Jeyamohan's Blog, page 2256
January 21, 2012
அருகர்களின் பாதை 8 – கோலாப்பூர், நந்திகிரி, கட்ரஜ்
காலையில் கும்போஜ் மடம் அருகே உள்ள அருகர் கோயிலுக்குச் சென்றோம். அங்கே எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. நண்பர்கள் சிமிண்ட் நிற சாய வேட்டி கட்டியிருந்தார்கள். அதை அங்குள்ள வாட்ச்மேன் லுங்கி என்றே எடுத்துக்கொண்டார். பாண்ட் அணிந்து வருவது அனுமதிக்கப்பட்டதென்றாலும் குட்டை பாண்ட் அல்லது கால்சட்டை பூஜை உடையாக எண்ணப்படவில்லை.
வழியில் இன்னொரு சமணக் கோயில். வாடேகாம் என்ற ஊரில். கோயில் புதியதாகக் கட்டப்பட்டது. சலவைக்கல்லில் அழகாக ஒரு ரதம்போல கட்டியிருந்தார்கள். தந்தத்தால் ஆன சிலை போல் இருந்தது. அங்கும் இதே பிரச்சினை, பூஜை உடை அணியவில்லை என்று. பதிலுக்கு உள்ளே வரச்சொல்லி சாய் சாப்பிடுகிறீர்களா என்று உபசரித்தார் ஒருவர்.
காலை ஒன்பது மணிக்கு கோலாப்பூர் வந்து சேர்ந்தோம். கோலாப்பூரி செருப்புகள் வழியாக அறிமுகமான ஊர். ஊர் நடுவே ஒரு பிரம்மாண்டமான கோட்டைச்சதுக்கம் இருந்தது. கோட்டைமேல் உள்ள கட்டிடங்கள் இன்றும் கூட புழக்கத்தில் இருந்தன. கர்நாடகத்துக்கான நுழைவாயிலாக உள்ள ஊர் கோலாப்பூர். இது தொன்மையான சமண வணிக மையம். பதினொன்றாம் நூற்றாண்டில் சிலாஹார் வம்சத்து மன்னர்களின் காலகட்டத்தில் இந்த ஊர் இன்றைய வடிவில் உருவாகி வந்திருக்கலாமென ஊகிக்கப்படுகிறது. ஷுல்லகபுரா என்ற சொல்லின் மரூஉதான் ஷோலாப்பூர். க்ஷில்லகர் என்பது இளம் சமணத் துறவிகளைச் சுட்டும் சொல். இங்கே முக்கியமான கடவுளாக பத்மாவதி யட்சி வணங்கப்பட்டாள். பத்மாவதி யட்சியை இங்குள்ள இந்துக்கள் மகாலட்சுமியாக வழிபடுகிறார்கள்.
கொங்கண நாட்டை ஆண்ட ஷிலாகார் வம்சத்தினர் ராஷ்டிரகூடர் காலகட்டத்தில் அவர்களுக்குச் சிற்றரசர்களாக உருவாகி வந்தவர்கள். இவர்களின் வம்சாவளியினர் இன்றும் மகாராஷ்டிரத்தில் உள்ளனர். தேரதலா என்ற ஊரில் கிடைத்த கல்வெட்டுகளின் படி ஒரு சிலாஹார் வம்சத்து மன்னரை பாம்பு கடித்தபோது சமண முனிவர் ஒருவர் அவரைக் காப்பாற்றினார். அவர் சமணராக மாறி நிறைய சமணக் கோயில்களைக் கட்டுவித்தார். இவை கொங்க ஜினாலயா என அழைக்கப்படுகின்றன. தேராதலா, கோலப்பூர் அருகே உள்ள சிற்றூராகும்.
கோலாப்பூரின் நடுவே ஒரு பேராலயம் உள்ளது. கோலாபுரி மாதா என அழைக்கப்படும் மகாலட்சுமி ஆலயம். இன்றும் பெருங்கூட்டம் வந்து குவிகிறது. தெருவெங்கும் பக்தர்கள். இளவெயிலில் குளிருக்கு இதமாக நடந்தோம். கூட்டம் நெரியும் கோயிலுக்குள் நுழைய வேண்டாமென்றே நினைத்தோம். ஆனால் சிலாஹார் மன்னர்களின் கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த ஆதாரம் என்று இக்கோயில் சொல்லப்படுவதனால் உள்ளே சென்றோம்.
ஆச்சரியமும் வருத்தமும் அடையச்செய்யும் காட்சி. ஒரு காலத்தில் பிரம்மாண்டமான ஆலய வளாகமாக இருந்திருக்கிறது. கோபுரம் முழுமையாக உடைந்து போய் புதியதாக சிறிய கான்கிரீட் கட்டிடம் கட்டி வைத்திருக்கிறார்கள். கீழே உள்ள கட்டிடத்தின் அழகும் பிரம்மாண்டமும் அந்தப் பழைய கோயிலைக் கனவில் எழுப்பி பிரமிக்கச் செய்தன. எஞ்சிய கோபுர அடித்தளத்தைக்கொண்டு பார்த்தால் கஜுராஹோ காந்தரிய மகாதேவர் ஆலய பாணியில் தஞ்சைப் பெரிய கோயிலை விட உயரமான கோயிலாக இருந்திருக்கலாம். எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஆலயம் அலாவுதீன் கில்ஜியால் அழிக்கப்பட்டது. கோயிலை முழுமையாக இடிக்க சிலமாதங்கள் ஆனது என வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. அற்புதமான கருங்கல் சிலைகள். அனைத்தும் ஒன்றுவிடாமல் உடைக்கப்பட்டுள்ளன. கோபுரம் பெரும் கற்குவியலாக மேலே விழுந்து கிடந்தமையால் அடித்தளம் தப்பியிருக்கிறது.
உள்ளே பதினைந்தாம் நூற்றாண்டு வாக்கில் மராட்டியர்களால் மீண்டும் நிறுவப்பட்ட தேவி அமர்ந்திருக்கிறாள். உள்ளே சென்று தூரத்திலேயே தேவியை தரிசித்துவிட்டுத் திரும்பினோம்.
சிலாஹார் மன்னர்கள் சமணர்களுக்கும் ஆதரவளித்தவர்கள். இந்தப் பகுதியில் இஸ்லாமியர் காலகட்டத்தில் இடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பஸதிகள் உள்ளன. சிலாஹார் மன்னரான முதலாம் போஜனின் காலகட்டத்தில் ஆச்சாரிய மகாநந்தி அடிகள், ரூபநாராயண பஸதி என்ற ஓர் அமைப்பை நிறுவி சமணக்கல்வியைப் பரப்பினார். கொங்க மன்னர்கள் பெரும்பாலும் மகாநந்தி அடிகளின் மாணவர்கள். மகாநந்திஅடிகள் கோலாப்புரியர் என்று அழைக்கப்படுகிறார். சித்தாந்த கேசரி என்றும் அவர் சிறப்பிக்கப்படுவதுண்டு. அவர் தேஷிய கண புஸ்தக கச்சா என்ற சமண குருமரபைச் சேர்ந்தவர். மூடுபிதிரி, சிரவணபெலகொலா போன்ற ஊர்களின் பட்டாரகர்கள் இந்த மரபைச் சேர்ந்தவர்கள். நேமிசந்திர ஆச்சாரியாருக்கும் சாமுண்டராயருக்கும் இருந்த குருசீட உறவைப்போலவே சிலாஹார மன்னர் கண்டராதித்தனுக்கும் மகாநந்தி அடிகளுக்கும் உறவிருந்தது என்று நூல்கள் காட்டுகின்றன.
கோலாப்பூர், ஜைனாச்சாரிய பரம்பரா மகிமா என்ற நூலில் முக்கியமான சமணத்தலமாகக் குறிப்பிடப்படுகிறது. அதில் கண்டராதித்தன் 770 சமணக் கோயில்களைக் கட்டினான் என்றும் மகாநந்தி அடிகளுக்கு 770 சீடர்கள் இருந்தார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. திரிபுவன திலகம் என்ற பேரில் நேமிநாதருக்குக் கண்டராதித்தர் ஒரு ஆலயத்தை அர்ஜுரிகா என்ற சிற்றூரில் கட்டினார். சோமதேவர் இங்குதான் சப்தர்னவ சந்திரிகா என்ற பெருநூலை இயற்றினார். கண்டராதித்தர் எல்லா மதங்களையும் ஆதரித்தார். ஒரு கல்வெட்டு, அவரை சர்வ தர்சன சக்ஷுகா என்று சிறப்பிக்கிறது. கண்டராதித்தரின் தளபதி நிம்பதேவரும் சமண மதத்தைப் பரப்பியவர்தான். கோலாப்பூர் மகாலட்சுமி ஆலயத்தின் கல்வெட்டில் அது நிம்பதேவரால் கட்டப்பட்டது என்று சொல்லப்பட்டுள்ளது.
கண்டராதித்தரின் மகன் விஜயாதித்தன் ஆச்சாரிய மகாநந்தி அடிகளின் சீடரான மகாநந்தி அடிகளுக்கு மாணவராக இருந்தார். அவரது தளபதிகளும் தளபதிகளின் சேவகர்களும் கூடக் கோயில்களைக் கட்டியிருக்கிறார்கள். விஜயாதித்தனின் தளபதி காமதேவனின் ஊழியரான பிராமணர் வாசுதேவா ஒரு சமண ஆலயத்தைக் கட்டிய தகவல் கல்வெட்டில் உள்ளது. சிலாஹார் வம்சத்தின் வீழ்ச்சிக்குப்பின்னர் மெல்லமெல்ல கோலாப்பூரின் சமணக் காலகட்டம் அழிய ஆரம்பித்தது. இங்கே இரு பட்டாரக மடங்கள் உள்ளன. லட்சுமிசேன சுவாமி பட்டாரக மடம், ஜினசேன சுவாமி பட்டாரக மடம். அது நந்தினி என்ற ஊரில் இருந்து இங்கே கொண்டுவரப்பட்டது.
சமண பஸதியைத் தேடிக் கோலாப்பூரில் அலைந்தோம். திகம்பர் ஜெயின் கோயில் என அகப்பட்டவர்களிடமெல்லாம் கேட்டோம். ஒருவர் வாருங்கள் என அன்புடன் அழைத்தார். குடிசைகள். இடிந்த மண்டபங்களில் அமைந்த இல்லங்கள். தயங்கியபோதெல்லாம் வாருங்கள் எனக் கட்டாயப்படுத்திக் கூட்டிச்சென்றார். கடைசியில் ஓரு வீடு. அதைக்காட்டி இதுதான், உள்ளே செல்லுங்கள் என்றார். அங்கிருந்த அழகான அம்மணி வாருங்கள், உள்ளே வாருங்கள் என்றார். திகம்பர் ஜெயின் எனத் தயங்கினோம். அவர் வெளியே போயிருக்கிறார், வந்துவிடுவார், நீங்கள் அமருங்கள் என்றார். நாங்கள் இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் கலந்துஆங்கிலத்தில் தாளித்து விஷயத்தைச் சொன்னோம். தெருவெங்கும் ஒரே சிரிப்பு. துணி துவைத்துக்கொண்டிருந்த ஒரு அழகி சிரித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
ஒருவழியாக மடத்தைக் கண்டடைந்தோம். தொன்மையான கட்டிடம். கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலை. ஆளே இல்லை. ஆனால் சுத்தமாக இருந்தது. கோயிலுக்கு வெளியே திறந்த வெளியில் 9 மீட்டர் உயரமான பகவான் ஆதிநாதரின் சிலை லட்சுமிசேன மடத்தில் உள்ளது. நேமிநாதருக்கு ஓர் ஆலயம் இருந்தது. வணங்கிவிட்டு கிளம்பினோம்.
பூனாவுக்குச் செல்லும் வழியில் நந்திகிரி என்ற சமண மலையைத் தேடிச்சென்றோம். இந்த இடம் எந்த சுற்றுலா வழிகாட்டியிலும் இருக்காது. தொல்பொருள் துறையின் குறிப்பில் கண்ட ஊர். விசாரித்து ஒரு சின்ன கிராமத்துக்குச் சென்றோம். அவர்கள் ஒரு மண்பாதை வழியாக மேலே செல்லச்சொன்னார்கள். மண்ணை வெட்டி உருவாக்கப்பட்ட பாதை செங்குத்தான மலைமேல் ஏறிச்சென்றது. அபாயகரமான சாலை. சில இடங்களில் உண்மையிலேயே குலைநடுங்கியது.
மலை உச்சியில் ஒரு சமணக் கோயில். சிறிய கோயில்தான். அருகே ஒரு அனுமான் கோயிலும் இருந்தது. அதனருகே ஒரு படி இறங்கிச்சென்றது. கொஞ்சதூரம் சென்ற டிரைவர் பிரசாந்த், சார் வாருங்கள் வாருங்கள் என அழைத்தார். குரலில் பரபரப்பு, துள்ளல். அது ஒரு பெரிய குகை. நிலத்துக்குள் செல்லும் குகைகளுக்குத் தமிழில் பிலம் என்று பெயர். குனிந்து செல்லவேண்டும். சில இடங்களில் நிற்கலாம். பல இடங்களில் குனிந்து வளைய வேண்டும். ஆனால் இரண்டு ஏக்கர் அளவுக்கு அகலம். உள்ளே இரு குளங்கள். குளங்களுக்குள் இருந்து குகைகள் மேலும் பிரிந்து சென்றன. கண்ணைக் குத்தும் இருட்டு. கைவிளக்கு ஒளியால் உள்ளே சென்றோம். இரு சிறு சமண ஆலயங்கள். ஆதிநாதர், பார்ஸ்வநாதர் சிலைகள் இருந்தன. நெடுங்காலமாக சமண முனிகள் தியானத்துக்குப் பயன்படுத்திய இடம் அது.
விளக்கை அணைத்துவிட்டு இருளில் அமர்ந்தோம். கோயிலில் வைக்கப்பட்ட சிறிய விளக்கு மட்டும் முத்துப் போல, பழுத்த மிளகாய் போல மின்னிக்கொண்டிருந்தது. அமைதி. உள்ளுக்குள் நிறையும் அமைதி. இருபது நிமிடங்கள் அமர்ந்துவிட்டு கிளம்பினோம். சீனு பின்னர் அந்த அனுபவத்தை அற்புதமாகச் சொன்னார். அலைகளில் ஆடும் மலரிதழ் போல ஆடிஆடி மலைமேல் சென்றோம். பிரம்மாண்டமான நிலம். அதன் நடுவே தகதகக்கும் பொற்கோபுரம் போல சூரியன். மெல்லமெல்ல உள்ளே சென்று இருட்டு. இருட்டுக்குள் சின்னஞ்சிறு சுடராக ஒளி. அதே சூரியனின் சிறு துளி. மீண்டும் மேலே வந்தால் நிலம் புதியதாகப் பிறந்து வருகிறது புறச்சூரியன்!
பூனாவுக்கு அருகே உள்ள கட்ரஜ் எங்கள் அடுத்த இலக்கு. ஸ்வேதாம்பர் சமணர்களின் மிகப்பெரிய கோயில். ஒரு சிறு குன்று மீதிருந்தது. பழைய தலம். ஆனால் கோயில் புதியதாகக் கட்டப்பட்டது. வெண்பளிங்கில் கட்டப்பட்ட ஆலயத்தின் தூண்கள் முழுக்க நுண்ணிய சிற்பங்கள். கருவறையின் சிற்பங்கள் சட்டென்று புத்தம்புதிய அழகியலைத் திறந்து வைத்தன. வஜ்ரகிரீடம் அணிந்த தீர்த்தங்கரர் சிலைகள் பொன் முலாமிட்ட உலோகத்தில் செய்யப்பட்டிருந்தன. கிரீடங்களிலும், காதணிகளிலும் பல வகையான கற்கள். ஆடம்பரமும் கலையும் கலக்கும் அழகு. திபெத்திய புத்தர் சிலைகளை நினைவூட்டும் சிலைகள்.
கட்ரஜுக்கு நண்பர் பாலா மும்பையில் இருந்து வந்திருந்தார். அவருடன் அவரது நண்பரின் விருந்தினர் விடுதிக்குச் சென்றோம். அங்கே இரவு தங்குதல். அரங்கசாமி அங்கேயே விடைபெறுகிறார். நாளை நாங்கள் மட்டும் கிளம்புகிறோம், செந்தில்குமார் தேவன் சேர்ந்து கொள்கிறார்.
மேலும்…
படங்கள் இங்கே
தொடர்புடைய பதிவுகள்
அருகர்களின் பாதை 12 – எல்லோரா
அருகர்களின் பாதை 11 – மகாஸ்ருல், தௌலதாபாத், எல்லோரா
அருகர்களின் பாதை 10 — லென்யாத்ரி, நானேகட்
அருகர்களின் பாதை 9 — கார்லே, ஃபாஜா, ஃபெட்சா
அருகர்களின் பாதை 7 — ஆயிரத்து எண்ணூறு கிலோமீட்டர்கள் கடந்து பெல்காம், கித்ராபூர், கும்போஜ்
அருகர்களின் பாதை 6 — மூல்குந்த், லக்குண்டி, டம்பால், ஹலசி
அருகர்களின் பாதை 5 — ஹங்கல், பனவாசி, லட்சுமேஸ்வர்
அருகர்களின் பாதை 4 — குந்தாதிரி, ஹும்பஜ்
அருகர்களின் பாதை 3 — மூடுபிதிரி, வேணூர், கர்க்களா, வரங்கா
அருகர்களின் பாதை 2 — சந்திரகிரி, தர்மஸ்தலா, ரத்னகிரி
கடிதங்கள்
பெருமதிப்புக்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்.
இன்று தங்கள் 'வலைத்தளத்தில்' பதிவான "நூறு நாற்காலிகளும் நானும்" மறுபடியும் என்னை 'அற உலகத்திற்கு' அழைத்துச் சென்றுவிட்டது. மீளமுடியாமல் தவிக்கிறேன். முதன் முதலில் இத்தொகுப்பைப் படித்த போது என்ன இருந்தாலும் இது ஒரு கதைதானே என்ற ஒரு துளி எண்ணம் மன ஓரத்தில் இருந்தது. பிறகு இத்தொகுப்பிற்கு வந்த பின்னூட்டத்தைப் பார்த்து, நிகழ்கால மனிதர்களுக்கும் இதற்கும் கண்டிப்பாகத் தொடர்பு உள்ளது என்று அறிய நேர்ந்தபோது மனதில் சற்று நம்பிக்கை துளிர்த்தது.
இன்று இப்பதிவைப் படித்தவுடன் மேலும் அந்த நம்பிக்கை மனதில் 'விஸ்வரூபமாக' எழுந்து நிற்கிறது. இதற்கு நன்றி.
அன்புடன்,
அ.சேஷகிரி
ஆழ்வார்திருநகரி
ஜெ,
என் அண்ணன் சீனா சென்றுள்ளான் – அங்கு உட்கார்ந்து 'காடு' படித்துக் கொண்டிருக்கிறான். எப்படியோ, வெளிநாட்டுச் சூழலில் இன்னும் மனக் கொந்தளிப்பு மேம்படுகிறது என்கிறான்.
உங்களுக்குச் சொல்ல வேண்டும் போலத் தோன்றியது.
நன்றி.
வி.சரவணன்
தொடர்புடைய பதிவுகள்
பெருங்காடும் நான் மேய்ந்த நுனிப்புல்லும் — சீனு
காதல் ஒரு கடிதம்
இளமாறனின் காடு
காடு-ஒருகடிதம்
காடு, களம்-கடிதங்கள்
காடு,வாசிப்பு — கடிதங்கள்
நூல்கள்,கடிதங்கள்
காடு -கடிதம்
அன்பு என்ற நோய்-கடிதம்
காடு,கடிதம்
January 19, 2012
அருகர்களின் பாதை 6 – மூல்குந்த், லக்குண்டி, டம்பால்
காலையில் எழுந்தது ஐந்து மணிக்கானாலும் கிளம்பத் தாமதமாகிவிட்டது. காலையின் குளிர் ஒரு காரணம். வடக்குநோக்கி வர வர , பகலின் வெப்பத்துக்கும் இரவின் குளிருக்கும் இடையேயான வேறுபாடு அதிகரித்தபடியே வந்தது. காலை ஆறரைக்குத்தான் கிளம்பினோம். நேராக மூல்குந்த் என்ற முலுகுந்து மலைக்குச் சென்றோம். சமணர்களின் முக்கியமான ஒரு தலமாக இருந்தது இந்த ஊர். ஆனால் நாங்கள் வழி விசாரித்து அங்கே செல்வதற்குள் ஆயிரத்தைநூறு வருடங்கள் தாண்டி அந்த ஊர் புழுதி மண்டிய இடிபாடுகளின் குவியலாக மாறிவிட்டிருந்தது.
முலுகுந்து இன்று முக்கியமான தொல்லியல் மையமாக அறியப்பட்டிருந்தாலும் அதிகமான ஆய்வுகள் ஏதும் செய்யப்படவில்லை. இடிபாடுகளைக்கொண்டு கட்டப்பட்ட பாழ்வீடுகள். சாக்கடை ஒழுகும் தெருக்கள். பன்றிகள். வறுமை திகழும் முகங்கள் கொண்ட மனிதர்கள். அதிகமும் முஸ்லீம்கள். அவர்கள் அங்கே வருபவர்களை வேறு ஏதோ உலகத்தில் இருந்து வேடிக்கை பார்த்தார்கள். மூல்குந்தின் தெருவில் இருந்த ஒரு ஆயா கடையில் இட்லி சாப்பிட்டோம். இட்லி இங்கே ஒரு தின்பண்டம், வடைபோல ஜிலேபி போல. உணவு அல்ல. ஒரே ஒரு இட்லிக்கு சாம்பார் விட்டு ஸ்பூன் போட்டுக் கொடுத்தார்கள். நான்கு பூரி எட்டு ரூபாய். ஒரு இட்லி நான்கு ரூபாய். டீ குடித்தபின் சமண பஸதியை விசாரித்து நடந்தோம்.
பார்ஸ்வநாதருக்குக் கட்டப்பட்ட புகழ்வாய்ந்த சமண பஸதி ஜினகிரி என ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட குன்றின் பாதி உயரத்தில் இருந்தது. பலரிடம் வழிகேட்டபோது விசித்திரமாகப் பார்த்து சந்தேகத்துடன் சொன்னார்கள். அங்கே செல்லச்செல்ல ஒன்று தெரிந்தது. அப்பகுதியை மொத்த ஊரும் கழிப்பிடமாகப் பயன்படுத்திக்கொண்டிருந்தது. மக்கள் கைகளில் பிளாஸ்டிக் செம்புகளுடன் சாரிசாரியாக மேலேறிச்சென்றார்கள். கழிவிறக்கத்தை ஒரு சமூகச் செயல்பாடாகச் செய்வதை இங்கேதான் பார்த்தேன். மொத்தமாக ஒரு பெரும் மலக்காடு. சமணக் கோயில் பெரியது. உள்ளே மூலச்சிலை ஏதும் இல்லை. பாறைமேல் ஒரு பெரும் தீர்த்தங்கரர் சிலை செதுக்கும்பணி ஆரம்பித்துப் பாதியில் நின்றிருந்தது. துணியால் முகம்மூடி நிற்கும் குழந்தை போலத் தீர்த்தங்கரர் பாறைக்குள் மெல்லிய புடைப்புகளாகத் தெரிந்தார். கோயில் வளாகம் முழுக்க இடிந்த கோயில்துண்டுகள், சிற்பங்கள். கதம்பர்களின் காலகட்டத்தில் கட்டப்பட்ட கோயில் இது.
சமணம் செழித்திருந்த முலுகுந்து நகரில் இன்று ஒரு சமணக் குடும்பம் கூட இல்லை. இப்படிக் கைவிடப்பட்டு கிடந்த பல சமணக் கோயில்கள் தமிழகத்திலும் இருந்ததைப் பதினேழாம் நூற்றாண்டுப் பயணிகளும் எச் ஆர் பேட்ச், ஜெ எச் நெல்சன் போன்ற ஆங்கில ஆட்சியாளர்களும் பதிவுசெய்திருக்கிறார்கள். ஒரு இடிபாட்டுப்பகுதி மனிதவாசம் இல்லாமல் கிடக்கும். ஆனால் மக்கள் தொகை அதிகரிக்கையில் அவை ஊர்களாகின்றன. அந்த ஆலயங்கள் சைவ வைணவ மதங்களின் பயன்பாட்டுக்கு வருகின்றன. என்றாவது இந்தக் கோயிலும் உயிர்பெறலாம்.
கீழே வந்தோம். வெயில் நன்றாக ஒளிவீச ஆரம்பித்திருந்தது. கீழே தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த சித்தேஸ்வரர் கோயில் இருந்தது. கதம்பர்களின் பாணியில் அமைந்த வட்டத்தூண்களும் அழகிய முகமண்டபமும் கொண்ட கோயில். பல இடங்களில் கோயில் சாதாரணப் பாறைகள் இடைசெருகிச் செப்பனிடப்பட்டிருந்தது, கம்பராமாயணத்தில் இடைச்செருகல் பாடல்களைப்போல.
எட்டரை மணிக்கெல்லாம் அங்கிருந்து கிளம்பிவிட்டோம். அருகே உள்ள இன்னொரு சமணத்தலமான லக்குண்டிக்குச் சென்றோம். இருபது கிமீ தூரமானாலும் சாலையின் புழுதியால் ஒருமணி நேரமானது. லக்குண்டியில் தொல்லியல்துறையின் வரவேற்பு மையம் உள்ளது. அங்கே உள்ள கோயில்கள் பெரும்பாலும் தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ளன.
கதக் மாவட்டத்தில் உள்ள லக்குண்டி ஒரு முக்கியமான புராதன நகரம். இன்று ஒரு சிற்றூர். இங்குள்ள வீடுகள் பெரும்பாலும் மண்ணைக்குழைத்துக் கட்டப்பட்டு ஓடு வேய்ந்து பெரிய வராந்தாக்களுடன் உள்ளன. மிக அபூர்வமாகவே ஒரு சிமிண்ட் கூரை வீடு கண்ணுக்குப் படுகிறது. சுற்றியுள்ள நிலம் பெரும்பாலும் வறண்டது. தென் கன்னடத்தின் பசுமை மறைந்து விட்டிருப்பதை முன்னரே கண்டோம் என்றாலும் மண் பெரும்பாலும் புழுதி மண்டிய செம்பழுப்பு வெளியாகத் தெரிய ஆரம்பித்ததது இப்போதுதான்.
லோக்கி குண்டி என்ற பேரில் பழைய ஆவணங்களில் உள்ளது இந்நகரம்.உண்மையில் இங்குள்ள சிற்றூருக்கு நடுவே வீடுகளுக்குள் புதைந்தும் மண்ணில் அமிழ்ந்தும் ஒரு கைவிடப்பட்ட நகரமே கிடக்கிறது. கல்யாணி சாளுக்கியர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த உதாரணமாக அமைந்த பல கோயில்கள் இங்குள்ளன. கிட்டத்தட்ட 50 கோயில்கள் இங்கே உள்ளன என்றது செய்தி நிலையம். பல குளங்கள், புராதனமான கிணறுகள்.
லக்குண்டியின் காசிவிஸ்வேஸ்வரர் ஆலயம் முக்கியமான ஒரு கலைப்படைப்பு. கல்செதுக்குக் கலையின் நுண்மையின் உச்சங்களை இங்கே காணலாம். கதம்பா-கல்யாணி கட்டிடக்கலையின் சிறப்பம்சங்களான மண்டபமும் வட்டத்தூண்களும் இங்கும் இருந்தன. ஆனால் கோயில் வாசல்களைச்சுற்றி செதுக்கப்பட்டிருந்த சிற்ப அடுக்குகள் வேறெங்கும் காணக்கிடைக்காதவை. கட்டை விரல் அளவே கொண்ட சிற்பங்கள். மலர்க்கொடிகளில் பின்னிப்பிணைந்த கின்னரர்கள். யட்சிகள். மலர்களைப் பற்றிய சாலபஞ்சிகைகள். கட்டைவிரல் அளவுள்ள ஒரு மோகினி காதில் அணிந்திருந்த குழையில் பதிக்கப்பட்ட கற்களையும் வளையல்களின் செதுக்குவேலையையும் கல்லில் கொண்டு வந்திருந்தார்கள்.
ஒரு கட்டத்தில் சலிப்பே ஏற்பட்டு விட்டது. மிகமிக நுட்பமான பல்லாயிரம் சிற்பங்கள். இங்கே ஒரு விஷயத்தை கவனித்தோம். இதற்கு முன்பே பார்த்த கோயில்களில் இல்லாத ஒன்று. கோயில்களின் அடித்தளம் முழுக்க யானைகளின் வரிசைகள். கோயிலே யானைகள் மேல் அமைந்திருப்பது போல. அரை அடி உயரமான யானைகள். போரிடும் யானை, திரும்பிப் பார்க்கும் யானை, உடல் ஒசிந்த யானை. இந்த அமைப்பை முன்னர் நல்கொண்டா பகுதியின் காகதீயர் கட்டிடங்களில் கண்டிருக்கிறேன்.
லக்குண்டியின் மல்லிகார்ஜுனர், வீரபத்ரர், மாணிகேஸ்வரர், நன்னேஸ்வரர், லட்சுமிநாராயணன், சோமேஸ்வரர், நீலகண்டேஸ்வரர் ஆலயங்கள் குறிப்பிடத்தக்கவை. நன்னேஸ்வரர் ஆலயம் அழகான தூண்கள் கொண்டது. கோயிலுக்குள் சென்றால் அங்கே போர் போடுவதற்கான இரும்புக்குழாய்களைக் கட்டுமான ஒப்பந்ததாரர் குவித்துப் போட்டிருந்தார். அவற்றை எடுக்கும் போதும் போடும்போதும் சிலைகள் தட்டுப்பட்டு உடைவதைத் தவிர்க்க முடியாது. புகார்ப் புத்தகத்தை எடுத்துப் புகாரைப் பதிவுசெய்தோம். அங்கிருந்த ஊழியரிடம் சொன்னோம். அவருக்கு அக்கறையே இல்லை. எழுதிவிட்டுப் போங்கள் என்றார்.
சோமேஸ்வர் ஆலயத்து வளாகத்தில் உள்ள நகல்யாணி புஷ்கரணி என்ற 101 படிகொண்ட கிணறு முக்கியமானது. அதை கூட்டிப்பெருக்கிக் கொண்டிருந்தார்கள். படிகள் வழியாக இறங்கிச்சென்று ஓங்கி உயர்ந்த மதில் கட்டுகளைப் பார்க்கையில் மலைப்பு உருவானது. எந்தக் கோடையிலும் நீர் வற்றாத குளமாக இதை உருவாக்கியிருக்கிறார்கள். இது இந்தப் பகுதியின் வறட்சிக்கும் ஒரு சான்று. நேற்று மாலை லட்சுமேஸ்வர் கோயிலில் பார்த்த நீராழியைப் போலவே இருந்தது இது.
இங்குள்ள சமண ஆலயத்தை ஆற்றிமாப்ப்பி என்னும் அரசி கட்டியதாகச் சொல்லப்படுகிறது. ஆற்றிமாப்பி கன்னடத்தின் முக்கியமான கவிஞரான ராண்ணாவின் புரவலராக இருந்தார். அவர் தன்னுடைய அஜிதபுராணம் என்னும் நூலில் ஆற்றிமாப்பிக்குப் புகழ்மாலை சூட்டியிருக்கிறார். பொன்னாவும் அவரது சாந்திபுராணத்தில் ஆற்றிமாப்பியைப் பணிவுடன் குறிப்பிடுகிறார். கன்னட வரலாற்றில் ஆற்றிமாப்பி ஒரு முக்கியமான நட்சத்திரம். ஆற்றிமாப்பி பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். அவரது முன்னோர் வெங்கிநாட்டைச் சேர்ந்தவர்கள். புனகனூரு என்பது அவர்பிறந்த ஊர் என்கிறார்கள். தந்தை மல்லப்பையா, தாய் அப்பாக்கப்பி. அவரது தந்தை கவிஞர்களை ஆதரித்தவர். அவரது சபையில்தான் கன்னடப்பெருங்கவிஞர் பொன்னா வாழ்ந்தார். சாளுக்கிய சக்ரவர்த்தி ஆகவமல்ல சோமேஸ்வரரின் தளபதியாக இருந்த நாகதேவரை மணந்தார். ஆற்றிமாப்பியின் தாய் குண்டம்மாப்பியும் நாகதேவரையே மணந்துகொண்டார். ஆற்றிமாப்பி ஒரு மகனைப் பெற்றார், அன்னிகதேவர். குண்டம்மாப்பிக்கு மைந்தர்கள் இல்லை. ஆகவே நாகதேவர் இறந்தபோது அவர் உடன்கட்டை ஏறினார். ஆற்றிமாப்பி தன் மகனுக்காக உயிர்வாழ்ந்தார். எஞ்சிய வாழ்க்கையை ஒரு பெரும் விரதமாக ஆக்கிக்கொண்டார். தன்மொத்த சொத்தையும் தர்மத்துக்காக செலவிட்டார். ஆகவே தம்மசிந்தாமணி என்று பெயர் பெற்றார்ஆற்றிமாப்பி. லக்குண்டியில் ஒரு பெரிய சமணக் கோயிலைக் கட்டினார். அவர் ஆயிரத்தைநூறு ஜினதேவ சிலைகளைப் பொன்னிலும் வெள்ளியிலும் செய்து வினியோகம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. பொன்னாவின் சாந்திபுராணாவை ஆயிரம் ஓலைப்பிரதிகள் எடுத்து எல்லாஅறிஞர்களுக்கும் அளித்தார். ஆற்றிமாப்பியின் தியாக வாழ்க்கையை ராண்ணா கவித்துவமாகப் புகழ்ந்து எழுதுகிறார். கர்நாடக அரசு ஆற்றிமாப்பியின் பெயரால் பெண் படைப்பாளிகளுக்காக ஒரு விருது வழங்கிவருகிறது. லக்குண்டியில் அவர் கட்டிய ஜினாலயத்தைச் சென்று பார்த்தோம். தொல்பொருள்துறைப் பராமரிப்பில் உள்ள அக்கோயில் கதம்பக் கட்டிடக்கலைப் பாணியிலேயே உள்ளது.
லக்குண்டியில் இருந்து டாம்பால் கிளம்பினோம். பலரால் வழிசுட்டப்பட்டு இருமுறை சுற்றி வந்தபின் ஒன்று தெரிந்தது அது டாம்பால் அல்ல, டம்பலா. டம்பலா உண்மையில் ஒரு பௌத்தநகரம். 12ஆம் நூற்றாண்டுவரை பௌத்தம் செழித்த ஊர். சாதவாகனர் ஆட்சிக்காலம் முதலே கர்நாடகத்தில் பௌத்தம் செழித்திருந்தது. டம்பலாவுக்கு உள்ள முக்கியத்துவம் என்னவென்றால் பௌத்தப் பெண் தெய்வமான தாராதேவிக்கு மட்டுமாக அமைந்த முக்கியமான ஆலயம் இங்கேதான் உள்ளது என்பதுதான். பத்தாம் நூற்றாண்டில் பதினாறு வணிகர்கள் சேர்ந்து இதைக் கட்டினார்கள் என்று ஒரு கல்வெட்டு சொல்கிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை இங்கே ஒரு பெரிய பௌத்தக் கல்விநிலையம் இருந்தது.
டம்பலாவில் உள்ள தொட்ட பாஸப்பா கோயில் மேலைசாளுக்கியகட்டிடக்கலைக்கு சிறந்த உதாரணம். இது பதினாறு மடிப்புகள் கொண்ட நட்சத்திர வடிவில் அமைந்துள்ளது. தூண்கள் மிக மிக நுட்பமான மடிப்புகள் கொண்டவை. இங்கும் வாசலைச் சுற்றியிருக்கும் விதானத்தில் நெருக்கமாக செதுக்கப்பட்டிருந்த சிற்பங்கள் பிரமிப்பை ஊட்டின. சிற்பங்களால் ஆன மணிமாலை என்றும் சிற்பங்களின் மலர்க்குவியல் என்றும் சிற்பங்கள் தானியமணிகளாக மாறிவிட்டன என்றும் தோன்றிக்கொண்டே இருந்தது. எல்லாச் சிற்பங்களும் நடன நிலைகளில் இருந்தன. கோயிலே நடமிட்டுக்கொண்டிருப்பது போலத் தோன்றியது.
டம்பலாவில் பல சமணக் கோயில்களும் உள்ளன. பெரும்பாலும் எல்லாமே அழிந்த நிலையில்தான் உள்ளன. சிறிய கோயில்கள் அவை. சமணம் பொதுவாகவே வட கர்நாடகத்தில் அழிந்துவிட்டது என்று தோன்றியது. கர்நாடகத்தைப் பொறுத்தவரை சமணத்தின் வடக்கு எல்லை கும்ச்சாதான் என்று தோன்றியது.
கர்நாடகத்தில் நாங்கள் திட்டமிட்டிருந்தது ஒரு வாரம். அது முடியப்போகிறது. நாரேகால் போகவேண்டும். அதைத் தாண்டிச்செல்ல முடிவெடுத்தோம். ஹுப்ளியையும் பார்க்க எண்ணியிருந்தோம். அதையும் விட்டுவிட்டோம். ஒரே மூச்சில் கதக், ஹுப்ளி, தார்வாட் நகரங்களைத் தாண்டி வந்தோம். வரும் வழியில் திட்டமிட்டிருந்த ஒரே ஊர் ஹலசி. மையச்சாலையில் இருந்து விலகி ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் புழுதி நிறைந்த சாலையில் சென்று ஹலசியை அடைந்தோம். மாலையில் ஒரு குளத்தருகே குளிப்பதற்காக இறங்கினோம். ஆனால் தண்ணீர் கலங்கி அழுக்காக இருந்தது, தவிர்த்துவிட்டோம்.
ஹல்ஸி என்றும் ஹல்ஷி என்றும் அழைக்கப்படும் ஹலசி பெல்காம் அருகே உள்ளது. கதம்ப வம்ச மன்னர்களின் இரண்டாம் தலைநகரமாக இருந்தது. ஒரு முக்கியமான வரலாற்றுத் தலம் இது. மிகச்சிறிய பஞ்சாயத்து இது. பழைய வீடுகள். சிறிய பள்ளிக்கூடம். சுற்றும் வறண்ட நிலம். சமண பஸதி ஒன்று உண்டு என்று வாசித்துத் தேடிச் சென்றோம். கண்டுபிடிக்க முடியவில்லை. ஊர் நடுவே உள்ள பூவராகர் ஆலயத்துக்குச் சென்றோம். பெரிய ஆலயம். அதிகமான சிதிலங்கள் இல்லாமல் இருந்தது. முன்னால் ஒரு ஆழமான நீராழி பல படிகளுடன் இருந்தது. இப்பகுதியில் கோயில்களில் இப்படி நீர் அறாத பெரும் நீராழிகளைஅமைப்பது தேவையாக இருந்தது போல. கோயிலுக்குள் உள்ள பூவராகமூர்த்தியின் சிலை மிகமிக அழகானது. நான் பார்த்த பூவராகர் சிலைகளிலேயே ஒரு பெரும் கலைப்படைப்பு அதுதான். கல்லில் உலோகத்தின் மினுமினுப்பு. கண்களில் மதம் பரவிய பன்றிமுகம், ஆனால் அது கடவுள்முகமும் கூட! தோளில் பூமியை ஏந்தி ஆதிசேடன் மேல் கால் வைத்து நிற்கும் சிலை. எதிரில் பெருமாள் இருந்த திருக்கோலத்தில். கோயிலில் ராஜு என்ற உள்ளூர் நிலப்பிரபு அறிமுகமானார். அவர் ஒரு உதவியாளரை அனுப்பி சமண பஸதியைக் காட்டினார். ஊரில் சமணர்கள் எவரும் இல்லை என்றார். பஸதி அவரது வீடு அருகிலேயே உள்ளது. இடிந்து காலியாகக் கிடந்தது. ஆனால் மலினப்படுத்தப்படவில்லை. கதம்பமன்னர்களின் புராதனமான செப்பேடு இங்கே கிடைத்துள்ளது. காகுஸ்தவர்மன் என்ற மன்னன் ஒரு சமணப் பள்ளி அமைக்க அளித்த நிவந்தம் சம்பந்தமானது. இந்தசமணர் கோயில் பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
இங்கே ஒரு கோட்டையும், கோகர்ணேஸ்வரர், கலிலேஸ்வரர், ஸ்வர்ணேஸ்வர், ஹடகேஸ்வரர் ஆலயங்களும் உள்ளன. இந்த ஊரில் ஒரு நாள் முழுக்கத் தங்கினால்தான் சரிப்படும். அதற்கு நேரமில்லை. கிளம்பிவிடலாம் என்று நினைத்தோம். அந்த ஊரில் தங்கமுடியுமா என ராஜுவிடம் கேட்டோம். ஊரில் எந்த வசதியும் இல்லை என்றார். ஆகவே கிளம்பினோம். மறுநாள் வந்தால் ஊரைக் காட்டித்தருவதாக ராஜு சொன்னார். ஆனால் நாங்கள் பெல்காம் சென்று தங்குவதாக முடிவெடுத்தோம்.
மேலும் …
படங்கள் இங்கே
https://picasaweb.google.com/112217755791514676960/JainTripJeyamohanDay6
தொடர்புடைய பதிவுகள்
அருகர்களின் பாதை 5 — ஹங்கல், பனவாசி, லட்சுமேஸ்வர்
அருகர்களின் பாதை 4 — குந்தாதிரி, ஹும்பஜ்
அருகர்களின் பாதை 3 — மூடுபிதிரி, வேணூர், கர்க்களா, வரங்கா
அருகர்களின் பாதை 2 — சந்திரகிரி, தர்மஸ்தலா, ரத்னகிரி
அருகர்களின் பாதை 1 — கனககிரி, சிரவண பெலகொலா
பயணத்துக்குக் குழு தேவையா?
மீண்டுமோர் இந்தியப்பயணம்
ஜம்பை, ஆலம்பாடி – ஒரு கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
கடந்த வாரம் சென்றிருந்த ஜம்பை என்ற கிராமத்தைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். இந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு சப்த கன்னிகள் கோவிலும், ஜம்புனாதர் கோயிலும் 1000 ஆண்டுகள் பழமையானது. ஊருக்கு சற்று வெளியே ஜம்பை மலை என்ற இரண்டு பாறைக்குன்றுகள் உள்ளது. இரண்டிற்கும் நடுவில் இருக்கும் சிறிய நிலப்பரப்பில், பழமையான பானை ஓடுகளும், இரும்புத் துண்டுகளும் காணப்படுகிறது. மலைக்குக் கீழே ராஷ்ட்ரகூடர் காலத்து ஜெயஸ்தா தேவி (தமிழில் மூதேவி) சிலையும், அருகில் ராஷ்ட்ரகூடர் மன்னன் மூன்றாம் கிருஷ்ணனின் கல்வெட்டும் காணப்படுகிறது.
இதற்கு அருகில் ஒரு சிவலிங்கமும் காணப்படுகிறது. இரண்டு குன்றுகளில் தெற்கில் காணப்படும் குன்றிற்கு, தாசிமடம் என்று பெயர். இங்குதான் கி மு ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டும், சமண முனிவர்கள் பயன்படுத்திய உரல் குழியும் இருக்கிறது. அசோகர் காலத்து பிராமி கல்வெட்டு குறிப்பிடும் சத்தியபுத்திரர்கள் அதியமான்களே என்று அந்தக் கல்வெட்டு மூலம் தெரிகிறது. இதன் மூலம் ஒரு நீண்ட காலப் புதிர் விடுபடுகிறது. வடக்கில் இருக்கும் குன்றில் உள்ள குகையில் சமணர் படுக்கைகள் காணப்படுகின்றன. ஊரில் இருக்கும் ஜம்புனாதர் கோவிலிலும் ராஷ்ட்ரகூடர் காலத்து சிற்பங்கள் காணப்படுகின்றன.
ஆலம்பாடி பாறை ஓவியங்கள் கி மு 3000 ஐச் சேர்ந்தவை. பெரும்பாலும் பல்லி, பாம்பு போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. உணவுக்குழாய் போன்ற உடலின் உள்ளுறுப்புகளும் காணப்படுவதால், இவற்றை X- ரே ஓவியங்கள் என்று அழைக்கிறார்கள். ஒரு மனித முகமூடி போன்ற அமைப்பும் காணப்படுகிறது. இந்த ஊர் விழுப்புரத்தில் இருந்து திருக்கோயிலூர் போகும் வழியில் இருக்கிறது.
என்னுடைய இந்தப் பயணத்திற்கு உதவியவர் திரு. ரமேஷ். தொல்லியல் ஆய்வு மேற்கொண்டு வருபவர். விழுப்புரம் மாவட்ட சமணக்கோவில்கள் குறித்து எம் பில் ஆய்வு செய்தவர். தற்போது முனைவர் பட்ட ஆய்வு முடிக்கவிருக்கிறார். திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். நான்கு புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
இது குறித்து இணையத்தில் பதிவு செய்தவற்றை இங்கு இணைத்திருக்கிறேன்.
நன்றி.
தங்கள் அன்புள்ள,
சரவணக்குமார்
Wikipedia article
http://en.wikipedia.org/wiki/Jambai_(...
Youtube videos
Jambai
1) http://www.youtube.com/watch?v=icjdfx... (1 B.C. Tamil-Brahmi inscription)
2) http://www.youtube.com/watch?v=BAACwz...
3) http://www.youtube.com/watch?v=Z-A8_4...
4) http://www.youtube.com/watch?v=2UDGMq...
5) http://www.youtube.com/watch?v=GE99K3...
Alampadi rock paintings (3000 B.C.)
1) http://www.youtube.com/watch?v=39kMG1...
2) http://www.youtube.com/watch?v=Lbz5LM...
3) http://www.youtube.com/watch?v=4P9jGf...
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
January 18, 2012
தாய் எனும் நிலை – சீனு
5.1.11
இனிய ஜெ.எம்.,
இன்று காலை ஆஃபீஸ் திறக்கக் கிளம்பும்போது பிரதான சாலையில் ஒருகாட்சி. சாலை கடக்க முயன்றிருக்கிறது ஒரு அம்மா நாயும், பிறந்து சில வாரங்களேயான குட்டியும். சாலை கடக்கும் சிக்கலில் நாய் எதிர்சாரி சென்றுவிட, குட்டி வாகனத்தில் சிக்கித் தலைபிளந்து இறந்து போனது. குட்டி நோக்கித் தாய்வர, டிராபிக் தடுக்க நாய் திரும்ப ஓட, சில நேர முயற்சிக்குப் பின் அந்த நாய் சாலை ஓரம் அமர்ந்து முன்னங்கால்களும் மூக்கு நுனியும் 90டிகிரியில் நிற்க ஊளையிட்டு அழுதது. அப்படி ஒரு கேவலை இதுவரை நான் அறிந்ததில்லை. முதுகுத்தண்டில் ஐஸ் இறங்கி குதம் கூசியது. தொடைகள் உதறப் பதறி அக்காட்சி விட்டு விலகினேன். மனம் அலைக்கழிந்து ஏதேதோ பிம்பங்கள் பொங்கின.
வீட்டு எதிரில் ஒரு தெருநாய் எங்கள் வீட்டு உணவில்தான் திரிந்தது. ஒருமுறை 2 குட்டி போட்டது. ஒன்று கருப்பு, இன்னொன்று அப்பட்டமான வில்வ இலைப் பச்சை. இப்படி ஒரு நிறத்தில் ஒரு நாயை நான் பார்த்ததே இல்லை. அதை வீட்டு நாயாக வளர்க்க எண்ணினேன். ஒரு மழைநாள் முடிந்த காலை ஒன்றில் அக்குட்டி இறந்துபோனது. தாய் யாரையும் நெருங்கவிடவில்லை. என்னைத் தவிர. கருப்புக் குட்டி பால் குடிக்கும்போது செத்த குட்டியையும் இழுத்துப் போட்டுக் கொண்டது. எங்கு சென்றாலும் செத்த குட்டியைக் கௌவிக்கொண்டே அலைந்தது.
ஒருநாள் தாயைக் காணோம். கருப்புக்குட்டி மட்டும் என் வீட்டு வாசலில் கிடந்தது. தாய் நாயைத் தேடினேன். தெருமுனைப் புதரருகே அமர்ந்து எதையோ தின்று கொண்டிருந்தது. என்னைக் கண்டதும் வாயில் கௌவிய உணவுடன் உற்சாகமாக வாலாட்டியது. அதன் வாயில் இருந்தது பாதி உண்ணப்பட்ட பச்சை நிறக்குட்டி. 'நான் கடவுள்' க்ளைமாக்ஸ் வசனத்தின்போது என்னையறியாமல் அழுதுகொண்டிருந்த பின்புலத்தில் இதுவும் இருக்கக்கூடும்.
செழியன் விகடனில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். "அம்மாவைத் தேடி" தலைப்பு. முகங்கள் மட்டுமே வேறு "தாய்" என்பவள் ஒருவள்தான் என்று எழுதி இருந்தார். முகங்கள் மட்டுமல்ல உடல்கள் வேறானாலும் தாய் என்பது ஒன்றுதான்போல.
சுனாமியன்று சென்னையில்தான் இருந்தேன். நண்பரின் ஜீப்பில் கடற்கரைச் சாலைவழி கடலூர் சென்று கொண்டிருந்தேன். தொடர் குழப்பங்களுக்கிடையே ஒரு காட்சியைக் கண்டேன். ஊனமுற்றோர் ஓட்டும் கையில் பெடல் வைத்த மூன்று சக்கர வண்டி. அதில் முள்கரண்டியில் மிஞ்சிய நூடுல்ஸ் போல அலங்கோலமாய் விழுந்து கிடந்தாள் ஓர் ஊனமுற்ற பெண். முகத்தின் இடதுபுறம் கிழிந்திருந்தது. வாய்கொள்ளாத கடற்கரை மண் (நிச்சயமாக இறந்துபோயிருக்கக்கூடும்) அழுதபடியே அந்த வண்டியைத் தள்ளியபடி ஓடிக்கொண்டிருந்தாள் அந்தப் பெண்ணின் தாய். ஒருவருக்கு மற்றவர் உதவி செய்யும் நிலையில் யாரும் இல்லை. எல்லோருமே ஓடிக்கொண்டிருந்தார்கள். இத்தனை மகத்தான வீழ்ச்சியைத் தாங்கக்கூடியதா ஒரு தனி மனிதப் பிரக்ஞை? 10 நாள் காய்ச்சலில் கிடந்து எழுந்தேன்.
கீழவெண்மணி பற்றி ஒரு டாகுமெண்டரி பார்த்தேன். யாரோ விவரிக்கிறார். தீயில் எரியும் குடிசைக்குள்ளிருந்து தன் குழந்தையை வெளியே வீசி எறிகிறாள் ஏதோ ஒரு தாய். திரும்பவும் குழந்தை அவளிடமே சேர்க்கப்படுகிறது. 'விரிந்த கரங்களில் காலமெல்லாம் விழுந்து கொண்டிருக்கிறது என்றும் மீளமுடியாத நம் இம்சைகள்.'
காலையில் கேட்டேன் "ஏம்மா இந்த சட்டைய இன்னும் தோச்சுப்போடல?'' "நீ திடீர்னு கௌம்பிட்டியா, வரவரைக்கும் உன்வாசனை இருக்கட்டுமேன்னு விட்டுட்டேன்." (செத்து, சடங்கு எல்லாம் முடிந்ததும், விசும்பலுடன் பதுக்கப்படும், உடல்வாசம் மாறாத இறுதி உடை). அனேகமாக இது எல்லா தேசத்திலும் நிகழக்கூடும்.
மனம் பொறுக்காமல் திரும்பி வந்தேன். குறைந்தபட்சம் அக்குட்டியின் உடலையாவது சாலை கடந்து தாய்வசம் சேர்த்துவிட எண்ணினேன். திட்டாக ரத்தத்தடம், வாகன சக்கரம் தன் தடத்தால் அதை ஏதோ நவீன ஓவியமாக மாற்றி இருந்தது. குட்டியைக் காணவில்லை. சாலை முனைவரை விழியோட்டினேன். நகராட்சி குப்பை டிராக்டர் பின்பாக மடி துவள ஊளையிட்டு அழுதபடி ஓடிக்கொண்டிருந்தது அந்தத் தாய்.
மாளும் இவ்வுடல் கொண்டு இப்புவியில் நாம் எய்தவந்ததுதான் என்ன?
சீனு
கடலூர்.
தொடர்புடைய பதிவுகள்
அறிதலுக்கு வெளியே-சீனு
பெருங்காடும் நான் மேய்ந்த நுனிப்புல்லும் — சீனு
தெருவெங்கும் தெய்வங்கள்- கடலூர் சீனு
சீனு — கடிதங்கள்
சீனு-கடிதங்கள்
அன்பை வாங்கிக்கொள்ளுதல்…[கடலூர் சீனு]
அன்புள்ள ஜெயமோகன் — ஒரு நூல்
ஓர் இணைமனம்
அருகர்களின் பாதை 5 – ஹங்கல், பனவாசி, லட்சுமேஸ்வர்
அதிகாலை நான்கு மணிக்கு விடுதி அறையில் எழுந்தோம். ஒவ்வொருவராகக் குளித்து வருவதற்குத் தாமதமாகியது. வெளியே நாங்கள் இந்தப் பயணம் கிளம்பியபின் வந்த முதல் பெரிய நகரம் துயில் எழுந்துகொண்டிருந்தது. பன்றிகள் உறுமிக்கொண்டு அலைந்தன. வாசலிலேயே டீ விற்ற தள்ளுவண்டிக்காரர் அருகே இரு பெரிய பசுக்கள் நின்று டீ குடிப்பவர்களை மெல்ல முட்டி பன் வாங்கித் தின்றுகொண்டிருந்தன. அரங்கசாமி ஒரு பசுவுக்கு நான்கு பன்கள் வாங்கிக்கொடுத்தார். டீ குடிக்க வந்தவர்கள் பலர் பசுவைத் தொட்டுக் கும்பிட்டுச் சென்றார்கள். ஒரு மதச்சடங்கு. ஆனால் யோசித்தால் அதற்கு இன்னும் ஆழம் இருக்கலாமென்று பட்டது. பெரும்பாலும் புல்வெளிகள் சூழ்ந்த இந்த நிலப்பரப்பில் ஒரு காலத்தில் மேய்ச்சலே முக்கியமான வாழ்க்கை முறையாக இருந்திருக்கலாம். அன்று பசு செல்வத்துக்கும் மங்கலத்துக்கும் அடையாளமாக இருந்திருக்கலாம். கண்கண்ட தெய்வமாகவே இருந்திருக்கலாம்.
பசுக்களை இங்கே அடிப்பதில்லை. துரத்தும்போதுகூட செல்லமாகத் தட்டி அனுப்புகிறார்கள். ஓட்டலுக்குள் இரு மாபெரும் பசுக்கள் உள்ளே நுழைந்து எதையோ வாங்கித் தின்றுவிட்டு மேஜைகள் நடுவே கனத்த உடலை மெல்லத் திருப்பி நடந்தன. நானும் அரங்கசாமியும் சீனுவும் கிருஷ்ணனும் ஒரு காலைநடை சென்றோம். பெட்டிகளை மேலே கட்டி வைத்ததும் கிளம்பினோம்.
நாங்கள் திட்டமிட்டிருந்தது முலுகுந்து போவதற்கு. ஆனால் போகும் வழியில் வரைபடத்தை நன்றாகப் பார்த்தபோதுதான் பனவாசி, ஹங்கல் என இரு இடங்களையும் விட்டுவிட்டுச் செல்வதைக் கண்டுபிடித்தோம். ஆகவே வண்டியைத் திருப்பி ஹங்கலுக்குச் சென்றோம்.
ஹவேரி மாவட்டத்தில் உள்ள ஹங்கல்,தர்மா ஆற்றின் கரையில் உள்ளது. ஆற்றங்கரையில் தொன்மையான கோட்டை ஒன்றின் இடிபாடுகள் உள்ளன என இணையம் சொன்னாலும், அங்கே ஏதும் இல்லை என்றே எல்லாரும் சொன்னார்கள். இந்தச் சிறிய நகர் அருகே அனிகெரே என்ற பெரும் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஊர் மகாபாரதத்தில் விராட்நகர் என்று சொல்லப்பட்டுள்ளது என்கிறார்கள். ஹங்கலின் முக்கியமான கோயில் என்பது இங்குள்ள தாரகேஸ்வரர் கோயில்தான். இந்தப்பயணத்தில் நாங்கள் கண்ட மிகச்சிறந்த கலைப்படைப்பு என்பது இந்த ஆலயம். தக்காணத்துக் கோயில்களின் முக்கியமான கலைச்சிறப்பு என்பது தூண்களும் பிரம்மாண்டமான அலங்கார வட்டக்கல் கவிழ்த்தப்பட்ட முகப்பு மண்டபங்களும்தான். கதம்ப மன்னர்கள், பின்னர் கல்யாணிசாளுக்கியர்கள், கடைசியாக ஹொய்சளர்கள் காலம் வரை தொடர்ச்சியாக இந்தக் கட்டிடக்கலை இங்கே வளர்ந்து வந்திருக்கிறது. கதம்பா-ஹொய்சள பாணி என இதைச் சொல்லலாம். இந்தப் பாணியின் மிகச்சிறந்த உதாரணமாக சொல்லத்தக்கது இந்தப் பேராலயம்.
நாங்கள் இதுவரை பார்த்த கோயில்களில் சிற்ப நுட்பங்களில் உச்சம் என்பது ராமப்பா கோயில் [ஆந்திராவில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தில், சென்ற இந்தியப் பயணத்தில் பார்த்தோம்] அதற்கு இணையான கோயில் என இதைச் சொல்லலாம். உயரமற்ற அழகிய கோபுரம் கொண்ட கருவறை. அதற்கு முன்பாக வரிசையாக மண்டபங்கள். உருளையாகத் தீட்டப்பட்ட தூண்கள். கன்னங்கரிய கல். குறிப்பாகக் கோயிலுக்கு முன்னால் உள்ள பெரிய அணிமண்டபத்தின் புஷ்பவிதானம் ஒருநாள் முழுக்க அமர்ந்து பார்த்தாலும் தீராத செறிவுகொண்டது.
ஹங்கல், கதம்பர்களின் தலைநகரமாக இருந்துள்ளது. கதம்பர்கள் அக்காலகட்டத்தில் கல்யாணிசாளுக்கியர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக இருந்துள்ளார்கள். கதம்பர்கள் கோவா பகுதியை, அதாவது கொங்கண் கடற்கரையை ஆண்டுவந்தவர்கள். ஆரம்பத்தில் இவர்கள் பனவசி அல்லது வைஜயந்தபுரத்தை ஆண்டுவந்தனர். பின்னர் அவர்கள் ஹங்கலுக்கு வந்தார்கள். கதம்பர்கள் சமண மதத்தைச் சார்ந்தவர்கள். ஆறாம் நூற்றாண்டில் வாதாபிசாளுக்கியர்கள் கதம்பர்களை வென்று அவர்களின் நாட்டைத் தங்களுடைய நாட்டுடன் இணைத்துக்கொண்டார்கள். ஹங்கல் முழுக்க ஏராளமான சமண ஆலயங்கள் இருந்தன. அவை ஒவ்வொன்றாக அழிந்தன. இப்போது ஒரே ஒரு கோயில்தான் உள்ளது. தாரகேஸ்வரர் ஆலயத்துக்குள் சந்தித்த காவலர் எங்களைக் கூட்டிக்கொண்டு சென்று கோயிலைக் காட்டினார். அந்தக் கோயில் தோட்டக்கலை வளாகத்துக்குள் உள்ளது. சின்னஞ்சிறிய கோயில். ஆனால் தாரகேஸ்வரர் கோயிலுக்குச் சற்று முந்தைய வடிவத்தைச் சேர்ந்தது.
ஹங்கலில் இருந்து பனவாசிக்கு வந்தோம். பனவாசி கதம்ப மன்னர்களின் இரண்டாம் தலைநகரமாக இருந்தது. உண்மையில் இது ஒரு புதையுண்ட நகரம். ஹங்கல், பனவாசி இரு நகரங்களிலும் ஏராளமான புதைபொருள் ஆய்வுகள் பலகாலமாகத் திட்டமிட்டு நடத்தப்படாமல் உள்ளன, நிதி நெருக்கடியால். இன்னும் அகழப்படாத ஒரு வரலாறு கதம்பர்களுடையது.
வடகர்நாடகத்தில் ஷிவ்மொக்கே மாவட்டத்தில் உள்ள பனவாசி பலவகையிலும் முக்கியமானது. கர்நாடகத்திலேயே மிகத்தொன்மையான ஊர் இது என்று சொல்லப்படுகிறது. இன்று இது இந்துக்களின் புண்ணியத்தலம். இங்குள்ள முக்தேஸ்வர் ஆலயம் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சிவாலயம் இது. இதன் கூரையின் சரிவு இங்குள்ள அதீத மழைக்கு அவசியமானது போலும். இது ஓடுபோட்ட கோயில்களை நினைவுறுத்துகிறது. கோயிலின் முகப்பும் அமைப்பும் கூட ஓடுபோடப்பட்ட ஆலயம் என்ற எண்ணத்தை உருவாக்குவதாகவே உள்ளது.
ஆனால் ஆலய வளைப்புக்குள் நுழைந்தால் கோயில் நம்மை மூச்சுத்திணறச்செய்யும் அளவுக்கு பிரம்மாண்டமானது என்பது தெரியும். கல்லாலான அலைகளாக விரிந்து விரிந்து சென்றது கோயிலின் இணைப்புவரிசை. நான்கு பக்கமும் அஷ்டதிக்பாலகர்களின் சிலைகள். எருமைமேல் அமர்ந்த எமனின் பெரிய சிலையைக் கண்டபோது நான் எமனின் சிலையைப் பார்த்ததே இல்லை என்ற எண்ணம் வந்தது. கருவறைக்குள் உள்ள லிங்கம் மதுகேஸ்வரர் என்று சொல்லப்படுகிறது. சாளகிராமத்தால் ஆனது, தேன் நிறமானது.
வழக்கம்போல மலைக்க வைக்கும் முகமண்டபம். தமிழ் சிற்பக்கலை எப்படி கோபுரங்களில் தன் உச்சத்தைத் தொட்டதோ அப்படி இவர்கள் சிற்பத்தூண்களிலும் மண்டபங்களிலும் உச்சத்தைக் கண்டிருக்கிறார்கள். குளிர்ந்து கிடந்த கோயில் மண்டபங்கள் வழியாகக் காலமற்ற ஒரு அந்தரங்க வெளியில் சுற்றியலைந்துகொண்டே இருந்தோம். இங்கே மிகத்தொன்மையான நாணயங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் கிபி ஐந்தாம் நூற்றாண்டைச்சேர்ந்த கதம்ப மன்னர் இரண்டாம் கிருஷ்ண வர்மனின் நாணயம் முக்கியமானது. அதில்தான் முதன்முதலாக கன்னட எழுத்துக்களின் முதல் வடிவம் காணக்கிடைக்கிறது. அதில் மகாபாரதத்தில் உள்ள சசாங்கரின் சித்தரிப்புடன் நிலவு என கன்னடத்தில் எழுதப்பட்டுள்ளது.
பனவாசிக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. ஆதிகவி பாம்பா இங்கேதான் பிறந்தார். பாம்பா கன்னட கவிஞர்களில் முதன்மையானவர். கன்னட இலக்கியமே மும்மணிகள் என அழைக்கப்படும் பாம்பா, பொன்னா, ரண்னா ஆகிய மூன்று கவிஞர்களால் உருவாக்கப்பட்டது என்கிறார்கள். மூவருமே சமணக் கவிஞர்கள். பாம்பா, சாளுக்கிய மன்னர் இரண்டாம் அரிகேசரியின் அவைப்புலவராக இருந்தார். அரிகேசரி அன்று ராஷ்டிரகூடப் பேரரசின் கீழ் சிற்றரசராக ஆட்சி செய்துவந்தார். உரையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்ற வடிவில் [சம்பு] எழுதிய பாம்பா விக்ரமார்ஜுன விஜயம், [இது பாம்பா பாரதம் என அழைக்கப்படுகிறது] ஆதிபுராணம் என இரு பெரும் காவியங்களை எழுதியிருக்கிறார்.
பாம்பா பனவாசியில் பிறந்தார் என்பதற்குச் சில ஆதாரங்கள் உள்ளன. சிலர் அவர் அன்னிகேரியில் பிறந்தாரென்று சொல்கிறார்கள். பனவாசி ஒருகாலத்தில் கதம்பா ஆட்சியாளர்களின் தலைநகரமாக இருந்துள்ளது. கதம்பர்கள் கிபி இரண்டு-மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆட்சி செய்தவர்கள். இவர்கள் சமணர்கள். இவர்களுக்குச் சமானமான காலகட்டத்தில்தான் தமிழகம் சமணர்களான களப்பிரர் ஆட்சியில் இருந்தது. கதம்பர்களுக்கும் களப்பிரர்களுக்கும் உள்ள உறவு இன்னும் விரிவாக ஆராயப்படவில்லை.
பனவாசி வழியாக வரதா ஆறு ஓடுகிறது. இது இங்கே மழையில்லாத காலம். ஜூன் ஜூலைதான் மழைக்காலம். ஆகவே ஆற்றில் பெரிதாக நீர் இல்லை. ஆற்றைக் காரில் தாண்டி வந்தபோது அது பெரிதாக கவனத்தைக் கவரவில்லை. மதியம் அங்கேயே அன்னசத்திரத்தில் சாப்பிட்டோம். அலைந்து திரிந்த பின் சூடான சோறும் சாம்பாரும் மோரும் கிடைத்தபோது ஆவேசமாக சாப்பிட வைத்தது. எந்த ஊர் என்று கேட்டுவிடுவார்களோ என்று தோன்றிவிட்டது. உண்டபின் குளிர்ந்த கல்திண்ணையில் சற்று நேரம் அமர்ந்துகொண்டோம்.
பனவாசி சமணர்களுக்கு முக்கியமான ஊர். ஹங்கல் பலகாலம் முன்னரே கைவிடப்பட்டு இடிபாடுகளாகக் கிடந்து நூறு வருடம் முன்பு மெல்லமெல்ல மக்கள் குடியிருக்க ஆரம்பித்த ஊர். கோயிலைச் சூழ்ந்தே குடிசைகளையும் வீடுகளையும் கட்டி வைத்திருந்தார்கள். நேர்மாறாக, பனவாசி அழகான பழைய ஊர். மண்ணைக் குழைத்துக் கட்டப்பட்ட பழமையான அழகிய வீடுகள் வரிசையாக அமைந்த தெருவில் நடந்தோம். ஓட்டு வீடுகள். குளிர்ந்த திண்ணைகள். மண்சுவரின் செம்பழுப்பு நிறம். சமண பஸதி ஒன்று பனவாசியில் இருப்பதாகச் சொன்னார்கள். தேடித்தேடிக் கடைசியில் ஒரு சமணரைக் கண்டு கொண்டோம். அவர் எங்களைக் கூட்டிச்சென்று காட்டிய கோயில் முப்பதாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. அங்கே கிடைத்த சமணச் சிலைகளைக் கொண்டுவந்து வைத்திருந்த இடத்தில் கட்டியிருக்கிறார்கள். மொத்தம் ஆறே ஆறு சமணக் குடும்பங்கள்தான் பனவாசியில் உள்ளன. ஆனால் பனவாசியில்தான் சமணம் ஒரு காலத்தில் தலைமையிடம் கொண்டிருந்தது. ஹும்பஜ் மடத்தின் முதல் தலைமையகம் இங்குதான் இருநூறாண்டுக் காலம் முன்பு வரை இருந்தது. எதிர்பார்க்கவே இல்லை. நாங்கள் நினைத்து வந்தது இந்த ஊரே சமணர்களுடையதாக இருக்கும் என்று. ஊரெல்லாம் பஸதி கட்டிய கதம்பர்களின் தலைநகரத்தில் பஸதிகளே இல்லை என்பதில் ஓர் அபூர்வமான விதிவிளையாட்டு இருப்பதாகப் பட்டது.
இன்றே லட்சுமேஸ்வர் சென்றாகவேண்டும் என முடிவெடுத்தோம். லட்சுமேஸ்வரை வந்தடைய நான்கு மணி ஆகியது. இங்கே பிதார் சுல்தானால் கட்டப்பட்ட அழகிய மசூதி ஒன்று உள்ளது. தொல்பொருள் துறைப் பராமரிப்பில் உள்ள இந்த மசூதி முழுக்க முழுக்கக் கல்லால் ஆனது. மிக நுட்பமான செதுக்கு வேலைகள் கொண்டது. கல்லால் ஆன சங்கிலிகளும் பூவேலைப்பாடுகளும் அழகியவை. தொழுகை நடக்கிறது. உள்ளே பெயிண்ட் அடித்திருந்தார்கள்.
லட்சுமேஸ்வரம் கன்னட வரலாற்றில் முக்கியமான ஊர். இதற்கு ஹுலிகெரே அல்லது புலிகெரே என்று பெயர். புலிக்குளம் என்று பொருள். கன்னட ஆதிகவி பாம்பா இந்த ஊரில் வாழ்ந்து அவரது காவியங்களை எழுதியிருக்கிறார். இங்கே புகழ்பெற்ற பல சமண ஆசாரியர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். சங்கணாச்சாரியர், ஹேமதேவாச்சாரியர், பத்மசேனர், திரிபுவன சந்திர பாதமிதா, ராமதேவாச்சாரியர் போன்றவர்கள் முக்கியமானவர்கள். இங்கே கன்னட மொழியின் புராதனமான பல கல்வெட்டுகள் வாசிக்கப்பட்டுள்ளன.
லட்சுமேஸ்வரம் சமணர்களுக்கு முக்கியமான ஊர். ஆனால் மிகமிகச் சில சமணர்களே இங்கிருந்திருக்கிறார்கள். இரு சமண பஸதிகள் உள்ளன. ஒன்று சிக்க பஸதி. அதை நோக்கிச்செல்லும்போது எங்களுக்கு முன்னால் ஒரு திகம்பர முனி செல்வதைக் கண்டோம். முழு நிர்வாணமான உடல். கையில் மயில் தோகை. சிரித்த முகம். அவர் சென்றது சிக்க பஸதிக்குத்தான். அது முழுக்க முழுக்க இடிந்து பாழடைந்து கிடந்தது. அதை மூடி செங்கல்லால் கட்டியிருந்ததார்கள். அதைச் செப்பனிட்டு மீட்டுக்கொண்டிருந்தார்கள். நேமிநாதருக்கான பஸதி. ஆனால் வழிபாடு ஏதும் இல்லை. வேலை நடந்து கொண்டிருந்தது. முனிவரிடம் ஆசி பெற்றோம். இரு சமணர்கள் எங்களை வண்டியில் வழிகாட்டி தொட்ட பஸதிக்கு அழைத்துச் சென்றார்கள்.
தொட்ட பஸதி, சங்க பஸதி என்றும் அழைக்கப்படுகிறது. அந்த ஆலயத்துக்குள் நுழைந்ததும் ஓர் அதிர்ச்சி ஏற்பட்டது. முதன் முறையாக ஒரு சமண ஆலயத்தில், அதிலும் திகம்பர சமண ஆலயத்தில், போக சிற்பங்களைப் பார்த்தோம். பலவகையான உடலுறவுச்சிலைகள். நிறைய சிலைகளைச் செதுக்கி உடைத்திருந்தார்கள். கோயிலின் முகப்பு மண்டபம் மிக அழகானது. நுட்பமான செதுக்குவேலைகள் கொண்ட பலகணியால் ஆனது. ஆனால் கருவறையைக் கண்டதும் இன்னும் அதிர்ச்சி. மிக விசித்திரமான ஆலயம். முன்பு எப்போதோ இருந்த ஒரு பேராலயம் முற்றாக இடிந்து குப்பைக் குவியலாக ஆகிவிட்டிருக்கிறது. அந்த இடிந்த உடைந்த சிற்பங்களை அப்படியே அள்ளிக் கைக்குக் கிடைத்தபடி அடுக்கிக் கட்டி அந்த கோயிலைக் கட்டியிருந்தார்கள். கோயில் 12 ஆம் நூற்றாண்டில் சுல்தான்களால் இடிக்கப்பட்டு 16 ஆம் நூற்றாண்டில் உள்ளூர் சிற்றரசரால் எடுத்துக்கட்டப்பட்டது எனத் தெரிந்து கொண்டோம். சிற்பங்களால் ஆன ஒரு கொலாஜ் அது. சிற்பங்கள் சம்பந்தமே இல்லாமல் ஒன்று மீது ஒன்று அமர்ந்திருந்தன. அங்கே எங்கே பார்த்தாலும் சிற்பங்கள். உடைந்த சிற்பத்தை ஸ்டம்ப் ஆக்கி இரு பயல்கள் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தார்கள்.
மாலை ஐந்து மணிக்கு சோமேஸ்வர் ஆலயம் வந்து சேர்ந்தோம். பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் கல்யாணிசாளுக்கியர்களால் கட்டப்பட்ட இந்தப் பேராலயம் ஒரு நூற்றாண்டுக்காலம் கூட முழுமையுடன் இருக்கவில்லை. சுல்தானியப் படையெடுப்புகளால் இடிக்கப்பட்டபின் வெறும் இடிபாடுகளாகப் பல நூற்றாண்டுக்காலம் இது மண்மூடிக் கிடந்தது. இப்போதும் இடிபாட்டுக்குவியலாகவே உள்ளது. கோயில் வளாகம் முழுக்கப் பல்வேறு சிறு சன்னிதிகள் ஆளில்லாமல் கிடந்தன. கோட்டை போன்ற சுற்றுமதிலுக்குள் ஹம்பியின் ஒரு துண்டு மட்டும் எஞ்சுவது போல பிரமை எழுந்தது. ஹம்பியை ஒரு கெட்டகனவில் திடுக்கிட்டு எழுந்த சிற்பி நினைவு கூர்ந்த காட்சி என்று கவிஞர் மோகனரங்கன் சொன்னதாகக் கிருஷ்ணன் சொன்னார். அப்படித்தான் இருந்தது. இந்த ஆலயத்தின் மிகப்பெரிய கவர்ச்சி என்பது இங்குள்ள குளம். இது ஒரு கிணறுதான். குளம் அளவு அகலமானது. நூற்றைம்பதடி ஆழம் கொண்டது. பெரும் கோட்டை போல மதில் கட்டி இறக்கியிருந்தார்கள். உள்ளே இறங்க பல அடுக்குகளாகச் செல்லும் கற்படிகள். விஷ்ணுபுரத்தில் சித்தனும் சீடனும் சென்று பார்க்கும் ஆழத்துக் குளம் போல் இருந்தது என்றார் சீனு.
அந்தி இறங்குவதுவரை சோமேஸ்வர் ஆலயத்திலேயே இருந்தோம். அந்திச்சிவப்பில் இப்படி ஆலயத்தில் இருப்பது சாதாரணமான அனுபவம் அல்ல. உள்ளுக்குள் ஏதோ உருகி வழிவது போல. குருதி எல்லாம் வழிந்து மறைவது போல. ஆனால் கிளம்பும்போது தோன்றியது, அதுவும் இயற்கையே என. பேரழகுடன் பிறக்கும் குழந்தை தொண்டு கிழமாகி சாவது போல.
மேலும்…
படங்கள் இங்கே - https://picasaweb.google.com/112217755791514676960/JainTripJeyamohanDay5
தொடர்புடைய பதிவுகள்
அருகர்களின் பாதை 4 — குந்தாதிரி, ஹும்பஜ்
அருகர்களின் பாதை 3 — மூடுபிதிரி, வேணூர், கர்க்களா, வரங்கா
அருகர்களின் பாதை 2 — சந்திரகிரி, தர்மஸ்தலா, ரத்னகிரி
அருகர்களின் பாதை 1 — கனககிரி, சிரவண பெலகொலா
பயணத்துக்குக் குழு தேவையா?
மீண்டுமோர் இந்தியப்பயணம்
January 17, 2012
சோழபாண்டியபுரம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
கடந்த வாரம் நான் சென்று வந்த சோழபாண்டியபுரம் கிராமத்தைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இது விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் சாலையில் 15 கி மீ தொலைவில் இருக்கிறது. இந்த ஊர் கி பி பத்தாம் நூற்றாண்டு வரை ஒரு சமண மையமாக இருந்து இருக்கிறது. ஊரின் நடுவில் சிதிலமடைந்த ஒரு சிவன் கோயில் உள்ளது. ஊருக்கு அருகில் ஆண்டிமலை இருக்கிறது. இங்கு சுமார் 25 கற்படுக்கைகள் இருக்கின்றன. பார்சுவநாதர், பாகுபலி, மகாவீரர், தர்மதேவி, இயக்கி சிற்பங்கள் காணப்படுகின்றன. பாறையிலான இருக்கை காணப்படுகிறது. ஆண்டிமலைக்குப் பின்புறம் புறாக்கல் என்னும் இடத்தில கற்காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. இப்பாறை ஓவியங்களின் குறியீடுகள் சிந்து சமவெளி நாகரிகத்தை ஒத்து இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இவை அனைத்தும் எந்தவிதப் பாதுகாப்பும் இன்றி உள்ளன. குறிப்பாக ஆண்டிமலை சுற்றி உள்ள பெரும்பாலான பாறைகள் கட்டுமானப் பணிகளுக்காக உடைக்கப்பட்டுள்ளன.
இந்த ஊரைப் பற்றி மேலதிக தகவல்கள் அறிய முடியவில்லை. தெரிந்ததை வைத்து இணையத்தில் பதிவு செய்தவற்றைக் கீழே இணைத்து உள்ளேன்.
நன்றி.
தங்கள் அன்புள்ள,
சரவணக்குமார்
–
Wikipedia article:
http://en.wikipedia.org/wiki/Cholapandiyapuram
Youtube videos:
Andimalai
1) http://www.youtube.com/watch?v=oSRR1j54VdE
2) http://www.youtube.com/watch?v=3Kosf9MYlXg&feature=related
3) http://www.youtube.com/watch?v=Kqti4DH-KvU&feature=related
4) http://www.youtube.com/watch?v=p_dYbfy_0to&feature=mfu_in_order&list=UL
5) http://www.youtube.com/watch?v=zJ4Tw1vydxU&feature=related
6) http://www.youtube.com/watch?v=cwSvDktMNII&feature=related
7) http://www.youtube.com/watch?v=aLd6JIcBMgA&feature=mfu_in_order&list=UL
8) http://www.youtube.com/watch?v=H55fDgLEj64&feature=related
9) http://www.youtube.com/watch?v=DDeTjvpeW2M&feature=related
10) http://www.youtube.com/watch?v=fp_P_7XALJw&feature=related
Pura kal:
1) http://www.youtube.com/watch?v=nr9n820yWd0&feature=related
2) http://www.youtube.com/watch?v=vS8P3bxeJvw&feature=related
3) http://www.youtube.com/watch?v=nsbm5Xezg3c&feature=related
Wikimapia Additions:
3) http://wikimapia.org/#lat=11.8697028&lon=79.1238785&z=14&l=0&m=b&show=/22584792/Pura-kal-Rock-Paintings
regards,
K. Saravanakumar
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
அருகர்களின் பாதை 4 – குந்தாதிரி, ஹும்பஜ்
இன்று காலை வரங்காவில் கண்விழித்தேன். எல்லாரைப்பற்றியும் அப்படிச் சொல்ல முடியாது. பலர் கண்மூடவே இல்லை. திறந்தவெளி போன்ற கல்யாண மண்டபம். அதன் மீது பல சாளரங்கள் திறந்தே கிடந்தன. ஆகவே கடுமையான குளிர். இரவிலேயே நான் வெளியே சென்று குளிரும் என்று ஊகித்துச் சொல்லியிருந்தேன். ஆனால் எல்லாருமே 'எங்களுக்கெல்லாம் குளிரே அடிக்கலை' என்று சொல்லிப் படுத்தார்கள். நான் எனக்காக முத்துக்கிருஷ்ணன் வாங்கிவந்த ஸ்வெட்டரைப் போட்டுக்கொண்டு படுத்தேன். ஓரளவு தூங்கிவிட்டேன். இதன் நடுவே ராஜமாணிக்கம் கை தவறுதலாக வைத்த செல்பேசி எழுப்பி நள்ளிரவில் அடித்து எல்லாரையும் தூங்காமல் பார்த்துக்கொண்டது. நான் எழுந்தபோது ஒவ்வொருவரும் பேஸ்த் அடித்த கண்களுடன் இருந்தனர்.
குளிரிலேயே நடந்து வரங்காவின் ஏரிக்கோயிலுக்குச் சென்றோம். ஏரிமேல் காலைக்குளிரின் நீராவிப்படலம் எழுந்துகொண்டிருந்தது, சூடான காபிக் கோப்பை மீதிருந்து எழுவது போல. மீன்கள் பல்லாயிரம் கண்கள் போல நீருக்குள் துடித்தன,இமைத்தன.எங்களுக்காகப் பூசாரி வந்து காத்து நின்றிருந்தார்.படகில் ஏற்றி மறுகரைக்குக் கொண்டுசென்றார்.சூரியன் உதிக்கும் முன்புள்ள காலையின் வெளிச்சத்தை எங்களூரில் மணிவெளிச்சம் என்பார்கள். அந்நேரத்தில் எல்லா நிறங்களும் நன்றாகத் துலங்கித்தெரியும். புறாக்களின் குரல்களைக் கேட்டுக்கொண்டு அங்கே நின்றோம். முந்தையநாள் அங்கே திறந்த வெளியில் படுத்துக்கொள்ளலாமே என்று கருத்துத் தெரிவித்திருந்த ராஜமாணிக்கத்தை வாஞ்சையுடன் பார்த்தேன், மனிதர்கள் எவ்வளவு தெளிந்தவர்களாக இருக்கிறார்கள்!
வரங்காவில் உள்ள நேமிநாதரின் பஸதி கிட்டத்தட்ட கர்க்களா அளவுக்கே பெரியது. வெளியே நின்று பார்த்தால் அதன் பிரம்மாண்டம் கண்ணுக்குப்படாது. கனராபாணி கோயில். பெரிய கனத்த தூண்கள் மீது கூரையாக சாய்த்து அமைக்கப்பட்ட கற்பலகைகள் கொண்டது. உள்ளே சென்று அந்த மௌனமான கோயிலைச் சுற்றிவந்தோம். மூடியிருந்தது, நூற்றாண்டுகளுக்கு அப்பால் நாமறியாத ஒரு ஆழத்தில் இருப்பது போல.
பக்கத்து வீட்டில்தான் பூசாரி தங்கியிருந்தார். 60 வயதானவர். அவரே வந்து கோயிலைத்திறந்து தீபாராதனை காட்டினார். வரங்காவின் காலைநேரம் எங்கோ ஒரு காலத்தில் நிகழ்வது போலிருந்தது. ஒரு புனைவுக்குள் இருப்பது போல் இருக்கிறது என்றார் சீனு.
சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினோம். நேராகக் குந்தாதிரி செல்வதாகத் திட்டம். ஆகும்பே சென்று அங்கிருந்து குந்தாதிரிக்கு வழி கேட்டுக் கேட்டுச் சென்றோம். குந்தாதிரி ஒரு சின்னக் குன்று. ஆனால் மலை உச்சியில் உள்ளது. கார் உச்சிவரை செல்லும். அதன் பின் கொஞ்சம் படிகள். மேலே பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு சமண பஸதி. அது பின்னர் புதுப்பிக்கப்பட்டிருந்தது.ஆழமான இரு நீராழிகள். நீருக்குள் கத்தை கத்தையாக மீன்கள். அந்த மலையுச்சி மேலிருந்து கீழே விரிந்து கிடந்த பிரம்மாண்டமான பச்சை வெளியைப் பார்ப்பது மனதை விரியச்செய்யும் அனுபவம்.
தொலைதூரத்தில் இருந்து மெல்லிய மனிதக்குரல்கள் கேட்டன. மனிதக்குரலில் அப்படி ஒரு ஏக்கமும் மென்மையும் கலக்க முடியுமென நினைத்திருக்கவேயில்லை. சுற்றியுள்ள காடும் காடுநடுவே உள்ள கிராமங்களும் இன்னும் மோட்டார் நாகரீகம் சூடுபிடிக்காதவை என்று தோன்றியது.
குந்தாதிரியில் இருந்து ஹும்பஜ் கிளம்பினோம். மதிய வெயில் ஏற ஆரம்பித்தாலும் காற்று குளிராகவே இருந்தது. இருபக்கமும் வனம். அடர்ந்த மரக்கூட்டங்கள். நடுவே அவ்வப்போது ஒரு ஆறு தலைகாட்டிக்கொண்டே இருந்தது. மதியம் ஒரு மணிக்கு ஹும்பஜ் மடாலயத்தைச் சென்றடைந்தோம்.
கும்ச்சா என்றும் இந்த ஊர் சொல்லப்படுகிறது. ஹம்ஸாவதி என்றும் இந்த ஊருக்குப் பெயர் இருக்கிறது. ஷிமோகா மாவட்டத்தில் உள்ள சின்ன கிராமம் இது. இந்த ஊரின் முக்கியமான அம்சம் இங்குள்ள பத்மாவதி யட்சியின் ஆலயம். பத்மாவதி யட்சி இருபத்து மூன்றாம் தீர்த்தங்கரரான பார்ஸ்வநாதரின் காவல்தேவதை. அந்த ஆலயம் இப்போது புதுப்பிக்கப்பட்டுப் புத்தம்புதியதாக உள்ளது.
இங்கே ஹும்பஜ் மடம் அமைந்துள்ளது. ஹும்பஜ் மடம் மேஷ பாதஷ கச்சா என்னும் பட்டாரகர் மரபைச்சேர்ந்தது. பட்டாரகர் என்ற அமைப்பு சமண மதத்தின் கோயில் அறங்காவலர் மரபாகும். அல்லது மடாதிபதி மரபு என்றும் சொல்லலாம். இவர்கள் காவி ஆடை அணிவார்கள். சமணக் கோயில்களை நிர்வாகம் செய்வார்கள். துறவிகள், ஆனால் முற்றும் துறந்தவர்கள் அல்ல.
கும்ச்சாவின் பட்டாரக பீடம் எட்டாம் நூற்றாண்டு வாக்கில் அமைந்திருக்கலாமென சொல்லப்படுகிறது. இதை சந்தார் வம்சத்தை நிறுவிய ஜினதத்த ராயர் அமைத்திருக்கலாம். 1048ல் மகாமண்டலேஸ்வரர் சந்திரராயர் இந்த மடாலயத்துக்கு நிவந்தங்கள் அளித்திருக்கிறார். அந்தக் கொடை பற்றிய தகவல் பனவாசியில் உள்ளது.
சமண மதத்தின் மிக விரிவான பட்டாரக மரபு என்பது மூலசங்க நந்திசங்க பலார்காரகண சரஸ்வதி கச்சா மரபாகும். இது சுருக்கமாக MNBS எனப்படுகிறது. இதன் பீடங்கள் சூரத், இடார், ஆஜ்மீர், ஜெய்பூர், சித்தூர், நாகூர், குவாலியர், சந்தேரி போன்ற பல ஊர்களில் உள்ளன. இந்த மரபைச்சேர்ந்த பட்டாரகர்கள் பலர் பேரறிஞர்களாகவும் பெரும் ஞானிகளாகவும் இருந்துள்ளார்கள்.
MNBS மரபின் மையம் ஹும்பஜ்தான். இப்போது பட்டாரக தேவேந்திர கீர்த்தி தலைவராக இருக்கிறார். இந்த மரபில் எஞ்சும் ஒரே பட்டாரகர் இவரே. பிற பீடங்கள் அழிந்துவிட்டன. மடாலய வாசலில் தமிழ்நாட்டில் இருந்து வந்த சிலரைச் சந்தித்தோம். விழுப்புரம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்ச்சமணர்கள். தங்களூரில் ஒரு கோடி ரூபாய் செலவில் ஒரு ஜைன ஆலயம், பார்ஸ்வநாதருக்குக் கட்டுவதாகவும், குருவின் ஆசி வாங்குவதற்காக வந்திருப்பதாகவும் சொன்னார்கள்.முழுக்கமுழுக்கத் தமிழ்நாட்டைச்சேர்ந்த தமிழ்ச்சமணரகள்.
மடத்தின் போஜனசாலைக்குச்சென்று சாப்பிட்டோம். வந்ததில் இருந்து நாங்கள் வெளியே சாப்பிடும் முதல் மதியச்சாப்பாடு. சூடான சோறும் சாம்பாரும் மோரும். தொட்டுக்கொள்ள கடலைக்கறி. கூட பரிமாறப்பட்ட சிறுபயறுப்பாயசம் அபாரமான ருசியுடன் இருந்தது. இருமுறை கேட்டு சாப்பிட்டோம்.
பட்டாரகரைச் சந்தித்தோம். இளைஞர், நாற்பது வயதுக்குள் இருக்கும். இப்போதுதான் பதவிக்கு வந்திருக்கிறார் என்றார்கள். அருகே மலைமேல் ஒரு பளிங்குக்கல் பார்ஸ்வநாதர் சிலை இருந்தது. அதைச்சென்று பார்க்கலாம் என்றும் அருகே உள்ள ஐந்து அடுக்கு பஸதியைப் பாக்கலாம் என்றும் சொன்னார். அவரிடம் எங்கள் பயணம் பற்றிச் சொன்னோம், ஆசி அளித்தார்.
மலைமேல் இருந்த பார்ஸ்வநாதர் சிலை இருபதாண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது.கொஞ்சநாள் கைவிடப்பட்டுக் கிடந்து இப்போது செப்பனிடப்பட்டு வருகிறது. சுமாரான சிலை. இருபதடி உயரம் இருக்கும். ஆனால் அருகே தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சமுக பஸதி நாங்கள் இந்தப்பயணத்தில் பார்த்தவற்றிலேயே மகத்தானது. அற்புதமான சிற்பங்கள். கருவறைக்குள் சென்றே சிற்பங்களைப் பார்க்கமுடியும் என்பதனால் பிரமிப்பும் பரவசமும் அதிகரித்தபடியே இருந்தன.
வெளியே சும்மா போட்டு வைக்கப்பட்டிருந்த ஜ்வாலாமாலினி யட்சியின் சிலை முழுமையாக இருந்தது. ஒவ்வொரு துளியிலும் பார்க்கப்பார்க்கத் தீராத நுட்பங்கள் கொண்ட பெரும் கலைப்படைப்பு. அரைமணிநேரம் வரை அந்த ஒரு சிலையையே பார்த்துக்கொண்டிருந்தோம். ஹளபீடு சிலைகளின் பாணியிலான பெரிய மலர்க்கிரீடமும் மணிகள் தொங்கும் சல்லடமும் ஆடைகளும் அணிந்திருந்தாள். நகைகள் பொன்னகைக்கு நிகரான நுட்பத்துடன் கருங்கல்லில் செதுக்கப்பட்டிருந்தன.
கதம்ப வம்சத்து மன்னர்களால் ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிறிய பார்ஸ்வநாதரின் கோயில் ஒன்று வளாகத்தில் பக்கவாட்டில் இருந்தது. ஐந்துமுக பஸதி, 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பின்னர் பல காலங்களிலாக சில கட்டுமானங்கள் கட்டி இணைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு கருவறைக்குள்ளும் சென்று பேருருவத்துடன் அமர்ந்திருந்த தீர்த்தங்கரர்களை அருகே சென்று பார்த்தோம். இருளுக்குள் செல்பேசி வெளிச்சத்தில் பார்த்ததனால் அவை ஒரு கனவுக்குள் இருந்து எழுந்து வருபவை போல் இருந்தன.
மனோவிகாரிகள் என சமண சிற்பவியல் சொல்லும் ஆசாபாசங்களின் தேவதைகளால் சூழப்பட்டு அவர்களின் சபலத்துக்கு ஆளாகாமல் அமர்ந்திருந்த பார்ஸ்வநாதரை நெருங்கி நின்று பார்த்தேன். மனிதன் எட்டக்கூடிய உயரங்களின் சின்னம். மனிதன் என்ற கருத்துருவத்தின் இலட்சிய வடிவம். உடலில் முழுமையான சாமுத்ரிகா இலக்கணம். ஒவ்வொன்றிலும் முழுமை. ஆமாம், மனிதன் தன்னுள் இருக்கும் மனிதம் என்ற ஒன்றை வணங்குவதே தீர்த்தங்கரர் வழிபாடு.
அருகே ஷிமோகாவில் இருந்து எங்கள் நண்பரும் வாசகருமான ரவி காரில் தேடிவந்திருந்தார். பழங்களும் எங்களுக்கெல்லாம் ஆளுக்கொரு கம்பளிப் போர்வையும் வாங்கிவந்திருந்தார். முந்தையநாள் நாங்கள் குளிர் பற்றி எழுதியிருந்ததை வாசித்ததாகச் சொன்னார்.
நாங்கள் செல்ல வேண்டிய இடம் கதக் அருகே உள்ள மூல்கண்ட். அங்கே செல்ல 220 கிமீ தூரம். அதை முடிந்தவரை கடக்க முடிவெடுத்தோம். நல்ல சாலை. இருபக்கமும் காடு. ஒரு இடத்தில் ஒரு செந்நாய் கூட சாலைக்குக் குறுக்கே ஓடியது. மாலை மயங்க ஆரம்பிக்கையில் பிரம்மாண்டமான ஓர் ஏரிக்கரைக்கு வந்தோம். மிகப்பிரம்மாண்டமான ஏரி. லிங்காணமக்கி ஏரி. வீராணம் அளவுக்கிருக்கும். பல கிலோமீட்டர் தொலைவுக்கு நீர் வந்துகொண்டிருந்தது.
ஏரிக்கரையில் இறங்கி நின்று விரிந்த நீர்வெளிக்கு அப்பால் உயரம் குறைந்த மலைகளில் சூரியன் அணைவதைப் பார்த்து நின்றோம். இன்றைய அஸ்தமனம். இன்றைய செவ்வொளிப் பெருக்கு. இன்றைய முழுமை.
இரவில் மீண்டும் தூசிக்கு நடுவே பயணம் செய்து எட்டு மணிக்கு ரானேபென்னூர் என்ற சின்ன ஊரை அடைந்தோம். ஒரு சின்ன விடுதியில் எல்லாருக்கும் ஒரே அறை போட்டோம். ஒருவர் தரையில் படுக்க வேண்டும். குளிர் இருக்குமென்று தோன்றியது.
இதுவரை வந்த நாட்களில் இன்றுதான் சார் கலையனுபவம் உச்சகட்டமாக இருந்தது என்றார் கிருஷ்ணன். ஒவ்வொரு நாளும் மாலையில் ஏதேனும் ஒரு காரணத்தால் அந்த நாள்தான் மகத்தானது என்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
மேலும் …
படங்கள் இங்கே https://picasaweb.google.com/112217755791514676960/JainTripJeyamohanDay4
தொடர்புடைய பதிவுகள்
அருகர்களின் பாதை 5 — ஹங்கல், பனவாசி, லட்சுமேஸ்வர்
அருகர்களின் பாதை 3 — மூடுபிதிரி, வேணூர், கர்க்களா, வரங்கா
அருகர்களின் பாதை 2 — சந்திரகிரி, தர்மஸ்தலா, ரத்னகிரி
அருகர்களின் பாதை 1 — கனககிரி, சிரவண பெலகொலா
பயணத்துக்குக் குழு தேவையா?
மீண்டுமோர் இந்தியப்பயணம்
January 16, 2012
அணுவும் அறிவும் – ஒரு கடிதம்
அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்களது வலைதளத்தை கடந்த சில வாரங்களாகத்தான் படிக்கக் கூடிய வாய்ப்பு அமைந்தது. உங்களது பார்வை பல இடங்களில் மகிழ்ச்சியை அளித்தது. உதாரணம் அன்னா ஹசாரே அவர்களைப் பற்றிய பார்வை. ஞாநியின் எழுத்துக்களையும் படித்திருக்கிறேன். சிலர் சொல்வது போல் அந்த நடிகர்தான் பிடிக்கும் அவர் பிடிக்காது என்றில்லை. நல்ல எழுத்துக்கள் யாரிடமிருந்து வந்தாலும் ரசிக்கும் ஒரு சாமானியன் (நான்). ஆனால் சில காலமாக உங்களைப் போல் எழுத்தாளர்கள் விஞ்ஞானத்துறையிலும் கருத்து சொல்லி வருவது வியப்பைத் தருகிறது. விஞ்ஞானிகள் உங்கள் எழுத்துக்களை விமர்சனம் செய்தால் ஏற்றுக் கொள்வீர்களோ என்னவோ தெரியவில்லை. இலக்கியத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்று கேட்பீர்களா இல்லையா? இந்தக் கேள்விக்கு பதிலளிக்கவும்.
தமிழ் நாட்டில் பொறியியல் துறையில் பயின்ற, பயின்று வருகிற மாணவர்களுக்கு ஏதாவது ஒரு ஆசிரியர் இந்த வார்த்தைகளை அனேகமாக சொல்லியிருப்பார்கள். மாணவர்களே இது கலைக்கல்லூரி அல்ல நீங்களும் கலைக்கல்லூரி மாணவர்கள் அல்ல. அவர்கள் போல் படிக்காமல் இருக்கக் கூடாது , விளையாட்டுத்தனமாய் இருக்கக் கூடாது. இந்த வார்த்தைகளைக் கேட்டு அவர்களை விட நாம் உயர்ந்ததை படிக்கிறோம் என்று எண்ணிக் கொண்ட மாணவர்களில் நானும் ஒருவனாகத்தான் இருந்தேன். பிற்காலத்தில் எந்தப் பாடமும் உயர்ந்ததுமல்ல எந்தப் பாடமும் தாழ்ந்ததுமல்ல என்று உணர்ந்து கொண்டேன். சிறப்பாகப் படிப்பவர்கள் எந்தப் பாடம் என்றாலும் பிரகாசிக்க முடியும்தானே.
என்றாலும் பொறியியலோ, மருத்துவமோ இவர்களில் யாரும் சிறந்த இலக்கியவாதிகளாக அனேகமாக பிரகாசித்ததில்லை. ஒரு சிலர் விதிவிலக்காக இருக்கலாம். இதற்குக் காரணம் இருக்கிறது. ஏனென்றால் இத்துறையில் இருப்பவர்களுக்கு வாசிக்கும் பழக்கம் கொஞ்சம்தான். நிறைய பேர் எழுத்தாளர்களை மதிப்பதில்லை என்பதும் உண்மை. அவர்கள் அப்படி ஆக்கப்பட்டிருகிறார்கள். எதையும் தொழில்நுட்பரீதியாக அணுக அவர்கள் பழக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் துறை சார்ந்த வேலைகள், சுய விருப்பம், பழக்க வழக்கங்கள், நண்பர்கள் போன்ற காரணிகள் அதிகம் புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்புகளைத் தருவதில்லை.
உங்களது கட்டுரையைப் படித்த பொழுது நீங்கள் அணுமின் பற்றி எவ்வளவு படித்தீர்கள் என்று தெரியவில்லை. மிக மேலோட்டமாக எழுதியிருக்கிறீர்கள். அணுமின் விஞ்ஞானிகள் அனைவருக்கும் காற்றாலை, சூரிய சக்தி மற்றும் அனல்மின் நிலையங்களிடம் ஏதோ பங்காளிச் சண்டை இருப்பது போலவும் அவற்றின் அருமைகள் தெரியாமல் அணுமின்சாரத்திற்கு ஆதரவு தெரிவிப்பது போலவும் பல பேர் நினைப்பது போல் நீங்களும் எழுதியது மிகுந்த வருத்தத்தை தந்தது. இன்றைய ஊடகங்களைப் பற்றி நீங்கள் கூறியது போல் கால் பங்கு உண்மைதான் இருக்கும் என்பது போல உங்கள் கருத்துக்களிலும் கால்பங்குதான் உண்மையிருக்கிறது.
நீங்கள் கருத்து கூறுவதைப்பற்றி ஒரு பதிவில் எழுதியிருந்தீர்கள். தெளிவான புரிதல் இன்றி கருத்து கூறுவதில்லை என்று. அணு சக்தியில் என்ன புரிந்து கொண்டீர்கள்? உங்கள் பதிலில் இருந்து நீங்கள் எதையும் புரிந்து கொள்ளவில்லை என்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இப்படி எழுத கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது..
உலகம் அறிவியலையும், அறிவியலாளரையும் ஏன் மிகச் சிறந்த மனிதர்களையும் எப்பொழுதுமே தாமதமாகத்தான் அடையாளம் காண்கிறது. கலிலியோவைம், சாக்ரடீஸையும், கிரிகர் ஜோகன் மென்டலையும் அப்படித்தான். நம்மூர் பாரதியும் விதிவிலக்கல்ல… காற்றாலையும், சூரிய ஒளி மின்சாரமும் மிகச் சிறந்தவை. உங்களை விட மின்துறையில் இருக்கும் அனைவருக்கும் இது தெரியும். இந்தியாவின் மின் தேவையை காற்றாலையோ, சூரிய சக்தியோ, புனல் மின் நிலையமோ கொண்டு சமாளித்து விட்டால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் இவற்றில் ஏதாவது ஒன்றைக் கொண்டு சமாளிக்க முடியுமா என்றால் இவற்றின் பங்கீடு சேர்ந்தே 32 சதவிகிதம் தான். அனல் மின் 65 சதவிகிதம். அணுமின் 2.6 சதவிகிதம்.
இந்தியாவின் அணுமின் வரலாற்றையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதிகமான அறிவியல் கண்டுபிடிப்புக்கள் நிகழ்ந்த 18ம் நூற்றாண்டில் இந்தியர்களின் நிலையோ வேறுமாதிரி இருந்தது. அதனால்தான் மிகப்பெரிய கண்டுபிடிப்புகள் எதையும் இந்தியர்கள் கண்டுபிடிக்கவில்லை என்பதையும் நாம் மற்ற நாடுகளை விட மிகவும் பின்தங்கிய நிலையிலே இன்றும் பயணம் செய்கிறோம் என்பதை உணர்ந்திருப்பீர்கள். 18ம் நூற்றாண்டிற்கு முன்பு வரை இந்தியா எந்த நாட்டிற்கும் எந்த வகையிலும் குறைந்திருக்க வில்லை. நாகரீகமாக இருந்தாலும் சரி, பண்பாடு பழக்க வழக்கம், கல்வி, செல்வம், வீரம், இலக்கியம், மொழி, வானவியல், மருத்துவம் எதுவாக இருந்தாலும் சரி. எத்தனையோ நாடுகள் விடுதலை அடைந்து 50 வருடங்களுக்குப் பின்னால் விடுதலை அடைந்தோம்.
தொழில் நுட்ப விசயங்களில் இன்று வரை நாம் சிறந்த இறக்குமதியாளராகவே இருக்கிறோம். மொபைலாக இருந்தாலும் சரி, கம்ப்யூட்டராக இருந்தாலும் சரி. முன்பெல்லாம் ஒரு தொழில் நுட்பம் மேலை நாடுகளில் வந்து சில ஆண்டுகளுக்குப் பிறகே இந்தியாவிற்கு வரும். இப்போது பரவாயில்லை. ஆப்பிள் ஐபாட் எல்லாம் உடனே கிடைக்கிறது.
இந்தியக் கல்வி முறை ஆங்கிலக் கல்வி முறைக்கு மாறிய பிறகு நம்மால் நல்ல வேலைக்காரர்களைத்தான் உருவாக்க முடிகிறதே தவிர கண்டு பிடிப்பாளர்களை உருவாக்க முடியவில்லை. இதைப் பற்றி உங்களைப் போல சமூகவாதிகள் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. இதைப் பற்றி எழுதியிருந்தால் சொல்லுங்கள். மருத்துவமனைக்கு சென்றிருப்பீர்களல்லவா அங்கிருக்கும் உபகரணங்களெல்லாம் பாதிக்கு மேல் இறக்குமதி செய்யப்பட்டதாகத்தான் இருக்கும். கோயமுத்தூர் சென்று எந்திரங்களைப் பாருங்கள். அங்கும் பாதிக்கும் மேல் இறக்குமதிதான். கார்களை கவனியுங்கள். உங்களைப் போன்றவர்கள் கூட வெளிநாட்டு கார்களைத்தான் வைத்திருப்பீர்கள். இது தான் இன்றைய இந்தியா..
இதே சூழ்நிலையில்தான் அணுமின் தொழில் நுட்பமும் இந்தியாவிற்கு வந்தது. நமது விஞ்ஞானிகள் அதிலிருந்து கற்றுக்கொண்டு சிறிது வளர ஆரம்பித்தார்கள். இதனிடையே ஒரு அணுசோதனையும் நடத்தினார்கள். அவ்வளவுதான். உலக நாடுகள் கைவிரித்தன. ரசியா மட்டும் உதவியது. இந்தியாவில் அப்பொழுது யுரெனியத்தை எரிபொருளாக மாற்ற தொழில் நுட்பம் இல்லை. எரி பொருளுக்காக சார்ந்திருக்க வேண்டியதிருந்தது. நேரு காலத்து நட்பின் காரணமாக ரசியா மட்டும் பக்க பலமாக இருந்தது. உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு பாதுகாவலன் போல் இருந்தது. பெரியண்ணன் அமெரிக்காவை மீறி பலமுறை உதவியது. இந்தியா அணு ஆயுத நாடாக மாறிய பிறகுதான் இந்தியா பற்றிய கண்ணோட்டம் உலக அரங்கில் மாறியது. இதற்கு முன்னாலும் இந்தியா என்றால் பாம்பாட்டிகளும் சாமியார்களும் உள்ள நாடு என்ற கண்ணோட்டத்தை மாற்றியவர் சுவாமி விவேகானந்தர்.
மனிதன் எப்பொழுது நெருப்பை உருவாக்கக் கற்றுக் கொண்டானோ, சக்கரத்தைக் கண்டுபிடித்தானோ அன்றே இயற்கை அன்னையை காயப்படுத்த ஆரம்பித்துவிட்டான். அவன் கண்டு பிடித்த எந்த விஞ்ஞானத்தில் கேடு இல்லை என்று சொல்லுங்கள். தமிழ் நாட்டிலே ஒரு கூட்டம் கள் குடிக்கக் கூடாது ஆனால் சாராயம் குடிக்கலாம் என்கிறார்கள். அது போலத்தான் ஒரு கூட்டம் அணுமின் சக்தியை எதிர்த்து வருகிறது. வேண்டுமானால் பாருங்கள் 100 ஆண்டுகளுக்குப் பிறகு உலகில் பெட்ரோல், டீசல், எரிவாயு, நிலக்கரி எதுவும் இருக்காது அணுமின் சக்தி மட்டுமே இருக்கும். நமது வாரிசுகள் பார்க்கட்டும்.
அப்படியென்ன கதிரியக்கம் கடவுளைவிட சக்திவாய்ந்ததா? கதிரியக்கம் இயற்கையிலே நமக்குக் கிடைக்கிறதே அதற்கென்ன செய்வது? இயற்கையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கதிரியக்க தனிமங்கள் அதிகமாக உள்ளதால் கதிரியக்கம் அதிகமாக உள்ளது. அதற்கென்ன செய்வது? சூரியனிலிருந்தும் நட்சத்திரத்திலிருந்தும் வரும் கதிரியக்கத்தை எப்படி தடுப்பது? கேன்சர் வந்தால் எப்படி குணப்படுத்துவது? ஸ்கேன் எக்ஸ்ரே எப்படி எடுப்பது, இன்னும் எவ்வளவோ?
தினமும் 60 கோடி பேர் செல்போன் பேசுகிறார்கள். அவர்களின் மூளை செல்போன் அலைக்கதிர்களால் பாதிக்கப்படாதா? சிகரெட் குடிப்பவர்கள் எத்தனை கோடி பேர், வாகன புகை எவ்வளவு? காற்றாடியில் மின்சாரம் தயாரிப்பதை நிறுத்தி விட்டோமா என்ன. அதுவும் செயல் படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க 1 மெகாவாட்டிற்கு 3 ஏக்கர் நிலம் தேவைப்படும். இந்தியாவின் மிகப்பெரிய சூரிய மின் ஆலையே 40 மெகாவாட்தான். அதுவும் கூட செயல்படுத்தப்பட்டுதான் வருகிறது.
மின் இழப்பு பற்றியும் சொல்லியிருந்தீர்கள். அவற்றையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. விபரங்களுக்கு மினிஸ்டரி அப் பவர் வெப்சைட் பாருங்கள். 2030 ல் இந்திய மின் தேவை 4 இலட்சம் மெகாவாட். தற்போதைய உற்பத்தி 1 இலட்சத்து 82 ஆயிரம் மெகாவாட்.. தேவை தேராயமாக 2 இலட்சம் மெகாவாட். இந்த அளவை காற்றாடி மட்டுமோ, சூரிய சக்தி மட்டுமோ, அனல் சக்தி மட்டுமோ, நீர் மின்சக்தி மட்டுமோ அல்லது அணு மின்சக்தி மட்டுமோ ஈடு செய்ய முடியாது, இவை அனைத்தையும் பயன்படுத்துவதன் மூலம்தான் தீர்க்க முடியும். இது ஒரு கூட்டு முயற்சி போலத்தான்.
அல்லது திரு உதயகுமார் போன்றவர்களிடம் மின்சக்தி துறையை கொடுத்து விடலாம். அனைவரும் அவருக்கு கீழ் வேலை செய்து மின் பற்றாக்குறையை சமாளிக்கலாம். அணு சக்தி இல்லாமல் இதை சமாளிக்க முடியுமென்றால் பின் அணுமின் தேவை இல்லை என அணு விஞ்ஞானிகளே ஒப்புக்கொள்ள எந்த தயக்கமும் இருக்காது.
பின்குறிப்பு:
அணு உலைகளை நிறுத்த சில வினாடிகளே போதுமென்றால் அவ்வளவு ஆபத்து இருக்கும் அதை 2020 வரை ஏன் இயக்க வேண்டும்? அது வரை மனித உயிருக்கு அங்கு மதிப்பில்லையா அல்லது சாப்பிட்டு முடித்த பிறகுதான் சாப்பிடமாட்டேன் என்பது போல்தானா?. பெப்சி 2020 ல் மூடிவிடுகிறேன் என்றால் சிறுவணிகர்கள் எல்லாம் இன்றே மூடிவிட வேண்டுமா என்ன?
நன்றி.
ஆனந்த்
அன்புள்ள ஆனந்த்,
உங்கள் கடிதம்.
வழக்கமாக இந்திய கல்விநிலையங்களால் உருவாக்கப்படும் 'அறிவியல்' மாணவர்கள் சொல்லும் எல்லா வரிகளையும் கொண்டிருக்கிறது உங்கள் கடிதம் என்றால் வருத்தப்படமாட்டீர்களல்லவா?
உங்கள் கேள்விகளுக்கு சுருக்கமாகவே பதில் சொல்கிறேன்.
ஒன்று, கூடங்குளம் போன்ற ஒரு நிகழ்வு முழுக்கமுழுக்க அறிவியல் விஷயம் அல்ல. அறிவியலாளர்களும் தொழில்நுட்பவாதிகளும் மட்டும் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டிய ஒன்று அல்ல அது. அது ஓர் அறிவியல் கொள்கை என்றால், ஓர் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு என்றால் துறைசாராத பிறருக்கு அதில் பேச ஏதும் இல்லை. இது அப்படி அல்ல.
இது ஓர் அறிவியல் பிரச்சினை என்பதை தாண்டி குறைந்தது மூன்று அடிப்படை விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன என்பதையாவது நீங்கள் கருத்தில்கொள்வீர்கள் என எண்ணுகிறேன்.
ஒன்று, இது லட்சக்கணக்கான சாமானிய மக்களின் வாழ்க்கையை பாதிக்கிறது. அவர்களுடைய பாதுகாப்பு சார்ந்த சிக்கல் இதில் உள்ளது. அவர்களின் இடப்பெயர்வு சார்ந்த சிக்கல் உள்ளது. ஆகவே இது ஒரு சமூகவியல் பிரச்சினை.
இரண்டு, இதில் கோடிக்கணக்கான பணம் செலவிடப்படுகிறது. அது நம்முடைய சமூகத்தின் பொருளியல் உற்பத்தியை பாதிக்கக்கூடியது. ஆகவே இது ஒரு பொருளியல் பிரச்சினை.
மூன்று, இது அரசியல்வாதிகளால் முடிவெடுக்கப்படுகிறது. சர்வதேச உறவுகள் சார்ந்து அவ்வுறவுகள் அமைகின்றன. ஆகவே இது ஓர் அரசியல் பிரச்சினை.
இதில் கருத்து தெரிவிப்பவர்களில் அறிவியலறிஞர்கள் அல்லாதவர்கள் பிற மூன்று தளங்கள் சார்ந்துதான் தங்கள் ஆய்வையும் விவாதத்தையும் நிகழ்த்துகிறார்கள். அறிவியல் தரவுகளுக்கு அவர்கள் அறிவியல் அறிஞர்களின் கருத்துக்களை எடுத்துக்கொள்கிறார்கள்.
நான் கூடங்குளம் குறித்த என் கருத்துக்களையும் இந்த எல்லைக்குள் நின்றே சொல்கிறேன். முதலில் இதை ஒரு சமூகவியல் பிரச்சினையாகவே காண்கிறேன். இந்தியாவின் சமூகம் சார்ந்த அமைப்புகள் எந்தத் துறையிலும் பாதுகாப்பையும் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாத அளவுக்கு ஊழலிலும் பொறுப்பின்மையிலும் ஊறியவை. இங்கே எவரும் எதற்கும் பொறுப்பேற்றுக்கொள்வதில்லை. அதற்கு நூற்றுக்கணக்கான உதாரணங்கள் நம்மிடையே உள்ளன.
மேலும் மக்களின் வாழ்க்கையை பாதிக்கக்கூடிய விஷயங்களை அம்மக்களுக்குத் தெரியாமல், அவர்கள் அனுமதி இல்லாமல் அரசும் அதிகார வர்க்கமும் ஒருதலைப்பட்சமாக தீர்மானிக்கின்றன. இவ்வாறு சர்வாதிகாரமான முடிவுகள் எப்போதும் எங்கும் அழிவையே உருவாக்கியுள்ளன. ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த இயக்கத்தை கருத்தில் கொள்ளாமல் ஒரு தளத்தில் அதிகாரம் மூலம் செய்யப்படும் திருத்தங்கள் அபாயகரமானவை. கூடங்குளம் திட்டத்தின் சூழியல் அழிவுகள், சமூகவியல் அழிவுகள் அது உருவாக்கும் மின்சாரத்தின் லாபத்தைவிட பலமடங்கு அதிகமானவை.
இரண்டாவதாக, இதை ஒரு பொருளியல் பிரச்சினையாகக் கருதுகிறேன். இந்தியாவின் மாற்று எரிபொருள் வாய்ப்புகளுக்கு மிகமிகக் குறைவாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மின் இழப்பு சீர்செய்வதற்கு மிகக்குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தியாவின் புதைஎரிபொருள் வளங்களைக் கண்டுபிடிக்கவும், பயன்படுத்திக்கொள்ளவும் தேவையான ஆராய்ச்சிக்கும் தொழில்நுட்பத்துக்கும் குறைவாகவே பணம் செலவிடப்படுகிறது. ஆனால் கோடானுகோடி ரூபாய் அணு உலைகளுக்காகச் செலவிடப்படுகிறது.
அந்த மாற்று வாய்ப்புகள் முழுக்க ஆராயப்பட்டபின் வேறுவழியில்லாமல் அணு உலைகளை நோக்கி நாம் செல்லவில்லை. அந்த வாய்ப்புகளை எல்லாம் உதாசீனம் செய்துவிட்டு அணு உலைகளை நோக்கி நாம் உந்தப்படுகிறோம். அதற்கான காரணம் அந்த நிதிமுதலீடு நமக்குக் கடனாக சர்வதேச நிதியங்களால் அளிக்கப்படுகிறது என்பதே. அது நம்மை நிரந்தரக் கடனாளிகள் ஆக்குகிறது. வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தை சார்ந்திருக்கும் சவலைகள் ஆக்குகிறது.
இந்த முதலீடு, இதன் வட்டியுடன் சேர்த்துப்பார்த்தால் பெரும் இழப்பையே உருவாக்கும். இது உருவாக்கும் ஆற்றல் மூலம் உருவாகும் பொருளியல் லாபத்தைவிட இந்த முதலீடு அதிகம். இந்தப்பணம் முழுக்க வெளிநாட்டுத் தொழில்நுட்பத்துக்காக நாட்டைவிட்டு வெளியே செல்கிறது. ஆகவே இது ஒரு பொருளியல் பேரிடர்.
இந்த இழப்பு நம் நாட்டுக்கு அரசியல்வாதிகளால் சுயநல நோக்குடன் நிகழ்த்தப்படுகிறது. பெரும்பாலும் சர்வதேச அரசியல் ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாக, மறைமுகமாக இந்த உலைகள் நம் மீது சுமத்தப்படுகின்றன. இந்த ஒப்பந்தங்களின் உண்மையான நோக்கமும் இலக்கும் நமக்கு ஒருபோதும் சொல்லப்படுவதில்லை. ஆகவே இது ஓர் அரசியல் பிரச்சினை.
இந்த ஒவ்வொரு தளத்திலும் நான் சொல்லும் கருத்துக்களுக்கு ஆதாரமாக நான் நூற்றுக்கணக்கான தரவுகளை அளிக்கமுடியும். புள்ளிவிவரங்களைத் திரட்டி முன்வைக்க முடியும். என்னளவில் வாசித்துத் தெளிவுகொண்டபின்னரே அவற்றைச் சொல்கிறேன்.
அறிவியல் சார்ந்து நான் எவற்றையும் சொல்வதில்லை. கூடங்குளத்தின் பாதுகாப்புத் தொழில்நுட்பம் அல்லது கதிரியக்கச் சாத்தியம் எதைப்பற்றியும் நான் ஒரு நிபுணனாக நின்று எதையாவது சொல்லியிருக்கிறேனா என்ன? நான் அறிவியல் சார்ந்து எதையாவது சொல்லியிருந்தால் அது இன்னொரு நம்பத்தகுந்த அறிவியலாளர் சொன்னதை மேற்கோள் காட்டுவதாகவே இருக்கும். கூடங்குளத்தை எதிர்ப்பவர்களில், சூழியலாளர்களில், அணு விஞ்ஞானிகளும் உண்டு என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
நேர்மாறாக, 'கடுமையாக' படித்து அறிவியல் கற்றவர் என உங்களை எண்ணிக்கொள்ளும் நீங்கள் உங்களின் எளிய அறிவியல் தகவல் கல்விக்கு வெளியே எதையும் தெரிந்துகொண்டிருப்பதாகத் தோன்றவில்லை. ஆகவேதான் அபாரமான தன்னம்பிக்கையுடன் கூடங்குளம் பிரச்சினை ஓர் அறிவியல் பிரச்சினை மட்டுமே என்ற எளிய முடிவுக்கு வருகிறீர்கள். நான் இதுவரை எழுதியவற்றை வாசிக்காமல், இந்த விவாதத்தில் பொதுவாக என்ன பேசப்படுகிறது என்பதைப்பற்றியும் தெரிந்துகொள்ளாமல், விசித்திரமான அப்பாவித்தனத்துடன் பேச முன்வருகிறீர்கள்.
இரு விஷயங்களை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன். இந்திய அணு விஞ்ஞானிகள் மாற்று எரிபொருள் பற்றி தெரியாமல், பங்காளிச்சண்டையினால், மாற்று எரிபொருள் திட்டங்களைப் புறக்கணிப்பதாக நான் சொல்லவில்லை. இந்திய அணுமின் திட்டங்கள் அந்த அணுவிஞ்ஞானிகளால் தீட்டப்படுவன அல்ல. அவை அரசியல்வாதிகளால் எடுக்கப்படும் முடிவுகள். சர்வதேச பொருளியல் நிதியங்களால் நம் மீது சுமத்தப்படுபவை. அவற்றில் வேலைபார்க்கும் தொழில்நுட்ப நிபுணர்கள்தான் அணுவிஞ்ஞானிகள். அவர்கள் தொழிலுக்கு என்ன பேசவேண்டுமோ அதை அவர்கள் பேசுகிறார்கள். அப்படிப் பேசாமல் வெளியே வந்து உண்மைகளை உடைத்துப்பேசும் அணுவிஞ்ஞானிகளும் பலர் உண்டு.
இரண்டு, இந்தியா வெறுமே தொழில்நுட்பத் திறனாளிகளை மட்டுமே உருவாக்குகிறது என நான் பலமுறை இந்த தளத்திலேயே எழுதியிருக்கிறேன். அதற்குக் காரணம் நீங்கள் எழுதிய இக்கட்டுரையிலேயே உள்ளது. நீங்கள் நம் கல்விநிலையங்களில் கற்றுக்கொடுக்கப்படும் எளிமையான தொழில்நுட்ப வழிபாட்டு மனநிலையில் நின்று எழுதியிருக்கிறீர்கள். நவீனத் தொழில்நுட்பத்தின் தன்னளவிலான பலன்களை நம்புகிறீர்கள். நவீனத் தொழில்நுட்பம் நவீன சர்வதேச முதலாளித்துவத்துடன் பிரிக்கமுடியாதபடி சம்பந்தப்பட்டது. ஆகவே சர்வதேச அரசியலுடன் சம்பந்தப்பட்டது. அதைப்பற்றிய புரிதல் நம் அறிவியல் மாணவர்களிடம் இருப்பதில்லை, உங்களிடமும் இல்லை.
இவ்வாறு கருத்துக்களை ஒட்டுமொத்தமாக பார்க்காமல், கருத்தியல்களை பார்க்காமல், வெறுமே தொழில்நுட்பத்தை மட்டுமே கற்றுக்கொள்வதனால்தான் நாம் வெறும் தொழில்நுட்பத் தொழிலாளிகளாக மட்டுமே ஆகிக்கொண்டிருக்கிறோம். சிந்தனை நமக்கு கைவராமல் போகிறது.
கூடங்குளத்தை எதிர்ப்பவர்கள் விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். நான் திரும்ப அவற்றைச் சொல்ல விரும்பவில்லை. அவர்கள் எதிர்ப்பது அதன் தொழில்நுட்பத்தை அல்ல. அவர்களின் எதிர்ப்பு சமூகவியல், பொருளியல், அரசியல் தளம் சார்ந்தது. அக்கேள்விகளுக்கு தொழில்நுட்பத்தைக்கொண்டு மட்டும் பதில் சொல்லமுடியாது. அணுவிஞ்ஞானிகளும் பதில் சொல்லி முடிக்கமுடியாது.
எதிர்காலத்தில் அணுமின்சாரமே உலகில் இருக்கும் என நானும் அறிவேன். ஆனால் அது இன்றைப்போல அதிகமான வெப்பத்தையும் கதிரியக்கத்தையும் உருவாக்கும் தொழில்நுட்பமாக இருக்காது. அந்தப் பிரச்சினைகளை தொழில்நுட்பம் தாண்டிச்செல்லும். அப்போது நாமும் அங்கே சென்று சேர்வோம். இன்று காலாவதியான ஆபத்தான உலைகளை நம் தலையில் கட்டும் சர்வதேச நிதியமைப்புகளை நாம் தவிர்க்கலாம். அந்தப் பாதுகாப்பான அணுமின்சாரம் வரும் வரை நம்முடைய சொந்த எரிபொருளைச் சார்ந்து நிற்க முடியுமா என யோசிக்கலாம். தொழில்நுட்பத்தை விற்பவர்களிடமே வட்டிக்கு எடுத்த பணத்தைக்கொண்டு தொழில்நுட்பத்தை வாங்கி நிரந்தரக் கடனாளி ஆவதற்குப்பதிலாக நாமே ஆராய்ச்சியை வளர்த்துக்கொள்ள முடியுமா என்று பார்க்கலாம். இந்த கோடானுகோடி ரூபாயில் ஒரு பகுதியை அதற்குச் செலவிடலாம்.
இந்தியாவில் ஒரு விசேஷமான நிலை உள்ளது. இங்குள்ள அறிவியலாளர்கள் அரசின் உயரதிகாரிகளும் கூட! அதிகார வர்க்கமே அறிவியல்வர்க்கமாகவும் இருக்கிறது. ஆகவே அறிவியலாளர் அதிகாரியின் குரலில் பேசுகிறார். மக்களைப்பற்றி முடிவெடுக்க தனக்கு முழு உரிமை உண்டு என அவர் நம்புகிறார். கூடங்குளம் போன்ற ஒரு திட்டத்தை தாங்களே முடிவெடுத்து மக்கள் மேல் ஏற்றுகிறார்கள். மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கையில் 'அதெல்லாம் நாங்கள் நிபுணர்கள் பார்த்துக்கொள்கிறோம்' என்று பதில் சொல்கிறார்கள்.
எனக்கு இந்த நிபுணர்கள் மேல் நம்பிக்கை இல்லை. கிட்டத்தட்ட ஐம்பது அறுபதுகளில் இந்தியாவில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான அணைத்திட்டங்களுடன் இன்றைய அணு உலைகளை ஒப்பிடலாம். அன்று ராம் மனோகர் லோகியா, ஜெ.சி.குமரப்பா போன்றவர்கள் அணைகள் நீண்ட காலத்தில் உருவாக்கும் அழிவுகளைச் சுட்டிக்காட்டினர். சிறிய கிராமத் தடுப்பணைகள், சிறிய குளங்கள் மூலம் அதைவிட வெற்றிகரமான இழப்புகள் அற்ற பாசன முறையைக் கொண்டு வரலாம் என்று அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். ஆனால் அன்றைய 'நிபுணர்கள்' அவர்களை எள்ளி நகையாடினார்கள். அதிகாரிகள் மக்களை வலுக்கட்டாயமாக குடிபெயரச்செய்து காடுகளை மூர்க்கமாக அழித்து அணைகளை உருவாக்கினார்கள்.
ஐம்பதாண்டுகளை ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டால் அந்த அணைகளின் மூலம் உருவான ஒட்டுமொத்த விவசாய லாபத்தை விட அவை உருவாக்கிய சூழியல் அழிவின் இழப்பு அதிகம் என இன்று கணக்கிடுகிறார்கள். அந்த அழிவு இனிமேல் சரிசெய்யமுடியாதது, நிரந்தரமானது என்று கொண்டால் அந்த நஷ்டக்கணக்குக்கு எல்லையே இல்லை. அதையே கூடங்குளத்திலும் பொருத்திப்பார்க்கலாம்.
விரிவாக இதைச்சார்ந்து பலர் எழுதியிருக்கிறார்கள் . அவற்றை வாசியுங்கள். சில்லறை அறிவியல்தகவல்களுக்கு வெளியே சென்று முழுமையாகக் காண அவை உங்களுக்கு உதவக்கூடும்.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
கூடங்குளமும் கலாமும்
அருகர்களின் பாதை 3 – மூடுபிதிரி, வேணூர், கர்க்களா, வரங்கா
மூடுபிதிரியில் காலை நாலரை மணிக்குத் தூங்கி எழுந்தோம். இங்குள்ள ஆலயங்கள் எல்லாமே இருளில் திறப்பதில்லை. இருந்தாலும் காலையில் மூடுபிதிரியை அறியலாமென்று குளித்துவிட்டு ஒரு நடை கிளம்பினோம். மூலைத்தெருவில் ஒரு கடையில் டீ இருந்தது. நான் இரவில் பழங்கள் மட்டும் சாப்பிடுபவன் என்பதனால் பசித்தது. விடிகாலையிலேயே இட்லி சாப்பிட்டேன். மூடுபிதிரியின் கோயில்களில் கோட்டைச்சுவர்கள் எல்லாமே மண்ணில் இருந்து வெட்டி எடுத்த மண்பாறைகளால் ஆனவை. அவற்றின் மேல் மழைக்காலத்தில் முளைத்த புல் காய்ந்து ஆட்டுத்தாடி போல செம்மறி ஆட்டின் உடல் போலப் பரவியிருந்தது. அந்த செம்பழுப்பு நிறம் மாலை வெயிலில் அற்புதமாக ஒளிவிடக்கூடியது. கோயில்கள் நிறைந்த அந்தத் தெருவில் இருளில் நடந்தோம். பெரும்பாலான கோயில்கள் மூடிக்கிடந்தன என்றாலும் உள்ளே நுழைந்து சுற்றிவந்தோம்.
சமண காசி என்று அழைக்கப்படும் மூடுபிதிரி மூடு, பிதிரி என்ற இரு சொற்கள் கலந்து உருவானது. கிழக்குமூங்கில்நாடு என பொருள்வரும். மூடுவேணுபுரம் என்று கல்வெட்டுக்களில் சொல்லப்படுகின்றன. மூடுபிதிரியில் கிட்டத்தட்ட 300 சமணக்கோயில்கள் உள்ளன. பதினான்காம் நூற்றாண்டு முதல் இருநூறு வருடங்கள் மூடுபிதிரி வளர்ந்துகொண்டே இருந்தது. மூடுபிதிரியில் 18 சமண ஆலயங்கள் முக்கியமானவை. அவற்றில் குருபஸதி, திரிபுவன திலக சூடாமணி பஸதி, அம்மானவார பஸதி ஆகிய மூன்றும் மிகத் தொன்மையானவை. எங்கள் விடுதிக்கு நேர் முன்னால்தான் ஆயிரங்கால் பஸதி. ஆனால் ஏழு மணிக்குத்தான் திறக்கும் என்றார்கள். பதினெட்டு பஸதிகள் வரிசையாக அமைந்த தெருவில் பல பஸதிகள் கிட்டத்தட்டக் கைவிடப்பட்ட நிலையில் இருந்தன. சுற்றிவந்தபோது காய்ந்த புல்லும் தொட்டால்சிணுங்கியும் காலைக்குத்தின. ஆச்சரியமாக குருபஸதி திறந்திருந்தது.
கிபி ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குருபஸதி, சித்தனாத பஸதி என்றும் ஹலே பஸதி [பழைய பஸதி]என்றும் சொல்லப்படுகிறது. இருபத்து மூன்றாம் தீர்த்தங்கரரான பார்ஸ்வநாதருக்கு உரியது இந்தக் கோயில். மூன்றரை மீட்டர் உயரமான அழகிய சிலையாக அவர் கருவறையில் நிற்கிறார். 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அபூர்வமான சமண நூல்களின் ஏடுகள் இந்த ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்டன. அவை தவள கிருதிகள் எனப்படுகின்றன. கோயிலுக்குப் பக்கவாட்டில் ஒரு தனிக்கோயிலில் இருபத்துநான்கு தீர்த்தங்கரர்கள் கன்னங்கரிய பளபளப்புடன் நின்று கொண்டிருந்தார்கள். இருபத்துநான்கு கருப்பு வைரங்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒரு சமணப் பூசாரி கோயிலில் மையமாக இருந்த பார்ஸ்வநாதருக்குப் பூசை செய்துகொண்டிருந்தார். சம்ஸ்கிருதத்தில் துல்லியமான உச்சரிப்புடன் மந்திரத்த்தைச் சொல்லிக்கொண்டிருந்தார். இந்து ஆலயங்களில் பெரும்பாலும் அனுஷ்டிப்பு சந்தத்தில் தான் மந்திரங்களைச் சொல்கிறார்கள். உச்சரிப்பு மழுங்கியதாக இருக்கும். கேரளத்து ஆலயங்களில் அபூர்வமாக நல்ல சம்ஸ்கிருத உச்சரிப்புள்ள பூசைகளைக் கேட்டிருக்கிறேன். ஒருமுறைகூடத் தப்பித்தவறிக்கூட சம்ஸ்கிருதம் அழகாக உச்சரிக்கப்பட்ட ஒரு தருணத்தை சந்தித்ததில்லை. இங்கே சமணர்களின் மந்திரங்களில் சம்ஸ்கிருதம் வேறு உச்சரிப்பில் வேறு சந்தத்தில் [சார்த்தூல விக்ரீடிதம்] கேட்டபோது அந்தக் காலையில் ஒரு மன எழுச்சி ஏற்பட்டது.
குருபஸதியைச்சுற்றி வந்தோம். இருளில் இருந்தது கோயில். கல்லால் ஆன மாபெரும் கோயிலில் செங்கல்லால் ஊடு சுவர்கள் கட்டி சன்னல்கள் வைத்திருந்தார்கள். துவாரபாலகர் சிலைகளுக்குப் பதிலாக இரு ஓவியங்கள். துவாரபாலகர்கள் கையில் சங்கு சக்கர கதாயுதங்களுடன் இருந்தது ஆச்சரியமளித்தது. இக்கோயில்களில் சாதாரணமாகக் கிருஷ்ணன் சிலைகளைத் தூண்களில் காணமுடிவதும் ஆச்சரியமளித்தது. பல்லாண்டுகளுக்கு முன் இங்கே வந்த முதல் சந்தர்ப்பத்திலேயே இதைக் கவனித்திருக்கிறேன், எழுதியிருக்கிறேன். உண்மையில் இந்தியாவில் மிக அபூர்வமாக நிகழ்ந்த மத மோதல்களைத் தவிர்த்து, இந்து மதமும் சமண பௌத்த மதங்களும் சர்வசாதாரணமாக இணைந்தும் கலந்தும்தான் இருந்துள்ளன. குறிப்பாக சமணத்துக்கும் வைணவத்துக்கும் நெருக்கமான உறவுண்டு. இங்கே மதமோதல்களை பூதாகாரப்படுத்தி வரலாறு எழுதும் முற்போக்கு ஆசாமிகள் எங்கும் எப்போதும் இங்கே அன்றும் இன்றும் இருந்துவரும் சமரசத்தை, இணைவைப் பொருட்படுத்தியதே இல்லை. இந்தியா பற்றியும் இந்து மதம் பற்றியும் இவர்கள் உருவாக்கும் முன்முடிவுள்ள சித்தரிப்பை அடியோடு தகர்ப்பவை இவை.
குருபஸதியைத் தாண்டி மூடிக்கிடந்த கோயில்களின் முற்றங்கள் வழியாக நடந்தோம். மாபெரும் அரச மரங்கள் தூங்கி எழுந்து காலையை அள்ளிக்கொண்டிருந்தன. காற்று சிலுசிலுக்கும் இலைகளில் இருந்து சொட்டிய அமைதி மனமெங்கும் நிறைவது போலிருந்தது. இருபதாண்டுக்காலமாக எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது இந்த ஊர். அதே பழைய கட்டிடங்கள். அதே நிறைவும் அமைதியும் பழமையும் சூழ்ந்த தெருக்கள். நூற்றாண்டுக்கு முந்தையதோ என்ற பிரமை எழுப்பும் செந்நிறமான தூசி.
இன்னொரு டீ சாப்பிட்டுவிட்டு பெரிய பஸதி என்றும் ஆயிரங்கால் பஸதி என்றும் அழைக்கப்பட்ட கோயிலுக்குச் சென்றோம். ஒற்றைப்பார்வையில் இது ஒரு மாபெரும் சீன பௌத்த ஆலயம் என்ற எண்ணம் ஏற்படும். மூன்று அடுக்குகள் கொண்ட பகோடா வடிவமான மரமுகடு. அதற்குக் கீழே கருங்கல்லால் ஆன கோயில். இந்த பாணிக் கோயிலை கனராவுக்கு வெளியே காண முடியாது. பெரிய கல்தூண்களுக்கு மேலே கோபுரமில்லாத கற்பலகைக்கூரை. கூரை விளிம்பு சரிவாக மரக்கூரை போலவே நீண்டிருக்கும். உண்மையில் பிரம்மாண்டமான ஒரு மரக்கோயிலை மந்திரத்தால் அப்படியே கல்லால் ஆனதாக மாற்றியதைப்போலிருந்தது அது. ஒரு கோயிலுக்குள் இருந்த பூசாரி அன்பாக வரவேற்று கோயிலைப்பற்றி சொன்னார். நீங்களும் நாங்களும் ஒரே மதம், கிட்டத்தட்ட ஒரே தெய்வம், சின்னச்சின்னவேறுபாடுகள்தான் என்றார். அதை திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தார். நெடுந்தொலைவில் இருந்து நாங்கள் வந்தது அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது.
திரிபுவன சூடாமணி பஸதிதான் இங்கிருக்கும் ஆலயங்களில் பெரியது. கர்நாடகத்தின் சமண ஆலயங்களில் மிக அழகான சிற்ப வேலைப்பாடுகள் கொண்டதும் இதுவே. இது ஆயிரங்கால் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மாபெரும் கல் கோயில் 1430 வாக்கில் கட்டப்பட்டது. இதில் இரண்டரை மீட்டர் உயரமுள்ள சந்திரநாத தீர்த்தங்கரரின் சிலை மையமாக உள்ளது. மூன்றடுக்குள்ள இந்த மாபெரும் கல் கட்டிடம் சமணக் கட்டிடக்கலைக்கு சிறந்த உதாரணமாகச் சொல்லப்படுகிறத. இந்த ஆலயத்தின் திறந்த முகமண்டபம் மிக அழகானது. இதன் தூண்கள் கருங்கல் செதுக்கலின் உச்சகட்ட சாத்தியங்களைக் காட்டுகின்றன, ஒரு தனித்தூணையே ஒரு பெரும் கலைப்படைப்பாகச் சொல்லலாம். சில ஐரோப்பியநாடுகளில் இந்த ஆலயத்தின் ஒரே ஒரு தூண் இருந்தால் அதை அவர்களின் தேசியக் கலைச்சின்னமாகச் சொல்லிப் பெரும் நிகழ்வாக முன்னிறுத்துவார்கள் என்று சொன்னேன்.
பைரவராஜா மன்னரின் மனைவி நாகலாதேவி இந்த ஆலயத்தின் முன்னாலுள்ள மாபெரும் ஒற்றைக்கல் கொடிக்கம்பத்தை உருவாக்கினார். ஐம்பதடி உயரமுள்ளது இது. அவளைப்பற்றிய கல்வெட்டு அதில் உள்ளது சமண ஆலயங்களுக்கு முன்னால் உள்ள ஸ்தம்பங்கள் மிகப்பெரிய ஆச்சரியங்கள். ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்ட இந்தத் தூண்களின் மேலே பெரும்பாலும் ஒரு யட்சனோ யட்சியோ இருப்பார்கள். அடியில் காவல்தேவதை அமர்திருப்ப்பார். யட்சிகளில் மீண்டும் மீண்டும் கூஷ்மாண்டினியும் பத்மாட்சியும்தான் இருக்கிறார்கள்.
மூடுபிதிரி எங்கும் நூற்றுக்கணக்கான சிறிய சமண ஆலயங்கள் உள்ளன. தொடர்ச்சியாக நடந்து நடந்து ஒருவாரம் அலைந்தால்தான் மூடுபிதிரியைப் பார்த்து முடிக்கமுடியும். இங்குள்ள சில சமண ஆலயங்களில் தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளன. பெரும்பாலான ஆலயங்கள் ஷெட்டி என்று இங்கே சொல்லப்பட்ட செட்டி வணிகர்களால் கட்டப்பட்டவை. சோழநாட்டு செட்டிகளும் கட்டியுள்ளனர். சோழ இளவரசி குந்தவையால் கட்டப்பட்ட பஸதி ஒன்றும் உள்ளது. இவையெல்லாம் இன்னும் தமிழக வரலாற்றாசிரியர்களால் ஆராயப்படவில்லை.
காலை எட்டு மணிவாக்கில் கிளம்பி வேணூர் சென்றோம். காலை வெயிலில் சென்று பச்சைப்பசேலென்று சோலைசூழ்ந்த சாலை வழியாகப் பயணம்செய்து வேணூரை அடைந்தோம். வேணூர் ஃபால்குனி என்ற ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இது சமணர்களின் ஆன்மீகத் தலைநகரமாக இருந்துள்ளது. தர்மஸ்தலா வேணூரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த ஊரின் நடுவே உள்ள சமண ஆலயத்திற்குள் 38 அடி உயரமான பாகுபலிசுவாமியின் சிலை உள்ளது. இது 1604ல் அஜில வம்சத்தைச் சேர்ந்த சமண மன்னர் திம்மண்ணாவால் அமைக்கப்பட்டது. இதை அமரசில்பி என அழைக்கப்பட்ட ஜக்கண்ணாச்சாரி செதுக்கினார். வேணூரின் பழைய பெயர் குருப்பூர். இது சமண மடம் அமைந்த ஊர் ஆனதனால் இந்தப்பெயர். இப்போது இங்கே மடம் ஏதும் இல்லை.
அஜில வம்சம் 1154 முதல் 1786 வரை வேணூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டுவந்தது. வேணூரில் அஜில மன்னர்கள் சில சமணக் கோயில்களையும் ஒரு சிவன் கோயிலையும் கட்டியிருக்கிறார்கள். அஜில வம்சத்து மன்னர்களின் சாதனை என்றே இந்த மகத்தான சிலையைச் சொல்லலாம். 2012ல் வேணூர் பாகுபலி தேவருக்கு மகா மஸ்தகாபிஷேகம் நிகழ்கிறது. நானும் வசந்தகுமாரும் 2006இல் சிரவணபெலகொலா கோமதீச்வரருக்கு செய்யப்பட்ட மகா மஸ்தகாபிஷேகத்தைப் பார்த்தோம். அற்புதமான அனுபவம் அது. சிலை கண்ணெதிரே ஒரு பெரும் கனவு போல வண்ணங்கள் மாறிக்கொண்டே இருப்பதை ஒரு கலைநிகழ்வு என்றுதான் சொல்லவேண்டும். மங்களூர் வரை ரயிலில் வந்தால் ஒருமணிநேரத்தில் வேணூர் வர முடியும். வர முயல வேண்டும் என நினைத்துக்கொண்டேன். வேணூர் நாங்கள் வந்தபோதெல்லாம் சிற்றூராக அமைதியில் கிடந்தது. இப்போது கோயிலில் திருப்பணிகள் நிகழ்கின்றன. கோமதீச்வரர் சிலைக்குப்பின்னால் பிரம்மாண்டமான சாரம் அமைக்கும் வேலைகள் நடந்துகொண்டிருந்தன.
வேணூரில் இருந்து கர்க்களா சென்றோம். மதியவெயில் இருந்தாலும் காற்று குளிர்ச்சியாகவே இருந்தது . கர்க்களா ஊருக்கு முன்னாலேயே கர்க்களா ஆலயங்கள் ஆரம்பிக்கின்றன. அது தெரியாமல் சென்ற நாங்கள் சாலையோரமாக ஒரு பெரிய குளத்தின் நடுவே ஒரு கோயில் நின்றதைப்பார்த்து இறங்கிச்சென்றோம். அல்லி மலர்ந்து கிடந்த பிரம்மாண்டமான குளம். நடுவே செல்லப் பாதை இருந்தது. ஓடு வேயப்பட்ட பெரிய பஸதி. அது மூடிக்கிடந்தது. கொஞ்சம் பராமரிப்பில்லாத நிலை. கோயிலில் அமர்ந்து குளத்தைப்பார்த்தபடி அமர்ந்திருந்தபோது அந்த அனுபவம் உண்மையில் நிகழ்கிறதா, இல்லை ஒரு பகற்கனவின் காட்சியா என்று கூட ஐயமாக இருந்தது. வெண்கொக்குகளும் சாம்பல்நிறமான மடையான்களும் குளமெங்கும் பறந்தன. ஒரு பெரிய பருந்து நீரில் இருந்து பாம்பு ஒன்றைக் கவ்விச்சென்றதை நண்பர்கள் கண்டு கூச்சலிட்டார்கள், நான் பார்க்கவில்லை. சமணர்கள் மீன்களைப் பிடிப்பதை அனுமதிப்பதில்லை. ஆகவே குளங்கள் முழுக்கப் பறவைகள். அந்தக் குளத்தின் பெயர் ராமசமுத்திரம். அஜிலமன்னர்களால் உருவாக்கப்பட்டது.
கர்க்களா மூடுபிதிரியில் இருந்து 20 கிமீ தூரத்தில் இருக்கிறது. இது சமணர்களுக்கும் இந்துக்களுக்கும் புனிதமான இடமாகும். பத்தாம் நூற்றாண்டில் இருந்தே இந்த ஊரைப்பற்றிய கல்வெட்டுகளும் இலக்கியச் சான்றுகளும் கிடைக்கின்றன. சமண வரலாற்றில் இது கிபி இரண்டாம் நூற்றாண்டு முதலே குறிப்பிடப்படுகிறது. கர்க்களா என்றால் கரிய கல் என்று பொருள். கரிக்கல்லு என்ற சொல் அப்படி மருவியிருக்கிறது. கிபி இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் தமிழ் இங்கே புழங்கியிருக்கக்கூடும் என்பதற்கான பல ஆதாரங்களில் ஒன்று இது. கர்க்களாவின் முக்கியமான இடங்கள் அருகருகே அமைந்த இரு குன்றுகள். ஒன்றின்மீது பாகுபலி சுவாமியின் சிலை உள்ளது . 42 அடி உயரமான கோமதீச்வரர் சிலை உள்ளது. இதுவும் ஒற்றைக்கல் சிலைதான். கர்நாடகத்தில் சிரவண பெலகொலாவுக்குப் பின்னர் பெரிய சிலை இதுவே. சிரவணபெலகொலாவின் சிலை ஒரு மகத்தான கலைப்படைப்பு. அதன் அழகையும் பரிபூரணத்தையும் வேறு எந்த சிலைகளும் அடைய முடியவில்லை. ஆனால் அதற்கடுத்தபடியாக அழகான சிலை இதுவே.
நாங்கள் செல்லும்போது கோயில் பூட்டியிருந்தது. கல்படிகளில் ஏறிவந்து கம்பி வழியாக சிலையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தோம். அப்போது நாங்கள் ஏறிச்செல்வதைப் பார்த்து பூசாரி ஏறிவந்தார். திறந்து உள்ளே செல்லவைத்தார். சிலையைச் சுற்றிவந்து தரிசித்தோம். பிரம்மாண்டம் கண்ணுக்கும் மனசுக்கும் பழகிவிட்டது. இப்போது பாகுபலி சுவாமி ஒரு ஆழ்மனபிம்பமாக ஆகிவிட்டிருந்தது. கடலூர் சீனு அவரது கனவில் பாகுபலி சிலைகளாக வருகிறது என்று சொன்னார்.
பதினெட்டு சமண ஆலயங்கள் அமைந்துள்ள இடம் கர்க்களா. இந்து ஆலயங்களில் அனந்த பத்மநாபர் ஆலயம் முக்கியமானது. நாங்கள் அந்த ஆலயங்களை எல்லாம் பார்க்க முற்படவில்ல்லை. சமண ஆலயங்களில் சதுர்முகபஸதியை மட்டும் சென்று பார்த்தோம். அது இன்னொரு குன்றின்மேல் உள்ளது. ஒற்றைப்பாறைக்குன்று. பாறைவெட்டுப் படிகள். மேலே பிரம்மாண்டமான பஸதி. நான்குபக்கங்களிலும் ஒரே போன்ற மண்டப முகப்பு. கனமான உயரமான தூண்கள். நான்கு பக்கமும் திறக்கும் நான்கு கருவறைகளில் ஒரு கருவறையில் மூவர் வீதம் பன்னிரண்டு தீர்த்தங்கரர் சிலைகள் நின்ற கோலத்தில். கன்னங்கரிய சலவைக்கல் சிலைகளில் ஒளி பிரதிபலித்தது. ஒரு பெண்மணி மட்டும் அங்கே இருந்தார்கள். அவர்களால் முடிந்த இந்தியிலும் கன்னடத்திலும் எங்களுக்குக் கோயிலைப்பற்றி சொன்னார்கள்.
கிருஷ்ணன் கர்க்களாவிலேயே தங்கலாமென சொன்னார். ஆனால் எங்கள் பயணம் நீண்டது. இந்தியாவே தலைக்குமேல் நிற்பது போல் ஓர் உணர்வு. கிளம்பலாம் என்றேன் நான். ஆகவே வரங்காவுக்கு கிளம்பிச் சென்றோம். வரங்கா, கர்க்களாவைத் தாண்டி உள்ள சின்னஞ்சிறு ஊர். ஆகும்பே என்ற ஊருக்குச் செல்லும் வழியில் பக்கவாட்டில் திரும்பிச் செல்லவேண்டும். இங்கே ஒரு சமண மடம் உள்ளது. இது ஹும்ச்சா சமண மடாலயத்தின் உள்ளூர்க் கிளை. இந்தக் கிளைமடம் ஒரு பழைமையான கட்டிடம். கேரளக் கட்டிடங்களை நினைவுறுத்தியது. ஆனால் மிகத் தொன்மையானது இது. இங்கே கிடைத்துள்ள பன்னிரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று இந்தமடத்தை மிகத்தொன்மையானது என்று குறிப்பிடுகிறது.
ஆச்சாரிய குந்தகுந்தரின் வழிவந்த மூல குந்துகுந்தன்வய கிரனுர்கணா வழி வந்த மேஷ பாதஷ கச்சா மரபைச்சேர்ந்த மடம் இது. இந்த மடம் கிபி நான்காம் நூற்றாண்டு முதலே இங்கிருக்கலாம் என சொல்லப்படுகிறது. மடத்திற்குச்சென்று தங்குமிடம் கேட்டோம். அங்கே ஒரு சமணப் பெண்துறவி, வயதானவர், தங்கியிருப்பதனால் சமணரல்லாதவர் தங்கமுடியாதென்று சொன்னார்கள். வரங்காவை நாளைக்குத்தான் முழுமையாகப் பார்க்கவேண்டும்.
மடத்துக்கு அருகே ஒரு பெரும் ஏரிக்குள் ஒரு பஸதி உள்ளது. உண்மையில் இது ஒரு ஸ்தம்பம். அதன் நான்கு பக்கமும் தீர்த்தங்கரர் சிலைகள். அச்சிலைகளைச் சுற்றி ஒரு பஸதியைக் கட்டியிருக்கிறார்கள். படகில்தான் அங்கே செல்லமுடியும். நீரில் அந்த பஸதி பிரதிபலிப்பதைக் கரையில் நின்று பார்த்தோம். பின்பக்கம் உயரம் குறைந்த மலை, அதில் பசுமையான காடு. நீரில் பாசி நிறைந்திருந்தாலும் மிகத்தெளிந்திருந்தது. சில்லென்ற நீர் என்பது காற்றிலேயே தெரிந்தது. நீர் கொதிப்பதுபோல மீன்கள் அடர்ந்து துள்ளிக்கொப்பளித்தன.
பூசாரிதான் படகுக்காரர். எங்களைக் கோயிலுக்குக் கொண்டு சென்றார். சுற்றிலும் தாமரைக்குளம் கொண்ட ஒரு கோயில் அளிக்கும் அழகியல் நிறைவு சொல்லறச்செய்வது. நிறைய பறவைகள் மறுகரையில் சேற்றில் ஒரு மாநாடு போல அமர்ந்திருந்தன. கோயிலைச்சுற்றி வந்து வணங்கினோம். பூசாரி விரிவாக மந்திரம் சொல்லிப் பூசை செய்தார்.
அவரிடமே இங்கேயே தங்க முடியுமா என்று கேட்டோம். அருகே ராமர்கோயிலில் கூப்பிட்டுச் சொல்கிறேன் என்றார். ராமர்கோயிலுக்குச் சொந்தமான கல்யாணமண்டபத்தில் இலவசமாக இடம் அளிக்க ஏற்பாடு செய்தார். திரும்பி வரும்போது நான், அரங்கா, கிருஷ்ணன், வினோத், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் நீரில் குதித்துப் படகுடன் நீந்தி வந்தோம். நான் அந்த அளவுக்கு நீந்தி பத்துப்பதினைந்து வருடம் இருக்கும் என்று தோன்றியது. கொஞ்சம் மூச்சிளைத்தது. ஆனால் கரை ஏறியபோது புதியதாகப் பிறந்ததாக உணர்ந்தேன்.
கல்யாணமண்டபத்தில் இரவு தங்கல். அங்கே ஒரு சின்ன சாலைச்சந்திப்பு. அங்கே உள்ள இரு ஓட்டல்களில் ஒன்றில் மட்டும் தோசை இருந்தது, ஏழுமணிக்குக் கடை பூட்டிவிடுவோம் என்றார். எல்லாரும் சாப்பிட்டோம். வரங்கா ஒரு சின்ன கிராமம். அந்த மடத்தையும் மூன்று சமணக்கோயில்களையும் சுற்றி அமைந்துள்ள சில வீடுகள். இரவில் அந்த ஏரிக்கரையில் சென்றமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். துல்லியமான வானம் முழுக்க நட்சத்திரங்கள். சட்டென்று மின்சாரம் இல்லாமலானபோது அவை இன்னும் அதிக ஒளி கொண்டன. நட்சத்திரங்களும் மலையும் ஏரியும் கோயிலும் எல்லாமே இருளின் அழுத்த வேறுபாடுகளால் ஆனவையாகக் கண் முன் விரிந்து கிடந்தன. இருள் எவ்வளவு அற்புதமானது என உணரும் தருணமாக இருந்தது. மௌனமாக அங்கே கொஞ்சநேரம் அமர்ந்திருந்தோம்.
கல்யாண மண்டபத்தில் இரவு தங்கினோம். பிரம்மாண்டமான மண்டபக்கூடம். பெட்டிகளை வண்டிமேல் வைத்துக் கட்டிய தார்ப்பாயை விரித்துப் படுத்துக்கொண்டோம். பெரிய குளிர் இல்லை. விடியற்காலையில் குளிரும் என நினைக்கிறேன். இதுவரை இவ்வளவு பெரிய அறை கிடைத்ததில்லை என்று சொன்னேன்.
மேலும் …
தொடர்புடைய பதிவுகள்
அருகர்களின் பாதை 5 — ஹங்கல், பனவாசி, லட்சுமேஸ்வர்
அருகர்களின் பாதை 4 — குந்தாதிரி, ஹும்பஜ்
அருகர்களின் பாதை 2 — சந்திரகிரி, தர்மஸ்தலா, ரத்னகிரி
அருகர்களின் பாதை 1 — கனககிரி, சிரவண பெலகொலா
பயணத்துக்குக் குழு தேவையா?
மீண்டுமோர் இந்தியப்பயணம்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
