Jeyamohan's Blog, page 2250
March 1, 2012
வாசிப்பும் சமநிலையும்
எழுத்தாளருக்கு வணக்கம்,
எழுத்தாளர் ஜெயகாந்தன் புத்தகங்கள் மூலமாகத்தான் எனக்கு இலக்கியம் அறிமுகம். I shaped my conduct based on his writings. So, he is more than a writer to me. இத்தனைக்கும் அவருடைய ஒரு சில புத்தகங்கள் மட்டுமே படித்திருக்கிறேன். எனக்கு இலக்கிய நண்பர்கள் யாரும் இல்லை. தெரிந்த நண்பர்களுக்கு சிறுவர்மலர், வாரமலர் போன்றவையே இலக்கியம். தற்செயலாக ஏதோ இணையத்தில் தேடி உங்கள் தளத்திற்கு வந்து சேர்ந்தேன். உங்கள் மூலமாகத்தான் எனக்குத் தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் அசோகமித்திரன், கி.ரா. பற்றித் தெரிந்தது.
தமிழின் முக்கியமான நாவல்கள் ஓரளவு படித்திருக்கிறேன். வாசிப்புப் பழக்கம் வந்தபிறகுதான் நிறைய மனக்கொந்தளிப்பிற்கு ஆளாகியிருக்கிறேன். இப்போது சில மாதங்களாக வாழ்கையின் நிலையின்மை, அர்த்தமின்மை போன்ற சிந்தனைகளே என் மனதை நிறைத்துள்ளன, அதனால் எனக்கு நிறைய விஷயங்களில் சோர்வும் வாழ்க்கையில் சலிப்பும் வந்துவிட்டது. நன்றாக ஞாபகம் இருக்கிறது, "மானுடம் வெல்லும்" படிக்கும்போதுதான் இது ஆரம்பம் ஆனது, தொடர்ந்து சில போர் திரைப்படங்கள் பார்த்தேன்.
என்னால் இப்போது எதையும் சலிப்பின்றி செய்யமுடிவதில்லை. I am stagnant now and even don't show interest in my career. என்னுடைய நண்பர்களை இப்போது பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. நான் இலக்கியத்தை சரியாக உள்வாங்கிக் கொள்ளவில்லையா? How to suppress these thoughts?
நேரம் இருந்தால் பதில் அனுப்பவும்.
அசோக் குமார்
அன்புள்ள அசோக் குமார்,
இலக்கியம் உண்மையில் உணர்ச்சிச் சமநிலையையும், லௌகீகத்தில் இருந்து ஒரு மெல்லிய விலக்கத்தையும் உருவாக்கும். நாம் அதற்கு முன் ஆவேசப்பட்ட,கொந்தளித்த பல விஷயங்களைப் புறவயமாகப் பார்க்கக் கற்றுக்கொள்வோம். நம்மை நாமே கவனிக்க ஆரம்பிப்போம்.
ஆனால் சிலருக்கு ஆரம்ப நிலையில் ஒரு கொந்தளிப்பையும் உள்நோக்கிச் செல்லலையும் உருவாக்கலாம். அது அவர்களின் ஆளுமையைச் சார்ந்தது. அதற்கும் இலக்கியத்துக்கும் நேரடியான சம்பந்தமில்லை என்றே நினைக்கிறேன். புதிய விஷயங்களைச் சந்தித்ததும் அவற்றை உள்வாங்கிச் செரித்துக்கொள்ள முடியாமையின் விளைவு அது, அவ்வளவுதான்.
நாம் நம் அகஇருப்பை தத்துவார்த்தமாக வகுத்து வைத்திருக்கிறோம். நியாயப்படுத்தல்கள், விளக்கங்கள், கொள்கைகள் என ஏராளமாக நம்முள் உள்ளது. வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் இவற்றைக்கொண்டே நாம் புரிந்துகொள்கிறோம். இது சரி, இது தவறு, இது இப்படி, இது இதனால் என வகுத்திருக்கிறோம். அதாவது நாம் நம் உள்ளத்துக்குள் ஒரு கருத்தியல் கட்டுமானத்தைக் கட்டி வைத்திருக்கிறோம்.
பெரும்பாலானவர்களுக்கு இந்தக் கட்டுமானம் சூழலால், அம்மா அப்பாவால், பள்ளியால் அளிக்கப்படுகிறது. அவர்களுடைய கருத்தியல் கட்டுமானம் அவர்களுக்கே தெரியாது. அதை நம்பி அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுடைய அந்தக் கருத்தியல் கட்டுமானம் நேரடி அனுபவங்களால் அசைவுறும்போது அவர்கள் நிலைகுலைகிறார்கள். கொந்தளிக்கிறார்கள். குழம்பிப்போகிறார்கள்.
ஆனால் ஓர் இலக்கியவாசகனுக்கு நல்ல இலக்கியப்படைப்புகளால் அவனுடைய அகக் கருத்தியல் கட்டுமானம் அசைக்கப்படுகிறது. அவன் நம்பிய எதுவும் உண்மையில் அப்படி இல்லையா என்ற எண்ணம் எழுகிறது. அவனும் கொந்தளிப்பும் குழப்பமும் அடைகிறான்.
அந்தக் கொந்தளிப்பையும் குழப்பத்தையும் வெல்ல ஒரே வழிதான் உள்ளது. சிந்தனை. வாசிப்பவற்றை வாழ்க்கையுடன் சேர்த்து சிந்தனை செய்து அடுக்கி மெல்லமெல்ல புதிய ஒரு அகக்கருத்தியல் கட்டுமானத்தை உருவாக்கிக்கொள்வது மட்டும்தான் அது. அதாவது உங்கள் உள்ளுக்குள் உள்ள கட்டிடம் நொறுங்கிவிட்டது. அதைப்பொறுக்கி இன்னும் வலுவாக புதிய ஒன்றைக் கட்டிக்கொள்ளவேண்டும். இலக்கியம் அவ்வாறுதான் உங்களை வளர்க்கும்.
அவ்வாறு சிந்தனை உங்களுக்குள் நிகழும்போது அதை ஒருபோதும் அன்றாட வாழ்க்கையுடன் இணையவிடக் கூடாது. அது உங்கள் அகத்துக்குள் ஒரு பகுதியில் தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டிருக்க வேண்டும். அதன் கொந்தளிப்புகளை ஒரு போதும் அதனுடன் சம்பந்தப்படாதவர்களிடம் காட்டக்கூடாது. அது நம் புறவாழ்க்கையை, தொழிலை, படிப்பை பாதிக்க அனுமதிக்கக் கூடாது.
இந்த அக உலகம் ஒரு அந்தரங்கவிஷயம் என்றும் அதற்கும் புற உலகுக்கும் தொடர்பே இல்லை என்றும் திரும்பத்திரும்ப எண்ணிக்கொள்வதே அதற்கான முதல் வழி. அன்றாட வாழ்க்கையின் செயல்களின்போது அதை மட்டுமே கவனிக்கவேண்டும்.
இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. எல்லாரும் செய்வதுதான். ஒவ்வொரு இளம் மனதுக்குள்ளும் பாலியல் கொந்தளிப்பு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதைப் புறவாழ்க்கையுடன் சம்பந்தப்படாத அக உலகமாக வைத்துக்கொண்டு வாழ எல்லாரும் பழகியிருக்கிறார்களே. எவருக்கும் தொழிலோ படிப்போ அதனால் பாதிக்கப்படவில்லையே? இதை மட்டும் பழகிக்கொள்ளமுடியாதா என்ன?
இந்த அக-புற சமநிலையைக் கற்றுப் பழகிக்கொண்டே ஆகவேண்டும். வாழ்க்கைக்காக மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய கலைகளில் இதுவே முதன்மையானது. பல சமயம் 'நான் சிந்திப்பவன், ஆகவே கொஞ்சம் வேறு மாதிரித்தான் இருப்பேன்' என நாமே நம்மைப்பற்றி எண்ணிக்கொள்ளும் ஒரு சுயபாவனையே இதற்குத் தடையாக ஆகிறது.
என்னைப்பொறுத்தவரை என்னை நான் பல ஆளுமைகளாகப் பகுத்துக்கொண்டு ஒவ்வொரு ஆளுமையிலும் என் செயலை முடிந்தவரை தீவிரத்துடன் முழுமையுடன் செய்யவே முயல்கிறேன். அந்தச் சமநிலையையே முக்கியமான பண்பாக நினைக்கிறேன். சாதாரண மத்தியவர்க்கக் குடும்பத்தலைவனாக, அரசூழியனாக, தொழிற்சங்கவாதியாக என் ஆளுமைகளை நான் எழுத்து வாசிப்பு சிந்தனையுடன் இணைத்துக்கொண்டதே இல்லை.
வாசிப்பினால் நீங்கள் நிலைகுலைவதாகச் சொன்னீர்கள். நான் எழுத்தினால் நிலைகுலைந்ததே இல்லை.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
காந்தி-வாசிப்பு-சுயம்:ஒரு கடிதம்
விவாதத்தின் நெறிமுறைகள்
எப்படி வாசிப்பது?
உங்கள் கதைகள்-கடிதம்
ஒரு கவிதைச்சாதனை
புனைவு வாசிப்பு குறைந்துள்ளதா?
பின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்
சுஜாதா
இரு கடிதங்கள்
காடு, களம்-கடிதங்கள்
டியூலிப் மலர்கள்
கதைகள், கடிதங்கள்
வாசிப்பு — கடிதங்கள்
கடிதங்கள்
நவீனத்தமிழிலக்கிய அறிமுகம்:கடிதம்
கோலத்தில் பாய்வது…
அகமறியும் ஒளி
ராஜ்கௌதமனின் இரு நூல்கள்
தமிழ்ச்சித்தர் மரபு
ராஜீவ்காந்தி கொலையின் மர்மங்கள்
February 29, 2012
அஞ்சலி-மனோகர்
அன்பின் ஜெ..
கூடலூர் மனோகரைப் பற்றி சில முறை எழுதியுள்ளேன்.
கடந்த அக்டோபர் மாதம் அவர் வயிற்றில் புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.
ஐந்து மாதங்கள் போராடி, முந்தாநாள் மாலை 3 மணிக்கு அவர் மரணம் எய்தினார்.
4 வருடங்கள் ஆந்திர மலைவாழ் மக்களுக்காகப் பணியாற்றி, பின் கடந்த 16 வருடங்களாக கூடலூர் ஆதிவாசி மக்களின் முன்னேற்றத்துக்காக, அவர்களுடனே வாழ்ந்து உழைத்த ஒரு உன்னதமான மனிதர்.
தன்னைத் தேடி வரும் எந்த ஒரு புகழின் வெளிச்சத்தையும் விரும்பாமல், ஒரு மாபெரும் முயற்சியில் ஒரு தூணாக இருந்து வாழ்ந்து மறைந்தார்.
உணர்ச்சி மேலீட்டால், அவரைப் பற்றி மேலே ஏதும் எழுத இயலவில்லை.
அன்புடன்
பாலா
அன்புள்ள பாலா
நான் மனோகரை சந்திக்கவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் அதற்காக மெனக்கெட்டு செல்வதில் ஏதோ ஒரு பிழை இருப்பதாகவும் தோன்றியது.
தன் வாழ்க்கையை தானே தெரிந்துகொண்டவர்கள் அதிருஷ்டசாலிகள். அவர்கள் முழுமையடைகிறார்கள்
மனோகர் அதிருஷ்டசாலி
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
இந்தியா ஒன்றா?
அன்புள்ள ஜெமோ,
வணக்கம். தங்களின் பயண அனுபவங்கள் உங்களுக்கே உரிய பார்வையுடன் எழுதியிருந்தீர்கள். நானும் மிக ஆவலுடனே படித்துவந்தேன்.
இதேபோல் பயணங்களில் ஆர்வமுடன் செல்பவன் என்ற முறையில் தங்களின் அனுபவங்களையும் உணர்வுகளையும் தங்களின் எழுத்து மூலமே என்னால் பெறமுடிந்தது. சில நேரங்களில் அலுவலக நிமித்தமாகவும் பல நேரங்களில் ஆர்வத்தாலும் பயணம் செய்யும் நான் 'இந்தியா ஆபத்தான நாடா' என்ற கட்டுரை காரணமாக சில கருத்துக்களை தங்கள் முன் வைக்கிறேன்.
இந்தியாவில் வடதென் பிரிவு நம் கலாச்சார ரீதியிலேயே உள்ளது என்றே நினைக்கிறேன். ஒரே இதிகாச பின்புலத்தில் கட்டப்பட்ட இரு வேறு கட்டமைப்புகளாக இருக்கிறது. உதாரணம் நம் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தெய்வ விக்கிரகங்கள். வடக்கு கிழக்கு மேற்கு மாநிலங்களில் கோயில்களும் வழிபாட்டு முறைகளும் ஏறத்தாழ ஒரே மாதிரியே உள்ளன. ஆந்திரா, கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களில் ஒரு மாதிரியாகவும் கேரளத்தில் வேறு மாதிரியாகவும் தென்னிந்தியாவில் உள்ளது. இந்தப் பிரிவின் வரலாற்று அறிவு எனக்கு எட்டவில்லை. இரு வேறு கலாச்சாரங்கள் எங்கே இணைந்தன? காரணங்கள் யாவை?
இந்து மதத்தின் ஆறு பெரும் வழிபாட்டு தெய்வங்களில் சுப்பிரமணிய வழிபாடு பெருமளவு வட இந்தியாவில் இல்லை. அது ஏன்?
என் பார்வையில் வறுமை மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வு தென் மாநிலங்களைக் காட்டிலும் வட மாநிலங்களில் அதிகம்.
ஜாதியின் சமுதாய ஆளுமை கேரளா, தமிழ்நாட்டைக்காட்டிலும் மற்ற பிரதேசங்களில் இன்றும் வலுவாகவே உள்ளது. வளமான மாநிலமான மகாராஷ்டிராவில் சில பெரும் நகரங்கள் பொருளாதார மேன்மையில் இருந்தாலும் பரவலாக வறுமை இருக்கிறது. மாநில உள்கட்டமைப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன. ம.பி., ஓடிசா, உ.பி., பிஹார், சட்டிஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் இன்னும் மோசம். அவர்களின் நிலைமையும் பிரச்சினைகளும் பரவலான ஊடகங்களில் இடம் பெறுவதேயில்லை.
குஜராத் உள்கட்டமைப்பிலும் வாழ்வின் தர வரிசையிலும் முதன்மையாகவே இருக்கிறது என்று நினைக்கிறேன்.
வரலாற்றுக் காரணங்களால் மத நல்லிணக்கம் சற்று குறைவாகவே வட மாநிலங்களில் உள்ளது. உள்ளழுத்தம் எந்த ஏதுவான சூழலிலும் உடனே வெடிக்குமளவு உள்ளது என்பதே என் எண்ணம்.
இவை எல்லாவற்றிற்கும் கீழே இழையும் இறையாண்மை நம்மை இணைக்கும் கருவாகவே உள்ளது. அப்படி இந்த பூலோகப் பகுதியை இணைக்கக் காரணம் என்ன? ஒரு காலத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளும் நம் கலாச்சார ஆளுமையிலும் பிராந்திய எண்ண ஓட்டத்திலும் இணைந்தே இருந்தது. ஆனால் இன்று நாடுகளாகப் பிரிந்தமையால் காலப்போக்கில் இந்த வரலாற்றுத் தாக்கங்களிலிருந்து விலகிவிடும்.
அதேபோல் வெறும் ஒன்றுபட்ட நாடாக நாம் இருக்கிறோம் என்ற காரணத்தினால்தான் இந்த ஒற்றுமையைக் காணவிழைகிறோமா அல்லது வேறு ஏதாவது பிராந்திய உள்ளுணர்வு ஒன்று இருக்கிறதா?
அன்புடன்
திருச்சி வே. விஜயகிருஷ்ணன்
அன்புள்ள விஜயகிருஷ்ணன்,
இந்தியாவில் பயணம் செய்யும்போது நாம் தொடர்ச்சியாக எல்லாமே மாறிக்கொண்டு வருவதைக் காணலாம். முக்கியமாக முகங்கள். மொழி, உடை, உணவு, வீடுகள் எல்லாமே மாறுபடுகின்றன. இசை மாறுபடுகிறது. ஏன் மாடுகளின் கொம்புகளில் கூட தொடர்ச்சியான வேறுபாட்டைக் காணலாம்.
அதேசமயம் தொடர்ச்சியாக ஓடும் பொதுத்தன்மையையும் காணலாம். இந்தப்பொதுத்தன்மை இருவகை. ஒன்று இந்தியாவில் நவீனகாலகட்டத்துக்குப் பின்னர் உருவாகி வந்த வணிகப்பண்பாட்டு அம்சங்களால் ஆனது. இது மேலோட்டமானது.
இன்னொன்று, சமூக வழக்கங்களிலும் நம்பிக்கைகளிலும் சடங்குகளிலும் எல்லாம் உள்ள ஆழமான பொதுத்தன்மை. இது மிகமிகத் தொன்மையானது. லோத்தலிலும் டோலாவீராவிலும் உள்ள ஐந்தாயிரமாண்டுப் பழமை உடைய சின்னங்களைப் பார்க்கையில் அன்று முதல் இன்றுவரை அந்தப் பண்பாட்டுப்பொதுத்தன்மை நீடிக்கிறது என்றும் தோன்றுகிறது.
ஒருவர் வேற்றுமைகளைக் காண விரும்பினால் அவற்றைக் காணலாம். ஒற்றுமைகளைக் காண விரும்பினால் அவற்றை கவனிக்கலாம். நான் இந்த வேற்றுமைகளை அந்த ஒற்றுமை எப்படி கோர்த்திணக்குகிறது என்பதையே கவனிக்க விரும்புவேன். ஏனென்றால் அந்த ஒற்றுமையே நமது பலம். அது சிதறினால் உருவாகும் அழிவு பிரம்மாண்டமானது.
இந்தியச்சிற்பக்கலையின் வெவ்வேறு பாணிகளைப்பற்றி விரிவாகவே எழுதப்பட்டுள்ளது. கே.ஆர்.சீனிவாசன் எழுதிய 'தென்னிந்தியக் கோயில்கள்' என்ற நூல் நல்ல அறிமுகத்தை அளிக்கக்கூடியது.
இந்தியச் சிற்பக்கலை வடக்கே காந்தாரக்கலை வழியாக வந்த குகைக்குடைவு கோயிற்கலையும் , இங்கே இருந்த செங்கல்கோயிற்கலையும், மரக்கட்டிடக்கலையும் இணைந்து உருவான ஒன்று. அதாவது இது ஆங்காங்கே தனித்தனியாக உருவானதல்ல. ஒன்றுடன் ஒன்று உரையாடி மெல்லமெல்ல திரண்டு வந்தது.
இந்த உரையாடல் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு சரிவிகிதத்தில் நிகழ்ந்தது. அதுவே வெவ்வேறு பாணிகளாக ஆகி வளர்ந்தது.
இந்தியச்சிற்பக்கலையில் மூன்று பாணிகள் உள்ளன என்பது சிற்பநூல்களின் வரையறை. நாகரம், வேசரம், திராவிடம் என அவை வகைப்படுத்தப்படுகின்றன. திராவிடம் என்ற சொல் தென்னகம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளுக்குரியவை.
ஆனால் இந்த வேறுபட்ட தன்மைக்குள் பொதுக்கூறுகள்தான் அதிகம். முதல்பார்வைக்கு மூன்று பாணிகளும் வெவ்வேறு எனத் தெரியும். பார்க்க ஆரம்பித்தால் அவற்றின் பொதுவான அழகியல் ஆச்சரியமூட்டும். அதாவது ஒரு பாணிக்குள் மற்ற பாணிகளின் செல்வாக்கு ஊடுருவி இருக்கும்.
கேரளத்திலும் வடகிழக்கிலும் உள்ள கோயில்பாணி இந்த மரபான சிற்பசாஸ்திர வரையறைக்குள் வராது. அது சீன செல்வாக்குடையது. மரத்தாலும் ஓடுகளாலும் ஆனது. ஆனாலும் அவற்றிலும்கூட கட்டிட அமைப்பில் பிறவகையான இந்தியக் கோயில்களுடன் உள்ள ஒப்புமையே அதிகம்.
திராவிட கோயிற்கலைக்குள்ளேயே பல வளர்ச்சிப்படிநிலைகள் உள்ளன. மாமல்லபுரம் ரதக்கோயில்களுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்துக்கும் இடையேயான வேறுபாட்டை கவனிக்கலாம். கோயிற்கலைப் பாணிகள் ஒன்றுடன் ஒன்று கலப்பதும் உண்டு. கஜுராஹோ கோயிலுக்கும் தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கும் உள்ள ஒற்றுமை ஆச்சரியமூட்டுவது. குஜராத்திலும் ராஜஸ்தானிலும் திராவிடபாணி கோயில்கள் பல உள்ளன.
கோயில்களின் அமைப்பில் உள்ள இந்த வேறுபட்ட தன்மைகூட சிற்பங்களில் இல்லை. சிற்பங்களின் முத்திரைகளில், சின்னங்களில் நுண்ணிய மாறுபாடுகள் உண்டு. அது காலத்துக்குக் காலம், இடத்துக்கு இடம் மாறிக்கொண்டே இருக்கும். அத்துடன் ஒவ்வொரு பேரரசும் அதிகமுக்கியத்துவம் கொடுத்து வடிக்கும் சிற்பங்கள் உண்டு. எப்படி சோழர்களுக்கு நடராஜர் ஒரு பண்பாட்டு அடையாளமோ அப்படித்தான் ராஷ்டிரகூடர்களுக்கு பூமாதேவியை ஏந்திய பூவராக மூர்த்தி.
ஆகவே வடக்கு தெற்கு என ஒரு பிளவு உள்ளது என்பது உண்மை அல்ல. இங்கே இருப்பது வெவ்வேறு கலைப்பாணிகள். அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை. கோயில்களையும் சிற்பங்களையும் இன்னும் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இதை உணரலாம்.
இந்திய நிலப்பரப்பில் இருந்த வெவ்வேறு பண்பாட்டு மூலங்கள் காலப்போக்கில் இணைந்து உரையாடுவதன் மூலமே இந்திய, இந்துப் பண்பாடு உருவானது. ஒவ்வொரு பண்பாட்டுக்கும் அதற்கான பங்களிப்பு இந்த மைய ஓட்டத்தில் உள்ளது. அதன்பின் இந்த மைய ஓட்டத்தில் இருந்து ஏராளமான கிளைகளும் பிரிந்து வளர்ந்தன.
உதராணமாக நெல்லையப்பர் கோயிலில் உள்ள கற்சாளரம் போன்றவை மரத்தாலான கட்டுமானத்தை கல்லில் பிரதி செய்பவை. தெளிவாகவே சேரச் செல்வாக்கு தெரியும். திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் தெளிவான பாண்டியச் சிற்பக்கலைப் பாதிப்பு உள்ளது.
வட இந்தியாவில் எட்டாம் நூற்றாண்டுவரைக்கும் குமரக்கடவுளை முக்கியமான தெய்வமாகக் கொண்ட கௌமாரம் பெரும் செல்வாக்குடன் இருந்துள்ளது. அங்கே பத்தாம் நூற்றாண்டுவரை கட்டப்பட்ட கோயில்களில் எல்லாம் ஏராளமான முருகனின் சிலைகள் உள்ளன.
முருகனுக்குரிய பெருநூலான ஸ்காந்தம் [ஸ்கந்த புராணம்] சம்ஸ்கிருதமொழியில்தான் உள்ளது. அதன் மொழியாக்கமே கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்த புராணம். முருகனைப்பற்றிய ஒரே இந்தியப் பெருங்காவியம் காளிதாசனின் குமாரசம்பவம். குப்தர் காலத்தில் முருகன் முக்கியமான தெய்வமாக இருந்திருக்கலாம். கோயில்களும் இருந்திருக்கலாம்.
எட்டாம் நூற்றாண்டுக்குப்பின் உருவான பக்தி இயக்கம் சைவ, வைணவ மதங்களை பெருமதங்களாக வளர்த்தெடுத்தது. கௌமாரம் சைவத்தில் இணைந்தது. பக்தி காலகட்டத்தில் வடக்கே சைவத்தைவிட வைணவம் பிரம்மாண்டமாக வளர்ந்தது. ராமனும் கிருஷ்ணனும் பக்தி இயக்கத்தால் அங்கே இந்து மதத்தின் மையக்கடவுள்களாக ஆக்கப்பட்டனர்.
தென்னிந்தியாவில், குறிப்பாக கர்நாடகத்திலும் தமிழகத்திலும், சைவம் வலுவாக நீடித்தது. அதில் தமிழகத்தில் மட்டும்தான் முருகன் பெருந்தெய்வமாக ஆனார். ஆனால் தமிழ்நாட்டில்கூட சைவ, வைணவப் பேராலயங்கள் அளவுக்கு முருகனுக்கு முக்கியமான ஆலயங்கள் இல்லை என்பதே உண்மை.
உண்மையில் இந்தியாவிலேயே முருகனுக்கான தனிப்பேராலயம் என்பது திருச்செந்தூர் மட்டுமே. அது பிற்காலத்தில் கட்டப்பட்டது. மற்ற ஆலயங்கள் எல்லாமே சிறியவை. காலப்போக்கில் முருகக்கோயில்களாக விரிவாக்கம் செய்யப்பட்டவை. உதாரணமாக திருப்பரங்குன்றத்தில் மையத்தெய்வம் முருகன் அல்ல, கொற்றவை.
நீங்கள் ஒரு பொதுவான மனப்பதிவில் இருந்து அடுத்ததுக்குத் தாவிச் செல்கிறீர்கள். இந்தியா விரிவான நிலப்பரப்பு. இங்கே ஒவ்வொரு இடத்துக்கும் அங்குள்ள இயற்கைவளம், வரலாற்றுப்பின்புலம் சார்ந்து சமூக வளர்ச்சியும், கல்வி வளர்ச்சியும் உள்ளது. வறண்ட ராஜஸ்தானும் மத்தியப்பிரதேசமும் வளர்ச்சி குன்றியவை. மக்கள்நெருக்கம் கொண்ட பிகாரும் உத்தரப்பிரதேசமும் நெருக்கடிகள் நிறைந்தவை.
தென்னாட்டு மாநிலங்கள் துறைமுகங்கள் கொண்டவை. அந்த அம்சம் அவற்றின் வளர்ச்சியில் பெரும் பங்களிப்பாற்றுகிறது. ஆறுகள் செழித்த பஞ்சாப் இந்தியாவின் முக்கியமான மாநிலமாக உள்ளது. குஜராத்தின் கதை வேறு. அது பட்டேலின் தனிக்கவனத்துக்கு உள்ளானது. மொரார்ஜி தேசாய் போன்ற மாபெரும் நிர்வாகிகளால் முன்னெடுக்கப்பட்டது.
நீங்கள் வேறுபாடுகளை மட்டுமே பார்க்கிறீர்கள். ஒற்றுமைகளைப் பார்க்க ஆரம்பித்தால் வேறுபாடுகள் பொருட்படுத்தத் தக்கவையாக இல்லை என்பதை உணர்வீர்கள். இத்தனை பெரிய நிலப்பரப்பில் இந்த அளவுக்காவது வேறுபாடுகள் இல்லாமலிருக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.
மார்க்ஸிய ஆய்வாளரான கெ.சச்சிதானந்தனின் ஒரு கட்டுரையில் இந்திய வரலாறு முழுக்க இங்கே நிகழ்ந்த எல்லாமே ஒரு 'அகில இந்தியத்தன்மையுடன்' மட்டுமே நிகழ்ந்திருக்கின்றன என்று மிக விரிவாக விளக்குகிறார். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே வைதிகமதமும், வேதாந்தஞானமும் இந்தியா முழுக்க ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் பரவின. பின்னர் பௌத்த, சமண மதங்களும் அவ்வாறே இந்தியா முழுக்க ஒரே வீச்சாகப் பரவின.
பின்னர் பக்தி இயக்கம் தென்னகத்தில் இருந்து வடக்கே பரவி ஆட்கொண்டது. பிற்கால வேதாந்த ஞானிகளான சங்கரரும், ராமானுஜரும், மத்வரும் தெற்கில் இருந்து வடக்கே தங்கள் ஞானத்தை விரித்துப் பரப்பினர். இஸ்லாம் வடக்கே இருந்து தெற்கே வந்தது. இந்துமதச் சீர்திருத்த இயக்கங்கள் அகில இந்தியத் தன்மை கொண்டிருந்தன. காங்கிரஸும் கம்யூனிஸ்டுக் கட்சியும் அகில இந்தியாவையும் ஒரே அலையாக நிறைத்தன. நக்சலைட் இயக்கமும், தலித் இயக்கமும் அவ்வாறே அகில இந்தியத் தன்மை கொண்டவை.
ஏனென்றால் இந்த நாடு ஒரே மக்கள்திரளையே கொண்டிருக்கிறது. அந்த மக்கள்திரள் தங்கள் எண்ணங்களால், வாழ்க்கைமுறையால் ஒன்றாகவே இருக்கிறார்கள். ஒன்றாகவே சிந்திக்கிறார்கள்.
இந்தியா முழுக்க மக்கள் நூற்றாண்டுகளாக இடம்பெயர்ந்துகொண்டே இருக்கிறார்கள். இந்தியாவின் மாநிலங்களில் வங்கம், கேரளம் போன்ற சில மாநிலங்கள் தவிர பிற இடங்களில் எல்லாமே ஈராயிரம் வருடமாக தொடர்ந்து வெளியே இருந்து மக்கள் வந்து குடியேறியபடியே இருக்கிறார்கள். எல்லா மொழிவாரி மாநிலங்களிலும் வேற்று மொழி பேசுபவர்கள் மூன்றில் ஒரு பங்கேனும் இருக்கிறார்கள்.
இந்த நிலப்பரப்பு நூற்றாண்டுகளாக மக்கள் குடியேறிக்குடியேறி கலந்து கலந்து உருவம் கொண்டதாக உள்ளது. இங்கே உள்ள மக்களை நிலம், மொழி, இனம் என்னும் அடிப்படைகளில் பிரிக்க முடியாது. நன்றாக கலக்கி ஒரே சமூகமாக ஆக்கிவிட்டிருக்கிறது காலம்.
இந்த தேசத்து மக்களை ஒன்றாக இணைக்கும் சக்தி என்ன என்றால் இந்தக் கலப்பைத்தான் சொல்வேன். இம்மக்கள் கலக்க ஆரம்பித்த பின்னர்தான் உலக நாகரீகமே உருவாகத் தொடங்கியது. இந்தக் கலப்பை பின்னோக்கிக் கொண்டு சென்று இம்மக்கள்திரளை பல தனித்தனிப் பண்பாடுகளாக, தேசங்களாகப் பிரிக்கலாம் என்பது ஆதிக்கவாதிகளாக பிரிட்டிஷாரின் திட்டம். இன்று அமெரிக்க-ஐரோப்பிய ஆதிக்கசக்திகளின் கனவு.
இந்தக் கலப்புநிகழ்வு மூலம் இந்த நிலத்து மக்கள் நாலாயிரம் வருடங்களுக்கும் மேலாக ஒரு தொடர் உரையாடலில் இருக்கிறார்கள். அவர்களிடம் இருக்கும் நாகரீகம், வாழ்க்கைமுறை, மதம், கலைகள், இலக்கியங்கள் எல்லாமே இந்தக் கலப்பின் விளைவாக உருவானவை. அவைதான அவர்களின் ஆழ்மனத்தை உருவாக்குகின்றன.அந்த ஆழ்மனத்தால் அவர்கள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவேதான் அவர்கள் ஒன்றாகச் சிந்திக்கிறார்கள்.
இந்த ஒற்றை உடலை இயந்திரபாகங்களைப் பிரிப்பதுபோலப் பிரிக்க முடியாது. ஆதிக்கவாதிகளும் அரசியல்வாதிகளும் அப்படிப் பிரிக்க முனைந்தால் பேரழிவுதான் உருவாகும். அந்தப் பிரிவின் ரணங்கள் நூற்றாண்டுகள் தாண்டியும் ஆறாது. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் அழிவுகளும், தொடர்ந்து வந்த போர்களும், இன்றும் நீடிக்கும் கசப்புகளும் வெறுப்புகளும் அதையே நிரூபிக்கின்றன.
இந்தியர் ஒன்றாக இருப்பதன் ரகசியம் இதுவே. ஒரே பெற்றோருக்குப் பிறந்து ஒரே வீட்டில் பல்லாயிரம் வருடங்களாக வாழும் சகோதரர்கள் இவர்கள்.
ஜெ
[பிகு: நீங்கள் கேட்ட கேள்விக்கான பதிலை பல கட்டுரைகளிலாக முன்னரே எழுதியிருக்கிறேன். இணைப்புகளைப்பாருங்கள். பொதுவாக, பழைய கட்டுரைகளை வாசிக்காமல் வரும் கேள்விகள் அதிகமாக வருகின்றன இப்போதெல்லாம். இருந்தாலும் மீண்டும் நான் சொல்ல விரும்பும் பதில் என்பதனால் இதை எழுதுகிறேன்]
நமது கட்டிடங்கள்
சிற்பச்செய்திகள்
சுசீந்திரம்
சோழர்கலை
தென்னிந்தியக் கோயில்கள்
முஞ்சிறை, பார்த்திபசேகரபுரம்
திருவட்டாறு பேராலயம்- ஒருவரலாறு
தொடர்புடைய பதிவுகள்
சைவ வெறுப்பா?
வேதம் இந்துஞானத்தின் முதல்நூலா?
ஹூசெய்ன், ஒரு கடிதம்
சிலுவையின் பெயரால்: ஒரு கடிதம்
தூய அறிவு
மனிதாபிமான வணிகம்
மனிதராகி வந்த பரம்பொருள் 3
மனிதனாகி வந்த பரம்பொருள் 2
மனிதராகி வந்த பரம்பொருள்!!
சாமியார்
இந்துமதமும் தரப்படுத்தலும்
கடவுளின் மைந்தன்–ஜெயமோகன்
சில இணைப்புகள்
'சிலுவையின் பெயரால்' கிறித்தவம் குறித்து..
மேரி மக்தலீன் கடிதம்
இருவர்
சரணாகதி, காளி:கடிதங்கள்
காந்தி, கிறித்த்வம், தாந்த்ரீகம்- கடிதங்கள்
ஒழுக்கம் தாந்த்ரீகம்;கடிதங்கள்
ஆர்.எஸ்.எஸ், கோயில்-கடிதங்கள்.
புஷ்டிமார்க்கம் – ஒரு கடிதம்
திரு ஜெயமோகன்,
உங்கள் சமணத் தலங்கள் பயணக் கட்டுரை தொடர்ந்து படித்து வருகிறேன். பிரமிப்பும், பெருமையும், ஆனந்தமும் மாறி மாறி வருகின்றன. உங்களது இந்தப் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
ஒரு நாள் முழுக்கப் பார்த்ததை ஒரு பக்கப் பதிவாக செய்திருப்பது குறைவாகத் தெரிகிறது. இன்னும் விரிவாக எழுதத் திட்டம் உள்ளதா?
கடைசிக் கட்டுரை பதினைந்தில் ஒரு சில விளக்கங்கள் அளிக்க விரும்புகிறேன். இஸ்கான் புஷ்டி மார்க்க வைணவம் அல்ல. அது துவைத மார்க்கத்தை சேர்ந்தது. பிரம்ம-நாரத-மத்வ-கௌடீய சம்பிரதாயம் என அவர்கள் அதைக் கூறிக் கொள்கின்றனர். சைதன்யருக்கு மத்வரே குரு.
இன்னொன்று – வல்லபர் பற்றியது. அவர் தெலுங்கு பிராம்மணர். ஆனால் குஜராத்தில் பிறந்தவர். காசியில் படித்து அங்கேயே பெரும்பாலும் வாழ்ந்தவர். விரஜ (பிருந்தாவனம்) தொடர்பு உண்டென்றாலும் காசியே அவரது வாசஸ்தலம். அங்கேயே மறைந்தார். பூத உடலுடன் சித்தி அடைந்திருக்கின்றார். அவர் கங்கைக் கரையில் இருந்து ஆகாய மார்க்கமாக ஒளி வடிவமாக மறைந்தார் என்று சாட்சிகள் கூறிய பின்னரே அவர் உண்மையில் இறந்தார் என மக்கள் நம்பினார்.
வெங்கட்
அன்புள்ள வெங்கட்,
வல்லபர் பற்றிய தகவலுக்கு நன்றி. நினைவுப்பிழை. திருத்திவிடுகிறேன்.
இஸ்கானின் துவைத சித்தாந்தம் பற்றி மத்வ தத்துவம் பற்றிய கட்டுரையில் முன்னரே எழுதியிருக்கிறேன். அவர்கள் தத்துவார்த்தமாக புஷ்டிமார்க்கத்தில் இருந்து மாறுபட்டவர்கள்தான். அதேபோல சுவாமிநாராயண் இயக்கமும் புஷ்டிமார்க்கத்தில் இருந்து தத்துவார்த்தமாக மாறுபட்டதே.
ஆனால் வைணவ வழிபாட்டில் புஷ்டிமார்க்கம் ஒரு தனிப்போக்கை ஆரம்பித்தது. பரிபூர்ண சரணாகதியுடன் ஆடியும் பாடியும் 'கோலாகல' கிருஷ்ணனை வழிபடுவது அது. அதுவே ராதாமாதவ பாவனை எனப் பின்னாளில் இன்னும் விரிவடைந்தது. இந்தியாவின் பஜனை சம்பிரதாயத்தின் பெருவளர்ச்சி அதன் வழியாகவே நிகழ்ந்தது.
அந்த வழிபாட்டுமுறையே இஸ்கான் இயக்கத்துக்கும் சுவாமிநாராயண் இயக்கத்துக்கும் எல்லாம் அடிப்படையாக உள்ளது. அதையே நான் அக்கட்டுரையில் சுட்டிக்காட்டினேன்.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
பயணம்: கடிதங்கள்
இந்தியா ஆபத்தான நாடா — கடிதங்கள்
பயணம் — கடிதங்கள்
இந்தியா ஆபத்தான நாடா?
அருகர்களின் பாதை — கடிதங்கள்
வீட்டில்
அருகர்களின் பாதை 30 — நீண்ட பயணம்
அருகர்களின் பாதை 29 — ஜாலார்பதான்
அருகர்களின் பாதை 28 — சவாய்மாதோப்பூர், ரண்தம்போர்
பார்பாரிகா
அருகர்களின் பாதை 27 — சங்கானீர், ஜெய்ப்பூர்
அருகர்களின் பாதை 26 — பிக்கானீர்
அருகர்களின் பாதை 25 — லொதுர்வா, ஜெய்சால்மர்
ரணக்பூர் காணொளி
அருகர்களின் பாதை 24 — ஜெய்சால்மர், சாம் மணல் திட்டு
அருகர்களின் பாதை 23 — ரணக்பூர், கும்பல்கர்
அருகர்களின் பாதை 22 – மிர்பூர், உதய்புர்-நகடா
பயணம்- கடிதங்கள்
அருகர்களின் பாதை 21 — அசல்கர், தில்வாரா
திருப்பான்மலை, ஊரணித்தாங்கல், நெகநூர்ப்பட்டி
February 28, 2012
புரிதலின் ஆழம்
இணையத்தில் பொதுவாக ஆழமான சிந்தனைகளை காண்பது அரிது. அதைவிட ஒரு சிந்தனையை புரிந்துகொள்ளும் முயற்சி மிக அரிது. ஆகவே நாம் எழுதுவதை ஒருவர் தெளிவாகப்புரிந்துகொள்ளும்போது ஒரு பரவசம் உருவாகிறது. அப்படி சமீபத்தில் ஆழ்ந்த பரவசத்தை உருவாக்கிய பதிவு இது
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
ஒரு விமர்சனம்
அன்புள்ள நண்பர்களே!
உறுதி அளித்தவாறே ஜெமோ மீதான "விமரிசன" கட்டுரை இதோ!
இன்றைய வணிகமயமாக்கப்பட்ட சூழ்நிலையிலும், உலகமயமாக்கலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையிலும், பன்னாட்டு நிறுவனங்களின் லாபப் பசிக்கு இரையாகும் சமூகச் சூழலிலும், அமெரிக்க ஏகாதிபத்திய கோரப்பிடி இறுகி வரும் நிலையிலும் நமது சமூகம் இருக்கிறது. இந்த நிலையில் சந்தைப் பொருளாதாரம் எனும் போர்வையில் இதனை ஆதரிக்கும் உள்ளூர் பார்ப்பனிய, இந்துத்துவப் போக்கையும் நமது சமூகம் எதிர்த்துப் போராடவேண்டியிருக்கிறது. இப்படி போராட்டக் களம் காணும் நமக்கு சமூக விழிப்புணர்வு எண்ணம் கொண்ட எழுத்தாளர்களே முன்னோடிகள். அவ்வகையில் பலர் இருந்தாலும் இன்றைய நமது சூழலில் பெரும் எழுத்தாளர்களாக அறியப்படும் சிலர் பார்ப்பனிய, இந்துத்துவ போக்கில் செயல்படுவது வேதனையான உண்மை. அவர்களை சமுதாயத்திற்கு முன் அம்பலப்படுத்துவதே இக் கட்டுரையின் நோக்கம்.
சில மாதங்களுக்கு முன்பே இலக்கிய வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது எழுத்தாளர் ஜெயமோகனின் அறம் வரிசைக் கதைகள். அப்போதே நாம் இதனை எழுதியிருக்கலாம்தான். ஆனால் நமது நண்பர்கள் பலரும் எழுதியிருந்தபடியால் நாம் உடனே எழுதவில்லை.
முதலாவதாக அறம் வரிசைக் கதைகளில் வெளிப்படும் இந்துத்துவ திணிப்புகள். சோற்றுக் கணக்கு கதையில் வரும் உணவக அதிபர் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த இஸ்லாமிய சகோதரராகவும், அவரால் பணம் வாங்காது உணவிடப்படும் ஒருவராக இந்து சமூகத்தைச் சேர்ந்தவரும் சித்தரிக்கப்படுகிறார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் இது மத நல் இணக்கம் என்பதாகத் தோன்றலாம். ஆனால், சற்றுக் கூர்ந்து வாசிப்பவருக்கு இது ஒரு இந்து மத அப்பட்ட ஆதரவு என்பது புரிந்து விடும். பணம் எதிர்பாராது உணவிடும் இடத்தில் ஒரு சிறுபான்மைச் சகோதரரைக் காட்டும் ஜெமோ, பணம் தராமலேயே உண்ணும் இடத்தில் ஒரு இந்துவைக் காட்டுகிறார். அதாவது சிறுபான்மையினர் எதையும் எதிர்பாராது இந்துக்களுக்கு உணவிட வேண்டும் என்பதை மறைமுகமாக வலியுறுத்துகிறார் ஜெமோ. இப்படி உணவிட்டாலும் அந்த இஸ்லாமிய சகோதரர் ஏழை ஆகி விடவில்லை என்பதைக் குறிக்க அவருக்கு வீடுகள் உண்டு, மக்களுக்கு ஆடம்பரமாகத் திருமணங்கள் செய்து வைத்தார், கார் வைத்திருந்தார் என்றெல்லாம் சொல்வதன் மூலம் சிறுபான்மை சகோதரர் பெரும்பான்மை இந்துக்களை உறிஞ்சிக் கொள்ளை அடிக்கிறார் என்ற வெறுப்பை அடிமனதில் பதிய வைக்கிறார். உணவிடுவதாகக் கூறும் அந்த இஸ்லாமிய சகோதரரையும் பயமுறுத்தும் உருவம் கொண்டவராகக் காட்டுகிற ஜெமோ, உணவு உண்ணுவோரை அவர் கரண்டியால் அடிப்பதாகக் கூறும்போது நமக்கு ரத்தம் கொதிக்கிறது. சிறுபான்மையினர் இந்துக்களை அடித்து, கொடுமை செய்வதாய் வாசிப்பவரின் மனதில் ஒரு பிம்பம் ஏற்படுத்தும் இந்த முயற்சி கண்டிக்கத்தக்கது. இப்படி மறைமுகமாக அந்த சிறுபான்மை சகோதரரை அவமதித்துச் செல்லும் ஜெமோவைப் பாராட்டி கடிதங்கள் எழுதும் வாசகர்கள் பெயரும் "ராஜகோபாலன்", "ராமச்சந்திர ஷர்மா" என்றிருப்பது தற்செயலான ஒன்றா என்ன?
சரி! இந்த அளவுக்காவது சிறுபான்மைச் சமூகத்தை சொல்கிறாரே என்போருக்கு அவரது மோசடியை அம்பலப்படுத்தும் மற்றுமொரு விஷயம் இந்தத் தொகுப்பில் ஒரு கதையில் இஸ்லாமியச் சகோதரரையும், மற்றுமொரு கதையில் கிறித்தவப் பாதிரியாரையும் மேம்போக்காகச் சொல்லிவிட்டு மற்ற அனைத்துக் கதைகளிலும் இந்து சாமியார்களை உயர்த்தி பேசியிருப்பதே. நாம் அனைவரும் அறிந்த ஒன்று, இன்றிருக்கும் சாதிப் புரட்டைக் கண்டுபிடித்து அதனைக் கொண்டே காலா காலமாகத் தாழ்த்தப்பட்டோரை அடிமை செய்து வைத்திருப்பது பார்ப்பன மதமான இந்து மதமே. இன்று வரை ஆதிக்க இந்து வெறியர்கள் தலித் சகோதரர்களை சாதி வன் கொடுமைக்கு ஆளாக்கி வருவது கண்கூடு. ஆனால் நூறு நாற்காலிகளில் கண்டாலே கல்லெறிந்து கொல்லப்படும் அளவுக்குக் கடையராகக் கருதப்படும் சாதியைச் சேர்ந்த ஒருவரை இந்து சாமியார் தத்தெடுத்து வளர்த்து, முழு கல்விச் செலவையும் செய்வதாகக் கூறுவது அப்பட்டமான மோசடி. மேலும் இந்து மதத்தின் தீண்டாமைக் கொடுமைகளுக்கு சாமியார்களே காரணம் என்பதை மாற்றி அவர்கள்தாம் இந்நிலை மாறப் பாடுபடுவதாகக் கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம். இதில் ஜெமோ உள்ளர்த்தமாக, இந்நிலை மாறப் பாடுபட்ட கிறித்தவ சேவை நிறுவனங்களின் பங்களிப்பையும் மறைக்கிறார்.
பெருவலி கதையில் கடவுளை நம்பாத ஒரு முற்போக்கு எழுத்தாளரைக் கூட அவரது நோயின் வேதனையையும் மீறி இமய மலைக்குச் செல்ல வேண்டிய அவசியத்தை ஜெமோ தனது பாணியில் சொல்கிறார். கடவுளை நம்பாத பகுத்தறிவுப் பாதையில் பயணம் செய்தாலும், இந்து மதத்தில் பிறந்தால் இமய மலையைக் கண்டே ஆக வேண்டும் எனும் பிற்போக்குத் தத்துவத்தை நம் மீது திணிக்கிறார் ஜெமோ. அதிலும், கடவுள் நம்பிக்கையற்ற, முற்போக்குக் கொள்கை உடைய, பகுத்தறிவு மிக்க இலக்கியவாதியான ஒருவரை இக்கதையின் நாயகனாக்கியிருப்பது ஜெமோவால் மட்டுமே செய்ய முடிந்த விஷமத்தனம்.
கோட்டி கதையில் காங்கிரஸ் அரசை எள்ளி நகையாடும் ஜெமோ, ஒரு இடத்தில் கூட பா.ஜ. அரசை, குறிப்பாக மோடி அரசைக் குறித்த கண்டனங்களைச் சொல்லவில்லை என்பதிலேயே அவரது சார்பு நிலை வெளிப்பட்டு விடுகிறது. வணங்கான், ஓலைச் சிலுவை, நூறு நாற்காலிகள் போன்ற சாதியக் கொடுமைகளைக் காட்டும் கதைகளில் கூட ஒரு இடத்திலும் ஒரு பார்ப்பனரைக் கூட மோசமானவராகக் காட்டாதது ஜெமோவின் பார்ப்பனப் பாசமன்றி வேறென்ன?
(யப்பா! எனக்கே முடியல்ல! இப்புடி யோசிச்சிட்டே போனா எனக்கே எம் மேல சிரிப்பு சிரிப்பா வருது.. ஆனாலும் இலக்கியக் கடமைன்னு ஒண்ண ஆற்றும் போது அதுல பந்த, பாசத்துக்கு ஏது எடம் .. சொல்லுங்க?)
நண்பர்களே! இலக்கியத்தின் பெயரால் இந்துத்துவக் கொடி பிடிக்கும் ஜெமோவை இதனுடன் விடப் போவதில்லை. உங்களது புரட்சி ஆதரவைப் பொறுத்து இதே பாணியில் "அருகர் பாதை" யையும் "தோலுரிக்கலாம்" என எண்ணியுள்ளேன் .
இப்படிக்கு
[ஆடு அறுக்காமலேயே தோலுரிக்கும்]
ராஜகோபாலன்.ஜா, சென்னை
[குழுமத்தில் இருந்து]
தொடர்புடைய பதிவுகள்
கடிதங்கள்
அறம் வாழும்-கடிதம்
உங்கள் கதைகள்-கடிதம்
சமண அறம்
அன்புக்குரிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். நான் உங்களின் வாசகன். தங்களின் இந்தியப் பயணம் – அருகர்களின் பாதை பயணக் குறிப்புகளைத் தொடர்ந்து படித்தேன். நிறைய விசயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. உங்களின் இணைய தளத்தைக் கடந்த ஒரு வருட காலத்துக்கு மேலாகப் படித்து வருகிறேன். உங்களின் சிறுகதைகளில் அறம் எனக்கு மிகவும் பிடித்தது.
நான் ஒரு பேராசிரியன். எங்களின் ஆய்வுகளில் பொருளாதார, சமூக மற்றும் வியாபார முறைகள், மக்களின் பண்பாடு, கலாசார சிந்தனைகள் மற்றும் வாழ்க்கை முறைகளுடன் எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளது என்பது குறித்தும் படித்து வருகிறோம். உங்களின் குறிப்புகளைப் படித்து முடித்தபின் சமணர்களின் வணிகம் சம்பந்தமான ஒரு கருத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எனக்குத் தோன்றியது.
சமணர்களின் வணிகம் நியாயம் சார்ந்ததாக அமைய வேண்டும் என்பதை அவர்களின் நூல்களும் துறவிகளின் போதனைகளும் வலியுறுத்தி வந்துள்ளன. அதற்கான வழிகாட்டு நெறிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புழக்கத்தில் இருந்துள்ளன. எனவே அவர்களின் வணிகம், கோவில்கள் மற்றும் ஆன்மிகம் சார்ந்ததாக இருந்து வந்துள்ளது. பழைய காலந்தொட்டுப் பல நூறாண்டுகளாக இந்தியப் பொருளாதார வியாபார முறைகளில் அற நெறிகளும், நியாயம், நேர்மை ஆகிய உயர் குணங்களும் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளன. அந்த வகையில் சமணர்களின் முறைகள் பண்டைய இந்திய சிந்தனைகளின் வெளிப்பாடுகளாக அமைந்துள்ளன. நமது பொருளாதார வியாபார முறைகள் மேற்கத்திய முறைகளுடன் வேறுபட்டு அமைந்ததற்கு ஒரு அடிப்படைக் காரணமாக மேற்சொன்ன நெறிமுறைகளே அமைந்திருந்தன.
அன்புடன்,
ப.கனகசபாபதி, கோவை.
அன்புள்ள கனகசபாபதி,
வணிகம் எப்போதுமே அந்தந்த சூழலின் சந்தர்ப்பங்களைப் பொறுத்தே அமையும் என்றே நினைக்கிறேன். அதில் மாறாத அறநெறிகள் ஏதேனும் இருக்குமா என ஐயமாகவே இருக்கிறது.
சமணத்தின் வணிகநோக்கு இந்தியாவுக்கு அளித்த கொடை என இரு விஷயங்களைச் சொல்லலாம். ஒன்று, இந்தியாவின் ஏராளமான சமூகக்குழுக்களை அவர்களின் சமரசப்போக்குள்ள வணிகம் ஒன்றாக இணைத்தது. மோதலற்ற முறையில் இந்திய சமூகம் உருவாக இது காரணமாக அமைந்தது.
இரண்டு, சமண வணிகர்கள் அறக்கொடைகளைச் செய்தாகவேண்டுமென்ற கட்டாயம் மதரீதியாக உள்ளது. ஒரு தந்தையும் தாயும் இரு குழந்தைகளுடன் இருந்தால் சொத்துக்களைக் கடைசிக்காலத்தில் நான்காகவே பிரிப்பார்கள். பெற்றோர் ஆளுக்கொரு பங்கைத் தங்களுக்கென வைத்துக்கொள்வார்கள். தங்கள் இறப்புக்குப்பின் அந்தப்பங்குகள் நேரடியாகத் தங்கள் மதத்தின் அறக்கொடைகளுக்குச் சேரும்படி செய்வார்கள்.
இதன்மூலம் தங்களுடைய வணிகத்தில் செய்த பிழைகள் பொறுக்கப்படும் என்றும், மோட்சம் கிடைக்கும் என்றும் நம்புகிறார்கள். சமணர்களின் அறக்கொடைகள் இந்தியாவில் மட்டும் அல்ல, உலக அளவில்கூட மிகப்பெரியவை. இந்தியாவில் அனேகமாக பெரும்பாலான அறச்செயல்கள் அவர்களாலேயே செய்யப்படுகின்றன.
இந்த முறை இங்கே நாட்டுக்கோட்டைச் செட்டியார்களிடமும் சமீப காலம் வரை இருந்தது. பதினாறாம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை சைவ ஆலயத்திருப்பணிகள் பெருமளவில் அவர்களாலேயே செய்யப்பட்டன.
காந்தி இந்த முறையை முன்னுதாரணமாகக் கொண்டே செல்வந்தர்கள் செல்வத்தின் அறக்கொடையாளர்களாக இருக்கவேண்டும் என்றார். இந்த முறை இந்தியாவில் மிகப்பெரிய அறச்செயல்கள் தொடர்ந்து நிகழ வழிவகுத்துள்ளது.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
சமணம் வைணவம் குரு — கடிதங்கள்
தமிழ்நாட்டில் சமணத்தலங்கள்
அருகர்களின் பாதை 1 — கனககிரி, சிரவண பெலகொலா
நவீனகுருக்கள்,மிஷனரிகள்
கல்கியின் சமணம்
அயோத்தி தாசர்-கடிதங்கள்
கடிதங்கள்
தீபாவளியும் சமணமும்:கடிதம்
சமணம்,பிரமிள்: கடிதங்கள்
தமிழ்ச் சமணம்
சமணம் ஒரு கடிதம்
நீதியும் நாட்டார் விவேகமும் : பழமொழி நாநூறும்
February 27, 2012
வாசிப்பின் வழிகள் – கடிதம்
அன்புள்ள ஜெயமோகனுக்கு,
சமகால வாசிப்பு பற்றிப் "பண்படுதல்" நூலில் வாசித்தேன். முதன் முதலாக சிறுவர் மலர்களில் வெளியான பீர்பால்,தெனாலி ராமன் கதைகளே நான் வாசித்தவை. விகடனைத் தொடர்ந்து வாசித்த போது சுஜாதா.நான் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது எஸ்.ராவின் "கதாவிலாசம்" அதில் தொடராக வெளிவந்தது. தமிழில் இத்தனை எழுத்தாளர்கள் இருக்கிறார்களா என்பதே வியப்புக்குரியதாக இருந்தது. அதில் எஸ்.ரா. குறிப்பிட்ட அத்தனை நூல்களையும் வாசித்துவிட வேண்டும் என்று ஏறத்தாழ கோவையில் உள்ள அத்தனை புத்தகக் கடைகளிலும் ஏறி இறங்கி இருக்கிறேன். பொது நூலகங்களில் பெரும்பாலும் ஜெயகாந்தன் கிடைப்பார். அசோகமித்ரனோ வண்ணநிலவனோ சுந்தர ராமசாமியோ இன்னும் முப்பது நாற்பது வருடங்கள் கழித்துக் காணக் கிடைக்கலாம். மாணவனாகிய எனக்குத் தரப்படும் மிகச்சிறிய தொகையையும் மிச்சப்படுத்தியே என்னால் புத்தகங்கள் வாங்க முடியும். புத்தகம் வாங்கப் பணம் கொடுங்க என்றால் என் தந்தையிடம் இருந்து ஒரு முறைப்பு பரிசாகக் கிடைக்கலாம். ஆதலால் என்னால் எழுத்தாளர்களைத் "தேடி" அலைய முடியாத சூழ்நிலை. விமர்சகர்களால் பாராட்டப்படும் ஆக்கங்களையே என்னால் வாங்க முடியும். வாசிக்க முடியும்.
நானாகவே ஒரு முடிவெடுத்து அப்புத்தகம் ரசமானதாக இல்லாவிடில் மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளாகிறேன். எதுக்கு வம்பு? தற்சமயம் புத்தகம் வாங்கச் செல்கிறேன் என்றால் "நவீனத் தமிழ் இலக்கிய" அறிமுகத்தை ஓரிரு முறை புரட்டிய பின் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பல முக்கியமான ஆக்கங்களில் நான் ஏதேனும் படிக்காமல் விடுபட்டிருப்பின் அதைத் தேடி அலைகிறேன். இப்பொழுது அப்புத்தகம் எனக்கு மனப்பாடம். பிரபலமான பல கடைகளிலேயே ரமேஷ்-பிரேமின் படைப்புகள் கிடைப்பதில்லை. சில மாதங்களுக்கு முன்பு பிரபல கடைக்குச் சென்று அங்கு வேலை பார்க்கும் பெண்ணிடம் "பின் தொடரும் நிழலின் குரல் இருக்குங்களா?" என்று கேட்டேன். "இருங்க..கேட்டு சொல்றேன்" என்று உள்ளே சென்றவர் விடுவிடென்று போன வேகத்தில் வெளியே வந்து "நான் பின்தொடரும் பெண்ணின் நிழல்னு ஒரு புக்கும் இல்லீங்களே" என்றார். எட்டுத்திக்கும் மத யானையை எல்லா திக்குகளிலும் தேடியாயிற்று. Out of Stock. என்னுடைய ரசனையை மேம்படுத்துவதில் பெரும் பங்காற்றியிருக்கிறீர்கள். ஒரு எழுத்தாளரைப் புதிதாக வாசிக்கிறேன் என்றால் அவருடையதில் ஆகச் சிறந்த படைப்பு எது என்பதை அறிந்து கொள்வேன். அது பிடித்திருந்தால் அவருடைய எல்லா ஆக்கங்களையும் படித்துவிட்டுத்தான் அடுத்த எழுத்தாளருக்குத் தாவுவேன். யுவனைப் பகடையாட்டத்தில் ஆரம்பித்து பயணக்கதை வரை வாசித்தாயிற்று.
இது என் வாசிப்பு முறை. சோதனைகள் மேற்கொள்வதற்குப் போதிய சுதந்திரம் எனக்கில்லாத பொழுது தங்களைப் போன்றவர்களைப் பெரிதும் சார்ந்திருப்பதில் தவறொன்றும் இல்லை. அது உங்கள் வாசிப்பின் மீதான நம்பிக்கை. அதே சமயம் எனக்கொரு தனி ரசனை உண்டு அல்லது அப்படியொரு பிம்பத்தை சுமந்துகொண்டு அலைகிறேன். வாசிப்பதனால் ஏற்படும் கர்வமும் உண்டு. இந்த இருபது வருட வாழ்க்கையில் உருப்படியா என்ன செஞ்சிருக்க என்று யாரேனும் வினவினால் இடைவிடாத வாசிப்பைத்தான் பதிலாக சொல்வேன். ஆம். எனக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கும் அளித்த செயல் ஒன்று இருக்குமானால் அது வாசிப்பே. நான் என்னுடையது மட்டுமல்லாமல் நூற்றுக்கணக்கானவர்களின் வாழ்கையை வெவ்வேறு காலங்களை சூழ்நிலைகளை அவதானித்திருக்கிறேன். வாழ்ந்திருக்கிறேன். இன்னும் இப்பாதை முடிவற்று நீள்கிறது. உலகின் ஒட்டுமொத்த ஞானத்தையும் உள்ளங்கையில் அடக்கிவிட யத்தனித்திருக்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
கோகுல்ப்ரசாத்
அன்புள்ள கோகுல்பிரசாத்,
உங்கள் ஊக்கம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு வயதில் உலக ஞானத்தை எல்லாம் அள்ளவேண்டும் எனத் தோன்றுவது ஒரு கொடுப்பினை. வாழ்த்துக்கள்.
சுந்தர ராமசாமியின் ஒரு வரி உண்டு. 'நாம் நூல்களைத் தேட ஆரம்பித்தால் நூல்களும் நம்மைத் தேட ஆரம்பிக்கும்'. நூல்களைப் பற்றிய கவனத்துடன் இருந்தால் எங்கெங்கோ அவை தட்டுப்படும். ஒரு நூல் இன்னொன்றுக்கு இட்டுச்செல்லும்.
நான் எழுதிய அறிமுக, விமர்சன நூல்கள் [நவீனத்தமிழிலக்கிய அறிமுகம், கண்ணீரைப் பின் தொடர்தல், நவீன இலக்கிய முன்னோடிகள் வரிசை [7 நூல்கள்], உள்ளுணர்வின் தடத்தில், புதிய காலம், மேற்குச்சாளரம் போன்றவை பல நூல்களையும் ஆசிரியர்களையும் அறிமுகம் செய்பவை. இந்த இணையதளத்திலேயே நூற்றுக்கணக்கான ஆசிரியர்களும் நூல்களும் சுட்டப்பட்டிருக்கிறார்கள்.
எஸ்.ராமகிருஷ்ணனும் பல இலக்கிய நூல்களையும் ஆசிரியர்களையும் அறிமுகம் செய்து எழுதியிருக்கிறார். தொடர்ச்சியான கவனமிருந்தால் நூல்களைக் கண்டடைந்து வாசிப்பது எளிதுதான்.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
புளிய மரத்தின் கதை-கடிதம்
பாழி, ஒருகடிதம்
இலக்கிய வாசிப்பின் பயன் என்ன?
அழியாச்சித்திரங்கள்
இரவு தூங்குவதற்கு முன்னர் பாட்டுக் கேட்பது நெடுநாட்களாக உள்ள வழக்கம். அதன்பின்னர் குளியல், வழக்கமான சில தியானப்பயிற்சிகள். பாட்டு உலகியலில் இருந்து துண்டித்து விடுகிறது. அதுவும் ஒரு குளியல். சமீபமாக யூ டியூபில் காட்சிகளுடன் பழைய பாடல்களைக் கேட்கிறேன்.
http://www.youtube.com/watch?v=f7kfbuHDtH8
எனக்குப்பிடித்த இந்தப்பாடலைக் கேட்டேன். அந்தப்படம் மனதை மெல்ல ஏக்கத்தால் நிறைத்தது. அதிலிருப்பவர்கள் இசையமைப்பாளர் தேவராஜன், பாடலாசிரியர் வயலார் ராமவர்மா, யேசுதாஸ். 1972இல் இப்படம் வந்திருக்கிறது. ஆனால் இந்தப்படம் இன்னும் பழையதாக இருக்கலாம். வயலார் ராமவர்மா 1975இல் மறைந்தார். அப்போது அவருக்கு வயது 48. இந்தப்படத்தில் நாற்பதுக்குள்தான் இருக்கும். அப்படியென்றால் இது அறுபதுகளின் தொடக்கத்தில்.
ஒரு வரலாற்றுத்தருணம் இது. ஒரு படம் அளிக்கும் நினைவுகள், கடந்தகால ஏக்கங்கள் அளவிடற்கரியவை. என் இளமையில் நான் கேட்ட பாடல்கள், அப்பாடல்கள் ஒலித்த அன்றைய நிலப்பரப்புகள், அதனுடன் இணைந்த முகங்கள்…
புகைப்படம் காலத்தின் நேர்ப்பதிவு. சினிமா காலத்தின் நினைவோட்டப்பதிவு. வேறெந்தக் கலைக்கும் இந்த அம்சம் இல்லை என்று தோன்றுகிறது. இலக்கியமும் வரலாறுதான். ஆனால் அது அப்பட்டமாக அப்படியே பதிந்த வரலாறல்ல. நேற்றைய இலக்கிய ஆக்கங்களை இன்று வாசிக்கையில் அவை நேற்றையவை என்று தோன்றுவதில்லை. இன்றைய கற்பனையால்தான் அவை உருவம் கொடுத்து எடுக்கப்படுகின்றன. நேற்றைய வாசிப்புக் கூட இன்றைய சிந்தனையால் மீட்டெடுக்கப்படுகிறது. இருபத்தைந்தாண்டு முன் வாசித்த மோகமுள் நேற்றைய அனுபவம் அல்ல, இன்றைய அனுபவம்.
ஆனால் சினிமா முற்றிலும் புறவயமான ஒரு பதிவு என்ற எண்ணம் எழுகிறது. கடந்தகாலத்தில் பார்த்த ஒரு சினிமாவை இன்று மீண்டும் பார்க்கையில் அது முழுக்க முழுக்க நேற்றைய அனுபவமாகவே இருக்கிறது. அதை எவ்வகையிலும் இன்றுடன் தொடர்புபடுத்திக்கொள்ள முடியவில்லை. புகைப்படமும் சினிமாவும் பெருமளவுக்கு யந்திரத்தை, தொழில்நுட்பத்த்தைச் சார்ந்தவை என்பதனால் இருக்குமோ? யந்திரம் மொழி போல அகவயமானதல்ல. அப்பாவித்தனமான புறவயத்தன்மை கொண்டது.
இரவில் இப்பாடல்களைக் கேட்கும்போது காலத்தை உறையச்செய்து பார்க்க முடிகிறது. கடந்தகாலம் எனக்கு இழப்புணர்வை உருவாக்கவில்லை. நிகழ்காலம் எவ்வளவு அரியது என்று எண்ணச்செய்கிறது. ஒவ்வொரு துளியும் இனியது என்ற பிரக்ஞையை உருவாக்குகிறது.
ஆனால் அந்தச் சினிமாவுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எப்படி இருக்கும்? மூத்த நடிகர் ஒருவரின் ஒப்பனையாளர் சொன்னார், அந்நடிகர் முதிர்ந்து நடிக்காமல் வீட்டில் இருந்த நாட்களில் தான் நடித்த பழைய படங்களைப் பார்த்து கண்ணீர்விடுவதுண்டாம். அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. கடந்தகால வாழ்க்கை எல்லாருக்கும் நிகழ்கால நினைவாக இருக்கிறது, அவருக்கு அப்படியே கண்ணெதிரில் அது ஓடுகிறது.
http://www.youtube.com/watch?v=oRyEnHOy56I
யூ டியூபில் கஸ்தூரிமான் படத்தில் இந்தப்பாடலைத் தேடி எடுத்தேன். 2004 டிசம்பரில் லோகியால் கஸ்தூரிமான் படம் திட்டமிடப்பட்டது. 2005 பிப்ரவரி முதல் படத்தை எடுக்க ஆரம்பித்தார் லோகி. நான் முதல்முறையாக ஒரு சினிமா எடுக்கப்படுவதை அருகில் இருந்து பார்த்தேன். படத்தின் திட்டமிடல், தயாரிப்பு அனைத்திலும் கூடவே இருந்தேன்.
கஸ்தூரிமானுக்கு இசையமைக்கும்போதுதான் இளையராஜாவுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. அவர் தன்னுடைய பழைய ஆர்மோனியத்தை இசைத்தபடி மெட்டுக்களைப் பாடிப் பதிவுசெய்து லோகிக்குக் கொடுத்தார். அவற்றில் இருந்து லோகி தேர்ந்தெடுத்த ஐந்து மெட்டுக்களை அவர் பாடலாக்கினார். ஒரு மெட்டு சொற்களைப் பெற்று, இசைத்துணுக்குகளைச் சேர்த்துக்கொண்டு, மின்னதிர்வுகளாக மாறி, ஒளிக்கோடுகளாக வடிவம்பெற்றுப் பதிவாகும் அற்புதத்தை அவருடன் அருகமர்ந்து கண்டேன்.
பின்னர் அந்தப்பாடலை லோகி திரைவடிவமாக்கினார். உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணையின் கால்வாய் கரையிலும் அணையை ஒட்டிய சிறிய காட்டிலும் கொஞ்சம் மைசூரிலுமாக எடுக்கப்பட்டது அந்தப்பாடல். எடுக்கும்போது ஒரு ஆர்வத்தை மட்டுமே ஊட்டியது. இப்போது பார்க்கும்போது ஓர் அலை போலக் கடந்தகால ஏக்கம் வந்து அறைகிறது. லோகி இன்றில்லை. அந்த நிலம் எப்படி எப்படியோ மாறியிருக்கும். அந்தப் படத்தில் நடித்த பிரசன்னாவும் மீராஜாஸ்மினும் மாறியிருப்பார்கள். ஆனால் அந்தக்காட்சி மட்டும் அப்படியே இருக்கிறது. இன்னும் எத்தனையோ காலம் எங்கோ ஒரு இடத்தில் அப்படியே மாற்றமில்லாமல் இருந்துகொண்டிருக்கும்.
அந்தப் பாடலின் கடைசி காட்சித்துளியில் புல்லாங்குழல் இசைக்கும் சமையற்காரர் கோபாலும் லோகியின் உதவியாளர் ஈஸ்வரனும் நினைவுக்கு வருகிறார்கள். சினிமா மீது பித்துக் கொண்டு வந்து சினிமாவின் ஏதோ ஒரு துளியில் இருந்துகொண்டிருக்கும் இரு ஆன்மாக்கள். எங்கிருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள்? ஒரு மாயக்கரமாக முடிவின்மை அவர்களையும் தொட்டுச்சென்றிருப்பதை அறிவார்களா?
தொடர்புடைய பதிவுகள்
படித்துறை
நந்தலாலா,இளையராஜா, ஷாஜி
ஷாஜியின் விளக்கம்
இளையராஜா,ஷாஜி…கடிதங்கள்
கலைஞர்களை வழிபடலாமா?
இளையராஜா மீதான விமர்சனங்கள்..
இளையராஜா, இ.பா, ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னை, மூன்று சந்திப்புகள்
இளையராஜா,பழசி ராஜா -கடிதங்கள்
இளையராஜாவின் இசை,கடிதம்
நான் கடவுள் :மேலும் இணைப்புகள்
நான் கடவுள்:இணைப்புகள்
குஷ்புகுளித்த குளம்: கடிதங்கள்
இரு கடிதங்கள்
நாட்டியப்பேர்வழி
பப்படம்
February 26, 2012
பயணம்: கடிதங்கள்
திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்களின் 'அருகர்களின் பாதை' பல புதிய கதவுகளைத் திறந்து விட்ட ஒரு அற்புதமான பயண அனுபவமாகத் திகழ்ந்தது. நம் முன்னோர்களின் விழுமியங்களை மீள் பார்வை பார்க்க நீங்கள் ஏற்படுத்திக்கொடுத்த உன்னதமான வாசல்கள்.
கடந்த ஒரு மாத காலமாக நான் அதிகாலையில் எழுந்தவுடன் தட்டுவது உங்கள் இணைய தள நுழைவு வாயிலையே. உங்கள் பயணத் திட்டமும், தேர்வு செய்த தலங்களும், நீங்கள் எத்துணை ஆழமாக சமணத் தலங்களைப் பற்றியும், இந்திய வரலாற்றினை அதன் அனைத்துக் கூறுகளுடனும் ஆய்வு செய்து, இந்த வரைவினைத் திட்டமிட்டிருப்பீர்கள் என்பதனைத் தெள்ளென விளக்குகிறது. தங்களின் உடனடிப் பதிவுகளின் வேகம் என்னை பிரமிக்க வைத்தது. எடுத்துக்கொண்ட பணியில் உள்ள தீராத காதலே இதனைச் சாதிக்க முடியும். என்னைப் பொறுத்த வரையில் இது ஓர் அசுர சாதனையே.
இந்தப் பயண அனுபவங்கள் நிச்சயம் ஓர் நூலாக விரைவில் வரும். நீங்கள் இணையத்தில் கொடுத்ததைவிட உங்களின் ஆய்வுகள் மற்றும் வாசிப்பு சார்ந்த மிக அதிகமான தகவல்களுடன். அத்தகைய ஓர் நூல், வரலாற்று ஆய்வு மாணவர்களுக்கு, ஓர் உன்னதமான வழிகாட்டுதலாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
வணக்கத்துடனும், வாழ்த்துக்களுடனும்,
சங்கரநாராயணன்
ஒரு சிறிய ஐயம். 'அமணர்' சமணர் என்றாகியது சரி. 'அருகர்' என்பதன் வேர் எது?
அன்புள்ள சங்கரநாராயணன்,
பயணக்கட்டுரைகள் நூலாக வரவுள்ளன. ஆம், கொஞ்சம் விரிவாக.
அமணர் என்ற சொல் சமணர் ஆகவில்லை. சமணர்கள் பழங்காலத்தில் சிரவணர் என்றே சொல்லப்பட்டனர். இன்றும் வட இந்தியாவில் ஷ்ரவணர் என்ற சொல் புழக்கத்தில் உள்ளது. விரதம் கொண்டவர்கள் என்று அதற்குப்பொருள். அச்சொல்லே சமணர் என மருவியது.
அர்ஹர் என்ற சொல்லின் மருவே அருகர்கள். அர்ஹந்த் என்றும் அச்சொல் சொல்லப்படுகிறது. பௌத்ததிலும் இச்சொல் புழக்கத்தில் உள்ளது. இதற்கு 'நோன்பு கொண்டவர்கள்' 'புனிதத் தகுதி கொண்டவர்கள்' என்று பொருள்.
சமண வழிபாடுகளில் தீர்த்தங்கரர்கள்
நமோ அர்ஹந்தானம்
நமோ சித்தானம்
நமோ ஆயார்யானம்
நமோ உவஜ்ஜயானம்
நமோ சர்வ சாதுனாம்
என வணங்கப்படுகிறார்கள்.
ஜெ
அன்புள்ள ஜெ,
உங்கள் அறிவு வழியாக இந்தியாவின் சில பக்கங்களை அறிய முடிந்ததில் மகிழ்ச்சி. எனக்கு இந்திய நேரடி அனுபவம் மிகக் குறைவு. பெரும்பாலும் எழுத்து வழியாகவே அதிகம். உங்கள் எழுத்துக்களுடன் இணைத்துள்ள படங்கள் அனைத்தும் பேசும் சித்திரங்கள். மனிதனின் வளர்ச்சிக்குப் பகுத்தறிவு மிக அவசியமானது. ஆனால் பகுத்தறிவின் பெயரால் ஒரு பண்பாட்டின் சாட்சியங்கள் தமிழ் நாட்டில் காப்பாற்றப்படாமல் இருப்பது வேதனை. உங்கள் கட்டுரை தமிழகத்தில் ஒரு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகின்றேன்.
அன்புடன்
க.சரவணபவன்
அன்புள்ள சரவணபவன்,
எவ்வளவு வாசித்தாலும் இந்தியா என்ற அனுபவம் மூலமே உண்மையான மனச்சித்திரத்தை அடைய முடியும். கூடுமானவரை சிறிய அளவிலேனும்.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
இந்தியா ஆபத்தான நாடா — கடிதங்கள்
பயணம் — கடிதங்கள்
இந்தியா ஆபத்தான நாடா?
அருகர்களின் பாதை — கடிதங்கள்
வீட்டில்
அருகர்களின் பாதை 30 — நீண்ட பயணம்
அருகர்களின் பாதை 29 — ஜாலார்பதான்
அருகர்களின் பாதை 28 — சவாய்மாதோப்பூர், ரண்தம்போர்
பார்பாரிகா
அருகர்களின் பாதை 27 — சங்கானீர், ஜெய்ப்பூர்
அருகர்களின் பாதை 26 — பிக்கானீர்
அருகர்களின் பாதை 25 — லொதுர்வா, ஜெய்சால்மர்
ரணக்பூர் காணொளி
அருகர்களின் பாதை 24 — ஜெய்சால்மர், சாம் மணல் திட்டு
அருகர்களின் பாதை 23 — ரணக்பூர், கும்பல்கர்
அருகர்களின் பாதை 22 – மிர்பூர், உதய்புர்-நகடா
பயணம்- கடிதங்கள்
அருகர்களின் பாதை 21 — அசல்கர், தில்வாரா
திருப்பான்மலை, ஊரணித்தாங்கல், நெகநூர்ப்பட்டி
அருகர்களின் பாதை 20 — தரங்கா, கும்பாரியா
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
