Jeyamohan's Blog, page 2258
January 11, 2012
பயணத்துக்குக் குழு தேவையா?
அன்புள்ள ஜெயமோகன்,
இந்தியப்பயணத்துக்கான தயாரிப்புகளில் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். உங்கள் பயணக்கட்டுரைகளைத் தொடர்ந்து வாசிப்பவன் நான். உங்களுடைய பெரும்பாலான பயணங்களில் நண்பர்களுடன்தான் செல்கிறீர்கள். அப்படிக் குழுவாகச்செல்லும்போது அரட்டையும் பேச்சுமாகக் கவனம் திசை திரும்பி பயணத்தில் நிலைக்காமல் ஆகிவிடுமல்லவா? தனியாகப் பயணம் செய்யும்போதுதானே உள்நோக்கிய கவனம் குவிந்து ஒருமுகப்பட்டு நாம் கவனிக்க முடியும்? இதை நான் உங்களிடம் கேட்கவேண்டும் என்று நினைத்தேன். ஆகவே கேட்கிறேன்.
நாராயணன்
வேம்பலூர்
அன்புள்ள நாராயணன்,
பயணங்களைத் தொடர்ந்து செய்பவர்கள் சிலரே. பெரும்பாலானவர்கள் பயணம் பற்றிய கற்பனைகளில் மட்டுமே இருப்பவர்கள். பயணம் பற்றிய பல கொள்கைகளை இவர்களே உருவாக்குகிறார்கள். உண்மையிலேயே பயணம் செய்பவர்கள் இந்தக் கேள்விக்கான விடையை அவர்களே அனுபவம் சார்ந்து சொல்லிவிட முடியும்.
நான் தனியாகவும் நண்பர்களுடனும் பயணம் செய்யக்கூடியவன். இப்போதும் பலபயணங்களைத் தனியாகவே செய்கிறேன். இரண்டுக்குமான மனநிலைகள், பயன்கள் வேறுவேறு.
தனியாகச்செல்லும் பயணங்களில் மனம் ஒருமை கூடும் என்பதெல்லாம் ஒரு பிரமை மட்டுமே. அதிகமும் பயணிக்காதவர்களின் நம்பிக்கை அது. உண்மையில் புதிய இடங்களில் தனியாகப் பயணம்செய்யும்போது பலவகையான லௌகீகமான பொறுப்புகள் நம் மீது அமர்கின்றன. வழிவிசாரித்தல் முதல் தங்குமிடம், உணவு முதலியவற்றைக் கண்டடைதல் வரை எல்லாமே நாமே செய்தாகவேண்டும். தனியாகப் பயணம் செய்பவர்களின் பெரும்பாலான நேரம் இதில்தான் செலவாகும். சிறுவயதில்- இதெல்லாமே அனுபவங்களாகத் தோன்றும் காலகட்டத்தில்- தனியாகச்செல்லும் பயணத்தின் சுவாரசியமே இதுவாக இருக்கும். ஆனால் பின்னர் இதில் சலிப்பு வந்துவிடும். சாராம்சமான அனுபவங்களை மட்டுமே நாட ஆரம்பிப்போம்.
தனியாகச் செல்லும்போது மனம் குவியும் என்பதெல்லாம் கற்பனை. மனம் குவிவதென்பது எளிதில் நிகழக்கூடியதல்ல. யோகிகள் அல்லாத எவருக்கும் தனியாகச்செல்லும்போதும் மனம் பல்வேறு நினைவுகளால் அலைபாய்ந்தபடியேதான் இருக்கும். சொல்லப்போனால் தனிமை காரணமாகவே இன்னும் அதிகப்படியான எச்சரிக்கை உணர்ச்சியும் கடந்த நினைவுகளும் வருங்காலத் திட்டங்களுமாக எண்ணங்கள் அலைபாயும். பெரும்பாலும் ஒரு புதிய இடத்தைப்பார்த்ததும் வரும் மன எழுச்சி சில கணங்களிலேயே இல்லாமலாகிவிடும். அக்காட்சிமீது நம் பிரக்ஞை நினைவுகளைக் கொண்டுவந்து கொட்ட ஆரம்பிக்கும். அந்தக் காட்சியுடன் இணைந்த எண்ணங்களும் பிம்பங்களுமாக அனுபவம் ஒரு பெரிய சருகுக்குவியலாக ஆகும். மனித மனதின் மிகப்பெரிய ஆற்றல் என்பதே அது தொடர்புவலையை உருவாக்குவதுதான். அதுவே அதன் சிக்கலும் கூட. தன்னிச்சையாக விரியும் அந்த வலையை அறுத்துச்சுருட்டுவது எளிதல்ல.
மனதைக் குவியச்செய்வதற்குத் தனிமை ஒரு வழியே அல்ல. அதற்கு வேறு வழிகள் உள்ளன. தனியாகச் சென்றால்கூட மனதைப் புறக்காட்சியில் குவியச்செய்து முழுக்க உள்வாங்கிக்கொள்ளப் பலவகையான நுட்பமான பயிற்சிகளும் செயல்முறைகளும் உள்ளன. முழுப் பிரக்ஞையையும் கண்ணிலும் காதிலும் தேக்கி வெளியே பார்ப்பதும், ஊடாக வந்து மறைக்கும் எண்ணங்களின் பாசிப்படலத்தை விலக்குவதும் ஒருவகை தியானம். நித்யா கற்பித்து என் பயணங்களில் செய்யும் பல வழிகள் உண்டு. அவற்றில் சிலவற்றை நாங்கள் செய்வதுமுண்டு.
தனியாகச் செல்லவேண்டிய தருணங்கள் உண்டு. நாம் மீண்டும் மீண்டும் செல்லுமிடங்களுக்குத் தனியாகச் செல்லலாம். இயல்பாகப் புற உலகம் பற்றிய எச்சரிக்கையோ தேவைகளோ இல்லாமலாகிவிட்டிருப்பதனால் நாம் நமக்குள் குவிவதற்கு மேலும் அதிக சாத்தியங்கள் உள்ளன.
மற்றபடி சேர்ந்து செல்வதே மேல். ஒன்று பயணத்தின் பலவிஷயங்களைப் பகிர்ந்துகொள்ள முடியும். பலவகைத் திறமைகள் கொண்டவர்கள் உண்டு. வழிகேட்டு நினைவில் வைத்துக்கொண்டு செல்வதில் கெட்டிக்காரர்கள் இருக்கலாம். தங்குமிடம் போன்றவற்றை எளிதில் ஏற்பாடு செய்பவர்கள் இருக்கலாம். அத்தகைய குழு நம் புறவுலகச் சுமைகளைப் பெருமளவுக்குக் குறைத்துவிடுகிறது.
அதைவிட முக்கியமானது செலவு. நாங்கள் செல்லும் இந்தப்பயணங்கள் இயற்கையனுபவத்துக்காக, வரலாற்றனுபவத்துக்காகச் செல்பவை. ஆகவே அதிகமும் மக்கள் வசிக்காத வனப்பகுதிகளும்,கிராமப்பகுதிகளும்தான் எங்கள் திட்டத்தில் இருக்கும். அங்கே செல்ல கார் இல்லாமல் முடியாது. பேருந்தில் சென்றால் பேருந்துக்காகக் காத்திருப்பதே பெரிய வேலையாக முடியும். கார்ச்செலவை நண்பர்கள் சேர்ந்து பகிர்ந்துகொள்ளாவிட்டால் இத்தகைய பெரிய பயணங்களை அடிக்கடி திட்டமிட முடியாது. இந்த இந்தியப்பயணத்தை நான் மட்டும் காரில் சென்றால் மொத்தச் செலவு ஒருலட்சம் வரை வரக்கூடும். பயணங்களில் மோகமுடைய ஒருவர் அதிகபட்ச பயணம் என்பதையே விரும்புவார். அதற்காகவே திட்டமிடுவார்.
ஆனால் பயணத்தில் நம் மனநிலையுடன் இணையாத நண்பர்களைச் சேர்த்துக்கொள்வது கூடாது. பயணத்தையே அலுப்பாக்கிவிடுவார்கள். ஒரே மனநிலையில் குவியும் நண்பர்கள் தேவை. அவர்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் உண்மையில் ஒரு பயணம் முழுக்க அந்தப்பயணத்தின் தீவிர மனநிலையைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்.
இன்னும் ஒரு விஷயம் உண்டு, தனியாகச் செல்வதை விட நண்பர்களுடன் செல்லும்போது அதிகமான தீவிரமும் ஒருமுகப்படுதலும் சாத்தியமாகிறது. நம் நினைவுகள் அலைபாய்ந்தால்கூட இன்னொரு நண்பர் நம்மை அந்த மனநிலைக்கு இழுத்துச் சென்றுவிடுவார்.
இலக்கிய வாசிப்பு, தத்துவ விவாதம், இசைகேட்டல் என எல்லாவற்றிலும் கூடிச்செய்வது உத்வேகத்தை அதிகரிப்பதை நீங்கள் அனுபவத்தில் காணலாம். ஒரு செறிவான காவியத்தைத் தனியாக அமர்ந்து வாசித்தால் பத்து பாடல்களுக்கு மேலே செல்ல முடியாது. ஒரு கூட்டுவாசிப்பில் நாலைந்து நாட்கள்கூட அதே தீவிர மனநிலையுடன் பல அதிகாரங்களை வாசித்துச்செல்ல முடியும். ஆகவேதான் பெரும்பாலான கல்வியமைப்புகள் கூட்டுக்கல்வியை வலியுறுத்துகின்றன. ஊட்டி கவியரங்கு போன்றவற்றில் இதை அனுபவபூர்வமாகக் காண்கிறோம்.
ஏன் தியானத்தைக்கூடக் கூடிச்செய்வதையே பெரும்பாலான குருமுறைகள் முன்வைக்கின்றன. ஏனென்றால், ஒரு மனதின் தீவிரம் இன்னொரு மனதை பாதிக்கக்கூடியது. தீவிரமான மனங்கள் பல ஒன்றாகச் சேர்ந்தால் அனைவருடைய தீவிரமும் ஒன்றாகி ஒட்டுமொத்தமாக ஒரு பெரும் தீவிரம் உருவாகிறது. அந்த ஒட்டுமொத்தத் தீவிரத்தின் அளவு எந்தத் தனிநபராலும் அடைய முடியாதது. அதேசமயம் ஒரு கூட்டுச்செயல்பாட்டில் அதை ஒரு தனிநபர் எளிதில் சென்றடைய முடிகிறது.
பயணத்திலும் அது நிகழ்வதைக் காணலாம். ஒத்தமனம் கொண்டவர்கள் என்றால் அந்த வேகம் அனைவரிலும் கூடுகிறது. ஒரே உச்சமனநிலையில் ஒருமாதம் பயணம்செய்ய முடிகிறது. தனியாகச்செல்லும்போது நிகழாத ஒருமையும் தீவிரமும் சாத்தியமாகிறது. பண்டாரங்களாக அலையும் துறவிகள் கூட அப்படித்தான் பயணம்செய்கிறார்கள் என்பதை கவனித்திருக்கிறேன். துறவிகளின் குழுக்களுடன் இமயமலைப்பயணம் செய்யும்போதும் இந்தத் தீவிரம் கைகூடுவதை அனுபவித்தறிந்திருக்கிறேன்.
ஆனால் நிபந்தனை ஒன்றுதான். சமமான மனநிலை கொண்ட குழுவாக இருக்கவேண்டும். இத்தகைய பயணத்தில் ஒருவர் அந்த மனநிலையில் இருந்து இறங்கினால்கூட பிறரையும் இறக்கிவிட்டுவிடுவார். இருவர் நடுவே சண்டையோ கசப்போ வந்தால் ஒட்டுமொத்தப் பயணமும் இனிமையை இழந்துவிடும். அந்த அனுபவமும் முன்பு ஏற்பட்டதுண்டு. ஆகவே எப்போதும் கூடக் கூட்டிச்செல்லும் நண்பர்களின் விஷயத்தில் மிகமிக கவனமாக இருக்கிறேன். என்னுடைய ஆடிப்பிம்பங்கள் போன்ற நண்பர்களையே தேர்ந்தெடுக்கிறேன்.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
மீண்டுமோர் இந்தியப்பயணம்
January 10, 2012
இணையதள வாசகர்கள்
ஜெ,
உங்கள் பதில் அற்புதம். சாதாரணமாக ஆரம்பித்து (வழக்கம் போல :)) தத்துவார்த்த தளத்திற்கு சென்று விட்டது. என்ன பயன் என்று கேட்டதற்கு ஒரு உற்சாக டானிக் பதிலாகக் கிடைத்துவிட்டது.
// இதை எப்படி மேலும் efficient ஆக செய்வது, அடுத்த லெவலுக்கு இந்த மாதிரி தளங்களை எப்படிக் கொண்டுபோவது என்ற கேள்வி. //
என்றும் ஆர்.வி. கேட்டார். அதனால் அவர் சில practical tips, யோசனைகள், கூட்டு முயற்சிகள் ஆகியவை பற்றி ஐடியாக்கள் கேட்கிறார் என்று படுகிறது.
சரிதானே ஆர் வி?
ஜடாயு
அன்புள்ள ஜடாயு,
ஆர்வி சொல்வதில் உள்ள நடைமுறைப் பிரச்சினையை நான் இவ்வாறு புரிந்துகொண்டிருக்கிறேன். இணையதளங்களின் வாசகர்களை சில குழுக்களாகப் பிரித்துப்பார்க்கலாம். நாம் இலக்காக்குபவர் எவரென்ற எண்ணம் நமக்குத்தேவை.
இணையம் ஆரம்பிக்கும்போதே உள்ளே வந்தவர்கள் நிறையப்பேர் உள்ளனர். பெரும்பாலானவர்கள் தாங்களும் பிளாக் வைத்து எதையோ எழுதிக்கொண்டிருப்பார்கள். ஆகவே மூத்த வலைப்பதிவர்கள் என அறியப்படுகிறார்கள். பலர் தங்களை எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் துணிவு கொண்டவர்கள்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் கற்பனையோ, அறியும் ஆர்வமோ இல்லாதவர்கள். பலர் பத்து வருடமாக வாசித்து, எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்றாலும் மொழியில், கூறுமுறையில் ஒரு சிறிய வளர்ச்சியைக்கூட காணமுடியாது. பெரும்பாலும் அரட்டை என்ற எல்லைக்குள்ளேயே நின்றுவிட்டவர்கள். எங்கும் எதிலும் ஆழம் நோக்கிய தேடலோ எதையும் கவனிக்கும் பழக்கமோ இல்லாதவர்கள்.
ஆனால் இவர்களில் நிறையப்பேர் மிக இறுக்கமான அரசியல் நிலைப்பாடு அல்லது சாதியப்பிடிப்பு கொண்டவர்கள் என்பதை ஊகிக்கிறேன். பெரும்பாலும் இவர்களின் கருத்துக்களுக்குள் அந்தப் பற்றுகள்தான் இருக்கும். இவர்களின் முதல் ஈடுபாடு வம்பு என்பதனால் [முறையே வசைகள், சினிமா, அரசியல், சாப்பாடு] எவர் எங்கே சண்டை போட்டாலும் அங்கே சென்று குவிவார்கள்.
இவர்கள் நம் இணையதளத்தை வாசிக்கலாம், கருத்தும் சொல்லலாம். ஆனால் இவர்களால் எந்த பயனும் இல்லை. இவர்களிடம் பேசுவதென்பது களரில் விதைப்பது போல. ஒருபோதும் இவர்களுடன் விவாதிக்கக்கூடாது. ஒருபோதும் இவர்கள் சொல்லும் ஒரு கருத்தையும் பொருட்படுத்தக்கூடாது. பாராட்டுகளைக்கூட.
இவர்களிடம் விவாதங்களில் இறங்குபவர்கள் இவர்களால் ஆழமாகப் புண்படுவதற்கு வாய்ப்புண்டு. ஏனென்றால் இணையம் ஒரு அமனித வெளி. தனிமனிதத் தொடர்புகள் இங்கே இல்லை. மேலும் இவர்கள் வசைபாடுதல், நக்கலடித்தல் ஆகியவற்றையே பல ஆண்டுகளாகச் செய்து அதில் தேர்ச்சியும் பெற்றிருக்கிறார்கள்.
அனைத்துக்கும் மேலாக லௌகீகத்தில் எங்கோ எப்படியோ அடைந்த தோல்விகளின் கசப்பை இங்கே கொண்டுவந்து கொட்டுபவர்களாகவே பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். இவர்களுடனான கசப்பை இணையம் மீதான கசப்பாக நாம் ஆக்கிக்கொள்ள நேரும். இழப்பு நமக்குத்தான். இதைப் பத்தாண்டுகளுக்கு முன் இணையத்துக்கு வந்த காலத்திலேயே உணர்ந்து எச்சரிக்கையாகிவிட்டேன்.
சென்ற சில ஆண்டுகளாக இணையதளம் ஒரு பொதுவெளியாக ஆனமையால் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே வந்துகொண்டிருக்கும் பொதுவாசகர்களையே நாம் இலக்காக்கவேண்டும். அவர்கள் பலவகைப்பட்டவர்கள். தங்களுக்கு உகந்த எதையேனும் தேடி நம் இணையதளத்துக்கு வருபவர்கள். புதிய விஷயங்களைக் கண்டு ஆர்வம் கொண்டு வாசிக்க ஆரம்பிக்கிறார்கள்.
இவர்கள் பெரும்பாலும் சிலவருடங்கள் கழித்தே தங்களை வெளிப்படுத்திக்கொள்வார்கள். ஆகவே இவர்கள் இல்லை என்றே நாம் நினைத்துக்கொள்வோம். இவர்களே நம் உண்மையான வாசகர்கள். இவர்களில் நாம் உருவாக்கும் பாதிப்பே உண்மையானது.
இவர்கள் பலர் சீக்கிரத்திலே இணையத்தின் அரட்டை-சண்டை உலகில் சென்று கரைந்துவிடக்கூடும். சிலர் ஆர்வமிழந்து பின் தங்கிவிடக்கூடும். ஆனாலும் கூட நமக்கு வாசகர்கள் வந்தபடியேதான் இருப்பார்கள். தமிழில் ஆழமான தடம் பதித்த பல சிற்றிதழ்கள் 500 பிரதிகளே அச்சிடப்பட்டன. ஆனால் ஒரு சாதாரண இணையதளமே 2000 வாசகர்களைப் பெறமுடியும். ஆகவே இது மிகப்பெரிய வாய்ப்பு.
சமீபகாலமாகப் பல்வேறு சமூக ஊடகங்களில் இணையதளக் கட்டுரைகளை வாசிக்கமுடிகிறது. அது வாசகர்களை அதிகரித்திருக்கிறது. செல்பேசியில் வாசிக்கமுடிந்த பின் அவ்வெண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கிறது. நான் சிலிகான் ஷெல்ஃபில் ஒரு கட்டுரையைக்கூடப் படிக்காமல் விட்டதில்லை. அதேபோலப் படித்த நண்பர்களையே சந்தித்துக் கொண்டிருக்கிறேன். ஆர்வி அவர்களை அறியமாட்டார்.
இதற்கும் அப்பால் ஒரு விஷயம் உண்டு. வாசகர்களை உருவாக்குவது தமிழின் பொதுவான பண்பாட்டுவெளிதான். அது இன்று இலக்கியம் கலை போன்றவற்றுக்கு இடமில்லாதது. வணிகம், அதிகார அரசியல், கேளிக்கைசினிமா என்னும் மூன்று அம்சங்களால் ஆனது அது. அதன் பொதுவான கருத்தியல்தளம் அந்த மூன்றிலும் மட்டுமே ஆர்வம் கொண்ட மனிதர்களையே சாதாரணமாக உருவாக்குகிறது.
ஆகவே இங்கே ஒருவருக்கு இருக்கும் கலை இலக்கிய ரசனை மற்றும் சிந்தனைத் திறன் என்பது நம்மைச்சுற்றி உள்ள பொதுவான போக்கில் இருந்து மீறி விடுபட்டு அவர் உருவாக்கிக்கொண்ட ஒன்று. ஒரு சர்வசாதாரணமான இலக்கியவாசகர், கலைரசிகர் கூட நம் சூழலில் ஒரு மீறலும் அபூர்வநிகழ்வுமாக இருப்பவர் என்பதை நாம் கணக்கில் கொள்ளவேண்டும்.
ஒருவருக்கு அவரது இளமையிலேயே கிடைக்கும் அனுபவங்களும் திறப்புகளுமே அவரை அப்படி ரசனையும் சிந்தனையும் கொண்டவர்களாக ஆக்குகின்றன. இங்கே அது பெரும்பாலும் தற்செயலே. அப்படி ரசனையும் சிந்தனையும் முன்னரே கொண்ட ஒருவர் நம் இணையதளத்தைச் சந்திக்கும்போது ஒரு வாசகர் நமக்கு அமைகிறார். அதுவும் ஒருவகைத் தற்செயலே.
நாம் வாசகர்களை உருவாக்க முடியாது. நாம் அவர்களைக் கண்டடையக்கூட முடியாது. அவர்கள் நம்மைக் கண்டடைவது மட்டுமே வழி. ஆகவே நாம் 'வலை' விரித்து அமர்ந்திருப்பதை மட்டுமே செய்யமுடியும்.
இதற்குமேல் இணையதளம், புத்தகம் போன்றவற்றைப் 'பிரச்சாரம்' செய்யலாமென நிறையப்பேர் நினைக்கிறார்கள். இலக்கியத்தைப் பிரச்சாரம் மற்றும் வினியோகம் மூலம் வளர்க்க முடியாது. இலக்கியம் சூழலில் உருவாகும் பண்பாட்டு மாற்றம் மூலமே வளரும். கர்நாடக சங்கீதத்துக்கு உள்ள ஊடக விளம்பரம் அதை ஒரு மக்களியக்கமாக ஆக்கியதா என்ன? அதற்கான ரசனை உள்ளவர்களை மட்டுமே அது சென்றடையும். அந்த ரசனை அதற்கான பண்பாட்டுச்சூழலில் சிறுவயதுமுதலே உருவாகக்கூடியது.
தமிழகத்தில் கண்டிப்பாக ஒரு பண்பாட்டு மாற்றம் நிகழ்ந்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் நூல் விற்பனை நூறு மடங்கு ஏறியுள்ளது என்பது தெரியுமா? அந்த மாற்றத்தை நிகழ்த்தியதில் இணையதளங்களுக்கும் பங்குண்டு. அதில் ஆர்வியும் பங்கெடுக்கிறார்.
ஆனால் பண்பாட்டு மாற்றமென்பது சாதாரணமாக நிகழ்வதல்ல. மெல்லமெல்ல அணுவணுவாக நிகழ்வது அது. கண்ணுக்குத் தெரியாத அசைவு அது. அது நிகழ்ந்ததை சில ஆண்டுகள் கழித்தே நம்மால் உணரமுடியும்.
ஆகவே நாம் செய்யக்கூடுவது ஒன்றே. நம்மை மேலும் தீவிரமும் மேலும் விரிவும் கொண்டவர்களாக ஆக்கி முன்வைப்பது.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
ஆகவே கொலை புரிக!
சரித்திர நாவல்கள்
ஆர்வியின் கதை
வாசிப்புக்காக ஒரு தளம்
தினமணி -யானை டாக்டர்
யானைகளின் பாதையில் தனியார் நிறுவனங்கள் அமைத்துள்ள கதிரொளி மின்வேலிகளை அகற்றுங்கள்' என்று சென்னை உயர் நீதிமன்றம் சென்ற வாரம் உத்தரவிட்டுள்ளது. இயற்கை ஆர்வலர் கொடுத்திருந்த மனுவைத் தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம். "மனிதன் தன் பேராசை காரணமாகவும் தன் சுகத்துக்காகவும் யானைகள் மற்றும் வனவிலங்குகளின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதைக்' கண்டிக்கவும் செய்துள்ளது.
தினமணி தலையங்கம் – 10 01 2012
தொடர்புடைய பதிவுகள்
இலட்சியவாதம்-கடிதங்கள்
அன்பை வாங்கிக்கொள்ளுதல்…[கடலூர் சீனு]
கடிதங்கள்
கடிதங்கள்
அறம் வாழும்-கடிதம்
யானை- கடிதம்
யானைடாக்டர்-ஓர் உரை
வாழும் கணங்கள்-கடிதங்கள்
இலங்கையில் இருந்து ஒரு கடிதம்
யானை டாக்டர் இலவச நூல் வினியோகம்
January 9, 2012
மார்க்ஸிய நூல்பட்டியல்
தமிழில் மார்க்ஸியம் சார்ந்து இப்போது கிடைக்கும் ஏறத்தாழ எல்லா நூல்களையும் பதிப்பக வாரியாகப் பட்டியலிட்டிருக்கிறார்கள் வினவு தளத்தில். கவனமாகச்செய்யப்பட்ட முக்கியமான தொகுப்பு. இத்தனை நூல்கள் வெளிவந்துகொண்டிருக்கும் தமிழ்ச்சூழலில் நூல்களுக்கு உள்ளடக்கம் சார்ந்து உருவாக்கப்படும் பட்டியல்களுக்குப் பெரும் முக்கியத்துவம் உண்டு. மார்க்ஸியம் மீது ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரும் கவனிக்கவேண்டிய பதிவு.
வினவுநூல் பட்டியல்
தொடர்புடைய பதிவுகள்
அசிங்கமான மார்க்ஸியம்
அண்ணா ஹசாரே, மீண்டும் இரு உரையாடல்கள்.
பின் தொடரும் நிழலின் குரல் பற்றி
மார்க்ஸியம் இன்று தேவையா?
மார்க்ஸ் கண்ட இந்தியா
கடிதங்கள்
ஆகவே கொலை புரிக!
நானும் ஒரு வருஷத்துக்கு மேலாக சிலிகான் ஷெல்ஃப் என்று ப்ளாக் எழுதி வருகிறேன். என் பாணியில், என் ரசனைக்கு ஏற்றபடி, சமரசம் இல்லாமல் மனதுக்குப் பட்டதை எழுதி வருகிறேன். நான் எழுதுவது விமர்சனம் என்பதை விட, புத்தக அறிமுகம் என்பதுதான் இன்னும் பொருத்தமாக இருக்கும். ஒரு ஏழெட்டுப் பேர் மாதமொரு முறை கூடி ஏதோ ஒரு புத்தகத்தைப் பற்றிப் பேசுகிறோம்.
நான் மட்டுமல்ல இந்தக் குழும உறுப்பினர்கள் பலரும் ப்ளாக் எழுதுகிறார்கள். கூகிளில் buzz-கிறார்கள். ட்விட்டர், ஃ பேஸ்புக், இந்தக் குழுமம் எதிலாவது புத்தகம், இலக்கியம் பற்றி அவரவர் கருத்தைப் பதிவு செய்து கொண்டே இருக்கிறோம்.
இதனால் எல்லாம் பைசாவுக்கு பிரயோஜனம் உண்டா, இத்தனை நேரம் செலவழித்து என்னத்தைக் கண்டோம் என்று எனக்கு சமீப காலத்தில் ஒரு சோர்வு உருவாகி இருக்கிறது. செலவழிக்கும் நேரம் அதிகம், பயன் குறைவு என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது.
இது ஏன் படிக்கிறோம் என்ற கேள்வி இல்லை. அப்படி ஒரு கேள்வி எழாதபடி என் மூளை சலவை செய்யப்பட்டிருக்கிறது. புத்தக அறிமுகத்தால் என்ன பயன் என்ற கேள்வியும் இல்லை. சொந்த அனுபவங்கள் எனக்கு என்ன பயன் என்று தெளிவுபடுத்தி இருக்கின்றன. இப்படி மாய்ந்து மாய்ந்து எழுதுவதால் என்ன பயன்?
ஆர்வி
அன்புள்ள ஆர்வி,
எல்லாச் செயல்களிலும், அவை எவ்வளவு பயனுள்ளவையாக உண்மையில் இருந்தாலும், ஒரு சோர்வுத்தருணம் உண்டு. அதுவும் அதன் பகுதியே. இதை எழுதும்போது காகா காலேல்கரின் சரிதையை வாசித்துக்கொண்டிருக்கிறேன். காந்தியின் சீடர். எழுத்தாளர். நம்மைப்போன்றவரல்ல, லௌகீக வாழ்க்கையே இல்லாத அர்ப்பணிப்புள்ள தேச சேவகர். அவர் தொடங்கிய பெரும்பாலான முயற்சிகள் வெள்ளைய அரசால் அழிக்கப்பட்டன. பல முயற்சிகள் பல காரணங்களால் தேங்கி நின்றன. கூட இருப்பவர்கள் மனம் சோர்கிறார்கள். ஆனால் 'இவற்றைச் செய்யாமலிருந்தால் அடையும் வெறுமையைவிட செய்து நிறைவேறாமல் போவது மேல்' என காகா பதிலளிக்கிறார். பெரும்செயல்வீரர்கள் இத்தகைய சோர்வை அறியாதவர்கள் அல்ல, சோர்வைக் குறைந்த கால அவகாசத்தில் சமாதானம் செய்துகொண்டு மீளத்தெரிந்தவர்கள்.
நம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கை நாம் புரிந்துகொள்ளக்கூடிய அளவு சிறிதல்ல. மிகப்பிரம்மாண்டமான, மிகச்சிக்கலான ஒரு கூட்டியக்கம் இது. ஒன்று இன்னொன்றாக நீளும் நிகழ்ச்சிகளின் வலை. தற்செயல்களின் நடனம் அல்லது விதியின் ஆடல். இதில் நாம் செய்யக்கூடிய எந்த செயலும் எப்படி என்ன விளைவை உருவாக்கும் என்று சொல்லிவிடமுடியாது. சின்னஞ்சிறு செயல் இந்த மாபெரும் வலையை உலுக்கலாம். பெரிய செயல் ஒன்றுமே ஆகாமலும் போகலாம். நம்மால் இதைப் புரிந்துகொள்ளவே முடியாது. நாம் செய்வதன் பலனை மதிப்பிட முயன்றால் ஒன்றுமே செய்ய முடியாது. ஆகவேதான் கீதை. 'பலனை என்னிடம் விட்டுவிட்டு உன் தன்னியல்புக்கு உகந்த கடமையை மட்டும் செய்' என்ற அறிவுரை.
ஆனால் இங்கே செய்யப்படும் எச்செயலும் வீணல்ல என்பதும் ஓர் அனுபவமே. எல்லாச் செயலுக்கும் எதிர்ச்செயலுண்டு. ஆகவே எல்லாமே எங்கோ எப்படியோ விளைவுகளை உருவாக்கிக்கொண்டேதான் உள்ளன. அந்த எண்ணமே நம்மை செயல்நோக்கிச் செலுத்தவேண்டும்.
கருத்தியல் தளத்திலான செயல்பாடுகள் உருவாக்கும் விளைவுகள் மிக மறைமுகமானவை. உங்களை நாள்தோறும் மறுத்துக்கொண்டே இருக்கும் ஒருவரை நீங்கள் உள்ளூர மாற்றிக்கொண்டே இருக்கக்கூடும் – நீங்கள் இருவருமே அதை அறிய மாட்டீர்கள். ஒரு கல் நீரில் விழுந்து அலைகளை உருவாக்குவது போலத்தான் ஒரு கருத்து சமூக மனதில் செயல்படுகிறது. முதலில் சின்ன வட்டம். அடுத்து பெரியவட்டம். அடுத்து அதைவிட பெரிய வட்டம். சின்னவட்டமே பெரிய வட்டத்தை உருவாக்குகிறது. சின்னவட்டம் தீவிரமானது. பெரிய வட்டம் பலவீனமானது.
கருத்துத்தளத்தில் செயல்படும் சிலர் ஒரு பிரம்மாண்டமான சமூகத்தை மாற்றுவது அப்படித்தான். அது சாத்தியமற்றதாகத் தோன்றும். ஆனால் அது நிகழ்ந்தபடி இருக்கிறது. 1880களில் பெண்களைப் பள்ளிக்கூடம் அனுப்பவேண்டுமெனத் தீவிரமாகத் தமிழில் எழுதி பேசியவர்கள் சிலநூறு பேர். நூறுவருடங்களில் தமிழகத்தில் ஆண்களைவிடப் பெண்கள் அதிகம் படிக்கும் காலம் வந்துவிடுமென அவர்கள் கனவுகூடக் கண்டிருக்கமாட்டார்கள். அதை நிகழ்த்தியது 250 பிரதி அச்சிடப்பட்ட இதழ்களில் அவர்கள் எழுதிய கட்டுரைகள் என்று அவர்களிடம் சொன்னால் மூர்ச்சையாகிவிடுவார்கள். இந்த பிரம்மாண்டமான நிகழ்வு ஒரு தனிமனிதனுடைய ஊகங்களைத் தாண்டியது.
இசைத்தட்டின் நடுவே உள்ள அச்சு அதைத் தூக்கிச்சுழற்றுவது போல ஒரு சமூகத்தின் கருத்தியல் மையமே அதை இயக்குகிறது. அதில் எல்லாக் கருத்துக்களுக்கும் இடமுண்டு. அரவிந்தன் நீலகண்டனும் அ.மார்க்ஸும் அதில் பங்களிப்பாற்றுகிறார்கள். ஆர்வியும் டாக்டர் சுனிலும் அதில் பங்களிப்பாற்றுகிறார்கள். கருத்துக்கள் என்பவை ஒன்றுடன் ஒன்று மோதி சமரசம் செய்தும் மீறியும் செயல்படுகின்றன.
நாம் நம் அன்றாடவாழ்க்கையின் அர்த்தமின்மையை உள்ளூர அறிந்தே இருக்கிறோம். தேடிச்சோறு நிதம் தின்னும் வாழ்க்கை. பிரபஞ்ச அர்த்தத்தை உணர்ந்து இந்த அன்றாட வாழ்க்கையில் சும்மா அமர்ந்திருக்க எல்லாராலும் முடியாது. இந்த அன்றாட வாழ்க்கையின் வெறுமையை வெல்லவே நாம் செயலில் ஈடுபடுகிறோம். செயல் இல்லாவிட்டால் இந்த வெறுமை நம்மைக் கொன்றுவிடும். 'போர் அடிக்கிறது' என நாம் சொல்வதே அர்த்தமற்ற காலத்தை நாம் உணர்வதுதான். அதைத் தாண்டவே மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள். உண்மையில் வேலையே குறி என்றிருப்பவர்கள் அந்த வேலை அளிக்கும் எந்த லாபத்துக்காகவும் அதைச் செய்யவில்லை. அந்த வேலை அவர்களின் அன்றாட அலுப்பை மறைத்து அவர்களை முன்னெடுத்துச் செல்லுகிறது என்பதனால்தான் செய்கிறார்கள். அதுவும் போதாமல் குடிக்கிறார்கள். சூதாடுகிறார்கள். அவ்வாறு செய்யும் செயல்கள் உருவாக்கும் வெறுமையை அவ்வப்போது உணர்ந்து இன்னும் சலிப்படைகிறார்கள்.
அதற்குப்பதிலாக நமக்குப்பிடித்த ஒன்றைச்செய்து இந்த அன்றாடவெறுமையைத் தாண்ட முடிந்தால் அதைவிட மகிழ்ச்சியானது ஏதும் இல்லை. நம் அடிப்படை இயல்புக்கு உகந்த ஒரு செயலைச் செய்வதன் மூலம் நாம் நம் நாட்களைப் பொருளுள்ளதாக ஆக்கிக்கொண்டால் வாழ்க்கை நிறைவுறுகிறது. அதற்கு அப்பால் வாழ்க்கைக்கு என பெரிய 'நோக்கமோ' 'அர்த்தமோ' இல்லை. இருந்தால் அது லௌகீக வாழ்க்கையில் அறியக்கூடியதும் அல்ல.
ஆகவே அர்ச்சுனா கொலை புரிக! ))))
ஜெ
ஆர்விக்கு ஒரு வாழ்த்து
தொடர்புடைய பதிவுகள்
சரித்திர நாவல்கள்
ஆர்வியின் கதை
வாசிப்புக்காக ஒரு தளம்
January 8, 2012
அஞ்சலி அடிகளாசிரியர்
தமிழறிஞர் அடிகளாசிரியர் 08.01.2012 இரவு 11 மணிக்கு மறைந்தார். அவருக்கு வயது 102. விழுப்புரம் மாவட்டம் கூகையூரில் வாழ்ந்த பேராசிரியர் அடிகளாசிரியர் அவர்களின் இயற்பெயர் குருசாமி. அடிகளாசிரியர் என்பது அவரது புனைபெயர்.
சென்னை பல்கலையிலும் தஞ்சை தமிழ்ப் பல்கலையிலும் பேராசிரியராகப் பணியாற்றிய அடிகளாசிரியர் அறுபதுக்கும் மேற்பட்ட ஆய்வுநூல்களை எழுதியிருக்கிறார். மரபுக்கவிதையில் குறுங்காவியங்களை யாத்திருக்கிறார்.
அடிகளாசிரியருக்கு அஞ்சலி.
மு இளங்கோவன் அஞ்சலிக்கட்டுரை
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
நூறுநாற்காலிகளும் நானும்
[தலித் ஆய்வுநூல் வெளியீட்டகமான எழுத்து பிரசுரம் நூறுநாற்காலிகள் கதையை மட்டும் சிறிய மலிவுப்பதிப்பாக அதிகமான பிரதிகள் வெளியிட்டு மக்களிடையே கொண்டுசெல்லவிருக்கிறது. அதற்கு எழுதிய முன்னுரை]
இந்தவருடம் ஜனவரியில் திடீரென்று எழுந்த ஒரு மன எழுச்சியைத் தொடர்ந்து பன்னிரண்டு கதைகள் எழுதினேன். முதல் கதை 'அறம்'. அதுவே அத்தனை கதைகளுக்கும் சாராம்சமான கரு. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு இலக்கியத்தின் சாராம்சம் என்றால் என்ன என்று நான் கேரளப் பெரும்படைப்பாளியான வைக்கம் முகமது பஷீரிடம் கேட்டேன். 'நீதியுணர்ச்சி' என்று அவர் சற்றும் தயங்காமல் பதில் சொன்னார். இருபத்தைந்தாண்டுகள் பல்லாயிரம் பக்கங்கள் எழுதி நானும் அவர் அருகே வந்து சேர்ந்துவிட்டேன் என்று தோன்றியது.
ஆனால் அக்கதைகளை எழுதுவதற்கு முன்னால் வரைக்கும் ஆழமான ஐயத்தின் சோர்விலேயே இருந்தேன். வரலாறெங்கும் எப்போதாவது, எங்காவது மானுடஅறம் திகழ்ந்த காலம் இருந்திருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றே வரலாறு அறிந்த என்னால் சொல்ல முடியும். ஆனால் ஒரு இலட்சியவாதியாக அந்தப் பொன்னுலகை எதிர்காலத்தில் நோக்குவதற்கு நான் என்னைத் தயார்படுத்திக்கொள்வேன். மானுடம் செல்லும் திசை அது என்று நம்ப என் எல்லாக் கற்பனையையும் செலவிடுவேன்.
அறம் என்பது மிகப்பொதுவான வார்த்தை. குலஅறமாக, அரசியலறமாக எவ்வளவோ அறங்கள் பேசப்பட்டுள்ளன. நான் சொல்வது அவற்றுக்கு அப்பால் உள்ள உலகளாவிய மானுட அறம் பற்றி. சமத்துவம் என்றும் நீதி என்றும் எத்தனையோ சொற்களில் நாம் சொல்லும் எல்லா விழுமியங்களுக்கும் ஆதாரமாக உள்ள மனஎழுச்சி அது. ஆம், நாம் காணும் இந்த வாழ்க்கையில் அது கண்கூடாக இல்லைதான். நேற்றைத் திரும்பிப்பார்க்கையில் கூசச்செய்யும் சுரண்டல்களாலும் ஒடுக்குமுறைகளாலும் நிறைந்திருக்கிறது வாழ்க்கை என்பதும் உண்மைதான். ஆனாலும் அறம் என்னும் ஆதி மனஎழுச்சி மனிதமனத்தில் எப்போதும் இருந்துகொண்டுதான் உள்ளது.
அறம், அதுவே நம்மை எல்லாவகை இழிவுகளில் இருந்தும் வீழ்ச்சிகளில் இருந்தும் மீட்டு இங்கே கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. மானுடநாகரீகமாக நாமறிந்தவை எல்லாமே அந்த மானுட அறத்தின் சிருஷ்டிகளே. மனித உடலின் பரிணாமத்தில் கைகளும் கண்களும் எப்படி உருவாகி வந்தனவோ அதைப்போல மானுடஅகத்தில் அறம் உருவாகி வந்துள்ளது என நான் நினைக்கிறேன். அது மனிதனை வழிநடத்திச்செல்கிறதென நம்புகிறேன். இத்தனை வாழ்க்கைப்போட்டியின் குரூரத்தின் நடுவிலும் அறம் நன்னீர் ஊற்றாகப் பொங்கும் மனத்துடன் ஊருணியாக அமைந்த மனிதர்களை நாம் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். அறம் வரிசையின் எல்லாக் கதைகளும் அத்தகைய உண்மை மனிதர்களைப்பற்றியவை.
இக்கதை அதில் ஒன்று. இதன் கதைநாயகன் சுந்தர ராமசாமி வழியாக எனக்கு அறிமுகமானவர். நாராயணகுருகுல இயக்கத்துடன் தொடர்புள்ளவர். வாழ்க்கையின் மிக இக்கட்டான நிலையில் எனக்கு சில பேருதவிகள் செய்தவர். அதற்காக நான் நன்றியுடன் நினைவுகூரக்கூடியவர். என் அண்ணனின் இடத்தில் இருந்தவர். பிற கதைகளில் அந்த ஆளுமைகளை வெளிப்படையாகவே எழுதினேன். இக்கதையில் அந்த ஆளுமை சம்பந்தமான எல்லாத் தகவல்களையும் முடிந்தவரை மாற்றி, அவரை மறைத்தே எழுதினேன். அதற்கான காரணம் கதையை வாசிப்பவர்களுக்குப் புரியக்கூடியதே.
இக்கதையின் மையநிகழ்ச்சியை நான் 1988லேயே, கிட்டத்தட்ட கதை நிகழ்ந்த காலத்திலேயே, ஆனந்தவிகடனுக்கு அனுப்பியிருக்கிறேன். கதை தேர்வாகவில்லை. 1991ல் திருவண்ணாமலையில் பவா செல்லத்துரை வீட்டில் தங்கியிருந்தபோது ஓர் உரையாடலில் இதைச் சொன்னேன். நண்பர்கள் உணர்ச்சிவசப்பட்டார்கள். ஆனால் இதை எழுதும் ஆன்மீகமான தகுதி எனக்கு உண்டா என்ற ஐயம் என்னை எழுதாமலாக்கியது. எழுதும் வாழ்க்கையுடன் தானும் இணைந்து வாழாமல் இலக்கியம் நிகழ்வதில்லை. என்னால் அந்தக் கதைக்குள் செல்ல முடியுமா என்ற ஐயம் எனக்கு எப்போதுமிருந்தது.
அறம் வரிசைக் கதைகள் வெளிவந்தபோது திருவண்ணாமலை நண்பர் குழுவில் ஒருவரான ஆர்.குப்புசாமி [ஓரான் பாமுக்கின் 'என் பெயர் சிவப்பு' போன்ற நாவல்களை மொழியாக்கம் செய்தவர்] கூப்பிட்டு இந்தக்கதையை எழுதவேண்டும் என்று கோரினார். இரு வடிவங்களில் எழுத ஆரம்பித்துக் கதை மேலெழவில்லை. பின்னர் கண்டுகொண்டேன், கதையைத் தன்னிலையில் நின்று, என்னுடைய கதையாக உணர்ந்து மட்டுமே எழுதமுடியும் என. எழுதியபோது முழுமை கைகூடியது. நான் என் அம்மாவை அந்த அம்மாவில் காணும் புள்ளியில்.
கதையை எழுதும் நான் வேறு என எப்போதுமே சொல்லிக்கொள்வேன். என்னுடைய கருத்துலகில் கட்டுப்பட்டு என் எழுத்து நிகழ்வதில்லை. அது பிறிதொரு வாழ்க்கைக்குள் நான் சென்று மீள்வதுதான். அதன்பின் அந்தக்கதைக்கு நானும் வாசகன்தான். இந்தக்கதையின் கருத்துக்களுக்கு அல்லது உணர்ச்சிகளுக்கு நான் பொறுப்பல்ல. கதையை ஒருபோதும் என்குரலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அது ஒரு துண்டு வாழ்க்கை. என் வழியாக அது மொழியாகியது.
இந்தக்கதையின் வெற்றி என்பது உலக இலக்கிய வாசிப்பும்,அபாரமான நிதானமும் கொண்ட இதன் கதைநாயகன் இதை மனைவியை வாசிக்கச்சொல்லிக் கேட்டு எனக்கு ஆசி தெரிவித்து எழுதியதுதான். சிலசமயங்களிலாவது நாம் நம் ஆசிரியர்களின் தோளில் ஏறி அமர்ந்துவிட்டோம் என்ற குதூகலத்தை அடைவோம். எனக்கு அது அத்தகைய கணம்.
இந்தக்கதைபற்றி ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன், இது நம் கண்முன்னால் நிகழ்ந்த வாழ்க்கை. நம் காலடியில் எங்கெங்கோ இன்னும் நிகழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
அறம்-எஸ்.கெ.பி.கருணா
இலட்சியவாதத்தின் நிழலில்…
கடிதங்கள்
கடிதங்கள்
பின்தொடரும் நிழலின்குரலும் அறமும்
அறம் விழா
அறம் — சிறுகதைத் தொகுப்பு கிடைக்குமிடங்கள்
எதற்காக அடுத்த தலைமுறை?
அறம் வாழும்-கடிதம்
மண்ணாப்பேடி
சுரா.நினைவின் நதியில்- ஒருபார்வை
அதற்குரிய மரியாதை தந்து சரியானபடி பேசவேண்டும் என்றால் புத்தகத்தை செரித்துக் கொள்ளக் குறைந்தது ஒரு மாத அவகாசமாவது வேண்டும். ஆனால், அவசர அவசரமாக முதல் பார்வையில் சிக்கிக் கொண்டதைப் பதிவு செய்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது. அது என்ன என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை.
சு.ரா நினைவின்நதியில் நூலைப்பற்றி ஒரு விமர்சனம்
தொடர்புடைய பதிவுகள்
தினமணி-சுரா-வினவு
பாரதியின் இன்றைய மதிப்பு
தமிழில் இலக்கிய விமர்சனம்
தீராநதி நேர்காணல்- 2006
படைப்பாளிகளின் மேற்கோள்கள்
சுரா 80- இருநாட்கள்
சுரா 80
கீழ்ப்படிதல்,முரண்படுதல் பற்றி…
நயத்தக்கோர்
சுரா:கடிதங்கள்
January 7, 2012
அறிதலுக்கு வெளியே-சீனு
25-10-2010
இனிய ஜெ.எம்.,
என் நெருங்கிய நண்பர் ஒருவர். அவருக்கு எதிர்வீட்டில் ஒரு மனிதர். திருமணமானவர். ஒரு மகனுண்டு. அந்த மனிதர், ஒரு காலனிப் பெண்ணிடம் தகாதவாறு நடந்து கர்ப்பமாக்கிவிட்டார். பெரிய பஞ்சாயத்து. இறுதிவரை, தான் உத்தமன் என்று அவர் வாதாட அந்தப்பெண், ஒருபெண் குழந்தையைப் பெற்றுவிட்டுத் தற்கொலை செய்துகொண்டாள். ஊர்ப் பஞ்சாயத்துக்குப் பிறகு அந்தக் குழந்தை அவர் வசம் வந்தது. (எனக்குப் பேர் தெரியாது. அதனால் அஞ்சலை என வைத்துக் கொள்வோம்.) அஞ்சலை ஒரு பன்றிக்குரிய மரியாதையுடன் அவர் வீட்டில் வளர்ந்தாள்.
அவரது மனைவி உலக கொடுமைக்காரி. அஞ்சலைக்கு மூளைவளர்ச்சி குறைவு. 8 வரை படித்தாள். வயதுக்கு வந்தாள். 18வயது சகமாணவன் பயன்படுத்திக் கொண்டான். அஞ்சலை கர்ப்பமானாள். கணவன் இவன் என்று நிரூபிக்க கோர்ட் படி ஏறப்பட்டது. 15 வயதில் அஞ்சலை ஒரு அழகான பெண்குழந்தை பெற்றாள். பக்கத்து பாட்டில் கம்பனியில் தினம் 75 ரூ சம்பளத்தில் வேலை பார்த்தாள். அந்தக் குடும்பத்துக்குக் கொத்தடிமையாக இருந்தாள். 2 நாள் முன்பு கொடுமை எல்லை மீறிப்போனது. வெறும் நைட்டியுடன், மூளைவளர்ச்சி குன்றிய அஞ்சலை, 11 மாதப் பெண் குழந்தையுடன் ஊரைவிட்டுப் போய்விட்டாள். (பஸ் ஸ்டாண்டில் கண்டதாக சிலர் சொன்னார்கள்.)
தன் மகளே இல்லை என்று சத்தியம் செய்த அந்த மனிதர், சாலைப்புழுதியில், எச்சில் படியும், மண் படிந்த முகத்தோடு புரண்டு புரண்டு அழுதார். அஞ்சலையை ரோஜா நிற உதடு கொண்ட பெண்குழந்தையை, போலீஸ், மீடியா என சகலவிதமாக நானும் என் நண்பர் அருளும் 2 நாள் தேடி ஓய்ந்தோம். இன்று காலை திருவந்திபுரம் கோயில் போனோம். துக்கம் தொண்டைகட்ட வேண்டிக்கொண்டோம், கடவுளே அவளையும் குழந்தையையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்.
உங்கள் புதியகாலம் புத்தகத்தில் கண்மணி குணசேகரனின் 'அஞ்சலை' பற்றி எழுதி இருந்தீர்கள். இந்த அஞ்சலை எனக்கு சொன்னது என்ன? காடு நாவலில் கிரிதரன் மாமாவால் சீரழியும் எண்ணைச்செட்டிச்சி பற்றி இரண்டு பாரா வருகிறது. ரேசாலம் என் முன் அந்த மனிதராக மாறிப் புழுதியில் புரள்கிறான். நான் இலக்கியத்தில் தேடுவது வாழ்வைப் புரிந்துகொள்ளும் வழியை. இலக்கியத்தின் தர்க்கங்களை உதறி நூறு மடங்கு உக்கிரம் கொண்டு எழுகிறது வாழ்வின் ஓட்டம். சுற்றி எங்கெங்கு காணினும் வாழ்வின் மறுபக்கமான தீமையின் பேருருவம் களிநடனம் புரிந்து கொண்டிருக்கிறது. மனிதவாழ்வு தீமைகளால் மட்டுமே இயக்கப்படுகிறது. நன்மைகளால் அலைக்கழிக்கப்படுகிறது. இதுவரை நான் வாழ்ந்து பெற்ற அனுபவமும், நான் கண்ட காட்சிகளும், படித்த இலக்கியமும் தொலைந்து போன என் அஞ்சலையும் எனக்கு சொன்னது இதுதான் "வாழ்க்கை என்பது எப்போதும் மனித அறிதலுக்கு வெளியேதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது".
விஷ்ணுபுரத்தின் நாய் முதல் யானை, அஜிதன்வரை இந்த அறியமுடியாமையைத் தங்கள் அற்ப யத்தனங்கள் மூலம் அறிய முயன்று, கொண்ட ஆயாசத்தையே இந்த இரண்டு நாட்களாக நான் அனுபவித்து வருகிறேன். அனைத்தையும் உண்டு செரித்துக் கழித்தோடும் காலமெனும் பிரும்மாண்ட அபத்தம். ஆம் காலமென்பது அபத்தம்தான். விஷ்ணுபுரம் ஆனாலும் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் ஆனாலும் சரி அதன் காலம் தரும் சேதி ஒன்றுதான். காலம் என்பது வெறுமை. காலம் என்பது அபத்தம். வெறுமையில் கரைந்தழிந்த மற்றொரு அபத்தம் என் அஞ்சலை.
"இந்தியா பற்றி மார்க்ஸ்" பதிவு படித்தேன். இ.எம்.எஸ். தன்னுடைய "இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு" புத்தகத்தின் முன்னுரையிலேயே இதைப்பற்றி விவாதிக்கிறார். அவர் "மார்க்ஸின் தவறான புரிதல்" என்பதற்குப் பதில் "முழுமையற்ற புரிதல்" என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். மார்க்ஸ் மேற்கோள் காட்டப்படுகிறார், புரிந்து கொள்ளப்படவில்லை என்பது சரியான சொல். என்னைச் சுற்றிப் பல "தோழர்கள்" அவ்வாறுதான் இருக்கிறார்கள். உங்கள் புத்தகங்களில் நான் மிகக் குறைந்த முறை படித்த புத்தகம் பின் தொடரும் நிழலின் குரல். டபிள்யூ. ஆர். வரதராஜன் இறந்தபோது தோழர்களின் நிலை கண்டு ஆச்சர்யமாக இருந்தது. அவர்களின் ஒவ்வொரு அசைவும் பின் தொடருமில் ஆவணமாகி இருக்கிறது.
இலக்கியத்துக்குள் அனைத்தையும் உள்ளடக்கும் உங்கள் படைப்புத்திறனின் விரிவு பற்றி ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை. சில வருடம் முன் கடவுளர்களின் தெரு என்று லெபாக்ஷி பயணம் குறித்த உங்கள் கட்டுரை படித்தேன். அதில் ஒரு காட்சி. வீட்டுக்குள் நிற்கும் சிலைக்குக் கீழ் கல்லடுப்பில் அரிசி கொதித்துக் கொண்டிருக்கிறது. அதற்குப் பல வருடங்கள் முன் எழுதப்பட்ட விஷ்ணுபுரத்தில் ஒரு காட்சி, திருவடி மடத்தை விட்டு அதன் இறுதிமடாதிபதி வெளியேறுகிறார். அப்போது அவரது பின் நிற்கும் விஷ்ணு சிலையின் கதாயுதத்தில் கௌபீனம் காய்ந்து கொண்டிருக்கிறது. இப்படித்தான் எனக்கும் விஷ்ணுபுரம் எந்நேரமும் என் காலத்தின் மீது படிந்து கொண்டிருக்கிறது. வாழ்வின் அடுத்த கணம் ஒரு புதிர். விஷ்ணுபுரம் காலத்தின்முன் வாழ்வே மாபெரும் புதிர் என்று சொல்லி எதையும் விளக்காமல் அந்தப் பெரும்புதிரைப் புதிராகவே என் அந்தரங்கத்துக்குள் புதைத்துவிட்டது.
தலாய் லாமா எழுதி ஆழி வெளியீடாக "நல்ல வாழ்வு நல்ல மரணம்" எனும் புத்தகம் படித்தேன். முன்பு ஒரு புகைப்படம் பார்த்தேன். ஒரு லாமாவைக் கலவரத்தில் கொளுத்துகிறார்கள். சிறிதுகூட சலனம் இன்றி, பத்மாசனத்தில் அமர்ந்தபடி, தியான நிலை கலையாமல் எரிந்து சாம்பலாகிறார். அந்தப் புகைப்படம் சிறிய வயதில் எனக்கு ஏற்படுத்திய மனத்தாக்கம் மிக அதிகம். அது எப்படி சாத்தியமானது என்று, அதன் சில (விளக்கப்படக்கூடிய) பகுதிகளை தலாய்லாமா அந்தப் புத்தகத்தில் முன்வைக்கிறார்.
சில தியானமுறைகள் மரணம் என்னும் நிகழ்வை அபௌதிக விதிகளின் மீதான சாதகமாகவே மாற்றிவிடுகிறது. மரணத்தை அனுபவிக்க முடியாது. அதை அறிதலின் பாதையாக மாற்றுவதன் வழி சிறந்த மறுபிறவியை எட்டலாம் என்கிறது அந்தப் புத்தகம். மரணம் என்பது "இல்லாமல் போவது" அல்ல. "இல்லாமல் இருப்பது" என்று தலாய் சொல்கிறார் போலும். இதுவரை நான் எதையும் தொலைத்தது இல்லை. முதல்முறையாக தலாய்லாமாவின் இந்தப் புத்தகத்தைத் தொலைத்துவிட்டேன். பேருந்தில் இருந்து போன் பேசியபடி, சீட்டிலேயே புத்தகத்தை விட்டுவிட்டு வந்துவிட்டேன்.

சலீம் அலி
அடுத்த வாரம் கோதாவரி நதி வழி பயணம் போவதாகச் சொன்னீர்கள். ஊட்டி முகாமில் பறவைகள் பற்றிப் பேசும்போது சலீம்அலி பற்றிக் குறிப்பிட்டீர்கள். லைப்ரரியில் தேடினேன். நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடாக சலீம் அலியின் சுயசரிதம் "ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி" என்ற பெயரில் வந்துள்ளது. தொடர்ந்து தேடிப் பிடித்து முகமது அலி என்பவர் எழுதிய சந்தியா வெளியீடான "வட்டமிடும் கழுகு" படித்தேன். கோதாவரி நதிக்கரைப் புதர்க் காடுகளில் மிகமிக அரிய பறவை இனமான இருவரிக்காடை என்ற பறவை இனத்தைப் பலர் தொடர்ந்து 80 வருடமாக நம்பிக்கையோடு தேடிக் கண்டடைந்ததை, அதை சலீம் அலி வந்து பார்த்ததை, மிகச்செறிவாக ஒரு புனைவு போன்ற கட்டுரையாக எழுதி இருக்கிறார். காடையை நீங்களும் பார்த்தால் ஒரு ஹாய் சொல்லி வையுங்கள்.
கடிதத்துக்குத் தலைப்புக்கான காரணம், விஷயத்தைவிட்டு விலகிப்போகாமலிருக்கவே தவிர வேறு காரணங்களில்லை. முடிந்தால் ஞாயிறு போன் செய்கிறேன்.
என்றும் நட்புடன்,
கடலூர் சீனு
தொடர்புடைய பதிவுகள்
கடிதங்கள்
காடு,பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம்:கடிதங்கள்
பெருங்காடும் நான் மேய்ந்த நுனிப்புல்லும் — சீனு
தெருவெங்கும் தெய்வங்கள்- கடலூர் சீனு
சீனு — கடிதங்கள்
சீனு-கடிதங்கள்
அன்பை வாங்கிக்கொள்ளுதல்…[கடலூர் சீனு]
அன்புள்ள ஜெயமோகன் — ஒரு நூல்
விஷ்ணுபுரம்- விமர்சனம்
விஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்
மலர்களின் கவிதைகள்
ஆசிரியருக்கு,
தினம் தினம் பூக்களையும், அது பூக்கும் செடிகளையும் பார்த்தாலும் ஒவ்வொரு நாளும் புதிதாகவே தோற்றமளிக்கின்றன, ஒரு மலர் போலப் பிறிதொன்று இல்லை, ஏன் ஒரு கணத்தில் தோன்றுவது போல அடுத்த கணம் இல்லை. ஒரு போதும் ஒரு மலர் அதே வகையில் கூட இன்னொன்றை நினைவுபடுத்துவதில்லை. தினம் எழும் மறையும் சூரியனும், வானில் அது தீட்டும் வண்ணங்களும் அவ்வாறே. இவ்வளவு நாட்கள் நாம் தொடர்ந்து பேசியும், உங்கள் எழுத்துக்களைப் படித்தும் இன்றும் அன்று மலர்ந்த மலரே நீங்கள். அடுத்த நொடி நான் எதிர் பார்க்காத ஆச்சர்யம் உங்கள் படைப்பு, எனக்குப் புதுமைகளும் ஆச்சர்யங்களும் பழகி விட்டன, புளிக்கவில்லை. ருசி கண்ட பழக்கத்தில் இனிப்பே கூடுகிறது. குறுந்தொகை உரையும் அவ்வாறே.
உங்களின் தொடர் வாசகன் ஆன நான் ஒன்றைக்கூற முடியும், கடந்த ஓராண்டாக நீங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் படிமமாக்குகிறீர்கள், ஒவ்வொரு காட்சியையும் குறியீடாக்குகிறீர்கள். அவ்வளவும் கவித்துவமானது, கலையுயர்வானது. இந்தக் குறுந்தொகை உரையிலேயே அணை திறந்த நீரும், கோதை ஆறும், சங்க இலக்கிய வாசிப்பும் எனத் துவங்கி ஒரு நவரத்தினக் கண்காட்சிக்குள்ளேயோ, ஒரு ஓவியக் கண்காட்சிக்குள்ளேயோ சென்று பார்க்கும் அனுபவம் (சு.ராவின் எஸ்.என். நாகராஜன் சம்பாஷனையும் கல்லூரிப் பெண்கள் ஒப்பீடும் நினைவுக்கு வருகிறது ) அல்லது நுண் சிற்பங்கள் அடங்கிய பெருங்கோவில். எதைப் பார்ப்பது எவ்வளவு நேரம் பார்ப்பது, எதை விடுப்பது.
வாசிப்பின் நோக்கைத் தர்க்கரீதியாகவும்
(தமிழனையும் தமிழ்ப்பண்பாட்டையும் தெரிந்துகொள்ள அவற்றை அவன் வாசிப்பதில்லை. மனிதர்களை, மானுடத்தை உணர்ந்துகொள்ள அவற்றை வாசிக்கிறான்)
வாசிப்பாகும் அனுபவத்தை அழகுறவும், அதில் கூட வெறும் தாழ் அல்ல, மணித்தாழ்.
(நான் இந்தப்பக்கம் நின்று மெல்லப் பணிவுடன் அதைத் தட்டுகிறேன். அந்தப்பக்கம் நின்றுகொண்டு அந்தக் கவிஞன், என் முதுமூதாதை அதைக்கேட்டு அதன் மணித்தாழை மெல்ல விலக்குகிறான்)
அது நம்முள் வளர்வதைக் கவித்துவமாகவும்
(பாலைநிலத்து விதைகள் போல எனக்குள் புதைந்து கிடக்கும். வாழ்க்கையின் தருணங்களில் எப்போதோ ஏதோ ஒரு துளி நீர் பட்டு சட்டென்று அக்கவிதை எனக்குள் முளைத்தெழுந்து வரும்)
சொல்லி உள்ளீர்கள்.
ஆனால்,
(ஒவ்வொரு மலரும் ஒரு சொல்லைச் சொல்ல விரிந்த, குவிந்த உதடுகள்… ஒளியை நாடும் கிளைகளும் ஆழத்தை அறியும் வேர்களும் தாங்களறிந்த ரகசியமொன்றை மலர்கள் வழியாக வெளிப்படுத்துகின்றனவா? பூமிக்கு என ஒரு ரகசியமிருந்தால் அது மலர்களாக மட்டுமே வெளிப்படமுடியும் போலும்.)
என்ற இடம் கவி உச்சமும் தத்துவ உச்சமும் சந்தித்துக் கொள்ளும் புள்ளி. அருகருகே இரு இமய உச்சி அல்லது இரு முலைகளிலும் பால் சுரக்கும் ஒரு தாய். இதை உங்கள் புத்தாண்டுப் பரிசாக வாசகர் சார்பாக ஏற்கிறேன். இக்கடிதமாய் பதில் வாழ்த்து சொல்கிறேன்.
கிருஷ்ணன்.
தொடர்புடைய பதிவுகள்
சங்க இலக்கிய மலர்கள்
பூவிடைப்படுதல் 5
குறுந்தொகை-கடிதம்
பூவிடைப்படுதல் 4
பூவிடைப்படுதல் 3
பூவிடைப்படுதல் 2
பூவிடைப்படுதல்-1
உரை; கடிதங்கள்
குறுந்தொகை உரை
இசையுடன் மரபைக் கொண்டாடுவோம்…
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
