கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அறிய,


நலம். நலம் என நினைக்கிறேன். அண்மையில் கோட்டி கதையைப் படித்து ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டேன். கதை வாசித்து முடித்ததும் இரண்டு சொட்டு கண்ணீர் விட்டேன். பூமேடையை தெரியாதவர் யாராவது குமரியில் இருக்க முடியுமா.. அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவன் என்ற பெருமையை இந்தக் கதை எனக்கு உணர்த்தியது. குமரி ஸ்கேனிங் தொடரட்டும் உங்கள் எழுத்துக்களில்………வாழ்த்துக்கள்..


தக்கலை எச்.முஜீப் ரஹ்மான்


அன்புள்ள முஜீப்,


நன்றி.


பூமேடை போன்றவர்கள் மறக்கப்படவேண்டியவர்கள் அல்ல. அவர்கள் கோமாளித்தனங்கள் மூலம் நம் லௌகீகத்தின், சுயநலத்தின் கோமாளித்தனத்தை சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.


ஜெ


அன்புள்ள ஜெயமோகன்,


தங்களது தீவிர வாசகனான நான் சமீபத்தில் "யானை டாக்டர்" என்ற சிறுகதையைப் படித்தேன். ஒரு முழுமையான சிறுகதையைப் படித்த திருப்தியை கொண்டேன் நீண்ட நாட்களுக்குப் பிறகு. அதைப்பற்றி என்னுடைய பார்வையில் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். ஒரு வாசகனாய் ஒரு எழுத்தாளருக்கு எழுதும் முதல் கடிதம் என்பதையும் கூறிக்கொள்கிறேன்.


குறிப்பு:கீழே எழுதப்பட்டவை எனது ப்ளாக்கில் பதிக்கப்பட்டவை, அதை அப்படியே இங்கு தருகின்றேன்.


http://rojavinkadhalan.blogspot.com/2...


யானை டாக்டர் சிறுகதையின் ஓரிடத்தில் "நான்கு வரிக்கு ஒருமுறை டாக்டரால் யானையைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது" என்று டாக்டரைப் பற்றி அம்மலை மக்கள் சொல்வதாக வருகின்றது. அது போலதான் ஜெயமோகனும் என்று நினைக்கிறன். எந்தக்கதையிலும், அது நாவலோ, சிறுகதையோ அவரால் காட்டைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. காட்டுக்கும் அவருக்குமான நெருக்கமும், அறிவும் அவரின் எல்லா கதைகளிலும் தென்படும். யானை டாக்டர் கதை உண்மையாகவே யானைகளின் மருத்துவராக வாழ்ந்த திரு.கிருஷ்ணமூர்த்தி என்பவரை வைத்து எழுதப்பட்டதாகும். மேலும் கதையில் அவரைப்பற்றி வரும் அனைத்துத் தகவல்களும் சேகரித்து எழுதி இருக்கிறார் என்பதை அறிகின்றேன்.


ரொம்பவும் அழகாகவும், எளிமையாகவும் காட்டைப் பற்றியும், யானை மற்றும் பிற மிருகங்களைப் பற்றிய தகவல்களையும், இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பு அறுந்துபோய் கிடைப்பதைப் பற்றியும் எழுதப்பட்ட சிறுகதை இது.


காட்டிற்குப் புதிதாக வரும் வனத்துறை அதிகாரி அந்தச்சமூகத்தோடு ஒட்டமுடியாமல் அழுகிய யானைகுவியலையும், நெளியும் புழுக்களையும் கண்டு மிரள்கிறான். அங்கே யானைகளுக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி என்பவரோடு நெருக்கம் கொள்கிறான். மிருகங்கள் மீதும், காட்டின் மீதும் அவர் காட்டும் நேசம் அளப்பரியதாக இருக்கின்றது.


செந்நாய் கூட்டத்தோடும், யானைக் கூட்டத்தோடும் அதன் மொழி பேசி, அதன் எண்ணவோட்டங்களைப் புரிந்து கொள்ளுதலும், அதற்கு பதிலுரைத்தலும், அதன் வலிக்காக கலங்கிப்போவதுமாக டாக்டர்.கே நம்மை வரிக்குவரி வியப்பில் ஆழ்த்துகிறார்.


நாட்டில் வசிப்பவன் சகமனிதனை அடிமைப்படுத்துகின்றான், அப்படி வாழவே துடிக்கின்றான். ஏதோ ஒரு வகையில் பிறமனிதனை நாம் ஆளவே முயல்கிறோம். நமக்கு அதிகாரம் தேவைப்படுகிறது, இல்லையா?அப்படிப்பட்டவர்களால் காட்டில் வாழவே முடியாது, ஏனென்றால் காடு ஒவ்வொரு அசைவிலும்,அதன் வலிமையை நிரூபித்து நம்மை சிறியவனாகவே காட்டுகின்றது.


நம்முடைய அதிகாரத்தைக் காட்டி அதோடு மல்லுக்கு நிற்க முடியாது, ஏனென்றால் காடு அதன் கீழ் நம்மை வைத்துக்கொண்டிருக்கும்.


வீசி எறிந்த பீர் பாட்டில் யானையின் கால்களில் புகுந்து, உள்ளே சென்று, சீழ் பிடித்து, நிறைய உண்டு நிறைய நடந்து வாழும் யானையை ஒரே இடத்தில் நகர முடியாமல் செய்து, பட்டினியால் சாக அடிப்பது ஆறறிவு என்று சொல்லிக்கொள்ள நம் இனத்திற்கு தகுதி உண்டா என்ன?


போகப்போக காட்டைப் பழகி, காட்டோடு நெருக்கமாகும் வனஅதிகாரி (கதை சொல்லி) யானை டாக்டரின் மூலம் காட்டின் மொழியைப் புரிந்துகொள்ளத் துவங்குகின்றான். இப்படிப்பட்ட ஒருத்தரைப் பற்றி உலகம் தெரிந்து கொள்ளட்டும் என்ற ஆசையில் அவருக்கு பத்மஸ்ரீ விருதுக்கு ஏற்பாடு செய்கிறான். ஆனால் அவரோ காட்டில் வாழ முதல் தகுதியே மனிதனாய் இல்லாமல் யானையைப் போல், குரங்கைப் போல் அற்பத்தனம இன்றி வாழவேண்டும் என்கிறார். காட்டுமிருகம் ஒன்றிற்கு உன்னைப் புரிந்து கொள்ள முடிகின்றது என்ற மகத்தான விஷயத்தை விட எந்த விருதும் உயர்ந்ததல்ல என்கிறார். (நான் ரொம்பவும் ரசித்த வரி, got goose bumps).


இங்கிலீஷ் பேசிக்கொண்டு, லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குபவன்தான் இங்கு பீர் பாட்டிலை வீசி எறிந்துவிட்டுப் போகின்றான். இன்று படித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு இளைஞனும் அமெரிக்கா போய்விடவேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற போலி லட்சியவாதிகள்தான். அவர்களைப் பார்த்து, அதுதான் வாழ்கை என்று தெரிந்து அவர்கள் பின்னால் ஓடும் பதர்கள் இன்று ஏராளம், இப்படியாகத்தான் நமது இளைய தலைமுறை சீரழிந்து கிடக்கிறது என்று ஜெயமோகன் பொட்டில் அறைந்தார் போல் சொல்கிறார். 'Man, vain insect!'


கார் வாங்கி விட்டேன், இனி அடுத்ததாக பிளாட் ஒன்றை வாங்கி எனது தாய் தந்தை மனைவியை குடிவைக்கவேண்டும், நிம்மதியாக வாழவேண்டும் அல்லது அது தான் நிம்மதி என்ற குறிக்கோளுடன் வாழும் எங்கள் உலகில் இருந்து வேறுபட்டிருக்கும் டாக்டர். கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் காலடி மண்ணில் வாழும் காந்திகளே!


இப்படிப்பட்ட மனிதரையும், அவர் வாழ்கை முறையும் கொஞ்சம் புனைவோடு கலந்து எங்களைப் போன்றவர்களுக்குப் புரியவைத்த ஜெயமோகன் அவர்களுக்கு நன்றி!


அன்புடன்


இப்ராகிம்

பெங்களூர்


அன்புள்ள இப்ராகீம்,


நன்றி.


நீங்கள் நினைப்பதை சரியாக எழுதும் மொழி இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். எழுத்து யார் வாசிக்கிறார்களோ இல்லையோ நம்மை நம்முடைய பல தளைகளில் இருந்து விடுவிப்பதைக் காண்பீர்கள். வாழ்த்துக்கள்.


காடு நமக்கு நாம் செல்லும் திசைக்கு எதிரான ஒரு அழகிய பாதையைச் சுட்டிக்காட்டியபடியே இருக்கிறது என நான் நினைப்பதுண்டு. நண்பர்குழுவுடன் தொடர்ச்சியாக கானுலா செல்வது அதற்காகவே.


அதை உங்களுக்கும் சிபாரிசு செய்கிறேன்.


ஜெ


தொடர்புடைய பதிவுகள்

மிருகங்களின் உணர்வுகள்
யானைடாக்டருக்கு ஒரு தளம்
தினமணி -யானை டாக்டர்
இலட்சியவாதம்-கடிதங்கள்
அன்பை வாங்கிக்கொள்ளுதல்…[கடலூர் சீனு]
கடிதங்கள்
கடிதங்கள்
அறம் வாழும்-கடிதம்
யானை- கடிதம்
யானைடாக்டர்-ஓர் உரை
வாழும் கணங்கள்-கடிதங்கள்
இலங்கையில் இருந்து ஒரு கடிதம்
யானை டாக்டர் இலவச நூல் வினியோகம்
அசடன், யானைடாக்டர்- கடிதங்கள்
யானைடாக்டர் இலவச நூல்
யானைடாக்டர்-படங்கள்
யானை டாக்டர் நினைவு கூரல்-செல்வேந்திரன்
யானைடாக்டர் நினைவுகூரல் நிகழ்ச்சி
யானை டாக்டர்
யானைடாக்டர் [சிறுகதை] -1
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 25, 2012 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.