Jeyamohan's Blog, page 2257

January 15, 2012

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது

2011 ம் ஆண்டுக்கான கனடாவின் இயல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்நாள் சாதனைக்கான இலக்கிய விருது இது. கனடா இலக்கியத்தோட்டமும் யார்க் பல்கலையும் இணைந்து வழங்கும் இவ்விருது இவ்வருடம் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மதிப்புமிக்க விருது இது. தமிழ் நாவல், சிறுகதைத் தளத்திலும், நாடகங்களிலும் தீவிரமான பங்களிப்பாற்றிவரும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.


இலக்கியத்தை எல்லா அர்த்தத்திலும் ஒரு வாழ்நாள் சேவையாக செய்து வருபவர் எஸ்.ராமகிருஷ்ணன். நவீன இலக்கியத்தை அறிமுகப்படுத்துவதிலும், ஒரு இயக்கமாக அதை நிலைநிறுத்துவதிலும் தொடர்ச்சியான ஈடுபாட்டைக் காட்டிவருபவர். எஸ்.ராமகிருஷ்ணனுக்கு என் சார்பிலும் நண்பர்கள் சார்பிலும் வாழ்த்துக்கள்.

தொடர்புடைய பதிவுகள்

ஒரு புது முயற்சி
பாரதி விவாதம் 2 — மகாகவி
இருவகை எழுத்து
எஸ்ராவுக்கு கண்ணதாசன் விருது
எஸ்.பொ
நாஞ்சில்நாடன் பாராட்டுவிழா பதிவுகள்
கோலத்தில் பாய்வது…
உலக இலக்கியச்சிமிழ்
ஞானிக்கு இயல் விருது…
இதிகாச நவீனத்துவம், எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 15, 2012 22:58

மடிக்கணினி

சென்னைக்குச் செல்லும் ரயிலில் ஓர் இளம்பெண் சிறிய மடிக்கணினியைத் திறந்து வைத்துக்கொண்டு என் எதிரில் அமர்ந்திருந்தாள். நான் தூங்கும்வரை அடிக்கடி அவளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். வேறு உலக நினைப்பே இல்லை. மெல்லியகுரலில் பேசிக்கொண்டே இருந்தாள். காதலின் ஒரு கோடி முகபாவனைகள். நாணம், சிரிப்பு, செல்லக்கோபம், போலி அலட்சியம்…அவளுடன் அந்த மடிக்கணினிவழியாக எங்கிருந்தோ ஒரு காதலன் பேசிக்கொண்டிருந்தான். இரவு முழுக்க…



தூங்கும்போது திடீரென்று அம்மாவுடன் சென்று பார்த்த படம் ஒன்று நினைவுக்கு வந்தது. அதிலுள்ள கண்டசாலாவின்பாட்டு எனக்குப் பிடித்தமானது. 'நீதானே என்னை அழைத்தது'. எனக்கு சின்னவயதில் இருந்தே பிடித்தமான பெரும்பாலான பாடல்கள் ஆபேரி அல்லது அதைப்போன்ற ராகங்களில் அமைந்தவை என்பதை இப்போதுதான் வாசித்துத் தெரிந்துகொள்கிறேன். அதுவும் அந்த ராகம்தான். அதில் சாவித்திரி நிஜமாகவே ஒரு மடிக்கணினியில் காதலனிடம் 'லைவ் சேட்' செய்வார்.


இந்தப்பாடலைத் தேடி எடுத்துத் திரும்பப் பார்க்கிறேன். இப்போது வண்ணத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் என் நினைவிலும் இந்தக் கறுப்புவெள்ளைப்படம் வண்ணங்களாகவே இருக்கிறது. வண்ணங்கள் கண்ணுக்குள் நிறைந்திருந்த காலத்தில் பார்த்தபடம், மாயாபஜார்.


சாவித்திரி மிக மென்மையாக மிகையில்லாமல் காட்டும் முகபாவனைகள் அழகியவை. பாடல் காட்சிகளில் மிகையில்லாமல் நடித்த ஒரே பழங்கால நடிகை. பாடல் முடியும்போது நீதானா என்று விரலைக்காட்டுவது சரியான தெலுங்கு அசைவு என இப்போது தோன்றுகிறது.


http://www.youtube.com/watch?v=c0VCVO...

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 15, 2012 10:30

அருகர்களின் பாதை 2 – சந்திரகிரி, தர்மஸ்தலா, ரத்னகிரி

பதினைந்தாம் தேதி அதிகாலையிலேயே எழுந்துவிட்டோம். முந்தையநாள் இரவு பயணக்குறிப்புகளை எழுதி இணையத்தில் ஏற்றிவிட்டு பதினொரு மணிக்குத்தான் படுக்கச்சென்றேன். அதிகாலை நான்குமணிக்கே கிருஷ்ணன் வந்து எழுப்பினார். தக்காணப்பீடபூமிக்குரிய கடுமையான குளிர். குழாயில் தண்ணீரும் வரவில்லை. நண்பர்கள் முன்பக்கம் இருந்த ஒரு குழாய்க்குச் சென்றார்கள். நான் சென்றபோது வாட்ச்மேன் வருவதைப் பார்த்தேன். அவரிடம் தண்ணீர் வரவில்லை என்றதும் அவர் சென்று குழாயைத் திறந்து நோக்கி நீர் இல்லை என்பதை உறுதி செய்தபின் மோட்டார் போடுவதற்காகச் சென்றார். அப்போதுதான் நான் ஒன்றைப் புரிந்துகொண்டேன், நான் அவரிடம் இந்தியில் அதைச்சொல்லியிருக்கிறேன்!


கடுமையான குளிரில் குளிர்ந்த நீரில் குளிப்பதற்கு ஒரு திறமைதான் தேவை, கணநேரம் யோசனையை ஒத்தி வைப்பது. குளித்தபின்னர்தான் குளித்திருக்கிறோம் என்ற தகவலே நம் மூளைக்குத் தெரியவேண்டும். குளித்தபின் உடம்பு அறைவெப்பநிலைக்குத் திரும்புவதனால் கொஞ்சம் கதகதப்பாகக்கூட உணர்வோம். உடைமாற்றிக்கொண்டு கிளம்பும்போது ஐந்து மணி. இருளில் நடந்து சென்று சந்திரகிரி மீது ஏறினோம். விந்தியகிரி அளவுக்கு உயரமானதல்ல. ஆனால் இதுவும் ஒற்றைப்பாறை மலை. பாறையில் வெட்டப்பட்ட புராதனமான படிக்கட்டுகள் வழியாகச் சென்றோம். விந்தியகிரி மலையில் உள்ள எந்தக்கோயிலும் அப்போது நடைதிறந்திருக்கவில்லை. ஆகவே மலை உச்சியில் பாறைமேல் சென்று நின்றுகொண்டு சூரிய உதயத்தைப் பார்த்தோம்.


பயணங்களில் நான் எப்போதும் கடைப்பிடிக்கும் நெறி என்பது ஒருபோதும் சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் தவறவிடக்கூடாதென்பதே. அப்போது ஏதாவது ஓர் ஊரில்தான் இருக்கவேண்டும். அப்போதுதான் நம்மால் ஓர் ஊரின் உண்மையான அழகை, அந்த வாழ்க்கையை உணர முடியும் என்பது என் அனுபவம். அதிலும் புனிதநகரங்களில் புராதனமான ஊர்களில் விரிந்த நிலக்காட்சிகள் முன் அந்தியும் காலையும் அவற்றை நம் அகத்தில் ஆழமாக நிலைநாட்டக்கூடியவை. உதயம் இன்று மகத்தானதாக இருந்தது. மௌனம் விளைந்து பொன்னிறமாக அறுவடைக்குக் காத்திருக்கும் மாபெரும் நிலவெளி எங்களைச்சுற்றி. நிலம் ஒரு நில ஓவியமாகச் சுருங்கும் உயரத்தில் இருந்தோம். பதிக்கப்பட்டக் கண்ணாடிகள் போல ஏரிகள், வழியும் கண்ணாடிப்பாம்புகள் போல ஓடைகள். கருங்கூந்தல் பின்னல் போல தார்ச்சாலைகள். மரக்கூட்டங்கள், நீர்ப்படலத்தில் அசையாது மிதந்து நிற்கும் வெல்வெட் பாசிப்பரப்புக்கள் போல மரக்கூட்டங்கள்.


சூரியன் உள்ளே இருந்தான். போர்வைக்குள் சுருண்டு தூங்கும் பொன்னிறமான குழந்தை. அவன் ஒளி வானிலும் மண்ணிலும் இருந்தது. மேகங்கள் ஒளிவிட்டுக்கொண்டிருந்தன. ஒளி சிவந்து சிவந்து வர திரைகள் விலகி வாசல்கள் திறந்து பொன்னிறமான பேருருவம் கிழக்கில் எழுந்தது. ஒளி பரவியதும் நூற்றுக்கணக்கான சிறிய பூச்சிபிடிக்கும் பறவைகள் வானில் விசிறப்பட்டவை போலப் பறந்து கண்ணுக்குத்தெரியாத நீர்ச்சுழலில் முக்குளியிட்டு எழுந்து கும்மாளமிட்டன. கீழே நிலத்தில் இருந்து எழுந்துகொண்டிருந்த நீராவி மீது ஒளிபட்டு அவை பொன்னிறமான மேகங்களாக ஆகி மேலெழுந்தன. சூரியன் மண் மீது பரவும்போது ஒவ்வொன்றும் துலங்கி பின் மங்கலாகி மஞ்சள் நிற ஒளியில் கரைந்து மிதப்பவை போலத் தெரிந்தன. மௌனம் உள்ளும் புறமும் ஒலிக்கும் எல்லா ஒலிகளையும் பிரம்மாண்டமானதாக ஆக்கிவிடுகிறது.


சந்திரகிரி முழுக்க ஏராளமான சமண ஆலயங்கள் உள்ளன. இந்தத் தலம் கிமு மூன்றாம் நூற்றாண்டு முதலே உள்ளது. மகதப்பேரரசை நிறுவிய சந்திரகுப்த மௌரிய மன்னர் அவரது குருவான பத்ரபாகு என்பவரால் சமண மதத்தைத் தழுவி துறவு பூண்டு இந்தக் குன்றுக்கு வந்து இங்கேயே சல்லேகனை [ உண்ணாநோன்பு ] இருந்து உயிர்துறந்தார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சி பல சமண நூல்களில் விவரிக்கப்படுகிறது. சந்திரகுப்த மௌரியர் கண்ட பதினாறு கனவுகள்தான் அவர் அந்த முடிவை எடுப்பதற்குக் காரணம் என்கிறது சமண மரபு. இந்நிகழ்ச்சியை இங்குள்ள பார்ஸ்வநாதர் கோயிலின் சாளரத்தில் கல்லால் செதுக்கியிருக்கிறார்கள்.



காலை முழுக்க சந்திரகிரிக்குன்றின் மீதுள்ள கோயில்களைப் பார்த்தபடி நடந்தோம். பிரம்மாண்டமான பார்ஸ்வநாதர் கருமை பளபளக்க நிற்கும் கருவறைக்கு முன்னால் மனம் சற்று நேரம் இடத்தையும் இருப்பையும் இழந்தது. அழகிய சிறிய கோயில்கள். உருட்டி செதுக்கப்பட்ட தூண்களும் சதுரவடிவ முகமண்டபமும் கொண்ட கோயில்கள் இவை. பெரும்பாலான மூலச்சிலைகள் கரிய சலவைக்கல்லில் செதுக்கப்பட்டவை. கருமைக்கு அபூர்வமான அழகு ஒன்று உள்ளது. அது ஆழத்தை நினைவுறுத்துகிறது. கரிய தீர்த்தங்கரர் சிலைகள் எல்லாமே அனைத்தையும் தன்னுள் இழுத்துக்கொண்டு அலையிலாமல் கிடக்கும் காட்டுச்சுனைகள் போலத் தோன்றின. அவற்றைத் தொட்டால் சில்லென்றிருக்கும் எனற பிரமை. கால்தவறி விழுந்தால் அடியற்ற ஆழத்துக்குள் குளிர்ந்து குளிர்ந்து சென்று அமைதியில் அடங்கி அழுத்தத்தில் அணுவாகச்சுருங்கி அமையவேண்டியதுதான் என்னும் அச்சம்.



நிர்வாணச்சிலைகள். நிர்வாணம் என்பதே இயல்பான நிலை என உணரச்செய்து உடைகளுக்காக ஆழந்த வெட்கமொன்றை நெஞ்சுக்குள் நிரைக்கும் சிலைகள். பார்ஸ்வநாதர், ஆதிநாதர், சாந்திநாதர், வர்த்தமானர், சந்திரபிரபாநாதர் ஆகியோருக்குத்தான் அதிகமான கோயில்கள் இருக்கும். இங்கே மஞ்சுநாதர், மல்லிநாதர் போன்ற தீர்த்தங்கரர்களுக்கும் பெரிய கருவறைகள் கொண்ட கோயில்கள் இருந்தன. பெரும்பாலும் வாசல்களில் கூஷ்மாணினி தேவி [மலர் ஏந்தியவள் என பொருள்] அமர்ந்திருந்தாள், கையில் மலருடன். சில கோயில்களில் விழிகள் வெள்ளியில் பதிக்கப்பட்ட பத்மாட்சி யட்சி.[தாமரை விழிகொண்டவள்]


கீழே இறங்கி வந்தபோது ஒரு சின்ன பூசல். முந்தையநாள் மேலே தாமதமானதனால் செருப்புகள் வைத்திருந்த இடத்தைப் பூட்டிவிட்டார்கள். காலையில் வந்து செருப்பைக் கேட்டால் ஒரு கிழவர் பெரிய ரகளை செய்தார். கடைசியில் நூறு ரூபாய் லஞ்சம் கேட்டார். ரூபாயைக்கொடுத்து செருப்பை வாங்கினோம். ஆனால் இதை புகார் செய்யவேண்டும் என்றேன். நம் மனநிலையை கெடுத்துக்கொள்ளவேண்டாமே என்ற எண்ணம் கிருஷ்ணனுக்கு. ஆனால் இந்த மாதிரி செய்கைகளை இப்படியே விடக்கூடாது என்பது என் தரப்பு. காரணம் நூற்றில் ஒருவர்கூட புகார்செய்யமாட்டார்கள் என்ற தைரியத்தில்தான் இவர்கள் செயல்படுகிறார்கள். பலரது மொத்தப் பயணத்தையே இந்த மாதிரி ஆசாமிகள் மனமகிழ்ச்சியற்றதாகச் செய்துவிடுவார்கள். ஆகவே அலுவலகத்தில் சென்று சொன்னோம். அங்கிருந்தவர் முகுந்த் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தார். சமணர்களின் இடத்தில் இப்படி நடக்கவே நடக்காது சார் என்று மன்னிப்பு கோரினார். உடனே அந்த ரூபாயை திருப்பிக்கொடுத்தார். அந்த நபர் மீது எழுத்துமூலம் புகாரும் எழுதிவாங்கிக்கொண்டார்.


சில நூல்களை அங்கிருந்து வாங்கிக்கொண்டு கிளம்பினோம். இந்தப் பயணத்தில் முதல் நெடுந்தூரப்பயணம். கிட்டத்தட்ட 200 கிமீ. மேற்குமலைத்தொடர்வரிசையை குறுக்காகக் கடந்தோம். இருபக்கமும் அடர்ந்த காடு. ஒரு இடத்தில் ஒரு நீலநதி. அதன் பெயர் குண்ட்யா. அந்த நதியில் இறங்கிக் குளித்தோம். குளிர்ந்த சுத்தமான நீர். மிக அபூர்வமாக நிகழும் அற்புதமான குளியல்களில் ஒன்று. கங்கையில் குளித்த அனுபவம் நினைவுக்கு வருகிறது என்று அரங்கசாமி சொன்னார். அங்கேயே புளிசாதம் சாப்பிட்டோம்.



மாலை நான்குமணிக்கு தர்மஸ்தலா வந்தோம். தர்மஸ்தலாவுக்கு நான் தொடர்ந்து பலமுறை வந்திருக்கிறேன். காசர்கோட்டில் வேலைபார்த்த நாட்களில் 1984ல் முதன்முறையாக. அதன்பின் கடைசியாக வசந்தகுமாரும் நானும் யுவன் சந்திரசேகரும் ஷண்முகமும் வந்தோம். தர்மஸ்தலா இப்போது தென்னகத்தின் முக்கியமான புண்ணியஸ்தலமாக ஆகிவிட்டது. அன்றெல்லாம் மிக அமைதியான மலைவாச இடமாக இருந்தது. சட்டென்று அய்யப்ப பக்தர்கள் வர ஆரம்பித்தார்கள். இப்போது ஒரே கூட்டம். சத்தம் சந்தடி. தர்மஸ்தலாவில் ஆயிரம்பேர் வரை தங்க இடமிருக்கும். ஆனால் அறை எல்லாமே முடிந்துவிட்டது என்றார்கள். அங்கே இலவச உணவுண்டு, அதுவும் கிடைக்காது என்று பட்டது. ஆகவே அங்குள்ள சமண மையமான ரத்னகிரியை மட்டும் பார்த்துவிட்டுத் திரும்பிவிடலாமென முடிவு செய்தோம்.


தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாத ஸ்வாமி கோயில் கேரள கட்டிடப்பாணி கொண்டது. கூம்பு வடிவமான வட்டக்கூரை. ஓடுபோடப்பட்டது. அங்கே செல்லவில்லை. சென்றால் இன்று முழுக்க வரிசையில் நிற்கவேண்டியதுதான். உண்மையில் இந்தத் தலமானது புராதனமான சமணத் தலம். பெயர் சொல்லப்படுவதுபோலவே இது ஓர் உணவுச்சாலை. இதன் தொன்மை கிமுவுக்கு முன்னர் செல்கிறது என்கிறார்கள். ஆயிரம் வருடங்களுக்கு முன் இந்த ஊர் குடுமா என்றும் மல்லார்மடி என்றும் சொல்லப்பட்டுள்ளது. [குடுமியான் மலை நினைவுக்கு வருகிறது] இதனருகே உள்ள ஊர் பெல்தங்காடி. வெள்ளைச்சந்தை என்று பொருள். அந்த சந்தை முக்கியமான வணிகத்தலம். வடக்கிலிருந்து சேரநாட்டுக்குச் செல்லும் சமண வணிகப்பாதையின் திறப்புப் பாதை இதுவே.


காலப்போக்கில் இந்த இடம் அழிந்தது. பன்னிரண்டாம் நூற்றாண்டு வாக்கில் இந்த ஊரின் அருகே பெல்தங்காடியை ஆண்டுவந்த உள்ளூர் ஆட்சியாளர் பிர்மண்ண பெர்கடேயைத் தேடிவந்த சமண சாது ஒருவர் இந்த இடத்தைப்பற்றிச் சொல்லியிருக்கிறார். இங்கே அறம் வளர்க்குமாறு அவர் சொன்னதை ஒட்டி பிர்மண்ண பெர்கடேயும் அவர் மனைவி அம்மு பல்லத்தியும் இங்கே மீண்டும் அன்னசாலையை நிறுவினார்கள். அவர்களின் குடும்பம் நெல்லியாடி வீடு எனப்படுகிறது. அவர்கள்தான் இந்த ஊரின் அறங்காவலர்கள். இப்போது வீரேந்திர ஹெக்டே அறங்காவலராக இருக்கிறார்.


பெர்கடே காலத்திலேயே பல உள்ளூர் தெய்வங்களும் இங்கே நிறுவப்பட்டுவிட்டன. பெர்கடே இங்கே களராகு, கலர்காயி, குமாரசாமி, கன்யாகுமரி தெய்வங்களை நிறுவி வழிபட்டுவந்தார். பின்னர் அவர் பிராமணர்களை பூஜைக்காக அழைத்தபோது அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப இங்கே சிவலிங்கம் அமைக்கப்பட்டது. இதை உள்ளூர் காவல்தெய்வமான அன்னப்பா என்ற தெய்வமே கொண்டுவந்து அறங்காவலர் ஹெக்கடேக்கு அளித்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த லிங்கம் அருகே உள்ள கதரி என்ற ஊரைச்சேர்ந்தது.


பதினாறாம் நூற்றாண்டில் அறங்காவலர் தேவராஜ ஹெக்டே அழைப்பின் பேரில் இங்கே வந்த உடுப்பி மடாதிபதி வாதிராஜ சுவாமியால் அந்த லிங்கம் ஆலயமாக இங்கே நிறுவப்பட்டது. அதுவே மஞ்சுநாத ஸ்வாமி கோயிலாக உள்ளது. இது இலவச உணவளிக்கும் அன்னசாலையாக இன்று வரை உள்ளது. தினம் ஐந்தாயிரம்பேர் வரை சாப்பிடுகிறார்கள். ரத்னகிரி மீது கோமதீஸ்வரரின் சிலை உள்ளது. இது கர்நாடகாவில் உள்ள கோமதீஸ்வரர் சிலைகளில் மூன்றாவதாக உயரமானது. சிரவணபெலகொலா சிலையைவிட ஒரு மீட்டர் உயரம் குறைவு. பிரம்மாண்டமான இச்சிலை 1966ல் திட்டமிட்டு செதுக்கப்பட்டு 76ல் முடிந்தது. 1982ல் இங்கே கொண்டுவரப்பட்டு நிறுவப்பட்டது. வீரேந்திர ஹெக்டே இதை நிறுவ முன் முயற்சி எடுத்துக்கொண்டார். சிலை பிரம்மாண்டமாக ஓங்கி நின்றது. அதன் முன்னால் நின்று மீண்டும் துறவு எல்லா உடைமைக்கும் மேலாக எழுந்து நிற்பதன் மகத்துவத்தை நினைத்துக்கொண்டேன்.



மூடுபத்ரேக்கு சென்று அங்கே தங்கலாமென முடிவெடுத்தோம். செம்மண் தூசி பறக்கும் சாலையில் வந்தோம். செம்மண் தூசிமேல் அந்திச் சூரியன் தீக்கனல் போல எரிந்துகொண்டிருக்க மூடுபத்ரேவுக்கு ஏழு மணி வாக்கில் வந்து சேர்ந்தோம். இங்குள்ள தர்மசாலையில் தங்க இடம் கிடைத்தது. சமண ஆலயங்கள் எல்லாமே ஆறு மணிக்கு மூடிவிடும். ஆகவே இனிமேல் நாளைக்குத்தான் கோயில்களைப் பார்க்கவேண்டும்.


மேலும்…

தொடர்புடைய பதிவுகள்

அருகர்களின் பாதை 5 — ஹங்கல், பனவாசி, லட்சுமேஸ்வர்
அருகர்களின் பாதை 4 — குந்தாதிரி, ஹும்பஜ்
அருகர்களின் பாதை 3 — மூடுபிதிரி, வேணூர், கர்க்களா, வரங்கா
அருகர்களின் பாதை 1 — கனககிரி, சிரவண பெலகொலா
பயணத்துக்குக் குழு தேவையா?
மீண்டுமோர் இந்தியப்பயணம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 15, 2012 10:30

January 14, 2012

யானைடாக்டருக்கு ஒரு தளம்

 


யானை டாக்டருக்காக ஓர் இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யானைடாக்டர் கிருஷ்ணமூர்த்தியைப்பற்றி நண்பர் பாலாஜி சீனிவாசன் இந்தத் தளத்தை ஆரம்பித்திருக்கிறார். அவரைப்பற்றி ஹிண்டு நாளிதழில் வந்த செய்திகள் மற்றும் சில ஆராய்ச்சிக்கட்டுரைகள் இதில் உள்ளன.


இந்தத் தளத்தை விரிவுபடுத்தப் பங்களிப்பாற்ற வாய்ப்புள்ளவர்கள் உதவலாம்.


elephant doctor

தொடர்புடைய பதிவுகள்

தினமணி -யானை டாக்டர்
இலட்சியவாதம்-கடிதங்கள்
அன்பை வாங்கிக்கொள்ளுதல்…[கடலூர் சீனு]
கடிதங்கள்
கடிதங்கள்
அறம் வாழும்-கடிதம்
யானை- கடிதம்
யானைடாக்டர்-ஓர் உரை
வாழும் கணங்கள்-கடிதங்கள்
இலங்கையில் இருந்து ஒரு கடிதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 14, 2012 10:30

அருகர்களின் பாதை 1 – கனககிரி, சிரவண பெலகொலா

ஈரோட்டுக்கு பன்னிரண்டாம் தேதி நள்ளிரவிலேயே வந்துவிட்டேன். கிருஷ்ணன் ரயில்நிலையத்துக்கு வந்திருந்தார். நேராக விஜயராகவனின் வீட்டுக்குச் சென்றோம். அங்கே பிரகாஷ் சங்கரன் வந்திருந்தார். செக் குடியரசில் உயிரியலில் ஆய்வுசெய்கிறார். சோழவந்தான்காரர். இணைய வாசகர். என் தளத்தில் அவரது நிறைய கடிதங்கள் வெளியாகியிருக்கின்றன. குடுமி வைத்துக்கொண்டு வித்தியாசமாக இருந்தார். இரவு முழுக்கப் பேசிக்கொண்டிருந்தோம். நான் கொஞ்சம் பிந்தித்தான் தூங்க முடிந்தது.


காலையில் எழுந்ததும் கம்பராமாயணம் பற்றி மலையாளத்தில் ஒரு கட்டுரை எழுத வேண்டியிருந்தது. ஆற்றூர் ரவிவர்மா கம்பராமாயணத்தில் இருந்து தேர்வு செய்த பாடல்களை மொழியாக்கம்செய்து ஒரு நூல் கொண்டுவருகிறார். அதற்கு ஒரு முன்னுரை. பலகாலமாக சொல்லிக்கொண்டிருந்தார். நான் மறந்தே விட்டேன். சட்டென்று கூப்பிட்டுக் கட்டுரை உடனே வேண்டும் என்றார். பயணத்துக்கு முன்னரே எழுதினால்தான் என்று தோன்றியது. காலை ஆறு மணிக்கு  செல்பேசியில் எழுப்பியை வைத்து எழுந்து எழுத ஆரம்பித்தேன். அந்த மனநிலைதான் காரணம் என்று தோன்றியது, சட்டென்று எழுத முடிந்தது. சரசரவென்று பதினாறு பக்கத்துக்கு எழுதிவிட்டேன். கட்டுரையின் அமைப்பும் மொழியும் கச்சிதமாகவே அமைந்துவிட்டது. ஆற்றூருக்கு அனுப்ப ஏற்பாடுசெய்தேன்.


பகல் முழுக்க நண்பர்களுடன் அளவளாவுவதிலேயே போயிற்று. நண்பர்கள் வந்தபடியே இருந்தார்கள். விஜயராகவனின் வீடு காலியாக இருந்தமையால் பேசுவதற்கு வசதியாக இருந்தது. ஈரோடு வலைப்பதிவர் சங்கத் தலைவர் தாமோதர் சந்துரு வந்து அவரது மகன் திருமணத்துக்கு அழைப்புக் கொடுத்தார். அப்போது நாங்கள் ராஜஸ்தானில் இருப்போம் என்று சொன்னோம். மனம் முழுக்கப் பயண நினைவுகளாக இருந்தது. பேசிக்கொண்டே இருந்தோம். மதியம் கடலூர் சீனு வந்து சேர்ந்தார். மாலையில் கெபி வினோதும் முத்துக்கிருஷ்ணனும் வந்தார்கள். முத்துக்கிருஷ்ணன் ஜெர்மனியில் கணிப்பொறித்துறையில் பணியாற்றுகிறார்.  அன்றும் தூங்குவதற்கு நெடுநேரமாகியது.


காலை நான்குமணிக்கு எழுந்தோம். இரவு இரண்டரைமணிக்கே கோவையில் இருந்து அரங்கசாமி காரில் கிளம்பி வந்துகொண்டிருந்தார். அவரது மாமியார் பொங்கல் முறுக்கு செய்து கொடுத்தனுப்பியிருந்தார்கள். திருப்பூர் வாசக நண்பர் சந்திரகுமாரும் மூன்று நாட்களுக்குப் போதுமான அளவுக்கு உணவு செய்து கட்டிக் கொடுத்திருந்தார். எல்லோருக்கும் தேவையான உடைகளும் வாங்கியனுப்பியிருந்தார். எல்லாவற்றையும் ஏற்றிக்கொண்டு அரங்கா காலை நாலரை மணிக்கு வந்துசேர்ந்தார். ஐந்து மணிக்கு சரியாகத் திட்டமிட்டபடி கிளம்பிவிட்டோம். இன்னோவா வண்டி. மொத்தம் ஏழுபேர். அரங்கசாமி, நான், கிருஷ்ணன், சீனு, முத்துக்கிருஷ்ணன், ராஜமாணிக்கம், வினோத். ஓட்டுநர் ஓர் இளைஞர்.


அதிகாலை குளிரில் பேசிக்கொண்டே சென்றோம். நடுவே காலை விடிய ஆரம்பித்தபோது சத்தியமங்கலத்தை அடைந்தோம். கர்நாடக எல்லைக்குள் புகுந்து மஞ்சள் ஒளியைப் பார்த்தபடி சென்றோம். முதல் இலக்கு கனககிரி. சாம்ராஜ்நகர் அருகே மலையூர் என்ற சிற்றூரில் உள்ளது இந்தச் சிறிய குன்று. கனககிரிக்குக் கர்நாடக வரலாற்றில் முக்கியமான இடமுண்டு. கர்நாடகத்தின் மிகப் புராதனமான சமணத் தலங்களில் ஒன்று. தமிழ்நாட்டுக்கு வரும் சமண வணிகப்பாதைகள் சத்தியமங்கலம் மலையிடைவெளியை நோக்கி வரும் வழியில் அமைந்துள்ள இந்த இடம்  ஒருகாலத்தில் முக்கியமான மத மையமாக  இருந்திருக்கக்கூடும். புராதன சமண வரலாற்றாசிரியரான நகோபோம ஷைலா இந்த இடத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். பல தொன்மையான சமண நூல்களில் கனககிரி பற்றிய குறிப்பு இருக்கிறது. தமிழக வரலாற்றுடன் சம்பந்தப்படுத்தி இந்த ஊரை எவரும் பார்த்ததாகத் தெரியவில்லை. குறிப்பாகத் தமிழகத்துக்குக் களப்பிரர் வந்த பாதை இது என ஒரு கருத்து நிலவுகிறது. கனககிரியின் பொற்காலம் கிபி இரண்டாம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டு வரை. அதாவது களப்பிரர் காலகட்டத்தில்தான்.



இங்கே மறைந்த சமண முனிவர்களின் பாதங்கள் செதுக்கப்பட்ட தடங்களும் சமாதி மண்டபங்களும் உள்ளன. பலவகையான தொன்மையான இடிபாடுகள்.  களப்பிரர் காலகட்டத்து ஆலயம். அது குள்ளமான சிறிய ஆலயம்தான்.  வட்டமாகக் கடையப்பட்ட தூண்கள். கனமான தாழ்ந்த கல் கூரை. கருவறைக்குள் பார்ஸ்வநாதர். இந்தக்கோயில் பன்னிரண்டாம் நூற்றாண்டிலும் பின்னர் பதினாறாம் நூற்றாண்டிலும் மீண்டும் எடுத்துக்கட்டப்பட்டிருக்கிறது. சமீபமாக மீண்டும் கட்டுமான வேலைகள் நிகழ்கின்றன. மலைமீதிருந்த சமண அடிகள் சிலைகளை எல்லாம் சிறு சிறு கோயில்களாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். பன்னிரண்டாம் நூற்றாண்டில் கோயிலைச்சுற்றி ஒரு சின்ன கோட்டைச்சுவரைக் கட்டியிருக்கிறார்கள். இவ்வளவு பெரிய ஓர் இடத்தை அந்த ஆளில்லா கிராமச்சூழலில் மொட்டை மலைமேல் நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. தமிழக வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த இந்தக் கோயிலையும் இந்த ஊரையும் தமிழக வரலாற்றாசிரியர்கள் கண்டுகொண்டதேயில்லை.


கனககிரி


இது கிமு ஒன்றாம் நூற்றாண்டு முதலே இருந்துவரும் சமணத் தலம். ஹேமாங்க தேஷா போன்ற புராதன சமணநூல்களில் இந்தத் தலம் பற்றிய குறிப்புகள் உள்ளன என்கிறார்கள். இதுபோன்ற நூல்களைத் தமிழகத்தின் 'இருண்ட' காலமான களப்பிரர் காலகட்டத்துடன் ஒப்பிட்டு விரிவான ஆராய்ச்சிகளைச் செய்யவேண்டியிருக்கிறது. இருபத்துமூன்றாம் தீர்த்தங்கரரான மகாவீரர் இங்கே வந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.அவரது சாமவசரானா என்ற திருவுரை இங்கே நிகழ்ந்தது என்கிறார்கள். கனககிரி தென்னிந்தியாவின் ஒரே சித்தேஸ்வரம். சமண தீர்த்தங்கரர் முக்தியடைந்த இடம்.


இங்கே சமணப் படுக்கைகளும் காலடிச்சுவடுகளும் உள்ளன. கிபி நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த பூஜ்யபாதாச்சாரியர் என்ற சமணமுனிவர் வாழ்க்கையுடன் பிணைந்த இடம் இது. இங்கேதான் அவர் சமாதியானார்.  பூஜ்யபாதாச்சாரியார்  மாபெரும் மருத்துவர். தத்வார்த்தசூத்ரா, சர்வார்த்தசித்தி போன்ற தொன்மையான சமணநூல்களுக்கு உரை எழுதியவர். ஜைனேந்திர வியாகரண என்ற இலக்கணநூலையும் எழுதியிருக்கிறார். சமண சம்ஸ்கிருதத்துக்கான ஆதாரமான இலக்கணநூல் இதுவே.


இங்குள்ள மையக்கோயிலில் பார்ஸ்வநாதர் சிலை உள்ளது. காயோத்சர்கா நிலையில் அவர் இருக்கிறார். பார்ஸ்வநாதர் ஹொய்சள மன்னர்களின் இஷ்ட தெய்வமாக வழிபடப்பட்டவர்.  பார்ஸ்வநாதரின் யட்சியான பத்மாவதி தேவி அருகே இருக்கிறார்.  கிபி ஐந்தாம் நூற்றாண்டில் கங்கமன்னர்களால் கட்டப்பட்ட கோயில் இது என்று சொல்லப்படுகிறது. சந்திரசாகரர் என்ற சமணமுனிவர் சென்ற நூற்றாண்டில் கனககிரியில் வாழ்ந்து இதற்குத் திருப்பணி செய்திருக்கிறார்.


கோயிலுக்கு வெளியே உயரமான பார்ஸ்வநாதர் சிலை வெட்டவெளியில் நிற்கிறது. கீழே பத்மாவதி யட்சியின் சிலை. நுட்பமான சிற்பவேலைகள் கொண்ட சிலை அது. பெரும்பாலான சமணக் கோயில்களைப் போல இங்கும் சமண நூல்நிலையமும் சமண முனிவர்கள் வந்தால் தங்குவதற்கான தவச்சாலையும் உள்ளது. சமணர்கள் வந்தால் தங்குவதற்கான போஜனசாலையும் இங்கே உள்ளது. இங்கேயே கொண்டுவந்த உணவை சாப்பிடலாமென முடிவெடுத்தோம். சாப்பிட்டுவிட்டுக் கிளம்பி மைசூர் சென்றோம்.



மைசூரை அடையாமல் சுற்றிக்கொண்டு கோமத்கிரி சென்றோம்.   மைசூரில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ளது கோமத்கிரி. இங்கேதான் முதன்முதலாக நாங்கள் பாகுபலி சுவாமியை தரிசிக்கிறோம். செங்குத்தான ஒற்றைப்பாறைமீது வெட்டப்பட்ட படிகள் வழியாக ஏறிச் சென்றால் மேலே உள்ள சிறுகோயில்தான் கோமத்கிரி பாகுபலிசுவாமி கோயில். சமணர்களின் முக்கியமான வழிபாட்டிடமாக இருந்துள்ளது.  கிபி இரண்டாம் நூற்றாண்டில் களப்பிரர் காலத்தில் உருவான சமண மையமான கோமத்கிரி இன்றுவரை தொடர்ச்சியாக வழிபாட்டிடமாகவே இருந்து வந்துள்ளது.


இங்குள்ள பாகுபலி சுவாமி சிலை, 700 வருடம் தொன்மையானது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இது உருவாக்கப்பட்டது. இந்த மலை ஷ்ராவண குட்டா என்று அழைக்கப்படுகிறது.  விஜயநகர அரசின் தொடக்க காலகட்டத்தில் அமைக்கப்பட்டது இந்த ஒற்றைக்கல் சிலை.  ஒற்றைக்கல்லில் ஓங்கி நிற்கும் சிலை அன்றி இங்கே வேறு ஏதும் சிலைகள் இல்லை. சிலையைச்சுற்றி சிறிய ஒரு மண்டபம். அருகே சமண முனிவர்களின் பாதங்கள் பொறிக்கப்பட்ட கற்களை நிறுவி வழிபடும் பல சிறு கோயில்கள்.


பாகுபலி சுவாமியின் கதை  சமண பௌத்த முனிவர்களின் கதைகளில் வருவதுதான். பாகுபலி பற்றிய கதையும் சிலைகளும் தென்னகத்தைச் சேர்ந்தவையாகவே உள்ளன. அதிகமும் கர்நாடகத்தில் வடஇந்தியாவில் இவை அநேகமாக இல்லை. சமண தீர்த்தங்கரரான ரிஷபதேவரின் மகன் இவர் என்பது புராணம். ரிஷபதேவர் போடன்பூர் என்ற நாட்டின் மன்னராக இருந்தார். இவரது கதை சமணநூலான ஆதிபுராணத்தில் உள்ளது. பத்தாம் நூற்றாண்டுக் கன்னடக் கவிஞரான ஆதிகவி பாம்பா உரையிடையிட்ட பாட்டுடைச்செய்யுள்[சம்ஸ்கிருதத்தில் சம்பு] என்ற வடிவில் கோமதேஸ்வரின் கதையை எழுதியிருக்கிறார். இந்தக்கதையில் இருந்து ஊகிக்கக்கூடிய ஒன்றுண்டு. அதாவது நாம் நினைப்பது போல சமணம் ஒரு வட இந்திய மதம் அல்ல. அதன் பல தீர்த்தங்கரர்கள் தென்னிந்தியர்கள். எப்படி கன்னடநாடு முழுக்க ரிஷபதேவர் வழிபடப்படுகிறாரோ அதேபோலத் தமிழகம் முழுக்க பார்ஸ்வநாதர் வழிபடப்படுவதைக் காணலாம். அவர் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். வர்த்தமான மகாவீரர்தான் இருபத்துமூன்று தீர்த்தங்கரர்களையும் வரிசைப்படுத்தி சமண மதத்தை உருவாக்கியவர். அவர் வட இந்தியர். அவரது அந்தத் தொகுப்புப்பணி என்பது இந்தியாமுழுக்க இருந்த ஒரு பெரும் ஞானமரபை ஓர் அமைப்பாகக் கட்டமைத்தது மட்டுமே என்று தோன்றுகிறது. சமண தீர்த்தங்கரர்கள்தான் ஆசீவக மதத்துக்கும் தீர்த்தங்கரர்கள். ஆசீவகம் சமண மதத்துக்கு மூத்தது. அது தமிழகத்தில் சமணம் வருவதற்கு முன்னரே வலுவாக இருந்தது. கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது முழுமையாகவே ஆசீவகக் கருத்துக்களைச் சொல்லும் பாடல். அதாவது சமணம் தமிழகத்துக்கு வந்த மதம் அல்ல. சமணத்தின் உருவாக்கத்தில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது.



ரிஷபதேவர் நாட்டை மைந்தர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டு காடுசென்று தவம்செய்து தீர்த்தங்கரராக ஆனார் . பாகுபலியின் அண்ணனின் பெயர் பரதன். பாகுபலி இளமையிலேயே அழகும் அறிவும் கொண்டவராக இருந்தார். மக்கள் அவரையே விரும்பினார்கள். ஆகவே அண்ணனுக்கு அவர்மேல் பொறாமை ஏற்பட்டது. தந்தை அவர்கள் இருவருக்கும் நாட்டைப் பங்குபோட்டுக்கொடுத்தார்.  ஆனால் அண்ணன் தம்பியின் பங்கையும் அபகரிக்க நினைத்துப் படைதிரட்டினார். போரில் பலர் மாள்வதைத் தடுப்பதற்காக பாகுபலியும் பரதனும் ஓர் மல்யுத்தத்தில் ஈடுபடுவதாக ஏற்பாடுசெய்யப்பட்டது. திருஷ்டியுத்தம் ஜலயுத்தம் மல்யுத்தம் ஆகிய போர்களில் அவர்கள் ஈடுபட்டார்கள்.  பாகுபலி என்றால் வலிமையான புஜம் கொண்டவர் என்று பொருள்.


ஆகவே எளிதில் பரதனை பாகுபலி வென்றார். போரில் அண்ணனைக் கடைசியாக அடித்துக் கொல்லவேண்டும். ஆனால் அதற்குப்பதிலாகத் தன் தலைமயிரைத் தானே பறித்துவீசி சமணத் துறவியாகக் கிளம்பிச்சென்றார்.  ஞானம் தேடி சமண தீர்த்தங்கரரான ரிஷபதேவரை அணுகி சீடரானார். அண்ணனுக்கே நாட்டைக் கொடுத்துவிட்டார். பரதன் மனம் திரும்பினார். கொஞ்சநாள் அவர் மன்னராக இருந்தபின் அவரும் துறவுபூண்டு ரிஷபதேவரின் சீடராக ஆனார். அவரிடம் தியானம் பயின்று கேவலஞானத்தை அடைந்தார். பாகுபலி நின்றுகொண்டே தவம் செய்து முக்தி அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. அவரது உடலில் கொடிகள் முளைத்தேறின. அவரது கால்களைச் சுற்றிலும் புற்று உருவானது.


பாகுபலியைப்பற்றி ஒருகதை உள்ளது. நெடுங்காலம் தவம்செய்துகொண்டிருந்த பாகுபலி முக்தியடையவில்லை.  அதைப்பற்றி அவரது தங்கைகள் பிராம்மி, சுந்தரி இருவரும் ஆதிநாதரிடம் கேட்டார்கள். பாகுபலி யானைமேலிருந்து இறங்காதவரை முக்தியில்லை என்று ஆதிநாதர் சொன்னார். உடனே பாகுபலியைக் காணவந்த அவரது சகோதரி அவர் ஓர் யானைமேல் நின்றுகொண்டிருப்பதைக் கண்டார். 'அண்ணா யானைமேல் நின்றா தவம்செய்கிறாய்?' என்று கேட்டார். அப்போதுதான் பாகுபலிக்கு தெரிந்தது, நான் கடும்தவம்செய்கிறேன் என்ற அகங்காரம்தான் அவரது கடைசித்தடை. அவர் அதன் மீதுதான் நின்றுகொண்டிருந்தார். அதை உதறியபின் அவருக்கு ஞானம் கிடைத்தது.


கோமதீஸ்வரர் இருப்பதனால் கோமத் கிரி என்று இந்தமலைக்குப் பெயர். இங்குள்ள கோமதீஸ்வரர் சிலை 20 அடி உயரமானது. இதற்கும் சிரவணபெலகொலா போன்றே 12 வருடங்களுக்கு ஒருமுறை மகாமஸ்தகாபிஷேகம் செய்யபடுகிறது. கோமத்கிரியிலும் போஜனசாலையும் தர்மசாலையும் உண்டு. சுற்றிலும் திறந்து விரிந்து கிடக்கும் தக்காணபீடபூமி. உயரமற்ற  மரங்களும் வயல்களும் கொண்ட நிலம் இது. கோமத்கிரியில் இருந்து சிரவணபெலகொலா சென்றோம். செல்லும் வழியில் கொஞ்சம் வழிதவறி நாற்பது நிமிடம் தாமதமாக ஐந்து மணிக்கு சிரவண பெலகொலாவை அடைந்தோம். அங்கே தர்மசாலையில் நாநூறு ரூபாய்க்கு எட்டுப்பேரும் தங்க இடவசதி கிடைத்தது. நான் அவசரமாகக் குளித்தேன். வேகமாக நடந்து இருட்டுவதற்குள் கோமதீஸ்வரரை தரிசிக்கச் சென்றோம்.


கோமதீஸ்வரர் இருக்கும் விந்தியகிரி அல்லது இந்திரகிரி என்ற மலை இங்குள்ள இரட்டை மலைகளில் உயரமானது. ஐநூறு படிகளுக்குமேல் இருக்கும்.  பிரம்மாண்டமான ஒற்றைப்பாறை மலை இது. பாறையில் செதுக்கப்பட்ட படிகள். அந்தப் பாறைமேல்தான் கோமதீஸ்வரரின் கோயிலும் பிரம்மாண்டமான சிலையும் உல்ளது. சிரவணர்களின் வெள்ளைக் குளம் என்று பொருள்படும் இந்த ஊர். சில கல்வெட்டுகளில் சஸ்கிருதத்தில் தவளசரோவரம் என இந்த ஊர் சொல்லப்பட்டுள்ளது.


1983ல் இந்த ஊருக்குத் தனியாக நான் முதலில் வந்தேன். 1986ல் மீண்டும் வந்தேன். 2006 ல் நானும் வசந்தகுமாரும் யுவன்சந்திரசேகரும் சண்முகத்தின் காரில் மீண்டும் வந்தோம். அப்போது மகாமஸ்தகாபிஷேகம் நடைபெற்றது. அதைப்பார்த்தபின் காரிலேயே தென் கனராவின் சமணநிலையங்களைப் பார்த்தோம். அன்று இச்சிலையின் மகாமத்தகம் – பெரும் சிரம் – மீது குங்குமமும் மஞ்சள்பொடியும் சந்தனமும் விபூதியும் பாலும் கொட்டப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டபோது சிலையின் வண்ணம் மாறிக்கொண்டே இருந்த காட்சி  என் கனவுகளில் மீண்டும் மீண்டும் வந்திருக்கிறது. பாகுபலி சுவாமியின் இச்சிலை 17 மீட்டர் [ 57 அடி] உயரம் கொண்டது. இது சவுண்டராய என்பவரால் கிபி 988 ல் அமைக்கப்பட்டது. இவர் கங்கமன்னர் ராச்சமல்ல சத்யவாகரின் அமைச்சராக இருந்தார்.  இதுதான் உலகின் உயரமான ஒற்றைக்கல் சிலை என்று சொல்லப்படுகிறது.


கோமதேஸ்வரர்


கோமதீஸ்வரரின் முன் இருட்டும் வரை அமர்ந்திருந்தோம். சுற்றும்விரிந்த நிலத்தில் விளக்குகள் எரிய ஆரம்பித்தன. அமைதியான நகரம் இது. வழிபாடு என்ற பேரில் ஓலங்கள் இல்லை. வணிகக் கூக்குரல்களும் இல்லை. ஆறரை மணிக்குக் கோயிலை மூடுவார்கள். பூசாரி எங்களை வெளியே போகச்சொல்லும்வரை மேலேயே இருந்தோம். பின்னர் அங்கேயே படிகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஏழரை மணிக்குக் கீழிறங்கி விடுதிக்கு வந்தோம்.


மேலும்…

தொடர்புடைய பதிவுகள்

பயணத்துக்குக் குழு தேவையா?
மீண்டுமோர் இந்தியப்பயணம்
நவீனகுருக்கள்,மிஷனரிகள்
கல்கியின் சமணம்
அயோத்தி தாசர்-கடிதங்கள்
கடிதங்கள்
தீபாவளியும் சமணமும்:கடிதம்
சமணம்,பிரமிள்: கடிதங்கள்
தமிழ்ச் சமணம்
சமணம் ஒரு கடிதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 14, 2012 10:30

அருகர்களின் பாதை 1 – கனககிரி , சிரவண பெலகுலா

ஈரோட்டுக்கு பன்னிரண்டாம் தேதி நள்ளிரவிலேயே வந்துவிட்டேன். கிருஷ்ணன் ரயில்நிலையத்துக்கு வந்திருந்தார். நேராக விஜயராகவனின் வீட்டுக்குச் சென்றோம். அங்கே பிரகாஷ் சங்கரன் வந்திருந்தார். செக் குடியரசில் உயிரியலில் ஆய்வுசெய்கிறார். சோழவந்தான்காரர். இணைய வாசகர். என் தளத்தில் அவரது நிறைய கடிதங்கள் வெளியாகியிருக்கின்றன. குடுமி வைத்துக்கொண்டு வித்தியாசமாக இருந்தார். இரவு முழுக்கப் பேசிக்கொண்டிருந்தோம். நான் கொஞ்சம் பிந்தித்தான் தூங்க முடிந்தது.


காலையில் எழுந்ததும் கம்பராமாயணம் பற்றி மலையாளத்தில் ஒரு கட்டுரை எழுத வேண்டியிருந்தது. ஆற்றூர் ரவிவர்மா கம்பராமாயணத்தில் இருந்து தேர்வு செய்த பாடல்களை மொழியாக்கம்செய்து ஒரு நூல் கொண்டுவருகிறார். அதற்கு ஒரு முன்னுரை. பலகாலமாக சொல்லிக்கொண்டிருந்தார். நான் மறந்தே விட்டேன். சட்டென்று கூப்பிட்டுக் கட்டுரை உடனே வேண்டும் என்றார். பயணத்துக்கு முன்னரே எழுதினால்தான் என்று தோன்றியது. காலை ஆறு மணிக்கு  செல்பேசியில் எழுப்பியை வைத்து எழுந்து எழுத ஆரம்பித்தேன். அந்த மனநிலைதான் காரணம் என்று தோன்றியது, சட்டென்று எழுத முடிந்தது. சரசரவென்று பதினாறு பக்கத்துக்கு எழுதிவிட்டேன். கட்டுரையின் அமைப்பும் மொழியும் கச்சிதமாகவே அமைந்துவிட்டது. ஆற்றூருக்கு அனுப்ப ஏற்பாடுசெய்தேன்.


பகல் முழுக்க நண்பர்களுடன் அளவளாவுவதிலேயே போயிற்று. நண்பர்கள் வந்தபடியே இருந்தார்கள். விஜயராகவனின் வீடு காலியாக இருந்தமையால் பேசுவதற்கு வசதியாக இருந்தது. ஈரோடு வலைப்பதிவர் சங்கத் தலைவர் தாமோதர் சந்துரு வந்து அவரது மகன் திருமணத்துக்கு அழைப்புக் கொடுத்தார். அப்போது நாங்கள் ராஜஸ்தானில் இருப்போம் என்று சொன்னோம். மனம் முழுக்கப் பயண நினைவுகளாக இருந்தது. பேசிக்கொண்டே இருந்தோம். மதியம் கடலூர் சீனு வந்து சேர்ந்தார். மாலையில் கெபி வினோதும் முத்துக்கிருஷ்ணனும் வந்தார்கள். முத்துக்கிருஷ்னன் ஜெர்மனியில் கணிப்பொறித்துறையில் பணியாற்றுகிறார்.  அன்றும் தூங்குவதற்கு நெடுநேரமாகியது


காலை நான்குமணிக்கு எழுந்தோம். இரவு இரண்டரைமணிக்கே கோவையில் இருந்து அரங்கசாமி காரில் கிளம்பி வந்துகொண்டிருந்தார். அவரது மாமியார் பொங்கல் முறுக்கு செய்து கொடுத்தனுப்பியிருந்தார்கள். திருப்பூர் வாசக நண்பர் சந்திரகுமாரும் மூன்று நாட்களுக்குப் போதுமான அளவுக்கு உணவு செய்து கட்டிக் கொடுத்திருந்தார். எல்லோருக்கும் தேவையான உடைகளும் வாங்கியனுப்பியிருந்தார் ,எல்லாவற்றையும் ஏற்றிக்கொண்டு அரங்கா காலை நாலரை மணிக்கு வந்துசேர்ந்தார். ஐந்து மணிக்கு சரியாகத் திட்டமிட்டபடி கிளம்பிவிட்டோம். இன்னோவா வண்டி. மொத்தம் ஏழுபேர். அரங்கசாமி, நான்,கிருஷ்ணன், சீனு,முத்துக்கிருஷ்ணன், ராஜமாணிக்கம்,வினோத். ஓட்டுநர் ஓர் இளைஞர்.


அதிகாலை குளிரில் பேசிக்கொண்டே சென்றோம். நடுவே காலை விடிய ஆரம்பித்தபோது சத்தியமங்கலத்தை அடைந்தோம். கர்நாடக எல்லைக்குள் புகுந்து மஞ்சள் ஒளியைப் பார்த்தபடி சென்றோம். முதல் இலக்கு கனக கிரி.சாம்ராஜ்நகர் அருகே மலையூர் என்ற சிற்றூரில் உள்ளது இந்தச் சிறிய குன்று. கனககிரிக்குக் கர்நாடக வரலாற்றில் முக்கியமான இடமுண்டு. கர்நாடகத்தின் மிகப் புராதனமான சமணத் தலங்களில் ஒன்று. தமிழ்நாட்டுக்கு வரும் சமண வணிகப்பாதைகள் சத்தியமங்கலம் மலையிடைவெளியை நோக்கி வரும் வழியில் அமைந்துள்ள இந்த இடம்  ஒருகாலத்தில் முக்கியமான மத மையமாக  இருந்திருக்கக்கூடும். புராதன சமண வரலாற்றாசிரியரான நகோபோம ஷைலா இந்த இடத்தைக்குறிப்பிட்டிருக்கிறார். பல தொன்மையான சமண நூல்களில் கனககிரி பற்றிய குறிப்பு இருக்கிறது. தமிழக வரலாற்றுடன் சம்பந்தப்படுத்தி இந்த ஊரை எவரும் பார்த்ததாகத் தெரியவில்லை. குறிப்பாகத் தமிழகத்துக்குக் களப்பிரர் வந்த பாதை இது என ஒரு கருத்து நிலவுகிறது. கனக கிரியின் பொற்காலம் கிபி இரண்டாம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டுவரை. அதாவது களப்பிரர் காலகட்டத்தில்தான்.


இங்கே மறைந்த சமனமுனிவர்களின் பாதங்கள் செதுக்கப்பட்ட தடங்களும் சமாதி மண்டபங்களும் உள்ளன. பலவகையான தொன்மையான இடிபாடுகள்.  களப்பிரர் காலகட்டத்து ஆலயம். அது குள்ளமான சிறிய ஆலயம்தான்.  வட்டமாகக் கடையப்பட்ட தூண்கள். கனமான தாழ்ந்த கல் கூரை. கருவறைக்குள் பார்ஸ்வநாதர். இந்தக்கோயில் பன்னிரண்டாம் நூற்றாண்டிலும் பின்னர் பதினாறாம் நூற்றாண்டிலும் மீண்டும் எடுத்துக்கட்டப்பட்டிருக்கிறது. சமீபமாக மீண்டும் கட்டுமான வேலைகள் நிகழ்கின்றன. மலைமீதிருந்த சமண அடிகள் சிலைகளை எல்லாம் சிறு சிறு கோயில்களாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். பன்னிரண்டாம் நூற்ராண்டில் கோயிலைச்சுற்றி ஒரு சின்ன கோட்டைச்சுவரைக் கட்டியிருக்கிறார்கள். இவ்வளவு பெரிய ஓர் இடத்தை அந்த ஆளில்லா கிராமச்சூழலில் மொட்டை மலைமேல் நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. தமிழக வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த இந்தக் கோயிலையும் இந்த ஊரையும் தமிழக வரலாற்றாசிரியர்கள் கண்டுகொண்டதேயில்லை


இது கிமு ஒன்றாம் நூற்றாண்டுமுதலே இருந்துவரும் சமணத் தலம். ஹேமாங்க தேஷா போன்ற புராதன சமணநூல்களில் இந்தத் தலம் பற்றிய குறிப்புகள் உள்ளன என்கிறார்கள். இதுபோன்றநூல்களைத் தமிழகத்தின் 'இருண்ட' காலமான களப்பிரர் காலகட்டத்துடன் ஒப்பிட்டு விரிவான ஆராய்ச்சிகளைச் செய்யவேண்டியிருக்கிறது. இருபத்துமூன்றாம் தீர்த்தங்கரரான மகாவீரர் இங்கே வந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.அவரது சாமவசரானா என்ற திருவுரை இங்கே நிகழ்ந்தது என்கிறார்கள். கனககிரி தென்னிந்தியாவின் ஒரே சித்தேஸ்வரம். சமண தீர்த்தங்கரர் முக்தியடைந்த இடம்


இங்கே சமணப் படுக்கைகளும் காலடிச்சுவடுகளும் உள்ளன. கிபி நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த பூஜ்யபாதாச்சாரியர் என்ற சமணமுனிவர் வாழ்க்கையுடன் பிணைந்த இடம் இது. இங்கேதான் அவர் சமாதியானார்.  பூஜ்யபாதாச்சாரியார்  மாபெரும் மருத்துவர். தத்வார்த்தசூத்ரா,சர்வார்த்தசித்தி போன்ற தொன்மையான சமணநூல்களுக்கு உரை எழுதியவர். ஜைனேந்திர வியாகரண என்ற இலக்கணநூலையும் எழுதியிருக்கிறார். சமண சம்ஸ்கிருதத்துக்கான ஆதாரமான இலக்கணநூல் இதுவே.


இங்குள்ள மையக்கோயிலில் பார்ஸ்வநாதர் சிலை உள்ளது. காயோத்சர்கா நிலையில் அவர் இருக்கிறார். பார்ஸ்வநாதர் ஹொய்சள மன்னர்களின் இஷ்ட தெய்வமாக வழிபடப்பட்டவர்.  பார்ஸ்வநாதரின் யட்சியான பத்மாவதி தேவி அருகே இருக்கிறார்.  கிபி ஐந்தாம் நூற்றாண்டில் கங்கமன்னர்களால் கட்டப்பட்ட கோயில் இது என்று சொல்லப்படுகிறது. சந்திரசாகரர் என்ற சமணமுனிவர் சென்ற நூற்றாண்டில் கனககிரியில் வாழ்ந்து இதற்குத் திருப்பணி செய்திருக்கிறார்.


கோயிலுக்கு வெளியே உயரமான பார்ஸ்வநாதர் சிலை வெட்டவெளியில் நிற்கிறது. கீழே பத்மாவதி யட்சியின் சிலை. நுட்பமான சிற்பவேலைகள் கொண்ட சிலை அது. பெரும்பாலான சமணக் கோயில்களைப் போல இங்கும் சமண நூல்நிலையமும் சமண முனிவர்கள் வந்தால் தங்குவதற்கான தவச்சாலையும் உள்ளது. சமணர்கள் வந்தால் தங்குவதற்கான போஜனசாலையும் இங்கே உள்ளது. இங்கேயே கொண்டுவந்த உணவை சாப்பிடலாமென முடிவெடுத்த்தோம். சாப்பிட்டுவிட்டுக் கிளம்பி மைசசூர் சென்றோம்.


மைசூரை அடையாமல் சுற்றிக்கொண்டு கோமத்கிரி சென்றோம்.   மைசூரில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ளது கோமத்கிரி. இங்கேதான் முதன்முதலாக நாங்கள் பாகுபலி சுவாமியை தரிசிக்கிறோம்.செங்குத்தான ஒற்றைப்பாறைமீது வெட்டப்பட்ட படிகள் வழியாக ஏறிச் சென்றால் மேலே உள்ள சிறுகோயில்தான் கோமத்கிரி பாகுபலிசுவாமி கோயில். சமணர்களின் முக்கியமான வழிபாட்டிடமாக இருந்துள்ளது.  கிபி இரண்டாம் நூற்றாண்டில் களப்பிரர் காலத்தில் உருவான சமண மையமான கோமத்கிரி இன்றுவரை தொடர்ச்சியாக வழிபாட்டிடமாகவே இருந்து வந்துள்ளது.


இங்குள்ள பாகுபலி சுவாமி சிலை , 700 வருடம் தொன்மையானது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இது உருவாக்கப்பட்டது. இந்த மலை ஷ்ராவண குட்டா என்று அழைக்கப்படுகிறது.  விஜயநகர அரசின் தொடக்க காலகட்டத்தில் அமைக்கப்பட்டது இந்த ஒற்றைக்கல் சிலை.  ஒற்றைக்கல்லில் ஓங்கி நிற்கும் சிலை அன்றி இங்கே வேறு ஏதும் சிலைகள் இல்லை. சிலையைச்சுற்றி சிறிய ஒரு மண்டபம். அருகே சமண முனிவர்களின் பாதங்கள் பொறிக்கப்பட்ட கற்களை நிறுவி வழிபடும் பல சிறு கோயில்கள்


பாகுபலி சுவாமியின் கதை  சமண பௌத்த முனிவர்களின் கதைகளில் வருவதுதான். பாகுபலி பற்றிய கதையும் சிலைகளும் தென்னகத்தைச்சேர்ந்தவையாகவே உள்ளன. அதிகமும் கர்நாடகத்தில் வடஇந்தியாவில் இவை அநேகமாக இல்லை. சமண தீர்த்தங்காரரான ரிஷபதேவரின் மகன் இவர் என்பது புராணம். ரிஷபதேவர் போடன்பூர் என்ற நாட்டின் மன்னராக இருந்தார். இவரது கதை சமணநூலான ஆதிபுராணத்தில் உள்ளது. பத்தாம் நூற்றாண்டுக் கன்னடக் கவிஞரான ஆதிகவி பாம்பா உரையிடையிட்ட பாட்டுடைச்செய்யுள்[சம்ஸ்கிருதத்தில் சம்பு] என்ற வடிவில் கோமதேஸ்வரின் கதையை எழுதியிருக்கிறார். இந்தக்கதையில் இருந்து ஊகிக்கக்கூடிய ஒன்றுண்டு. அதாவது நாம் நினைப்பது போல சமணம் ஒரு வட இந்திய மதம் அல்ல. அதன் பல தீர்த்தங்கரர்கள் தென்னிந்தியர்கள். எப்படி கன்னடநாடு முழுக்க ரிஷபதேவர் வழிபடப்படுகிறாரோ அதேபோலத் தமிழகம் முழுக்க பார்ஸ்வநாதர் வழிபடப்படுவதைக் காணலாம். அவர் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். வர்த்தமான மகாவீரர்தான் இருபத்துமூன்று தீர்த்தங்கரர்களையும் வரிசைப்படுத்தி சமண மதத்தை உருவாக்கியவர். அவர் வட இந்தியர். அவரது அந்த தொகுப்புப்பணி என்பது இந்தியாமுழுக்க இருந்த ஒரு பெரும் ஞானமரபை ஓர் அமைப்பாகக் கட்டமைத்தது மட்டுமே என்று தோன்றுகிறது. சமண தீர்த்தங்கரர்கள் தான் ஆசீவக மதத்துக்கும் தீர்த்தங்கரர்கள். ஆசீவகம் சமண மதத்துக்கு மூத்தது. அது தமிழகத்தில் சமணம் வருவதற்கு முன்னரே வலுவாக இருந்தது. கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது முழுமையாகவே ஆசீவகக் கருத்துக்களைச் சொல்லும் பாடல். அதாவது சமணம் தமிழகத்துக்கு வந்த மதம் அல்ல. சமணத்தின் உருவாக்கத்தில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது.


ரிஷபதேவர் நாட்டை மைந்தர்களுக்குப் பங்கிட்டுக்கொடுத்துவிட்டு காடுசென்று தவம்செய்து தீர்த்தங்கரராக ஆனார் . பாகுபலியின் அண்ணனின் பெயர் பரதன். பாகுபலி இளமையிலேயே அழகும் அறிவும் கொண்டவராக இருந்தார். மக்கள் அவரையே விரும்பினார்கள். ஆகவே அண்ணனுக்கு அவர்மேல் பொறாமை ஏற்பட்டது. தந்தை அவர்கள் இருவருக்கும் நாட்டைப் பங்குபோட்டுக்கொடுத்தார்.  ஆனால் அண்ணன் தம்பியின் பங்கையும் அபகரிக்க நினைத்துப் படைதிரட்டினார். போரில் பலர் மாள்வதைத் தடுப்பதற்காக பாகுபலியும் பரதனும் ஓர் மல்யுத்தத்தில் ஈடுபடுவதாக ஏற்பாடுசெய்யப்பட்டது. திருஷ்டியுத்தம் ஜலயுத்தம் மல்யுத்தம் ஆகிய போர்களில் அவர்கள் ஈடுபட்டார்கள்.  பாகுபலி என்றால் வலிமையான புஜம் கொண்டவர் என்று பொருள்.


ஆகவே எளிதில் பரதனை பாகுபலி வென்றார். போரில் அண்ணனைக் கடைசியாக அடித்துக்கொல்லவேண்டும். ஆனால் அதற்குப்பதிலாகத் தன் தலைமயிரைத் தானே பறித்துவீசி சமண துறவியாகக் கிளம்பிச்சென்றார்.  ஞானம் தேடி சமண தீர்த்தங்காரரான ரிஷபதேவரை அணுகி சீடரானார். அண்ணனுக்கே நாட்டைக் கொடுத்துவிட்டார். பரதன் மனம் திரும்பினார். கொஞ்சநாள் அவர் மன்னராக இருந்தபின் அவரும் துறவுபூண்டு ரிஷபதேவரின் சீடராக ஆனார். அவரிடம் தியானம் பயின்று கேவலஞானத்தை அடைந்தார். பாகுபலி நின்றுகொண்டே தவம் செய்து முக்தி அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. அவரது உடலில் கொடிகள் முளைத்தேறின. அவரது கால்களைச் சுற்றிலும் புற்று உருவானது.


பாகுபலியைப்பற்றி ஒருகதை உள்ளது நெடுங்காலம் தவம்செய்துகொண்டிருந்த பாகுபலி முக்தியடையவில்லை.  அதைப்பற்றி அவரது தங்கைகள் பிராம்மி சுந்தரி இருவரும் ஆதிநாதரிடம் கேட்டார்கள். பாகுபலி யானைமேலிருந்து இறங்காதவரை முக்தியில்லை என்று ஆதிநாதர் சொன்னார். உடனே பாகுபலியைகாணவந்த அவரது சகோதரி அவர் ஓர் யானைமேல் நின்றுகொண்டிருப்பதைக் கண்டார். 'அண்ணா யானைமேல் நின்றா தவம்செய்கிறாய்?' என்று கேட்டார். அப்போதுதான் பாகுபலிக்கு தெரிந்தது, நான் கடும்தவம்செய்கிறேன் என்ற அகங்காரம்தான் அவரது கடைசித்தடை. அவர் அதன் மீதுதான் நின்றுகொண்டிருந்தார். அதை உதறியபின் அவருக்கு ஞானம் கிடைத்தது


கோமதீஸ்வரர் இருப்பதனால் கோமத் கிரி என்று இந்தமலைக்குப் பெயர். இங்குள்ள கோமதீஸ்வரர் சிலை 20 அடி உயரமானது. இதற்கும் சிரவணபெலகொலா போன்றே 12 வருடங்களுக்கு ஒருமுறை மகாமஸ்தாகாபிஷேகம் செய்யபடுகிறது. கோமதகிரியிலும் போஜனசாலையும் தர்மசாலையும் உண்டு. சுற்றிலும் திறந்து விரிந்து கிடக்கும் தக்காணபீடபூமி. உயரமற்ற  மரங்களும் வயல்களும் கொண்ட நிலம் இது. கோமதகிரியில் இருது சிரவணபெள்கோளா சென்றோம். செல்லும் வழியில் கொஞ்சம் வழிதவறி நாற்பது நிமிடம் தாமதமாக ஐந்து மணிக்கு சிரவண பெளகோளாவை அடைந்தோம். அங்கே தர்மசாலையில் நாநூறு ரூபாய்க்கு எட்டுப்பேரும் தங்க இடவசதி கிடைத்தது. நான் அவசரமாகக் குளித்தேன். வேகமாக நடந்து இருட்டுவதற்குள் கோமதீஸ்வரரை தரிசிக்கச் சென்றோம்


கோமதீச்வரர் இருக்கும் விந்தியகிரி அல்லது இந்திரகிரி என்ற மலை இங்குள்ள இரட்டை மலைகளில் உயரமானது. ஐநூறு படிகளுக்குமேல் இருக்கும். . பிரம்மாண்டமன ஒற்றைப்பாறை மலை இது. பாறையில் செதுக்கப்பட்ட படிகள். அந்தப் பாறைமேல்தான் கோமதீச்வரரின் கோயிலும் பிரம்மாண்டமான சிலையும் உல்ளது. சிரவணர்களின் வெள்ளைக் குளம் என்று பொருள்படும் இந்த ஊர் .. சில கல்வெட்டுகளில் சஸ்கிருதத்தில் தவளசரோவரம் என இந்த ஊர் சொல்லப்பட்டுள்ளது.


1983ல் இந்த ஊருக்குத் தனியாக நான் முதலில் வந்தேன். 1986ல் மீண்டும் வந்தேன். 2006 ல் நானும் வசந்தகுமாரும் யுவன்சந்திரசேகரும் சண்முகத்தின் காரில் மீண்டும் வந்தோம். அப்போது மகாமஸ்தகாபிஷேகம் நடைபெற்றது. அதைப்பார்த்தபின் காரிலேயே தென் கனராவின் சமணநிலையங்களைப் பார்த்தோம். அன்று இச்சிலையின் மகாமத்தகம்– பெரும் சிரம்- மீது குங்குமமும் மஞ்சள்பொடியும் சந்தனமும் விபூதியும் பாலும் கொட்டப்பட்டு அபிஷேகம்செய்யப்பட்டபோது சிலையின் வண்ணம் மாறிக்கொண்டே இருந்த காட்சி  என் கனவுகளில் மீண்டும் மீண்டும் வந்திருக்கிறது. பாகுபலி சுவாமியின் இச்சிலை 17 மீட்டர் [ 57 அடி] உயரம் கொண்டது. இது சவுண்டராய என்பவரால் கிபி 988 ல் அமைக்கப்பட்டது. இவர் கங்கம்மன்னர் ராச்சமல்ல சத்யவாகரின் அமைச்சராக இருந்தார்.  இதுதான் உலகின் உயரமான ஒற்றைக்கல் சிலை என்று சொல்லப்படுகிறது.


கோமதீச்வரரின் முன் இருட்டும் வரை அமர்ந்திருந்தோம். சுற்றும்விரிந்த நிலத்தில் விளக்குகள் எரிய ஆரம்பித்தன. அமைதியான நகரம் இது வழிபாடு என்ற பேரில் ஓலங்கள் இல்லை. வணிகக் கூக்குரல்களும் இல்லை. ஆறரை மனிக்குக் கோயிலை மூடுவார்கள். பூசாரி எங்களை வெளியே போகச்சொல்லும்வரை மேலேயே இருந்தோம். பின்னர் அங்கேயே  படிகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஏழரை மணிக்குக் கீழிறங்கி விடுதிக்கு வந்தோம்.


 


மேலும்…


 

தொடர்புடைய பதிவுகள்

பயணத்துக்குக் குழு தேவையா?
மீண்டுமோர் இந்தியப்பயணம்
நவீனகுருக்கள்,மிஷனரிகள்
கல்கியின் சமணம்
அயோத்தி தாசர்-கடிதங்கள்
கடிதங்கள்
தீபாவளியும் சமணமும்:கடிதம்
சமணம்,பிரமிள்: கடிதங்கள்
தமிழ்ச் சமணம்
சமணம் ஒரு கடிதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 14, 2012 10:30

January 13, 2012

பயணம் – கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

உங்கள் பயணத்திற்கு என் வாழ்த்துக்கள். அடுத்த இது போன்ற பயணத்தில் கண்டிப்பாகப் பங்குகொள்ள முயற்சிப்பேன். குருவும் சீடனும் என்ற நூல் என நினைக்கிறேன், நடராஜ குரு இருபது ரூபாய்க்கு மேல் கை இருப்பாக வைக்கக் கூடாது என்று சொன்னதாக வரும். அது போல் செலவிற்குப் பணம் இல்லாமல் ஒரு பயணம் செய்ய எனக்கு ஆசை. அப்போதும் பயணச் செலவைத் தவிர மட்டும்தான். அதுகூட இல்லாமல் பயணம் செய்யத் துறவிகளால் மட்டுமே முடியும்…..


அன்புடன்,


ராதாகிருஷ்ணன்


அன்புள்ள ராதாகிருஷ்ணன்,


அடுத்த பயணத்தில் நீங்களும் வருகிறீர்கள்.


துறவிகளின் பயணம் வேறுவகை. துறவி ஆகும்போது நாம் காணாத ஒரு துறவிச்சமூகத்தில் அவர்கள் இணைகிறார்கள். அங்கே வேறு விதிகள் வேறு துணைகள் உண்டு.


ஜெ


அன்பின் ஜெ எம்,


இந்தியப் பயணத்திற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக – அதை ஒட்டிய மனநிலையுடன் இருப்பீர்கள்.

உங்களுடன் பயணத்தில் இணைந்து கொள்ள எனக்கும் பேராசைதான்…


வயதின் முதிர்ச்சியால் பெண் என்ற பால் அடையாள மனத்தடைகளையெல்லாம் நான் தாண்டிவிட்டபோதும் – பயணம் செய்யும் நல்ல உடல்நிலையுடன் நான் இருந்தபோதும், [பயணங்கள் ஒருபோதும் என்னைக் களைப்பாக்குவதே இல்லை] நீங்கள் மற்றும் பிற நண்பர்கள் எனக்குப் பிரத்தியேக ஏற்பாடுகள் செய்ய நினைத்து அதனால் உங்கள் பயணச் சுருதி பிறழ்ந்து விடக்கூடாது என எண்ணியே சற்றே விலகி நிற்கிறேன்…  உங்கள் சுதந்திரம் என்னால் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வும் எனக்கிருக்கிறது.

எனினும் என்றேனும் ஓர் நாள் என் உடலின் தள்ளாமை என்னைச் செயலறச் செய்யுமுன் உங்களுடன் கட்டாயம் ஒரு பயணத்தில் கலந்து கொண்டே தீர வேண்டும் என்ற தீராத மன விருப்பத்துடன், அது நிறைவேறும் நாள் நோக்கிக் காத்திருக்கிறேன்.


சிம்லாவின் பனிப் பொழிவு காணக் குழந்தைகள் விரும்பியதால் அங்கு சென்று அந்தப் பனிப்பொழிவையும் பனி மழைத் தூவலையும் ரசித்து வந்தோம்; வாழ்நாள் அனுபவம்…


தங்கள் பயணம் சிறக்க அன்பு வாழ்த்துக்கள்…


எம் ஏ சுசீலா


அன்புள்ள சுசீலா,


ஆம், ஒரு பயணம் நாம் சேர்ந்து செல்லலாம். நாம் இன்றுவரை அதிகமாகப் பேசிக்கொண்டதில்லை. ஒரு பயணம் அதற்கான வாய்ப்பாக அமையும். பயணம் இலகுவான உற்சாகமான மனநிலைகளை உருவாக்குகிறது. பெரும்பாலான நண்பர்களுடன் பயணத்திலேயே நெருக்கமான நட்பு உருவாகியது.


பார்ப்போம்.


ஜெ


அன்புள்ள ஜெ,


உங்கள் பயணத்துக்கு வாழ்த்துக்கள். நானெல்லாம் எப்போதுமே இப்படி ஒரு பயணத்தைக் கனவு காணக்கூடியவன். இப்படி ஒருமாதம் எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுவிட்டு ஒரு பயணம் செய்யும் வாழ்க்கை எனக்கு அமையவே இல்லை. அதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும். ஏதேதோ விஷயங்களிலே சிக்கி மீளமுடியாமல் கிடக்கிறேன். காடு நாவலில் வருமே அந்தத் துடலி முள்ளு போல. மாட்டிக்கொண்டால் மீளவே முடியாது. பயணம் போகும் விசயங்களை எழுதுவீர்கள் என நினைக்கிறேன். வாசிக்கக் காத்திருக்கிறேன்.


சிவராம்


மீண்டுமோர் இந்தியப் பயணம்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 13, 2012 11:17

January 12, 2012

சாகித்ய அக்காதமி – விவாதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,


இதை எழுதி உங்களுக்குத் தலைவலி கொடுக்க வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், இதைச் சொல்லாமல் மற்றவர்களும் இருந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறன். நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தபோது தமிழ் இலக்கிய உலகமே அதை ஒரு திருவிழாவாகக் கொண்டாடியது, மறுபேச்சே இல்லை.


இப்போது ஒருவருக்குக் கிடைத்திருக்கும் விருதைப்பற்றி இலக்கியவாதியின் வீட்டில் இருக்கும் நாய்கள் கூடப் பெருமையாய்ப் பேசாது என்பது திண்ணம்.


நாஞ்சில் நாடன், "இந்த விருது சமாச்சாரம் எப்படினா….ஒரு யானை கையில மாலை கொடுத்து அனுப்புவாங்க, யாரு சரியான குடிமகனோ அவனுக்கு இந்த மாலையப் போடுன்னு. யானை சிலசமயம் அஞ்சு வருஷத்துக்கு பத்து வருஷத்துக்கு சரியான ஆளு கழுத்துல போட்டுரும். யானை கிடைக்கலேன்னா குரங்கு கையில குடுத்துருவாங்க, அது பிச்சித் திங்க ஆரம்பிச்சுரும். நான் சொல்லவருவதன் பொருள் உங்களுக்கு புரியணும்''


வித்தியாசம்தானே நம்மைக் காட்டுகிறது.


ராம லட்சுமண்


அன்புள்ள ராம லட்சுமண்,


வெங்கடேசன் விருது பெற்ற விவகாரத்தில் மாற்றுக்கருத்தாகச் சொல்லப்படுவது நானறிந்தவரை அவரது வயதும், அவர் ஒரே நூல் மட்டுமே எழுதியிருக்கிறார் என்பதும் மட்டும்தான். அந்நாவலின் இலக்கியத்தகுதி அல்ல. அதை மிகச்சிலரே வாசித்திருக்கிறார்கள். மிகச்சிலரே அதைப்பற்றி பேசியிருக்கிறார்கள்.


தமிழில் மட்டுமல்ல,எல்லா மொழிகளிலும் அப்படி சிலர் முந்துவது நடந்திருக்கிறது. சிறந்த உதாரணம் தோப்பில் முகம்மது மீரான். எழுதவந்த சிலவருடங்களுக்குள்ளேயே அவர் சாகித்ய அகாதமி பெற்றார், அவருக்கு முப்பதாண்டு முன்னரே எழுத ஆரம்பித்து அவரைக் கைபிடித்து எழுத்துலகுக்குக் கொண்டுவந்த ஆ.மாதவன் இன்றுவரை அதைப் பெறவில்லை.


சாகித்ய அக்காதமி விருதின் விதிகள் அதை வாழ்நாள் சாதனைக்கான விருதாகக் கொள்ளவில்லை. ஆகவே நடுவர்குழு அவர்களுக்கு முன்னால் வந்த நாவல்களைக்கொண்டு முடிவெடுப்பது சாத்தியமே.


ஜெ


திரு ஜெயமோகன் அவர்களுக்கு,


உயிர்மை இதழின் இந்த மாத இதழ் படித்தேன். நீங்கள் படித்தீர்களா? சாஹித்ய அகாடமி விருதைப் பற்றியும் அதைப் பெறும் தகுதி சு.வெங்கடேசனுக்கு இல்லை என்றும் தாறுமாறாக எழுதியிருக்கிறார் மனுஷ்யபுத்திரன். இந்தக் காழ்ப்புக்குக் காரணம் என்ன?


சாஹித்ய அகாடமியிடமிருந்து பணம் கொடுத்து விருதை வாங்கி இருக்கிறார் என்ற அளவுக்குத் தரம் தாழ்ந்து எழுதப்பட்டு இருக்கிறது. சாஹித்ய அகாடமி விருதுக்கு ஒரு லட்சம் என்றால் நாமும் தமிழ் சாஹித்ய அகாடமி ஒன்று நிறுவி இரண்டு லட்சம் பரிசளிக்க வேண்டும் என்றும் எழுதப்பட்டு இருக்கிறது. உழைப்புக்கேற்ற ஊதியம் என்ற மார்க்ஸ் தத்துவம் இதற்குக் கிடையாதா என்றும் எழுதப்பட்டு இருக்கிறது.


மிகவும் வேதனையாக உள்ளது. ஒரு எழுத்தாளனுக்கு விருது கிடைத்தால் பாராட்டக் கூட இவர்களுக்குப் பெருந்தன்மை இல்லையா? அல்லது இவர்களின் இதழில் எழுதும் சாரு நிவேதிதாவிற்கும் மனுஷ்ய புத்ரனுக்கும் விருதளித்தால்தான் ஒப்புக் கொள்வார்களா? ஊதியத்திற்கும் பாராட்டுக்கும் இவர்களுக்கு இன்னும் வித்யாசம் புரியவில்லையா? விருது எப்படி ஊதியமாகும்?


ஆவலுடன் உங்கள் பதிலை எதிர்பார்க்கும்,

கணேஷ் ஆத்ரேயா


அன்புள்ள கணேஷ்,


உயிர்மையின் விமர்சனத்தில் தவறேதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. விருது என்பது எல்லாரும் பாராட்டியாகவேண்டிய மங்கலத் தருணம் அல்ல. அது ஒரு மதிப்பீடு. அதை ஓர் அமைப்பு முன்வைக்கும்போது அதை ஏற்காதவர்கள் விமர்சிப்பது இயல்பே. விருதுகள் அளிக்கப்படும்போது சம்பந்தப்பட்ட படைப்புகள் விமர்சனத்துக்கும் விவாதத்துக்கும் உள்ளாகவேண்டும், அந்த விருது எல்லாத் தரப்பு வாசகர்களாலும் பரிசீலனை செய்யப்படவேண்டும் என்பதே முறை.


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அக்காதமி விருது
அரவான்
சாகித்ய அகாதமி விருதுகள்
காவல்கோட்டம் 5
சு.வெங்கடேசன், எஸ்.ராமகிருஷ்ணன், கடிதங்கள்
காவல்கோட்டம் 4
காவல்கோட்டம் 3
காவல் கோட்டம் 2
காவல்கோட்டம் 1
காவல் கோட்டம்,எஸ்.ராமகிருஷ்ணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 12, 2012 10:30

பூமணி – கடிதம்

அன்புள்ள சார்,


இன்று பூமணியின் தகனம் கதை வாசித்தேன்ங்க. நான் இலக்கியத்தில் வாழும் வயதானவர்களில் ஒரு கனிவான தந்தையைக் கண்டு கொண்டேன். அதில் வெள்ளத்தாயின்னு ஒரு பொண்ணு வருவா சார், வீட்டில் வேலை செய்தவரின் மகள், ஒரு உறவும் இல்லாவிட்டாலும் தன் மகள் போல அவளை நேசிக்கிறார் ஏட்டையா. கதையின் முடிவில் அந்தப்பெண் சாதிக் கலவரத்தால் இறந்து விடுவாள். இந்தக் கதை சாதிக்கலவரத்தின் தீங்கினைப் பற்றி. ஆனா ஒரு இடத்திலும் எங்கும் வெறுப்பு இல்லை. இந்த மாதிரி நபர்கள்தான் சமூகக் கட்டுரை எழுத வேண்டும். உண்மையான சமூக அக்கறை என்பது இதுதான். அன்பின் வழி நின்று எழுதும் பூமணி போன்றவர்களை என் போன்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவரைக் கவுரவப்படுத்தும் உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள் சார்.


ராதாகிருஷ்ணன்


கோவை


அன்புள்ள ராதாகிருஷ்ணன்,


நன்றி.


பூமணியின் கலையின் இயல்பே அதுதான். அவர் எதையும் மிகைப்படுத்திச் சொல்வதில்லை. அவர் சொல்பவை சமூகச் சித்திரங்கள். புறவயமான உலகம். புறவயமான உலகைச் சொல்லும் இலக்கியம் எந்த அளவுக்கு நம்பகத்தன்மையுடன் இருக்கிறதோ அந்த அளவுக்கு மதிப்பதிகம். எந்த அளவுக்கு அது மென்மையாக சமநிலையுடன் உள்ளதோ அந்த அளவுக்கு அதன் நம்பகத்தன்மை அதிகரிக்கும்.


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

பூமணி- சொல்லின் தனிமை
பூமணி-கடிதங்கள்
பூமணி- எழுத்தறிதல்
பூமணி- உறவுகள்
பூமணி- மண்ணும் மனிதர்களும்
பூமணியின் வழியில்
விஷ்ணுபுரம் விருது விழாவில் பூமணி உரை
பூமணியின் நாவல்கள்
பூமணியை ருசித்தல்-கடிதம்
சிறுகதைகளும் படிமங்களும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 12, 2012 10:30

காந்தியாயணம்

அன்புள்ள ஜெ,


உங்கள் எண்ணங்களை ஒத்து ஒருவர் எழுதியிருக்கிறார். எதேச்சையாக வாசித்தேன். எஸ்.என்.நாகராஜனைப் பற்றிக்கூடக் கூறி இருக்கிறார். பார்க்க காந்தியாயணம்


நேரம் கிடைக்கும்போது பார்க்கவும்.


சுநீல் கிருஷ்ணன்


காந்தி டுடே

தொடர்புடைய பதிவுகள்

காந்தியும் மேற்கும் -குகா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 12, 2012 03:58

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.