல்லது அருந்ததியர். அவர்கள் இப்பகுதியின் வேளாண்மைக்கு இன்றியமையாதவர்களாக இருக்கிறார்கள். குமரிமாவட்டத்தில் ஆற்றுப்பாசனப்பகுதியைச் சேர்ந்த எனக்கு இந்த நுட்பம் பிடிபடக் கொஞ்சம் பிந்தியது. தோல் தொழிலாளர்களான அருந்ததியர் குமரிமாவட்டத்தில் மிகமிகக் குறைவு. ஏனென்றால் அன்றெல்லாம் செருப்பு என்பது இங்கே சிலரால் மட்டுமே போடப்படுவதாக இருந்தது. ஆனால் கரிசலில் செருப்பு ஆடுமேய்ப்பவர்களுக்கு இன்றியமையாத ஒன்று. அத்துடன் இப்பகுதியில் விவசாயம் என்பது கிணற்றில் இருந்து கமலைமூலம் நீர் இறைத்துச் செய்யப்படுவதாகவே இருந்தது. அதற்குத் தோல்தொழிலாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. இவர்களைத்தவிர இந்த வேளாண்சமூகத்தை நம்பி வாழும் ஆசாரிகள் போன்றவர்கள். 'பிறகு' நாவலில் சுப்பையனாசாரி ஊருக்குள் ஒரு கொல்லர் வந்துவிட்டால் பிழைப்பைப் பங்கிட்டுக்கொள்ளவேண்டும் என்பதற்காக அவரே கொல்லர் வேலையையும் செய்துகொடுக்கிறார்.
இந்த சமூகப்புலத்தில்தான் பூமணியின் கதைகள் நிகழ்கின்றன. கதைமாந்தர்களைப் பெரும்பாலும் சாதி அடையாளத்துடன்தான் பூமணி சொல்கிறார். கந்தையா நாயக்கர், அழகிரிப்பகடை, சுப்பையனாசாரி என. அவர்களுக்கிடையே உள்ள உறவுமுறைகளை அவர் விளக்குவதில்லை. அவை பெரும்பாலும் நுட்பமான உரையாடல் வழியாகக் காட்டப்படுகின்றன. 'ஏலே சக்கிலியத்தாயளி' என்று ஒரு நாயக்கர் அழைக்கமுடிகிறது 'சாமியவுக' என்று பகடை அவர் முன்னால் கைகட்டி நிற்கிறார். ஆனால் பகடைக்கும் மள்ளருக்கும் இடையே நட்பான சூழல் நிலவுகிறது. கோனார்களுக்கும் ஆசாரிகளுக்கும் இடையே சமத்துவம் திகழ்கிறது. பூமணியின் புனைவுலகு முழுக்க உரையாடல்களில் வாசகன் கொள்ளவேண்டிய கவனமே சாதிப்படிநிலைகளில் எவர் எங்கே இருக்கிறார் என்பதை உரையாடல்கள் காட்டிச்செல்கின்றன என்பதைத்தான்.
'தமிழ்நாட்டில் வர்க்கம் என்ற துல்லியமான பிரிவு உள்ளதா என்ன? சாதியும் சாதிப்போராட்டமும்தான் இன்று தலைவிரித்தாடுகின்றன' என்று பூமணி ஒரு பேட்டியில் சொல்கிறார். ஆனால் பூமணியின் கதைகளில், குறிப்பாக மிகவிரிவான ஒரு சமூக சித்திரத்தை அளிக்கும் 'பிறகு' போன்ற நாவல்களில் சாதிமுரண்பாடுகள் பெரிதாக சித்தரிக்கப்படவில்லை. பூமணி காட்டும் உலகில் சாதியின் ஏற்றத்தாழ்வும் சுரண்டலும் உள்ளது. அதைமீறி மானுட உறவுகளும் உள்ளன. 'பிறகு' நாவலில் ஒருவகையான காவியத்தன்மையுடன் கந்தையா நாயக்கருக்கும் அழகிரிப்பகடைக்குமான உறவு சித்தரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். பூமணி சமூக மோதல்களைக்கூட மனித வாழ்க்கைக்குள் கொண்டுவந்து உறவுகளின் சிக்கலாக மட்டுமே காட்டுகிறார். அவரது கலையின் சிறப்பம்சமே இதுதான் எனலாம்.
ஆனால் ஒரு கூர்ந்த வாசகன், பூமணியின் கதைகளுக்குள் நாயக்கர்களுக்கும் தேவேந்திரர் போன்ற அடுத்தகட்ட சாதியினருக்குமான நுட்பமான மோதல் மௌனமாக அனலடித்துக்கொண்டே இருப்பதைக் காணலாம். அதை நில உடைமையாளாருக்கும் உழைப்பாளர்களுக்குமான மோதலாகவும் கொள்ளலாம். ஆனால் பூமணியின் புனைவுலகில் அவர் எந்தத் தரப்பின் குரலாகவும் ஒலிப்பதில்லை. உள்ளது உள்ளபடி என்ற அவரது அழகியல்நோக்கு அதற்கு அனுமதிப்பதில்லை. ஒரு பற்றற்ற சாட்சி போல அவரது கண் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறது, நூற்றுக்கிழவன் போன்ற லௌகீக விவேகம் எல்லாவற்றையும் ஆழ்ந்த சமநிலையுடன் பதிவுசெய்கிறது.
தொடர்புடைய பதிவுகள்
பூமணியின் வழியில்
விஷ்ணுபுரம் விருது விழாவில் பூமணி உரை
பூமணியின் நாவல்கள்
பூமணியை ருசித்தல்-கடிதம்
சிறுகதைகளும் படிமங்களும்
பூமணியின் சிறுகதைகள்
அள்ளக் கிடைக்காத அம்பாரம்
பூமணியின் அழகியல்
பூமணியின் நிலம்
பூமணி சந்திப்பு — செந்தில்குமார் தேவன்
விழா- கடிதங்கள்
அதிக இலக்கியப் பரிச்சயம் இல்லாத நண்பர்களிடம் பேசும்போது பொதுவாக ஒன்று கவனித்திருக்கிறேன். பெரும்பாலும் அவர்களுக்குப் படிக்க உள்ளுர ஆர்வம் இருக்கிறது. ஆனால் ஆரம்பிக்க ஏதோ ஒரு தடை. வாழ்கை நேரமின்மையில் சென்று முடியுமோ ? பணியில் செயல்திறன் குன்றுமோ ? குடும்பத்தைக் கவனிக்க முடியாமல் போகுமோ என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். இதை ஒத்த ஒரு தயக்கம் இலக்கியக் கூட்டங்களுக்கு வரும் சில அன்பர்களுக்கும் உண்டு. நெடுந்தொலைவிலிருந்து வருவார்கள்; ஆனால் அரங்கத்தின் வாசல் வரை வந்ததும் அங்கேயே நின்று விடுவார்கள். அரூபமான ஒரு விசை மேற்கொண்டு செல்வதைத் தடுப்பது போல..
நேற்று விஷ்ணுபுர விருது விழாவில் இப்படி வாசலிலேயே நின்று விட்டவர்களின் சிக்கலை விசாரித்து உள்ளே அமரச்செய்யும் பணியிலமர்த்தப்பட்டிருந்தேன். மேடையில் பாரதிராஜா அவரது சொற்பொழிவுக்கான தயாரிப்புக்களையும் தாண்டி உணர்ச்சிபூர்வமாகப் பேசிக்கொண்டிருந்தார். பார்வையாளர்களின் சில பெருமூச்சுகள் தவிர்த்து அரங்கம் வெகு அமைதியிலிருந்தது. அப்போது 40 வயது மதிக்கத்தக்க கொஞ்சம் சீரியஸான தோற்றம் கொண்ட ஒரு அன்பர் படியேறி மேலே வந்தார். வந்தவர் வாசலில் நிலை கொண்டு அரங்கம் முழுவதையும் ஊன்றி கவனித்தார். நான் மெல்ல அருகில் சென்று " ஸார் உள்ளே.." திரும்பி என்னை உற்று நோக்கியவர், தாடையைப் படிக்கட்டின் கீழ்நோக்கி அசைத்தார். அங்கு ஒரு பெண்மணியும் ஒரு சிறுவனும் படியேறி வந்து கொண்டிருந்தனர்.
மூவருமாகக் கொஞ்சம் நகர்ந்து உள்ளே சென்றனர். நானும் மறந்து விட்டேன். ஒருசில நிமிடத்தில் திரும்பி என்னை நோக்கி வந்தார். வந்தவர் ஒரு கேள்வி கேட்டார். " இந்த விஷ்ணுபுரம் எங்கே இருக்கிறது..? " அட .. ! சில கணங்கள் இமைக்காமல் நின்றேன். இயல்பாகி, " சார் அது எங்கேயும் இல்லை. ஜெயமோகன் சாரோட ஒரு புஸ்தகம் பெயர் அது. நாங்கள் நண்பர்களெல்லாம்…" அவர் தலையாட்டிவிட்டுத் திரும்பி நடந்து போய் அமர்ந்து கொண்டார். நான் உற்சாகமானேன். அவருக்கும் அந்தப் பெண்மணிக்கும் ஏதோ உரையாடல் நடக்கிறது. இரண்டு செல்போனும் காதில் ஸ்பீக்கரும் நெற்றி வியர்வையுமாகக் கடந்து சென்ற அரங்கசாமியிடம் சொல்ல எத்தனித்துக் கட்டுப்படுத்திக்கொண்டேன்.
இப்போது அந்தப் பெண்மணி என்னருகே வந்தார். " விஷ்ணுபுரம் ஜெயமோகன் பிறந்த ஊரா…? " ஆஹா..! " இல்லை மேடம் அது வந்து… " " அப்போ பூமணி பிறந்த ஊரா…?" எனது முழு அறிவும் பதிலின்றி விக்கித்து நிற்க அவரும் வந்து சேர்ந்து கொண்டார். பெண்மணி அவரைப் பார்த்துத் தலையசைக்க, மூவரும் படியிறங்கி வேகமாகச் சென்றனர். அது வரை எந்த சலனமும் வெளிக்காட்டாதிருந்த பையன், பாதி படி இறங்கியதும் நின்று, திரும்பி என்னைப்பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தான். பின் நடையைத் தொடர்ந்தான்.
கெ.பி.வினோத்
அன்புள்ள ஜெ
நான் செழியன். விஷ்ணுபுரம் விழாவுக்கு வந்திருந்தேன். ஆனால் உங்களிடமோ எஸ்ராவிடமோ நான் அறிமுகம் செய்துகொள்ளவில்லை. கூச்சம்தான் காரணம். காலையிலேயே வந்தேன். கீதாஹாலில் கேட்டபோது பக்கத்திலே முருகன் ஓட்டலில் இருப்பதாகச் சொன்னார்கள். அங்கே வந்தேன். பிறகு கீதா ஹாலிலும் வந்தேன். எஸ்ரா பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டேன். தகவல்களும் ஜோக்குகளுமாகப் பேசிக்கொண்டே இருந்தார். அவரது கிரியேட்டிவிட்டி என்னை ஆச்சரியப்படுத்தியது. அவரை நிறைய வாசித்திருக்கிறேன். அவரது கதைகளைப் பற்றி அவரிடம் சொன்னேன். யுவன் சந்திரசேகரிடமும் அவரது கதைகளைப்பற்றி சொன்னேன்.
விழா மிகமிக சிறப்பாக நடைபெற்றது. எல்லாருமே நன்றாகப் பேசினார்கள்.எஸ்ரா சிறப்பான பேச்சாளர் என்பது தெரியும். யுவன் சந்திரசேகர் இப்படிப் பிரமாதமாகப் பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. விழாவின் ஒவ்வொரு விஷயமும் அருமை. எல்லாரும் பூமணி பற்றியே பேசியதும் வழிதவறிசெல்லாமல் இருந்ததும் மிகப்பெரிய விஷயம். பூமணியின் மனைவியை கௌரவித்ததும் அவர் கண்ணீர் விட்டார். அதைக்கண்டு நானும் கண்ணீர் விட்டேன். அதுதான் இந்த விழாவின் நோக்கம் நிறைவேறியதற்கான ஆதாரம்
வாழ்த்துக்கள்
செழியன்
தொடர்புடைய பதிவுகள்
விழா: இளங்கோ
விழா:கோபி ராமமூர்த்தி
விழா-கடிதங்கள்
விழா
விஷ்ணுபுரம் விழா- வடகரை வேலன்
விஷ்ணுபுரம் விருது பற்றி…
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
