வீட்டில்
நேற்று பின்னிரவு இரண்டுமணிக்கு சென்னைக்கு வந்து சேர்ந்தோம். கோயம்பேடு பேருந்துநிலையம் அருகே என்னையும் கடலூர் சீனுவையும் இறக்கிவிட்டார்கள். முத்துக்கிருஷ்ணனும் கெ.பி. வினோதும் சென்னையில் கோடம்பாக்கம் பகுதியில் இறங்குவதாகச் சொன்னார்கள். பிறர் நேராக ஈரோடு செல்வதாகத் திட்டம். நானும் சீனுவும் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள் சென்றோம். நான் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள் செல்வது அதுவே முதல் முறை. போர்நிகழ்ந்த படுகளம் போல் இருந்தது. எங்கே நோக்கினாலும் மக்கள் தூங்கிக்கொண்டிருந்தார்கள். தமிழகப் பேருந்து நிலையங்களுக்கே உரிய மூத்திரவாடை. பிரம்மாண்டமான பேருந்துநிலையம், அத்தனை பெரிய பேருந்து நிலையத்தை முதல் முறையாகப் பார்க்கிறேன். பராமரிப்பு என்பதே இல்லை. சிறுநீர் கழிப்பறையில் மலம் குவிந்து கிடந்தது. கால் வைக்குமிடமெல்லாம் குப்பைகள்.
மதுரைப் பேருந்து நின்றது. ஆனால் பதினைந்துபேர் வந்தால்தான் எடுப்பேன் என்றார் ஓட்டுநர். நான் மட்டுமே அதுவரை வந்திருந்த பயணி. ஆகவே திருச்சி பேருந்தில் ஏறிக்கொண்டேன். பயணச்சீட்டு எடுக்க ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். அப்படியே தூங்கிவிட்டேன். என்ன ஏது என்று தெரியாது. இரண்டு இரவும் இரண்டு பகலும் கண்விழித்த தூக்கம். பேருந்தில் பாட்டு போட்டுக்கொண்டே இருந்தார்கள். கனவில் நான் குலசேகரம் சென்டிரல் திரையரங்கில் செத்துப்போன என் நண்பன் ராதாகிருஷ்ணனுடன் பல படங்கள் பார்த்தேன். இப்போது இருக்கும் நண்பர் ஈரோடு கிருஷ்ணன் ஏன் கூடவே இருந்தார் என்பதுதான் விழித்தபோது குழப்பமாக இருந்தது.
திருச்சியில் இறங்கினால் சட்டென்று ஆயிரம் ரூபாயில் மீதி கிடைக்கவில்லையே என நினைப்பு வந்து பகீரிட்டது. ஆனால் வண்டி போய்விட்டது. வேறு வழியே இல்லை. கன்யாகுமரி பேருந்து நின்றது. ஏறி அமர்ந்துகொண்டேன். தாடி, காவித்துண்டு, தலைப்பாகை. கண்டக்டர் 'சாமி எங்க போகுது?' என்றார். பையில் கைவிட்டேன். ஆயிரம் ரூபாய் சென்னைப் பேருந்தில் கொடுத்தது போக ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு மட்டுமே இருந்திருக்க வேண்டும். ஆனால் மேலும் எழுநூற்றுச்சில்லறை இருந்தது. அதாவது நடத்துநர் மீதியைக் கொடுக்க நான் வாங்கி வைத்திருக்கிறேன், ஆனால் எப்போது?
மீண்டும் தூக்கம். சாத்தூர் அருகே இறங்கி சோறு சாப்பிட்டேன், அது முழுநினைவுடன்தான். மீண்டும் பயணம். மீண்டும் தூக்கம். ஒருவழியாக நாகர்கோயில் வந்து சேர்ந்தது மாலை ஆறரை மணிக்கு. வந்ததுமே அருண்மொழி குளித்துவிட்டு தாடியை எடு என்று ஆணையிட்டாள். சவரம் செய்தேன், ஜாலார்பதானின் புழுதியை உடலில் இருந்து கழுவிக் குளித்தேன். கீழேவந்து சூடான உப்புமாவும் கறுப்பு டீயும் சாப்பிட்டேன். சைதன்யாவுக்கு பயணத் தகவல்களை விரிவாக சொல்ல ஆரம்பித்தேன். இல்லறம் புகுந்தாயிற்று.
தொடர்புடைய பதிவுகள்
அருகர்களின் பாதை 30 — நீண்ட பயணம்
அருகர்களின் பாதை 29 — ஜாலார்பதான்
அருகர்களின் பாதை 28 — சவாய்மாதோப்பூர், ரண்தம்போர்
பார்பாரிகா
அருகர்களின் பாதை 27 — சங்கானீர், ஜெய்ப்பூர்
அருகர்களின் பாதை 26 — பிக்கானீர்
அருகர்களின் பாதை 25 — லொதுர்வா, ஜெய்சால்மர்
ரணக்பூர் காணொளி
அருகர்களின் பாதை 24 — ஜெய்சால்மர், சாம் மணல் திட்டு
அருகர்களின் பாதை 23 — ரணக்பூர், கும்பல்கர்
அருகர்களின் பாதை 22 – மிர்பூர், உதய்புர்-நகடா
பயணம்- கடிதங்கள்
அருகர்களின் பாதை 21 — அசல்கர், தில்வாரா
திருப்பான்மலை, ஊரணித்தாங்கல், நெகநூர்ப்பட்டி
அருகர்களின் பாதை 20 — தரங்கா, கும்பாரியா
அருகர்களின் பாதை 19 — படான், மேஹ்சானா, மோதேரா
அருகர்களின் பாதை 18 — டோலாவீரா
அருகர்களின் பாதை 17 – கிர்நார்
அருகர்களின் பாதை 16 — பலிதானா, ஹஸ்தகிரி, தலஜா
அருகர்களின் பாதை 15 — அகமதாபாத்,லோதல்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
