Jeyamohan's Blog, page 2251

February 26, 2012

தற்கொலை தியாகமாகுமா?

இன்று கி.ரா.வின் கோபல்ல கிராம மக்கள் படித்துக் கொண்டு இருந்தேன். அதில் "என்க்கிச்சி" என்ற பெண் கணவன் கொலையுண்டபின் உடன்கட்டை ஏறும் காட்சியும் அதை அச்சமூகம் சில விதிமுறைகளுடன் அனுமதிப்பதையும் படித்தேன். உக்கிரமும் உன்னதமும் கலக்கும் பக்கங்கள் அவை . உணர்வெழுச்சியும், பிணைப்பும், தியாகமும் வெளிப்படும் இடம் அது. கி.ரா. கலை எழுச்சியுடன் விவரித்திருப்பார். நமது பகுத்தறிவும், தர்க்கமும் வெட்கி ஒதுங்கி நிற்கும் இலக்கியப் பக்கங்கள் அவை. படிக்கும்போது இதை மானுட உச்சமாகவே நான் உணர்கிறேன்.


உறவுக்கான தனிமனித அர்ப்பணமும், முத்துக்குமரன் மற்றும் சமீபத்தில் தீக்குளித்த செங்கொடி வரை நாம் அறிவுஜீவிக் குரலுடன் இவைகளை மூடத்தனம் என்றோ, கணநேர வேகம் என்றோ பகுத்து விமர்சிக்கிறோம்.


எல்லாத் தற்கொலைகளும் மூடத்தனமானதுதானா, தன் உயிருக்கு மேலாகத் தான் நம்பும் ஒன்றை நிறுவ உயிரை மாய்க்கும் சமூக விழுமியத்தை நாம் தக்கவைக்க வேண்டாமா, தற்கொலைகளில் தியாகமாக, ஒரு மானுட உச்சமாக, ஒரு அருஞ்செயலாக ஒப்புக்கொள்ளப்படும் விதிவிலக்குகளே இல்லையா?


கிருஷ்ணன் கிருஷ்ணன்





வடக்கிருந்து உயிர்துறக்கும் 71 வயதான சமணத்துறவி கேசவ்ஜி


கிருஷ்ணன்,


எந்த ஒரு சமூகத்திலும் தியாகம் என்ற ஒன்று உயர் விழுமியமாகவே இருக்க முடியும். ஏனென்றால் ஒரு சமூகம் சில பொது விழுமியங்களை நிறுவுவதன் மூலமே உருவாக்கப்பட்டு நிலைநாட்டப்படுகிறது. தனிமனித மனமோ எப்போதும் சுயநலத்தால் ஆனது. அந்த சுயநலத்துக்கு மேலாக விழுமியங்களை நிலைநாட்டவே தியாகம் வலியுறுத்தப்படுகிறது.


காமம், வன்முறை, சுயநலம் ஆகிய மூன்றுமே [காம குரோத மோகம்] மானுடனின் அடிப்படை மிருக இச்சைகள். மேலை உளவியலில் இவை இட் [id] எனப்படுகின்றன. இவற்றை அடக்கி, வென்று, கடந்துசெல்லாமல் பண்பாடு அமையாது. ஆம், பண்பாடு என்பது ஒட்டுமொத்தமாகவே மானுட அடிப்படை இச்சைகளுக்கு எதிரான பயணம்தான்.


கடந்துசெல்லுதலின் முக்கியமான வழிமுறை என்பது உன்னதமாக்கல் [sublimation]. ஒன்றை அதன் உச்சநிலைக்குக் கொண்டு சென்று, அதை மையமாக நிறுவி, எல்லா உணர்ச்சிகளையும் அந்த உச்சநிலை நோக்கிச்செல்வதாக அமைத்துக்கொள்ளுதலே உன்னதமாக்கல். உலகமெங்கும் எல்லா சமூகங்களிலும், பழங்குடிச்சமூகங்களில்கூட, இதுவே பண்பாட்டு உருவாக்கத்தின் வழிமுறை. ஆகவே உன்னத விழுமியங்கள் இல்லாத சமூகங்களே இல்லை.


காமம் காதலாக உன்னதமாக்கப்படுகிறது. வன்முறை வீரமாக உன்னதமாக்கப்படுகிறது. சுயநலமும் பேராசையும் தியாகமாக உன்னதமாக்கப்படுகிறது. கொடை என்பதும் தியாகம்தான். காதல், வீரம், கொடை என்ற முப்பெரும் விழுமியங்களே பண்பாட்டின் அடித்தளம். சங்க இலக்கியங்கள் அவற்றைப்பற்றியே பேசுகின்றன.


தியாகங்களில் உயிர்த்தியாகம் முக்கியமான ஒன்றுதான், அன்றும் இன்றும். குடும்பத்துக்காக, சமூகத்துக்காக, நாட்டுக்காக, உயர்விழுமியங்களுக்காக, நம்பும் நெறிகளுக்காக செய்யப்படும் உயிர்த்தியாகம் கண்டிப்பாக மகத்தானதே. நம் பேரிலக்கியங்களே சான்று.


உயிர்த்தியாகம் செய்யும் மக்கள் அறவே இல்லாத ஒருசமூகம் சுயநலச் சமூகமாகவே இருக்க முடியும். அது வாழ முடியாது. காலப்போக்கில் அதன் ஆன்ம வல்லமை மட்டும் அல்ல, புறவல்லமையே அழியும்.


எதை நம்பித் தியாகம் செய்வது, அந்தக் காரணம் நாளை தவறாக ஆகுமென்றால் என்ன செய்வது என்பதெல்லாம் வெறும் லௌகீகக் கேள்விகள். தியாகிகள் அதைப்பற்றி நினைப்பதே இல்லை. உயிர்த்தியாகத்துக்கு எதிராகச் சொல்லப்படும் எல்லா வாதங்களையும் பொதுவாகவே தியாகத்துக்கு எதிராகவும் சொல்லலாமே.


இந்திய சுதந்திரத்துக்காகப் போராடி வாழ்க்கையை இழந்தவர்கள் இந்திய சுதந்திரமே காங்கிரஸின் கொள்ளைக்காக நிகழ்த்தப்பட்டது என இப்போது உணரலாமே? அந்த எண்ணம் வருபவன் தியாகமே செய்வதில்லை. அடைவதைவிட இழப்பதில் மேலும் ஆனந்தம் உள்ளது என அறிந்தவனே தியாகி.


எல்லாத் தியாகமும் முக்கியமானதே. இன்று தியாகமே இல்லாமல் சுயநலம் மட்டுமேயாக அரசியல் மாறியுள்ள நிலையில் தியாகங்கள் இன்னும் முக்கியமாகின்றன. செங்கொடியும் முத்துக்குமாரும் பெறும் முக்கியத்துவம் அப்படி உருவாவதே. நான் அவர்கள் தாங்கள் நம்பியவற்றுக்காக இறந்ததை வணங்குகிறேன்.


விளைவுகளைக் கொண்டு அந்தத் தியாகங்களை மதிப்பிடக்கூடாதென்றே நான் நினைக்கிறேன். அவற்றைத் தற்கொலைகள், அசட்டுத்தனங்கள் என்றெல்லாம் சிறுமைப்படுத்துவது ஒட்டுமொத்தமாகத் தியாகம் என்பதற்கு எதிரான சுயநல மனநிலையையே வளர்க்க உதவும் என்பதே என் எண்ணம்.





காந்தியவாதி டாக்டர் ஜோஷி உண்ணாவிரதமிருந்து உயிர்துறக்கிறார்


ஆனால் மதம் போன்றவற்றால் மூளைச்சலவை செய்யப்பட்டு, உச்சகட்ட வெறுப்பின் விளைவாகச் செய்யப்படும் உயிர்த்தியாகங்களை நாம் பிரித்துப்பார்க்கவேண்டும் என்றே நினைக்கிறேன். அதாவது எதிர்மறை மனநிலைகளில் செய்யப்படும் உயிர்த்தியாகங்கள் அபாயகரமானவை. அவை தியாகங்களே அல்ல. பலிகள்.


அதேபோல குற்ற உலகில் எத்தனையோ குற்றவாளிகள் தெரிந்தே சண்டைகளில்சாகிறார்கள். குழுவுக்காக உயிர்த்தியாகம் செய்கிறார்கள். பணத்துக்காகவே தற்கொலைப் படையாக ஆகிறார்கள். அதையும் தியாகம் எனச் சொல்லமுடியாது.


இந்த வேறுபாடுகள் பெரும்பாலும் நமக்கே உள்ளூரத் தெரியும். ஏனென்றால் நாம் என்ன விவாதித்தாலும் இந்த விஷயங்களை மனசாட்சியைக் கொண்டே நம்முள் புரிந்துகொள்கிறோம்.


இந்திய ஞானமரபில் உயிர்துறத்தல் என்பது பாவமல்ல. தற்கொலைசெய்த ஜீவன் பேயாய்த் திரியும், நரகத்துக்குச் செல்லும் என்பதெல்லாம் செமிட்டிக் மதநம்பிக்கைகள்.


இந்திய மரபில் உயிர்த்தியாகம் செய்தவர்கள் தெய்வங்களாகவே ஆகிறார்கள். நம் நாட்டார் தெய்வங்களில் கணிசமானவர்கள் அப்படிப்பட்டவர்களே.


ஏனென்றால் இந்திய ஞானமரபின்படி உயிர் அல்லது மானுடப்பிறவி என்பதுஅதைக்கொண்டு அடுத்த படிக்குச் செல்வதற்கான பயணமே. ஆகவே இதை முழுமையாக வாழ்ந்தாகிவிட்டதென உணரும் ஒருவர் அதை முடித்துக்கொள்வதென்பது அடுத்தபடிக்குச் செல்வதே.


அதாவது உடல் ஒரு உடைதான். அதைக்களைந்து புதிய உடையை அணிவதும் சரி, அல்லது மீண்டும் உடையே தேவையற்ற 'பரிநிர்வாண' நிலைக்குச் செல்வதும் சரி, சாதாரணமானதே.


ஆகவேதான் சமண, பௌத்த மதங்களில் வடக்கிருந்து உயிர்துறத்தல் [சல்லேகனை] இகவாழ்க்கையின் சிறந்த முடிவாகச் சொல்லப்படுகிறது. இந்து மதத்தில்ஜீவசமாதி என்ற வழக்கம் இருந்து வருகிறது.


நித்ய சைதன்ய யதியின் சுயசரிதையில் ஒரு நிகழ்ச்சி. அவர் காசியில் வாழும் காலத்தில் ஒரு முதிர்ந்த துறவி பிற துறவிகளை வரச்சொல்லி ஒரு பெரிய விருந்து ஏற்பாடு செய்தார். அதன்பின் ஒவ்வொரு துறவியிடமாக வணக்கம் சொல்லி, விடைபெற்று, கங்கைக் கரைக்குச் சென்றார். உடையைக் களைந்து வீசிவிட்டு, கங்கையில் குதித்து ஜலசமாதி ஆனார். மற்றவர்கள் 'கங்கா கீ ஜே' என ஆரவாரம் செய்து அதைப் பார்த்து நின்றார்கள்.


நித்யாவின் மேலைக்கல்வி பயின்ற மனம் அதிர்ச்சி கொண்டது. அருவருப்பும். அதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஆனால் பின்னர் நடராஜகுருவுடனான உறவு அதைத் தெளிவாக்கியது. பின்னர் அவரது நண்பரே உண்ணாவிரதமிருந்து உயிர்துறப்பதற்கு அவர் உதவினார்.


நான் ஒருவர் தன் லௌகீக வாழ்க்கையை முழுமையாக்கியபின் அதை முடித்துக்கொள்வதை உயர்ந்த விழுமியமாகவே நினைக்கிறேன். நான் என்றாவது அப்படி முடித்துக்கொள்வேன் என்றால் அதை என் பயணத்தின் உச்சநிலையாகவே எண்ணுவேன்.


சமீபத்தில் குஜராத்தில் டாக்டர் ஜோஷி என்பவர் தன் தொண்ணூறாவது வயதில் அப்படி உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார் என செய்தி வந்தது. காந்தியைக் கண்டு பழகி, அந்த இலட்சியங்களின்படி மகத்தான தியாக வாழ்க்கை வாழ்ந்த மருத்துவர் அவர். பல்லாயிரம் பேருக்கு இலவசமாகக் கண்சிகிழ்ச்சை அளித்தவர்.


அவருக்கு 'அவ்வளவுதான் போதும்' எனத் தோன்றுவது எளிய விஷயமா என்ன? அவருக்கு உபதேசம் செய்யத் தகுதி கொண்ட எவர் நம்மிடையே உள்ளனர்?


நம் நாளிதழ் அசடுகள் அவருக்கு நக்கலாக அளித்த விமர்சனங்களும் ஆலோசனைகளும் நம் கல்விமுறை எந்த அளவு ஆன்மா இழந்ததாக ஆகிவிட்டது, அதைக்கொண்டு மரபையும் பண்பாட்டையும் புரிந்துகொள்வது எப்படி முடியாத ஒன்றாக ஆகிவிட்டது என்பதற்கான சான்றுகள்.


நாம் எப்போதும் நம்முடைய சொந்த மனநிலையை, நம்முடைய சொந்த சாத்தியக்கூறுகளைக் கொண்டே எல்லாவற்றையும் புரிந்துகொள்கிறோம், தீர்மானிக்கிறோம். நம் எளிய லௌகீக சுயநல வாழ்க்கைக்குள் வைத்து தியாகங்களையும், முழுமைநிலையையும் புரிந்துகொள்ள முடியாது.


எளிமையாக இதைப் புரிந்துகொள்ளலாம். எதிர்மனநிலைகளால் தூண்டப்பட்டு உயிர்நீப்பது தற்கொலை. நேர்மனஎழுச்சிகளால் செய்யப்படுவது தியாகம். செயல்அல்ல, அதன்பின்னால் உள்ள மனநிலையே அது என்ன என்பதைத் தீர்மானிக்கிறது.


மகத்தான தியாகங்கள் அழிவுகள் அல்ல, அவை ஆக்கம் போன்றவை. விதைகள் அழிவது ஆக்கத்துக்காகவே.


'பின் தொடரும் நிழலின் குரல்' நாவலில் கடைசியில் ஏசு வரும்போது இதே கேள்விதான் அவரிடம் கேட்கப்படுகிறது. அவர் பதில் சொல்கிறார்.


'துயரமடைந்தோர் அறிக. பிறர் பொருட்டு துயர்கொள்ளுதலே மானுடமனம் கொள்ளும் உணர்வுகளில் மகத்தானது. வலிகொள்பவர் அறிக. பிறர் பொருட்டு கொள்ளும் வலியே உடல்கொளும் உணர்வுகளில் மகத்தானது.


'கொல்லப்பட்டோர் அறிக. நீதியின் பொருட்டுக் கொல்லப்படுதலே மானுடனுக்குத் தரப்படும் உயர்ந்த வெகுமதி. அவமதிக்கப்பட்டோர் அறிக. நீதியின்பொருட்டு அவமதிக்கப்படுதல் நம் பிதாவின் முன் உயர்ந்த வெகுமதி என்று வைக்கப்படும்!


'ஏனெனில் தியாகிகளின் இரத்தமே பூமியை சுத்திகரிக்கிறது. நிரபராதிகளின் கண்ணீர் பூமியில் மீண்டும் மீண்டும் முளைத்தெழுகிறது!


'ஆகவே நான் மெய்யாகவே உங்களுக்குக் கூறுகிறேன். நீதியின்பொருட்டு பசிதாகமுள்ளவர்களாக இருங்கள். நீதியின் பொருட்டு நீங்கள் உங்களை பகிஷ்காரம் செய்துகொள்ளுங்கள். நீதியின்பொருட்டு உங்களை சிரச்சேதம் செய்துகொள்ளுங்கள்!


'தியாகிகள் அறிக. இலக்குகளுக்காக தியாகங்கள் செய்யப்படுவதில்லை. இலக்குகள் மண்ணில் குறிக்கப்படுகின்றன. தியாகங்களோ என் பிதாவுக்கு முன்பாகக் கணக்கிடப்படுகின்றன.'


ஜெ


http://articles.timesofindia.indiatimes.com/2011-02-08/vintage-wisdom/28230522_1_santhara-jain-community-veritable-fount [டைம்ஸ் ஆஃப் இந்தியா அளித்திருக்கும் நக்கலான தலைப்பை கவனிக்கவும்]


http://ibnlive.in.com/news/94yearold-freedom-fighter-fasts-unto-death/100308-3.html


தொடர்புடைய பதிவுகள்

தூக்கு -கடிதங்கள்
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 26, 2012 10:30

February 25, 2012

மாடல்ல மற்றையவை

நாகர்கோயில் பண்பலை வானொலியைக் காலையில் அருண்மொழி கேட்பாள். அதில் ஒரு வரி ஒரு வார்த்தைகூட அவள் காதில் விழாது. காரணம் அவள் அதைக்கேட்பதே நேரம் காட்டும் ஒலியாகத்தான். காலையில் அலுவலகம் செல்வதற்காக அவள் பதினாறு கைகளுடன் வேலை செய்துகொண்டிருக்கும்போது குறைந்து குறைந்து வரும் நேரத்தை அது அவளுக்கு ஒலித்துக்காட்டுகிறது. காலை எழுந்ததும் 'ஏ ரீங்கா ரிங்கா' போன்ற கனிவுகொடுக்கும் பாடல்கள். கீழே பேப்பர் வாசிக்க வரும்போது அதை நானும் கேட்பேன். அவ்வப்போது சில விஷயங்கள் காதில் நுழையும். மண்ணடிக்கோணம் அம்புறோஸ் அவர்களின் பேட்டி போல.


பேட்டியாளர் கனத்த ரேடியோக்குரலில் கேட்க மண்ணடிக்கோணத்தார் தன் முன்னால் மைக் இருப்பதை சில கணங்களில் மறந்து விட்டதாகத் தெரிந்தது. 'வணக்கம் திரு மண்ணடிக்கோணம் அம்புறோஸ் அவர்களே. நீங்கள் பால்மாடுகள் வளர்ப்பதில் நீண்ட அனுபவம் உடைய மூத்தவிவசாயி என்றமுறையில் நாகர்கோயில் பண்பலை வானொலிக்காக உங்களை பேட்டி எடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்'. 'வோ…சேரி' .


'நன்றி. நீங்கள் இந்தமாதிரி பால்மாடுகளை எவ்வளவு வருடங்களாக வளர்த்துவருகிறீர்கள்?'. 'அது கெடக்குல்லா ஒருபாடு காலம்…கொறே காலமாச்சு கேட்டியளா?'. 'எவ்வளவு வருடம் என சொல்லமுடியுமா?'. 'நான் சின்னபிள்ளையா இருக்கும்பம் தொடங்கினதாக்கும்.'. 'உங்கள் வயது எவ்வளவு?' ..'எளுவது இருக்குமா? நீங்க என்ன நினைக்குதிய?'. 'அப்படியென்றால் கிட்டத்தட்ட எழுபது வருடங்களாக நீங்கள் மாடு வளர்த்து வருகிறீர்கள் என்று சொல்லலாமா?'. 'இல்ல பிள்ள, எனக்க அப்பனும் மாடாக்கும் வளத்தது..'


'நன்றி…இந்த எழுபதுவருட அனுபவத்தில் நீங்கள் சில கருத்துக்களைச் சொல்ல முடியுமா?'. 'வோ.'. 'சொல்லுங்கள்.' 'மாடு வளக்கியது நல்லதாக்கும்.' .'சரி…நீங்கள் எவ்வளவு மாடுகளை வளர்க்கிறீர்கள்?'. 'நாலு…மூணு ஜேழ்சி ஒரு கூஸா…பிறவு ஒரு எருமையும் உண்டு…அதுகளுக்க கண்ணுகுட்டிகளை சேக்கபிடாதா சேக்கலாமா?' . 'நன்றி ஐயா…நீங்கள் மாடு வளர்க்கும் முறையை விளக்க முடியுமா?' . 'செம்மையா வளக்குதேன்..வோ'


'அதில்லை…நீங்கள் காலையில் எழுந்ததும் மாடுகளை கவனிப்பீர்களா?'. 'வோ…நான் காலத்த ஒரு நாலுமணிக்கு எந்திரிப்பேன்…ஒடனே பாலுகறவையாக்கும்…கறந்து தீர எப்பிடியும் அஞ்சு ஆவும்…..பாலைக்கொண்டுசெண்ணு கடைகளிலே குடுத்திட்டு ஆறரைக்கு வந்திருவேன்…' 'வந்ததும் என்ன செய்வீர்கள்?'. 'பளஞ்சி குடிப்பேன்'. 'இல்லை ஐயா…மாடுகளுக்கு என்ன செய்வீர்கள்? ". 'மாடுகள குளிப்பாட்டுவேன்….மாடுகள காலம்ப்ற குளிப்பாட்டுகது நல்லதாக்கும்…சாணமெல்லாம் இருக்கும் பாத்தியளா? எல்லாம் நல்லா வைக்கப்பிரி இட்டு தேச்சு களுவினா நல்லா மேயும்..இல்லேண்ணா அதில ஈச்சயும் உண்ணியும் கடிச்சு மேயாது பாத்துக்கிடுங்க'


'எத்தனை மணிக்கு குளிப்பாட்டி முடிப்பீர்கள்?'. 'ஆத்தில கொண்டுபோயி குளிப்பாட்டி வாறதுக்கு எப்பிடியும் எட்டாயிடும்…'. 'பிறகு என்ன செய்வீர்கள்?'. 'உடனே மாடுகளுக்கு வெள்ளம் குடுக்கணும்லா? நல்லா புண்ணாக்கும் கஞ்சிவெள்ளமும் எல்லாம் இட்டு கலக்கி குடுப்பேன்…எள்ளுப்புண்ணாக்கு நல்லது. தேங்காப்புண்ணாக்கு வெல கூடுதலாக்கும்.'. 'அரிய கருத்து ஐயா…அதன்பின் என்ன செய்வீர்கள்?' .'மாடுகள கொண்டு போயி வயலிலயோ இல்லேண்ணா வெளையிலயோ கெட்டுவேன்…மேயணும்லா?'


'சரி, நீங்கள் என்ன செய்வீர்கள்?'. 'நான் கடவத்த எடுத்துகிட்டு புல்லு பறிக்க போவேன்லா?'. 'எப்போது திரும்பி வருவீர்கள்?'. 'அது ஆவும், ஒரு மூணு நாலு மணி…நாலுமாட்டுக்கும் புல்லு வேணும்லா? கறக்குத மாட்டுக்கு நல்லா பச்சப்புல்லு வேணும்…உணக்க வைக்கலு தின்னா அது பீச்சும்.. பாலு அம்பிடும் பீச்சலாட்டு போயிரும்லா?'. 'முக்கியமான கருத்து ஐயா…அதன்பின்னர் என்ன செய்வீர்கள்?'. 'பருத்திக்குரு ஊறவச்சுகிட்டாக்கும் நான் புல்லறுக்க போறது…அதை ஆட்டுக்கல்லிலே இட்டு ஆட்டி பாலெடுப்பேன்…பசுவுக்கு பருத்திப்பால் நல்லதாக்கும்…பாலு ஊறும்'


'முக்கியமான தகவல் ஐயா…அதை கொடுத்து முடித்ததும் என்ன செய்வீர்கள்?' 'சாயங்காலம் பாலுகறக்கணுமே? அதை கறந்து கொண்டு கடையிலே குடுத்திட்டு ஒரு அஞ்சரைக்கு வந்திருவேன்…. வந்ததும் மாடுகள பின்னயும் குளிப்பாட்டுவேன்.'.'இரண்டுமுறை குளிப்பாட்டுவீர்களா?'. ' மேயும்பம் சாணம் பட்டிருக்கும்லா…அப்டியே கெட்டினா கொசு கடிக்குமே..' . 'சரி ஐயா.'. 'கொசுவும் ஈச்சயும் கடிச்சு ரெத்தம் உறிஞ்சினா பசு தீனி எடுக்காம நிக்கும்.. அதனால சாயங்காலம் அதுக்க ஒப்பம் தொளுத்தில இருப்பேன்…'


'இருந்து என்ன செய்வீர்கள்?' 'பொகை போடுகது…பலசரக்கு கடையிலே போயி நல்லா உள்ளித்தோலு கொண்டுவருவேன்…அதை தீயில போட்டாக்கும் பொகையிடுகது…' 'உள்ளித்தோல் என்றால் என்ன என்று சொல்ல இயலுமா?'. 'உள்ளிண்ணா சவாளாவாக்கும்.' .'சவாளா என்றால்?'. 'சவாளாண்ணா இந்த இது இருக்குல்லா… பெல்லாரி…'. 'மன்னிக்கவேண்டும், பெல்லாரி என்றால் என்ன?' .'பெல்லாரிண்ணாக்க … பெரியவெங்காயம்ணு பாண்டியில சொல்லுவானுகள்லா?'. 'பெரிய வெங்காயம்…சரி…அதன் தோலைப் போட்டு புகை போடுவீர்கள்…பிறகு?'. 'பிறவு ஒரு சுருளு கொசுமருந்தும் கொளுத்தி வைக்கணும்…' . 'ஏன்?' .'பொகைத்தீ அணஞ்சிரும்லா?'


'இப்படி எவ்வளவு நேரம் செய்வீர்கள்?' .'எவ்வளவு நேரம்ணு இல்ல…ஒறக்கம் வாறது வரைக்கும் செய்யிலாம்.' .'எப்போது உறக்கம் வரும்?' .'மேஞ்ச பசுவில்லா? ஒரு பத்துபத்தரைக்கு உறங்கிரும்…அதுக்குப்பிறவு நான் போயி வெந்நி போட்டு குளிச்சிட்டு இம்பிடு சுக்கும்வெள்ளம் குடிச்சிட்டு படுப்பேன்…காலத்த எந்திரிக்கணும்லா?' .'பசுக்களை அருமையாக வளர்க்கிறீர்கள் ஐயா.'.  'வோ, நான் அதுகள பெத்த பிள்ளையள மாதிரியாக்கும் வளக்குதது…'


'நன்றி ஐயா…மாடுகளை பராமரிப்பது பற்றி அருமையாக விளக்கினீர்கள்…இந்த பால்மாடு வளர்ப்பால் உங்களுக்கு எவ்வளவு வருடாந்தர நிகர ஆதாயம் கிடைக்கிறது?' . 'என்ன சொன்னிய?'. 'அதாவது உங்களுக்கு கிடைக்கும் லாபம் என்ன?'. 'வோ?'. 'லாபம் என்ன லாபம் ?' . 'லாபமா? நட்டம்! '


'மன்னிக்கவும் ஐயா…பசுக்களை வளர்ப்பதனால் உங்கள் நிகர லாபம்..'. 'மாசம் ஒரு ரெண்டாயிரம் ரூவா வரை கைநட்டம் வரும். அத எனக்க மவன் குடுப்பான்…அவன் பள்ளிக்கொடத்திலே வாத்தியாராக்கும்…பணம் தாறப்ப நாலு கடுத்தவார்த்த சொல்லுவான்…ஆனா தருவான். நல்ல பயலாக்கும்…'


'விவசாயிகள் பால்மாடு வளர்ப்பதில் உள்ள நிகர லாபம்.. அதாவது..' .'பிள்ள இஞ்ச பாக்கணும்…லாபம் பாத்தா பசுவ வளக்கமுடியாது… லாபத்தக் கண்டா நாம பிள்ளையள வளக்கோம்? என்ன சொல்லுதிய?'. 'வணக்கம் ஐயா. அருமையான கருத்துக்களை சிறப்பாக எடுத்துச்சொன்னீர்கள். நன்றி. வணக்கம் நேயர்களே. இதுவரை பால்மாடு வளர்ப்பதைப்பற்றி விவசாயி மண்ணடிக்கோணம் அம்புறோஸ் அவர்களைச் சந்தித்தோம்…'


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 25, 2012 10:30

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அறிய,


நலம். நலம் என நினைக்கிறேன். அண்மையில் கோட்டி கதையைப் படித்து ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டேன். கதை வாசித்து முடித்ததும் இரண்டு சொட்டு கண்ணீர் விட்டேன். பூமேடையை தெரியாதவர் யாராவது குமரியில் இருக்க முடியுமா.. அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவன் என்ற பெருமையை இந்தக் கதை எனக்கு உணர்த்தியது. குமரி ஸ்கேனிங் தொடரட்டும் உங்கள் எழுத்துக்களில்………வாழ்த்துக்கள்..


தக்கலை எச்.முஜீப் ரஹ்மான்


அன்புள்ள முஜீப்,


நன்றி.


பூமேடை போன்றவர்கள் மறக்கப்படவேண்டியவர்கள் அல்ல. அவர்கள் கோமாளித்தனங்கள் மூலம் நம் லௌகீகத்தின், சுயநலத்தின் கோமாளித்தனத்தை சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.


ஜெ


அன்புள்ள ஜெயமோகன்,


தங்களது தீவிர வாசகனான நான் சமீபத்தில் "யானை டாக்டர்" என்ற சிறுகதையைப் படித்தேன். ஒரு முழுமையான சிறுகதையைப் படித்த திருப்தியை கொண்டேன் நீண்ட நாட்களுக்குப் பிறகு. அதைப்பற்றி என்னுடைய பார்வையில் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். ஒரு வாசகனாய் ஒரு எழுத்தாளருக்கு எழுதும் முதல் கடிதம் என்பதையும் கூறிக்கொள்கிறேன்.


குறிப்பு:கீழே எழுதப்பட்டவை எனது ப்ளாக்கில் பதிக்கப்பட்டவை, அதை அப்படியே இங்கு தருகின்றேன்.


http://rojavinkadhalan.blogspot.com/2...


யானை டாக்டர் சிறுகதையின் ஓரிடத்தில் "நான்கு வரிக்கு ஒருமுறை டாக்டரால் யானையைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது" என்று டாக்டரைப் பற்றி அம்மலை மக்கள் சொல்வதாக வருகின்றது. அது போலதான் ஜெயமோகனும் என்று நினைக்கிறன். எந்தக்கதையிலும், அது நாவலோ, சிறுகதையோ அவரால் காட்டைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. காட்டுக்கும் அவருக்குமான நெருக்கமும், அறிவும் அவரின் எல்லா கதைகளிலும் தென்படும். யானை டாக்டர் கதை உண்மையாகவே யானைகளின் மருத்துவராக வாழ்ந்த திரு.கிருஷ்ணமூர்த்தி என்பவரை வைத்து எழுதப்பட்டதாகும். மேலும் கதையில் அவரைப்பற்றி வரும் அனைத்துத் தகவல்களும் சேகரித்து எழுதி இருக்கிறார் என்பதை அறிகின்றேன்.


ரொம்பவும் அழகாகவும், எளிமையாகவும் காட்டைப் பற்றியும், யானை மற்றும் பிற மிருகங்களைப் பற்றிய தகவல்களையும், இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பு அறுந்துபோய் கிடைப்பதைப் பற்றியும் எழுதப்பட்ட சிறுகதை இது.


காட்டிற்குப் புதிதாக வரும் வனத்துறை அதிகாரி அந்தச்சமூகத்தோடு ஒட்டமுடியாமல் அழுகிய யானைகுவியலையும், நெளியும் புழுக்களையும் கண்டு மிரள்கிறான். அங்கே யானைகளுக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி என்பவரோடு நெருக்கம் கொள்கிறான். மிருகங்கள் மீதும், காட்டின் மீதும் அவர் காட்டும் நேசம் அளப்பரியதாக இருக்கின்றது.


செந்நாய் கூட்டத்தோடும், யானைக் கூட்டத்தோடும் அதன் மொழி பேசி, அதன் எண்ணவோட்டங்களைப் புரிந்து கொள்ளுதலும், அதற்கு பதிலுரைத்தலும், அதன் வலிக்காக கலங்கிப்போவதுமாக டாக்டர்.கே நம்மை வரிக்குவரி வியப்பில் ஆழ்த்துகிறார்.


நாட்டில் வசிப்பவன் சகமனிதனை அடிமைப்படுத்துகின்றான், அப்படி வாழவே துடிக்கின்றான். ஏதோ ஒரு வகையில் பிறமனிதனை நாம் ஆளவே முயல்கிறோம். நமக்கு அதிகாரம் தேவைப்படுகிறது, இல்லையா?அப்படிப்பட்டவர்களால் காட்டில் வாழவே முடியாது, ஏனென்றால் காடு ஒவ்வொரு அசைவிலும்,அதன் வலிமையை நிரூபித்து நம்மை சிறியவனாகவே காட்டுகின்றது.


நம்முடைய அதிகாரத்தைக் காட்டி அதோடு மல்லுக்கு நிற்க முடியாது, ஏனென்றால் காடு அதன் கீழ் நம்மை வைத்துக்கொண்டிருக்கும்.


வீசி எறிந்த பீர் பாட்டில் யானையின் கால்களில் புகுந்து, உள்ளே சென்று, சீழ் பிடித்து, நிறைய உண்டு நிறைய நடந்து வாழும் யானையை ஒரே இடத்தில் நகர முடியாமல் செய்து, பட்டினியால் சாக அடிப்பது ஆறறிவு என்று சொல்லிக்கொள்ள நம் இனத்திற்கு தகுதி உண்டா என்ன?


போகப்போக காட்டைப் பழகி, காட்டோடு நெருக்கமாகும் வனஅதிகாரி (கதை சொல்லி) யானை டாக்டரின் மூலம் காட்டின் மொழியைப் புரிந்துகொள்ளத் துவங்குகின்றான். இப்படிப்பட்ட ஒருத்தரைப் பற்றி உலகம் தெரிந்து கொள்ளட்டும் என்ற ஆசையில் அவருக்கு பத்மஸ்ரீ விருதுக்கு ஏற்பாடு செய்கிறான். ஆனால் அவரோ காட்டில் வாழ முதல் தகுதியே மனிதனாய் இல்லாமல் யானையைப் போல், குரங்கைப் போல் அற்பத்தனம இன்றி வாழவேண்டும் என்கிறார். காட்டுமிருகம் ஒன்றிற்கு உன்னைப் புரிந்து கொள்ள முடிகின்றது என்ற மகத்தான விஷயத்தை விட எந்த விருதும் உயர்ந்ததல்ல என்கிறார். (நான் ரொம்பவும் ரசித்த வரி, got goose bumps).


இங்கிலீஷ் பேசிக்கொண்டு, லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குபவன்தான் இங்கு பீர் பாட்டிலை வீசி எறிந்துவிட்டுப் போகின்றான். இன்று படித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு இளைஞனும் அமெரிக்கா போய்விடவேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற போலி லட்சியவாதிகள்தான். அவர்களைப் பார்த்து, அதுதான் வாழ்கை என்று தெரிந்து அவர்கள் பின்னால் ஓடும் பதர்கள் இன்று ஏராளம், இப்படியாகத்தான் நமது இளைய தலைமுறை சீரழிந்து கிடக்கிறது என்று ஜெயமோகன் பொட்டில் அறைந்தார் போல் சொல்கிறார். 'Man, vain insect!'


கார் வாங்கி விட்டேன், இனி அடுத்ததாக பிளாட் ஒன்றை வாங்கி எனது தாய் தந்தை மனைவியை குடிவைக்கவேண்டும், நிம்மதியாக வாழவேண்டும் அல்லது அது தான் நிம்மதி என்ற குறிக்கோளுடன் வாழும் எங்கள் உலகில் இருந்து வேறுபட்டிருக்கும் டாக்டர். கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் காலடி மண்ணில் வாழும் காந்திகளே!


இப்படிப்பட்ட மனிதரையும், அவர் வாழ்கை முறையும் கொஞ்சம் புனைவோடு கலந்து எங்களைப் போன்றவர்களுக்குப் புரியவைத்த ஜெயமோகன் அவர்களுக்கு நன்றி!


அன்புடன்


இப்ராகிம்

பெங்களூர்


அன்புள்ள இப்ராகீம்,


நன்றி.


நீங்கள் நினைப்பதை சரியாக எழுதும் மொழி இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். எழுத்து யார் வாசிக்கிறார்களோ இல்லையோ நம்மை நம்முடைய பல தளைகளில் இருந்து விடுவிப்பதைக் காண்பீர்கள். வாழ்த்துக்கள்.


காடு நமக்கு நாம் செல்லும் திசைக்கு எதிரான ஒரு அழகிய பாதையைச் சுட்டிக்காட்டியபடியே இருக்கிறது என நான் நினைப்பதுண்டு. நண்பர்குழுவுடன் தொடர்ச்சியாக கானுலா செல்வது அதற்காகவே.


அதை உங்களுக்கும் சிபாரிசு செய்கிறேன்.


ஜெ


தொடர்புடைய பதிவுகள்

மிருகங்களின் உணர்வுகள்
யானைடாக்டருக்கு ஒரு தளம்
தினமணி -யானை டாக்டர்
இலட்சியவாதம்-கடிதங்கள்
அன்பை வாங்கிக்கொள்ளுதல்…[கடலூர் சீனு]
கடிதங்கள்
கடிதங்கள்
அறம் வாழும்-கடிதம்
யானை- கடிதம்
யானைடாக்டர்-ஓர் உரை
வாழும் கணங்கள்-கடிதங்கள்
இலங்கையில் இருந்து ஒரு கடிதம்
யானை டாக்டர் இலவச நூல் வினியோகம்
அசடன், யானைடாக்டர்- கடிதங்கள்
யானைடாக்டர் இலவச நூல்
யானைடாக்டர்-படங்கள்
யானை டாக்டர் நினைவு கூரல்-செல்வேந்திரன்
யானைடாக்டர் நினைவுகூரல் நிகழ்ச்சி
யானை டாக்டர்
யானைடாக்டர் [சிறுகதை] -1
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 25, 2012 10:30

February 24, 2012

தமிழகமும் பௌத்த கட்டிடக்கலையும்


அன்புள்ள ஜெயமோகன்,


விரிவான பதிலுக்கு மிக்க நன்றி.


'பல கோயில்கள் இன்று உள்ளூர் தெய்வங்களின் ஆலயங்களாக உள்ளன. அப்படி ஏராளமான சமண ஆலயங்கள் தமிழகத்தில் உருமாறிய வடிவில் உள்ளன'.


நீங்கள் பிரசுரித்த புகைப்படங்களைப் பார்த்தபின் எனக்குத் தோன்றியது எப்படி சற்றும் மாறாமல் இந்துக் கோயில்கள் போலவே அவை உள்ளன என்பதே!


என்னைப் போல இந்தியாவை நேசிக்கும் ஆனால் இந்தியாவை முழுக்க அறியாத பலருக்கு உங்கள் பல கட்டுரைகள் சிறந்த வழிகாட்டிகளாக இருக்கின்றன.


நம் சிற்பக்கலையில் சமணர்களின் பங்களிப்பின் அளவிற்கு பௌத்தர்களின் பங்களிப்பு உள்ளதா என்பதை அறியவும் ஆவலாய் உள்ளேன்.


அன்புடன்,

விஷ்வேஷ்





எகிப்தின் குடைவரை கோயில்


அன்புள்ள விஸ்வேஷ்,


சமண ஆலயங்களை இந்து மன்னர்களே பெரும்பாலும் கட்டியிருக்கிறார்கள். இந்து ஆலயங்களைக் கட்டிய அதே சிற்பிகள்தான் கட்டியிருப்பார்கள். பெரும்பாலும் ஒரு காலகட்டத்தின் சமணர் கோயில்களும் இந்து ஆலயங்களும் ஒரே சிற்பக்கலை மரபைச் சேர்ந்தவையாகவே எங்கும் உள்ளன.


மேலும் சமண ஆலயங்களில் உள்ள சிற்பங்களில் வித்யாதேவிகள், யட்சிகள் போன்ற சில சமண தேவதைகளைத் தவிர்த்தால் பெரும்பாலானவை இந்து தொன்மங்களைச் சேர்ந்தவையே. மும்மூர்த்திகளும் தேவியரும் அதிகமாகக் காணப்படுகின்றன. கணபதி, விஸ்வகர்மா, காலபைரவன் போன்ற மூர்த்திகளையும் அதிகமாகக் காணமுடிந்தது. அவற்றைக் கட்டுவித்த மன்னர்களின் நம்பிக்கையும் அவற்றில் பிரதிபலித்திருக்கலாம்.


பௌத்தம்தான் இந்தியாவில் ஆலயக் கட்டிடக்கலைக்கு அடிப்படைகளை அளித்தது என்று ஒரு கருத்து நவீனப் பண்பாட்டாய்வாளர்களால் கூறப்படுகிறது. இன்றைய கல் கட்டுமானங்களில் மிகப்பழையது எகிப்திய கட்டிடக்கலையே. அது மத்திய ஆசியாவின் கட்டுமானமுறையில் பெரும் செல்வாக்கைச் செலுத்தியது. அந்தக் கட்டிடக்கலை காந்தாரக்கலை வழியாக பௌத்தத்துக்கு வந்தது. பௌத்தம் உருவாக்கிய பெரும் குடைவரை விகாரங்கள் அந்தக் கலைப்பாணியையும் தொழில்நுட்பத்தையும் கொண்டவை.


இதை அஜந்தா எல்லோரா குகைக் குடைவுகளில் காணலாம். கார்லே குகைவிகாரம் மத்திய ஆசிய அல்லது ஐரோப்பிய சிற்பிகளாலேயே செதுக்கப்பட்டிருக்கலாம். ஐரோப்பிய [யவன] பண்பாட்டுத்தாக்கம் அவற்றில் அதிகம். அவற்றில் உள்ள சிற்பங்களின் முகங்களே கூட ஐரோப்பியச் சாயல் கொண்டவை. கார்லே குகைவிகாரம் கட்ட யவன வணிகர்கள் நன்கொடை அளித்திருக்கிறார்கள் என்பதற்கான கல்வெட்டாதாரங்கள் உள்ளன.


இந்தியாவில் அதற்கு முன்பிருந்த ஆலயங்கள் மரத்தாலும் செங்கல்லாலும் ஆனவை. பௌத்தக் கட்டிடக்கலை வழியாக முதலில் குடைவரைக்கோயில்களும் பின்னர் ஒற்றைக்கல் செதுக்குக்கோயில்களும் வந்தன. பின்னர் கல்லடுக்கிக் கட்டப்பட்ட கோயில்கள் உருவாயின. இக்கோயில்களின் உறுப்புகள் பற்றிய கலைச்சொற்கள் எல்லாமே பௌத்தக் குடைவரை சிற்பக்கலையில் இருந்து பெறப்பட்டவை என்கிறார்கள். கோயில்களின் அமைப்பு பழைய மரக்கட்டிடங்களின் பாணியையும் குடைவரை விகாரங்களின் பாணியையும் கலந்து உருவாக்கப்பட்டது. இதுவே பௌத்தர்கள் நம் சிற்பக்கலைக்கு அளித்த முக்கியமான கொடை.


கார்லே மாபெரும் குடைவரை


பௌத்த சிற்பக்கலை இந்தியாவின் பிற சிற்பக்கலை மரபில் இருந்து நிறைய வேறுபாடுகள் கொண்டது. அஜந்தா, எல்லோரா குடைவரைகளிலும் சாஞ்சி, அமராவதி தூபிகளிலும் உள்ள சிற்பங்களில் பௌத்த தொன்மங்களை ஒட்டிய சிற்பங்களின் அளவுக்கே சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையைச் சித்தரிக்கும் சிற்பங்களும் நிறைய உள்ளன. இந்த அம்சம் பௌத்த சிற்பக்கலையின் தனித்தன்மை என்று சொல்லப்படுகிறது.


பௌத்த சிற்பங்களில் புத்தரின் நின்ற,இருந்த,கிடந்த தோற்றங்கள் முக்கியமானவை. பலவகையான யட்சிகள், கின்னரர்களின் சிற்பங்கள் உண்டென்றாலும் தாராதேவியின் சிற்பமே பௌத்த சிற்பங்களில் தனித்துவமும் அழகும் கொண்டது.


ஆனால் சமணச் சிற்பக்கலையும் இந்து சிற்பக்கலையும் பின்னாளில் வளர்ச்சி அடைந்த அளவுக்கு பௌத்த சிற்பக்கலை வளர்ச்சி அடையவில்லை என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் பௌத்த சிற்பக்கலை பதினொன்றாம் நூற்றாண்டுடன் முடிவுக்கு வருகிறது. அதற்குப் பின்னால் அமைக்கப்பட்ட பௌத்த விகாரங்களும் சைத்யங்களும் இந்தியாவில் இல்லை. பக்தி இயக்கத்தை ஒட்டி பௌத்தம் இந்தியாவில் மெல்லமெல்ல மக்களாதரவை இழந்து பின்வாங்கியது. மன்னர்கள், மற்றும் வணிகர்களின் ஆதரவால் சில இடங்களில் மட்டும் எஞ்சியிருந்தது.





சாஞ்சி,சாமானியர் சித்தரிப்பு [ஐரோப்பியச்சாயல்]


1193இல் பக்தியார் கில்ஜி நாலந்தா பல்கலையை அழித்துப் பல்லாயிரம் பிக்குகளைக் கொன்றது இந்தியாவில் பௌத்தம் கிட்டத்தட்ட முழுமையாகவே அழியக் காரணமாக அமைந்தது. மாறாக, சமணம் இஸ்லாமிய ஆதிக்கம் உருவானபின்னரும் தொடர்ந்து பெருவணிகர்களால் ஆதரிக்கப்பட்டது. விஜயநகர சிற்றரசர்களாலும், பேஷ்வாக்களாலும் வணிகர்களாலும் சமண ஆலயங்கள் மீண்டும் உருவாக்கப்பட்டன. அது பௌத்ததுக்கு நிகழவில்லை. பௌத்தக்கலை இந்தியாவுக்கு வெளியே அடைந்த மலர்ச்சியை இந்தியாவில் பெறவில்லை.


தமிழகத்தில் தொன்மையான பல பௌத்த விகாரங்களும் சைத்யங்களும் இருந்திருக்கின்றன. அவை எல்லாம் செங்கல்லாலும் மரத்தாலும் ஆனவை. இங்கே குடைவரை சைத்யங்களும் விகாரங்களும் உருவாகவில்லை. அதற்கான சில காரணங்களை ஊகிக்கலாம். பௌத்தர்கள் ஆலயங்களைக் கட்டுவதில்லை, துறவிகள் தங்கும் விகாரங்களையும் வழிபடும் சைத்யங்களையுமே அமைப்பார்கள். பௌத்தர்களில் தேரவாதிகள் பொதுவாகப் பெரிய கட்டுமானங்களை அமைப்பதில்லை [ஆனால் இந்தியாவிலேயே பெரிய குடைவரை சைத்யமான கார்லே குகை தேரவாதிகளால் உருவாக்கப்பட்டதே]. தேரவாதிகள் சிலைவழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்கள். தமிழகத்தில் ஆரம்பத்தில் செல்வாக்குடன் இருந்தது தேரவாதமே. ஆகவே சாதாரணமான கட்டிடங்களே உருவாக்கப்பட்டிருக்கக்கூடும்.


சோழர் காலத்தில் புகழுடன் இருந்த நாகை சூடாமணி விகாரம் ஸ்ரீவிஜய நாட்டின் மன்னரான சைலேந்திர வம்சத்தினைச் சேர்ந்த திருமாற விஜயோத்துங்கவர்மனால் கட்டப்பட்டது. ராஜராஜ சோழன் அதற்கு நிவந்தமாக ஆனைமங்கலம் என்ற ஊரை அளித்தான். அதை அவன் மகன் ராஜேந்திரனும் உறுதிப்படுத்தினான். இத்தகவல்களைத் தாங்கிய செப்பேடுகள் கிடைத்துள்ளன. இப்பகுதியில் கிடைத்த புத்தரின் செப்புத்திருமேனிகள் முந்நூறுக்கும் மேல். அவை நாகை புத்தர் சிலைகள் என அழைக்கப்படுகின்றன.


பராக்கிரம பாகு என்னும் இலங்கை மன்னன், கி.பி 1256 இல் சோழ நாட்டில் இருந்து பௌத்த பிக்குகளை இலங்கைக்குக் கொண்டு சென்று அங்கே பௌத்த மரபை வளர்த்தான் என இலங்கை வரலாறு சொல்கிறது. ஆகவே சோழர்காலத்தின் கடைசி வரைக்கும் சோழநாட்டில் பௌத்தம் வலுவாக இருந்திருக்கிறது. 1311இல் மாலிக் காபூர் படையெடுப்பில் நாகை சூடாமணி விகாரம் அழிக்கப்பட்டது என அமிர் குஸுரு குறிப்புகள் காட்டுகின்றன. அதன் பின் தமிழகத்தில் பௌத்தக் கட்டுமானங்களாக எதுவும் எஞ்சவில்லை.


ஆனால் பௌத்தர்கள் பதினாறாம் நூற்றாண்டு வரைக்கும்கூட தமிழகத்தில் ஆங்காங்கே இருந்தார்கள். கி.பி.16ஆம் நூற்றாண்டு வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் செல்வாக்குடன் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலயத்தின் உட்பிரகார நிலைக்காலில் உள்ள ஒரு கல்வெட்டை முனைவர் ஜம்புலிங்கம் சுட்டிக்காட்டியிருக்கிறார்.


1580இல் வெட்டப்பட்ட இக்கல்வெட்டு செவ்வப்ப நாயக்கன் தஞ்சையை ஆண்டபோது நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறது. இங்குள்ள திருமலைராஜபுரம் அந்தணர் கிராமம். அருகே உள்ள எலந்துறை அல்லது திருவிளந்துறை பௌத்தர்களின் கிராமம். திருமலைராஜபுரத்துக்கு ஒரு வாய்க்கால் வெட்டப்பட்டது. அதனால் எலந்துறைக்காரர்களின் கொஞ்சம் நிலம் பறிபோயிற்று. இதை ஈடுசெய்ய செவ்வப்ப நாயக்கரின் ஆணைப்படி திருமலைராஜபுரம் மக்கள் தங்கள் ஊரில் அதே அளவு நிலத்தை புத்தர் கோயிலுக்கு அளித்தார்கள். அந்நிகழ்ச்சியை இக்கல்வெட்டு சுட்டுகிறது.


இதை ஏன் கவனிக்கவேண்டும் என்றால், தமிழகத்தில் சமண, பௌத்த ஆலயங்களை இந்து மன்னர்கள் இடித்தார்கள், சமண பௌத்த மதங்களை அழித்தார்கள் என ஒரு பொய் கடந்த சில ஆண்டுகளாக இடதுசாரி வரலாற்றுத் திரிபாளர்களால் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு நிலைநாட்டப்பட்டுள்ளது. அவர்கள் ஆதாரமாகக் காட்டுவது சைவ வைணவ நூல்களில் உள்ள பௌத்த, சமண மதக் கண்டனங்களையும் சில தொன்மக்கதைகளையும் மட்டுமே.


தமிழகத்தில் கடுமையான மதப்பூசல் இருந்தது என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்தப்பூசல் சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் நடுவேயும் இருந்தது. பக்திமரபினருக்கும் தாந்த்ரீகர்களுக்கும் நடுவேயும் இருந்தது. அதற்கு அப்பால் மக்கள் மதப்பூசலிட்டதற்கோ மன்னர்கள் மதநிலையங்களை அழித்தமைக்கோ ஒரு சான்றுகூட இல்லை என்பதே உண்மை. நேர் மாறாக மன்னர்கள் எல்லா மதங்களையும் சமமாக ஆதரித்தமைக்கு ஏராளமான திட்டவட்டமான கல்வெட்டாதாரங்கள், செப்பேட்டுச்சான்றுகள் உள்ளன.


தமிழகத்தில் கடைசியாக ஆண்ட இந்து மன்னர்கள் நாயக்கர்கள். அவர்கள் பெரும்பாலும் வைணவர்களாக இருந்தாலும் சைவத்தை ஆதரித்தனர். சமண, பௌத்த ஆலயங்களையும் ஆதரித்தனர். பதினாறாம் நூற்றாண்டுவரைக்கும்கூட பௌத்தர்களின் உரிமைகளைப் பாதுகாக்க மன்னர்கள் கவனம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் மத ஒற்றுமையுடன் விட்டுக்கொடுத்து வாழ்ந்திருக்கிறார்கள்.


ஒரு சமணரேனும் எஞ்சும் ஊர்களில் இன்றும்கூட சமண ஆலயங்கள் அப்படியே நீடிப்பதை வடதமிழகத்தில் காணலாம். தென் தமிழகத்தில் முழுமையாகவே மக்கள் சமணத்தை விட்டுவிட்டு, சமணத்தின் பண்பாட்டுத்தடங்கள் கூட மக்கள் வாழ்க்கையில் இல்லாமலான பிற்பாடு, கைவிடப்பட்டுக் கிடந்த சமண ஆலயங்கள்தான் சைவ, வைணவ மதங்களுக்குரியவை ஆயின. அதுவும் அந்த மக்களாலேயே வழிபாட்டிடங்களாகப் பயன்படுத்தப்பட்டன.


ஆகவே தமிழகத்தில் எந்த சமண பௌத்த ஆலயங்களும் அழிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை. சமண ஆலயங்கள் பல நிலைகளில் இன்றும் உள்ளபோது பௌத்த சிலைகள் மட்டுமே எஞ்சுகின்றன என்பதை வைத்துப்பார்த்தால் தமிழக பௌத்த மடாலயங்கள் மரத்தாலும் செங்கல்லாலும் ஆனவையாக இருந்திருக்கலாம் என்று ஊகிக்கலாம். அவை காலப்போக்கில் கைவிடப்பட்டு அழிந்திருக்கலாம். தமிழகத்தின் பல பகுதிகளில் புத்தர்சிலைகள் உள்ளன. சில ஊர்களில் புத்தர்சிலைகள் நாட்டார் தெய்வங்களின் பெயர்களில் வழிபடப்படுகின்றன.


தமிழக புத்தர் சிலைகளில் நாகப்பட்டினம் சிலைகள் மட்டுமே கலைரீதியாக முக்கியமானவை என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அவை சென்னை, தஞ்சை அருங்காட்சியகங்களில் உள்ளன. பிறசிலைகள் வெறும் வழிபாட்டுச் சின்னங்கள் மட்டுமே. தமிழகத்தில் மற்றபடி முக்கியமான பௌத்த தலங்கள் ஏதும் இல்லை என்பதே என் எண்ணம்.


ஜெ



கார்லே ஃபாஜா குடைவரை விகாரங்கள்




எல்லோரா குறிப்பு


சாஞ்சி பயணக்குறிப்பு



பௌத்தமும் தமிழும் மயிலை சீனி வெங்கடசாமி


சோழநாட்டில் பௌத்தம்



போதி இணையதளம்




சோழநாட்டில் பௌத்தம், இணையதளம்


தொடர்புடைய பதிவுகள்

அருகர்களின் பாதை 13 — அஜந்தா
அருகர்களின் பாதை 12 – எல்லோரா
அருகர்களின் பாதை 11 – மகாஸ்ருல், தௌலதாபாத், எல்லோரா
நவீனகுருக்கள்,மிஷனரிகள்
சமணம்,சாதிகள்-கடிதம்
துயரம்
கல்கியின் சமணம்
அயோத்தி தாசர்-கடிதங்கள்
அயோத்திதாசர் என்னும் முதல்சிந்தனையாளர்-5
அயோத்திதாசர் என்னும் முதல்சிந்தனையாளர்-4
மதங்களின் தொகுப்புத்தன்மை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 24, 2012 10:30

நயினார்

'காந்திமதி'யின் கொட்டடிக்கு அருகிலேயே மாட்டப்பட்டிருக்கும் ஓவியம் ஒன்றில், நயினார் பிள்ளை தாத்தாவுடன் இணைந்து 'குட்டி யானை நயினார்' நின்று கொண்டிருக்கும். மனபிரமைதான் என்பது அறிவுக்குத் தெரிந்தாலும், மனதுக்குள் 'சும்மாயிருக்கியா மக்கா' என்று நான் தொட்டு உறவாடி, விளையாடிய நயினார் என்னிடம் கேட்பதாகவே உணர்கிறேன்.


யானை பற்றிய எந்தச் சித்தரிப்பையும் நான் விரும்புவேன். நண்பர் சுகா சொல்வனம் இதழில் எழுதியிருக்கும் இந்தக்கட்டுரை சமீபத்தில் வாசித்த அழகிய சித்தரிப்பு.


தொடர்புடைய பதிவுகள்

அள்ளக் கிடைக்காத அம்பாரம்
தவில்
எதிர்வினைகள்
கே.வி.மகாதேவன்
இரு இணைப்புகள்
கடிதங்கள்
விக்கி லீக்
நாவல் கோட்பாடு — நூல் விமர்சனம்
கதைக்களன் – ஓர் உரையாடல்
கலாப்ரியா படைப்புக்களம் – நிகழ்வுக் குறிப்புகள்
ஆயிரத்தில் ஒருவன், ராமச்சந்திரன்
சென்னை, மூன்று சந்திப்புகள்
சொல்வனம் கடிதங்கள்
ஒரு முகம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 24, 2012 10:30

February 23, 2012

'கருத்துவேறுபாடு'

நீண்ட நாட்களாகவே இக்கேள்வியை நம் குழுமத்தில் எழுப்ப எண்ணி இருந்தேன். இப்போது பீலி சேர்ந்து அச்சு முறிந்தாயிற்று. திருமதி கவிதாவின் கடிதத்திலும் வழக்கமான ("உங்களின் எல்லாக் கருத்துக்களுடனும் நான் ஒத்துப் போவதில்லையானாலும்") இந்தத் தேய்ந்து போன வார்த்தைகள். அறம் கதைகளின் முன்னுரையிலும் ஷைலஜா இதைப் பயன்படுத்தியிருந்தார். ஜெ தளத்தில் வரும் அநேகக் கடிதங்களில் இது தவறாமல் இடம்பெறுகிறது. நேர் பேச்சில் நண்பர்களிடம் ஜெ-வைப் பற்றிப் பேசும்போதெல்லாம் முன்னுரையாக அவர்கள் தவறாமல் உதிர்க்கும் வாக்கியம் இது. இதுவரை ஜெ-யின் எந்தக் கருத்து தவறானது, எவ்வாறு தாம் மாறுபடுகிறார்கள் என எவ்வளவு வலியுறுத்தியும் யாரும் என்னிடம் விளக்கியதில்லை.


இப்புதிரின் விடை என்ன, இந்த முன் ஜாக்கிரதையின் அடிப்படை என்ன ?


இதற்குப் பதிலளிக்கவில்லை என்றால் ஜெ உட்பட உங்கள் அனைவரின் தலைகள் சுக்கு நூறாக வெடித்துச் சிதறட்டும்.


கிருஷ்ணன்


அன்புள்ள கிருஷ்ணன்


என்னுடன் அறிமுகம் செய்துகொள்பவர்கள் பெரும்பாலும் 'நான் உங்கள் கதைகளை விரும்புகிறேன், ஆனால் எனக்குக் கருத்துவேறுபாடுகள் உள்ளன' என்ற வரியுடன்தான் ஆரம்பிப்பது பலகாலமாகவே வழக்கம்தான். தொடர்ச்சியாகக் கருத்துச்செயல்பாட்டில் ஈடுபட்டிருப்பவர்கள்,  நான் பேசும் தளங்களில் தங்கள் தரப்பைத் திட்டவட்டமாகப் பதித்துக்கொண்டிருப்பவர்களே அந்தவரியைச் சொல்லத் தகுதி படைத்தவர்கள். மற்றவர்கள் இரு காரணங்களுக்காகச் சொல்கிறார்கள். முதன்மையானது என் மேல் காழ்ப்போ கோபமோ கொண்ட பிற நண்பர்களுடன் உரசல் வராமலிருக்கும் முன்னெச்சரிக்கைதான்.


பொது வாசகர்களைப் பொறுத்தவரை அதற்கு 'என்னை ஒரு தனித்துவம் உள்ள ஆளுமையாக அங்கீகரித்துப் பேசுங்கள்' என்பது மட்டுமே பொருள். அது ஒருவகையான தாழ்வுணர்ச்சியின் வெளிப்பாடு, ஆனால் இயல்பானது. தன்னுடைய கருத்துக்கள் பேச்சில் இயல்பாக வெளிப்பட்டுத் தன் தனித்தன்மை தெரியவரட்டுமே என்ற தன்னம்பிக்கை இருந்தால் அதைச் சொல்லத் தேவையில்லை.


பொதுவாக இவ்வாறு சொல்பவர்கள் இருவகையினர். பெரும்பாலானவர்கள் உண்மையில் எதிர்க்கருத்து எதையும் கொண்டிருப்பதில்லை. சொல்லப்போனால் என்னுடைய கருத்துக்கள் எதையும் விரிவாக யோசித்திருப்பதுகூட இல்லை. பேச்சுக்களில் என்னுடைய கருத்துக்கள் என அவர்கள் சொல்வதில் பெரும்பாலானவை உண்மையில் நான் சொன்னவையாக இருக்காது. எங்காவது கேள்விப்பட்ட, அல்லது அவர்களே குத்துமதிப்பாகப் புரிந்துகொண்ட ஒன்றாக இருக்கும். அதை எங்கே வாசித்தோம் என்றுகூட அவர்களால் சொல்ல முடியாது. 'நீங்க இப்டி சொல்றீங்களே' என அவர்கள் சொல்லும்போது 'நான் அப்டி எங்கயுமே சொல்லலை' என்றோ 'எந்த எடத்திலே சொல்லியிருக்கேன் சொல்லுங்க' என்றோ நான் சொன்னதுமே அப்படியே நின்றுவிடுவார்கள்.


உண்மையில் மாற்றுக்கருத்து கொண்டவர்கள் நான் சொன்ன தரப்பைத் திட்டவட்டமாக அதே சொற்களில் மேற்கோள் காட்டக்கூடியவர்களாக இருப்பார்கள். ஏனென்றால் அதைப்பற்றி அவர்கள் பல கோணங்களில் ஏற்கனவே யோசித்திருப்பார்கள். பலரிடம் விவாதித்திருப்பார்கள். பிறருக்குப் புகைமூட்டமான நினைவுகளே இருக்கும்.


இதற்குக் காரணம், இவர்கள் பெரும்பாலும் அறிமுக வாசகர்கள் என்பதே. என்னுடைய எழுத்துக்களுக்கு மட்டுமல்லாமல், இலக்கியத்துக்கும் சிந்தனைத்தளத்துக்கும் புதியவர்கள். நான் என்ன பேசிக்கொண்டிருக்கிறேன், எந்தப் பின்புலத்தில் அவை முன்வைக்கப்படுகின்றன என்ற எந்த புரிதலும் இவர்களிடம் இருப்பதில்லை. புதியதாகக் கல்லூரியில் சேர்ந்த கிராமத்து மாணவன் போல ஒட்டுமொத்தமான ஒரு திகைப்புதான் இருக்கும். அந்தத் திகைப்புக்குள் தொலைந்து போய்விடக்கூடாது, தனித்தன்மையைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்ற எச்சரிக்கையும் இருக்கும். 'நானும் ஒரு ஆள்தான்' என்ற சுயபோதம் அது. அதுவே அச்சொற்றொடராக வெளிப்படுகிறது.


ஆரம்ப காலத்தில் 'எனக்குக் கருத்து வேறுபாடுகள் உண்டு' என ஒருவர் சொன்னதுமே 'என்னென்ன கருத்துக்களிலே வேறுபடுறீங்க? அதுக்கு என்னென்ன ஆதாரங்கள வச்சிருக்கீங்க?' என உடனே கேட்டு மடக்கும் துடிப்பு எனக்கிருந்தது. இப்போது அதை ஒரு பரிவுப் புன்னகையுடன் எதிர்கொள்ளப் பழகிவிட்டேன். நம் சூழலின் பொது மனநிலையின் இயல்பான ஒரு பகுதி அது, அவ்வளவுதான்.


உண்மையில் என் கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்து என்பது இயல்பாக எழுந்து வருவது. மாற்றுக்கருத்து உடையவர் அதைப்பற்றியே யோசிப்பார். அதற்கான தரவுகளையும் தர்க்கங்களையும் திரட்டிக்கொண்டிருப்பார். அதன்பின் அவரால் அதைக் கோர்வையாக முன்வைக்காமலிருக்க முடியாது. அப்படிப் பல வாசகர்கள் எழுதிய பதில்கருத்துக்களையும் என் விளக்கங்களையும் இணையத்தில் காணலாம். அவர்கள் 'எனக்கு மாற்றுக்கருத்து இருந்தாலும்' என பொத்தாம் பொதுவாக சொல்லிச்செல்வதில்லை.


நான் ஒற்றைவரிக் கருத்துக்களைச் சொல்வதில்லை என்பது உண்மையில் மாற்றுக்கருத்துடன் என் தரப்பை வாசிப்பவர்களுக்குத் தெரியும். வரலாற்றுப் பின்புலத்துடன் தர்க்கபூர்வமாக விரிவாக என் தரப்பைச் சொல்ல எப்போதும் முயன்றிருப்பேன். ஆகவே 'அது அப்டி இல்லீங்க' என ஒற்றை வரியில் என் தரப்பை ஒருவர் மறுக்க முடியாது. என் கருத்துக்களுக்கு உண்மையான மாற்றுத்தரப்பு உடையவர் அவரிடமும் இதற்குப் பெரும்பாலும் சமமான ஒரு வரலாற்றுப் பின்னணியையும் தர்க்கத் தொடர்ச்சியையும் வைத்திருப்பார்.


அவ்வாறு முழுமையான ஒரு மாறுபட்ட கருத்து இல்லாமல் இருக்கும் வெறும் அபிப்பிராயங்கள் என்னைப்பொறுத்தவரை இல்லாதவை மட்டுமே.


ஆனால் ஒன்றுண்டு. இன்று என்னுடைய நல்ல வாசகர்களாக இருக்கும் பலரும் இப்படிச் சொல்லிக்கொண்டு அறிமுகமானவர்களே. தொடர்ந்து வாசித்து, விவாதித்து மெல்லமெல்ல நெருங்கி வருகிறார்கள். அதன்பின் அந்த முன்ஜாமீன் அவர்களுக்குத் தேவையிருப்பதில்லை. நண்பர்களாக ஆகி சொல்லவேண்டியவற்றை நேரடியாகச் சொல்லிவிடுவார்கள். ஆகவே ஒருவர் அந்த வரியைச் சொல்லும்போது, புன்னகையுடன் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன்.


ஜெ


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 23, 2012 10:30

காவல்கோட்டம் – கடிதம்

அன்புள்ள ஜெ,


படிப்பது எனக்கு பிடித்தமான விஷயம். என்னுள் இருக்கும் நோய்க்குப் படிப்பதும் ஒரு வித மருந்தாகவே அமைகிறது. காவல்கோட்டம் பற்றிய என் கருத்துக்கள்.


ஒன்றரை ஆண்டு முன்பு காவல்கோட்டம் பற்றிக் கேள்விப்பட்டு இரண்டு பக்கங்கள் படித்தவுடன் 'இத்தகைய நாவல் தமிழில் வந்திருக்கிறதே' என்ற மகிழ்ச்சியுடன் என் நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். நான் படித்தவுடன் அவர்களும் படித்து நல்ல நாவல் என்றே பாராட்டினர். நாங்கள் அப்பொழுது இணையக் குழாய்ச் சண்டையை அறிந்திருக்கவில்லை.


1. காவல் கோட்டம் எனக்கு நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தந்தது. 'தலை சிறந்த' என்ற conceptஇல் எனக்கு உடன்பாடு இல்லை. பத்து நல்லவர்களைக் குறிப்பிட்டு அவர்களில் இவரே தலைசிறந்த நல்லவர் என்று முடிவு கட்டுவது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் இந்தத் 'தலை சிறந்த நாவல்' concept. இதைத் 'தலை சிறந்த நாவல்' என்று கொண்டாடுபவர்களும் அதை எதிர்ப்பவர்களும் எவ்வளவு பலவீனமானவர்கள்,அவர்களின் மனம் எவ்வளவு தூரம் விரிவடையவில்லை என்பதையே காட்டுகிறது.


கல்லூரி நாட்களில் நான் 'ஒவ்வொரு பக்கத்தையும் postmortem' செய்வேன்… எனக்கு இப்பொழுது அது ஒரு சிறுபிள்ளைத்தனம் என்றே தோன்றுகிறது. தவறுகளைச் சுட்டிக்காட்டலாம், ஆனால் இந்த நாவலில் இது இடம் பெறவில்லை, 1920இல் முடித்துவிட்டார் என்ற வாதங்கள் ஒரு படைப்பாளியின் உரிமையை எதிர்க்கும் வாதங்கள். என்னைப் பொறுத்தவரையில் ஒரு நாவல் 'almost perfect' ஆக இருந்தால் நல்லது. 'perfect' என்ற ஒரு concept இருந்தால் மனிதனின் தேடுதல் என்றோ முடிவுற்றிருக்கும். மனித வாழ்க்கையும் perfect இல்லை. இறக்கத்தான் போகிறோம் .


2. 200 பக்கம் தாண்ட முடியவில்லை, கஷ்டப்பட்டுப் படித்தேன் என்று விமர்சனம் செய்பவர்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. ஒரு நல்ல படிப்பாளி 'Unknown Territory'இல் பயணம் செய்யவேண்டும். தனக்குத் தெரிந்த சமாச்சாரத்திலே மூழ்கக் கூடாது. ஒரு பக்க சினிமா விமர்சனமும், ஒரு பக்க எகனாமிஸ்ட் கட்டுரையும் ஒரே கால அளவில் படிக்க முடியுமா? இரண்டும் ஒன்றா? இவர்கள் சொல்வதைப் பார்த்தால் தினத்தந்தியில் வரும் 'கன்னித்தீவு' சிறந்த வரலாற்று நாவலாகும். எழுத்தாளர் சுஜாதாவை எனக்குப் பிடிப்பதற்கு ஒரே காரணம் அவர் நல்ல படிப்பாளி. இவர்கள் நெருடாவையும், சங்க இலக்கியத்தையும் ஒரே மூச்சிலா படித்துப் புரிந்து கொண்டார்கள்? அவை 'சங்க இலக்கியம், நெருடா எழுதியது' இது வெறும் சு. வெங்கடேசன் எழுதியது. தடை எங்கே இருக்கிறது என்று விமர்சனம் செய்பவர்கள் புரிந்துகொண்டால் நல்லது.


3. இங்கே குழாயடிச் சண்டை நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு இருக்கும் ஒரே ஆச்சரியம் இவர்களுக்கு 'எங்கே அவ்வளவு நேரம் கிடைக்கிறது?'அவர்களின் வீட்டில் விசாரித்தால் இவர்களின் நிலைமை என்ன என்று தெரியும். இப்படி சண்டை போட்டுக்கொண்டே இருந்தால் இவர்கள் எப்படி நல்ல இலக்கியம் படைப்பார்கள். இரண்டாம் உலகப்போரைப் பற்றி ஏராளமான ஐரோப்பியர்கள் இன்னும் படம் எடுக்கின்றனர். அதற்காக அவர்கள் செய்வது திருட்டு ஆகுமா? Inspirationக்கும் copyக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் இங்கு அதிகமாக விமர்சனம் எழுதுகின்றனர். இதில் வேறு இவர்கள் தங்களை சாமான்யர்களின் அறிவாளிகள் என்று கூறிக்கொள்கிறார்கள். கஷ்டம் தமிழுக்கு.


தன்னுடைய முதுமையில் இவர்கள் தங்களின் பங்களிப்பை யோசித்துப் பார்த்தால் வெறும் வருத்தம் மட்டுமே மிஞ்சும் . சு.வெங்கடேசன் அப்படி வருந்தத் தேவையில்லை.


எல்லோருக்கும் இங்கே பிரச்சனை 'நான்தான் அடுத்த ஜெயகாந்தன்' என்று நினைத்துக் கொண்டிருக்கையில் யாரோ ஒருவர் விருதைத்தட்டிச் சென்றுவிட்டார் என்பதே. கண்டிப்பாக வயிற்றெரிச்சல் இருக்கத்தான் செய்யும்.


பால்.


அன்புள்ள பால்,


நன்றி.


காவல்கோட்டம் இலக்கியத்தன்மையுடன் இல்லை என்று எண்ணும் தலைசிறந்த வாசகர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் கருத்துக்களை நான் முக்கியமாகவே நினைக்கிறேன். ஒரு படைப்பு பற்றி மாற்றுக்கருத்து வருவதும் வேறுபட்ட மதிப்பீடுகள் நிகழ்வதும் மிகமிக இயல்பானது. நான் குறிப்பிடுவது அந்நாவலை முன்வைத்து நிகழும் தனிப்பட்ட தாக்குதல்களைப்பற்றி மட்டுமே.


நேர்மாறாக எனக்கு வெங்கடேசன் மீது பெரிய மதிப்பும் நட்பும் இல்லை. அவர் எழுதி பேசி நான் அறிந்ததெல்லாமே வெறும் கட்சி அரசியல். அதிலும் அவரது பிராமண வெறுப்பரசியல் பேச்சு அவர் மார்க்ஸியரா இல்லை திராவிடர் கழகத்தவரா என சந்தேகம் கொள்ளச்செய்வது.


என்னைப் பொறுத்தவரை ஒரு படைப்பை வாசிக்கையில் அது மட்டுமே முக்கியம். தனிப்பட்ட விஷயங்கள் மனதில் நுழைவதில்லை என சொல்லமாட்டேன், இருக்கும்தான். ஆனால் கொஞ்ச நேரத்தில் அந்தப் படைப்பு உருவாக்கும் புனைவுலகுக்குள் சென்றுவிடுவேன். அதன்பின் அந்த உலகம் மட்டுமே எனக்கு முக்கியம். அதை எழுதியவர் அல்ல. அவ்வகையில்தான் காவல்கோட்டத்தை மதிப்பிடுகிறேன்.


இலக்கியப்படைப்புகளை வரிசைப்படுத்துவது உலகமெங்கும் உள்ளதுதான். அது ஒரு விமர்சனமுறை. ஆனால் முழுமுற்றாக அப்படி வரிசைப்படுத்த முடியாதென்பதையும் ஒப்புக்கொள்கிறேன். எந்த விமர்சனமுறையும் அப்படித்தானே? முழுமையான புறவய மதிப்பீடு என ஒன்று இல்லை. 'இன்னின்ன காரணங்களால் நான் இப்படிச் சொல்கிறேன்' என்பதே இலக்கிய விமர்சனம்.


ஜெ


தொடர்புடைய பதிவுகள்

சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அக்காதமி விருது
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 23, 2012 10:30

மானுடம் வெல்லும், வானம் வசப்படும்

ஜெமோ,


பிரபஞ்சனுக்கு சாகித்ய அகாடமி விருது 'வானம் வசப்படும்' என்ற நாவலுக்குத்தான் கிடைத்தது. மானுடம் வெல்லும் நாவல்தான் பாண்டிச்சேரி ஆனந்தரங்கனார் டைரிக் குறிப்புக்களை ஒட்டி எழுதப்பட்டது. தகவல் சரிபார்த்துவிட்டு எழுதவும்.


இப்போது திடீரென்று மானுடம் வெல்லும் உசந்த நாவல் என்று சொல்கிறீர்கள். இதற்கு முன்னர் எங்காவது சொன்னதுண்டா?


சாமி



அன்புள்ள சாமி,


பிழைதிருத்தத்துக்கு நன்றி. திருத்திவிடுகிறேன்.


மானுடம் வெல்லும் நாவலின் இரண்டாம் பகுதிதான் வானம் வசப்படும். அதுவும் ஆனந்தரங்கம்பிள்ளை குறிப்புகளை ஒட்டி எழுதப்பட்டதே


மானுடம் வெல்லும் பற்றி என்னுடைய 'நாவல்' நூலில் 1992 லேயே எழுதியிருக்கிறேன். பிறகும் பல இடங்களில் எழுதியிருக்கிறேன். மானுடம் வெல்லும் தமிழின் முதல் வரலாற்றுநாவல் என்பது என் எண்ணம்


மானுடம் வெல்லும் வெளிவந்தபோது அது ஆனந்த ரங்கம் பிள்ளை குறிப்புகளின் 'காப்பி' என ஒரு பேச்சு எழுந்தது. ஆகவே தர்மபுரியில் 1992 ல் ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்தேன். அதில் பிரபஞ்சனை வரவழைத்து பேசவைத்து கௌரவித்தேன்.


வரலாற்றெழுத்துக்கும் இலக்கியத்துக்குமான உறவைப்பற்றி நான் அப்போது பேசிய உரையும் பிரசுரமாகியிருக்கிறது. அதே கருத்தையே இப்போதும் சொல்கிறேன்


ஜெ



பிரபஞ்சனின் மானுடம்வெல்லும் சிலிகான் ஷெல்ஃப்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 23, 2012 04:40

February 22, 2012

காவல்கோட்டமும் தோழர்களும்

அன்புள்ள ஜெமோ,


முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த மாதவராஜ் காவல்கோட்டத்தைப் பிரித்து மேய்ந்திருப்பதை வாசித்தீர்களா? அதற்கு தமிழ்ச்செல்வன் அளித்துள்ள அங்கீகாரத்தையும் நீங்கள் வாசிக்கலாம். உங்கள் மேலான கருத்து என்ன?


பிகு: நீங்கள் அந்த நாவலை எடிட் செய்ததாக ஒரு பேச்சு அடிபடுகிறதே…


சங்கர்.





சு.வெங்கடேசன்


அன்புள்ள சங்கர்,


காவல்கோட்டத்தைப் பற்றிய என்னுடைய மேலான கருத்தை விரிவாக எழுதிவிட்டேன், அந்நாவல் வெளிவந்தபோதே. வாழ்த்துக்களையும் தெரிவித்துவிட்டேன். என்னுடைய எல்லாக் கருத்துக்களும் மேலானவையே, கொஞ்சம் படித்துப் பாருங்கள்.


மாதவராஜ் விமர்சனம் எழுதவில்லை. அது அபிப்பிராயம். இலக்கிய விமர்சனம் என்பது ஒருவர் தன் இலக்கியக்கொள்கையைக் கொண்டு ஓர் இலக்கிய ஆக்கத்தைத் தர்க்கபூர்வமாக ஆராய்ந்து தன் கருத்தை முன்வைப்பது. பிடிக்கலை, பிடிச்சிருக்கு என்பது விமர்சனம் அல்ல.


மாதவராஜுக்கு வந்தியத்தேவன் குதிரையில் குந்திய தேவனாக செல்லும் காட்சி மனம் கவர்ந்தது. ஆகவே அதுவே வரலாற்று நாவல், அந்த மொழிநடையே உயர்ந்தது என அவர் நினைக்கிறார். அந்த வாசிப்புத்தரம் கொண்டவருக்குக் காவல்கோட்டம் இரும்புக்கடலை போல இருக்கும் என்பது இயல்புதான். மாதவராஜுக்குக் காவல்கோட்டம் நாவல் என்ன ஏது என்றே புரியவில்லை என்பது எவரும் எதிர்பார்க்கக்கூடியதே.


நான் கல்கியின் நாவல்களை சிறுவர்களின் ஆரம்பகட்ட வாசிப்புக்குரிய ஒரு கற்பனாவாதப் புனைவு என்றே நினைக்கிறேன். சின்னச்சின்ன வாக்கியங்களில் எளிமையாகக் கதைமட்டும் சொல்லும் அந்த நடை குழந்தைகளுக்குரியது. இலக்கியப்படைப்பின் நடை அல்ல அது. இலக்கியப்படைப்பின் நடை என்பது தகவல்களும், உணர்வுகளும், சொல்நுட்பங்களும் செறிந்தது.





மாதவராஜ்


கல்கியை ஒரு குழந்தைக்கதைசொல்லி என நினைக்கிறேன். அந்த நிலையில் அவர் தமிழுக்கு மிகமிக முக்கியமானவர் என்றே சொல்லிவருகிறேன். ஆனால் என் நோக்கில் வரலாற்றுநாவல் என்பது அது அல்ல. தமிழின் முதல் வரலாற்றுநாவல் பிரபஞ்சனின் 'மானுடம் வெல்லும்' தான்.


பிரபஞ்சன் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகளையே தொண்ணூறு சதம் திருப்பி எழுதியிருக்கிறார். அப்படித் திருப்பி எழுதும் விதத்தில் அது நாவலாகிறது. ஆனந்தரங்கம் பிள்ளையிடம் இல்லாத ஒருங்கிணைவும் மையநோக்கும் மானுடம் வெல்லும் நாவலில் நிகழ்கிறது. தல்ஸ்தோய் தன் முப்பாட்டி எழுதிவைத்திருந்த குடும்ப பைபிளைப் பெருமளவுக்கு அப்படியே போரும் அமைதியும் நாவலில் கையாண்டிருக்கிறார் என்பதும் நாமறிந்ததே.


வரலாற்றுநாவல் என்றால் என்ன என விரிவாகவே எழுதியிருக்கிறேன். வரலாற்றுநாவல் என்பது சுஜாதாவின் சொற்களில் சொல்லப்போனால் 'கச்சணிந்த பெண்களும், திமிறும் குதிரைகளும், உறைவாள்களும், உறையூர் ஒற்றர்களும் அல்ல'. வரலாற்றுநாவல் என்பது திருப்பிச்சொல்லப்பட்ட வரலாறேதான். அந்தத் திருப்பிச்சொல்லும் முறையில் நிகழ்ச்சிகளைத் தொடுக்கும் ஒழுங்கு, நிகழ்ச்சிகளைக் குறியீடுகளாக ஆக்கும் நுட்பம் போன்றவற்றினூடாக ஆசிரியன் உருவாக்கும் மையநோக்குதான் அதைக் கலைப்படைப்பாக ஆக்குகிறது.


இங்கே நாம் இன்னும் வரலாற்றுக் கற்பனாவாதக் கதைகளே வரலாற்றுநாவல் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஒரு வரலாற்றுநாவலை அது வரலாற்றில் இருந்து 'காப்பி' அடிக்கிறது என்று குற்றம்சாட்டுமளவுக்கு மூளைக்குறைபாடுகளுடன் வளர்ந்துகொண்டிருக்கிறோம். வானம் வசப்படும் வெளிவந்து சாகித்ய அக்காதமி விருது பெற்றபோதும் அதைக் கல்கியுடன் ஒப்பிட்டு நிராகரிக்கும் பேச்சுகள் எழுந்தன. ஆனால் அன்று தோழர்களுக்கு பிரபஞ்சன் கட்சி சார்பு அடிப்படையில் ஏற்புடையவராக இருந்தார். காவல்கோட்டம் தமிழின் அடுத்த முக்கியமான வரலாற்றுநாவல் – அதன் எல்லாக் குறைபாடுகளுடனும்.


மாதவராஜ் போன்ற எளிய தோழர்களின் எளிய வாசிப்பை நான் நிராகரிக்கவில்லை. அதற்கு ஒரு மதிப்பு உண்டுதான். ஆனால் இந்நாவல் வெளிவந்து அவர்களின் அமைப்பால் இது தூக்கிப்பிடிக்கப்பட்டபோது அவர் தன் 'மேலான' கருத்தை எழுதியிருக்கவேண்டும். அப்போது என்னைப்போன்றவர்கள் அந்த அமைப்புக்குள் மாற்றுக்கருத்துக்களும், இலக்கிய விவாதமும், ஏன் இலக்கியம்கூட, கொஞ்சமேனும் உள்ளன என்று நம்ப முயற்சிசெய்திருப்போம். ஒருவரை ஒருவர் தூக்கிப்பிடிக்கும் சில்லறை எழுத்தாளர்களின் கட்சிசார் குறுங்குழுதான் அது என எண்ணுவதைக் கொஞ்சம் தள்ளி வைத்திருப்போம்.


ஆனால், வெங்கடேசன் ஒரு சாதியவாதி, இந்துத்துவவாதி, இலக்கியத்திருட்டாளர், கட்சிக்குள் நாசவேலை செய்பவர் போன்ற எல்லா வசைகளும் அவர் சாகித்ய அக்காதமி விருது பெற்றபின்னர் மட்டுமே சொல்லப்படுகின்றன என்னும்போது என்னைப்போன்ற பொதுமக்களுக்கு சில சந்தேகங்கள் வரத்தான் செய்கின்றன. அதுவும் தோழர்களின் வழக்கப்படி யாரென்றே தெரியாத தோழர் எழுந்து முக்கியமான ஒருவரை சிலுவையில் ஏற்றும் குற்றச்சாட்டுகளை 'சொல்வது' ஸ்டாலின் காலம் முதலே வரும் உத்தி அல்லவா?





ச.தமிழ்ச்செல்வன்


தோழர்களின் வழிமுறைகளை எவ்வளவு நாட்களாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்! ஒருவரை ஒழித்துக்கட்டுவதென்றால் கையில் இருக்கும் எல்லா அடைமொழிகளையும் சூட்டிவிடுவதுதான் வழக்கம். வெங்கடேசன் மீது பாலியல்குற்றச்சாட்டு மட்டும் ஏன் முன்வைக்கப்படவில்லை என்பதுதான் புரியவில்லை. உ.ரா.வரதராஜனைத் தீர்த்துக்கட்டியது அதுதானே? தோழர்கள் கனிந்துவிட்டார்களா இல்லை பயந்து விட்டார்களா?


வெங்கடேசன் இந்துத்துவர் ஆகியிருப்பது ஆச்சரியமளிக்கவில்லை. அவர் எத்தனைபேரை அப்படி முத்திரை குத்தியிருப்பார்! இதைத்தான் அய்யங்கார்கள் பிராரப்தம், சஞ்சிதம், ஆகாமியம் என விரிவாக விளக்குகிறார்கள். ஆனால் இதற்கு முன் முற்போக்கு முகாமைச் சேர்ந்த கந்தர்வன், பவா செல்லத்துரை, ஷாஜகான், போப்பு, தமிழ்ச்செல்வன், தேனி சீருடையான், கவின்மலர் எனப் பலரை நான் பாராட்டியிருக்கிறேன். அவர்களை எல்லாம் இந்துத்துவத் தரப்பிலே சேர்த்துக்கொடுத்தார்கள் என்றால் இந்துத்துவர்கள் எனக்கு ஏதாவது 'பாத்து போட்டு'க் கொடுக்கும்படி அவர்களிடம் கேட்டுக்கொள்வேன்.


இந்நாவல் அச்சாகிக்கொண்டிருந்த காலகட்டத்தில் வெங்கடேசனை நான் மதுரை புத்தகக் கண்காட்சியில் முதன்முறையாகச் சந்தித்தேன். அதற்கு ஒருவருடம் முன்னரே வசந்தகுமார் வெங்கடேசனின் காவல்கோட்டம் பற்றிச் சொன்னார். வசந்தகுமார் மாதக்கணக்கில் மதுரையில் சென்று தங்கி நாவலை வெங்கடேசனுடன் சேர்ந்து செப்பனிட்டுக்கொண்டிருந்தார் என அறிந்திருந்தேன்.


தோழரை வசந்தகுமார் அறிமுகம் செய்து வைத்தார். நேர்ச்சந்திப்பில் பொதுவாக நல்ல அரசியல்வாதிகள் செய்வது போல வெங்கடேசன் மையமாகச் சிரித்தார், கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தார். நான் அவர் என்னைத் திண்ணையில் 'ஃபாசிச ஓநாய்' என எழுதியதைச் சுட்டிக்காட்டி சிரித்தேன், அதன்பின்னர்தான் கொஞ்சம் இலகுவானார். கீழக்குயில்குடி சமண ஆலயங்கள் பற்றிக் கொஞ்சம் பேசிக்கொண்டோம். அவர் அப்பாறைகளைக் காக்க எடுக்கும் நடவடிக்கைகளைப்பற்றிச் சொன்னார். மற்றபடி நான் வெங்கடேசனை சந்திக்கவோ அவரது நாவலை முன்னரே வாசிக்கவோ இல்லை.


காவல்கோட்டம் வெளிவந்து வசந்தகுமாரால் எனக்கு அனுப்பப்பட்டபோது நான் ஊரில் இல்லை. என் மனைவி வாசித்துவிட்டு மிகநல்ல கருத்து சொன்னாள். அவள் அளவுக்கு நல்ல வாசகர்களை நான் மிகக்குறைவாகவே பார்த்திருக்கிறேன். 'வரலாற்றில் பெண்கள் முக்கியப் பங்காற்றுவதைச் சொல்லும் முதல் இந்திய நாவல்' என்பது அவள் கருத்து.





மேலாண்மை பொன்னுச்சாமி


அதன்பின் மேலும் கொஞ்சநாள் கழித்து நாவலை வாசித்தேன். நாவலைப்பற்றி நான் விரிவாக எழுத இரு காரணங்கள். ஒன்று, அதில் இருந்த மார்க்ஸிய முரணியக்கவியல் அணுகுமுறை. அது எனக்கு எப்போதுமே உவப்பானது. ஒவ்வொரு வரலாற்றுச் சக்தியும் நேர் எதிரான இன்னொரு வரலாற்றுச் சக்தியினால் முரண்பட்டு இயக்கப்படுகிறது என்ற மார்க்ஸிய வாய்ப்பாட்டுக்கு மிக விசுவாசமான நாவல் காவல்கோட்டம்.


மார்க்ஸிய அணுகுமுறையைத்தான் நானும் வரலாற்றில் போட்டுப்பார்ப்பேன், ஆனால் வெங்கடேசன் போல அதை சொல்மாறாத சூத்திரமாகக் கொள்ளமாட்டேன். எனக்கு அது வரலாற்றின் புற விசைகளை மட்டும் அறிய உதவும் ஒரு கருவி மட்டுமே. ஆனாலும் வெறுமே கதைசொல்லுவதற்கு அப்பால் சென்று வரலாறு செயல்படும் விதத்தை எழுத முயன்ற முதல்நாவல் காவல்கோட்டம் என்பது எனக்கு முக்கியமாகப் பட்டது – எப்படி அதைச்செய்திருக்கிறார் என விரிவாக எழுதியிருக்கிறேன்.


இந்தக் காரணத்தால்தான் மார்க்ஸிய விமர்சகரான ஞானியும் காவல்கோட்டத்தைத் தமிழின் தலைசிறந்த வரலாற்றுநாவல் என்று சொல்கிறார். திராவிடச்சார்புள்ள வரலாற்றாய்வாளரான ஆ.இரா. வெங்கடாசலபதியும் தமிழின் முக்கியமான வரலாற்றுநாவல் என்கிறார். அவர்களையும் இந்துத்துவர் என்று சேர்த்துக்கொடுத்தால் நல்லது. காவல்கோட்டத்தை அப்படிப் புகழ்ந்த இளம் விமர்சகர் பலர் இருக்கிறார்கள். [போகிற போக்கைப்பார்த்தால் தமிழகத்தில் இந்துத்துவர்கள் ஆட்சியையே பிடித்துவிடுவார்கள் போலிருக்கிறதே]


இரண்டாவதாக, நவீனத்தமிழகத்தின் முக்கியமான காவல்சக்தி நாயக்கர் அரசு. தமிழகத்தில் இன்றுள்ள ஏரிகளில் பெரும்பகுதி அவர்கள் வெட்டியவை. சாலைகளில் பெரும்பகுதி அவர்கள் போட்டவை. சந்தைகளில் பெரும்பகுதி அவர்கள் அமைத்தவை. ஆலயங்கள் அனேகமாக அனைத்துமே அவர்களால் எடுத்துக்கட்டப்பட்டவை.


ஆனால் அவர்களைத் தமிழ் வரலாற்றிலிருந்தே இருட்டடிப்பு செய்யும் ஒரு போக்கு தமிழகத்தில் உண்டு. சோழர்களையும் பாண்டியர்களையும் விதந்தோதி எழுதுபவர்கள் நாயக்கர்களைப் பொருட்படுத்தியதே இல்லை. காரணம் அவர்கள் தமிழர்கள் அல்ல என்பதும் அவர்கள் வேளாளர்களுக்கு ஆதரவானவர்கள் அல்ல என்பதும்தான். நாயக்கர் வரலாறு பற்றிய முதல் பெருநூல் சத்தியநாத அய்யர் எழுதியது. அது வெளிவந்து முக்கால்நூற்றாண்டாகிறது, நானறிய இன்றுவரை தமிழாக்கம் செய்யப்படவில்லை.


இந்தச் சூழலில் நாயக்கராட்சியின் ஒரு காலகட்டத்தை விரிவாகச் சித்தரிக்கும் காவல்கோட்டம் மிக முக்கியமான ஒரு படைப்பு என நினைத்தேன். காவல்கோட்டத்துக்கு எதிரான குமுறல்களில் எல்லாம் சாதியக்காழ்ப்பும் உள்ளடங்கி உள்ளது என்பதை அக்கட்டுரைகளை மேலோட்டமாக வாசித்தாலே தெரிந்துகொள்ளலாம். நான் அந்நாவலைப்பற்றி விரிவாக எழுத அதுவும் ஒரு காரணம்.


தோழர்கள் கக்கும் மடத்தனமான வசைகளைப் பொருட்படுத்தவேண்டாமென நினைத்தேன். ஆனால் தோழர்கள் விடுவதாகத் தெரியவில்லை. அவர்களுக்கு ஏதோ திட்டமிருக்கிறது. ஆகவே இந்த எதிர்வினை.


தமிழ்நாட்டில் பொதுவாக எவரும் எதுவும் செய்வதில்லை. மொத்தவாழ்நாளில் பத்துப்பதினைந்து எட்டுவரிக் கவிதை, நாலு சிறுகதை எழுதுவதற்கு அப்பால் செல்லப் பெரும்பாலானவர்களுக்குத் திராணியும் இருப்பதில்லை. பிள்ளைகளை கான்வெண்டில் படிக்கவைக்கவேண்டும், வீடுகட்டவேண்டும், பிரமோஷனுக்குப் படிக்கவேண்டும். ஆனால் எழுத்தாளர்களாக எண்ணிக்கொள்வதற்கு மட்டும் குறைவில்லை. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலேயே இரண்டாயிரம் உறுப்பினர்களாம். இரண்டாயிரம் எழுத்தாளர்கள்! இதைவிட அதிக எழுத்தாளர்கள் அ.தி.மு.க. இலக்கிய அணியில்மட்டும்தான் இருக்கமுடியும்!


இச்சூழலில் எதையாவது ஒன்றைத் தொடர்ந்து ஈடுபாட்டுடன் செய்யும் ஒருவருக்கு இயல்பாகவே ஒரு முக்கியத்துவம் உருவாகிவிடுகிறது. அந்த முயற்சி முக்கியமானதாகவும் அமைந்தால் அவரைத் தவிர்க்கமுடிவதில்லை. அப்போது ஒன்றும் செய்யாதவர்கள் அவர் அடையும் முக்கியத்துவம் கண்டு குமுற ஆரம்பிக்கிறார்கள். வசைபாடுகிறார்கள்.


இது இப்போது உருவாகியிருக்கும் ஒரு விஷயமல்ல. ஐம்பதாண்டுக்கால தமிழ் இலக்கிய வரலாற்றை, ஆராய்ச்சி வரலாற்றை எடுத்துப்பார்த்தால் தெரியும். இங்கே ஐந்துபேர் வேலை செய்துகொண்டே இருப்பார்கள். ஐம்பதுபேர் அவர்களை வசைபாடிக்கொண்டே இருப்பார்கள். ஆகமொத்தம் 'பண்பாட்டு'ச்சூழலில் ஐம்பத்தைந்துபேர் 'செயல்பட்டு'க்கொண்டிருப்பார்கள் என்பது கணக்கு. சமீபத்தில் தமிழின் தலைசிறந்த ஆய்வாளரான மயிலை சீனி வெங்கடசாமி இதைப்பற்றி எழுதியிருந்த ஒரு பழைய கட்டுரையை வாசித்தேன்.


சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அக்காதமி பரிசு கொடுக்கப்பட்டதும் வரிசை குலைந்து போயிற்றே, மூத்த பெரும்படைப்பாளிகள் இருக்கையில் இப்படிக் கொடுக்கலாமா என்றெல்லாம் குமுறும் தோழர்களுக்கு ஆ.மாதவன், ஹெப்ஸிபா ஜேசுதாசன், ஞானக்கூத்தன், நாஞ்சில்நாடன், பூமணி, வண்ணநிலவன், வண்ணதாசன் என மூத்த சாதனையாளர்களின் வரிசையே இருக்கும்போது மேலாண்மை பொன்னுச்சாமி பரிசு பெற்றபோது ஒன்றும் தோன்றவில்லை. மேலாண்மை அப்படி என்னதான் எழுதியிருக்கிறார் என அமைப்புக்குள் இருந்து ஒரு குரல்கூட எழவில்லை.


என்னைப் பொறுத்தவரை இதில் தரவரிசை, வயதுவரிசை ஏதும் எப்போதும் இருந்ததில்லை என அறிவேன். இலக்கியம் என்ற இயக்கத்தை நம்பி அதில் முடிந்தவரை ஈடுபாட்டுடன் செயல்படும் எவர் பரிசு பெற்றாலும் நல்லதே. மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிய ஒரு கதையைக்கூட நல்ல கதை என என்னால் சொல்லமுடியாது. ஆனாலும் அவர் பரிசுபெற்றபோது நான் வாழ்த்து தெரிவித்தமைக்குக் காரணம் இதுவே.


ஆனால் சுந்தர ராமசாமியும் நகுலனும் இறந்தபோது 'செத்த பிணத்தைக் கட்டிப்பிடித்து அழுகிறார்கள்' எனக் கருத்து தெரிவித்த தோழர்களிடம் இந்த வகையான ஒரு விரிவான புரிதலை எதிர்பார்க்க மாட்டேன். தங்கள் குறுங்குழுவின் நலன்களுக்கு அப்பால் அவர்களால் யோசிக்கமுடியாது. அவர்கள் காவல்கோட்டத்தைக் கொண்டாடியதும் இந்த வழக்கமான குழு மனநிலையால்தான். ஆனால் சாகித்ய அக்காதமி என்பது அவர்களால் செரித்துக்கொள்ளமுடியாததாக இருக்கிறது.


வெங்கடேசனுக்கு இது தேவைதான். அவர்தான் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தற்போதைய பொதுச்செயலர் என நினைக்கிறேன். பத்துப்பதினைந்து வருட காலமாக அவர்தான் அந்த சங்கத்தின் கருத்துக்களை சொல்லிக்கொடுக்கிறார். அமைப்பின் உறுப்பினர்களுக்கு எழுதப்படிக்கத் தெரியுமா என்று மட்டும் பார்ப்பதுடன் நின்றுவிடாமல் இலக்கியத்தின் சில அடிப்படைகளையாவது சொல்லிக்கொடுக்க முற்பட்டிருந்தால் இப்போது வசை வரும்போது கொஞ்சம் புத்திசாலித்தனமாக வந்திருக்கும். அதைப்பற்றி நாலுபேரிடம் கௌரவமாகச் சொல்லவாவது முடிந்திருக்கும். இப்படி பெத்தானியாபுரம் டாஸ்மாக் கடையில் இருந்து எதிர்க்குரல் எழுந்திருக்காது.


எப்படியோ முற்போக்கு முகாமில் இருந்தும் ஒரு மோசமான நாவல் வர முடியும் என தோழர்கள் அரைநூற்றாண்டில் முதல்முறையாக ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். நல்ல விஷயம்.


ஜெ


காவல்கோட்டம்: மாதவராஜ்


காவல்கோட்டம் பற்றிய ஆளிலா அவதூறுக்கட்டுரை



காவல்கோட்டம் விமர்சனம் பற்றி ராஜசுந்தரராஜனும் பிறரும்




சரவண கார்த்திகேயன் விமர்சனம்


ஆ.இராவெங்கடாசலபதி விமர்சனம்


சாகித்ய அக்காதமி விவாதங்கள்


சாகித்ய அக்காதமி பற்றி


சாகித்ய அக்காதமி விருதுகள்


சாகித்ய அக்காதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும்


மேலாண்மைப்பொன்னுச்சாமிக்கு சாகித்ய அக்காதமி விருது


இலக்கிய விருதுகள்


கேள்வி பதில் – 04 சாகித்ய அகாடமியைப் புனரமைக்கத் தாங்கள் சொல்ல நினைக்கிற ஆலோசனைகள் என்னவாக இருக்கும்?


நீல பத்மநாபன் பாராட்டு விழா


அறக்கோபமே என் எழுத்து-நீலபத்மநாபன்


'இயல்' விருதின் மரணம்


இயல் விருது பற்றி ஒரு கடிதம்


இயல் விருது – ஒரு பதில்


இயல் விருது சில விவாதங்கள்


தொடர்புடைய பதிவுகள்

காவல்கோட்டம் 5
சு.வெங்கடேசன், எஸ்.ராமகிருஷ்ணன், கடிதங்கள்
காவல்கோட்டம் 4
காவல்கோட்டம் 3
காவல் கோட்டம் 2
காவல்கோட்டம் 1
காவல் கோட்டம்,எஸ்.ராமகிருஷ்ணன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 22, 2012 10:30

யானைமொழி

ஒவ்வொரு யானைக்கும், தனக்கே உரித்தான பிரத்யேக மொழி உள்ளதை நாம் ஆய்வில் காண முடிகிறது. அவைகளின், அறிந்து கொள்ளும் திறனும் ஆச்சரியமாக ஒன்றாகவே உள்ளது. உதாரணமாக ஒரு யானை கடத்தும் தகவல், ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் மற்றொரு யானைக்ச் செல்லும். அந்த யானை பதிலுக்கு வேறொரு அலைவரிசையில் இதனோடு உறவாடும். இங்கு அலைவரிசை வேறுபாடு தடையாக இருப்பதில்லை.



கிருஷ்ணன் ரஞ்சனாவின் கட்டுரை.


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 22, 2012 10:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.