Jeyamohan's Blog, page 2253

February 16, 2012

பயணம் – கடிதங்கள்

அன்புள்ள சார்,


களைப்பும் ஆர்வமும் மனநிறைவும் ஒரு சேர்ந்த மனநிலையில் இருப்பீர்கள் என நினைக்கிறன். படங்களையும் கட்டுரைகளையும் வாசிக்கும்போது ஒவ்வொரு இடத்திலிருந்தும் பொக்கிசங்களை எடுத்து நிறைத்து வருகிறீர்கள் என்பது தெரிகிறது. என் பாஷைல சொல்லணும்னா "வயிறு எரியுது சார்".


ஆனாலும் நீங்க சொல்லிதான் இதெல்லாம் பற்றி நான் தெரிந்து கொள்கிறேன், நன்றிங்க. உங்க கட்டுரைகளில் ஒரு அழகு இருக்கும். கட்டுரையின் முடிவில் அதிலுள்ள விசயங்களில் இருந்து மீறிக் கட்டுரையாளன் உன்னத மனதுடைய எழுத்தாளனாக மாறிப் பேசுவது. உதாரணம் சொல்லணும்னா அந்த இந்தியாவின் உப்பு வேலி கட்டுரையில் அந்த ஆசிரியர் [ராய் மாக்ஸ்ஹாம்] சிவபெருமானிடம் வேண்டும் பாரா, இந்த அம்சம் இப்ப உங்க பயணக் கட்டுரைகளிலும் காண்கிறேன்.


அன்புடன்,


ராதாகிருஷ்ணன்


அன்புள்ள ராதாகிருஷ்ணன்,


புனைவு எழுத்து என்பது ஆசிரியனின் அகம் வெளிப்படும் இடம். பயணக்கட்டுரையில் தன்னிச்சையாக ஆங்காங்கேதான் அது வெளிப்பட முடியும். அத்தகைய இடம் ஒன்றை அழகாக சுட்டிக்காட்டியிருந்தீர்கள்.


நன்றி

ஜெ



அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,


உங்களின் கோடான கோடி வாசகிகளில் ஒருத்தியான திருமதி. கவிதா அன்பரசன் எழுதிகொள்வது. ஆங்கிலத்தில் எழுத நினைத்து, எங்கே முழுமையான உணர்வினை வெளிப்படுத்த முடியாதோ என்ற எண்ணத்தில் தமிழில் எழுதியுள்ளேன். பிழை இருப்பின் பொறுத்தருளவும்.


நீங்கள் ஒரு பதிவரின் வசைபாடலின் மூலமே எனக்கு அறிமுகமானீர்கள். அவரின் வசைபாடலைப் படித்த பிறகு உங்களை இணையத்தில் தேடி உங்களின் இணையதளத்தில் வந்து சேர்ந்தேன்.


உங்களின் எழுத்துக்களின் ஆழம் மற்றும் வலிமை பிடிக்கும். (உங்களின் எல்லாக் கருத்துக்களுடனும் நான் ஒத்துப் போவதில்லையானாலும்) இந்து மதத்தை, தேசபிதாவை, இந்தியாவை நான் சரியாகப் புரிந்துகொள்ள நீங்கள் உதவினீர்கள். அதிலும் தொன்மையான இந்திய வரலாற்றினை அறிந்துகொள்ள மிக ஆர்வம். தொல்பொருள் ஆராய்ச்சி நூல்களின் வழி படிப்பதைக் காட்டிலும் கல்கி, பாலசுப்ரமணியன், சாண்டில்யன் கதைகளின் மூலம் படிக்கவே விருப்பம்.


எனக்குப் பயணங்கள் பிடித்தமானவை. ஆங்கில ஆசிரியரான எனது தந்தை 90-களில் ஆரம்பித்து அவர் இறக்கும் வரையிலும் வருடத்திற்கு ஒருமுறையாவது வாடகை வண்டி வைத்தோ அல்லது பேருந்துகளிலோ தென் இந்தியாவின் நான்கு மாநிலங்களுக்கும் எங்களை அழைத்துச் சென்றதினாலோ என்னவோ பயணக்கட்டுரைகள் எனக்குப் படிக்க மிகவும் பிடிக்கும். உங்களின் 'இந்தியப் பயணங்கள்', 'அருகர்களின் பாதை' படிக்கும்போது எனக்கு உங்கள் குழுவின் மீது மிகப் பொறாமையாக இருந்தது. உங்களின் கண்களின் வழியாகவும், இதயத்தின் வழியாகவும் இந்தியாவை எனக்குக் காண்பித்தமைக்கு மிக்க நன்றி.


நீங்கள் இப்படிக் காடு கரையெல்லாம் சுற்ற சம்மதித்து, நீங்கள் அருகில் இல்லாத காலத்தில் குடும்பத்தை நடத்தவும், குழந்தைகளைப் பார்த்துகொள்ளவும் தேவையான அதிகப்படியான உழைப்பைக் கொடுத்து ஒத்துழைத்த உங்களின் மனைவிக்கும் எனது நன்றி.


உங்களின் எழுத்துப்பணி இடையறாது நடக்க எல்லாம் வல்ல இறைவன் துணையிருக்க வேண்டுகிறேன்.


திருமதி. கவிதா அன்பரசன்


அன்புள்ள கவிதா,


நன்றி.


என் எழுத்துக்களை வாசிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வழக்கமாக வாசிக்கும் கதைகளைப்போல அல்லாமல் கொஞ்சம் மேலதிக கவனத்துடன் வாசிக்க வேண்டிய கதைகள், கட்டுரைகள் அவை. ஆனால் தொடர்ந்து வாசித்தீர்கள் என்றால் எளிதில் என்னுடைய படைப்புலகில் நுழைந்துவிடமுடியும். அது கண்டிப்பாக உங்கள் வாசிப்புலகை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லக்கூடியதாகவே இருக்கும். தொடர்ந்து வாசியுங்கள். எழுதுங்கள்.


அன்புடன்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

இந்தியா ஆபத்தான நாடா?
அருகர்களின் பாதை — கடிதங்கள்
வீட்டில்
அருகர்களின் பாதை 30 — நீண்ட பயணம்
அருகர்களின் பாதை 29 — ஜாலார்பதான்
அருகர்களின் பாதை 28 — சவாய்மாதோப்பூர், ரண்தம்போர்
பார்பாரிகா
அருகர்களின் பாதை 27 — சங்கானீர், ஜெய்ப்பூர்
அருகர்களின் பாதை 26 — பிக்கானீர்
அருகர்களின் பாதை 25 — லொதுர்வா, ஜெய்சால்மர்
ரணக்பூர் காணொளி
அருகர்களின் பாதை 24 — ஜெய்சால்மர், சாம் மணல் திட்டு
அருகர்களின் பாதை 23 — ரணக்பூர், கும்பல்கர்
அருகர்களின் பாதை 22 – மிர்பூர், உதய்புர்-நகடா
பயணம்- கடிதங்கள்
அருகர்களின் பாதை 21 — அசல்கர், தில்வாரா
திருப்பான்மலை, ஊரணித்தாங்கல், நெகநூர்ப்பட்டி
அருகர்களின் பாதை 20 — தரங்கா, கும்பாரியா
அருகர்களின் பாதை 19 — படான், மேஹ்சானா, மோதேரா
அருகர்களின் பாதை 18 — டோலாவீரா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 16, 2012 10:33

பயணம்-கடிதங்கள்

அன்புள்ள சார்,


களைப்பும் ஆர்வமும் மனநிறைவும் ஒரு சேர்ந்த மனநிலையில் இருப்பீர்கள் என நினைக்கிறன். படங்களையும் கட்டுரைகளையும் வாசிக்கும்போது ஒவ்வொரு இடத்திலிருந்தும் பொக்கிசங்களை எடுத்து நிறைத்து வருகிறீர்கள் என்பது தெரிகிறது. என் பாஷைல சொல்லணும்னா "வயிறு எரியுது சார்".


ஆனாலும் நீங்க சொல்லிதான் இதெல்லாம் பற்றி நான் தெரிந்து கொள்கிறேன், நன்றிங்க. உங்க கட்டுரைகளில் ஒரு அழகு இருக்கும். கட்டுரையின் முடிவில் அதிலுள்ள விசயங்களில் இருந்து மீறிக் கட்டுரையாளன் உன்னத மனதுடைய எழுத்தாளனாக மாறிப் பேசுவது. உதாரணம் சொல்லணும்னா அந்த இந்தியாவின் உப்பு வேலி கட்டுரையில் அந்த ஆசிரியர் [ராய் மாக்ஸ்ஹாம்] சிவபெருமானிடம் வேண்டும் பாரா, இந்த அம்சம் இப்ப உங்க பயணக் கட்டுரைகளிலும் காண்கிறேன்.


அன்புடன்,


ராதாகிருஷ்ணன்


அன்புள்ள ராதாகிருஷ்ணன்,


புனைவு எழுத்து என்பது ஆசிரியனின் அகம் வெளிப்படும் இடம். பயணக்கட்டுரையில் தன்னிச்சையாக ஆங்காங்கேதான் அது வெளிப்பட முடியும். அத்தகைய இடம் ஒன்றை அழகாக சுட்டிக்காட்டியிருந்தீர்கள்.


நன்றி

ஜெ



அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,


உங்களின் கோடான கோடி வாசகிகளில் ஒருத்தியான திருமதி. கவிதா அன்பரசன் எழுதிகொள்வது. ஆங்கிலத்தில் எழுத நினைத்து, எங்கே முழுமையான உணர்வினை வெளிப்படுத்த முடியாதோ என்ற எண்ணத்தில் தமிழில் எழுதியுள்ளேன். பிழை இருப்பின் பொறுத்தருளவும்.


நீங்கள் ஒரு பதிவரின் வசைபாடலின் மூலமே எனக்கு அறிமுகமானீர்கள். அவரின் வசைபாடலைப் படித்த பிறகு உங்களை இணையத்தில் தேடி உங்களின் இணையதளத்தில் வந்து சேர்ந்தேன்.


உங்களின் எழுத்துக்களின் ஆழம் மற்றும் வலிமை பிடிக்கும். (உங்களின் எல்லாக் கருத்துக்களுடனும் நான் ஒத்துப் போவதில்லையானாலும்) இந்து மதத்தை, தேசபிதாவை, இந்தியாவை நான் சரியாகப் புரிந்துகொள்ள நீங்கள் உதவினீர்கள். அதிலும் தொன்மையான இந்திய வரலாற்றினை அறிந்துகொள்ள மிக ஆர்வம். தொல்பொருள் ஆராய்ச்சி நூல்களின் வழி படிப்பதைக் காட்டிலும் கல்கி, பாலசுப்ரமணியன், சாண்டில்யன் கதைகளின் மூலம் படிக்கவே விருப்பம்.


எனக்குப் பயணங்கள் பிடித்தமானவை. ஆங்கில ஆசிரியரான எனது தந்தை 90-களில் ஆரம்பித்து அவர் இறக்கும் வரையிலும் வருடத்திற்கு ஒருமுறையாவது வாடகை வண்டி வைத்தோ அல்லது பேருந்துகளிலோ தென் இந்தியாவின் நான்கு மாநிலங்களுக்கும் எங்களை அழைத்துச் சென்றதினாலோ என்னவோ பயணக்கட்டுரைகள் எனக்குப் படிக்க மிகவும் பிடிக்கும். உங்களின் 'இந்தியப் பயணங்கள்', 'அருகர்களின் பாதை' படிக்கும்போது எனக்கு உங்கள் குழுவின் மீது மிகப் பொறாமையாக இருந்தது. உங்களின் கண்களின் வழியாகவும், இதயத்தின் வழியாகவும் இந்தியாவை எனக்குக் காண்பித்தமைக்கு மிக்க நன்றி.


நீங்கள் இப்படிக் காடு கரையெல்லாம் சுற்ற சம்மதித்து, நீங்கள் அருகில் இல்லாத காலத்தில் குடும்பத்தை நடத்தவும், குழந்தைகளைப் பார்த்துகொள்ளவும் தேவையான அதிகப்படியான உழைப்பைக் கொடுத்து ஒத்துழைத்த உங்களின் மனைவிக்கும் எனது நன்றி.


உங்களின் எழுத்துப்பணி இடையறாது நடக்க எல்லாம் வல்ல இறைவன் துணையிருக்க வேண்டுகிறேன்.


திருமதி. கவிதா அன்பரசன்


அன்புள்ள கவிதா,


நன்றி.


என் எழுத்துக்களை வாசிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வழக்கமாக வாசிக்கும் கதைகளைப்போல அல்லாமல் கொஞ்சம் மேலதிக கவனத்துடன் வாசிக்க வேண்டிய கதைகள், கட்டுரைகள் அவை. ஆனால் தொடர்ந்து வாசித்தீர்கள் என்றால் எளிதில் என்னுடைய படைப்புலகில் நுழைந்துவிடமுடியும். அது கண்டிப்பாக உங்கள் வாசிப்புலகை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லக்கூடியதாகவே இருக்கும். தொடர்ந்து வாசியுங்கள். எழுதுங்கள்.


அன்புடன்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

இந்தியா ஆபத்தான நாடா?
அருகர்களின் பாதை — கடிதங்கள்
வீட்டில்
அருகர்களின் பாதை 30 — நீண்ட பயணம்
அருகர்களின் பாதை 29 — ஜாலார்பதான்
அருகர்களின் பாதை 28 — சவாய்மாதோப்பூர், ரண்தம்போர்
பார்பாரிகா
அருகர்களின் பாதை 27 — சங்கானீர், ஜெய்ப்பூர்
அருகர்களின் பாதை 26 — பிக்கானீர்
அருகர்களின் பாதை 25 — லொதுர்வா, ஜெய்சால்மர்
ரணக்பூர் காணொளி
அருகர்களின் பாதை 24 — ஜெய்சால்மர், சாம் மணல் திட்டு
அருகர்களின் பாதை 23 — ரணக்பூர், கும்பல்கர்
அருகர்களின் பாதை 22 – மிர்பூர், உதய்புர்-நகடா
பயணம்- கடிதங்கள்
அருகர்களின் பாதை 21 — அசல்கர், தில்வாரா
திருப்பான்மலை, ஊரணித்தாங்கல், நெகநூர்ப்பட்டி
அருகர்களின் பாதை 20 — தரங்கா, கும்பாரியா
அருகர்களின் பாதை 19 — படான், மேஹ்சானா, மோதேரா
அருகர்களின் பாதை 18 — டோலாவீரா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 16, 2012 10:33

ஜடாயு இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெ,


நீங்கள் சொல்வது சரிதான். நம் மரபில், பண்பாட்டில் உள்ள பிரச்சினை அது என்பதை ஒத்துக் கொள்கிறேன்.


ஆனால், வரலாற்றெழுத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும், தூண்டுதலையும், சுவாரஸ்யத்தையும் முதலில் மாணவர்கள் மனதில் உருவாக்க வேண்டுமே. இப்போதுள்ள பாடத்திட்டம் அதைச் செய்வதில் கடும் தோல்வியையே அடைகிறது. மிக மோசமாக எழுதப்பட்ட சலிப்பூட்டும் வரலாற்றுப் பாடங்கள் மாணவர்கள் வரலாற்றைக் கண்டு அஞ்சி ஓடவைக்கின்றன.


அந்த ஆர்வத்தை உருவாக்கும் முகமாகவாவது அமர் சித்திரக் கதைகளைப் பாடத்திட்டத்தில் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். இதிகாசம்/புராணம் குறித்த கதைகளைக் கூட ஆதாரபூர்வமாக ஆய்வு செய்த பின்னரே அமர் சித்திரக் கதைகளை உருவாக்கிய மறைந்த அனந்த் பாய் அவர்கள் வெளியிட்டார். வரலாறு குறித்த புத்தகங்களை இன்னும் கறாராகவே கண்காணித்து செய்திருக்கிறார்கள். ஒரு sample ஆக சுப்பிரமணிய பாரதி, பாபாசாகேப் அம்பேத்கர் குறித்த புத்தகங்களைப் பார்த்தாலே தெரியும்.


அன்புடன்,

ஜடாயு


அன்புள்ள ஜெ,


உங்கள் பயணத்தின்போது ஒவ்வொரு இடத்திலும் சுல்தானிய ஆட்சியில் உடைக்கப்பட்ட கோயில்களைப் பற்றி சொல்லிக் கொன்டே வந்தீர்கள்.


இந்தச் செய்தியைப் பாருங்கள். அருங்காட்சியகத்துக்குள் இருந்த புராதன இந்து, பௌத்த சிலைகள் அனைத்தையும் கூட அடித்து நொறுக்கி விட்டார்களாம்.. 99% காலி என்கிறார் அருங்காட்சியகக் காப்பாளர்.


ஒரு உல்லாச சுற்றுலாத் தலமாக மட்டுமே இந்தியர்களால் கருதப்பட்டுவந்த இந்த சின்னத் தீவில் இஸ்லாமிய மதவெறி வளர்ந்து எவ்வளவு மோசமான பரிமாணத்தை எட்டியுள்ளது என்று நினைக்க அதிர்ச்சி ஏற்படுகிறது. பக்கத்தில் இவ்வளவு பெரிய நாடான இந்தியா உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. வேதனை.


அன்புடன்,

ஜடாயு


http://www.cbsnews.com/8301-501843_16...

தொடர்புடைய பதிவுகள்

வரலாறும் கதையும்
யானைடாக்டர்-படங்கள்
யானைடாக்டர் [சிறுகதை] -1
விவேக் ஷன்பேக் சிறுகதை 3
விவேக் ஷன்பேக் சிறுகதை- 2
சிறுகதை, விவேக் ஷன்பேக்
வாசிப்பில் நுழைதல்
திருவையாறு, மேலும் கடிதங்கள்
குஷ்புகுளித்த குளம்: கடிதங்கள்
கீதை எதற்காக?
''என்ன சேறது மாமி, அது அப்டித்தான்!''
"என்ன சேறது மாமி, அது அப்டித்தான்!"
மதம்,ஆன்மீகம்,அவதூறு:ஒரு கடிதம்
நூல்கள்
'நான் எழுதலாமா?' ஒரு கடிதம்
சிறுகதை ஒரு சமையல்குறிப்பு
ஒரு கனவின் கதை
புதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று…
பப்படம்
அறிமுகம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 16, 2012 10:30

February 15, 2012

சீனு – ஒரு குறிப்பு

எழுத்தாளரை மட்டுமல்லாது, அவர் தொடரும் கேள்விகளையெல்லாம் தானும் தாங்கியபடி அவர் கூடவே எழுத்து மூலம் இயைந்து பயணிப்பவர்கள் கிட்டத்தட்ட எழுத்தாளருக்கு இணையானவர்களாக இருப்பர். அது தவிர, கூர்மையான பார்வை உள்ளவர்கள், விசாலமான வாசிப்பு கூடியவர்களால் எழுத்தாளர்கள் விடும் இடைவெளிகளைப் பல தளங்களுக்கு எடுத்துச் செல்லமுடியும். இவற்றுக்குக் கடலூர் சீனுவின் கடிதங்கள் மிகச் சரியான உதாரணம்.


கிரிதரன் கட்டுரை

தொடர்புடைய பதிவுகள்

சீனு — கடிதங்கள்
காலத்துயர் — கடலூர் சீனு
ஊட்டியிலிருந்து கொண்டுவந்தவை — கடலூர் சீனு
மேலான உண்மை — சீனு கடிதம்
பாண்டிச்சேரியில் — கடலூர் சீனு கடிதம்
ஞானமும் மெய்ஞானமும்- சீனு கடிதம்
தாய் எனும் நிலை — சீனு
அறிதலுக்கு வெளியே-சீனு
பெருங்காடும் நான் மேய்ந்த நுனிப்புல்லும் — சீனு
தெருவெங்கும் தெய்வங்கள்- கடலூர் சீனு
சீனு — கடிதங்கள்
சீனு-கடிதங்கள்
அன்பை வாங்கிக்கொள்ளுதல்…[கடலூர் சீனு]
அன்புள்ள ஜெயமோகன் — ஒரு நூல்
ஓர் இணைமனம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 15, 2012 10:30

இந்தியா ஆபத்தான நாடா?


அன்புள்ள ஜெமோ,


முதலிலே சொல்லி விடுகிறேன், நீங்கள் நலமுடன் வீடு திரும்பியதற்குக் கடவுளுக்கு நன்றி. இக்கடிதம் உங்கள் மேல் அன்பு கொண்ட வாசகனாக எழுதியத. உங்களின் பயணக்கட்டுரை அருமையிலும் அருமை. ஆனால் படிக்கும்போது மனம் மிகவும் பதட்டத்திற்கு உள்ளானது. ஆபத்தான இந்த தேசத்தில் நீங்கள் இப்படிப் போவது உசிதம்தானா என்று நீங்கள் யோசிக்க வேண்டும்.


மிக மோசமான விபத்துக்கள் நடக்கும் நெடுஞ்சாலைகள், மிக மோசமான வேகத்தில் பறக்கும் கனரக வண்டிகள் மட்டுமில்லாமல், எங்கும் கூட்டம் சேர்த்து கொள்ளை அடிக்கும் கும்பல்கள் ஏராளம். நீங்கள் பெயர் தெரியாத இடத்தில் சாப்பிட்டேன் என்று எழுதும்போது உண்மையிலேயே மனம் பதட்டம் அடைகிறது. இப்படி சாப்பிடுவது, இப்படி நெடுஞ்சாலையில் போவது மிகவும் ஆபத்தான காரியமாகவே படுகிறது. நீங்களும் உங்கள் கூட வருபவர்களும் எப்படி பயமில்லாமல் இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.


சில Developed Nations எனக்கூறப்படும் நாடுகளில் இது சாத்தியமாக இருக்கலாம், ஆனால் இந்தியா போன்ற ஒரு மூன்றாம் உலக நாட்டில் இப்படிப் பயணம் செய்வது மிக மிக ஆபத்தானது என்றே தோன்றுகிறது. உங்களுக்குத் தெரியாதது இல்லை. நான் கூறுவதை நீங்கள் Right Sense இல் எடுத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன்.


நீங்கள் தமிழகத்தின், தமிழ் இலக்கியத்தின் சொத்து.  இனிமேல் இப்படிப் பயணம் போகாதீர்கள். அல்லது போனால் மிக மிகப் பாதுகாப்பாக (விமானம்/ரயில்) செல்லுங்கள். இது ஒரு அபத்தக் கடிதமாகத் தோன்றலாம், உங்கள் மேல் இருக்கும் பேரன்பினால் சொல்வது.


என் மனதில் தோன்றிய பயமும், உங்கள் மேல் உள்ள அன்புமே இக்கடிதத்தை எழுதத் தூண்டியது. தவறிருப்பின் மன்னிக்கவும்.


தங்கள் மேல் பேரன்பு கொண்டுள்ள வாசகன்,

கோகுல்


அன்புள்ள கோகுல்,


இந்தியாவைப்பற்றிய பொதுவான மனப்பதிவில் இருந்து இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறீர்கள். எங்கள் பயணம் பற்றிய கட்டுரைகளிலேயே நேர்மாறான அனுபவப்பதிவுகள் இருப்பதைக் கண்டிருக்கலாம்.


இந்தியா 'ஆபத்தான தேசம்' அல்ல. அது நம் ஊடகங்கள், [குறிப்பாக இந்திய விரோத மனநிலை கொண்ட ஆங்கில இதழ்கள்] உருவாக்கும் பிரமை. மக்கள்தொகை, நிலப்பரப்பு அடிப்படையில் பார்த்தால் உலகிலேயே குற்றங்கள் மிகக்குறைந்த நாடுகளில் ஒன்று இந்தியா. இங்குள்ள காவல் அமைப்பு மிகப்பலவீனமானது என்பது உண்மை. ஆனால் இந்தியாவில் எந்த இடமும் பாதுகாப்பானதே. இந்தியாவெங்கும் பயணித்தபடி இருப்பவன் என்ற முறையில் இது என் அனுபவம்.


காரணம் இங்குள்ள மக்களின் மனநிலைதான். எந்தச்சூழலிலும் எவருக்கும் மனம்திறந்து உதவத் தயாரானவர்கள் இந்தியாவின் எளிய மக்கள். சமணர்களும் இஸ்லாமியர்களும் இந்துக்களும் இதில் விதிவிலக்கல்ல. எந்த இடத்திலும் புன்னகைக்கும் முகங்களை, உபசரிப்புகளை மட்டுமே இங்கே காணமுடியும். நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் உதவுவதற்காக மக்கள் முண்டியடித்து வந்தார்கள். முன்பின் தெரியாதவர்கள்கூட டீ சாப்பிட்டுச்செல்ல உபசரித்தார்கள்.


இந்த மனநிலை ஒருவகையில் பழைமையானது, பழங்குடி வாழ்க்கையில் வேர்கள் கொண்டது. வரும் எவரும் விருந்தினரே என்ற மனநிலை இது. பழங்குடி அம்சம் மாறாமலிருக்கும் எந்த நாட்டிலும் இந்த மனநிலை இருக்கும். அ.முத்துலிங்கம் ஒருமுறை அரேபியப் பாலைவனநாடுகளைப்பற்றிச் சொல்லும்போது அந்த கிராமங்களில் முழுக்கமுழுக்க பாதுகாப்பானவர், முற்றிலும் வசதியாக இருப்பவர், அங்கே வந்த அன்னியரே என்று சொன்னார். எங்கே நவீனத்துவம் வந்து சுயநலம் மேலோங்குகிறதோ அந்த இடம்தான் பாதுகாப்பற்றது. நம் நகரங்கள் அப்படிப்பட்டவை.


அவ்வகையில் இந்தியாவிலேயே பாதுகாப்பற்ற மாநிலம் படித்தவர்கள் அதிகமாக உள்ள கேரளம்தான். எங்கும் எப்போதும் வேலைநிறுத்தம் வெடிக்கலாம். சாலைப்போக்குவரத்து துண்டிக்கப்படலாம். தனித்து விடப்படும் பயணிகளுக்கு எவருமே உதவ மாட்டார்கள். எந்த அரசமைப்பிலும் பொறுப்பாக பதில் கூடக் கிடைக்காது. கேரளத்தில் அன்னியர்கள் சுரண்டப்படவேண்டியவர்கள் மட்டுமே. ஆகவே எவராலும் நாம் ஏமாற்றப்படலாம். காவலர்களும் வாகனஓட்டிகளும் சாதாரணப் பொதுமக்களும் அலட்சியமாகவும் முரட்டுத்தனமாகவும்தான் எதிர்வினையாற்றுவார்கள்.


கேரளம் அளவுக்கு இல்லையென்றாலும் தமிழகமும் அன்னியர்களுக்கு சிக்கலான மாநிலம்தான். குறிப்பாக வாகன ஓட்டிகள், தங்குமிட ஊழியர்கள், தனித்த வனப்பகுதிகள் போன்ற இடங்களில் உள்ள சிறு அரசூழியர்கள், காவல்துறையினர் போன்றவர்கள் நம்பக்கூடாதவர்கள். தமிழகத்தில் சுற்றுலாமையங்களில் பயணிகள் கிண்டல்செய்யப்படுவதும் சீண்டப்படுவதும் சாதாரணம். அதை இந்தியாவில் வேறெங்கும் காணமுடியாது.


வளர்ந்தநாடுகள் சிலவற்றில் நான் பயணம் செய்திருக்கிறேன். அங்கே அரசுசார் அமைப்புகளின் உதவி எந்நேரமும் உண்டு என்பது உண்மை. ஆனால் மக்கள் பொதுவாக நட்பற்றவர்கள், இயந்திரத்தனமானவர்கள், இனநோக்கு கொண்டவர்கள். என் அனுபவத்தில் அமெரிக்கா இதில் மிக மோசம். அமெரிக்கா, அடிப்படையில் இனவாதிகளின் நாடு என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருந்தபடியே இருந்தது.


தனித்த பயணங்கள் அமெரிக்காவில் ஆபத்தானவை. அதை ஓர் அமெரிக்கக் காவலரே ரயிலில் என்னிடம் சொன்னார். ரயிலில் ஒரு பெட்டியில் நான் மட்டும் தனித்துப் பயணித்தேன். ஆப்ரிக்க அமெரிக்கர்களின் ஒரு குழு உள்ளே வந்தது. ஒரு காவலர் உடனே உள்ளே ஏறி என்னை வேறு பெட்டிக்குச் செல்லும்படி மெல்லிய குரலில் எச்சரித்தார். அமெரிக்கா எங்கும் பொது இடங்களில் குற்றங்களுக்கான வாய்ப்பு அதிகம். அங்கே குற்ற விகிதம் நம்மைவிடப் பல மடங்கு. உயிராபத்து காரணமாகச் செல்ல முடியாத இடங்கள்கூடப் பல உண்டு. தனித்த வேளைகளில் எந்த வெள்ளையரும் எனக்கு உதவவில்லை.அங்குள்ள காவலர்கள் எந்திரத்தனமானவர்கள், ஆனால் கடமையைத் துல்லியமாகச் செய்யக்கூடியவர்கள் என்பதுதான் ஆறுதலான அம்சம்.


உண்மையில் தென்னிந்தியாவில் உள்ள நாம் பயணம்செய்வது மிகக் குறைவு. காரணம் இந்த 'அன்னியர் பயம்'தான். வட இந்தியாவில் அப்படி அல்ல. குடும்பம் குடும்பமாக எளிய வசதிகளுடன் பயணம் செய்துகொண்டே இருக்கிறார்கள். காரணம், அவர்களுக்கு தீர்த்தாடனம் ஒரு முக்கியமான மதக்கடமை. பயணம் ஒரு பெரிய இயக்கமாக இந்தியாவில் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. நாங்கள் சென்ற எல்லா ஊர்களிலும் தீர்த்தாடனப் பயணிகள் வந்து, பொது இடங்களில் சமைத்துண்டபடியே இருப்பதைக் கண்டோம். ஒரு சமணர்குழு, பெண்கள், குழந்தை குட்டிகளுடன் சிரவண பெலகொலாவில் இருந்து கட்ரஜ் வரை எங்களைத் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள்.


நீங்கள் சொன்னதைப்போல இந்தியாவில் பயணம் செய்வதில் சில நடைமுறைப்பிரச்சினைகள் உள்ளன. அவற்றை அனுபவத்தால் கருத்தில்கொண்டுதான் நாங்கள் சென்றோம்.


ஒன்று, இந்தியச்சாலைகள் நெரிசல் மிகுந்தவையாக உள்ளன. ஆகவே அபாயம் அதிகம். லாரிகள் மண்டிய சாலைகளில் இரவில் பயணம்செய்வது ஆபத்தானதே. இதனால் நாங்கள் பெரும்பாலும் இரவிலும் விடிகாலையிலும் பயணம்செய்வதை தவிர்த்திருந்தோம்.


இரண்டு, இந்தியாவில் தங்குமிடம் கண்டுபிடிப்பது கடினம். ஒரு தாலுகா தலைநகரில் ஒன்றிரண்டு விடுதிகள்கூட இல்லாமலிருக்கலாம். பெருநகர்களில் திடீர் எனத் திருமணம் திருவிழா போன்ற காரணங்களால் அறைகளே கிடைக்காமலாகலாம். பெண்களுடன் சென்றால் அறை முன்பதிவு இல்லாமல் செல்வது சிக்கலானது.


மூன்று, இந்தியாவில் உணவு விடுதிகள் எவை நம்பகமானவை என ஊகிப்பது கடினம். இங்கே மேலைநாடுகளில் உள்ளது போல ஒரேவகை உணவை எங்கும் அளிக்கும் வரிசை உணவகங்கள் இல்லை. அந்தந்த ஊர் சாப்பாடுதான் கிடைக்கும். அவை அந்த ஊர்க்காரர்களுக்கு உகந்தவை, நமக்கு வயிற்றுக்கு ஒவ்வாமலாகலாம். இதில் விதிவிலக்கான மாநிலம் குஜராத் மட்டுமே. தரமான சாலையுணவகங்கள், கறாரான சுகாதாரக் கண்காணிப்பு உள்ள மாநிலம் அது.


நான்கு, இந்தியாவில் குடிநீருக்கு சராசரித் தரம் ஏதும் இல்லை. சில ஊர்களில் உப்புநீரே குடிநீர். அந்த மக்கள் பழகிப்போய்விட்டிருக்கிறார்கள். வெப்பமண்டல நாடாகையால் ஒரு ஊரில் உள்ள பாக்டீரியா அமைப்பு இன்னொரு ஊரில் இருப்பதில்லை. ஆகவே நல்ல நீராக இருந்தாலும் புதிய ஊரின் நீர் நமக்கு ஒவ்வாமலாகக்கூடும்.


ஐந்து, இன்றும் இந்தியாவில் மொழி ஒரு பெரிய சிக்கலே. வட இந்திய கிராமங்களில் இளைஞர்களிடம் கூட ஓரிரு ஆங்கிலச் சொற்களைப் பேசி பதில்பெற முடியாது. ஆனால் இந்தியை ராஜஸ்தான் முதல் அசாம் வரை, காஷ்மீர் முதல் ஹைதராபாத் வரை, பெரும்பாலும் எங்கும் பேசலாம். நடைமுறைத் தேவை அளவுக்கு அதைப் புரிந்து பேசுபவர்கள் எங்கும் இருப்பார்கள். இந்தி இல்லாமல் இந்தியாவில் பயணம் செய்வது கடினம்.


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

அருகர்களின் பாதை — கடிதங்கள்
வீட்டில்
அருகர்களின் பாதை 30 — நீண்ட பயணம்
அருகர்களின் பாதை 29 — ஜாலார்பதான்
அருகர்களின் பாதை 28 — சவாய்மாதோப்பூர், ரண்தம்போர்
பார்பாரிகா
அருகர்களின் பாதை 27 — சங்கானீர், ஜெய்ப்பூர்
அருகர்களின் பாதை 26 — பிக்கானீர்
அருகர்களின் பாதை 25 — லொதுர்வா, ஜெய்சால்மர்
ரணக்பூர் காணொளி
அருகர்களின் பாதை 24 — ஜெய்சால்மர், சாம் மணல் திட்டு
அருகர்களின் பாதை 23 — ரணக்பூர், கும்பல்கர்
அருகர்களின் பாதை 22 – மிர்பூர், உதய்புர்-நகடா
பயணம்- கடிதங்கள்
அருகர்களின் பாதை 21 — அசல்கர், தில்வாரா
திருப்பான்மலை, ஊரணித்தாங்கல், நெகநூர்ப்பட்டி
அருகர்களின் பாதை 20 — தரங்கா, கும்பாரியா
அருகர்களின் பாதை 19 — படான், மேஹ்சானா, மோதேரா
அருகர்களின் பாதை 18 — டோலாவீரா
அருகர்களின் பாதை 17 – கிர்நார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 15, 2012 10:30

February 14, 2012

வம்ச விருட்சம்

'வம்சவிருட்சம்' எஸ்.எல். பைரப்பா எழுதிய முக்கியமான கன்னட நாவல். அதன் திரைவடிவமும் முக்கியமானது. அதைப்பற்றி கோபி ராமமூர்த்தி எழுதிய பதிவு -


வம்சவிருட்சா -கோபிராமமூர்த்தி

தொடர்புடைய பதிவுகள்

நோபல் பரிசு இந்தியருக்கு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 14, 2012 10:30

அருகர்களின் பாதை – கடிதங்கள்

அருகர்களின் பாதை தொடரைப் படிக்கும்போது இந்திய சரித்திரம் பற்றி எனக்கு எவ்வளவு குறைவாகத் தெரியும் என்பது புரிந்தது. சமணர்கள், வணிகர்கள் கண்ணில் ஒரு நாவல் வந்தால்!


புகைப்படங்கள் அபாரமானவை. என்றாவது ஜெயமோகனோடு ஊர் சுற்றப் போக வேண்டும். ஐயாயிரம் படி இருக்கும் மலையாக இருந்தாலும் சரி…


ஆர்வி


உங்கள் அருகர்களின் பாதை தொடரை விடாமல் படித்துவருகிறேன். முடிந்தால் பின்னர் ஒருமுறை அதே வழியைத் தொடர்ந்து போக விருப்பம்.


பத்ரி சேஷாத்ரி


அன்புள்ள ஜெமோ ,


என்னுடன் ஒரு ஜைன மதத்தவர் வேலை செய்கிறார். பூர்விகம் பீகார்.செட்டில் ஆனது கொல்கத்தாவில். இப்போது பெங்களூரில் வேலை செய்கிறார்.


தங்களின் பயண விபரத்தை அவரிடம் விளக்கி போட்டோக்களைக் காண்பித்தேன். அவர் மிகுந்த பரவசம் அடைந்தார்!


பலிதானா கோவிலைப் பற்றி சில விபரங்கள் கூறினார். அவர் தாத்தாவும் பாட்டியும் ஒவ்வொரு வருடமும் மூன்று மாதங்கள் பலிதானாவில் தங்கி தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை மலை ஏறி வணங்குவார்களாம்.  இவ்வாறு 108 முறை செய்வார்களாம். எனக்கு மயக்கமே வந்து விட்டது! எனக்குத் திருப்பதி மலை ஏறித் திரும்பவும் நடந்து இறங்கி வரவேண்டும் என்று தோன்றியது. அந்த 2-3 மாதங்களில் ஒரு வேளை மட்டும் சாப்பிடுவார்களாம்.


இது போன்று பீகாரில் ஷிகார்ஜி கோவில் பற்றியும் கூறினார்!


பாலாஜி


அன்பான ஜெயமோகன்,


உங்கள் பிரயாணக் கட்டுரைகளைத் தொடர்ச்சியாக வாசித்து வந்தமையாலும் உங்களுடன் நேரடித் தொடர்பு இருப்பதனாலும் உங்களுடன் பிரயாணம் பண்ணும் ஓர் உணர்வு எனக்கு இருந்தது. நான் தக்கலைக்கு வந்தபோது என்னைத் தாங்கள் அழைத்துச் சென்று பல இடங்களை அங்கு காட்டி அறிமுகப்படுத்தியமைதான் ஞாபகத்திற்கு வந்தது. விஷ்ணுபுரம் எழக் காலாயிருந்த ஆதிகேசவப் பெருமாள் கோயில், காடு நாவலுக்கு உணர்வு தநத காட்டுப் பகுதி, ரப்பர் நாவலுக்குப் பின்புலமான ரப்பர் தோட்டம், கொற்றவைக்கு ஊற்றுக் கண்ணாயிருந்த கன்னியாகுமரி அம்மன் கோயில் மற்றும் நீர் வீழ்ச்சிக் குளியல் எல்லாமே மீண்டு்ம் மீண்டும் ஞாபத்திற்கு வந்தன.


எனக்கு சமண மதம் மீது ஓர் ஈர்ப்பு உண்டு. பண்டைய அருகதர் ஆச்சரியம் தருபவர்கள். அருகதர் வந்த பாதை என்ற தலைப்பே எம்மை எங்கோ இட்டுச் சென்று விடுகிறது. யாழ்ப்பாணத்தில் சைவச் சாப்பாடு அருகத உணவு என்றே அழைக்கப்பட்டது. ஆம் சைவம் தமது உணவுப் பழக்கத்தைச் சமணத்திடமிருந்தே பெற்றுக் கொண்டது. தங்களுடன் பிரயாணம் செய்தோர் உங்கள் விபரிப்புகளால் நிறைந்த பயன் பெற்றிருப்பர்.


அன்புடன்

சி.மெளனகுரு

மட்டக்களப்பு


தொடர்புடைய பதிவுகள்

வீட்டில்
அருகர்களின் பாதை 30 — நீண்ட பயணம்
அருகர்களின் பாதை 29 — ஜாலார்பதான்
அருகர்களின் பாதை 28 — சவாய்மாதோப்பூர், ரண்தம்போர்
பார்பாரிகா
அருகர்களின் பாதை 27 — சங்கானீர், ஜெய்ப்பூர்
அருகர்களின் பாதை 26 — பிக்கானீர்
அருகர்களின் பாதை 25 — லொதுர்வா, ஜெய்சால்மர்
ரணக்பூர் காணொளி
அருகர்களின் பாதை 24 — ஜெய்சால்மர், சாம் மணல் திட்டு
அருகர்களின் பாதை 23 — ரணக்பூர், கும்பல்கர்
அருகர்களின் பாதை 22 – மிர்பூர், உதய்புர்-நகடா
பயணம்- கடிதங்கள்
அருகர்களின் பாதை 21 — அசல்கர், தில்வாரா
திருப்பான்மலை, ஊரணித்தாங்கல், நெகநூர்ப்பட்டி
அருகர்களின் பாதை 20 — தரங்கா, கும்பாரியா
அருகர்களின் பாதை 19 — படான், மேஹ்சானா, மோதேரா
அருகர்களின் பாதை 18 — டோலாவீரா
அருகர்களின் பாதை 17 – கிர்நார்
அருகர்களின் பாதை 16 — பலிதானா, ஹஸ்தகிரி, தலஜா
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 14, 2012 10:30

February 13, 2012

வீட்டில்

நேற்று பின்னிரவு இரண்டுமணிக்கு சென்னைக்கு வந்து சேர்ந்தோம். கோயம்பேடு பேருந்துநிலையம் அருகே என்னையும் கடலூர் சீனுவையும் இறக்கிவிட்டார்கள். முத்துக்கிருஷ்ணனும் கெ.பி. வினோதும் சென்னையில் கோடம்பாக்கம் பகுதியில் இறங்குவதாகச் சொன்னார்கள். பிறர் நேராக ஈரோடு செல்வதாகத் திட்டம். நானும் சீனுவும் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள் சென்றோம். நான் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள் செல்வது அதுவே முதல் முறை. போர்நிகழ்ந்த படுகளம் போல் இருந்தது. எங்கே நோக்கினாலும் மக்கள் தூங்கிக்கொண்டிருந்தார்கள். தமிழகப் பேருந்து நிலையங்களுக்கே உரிய மூத்திரவாடை. பிரம்மாண்டமான பேருந்துநிலையம், அத்தனை பெரிய பேருந்து நிலையத்தை முதல் முறையாகப் பார்க்கிறேன். பராமரிப்பு என்பதே இல்லை. சிறுநீர் கழிப்பறையில் மலம் குவிந்து கிடந்தது. கால் வைக்குமிடமெல்லாம் குப்பைகள்.


மதுரைப் பேருந்து நின்றது. ஆனால் பதினைந்துபேர் வந்தால்தான் எடுப்பேன் என்றார் ஓட்டுநர். நான் மட்டுமே அதுவரை வந்திருந்த பயணி. ஆகவே திருச்சி பேருந்தில் ஏறிக்கொண்டேன். பயணச்சீட்டு எடுக்க ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். அப்படியே தூங்கிவிட்டேன். என்ன ஏது என்று தெரியாது. இரண்டு இரவும் இரண்டு பகலும் கண்விழித்த தூக்கம். பேருந்தில் பாட்டு போட்டுக்கொண்டே இருந்தார்கள். கனவில் நான் குலசேகரம் சென்டிரல் திரையரங்கில் செத்துப்போன என் நண்பன் ராதாகிருஷ்ணனுடன் பல படங்கள் பார்த்தேன். இப்போது இருக்கும் நண்பர் ஈரோடு கிருஷ்ணன் ஏன் கூடவே இருந்தார் என்பதுதான் விழித்தபோது குழப்பமாக இருந்தது.


திருச்சியில் இறங்கினால் சட்டென்று ஆயிரம் ரூபாயில் மீதி கிடைக்கவில்லையே என நினைப்பு வந்து பகீரிட்டது. ஆனால் வண்டி போய்விட்டது. வேறு வழியே இல்லை. கன்யாகுமரி பேருந்து நின்றது. ஏறி அமர்ந்துகொண்டேன். தாடி, காவித்துண்டு, தலைப்பாகை. கண்டக்டர் 'சாமி எங்க போகுது?' என்றார். பையில் கைவிட்டேன். ஆயிரம் ரூபாய் சென்னைப் பேருந்தில் கொடுத்தது போக ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு மட்டுமே இருந்திருக்க வேண்டும். ஆனால் மேலும் எழுநூற்றுச்சில்லறை இருந்தது. அதாவது நடத்துநர் மீதியைக் கொடுக்க நான் வாங்கி வைத்திருக்கிறேன், ஆனால் எப்போது?


மீண்டும் தூக்கம். சாத்தூர் அருகே இறங்கி சோறு சாப்பிட்டேன், அது முழுநினைவுடன்தான். மீண்டும் பயணம். மீண்டும் தூக்கம். ஒருவழியாக நாகர்கோயில் வந்து சேர்ந்தது மாலை ஆறரை மணிக்கு. வந்ததுமே அருண்மொழி குளித்துவிட்டு தாடியை எடு என்று ஆணையிட்டாள். சவரம் செய்தேன், ஜாலார்பதானின் புழுதியை உடலில் இருந்து கழுவிக் குளித்தேன். கீழேவந்து சூடான உப்புமாவும் கறுப்பு டீயும் சாப்பிட்டேன். சைதன்யாவுக்கு பயணத் தகவல்களை விரிவாக சொல்ல ஆரம்பித்தேன். இல்லறம் புகுந்தாயிற்று.

தொடர்புடைய பதிவுகள்

அருகர்களின் பாதை 30 — நீண்ட பயணம்
அருகர்களின் பாதை 29 — ஜாலார்பதான்
அருகர்களின் பாதை 28 — சவாய்மாதோப்பூர், ரண்தம்போர்
பார்பாரிகா
அருகர்களின் பாதை 27 — சங்கானீர், ஜெய்ப்பூர்
அருகர்களின் பாதை 26 — பிக்கானீர்
அருகர்களின் பாதை 25 — லொதுர்வா, ஜெய்சால்மர்
ரணக்பூர் காணொளி
அருகர்களின் பாதை 24 — ஜெய்சால்மர், சாம் மணல் திட்டு
அருகர்களின் பாதை 23 — ரணக்பூர், கும்பல்கர்
அருகர்களின் பாதை 22 – மிர்பூர், உதய்புர்-நகடா
பயணம்- கடிதங்கள்
அருகர்களின் பாதை 21 — அசல்கர், தில்வாரா
திருப்பான்மலை, ஊரணித்தாங்கல், நெகநூர்ப்பட்டி
அருகர்களின் பாதை 20 — தரங்கா, கும்பாரியா
அருகர்களின் பாதை 19 — படான், மேஹ்சானா, மோதேரா
அருகர்களின் பாதை 18 — டோலாவீரா
அருகர்களின் பாதை 17 – கிர்நார்
அருகர்களின் பாதை 16 — பலிதானா, ஹஸ்தகிரி, தலஜா
அருகர்களின் பாதை 15 — அகமதாபாத்,லோதல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 13, 2012 10:30

வரலாறும் கதையும்

அன்புள்ள ஜெ,


'கூடவே இன்னொன்றும் தோன்றியது. ஏன் குமாரபாலரை நாம் அறிந்ததே இல்லை? ராஜராஜ சோழனை ஏன் குஜராத்திகள் அறியவே இல்லை? ஹானிபாலை, நெப்போலியனை அறிந்திருக்கிறோம். சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த முக்கியமான பிழைகளில் ஒன்று, எந்த வித வழிகாட்டுநெறிகளும் இல்லாமல் பாடத்திட்டங்களைத் தீர்மானிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டமை. குறுகிய பிராந்தியவாதமும் இனவாதமும் அரசியல் நோக்குடன் நம் குழந்தைகள் மனங்களில் திணிக்கப்பட வழிவகுத்தது அது.'


 


http://www.jeyamohan.in/?p=24655


மிகச் சரியான அவதானிப்பு.


அமர் சித்திரக் கதைகள் இதற்கு ஒரு மிகச் சிறந்த மாற்று. இந்தியாவின் பல பிரதேசங்களையும், மன்னர்களையும், வீரர்களையும், கலைஞர்களையும் சாதனையாளர்கள் பற்றியும் அருமையான புத்தகங்களை ஆதாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறார்கள். இவற்றைப் படித்துதான் ராணா கும்பாவையும், லாசித் புர்கனையும், யசோதர்மனையும், ராணி துர்காவதியையும், சாலிவாகனனையும் நான் அறிந்து கொன்டேன் (ராஜராஜ சோழன் பற்றியும் உண்டு, ஆனால் துரதிருஷ்டவசமாக, பொன்னியின் செல்வன் கதையின் அடிப்படையில் அதைப் போட்டிருக்கிறார்கள். தமிழகத்திலிருந்து அவர்களுக்கு அட்வைஸ் செய்தவர்களின் லட்சணம் அப்படி).


மும்பையைச் சேர்ந்த ஒரு சி பி எஸ் சி பள்ளி ஆசிரியை இவற்றைத் தன் வரலாற்று வகுப்பில் வெற்றிகரமாகப் பயன்படுத்தினார். மாணவர்களும் மிகவும் விரும்பினார்கள். அந்தப் பரிசோதனையின் அடிப்படையில் பாடத்திட்டத்திலேயே இவற்றை வைக்கவேண்டும் என்று சி பி எஸ் சி போர்டுக்குப் பரிந்துரை செய்தார். ஆனால் வரலாறு "துல்லியமாக" இருக்க வேண்டும், இப்படி கதைகளாக இருக்கக் கூடாது என்று சொல்லி நிராகரித்து விட்டார்கள். அவர்கள் சொன்ன இன்னொரு காரணம் இந்தப் புத்தகங்களில் உள்ள வாளிப்பான உடல் கொண்ட பெண் சித்திரங்களைப் பார்த்து ("hour glass figures" – அவர்கள் சொன்னது) மாணவர்கள் மனசு கெட்டுப் போகும் என்பது.


அன்புடன்,

ஜடாயு


அன்புள்ள ஜடாயு,


ஒரு கோணத்தில் நீங்கள் சொல்வது சரிதான். இந்திய வரலாற்றை சுவாரசியமான கதைகளாக மாணவர்களுக்குக் கொடுப்பது அவர்கள் ஆர்வத்துடன் தெரிந்துகொள்ள வழிவகுக்கும். இந்திய வரலாற்றின் பெரும்பகுதி இன்னமும் நமக்கு அன்னியமாகவே இருக்கும் நிலையை மாற்ற அது உதவக்கூடும்.


ஆனால் இதை மொழிக்கல்வியின் ஒரு பகுதியாக, பண்பாட்டுக்கல்வியாக துணைநூல் வடிவில் மட்டுமே கொடுக்கவேண்டும். வரலாற்றுப்பாடமாக அல்ல. ஏனென்றால் வரலாறு என்பது கதை அல்ல.


வரலாற்றுக்கும் கதைக்குமான வேறுபாடு தெரியாமல் இருப்பதென்பது இன்றும் நம்முடைய பண்பாட்டுத் தளத்தில் மிகப்பெரிய சிக்கல்களை உருவாக்குவதாக உள்ளது. கதை என்பது ஒரு மதிப்பீட்டின் அடிப்படையில் காரண காரிய உறவுடன் தொகுக்கப்பட்ட நிகழ்வுகள். வரலாறு அப்படி அல்ல. கறாரான வரையறையின்படி பார்த்தால் வரலாறு என்பது புறவயமான தகவல்களின் காலவரிசையிலான ஒழுங்கமைப்பு மட்டுமே — மேலதிகமாக வரலாறு பற்றி இருக்கும் கோட்பாடுகள் எல்லாமே இந்தப் பொதுவரையறைக்கு மேல் கட்டப்படுபவையே.


நாம் நம் மரபில் இத்தகைய புறவயமான வரலாற்றை எழுதும் முறைமையைக் கொண்டிருக்கவில்லை. நாம் எழுதி , கைமாறி வந்துள்ள வரலாறு என்பது கதைகள்தான். புராணங்களாகவும் தொன்மங்களாகவும்தான் நாம் வரலாற்றைப் பேணி வந்திருக்கிறோம். ஆகவே இன்னமும் கூட நமக்கு வரலாற்றெழுத்து என்பது சரிவரப் பிடிகிடைக்காத ஒன்றாகவே இருக்கிறது.


நம்முடைய தேசிய வரலாறு என்பது வெள்ளையர்களால் எழுதப்பட்டு நமக்கு அளிக்கப்பட்டது. காரணம் கிரேக்கப் பொற்காலம் முதல் புறவயமான வரலாற்றெழுத்து மரபு அவர்களிடம் இருந்தது. ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலத்தில் அது பல தளங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டு வளர்ந்தது.


ஐரோப்பியர் நம்மைப்பற்றி எழுதிய வரலாறுகள் முன்முடிவுகளும் உள்நோக்கங்களும் சேர்ந்து விளைவிக்கும் பொய்களும் திரிபுகளும் நிறைந்தவை. அவற்றைக் கண்டு நாம் கொதிக்கிறோம். மறுத்து நூல்களை எழுதுகிறோம். ஆனால் அப்படி எழுதும் நூல்களில் மிகச்சில தவிர்த்து பெரும்பாலானவை பொதுவான வரலாற்றெழுத்தின் தளத்தில் நகைப்புக்கிடமான முதிரா முயற்சிகளாக வீழ்ச்சியடைகின்றன.


ஏனென்றால் சரியான வரலாற்றுப்பார்வையும், உண்மையான உணர்வூக்கமும், கடும் உழைப்பின் விளைவான தகவல்களும் இருந்தாலும் முறையான வரலாற்றெழுத்து முறைமை இல்லாமல் நம்மவர்கள் 'கதைசொல்ல' ஆரம்பிப்பதனால்தான்.


ஓர் உதாரணம் சொல்கிறேன். ஜான்ஸி கோட்டையில் ஓர் இடத்தில் கீழே முப்பதடி ஆழத்தில் உள்ள ஒரு பாதையைக் காட்டி இங்கிருந்து அந்தப் பாதையில் செல்லும் குதிரை மீது ராணி லட்சுமிபாய் குதிப்பார்கள் என எழுதி வைத்திருக்கிறார்கள். இது லட்சுமிபாயின் அதிகார பூர்வ வரலாற்று நூல் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட தகவல். இந்தத் தகவலை இந்தியா பற்றி பரிவுடன் எழுதும் வரலாற்றாசிரியரான ராய் மாக்ஸ்ஹாம் அவர்களே தன்னுடைய 'இந்தியாவின் மிகப்பெரிய வேலி' நூலில் நக்கலாக சுட்டிக்காட்டியிருந்ததை வாசித்தேன். இந்த ஒரு 'கதை' யே லட்சுமிபாயின் ஆளுமையின் தீவிரம், தியாகம் எல்லாவற்றையும் மிகைப்படுத்தப்பட்ட கட்டுக்கதையாக மாற்றிவிடுகிறது.


இந்தப் பிரச்சினை நம்மவருக்குத் தெரியவில்லை. தமிழ் மன்னர்களின் வரலாற்றை எழுதுபவர்களோ பண்டைய புராணங்களைப் போலவே எழுதி வைத்து நம் வரலாற்றையே கேலிக்கூத்தாக ஆக்கிவிட்டிருக்கிறார்கள். கொஞ்சம் அறிவியல் சார்ந்த நோக்கை விரும்புகிறவர்கள் வேறு வழியே இல்லாமல் உள்நோக்கம் கொண்ட ஐரோப்பிய வரலாற்றாசிரியர்களை ஆதாரமாகக் கொள்ள நேர்கிறது.


ஆகவே கதையையும் வரலாற்றையும் பிரித்துத் தெளிவுபடுத்தி நம் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுப்பதே நல்லது. கதை சுவாரசியமாக இருக்கலாம். வரலாறு தட்டையான தகவல்வெளியாகத் தோன்றலாம். ஆனால் வரலாற்றெழுத்தின் முறைமைக்குள்ளேயே பெரும் சுவாரசியம் ஒன்று உள்ளது. உதிரி உதிரியாகத் தகவல்களைத் திரட்டுவது, அவற்றைக் கொண்டு ஒரு வரலாற்றுச்சித்திரத்தை ஊகிப்பது, அந்தச் சித்திரத்தை உரிய தகவல்களுடன் தர்க்க பூர்வமாக நிறுவிக்காட்டுவது ஆகிய செயல்கள் அடிப்படியான ஆர்வத்தை மட்டும் உருவாக்கிக்கொண்டால் பெரும் மன எழுச்சியை அளிப்பவை. அதுதான் வரலாற்றாய்வின் உண்மையான சுவாரசியம், அதைத்தான் நாம் நம் கல்விநிலையங்களில் கற்றுத்தரவேண்டியிருக்கிறது.


நாம் இன்றுகூட வரலாற்றெழுத்தை பழகிக்கொள்ளவில்லை. சமீபகாலத்து வரலாறுகூட நமக்குக் கதைகளாகவே கிடைக்கிறது. கட்டபொம்மன் பற்றி, வள்ளலார் பற்றி ஏன் எம்.ஜி.ஆர் பற்றிக்கூட 'கதைவிடாத' ஒரு நல்ல வரலாற்றுநூல் நம்மிடம் இல்லை. இருப்பவை எல்லாமே கதைகள், புராணங்கள் தான். இந்த மனநிலையில் அடிப்படையான மாற்றம் இன்று தேவை. அதை நாம் கல்விநிலையங்களில் உருவாக்கவேண்டும். அதற்கு வரலாற்றை அதன் முறைமை [methodology] சார்ந்து கற்றுக்கொடுத்தாகவேண்டும்.


அதற்கு அமர்சித்ர கதா போன்றவை உதவாது. சொல்லப்போனால் நேர் எதிரான விளைவுகளைக்கூட உருவாக்கலாம்.


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

யானைடாக்டர்-படங்கள்
யானைடாக்டர் [சிறுகதை] -1
விவேக் ஷன்பேக் சிறுகதை 3
விவேக் ஷன்பேக் சிறுகதை- 2
சிறுகதை, விவேக் ஷன்பேக்
வாசிப்பில் நுழைதல்
திருவையாறு, மேலும் கடிதங்கள்
குஷ்புகுளித்த குளம்: கடிதங்கள்
கீதை எதற்காக?
''என்ன சேறது மாமி, அது அப்டித்தான்!''
"என்ன சேறது மாமி, அது அப்டித்தான்!"
மதம்,ஆன்மீகம்,அவதூறு:ஒரு கடிதம்
நூல்கள்
'நான் எழுதலாமா?' ஒரு கடிதம்
சிறுகதை ஒரு சமையல்குறிப்பு
ஒரு கனவின் கதை
புதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று…
பப்படம்
அறிமுகம்
சிறுகதையில் என்ன நடக்கிறது?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 13, 2012 10:30

February 12, 2012

அருகர்களின் பாதை 30 – நீண்ட பயணம்

ஜாலார்பதானில் இருந்து நேராக சென்னைக்கே திரும்பிவிடுவதாக முடிவெடுத்தோம். முடிந்தவரை நேராக சென்னையைச் சென்றடைவதாக திட்டம். ஆனால் ஒரு மகத்தான பிழை செய்தோம். இரு வழிகள் கண்ணுக்குப்பட்டன. ஒன்று இந்தூர் வழியாக பெங்களூர் வந்து சென்னைக்கு. இன்னொன்று போபால், நாக்பூர் வழியாக ஹைதராபாத். இருவழிகளையும் இணையத்தில் தேடிப்பரிசீலித்தபின் போபால் வழியைத் தேர்வுசெய்தோம். போபால் மத்தியப்பிரதேசத்தின் தலைநகரம். அவ்வழியாக நான்குவழிப்பாதை இருக்கும் என நினைத்தோம்.


மாலையில் போபால் வந்து சேர்ந்தபோதுதான் ஒன்று தெரிந்துகொண்டோம், போபால் வழி இன்னும் நான்குவழிப்பாதை ஆகவில்லை. வாஜ்பேயி காலத்திலேயே இந்தூர் பாதை தங்கநாற்கரமாக ஆகிவிட்டது. அதன்பின் வட இந்தியாவில் இந்த நான்குவழிப்பாதை என்பது அப்படியே தேங்கி நிற்கிறது. போபால் நாக்பூர் வழி நம்மூர் கிராமச்சாலைகளைப் போல் இருந்தது. குண்டுகுழிகள் மண்டிய சிதிலமான பாதை. அதில் லாரிநெரிசல். இடுப்பொடிய மண்டை அடிபட கிணற்றுக்குள் விழுந்துகொன்டே இருப்பது போல அச்சாலையில் வந்தோம். ஒரு மாநிலத்தின் மையமான தேசிய நெடுஞ்சாலை இந்த அளவு கேவலமாக இருக்கும் என்பதைக் கற்பனையே செய்யமுடியாது. மொத்த மத்தியப்பிரதேசத்திலும் டிராக்டர் செல்லக்கூடிய சாலைகள் மட்டுமே இருக்கின்றன. இந்த அளவுக்குப் பொதுவசதிகள் சீரழிந்த இன்னொரு மாநிலம் என்று மேற்கு வங்கத்தை மட்டுமே சொல்ல முடியும்.


போபாலில் இருந்து நாக்பூர் வருவதற்கு நாங்கள் திட்டமிட்டிருந்ததை விட ஐந்து மணிநேரம் அதிகமாகிவிட்டது. அங்கிருந்து ஹைதராபாத். இரவு முழுக்கப் பயணம் . தம்பி பிரசாத் நல்ல ஓட்டுநர், தூக்கம் சலிப்பு எல்லாம் கிடையாது. நாட்கணக்கில் தூங்காமல் லாரியில் சென்ற அனுபவம் உள்ள பையன். என்ன பிரச்சினை என்றால் குத்துப்பாட்டு கேட்பான். இரவில் கார் வளைந்து வளைந்து வந்து கொண்டே இருந்தது. நாக்பூர் தாண்டி கொஞ்ச தூரம் நல்ல சாலை. பிறகு மீண்டும் உடைசல் சாலை. மீண்டும் கொஞ்சம் நால்வழிச்சாலை. குறைந்தபட்சம் மகாராஷ்டிராவில் சாலைகளைப் போடும் சாயலாவது தெரிகிறது. மத்தியப்பிரதேசம் இந்தியாவில்தான் இருக்கிறதா என பாரதமாதாவின் பக்தர்களான பாரதிய ஜனதா கட்சியினரைத்தான் கேட்கவேண்டும்.


இதுவரை நான் செய்த பயணங்களிலேயே இப்போது செய்துகொண்டிருக்கும் இந்தப் பயணம்தான் நீண்டது. ஜாலார்பதானில் இருந்து ஆரம்பித்து எங்கும் நிற்காமல் தொடர்ச்சியாகப் பயணம். திங்கள் மதியம் நாகர்கோயில் சென்று சேர்வேன் என நினைக்கிறேன். அப்படியென்றால் அது இரண்டு இரவுகளும் மூன்று பகல்களும் தொடர்ச்சியாக, எங்கும் ஓய்வெடுக்காமல் செய்யும் பயணமாக இருக்கும். ஜாலார்பதானில் இருந்து நாக்பூர் வரை ஓரு பகல். நாக்பூரில் இருந்து ஹைதராபாத் வரை ஒரு இரவு. ஹைதராபாத் முதல் ஓங்கோல் வரை மீண்டும் ஒரு பகல். சென்னையைச் சென்றடைய இரவு ஒரு மணி ஆகும். அங்கிருந்து மதுரை செல்ல விடிந்து விடும். பகல் முழுக்கச் சென்றால் நாகர்கோயில். கிட்டத்தட்ட முக்கால்வாசி இந்தியாவைத் தொடர்ச்சியாகக் கீறிக்கடந்து செல்கிறேன். ராஜஸ்தான், மகாராஷ்டிரம், ஆந்திரா, தமிழ்நாடு என நான்கு மாநிலங்கள் வழியாக.


ஒருவகையில் இந்தப்பயணம் ஆச்சரியமானதுதான். சென்ற பத்தாண்டுகளுக்கு முன் இப்படி ஒரு பாய்ச்சலை நிகழ்த்த முடியாது. இப்போது வசதியான கார்கள் வந்துவிட்டன. சாலை வசதிகள் வந்துவிட்டன. ஆனாலும் சமீபத்தில் பல நாடுகளில் செய்த பயணங்களின் அடிப்படையில் பார்த்தால் நம் நாட்டில் சாலைப்போக்குவரத்து வசதிகள் இன்னமும் மிக ஆரம்ப நிலையிலேயே உள்ளன என்பதே உண்மை. பாரதிய ஜனதா அரசு அதில் கவனம் செலுத்தி பெரும் நிதியையும் ஒதுக்கியது. அதன்பின் வந்த காங்கிரஸ் அரசுகள் அத்திட்டங்களை அந்தரத்திலேயே விட்டு விட்டன.


இன்று நான்குவழிப்பாதைத் திட்டங்கள் ஊழலில், நிர்வாகச்சிக்கல்களில் சிக்கிச் செயலிழந்த நிலையில் கிடக்கின்றன. பல இடங்களில் நான்குவழிப்பாதை வேலைகள் அப்படியப்படியே விடப்பட்டுத் தூசு மண்டிய பெரும் குழிகள் எஞ்சுகின்றன. போடப்பட்ட நான்குவழிப்பாதைகள் கூடக் கொஞ்சதூரம் நான்கு வழியாகவும் பின்னர் ஒற்றை வழியாகவும் கொஞ்ச தூரம் குண்டும் குழியுமான மண்பாதையாகவும் கிடக்கின்றன. உண்மையில் பயணத்தை இந்த அளவுக்குச் சிக்கலானதாக ஆக்குவது கைவிடப்பட்டுக் கிடக்கும் இந்த நாற்கரச்சாலை வேலைகள்தான். மன்மோகன் சிங் அரசின் கையாலாகாத்தனத்துக்கு இந்த சாலைத்திட்டங்களின் தேக்கநிலை அல்லாமல் வேறு உதாரணமே தேவையில்லை. இந்தியா போன்ற விரிந்து பரந்த ஒரு தேசத்தில் சாலைகளின் முக்கியத்துவத்தை எவரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.


காரின் சிறிய ஒரு வட்டத்துக்குள் எட்டுப்பேர் இத்தனை நேரம் இருப்பது சாதாரண அனுபவம் அல்ல. தூங்கி வழிந்தோம். கொஞ்ச நேரம் தீவிர இலக்கிய விவாதம் செய்தோம். கொஞ்சநேரம் பாட்டு கேட்டோம். ஹைதராபாத் நகருக்குள் நுழைவதைத் தவிர்க்கும் நோக்கத்துடன் கூகிள் உதவியுடன் குறுக்கு வழி தேடப்போய் ஏதேதோ பொட்டல்காடுகளில் வழி தவறி அலைந்தோம். வழிவிட மறுக்கும் லாரிகளை வசைபாடி, நெரிசலான ஆந்திரத் தெருக்கள் வழியாகப் புழுதியை ஊடுருவி சென்று கொண்டே இருக்கிறோம்.


இன்று மதியம் ஆந்திர ஓட்டல் ஒன்றில் சோறு சாப்பிட்டோம். சோறும் சாம்பாரும் சாப்பிட்டு இரண்டு வாரம் ஆகிறது. சீனு 'சோறுங்கிறது ஒரு உணவில்ல சார், சாமி' என்று பரவசத்துடன் சொன்னார். அருண்மொழியை ஃபோனில் அழைத்து சமையல் மெனுவைச் சொன்னேன். அருண்மொழி நல்ல மலையாளச் சமையல் செய்வாள். சிவப்பு சம்பா அரிசிச் சோறு, காளன், ஓலன், அவியல், துவரன், உப்பேரி, பருப்பு, சாம்பார், ரசத்துடன் ஒரு சாப்பாடு அங்கே தயாராக இருக்கும்.


இந்தியா என்ற அனுபவத்தை அப்படித்தானே கொண்டாட முடியும், சொந்த வீடு போல இனிய இந்தியப்பகுதி வேறு உண்டா என்ன?

தொடர்புடைய பதிவுகள்

வீட்டில்
அருகர்களின் பாதை 29 — ஜாலார்பதான்
அருகர்களின் பாதை 28 — சவாய்மாதோப்பூர், ரண்தம்போர்
பார்பாரிகா
அருகர்களின் பாதை 27 — சங்கானீர், ஜெய்ப்பூர்
அருகர்களின் பாதை 26 — பிக்கானீர்
அருகர்களின் பாதை 25 — லொதுர்வா, ஜெய்சால்மர்
ரணக்பூர் காணொளி
அருகர்களின் பாதை 24 — ஜெய்சால்மர், சாம் மணல் திட்டு
அருகர்களின் பாதை 23 — ரணக்பூர், கும்பல்கர்
அருகர்களின் பாதை 22 – மிர்பூர், உதய்புர்-நகடா
பயணம்- கடிதங்கள்
அருகர்களின் பாதை 21 — அசல்கர், தில்வாரா
திருப்பான்மலை, ஊரணித்தாங்கல், நெகநூர்ப்பட்டி
அருகர்களின் பாதை 20 — தரங்கா, கும்பாரியா
அருகர்களின் பாதை 19 — படான், மேஹ்சானா, மோதேரா
அருகர்களின் பாதை 18 — டோலாவீரா
அருகர்களின் பாதை 17 – கிர்நார்
அருகர்களின் பாதை 16 — பலிதானா, ஹஸ்தகிரி, தலஜா
அருகர்களின் பாதை 15 — அகமதாபாத்,லோதல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 12, 2012 10:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.