தீயாட்டு

அன்புள்ள ஜெ,


இப்படி ஒரு கலைவடிவம் இருப்பதைக் கேட்டதே இல்லை.. களம், பாட்டு, கூத்து மூன்றும் கலந்த செவ்வியல் கலை என்று அந்த ஆசான் கூறுகிறார். முறைப்படுத்தி, பொதுவான கலைவடிவமாக்குவது சிறந்த, பாராட்டுக்குரிய பணி.


உண்மையிலேயே பன்னிரண்டாயிரம் தேங்காய்களை உடைப்பார்களா என்ன? ஆச்சரியமாக இருக்கிறது.


அன்புடன்,

ஜடாயு



கேரளத்தின் நிகழ்த்து கலைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். செவ்வியல்கலை, சடங்குக் கலை. சடங்குக்கலையை அங்கே அனுஷ்டான கலை என்கிறார்கள். அங்குள்ள எல்லாக் கலைகளுமே ஏதோ ஒருவகையில் சடங்குக்கலைகளே. பழங்குடி வாழ்க்கையில் கேளிக்கையும் வழிபாடும் ஒன்றாகவே இருந்தன. ஆனால் பின்னாளில் சில கலைகள் செவ்வியல்கலைகளாக வளர்ந்தன.


அவ்வாறு பின்னாளில் செவ்வியல்கலையாக வளர்ந்த முதற்பெரும் கலை கதகளிதான். அதன் மூலம் என்பது ராமனாட்டம், கிருஷ்ணனாட்டம் போன்ற நடன வடிவங்கள். அவை தெய்யாட்டம் திறையாட்டம் போன்ற சடங்குக்கலைகளில் இருந்து உருவானவை. தெய்யம் ஆடுவதும் திறையாடுவதும் இப்போதும் சடங்குக்கலையாகவே நீடிக்கின்றன.


கதகளி, சாக்கையர் கூத்து, மோகினியாட்டம், ஓட்டன் துள்ளல் போன்ற பத்துக்கும் மேற்பட்ட செவ்வியல் கலை வடிவங்கள் கேரளத்தில் இன்றுள்ளன. அவை தவிர முந்நூறுக்கும் மேற்பட்ட சடங்குக்கலைகள் உள்ளன. தமிழகத்தைப்போலன்றிப் பொதுவாகக் கேரளத்தில் சடங்குக் கலைகளுக்குப் படித்த மக்கள் ஆதரவு அதிகம். இடதுசாரிகளும் அவற்றைப் பேணுகிறார்கள்.


சடங்குக்கலைகள் இருவகை. ஒரு குறிப்பிட்ட ஆலயத்தில் மட்டும் அங்குள்ள வழிபாட்டின் பகுதியாகச் செய்யப்படக்கூடியவை என சில கலைகள் உள்ளன. அனைத்துக் கோயில்களிலும் செய்யப்படக்கூடியவை என சில கலைகள் உள்ளன. தெய்யங்களில் சில ஒரு குறிப்பிட்ட தெய்வத்துக்குரியவை. உதாரணம் மந்தப்பன் தெய்யம் என்னும் ஆட்டம் கண்ணூர் அருகே உள்ள மந்தப்பன் காவில் மட்டுமே ஆடப்படும். மாறாக பூதத்தான் தெய்யம் எல்லாக் கோயில்களிலும் இருக்கும்.



செவ்வியல் கலைக்கும் சடங்குக் கலைகளுக்கும் உள்ள வேறுபாட்டை இப்படிச் சொல்லலாம். செவ்வியல் கலை அதன் கலைஞர்களால் தொடர்ச்சியாகக் கற்பனை [மனோதர்மம்] மூலம் வளர்க்கப்பட்டபடியே இருக்கும். பிற கலைகளுடன் உரையாடி முன்னகர்ந்தபடி இருக்கும். செவ்வியல் கலை ஒவ்வொருமுறையும் புதிய ஒன்றை அடைவதனால் அதில் உள்ள நுண்மையாக்கம் [Improvisation] ரசிகர்களுக்கு முக்கியமானது. செவ்வியல் கலையை ரசிப்பதற்கான தகுதி என்பது அதன் பொதுவான அம்சங்களை நன்கு அறிந்தபின் அதன் நுண்மைகளை மேலும் மேலும் அடையாளம் காணும் திறன்தான்.


மாறாக சடங்குக்கலை அப்படி எந்த வளர்ச்சி மாற்றத்தையும், நுண்மையையும் அடைவதில்லை. அது ஒரு குறிப்பிட்ட சடங்குமனநிலையின் குறியீட்டுச்செயல்பாடாக அப்படியே நீடிக்கிறது. அதை ரசிப்பதற்கான தகுதி என்பது அந்த சடங்குச்சூழலின் பொதுவான உணர்வுநிலைக்குள் செல்வதுதான். அந்த சடங்குக்குள் நம் ஆழ்மனம் நுழைய வேண்டும். அதன் ஒரு பகுதியாக நாம் ஆகவேண்டும். அங்கே பிறந்து வளர்ந்தவர்களுக்கு அது எளிது. பிறர் பழகிக்கொள்ளவேண்டும்.


நான் பார்த்தவரை சடங்குக் கலைகளில் நேரடியான உக்கிரமும் ஆவேசமும் பயங்கரமும் இருக்கிறது. ஆகவே அவை முதற்பார்வையிலேயே நம்மைக் கவர்கின்றன. ஆனால் மெல்லமெல்ல அவை நமக்கு ஓர் ஒட்டுமொத்த அனுபவத்தை மட்டுமே அளிக்கின்றன. அவை நம்மை முழுமையாக ஈடுபடுத்துவதில்லை. களமெழுத்து பாட்டு, தீயாட்டு முதலிய சடங்குக் கலைகள் எனக்கு பிற்பாடு அவை நினைவில் மீண்டபோதுதான் ஆழமான மன எழுச்சியை அளித்தன.


தீயாட்டு [தீயாடல்] பதினைந்தாம் நூற்றாண்டு முதலே மலையாள இலக்கியத்தில் பதிவுபெற்ற ஒரு கலை. 'அய்யப்பன் காவில் அடிப்பேன் தளிப்பேன் ஞான், தீயாட்டும் பாட்டுமொரட்டும் கழிப்பேன் ஞான்' என பதினைந்தாம் நூற்றாண்டின் சங்கம்களிப்பாடலில் குறிப்புள்ளது.


அய்யப்பன் தீயாட்டு, பத்ரகாளி தீயாட்டு என இரு ஆடல்கள் உள்ளன. இதற்குப் பல நிலைகள். முதலில் களம் எழுதுதல். அதாவது நிலத்தில் வண்ணப்பொடிகளால் விரிவாக இறைவனின் ஓவியத்தை வரைதல். அதன்பின் கதாபிநயம். இறைவனின் கதை பாடப்பட்டு நடிக்கப்படுவது.


தொடர்ந்து களபூஜை. வரையப்பட்ட படம் பூஜைசெய்யப்படும். அந்த தெய்வத்தை வாழ்த்திக் களத்தின் நான்கு மூலைகளிலும் அமர்ந்து பாடப்படும் பாடல் களம்பாட்டு எனப்படுகிறது. அதன்பின் களத்தில் ஆட்டம். சன்னதம் வந்து களத்தின் மீது ஆடுதல்.


கடைசிக்காட்சி திரியுழியல் எனப்படுகிறது. சன்னதம் வந்து ஆடியபடி தென்னை, கமுகு பூக்களால் களத்தில் வரையப்பட்ட படத்தை அழித்தல் அது. கண்ணெதிரே கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி வந்த பெரும் கோல ஓவியம் கனவுபோலக் கரைந்து கலையும். குமரிமாவட்டத்தில் இது தேவியாட்டு, களமெழுத்துப் பாட்டு என்றும் சொல்லப்படுகிறது.


தீயாட்டுக்குப் பாடப்படும் பாடல்கள் தீயாட்டுப் பாட்டுகள் என்ற தனி வகை. களத்தில் இவை தந்துனி [ஒற்றைத் தந்தி வீணை]குடம் [தோலால் வாய் மூடப்பட்ட குடவாத்தியம்] ஆகியவற்றுடன் இணைத்துப் பாடப்படுகின்றன. களத்தில் வரையப்பட்ட தேவி, தேவனின் பாதாதிகேச வருணனை, கேசாதிபாத வருணனை இரண்டும் இப்பாடல்களில் முக்கியமான அம்சங்கள்.



தீயாட்டு பாட்டுகளில் முதலில் துதிகள். அதன்பின் வாழ்த்துக்கள் இருக்கும். வாழ்த்துப்பாடலை பொலிபாடல் என்றும் சொல்வார்கள். அதன்பின் விவரணைப்பாடல்கள் வரும். அவை களம்பாட்டு என்று சொல்லப்படுகின்றன. இவை தாளமுள்ள உரைநடை போலத்தான் இருக்கும். தேவன் அல்லது தேவியின் திருவிளையாடல்களை இவை விவரிக்கின்றன. இவற்றில் அய்யப்பன் பாட்டு மிக விரிவானது. பன்னிரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுப் பன்னிரண்டு நாட்களிலாகப் பாடப்படுவதும் உண்டு. அதற்குத்தான் உதயஸ்தமனப் பாட்டு என்று பெயர்.


தீயாட்டின் மையமான ஆட்டம் என்பது படம் வரையப்பட்ட களத்தின் நாற்புறமும் தீப்பந்தங்களை நட்டு வைத்து சுற்றிவந்து ஆடும் உக்கிரமான நடனம்தான். தீப்பந்தங்களைக் கையில் ஏந்திச் சுழற்றிப் பலவகையான வடிவங்களை உருவாக்கி ஆடும் நடனம் இது.


இந்தக்கலை தீயாடிகள் என்ற குறிப்பிட்ட சாதிகளால் நடத்தப்பட்டு வந்தது. சடங்குக்கலைகள் அனைத்துக்கும் உள்ள பொது அம்சம் இது, அவற்றைச் செய்ய அவற்றுக்கான தனி சாதிகள் அல்லது உபசாதிகள் இருக்கும். தமிழகத்தில் கணியான்கூத்து ஆடுபவர்கள் கணியான் என்ற சாதியினர், அதைப்போல.


அய்யப்பன் தீயாட்டு நடத்துபவர்கள் தீயாடிநம்பியார் என்றும் காளி தீயாட்டு செய்பவர்கள் தீயாட்டுண்ணிகள் என்றும் அழைக்கப்பட்டார்கள். இவர்களுக்குள் கொள்வினை கொடுப்பினை கிடையாது. தீயாட்டுண்ணிகள் மக்கள் வழி சொத்துரிமை கொண்டவர்கள். தீயாடி நம்பியார்கள் மருமக்கள் வழி சொத்துரிமை கொண்டவர்கள். பொதுவாக தீயாட்டுண்ணிகள் தெற்குக் கேரளத்திலும் தீயாட்டுநம்பியார் வட கேரளத்திலும் உள்ளனர்.


தீயாடி என்றால் சிவனுடைய பெயர். இவர்கள் உயர்ந்த சாதியினராக இருந்து காலப்போக்கில் தாழ்ந்த நிலையை அடைந்து பின்னர் தலித்துகளாக ஆனார்கள். முற்காலத்தில் கேரளத்து ஆலயங்களில் இன்று தலித்துகளாக உள்ள பெருமலையர், வேலன், தீயாடிகள் ஆகிய சமூகத்தினரே பூசாரிகளாக இருந்தனர் என்று பல ஆதாரங்கள் சொல்கின்றன.


கேரள நாட்டுப்புறவியல் கலைக்களஞ்சியம் தீயாடிகளைப்பற்றிச் சொல்லும்போது 'கதைகளின்படி இவர்கள் பிராமணர்களாக இருந்தார்கள். சிவனின் சாபம் மூலம் தாழ்த்தப்பட்டவர்கள் ஆனார்கள்' என்று குறிப்பிடுகிறது. கதை இதுதான். ஒரு காலகட்டத்தில் ஊருக்குள் கடுமையான தொற்றுநோய்கள் வந்தன . அப்போது சிவன் பிராமணர்களை அழைத்து தீப்பந்தங்களைக் கொடுத்து அதைக்கொண்டு சுழற்றித் தேய்த்தால் நோய்கள் விலகும் என்று சொன்னார். அந்தத் தீப்பந்தத்தை சில பிராமணர்கள் இடக்கையால் வாங்கினார்கள். அவர்களை சிவன் சபித்து நீங்கள் தீண்டத்தகாதவர்களாக ஆகுங்கள் என்றார். அவர்களே தீயாடிகள். அந்தச் சடங்கையே அவர்கள் தங்கள் வாழ்க்கையாகக் கொண்டார்கள். இந்தக்கதைக்கு நான்கு வெவ்வேறு வடிவங்கள் உள்ளன.


ஏறத்தாழ இதே கதை அருந்ததியர் பற்றியும் சொல்லப்படுகிறது. பஞ்ச காலத்தில் இந்திரன் நாயக்கர்களின் ஒன்பது உபசாதிகளுக்கு ஒன்பது பசுக்களை அளித்தார். அந்தப்பசுவை ஒரு குழு கொன்று உண்டுவிட்டது. அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக, அருந்ததியர்களாக ஆனார்கள் என்பது அக்கதை.


இக்கதைகள் பின்னாளில் உருவானவை. ஒரு சமூக உண்மையின் புராண வடிவங்கள் என இவற்றைச் சொல்லலாம். ஒருசாதி பற்பல காரணங்களால் ஆதிக்கம் கொண்ட பிறரால் கீழே தள்ளப்பட்டுத் தாழ்ந்தசாதி ஆகிறது. அதற்கான கதை பின்னர் மெல்ல உருவாகி வருகிறது. அதைக் காலப்போக்கில் இரு சாராருமே ஏற்றுக்கொள்கிறார்கள்.


கேரளக் கோயில்கள் சிறிய காட்டுவழிபாட்டிடங்களாக [காவுகளாக] இருந்தபோது இந்த மக்கள் பூசாரிகளாக இருந்தார்கள். அவை ஆலயங்களாக ஆனபோது அவர்கள் வெளியே தள்ளப்பட்டு காலப்போக்கில் தாழ்த்தப்பட்டவர்களாக ஆனார்கள். ஏன், எப்படி? இன்னும் விளக்கப்படாத ஒரு மாபெரும் சமூக மாற்றம் இது.


சென்ற காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக தீயாட்டு மறைந்து வந்தது. ஏனென்றால் தீயாடிகள் அதைச்செய்ய விரும்பவில்லை. அவர்கள் சாதிய அடையாளத்தைத் துறக்க விரும்பினார்கள். தமிழகத்தில் பல நாட்டுப்புறக்கலைகள் அவ்வாறு மறைந்து விட்டன.





தீயாட்டு நடத்தும் ராமன் நம்பியார்


ஆச்சரியமாக கேரளத்தில் பெருவண்ணான், வேலன் தீயாட்டுநம்பியார் போன்ற சாதியினர் சென்ற முப்பது வருடங்களில் பொருளியல் வெற்றி மூலம் தலித் அடையாளத்தைத் தாண்டிச் சென்றுவிட்டிருக்கிறார்கள். இன்று அவர்கள் அச்சாதியடையாளத்தை இழிவாக எண்ணவில்லை. ஆகவே இக்கலைகள் அவர்களின் கௌரவச்சின்னங்களாக ஆகிவிட்டிருக்கின்றன. அக்கலையை மீட்டு எடுக்கவும் முன்கொண்டுசெல்லவும் அவர்களில் உள்ள கற்றவர்கள் முன்வந்திருக்கிறார்கள். மிக முக்கியமான ஒரு மாற்றம் இது. மேலும் பிற சாதியைச்சேர்ந்த கலைஞர்களும் இக்கலைகளுக்குள் நுழைகிறார்கள்.


இன்று தீயாட்டை ஒரு கலைவடிவமாக மீட்டெடுக்கத் திட்டமிட்ட முயற்சிகள் செய்யப்படுகின்றன. மெல்ல சாதியக்கலை என்ற அடையாளத்தை இழந்து அது பொதுவான ஒரு சடங்குக் கலையாக ஆகிவருகிறது.


சாதிசார் சடங்காக இருக்கும்போது அதில் உருவாகாத மாற்றமும் வளர்ச்சியும் கலையார்வத்தால் அதில் வருபவர்களால் கொண்டுவரப்படலாம். ராமன் நம்பியார் அதை செவ்வியல் கலையாக ஆக்க முயல்கிறார் என்று படுகிறது. கதகளியும் அப்படித்தான் கோட்டயத்து தம்புரான் போன்றவர்களால் செவ்வியல்கலையாக ஆகியது.


ஜெ




நாட்டார்கலைகளை பேணத்தான் வேண்டுமா?




மலையாள இலக்கியம்




கலைக்கணம்


தொடர்புடைய பதிவுகள்

குடி,சினிமா,கேரளம்
கடற்கேரளம் 4
கடற்கேரளம் 3
கேரளத்தில் ஓர் அனுபவம்-கடிதம்
கடற்கேரளம் 2
கடற்கேரளம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 03, 2012 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.