Jeyamohan's Blog, page 2261

December 29, 2011

அறம்-எஸ்.கெ.பி.கருணா

நண்பர் ஜெயமோகன் அவர்களுக்கு,


இன்று, எனது கல்லூரியில் பணிபுரியும் அவ்வளவு பேருக்கும் புத்தாண்டுப் பரிசாக அறம் புத்தகத்தைப் பரிசளித்தேன்.


ஒரே நேரத்தில், அத்தனை பேருக்கும் எனக்கு மிகவும் பிடித்த ஒரு புத்தகத்தைப் பரிசாக வழங்குவது மிகப் பெருமிதமாக இருந்தது.

தனித்தனியாக அனைவருக்குமே வாழ்த்துக் கூறிப் புத்தகத்தைக் கொடுக்கும் போதும் ஒரு சில விஷயங்களை கவனித்தேன்.


[image error]


1. புத்தகம்தானே என்று யாருமே ஒரு வித அலட்சியமாகப் பாராமல், அத்தனை பேருமே சற்று மரியாதையுடனே பெற்றுக் கொண்டார்கள்.


2. பெரும்பாலும் எல்லோருக்குமே புத்தகம் படிக்க வேண்டும் என்று விருப்பம் இருக்கிறது. என்ன வாங்குவது, அல்லது எதை வாங்குவது என்றே

அவர்களுக்குத் தெரிய வில்லை.


3. அநேகமாக அனைவருக்குமே ஜெயமோகன் என்ற பெயர் பரிச்சயமாக இருக்கிறது.


4. பாதிப் பேராவது புத்தகத்தைப் படிப்பார்கள் என்றும், ஐந்தில் ஒரு பாகம், அதாவது ஐம்பது பேராவது புத்தகத்தை முழுமையாக படித்து முடிப்பார்கள்

என்றும் நம்புகிறேன்.


இந்தப் புத்தகத்தைப் பற்றியும், ஏன் அறம் புத்தகத்தைப் பரிசாகக் கொடுக்கிறேன் என்பதைப் பற்றியும் ஒரு சிறிய கட்டுரையாக எழுதி அதை அந்தப் புத்தகத்திலேயே

இணைத்துக் கொடுத்திருக்கிறேன்.


முன் கூட்டி இதற்கு அனுமதி கேளாமல், இந்த உரிமையை எடுத்துக் கொண்டேன். மன்னிக்கவும்.


மேலும், அந்தக் கட்டுரையை எனது வலைப் பக்கத்திலும் வெளியிட்டுள்ளேன்.


மிக்க அன்புடன்,


கருணாநிதி.கு


www.skpkaruna.com


அன்புள்ள கருணா


அறம் கதைகளின் நோக்கமே அத்தகைய கைகள் சிலவற்றுக்கு சென்றுசேர்வதுதான். அக்கதைகளின் நாயகர்களுடன் தங்களை எவ்வகையிலேனும் அடையாளம் காண்பவர்களே அதன் வாசகர்கள்.


திருச்சி எஸ்.ஆர்.வி. பள்ளியில் திரு துளசிதாஸ் அறம் நூலைப் பலருக்கு வாங்கிக்கொடுத்ததாகச் சொன்னார். கல்லூரியில் ஓர் நூலறிமுக விழாவும் ஏற்பாடு செய்திருந்தார். அதன்பின்னர் திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி சார்பில் அந்த மாணவர்களுக்குக் கதைகளை அறிமுகம் செய்து ஒரு விருதும் அளித்தனர். ஆம், அக்கதைகள் அதற்கான வாசகர்களைத் தேடிச்சென்றுகொண்டே இருக்கின்றன


உங்கள் கட்டுரை ஆத்மார்த்தமாக நேரடியாகப் பேசுகிறது


நன்றி


ஜெ




பொருள் சார்ந்த வாழ்க்கையோ, புகழ் சார்ந்த வாழ்க்கையோ அளிக்காத மனநிறைவை, அறம் சார்ந்த வாழ்க்கை கொடுத்து வருகிறது. அதற்கு சான்றாக, மகாத்மாவையோ, சுபாஷ் சந்திர போஸையோ, பகத் சிங்கையோ காட்டுவதை விட, நமக்கு அருகில் வாழ்ந்த, நாம் அறிந்து கொள்ள மறந்த எளிய உண்மை மனிதர்களைக் காட்டுகிறது இந்த அறம் புத்தகம்.




கருணாவின் கட்டுரை


தொடர்புடைய பதிவுகள்

கடிதங்கள்
கடிதங்கள்
பின்தொடரும் நிழலின்குரலும் அறமும்
அறம் விழா
அறம் — சிறுகதைத் தொகுப்பு கிடைக்குமிடங்கள்
எதற்காக அடுத்த தலைமுறை?
அறம் வாழும்-கடிதம்
மண்ணாப்பேடி
உங்கள் கதைகள்-கடிதம்
அறம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறதா?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 29, 2011 10:30

December 28, 2011

பூமணி-கடிதங்கள்

அன்பிற்குரிய ஜெயமோகன்,


விஷ்ணுபுரம் விருது இவ்வாண்டு பூமணிக்குக் கொடுத்திருப்பது குறித்து மிகவும் மகிழ்கிறேன். பெருமைப்படுத்த வேண்டிய ஆளுமைகளை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள். அத்துடன் அவர்களின் படைப்புகளைக் குறித்து நூலும் எழுதுகிறீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

அன்புடன்,

பெருமாள்முருகன்

www.perumalmurugan.com


அன்புள்ள பெருமாள்முருகன்,


நன்றி.


இது ஒரு அவசியமான விஷயம். இதைச் செய்யவேண்டுமெனப் பிறரிடம் பல ஆண்டுகளாகச் சொல்லி வந்திருக்கிறேன். சரி என்று நானே ஆரம்பித்துவிட்டேன். ஆனால் இந்த விருதுகளில் ஒரு சின்ன குறை உள்ளது. ஆ.மாதவன் அதைச் சொன்னார் 'நீ எனக்கு விருது கொடுத்தது என் பையன் எனக்குச் செய்தது மாதிரி' என்று.  ஆம், இந்த விருதை நானோ நீங்களோ ஆ.மாதவனுக்கோ அல்லது பூமணிக்கோ கொடுப்பதென்பது உண்மையில் அவர்களின் சொந்தப் பிள்ளைகள் அவர்களுக்கு விழா நடத்துவதுபோல. நம் அமைப்பின், சூழலின் அங்கீகாரம் மிச்சமிருக்கிறது. அதைச் சுட்டிக்காட்டவே இதெல்லாம். ஆனால், ஒரு பெரிய இளைய வாசகர்கூட்டம் கூடி அவரிடம் பேசியதுதான் இதன் உண்மையான அங்கீகாரம்.


நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?


ஜெ


இந்தக்கட்டுரை திரு.பூமணி அவர்களின் சூழல் மற்றும் அவரின் சுயதேடல் இட்டுச் சென்ற இடங்கள், மட்டுமல்லாது அவரின் எழுத்து சார்ந்த தேர்வு அதற்கு அவர் பட்ட வாதைகளைத் தெளிவாக இயம்பியது. அய்யா.கி.ரா வின் எழுத்து அவரைப்போல எப்போதும் மார்க்கண்டாயுசுடையது. மண்ணையும் மனிதர்களையும் சுமந்து வருவது மட்டுமின்றி வசீகரம் கூடியது. இளம் எழுத்தாளர்களுக்கு இன்றும் பல (எழுத்து/சாப்பாடு/வாழ்வு) நேர்த்திகளைக் கற்றுக்கொடுப்பவர். ஓடும் ரயிலில் தன்னைச் சுற்றியும்,வெளியிலும் என்ன நடக்கிறது என பார்க்காமல் ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு அதில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டு இருப்பவர்களை அந்தப் புத்தகத்தை அவர்களின் முகத்தோடு வைத்தபடியே சுட வேண்டும் என்பார்.


தேவதச்சன் சார் எப்போதும் நான் பேச விரும்பும் மனிதர்களில் ஒருவர். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள எப்போதும் எதாவது இருக்கும். ஒரு "ஃபேண்டஸி"யை எதிராளியின் மனதில் எளிதில் விதைத்து விடுவார். முதல் பார்வையில் நான் எமாந்துபோனேன் இவரிடம். போர்ஹே, லா.ச.ரா, ராமசாமி, ஜெமோ, கோணங்கி, கென் வில்பர், காஃப்கா எனத் தன்னை எப்போதும் புதுப்பித்துக் கொண்டே இருப்பவர். ஸ்பானியப் பழமொழி ஒன்றை ஆங்கிலத்தில் படித்தேன் " The person who is resistant to change is destained to perish" என. அதை மனத்தில் கொண்டிருப்பாரோ தேவதச்சன்!!!


மேற்சொன்ன இருவரும் திரு.பூமணி அவர்களை பாதித்ததில் வியப்பில்லை. இலக்கிய ரசனையில் முரண்பாடுகள் இருப்பினும்.


மேலும், கட்டுரையின் இறுதிப் பத்தியில்


" சிங்கில் ஜத்மாத்தஸ் பூமணிக்குப் பிரியமான நாவலாசிரியர். பூமணியின் 'பிறகு' நாவலில் சிங்கிஸ் ஜத்மாத்தலின் கன்னிநிலம் போன்ற நாவல்களின் அழகியல் பாதிப்பினைக் காணமுடியும்." என உள்ளது


மேற்கண்ட மூன்று வரிகளில் " Chinghiz Aitmatov (1928-2008)சிங்கிஸ் ஐத்மாதோவ் என்று இருந்தால் வாசகர்களுக்கு அந்த நாவலாசிரியரை பற்றித் தேடுவதோ வாசிப்பதோ எளிதாக இருக்கும். மேலும் சிங்கிஸ் ஐத்மாதோவின் நாவல்கள்

Jamilya

The White Ship

The Day Lasts More Than a Hundred Years

போன்றவை.


Mikhail Sholokhov (1905 -1984) மிக்கையீல் ஷோலகோவ் எழுதிய


Virgin Soil Upturned ( கன்னி நிலம் என தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது)

And Quiet Flows the Don ( ஸ்டாலின் பரிசு1941 !!! நோபல் பரிசு1965 பெற்ற நாவல்)

The Don Flows Home to the Sea


உங்களின் தளத்தில் சரிசெய்து விடவும். வாழ்த்துக்கள்


நன்றி, வணக்கம்

பாம்பாட்டிச்சித்தன்


அன்புள்ள பாம்பாட்டிச்சித்தன்


நன்றி. மெய்ப்புப்பிழை, திருத்திவிடுகிறேன்.


சிங்கிஸ் ஐத்மாத்தவ் ஒரு காலகட்டத்தில் தமிழக முற்போக்கு வாசகர் நடுவே மிகவும் பிரபலம். அவரது அன்னைவயல் , ஜமில்யா போன்ற நாவல்களைத்தான் டி.வை.எஃப்.ஐ போன்றவற்றில் சேர்பவர்களுக்கு முதலில் வாசிக்கக் கொடுப்பார்கள். மூன்று ரூபாய்தான் முதலில் விலை இருந்தது. எங்கள் தொழிற்சங்கங்களிலும் அவ்வழக்கம் இருந்தது. நானே இருபது பிரதிகள் வரை வைத்திருந்தேன். இப்போதெல்லாம் அந்தப் போக்கு அப்படியே மறைந்துவிட்டது. அன்னைவயலைத்தான் கன்னிநிலம் என்று நினைவுப்பிழையாகச் சுட்டியிருந்தேன்.


கோயில்பட்டியில் இலக்கியரசனையைத் தீர்மானிப்பதில் ருஷ்ய மொழியாக்கங்கள் எப்போதும் பெரும்பங்காற்றியிருக்கின்றன. தேவதச்சன்-தமிழ்ச்செல்வன் காலத்தில் மட்டும் அல்ல. கு.அழகிரிசாமி-கி.ராஜநாராயணன் கடிதங்களில்கூட ருஷ்ய மொழியாக்கங்கள் பற்றிய விவாதம் இருந்துகொண்டே இருப்பதைக் காணலாம்


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

பூமணி- எழுத்தறிதல்
பூமணி- உறவுகள்
பூமணி- மண்ணும் மனிதர்களும்
பூமணியின் வழியில்
விஷ்ணுபுரம் விருது விழாவில் பூமணி உரை
பூமணியின் நாவல்கள்
பூமணியை ருசித்தல்-கடிதம்
சிறுகதைகளும் படிமங்களும்
பூமணியின் சிறுகதைகள்
அள்ளக் கிடைக்காத அம்பாரம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 28, 2011 10:30

இலட்சியவாதத்தின் நிழலில்…

தொடர்ச்சியாக நீண்ட பயணங்கள். சொல்லப்போனால் நான் டிசம்பர் பதினாறாம் தேதி வீட்டைவிட்டுக்கிளம்பியபின் தொடர்ந்து பயணத்திலேயே இருக்கிறேன். நான் எழுதும் மணிரத்னத்தின் படம் 20 ஆம் தேதி வாக்கில் படப்பிடிப்பு தொடங்கப்போகிறது. நான் எழுதும் சீனு ராமசாமியின் படமும் கிட்டத்தட்ட அதே நேரத்தில் ஆரம்பமாகிறது. அந்நேரத்தில் நான் இந்தியப்பயணத்தில் இருப்பேன். ஆகவே எல்லாவேலைகளையும் முடித்தாகவேண்டியிருந்தது.


[image error]


சென்னைக்கு இருபத்திரண்டாம் தேதி சென்று சேர்ந்தேன். இருபத்து மூன்றாம் தேதி தமிழ்மரபு அறக்கட்டளை உரை. அங்கே இங்கே அத்து அலைந்து இருபத்தேழாம்தேதி காலை ஈரோடு வந்தேன். பொதுவாக நான் ரயில்பயணங்களில் மிக நன்றாகத் தூங்கிவிடுவேன். ஆனால் விடியற்காலையில் இறங்கவேண்டும் என்றால் என்னதான் முன்னேற்பாடுகள் செய்திருந்தாலும் என்னால் தூங்கமுடியாது. சிலமுறை இறங்குமிடம் தாண்டிச்சென்று இறங்கி அவஸ்தைப்பட்டதன் விளைவு. ரயிலில் உதவியாளரிடம் என்னை எழுப்பிவிடும்படிச் சொல்லிக் கைபேசியில் எழுப்பியை அமைத்து வைத்தும்கூட என்னால் தூங்கமுடியவில்லை.


ஈரோட்டில் கடும்குளிரில் அதிகாலையில் விஜயராகவன் ரயில்நிலையம் வந்திருந்தார். விஜயராகவனின் வீட்டுக்குச்சென்றோம். அவரது பெரிய நாய் ஜில்லி [ லாப்ரடார் ராட்வீலர் கலவை. புத்தரையும் அலக்ஸாண்டரையும் கலந்தது போல ஒரு பரிசோதனை முயற்சி. அலக்ஸாண்டர் தோற்றத்தில் மட்டும் எஞ்சினார்] என்னை அடையாளம் கண்டுகொண்டு கம்பிக்கதவு வழியாகக் கைநீட்டி வரவேற்றது. அவரது வீட்டில் இரண்டுமணிநேரம் தூங்கினேன்.


மோகனரங்கன் வந்தபோது விழித்துக்கொண்டேன். கொஞ்ச நேரத்தில் கிருஷ்ணன் வழக்கறிஞர் உடையில் வந்தார். பேசிக்கொண்டிருந்தபின் கிருஷ்ணன் சிறியவேலையாக நீதிமன்றம் சென்று வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார். விஜயராகவன் இல்லத்தில் காலைச்சாப்பாடு. நண்பர்கள் எல்லாரும் வருவதற்குப் பன்னிரண்டு மணி ஆகும் என்றார்கள். அதன்பின் சேர்ந்து விஜயராகவனின் காரில் அவினாசி அருகே உள்ள காதுகேளாதோர் பள்ளிக்குச் செல்வதாக ஏற்பாடு.


நண்பர்கள் வர வர விஜயராகவன் வீட்டுமுன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஈரோட்டில் ஒருவரை ஒருவர் சந்தித்ததுமே மாறிமாறி 'வாரி'க்கொள்ளுதல் வழக்கம். இலக்கிய விவாதம் அதன்பின்னர்தான். சிரிப்பு இல்லாமல் ஓர் இலக்கிய- தத்துவ விவாதம் நடந்தால் அது விவாதமே அல்ல என்பதுதான் என்னுடைய எண்ணம். நித்யா அதை அடிக்கடி வலியுறுத்திச் சொல்வதுண்டு.


விஜயராகவன் கேட்டார், வாழ்க்கையில் தொழில்செய்கிறோம். அதில் வெற்றி. நேர்மையாகத்தான் இருந்தோம் என்ற எண்ணமும் உள்ளது. குடும்ப வாழ்க்கையும் நிறைவுதான். ஓரளவு கலை இலக்கிய ஆர்வமும் உள்ளது. வாசிக்கிறோம், இசைகேட்கிறோம்,பயணம் செய்கிறோம். அவ்வளவுக்கு அப்பாலும் ஓர் நிறைவின்மை வாழ்க்கையில் எஞ்சியிருக்கிறதே ஏன் என்று.


நான் சொன்னேன். அந்த நிறைவின்மையே எதிர்காலத்தை நோக்கி இட்டுச்செல்கிறது. நிறைவின்மை இருவகை. இனிய நிறைவின்மை நம் வாழ்க்கையின் சாதனைதான். அது மேலும் மகிழ்ச்சியை நோக்கியே கொண்டு செல்கிறது. கசக்கும் நிறைவின்மை இருக்கும் என்றால் வாழ்க்கை வாழப்படவில்லை என்றே பொருள்.அதைப்பற்றிக் கொஞ்சம் தீவிரமாக உடனே வேடிக்கையாக என நிறையப் பேசிக்கொண்டிருந்தோம்.



இந்தியப்பயணத்துக்கான மனநிலை வந்துவிட்டிருந்தது. காவல்கோட்டத்துக்கு சாகித்ய அக்காதமி கிடைத்ததனால் வசந்தகுமார் வரவில்லை. நாவல் 3000 பிரதி மேலதிகமாக அச்சிடப்பட்டிருப்பதாகத் தகவல். அவருக்கு பதில் காத்திருப்போர் பட்டியலில் அடுத்து இருந்த நண்பர் திருப்பூர் ராஜமாணிக்கம் [ கட்டுமானப் பொறியியலாளர்] அந்த இடத்தைப்பெற்றார். ஒருபயணம், சென்ற பயணம் பற்றிய நினைவுகளைக் கிளறிவிட்டுவிடுகிறது. அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.


காரில் திருப்பூர் சென்றோம். அங்கே ராஜமாணிக்கம் அவர்களின் இல்லத்தில் சாப்பிட்டோம். நான் சமீபமாக உணவைக் குறைத்துக்கொள்ள முயன்றுகொண்டிருக்கிறேன். ஆனால் நல்ல விருந்துகள் அந்த சுயக்கட்டுப்பாட்டைத் தகர்க்கின்றன. காலையில் விஜராகவன் வீட்டுச்சாப்பாடும் சரி, மதியம் ராஜமாணிக்கம் வீட்டுச்சாப்பாடும் சரி, அற்புதமானவை. வழக்கறிஞர் பார்த்திபனும் அவர் நண்பரும் ராஜமாணிக்கம் வீட்டுக்கு வந்திருந்தார்கள்.


சாப்பிட்டபின் அவினாசி வழியாகக் கோதப்பாளையம் கிராமம் சென்றோம். திருப்பூர் காதுகேளாதோர் பள்ளியின் கிளையாக அங்கு ஓர் உண்டு-உறைவிடப்பள்ளி உள்ளது. நூற்றியிருபது காதுகேளாத பிள்ளைகள் படிக்கிறார்கள். திருப்பூர் காதுகேளாதோர் பள்ளியின் நிறுவனரான முருகசாமி அய்யா அவர்கள் இதையும் நடத்துகிறார். குக்கூ அமைப்பை நிகழ்த்திவரும் சமூகசேவகர் சிவராஜ் அவர்கள் இயல்வாகை என்ற அமைப்பை நிறுவி மரம்நடும் செயலை செய்துவருகிறார். அவரும் காதுகேளாதோர் பள்ளியும் இணைந்து அளிக்கும் விருது அது.


இரு காதுகேளாத குழந்தைகள் வந்து சிரித்தபடியே ஒலியும் சைகையுமாக எங்களை வரவேற்றன. அழகிய குழந்தைகள். மற்ற பிள்ளைகளுக்கிருக்கும் கூச்சம், ஒதுக்கம் ஆகியவற்றுக்குப் பதிலாகப் பிறரிடம் பேச பழக அதீத ஆர்வம் கொண்ட குழந்தைகளாக இருந்தன.நாங்கள் செல்லும்போது விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. சிவராஜ் தட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தார். அரங்கசாமி கோவையில் இருந்து வந்துசேர்ந்தார்.


இயல்வாகை அமைப்பு நடப்போகும் மரங்களுக்கான நாற்றுப்பண்ணையை, அவர்களின் நண்பரும் சமூகசேவகருமான டேவிட் திறந்து வைத்தார். கிருஷ்ணன் முதல் விதை ஊன்றினார். அக்குழந்தைகள் அனைவருக்குமே சிவராஜ் யானைடாக்டர் கதையை சொல்லியிருந்தார். பெரும்பாலான குழந்தைகள் யானைடாக்டர் கதையை வாசித்துமிருந்தன. சின்னக்குழந்தைகள் என்னையே யானைடாக்டர் என நினைத்தன. ஒரு சின்னப்பெண் சொன்னதை ஆசிரியை சித்ரா மொழியாக்கம்செய்தபோது அது அப்படித்தான் சொன்னது. சித்ராவின் சற்றும் சலிக்காத ஊக்கமும் ஆர்வமும் ஆச்சரியமளிப்பது. ஆசிரியை அழகேஸ்வரியை ஏற்கனவே நாஞ்சில்நாடன் இல்லத்தில் சந்தித்திருந்தேன். அர்ப்பணிப்புள்ள சேவகி.


யானைடாக்டர் கதையை வாசித்து அதைப்பற்றி வரைந்த ஓவியங்களின் கண்காட்சி ஒன்றிருந்தது. கிட்டத்தட்ட ஐம்பது நீர்வண்ண ஓவியங்களும் சில வண்ணப்பென்சில் ஓவியங்களும். நான் உயர்நிலைப்பள்ளித் தரத்துக்குக் கீழே இந்த அளவுக்கு படைப்பூக்கம் கொண்ட ஓவியங்களைக் கண்டதே இல்லை. பல பள்ளிகளில் ஓவியங்களைக் கண்டிருக்கிறேன், அவற்றில் திறமை தெரியும். ஆனால் படைப்பூக்கம் இருக்காது. ஓவியக்கலை அளிக்கும் 'கண்ணால்மட்டுமே காணப்பெறும் தனித்தன்மை' இருக்காது. எண்ணங்களும் உணர்ச்சிகளும் கலந்த காட்சிவெளி இருக்காது. அவை இந்த ஓவியங்களில் இருந்தன


[யானைடாக்டருக்குக் குழந்தைகள் வரைந்த படங்களில் ஒன்று]


பலகாட்சிகளில் உள்ள கற்பனை பிரமிக்க வைத்தது. மரத்தில்சாய்ந்து நின்று சாகும் யானை, வெள்ளெலும்பாக மாறிக் கிடக்கும் யானை, அறுவை சிகிழ்ச்சை செய்யப் படுத்திருக்கும் யானை, புல்வெளியில் குட்டியுடன் நடந்துசெல்லும் யானைக்கூட்டம், யானைடாக்டருக்கு வாழ்த்துரைக்கும் யானைகள், கோயில்முன் நின்று ஆசி கொடுக்கும்போது தன் காட்டுவாழ்க்கையைக் கனவுகாணும் யானை, பக்கெட்டில் குளித்தபடி காட்டுத்தடாகத்தைக் கனவுகாணும் யானை, புழுவே குழந்தையாக ஆகும் நிலை என வகைவகையான கற்பனைகள்! ஒரு சின்ன துளி சோப்பு அண்டாநிறைய நுரையாக ஆகி வண்ணம் பொலிவது போல என் கதை பிரம்மாண்டமானதாக ஆகிவிட்டிருந்தது. உண்மையில் ஓர் எழுத்தாளன் எதிர்பார்க்கக்கூடிய பெரும் பரிசு இதுவே!


பிள்ளைகள் எடுத்த ஓவியங்கள் ஒரு தனிக் கண்காட்சியாக இருந்தன. சின்னத் தீப்பெட்டியில் ஊசியால் துளைபோட்டு அவர்களே செய்த லென்ஸ் இல்லாத காமிராக்களில் ஃபிலிமைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட அருவப் புகைப்படங்களில் உள்ள கற்பனைவளம் பிரமிப்பூட்டியது. குறிப்பாக இந்தக்குழந்தைகளுக்கு நிறம் பற்றிய அபாரமான கவ்னிப்பு உள்ளது. சாதாரணக் குழந்தைகள் நிறங்களைத் தனியாக கவனிப்பதில்லை, அவற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றன என்று இந்த ஓவியங்களையும் படங்களையும் பார்க்கையில் தோன்றியது.


இக்குழந்தைகளுக்குப் புகைப்படக்கலையைக் கற்பித்த இருவரையும் வினோத் என்ற நண்பரையும் சந்தித்தேன். சமீபத்தில் ஆங்கோர்வாட் சென்றிருந்ததாகச் சொன்னார். அவர் ஹம்பிக்கும் அவசியம் சென்றாகவேண்டும் என்று சொன்னேன். சிவராஜுடன் இணைந்து பணியாற்றும் நண்பர் ஸ்டாலின் வந்திருந்தார். தொடர்ந்து பல நண்பர்களைச் சந்தித்தேன். எல்லாருமே இலட்சியவாதத்தையே வாழ்க்கையாகக்கொண்டவர்கள். அவர்கள் வாழ்க்கையின் இலக்கும் மகிழ்ச்சியும் சேவை. ஒருவகையில் நாம் வாழும் வாழ்க்கைக்கு அப்பால் வேறு எங்கோ இருப்பவர்கள்.


ஈரோட்டில் இருந்து சூழியல் மற்றும் ஏழைகளுக்கான மருத்துவத்தில் பணிபுரியும் ஜீவானாந்தம் , மலைவாழ்மக்களுக்காகக் கல்விப்பணி புரியும் வி.பி.குணசேகரன் கோவை ரவீந்திரன் எனப் பலர் வந்திருந்தார்கள். இலட்சியவாதம் அவர்களை எல்லாம் ஒரே இடத்தை நோக்கிக் குவிக்கிறது போலும். திருப்பூரில் இருந்து எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் வந்திருந்தார்.


அறம் வரிசைக் கதைகள் வெளிவரும்போது பலர் 'இப்போது அத்தகைய மனிதர்கள் இல்லையே' என்ற வகையில் எனக்கு எழுதியிருந்தார்கள். ஒவ்வொருநாளும் சுயநல லௌகீகத்திலேயே மூழ்கியிருக்கும் வாழ்க்கையில் அவர்கள் நம் கண்களுக்குப் படுவதில்லை என்பதே உண்மை என எழுதினேன். நமக்குத்தெரிவதில்லை என்பது நம் பார்வையின்மை மட்டுமே. நமக்குத் தெரிவதில்லை என்பதனாலேயே அந்த உலகம் இல்லை என்று நாம் கற்பனைசெய்துகொள்கிறோம்.அதைவிட அப்படி நம்புவது நம்மை நம்முடைய எளிய சுயநல லௌகீகத்தில் குற்றவுணர்ச்சி இல்லாமல் மூழ்கி வாழ அனுமதிக்கிறது. அவ்வுலகை நிராகரிப்பதென்பது நம்முடைய வாழ்க்கைக்கான தேவையாக ஆகிறது.


அறம் வரிசைக் கதைகள் வெளிவந்தபோது அவை முன்வைக்கும் இலட்சியவாதத்தை மொட்டை அறிவுஜீவித்தனத்தால் நிராகரித்தும் கிண்டலடித்தும் எழுதிய பலரை என் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். நான் அவர்களை வழக்கம்போல ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. ஏனென்றால் அவர்களில் பலரின் தனிவாழ்க்கையை நான் அறிவேன். சல்லித்தனமான வாழ்க்கையில் உழலும் சல்லித்தனமான மனிதர்கள். அந்த சல்லித்தனம் அவர்களுக்கே அந்தரங்கமாகத் தெரியவும் செய்யும். அந்தச்சிறுமையை அவர்களாலேயே தாங்கிக்கொள்ளமுடியாது. அந்த வாழ்க்கையை, அந்த சுயத்தை அவர்கள் நியாயப்படுத்திக்கொள்ளவேண்டும், இல்லையேல் வாழமுடியாது. ஆகவே அதற்குமேல் அதைத்தாண்டிச்செல்ல ஒரே வழி அதற்குமேலுள்ள எல்லாவற்றையும் நிராகரிப்பதே. அது ஒரு சல்லித்தனமான வழி.


ஆனால் நம்மைச்சுற்றி வாழும் நம்மைவிட மேலான மனிதர்களை, அருஞ்செயல்களைச் செய்பவர்களை சந்திப்பதும் அவர்களை அங்கீகரிப்பதும் சாதாரண விஷயம் அல்ல. அது நம்மை இடைவிடாது தகர்த்தபடி இருக்கிறது. நம்மைக் குற்றவுணர்ச்சி கொள்ளவும் நிம்மதி இழக்கவும் வைக்கிறது. ஆனால் அதனூடாகவே நாம் நம்மைப்பற்றி மேலும் மேலும் நிறைவுகொள்ளும் வாழ்க்கையை நோக்கிச் செல்கிறோம்.



[ குக்கூ சிவராஜ்]


இன்று என் வாசகர்களில் பெரும்பாலானவர்கள் முப்பது வயதுக்குள் உள்ளவர்கள். இன்னும் இருபது வருடம் வாழ்ந்தவன் என்றவகையில், சில தீவிரமான அனுபவங்களின் வழியாகச்சென்றவன் என்றமுறையில், சிலவற்றை கற்று பயணம் செய்து அறிந்து எழுதியவன் என்ற வகையில் நான் சொல்லக்கூடிய ஒன்றுண்டு. வாழ்க்கை ஒன்றும் அதிகநீளம் உள்ளதல்ல. அதிலும் இன்றுள்ள அவசரவாழ்க்கையில் என்ன ஏது என நிதானிப்பதற்குள் பாதிவாழ்க்கை சென்றிருக்கும்.


இவ்வாழ்க்கையில் பின்னால் திரும்பிப்பார்க்கையில் சென்று போன நம் வாழ்க்கை நமக்கே நிறைவை அளிக்கவேண்டும். ஆம்,நான் வாழ்ந்திருக்கிறேன் என தோன்றவேண்டும். அதற்கு அப்பால் வாழ்க்கைக்கு என இலக்கோ பொருளோ இல்லை. இருக்கலாம், அதை நாம் ஒருபோதும் அறிந்துகொள்ளமுடியாது. இந்த பிரபஞ்சத்தின், இந்த உலகத்தின் ஒட்டுமொத்தப்பெரும்போக்குடன் சம்பந்தப்பட்டது அது. அதில் நாம் துளியினும் துளி. அதில் நம் பங்களிப்பு என்பதை நம்மால் ஒருபோதும் நம் அறிவைக்கொண்டு அறிந்துவிடமுடியாது.


அப்படித்தோன்றவேண்டுமென்றால் உண்மையிலேயே நமக்கு எது மகிழ்ச்சியை அளிக்கிறதோ அதை நாம் செய்திருக்கவேண்டும். சாதாரணமாக நாம் வெற்றி, உடைமை இரண்டையுமே மகிழ்ச்சி என எண்ண பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். இரண்டுக்கும்தான் கடுமையாக உழைக்கிறோம், பெரும்பகுதி வாழ்க்கையை செலவிடுகிறோம். அவை கண்டிப்பாக முக்கியமானவை. ஆனால் அவை மகிழ்ச்சியை அளிப்பதில்லை என்பதை நம்முடைய ஒவ்வொரு உடைமையை நாம் அடையும்போதும், ஒவ்வொரு வெற்றியை நாம் சந்திக்கும்போதும் அறிய நேரிடுகிறது.


உண்மையான மகிழ்ச்சி வேறெங்கோ இருக்கிறது. கலையில், இலக்கியத்தில், தொழில்நுட்பத்தில், சிந்தனையில், சேவையில், சாகசத்தில் என எங்கெங்கோ மனிதர்கள் அதைக் கண்டுகொள்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக இப்படிச் சொல்லலாம். எங்கே ஒருவனின் தனித்தன்மை, அதாவது அவனுக்கே உரிய அக ஆற்றல், சிறப்பாக வெளிப்பாடு கொள்கிறதோ அங்கேதான் உண்மையான மகிழ்ச்சி உள்ளது. ஆற்றல் முழுமையாக செயலாக மாறுமிடத்தையே வாழ்க்கையின்பம் என்று சொல்கிறோம். ஆனால் அதைக் கொஞ்சமும் செயலாக ஆக்காமல் அந்த முழுஆற்றலையும் சும்மா உணர்ந்தபடி அமர்ந்திருத்தல் யோகம். அது வேறு இன்பம். அது கடல். வாழ்க்கையின்பம் அதன் அலை.


உடைமையும் வெற்றியும் லௌகீக வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. மிகச்சில இலட்சியவாதிகளால் மட்டுமே அவற்றை துறந்து எது அவர்களின் இன்பமோ அவற்றை மட்டுமே நம்பி வாழமுடியும். பிறரால் உடைமை வெற்றி இரண்டுக்கும் மேலே காலூன்றி நின்றபடித்தான் தனக்கான மகிழ்ச்சியை தேடமுடியும். ஆனால் உடைமை வெற்றி ஆகியவற்றில் ஓர் எல்லையை வகுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. அது ஒரு பக்கம் மட்டுமே என்று உணரவேண்டியிருக்கிறது.


இந்த சமநிலையை அடையாதவர்கள், ஏதோ ஒருவகையில் உண்மையான மகிழ்ச்சியை வாழ்க்கையில் தொலைத்து அர்த்தமற்றவற்றின் பின்னால் ஓடிக்களைத்தவர்கள், ஐம்பதுக்குப்பின் கசப்பும் வெறுப்பும் குரோதமும் நிறைந்தவர்களாக ஆகிறார்கள். அவர்களே பெரும்பாலும் இலட்சியவாதத்தை நிராகரிக்கவும் கிண்டல்செய்யவும் முன்னிற்கிறார்கள். இலட்சியவாதம் என்றால் வேறொன்றுமில்லை, ஒருவர் தனக்கு உண்மையான நிறைவை அளிக்கும் விஷயங்களைச் செய்வதும் பிறவற்றைச் செய்யாமலிருப்பதும்தான். ஓர் இலட்சியவாதி தியாகம் செய்கிறான் என்றால் அதில்தான் அவனுடைய முழுமையான பேருவகை இருக்கிறது, நிறைவு இருக்கிறது என்பதனால்தான்.



[விருது படம்]


நம்மைச்சுற்றி இலட்சியவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள்தான் நாம் நிற்கும் நிலத்தை தாங்கிக்கொண்டிருக்கிறார்கள். நாம் வாழும் வாழ்க்கையை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள்தான் நம் சமூகத்தில் நம்பிக்கையை, கருணையை, நீதியுணர்ச்சியை, இலட்சியக்கனவை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை நம்பித்தான் நாம் 'இது நியாயமா?' என்று கேட்கிறோம். அவர்களை நம்பித்தான் நம் பிள்ளைகளை தனியாக பள்ளிக்கூடம் அனுப்புகிறோம்.


பிற அனைவரையும் விட மானுடத்தீமையின் உச்சங்கள் எனக்குத்தெரியும். என் எழுத்தின் பெரும்பகுதியில் அவற்றைத்தான் சித்தரித்துமிருக்கிறேன். தமிழில் என்னைவிட தீவிரமாக அவற்றைச் சித்தரித்த எவருமில்லை என்றே நினைக்கிறேன். ஆனாலும் மனிதன் அந்த தீமைகளால் ஆனவன் என்று சொல்லமாட்டேன். அவனுள் உள்ள இலட்சியவாதம், அதன் நான் அறம் என்பேன், அவனுடைய பரிணாமத்தில் அவன் மெல்லமெல்ல உருவாக்கிக்கொண்ட ஒன்று. பல லட்சம் வழுக்களால், பிழைகளால் அவன் கற்றுக்கொண்டது. மானுடப்பரிணாம வரலாற்றில் இன்றுவரை அவன் அடைந்த உச்சகணம் என்பது இக்கணமே. இங்கே அவன் அந்த இலட்சியவாதத்தைப்பற்றிக்கொண்டுதான் ஏறி வந்திருக்கிறான். பலகோடிமுறை சறுக்கினாலும்கூட.


அறம் வரிசைக் கதைகள் அந்த இலட்சியவாதிகளில் சிலரைப்பற்றிய கதைகள். என்னைச்சுற்றி நான் என்றுமே அவர்களைப்போன்ற மகத்தான மனிதர்களை, மாபெரும் இலட்சியவாதிகளை கண்டுவந்திருக்கிறேன். அவர்களே என் ஞானத்தின் ஊற்று. என் நம்பிக்கையின் பற்றுகோடு. இன்னும் சிலநூறு இலட்சியவாதிகளைப்பற்றி என்னால் எழுதமுடியலாம்.


அறம் கதைத்தொகுதிக்கு அளிக்கப்பட்ட இரண்டாவது விருது இயல்வாகை -குக்கூ அமைப்பின் விருது. அது எந்த இலட்சியவாதத்தை பேசுகிறதோ அதையே வாழ்க்கையாகக் கொண்ட மனிதர்களால் அளிக்கப்படுவது. அந்நூலின் கதைநாயகர்களே வந்து விருதளிப்பது போன்றது.


பெரியவர் முருகசாமி அவர்களிடமிருந்து நான் முகம் விருதைப் பெற்றுக்கொண்டேன். குக்கூ சிவராஜ் உரையாற்றினார். அதன் பின் நான் சிறிய உரை ஆற்றினேன். மகாபாரதத்தில் சொர்க்கம் செல்லும் பாண்டவர்களின் கதை. தருமன் தன்னை அதுகாறும் பிந்தொடர்ந்து வந்த நாயை சேர்க்காமல் மோட்சவிமானத்தில் ஏறுவதில்லை என்கிறான். என் தர்மத்தை கைவிட்டு நான் சொர்க்கம் செல்லவேண்டுமென்றால் எனக்கு அது தேவையில்லை என்கிறான். தன் நலனுக்காக தர்மத்தை கைவிடாத மனிதர்களின் கதைகளே அறம் என்று சொன்னேன்.


குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. வெறுமே ஓசையின் அதிர்வை மட்டுமே கொண்டு தாளம் தவறாமல் அவர்கள் ஆடிய நடனத்தின் கச்சித்தத்தன்மை பிரமிப்பூட்டியது. நண்பர்கள் அனைவருக்குமே ஓர் அற்புதமான அனுபவம் அது .


இரவு ஏழரை மணிக்கு விடைபெற்றுக்கொண்டோம். எனக்கு பத்தரை மணிக்கு ஈரோட்டில் இருந்து ரயில்.செல்லும்போது திருப்பூரில் இருது நண்பர் சந்திரகுமார் கூப்பிட்டார். உணர்ச்சிகரமான நிலையில் இருந்தார் 'ஜெ, இனிமேல் அறம் நூலுக்கு ஒரு விருதையும் பெற்றுக்கொள்ளாதீர்கள்…இதற்குமேலே யார் கொடுக்கப்போகிறார்கள்' என்றார்.



விருது புகைப்படங்கள்


குழந்தைகளின் படங்கள் புகைப்படங்கள்


குக்கூ குழந்தைகள் வெளி


தொடர்புக்கு :9965689020, 9942118080 , 9994846491

தொடர்புடைய பதிவுகள்

ஊமைச்செந்நாய்- ஒருகடிதம்
நூறுநாற்காலிகளும் நானும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 28, 2011 10:30

தேவதச்சனுக்கு விளக்கு விருது

தேவதச்சனுக்கு இரு முகம். ஒன்று தமிழின் முக்கியமான முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர். இன்னொன்று, நவீனத் தமிழிலக்கியத்தைக் கட்டமைத்த இலக்கிய மையங்களில் ஒன்று அவர். மிகச்சிறந்த உரையாடல்காரர். தேவதச்சனுக்கு இவ்வருடத்தைய விளக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.நவீனக்கவிதையின் வாசகர்கள் அனைவருக்கும் மனநிறைவூட்டும் விருது.


[image error]


இந்த இந்தியப்பயணம் இல்லையேல் தேவதச்சனுக்கு ஒரு விழா உடனடியாக ஏற்பாடு செய்திருப்பேன். வேறுவழியில்லை. ஆகவே மார்ச் மாதம் தேவதச்சனை வாசகர்கள் சந்திக்கவும் விவாதிக்கவும் வாழ்த்தவுமாக ஒரு சந்திப்பு நிகழ்ச்சியை நிகழ்த்தலாமென நினைக்கிறேன்.சென்னையில் எனத் திட்டம்.நண்பர்களின் ஒத்துழைப்பை ஒட்டிச் செய்யலாம்


தேவதச்சனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், வணக்கங்கள்

தொடர்புடைய பதிவுகள்

யுவன் வாசிப்பரங்கு
விக்கிரமாதித்யனுக்கு விளக்கு
விக்கிக்கு விளக்கு
எஸ்.வைத்தீஸ்வரனுக்கு விளக்கு விருது
ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விளக்கு விருது விழா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 28, 2011 08:14

December 27, 2011

சீனு-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார்,


கடலூர் சீனுவின் எழுத்து பற்றி நீங்கள் கூறியது உண்மை.'அன்பை வாங்கிக் கொள்ளுதல்' , கடிதத்தில் நான் பெற்ற மன எழுச்சிமூலம் அதை உணர்ந்தேன். சிங்கங்களைப் பற்றிய டாகுமெண்டரி குறித்துஅவர் எழுதிய பத்தி அருமை.


சீனுவுடைய பதிவுகளைப் படிக்கும்போது உணர்சிகளும் பின்னர் காட்சிகளும் வருகின்றன ஆனால் வண்ணங்கள் இல்லாமல். ஓராயிரம் வயலின்களின் இசை, அதை சரிக்கட்டிவிடுகிறது.


அன்புடன்

குரு, லாகோஸ் , நைஜீரியா


அன்புள்ள குருமூர்த்தி


எப்போதும் எழுத்துக்களுக்கு ஆதார விசையாக இருப்பது உண்மையான மன எழுச்சி. உத்தி , நடை எல்லாமே அதன் வழியாகவே உருவாகின்றன. நியாயப்படுத்தப்படுகின்றன. அதுவே இயல்பானது.


கடலூர் சீனுவின் நேர்மையான உணர்ச்சிகளே அக்கடிதங்களின் பலம்


ஜெ


அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,


நான் கடலூர் சீனு நண்பர் கண்ணதாசன். சீனு அடிக்கடி சொல்வார் எனக்கு ஜெயமோகன் நல்லா தெரியும் என்று. எனக்கு எப்போதும் சிறிது சந்தேகம் இருந்து கொண்டு இருந்தது. நான் நிரூபிக்கிறேன் என்று நாட்டியாஞ்சலி விழாவிற்கு அழைத்துக் கொண்டு வந்தார். அப்போது நான் உங்களை சந்திக்க முடியவில்லை.


ஆனால் சீனுவை நம்பினேன். சரி பையன் ஏதோ ஒண்ணு பண்றான் என்று நினைத்தேன். ஆனால் உங்களுடைய அன்புள்ள ஜெயமோகன் முன்னுரை படித்த பிறகுதான் தெரியுது நான் ஒரு நல்ல திறமைசாலியிடம் நட்பு கொண்டிருக்கிறேன் என்று. அவர் சொல்வார் நான் ஜெயமோகன் கூட அங்க போனேன் இங்க போனேன் என்று. நான் சும்மா கதை விடாதப்பா,அவர் இருக்கிற பிஸிக்கு உன்ன எங்க பார்க்கப் போறார்னு சொல்வேன். ஆனால் அவர் உங்களிடம் தினமும் பேசிக்கொண்டிருக்கிறார் என்று நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது.


நான் உங்கள் தளத்தைப் பார்ப்பேன் எனக்கு இலக்கியம் புரியாது. புரியாது என்று சொல்வதை விட எனக்குத் தெரியாது. சீனு தான் சொன்னார் நான் எழுதிய கடிதங்களை ஜெயமோகன் சார் புத்தகமாகப் போடுகிறார் அதற்கு முன்னுரை எழுதியிருக்கார் என்று. அதைப் படித்த பிறகுதான் தெரிந்தது உங்கள் இருவருக்குமான நட்பு. நான் சீனுவின் நண்பன் என்று சொல்வதற்குப் பெருமைப்படுகிறேன் பிழை இருந்தால் மன்னிக்கவும்.

நன்றி


கண்ணதாசன்


அன்புள்ள கண்ணதாசன்


உங்கள் தந்தைக்கிருந்த இலக்கிய ஈடுபாட்டின் சாட்சியமாக இருக்கிறீர்கள். இலக்கியம் புரிவதற்குப் பெரிய தகுதி என ஏதுமில்லை. அடிப்படை மொழியறிவு. வாசித்தவற்றை சொந்த வாழ்க்கையுடன் எங்கோ ஓர் இடத்தில் கற்பனைசெய்து இணைத்துக்கொள்ளும் தன்மை இரண்டும் இருந்தால் போதும். ஓராண்டு தொடர்ந்து வாசிக்கும் எவருக்கும் இலக்கியம் திறந்துகொள்ளும்


நவம்பரில் கடலூர் சீனு வீட்டுக்கு வந்திருந்தேன். மறுபடி வரும்போது உங்களையும் சந்திக்கிறேன்


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

அன்பை வாங்கிக்கொள்ளுதல்…[கடலூர் சீனு]
அன்புள்ள ஜெயமோகன் — ஒரு நூல்
ஓர் இணைமனம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2011 19:19

கூடங்குளமும் கலாமும்

அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு,


இந்த மாதக் காலச்சுவடு இதழில் அப்துல் கலாமைப் பற்றிக் கொஞ்சம் தரக்குறைவாகவே எழுதியிருந்தார்கள். காரணம் கூடங்குளம். நான் பல கட்டுரைகளைப் படித்தவரையில் இந்த அணு உலை பலவிதமான பாதுகாப்பான ஏற்பாடுகளுடனேயே கட்டப்பட்டுள்ளதாகப் படுகிறது. இந்திய அரசியலின் ஊழல், கட்டுரை எழுத்தாளனின் உள்நோக்கங்கள் என்ற காரணங்களால் நாம் சந்தேகப்பட்டாலும் ஒரு வகையில் இந்த அணு உலை நமக்கு நல்லதைத்தான் தரும் என்று நம்பத்தோன்றுகிறது. அதே வேளையில் இங்கு சமய அரசியல் காரணங்கள் தான் இந்தப் போராட்டங்களுக்கு முக்கிய பின்புலமாக இருக்கின்றது என்றும் நேரடியாகப் பார்த்த பல நிருபர்கள் கூறுகிறார்கள்.


அருகில் உள்ள நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?


கோவை விழா சிறப்படைய வாழ்த்துக்கள். திருச்சி வந்தால் சற்று முன்பே கூறவும். ஒரு வாசகர் வட்டம் இங்கும் தேவை.


அன்புடன்

திருச்சி வே. விஜயகிருஷ்ணன்



அன்புள்ள வே.விஜயகிருஷ்ணன்,


நான் கூடங்குளம் பற்றிய என்னுடைய ஐயங்களையும் எதிர்ப்புகளையும்  முன்னரே எழுதிவிட்டேன்.


ஒன்று, நம்முடைய அணு உலைகள் இதுவரை உருவாக்கிய மின்சாரத்தையும் அவற்றுக்கு நாம் இன்றுவரை செலவழித்த பணத்தையும் வைத்துப்பார்க்கையில் இந்த உலைகள் சாதகமான பலன்களை அளிக்கும் என நான் நினைக்கவில்லை.


இரண்டு, இந்த அணு உலைகள் நம்முடைய தொழில்நுட்பம் அல்ல. அவை நம் மீது சுமத்தப்படுகின்றன. ஆகவே அவற்றால் நமக்கு ஒட்டுமொத்தமாக இழப்புகளே இருக்கும் என நினைக்கிறேன்.


மூன்று, அணு உலை தொடர்பான விஷயங்களில் இருக்கும் மூடிய தன்மை. அங்கே ஊழல்களை உருவாக்கக்கூடும் என்று படுகிறது. இந்த ஊழல் காரணமாகவே இதன் பாதுகாப்பு சம்பந்தமான ஐயம் நியாயமானதே எனத் தோன்றுகிறது.


நான்கு, இந்தியா பல்வேறு வகையான மாற்று எரிபொருள் சாத்தியங்களை ஆராய வாய்ப்புள்ளது. ஆனால் அந்த ஆராய்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் நிதி செலவழிக்கப்படுவதில்லை.மொத்த நிதியும் அணு உலை போன்ற பெருந்திட்டங்களுக்காக வீணடிக்கப்படுகிறது.


ஆனால் கூடங்குளம் விவகாரம் மெல்லமெல்ல இன்று இந்திய எதிர்ப்பாளர்களால் கையிலெடுக்கப்பட்டுவிட்டதோ என்ற ஐயத்தை நான் அடைந்திருக்கிறேன். குறிப்பாக முத்துகிருஷ்ணன், அ.மார்க்ஸ் போன்ற விலைபோய்விட்ட அரசியல் பிரச்சாரகர்கள் அதைப் பேசும்போது ஆழமான சஞ்சலம் ஏற்படுகிறது.


இவர்கள் அடிப்படையில் வசைபாடிகள். இவர்களுக்கு சிந்தனை என்பதே அறிமுகமில்லை. அவதூறும் வசையும் மட்டுமே இவர்களின் செயல்பாடுகள். தமிழ்ச்சூழலில் எளிதில் எடுபடுவதும் இதுவே. இவர்கள் சமீபத்தில் கூடங்குளம் பற்றி எழுதிய கட்டுரைகளைத் திரிபுகள்-பொய்கள் என்று மட்டுமே சொல்லமுடியும்.


குறிப்பாக அப்துல் கலாம் பற்றி எழுதியவை. தன் வாழ்நாளை முழுக்க தொழில்நுட்பத்துக்காக அர்ப்பணித்துக்கொண்டவர் அவர். தொழில்நுட்பமே அவரது கடவுள். உலகின் அனைத்துப் பிரச்சினைகளையும் தொழில்நுட்பம் தீர்க்கும் என்றும், தொழில்நுட்பம் மூலம் உருவாகும் பிரச்சினைக்கே கூட தொழில்நுட்பமே தீர்வாகும் என்றும் அவர் நம்புகிறார். அதுவே அவரது செயல்தளம்.


கூடங்குளம் விவகாரத்தில் நவீனத்தொழில்நுட்பத்தின் பிரச்சாரகர் என்றமுறையில் கலாம் முன்வந்து அவரது தரப்பைச் சொன்னது மிக இயல்பானது. தொழில்நுட்பம் மீதான நம்பிக்கையை மக்களிடையே உருவாக்குவதே அவரது வாழ்க்கைப்பணி என்ற முறையில் எப்போதும் சொல்லிவருவதையே இப்போதும் சொல்கிறார்.


காந்திய தரிசனத்தில் நம்பிக்கை கொண்டுள்ள நான் கலாமின் இந்தப் பார்வையை முழுமையாக நிராகரிக்குமிடத்திலேயே இருக்கிறேன். ஆனால் அப்படி ஒரு நிலைப்பாடும் நம்பிக்கையும் ஒருவரிடம் இருக்கக்கூடாதென்று சொல்ல எனக்கு ஏது உரிமை? என் நண்பர்களிலேயே பெரும்பாலானவர்கள் உறுதியாக நவீன அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் ஆதரிக்கக்கூடியவர்கள். அந்த நம்பிக்கையின் பொருட்டு கலாம் கீழ்த்தரமாக வசைபாடப்படுவதை நான் எப்படி எடுத்துக்கொள்வது?


சென்ற இரு மாதங்களில் அப்துல் கலாம் ஒரு மானுட விரோதி, துரோகி, அயோக்கியன், பொய்யன் என்று இவர்களால் வசைபாடப்படுவதைக் காண்கையில் உண்மையில் இவர்களின் அக்கறை கூடங்குளம்தானா என்றே ஐயப்படுகிறேன்.


தமிழகத்தின் வஹாபியர்களுக்கு என்றுமே கலாம் ஒரு துரோகி. இஸ்லாமியப் பெயர்தாங்கி என்று அவர் அவர்களின் இதழ்களில் ஈவிரக்கமில்லாமல் வசைபாடப்படுவதைக் காணலாம். வஹாபியர்களைப் பொறுத்தவரை இஸ்லாமியர்கள் எந்த மொழியையும் சமூகத்தையும் சேர்ந்தவர்களாக இருந்தாலும் உலகளாவிய இஸ்லாமியப் பண்பாடு மட்டுமே கொண்டவர்கள். எந்த மண்ணில் வாழ்ந்தாலும் இஸ்லாமிய சர்வதேசியம் ஒன்றுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள்.


ஆகவே உலகமெங்கும் பிற சமூகத்திடமிருந்து இஸ்லாமியர்களைப் பிரிப்பதே வஹாபியர்களின் நோக்கம். பிறசமூகங்களைப்பற்றிய ஐயங்களையும் வெறுப்புகளையும் கட்டமைப்பதும் பரப்புவதுமே அவர்களின் இலக்கு. இஸ்லாமியர்களுக்கு ஓர் இஸ்லாமிய அரசிலன்றி எந்த அமைப்பிலும் நீதியும் உரிமையும் கிடைக்காது என்ற ஒற்றை வரியைப் பல்வேறு சொற்களில் விதைப்பதே அவர்களின் கருத்தியல் செயல்பாடு. அதற்காகப் பிரச்சாரம் செய்யவே அவர்கள் அ.முத்துகிருஷ்ணன், அ.மார்க்ஸ் போன்ற கூலிப்படைகளைப் பணம் செலவுசெய்து உருவாக்குகிறார்கள்.


அவர்களின் முக்கியமான இலக்காக அப்துல் கலாம் இருப்பது இயல்பே. கலாம் இந்துக்களும் இஸ்லாமியர்களும் சம உரிமையுடன் வாழும் ஒரு நவீன சமூகம் பற்றி பேசுகிறார். இந்து நம்பிக்கைகளை வெறுக்காத, அவமதிக்காத ஒரு சில இஸ்லாமிய அறிவுஜீவிகளே நம்மிடையே உள்ளனர். அவர்களில் ஒருவர் கலாம். அவர்கள் அனைவருமே கலாம் போல வஹாபியர்களால் வசைபாடப்படுகிறார்கள் – இஸ்லாமியக் 'கடமையை' செய்யாத காரணத்துக்காக.


அனைத்துக்கும் மேலாக கலாம் இந்திய தேசியம் மீது பற்று வைத்திருக்கிறார். இந்த நாடு ஒற்றுமையும் மேன்மையும் கொள்ளவேண்டுமெனப் பேசுகிறார். இதன் எதிர்காலத்தை நம்புகிறார். இந்த நாட்டின் கோடிக்கணக்கான மக்களும் அவர்களின் பல்லாயிரமாண்டு பண்பாடும் அநீதியில் மட்டுமே வேரூன்றியவை, ஆகவே அழிந்தாகவேண்டியவை என அவர் சொல்வதில்லை.


ஆகவே அவர் வஹாபியர்களின் முழுமுதல் எதிரியாக இருக்கிறார். அவர்கள் இந்தியா பற்றி இந்திய இஸ்லாமியர்களிடம் உருவாக்கிவரும் எல்லா சித்திரங்களுக்கும் நேர் எதிரான கண்கூடான சாட்சியமாக கலாம் இருக்கிறார். அதனால் அவரை இழிவு செய்ய, அவரது ஆளுமையைப் படுகொலைசெய்ய அவர்கள் முயல்கிறார்கள். வஹாபியர்களின் இந்தத் திட்டத்தை சிரமேற்கொண்டு செய்கிறார்கள் அவர்களின் கூலிப்படையினரான அ.முத்துக்கிருஷ்ணனும் அ.மார்க்ஸும்.


அதற்கு அவர்கள் கூடங்குளத்தைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள் என்றே நான் நினைக்கிறேன். அந்த வலையில் பிற கூடங்குளம் எதிர்ப்பாளர்களும் சிக்கியிருப்பதைக் காணமுடிகிறது. அது மிகமிக மனச்சோர்வூட்டுகிறது.


கூடங்குளம் நம்முடைய மண் மீது நமக்குள்ள உரிமையை, நம் சந்ததிகள் மீது நமக்குள்ள அக்கறையை முன்வைத்து நிகழ்த்தப்படும் மக்கள்போராட்டம். இந்தக் கூலிப்படை வசைபாடிகளை இணைத்துக்கொள்வதனூடாக அதன் நோக்கமும் இலக்கும் தவறிப்போய்விடக்கூடாது.

தொடர்புடைய பதிவுகள்

நிலக்கரியும் அணுசக்தியும்-கடிதம்
அனலும் அணுவும்
கூடங்குளம் இரு கடிதங்கள்
கூடங்குளம்-கடிதம்
கூடங்குளம் அனுபவப்பதிவு
கூடங்குளம் செய்திகள்
ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை
கூடங்குளம் கடிதங்கள்
அணுமின்சாரமின்றி வேறு வழி இல்லையா?
கூடங்குளம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2011 10:30

December 26, 2011

பூமணி- எழுத்தறிதல்

வறண்ட கரிசலில் வாழ்க்கையே பெரும் போராட்டமாகிப் போன சூழலில் பிறந்த பூமணி கல்வி கற்றது ஓர் ஆச்சரியம். இலக்கியக் கல்வி கற்றது இன்னும் பெரிய ஆச்சரியம். இரண்டுமே தற்செயல்கள் அல்ல என்றார் பூமணி. அவர் கல்வி கற்கச் சென்றது அம்மாவின் தளராத பிடிவாதம் காரணமாகத்தான். அவர் கல்விக்குள் செல்வது அம்மாவின் கனவாக இருந்தது. அவரைப் பட்டப்படிப்பு வரை கொண்டு வருவதற்காக அம்மா காடுகளில் ரத்தமும் வியர்வையும் சிந்தியிருக்கிறார். இலக்கிய அறிவு பெற்றதற்கும் அம்மாவே காரணம். பூமணியின் தொட்டில் பருவம் பத்துப் பன்னிரண்டு வயது வரைக்கும் கூட நீடித்த ஒன்று. அம்மாவிடம் கதை கேட்டபடி தொட்டிலில் கண்ணயர்ந்த நாட்களிலேயே பூமணி கதை சொல்லியாக உருவாகிவிட்டிருந்தார். நிலா முற்றங்களில் அம்மா அவரது தலையை இடைவிடாது வருடியபடி பாட்டாகவும் உரையாடலாகவும் வர்ணனைகளாகவும் சொன்ன நூற்றுக்கணக்கான மாய மந்திரக் கதைகள், அனுபவங்கள் அவரைப் பண்படுத்தின. அவரது கற்பனையை வளர்த்தன.



பள்ளிநாட்களிலேயே மேலும் கதை என அவரது பிரக்ஞை தேடியலைய ஆரம்பித்தது பள்ளிக்கூட ஆசிரியத் தம்பதிகள் அவரது ஊரில் குடியிருந்தார்கள். அவர்கள் வீட்டில் கல்கி வாங்குவார்கள். கல்கியின் கல்கி. அதில் வரும் படக்கதைகளில்தான் முதலில் ஈடுபாடு ஏற்பட்டது. பிறகு அந்த ஈடுபாடு வளர்ந்து குழந்தைக் கதைகளை நோக்கிச் சென்றது. பின்னர் கல்கியின் கதைகள். நா.பார்த்தசாரதியின் கதைகள். அகிலனின் கதைகள். அந்த வயதில் கதைகள் அவரை ஓர் அற்புத உலகில் வைத்திருந்தன. கதைகளின் உலகிலேயே அவர் சாதாரணமாக வாழ்ந்தார் என்று கூற வேண்டும். கரிசல் நிலம் ஒரு பெரிய கனவுப்பரப்பாக மாறியது. சொற்களாலான மரங்களும் காடும் வயலும் மலைகளும் வானமும் உருவாகி அவரைச் சூழ்ந்தன. பூமணியின் இளமையைக் கட்டமைத்ததில் அந்த சிற்றூரில் கிடைத்த கல்கி வார இதழ் பெரும்பங்கு வகித்திருக்கிறது.


அம்மா ஒரு தேர்ந்த கதை சொல்லி என்றார் பூமணி. கதையை எப்போதுமே மிகவும் விரிவாக ஆரம்பித்துத் தொடர்ச்சியை விடாமல் சொல்லக்கூடியவர். நிகழ்ச்சிகளை சிறிய சிறிய தகவல்களைக் கோர்த்துக் கண்ணெதிரே காட்ட முடியும். அதுவே பூமணியின் அழகியலாக விரிந்தது. இன்று வரையில் நீடிக்கிறது. எது சாராம்சமானதோ அதை மட்டுமே சொல்ல வேண்டும். எது சுவாரசியமானதோ அதை மட்டுமே சொல்லவேண்டும் என்று பூமணி அம்மாவிடமிருந்து கற்றார். கரிசலில் எத்தனையோ கதை சொல்லிகள் உண்டு. கரிசல் வெளியில் ஆடுகளை மேயவிட்டுக் கருவேல மரத்தடியில் குந்தி அமர்ந்து கதை சொல்லுவார்கள். சாவடியில் கல்திருணையில் படுத்துக்கொண்டு கதை சொல்வார்கள். தூக்கம் வராத இருளில் விழித்துக்கிடந்து கதை சொல்வார்கள்.


அப்படிப்பட்ட கதைகள் வழியாகவே அவர் வளர்ந்தார். அந்தக் கதைகள் அவருக்கு ஒன்றைச் சொல்லின. எளிய சாமானிய மக்களுக்கும் கூடக் கதைகள் உள்ளன. ஒவ்வொரு வாழ்க்கையிலும் கதை உள்ளது. எல்லாமே கதைதான். வாழ்க்கை என்பது எடுத்துச் சொல்லப்பட்டால் கதைதான். அழகிரிப்பகடை ஊருக்கு வந்த காட்சியை சக்கணன் சொல்கிறான். அது கதைதானே? கதைநாயகன் ஒரு எளிய செருப்புத் தைக்கும்தொழிலாளி என்பதனால் அதில் கதை இல்லாமல் போய்விடுமா என்ன?


கதை சொல்லிகளைப் பூமணி நினைவு கூர்கிறார் "சகலமும் தெரிந்தாற் போல சவடால் அடிக்கும் ஆட்டுக்காரக் கோனார். எதுப்புக் கதை போடும் வைத்தியப் பண்டுவர். ஊர்ப்பட்ட வக்கணை பேசும் தொங்குமீசை நாயக்கர். எகடாசி எக்கண்டத்தையே தொழிலாகக் கொண்ட வழுக்கை மண்டை நாயக்கர். இன்றும் யார் யாரோ கதைசொல்லிகள் பூமணியின் நினைவில் எழுந்து வந்து கொண்டே இருக்கிறார்கள். 'கீழ்ப்புற புளியமர நிழலில் சுப்பையனாசாரி சில்லானாக ஓடித்திரிந்து லாடம் கட்டுவார். அவருக்கு வாயும் கையும் ஓயாது. ஊர்க்கதை அத்தனையும் அவருக்கு அற்றுபடி. கெட்டவார்த்தை பூசிக் கிளுகிளுப்பாகச் சொல்லுவார். சுத்தியலடிதான் கதைக்குத் தாளம் குபீர் குபீரெனக் கிளம்பும் சிரிப்பில் மரத்துக்குள் தொணதொணக்கும் குருவிகள் கூட அடங்கிவிடும். நாலு மரம் தள்ளி சவரவேலை நடக்கும். அங்கே இன்னொரு மாதிரியான கதை ஓடும்."


கல்கியும் நா.பார்த்தசாரதியும் எழுதும் கதைகளில் இந்த மனிதர்களின் கதைகள் இல்லை. அவை வேறு உலகத்தைச் சார்ந்தவையாக இருந்தன. கதாநாயகர்களும் கதாநாயகிகளும் கொண்ட உலகம். பூமணியின் அகம் எழுத்தை ஒரு கேளிக்கையாகவே நெடுநாள் நினைத்திருந்தது. அதற்கும் வாழ்வுக்கும் சம்பந்தம் உண்டு என்று தோன்றவேயில்லை. அது உண்மை என்ற நினைப்பே இல்லை. கல்லூரிக்குச் சென்றபோது மு.வரதராசனார் அறிமுகமானார். சி.என். அண்ணாத்துரையை ஒரு உடற்கல்வி ஆசிரியர் அறிமுகம் செய்துவைத்தார். மரபுக் கவிதையில் ஈடுபாடு வந்தது. நீண்ட கவிதைகள் எழுத ஆரம்பித்தார். நூலகர்கள் பரிச்சயமானார்கள். பூமணி எழுதிய நீளமான மரபுக்கவிதை ஒன்று தீபம் இதழில் வெளிவந்தது. அத்துடன் கவிஞர் என்று அடைமொழி சேர்ந்து கொண்டது.


பூமணியின் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாவது வழிகாட்டி எனக் கல்லூரியில் அவருக்கு ஆசிரியராக வந்த சி.கனகசபாபதியைச் சொல்லலாம். "அவர் ரொம்பப் பிரமாதமான பேச்சாளர். அப்ப எழுத்து இதழ் வந்திட்டிருந்தது. சி. கனகசபாபதி அதிலே நெறைய எழுதியிருந்தார். அவருக்கு சி.சு. செல்லப்பா, க.நா.சு. எல்லார் மேலயும் ஈடுபாடு இருந்தது. நா.வானமாமலை, கைலாசபதி மேலேயும் மதிப்பிருந்தது. எல்லாக் கருத்துக்களையும் வாங்கி சிந்திக்கக் கூடியவர். அவர்கிட்ட பேசிப்பேசித்தான் இலக்கியத்தோட அடிநாதம் என்னன்னு எனக்குப் புரிஞ்சது. யதார்த்தம்னு ஒரு வார்த்தையை அவர்தான் சொன்னார். இலக்கியத்தையும் யதார்த்தத்தையும் பிரிக்க முடியாதுன்னு எங்கிட்ட அவர்தான் நிறுவினார். அதோட எனக்குள்ள அட்டைக்கத்தி வீசிட்டிருந்த கல்கி அகிலன் நா.பா. எல்லாரும் காணாமப் போயிட்டாங்க. இலக்கியம்னா என்னைச் சுத்தி உள்ள வாழ்க்கையோட மொழிப்பதிவுதான்னு புரிஞ்சுக்கிட்டேன்.'' என்றார் பூமணி


சிற்றிதழ்களை அவர் வாசிக்க ஆரம்பித்தார் 'அப்பக் கூடத் தமிழ்நாட்டில எவ்வளவோ பேரு யதார்த்தம்னா என்னன்னு சண்டை போட்டுக்கிட்டிருந்தாங்க. அப்ப அகிலனுக்கும் க.நா.சுவுக்கும் எது யதார்த்தம்னு பெரிய சண்டை. சி.கனகசபாபதி அதைப்பத்தி சொன்னார். எந்த விளக்கமும் இல்லாமலேயே எனக்கு யதார்த்தம்னா என்னன்னு புரிஞ்சது. எங்க அம்மா எனக்குச் சொன்ன வாழ்க்கை நிகழ்ச்சிகள்தான் யதார்த்தம். எங்க ஊர்ல நான் கேட்டு வளர்ந்த மனுஷங்களோட கதைகள்தான் யதார்த்தம்." பூமணி சொன்னார். அந்த வகையான எழுத்துக்களை சி.கனகசபாபதி அறிமுகம் செய்தார். ரகுநாதனின் எழுத்துக்கள் பூமணியைக் கவரவில்லை. அவை வெட்டி வெட்டி அடுக்கி வைக்கப்பட்ட கருத்துக்களாக இருந்தன. பஞ்சாலைத் தொழில் சூழலைப்பற்றிப் 'பஞ்சும் பசியும்' நாவலின் களம் கோயில்பட்டியாகவே இருந்தும்கூட அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. ஆனால் புதுமைப்பித்தன் வெகுவாகக் கவர்ந்தது. துன்பக்கேணி மனதைக் கொள்ளை கொண்டது. தி.ஜானகிராமனும் கு.அழகிரிசாமியும் வெகுவாக ஈர்த்தார்கள். அப்போதுதான் ஒரு நாள் சி.கனகசபாபதிக்கு கி.ராஜநாராயணனின் கடிதம் வந்திருந்தது. கி.ரா. பற்றி சி.க. மிகமிக உற்சாகமாகப் பேசினார். பேசப் பேச கி.ராவின் ஆளுமை பூமணியின் உள்ளத்தில் பதிந்தது.


பூமணியின் இலக்கிய வாழ்க்கையில் கி.ரா மூன்றாவது பெரிய ஆளுமை. தன்னுடைய கட்டுரை ஒன்றில் கி.ரா.வை 'முன்னத்தி ஏர்' என்று பூமணி குறிப்பிடுகிறார். கி.ராஜநாராயணனின் கதைகள் அளித்த கொந்தளிப்பையும் எக்களிப்பையும் பலமுறை பலவகைகளில் பூமணி பதிவு செய்திருக்கிறார். பூமணி அறிந்த வாழ்க்கை. பூமணி வாழ்ந்த நிலம். இப்படிக்கூட இந்த வாழ்க்கையை எழுத முடியுமா என்ற பெரும் வியப்பு. இதுதான் இலக்கியம் என்ற பரவசம். கி.ராஜநாராயணனின் கதாபாத்திரங்கள் பலவற்றைப் பூமணி உண்மை மனிதர்களுக்கும் மேலாகவே உண்மையானவர்களாக உணர்ந்திருக்கிறார்.


'ராஜநாராயணனை நினைக்கையில் சொந்தக் கதையில் இருந்து சொன்ன கதை வளரக் கிண்டிக் கிளறி வெளியேறுகிறது. அப்படியானால் என் வாழ்க்கைப் போக்கில் அவர் ரொம்பவே பாதிப்பு ஏற்படுத்தியிருக்கிறார் என்பது வாஸ்தவம்தான். பலரைப்போல சண்டித்தனம் பண்ணாமல் எனக்கு சகஜமாகத் தெரியவந்த மனுஷன் அவர். அந்த சகஜம் இன்றைக்கும் என்னைத் திகைக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்தத் திகைப்பு ஒன்றே அவர் இன்னும் எனக்குள் இருந்து குடிபெயரவில்லை என்பதற்கான சான்று. அவரை அறிவுக்கோல் கொண்டு அறிந்த சந்தர்ப்பங்களைவிட உணர்ந்த அனுபவங்களே அதிகம்' என்று பூமணி ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் (முன்னத்தி ஏர்) கி.ராஜநாராயணனின் 'மனிதம்' போல, 'கரு' போல சிந்தனைகளைப் பிடித்து வசக்கி வசப்படுத்தும் விஷயங்கள் தனக்கும் கைகூட வேண்டும் என்று பூமணி விரும்பினார்.


ஒருநாள் கி.ராஜநாராயணனுக்குத் துணிந்து ஒரு கடிதத்தைப் போட்டார். அது விதைப்புக் காலம். 'மேகங்கள் மறுத்து ஓடி மழையையும் வெயிலையும் விதைக்கும் காலம்' என்று கூறும் பூமணி அந்தப் பருவநிலையையே கி.ராஜநாராயணன் அளித்த அனுபவத்திற்கும் படிமமாக ஆக்குகிறார். 'சோளத்தட்டையைக் கடித்துக் கொண்டு கிடந்த மாட்டுக்கு நாத்துக்கூளம் கிடைத்தது மாதிரி எனக்கு உங்கள் கதைகள் கிடைத்தன' என்று கி.ராஜநாராயணனுக்கு ஒரு கடிதம் எழுதினார். கி.ராஜநாராயணன் உடனே பதில் எழுதியிருந்தார், அந்த வரிகளைப் பாராட்டியிருந்தார் பெரிதாகப் பக்கம் பக்கமாக எழுதித்தான் எழுத்தாளன் ஆகவேண்டும் என்பதில்லை. விஷயங்களை சுகமாக வெளியிடத் தெரிந்தாலே அவன் எழுத்தாளன்தான் என்று உற்சாகப்படுத்தியிருந்தார். அன்றுமுதல் தன்னையும் ஓர் எழுத்தாளனாக உணர ஆரம்பித்தேன் என்றார் பூமணி.


ஆனால் கி.ராஜநாராயணன் அவருக்கு ஆழமான அவநம்பிக்கையையும் அளித்தார். தொடுவது தெரியாமல் எத்தனை பெரிய விஷயங்களை இந்த மனிதர் எடுத்து வைத்துவிடுகிறார் என்ற வியப்பிலிருந்து எழுதினால் அவரைப் போல எழுதவேண்டும் என்ற வீராப்பும் முடியுமா என்ற சோர்வும் உருவாகி வந்தன. அந்தச் சோர்வுடன் நெடுநாள் போராடினார் பூமணி. மனித உறவுகளை கி.ரா. பின்னியிருக்கும் விதம், சிக்கலான சாதியச் சிடுக்குகளைக்கூட நளினமாகக் கையாண்டிருக்கும் நேர்த்தி, இயற்கையைக் காட்சிப்படுத்துவதில் உள்ள கவித்துவம். ஆனாலும் எழுதியாக வேண்டும். கவிதைகள் எழுதி எழுதித் தள்ளினாலும் தீராத ஏதோ ஒன்று உள்ளே இருந்து கொண்டு கதைகளை எழுதச் சொன்னது.


அந்நாட்களில்தான் பூமணி அவரது முதல் கதையை எழுதினார். சில சில்லறை பரிட்சார்த்த முயற்சிகளுக்குப் பிறகு அவர் எழுதிய 'முதல்' சிறுகதை அது. ஒருநாள் அறுவடை நடந்து கொண்டிருந்த வரப்பு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அறுவடை செய்து கொண்டிருந்த பெண்களைப் பார்த்துக் கொண்டு சென்றபோது கவனித்தார்-அதில் ஒரு பெண்ணின் கழுத்தில் மட்டும் தாலியில்லை. அவள் அறுத்தவள். அக்கணத்தில் என்னென்னவோ நிகழ்ந்தது என்கிறார் பூமணி. அதைப்பற்றிய கட்டுரை ஒன்று- இடியும் மின்னலுமாக அவளுக்குள் எத்தனையோ நினைவுகள் இறங்கின. உள்ளே அதிர அதிர சாவதற்குத் தயாராகினாள். இப்போது வரிசையாகப் பெண்கள் தாலியறுத்துக் கொண்டிருந்தார்கள். ஆண்கள் வரிசையாக நாக்கு தொங்கும் பிணங்களை சுமந்து சென்றார்கள். எல்லாம் அவன் மனசை அறுக்க அவன் அந்த அறுதலியின் புருஷன் ஆனான்' என்று குறிப்பிடுகிறார்.


அபூர்வமான ஒரு தருணம் அது. 'புதுமைப்பித்தன், மௌனி, ராஜநாராயணன், மாதவன், எலியட் எல்லாரும் அவனைக் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்' என்று கூறும் பூமணி அதை ஒரு 'சுகமான சாவு' என்று நிர்ணயிக்கிறார். அந்தக் கதையை அவர் தாமரைக்கு அனுப்பினார். அப்போது தி.க. சிவசங்கரன் தாமரை இதழின் ஆசிரியராக இருந்தார். தமிழில் பிற்காலத்தில் அறியப்பட்ட பல முற்போக்கு எழுத்தாளர்கள் அதில் எழுதிக் கொண்டிருந்தார்கள். 'அறுப்பு' தாமரையில் வெளிவந்தது. கி.ராஜநாராயணன் அந்தக்கதையைப் பராட்டி எழுதினார். அதன்பின் கி.ரா. ஆசிரியராக இருந்து வெளிவந்த கரிசல் சிறப்பிதழில் அவரே கேட்டு வாங்கி ஒரு கதையைப் பிரசுரித்தார். அந்தக் கதை பிரேம்சந்த் கதை போல இருக்கிறது என்று கி.ராஜநாராயணன் எழுதிய வரியைப் பூமணி எப்போதும் நினைவில் வைத்திருந்தார் – அது பாராட்டுதான் என்று அறிந்திருந்தும் கூட.


ஆனால் பூமணி கி.ராஜநாராயணனைச் சந்திக்கவில்லை. அரைமணிநேரப் பயணத் தொலைவில்தான் அவர் இருந்தார். ஒரு தயக்கம். புகைப்படத்தில் பார்த்திருந்த பெரிய கண்களும் கூரிய நாசியும் சற்றே கோணலான பிரியம் நிறைந்த சிரிப்பும் கொண்ட அந்த முகத்தை இழக்க விரும்பவில்லை. ஆனால் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் இருந்தது. எவர் முந்துகிறார்கள் பார்ப்போம் என்று கி.ராஜநாராயணன் கடிதம் எழுதினார். பூமணி தயங்கிக் கொண்டிருக்க ஒருநாள் அவரே பூமணியின் அலுவலகத்திற்கு வந்து நின்றார்.


அந்தச் சந்திப்பைப் பூமணி என்றும் நினைவில் வைத்திருந்தார். வாழ்நாள் முழுக்க நீடிக்கக்கூடிய ஓர் உறவு அது. அதன் பின்னர் பூமணியின் வீட்டுக்கு அடிக்கடி வர ஆரம்பித்தார் கி.ரா. சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்து சரிந்து பார்த்து சிரித்தபடி பேசும் கி.ராவின் முகம் என்றும் நினைவில் உள்ளது என்றார் பூமணி. சாப்பாட்டின் நுட்பமான ருசிபேதங்களை அவர்தான் அறிமுகம் செய்தார். சங்கீதத்தை ருசிப்படுத்தினார். பூமணியின் பெண்களுக்கு அவர்தான் பெயர் சூட்டினார். கீரைக்கு உப்பு குறைவாகப் போடவேண்டுமென்பதை, தயிர்சாதத்துக்கும் எலுமிச்சை ஊறுகாய்க்குமுள்ள பொருத்தத்தைப் பேசக்கூடியவராகப் பூமணியின் மனதில் பதிந்தார்.


பூமணியைப்பற்றி ராஜநாராயணனிடம் பேசினேன். 'ரொம்ப சூட்சுமமான ஆளு. எங்கியோ ஒரு கண்ணு எல்லாத்தையும் எப்பவும் கவனிச்சிட்டிருக்கணும் எழுத்தாளனுக்கு. அது அவர்ட்ட உண்டு. எழுதவேண்டியதை எழுதத் தெரிஞ்சிருக்கு' என்று சொன்னார் பூமணி 'கி.ராஜநாராயணனுக்கு உடல் உபாதைகள் ஒரு பொருட்டே அல்ல. அது பாட்டுக்கு ஒருபுறம் இருந்தால் அவர் பாட்டுக்குக் காரியங்களைச் செய்து கொண்டிருப்பார். உபாதைகளைத் துச்சமாக்கி மனச்சோர்வற்றிருக்கும் அவரது இயக்கம் மலைப்பைத் தருகிறது" என்று எழுதுகிறார்.


சமீபத்தில் சந்தித்தபோது பூமணி கி.ராவிடமிருந்து இதை மட்டும் கற்றுக்கொள்ளவில்லையோ என்ற எண்ணம் ஏற்பட்டது. உடல்நலக்குறைவு அவரது உற்சாகத்தைப் பெரிதும் வடியச் செய்திருப்பதைக் காணமுடிந்தது. எழுத்தில் வெளிப்படும் பூமணி அவநம்பிக்கைவாதியே அல்ல. மனிதர்களின் உள்ளார்ந்த ஆற்றல் மீது அபாரமான நம்பிக்கை உடையவர். கானல் பறக்கும் கரிசலில் அன்பைப் பரிமாறிக்கொண்டு உறவை மட்டுமே நம்பி வாழும் மனிதர்களைத்தான் அவர் 'பிறகு', 'வெக்கை' இரு நாவல்களிலும் படைத்திருக்கிறார். ஆனால் நோய் அவரது பேச்சில் அவநம்பிக்கையை, விரக்தியைக் கொஞ்சம் கலந்துவிட்டிருப்பதைக் காணமுடிந்தது. அதையும் கி.ராவிடம் சொன்னேன். 'நல்ல பையன்…உடம்பு சரியில்லேன்னா என்ன பண்ண?' என்றார் அன்புடன்.


தன்னுடைய புனைவிலக்கியப் பயணத்தை ஆரம்பித்த பிறகுதான் பூமணிக்குக் கோயில்பட்டியின் இலக்கிய நண்பர்களுடன் அறிமுகம் ஏற்பட்டது. கோயில்பட்டி தமிழ் இலக்கியத்தில் ஒரு அழகிய மையமாக அமைந்தது வியப்புக்குரியது. எப்படி சின்னஞ்சிறு இடைச்செவல் இரு பெரும் படைப்பாளிகளை உருவாக்கியதோ அதைப்போல. தேவதச்சன் கோயில்பட்டியின் ஒரு முக்கியமான மையமாக இருந்து வந்திருக்கிறார். எப்போதும் ஒரு சிறந்த உரையாடல்காரரை மையம் கொண்டே இலக்கியக் குழுமங்கள் அமைகின்றன. திருவனந்தபுரத்தில் நகுலன், நாகர்கோயிலில் சுந்தரராமசாமி, கோவையில் ஞானி, சென்னையில் ஞானக்கூத்தன், தஞ்சையில் தஞ்சை பிரகாஷ் என்று இலக்கியக் குழுவின் மையங்கள் வேறு உண்டு. இந்தச் சபைகளில் இருந்து நல்ல எழுத்தாளர்கள் உருவாகி வந்திருக்கிறார்கள்.


கோயில்பட்டிக் குழுமத்தில் இருந்தே அதிகமானபேர் வந்திருக்கிறார்கள் என்று படுகிறது. கௌரிஷங்கர், உதயஷங்கர், அப்பாஸ், சமயவேல், கோணங்கி, தமிழ்ச்செல்வன் என்று கோயில்பட்டியின் படைப்பாளிகள் பலர் உண்டு மதுரையைச் சேர்ந்தவர் என்றாலும் யுவன் சந்திரசேகர் ஞானஸ்நானம் பெற்றது தேவதச்சனிடம்தான். விருதுபட்டி அருகே மல்லாங்கிணறைச் சேர்ந்தவர் என்றாலும்கூட எஸ். ராமகிருஷ்ணனையும் தேவதச்சனின் கோயில்பட்டி மையத்தின் உறுப்பினர் என்று கூறமுடியும்.


குறுகியகாலமே பூமணி கோயில்பட்டியில் இருந்திருக்கிறார் என்றாலும் இந்த இலக்கிய நண்பர்களுடனான உறவு எப்போதும் நீடித்திருக்கிறது. தேவதச்சன் எப்போதும் அவருக்கு மறுமுனையாக நின்று உரையாடும் தரப்பாக இருந்துவந்திருக்கிறார். இலக்கிய ரசனையில் தேவதச்சனிடமிருந்து பூமணி வேறுபடும் இடங்கள் பல உண்டு. பூமணியின் மனம் யதார்த்ததில் வேரூன்றியது. அவருக்கு மீபொருண்மை சார்ந்த அக்கறைகள் ஏதும் இல்லை. நேர்மாறாக தேவதச்சன் மீபொருண்மைச் சிந்தனையில் ஆழ ஊறியவர்.


பூமணி ஒரு வாசகராக மலையாள நாவல்களை விரும்பி வாசித்தவர். செம்மீன் அவருக்கு உயர்வான படைப்பாகப் படவில்லை, ஆனால் பி.கேசவதேவ் மீது அவருக்குப் பெரும் பிரியம் உண்டு. நீலபத்மநாபனின் தலைமுறைகளை மலையாள நாவல்களின் அழகியல் கொண்ட ஆக்கம் என்றுதான் பூமணி அடையாளம் கண்டார். ஒரு வகையில் அந்த அழகியலைத் தானும் அடைய வேண்டுமென்றே அவர் விரும்பினார். ருஷ்ய நாவல்களின் அழகியல் பூமணியைப் பெரிதும் கவர்ந்தது. குறிப்பாக சொக்கலிங்கம் மொழியாக்கத்தில் வந்த தல்ஸ்தோயின் போரும் அமைதியும், எஸ்.ராமகிருஷ்ணன் மொழியாக்கத்தில் வெளிவந்த அலெக்ஸி தல்ஸ்தோயின் சக்ரவர்த்தி பீட்டர் முதலிய நாவல்கள். சிங்கில் ஜத்மாத்தஸ் பூமணிக்குப் பிரியமான நாவலாசிரியர். பூமணியின் 'பிறகு' நாவலில் சிங்கிஸ் ஜத்மாத்தலின் கன்னிநிலம் போன்ற நாவல்களின் அழகியல் பாதிப்பினைக் காணமுடியும். இன்று தல்ஸ்தோயின் விரிவும் வீச்சும் கூடிய நாவல் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற விருப்பமே அவரை ஆயிரத்தி ஐநூறு பக்கங்கள் கொண்ட 'அஞ்ஞாடி' என்ற நாவலை நோக்கிக் கொண்டு சென்றிருக்கிறது. பன்னிரண்டு ஆண்டுகளாகப் பூமணி அந்தப் பெரும் நாவலுக்கான உழைப்பில் இருந்தார் 'தமிழில் எழுதப்பட்ட முதல்நாவல்' என்று அதைக் கண்கள் மின்ன அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய பதிவுகள்

பூமணி- உறவுகள்
பூமணி- மண்ணும் மனிதர்களும்
பூமணியின் வழியில்
விஷ்ணுபுரம் விருது விழாவில் பூமணி உரை
பூமணியின் நாவல்கள்
பூமணியை ருசித்தல்-கடிதம்
சிறுகதைகளும் படிமங்களும்
பூமணியின் சிறுகதைகள்
அள்ளக் கிடைக்காத அம்பாரம்
பூமணியின் அழகியல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2011 10:30

எண்ணாயிரம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,


சமீபத்தில் நான் சென்று வந்த எண்ணாயிரம் கிராமத்தைப் பற்றி உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.  இந்த கிராமம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது.  இங்குள்ள அழகிய நரசிங்கப் பெருமாள் கோவில் ஆயிரம் வருடம் பழமையானது.  ராஜராஜ சோழன் கட்டியதாகவும், இங்கிருக்கும் பெருமாள் அவனுக்குக் குல தெய்வம் என்றும் கூறப்படுகிறது.  இந்த ஊரைச் சுற்றி 3 சோழர் கால சிவன் கோவில்கள் உள்ளன. ராமானுஜர் இக்கோவிலுக்கு இருமுறை வந்து, ஏற்கனவே இங்கிருந்த எண்ணாயிரம் சமணர்களை வைணவர்களாக மாற்றி இருக்கிறார்.


இந்த ஊர் ஒரு பழமையான சமண ஊர் என்பதற்கு ஆதாரமாக, ஊருக்கு வெளியே எண்ணாயிர மலை உள்ளது. இம்மலையில் கி. பி.9, 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 35 கற்படுக்கைகளும், 5 தமிழ்க் கல்வெட்டுகளும் இயற்கை குகைகளும் உள்ளன.  தொண்டை நாட்டில் வேறெங்கும் இவ்வளவு கற்படுக்கைகள் இல்லை. மிகவும் ஆச்சர்யமான செய்தி என்னவெனில் 800 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு ஒரு வேதக் கல்லூரி இருந்தது என்பதுதான்.  10 ஆசிரியர்களும் 340 மாணவர்களும் இங்கு தங்கி வேதம் பயின்று வந்துள்ளனர்.  அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உணவுப்படி வழங்கப்பட்டுள்ளது.


இவ்வளவு சிறப்புகள் உடைய ஊர் கவனிக்கப்படாமல் இருப்பது வருத்தமாக உள்ளது.


இக்கோவிலில் பூசை செய்பவர் ஒரு வன்னியர் (அவர் சொன்ன பிறகுதான் தெரிந்தது) என்பது குறிப்பிடத்தகுந்தது. அனைவரும் அர்ச்சகர்கள் ஆகலாம் திட்டத்தில் பயின்று வந்தவர்.  வெறும் அறுநூறு ருபாய் சம்பளத்தில் பணியாற்றுகிறார்.


இதைப்பற்றி இணையத்தில் நான் பதிவு செய்தவைகளை இங்கு இணைத்து உள்ளேன்.


நன்றி.

தங்கள் அன்புள்ள,

சரவணக்குமார்.


1) wiki article


http://en.wikipedia.org/wiki/Ennayiram


2) youtube videos


a) Azagiya narasimma perumal temple

i) http://www.youtube.com/watch?v=FT4gefi3EoY

ii) http://www.youtube.com/watch?v=w10bZTGRKEs&feature=related

iii) http://www.youtube.com/watch?v=qe3o_kTLAsg&feature=related


b)Jain cave, stone beds and Tamil inscriptions

i) http://www.youtube.com/watch?v=7RYt50XKEuA&feature=related

ii)http://www.youtube.com/watch?v=OEGXd3t_1sg&feature=related

iii)http://www.youtube.com/watch?v=LvE3JTouV3o&feature=related


3) wikimapia additions

i) http://wikimapia.org/#lat=12.1266069&lon=79.4792175&z=12&l=0&m=b&show=/8274336/Ennayiram

ii) http://wikimapia.org/#lat=12.1266069&lon=79.4792175&z=14&l=0&m=b&show=/22429551/Ennayiram-malai

iii) http://wikimapia.org/#lat=12.1246768&lon=79.4914913&z=16&l=0&m=b&show=/8274326/Azhagiya-Narasimha-Perumal-Temple-Ennayiram


அன்புள்ள சரவணக்குமார்,


சமணர்களின் கூட்டங்கள் எண்ணாயிரம், நாலாயிரம், மூவாயிரம் என்று சொல்லப்பட்டு வந்தன.  அது எண்ணிக்கை அல்ல, குலப்பெயர். அல்லது குடிப்பெயர்.


இந்த வரியைக்கொண்டே எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டார்கள் என்ற வகையான கதைகளெல்லாம் கட்டமைக்கப்பட்டன.


உண்மையில் இந்த எண்ணிக்கை சார்ந்த குலப்பெயர்கள் சமணர்களுடையதல்ல.  பழந்தமிழ் நாட்டில் வணிகர்கள் குலங்கள் அப்படி எண்ணிக்கைப் பெயர்களாக இருந்தன. இப்போதும் நாட்டுக்கோட்டையார் நடுவே அப்படிப்பட்ட பெயர்கள் உள்ளன.  வணிகர்கள் சமணர்களாக இருந்த காலகட்டத்தில் அந்தப் பெயர் சமணர்களுக்குச் சென்றிருக்கலாம்.


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2011 10:30

December 25, 2011

மீண்டுமோர் இந்தியப்பயணம்

2008 செப்டெம்பர் நாலாம் தேதி நாங்கள் ஓர் இந்தியப்பயணம் சென்றோம். ஈரோட்டில் இருந்து தாரமங்கலம் சென்று அங்கிருந்து கர்நாடகம் ஆந்திரம் மத்தியபிரதேசம் உத்தரப்பிரதேசம் சென்று காசியை அடைந்தபின் திரும்பி பிகார் வங்காளம் ஒரிசா வழியாக ஆந்திராவுக்குள் நுழைந்து சென்னை வந்தோம். ஒவ்வொரு நாளும் அந்தப் பயண அனுபவங்களை இந்த தளத்தில் எழுதிக்கொண்டிருந்தேன். அவை இந்த தளத்துக்கு வந்த வாசகர்களுக்குப் பெரும் கிளர்ச்சியைக் கொடுத்தவை. அந்த வழியில் பலர் மீண்டும் பயணங்கள் மேற்கொண்டார்கள். பைக்கில்கூட ஒரு குழு சுற்றி மீண்டது.





[4-9-2008 அன்று ஈரோட்டில் இருந்து இந்தியப்பயணம் கிளம்பியநாள். ]


வரும் 2012 ஜனவரி 14 முதல் மீண்டுமொரு பயணத்தைத் திட்டமிட்டிருக்கிறோம். இம்முறை ஒரு நோக்கம் உள்ள பயணம். இந்தியாவின் தொன்மையான நிலவழி வணிகப்பாதைகள் எவை என்ற ஒரு வினா எனக்கு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. அவற்றைப்பற்றிக் குறைவாகவே எழுதப்பட்டுள்ளது. பயணிகளின் குறிப்புகளில் வணிகப்பாதைகள் பற்றிய விவரணைகள் அதிகமில்லை. ஊகிக்க ஒரு வழி, புராதனமான சமணத்தலங்களை வைத்துக் கணக்கிடுவதுதான். சமணர்களே அதிகமும் வணிகர்கள். அவர்களின் வணிகப்பாதைகளில்தான் சமண பஸ்திகள் அமைந்தன.


ஆகவே தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகம் மகாராஷ்டிரம் வழியாக குஜராத் சென்று ராஜஸ்தானுக்குள் நுழைந்து ஜெய்சால்மர் வரை சென்றபின் மத்தியப்பிரதேசம் ஆந்திரம் வழியாகத் திரும்பி வரும் ஒரு பயணத்தைத் திட்டமிட்டிருக்கிறோம். இப்பகுதிகளில் அமைந்துள்ள சமணக் கோயில்கள், படுக்கைகளைப் பார்வையிட்டபடி செல்வது இலக்கு. ஒருமாத காலம் காரில். ஒருநாள் அதிகபட்சம் 250 கிமீ தாண்டுவோம். கூடுமானவரை இலவச தங்குமிடங்கள்,இலவச உணவு.


இதில் நான், கிருஷ்ணன்,வசந்தகுமார், கடலூர் சீனு, கெ.பி.வினோத், ஜெர்மானிய நண்பர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் ஆரம்பம் முதல் கடைசிவரை பங்குகொள்கிறோம். அரங்கசாமி முதல் பன்னிரண்டு நாள் மட்டும். அகமதாபாதில் வந்துசேர்ந்துகொள்ளும் செந்தில்குமார் தேவன் எஞ்சிய பதினெட்டு நாள் வருவார். ஒரு பொலேரோ வண்டி. ஓட்டுநர் தவிர ஏழு இருக்கைகள். ஆகவே ஒன்றைப் பங்கிட்டுக்கொள்ளவேண்டியிருந்தது.( ஹிந்தி தெரிந்த நல்ல ஓட்டுனர் இருந்தால் நண்பர்கள் சொல்லுங்கள்)


இதுவும் புதிய நிலங்களை புதிய மக்களைக் காணும் பேரனுபவமாக அமையும் என்று நினைக்கிறேன். இத்தகைய பயணங்களில் எல்லாமே அனுபவங்கள்தான். எல்லா அனுபவங்களும் இனிமையானவைதான். பின்னர் நினைத்துப்பார்க்கையில் அவை உருவாக்கும் ஏக்கம் அபாரமானது.


ஒரு ஊருக்குச் செல்லும் பயணத்துக்கும் இத்தகைய பயணங்களுக்கும் பெரும் வேறுபாடுண்டு. சென்றமுறை கிளம்பிச்செல்வது வரை நான் எத்தனையோ சொல்லியும்கூட நம் நண்பர்களுக்கு அந்த வேறுபாடு புரியவில்லை. 'ஒரேமூச்சிலே அவ்ளவு ஊரையும் பாக்கணுமா, தனித்தனியாப் போலாமே' என்றார்கள். தனித்தனியாகச் செல்லும் அனுபவம் வேறு. ஒரேமூச்சில் இந்திய நிலப்பரப்பைக் கடந்துசெல்லும்போது உருவாவது முற்றிலும் வேறு அனுபவம்.


முதலில் இந்தியா என்ற பிரம்மாண்டமான பன்மைச்சமூகத்தின் பல்லாயிரம் பண்பாட்டு வேறுபாடுகளை, நிலவேறுபாடுகளைப் பார்க்கலாம். சிலநாட்களுக்குள் அந்த பன்மைக்குள் ஓடும் ஒரு அடிப்படையான பண்பாட்டு இணைப்பை இந்தியாவெங்கும் மீண்டும் மீண்டும் காணமுடியும். அதுவே உண்மையான இந்திய தரிசனம். உண்மையில் அந்தப் பயணம் முடிந்து வந்த பின் இந்த நான்கு வருடங்களில் நண்பர்கள் வாரம் ஒருமுறையேனும் அந்த அனுபவத்தைப் பெரும் பரவசத்துடன் சொல்வதுண்டு. அந்த இந்தியதரிசனத்தின் ஒரு உதாரணம் இல்லாமல் ஓர் உரையாடல்கூட எங்களுக்குள் நிகழ்ந்ததில்லை.


இந்தப்பயணம் பற்றிய திட்டமிடல் சென்ற செப்டெம்பரிலேயே நடந்தாலும் இப்போதுதான் எதிர்பார்ப்பு முனைகொள்ள ஆரம்பித்துள்ளது. மானசீகமாக இப்போதே பயணத்தை ஆரம்பித்துவிட்டோம்




இந்தியப்பயணம் 1 புறப்பாடு




இந்தியப்பயணம் 2 தாரமங்கலம்


3 லெபாக்‌ஷி



4 பெனுகொண்டா




5.தாட்பத்ரி


6.அகோபிலம்



7. மகநந்தீஸ்வரம்




8.ஸ்ரீசைலம்


9 நல்கொண்டா




10. ஃபணகிரி


11 வரங்கல்



12 கரீம்நகர்


13 நாக்பூர் போபால்



14 சாஞ்சி


15 கஜுராகோ


16 பீனா சத்னா ரேவா


17 வரணாசி



18 சாரநாத்


19 போத்கயா


20 ராஜகிருகம் நாலந்தா


21 பூரி





22 கொனார்க் புவனெஸ்வர்




23 முடிவு



தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 25, 2011 10:32

எஸ்ராவுடன் ஒரு உரையாடல்- கெ.பி.வினோத்

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் இரண்டாம் வருட விருது மூத்த படைப்பாளி திரு. பூமணி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.  எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க சம்மதித்திருந்தார்.  நானும் அவரும் 16 டிசம்பர் ஈரோடு செல்வதாக ஏற்பாடாகியிருந்தது.  இரவு பத்தேகாலுக்கு நான் ரயில் நிலையம் சென்ற போது, ராமகிருஷ்ணன் சார் ஒரு புத்தகத்தில் ஆழ்ந்திருந்தார்.  என்னை நோக்கிப் புன்னகைத்து "வாங்க" என்றார்.  எனக்கு அவரைப் பெரிய பழக்கமில்லை.  எனக்கிருந்த ஆரம்பத் தயக்கம் காணாமல் போக எங்கள் உரையாடல் சகஜமாக நீண்டது.  எளிமையாகவும் ஏராளமான எடுத்துக்காட்டுகளுடனும் மிகத் தெளிவாக இருந்தது அவரது பேச்சு.  அவற்றிலிருந்து சில பகுதிகள் .


கெ பி வினோத்


நான் :  சமீபத்தில் ரஷ்யன் கல்சுரல் சென்டரில் நீங்கள் நடத்திய உலக இலக்கிய அறிமுகம் பெரிய வெற்றி பெற்றது.  இது ஒரு முன்னோடி முயற்சி என்று எண்ணுகிறேன்.  இது போன்று நிகழ்ச்சிகள் மேலும் தொடர்வீர்களா..?


எஸ். ரா : அந்த நிகழ்ச்சிக்கு ஆதரவாகப் பல கடிதங்கள், போன் அழைப்புக்கள் வந்தன. அதன் ஒலிவடிவம் எப்போது வெளிவரும் என்று கேட்டு பலர் போன் செய்திருந்தனர்.  ஒலிவடிவம் தற்போது தயாராகி வருகிறது.  வருடந்தோறும் இது போல நவம்பர் மாதத்தில் ஒரு அறிமுக நிகழ்ச்சி நடத்த உத்தேசித்திருக்கிறேன்.   இந்த நிகழ்ச்சி, அடுத்து டிசம்பரில் சங்கீத சீசன், தொடர்ந்து புத்தகத் திருவிழா என்று ஒரு தொடர் நிகழ்வு ஆண்டு தோறும் வந்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.  நிறைய இடங்களிலிருந்து ஸ்பான்ஸர் செய்ய முன் வந்திருக்கிறார்கள்.  அதிகமான நிகழ்ச்சிகள் நடத்துமாறு வேண்டுகிறார்கள்.  நான் ஒப்புக்கொள்ள மறுத்தேன்.  ஏனென்றால் இதை நான் அதிகமாக எனது நேரத்தைக் கோரும் ஒரு பணியாகக் கொள்ள இயலாது.


 நான் :  இலக்கியத்தின் முகவரியிட்டு நடக்கும் சில முயற்சிகளின் தரம் சில நேரங்களில் ஏமாற்றத்தை அளிக்கிறது.  ஆனால் அவற்றிற்குக் குறிப்பிடத்தக்க ஆதரவும் கிடைப்பதை கவனித்திருப்பீர்கள்.  நாங்கள் கவலைப்படுவது,  வெளியில் நின்று காண்பவருக்கு இந்த வித்தியாசங்கள் தெரியப்போவதில்லை.  திறமையும் இலக்கியத்தின்பால் உள்ள நேர்மையும் உழைப்பும் கொண்ட படைப்பாளிகள் அருகே போலிகள் வைத்துப் போற்றப்படும் அபாயம் சோர்வளிக்கிறது. 


எஸ்ரா


எஸ். ரா : இதில் வருத்தப்படுவதற்கு எதுவுமில்லை.  இது எக்காலத்திலும் நடந்து வருகிறது.  புதுமைப்பித்தன் காலத்திற்குப் போவோம்.  அப்போது நட்சத்திர எழுத்தாளர்களின் படம் போட்டு சிறுபத்திரிகைகளே வெளிவந்தன.  புதுமைப்பித்தனின் கதை, நடுவே எங்காவது இருக்கும்.   இன்று நாம் அவற்றைத் தேடி வாசிப்பதே புதுமைப்பித்தனின் கதை அதில் வந்திருக்கும் காரணத்தினால்தான்.  அந்த நட்சத்திர எழுத்தாளர்கள் என்ன ஆனார்கள்?  ஜெயகாந்தன் காலகட்டத்தில் ஏறத்தாழ அதே புகழுடன் இருந்த மூன்று நான்கு எழுத்தாளர்களை என்னால் காட்ட முடியும்.  உங்களுக்கு அவர்கள் பெயர்கள் கூட தெரிந்திருக்காது.  ஜெயகாந்தன் தீவிர எழுத்திலிருந்து விலகி பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன.  ஆனால் அவரது புகழ்..? இதற்கு இன்றும் அதே இடம் தான்.. இல்லையா..? எல்லா வகையான எழுத்துகளுக்கும் அதற்கான வாசகர்கள் உண்டு.  எனவே தற்காலிகமான கூட்டம் ஒரு பொருட்டல்ல.  ஆனால் சமூகம் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறது.  அது தன் முன்னேற்றத்திற்குப் பங்களிப்பவர்கள் யாரோ அவர்களை நினைவில் வைத்துக்கொள்கிறது.  ஆக, படைப்பின் வலிமை அதைக் காலம் தாண்டிக் கொண்டு செல்வதே.  அத்தகைய வலிமையான படைப்புகள் தங்கும். மற்றவை மாய்ந்து போகும்.


நான் :  புதுமைப்பித்தன் பற்றிப் பேசினீர்கள்.  இந்தக் கேள்வியை கேட்க நான் அஞ்சுகிறேன்.  ஏனென்றால்,  கா.நா.சு. விலிருந்து, சுந்தர ராமசாமி, ஜெயமோகன், நீங்கள் என தமிழிலக்கியத்தின் சாதனைப் படைப்பாளிகள் போற்றும் ஆளுமை புதுமைப்பித்தன்.  ஆனால் அவருடைய பல சிறுகதைகள் நேரடிப் பிரச்சாரங்கள் போன்றே இருக்கின்றன.  சில சமூக அவலங்கள்,  மனித மனநிலைகளின் எளிய சித்தரிப்புகள், வறுமை, நகர வெறுப்பு என்று சாதாரணமாகவே தோன்றுகின்றன.  அல்லது நாம் வலிந்து அர்த்தங்களை அவற்றில் சுமத்தவேண்டும்.  தமிழில் வகை மாதிரிகளை முயன்றவர் என்பதில் புதுமைப்பித்தனே தொடக்கம்.  அவருடைய சில கதைகள் இன்றும் மைல்கல்களாகவே இருக்கின்றன என்பதிலும் ஜயமில்லை. 


எஸ். ரா : ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  புதுமைப்பித்தனின் காலம்.  அன்று திருநெல்வேலியிலிருந்து சென்னை செல்வதென்பதே ஒரு பெரும்பயணம்.  ஒருவன் வேலை தேடிப் போகும் நிலையை யோசித்துப்பாருங்கள்.  அவனுக்கு வேலையும் கிடைத்தும் அதனை உதறி எழுத்தில் ஈடுபடுகிறான்.  அது போல நீங்கள் சொன்ன மற்றொன்று -  புதுமைப் பித்தன் முயன்ற மாதிரிகள்.  அவரது சிற்பியின் நரகம் புரியவில்லை என்று சொல்லும் வாசகர்களை இன்றும் எனக்குத் தெரியும்.  இந்த ஒட்டு மொத்த பரப்பில் வைத்துத்தான் நாம் புதுமைப்பித்தனை ஆராய வேண்டும்.


 நான் :  கி.ரா, கு.அழகிரிசாமி, பூமணி, தேவதச்சனில் தொடங்கி, நீங்கள், யுவன் சந்திரசேகர் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் இலக்கியத்தில் முன்னணிப் படைப்பாளர்கள் அந்த ஊரைச் சார்ந்தவர்கள்.  ஒரு பிராந்தியத்திலிருந்து இத்தனை கலைஞர்கள் .. ! சார், கோவில்பட்டி என்னை எப்போதும் வியக்கவைக்கும் ஊர்.   வறுமை சூழ்ந்த வறண்ட கரிய நிலம் என்ற அடையாளம் கொண்ட அந்த மண்ணில் என்று விழுந்த விதை இப்படி தீராமல் முளைவிடுகிறது என்று வியந்திருக்கிறேன்.  அதுவும் இடைசெவல் – என்றென்றும் தமிழ் இலக்கிய வாசகர்கள் மரியாதையுடன் நினைவுகூரும் சிறிய கிராமம் அது.  ஊரைப் பற்றி உங்கள் மனதில் உள்ள சித்திரம் சார்..


எஸ். ரா : தமிழகத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் பல்வேறு துறைகளில் கலைஞர்கள் வந்துள்ளனர்.  ஆம்.  கோவில்பட்டியில் இலக்கியம் முக்கியத்துவம் அடைந்திருந்தது.  அதற்கு நைனாவிற்கு ( கி.ராவை அவ்வாறு தான் அழைக்கிறார் ) நாங்களெல்லாம் முதலில் நன்றி சொல்லவேண்டும்.  ஒரு நாற்பது பேர் அவரது துண்டுதலால் எழுத வந்திருக்கிறோம்.      (அப்பாடா ..!) எழுதும் ஒரு சிறு பொறி ஒருவனிடம் கண்டால் அதைக் கொழுந்து விட்டு எரியச்செய்யும் ஆற்றல் அவரிடமிருந்தது.  தினமும் நாங்கள் ஒரு பத்துப் பதினைந்து பேர் அவருடன் நடக்கப் போவோம்.  கோழி தனது குஞ்சுகளை கவனமாகக் கொண்டு செல்வதைப்போல் நைனா எங்களுடன் பேசி அழைத்துச்செல்வார். மிக விரிந்த வாசிப்புப் பின்புலம் கொண்டவர்.  தமிழிலக்கியம் மட்டுமன்று உலக இலக்கியத்திலும் அவருக்கு தேர்ந்த பரிச்சயமிருந்தது.


அடுத்துச் சொல்லவேண்டியது தேவதச்சனைப் பற்றி.  இன்று நெருங்கிய நண்பர்களாக தமிழ் இலக்கியத்தில் நீங்கள் பார்க்கும் பெரும்பாலானோர் முதலில் சந்தித்துக்கொண்டதே அவரது நகைக்கடை வாசலில் வைத்துத்தான்.  அந்த இடம் முக்கியமான ஒரு விவாத மையமாக இருந்தது. இப்போதும் நான் கோவில்பட்டி வரும் போது தவறாமல் அங்கு தேவதச்சனை சந்திக்கிறேன்.  முதலில் அங்கு வரும் இலக்கிய ஆர்வலர்களிடம் சிறு விளையாட்டு செய்வோம் ( சிரிக்கிறார் ).  புதிதாக வந்தவரை சூழ்ந்திருந்து இலக்கியம் பற்றி கேள்வி கேட்போம்.  அவரது அறிவுக்கும் சொல்லும் விடைகளுக்கும் ஏற்பக் கேள்விகள் ஆழமாகும் . ஒரு கட்டத்தில் சபை ஒப்புதல் அளிக்கும்.  பலர் இந்த சோதனையின் பாதியிலே தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடியிருக்கிறார்கள்.  ஆனால் ஜெயித்தவர்கள் தப்பித்தோம் என்று நினைக்க வேண்டாம்.  இனிமேல்தான் முன்னைவிடக் கடுமையான சோதனை காத்திருக்கிறது.  அப்பாஸூக்கு போன் போடுவோம்.  "அவரை பங்களாவுக்கு அனுப்புங்க.."  என்று வில்லன் பாணியில் உத்தரவு வரும்.  அவரை சிம்மாசனம் போன்ற ஒரு இருக்கையில் அமர வைத்து அங்கே கூடியிருக்கும் முற்போக்கு அறிஞர்கள் கேள்வி கேட்பார்கள்.  வந்தவரது ரஷ்ய இலக்கியத் தேர்ச்சி மற்றும் கோட்பாட்டு அறிவுகள் பரிசோதிக்கப்படும்.  இப்படியான சுவையான நிகழ்வுகள் பல நடந்திருக்கின்றன.


நான் :  ஒரு இடத்தின் வாழ்பனுபவங்கள், இயற்கைச் சூழல், அரசியல் நிலவரங்கள் போன்றவை சார்ந்த அனுபவங்களைக் கண்காணாத் தொலைவில் இருக்கும் ஒரு வாசகனுக்கு நகர்த்தும் வலிமை இலக்கியத்திற்கு உண்டு.  அவனால் மாஸ்கோவின் பனிபடர்ந்த சாலையையும், இடைச்செவலின் கரிசலையும் கற்பனையால் விரித்தெடுக்க முடியும்.  ஆனால் படைப்பாளிகள் தங்கள் சொந்த மண் சார்ந்து ஆக்கங்களை உருவாக்குவது உலகம் முழுவதும் பொதுவாகக் காணக்கிடைக்கிறது ( உங்களுக்கு நெடுங்குருதி ). ஆனால் பிராந்தியத் தன்மை படைப்பில் செலுத்தும் ஆதிக்கம் ரசனைக்குப் பொருந்துவதில்லை என்று எண்ணுகிறேன்.


எஸ். ரா :  அப்படியல்ல.  இலக்கியம் என்ற அறிவார்ந்த துறைக்கு இது ஓரளவு சரியாக இருக்கலாம்.  ஆனால் இசை போன்ற பிற கலைகளில் ஒருவரின் பிறந்த மண் ஏற்படுத்தும் தாக்கத்தை தெளிவாகக் காணலாம்.  உதாரணமாக, புதிதாக ஓபேரா இசை கேட்கும் ஒருவர், அந்தப் பாடகி உச்ச கதியில் கத்துவது போல உணரலாம்.  கொஞ்சம் நுட்பங்கள் புரிந்த ஒருவருக்குப் பாடகி ஏற்ற இறக்கங்களை நிகழ்த்துவது புரியும்.  திருப்பங்கள், சோதனை முயற்சிகளை அவர் ரசிக்கலாம்.  ஆனால் அந்த இசையில் ஒன்றிக் கண்ணீர் உகுக்க அவரால் சாத்தியப்படுவதில்லை.  அது ஒரு இத்தாலியனால் முடியும்.


இதற்கு எங்கள் மண் சார்ந்த ஒரு உதாகரணம் சொல்ல முடியும்.  இன்றும் எங்கள் ஊரில் பழைய விவசாயிகளுக்கு சினிமா மீது எந்த ஈர்ப்பும் இல்லை.  அதற்கு ஒரு பண்பாட்டுக் காரணம் இருக்கிறது.  உட்காருவது என்பது அவர்களுக்கு அன்னியமான ஒரு செயலாகவே இருந்துள்ளது.  காலையில் எழுந்ததும் வேலைக்குச் செல்வார்கள்.  பிறகு தொடர்ந்த நடை தான்.  எப்போதாவது வெயிலுக்குக் கருவேலத்தின் நிழலில் சிறிது நேரம்.  உடனே, "என்ன உக்காந்துகிட்டு வேலையைப் பாக்காம…" என உள்ளுணர்வு எழுப்ப வேலைக்குத் திரும்புவார்கள். நைனா கூட "நாற்காலி" என்று ஒரு கதை எழுதியிருப்பார்.  கிட்டத்தட்ட உட்காருதல் என்பது ஒரு விலக்கப்பட்ட செயல் போன்றது தான் அவர்களுக்கு !  அப்படிப்பட்டவர்களை முதன் முதலில் மூன்று மணிநேரம் ஓரிடத்தில் உட்காரச் சொன்னது சினிமா.. இதனாலேயே அந்தக் கலை அவர்களைச் சென்றடைவதில் பெரும் தடையை சந்திக்க நேர்ந்தது.  எங்கள் வீட்டிலேயே நான்கு நாற்காலிகளில் மூன்று உபயோகிக்கப் படாமலேயே இருந்தது.  ஒன்றில் அப்பா அமர்ந்திருப்பார்.  இன்னும் ஒரு சுவையான நிகழ்ச்சி ஞாபகம் வருகிறது.  எங்கள் ஊர் கோயில் திருவிழாவிற்கு நாடகம் போட ஒருமுறை பிரபலமான நாடகக் குழு வந்திருந்தது.  நாடகம் தொடங்கி சிறிது நேரத்தில் பார்வையாளர் மத்தியில் சிறு சலசலப்பு.  விசாரித்ததில் " என்ன நின்னுக்கிட்டே பேசிட்டிருக்காங்க.. அங்கிட்டு இங்கிட்டு கொஞ்சம் நடக்கிறது.." என்று சொன்னார்கள்.  நாடகக் கம்பெனிக்கு ஒரு புதிய புரிதல் கிடைத்தது.


இவற்றைக் கொண்டு. கர்நாடக இசை ஏன் கரிசல் போன்ற பகுதிகளில் ஏற்கப்படுவதில்லை என்பதற்கு நாம் விளக்கமளிக்கலாம்.  இந்த வகை இசை அமர்ந்து கேட்பவர்களுக்கானது.  பாடுபவர்களும் கேட்பவர்களும் அமர்ந்திருப்பார்கள்.  ஆனால் கரிசலின் கேளிக்கையின் இயல்பு அப்படி அல்ல.  அங்கு இரு சாராரும் அமர்வதில்லை.  இன்னும் சில நேரங்களில் பார்வையாளர்களின் பங்களிப்பு கூட நிகழ்வதுண்டு.  இவ்வாறு ஒரு கலாச்சார பண்பாட்டுக்குப் பழகியவர்களை மற்றொரு பகுதியின் கலைக்குப் பழக்குவது அத்தனை சுலபமல்ல.  பிற கலைகளுடன் நமக்கு நிகழ்வது ஒத்திசைவு – டில்லியில் வசிக்க நேர்ந்தால் இந்தி பேசி கோதுமை சாப்பிடுவது போல.  ஒன்றுதல் அல்ல.


நாம் முதன் முதலாக அனுபவிக்கும் கலையனுபவங்கள் நம் மனதின் முதல் அடுக்கில் படிகின்றன.  அதற்கு பின் வரும் நமது வாசிப்புகள், சிந்தனைகள் அனைத்தும் அந்த முதல் அடுக்கின் மேல் நாம் அமர்த்திக் கொள்பவை.  வருடங்கள் செல்லச் செல்ல அந்த அடுக்குகள் வளர்ந்து உயர்கின்றன.  கீழே அழுத்தத்தில் ஒழுகும் முதல்சுவை பீரிட்டு வெளிவர வாய்ப்பு காத்து விழித்திருக்கும்.  ஒரு நாள் பூங்காவில் நடக்கும் போது ஒரு பெரியவரைப் பார்த்தேன்.  பழுத்து உதிர்ந்த ஒரு இலையை வெகுநேரமாக உற்று பார்த்துக்கொண்டிருந்தார்.  பூங்காவில் உலவும் கூட்டம், பசுமையான சூழல், விளையாடும் குழந்தைகள் என எதுவும் அவரைப் பாதித்த்தாக தெரியவில்லை.  வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் தருணங்கள்தான் இவை.  பெரிய வியாபாரம் செய்தவர்கள் ஐம்பது வயது தாண்டிபின் சொந்த ஊர் திரும்பி வேட்டியும் மேல்துண்டுமாகக் கயிற்றுக்கட்டிலில் அமர்ந்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.


நான் :  சார், இப்போது எழுத்தின் மர்மம் பற்றி..  மொழி, சிந்தனை, மனம் என்று ஒரு கூட்டு நிகழும் வேளைதான் நல்ல படைப்பு வெளிப்படும்.  அதன் பரவசத்தைப்பற்றிப் படைப்பாளிகள் காலந்தோறும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.  வாழ்கையைத் தியாகம் செய்து எழுதுவது இந்த அனுபவத்திற்காகவே என்று நினைக்கிறேன்.  இதுதான் புதியவர்களை எழுத்தை நோக்கி ஈர்க்கிறது.  எத்தனையோ அபாயங்களை நேரிட்ட பின்னும், சில வேளைகளில் கிட்டத்தட்ட மொத்த அழிவை சந்திக்க நேர்ந்த பின்னும்,  உயிர்த்துடிப்புடன் படைப்பியக்கம் மீண்டு முன்னேற அதன் இயக்கு விசை இதுவென்று கருதுகிறேன்.


எஸ். ரா : உண்மைதான்.  எழுத்தின் உன்னதப் பொழுதுகளில் எழுத்தாளன் அபூர்வமாக அவ்வகைப் பரவசம் காண்பதுண்டு.  ஆனால் அது நிலையானதல்ல.  எழுதி முடிந்த்தும் அவன் மீண்டும் அனைத்து சாதாரணத்துடன் தனது பழைய ஆளுமைக்கே மீள்கிறான்.  இது ஒரு சிகரத்தில் ஏறிக் கீழே பள்ளத்தாக்கில் விழுவதைப் போல.  அந்த சிகரத்தில் எட்ட ஒருவனுக்கு உதவும் எந்த வழிமுறையும் இதற்குச் சமமாக போற்றப்பட வேண்டியவையே.    ஒரு சம்பவம் நினைவில் வருகிறது.  ஒரு பேருந்து நிலையத்தில் காண நேர்ந்தது.  ஒருவர் கையிலிருந்த பொட்டலதிலிருந்து கடலை தின்றுகொண்டிருந்தார்.  தன்னிச்சையாக அவரது கை பொட்டலத்திற்கும் வாய்க்குமாக இயங்கிக்கொண்டிருந்தது.  பொட்டலம் காலியாகி ஒரே ஒரு கடலை மட்டும் கடைசியில் மிஞ்சியது என்று உணர்ந்தபோது அவரிடம் ஒரு அதிர்ச்சியை கவனித்தேன்.  அந்தக் கடலையை உள்ளங்கையில் வைத்து சிறிது நேரம் அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தார்.  ஏதோ இதற்கு முன் கடலையையே அவர் காணாதது போல.  பின்பு மிக மெல்ல அதன் தேலை உரித்து மறுபடியும் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தார்.  இரண்டாக உடைத்து, மிகப் பொறுமையாக ஒரு பாதியைக் கண் மூடி மென்றார்.  அப்புறம் அது போல அடுத்த பாதியை.  இவ்வாறு அந்தக் கடைசிக் கடலை ஒரு பேரனுபவமானது.  பாருங்கள் எத்தனை எளிய நிகழ்ச்சி.  ஆனால் தியானம் போன்ற எந்த ஒரு மேன்மையான கருவியும் தரும் அனுபவம் !  ஆனால் இது ஒற்றை அனுபவமாகத் தேங்கிவிட்டது.  எழுத்தில் எனது தேடல் முழுவதும் இந்தப் பரப்பைச் சார்ந்தே இருக்கிறது.  சிகரத்தில் ஏறுவதற்கும் கீழே விழுவதற்குமான முரணைப்பற்றி.


நான் :  அருமையான விளக்கம் சார் !.  இன்னும் இது சார்ந்து மற்றுமொரு கேள்வி.  ஒரு நாவல் என்பது வருடங்களின் உழைப்பைக் கோரும் பணி.  ஒரு நாள் ஓரு பகுதியை உச்சபட்சக் கலை நேர்த்தியுடன் முடித்துவிட்டீர்கள் என்று கொள்வோம்.  அதற்கு அடுத்த நாளோ, பிறிதொரு நாளோ மறுபடி தொடரும் போது, முந்தைய வேகம் வர வேண்டுமே.  அங்கு ஒரு தடை நிலையை உணர்ந்திருக்கிறீர்களா..? அல்லது அந்நிலையை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்..?


எஸ். ரா : நாவல் ஒரு வரிசைக்கிரம ஒழுங்கில் எழுதப்படுகிறது என்று யார் உங்களுக்குச் சொன்னது..?  எந்த அத்யாயம் எதற்குப் பின்னால் எழுதப்படுகிறது என்பது முன்னர் தீர்மானிக்கப்படும் ஒன்று அல்ல.  நிறைய எழுதப்படும், பல முறை திருத்தங்கள், மாற்றங்கள் செய்யபடும்.  சில அத்தியாயங்கள், அவை மிகச் சிறப்பாக வந்திருப்பினும் கைவிடப்படும்.  அவற்றை எழுத ஆரம்பித்த மனநிலையிலிருந்து  அப்போது நாவல் வேறு திசையில் நகர்ந்திருக்கலாம்.


நான் :  ஒரு நாவலை எழுதிமுடித்தபின் அந்த மனநிலையிலிருந்து வெளிவர பிரத்தியேக முயற்சிகள் எதுவும் மேற்கொள்கிறீர்களா..?  அந்த மனநிலை எஞ்சி, தொடர்ந்து அடுத்துவரும் படைப்புக்களில் பாதிப்பை ஏற்படுத்தியதுண்டா..?


எஸ். ரா : இல்லை என்றே சொல்வேன்.  நாவல் முடிந்தபின் அந்த மனநிலையிலிருந்து முற்றாகவே வெளியில் வந்துவிடுவேன்.  அபூர்வமாக ஒரு சில தருணங்களில் மனம் சிலவற்றைத் தன்னில் உறையவைத்துக்கொள்ளும்.  எனினும் பிரத்யேக முயற்சியெடுத்து வெளிவந்ததாக ஞாபகம் இல்லை.


நான் :  ஒரு நாவல் வெளி வருகிறது.  அதை மீள் வாசிப்பு செய்தபின், ஒரு வாய்ப்புக் கிடைத்தால் கொஞ்சம் மாற்றியெழுதலாமே என்று எப்போதாவது நினைத்ததுண்டா..?


எஸ். ரா : எப்போதும்தான் வாய்ப்புக் கிடைக்கிறது.  நாவலின் உருவாக்கத்தில் மாற்றங்கள் முடிவற்றவை.  புரூப் ரீடிங் முடிந்தும் கூட மாற்றங்களைச் செய்திருக்கிறேன்.  ஆனால் வெளிவந்த பின் அது தான் அதன் வடிவமும் உள்ளடக்கமும்.  பின்பு மாற்றமில்லை.


நான் : இலக்கியத்தில் வெவ்வேறு பள்ளிகள் ( Schools ) இருந்துள்ளன.  ஒவ்வொரு காலகட்டதிலும் அப்போதைய மேதைகளைச் சார்ந்து ஒரு இளம் குழு துளிர்க்கும்.  சொன்னீரகளே.. கி.ரா வைச் சுற்றி உயிர்பெற்ற புதிய தலைமுறை எழுத்தாளர்களைப் பற்றி.  இன்று தமிழில் அது போன்ற பள்ளிகள் என்று பெரிதாகப் பேசப்படுவதிலைலையே..


எஸ். ரா : இத்தனை வசதிகள் இல்லாமலிருந்த காலம் அது.  ஒரு பகுதியின் வாசகர்கள்  அதற்குக் குறைந்த தொலைவில் உள்ள எழுத்தாளரை அடிக்கடி சந்திப்பார்கள்.  எழுத்தாளரின் வீடு மெல்ல மெல்ல ஒரு மையமாக ஆகும்.   காலப்போக்கில் வாசகர்ளுக்கும் எழுத்தாளருக்கும் உள்ள பிணைப்பு அதிகமாகி அவர்கள் எழுத்தாளராகும் தருணத்தில்  மூத்த எழுத்தாளரின் பாதிப்பு தெரியும்.  இன்று அப்படி அல்ல.  முக்கியமான எந்த எழுத்தாளரையும் எளிதில் படிக்கவும் தொடர்பு கொள்ளவும் வசதிகள் பெருகிவிட்டன.  ஒரு வாசகன் பல எழுத்தாளர்களுடன் தொடர்ந்த உரையாடலில் இருக்கிறான்.  பிரமிக்க வைக்கும் வாசிப்புப் பின்புலம் உடைய பல வாசகர்களை நான் கண்டிருக்கிறேன்.


நான் :  வாசகர்களைப் பற்றி சொன்னீர்கள்.  இன்று நம்முடைய தேர்ந்த எழுத்தாளர்கள் அனைவருமே முதலில் தேர்ந்த வாசகர்கள்.  ஆனால் வாகசன் எழுத்தாளனாக மலரும் நிகழ்வு என்றும் ஆச்சரியமூட்டுகிறது.  நீங்கள் குறிப்பிட்டது போல இலக்கியத்தின் நுண்மை உணர்ந்த, சமகால மற்றும் செவ்வியல் இலக்கியங்களில் பரிச்சயம் உடைய பல வாசகர்களுடன் உரையாடியிருக்கிறேன்.  ஆனால் அவர்களில் கணிசமான பேர் எதையும் எழுதியதில்லை. 


எஸ். ரா : ஆமாம்.  அது ஆர்வமூட்டும் விஷயந்தான்.  ஆனால் வாசகர்களை வேறொரு கோணத்திலும் நாம் ஆராயவேண்டும்.  படித்து அந்நேரம் புன்னகைத்துச் செல்லும் வாசகர்கள் ஏராளம்.  ஆனால் தனது ஆத்மார்த்கமான நிறைவிற்காகப் படிக்கும் வாசகர்கள் உண்டு.  அவர்கள் அதிகமாகத் தங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.  சமீபத்தில் அப்படி ஒருவரை சந்தித்தேன்.  அவர் ஒரு அரசு அலுவலர்.  அவரது வீட்டில் எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.  நடுவில் மேசை நாற்காலி,  சுற்றிலும் வட்ட வடிவ அடுக்குகளில் நுற்றுக்கணக்கான புத்தகங்கள் !  துறை வாரியாக.  என்னைக் காரில் அழைத்துச் செல்லும் போதோ, திரும்பி விடப் போகும் போதோ அவர் புத்தகங்களைப் பற்றி எதுவுமே பேசவில்லை.  பிற்பாடு அவருடன் பணிபுரிபவர்களிடம் விசாரித்தேன். " ஏதோ பொஸ்தகம் எல்லாம் நிறைய வச்சிருக்காரு சார்.. படிப்பாரு போல "  என்ற பதில் தான் கிடைத்தது. எழுத்தாளன் இயற்கையின் ஒரு நிகழ்வு என்று தான் நினைக்கிறேன்.  எனவே தான் இரண்டையும் " Creation " என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம்.  இயற்கை தீராமல் புதுமையைத் தோற்றுவித்துக்கொண்டிருக்கிறது.  பூ என்பதை விளக்க ஒரே ஒரு பூ போதுமே !  என் இத்தனை வகைகள்..? சிறிய நிறபேதங்கள், இதழ் வேறுபாடுகள், வாசனை வகைகளில் புதுமை என இயற்கை முடிவில்லாத சோதனையில் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது.  தவறாமல் ஒவ்வொரு படைப்பிலும் மேன்மை காக்கிறது.  அதையே தான் எழுத்தாளனின் உருவாக்கத்திலும் செய்கிறது என்று எண்ணுகிறேன்.


வேறொன்றையும் குறிப்பிட இருக்கிறது.  அது ஒருவன் தான் ஒரு எழுத்தாளன் என்று உள்ளுர உணரும் தன்மை.  அவன் மேலேறி வருந்தோறும் அவனிடமிருந்து பல எளிய பழக்கங்கள், நட்புகள், ஏன் சில உறவுகள் கூட உதிரத்தொடங்குகின்றன.  இவ்வாறு அவன் நுட்பமாக சுத்திகரிக்கப்படுகிறான்; தனியனாகிறான்.  ஒரு கட்டத்தில் "  நான் வேறு "  என்று உணரும் நாள் அவன் எழுத்தாளனாகிறான்.


 நான் :  தற்போதைய வசதிகளைப் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள்.  உண்மைதான் இன்று ஒரு அரிய நூல் அது உலகத்தின் எந்த நுலகத்தில் இருந்தாலும் நமக்கு வாசிக்கக் கிடைக்கிறது.  இணையத்தின் வீச்சு அப்படி.  ஆனால் புதிய எழுத்தாளர்களின் வருகையில் இது குறிப்பிடத்தக்க புரட்சியை விளைவிக்கவில்லையே..


எஸ். ரா : உண்மைதான்.  வாசகர்களுக்கு இணையம் ஒரு வரம் என்பதில் சந்தேகமில்லை.  நீங்கள் குறிப்பிட்டது போல புதிய தலைமுறை எழுத்தாளர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மலரவில்லை என்பது ஒரு குறைதான்.  எனது ஒரு நண்பர் அவரது தாயாரின் பெயரால் கவிதை, சிறுகதை மற்றும் நாவல் என்று மூன்று துறைகளுக்கு விருது கொடுக்க விரும்பினார்.  அவரது நிபந்தனைகள் – வயது நாற்பதிற்குக் குறைவாக இருக்கவேண்டும்.  3 தொகுப்புகள் வெளிவந்திருக்க வேண்டும்.  என்னிடம் சிபாரிசு செய்யச் சொன்னார்.  குறிப்பிடத்தக்கதாய் யாரையும் என்னால் சுட்ட முடியாமல் போனது சோகம் .  வயது வரம்பைச் சற்று தளர்த்தியும் பயனளிக்கவில்லை.    இது தான் இன்றைய நிலைமை. மற்றபடி, நான் ஏற்கனவே சொன்னது போல எழுத்தாளனை முழுமையாக உருவாக்க எந்த புறச்சத்தியாலும் முடியாது.


 நான் :  சார், நீங்கள் திட்டமிடுதலில் நிபுணர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  சிறுபத்திரிக்கை, வெகுஜன இதழ், பயணங்கள், விழாக்கள், சினிமா வேலைகள், நாவல் வேலைகள் என்று விரிகிறது உங்கள் உலகம்.  இந்த இயக்கங்கள் ஒன்றை ஒன்று சமயங்களில் முட்டிக்கொள்வதுண்டா..?


எஸ். ரா : பெரும்பாலும் இல்லை.  நான் ஒரு முழு ஆண்டுக்குத் திட்டமிடுபவன்.  உதாகரணமாக இருபது விழாக்கள் ஒரு வருடத்திற்கு என்று முடிவு செய்தால் அதற்கு மேல் ஒத்துக்கொள்வதில்லை.  அந்த வருடத்தில் கொண்டு வரவேண்டிய நாவல், அது கோரும் களப்பணி ஆகியவற்றை வகுத்துக்கொள்கிறேன்.  மிக முக்கியமாகக் கருதும் படங்களை மட்டுமே எழுத ஒத்துக்கொள்கிறேன்.  விடுமுறையும் உண்டு.  மே மாதம் முழுவதும் சென்னையிலேயே இருப்பதில்லை; குடும்பத்துடன் வெளியூர்.  அதுபோல டிசம்பர், ஜனவரி மாதத்திட்டங்கள் கொஞ்சம் தளர்வாக இருக்குமாறு பார்த்துக்கொள்கிறேன்.  சங்கீத சீசன், புத்தக விழா என்று வருவதால் அந்த மாதங்களில் பெரிய வேலைகளை ஆரம்பிப்பதில்லை.


மற்றபடி, எனது எழுத்துப்பணிகள் இரவிலேயே நடக்கின்றன.  வழக்கமாக இரண்டு மணி.  காலையில் முந்தைய நாள் எழுதியவற்றில் திருத்தங்கள் செய்கிறேன்.  பின்பு எல்லா இ-மெயில்களுக்கும் பதில் – கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்.  பின்பு படிப்பு அல்லது என்னைப்பார்க்க வருபவர்களைச் சந்தித்தல்.   மத்தியானம் ஒரு படம், மாலையில் சிவன் பூங்காவில் நடை.


*********************


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 25, 2011 10:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.