Jeyamohan's Blog, page 2249
March 5, 2012
கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -2
இந்திய அதிகாரிகளின் நிர்வாக அமைப்பு, மக்களின் எரியும் வாழ்க்கைப்பிரச்சினையை எப்படிக் கையாளும் என்பதை சென்ற கால்நூற்றாண்டாகக் கண்கூடாகக் கண்ட அனுபவம் தமிழர்களுக்குண்டு. இலங்கைத்தமிழர் பிரச்சினை இந்திய அதிகாரிகளின் அறியாமை, அலட்சியம், ஆணவம் மூன்றினாலும் திசைமாறி, சீரழிந்து, பேரழிவில் முடிந்த ஒன்று என்றால் மிகையல்ல. அதன் ஒவ்வொரு படியிலும் இந்தியாவின் வெளியுறவுத்துறையும்,உளவுத்துறையும்,உள்ளூர் பாதுகாப்புத்துறைகளும்,இராணுவமும் முடிந்தவரை எல்லாச் சிக்கல்களையும் உண்டுபண்ணியிருக்கின்றன. ஒரு தருணத்திலேனும் அப்பிரச்சினையுடன் தொடர்புள்ள மக்களின் வாழ்க்கைச்சிக்கல்களோ உணர்ச்சிகளோ கருத்தில் கொள்ளப்படவில்லை.

பி.ஏ.கிருஷ்ணன்
ஒவ்வொருமுறையும் இந்த அதிகார வர்க்கம் தான் எடுத்த முடிவுகளை மேலிருந்து மக்கள் மேல் சுமத்தியது. அது மக்களைப் புரிந்துகொள்ளவில்லை, மாறாகத் தாங்கள் புரிந்துகொண்டபடி அவர்கள் மாறவேண்டுமென அது எதிர்பார்த்தது. அதனால் உருவான எல்லா அழிவுகளுக்கும் அம்மக்களையே அது குறை கூறவும் செய்தது. இன்று அதிகாரிகள் எழுதும் சுயநியாயப்படுத்தல்கள் நிறைந்த வரலாற்றுப்பதிவுகளினூடாகவே நாம் அதை வாசிக்கமுடிகிறது. நாளை அவர்களில் ஒருவர் இன்னும் ஆழத்துக்குச் சென்று அதை நேர்மையாக எழுதுவாரென்றால் அந்த மாபெரும் சோக-அபத்த நாடகத்தின் முழு விரிவையும் நாம் அறிய முடியலாம்.
இந்தப் பின்னணியால் பி.ஏ.கிருஷ்ணனின் 'கலங்கியநதி' தமிழுக்கு முக்கியமானதாகிறது. இந்நாவல் அஸ்ஸாமியப் பிரச்சினையை மையமாகப் பேசுகிறது. ஒரு தமிழ் வாசகன் தொடர்ந்து ஈழப்போராட்டத்தை நினைவுகூர்ந்து, ஒப்பிட்டுக்கொண்டே இதை வாசிக்க முடியும். அது பல திறப்புகளை, சலிப்பின், சோர்வின் உச்சநிலைகளை அளிக்கக்கூடிய வாசிப்பனுபவமாக அமையும். இப்படித்தான் அதிகார அமைப்பு செயல்படுகிறதென நாம் ஏற்கனவே உள்ளூர அறிந்திருக்கிறோம் என நமக்கே காட்டுகிறது இந்நாவல். பின்னர் எப்போதுமே இது இப்படித்தான் இருந்திருக்கிறதா என்ற சலிப்புக்குள் மெல்ல மெல்ல நம்மைக் கொண்டுசெல்கிறது.
இந்நாவலின் அமைப்பை இரு சரடுகளாகப் பிரிக்கலாம். ஒன்று, அஸ்ஸாமியப் பிரிவினைப்போராட்டம். இன்னொன்று இந்திய ஆட்சிப்பணியின் ஊழியனான ரமேஷ் சந்திரன் அந்த அதிகார அமைப்பைப் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொள்ளமுடியாமல் முரண்பட்டு அடையும் தனிப்பட்ட துயரம். இரு சரடுகளையும் ஒன்றை ஒன்று விளக்கக்கூடிய ஒன்றாகப் பின்னிச்செல்லும் கதை உத்தியைக் கிருஷ்ணன் மேற்கொண்டிருக்கிறார். தான் சார்ந்துள்ள அமைப்பின் பிரம்மாண்டமான செயலின்மையின் அபத்தத்தை ரமேஷ்சந்திரன் அஸ்ஸாமியப் போராட்டத்தை அந்த அதிகார அமைப்பின் பிரதிநிதியாக நின்று எதிர்கொள்ளும்போதுதான் புரிந்துகொள்கிறான். அது ஒரு சுய கண்டடைதல். அந்தக் கண்டடைதலுடன் அவன் அந்த அதிகார அமைப்புக்கு எதிராகத் திரும்பி வெளியே தள்ளப்படுகிறான். ஆனால் அந்த சுய பகிஷ்காரம் மூலம் அவனுள் ஆழமான ஒன்று நிறைவைக் கண்டடைகிறது.
இந்த இரு சரடுகளையும் பின்னிச்செல்ல கிருஷ்ணன் மீபுனைவு என்னும் வழிமுறையைக் கையாள்கிறார். இது ரமேஷ் சந்திரன் படுக்கையில் இருந்தவாறு எழுதும் ஒரு நாவலாக நாவலுக்குள் விரியும் கதை. ரமேஷின் நாவலுக்குள் வந்து நாவலின் வாசகர்களாகவும் இருக்கும் மூவர் முக்கியமான கதாபாத்திரங்கள். ரமேஷின் மனைவி சுகன்யா. அவனது பிரிட்டிஷ் நண்பரான ஹெர்பர்ட். வங்காள நண்பரான சுபிர். மூவரும் மூன்று கோணங்களில் இந்த நாவலின் நிகழ்ச்சிகளுக்கு சாட்சியாகிறார்கள். அந்த மூன்று விமர்சனங்களும் ரமேஷின் நாவல் வழியாக வெளிப்படும் நிகழ்ச்சிகளுக்கான மூன்று விமர்சனங்களாக வாசகன் விரித்துக்கொள்ளமுடியும்.
கூடவே ரமேஷ் தன் நாவலில் எழுதும் நிகழ்ச்சிகளுக்கும் ரமேஷின் வாழ்க்கையில் நிகழ்ந்த அந்நிகழ்ச்சிகளின் உண்மை வடிவுக்கும் இடையேயான முரண்பாடுகளும் இந்நாவலின் வாசிப்பில் இன்னொரு தளத்தைத் திறக்கின்றன. எதை அவன் விட்டுவிடுகிறான், எதை அவன் மாற்றியமைக்கிறான் என்பது நுணுக்கமாக அவனுடைய அக உலகைக் காட்டக்கூடியதாக அமைகிறது. முக்கியமாக இந்நாவலின் மர்மமான கதாபாத்திரமான அனுபமாவின் கதையை அவன் நாவலில் நுணுக்கமாக மாற்றி எழுதுகிறான். அந்த மாறுதல் மூலமாகவே அவனுக்கும் அனுபமாவுக்கும் இடையேயான உறவின் சொல்லப்படாத ஒரு சிறு சாத்தியக்கூறு நாவலில் திறக்கிறது, அதுவும் அவன் அப்படி மாற்றி எழுதியதைக்கொண்டு மட்டுமே அதை ஊகிக்க முயலும் சுகன்யா வழியாக.
மூன்றாவதாக நாவலின் முக்கியமான அம்சம் ரமேஷ்சந்திரனின் மனநிலையை பாதித்திருக்கும் அவன் மகளின் மரணம். அடிவாங்கிக் கன்றிய உடற்பகுதி மிகமிக நுட்பமான தொடு உணர்ச்சி கொண்டதாக ஆவதுபோல அந்த இழப்பின் மூலம் அவன் மனம் ஆகிவிட்டிருக்கிறது. கலங்கிய நதி என்ற தலைப்பு ஒரு வகையில் அதைக்கூடக் குறிக்கிறது. அந்த இழப்பை ஒட்டி உருவான தனிமை, உறவுச்சிக்கல்கள், வெறுமை ஆகியவையே அவனைப் பிற அதிகாரிகள் போல அல்லாமல் அந்த அமைப்பின் அடித்தளத்தில் உள்ள அத்தனை அதிர்வுகளையும் வாங்கிக்கொள்ளச் செய்கின்றன. அவனுடைய ஒட்டுமொத்தச் செயல்பாட்டுக்கும் பின்னாலிருப்பது இந்த அம்சம்தான்.

பிரம்மபுத்ரா
ரமேஷ் சந்திரனின் மகள் ப்ரியாவின் மறைவு ரமேஷ் சந்திரனுக்கும் அவன் மனைவி சுகன்யாவுக்குமான உறவில் உருவாக்கும் கலங்கல் பல திறப்புகள் கொண்டது. மரணத்துக்கு சுகன்யாவின் எதிர்வினையை மிக நுட்பமாக விவரிக்கிறது இந்நாவல். நாம் எதிர்பார்க்கும் வழக்கமான அம்சங்களேதும் இல்லாமல் ஆனால் முற்றிலும் நம்பகமாக அந்த அதி உளவியல் நிலையைச் சொல்கிறது.அடிப்படையில் ஓர் அரசியல் நாவலான இதை அந்தரங்கமான தளத்துக்கு கொண்டுசென்று ஆன்மீகமான ஓர் அழுத்ததை அளிப்பது இந்த அம்சமே.
சுகன்யா ப்ரியாவை முழுக்க மறக்க முயல்கிறாள் என்பதே ஆச்சரியமானது. ப்ரியாவின் எல்லா உடைமைகளையும் இல்லத்தில் இருந்து இல்லாமலாக்கிக்கொள்கிறாள். அது உண்மையில் சுகன்யா வாழ விரும்புவதன் அடையாளம். மரணத்தில் இருந்து தூர விலகவே உயிர்கள் விரும்புகின்றன. எவருடைய மரணமாக இருந்தாலும். மரணம் இறந்த காலம் சார்ந்தது. வாழ்க்கை எதிர்காலம் நோக்கியே பெருகிச்செல்ல முடியும். சுகன்யா கடைசியில் ரமேஷ் சந்திரனிடமிருந்து இன்னொரு குழந்தையை பெற்றுக்கொள்வதன் மூலம் மீண்டு வருவது அந்த வாழ்வாசையின் விளைவே. பெண்ணின் இயல்பான வழிமுறை அதுவே
ஆனால் பிரியாவை மறக்க விரும்பும் சுகன்யா கூடவே ரமேஷ் சந்திரனை பாலுறவுக்கு அனுமதிக்காமல் விலக்கி வைக்கிறாள். அது மிக நுட்பமான மனநாடகம். இந்நாவலில் என்னை மிக ஆச்சரியப்படுத்திய அம்சம் இது சகஜமாக உருவாகி வருவதுதான். அவளுக்குத்தேவை ரமேஷின் குழந்தைதான். ஆனால் அதை அவளுடைய சுயம் ஒப்புக்கொள்ள தயங்குகிறது. அதில் அவமானமடைகிறது. ஆகவே ரமேஷை உதறுவதுபோல, வெறுப்பது போல அவளையறியாமலேயே அவள் நடிக்கிறாள்.
அந்த நடிப்புக்கு ஆதரவாக அவளுக்குக் கிடைக்கும் காரணம் ப்ரியாவின் மரணத்துக்கு ரமேஷை காரணமாக்கலாம் என்ற சாத்தியம். அதைகொண்டு அவள் ரமேஷை ஆழமாகப் புண்படுத்துகிறாள். இந்த மனநாடகமும் ஆண்பெண் உறவில் எப்போதும் உள்ளது. தன் இணையை புண்படுத்துவதன் மூலம் தன்னைப்புண்படுத்திக்கொள்வது ஒரு சிக்கலான வழிமுறை. சுயவதையை விரும்பும் பெண்கள் எப்போதும் செய்வது அது. அந்த நடிப்பு மூலம் அவளுடைய கருப்பை தாகத்துடன் அவனை நெருங்கியும் வருகிறது.
ப்ரியாவை ஒவ்வொரு நாளும் நினைத்துக்கொள்ளும் ரமேஷின் மனநிலை இன்னும் கொஞ்சம் பூடகமானது. அவன் அவளை மறக்க விரும்பி மேலும் மேலும் அவள் நினைவாக ஆகிறான். அவன் எப்படி ப்ரியாவின் நினைவில் இருந்து சகஜமாக விடுபடுகிறான் என்பதைக் கவனித்தால் அவனுடைய அகம் பிரியா என்ற வலிமிக்க நினைவை எப்படி பயன்படுத்தியது என புரியும். அவன் ராஜவன்ஷியைச் சந்தித்து தன் மனசாட்சி தூண்டப்பட்டு அதன் பாதையில் ஆபத்தான ஒரு வழியை தேர்வு செய்யும்போதுதான் அவனுக்குள் ப்ரியா உருவாக்கிய வலி அடங்குகிறது
ரமேஷ் அவன் வாழ்ந்த உயரதிகாரியின் வசதிகள் மிக்க வாழ்க்கைமேல் உள்ளூரக் கண்டனம் கொண்டவனாக இருக்கிறான். அந்த வாழ்க்கையின் இன்பத்தின் உச்சமென அவன் ப்ரியாவை நினைக்கிறானா? அந்த வாழ்க்கையில் இருந்து துண்டித்துக்கொள்ள, மனசாட்சியை தூண்டிக்கொள்ள அவளுடைய மரணத்தை ஒரு காரணமாகக் கொண்டானா? ப்ரியாவின் மரணத்துடன் அவன் ஒரு வழக்கமான ஆட்சிப்பணி அதிகாரியல்லாமல் ஆகிறான். அந்த மாற்றம் விவரிக்கப்படவில்லை. ஆனால் நாவலில் இருக்கிறது
மரணம் ஓர் இழப்பாக மட்டுமல்லாமல் ஆன்மீகமான பரிணாமத்துக்கான காரணமாகவும் அமைவதே கலங்கிய நதியை முக்கியமான ஒரு படைப்பாக ஆக்குகிறது. இந்நாவலின் நுட்பமான கலையமைதி கைகூடியிருப்பதும் இங்கேதான். அந்த ஆன்மீகப்பயணம் இரு திசைகளில் நிகழ்கிறது. ரமேஷ் அவனுள் இருந்த இலட்சியவாதியை கண்டெடுக்கும்போது சுகன்யா அவளுக்குள் இருந்த வலுமிக்க அன்னையை மீட்டுக்கொள்கிறாள்.

உல்ஃபா கொலை
இந்த உள்விரிவுச்சாத்தியங்களைப் புனைவு மூலம் நிகழ்த்தியபின் பி.ஏ.கிருஷ்ணன் நேரடியான ஆவணத்தன்மையுடன் கதையைக் கொண்டு செல்கிறார். கதையின் இரு அடித்தளங்களும் இயல்பான நகைச்சுவை கொண்ட சித்தரிப்பு மற்றும் நுண்ணிய தகவல்கள் வழியாக நேரடியாகச் சொல்லப்படுகின்றன. இந்திய அதிகார அமைப்பு இன்னும்கூட பிரிட்டிஷார் உருவாக்கிய அதே மனநிலைகள் கொண்டது. ஓர் இந்திய உயரதிகாரி தன்னை ஏகப்பட்ட கறுப்பு தேசிகளைக் குற்றேவல் செய்யவைத்துக் 'கட்டிமேய்க்கும்' ஒரு வெள்ளை ஆட்சியாளராகவே கற்பனை செய்துகொள்கிறார்.
இந்திய அதிகார வர்க்கத்தை அறிந்தவர்களுக்கு உயரதிகாரிகளிடமிருக்கும் பிரிட்டிஷ் பாவனைகள் கேலிச்சித்திரம்போலத் தோன்றலாம். தன் மேஜை மேல் இருக்கும் ஒரு பொருளைத் தன் கைக்கு எடுத்துத் தர சேவகனை மணியடித்துக் கூப்பிடுவார்கள். சின்னச்சின்ன விஷயங்களுக்குக் கூடக் கச்சிதத்தைக் கண்டிப்பாக எதிர்பார்ப்பார்கள். தன் இருக்கையில் விரிக்கப்படும் புதிய வெள்ளை டர்க்கிடவலில் ஓரம் மடிந்திருந்ததனால் சேவகரை ஆங்கிலத்தில் திட்டி, கோப்புகளைக் கீழே வீசிய ஓர் அதிகாரியை எனக்குத் தெரியும். அதிகாரி சரியாகப் பதினொரு மணிக்கு காபி சாப்பிடுவார் என பத்து ஐம்பதுக்கு அலாரம் வைக்கும் டவாலியைக் கண்டிருக்கிறேன்.
ஆடம்பரம் அதிகாரத்தின் இன்னொரு முகம். நானறிந்த எல்லா உயரதிகாரிகளும் பதவி ஏற்றதுமே தங்கள் அறையை விரும்பிய நிறத்திலும் அமைப்பிலும் பல லட்சம் ரூபாய் செலவில் மாற்றிக்கட்டியிருக்கிறார்கள். தான் நடந்து வரும்போது ஷூவின் ஒலி டக் டக் எனக் கேட்கவேண்டுமென்பதனால் விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தை அகற்றி மூங்கில்தரை போடச்சொன்ன அதிகாரியைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
நடை உடை மட்டும் அல்ல, அவர்களின் மொழிகூட நூறாண்டுபழைய லண்டனைச் சேர்ந்தது. கோப்புகளில் உயரதிகாரிகள் எழுதிவைக்கும் குறிப்புகளைப் பார்த்திருக்கிறேன். நிறையத் தருணங்களில் அந்த மொழியைக் கண்டு வாய்விட்டுச் சிரித்துவிட்ட அனுபவம் கூட உண்டு.
அவர்களின் பாவனைகள் இன்னும் அற்புதமானவை. பெரும்பாலான அதிகாரிகள் கண்டிப்பானவர்களாக, தாராளமானவர்களாக, தண்டிப்பவர்களாக, புரவலர்களாக, கலைநுண்ணுணர்ச்சி கொண்டவர்களாக, வேலையை மட்டுமே கவனிப்பவர்களாக, நகைச்சுவை கொண்டவர்களாக, இறுக்கமானவர்களாக உருவம் மாறிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் அந்தந்தத் தருணங்களில் மேற்கொள்ளவேண்டிய 'கதாபாத்திரத்தை' அந்தக் கணங்களில் தேர்வுசெய்கிறார்கள் என்பதே உண்மை. அதை ஒருபோதும் புரிந்துகொள்ளமுடியாது. கீழ் ஊழியர்கள் அதைப் புரிந்துகொள்ள முயல்வதில்லை. அந்தந்த நடிப்புகளுக்கு அவர்கள் அந்தந்தக் கணங்களில் இசைவாக எதிர்வினையாற்றுகிறார்கள்.
கலங்கியநதியில் ரமேஷ் சந்திரனுக்கும் அவனது துறைச்செயலருக்குமான உறவின் வேடிக்கையும் வேதனையுமே இந்த நாவலின் துவக்கப்புள்ளியாக எனக்குப் பட்டது. தன் முன் சேவகன் கொண்டுவைக்கும் டீயை மறந்து போய்த் தாமதமாகக் குடித்துவிட்டு அது சூடாக இல்லை என்பதற்காகத் துறையின் துணைச்செயலரான ரமேஷை நேரில் வர அழைத்து செய்தி அனுப்பும் துறைச்செயலர் அவரது 'கடுமையான பணிச்சுமை' நடுவே ரமேஷையே மறந்துவிடுகிறார்.
'யார் நீ?'. 'சந்திரன் சார்?'. 'சந்திரனா? ஓ, வெளியுறவுத்துறை சந்திரனா?'. 'இல்லை சார், உங்கள் துறையில் இயக்குநராக வேலைபார்க்கிறேன்'. 'நீ அந்த சந்திரனா? வருவதற்கு இத்தனை நேரமா?'. 'அப்போதே வந்துவிட்டேன். வெளியில் காத்திருந்தேன்'. 'சரிசரி…என்ன பிரச்சினை?'. 'எனக்குப் பிரச்சினை ஒன்றுமில்லை. நீங்கள்தான் வரச்சொன்னீர்கள்'. 'நான் வரச்சொன்னேனா? யெஸ், இவ்வளவு சோம்பேறித்தனமான உதவாக்கரை கூட்டத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. முப்பத்தைந்து வருடமாக வேலைபார்க்கிறேன். உன் கூட்டம்தானே அவர்கள்?' 'என் கூட்டமா?' 'சரிதான் இந்தத் துறையின் காண்டீனுக்கு நீதானே பொறுப்பு?'
மிக மிக யதார்த்தமாக நிகழும் ஓர் உரையாடல். ஆனால் கவனித்தால் இந்த உரையாடலின் ஒவ்வொரு வரியும் முட்டாள்தனம். காண்டீனின் வருடாந்தர நிர்வாகக் கூட்டத்துக்குத் தலைமை தாங்குவது தவிர சந்திரனுக்கு அதில் எந்தப் பொறுப்பும் இல்லை. ஆனால் அவன்தான் அந்த டீ சூடில்லாமல் இருந்ததற்கு பதில் சொல்லியாகவேண்டும். அந்தத் துறையின் மூளை கலங்காத ஒரே மனிதர் என ரமேஷ்சந்திரன் நினைக்கும் கூடுதல் செயலரிடம் சென்று தகவலைச் சொல்கிறான்.
'உன்னை அவருக்குத் தெரியுமா?'. 'இல்ல சார், இப்போத்தான் முதன்முதலா பாக்கிறேன்'. அப்ப பாத்தோங்கிறதையே மறந்திரு. அவருக்கு ஞாபகம் இருக்காது'. அதுதான் நிர்வாகத்திற்குள் இருக்கும் மிகமிகச்சிறந்த பிரச்சினைதீர்க்கும் வழி. ஆனால் செயலர் விடவில்லை. 'நமது துறையில் இருக்கும் காண்டீன் இத்துறைக்கே ஓர் அவமானம். அதன் பொறுப்பைக் கையில் வைத்திருக்கும் அதிகாரியிடம் நேற்று பேசினேன். அவரால் கையைப் பிசைவது தவிர ஒன்றும் சொல்லமுடியவில்லை. இன்னும் ஒருவாரம் அவகாசம் அளிக்கிறேன். அதற்குள் நிலைமை சரியாகாவிட்டால் தலைகள் உருளும்' எனக் கடிதம் வருகிறது.
அந்தக் கடிதத்துக்கு ரமேஷ்சந்திரன் அளிக்கும் பதில் அபத்த நாடகத்தின் உச்சம். முற்றிலும் நிர்வாக மொழியில், துல்லியமான தகவல்களுடன், டீ என்ற பானத்தின் எல்லா சாத்தியக்கூறுகளையும் தொட்டு எழுதப்பட்ட அக்குறிப்பு செயலருக்கு டீ சூடாக இருப்பதை அறிவித்துக்கொண்டே இருக்கும் ஒரு கருவியின் அவசியம் குறித்துப் பரிந்துரைக்கிறது. அக்குறிப்புக்குக் கீழே செயலர் வழக்கமான இயந்திரத்தனமான கையெழுத்தைப் போட்டுத் திருப்பி அனுப்பிவிடுகிறார். துறையெங்கும் அந்தக் குறிப்பு நகலெடுத்து வழங்கப்படுகிறது.
அடிமைத்தனம் என்பது இந்த அமைப்பின் எழுதப்படாத விதி. எதிர்வாதங்கள், மாற்றுக்கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. பணிமூப்பு என்ற ஒரே தகுதியால் மேலே சென்று சேர்பவர்கள் தங்கள் காலம் முழுக்க தாங்கள் புரிந்துகொண்ட இந்தியாவை தாங்கள் பழகிவந்த முறைப்படி நிர்வாகம் செய்கிறார்கள். அங்கே ஒரு உயரதிகாரி தனக்குக் கீழே உள்ள இன்னொரு அதிகாரியைக் குளிரில் வெளியே நிற்க வைத்துவிட்டு உள்ளே அமர்ந்து டிவி பார்க்கலாம். எந்த விளக்கமும் கேட்காமல் முட்டாள் என்று சொல்லலாம்.
இந்த அபத்தமான பெரும் யந்திரம் அதற்குக் கீழே எரிமலைக்குழம்பு போலக் கொந்தளிக்கும் ஒரு மாபெரும் தேசத்தைக் கொண்டிருக்கிறது. அந்த தேசத்தை அது கையாள்கிறது, கட்டுப்படுத்துகிறது. அந்த மறுபக்கத்தை நாம் ரமேஷ் சந்திரனின் அஸ்ஸாமிய அனுபவம் வழியாக அறிகிறோம். தன் துடுக்குத்தனம் காரணமாகத் துறைதோறும் வீசப்பட்டு கடைசியில் மின்பகிர்மானம் சார்ந்த ஒரு துறைக்கு வந்து சேர்கிறான் ரமேஷ். அது என்ன என்றே அவனுக்குத் தெரியாது. இந்திய ஆட்சிமுறையின் அபத்தங்களில் ஒன்று இது. ஒரேஒரு தேர்வு எழுதி வென்று பதவி பெறும் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி அறிவியல், சமூகவியல், வணிகம், சுற்றுலா என இந்தியாவின் எந்த ஒரு துறைக்கும் தலைமை வகிக்கமுடியும்!
அந்தப்பதவியில் இருந்து ரமேஷ் அஸ்ஸாம் செல்கிறான். காரணம் அவன் கச்சிதமான ஒரு பலியாடு என்பதுதான். அஸ்ஸாமில் அவன் துறையைச் சேர்ந்த பொறியாளரான கோஷ் அஸ்ஸாமியத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கிறான். அவர்கள் அவனைப் பணயக் கைதியாக பிடித்து வைத்துக்கொண்டு மீட்புக்குப் பெருந்தொகை கேட்கிறார்கள். அந்தக் கடத்தலை இந்திய அதிகார வர்க்கம் கையாள்வதன் ஒவ்வொரு படியிலும் இருக்கும் நம்பமுடியாத அபத்தங்கள் இந்நாவலை முன்னெடுத்துச்செல்கின்றன.
முதலில் அவர்கள் இதற்காகத் தேர்வுசெய்வது கொஞ்சம்கூட அனுபவம் இல்லாத, அஸ்ஸாமையே அறிமுகமில்லாத ரமேஷ்சந்திரனை. அதுவும் அவனைப் பழிவாங்கவேண்டும் என்பதற்காக மட்டும். அதன்பின் நிகழும் ஒவ்வொன்றையும் பார்த்தால் அனுபவமுள்ளவர்கள் சென்றிருந்தால் கோஷ் விடுதலையே ஆக முடியாதென்று தோன்றும். அஸ்ஸாமில் தீவிரவாதிகள் அதிகாரிகளைக் கடத்திச்செல்வதென்பது ஓர் அன்றாட நிகழ்ச்சி. ஆகவே போலீஸோ அஸ்ஸாமிய அரசோ அதை ஒரு பெரிய விஷயமாக நினைப்பதில்லை. கடத்தப்பட்ட அதிகாரியின் முக்கியத்துவம் என்பது அவர் வகிக்கும் பதவி சார்ந்தது. பெரிய அதிகாரிகள் அனேகமாக மாட்டுவதில்லை. சிறிய அதிகாரி மீது எவருக்கும் அக்கறை இல்லை.
இந்தக் கடத்தல் விவகாரத்தினூடாக அஸ்ஸாமில் நிர்வாகம் நடக்கும் விதம் பற்றிய பி.ஏ.கிருஷ்ணனின் சித்தரிப்பையே நான் இந்நாவலின் மிக முக்கியமான அரசியல்புரிதல் என்பேன். நீண்டகாலமாக ஒரு களத்தில் மோதிக்கொண்டிருக்கும் அரசியல்சக்திகள் மெல்ல மெல்ல அதை ஒரு சமரசமாக, அரசியல் விளையாட்டாக ஆக்கிக்கொள்கின்றன என்பதைக் காட்டுகிறது நாவல். ஒருபக்கம் தீவிரவாதிகளை அரசு வேட்டையாடுகிறது. அகப்படுபவர்களைச் சுட்டுத்தள்ளுகிறது. அதேசமயம் அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் பரஸ்பர புரிதல் மூலம் உருவாகும் ஒரு அதிகாரப்பகிர்வும் இருக்கிறது.
இந்நாவலுக்குள்ளேயே இதை நுட்பமாக வாசித்து எடுக்க முடியும். இந்தச் சமரசம் எப்படி ஆரம்பிக்கிறது? முதல் விஷயம் இருதரப்புக்கும் இடையே ஏதேனும் ஒரு தொடர்பு ஊடகம் வேண்டும் என்பதுதான். அந்த ஊடகத்தை இரு சாராரும் ஏற்றுக்கொள்ளும் இடத்தில் சமரசம் ஆரம்பிக்கிறது. அதனூடாக இருசாராரும் உரையாடுகிறார்கள். அங்கிருந்து ஒன்றொன்றாக பரஸ்பரப்புரிதல்கள் உருவாகின்றன. ஆட்ட விதிகள் பிறக்கின்றன. அஸ்ஸாமின் முதல்வருக்கும் போலீஸ்துறைக்கும் ஏதோ ஒரு மர்மமான முறையில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பிருக்கிறது. அவர்களுக்குத் தெரியவேண்டியதை அவர் தெரிவிக்கிறார். அவர்கள் விரும்பும் சிலவற்றை அவர் செய்கிறார். அவர் விரும்பும் சிலவற்றை அவர்களும் செய்கிறார்கள். ஆனால் போர் நடந்துகொண்டும் இருக்கிறது.
ஏறத்தாழ கால்நூற்றாண்டுக்காலம் இதே போன்ற ஓர் அதிகாரப்பகிர்வுச் சதுரங்கம் ஈழத்தில் விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் இடையே இருந்தது என்பதை நாமறிவோம். உண்மையில் அந்த அரசியலாடலின் உள்ளுறைகளை ஆழமாகப் புரிந்துகொள்ள வழிவகுக்கிறது இந்தச் சித்தரிப்பு. இந்த அரசியலாடலில் பகைமைக்கும் உணர்ச்சிக்கொந்தளிப்புகளுக்கும் அரசியலறங்களுக்கும் இடமில்லை. இது முழுக்கமுழுக்க நடைமுறை நோக்கு மட்டுமே ஓங்கிய ஒரு விளையாட்டு.
ஒரு தீவிரவாத அமைப்பு நீண்டநாளாகச் செயல்படும்போது அதுவும் ஓர் அதிகார அமைப்பாக, அரசாங்கமாக ஆகிவிடுகிறது. அதிகார அமைப்புகளுக்குரிய எல்லா அபத்தங்களும் வந்துவிடுகின்றன. அதன் தனி உறுப்பினருக்கு அவருக்கு அனுமதிக்கப்பட்டுள்ள எல்லைக்கு அப்பால் எதுவுமே தெரிந்திருப்பதில்லை. அவர் செய்யும்செயலின் பின்புலமோ விளைவோ அவரால் அறிந்துகொள்ளச் சாத்தியமானவை அல்ல. அவர் கட்டளைகளைச் செயல்படுத்துபவர் மட்டுமே. அந்த அர்த்தமின்மைக்கு அவர் தன்னை ஒப்புக்கொடுத்தாகவேண்டும்.
அதிகார அடுக்கின் ஒவ்வொரு உறுப்பினரும் இப்படி என்றால் தலைமையும் இதே நிலையில்தான் இருக்கிறது. அவர்கள் எங்கோ விலகி இருக்கிறார்கள். அவர்களுக்குச் சொல்லப்படுவது மட்டுமே அவர்களுக்குத் தெரிந்திருக்கும். அடித்தளத்தில் என்ன நிகழ்கிறதென அவர்கள் அறியமாட்டார்கள். ஒட்டுமொத்தமாக அந்த அமைப்பு, திரவம் பள்ளங்களை நிரப்புவது போல வரலாற்றின் சந்தர்ப்பங்களை நிரப்பியபடி செயல்பட்டுக்கொண்டிருக்க நேர்கிறது. அரசு என்ற அபத்ததின் அபத்தமான ஆடிப்பிம்பம்.
இந்த அபத்த நாடகத்தில் விளைவுகள் எப்போதுமே துயரமானவை. கடத்தப்படும் சாத்தியத்துக்காக, ஒருவேளை பெரிய எவரும் கடத்தப்படாமலிருக்கும்பொருட்டு, அரசு கோஷ் போன்றவர்களைக் காவுகொடுக்கிறது. அதேபோல அரசால் சுட்டுக்கொல்லப்படும் எல்லா தீவிரவாதத் தலைவர்களும் அவர்களின் தலைமைகளால் அரசுக்கு முன்னால் தள்ளிவிடப்பட்டவர்கள். உதாரணமாக, நாவலில் முதலில் ரமேஷுடன் பேச்சுநடத்தவரும் தலைவர் கொல்லப்படும் விதம் பரிதாபகரமானது. அவர் வந்துசேரும் இடத்தில் போலீஸ் தாக்கும் என்ற சேதி அவரைத்தவிர அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. தன்னந்தனியாக வந்துசேர்ந்து சுட்டுத்தள்ளப்படுகிறார். ஈழப்போராட்டத்தில் இதற்கிணையான பற்பல நிகழ்ச்சிகளை நாம் அறிந்திருக்கிறோம்.
அரசின் பிரதிநிதியாக வரும் ரமேஷ்சந்திரன் அரசு என்ன உத்தேசிக்கிறது, எப்படிச் செயல்படுகிறது எதைப்பற்றியும் அறியாமல் இருக்கிறான். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய அனுபமா, அவனுடைய ஆடிப்பிம்பம் போல இருக்கிறாள். அவளுக்கும் அந்த அமைப்பு என்ன உத்தேசிக்கிறது, எப்படிச் செயல்படுகிறது என ஏதும் தெரியாது. இரு அதிகார அடுக்கமைப்புகள் கண்ணைக்கட்டிக்கொண்டு காட்டுக்குள் ஒளிந்து விளையாடுகின்றன. அந்த அரசுகளின் விரல்நுனிகளாக அவர்கள் உரசி விலகுகிறார்கள், அவ்வளவுதான். ஆச்சரியமாக அனுபமாவின் முடிவும் ரமேஷின் முடிவும் ஒன்றுபோலவே இருக்கின்றன. தங்கள் அமைப்பாலேயே பலிவாங்கப்படுகிறார்கள்.
இந்த அமைப்பில் நெடுங்காலமாக இருப்பவர்கள் சிலர் இது இப்படித்தான் என்று அறிந்து அதற்கான மனவிலக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்த அமைப்பின் அபத்தத்தை நோக்கி சிரித்துக்கொண்டே இதற்குள் செயல்படுகிறார்கள். பூயான் மிகச்சிறந்த உதாரணம். அவருக்கு அவரது அமைப்புக்குள் உள்ள ஐந்தாம்படைவேலைகள், அரசாங்கத்தின் குறுக்குச்சால் ஓட்டல்கள், அரசியல்வாதிகளின் அன்றாட அயோக்கியத்தனங்கள் எல்லாம் தெரியும். அவருக்குக் கொள்கை,நம்பிக்கை என ஏதுமில்லை. தன் வேலையை அதன்மீது உணர்வுரீதியான ஈடுபாடு ஏதுமில்லாமல் செய்கிறார். ஆனால் அவர் ஒரு திறமையான அதிகாரி என்பதும் நாவலில் உருவாகி வருகிறது. நிர்வாக அமைப்புக்கு உள்ளேயே உழன்ற ஒருவரால் மட்டுமே உருவாக்க முடிந்த இத்தகைய நம்பகமான சித்திரங்களே இந்நாவலை முக்கியமானதாக ஆக்குகின்றன.
கோஷை விடுவிக்க ரமேஷ்சந்திரன் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுகின்றன. அவர் கடைசியில் மிகக்குறைவான ஈட்டுப்பணத்திற்கு விடுதலை பெறுகிறார். அந்த நிகழ்ச்சிப்பரிணாமத்தின் ஒவ்வொரு தளமும் அபத்தம் என்றே சொல்லவேண்டும். சாதாரணமாகப் பார்த்தால் அன்றாட நிகழ்ச்சிவரிசையாக இருக்கும் அதைத் தர்க்கபூர்வமாக அடுக்கிப்பார்த்தால் அபத்தம் முகத்திலறைகிறது. சிரிக்கக்கூட முடியாத அபத்தம்.
கோஷை மீட்க ரமேஷ்சந்திரன் தீவிரமாக முயல்வதே அவனுக்கு முதிர்ச்சியும் அனுபவமும் இல்லை என்பதனால்தான். கொஞ்சம் விஷயமறிந்த அதிகாரி என்றால் செய்யவேண்டிய காகிதச்சடங்குகளை முறையாகச் செய்துவிட்டுப் போயிருப்பார். ரமேஷ்சந்திரன் அவனுடைய அசட்டு ஆர்வத்தால் எல்லா வழிகளிலும் முயல்கிறான். அந்த அசட்டுத்தனம் காரணமாகவே கடைசியில் கோஷ் விடுதலை ஆக முடிகிறது. இந்த உண்மையை ரமேஷைச் சுற்றியிருக்கும் எவரும்- கோஷின் மனைவிகூடப் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் கோஷ் அவனும் அரசு அதிகாரி என்பதனால் புரிந்துகொண்டு நன்றி கூறுகிறான்.
கோஷ் விஷயத்தில் அரசு எப்போதும் செய்யும் உத்தியையே கடைப்பிடிக்கிறது – ஆறப்போடுதல். ஊடகங்களின் கவனம் விலகும்வரை கொஞ்சநாள் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு அப்படியே வேறுவிவகாரங்களுக்குச் சென்றுவிடுவதே அரசதிகாரத்தின் இயல்பு. கலங்கிய நதி அதுபாட்டுக்குக் கொஞ்ச நேரம் சுழித்துத் தெளியும்போது அதிருஷ்டமிருந்தால் கோஷ் எஞ்சுவான். ஆனால் தன் ஆர்வத்தால் அந்த விவகாரத்தைத் தொடர்ந்து உயிருடன் வைத்திருக்கிறான் ரமேஷ். கோஷின் மனைவியைக்கொண்டு ஊடகங்களில் கவன ஈர்ப்பு செய்கிறான். ஜனாதிபதிக்கு மனு அனுப்பச்செய்கிறான்.
அவன்தான் அதைச்செய்கிறான் என உடனே அமைச்சர் உணர்கிறார். ஆனாலும் அவருக்குத் தெரியும், அது கொஞ்சநாளைக்குத்தான் என்று. ரமேஷின் முயற்சிகளால்தான் கோஷை மீட்க வேறுவழியில்லாமல் அரசு ஏதோ செய்கிறது. ஆனால் அதிலுள்ள அபத்தம் என்னவென்றால் மீண்டும் அந்தக் கடத்தல் மறக்கப்பட்டு, கோஷை எல்லாரும் கைவிட்டபின், அப்படிக் கைவிடப்பட்ட ஒரே காரணத்தால்தான் கோஷ் தீவிரவாதிகளால் விடுவிக்கப்படுகிறான். முதலில் கோரப்பட்ட தொகையை விட இருபது மடங்கு சிறிய தொகைக்கு!
கலங்கியநதி என்ற சொல் இங்கே எப்போதும் கலங்கிச்சுழன்றோடும் பிரம்மபுத்திராவுக்கும், அதைக் குறியீடாகக் கொண்டு அஸ்ஸாமியப் பிரிவினைவாதத்துக்கும் பொருந்துகிறது. கலங்கிய நதி அல்ல, கலக்கப்பட்ட நதி என்ற எண்ணமே மேலோங்குகிறது. எப்போதும் அதுதான் அதிகாரத்தின் வழி. இருசாராரும் சேர்ந்து கலக்கிய இருளில் என்ன நடக்கிறதென்றே தெரியாமல் மக்கள் முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த அபத்தவெளியில் லட்சியவாதம் அல்லது மனிதாபிமானம் போலக் கோமாளித்தனமாக ஆவது பிறிதொன்றில்லை. ஆனால் ரமேஷுக்கு அது தேவையாகிறது. இரு காரணங்களை நாவல் நமக்களிக்கிறது. ஒன்று, பிரியாவின் மரணத்தால் நிலைகுலைந்துபோன குடும்ப உறவு காரணமாக அவன் எதிலாவது தன்னை அமிழ்த்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. தன்னைத் தனக்கே நிரூபித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஏன் தண்டித்துக்கொள்ளக்கூட வேண்டியிருக்கிறது.
இன்னொரு உள்ளார்ந்த காரணம், ரமேஷ் சந்திரனின் அகத்தில் ஓர் இலட்சிய வடிவமாக வாழும் அவனுடைய தந்தை. காந்திய இலட்சியங்களில் நம்பிக்கை கொண்டவராக வாழும் அவர் அவனுக்குள் குடியேற்றிய காந்தி. காந்தி ரமேஷ் சந்திரனுக்குள் ஒரு விசித்திரத் தொந்தரவாக இருந்துகொண்டே இருக்கிறார்.
அதிகாரஅமைப்பின் அர்த்தமின்மைவெளிக்குள் இலட்சியவாதம் முழுக்கிறுக்குத்தனமாக ஆவதன் சித்திரமாக இந்நாவலில் மிஸ்ரா வருகிறார். அவர் வழியாக ரமேஷ் சந்திரன் ஒரு பெரும் ஊழலின் நுனியைக் கண்டுகொள்கிறான். அந்த ஊழலை வெளிக்கொணர, அதைச்செய்த மாபெரும் நிறுவனத்திடமிருந்து நஷ்டஈடு கேட்டுப் பெற அவன் முட்டாள்தனமான வேகத்துடன் முயல்கிறான். எச்சரிக்கைகளை மீறி, எதிர்விளைவுகளை அலட்சியம் செய்து அதில் ஈடுபடுகிறான்.
அதன் மூலம் சாதகமான விளைவுகள் ஏதும் நிகழவில்லை என்றே சொல்லவேண்டும். அவனை அவமதித்து வெளியே தள்ளுகிறது அரசதிகார அமைப்பு. மனச்சோர்வும் கொந்தளிப்புமாகத் தனக்குத்தானே காயமேற்படுத்திக்கொண்டு படுக்கையில் இருக்கும் அவன் தன்னுடைய சோர்வையும் அலைபாய்தலையும் எழுத்துமூலமாகக் கடந்துசெல்ல முயல்கிறான். அதன் பொருட்டு ரமேஷ் எழுதிய நாவலே கலங்கிய நதி.
அந்த ஊழல் பற்றிய தகவல்கள் இந்நாவலில் மிகத்துல்லியமாக அளிக்கப்படுகின்றன. வழக்கமாக வாசிப்பவர்கள், மின்கடத்திகளை நிறுவுவதில் உள்ள இந்த நுட்பமான தகவல்களுக்கு ஒரு புனைவில் என்ன வேலை என்ற எண்ணத்தை அடையக்கூடும். ஆனால் ஒட்டுமொத்தமாக அவை எனக்கு இன்னொரு மனச்சித்திரத்தை அளித்தன. இன்றைய அமைப்பில் நிதிச்செயல்பாடுகள், சட்டச்செயல்பாடுகள், நிர்வாகச்செயல்பாடுகள் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று கலந்து மிகச்சிக்கலாகவே இயங்குகின்றன. எளிமையாக ஏதும் நிகழ்வதில்லை.
அந்தச் சிக்கல்கள் மூலம் உருவாகும் நுட்பமான இடைவெளிகளைப் பயன்படுத்திக்கொண்டுதான் இங்கே ஊழல்கள் செய்யப்படுகின்றன. உண்மையில் அந்தச் சிக்கல்களின் மூலம் உருவாகும் 'கலங்கல்'தான் அந்த ஊழல்களுக்கான முக்கியமான மறைவு. அந்நிலையில் ஊழல் என்ற ஒன்றைக் கண்டறிவதென்பது தேர்ந்த வைத்தியன் நாடியைத் தொட்டு நோயறிவது போன்ற ஒரு செயல். அந்த ஊழலை மறைக்கவும் நியாயப்படுத்தவும் பயன்படுவதும் அச்சிக்கல்கள்தான்.
பெரும் ஊழல்கள் வெடிக்கும்போது அவற்றை ஒட்டி நிதி, சட்டம்,நிர்வாகம் சார்ந்த நிபுணர்வாதங்கள் எப்போதும் எழுவது இதனால்தான். எந்தப் பெரும் ஊழலையும் ஊழலே அல்ல, சின்ன நிதி, சட்ட, நிர்வாகச் சிக்கல்மட்டும்தான் அது என 'தர்க்கபூர்வமாக' விளக்கிவிடமுடியும். இன்றுள்ள மாபெரும் ஊழல்கள் எவற்றையும் நம் பொதுமக்களிடம் விளக்கிக் கூறிவிட முடியாது. அவற்றை எளிமைப்படுத்தி ஒற்றைவரியாக ஆக்கித்தான் அரசியல்வாதிகள் மக்களிடம் கொண்டு செல்கிறார்கள். அது தேர்தலுக்கு உதவுகிறது. ஆனால் நீதிமன்றத்தில் அச்சிக்கல்கள் சிடுக்கெடுக்கப்பட்டுக் குற்றம் நிரூபிக்கப்படுவது நெடுங்காலப்பணி. அதற்குள் பொதுமக்களின் கவனம் மறைந்துவிடும். அக்கறை அகன்று விடும். இந்த நடைமுறை காரணமாகவே இங்கே ஒருபோதும் ஊழல் தண்டிக்கப்படுவதில்லை.
ஆகவே உண்மையில் இத்தகைய ஊழல்களில் உள்ள சிக்கல்களை நீக்கிவிட்டு அவற்றைச் சொல்லமுடியாது. அச்சிக்கலை விரிவாகப் பின்னிப்பிணைத்து பி.ஏ.கிருஷ்ணன் அளிக்கும் அந்த ஊழலின் சித்திரம் மிகுந்த நம்பகத்தன்மையுடன் உள்ளது. அதை அந்தத் தனியார் நிறுவனம் எதிர்கொள்ளும் விதமும், அதிகாரிகள் அதனுள் நெளிந்து நெளிந்து ஆடும் நடனமும் எல்லாம் நிர்வாகத்தின் தலைமையகத்தில் உள்ளே நுழைந்துவிட்ட உணர்வை அளிக்கின்றன.
ஆரம்பம் முதலே இந்த உலகியல் நம்பகத்தன்மையை வலுவாக நிலைநாட்டிக்கொண்டு இந்நாவல் முன்னக
வாசிப்பு – கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் கடந்த ஒரு வருடமாகத் தங்களின் படைப்புகளை வாசித்து வருகிறேன். நான் உங்களின் வலைப்பதிவுகளை வாசித்து, அவை மீதொரு பற்று ஏற்பட்டு இரு புதினங்கள் வாங்கினேன். ஒன்று 'காடு'. மற்றொன்று 'கன்னியாகுமரி'. முதலில் காடு வாசித்தேன். அதிகம் வாசித்துப் பழக்கமில்லாததால் அது ஒரு 'adventure-thriller ' என்ற எண்ணமே இருந்தது. ஆனால், அதனை வாசித்து முடித்த கொஞ்ச நாட்களில் 'அறம்' தொகுப்புகளைத் தாங்கள் இணையத்தில் எழுத ஆரம்பித்தீர்கள். அதனைப் படிக்கும்பொழுது ஒவ்வொரு சிறுகதையிலும் வரும் மனிதர்களையும் அறத்தையும் படித்தபொழுது மனதில் ஒரு இன்னதென்று சொல்லமுடியாத உணர்வு ஏற்பட்டது. அது பல உணர்வுகளின் கலவை என்றே சொல்லவேண்டும். "நான் அந்த மனிதர்களைப் போன்ற நல்லவனாக அறமுடையவனாக இருக்கவில்லையே" என்பதும் ஒன்று.
சோற்றுக்கணக்கு பதிவிற்கு வந்த ஒரு கடிதத்தில் வாசகர் ஒருவர் 'நாயகன் ஏன் ராமலட்சுமியை மணந்து கொண்டான்?' என்று கேட்டிருந்தார். அதற்கு நீங்கள் அளித்த பதிலில் ஒரு இடத்தில் இரு வரிகள் இருக்கும். 'கதையை வாசிப்பவர்களுக்கு ஏன் என்ற கேள்வி வரக்கூடாது. அப்படி வந்தால் அது கதையின் புரிதலை பாதிக்கும். அது அப்படிதான் இருக்கிறது. அதனை அப்படியே எடுத்துக்கொண்டு அனுபவிப்பதே சரி ' என்று. (இந்த வார்த்தைகள் சரியாக நீங்கள் சொன்னதேதானா எனத் தெரியவில்லை ஆனால் பொருள் இதுவாக இருந்தது. அந்தப் பதிவைத் தேடிப் பார்த்தேன். கண்டுபிடிக்க இயலவில்லை.) சிறுவயதில் இருந்து அதிகம் தமிழ் புதினங்கள் படித்திராத, ஆனால் படிக்க வேண்டும் என்ற ஆசை மனதின் ஓரத்தில் இருந்த எனக்கு இது ஒரு வேத வாக்காகவே இருந்தது.
எல்லாவற்றையும் ஏதோ துப்பறியும் நாவலாகவும் அல்லது செய்தியாகவுமே படித்து பழகி இருந்த எனக்கு இலக்கியம் என்பது அது போன்றது அல்ல, இலக்கிய வாசிப்பு என்பது புரிதலில், அனுபவிப்பதில்தான் தொடங்கும் எனத் தெரிந்தது. அறம் கதைகள் வந்த பொழுதுகளில் நாள் முழுதும் கதையின் தாக்கத்திலயே இருப்பேன். தற்பொழுது அந்தப் புத்தகங்களின் பிரதியை எனது பெற்றோருக்கு அன்பளிப்பாக அளித்துள்ளேன்.
இது கொடுத்த நம்பிக்கையில் நான் அடுத்துப் படித்தது 'கன்னியாகுமரி'. நான் அந்தக் கேள்வி-பதிலில் கற்றதை அப்படியே செயல்படுத்திப் பார்க்க ஏற்ற ஒரு படைப்பு. கதையின் நாயகன் காதலியை ஏன் வெறுக்க ஆரம்பிக்கிறான் என்பதும், அவளைப் பழிவாங்குவதற்காக அந்த ரௌடியை ஏன் ஹோட்டலிற்கு அழைத்து வருகிறான் என்பது முக்கியம் அல்ல. அவன் காதலி அவன் அவளுக்கு செய்த கோழைத்தனமான விஷயங்களை ஏன் மன்னித்தும் மறந்தும் வாழ்கிறாள் என்பதும் முக்கியம் அல்ல. அவள் அப்படித்தான். அவன் அப்படித்தான். இந்த ஏன் கேள்விகளைத் தாண்டிச் செல்லும் பொழுதே நம்மால் அந்தக் கதைக்குள் பயணிக்க முடிகிறது. அவன் மன ஊடாடல்களை அறிய முடிகிறது.
எனக்கு எப்பொழுதும் தமிழின் மேல், தமிழ் வாசிப்பின் மேல் ஒரு பயம் இருந்து வந்தது. ஆனால், இப்பொழுது அது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. அழியாச்சுடர்களின் உதவியால் அசோகமித்திரன், கு. அழகிரிசாமி, லா.ச.ரா. ஆகியோர்களின் படைப்புகளையும் வாசிக்க ஆரம்பித்துள்ளேன். ஒரு பெரும் உற்சாகம் தந்துள்ளது இது. நமது மொழி இவ்வுளவு அழகானதா, இவ்வுளவு உணர்ச்சியுடையதா என்று வியந்து கொண்டு இருக்கிறேன்.
இப்பொழுது எனக்கு மீண்டும் 'காடு' படிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. ஆனால், நான் தற்பொழுது உயர் கல்விக்காக ஜெர்மனி வந்துள்ளேன். கையில் 'காடு' புத்தகம் இல்லை. வீட்டில் சொல்லி தபாலில் அனுப்பச் சொல்லி இருக்கிறேன். மீண்டும் வாசிப்பேன். இனி என்னால் அந்தக் காட்டிற்குள் புது உணர்வோடு செல்ல முடியும். அந்தக் காட்டினை, அதன் அழகினை, அதன் சுற்றத்தை, குட்டப்பனின் கசாயத்தையும், நாயகனின் துக்கத்தையும், நாயகியின் மரணத்தையும், காட்டு அதிகாரி ஐயரின் கருத்துக்களையும் உணரமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கு நான் உங்களுக்கும்,எனக்கு உங்களை அறிமுகப்படுத்திய என் தோழிக்கும் நன்றி சொல்லவேண்டும். தாங்கள் இலக்கிய வாசிப்பு என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதை சுட்டிக்காட்டி பல கட்டுரைகள் எழுதி இருக்கிறீர்கள். இது எனக்குப் பெரும் உதவியாய் இருக்கிறது.
தங்கள் இந்தியப் பயணம் இனிமையாக இருக்க என் வாழ்த்துக்கள். தங்களின் உதவியால் இனி என் வாசிப்பு அதிகமாகும். என் வாசிப்பின் புரிதலும் அதன் இனிமையும் அதிகமாகும். வருங்காலத்தில் உங்களுடன் நானும் இது போன்றதொரு பயணத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பை உண்டாக்குவேன்.
நன்றி, வணக்கம்.
மீனாட்சி சுந்தரம்.க
*
வணக்கம் ஐயா,
தங்கள் பயணம் சீராக அமைந்தமைக்கு வாழ்த்துக்கள். என்ன ஒரு அனுபவமாக இருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தாலும் அறிந்துகொள்வது கஷ்டமே. எனது முதல் கடிதத்தை உங்கள் அலைச்சலில் மறந்தே இருப்பீர்கள். அதுவும் நல்லதுதான். அதில் தவறுகள் இருந்திருக்கலாம். ஏனென்றால் நான் தமிழில் இவ்வாறு கடிதங்கள் அனுப்புவது அரிது. எனவே தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.
ஜெர்மனியில் ஆங்கிலப் புத்தகங்கள் கிடைப்பது கஷ்டம். இவர்கள் எதையுமே ஜெர்மனில் மொழிபெயர்த்துதான் படிக்கிறார்கள். தாங்கள் முன்னர் கூறியது போல நம் இந்திய மொழிகளில் வரும் சிறந்த படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது மிகவும் முக்கியம். சொல்வனம் இணையதளத்தில் பல மொழிபெயர்ப்புகள் வருகின்றன. ஆனால், பெரும்பாலும் மற்ற மொழியில் இருந்து தமிழுக்கே. மிகச் சிலரே தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கிறார்கள். எனக்கு சோற்றுக்கணக்கு கதையினை மொழிபெயர்க்கவேண்டும் என்று ஆசை. நிறைவேற்றிவிட்டுக் கூறுகின்றேன். இங்கு ஆங்கிலப் புத்தகங்கள் ஒன்றிரண்டு கடைகளில் மட்டுமே கிடைக்கும். அதுவும் மிகச் சில புத்தகங்கள் மட்டுமே. நான் சார்லஸ் டிக்கன்சுடைய 'Great Expectations' புத்தகமும் 'Crime and Punishment' புத்தகமும் வாங்கினேன். 'Great Expectations' ஏற்கனவே வாசித்திருக்கிறேன். தங்களின் பதிவுகளில் உள்ள குறிப்புகளைத் தொடர்ந்து 'Crime and Punishment' வாங்கினேன். அற்புதம் என்ற வார்த்தையைத் தவிர வேறு எந்த வார்த்தை அதனை சரியாக விவரிக்கும் எனத் தெரியவில்லை.
நான் Dostoevsky அவர்களின் 'White Nights' சிறுகதை வாசித்திருக்கிறேன். காதலை அவரைப்போல் உணரவைக்க முடியாது என்று நினைப்பேன். திரும்பத் திரும்ப அந்தக் கதையைப் படிப்பேன். 'Crime and Punishment' வாசித்தபிறகு அவரால் குற்ற உணர்ச்சியையும், தனிமையையும், காதலையும், நட்பையும்… அவர் எதை உணர்கிறாரோ அதனை நம்மை உணரவைப்பார் என்று அறிந்தேன். அவரின் சிறப்பு அது என்று நினைக்கிறேன். நாவலின் பெயருக்கு ஏற்றாற்போல் Raskolnikov இன் மனம் அவனுக்குத் தரும் தண்டனையை அழகாகக் கூறியிருக்கிறார். மனதின் நேர்மையும் சக்தியும் ஒருவனை எப்படி எல்லாம் அலைக்கழிக்கின்றது. மூளை (அறிவு) தான் ஒருவனை சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கெட்டவனாக மாற்றுகிறது.
நான் முன்னர் கூறியிருந்ததைப் போலவே தங்கள் படைப்புகளான 'காடு' மற்றும் 'அறம்' என் நண்பன் மூலமாக இங்கு வந்து சேர்ந்துவிட்டது. இங்கு இருக்கும் என் வெளிநாட்டு நண்பர்களுக்கு இரு புத்தகங்களின் அட்டைப் படமும் (முக்கியமாக காடு) மிகவும் பிடித்திருந்தது. நான் அவர்களுக்கு சோற்றுக்கணக்கு சிறுகதையை மொழிபெயர்த்துக் கூறினேன். கெத்தல் சாகிப் பற்றிக் கூறியதும் ஆச்சர்யபட்டார்கள். இப்பொழுது வாசிப்பது 'காடு'. பனிபொழியும் இம்மாதங்களில் 'காடு' வாசிக்க சுகமாக இருக்கிறது. குட்டப்பன் கருப்பட்டி டீ போடும் போதெல்லாம் நானும் சென்று 'black டீ' போட்டுக்கொள்வேன். இப்பொழுது தேர்வு விடுமுறை வேறு. காடு வாசிப்பது, சமைத்து சாப்பிடுவது தவிர வேறு வேலை கிடையாது. விடுமுறைகளில், நாம் சோர்வாக அசமந்தமாக அங்கும் இங்கும் நகர்வதே ஒரு சுகம். இங்கு அந்த சுகத்தோடு அப்படியே காட்டினுள் தொலைந்து விடுகிறேன். நீலியை, மிளாவைத் தேடி அலைகிறேன். ஐயருடன் பேசுகிறேன். சந்தோஷமாக இருக்கின்றது உங்கள் படைப்பின் துணை. உலகத்தை விட்டுத் தன்னந்தனியாக நான் மட்டும் அந்தக் காட்டினுள் செல்வது போல இருக்கிறது. ஒரு சுகமான வனவாசம் என்றே கூறவேண்டும். வெளியில் வர மனமில்லை. 'Solitude is the best feeling you could get, if you have one friend to whom you can say how it feels to be in solitude' என்று Honore de Balzac கூறுவார். அத்தகைய ஒரு நண்பனாக, முடிவே இல்லாத தேடலாக இருக்கிறது 'காடு' :)
நன்றி,
மீனாட்சி சுந்தரம்.க
அன்புள்ள மீனாட்சி சுந்தரம்,
உண்மையிலேயே உங்கள் முதல்கடிதம் பயண அவசரத்தில் வாசித்து மறந்து போன ஒன்றாக இருந்தது. செந்தில்குமார் தேவன் மூன்று வருடங்கள் முன்பு ஜெர்மனியிலிருந்து எழுதிய கடிதங்கள் போல இருக்கின்றன உங்கள் கடிதங்கள். ஆர்வமும் தேடலும் தனிமையும். அவர் இன்று இங்கே எங்கள் நண்பராக இருக்கிறார். சென்ற இந்தியப் பயணத்தில் அவரும் இருந்தார்.
நான் கதைகளை ஏன் என்ற கேள்வி இல்லாமல் வாசிக்க வேண்டும் என்று எங்கும் சொல்லவில்லை. அது என் கருத்து அல்ல.
ஆரம்பநிலையில் இலக்கிய விஷயங்களை வாசிக்கையில் பொதுவான புரிதல்களை உருவாக்கிக்கொள்வது பிழை. அது நம்மை வெகுவாக திசை திருப்பிவிட்டுவிடக்கூடும். நாம் ஒன்றை நினைவில் வைத்திருக்கையில் அது சரியான சொற்றொடர்களில் இருந்தாகவேண்டும். அந்த ஆசிரியரிடம் சந்தேகம் கேட்கும்போது அவரது அதே சொற்களில் மேற்கோளிட்டுத்தான் கேட்கவேண்டும்.
ஏன் என்ற கேள்விக்கான விடைகளைக் கதைகளுக்குள்ளேயே தேடவேண்டும் என்றுதான் சொல்லியிருப்பேன். அப்படித்தேடுவதே நல்ல வாசிப்பை, நுணுக்கமான புரிதலை உருவாக்கும். அப்படி வினாக்களை எழுப்புவதே நல்ல படைப்பு. பதில்களைத் தேடி அடைவதே நல்ல வாசிப்பு.
ஆனால் வாசிப்பு என்பது ஆராய்தல் அல்ல. தர்க்கப்படுத்துதல் அல்ல. சொற்கள் வழியாகக் கற்பனைமூலம் நிகர்வாழ்க்கை ஒன்றை உருவாக்கிக்கொள்ளுதல். அந்த வாழ்க்கையில் இருந்து வினாக்களை எழுப்பிக்கொள்ளவேண்டும். அதாவது கெத்தேல் சாகிப்பை நேரில் சந்திப்பதுபோன்ற அனுபவத்தை நாம் அக்கதையில் இருந்து அடையவேண்டும். அந்த அனுபவத்திடமிருந்தே வினாக்கள் எழவேண்டும்.
அதாவது ஓர் உண்மையான வாழ்க்கைநிகழ்வு நமக்கு என்னென்ன குழப்பங்களை, கேள்விகளை அளிக்கிறதோ அதேயளவுக்குக் குழப்பங்களையும் கேள்விகளையும் இலக்கியம் அளிக்கவேண்டும். நாம் அவற்றை ஆராய வேண்டும்.
உதாரணமாகக் கன்யாகுமரியில் நிகழ்வனவற்றை 'ஆசிரியர் ஏன் இப்படி எழுதியிருக்கிறார்? வேறுமாதிரி எழுதியிருக்கலாமே?' என்று எண்ணினால் அந்நூலுக்குள் செல்ல முடியாது. 'இந்த மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள், ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்?' என்று எண்ணிக்கொண்டால் அந்த நாவலுக்கு உள்ளே செல்லமுடியும். நீங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நாவலுக்குள் பதில்கள் உள்ளன.
இவ்வாறு ஒரு படைப்புக்குள் வாசகன் தன் சிந்தனை மூலமும், கற்பனை மூலமும் கேட்டு கண்டடையவேண்டிய விஷயங்களையே வாசக இடைவெளி என்கிறார்கள். அதை நிரப்பிக்கொள்ளும் வாசிப்பையே நுண்வாசிப்பு என்கிறார்கள். அத்தகைய வாசிப்பை மேலும் மேலும் அளிக்கும் நூல்களே இலக்கியத்தரமானவை.
தொடர்ந்து வாசிக்கிறீர்கள் என்பது நிறைவளிக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். வாசிப்பின் எல்லாச் சிக்கல்களும் வாசிப்பு வழியாகவே தீரும். அதுவும் நாம் நம்பவே முடியாத அளவுக்கு விரைவாக.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
கடிதங்கள்
பெருங்காடும் நான் மேய்ந்த நுனிப்புல்லும் — சீனு
காதல் ஒரு கடிதம்
கதைகளின் வழி
மணிமேகலைக்கு இன்னும் உரை தேவையா?
இளமாறனின் காடு
காடு-ஒருகடிதம்
காடு, களம்-கடிதங்கள்
காடு,வாசிப்பு — கடிதங்கள்
கடிதங்கள்
நூல்கள்,கடிதங்கள்
காடு -கடிதம்
அன்பு என்ற நோய்-கடிதம்
காடு,கடிதம்
மத்தகம்,மாடன் மோட்சம்
காடு,கடிதம்
காடு,பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம்:கடிதங்கள்
மேகமலை
அவலாஞ்சி, பங்கித்தபால்
அவலாஞ்சி
March 4, 2012
கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -1
பொத்தை என்ற நன்னீர் மீனைப்பற்றி கிராமங்களில் அடிக்கடி பேசப்படும். சப்பையான தாடைகொண்ட சிறிய வகை மீன். ஆற்றிலும் குளத்திலும் சேறுபடிந்த கரையோரமாக வாழக்கூடியது. அமைதியான தெளிநீரில் சிறிய கூட்டங்களாகப் புழுப்பிடிக்க வரும். பறவைகளாலோ மனிதர்களாலோ ஆபத்து அருகே வந்தது என உணர்ந்தால் மொத்த மீன்கூட்டமும் சிறு அம்புகள் போல சேற்றுப்பரப்பில் தைத்து வாலைச் சுழற்றி நீரைக் கணநேரத்தில் கலக்கிவிட்டுவிடும். குழப்பிப்பேசும் சாமர்த்தியசாலிகளுக்கு 'பொத்தைக்கலக்கி' என்ற செல்லப்பெயர் ஊரில் உண்டு. கலக்குவது ஒரு ராஜதந்திர உத்தி. கலங்கலிலேயே வாழும் உயிரினங்கள் அக்கலங்கிய சூழலில் நீடிக்கக் கற்றுக்கொண்டிருக்கின்றன.
முந்நூறாண்டுகளுக்கு முன்னர் சின்னஞ்சிறு தீவைச்சேர்ந்தவர்களான பிரிட்டிஷார், இந்தியா என்ற பிரம்மாண்டமான நிலப்பரப்பைக் கையகப்படுத்தியபோது அது அவர்களுக்குப் புரிந்துகொள்ளமுடியாத மாபெரும் சிக்கலாக இருந்தது. மேலே மலர்கள் மலர்ந்திருக்க ஆழத்தில் கொடிகள் பின்னி அடர்ந்த தாமரைக்குளம் போல.
[தகழி]
ஏற்கனவே இருந்த மன்னராட்சிமுறை என்பது இந்தச் சிக்கலான அமைப்பு உருவானபோது அதனுடன் சேர்ந்து தானும் உருவாகி வந்த ஒன்று. இந்தியாவின் பண்டைப்பேரரசுகள் முதல் முகலாய ஆட்சி வரை இருந்த சமூக அமைப்பு என்பது அரசதிகாரம் மிக மேலோட்டமாக மட்டுமே செயல்படும் தன்னிச்சையான கிராம சமூகங்களின் கூட்டு. அதன் நிர்வாகம் மையப்படுத்தப்படாதது. நீதி, நிதி நிர்வாகங்களுக்கும் அரசுக்கும் அனேகமாகத் தொடர்பே இல்லை. அந்த அமைப்பு தொடர்ந்து தன்னை மேம்படுத்திக்கொண்டு வந்து செயல்பட்டுவந்தது.
பிரிட்டிஷார் அவர்களின் சிறிய தீவில் இருந்த மையஅரசாங்கம் சார்ந்த நிர்வாகத்தை இங்கே கொண்டுவர முயன்றார்கள். அதன்மூலம் மொத்த அதிகாரமும் தங்கள் கையில் இருக்குமென நினைத்தனர். அவர்கள் இந்த நாட்டின் நிதிச்சுழற்சியை முழுமையாகக் கட்டுப்படுத்த ஆசைப்பட்டார்கள். அதற்கு மையத்தில் குவியக்கூடிய ஒரு நிர்வாக முறையை இந்த நாட்டின்மீது உருவாக்க முயன்றனர். ஆனால் அவர்கள் முன் விரிந்து கிடந்தது அதிநுண்ணிய நரம்புச்சிக்கல்கள் கொண்ட ஒரு பெரும் உயிர்ப்பரப்பு என விரைவிலேயே கண்டுகொண்டார்கள்.
அதை நிர்வாகம்செய்ய அவர்கள் ஒரு எளிய வழியைக் கண்டுபிடித்தனர். அதன் மேற்பரப்பை மட்டுமே அவர்கள் பொருட்படுத்தினர். மேற்பரப்பைத் தங்கள் விருப்பப்படி அதிகாரத்தைக் கொண்டு மாற்றியமைத்தனர். ஆழத்தின் சிக்கல்களை அந்த மேல்மட்டத்தைக்கொண்டு தங்கள் விருப்பபடி கட்டமைத்துக்கொண்டனர். இந்தியாவின் அடித்தள மக்களின் வாழ்க்கையும் பிரச்சினைகளும் பிரிட்டிஷார் உருவாக்கிய அதிகார மேல்கட்டுமானத்தால் புரிந்துகொள்ளப்படவில்லை. நேர்மாறாக அந்த அதிகார மேல்கட்டுமானம் என்ன நினைத்ததோ, எதை உருவகித்துக் கொண்டதோ அதற்கேற்ப அடித்தளம் முரட்டுத்தனமாகத் திருத்தியமைக்கப்பட்டது.
அதாவது தங்களைப்பற்றி அரசும் அதிகாரவர்க்கமும் என்ன சொல்கிறார்களோ அதற்கேற்பப் பொதுமக்கள் தங்களை மாற்றிக்கொண்டாக வேண்டியிருந்தது. மிகச்சிறந்த உதாரணம், நம் சாதியமைப்பு. ஓரளவு ஆர்வமுள்ள ஓர் ஆய்வாளர் இந்திய சாதியமைப்பை ஆராயப்புகுந்தால் அதன் கொடிச்சிக்கலில் கால் சிக்கி மூச்சுத்திணறுவார். இங்கே உண்மையில் சாதி என ஒன்று இல்லை. ஒரு சாதி என நாம் நினைப்பது பல சாதிகளின் கூட்டு. அந்த உபசாதி ஒவ்வொன்றும் மேலும் மேலும் கூட்டங்களாக, கோத்திரங்களாக, குழு அடையாளங்களாகப் பிரிந்துகொண்டே செல்லும். சில இடங்களில் அப்பிரிவு இட அடிப்படையிலானது. சில இடங்களில் அது இனக்குழு அடையாளம் கொண்டது. சில இடங்களில் தொழில் சார்ந்தது.
[ஸ்ரீலால் சுக்லா]
இன்றுவரை சாதிகளின் உட்பிரிவுகள் உருவான விதம் மற்றும் அவற்றுக்கிடையேயான உறவுமுறைகளை ஆய்வாளர்கள் குறிப்பிடுமளவுக்குக்கூட ஆவணப்படுத்தவில்லை என்பதே உண்மை. ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவர்களுக்கு வசதியான முறையில் சாதிகளை வரையறை செய்தார்கள். முதல் இந்திய சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பில் அவர்கள் புரிந்துகொண்ட விதத்தில் சாதிகளை வகுத்தார்கள். சமானமான சாதிகள் என அவர்கள் நினைத்தவற்றை ஒற்றைப்பெரும் சாதியாக ஆக்கினர்.
மக்கள் அந்த அடையாளப்படுத்தலை ஏற்றுக்கொண்டால்தான் அரசுடன் தொடர்புகொள்ளமுடியும் என்ற நிலை வந்தது. அரசியலுக்கு அது தேவையாகியது. ஆகவே அந்த அடையாளங்கள் மேல்தளத்தில் நிலைத்தன. ஆழத்தில் பழைய அடையாளங்கள் நீடித்தன. இந்தியர் ஒவ்வொருவருக்கும் ஒரு சாதி என்பது பல பிரிவுகளின் தொகை என்று தெரியும். ஆனால் அரசும் பாடப்புத்தகங்களும் வேறு மாதிரி சொல்வதையும் அவர் அறிவார். இந்தியர்களுக்கே உரிய முறையில் ஒவ்வொரு இந்தியரும் அரசுக்கும் அரசியலுக்கும் ஒரு சாதியுணர்ச்சியையும் தன் அந்தரங்கத்துக்கென ஒரு சாதியுணர்ச்சியையும் கொண்டிருக்கிறார். அரசுக்குத் தலையையும் சமூகத்துக்கு வாலும் காட்டுகிறார்.
இது சாதியைப் புரிந்துகொள்வதை இன்னமும் சிக்கலாகியது. ஒருவரின் சாதி பொதுவாக தேவர் என சொல்லப்படும். ஆனால் அவர் தன்னை அந்தரங்கமாக மறவர் என்றே உணர்வார். தேவரில் இன்னொரு பிரிவாகக் கருதப்படும் கள்ளர் அவருக்கு முற்றிலும் அன்னிய சாதியே. அதேசமயம் மறவர்கள் நான்குபேர் சேர்ந்தால் அவர் கொண்டையங்கோட்டையா, ஆப்பநாடா, செம்புநாடா என்பதே கேள்வியாக இருக்கும்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் இந்த 'மேலிருந்து அடையாளப்படுத்தும்' வழிமுறை ஆட்சியாளர்களுக்குச் சாதகமானது. அவர்கள் தாங்கள் ஆட்சி செய்கிறோம் என்ற நிறைவை அடையமுடியும். நிர்வாகம் நடக்கும். ஆனால் இந்த வழிமுறை மக்களுக்கு மிகமிக எதிர்மறையானது. அவர்களுக்கும் அரசுக்கும் பெரும் இடைவெளி இருக்கும். அவர்களைக் கொஞ்சம்கூடப் புரிந்துகொள்ளாதவர்களால் அவர்கள் ஆளப்படுவார்கள். ஆகவே ஆட்சியுடன் சம்பந்தப்படும் ஒவ்வொருமுறையும் நுணுக்கமான ஆனால் தீவிரமான சிக்கல்கள் உருவாகியபடியே இருக்கும். அச்சிக்கல்களைப் புரிந்துகொள்ளாமல் முரட்டுத்தனமாக நடவடிக்கை எடுக்கும் அரசு அச்சிக்கல்களை இன்னும் ரத்தம் கசிவதாக ஆக்கும். சமூகம் பேரழிவுகளை நோக்கிச் செல்லும்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் முழுக்க இதுதான் நடந்துகொண்டிருந்தது. அவர்களால் இந்திய வேளாண்மையை, இந்திய கைத்தொழில்முறையை எதையுமே புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்களின் மேல்மட்டம் சார்ந்த நிர்வாகம் இங்குள்ள நீர்ப்பகிர்வுமுறை, சந்தைகள், தொழிற்குழுக்கள் அனைத்தையும் அழித்தது. விவசாயிகளையும் நெசவாளிகளையும் பிச்சைக்காரர்களாகத் தெருவுக்குக் கொண்டுவந்தது.
பெரும் பஞ்சங்கள் நிகழ்ந்தபோதும், கலவரங்கள் நிகழ்ந்தபோதும்கூட தங்கள் ஆட்சிமுறையின் அடிப்படைச் சிக்கல்களை பிரிட்டிஷார் உணர முன்வரவில்லை. தங்கள் புரிதல்களையும், அவற்றின் அடிப்படையிலான தீர்வுகளையும் அடக்குமுறை மூலம் சமூகம் மீது சுமத்தினார்கள். ஒருகட்டத்தில் இந்த மாபெரும் தேசத்தின் மொத்த மக்கள்தொகையில் நாலில் ஒருபங்கைக் கொன்றழித்தது அவர்களின் 'நிர்வாக' முறை.
இந்தியாவில் பிரிட்டிஷார் உருவாக்கிய நிர்வாக முறையும், அதிகார அமைப்பும் அப்படியே சுதந்திரத்துக்குப் பின்னரும் நீடித்து இன்றும் உள்ளது. அதை நாம் இன்றும் பிரிட்டிஷ் நிர்வாகமுறை என உச்சிமேல் வைத்துக் கொண்டாடுகிறோம். இத்தனை நூற்றாண்டுகளில் அது மாற்றமுடியாத ஒன்று என்று தோற்றம் கொண்டுள்ளது. இந்த முறை மக்களுக்கு எதிரானது, மாற்றப்படவேண்டியது எனக் கண்டறிந்த ஒரே அரசியல் தலைவர் காந்தி மட்டுமே. தன் கிராமசுயராஜ்யம் என்ற முதல் கொள்கை அறிக்கை முதல் மரணம் வரை காந்தி அதைச் சொல்லிக்கொண்டே இருந்தார். இந்திய சமூகத்திற்கு ஏற்ப மையமற்ற ஒரு நிர்வாக முறைக்காக அவர் வாதாடினார்.
[கிருத்திகா]
ஆனால் மற்ற அரசியல்வாதிகள் அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அவர்கள் ஆங்கிலக்கல்வி கற்றவர்கள், பெரும்பாலும் உயர்மட்டத்தினர். பலர் பிரிட்டிஷாரால் அவர்களின் நிர்வாகம் மற்றும் நீதிமுறைக்காக பாரிஸ்டர் அல்லது ஐ.சி.எஸ். பயிற்சி அளிக்கப்பட்டவர்கள். ஆகவே பிரிட்டிஷாரின் இந்தியப்புரிதலில் பிழை ஏதும் இருப்பதாக அவர்கள் நினைக்கவில்லை. மேலும் அவர்கள் ஒருபோதும் அதிகாரம் தங்கள் கைகளை விட்டு விலகுவதை விரும்பவில்லை. நல்ல நோக்கங்கள் கொண்ட நேரு போன்றவர்கள்கூட நல்லது செய்வதற்கு முழு அதிகாரம் தன் கையில் இருக்கவேண்டுமென நினைத்தார்கள். பிரிட்டிஷாரின் அதிகார இயந்திரத்தைத் தாங்கள் எடுத்துக்கொண்டால் போதும் என நினைத்தார்கள். அதிகார வர்க்கம் மேலும் பெருகியது.
பிரிட்டிஷார் உருவாக்கிய அதிகாரவர்க்கம் அவர்களின் நிர்வாகமுறையைச் சார்ந்த மனநிலை கொண்டது. அவர்கள் கீழே இருந்து எதையுமே தெரிந்துகொள்வதில்லை. மேலிருந்து கீழ் நோக்கி பேசக்கூடியவர்கள்தான் அவர்கள். அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படுவதெல்லாம் இந்திய அதிகார மேல்கட்டுமானத்தின் விதிகளும் இயங்குமுறைகளும் மட்டுமே. அதன் சிடுக்குகளையும் சமரசங்களையும் ஊழலையும் அவர்களே கற்றுக்கொள்கிறார்கள். அதன் பின் அங்கே இருந்தபடி கீழ் மட்டத்தைக் 'கட்டுப்படுத்துவதை' மட்டுமே அவர்கள் செய்கிறார்கள்.
சென்ற இருபதாண்டுக்காலத்தில் தான்சார்ந்த துறையின், அத்துறை ஆளும் மக்களின் அடித்தளம் பற்றிய புரிதல்கொண்ட ஒரே ஒரு உயரதிகாரியைக்கூட நான் சந்தித்ததில்லை. அவர்களுடன் இடையீடு கொள்கையில் ஆரம்பத்தில் ஒருவகை பிரமிப்புதான் இருக்கும். 'இப்படிக்கூட இருக்கமுடியுமா, இது சாத்தியமா' என. மெல்லமெல்ல 'இது இப்படித்தான்' என்ற புரிதலை வந்தடைகிறோம். உயரதிகாரிகள் அனைவருமே ஒரே வார்ப்புதான். தாங்கள் கொண்டுள்ள அதிகாரம் பற்றிய உள்ளார்ந்த குதூகலமும், தனக்கு மேலே உள்ள அதிகாரம் பற்றிய பதற்றமும் ஒரேசமயம் கொண்டவர்கள். தான் ஏறி அமர்ந்துள்ள யானை என்பது பெருங்காட்டைத் தன்னுள் கொண்டுள்ள மிருகராஜன் என அறியாமல் தன் துரட்டிக்கம்பிலும் கட்டளையிலும் இயங்கும் இயந்திரம் எனக் கற்பனை செய்துகொள்ளும் அசட்டுப் பாகன்களைப் போன்றவர்கள் அவர்கள்.
பெரும்பாலும் நம் உயரதிகாரிகள் முற்றிலும் செவியற்றவர்கள். ஒரு எளிய நிதர்சனத்தைக்கூட அவர்களிடம் எந்தத் தொழிற்சங்கவாதியும், சமூகசேவகரும், அரசியல்வாதியும், சமூக ஆய்வாளரும் புரியச்செய்துவிட முடியாது. ஆனால் நம்பவேமுடியாத அளவுக்குத் தன்னம்பிக்கை கொண்டவர்கள். தங்களை அறிவுஜீவிகள் என்றும் ராஜதந்திரிகள் என்றும் கற்பனை செய்துகொண்டிருப்பவர்கள்.
[இந்திரா பார்த்தசாரதி]
கலங்கியநதியில் பொத்தைமீன்கள் போல பிரம்மாண்டமான ஒரு அதிகாரவர்க்கம் இன்று நம் மீது உள்ளது. கலங்கலுக்குள்ளேயே வாழக் கற்றுக்கொண்டவர்கள். பிரச்சினை என்றால் கலக்கிவிட்டுக் கலங்கலுக்குள் பதுங்கிக்கொள்வதை மட்டுமே வழிமுறையாகக் கொண்டவர்கள். இந்த அமைப்பில் எந்த ஒரு பிரச்சினைக்கும் அரசியல் தீர்வு என்பதே சாத்தியமல்ல. ஏனென்றால் பிரச்சினைகளுக்கும் அதிகார அமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த அதிகார அமைப்பில் உள்ள எவருக்கும் பிரச்சினையின் விளைநிலம் பற்றி அதன் உள்ளோட்டங்கள் பற்றி எதுவுமே தெரியாது. ஆகவே செய்வதற்கு ஒன்று மட்டுமே உள்ளது, கலங்கச்செய்தல்.
கலக்குவதற்கு அவர்களுக்கென்றே உரிய வழிகள் உள்ளன. அதை விதிமுறைகள், நடைமுறைகள் என இரு பெரும் பிரிவுகளாக வகுத்து வைத்திருக்கிறார்கள். 'சிவப்பு நாடா' என அதை நாம் அழகிய குறியீடாக ஆக்கிவிட்டிருக்கிறோம். எந்த நிபுணராலும் ஊகித்துவிட முடியாத அளவுக்குச் சிக்கலானவை அவை. ஒன்றில் இருந்து ஒன்றாக பிரிந்து பெரிய வலையாக ஆகி நம்மைச் சூழ்ந்துகொண்டு முற்றிலும் செயலற்றதாக ஆக்கிவிடக்கூடியவை. எந்த ஒரு சிக்கலான பிரச்சினையையும் சிவப்பு நாடா எத்தனை காலம் வேண்டுமானாலும் கலக்கி கண்ணுக்கு முன் இருந்து மறைத்துவிடும்.
இருபதாண்டுகளுக்கும் மேலாகத் தொழிற்சங்கச் சூழலில் இதை மீண்டும் மீண்டும் கண்டுவந்தவன் நான். இந்திய யதார்த்தங்களில் மிகமிக முக்கியமான இதைப்பற்றி இந்திய இலக்கியங்களில் குறைவாகவே எழுதப்பட்டுள்ளது. காரணம் இதை இந்த நிர்வாக அமைப்புக்குள் இருப்பவர்களே சரிவர எழுதமுடியும். உள்ளே இருப்பவர்களில் இலக்கிய ரசனையும் இதைக் காணக்கூடிய அக விலக்கமும் கொண்டவர்கள் மிகமிக அபூர்வம்.
[ஆதவன்]
என் பார்வையில் இந்தியாவின் இலக்கியப்படைப்புகளில் இந்த இந்திய யதார்த்தத்தை மிகச்சிறப்பாகச் சொன்ன நாவல் தகழி சிவசங்கரப்பிள்ளை எழுதிய 'ஏணிப்படிகள்' என்ற நாவல். மன்னராட்சியில் குமாஸ்தாவாக நுழைந்து, சுதந்திர ஆட்சியில் தலைமைச்செயலராக ஓய்வுபெறும் கேசவபிள்ளை என்ற கதாபாத்திரம் வழியாக இந்தியாவின் நிர்வாக அமைப்பின் எல்லா அபத்தங்களையும் நுட்பமாகச் சுட்டிச்செல்கிறார் தகழி.
மலையாளத்தில் மேலும் இரு நாவல்களை நான் சுட்டிக்காட்டுவேன். மலையாற்றூர் ராமகிருஷ்ணனின் 'யந்திரம்'. இன்னொன்று இ.வாசு எழுதிய 'சிவப்புநாடா'. யந்திரம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன் இந்திய ஆட்சிப்பணிக்குள் நுழைந்து அந்த அர்த்தமற்ற மாபெரும் யந்திரத்தின் ஒரு திருகாணியாக ஆவதை, அவன் தன் மனசாட்சியைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடுவதைச் சித்தரிக்கும் முக்கியமான நாவல். சிவப்புநாடா ஒரு குமாஸ்தாவின் கதையைச் சொல்கிறது. அர்த்தமற்ற ஒரே வேலையை மீளமீளச் செய்வதன் சலிப்பில் அறிவும் நுண்ணுணர்வும் மழுங்கி சுயநிந்தனையும் கசப்பும் கொண்ட மனிதனாக உருவாகும் எளிய அடித்தட்டு ஊழியனின் அவலம் அது.
இந்த அவலத்தை நையாண்டியுடன் விவரிக்கும் பல பகுதிகள் கொண்ட நாவல் என ஸ்ரீலால் சுக்லாவின் 'தர்பாரி ராகம்' என்ற நாவலைச் சொல்லலாம். வேறு இந்திய, இந்திய ஆங்கில நாவல்கள் இருக்கலாம். நான் அவ்வகையில் அதிகம் வாசித்ததில்லை.
தமிழில் இந்த வகையான நாவல்களுக்கு முன்னோடிகள் இருவர். கிருத்திகா இந்திய அதிகார அமைப்பின் உள்ளேயே இருந்தவர். அவரது கணவரான பூதலிங்கம் இந்தியாவின் மதிப்புமிக்க உயரதிகாரி. இந்திய அதிகார அமைப்பை நுணுக்கமான கிண்டலுடனும், உருவகங்கள் மூலமாகவும் விமர்சிக்கும் தர்மஷேத்ரே, புகைநடுவினில் போன்ற நாவல்கள் தமிழில் இவ்வகைமைக்கான தொடக்கப்புள்ளிகள்.
[பி.ஏ.கிருஷ்ணன்]
இந்திரா பார்த்தசாரதி அறுபதுகளிலேயே தன்னுடைய 'சுதந்திரபூமி' 'தந்திரபூமி' என்ற நாவல்கள் மூலம் இந்திய அதிகார அமைப்பின் அபத்தமான இயக்கத்தை சித்தரித்திருந்தார். இந்திரா பார்த்தசாரதியின் கூறுமுறை நேரடியான, மெல்லிய கிண்டல் கலந்த, விமர்சனம் கொண்டது. உளவியல் பகுப்பாய்வுமுறையை ஒரு புனைவு உத்தியாக எடுத்தாண்டவர் இந்திரா பார்த்தசாரதி. இந்திரா பார்த்தசாரதியின் உளவியல் பகுப்பாய்வுமுறை, நேரடியான விமர்சனம் இரண்டையும் தன்னுடைய படைப்புகளிலும் தொடர்ந்த ஆதவன் அவரது 'காகித மலர்கள்' நாவலில் அதிகாரம் செயல்படும் அபத்தத்தின் சித்திரத்தை அளித்திருந்தார்.
பி.ஏ.கிருஷ்ணன் அவரே சொல்லிக்கொள்வது போல ஆங்கிலத்தில் எழுதும் தமிழ் எழுத்தாளர். அவரது இரண்டாவது நாவலான 'கலங்கியநதி'யின் தமிழாக்கத்தை ஒரு தமிழ்நாவலாக நான் வாசிக்கிறேன். கிருத்திகா முதல் நீண்டு வரும் ஒரு இலக்கியப்போக்கில் முக்கியமான ஒரு நிகழ்வு என இந்நாவலை நினைக்கிறேன்.
[மேலும்]
தொடர்புடைய பதிவுகள்
யதார்த்தம் என்பது
சிலம்பு ஒருகடிதம்
மருதுபாண்டியர் பற்றி
கிருத்திகா,சுகந்தி சுப்ரமணியம் நினைவஞ்சலி
கிருத்திகா:அஞ்சலி
தகழி சிவசங்கரப்பிள்ளை யின் ஏணிப்படிகள்
புலிநகக் கொன்றையை முன்வைத்து ஓர் உரையாடல்
ஐயாறப்பன் ஆலய ஓவியங்கள் அழிப்பு
திருவையாறின் ஐயாறப்பர் கோவிலின் சுவரோவியங்கள், உட்கருவறையை ஒட்டியுள்ள குறுகலான இரண்டாம் திருச்சுற்றின் சுவரில் காணப்படுகின்றன. இங்கு ஓவியங்கள் இரண்டு அடுக்குகளாக வரையப்பட்டுள்ளன. அவை 17 அல்லது 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால ஓவியங்கள். இருநூறு அடி தொடராக அமைந்த இந்த ஓவியங்கள் தலவரலாற்றினை விவரிப்பவை.
நம்முடைய வரலாறு அதிகமும் பதிவு செய்யப்பட்டது இது போன்ற ஓவியங்களிலும் புடைப்புச் சிற்பங்களிலுமே. ஏற்கனவே பட்டீஸ்வரத்தில் பதினைந்து வருடங்களுக்கு முன் வரை இருந்த ஓவியங்களை இன்று அதன் கும்பாபிஷேகத்திற்காக நடந்த புதுப்பித்தலில் இழந்துவிட்டோம்.
திருவையாற்றில் 1970-ல் ஆலயப்புதுப்பிப்பு என்ற பெயரில் நிறைய ஓவியங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இப்பொழுது எஞ்சியவற்றையும் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இங்கு உள்ள கோவில்களில் புதுப்பித்தல் என்பது இந்த ஓவியங்களின் மீது கண் கூசும் வண்ணங்களைக் கொண்டு சாதாரண சுவரோவியர்கள் சம்பந்தமில்லா புதிய வடிவங்களைத் தீட்டிவிடுவதாகவே நடைபெறுகின்றது.
இவற்றை அழிப்பதால் நாம் இழப்பது சில ஓவியங்களை மட்டுமில்லை, நம்முடைய அழிவற்ற மரபையும் அதன் கலைச்செல்வங்களையும்தான். அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு சென்று சேர்க்க வேண்டிய பொறுப்பும் நமக்கு உள்ளது.
உடனடியாக ஏதேனும் செய்தாகவேண்டும். ஒரு கூட்டு மனு அனுப்பலாம். நீதிமன்றத்தடைகூடப் பெறலாம். இந்த ஆலயம் திருவாவடுதுறை ஆதீனப் பொறுப்பில் உள்ளது. சாதாரணக் கோரிக்கைகள் அவர்களைச் சென்று அடையாது.
ஏ.வி.மணிகண்டன்
http://www.livingincolors.com/
தொடர்புடைய பதிவுகள்
திருவையாறு இம்முறை
திருவையாறு
தஞ்சை தரிசனம் 3
தஞ்சை தரிசனம் 2
திருவையாறு
March 3, 2012
காந்தியின் இன்றைய முக்கியத்துவம்
ஜெ,
உலகப்போருக்குப் பின் உருவான பொருளியல் நெருக்கடிகளால்தான் வெள்ளையர் இந்தியாவை துறந்தனர், காந்தியின் போராட்டங்களுக்கு அதில் பங்கில்லை என்று சொல்லும் இடதுசாரி விமர்சனங்களைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சரவணன்.ஆர்

ஜீன் ஷார்ப்
அன்புள்ள சரவணன்,
இந்த வினாவுக்கு விரிவாக நான் ஏற்கனவே பலமுறை பதில் சொல்லியிருக்கிறேன். இம்முறை ஒரு கட்டுரையை சுட்டிக்காட்டுகிறேன். காந்தியின் இன்றைய பங்களிப்பைப்பற்றிய ஜீன் ஷார்ப்பின் நீண்ட கட்டுரையின் தமிழாக்கம்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
தீயாட்டு
அன்புள்ள ஜெ,
இப்படி ஒரு கலைவடிவம் இருப்பதைக் கேட்டதே இல்லை.. களம், பாட்டு, கூத்து மூன்றும் கலந்த செவ்வியல் கலை என்று அந்த ஆசான் கூறுகிறார். முறைப்படுத்தி, பொதுவான கலைவடிவமாக்குவது சிறந்த, பாராட்டுக்குரிய பணி.
உண்மையிலேயே பன்னிரண்டாயிரம் தேங்காய்களை உடைப்பார்களா என்ன? ஆச்சரியமாக இருக்கிறது.
அன்புடன்,
ஜடாயு
கேரளத்தின் நிகழ்த்து கலைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். செவ்வியல்கலை, சடங்குக் கலை. சடங்குக்கலையை அங்கே அனுஷ்டான கலை என்கிறார்கள். அங்குள்ள எல்லாக் கலைகளுமே ஏதோ ஒருவகையில் சடங்குக்கலைகளே. பழங்குடி வாழ்க்கையில் கேளிக்கையும் வழிபாடும் ஒன்றாகவே இருந்தன. ஆனால் பின்னாளில் சில கலைகள் செவ்வியல்கலைகளாக வளர்ந்தன.
அவ்வாறு பின்னாளில் செவ்வியல்கலையாக வளர்ந்த முதற்பெரும் கலை கதகளிதான். அதன் மூலம் என்பது ராமனாட்டம், கிருஷ்ணனாட்டம் போன்ற நடன வடிவங்கள். அவை தெய்யாட்டம் திறையாட்டம் போன்ற சடங்குக்கலைகளில் இருந்து உருவானவை. தெய்யம் ஆடுவதும் திறையாடுவதும் இப்போதும் சடங்குக்கலையாகவே நீடிக்கின்றன.
கதகளி, சாக்கையர் கூத்து, மோகினியாட்டம், ஓட்டன் துள்ளல் போன்ற பத்துக்கும் மேற்பட்ட செவ்வியல் கலை வடிவங்கள் கேரளத்தில் இன்றுள்ளன. அவை தவிர முந்நூறுக்கும் மேற்பட்ட சடங்குக்கலைகள் உள்ளன. தமிழகத்தைப்போலன்றிப் பொதுவாகக் கேரளத்தில் சடங்குக் கலைகளுக்குப் படித்த மக்கள் ஆதரவு அதிகம். இடதுசாரிகளும் அவற்றைப் பேணுகிறார்கள்.
சடங்குக்கலைகள் இருவகை. ஒரு குறிப்பிட்ட ஆலயத்தில் மட்டும் அங்குள்ள வழிபாட்டின் பகுதியாகச் செய்யப்படக்கூடியவை என சில கலைகள் உள்ளன. அனைத்துக் கோயில்களிலும் செய்யப்படக்கூடியவை என சில கலைகள் உள்ளன. தெய்யங்களில் சில ஒரு குறிப்பிட்ட தெய்வத்துக்குரியவை. உதாரணம் மந்தப்பன் தெய்யம் என்னும் ஆட்டம் கண்ணூர் அருகே உள்ள மந்தப்பன் காவில் மட்டுமே ஆடப்படும். மாறாக பூதத்தான் தெய்யம் எல்லாக் கோயில்களிலும் இருக்கும்.
செவ்வியல் கலைக்கும் சடங்குக் கலைகளுக்கும் உள்ள வேறுபாட்டை இப்படிச் சொல்லலாம். செவ்வியல் கலை அதன் கலைஞர்களால் தொடர்ச்சியாகக் கற்பனை [மனோதர்மம்] மூலம் வளர்க்கப்பட்டபடியே இருக்கும். பிற கலைகளுடன் உரையாடி முன்னகர்ந்தபடி இருக்கும். செவ்வியல் கலை ஒவ்வொருமுறையும் புதிய ஒன்றை அடைவதனால் அதில் உள்ள நுண்மையாக்கம் [Improvisation] ரசிகர்களுக்கு முக்கியமானது. செவ்வியல் கலையை ரசிப்பதற்கான தகுதி என்பது அதன் பொதுவான அம்சங்களை நன்கு அறிந்தபின் அதன் நுண்மைகளை மேலும் மேலும் அடையாளம் காணும் திறன்தான்.
மாறாக சடங்குக்கலை அப்படி எந்த வளர்ச்சி மாற்றத்தையும், நுண்மையையும் அடைவதில்லை. அது ஒரு குறிப்பிட்ட சடங்குமனநிலையின் குறியீட்டுச்செயல்பாடாக அப்படியே நீடிக்கிறது. அதை ரசிப்பதற்கான தகுதி என்பது அந்த சடங்குச்சூழலின் பொதுவான உணர்வுநிலைக்குள் செல்வதுதான். அந்த சடங்குக்குள் நம் ஆழ்மனம் நுழைய வேண்டும். அதன் ஒரு பகுதியாக நாம் ஆகவேண்டும். அங்கே பிறந்து வளர்ந்தவர்களுக்கு அது எளிது. பிறர் பழகிக்கொள்ளவேண்டும்.
நான் பார்த்தவரை சடங்குக் கலைகளில் நேரடியான உக்கிரமும் ஆவேசமும் பயங்கரமும் இருக்கிறது. ஆகவே அவை முதற்பார்வையிலேயே நம்மைக் கவர்கின்றன. ஆனால் மெல்லமெல்ல அவை நமக்கு ஓர் ஒட்டுமொத்த அனுபவத்தை மட்டுமே அளிக்கின்றன. அவை நம்மை முழுமையாக ஈடுபடுத்துவதில்லை. களமெழுத்து பாட்டு, தீயாட்டு முதலிய சடங்குக் கலைகள் எனக்கு பிற்பாடு அவை நினைவில் மீண்டபோதுதான் ஆழமான மன எழுச்சியை அளித்தன.
தீயாட்டு [தீயாடல்] பதினைந்தாம் நூற்றாண்டு முதலே மலையாள இலக்கியத்தில் பதிவுபெற்ற ஒரு கலை. 'அய்யப்பன் காவில் அடிப்பேன் தளிப்பேன் ஞான், தீயாட்டும் பாட்டுமொரட்டும் கழிப்பேன் ஞான்' என பதினைந்தாம் நூற்றாண்டின் சங்கம்களிப்பாடலில் குறிப்புள்ளது.
அய்யப்பன் தீயாட்டு, பத்ரகாளி தீயாட்டு என இரு ஆடல்கள் உள்ளன. இதற்குப் பல நிலைகள். முதலில் களம் எழுதுதல். அதாவது நிலத்தில் வண்ணப்பொடிகளால் விரிவாக இறைவனின் ஓவியத்தை வரைதல். அதன்பின் கதாபிநயம். இறைவனின் கதை பாடப்பட்டு நடிக்கப்படுவது.
தொடர்ந்து களபூஜை. வரையப்பட்ட படம் பூஜைசெய்யப்படும். அந்த தெய்வத்தை வாழ்த்திக் களத்தின் நான்கு மூலைகளிலும் அமர்ந்து பாடப்படும் பாடல் களம்பாட்டு எனப்படுகிறது. அதன்பின் களத்தில் ஆட்டம். சன்னதம் வந்து களத்தின் மீது ஆடுதல்.
கடைசிக்காட்சி திரியுழியல் எனப்படுகிறது. சன்னதம் வந்து ஆடியபடி தென்னை, கமுகு பூக்களால் களத்தில் வரையப்பட்ட படத்தை அழித்தல் அது. கண்ணெதிரே கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி வந்த பெரும் கோல ஓவியம் கனவுபோலக் கரைந்து கலையும். குமரிமாவட்டத்தில் இது தேவியாட்டு, களமெழுத்துப் பாட்டு என்றும் சொல்லப்படுகிறது.
தீயாட்டுக்குப் பாடப்படும் பாடல்கள் தீயாட்டுப் பாட்டுகள் என்ற தனி வகை. களத்தில் இவை தந்துனி [ஒற்றைத் தந்தி வீணை]குடம் [தோலால் வாய் மூடப்பட்ட குடவாத்தியம்] ஆகியவற்றுடன் இணைத்துப் பாடப்படுகின்றன. களத்தில் வரையப்பட்ட தேவி, தேவனின் பாதாதிகேச வருணனை, கேசாதிபாத வருணனை இரண்டும் இப்பாடல்களில் முக்கியமான அம்சங்கள்.
தீயாட்டு பாட்டுகளில் முதலில் துதிகள். அதன்பின் வாழ்த்துக்கள் இருக்கும். வாழ்த்துப்பாடலை பொலிபாடல் என்றும் சொல்வார்கள். அதன்பின் விவரணைப்பாடல்கள் வரும். அவை களம்பாட்டு என்று சொல்லப்படுகின்றன. இவை தாளமுள்ள உரைநடை போலத்தான் இருக்கும். தேவன் அல்லது தேவியின் திருவிளையாடல்களை இவை விவரிக்கின்றன. இவற்றில் அய்யப்பன் பாட்டு மிக விரிவானது. பன்னிரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுப் பன்னிரண்டு நாட்களிலாகப் பாடப்படுவதும் உண்டு. அதற்குத்தான் உதயஸ்தமனப் பாட்டு என்று பெயர்.
தீயாட்டின் மையமான ஆட்டம் என்பது படம் வரையப்பட்ட களத்தின் நாற்புறமும் தீப்பந்தங்களை நட்டு வைத்து சுற்றிவந்து ஆடும் உக்கிரமான நடனம்தான். தீப்பந்தங்களைக் கையில் ஏந்திச் சுழற்றிப் பலவகையான வடிவங்களை உருவாக்கி ஆடும் நடனம் இது.
இந்தக்கலை தீயாடிகள் என்ற குறிப்பிட்ட சாதிகளால் நடத்தப்பட்டு வந்தது. சடங்குக்கலைகள் அனைத்துக்கும் உள்ள பொது அம்சம் இது, அவற்றைச் செய்ய அவற்றுக்கான தனி சாதிகள் அல்லது உபசாதிகள் இருக்கும். தமிழகத்தில் கணியான்கூத்து ஆடுபவர்கள் கணியான் என்ற சாதியினர், அதைப்போல.
அய்யப்பன் தீயாட்டு நடத்துபவர்கள் தீயாடிநம்பியார் என்றும் காளி தீயாட்டு செய்பவர்கள் தீயாட்டுண்ணிகள் என்றும் அழைக்கப்பட்டார்கள். இவர்களுக்குள் கொள்வினை கொடுப்பினை கிடையாது. தீயாட்டுண்ணிகள் மக்கள் வழி சொத்துரிமை கொண்டவர்கள். தீயாடி நம்பியார்கள் மருமக்கள் வழி சொத்துரிமை கொண்டவர்கள். பொதுவாக தீயாட்டுண்ணிகள் தெற்குக் கேரளத்திலும் தீயாட்டுநம்பியார் வட கேரளத்திலும் உள்ளனர்.
தீயாடி என்றால் சிவனுடைய பெயர். இவர்கள் உயர்ந்த சாதியினராக இருந்து காலப்போக்கில் தாழ்ந்த நிலையை அடைந்து பின்னர் தலித்துகளாக ஆனார்கள். முற்காலத்தில் கேரளத்து ஆலயங்களில் இன்று தலித்துகளாக உள்ள பெருமலையர், வேலன், தீயாடிகள் ஆகிய சமூகத்தினரே பூசாரிகளாக இருந்தனர் என்று பல ஆதாரங்கள் சொல்கின்றன.
கேரள நாட்டுப்புறவியல் கலைக்களஞ்சியம் தீயாடிகளைப்பற்றிச் சொல்லும்போது 'கதைகளின்படி இவர்கள் பிராமணர்களாக இருந்தார்கள். சிவனின் சாபம் மூலம் தாழ்த்தப்பட்டவர்கள் ஆனார்கள்' என்று குறிப்பிடுகிறது. கதை இதுதான். ஒரு காலகட்டத்தில் ஊருக்குள் கடுமையான தொற்றுநோய்கள் வந்தன . அப்போது சிவன் பிராமணர்களை அழைத்து தீப்பந்தங்களைக் கொடுத்து அதைக்கொண்டு சுழற்றித் தேய்த்தால் நோய்கள் விலகும் என்று சொன்னார். அந்தத் தீப்பந்தத்தை சில பிராமணர்கள் இடக்கையால் வாங்கினார்கள். அவர்களை சிவன் சபித்து நீங்கள் தீண்டத்தகாதவர்களாக ஆகுங்கள் என்றார். அவர்களே தீயாடிகள். அந்தச் சடங்கையே அவர்கள் தங்கள் வாழ்க்கையாகக் கொண்டார்கள். இந்தக்கதைக்கு நான்கு வெவ்வேறு வடிவங்கள் உள்ளன.
ஏறத்தாழ இதே கதை அருந்ததியர் பற்றியும் சொல்லப்படுகிறது. பஞ்ச காலத்தில் இந்திரன் நாயக்கர்களின் ஒன்பது உபசாதிகளுக்கு ஒன்பது பசுக்களை அளித்தார். அந்தப்பசுவை ஒரு குழு கொன்று உண்டுவிட்டது. அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக, அருந்ததியர்களாக ஆனார்கள் என்பது அக்கதை.
இக்கதைகள் பின்னாளில் உருவானவை. ஒரு சமூக உண்மையின் புராண வடிவங்கள் என இவற்றைச் சொல்லலாம். ஒருசாதி பற்பல காரணங்களால் ஆதிக்கம் கொண்ட பிறரால் கீழே தள்ளப்பட்டுத் தாழ்ந்தசாதி ஆகிறது. அதற்கான கதை பின்னர் மெல்ல உருவாகி வருகிறது. அதைக் காலப்போக்கில் இரு சாராருமே ஏற்றுக்கொள்கிறார்கள்.
கேரளக் கோயில்கள் சிறிய காட்டுவழிபாட்டிடங்களாக [காவுகளாக] இருந்தபோது இந்த மக்கள் பூசாரிகளாக இருந்தார்கள். அவை ஆலயங்களாக ஆனபோது அவர்கள் வெளியே தள்ளப்பட்டு காலப்போக்கில் தாழ்த்தப்பட்டவர்களாக ஆனார்கள். ஏன், எப்படி? இன்னும் விளக்கப்படாத ஒரு மாபெரும் சமூக மாற்றம் இது.
சென்ற காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக தீயாட்டு மறைந்து வந்தது. ஏனென்றால் தீயாடிகள் அதைச்செய்ய விரும்பவில்லை. அவர்கள் சாதிய அடையாளத்தைத் துறக்க விரும்பினார்கள். தமிழகத்தில் பல நாட்டுப்புறக்கலைகள் அவ்வாறு மறைந்து விட்டன.

தீயாட்டு நடத்தும் ராமன் நம்பியார்
ஆச்சரியமாக கேரளத்தில் பெருவண்ணான், வேலன் தீயாட்டுநம்பியார் போன்ற சாதியினர் சென்ற முப்பது வருடங்களில் பொருளியல் வெற்றி மூலம் தலித் அடையாளத்தைத் தாண்டிச் சென்றுவிட்டிருக்கிறார்கள். இன்று அவர்கள் அச்சாதியடையாளத்தை இழிவாக எண்ணவில்லை. ஆகவே இக்கலைகள் அவர்களின் கௌரவச்சின்னங்களாக ஆகிவிட்டிருக்கின்றன. அக்கலையை மீட்டு எடுக்கவும் முன்கொண்டுசெல்லவும் அவர்களில் உள்ள கற்றவர்கள் முன்வந்திருக்கிறார்கள். மிக முக்கியமான ஒரு மாற்றம் இது. மேலும் பிற சாதியைச்சேர்ந்த கலைஞர்களும் இக்கலைகளுக்குள் நுழைகிறார்கள்.
இன்று தீயாட்டை ஒரு கலைவடிவமாக மீட்டெடுக்கத் திட்டமிட்ட முயற்சிகள் செய்யப்படுகின்றன. மெல்ல சாதியக்கலை என்ற அடையாளத்தை இழந்து அது பொதுவான ஒரு சடங்குக் கலையாக ஆகிவருகிறது.
சாதிசார் சடங்காக இருக்கும்போது அதில் உருவாகாத மாற்றமும் வளர்ச்சியும் கலையார்வத்தால் அதில் வருபவர்களால் கொண்டுவரப்படலாம். ராமன் நம்பியார் அதை செவ்வியல் கலையாக ஆக்க முயல்கிறார் என்று படுகிறது. கதகளியும் அப்படித்தான் கோட்டயத்து தம்புரான் போன்றவர்களால் செவ்வியல்கலையாக ஆகியது.
ஜெ
நாட்டார்கலைகளை பேணத்தான் வேண்டுமா?
மலையாள இலக்கியம்
கலைக்கணம்
தொடர்புடைய பதிவுகள்
குடி,சினிமா,கேரளம்
கடற்கேரளம் 4
கடற்கேரளம் 3
கேரளத்தில் ஓர் அனுபவம்-கடிதம்
கடற்கேரளம் 2
கடற்கேரளம்
பயணம் – கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன்,
நலம் தானே? உங்களை ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு முன் ஹூஸ்டனில் சந்தித்த போது உங்களது ஒரே ஒரு புத்தகத்தை மட்டும் படித்திருந்தேன் (விஷ்ணுபுரம் – நண்பர் சண்முகத்தின் நல்ல ஆலோசனை). அதைப் படித்து முடித்த பிரமிப்பு நீங்குவதற்குள்ளாகவே உங்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது நல்ல அதிருஷ்டம் என்றே சொல்ல வேண்டும். அதிகம் தமிழில் படிக்காமல் இருந்த நான், அந்தச் சந்திப்புக்குப் பிறகு உங்களது அனைத்துப் புத்தகங்களையும் (ஏறக்குறைய – கொற்றவை தவிர்த்து) ஒருமுறையாவது படித்து இருக்கிறேன். உங்களது எழுத்தின் அசுர வேகம் திகைக்க வைக்கிறது. அடிக்கடி எழுத வேண்டும் என்று நினைப்பேன். உங்கள் நேரத்தை ஏன் விரயம் செய்வானேன் என்றே தவிர்த்து விடுவேன்.
நான் இந்தியாவை விட்டு வந்து இப்போது இருபது வருடங்களுக்கு மேலாகி விட்டது – அவ்வப்போது வரும் போது, அம்மாவின் மனதிற்காக, இந்த மாமா வீடு, அந்த அத்தை வீடு என்று போய் வருவதற்குள் பதினைந்து நாள் விடுப்பு போய் விடும். அப்புறம் மீண்டும் பெட்டியைக் கட்டிக் கொண்டு இங்கே கிளம்பி வந்து விடுவது என்று வாழ்க்கை. இதே நிலைதான், என்னுடன் இருக்கும் பல நண்பர்களுக்கும்! நீங்கள் அண்மையில் எழுதிய "அருகர்களின் பாதை' பயணத் தொடர் அற்புதம். என்னைப் போன்ற பலர் கண்டிராத ஒரு இந்தியாவை நீங்கள் அறிமுகப்படுத்தினீர்கள். உங்களது கவித்துவமான நடையும், விரிந்து/பரந்த வரலாற்று நோக்கும், என்னைப் போன்ற பலருக்கு இந்தியாவில் 'ஊர் சுற்றும்' ஆசையை வளர்க்கும் என்பதில் ஐயமில்லை. இத்தகைய ஊர் சுற்றல், நம்மை நாமே அறிந்து கொள்ளும் பயணத்தில் ஒரு முக்கியமான நிலை என்று உங்கள் பயணக் குறிப்புகள் உணர்த்தின. அழகான கட்டிடங்கள், இடிந்த கோவில்கள், வறண்ட பாலை வனங்கள், அனைத்துமே நம் வரலாற்றை, நமக்கு உணர்த்தும் கட்டிட ஆவணங்கள். கலையை ரசிக்கும் கண்களைத் திறக்க வல்லவை.
மேலை நாட்டுப் பயணப் புத்தகங்கள் அழகிய சித்திரங்களோடு, வரலாற்றுக் குறிப்புகளோடு, வரை படங்களோடு, பயணக் குறிப்புகளோடு வெளி வருகின்றன. தனிப்பட்ட முறையில், என் பயணங்களில், அத்தகைய புத்தகங்கள் பெருமளவு உதவி இருக்கின்றன. இந்தப் பயணத்தில் நீங்கள் எழுதியதை உங்களையன்றி வேறு யாரும் எழுதிவிட முடியாது. இந்தக் கட்டுரைகள் நல்ல முறையில் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டால், இது இந்தியப் பயணக் கட்டுரைகள் என்ற பிரிவில் இல்லாமல், ஒரு புதுப் பிரிவையே (Genre) உண்டுபண்ணும் என்று நினைக்கிறேன். இந்தத் தொடரை நீங்கள் அவசியம் மிகச் சிறந்த முறையில் வெளியிட வேண்டும் என்பதே என் விருப்பம். இது பல மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் – இந்தியாவின் விஸ்தாரத்தை அறிந்து கொள்ள உதவும். இந்திய வரலாறு எழுத்தால் எழுதாத வரலாறு. கதைகளாகவும், புராணங்களாகவும் மட்டுமே பெரும்பாலும் இருந்து வரும் வரலாறு. நீங்கள் தேடித் பார்த்து படமெடுத்த கல் கோட்டைகளும், கோவில்களும், சிற்பங்களுமே, நம் எழுதப்படாத வரலாற்றின் பருப்பொருள் ஆவணங்கள். இந்த ஆவணங்கள் பொருளாதார நோக்கில் விரைவில் அழிக்கப்பட்டுவிடும். நீங்கள் எழுதிய கட்டுரைகள், படிக்கும் மக்களிடேயே இவற்றைப் பாதுகாக்கும் உணர்வையும் வளர்க்கும்.
என்னடா, என்னைப் போன்ற எழுத்தாளனை, ஒரு பயண நூலாசிரியனாகச் சொல்கிறானே என்று தவறாக எண்ண மாட்டீர்கள் என்று நம்புகிறேன். பலமுறை யோசித்துப் பார்த்தபின் குறை கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் எழுதுகிறேன். நீங்கள் இன்னும் நூறு பயணங்களை மேற்கொள்ள (சுயநலத்துடன்) வேண்டி முடிக்கிறேன்.
அன்புடன்,
ராஜா
அன்புள்ள ராஜா.
எப்படியும் நானே வருடத்துக்கு நான்கு பெரிய பயணங்களைச் செய்பவன். அதை எழுதுவது நண்பர்களுக்குத் தேவையாகிறது. ஆகவே எழுதுவதே ஒரே வழி.
அருகர்களின் பாதை நூலாக வரும்.
ஜெ
இனிய ஜெமோ..
அருகர் பாதை படித்தேன்.
தங்கள் உதவியால் சமண மதம், இந்தியாவின் நிலப்பரப்பு, தொன்மை, வரலாறு, கலை, அழகியல் ஆகியவற்றை சிறிதாவது அறிந்து கொண்டேன். இக்கட்டுரையாலும், கலையாலும், கோவில்களின் சிற்ப அழகாலும் எழுந்த மன எழுச்சி இன்னும் அதிகமாக இந்தியாவைப்பற்றித் தெரிந்து கொள்ளும் ஆவலைத் தூண்டுகிறது.
முப்பது நாட்களில் முடிவடைந்ததில் வருத்தம் இருந்தாலும், இது முடிவல்ல… "என் வாழ்வின் தேடுதலின்" புது தொடக்கம். இனி பயணம், ஆராய்ச்சி, மனித வாழ்க்கை என பல பரிமாணங்களை உங்கள் எழுத்துக்களில் பார்க்க இருக்கிறேன்.
மிக்க நன்றி .
நன்றி… தாஜ்மஹாலை கட்டியவனுக்கல்ல, காட்டியவனுக்கு !!
உமா
ப்ளோரிடா
அன்புள்ள உமா,
நன்றி.
இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு பெரிய புரிதல் இடைவெளி உள்ளது. பெரிதும் நகர் சார்ந்தவர்கள் நிறைந்த, ஆங்கிலம் படித்தவர்களால் ஆன, நம்முடைய ஊடகம் இந்தியாவைப்பற்றி ஒரு பிழையான சித்திரத்தை அளிக்கிறது. சுவாரசியம், திகைப்பு ஆகியவற்றுக்காக கதைகள், பெரும்பாலும் அவை எதிர்மறையான சித்திரங்கள், நாம் அந்த பிரமைகள் வழியாகவே இந்தியாவை அறிந்திருக்கிறோம்..
நேரடியான பயணங்கள் அந்தச் சித்திரத்தை மாற்றும். இந்தியா வரும்போது நீண்ட சில பயணங்களைத் திட்டமிடுங்கள்.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
அருகர்களின் பாதை — ஓர் அனுபவம்
திருப்பான்மலை, ஊரணித்தாங்கல், நெகநூர்ப்பட்டி
பயணம் — கடிதங்கள்
டொரொண்டோ படங்கள்
இயல்விழா, கிளம்புதல்
பயணச்சிக்கல்கள்
கடிதம்
நயாகரா
ஒண்டேரியோ அருங்காட்சியகம்
ஆயிரம் தீவுகள்
வெல்லண்ட் கால்வாய்
திரைப்பட விழா
சி என் டவர்
டொரொண்டோவில்
கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் பயணம்
பயண நண்பர்கள்
வடகிழக்கு நோக்கி 10, மீண்டும் கல்கத்தா
வடகிழக்கு நோக்கி 9, ஒரு மாவீரரின் நினைவில்
பூட்டான், குழந்தைகள்
அந்தப்பெண்கள்…
March 2, 2012
மானுட ஞானம் அழிகிறதா?
அன்புள்ள ஜெ,
நீண்ட நாட்களாய் ஒரு கேள்வி, அச்சம் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. "மானுட ஞானம்" அழிகிறதா?
மானுடன் பரிணாம ரீதியாகத் தன்னைவிடத் தாழ்ந்த உயிரினங்களோடு இந்த பூமியில் இருக்கின்றான். மிகச்சிறிய உயிரினங்களும் அதன் அடுத்த மேல் நிலை சிக்கலான உயிரினங்களோடு சேர்ந்திருக்கின்றன. நுண்ணுயிர்களான பாக்டீரியாவும், வைரஸும், புழுவும், பூச்சியும், மீனும், பறவையும், தேளும், பாம்பும், குதிரையும், யானையும், புலியும் மனிதன் என்கிற உயிரினத்தோடு வாழுகின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன. சில அழிந்துமிருக்கின்றன. (கரப்பான்பூச்சி நம்மைவிடப் பல காலம் பழைய உயிரினம்!!!)
இச்சங்கிலி இந்த பூமியில் நிலைநிறுத்தவும், வளரச்செய்யவும் செய்கிறது. ஆனால் "மனிதன்" என்கிற உயிரினம் தன்னை விட மேலான உயிர்களோடு இந்த பூமியில் வசிக்கவில்லை. அப்படி ஒரு சாத்தியக்கூறு இருப்பதாகவும் தெரியவில்லை. (யார் என்ன சொன்னாலும் அது ஒரு வாதமாக இருக்குமே தவிர சாத்தியமாகாது. ஒரு உயிரியலாளனாக என்னால் கூறமுடியும்!!) (படம் 1)
Intel நிறுவனர் Andy Groveவின் "inflection point theory" நிர்வாகவியல் வட்டத்தில் மிகவும் பிரபலமானது. அதை மானுட ஞான தத்துவ வளர்ச்சியில் பொருத்திப்பார்த்தேன். இப்படித் தோன்றுகிறது. (படம் 2)
அறிவியலில் ஒரு கொள்கை அல்லது விதி உள்ளது – "bell curve". அதை ஆக்கமும் அழிவும் எனக் கொள்ளலாம். எந்த நிகழ்விற்கும் நான்கு நிலைகள் உண்டு. (ஆக்கம், வளர்ச்சி, முதிர்ச்சி, அழிவு)
எது உருவானாலும் அது அழிந்தேதீரும். .மானுட வாழ்விற்கும், ஞானத்திற்கும் அது பொருந்தும். அதை மானுட ஞானத்திற்குப் பொருத்திப்பார்க்கையில் வருவது சூன்யமே!!! (படம் 3)
அதாவது இன்னும் ஓரு ஐநூறு/ஆயிரம் வருடம் கழித்து படித்துத் தெரிந்து கொள்ள இக்காலத்தில் ஒரு காவியமோ, புது வேதமோ உருவாகவில்லையே. எதன் அடிப்படையில் பிற்காலத்திய மானுட ஞானம் வளரும்? இன்னும் சொல்லப்போனால், மானுட உயிரினமாகிய நாம், நம்மைவிடக் கீழ் நிலை உயிரினத்தோடுதானே போர் செய்கிறோம்?? (மருத்துவ ரீதியாகவும், பரிணாம ரீதியாகவும்)
இப்புவியில் உயிரின் வளர்ச்சியில் கிடைத்த ஞானம் மானுடத்தில் உச்சமடைந்து விட்டதா? மானுட ஞானம் அடுத்த நிலைக்குச் செல்லாதா? கடந்த ஆயிரம் ஆண்டு சரித்திரத்தையே நோக்கினால் உலகளவில் ஒரு முற்றும் புதிய ஞான மார்க்கமோ/அறிதலோ ஏற்படவில்லை. ஞானத்திற்கு ஊன்றுகோல்களான – தொன்மங்கள் / படைப்புகள் (வேதம், உபநிடதம் /காவியங்கள், சித்தாந்தகள் மற்றும் பல) புதிதாகத் தோன்றவில்லையே. பல ஆயிரம் வருடங்கள் முந்திய வேதங்களும், புராணங்களும்தானே இன்னும் நம்மிடையே உள்ளது. அவை மருவி இருக்கலாம். ஆனால் புதிதாய் ஒன்றும் இல்லையே.
சில நூற்றாண்டுகளாக எந்த ஒரு புதிய சிந்தனையும் மானுடத்தைத் திசை திருப்பவில்ல.(பொருளியல் தவிர.. இதற்கும் ஒரு வாதம் – தங்கிவாழ்தல் மற்றும் வியாபாரம். ஒரு பண்டமாற்று விஷயமாகத் தோன்றி, இன்று பொருளியல் மட்டுமே உலகத்தை இயக்குகிறது. இது ஒரு கசப்பான உண்மை!! இனி வரும் காலங்களில் பொருளியல் சேர்க்கையும், பலமுமே தங்கிவாழ்தலுக்கான அடிப்படையாகிவிடும்) ஒரு புது மதமும் உருவாகவில்லை (கிறிஸ்து, இஸ்லாம், பௌத்தம் போன்று), இன்று புழக்கத்தில் இருக்கும் பல விஷயங்கள் சடங்குகளும், சம்பிரதாயங்களும் மருவி வந்தவையே.
உங்களின் பயணக்கட்டுரையைத் தொடர்ந்து படித்து வருகிறேன். பல இடங்களும், ஆலயங்களும், கட்டிடங்களும் பல நூற்றாண்டுகளுக்கு எந்த விதத் தொழில்நுட்பத் துணையுமின்றி அமைக்கப்பட்டவைதானே!! காரணம் – மானுடனின் தேடல். அதன் உந்துதல் – பல நூறு வாழ்க்கையை ஒரு வாழ்நாளிலேயே வாழும் இச்சை கலைகளாய், காவியங்களாய், ஓவியங்களாய், சிற்பங்களாய் தன்னை வெளிப்படுத்திய அந்தத் தேடலில், ஆக்கத்தில் வந்தடைந்த ஞானம். அது கனிந்து நமக்கருளிய வாழ்வு. மானுடன் மற்ற உயிரினங்களைவிடத் தன்னை வேறுபடுத்திகொள்ளவும், தான் கண்டடைந்த ஞானத்தைச் சொல்லவும், பகிரவும், விட்டுச்செல்லவும் இத்தனையும் படைத்தான். அந்தத் தேடல் இன்று இல்லையோ?
ஒன்றைத் தெளிவுபடுத்திவிடுகிறேன். நான் ஞானமெனக் குறிப்பிடுவது பரிணாம வளர்ச்சியாக வரும் மூளையின் வளர்ச்சி அல்ல. அது விஞ்ஞான வளர்ச்சி. "நான் மானிடன்", மற்ற உயிரினங்களுக்கில்லாத ஒரு வரம் எனக்குள்ளதால் நான் வேறுபட்டவன் என்ற உணர்வு மட்டுமே மானிடனை மற்ற உயிரினங்களிடமிருந்து வேறுபடுத்தியிருக்கிறது. அந்த உணர்வின் அடிப்படையிலேயே இத்தனை தூரம் வந்திருக்கிறோம். .
இது போன்ற ஒரு சிந்தனையே ஒரு வேலையத்த வேலை, லூசுத்தனம்என சிலசமயம் தோன்றுகிறது. இன்று மானுடன் வாழ்வது, கற்பது, அனுபவிப்பது ஒரு உயிரியல் – தத்துவ வளர்ச்சியின் பலனே. மானுடனாய் இச்சிந்தனையே என்னைவிடத் தாழ்ந்த நிலையில் உள்ள உயிரினத்தோடு வேறுபடுத்துகிறது. இதுவே என் பலம். மானிடனாய் முக்காலமும் என் சிந்தை ஓடி அலைந்து, தேடி, குழம்பி, தெளிந்து உணர்வதே அந்த ஞானத்தின் வெற்றி. அந்த ஞானம் நம்மையும் தாண்டிச்செல்ல, மானிடனாய் நாம் விட்டுச்செல்ல நம் முன்னே வேறு உயிரினமில்லையே?? அதனால்தான் "மானுட ஞானம்" அழிகிறதோ என ஒரு கேள்வி.
அறிவியல் பூர்வமாய்ச் சிந்தித்தால் இதைத்தான் பல "அறிஞர்கள்" பரிணாமம் என்று "உட்டாலக்கடி" செய்து கூறியிருப்பார்கள்!!!! மனதின் எங்கோ ஒரு ஓரத்தில், நானும் மிருகத்தின் எச்சம்தானே என்ற உணர்வும், மானிடனாய் நான் அடைந்த ஞானமும் நேருக்குநேர் சந்திக்கும் கணங்கள் பூதாகாரமாய் விரிகின்றன… (படம் 4)
தத்துவ சிந்தனையில் முதிர்ச்சியுள்ள உங்களைப்போன்ற ஒருவர் மட்டுமே விடைதர முடியுமென நம்பிக்கையில் எழுதுகிறேன்.
(இதை ஒரே அமர்வில் எழுதவில்லை. இதை எழுத ஆரம்பிக்கும்போது உங்கள் பயணக்கட்டுரை துவங்கவில்லை. அதைப் படிக்கப் படிக்க இக்கேள்வி வலுப்பெற்றுக்கொண்டே சென்றது. அதனால் சில இடங்கள் முன்னும் பின்னும், தொடர்பில்லாமல் இருக்குமெனத் தோன்றுகிறது. ஆனால் சாராம்சம் என்னவென்று புரிந்திருக்குமென நம்புகிறேன். )
சதீஷ் (மும்பை)
அன்புள்ள சதீஷ்,
தத்துவ சிந்தனையில் மட்டும் 'லூசுத்தனமான' எண்ணங்களுக்கு முக்கியமான இடம் உண்டு. தத்துவ சிந்தனையின் பயன் என்ன என்ற கேள்வியை ஒருபோதும் எழுப்பிக்கொள்ளக்கூடாது. இதைப்பற்றி வில் துரந்த் அவரது The Story of Philosophy: the Lives and Opinions of the Greater Philosophers : Will Durant நூலின் முன்னுரையில் விவாதித்திருக்கிறார்.
உங்கள் கேள்வி நிறைய சிந்திக்கச் செய்கிறது. பல கோணங்களில். இந்தக் கேள்விக்கு நடராஜ குரு அல்லது நித்யா என்ன சொல்லியிருப்பார்கள் என்றுதான் நான் முதலில் யோசித்தேன். உண்மையில் இப்படி ஒரு கோணத்தில் சமீப காலத்தில் நான் சிந்தித்ததில்லை. அதற்கு நன்றி.
இப்படி ஓர் ஐயம் அல்லது கேள்வி நம் முன் வரும்போது நாம் செய்யவேண்டுவது ஒன்றுண்டு. இந்த ஐயத்தை அல்லது கேள்வியை நமக்குள் உருவாக்கும் கருத்துநிலைகள் என்னென்ன, அவை எந்த அளவுக்கு அடிப்படையானவை என்ற வினாவை எழுப்பிக்கொள்வதுதான் அது. தத்துவப்பேராசிரியரான நித்யா எந்த ஒரு ஆதாரமான தத்துவக் கேள்விக்கும் இந்த முறைமையை கடைப்பிடிப்பதைக் கண்டிருக்கிறேன். சுருக்கமாகச் சொன்னால், ஏன் நமக்கு இப்படி கேட்கத்தோன்றுகிறது, எந்த அடிப்படைகளைக்கொண்டு இந்தக் கேள்வியை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்?
அந்த ஆய்வில் நித்யா இந்த சொற்களனில் உள்ள முக்கியமான கலைச்சொற்களின் வேரை, அச்சொற்கள் பயன்படுத்தப்படும் அர்த்தங்களை நுணுக்கமாக விவாதிப்பார். ஏனென்றால் ஒரு தத்துவக் கேள்வி அடிப்படையில் ஒரு மொழிக்கட்டுமானமும் கூட. அந்த மொழிக்கட்டுமானத்தை தெளிவாக வகுத்துக்கொள்ளுதல் அக்கேள்வியை வகுத்துக்கொள்ளுதல்தான். 'மனிதன் ஏன் இன்று மகிழ்ச்சியாக இல்லை' என ஒரு கேள்வி என்றால் 'மனிதன்' 'மகிழ்ச்சி' 'இன்று' என்னும் மூன்று சொற்களும் எதைக் குறிக்கின்றன என வகுத்துக்கொள்ளாமல் நித்யா அக்கேள்விக்குள் செல்வதில்லை.
இது ஒரு பொதுவிவாதத்திற்கு இன்னும் முக்கியமானது. ஏனென்றால் நானும் நீங்களும் விவாதிக்கும்போது சொற்களுக்கு நாம் அளிக்கும் பொதுவான பொருள் இருக்கவேண்டும். நான் அளிக்கும் பொருள் என்ன என நீங்கள் தெளிவாக அறிந்திருக்கிறீர்களா என எனக்குத் தெரிந்தாகவேண்டும்.
இந்த அடிப்படை வழிமுறைகளினூடாக உங்கள் கேள்வியை பரிசீலிக்கிறேன்.
உங்கள் கேள்விக்கான அடிப்படைகள் 'மனிதன்' 'ஞானம்' 'பரிணாமம்' ஆகியவற்றுக்கு நீங்கள் அளிக்கும் விளக்கங்களில் உள்ளன.
நீங்கள் மனிதன் என்ற சொல்லை உயிர்க்குலத்தில் முதன்மை கொண்ட இருப்பு, பரிணாமத்தின் உச்சம், உயிர்க்குலத்தில் இருந்து தன்னைப் பிரித்தறியும் மனம் என்னும் பொருள்களில் கையாள்கிறீர்கள். ஞானம் என்பதை மனிதகுலம் பொதுவாகத் திரட்டி வைத்திருக்கும் புறவயமான அறிதல் என்று வரையறை செய்கிறீர்கள். பரிணாமம் என்பதை உயிர்க்குலங்கள் முரணியக்கம் மூலம் கொள்ளும் வளர்ச்சிமாற்றம் என்று அர்த்தம் செய்கிறீர்கள்.
இந்த அடிப்படைகளை நவீன அறிவியல் இயல்பாக ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் தத்துவ சிந்தனை அவற்றை அப்படி ஏற்றுக்கொண்டாகவேண்டும் என்பதில்லை.
உங்கள் கேள்வியின் முதல் முற்கோள் என்பது மனிதன் பரிணாமத்தில் உயர்ந்த நிலையில் இருக்கிறான் என்பதும், பிற உயிர்கள் எல்லாமே அவனைவிடக் கீழ்நிலையில் இருக்கின்றன என்பதும்தான். இது கடந்த ஒருநூற்றாண்டாக மேலை அறிவியலில் ஏறத்தாழ முடிவாகச் சொல்லப்பட்டுவரும் விஷயம். பரிணாமமே மனிதனை உருவாக்குவதற்காக நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று சொல்லும் எல்லைவரை அது சென்றிருக்கிறது. இது செமிட்டிக் மதங்களின் மனிதமைய நோக்குடன் இணைந்து போவதனால் அதை இப்போது மேலைக்கல்வி கற்கும் அனைவரும் இயல்பாக ஏற்றுக்கொள்ளவும் செய்கிறார்கள்.
இந்த விவாதத்தை நீங்கள் நித்யா முன் வைத்தால் இந்த முற்கோள்மீதுதான் அவர் தாக்குதல் தொடுப்பார். நீங்கள் இந்த விவாதத்தை மேலைஅறிவியலின் வட்டத்துக்குள், அல்லது செமிட்டிக் மதங்களின் சொற்களனுக்குள் நின்று விவாதிக்க விரும்புகிறீர்களா என்றுதான் கேட்பார். இல்லை என்று சொன்னீர்கள் என்றால் இந்த முற்கோளின் எல்லைகளை உங்களுக்குச் சுட்டிக்காட்டுவார்.
உங்கள் முற்கோளுக்கான அடிப்படைகளை அரிஸ்டாடில் காலத்திலேயே ஐரோப்பிய சிந்தனையில் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். உயிரினங்களை ஆராயும்போது தனித்தனி அலகுகளாக எடுத்துக்கொண்டு அவற்றின் தனித்தன்மைகளை கவனித்து அட்டவணையிடுவதும், அந்த தனித்தன்மைகளில் இருந்து பொதுத்தன்மைகளை நோக்கிச் செல்வதும், அப்பொதுத்தன்மைகளைக்கொண்டு ஒட்டுமொத்தத்தை உருவகித்துக்கொள்வதும்தான் அரிஸ்டாட்டிலிய முறை இல்லையா?
அதில் இருந்துதான் மனிதன் பரிணாமத்தில் முதன்மையானவன் என்ற நிரூபணத்துக்கான தரவுகளும் தர்க்கமுறையும் கட்டமைக்கப்படுகின்றது. அதாவது நீங்கள் ஒரு தனிமனிதனை எடுத்துக்கொள்கிறீர்கள், ஒரு தனி நாயை, ஒரு தனிச் செடியை, ஒரு தனி வைரஸை அவனுடன் ஒப்பிடுகிறீர்கள். இந்த முறை மனிதனுக்கு தன்னைச்சுற்றியிருக்கும் உயிருலகை தன் தேவைக்கேற்றபடி புரிந்துகொள்ளவும், பயன்படுத்தவும் உதவுகிறது என்பது உண்மை. ஆனால் இதை ஏன் தத்துவத்திலும் மெய்யியலிலும் முழுமுற்றானதாகக் கொள்ளவேண்டும்?
பரிணாமத்தில் தனித்தன்மையை வளர்த்துக்கொள்வது மனிதனின் பரிணாமவழி என்றால் பொதுத்தன்மையை வளர்த்துக்கொள்வது வைரஸின் வழியாக ஏன் இருக்கக்கூடாது? பரிணாமத்தையும் மானுடவரலாற்றையும் பார்க்கையில் மனிதன் தன் தனித்தன்மையை, தனிமனத்தை, தனியடையாளத்தை, தனிச்சிந்தனையை உருவாக்கிக்கொண்டே இருக்கும் சித்திரத்தை அடைகிறோம். இயற்கை, உயிர்க்குலம், மானுடம் என்ற பொதுமைகளில் இருந்து மெல்லமெல்ல தன்னைப் பிரித்துக்காண்பவனாகவே மனிதன் பரிணாமம் கொண்டபடி இருக்கிறான்.
பிறந்த கணம் முதல் சுயத்தை அவன் துளித்துளியாக கட்டமைத்துக்கொள்கிறான். அதன்பின்னர் அந்த சுயம் மூலம் பெற்ற அறிதல்களை மானுடப்பொதுவாக ஆக்க முயல்கிறான். அதற்காக மொழியையும் படிமங்களையும் பயன்படுத்துகிறான். இவ்வாறு மானுடஞானம் மனிதனுக்கு வெளியே ஒரு பெரிய கட்டுமானமாகத் திரண்டபடியே உள்ளது. அதன் பிரம்மாண்டம் நம்மை பிரமிக்கச்செய்கிறது. ஆனால் எந்த மனிதனுக்கும் இது இயல்பாகக் கிடைப்பதில்லை. அது எப்போதும் மனிதனுக்குப் புறத்தேதான் உள்ளது. தன் திறனுக்கு ஏற்ப கொஞ்சத்தை அவன் அதில் கிள்ளிக்கொள்ளலாம், அவ்வளவுதான்.
மனிதன் உருவாக்கிக் கொண்ட இந்தப் புறவயமான கட்டுமானத்தை பரிணாமத்தின் உச்சகட்ட சாதனையாகக் கருதும் முற்கோளில் இருந்தே உங்கள் வினா உருவாகிறது. ஆனால் நம்மைச்சுற்றி இருக்கும் பேரியற்கையின் பரிணாமச் செயல்பாட்டில் வேறு பாதைகளும் இருக்கலாமே? ஒரு வைரஸ் அல்லது ஒரு பாக்டீரியா முற்றிலும் சுயமில்லாததாக, ஒட்டுமொத்தம் மட்டுமேயாக பரிணாமம் கொண்டபடி இருக்கலாம் இல்லையா? அந்த ஒட்டுமொத்தம் மனித ஞானத்தைவிட பிரம்மாண்டமான ஞானத்தைத் திரட்டி ஒட்டுமொத்தமாக தனக்குரியதாக வைத்திருக்கலாம்.
ஒரு தனி வைரஸில் அல்லது தனி எறும்பில் அந்த ஞானம் இல்லாமல் இருக்கலாம். அவற்றின் இயல்பின் காரணமாக அந்த ஞானத்தை அவை புறவயமாக உருவாக்கி நிறுத்தவும் வேண்டியதில்லை. அந்த ஞானம் முழுக்க அவற்றின் இருப்பிலேயே கலந்து அவற்றின் அடிப்படைகளாகவே மாறி அவற்றுடன் இருந்துகொண்டிருக்கலாம். மானுட ஞானத்தைவிட மிகப்பிரம்மாண்டமானதாக அது இருக்காது என எப்படிச் சொல்லமுடியும்?
ஆகவே அதில் இருந்து உருவாகும் உங்கள் இரண்டாவது கருதுகோளையும் அதே கோணத்தில் ஆராயலாம். மற்ற உயிர்கள் எல்லாம் அவற்றை விட 'மேலான' உயிரினங்களுடன் முரணியக்கம் கொண்டு முன்னகர்கின்றன இல்லையா? மனிதன் அப்படி முரணியக்கம் கொள்ள அவனைவிட பெரிய உயிரினங்கள் இல்லை இல்லையா? ஆனால் இதை ஏன் தனித்தனி அலகுகளாக எடுத்துக்கொள்ளவேண்டும்? வைரஸின் ஒட்டுமொத்தம் மானுட ஒட்டுமொத்தத்தைவிட மேலானது என ஏன் சொல்லக்கூடாது? மனிதன் முரணியக்கம் கொள்வது அந்த ஒட்டுமொத்தத்துடன்தான் என ஏன் சொல்லக்கூடாது?
கடைசியாக இன்னொன்று. மேலைச்சிந்தனை முரணியக்கம் என்பதை இயக்கவியலின் ஒரே வழிமுறையாக நினைக்க கிரேக்கர் காலம் முதல் பழகிவிட்டிருக்கிறது. நிர்வாகவியல்வரை இந்த நோக்கு செல்வாக்குடன் உள்ளது. உங்கள் சிந்தனையில் முரணியக்கத்தை மட்டுமே இயல்பான வளர்ச்சி வழிமுறை என்று எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்.
இந்திய தத்துவச் சிந்தனை மரபைக் கொண்டு பார்த்தால் முரணியக்கம் [அதாவது யோகாத்ம தர்சனம்] ஒரு இயங்கியல் மட்டுமே. இன்னும் பலவகையான இயக்கவியல்கள் இயற்கையில் உண்டு. நாமறியாத பலவகை இயக்கவியல்களும் இருக்கலாம். ஒத்திசைவு ஓர் இயக்கவியலே. சுழற்சி ஓர் இயக்கவியலே. இவற்றை இந்திய தத்துவத்திலும் மருத்துவம் போன்ற அறிவியல்களிலும் காணலாம். ஏன், இயற்கை தன்னை அவ்வப்போது முழுக்க அழித்துக்கொண்டு முற்றாக புதியதாக உருவாவதை ஒரு இயக்கவியலாகக் கொண்டிருக்கலாம். இந்து சிந்தனையில் இந்த வகை இயக்கவியலுக்கு ஒரு முக்கியமான இடமுண்டு.
ஆகவே மானுட ஞானம் என்பது முரணியக்கம் வழியாக மட்டுமே முன்னகர முடியும் என்பதும், முரணியக்கச் சாத்தியக்கூறுகள் இல்லாமையால் அந்த வளர்ச்சி நின்றுவிட்டிருக்கிறதா என்பதும் முழுமையான நோக்கைக் காட்டவில்லை. அது மேலை அறிவியல் உருவாக்கியச் சொற்களனுக்குள் மட்டுமே செல்லுபடியாகும் ஒரு வினா மட்டுமே.
சுருக்கமாகச் சொன்னால், மனிதனை ஒரு தனி அலகாகக் காணாமல் உயிர்க்குலத்தின் ஒட்டுமொத்தத்தின் ஒரு துளியாகக் காணும்போது இந்தக் கேள்வியின் அடிப்படை மாறுபடுகிறது. ஞானம் என்பதை மொழியிலும் படிமங்களிலுமாக புறவயமாக திரட்டப்பட்ட அறிவு எனக் கொள்ளாமல் உயிர்க்குலம் தன் இருப்பின் பகுதியாகவே ஆக்கிக்கொண்ட அறிதல்களையும் சேர்த்துக்கொண்டால் உங்கள் கேள்வியின் அடிப்படை மாறுபடுகிறது.
அதாவது மனிதன் தன் மரபணுவில் சேர்த்துக்கொண்ட ஞானம் அவன் புறவயமாக சேர்த்துக்கொண்ட ஞானத்தை விட பலமடங்கு மேலானதாக இருக்கலாமே என நான் சொன்னால் எப்படி மறுப்பீர்கள்? மனிதனை விட மேலும் பலமடங்கு அதிக ஞானத்தை வைரஸ் தன் ஒட்டுமொத்த மரபணுநினைவில் சேர்த்திருக்க வாய்ப்பில்லையா என்று கேட்டால் எப்படி மறுப்பீர்கள்?
கடைசியாக, பரிணாமம் என்பது முரணியக்கம் வழியாக நிகழாமல் ஒத்திசைவு மூலமோ சுழற்சி மூலமோ நிகழ்கிறதெனக் கொண்டாலும் உங்கள் வினாவின் அடிப்படை மாறுபடுகிறது.
மானுடஞானம் ஏன் இன்று மாபெரும் செவ்வியல் நூல்களை உருவாக்கவில்லை என்கிறீர்கள். மானுட ஞானம் தரையில் விழுந்த ஒரு நீர்ப்படலம்போல எனக் கொள்ளுங்கள். அது தன் எல்லா விளிம்புகளிலும் வளர, பரவத் துடிக்கிறது. ஓரு பள்ளம் கிடைத்ததும் அங்கே அது வழிகிறது. பின் இன்னொரு விளிம்பு இன்னொரு பள்ளத்தைக் கண்டு கொள்கிறது. அந்த நிலத்தின் சாத்தியக்கூறுகளே நீரின் வளர்ச்சியை, நகர்வை தீர்மானிக்கின்றன.
மானுட நாகரீக வளர்ச்சியின் ஒரு காலகட்டத்தில் மானுடமனம் [அல்லது மானுட படைப்பூக்கம்] இயற்கையை வகுத்துக்கொள்ள, அடையாளப்படுத்த வேண்டியிருந்தது. அந்தக் காலகட்டத்திலேயே மொழி என்ற வடிவம் உருவானது. மொழிகளை மானுடம் உருவாக்கிக்கொண்ட அந்தக் காலகட்டத்தின் படைப்பூக்க வேகத்தை கற்பனையே செய்ய முடியவில்லை. எவ்வளவு கற்பனை, எவ்வளவு தர்க்கம், எவ்வளவு உள்ளுணர்வு, எவ்வளவு பிரம்மாண்டமான கூட்டான உழைப்பு! அந்தக் காலகட்டமே இன்று நம் புரிதலுக்கு அப்பால் உள்ளது.
அதன்பின்னர் அந்த மொழியைக்கொண்டு இரண்டாம்கட்டப் புரிதல்களை உருவாக்க வேண்டியிருந்தது. வாழ்க்கையையும் இயற்கையையும் இணைத்து புரிந்துகொள்ளவேண்டிய தேவை எழுந்தது. இயற்கையில் இருந்து விழுமியங்களை உருவாக்கி நிறுவ வேண்டியிருந்தது. இலக்கியமும் கலைகளும் உருவாயின. அவை உருவான ஆரம்ப கட்டத்திலேயே அவற்றில் உச்சகட்ட சாதனைகள் உருவாகிவிட்டன. உலகமெங்கும். வேதங்களும் கிரேக்க புராணங்களும் சீனப்பேரிலக்கியங்களும் எல்லாம் உருவான காலகட்டம்.
இன்றைய காலகட்டத்தின் சவால் இன்னொன்று. இன்னொரு திசையில் மானுடஞானம் பீரிட்டுக்கொண்டிருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டில் ஆரம்பித்த அறிவியல்யுகம் இது. கருவிகளைக் கண்டுபிடித்த மனிதன் பின் அக்கருவிகளைச் சார்ந்த சிந்தனைகளை உருவாக்கிக்கொண்டே செல்கிறான்.
மகாபாரதத்தை எழுதிய மேதையான வியாசனால் ஏன் புரி [ஸ்க்ரூ] போல எளிமையான நவீனக் கருவிகளை கண்டுபிடிக்க முடியவில்லை? பெரும் தத்துவங்களை உருவாக்கிய கிரேக்க ஞானிகளால் ஏன் ஆவி இயந்திரங்களை உருவாக்க முடியவில்லை? மானுட ஞானம் அப்போது திறந்த வழியின் திசை வேறு என்பதே அதன் பதில். அது தத்துவத்தின் யுகம், செவ்வியலின் யுகம். இது தொழில்நுட்பத்தின் யுகம், அறிவியலின் யுகம். நாளை முற்றிலும் புதிய இன்னொரு வழி திறக்கலாம். புதிய யுகம் உருவாகலாம். அதை இன்று நம்மால் ஊகிக்க முடியாது.
அந்தப் பரிணாமம் முரணியக்கம் வழியாக மட்டுமே உருவாகும் என மானுட வரலாற்றைப் பார்த்தால் சொல்ல முடியாது. அதாவது இந்த யுகத்தின் தொடர்ச்சியாக அது உருவாகவேண்டும் என்பதில்லை. இந்த யுகம் அப்படியே அறுபட்டு நிற்க, முற்றிலும் புதிய வகையில் அந்த யுகம் திறந்துகொள்ளலாம். மானுடம் அவ்வழியே மேலும் செல்லலாம். மானுட ஞானம் என நாம் இன்று சொல்லக்கூடியது அன்று முற்றிலும் இன்னொன்றாக ஆகலாம். இந்தப் பிரபஞ்சமும், பூமியும், இயற்கையும் பரிணாமம் வழியாக எங்கே செல்கின்றன என்பது நம் அறிதலுக்கு அப்பாற்பட்டது.
மனிதனைப்பற்றி, இந்த பூமி உருவாகி உருமாறி உயிர்க்குலம் பரிணாமம் கொண்டதைப்பற்றி, நாம் அறிந்ததெல்லாம் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த வாழ்க்கைச்சூழல், இந்தப் புலன்கள், இந்த மூளையின் சாத்தியங்களுக்குள் நாம் உருவகித்துக்கொள்வது மட்டுமே. இதை முழுமுற்றான ஞானம் என நாம் நினைப்பது ஒரு மூடநம்பிக்கை. அந்த மூடநம்பிக்கை மீதுதான் மானுடம் உருவாக்கிக்கொண்டுள்ள எல்லா தத்துவங்களும் அறிவியல்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அதாவது நாம் மானுடர்கள் என்பதனாலேயே நம்மால் மானுடஞானத்தை மட்டுமே அறிய முடியும். முழுஞானத்தை அல்ல. நாம் நம் இருப்பால், இயல்பால் நாமறியும் விஷயங்களை எல்லைக்கு உட்பட்டதாக ஆக்கிக்கொள்கிறோம். அந்த எல்லைக்குள் உள்ள ஞானத்தை மட்டுமே அறிகிறோம். நாம் வாழும் பூமியும் இதன் இயற்கையும் நம்மைவிட மிகமிகப் பிரம்மாண்டமானவை.
நம் இருப்பு என்னும் எல்லைக்குள் நின்று அதன் இயக்கத்தை நம்மால் முழுமையாக அறிந்துகொள்ளமுடியாது. நாம் அறிவது நம் அறிதலின் சாத்தியங்களை மட்டுமே. அவற்றைக்கொண்டு நாம் நமக்குத்தேவையான ஞானத்தை மட்டுமே உருவாக்கிக்கொள்ளமுடியும். அதைக்கொண்டு நம்மால் முழுமுற்றான கேள்விகளுக்கு இறுதி விடைகளை சொல்லிவிடமுடியாது.
முழுமையான அறிதல் என்பது நம் இருப்புக்கு அப்பால் சென்றால் மட்டுமே நம்மால் அறியப்படக்கூடியது என்று வேதாந்தமும் பௌத்தமும் சமணமும் வகுத்தன. இருப்பின் ஒரு துளி எஞ்சுவது வரை அறியப்படுவது அரை உண்மையையே.ஆகவே உண்மையை அறிவதென்பது கொஞ்சம் கொஞசமாக சுயத்தை உதறி முன்செல்லும் பயணம்தான்.
நடராஜ குருவின் அரிய வரி ஒன்றுண்டு ' All human truths are phenomenal truths and all phenomenal truths are half truths'
நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வதைப்பற்றி யோசித்துப்பாருங்கள். அந்தப்பதில் உயிர்ப் பரிணாமத்தின் நோக்கத்தைப் பற்றிய திட்டவட்டமான ஒரு விளக்கமாக மட்டுமே இருக்க முடியும் அல்லவா? அதை விளக்க பிரபஞ்ச இயக்கத்தை விளக்க வேண்டியிருக்கும் இல்லையா?
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
புதிய பிரபஞ்சம் பற்றி
பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்.
தங்கள் வலைத்தளத்தில் கடந்த 27 /09 /11 அன்று "புதிய பிரபஞ்சம்" என்ற தலைப்பில் வெளிவந்திருந்த அறிவியல் கட்டுரையில் சுவிட்சர்லாந்தில் உள்ள அணு ஆராய்ச்சிக்கூட்டமைப்பு நிகழ்த்திய பரிசோதனையில் அதிநுண்துகள்களான நியூட்ரினோக்கள் ஒளியைவிட வேகமாகச் செல்வதைப் புறவயமாக நிரூபித்துள்ளது என்றும் இது உண்மையென்றால் பிரபஞ்ச ஈர்ப்பு விசைகள் பற்றிய நியூட்டனின் கண்டுபிடிப்பு முன்வைக்கப்பட்டது போல, சார்பியல் கோட்பாடு முன்வைக்கப்பட்டதைப்போல, மானுட சிந்தனை வரலாற்றின் ஒரு முக்கியமான திருப்புமுனை இது. முதலில் தோன்றிய எண்ணமே இந்த ஆய்வின்மீது மாற்றுக்கருத்துக்கள் என்னென்ன வருகின்றன என்று கவனிக்கவேண்டும் என்றுதான். அது ஒரு எச்சரிக்கைமனநிலை என்றும் மேலும் ஒளியைவிட அதிகவேகத்தில் ஒரு துகள் செல்லமுடியும் என்றால் ஐன்ஸ்டீனின் e=mc2 என்ற புகழ்பெற்ற சூத்திரம் பிழையாக ஆகிறது. இந்தப் பிரபஞ்சத்தின் காலதூர பரிமாணங்கள் பற்றிய இதுவரையிலான பல கொள்கைகளை முழுமையாக மாற்றியமைக்கவேண்டியிருக்கும். இதுவரை பெரும்பாலான அணுவிஞ்ஞானிகள் ஐயத்துடன்தான் இருக்கிறார்கள். ஆனால் இன்று காலை வரை வந்துகொண்டிருக்கும் செய்திகள் இச்சோதனைமுடிவுகள் உறுதிசெய்யப்படும் என்ற எண்ணத்தையே உருவாக்குகின்றன. அப்படி நிகழ்ந்தால் அது ஒரு மகத்தான மானுடநிகழ்வுதான் என்றும் எழுதி இருந்தீர்கள்.
ஆனால் இன்று (01 /03 /12 ) 'ஹிந்து' வில் வந்த செய்தியில் ஒளியைவிட அதிகவேகத்தில் ஒரு துகள் செல்லமுடியும் என்ற ஆராய்ச்சியில் தவறு உள்ளதாகக் கூறப்பட்டு இருக்கிறது. இதைத் தங்களின் பார்வைக்கு கொண்டு வருகிறேன்.
அச் செய்தியின் சுட்டியை கீழே கொடுத்து இருக்கிறேன்.:
http://www.thehindu.com/sci-tech/science/article2924054.ece
அன்புடன்,
அ.சேஷகிரி,
ஆழ்வார்திருநகரி.
தொடர்புடைய பதிவுகள்
அறிவியலுக்கென்ன குறை?
மெய்ஞானம் சில்லறை விற்பனை
இரு இணைப்புகள்
March 1, 2012
மாடு – கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன்,
மாடல்ல மற்றையவை கட்டுரையை நீங்கள் நகைச்சுவைப் பகுதியில் சேர்த்திருக்கிறீர்கள். நானென்னவோ கண்கள் பனிக்கக் கட்டுரையைப் படித்து உணர்ச்சி வசப்பட்டேன். இதில் சோற்றுக்கணக்கு, யானைடாக்டர், கோட்டி போன்ற கதைகளின் சாரம் இருக்கிறது. விவசாயிகளின் நிலை இதைவிட அதிக 'நகைச்சுவையுடன்' உள்ளது. என்அப்பா விவசாயம் பார்க்கிறார். என்னிடம் பணம் எதுவும் கேட்பதில்லை. அதற்கு அவருடைய ஆசிரியர் வேலையின் ஓய்வூதியம் உள்ளது. மனதைத் தொடும் கட்டுரையைக் கொடுத்ததற்கு நன்றி.
அன்புடன்
த. துரைவேல்.
அன்புள்ள ஜெயமோகன் சார்,
நலந்தானே?
விடியற்காலையில் இப்படி நான் சிரித்ததே இல்லை. தூங்கிக் கொண்டிருந்த மனைவி, மக்கள் எல்லாம் எழுந்து விட்டார்கள். விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே இருந்தேன். பால்காரன் இறுதியில் சொன்ன 'punch dialogue' அருமையிலும் அருமை. இயல்பான அங்கதம் படித்து வெகு நாட்களாயிற்று.
அன்புடன்
இளம்பரிதி
தொடர்புடைய பதிவுகள்
இன்றைய புராணங்கள்
ஸ்ரீலால் சுக்லவின் தர்பாரி ராகம்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
