Jeyamohan's Blog, page 2263
December 21, 2011
சு.வேணுகோபாலுக்கு பாஷா பரிஷத் விருது
இந்த வருடத்தைய பாரதிய பாஷா பரிஷத் விருது சு.வேணுகோபால் எழுதிய வெண்ணிலை சிறுகதைத் தொகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னர் பிரசுரமாகாத கதைகளை மட்டுமே கொண்ட வெண்ணிலை தமிழின் முக்கியமான சிறுகதைத் தொகுதிகளில் ஒன்று. பல அபூர்வமான சிறுகதைகள் இத்தொகுதியில் உள்ளன. தமிழினி வெளியீடு
சு.வேணுகோபால் தமிழின் முக்கியமான படைப்பாளி. நுண்வெளிக்கிரணங்கள் என்ற நாவலும் கூந்தப்பனை, பூமிக்குள் ஓடுகிறது நதி, களவுபோகும் குதிரைகள் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் எழுதியிருக்கிறார். கல்லூரி ஆசிரியராகப் பொள்ளாச்சியில் பணிபுரிகிறார்.
வேணுகோபாலுக்கு என் சார்பிலும் இந்த இணையதளத்தைச் சேர்ந்த நண்பர்கள் சார்பிலும் வாழ்த்துக்கள்
சு வேணுகோபால் பற்றி
சு.வேணுகோபால் ஒரு கடிதம்
கூந்தப்பனை
வெண்ணிலை, காவல்கோட்டம் விருதுகள்
தொடர்புடைய பதிவுகள்
கதைகளின் வழி
சு.வேணுகோபால், ஒரு கடிதம்
இலக்கியத்தில் இன்று …
கூந்தப்பனை
சு.வேணுகோபால், கடிதங்கள்
சு.வேணுகோபாலின் மண் 2
சு.வேணுகோபாலின் மண்-1
'வெண்ணிலை','காவல்கோட்டம்'—விருதுகள்
விழா: இளங்கோ
கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ரா என்றால், பின்னத்தி ஏர் பூமணி என்று விழாவில் பேசிய அனைவரும் சொன்னார்கள். அது போலவே எந்த வம்புக்கும் போகாத, தன் எழுத்தையே யாராவது 'இப்படி எழுதி இருக்கலாம்' என்றால், அவர் இப்படி பதில் சொல்வாராம் 'அப்படிங்களா, அடுத்த தடவ பார்க்கலாம்'. இவ்வளவுதான் அவர் பேசுவது என்று மேடையில் குறிப்பிட்டார்கள்.
இளங்கோ பதிவு
தொடர்புடைய பதிவுகள்
விழா:கோபி ராமமூர்த்தி
விழா-கடிதங்கள்
விழா
விஷ்ணுபுரம் விழா- வடகரை வேலன்
விஷ்ணுபுரம் விருது பற்றி…
சென்னையில் நாளை காலை 10 மணிக்கு-உரை
தமிழ் மரபு அறக்கட்டளை என்ற அமைப்பு இவ்வருடம் முதல் டிசம்பரில் இசைவிழாச்சூழலை ஒட்டி ஓர் இலக்கியச்சூழலையும் உருவாக்கும் நோக்குடன் செயல்பட ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு பகுதியாகத் தொடர் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பெரும்பாலும் தமிழ்மரபு, பண்பாடு பற்றிய உரைகள்.
ஒரு நாள் ஒரு தலைப்பில் ஒருவர் விரிவாக உரையாற்றும் நிகழ்ச்சி இது.
இடம் : ராகசுதா அரங்கம் ,85/2 லஸ் அவென்யூ, மைலாப்பூர்.
சென்னை 4
நேரம் காலை 10 மணி
தொலைபேசி எண்: 24992672
டிசம்பர் 23 அன்று காலை 10 மணிக்கு நான் உரையாற்றுகிறேன். குறுந்தொகை தமிழ்க் கவிமரபின் நுழைவாயில் என்ற தலைப்பில் உரை
வரைபடம்
Raga Sudha Building No. 85/2
Luz Avenue, Mylapore, Chennai, Tamil Nadu 600004
044 24992672
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அக்காதமி விருது
இவ்வருடத்தைய சாகித்ய அக்காதமி விருது காவல்கோட்டம் நாவலை எழுதிய சு.வெங்கடேசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழில் சாகித்ய அக்காதமி விருது பெறும் எழுத்தாளர்களிலேயே இளம் வயதினர் சு.வெங்கடேசன். காவல்கோட்டம் அவரது முதல் நாவல் என்பது மட்டுமல்ல வெளிவந்த ஒரே இலக்கிய ஆக்கமும் கூட. எல்லா வகையிலும் முக்கியமான விருது.
வெங்கடேசனின் காவல்கோட்டம் மதுரையை நாயக்கர்கள் கைப்பற்றியதும் அங்கே காவல்புரிந்து வந்த கீழக்குயில்குடி வட்டாரப் பிறமலைக்கள்ளர்கள் அதன் காவலுரிமையை இழந்து பின்னர் அதைப் பெறும் சித்திரத்தில் ஆரம்பிக்கிறது. மதுரையின் காவலர்களாகிய அவர்களே திருடர்களாக ஆக நேர்ந்ததைச் சொல்லிக் குற்றப் பரம்பரைச்சட்டம் உருவான வரை வந்து அதற்கு எதிரான போராட்டங்களை விவரித்து முடிகிறது. தமிழின் வரலாற்று நாவல்களில் முக்கியமான ஆக்கம் இது
சு.வெங்கடேசன் மார்க்ஸிய கம்யூனிஸ்டுக்கட்சி முழுநேர ஊழியர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலச்செயலாளர். காவல்கோட்டம் வசந்தபாலன் இயக்கத்தில் அரவான் என்றபேரில் திரைப்படமாக வெளிவரவிருக்கிறது
[அரவான்]
சு.வெங்கடேசனுக்கு வாழ்த்துக்கள் , என் சார்பிலும் இவ்விணையதளத்தை நடத்தும் நண்பர்கள் சார்பிலும்
அரவான்
சுவெங்கடேசன் கடிதங்கள்
வெண்ணிலை, காவல்கோட்டம் விருதுகள்
காவல்கோட்டம்
காவல்கோட்டம் விமர்சனம் 2
காவல்கோட்டம் 3
காவல்கோட்டம் 4
காவல்கோட்டம் 5
தொடர்புடைய பதிவுகள்
நாஞ்சிலுக்கு சாகித்ய அக்காதமி விருது
அரவான்
சாகித்ய அக்காதமி மீண்டும்
காவல்கோட்டம் 5
சு.வெங்கடேசன், எஸ்.ராமகிருஷ்ணன், கடிதங்கள்
காவல்கோட்டம் 4
காவல்கோட்டம் 3
காவல் கோட்டம் 2
காவல்கோட்டம் 1
காவல் கோட்டம்,எஸ்.ராமகிருஷ்ணன்
விழா:கோபி ராமமூர்த்தி
இது போன்ற விழாக்கள் வாசகனுக்குப் பல புதிய வாசல்களைத் திறக்கின்றன. ஏற்கனவே வாசித்த புத்தகங்களில் தவறவிட்ட இடங்களை அடையாளங் காட்டுகின்றன. இன்னும் தீவிரமாக வாசிக்க வேண்டும் என்ற உத்வேகத்தைத் தருகின்றன. இவையனைத்தையும் சாத்தியமாக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட அன்பர்களுக்கும், உங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
கோபி ராமமூர்த்தி பதிவு
தொடர்புடைய பதிவுகள்
விழா: இளங்கோ
விழா-கடிதங்கள்
விழா
விஷ்ணுபுரம் விழா- வடகரை வேலன்
விஷ்ணுபுரம் விருது பற்றி…
திருவண்ணாமலையில்
கடிதங்கள்
உண்டாட்டு – நாஞ்சில் விழா
ஜனவரி 3
வாசகர்ளுடனான சந்திப்பு
December 20, 2011
சென்னையில் பேசுகிறேன்
தமிழ் மரபு அறக்கட்டளை என்ற அமைப்பு இவ்வருடம் முதல் டிசம்பரில் இசைவிழாச்சூழலை ஒட்டி ஓர் இலக்கியச்சூழலையும் உருவாக்கும் நோக்குடன் செயல்பட ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு பகுதியாகத் தொடர் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பெரும்பாலும் தமிழ்மரபு, பண்பாடு பற்றிய உரைகள். ஒரு நாள் ஒரு தலைப்பில் ஒருவர் விரிவாக உரையாற்றும் நிகழ்ச்சி இது.
இடம் : ராகசுதா அரங்கம் ,85/2 லஸ் அவென்யூ, மைலாப்பூர்.
சென்னை 4
தொலைபேசி எண்: 24992672
டிசம்பர் 23 அன்று மாலை நான் முதல் உரையாற்றுகிறேன். குறுந்தொகை தமிழ்க் கவிமரபின் நுழைவாயில் என்ற தலைப்பில் உரை
டிசம்பர் 24 அன்று பேராசிரியர் சா.பாலுச்சாமி அவர்கள் உரையார்றுகிறார். அர்ச்சுனன் தபசு மாமல்லபுரம் சிற்பம் பற்றிய புதிய பார்வை என்ற தலைப்பில்
டிசம்பர் 25 அன்று ஸ்தபதி கெ.பி.உமாபதி ஆச்சாரியா அவர்கள் உரையாற்றுகிறார். இந்தியப் புனித கலைப்பாரம்பரியம் என்ற தலைப்பில்
டிசம்பர் 26 அன்று முனைவர் குடவாயில் பாலசுரமணியம் உரையாற்றுகிறார் கங்கைகொண்ட சோழபுரம் வரலாறும் கலையும் என்ற தலைப்பில்
டிசம்பர் 27 அன்று நாட்டியக்கலைஞர் ஸ்வர்ணமால்யா கணேஷ் உரையாற்றுகிறார் . ரகுநாதநாயக்கரின் வாழ்க்கை என்ற தலைப்பில் [காணொளி உரை]
இசையுடன் மரபைக் கொண்டாடுவோம்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
நவீனகுருக்கள்,மிஷனரிகள்
வணக்கம் ஜெ.
நலமா?
பத்திரிக்கைத் துறையில் உள்ள எனது நண்பர் ஒருவர் மூலம் தங்களது எழுத்துகள் பரிச்சயம். மூன்று வருடங்களாக வாசித்து வருகிறேன். கார்ப்பரேட் சாமியார்கள் தொடர்பாக சமீபத்திய கேள்விக்கான தங்களின் பதில் கண்டேன். எனக்கும் சில சந்தேகங்கள் … தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்.
சிறு வயது முதலே கோயில் ஆன்மீக நம்பிக்கைகள் என வளர்ந்து வந்தவன் நான் – விவரமேதுமறியாமலேயே.தேவாரம் திருவாசகம் ஓதுவது எங்கள் வீட்டில் வழக்கமான ஒன்று. கல்லூரிக் காலத்தில் ஆசனங்கள், யோக முறைகள், பிராணாயாமம் முதலியவை பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினேன். வேலைக்குச் சேர்ந்த பிறகு நண்பர் மூலம் வாழும் கலை இயக்கத்தையும் அதன் முறைகளையும் கண்டு பிராணாயாமம் கற்றுக் கொள்ளும் பொருட்டுப் பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன்.
யோக முறைகளும் பிராணாயாமம் போன்றவைகளும் பல நூற்றாண்டுகளாக நமது நாட்டில் இருந்துள்ளன – முனிவர்கள் பலரும் இதைக் கடைபிடித்துள்ளனர் என்பவை எனது நம்பிக்கைகள். இருந்தாலும் இப்போதைய கால நிலையில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் போன்றோர் மூலமே அவற்றில் சிலவற்றைக் கற்க இயல்கிறது என்பதால் அந்த சாமியார்கள் மேல் எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. என்னைப் பொறுத்த வரை அவர்கள் யோகக் கலை கற்றுக் கொடுக்கும் ஒரு குரு,
இது வரையில் எனக்குப் பிரச்சனை இல்லை.
ஆனால், எனது நண்பரும், அந்த இயக்கத்தைச் சார்ந்த சிலரும் நடந்து கொள்ளும் முறை எனக்கு எரிச்சலூட்டியது. அடுத்தடுத்து மேலும் பல பயிற்சி வகுப்புகளில் சேரும்படி வற்புறுத்துதல் – தெரு முனை, பிரபலமான கடைப் பகுதிகளில் நின்று கொண்டு போவோர் வருவோரிடம் துண்டுப் பிரசுரங்கள் வினியோகித்தல் – இயக்கத்திலிருந்து குருமார்கள் வந்தால் வேலைக்கு விடுமுறை எடுத்து விட்டுப் பார்க்கச் செல்வது – ரவிசங்கரையே தெய்வமாகத் தொழுவது – இந்த விஷயங்கள் எனக்குப் பிடிக்கவில்லை,
முக்கிய காரணங்களில் ஒன்று – பயிற்சி வகுப்புகளுக்கான கட்டணம். தாங்கள் கூறியது போலக் குறைந்த கட்டணம் இதன் மதிப்பைக் குறைத்து விடும் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒரு முறை அதை அடிப்படை வகுப்பில் கற்றுக் கொண்ட பிறகும் பல்வேறு வகுப்புகளில் சேரச் சொல்லி வற்புறுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. அனைத்து வகுப்புகளிலும் பிரதானமான விஷயம் – சுதர்சன கிரியா மட்டுமே. சமீபத்திய மேல்நிலை (advanced) வகுப்பு ஒன்றுக்குக் கட்டணம் $450. சம்பாதிக்கும் ஒவ்வொரு டாலரையும் முடிந்தவரை சிக்கனமாகச் சேமித்து இந்தியாவில் இருக்கும் குடும்பத்தைக் காப்பாற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த எனக்கு அது ஒரு பெரிய தொகையே. இது மட்டுமில்லாது ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேரவும் வற்புறுத்தினர். அதன் கட்டணம் $5500 – கிட்டத்தட்ட எனது இரண்டு மாத வருமானம்.
எனது நண்பர்களில் யாருக்கு விருப்பமோ அவர்களிடம் இதைப் பற்றி எடுத்துக் கூறி அவர்கள் விரும்பினால் அடிப்படை வகுப்புகளில் சேரச் சொல்வேன் – ஒரு நல்ல விஷயம் நண்பர்களுக்கும் (அதனருமை தெரிந்தவர்களுக்கு) பயன்படட்டுமே. ஆனால் தெரு முனையில் நின்று கொண்டு அனைவரிடமும் பிரசுரங்கள் விநியோகிப்பது எனக்குச் சரியாகப் படவில்லை,
அடுத்த சில காரணங்கள் – அவரைத் தெய்வமாகத் தொழுவது – அவர் பற்றிப் பல கதைகளைப் பரப்புவது ( நேற்று இரவு எனது கனவில் வந்தார் – வாகனத்தில் போகும்போது விபத்து ஏற்படும் தருவாயில் அவரை நினைத்தேன் உடனே விபத்திலிருந்து காப்பாற்றப்பட்டேன் – நான் நினைத்ததைச் சரியாகக் கண்டுபிடித்து பதில் சொல்லிவிட்டார்… இப்படிப் பல)
அவ்வப்போது நடத்தும் பஜனைகளில் (சத்சங்) கலந்து கொள்வேன் – இசையின் மீது எனக்கிருக்கும் ஈடுபாட்டின் காரணமாக. ஆனால் ஒவ்வொரு முறையும் அடுத்து வரும் வகுப்புகளைப் பற்றியோ அல்லது பல ஊர்களுக்குச் சென்று அங்கு வருகை தரும் குருமார்களைப் பார்ப்பதைப் பற்றியோ பேச ஆரம்பிப்பார்கள். இதனால் அங்கு செல்வதையே தவிர்க்க நினைக்கிறேன்.
இவர்களிடம் எப்படி நடந்து கொள்வது?
சுந்தரம் சுந்தரம்
அன்புள்ள சுந்தரம்,
அதற்குப்பெயர்தான் 'மிஷனரி' தன்மை.
ஏதோ நாளைக்கே உலகம் அழிந்துவிடப்போவதுபோல — பலசமயம் அப்படி உண்மையாகவே நம்பி- உடல்பொருள்ஆவி மூன்றாலும் உச்சகட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுவதைத்தான் நாம் மிஷனரித்தன்மை என்கிறோம். சமணம் முதல் மிஷனரி மதம். பின் பௌத்தம். கிறித்தவ,இஸ்லாமிய மதங்கள்.
பிரச்சாரம் என்ற அம்சத்தில் கிறித்தவம் பெற்ற வெற்றி உலக வரலாற்றில் பிற எங்கும் நிகழ்ந்ததில்லை. இன்று அனைவருமே அந்த வழிகளைத்தான் அப்படியே பின்பற்றுகிறார்கள். நீங்கள் சொல்லியிருக்கும் எல்லாமே கிறித்தவ வழிமுறைகள்தான்.
மிஷனரி மதங்களுக்கெல்லாம் ஒரு பொது அம்சம் உண்டு. அவை ஒரு தீர்க்கதரிசி அல்லது குருவின் உபதேசங்களில் இருந்து ஆரம்பிக்கின்றன. அந்தத் தரப்பு என்பது எவ்வளவு மகத்தானதாக இருந்தாலும் மானுடசிந்தனையின் முடிவிலா சாத்தியக்கூறுகளில் ஒன்றே. ஆனால் அதை மானுட சிந்தனைக்கே சாரம் என்றும் மானுட சிந்தனையின் ஒட்டுமொத்தம் என்றும் அந்த மதம் நம்பும். அந்த நம்பிக்கையைப் பரப்ப முயலும். அவ்வாறு பரவும்தோறும்தான் அது நிலைநிற்கமுடியும். ஆகவே அந்த உச்சகட்டப் பிரச்சாரம் தேவையாகிறது.
ஹரேராமா ஹரே கிருஷ்ணா இயக்கம் கிறித்தவ வழிமுறைகளை அப்படியே திருப்பிச்செய்து மாபெரும் வெற்றி கண்டது. பரம்பொருள்- அதன் அவதாரம்- அவரது மூலநூல்- அதைப் பிரச்சாரம்செய்யும் அமைப்பு- அந்த அமைப்புக்கு ஒரு நிறுவனர் என்று அப்படியே கிறிஸ்தவ மதத்தின் கட்டமைப்புதான் அதற்கும் . அதைத்தொடர்ந்து மகரிஷி மகேஷ் யோகி உருவானார்.
மகரிஷி மகேஷ் யோகியிடமிருந்து உருவானவர்களே ஜக்கியும் ரவிசங்கரும். அவர்களுடைய அமைப்பும் மனநிலையும் எல்லாம் தீர்க்கதரிசன மதங்களுக்குரியவை. அந்த வேகம் அவ்வாறு வருவதே. ஒரு மனிதரின் அமைப்பு உலகளாவிய இயக்கமாக ஆவதற்குக் காரணம் அதிலிருக்கும் அந்த பிரச்சார வேகம்தான்
எனக்கு என்னை 'மதம் மாற்ற'ச் செய்யப்படும் எந்த முயற்சியிலும் எதிர்ப்பு உண்டு. வேடிக்கையாக ஏதாவது சொல்லி விலகிவிடுவேன். இங்கே குமரிமாவட்டத்தில் எங்களுக்கெல்லாம் தினம் நாலைந்து பெந்தேகொஸ்தே, சிஎஸ்ஸை,யெகோவா சாட்சிகளைப் பார்த்துப்பார்த்து இதில் நல்ல பயிற்சியும் உள்ளது.
ஒருவிஷயத்துக்காக எனக்கு இதில் ஈடுபாடு. சமீபகாலமாக ஜக்கி-ரவிசங்கர் ஆட்களும் வெள்ளை ஆடை கட்டிப் படங்களுடன் கூட்டமாக வீடு வீடாகச் செல்கிறார்கள். போனமாதம் அவர்கள் இங்கே ஒரு பக்கா பெந்தேகொஸ்தே மனிதரின் வீட்டு கேட்டைத் திறந்து உள்ளே செல்வதைப்பார்த்தேன். அவர் என்னை என்ன பாடு படுத்தினவர். நன்றாக வேண்டுமெனக் கறுவினாலும் அங்கே நிற்கத் துணியவில்லை.
ஆனால் கற்பனையில் ஜுராசிக் பார்க் படத்தில் ராப்டரை டி-ரெக்ஸ் கவ்விக் குதறியதைக் கண்ட சந்தோஷத்தை மீண்டும் அடைந்தேன்
ஜெ
கார்ப்பரேட் சாமியார்கள் தேவையானவர்களா?
தொடர்புடைய பதிவுகள்
கல்கியின் சமணம்
அயோத்தி தாசர்-கடிதங்கள்
இஸ்லாமும் சாதியும்-ஒருநாவல்.
கார்ல் சகனும் அரவிந்தரும்
சமணம்,சாதிகள்-கடிதம்
துயரம்
யோகமும் கிறித்தவமும்
அயோத்திதாசர் என்னும் முதல்சிந்தனையாளர்-5
அயோத்திதாசர் என்னும் முதல்சிந்தனையாளர்-4
மதங்களின் தொகுப்புத்தன்மை
விழா-கடிதங்கள்
ஒரு எழுத்தாளன் தன் உழைப்பிற்கு பதிலாக இந்த உலகோடு கோருவது ஒன்றை மட்டும் தான். அவன் படைப்புகள் வாசிக்கப்பட வேண்டும். ஒரு எழுத்தாளனின் படைப்பில் ஒரு நல்ல வாசகன் தொட்டுக் காட்டும் ஒரு சிறிய நுண்மை, எத்தனை கோடி இன்பங்களை அந்தப் படைப்பாளியின் மனத்தில் விதைக்க முடியும் என்பதைப் பூமணியோடு நம் வாசகர் வட்ட நண்பர்கள் நிகழ்த்திய உரையாடலைக் கண்ட போது நேரடியாகக் கண்டுகொள்ள முடிந்தது. மகிழ்ச்சியாக இருந்த சமயத்தில் குற்ற உணர்வும் கவ்விக்கொண்டது உண்மை. நான் ஒரு சில சிறுகதைகளைத் தவிர பூமணியின் படைப்புகளைப் படித்ததில்லை. அந்த ஒன்றிரண்டைப் படித்ததும் ஜெ வழியாகக் கிடைத்த அறிமுகத்தால் மட்டுமே. ஜெ இத்தகைய அறிமுகப்படுத்தல்களையும், அடையாளங்காட்டல்களையும் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பதன் நோக்கம் மிக மிகப் பாராட்டப்பட வேண்டியது. என்றும் நன்றியோடு நினைத்து பார்க்க வேண்டியது என்பதல்லாமல், தமிழ் இலக்கியச் சூழலில் அதன் அவசியத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.
இரவு வரை நீண்ட இலக்கிய உரையாடல்களும், தமிழ் உலகின் முக்கியமான இலக்கிய ஆளுமைகளான ஜெ, எஸ் ரா போன்றவர்கள் துளி கர்வம் இல்லாமல் துவக்க நிலை வாசகர்கள் கேட்கும் வெகு அடிப்படையான கேள்விகளுக்கும் கூட மென்மையாக பதில் சொல்லிக் கொண்டிருந்ததும் ஆச்சரியமாக இருந்தது. புகழின் சுமையைத் தலைகளில் கொண்டு திரியாத எளிய மனிதர்கள்.
யுவன், ஜெ மற்றும் எஸ் ரா வின் மேடை உரைகள் அருமையானவை.
சந்தித்த ஒவ்வொருவரையும் எனக்கு மிக நெருக்கமானவர்களாகவே உணர்ந்தேன்.
அடுத்த சந்திப்பு எப்போது என்று இப்போதே மனம் பறக்கத் துவங்கிவிட்டது. :)
ஏன் இவர்களை எல்லாம் முன்பே சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய் விட்டது என்று வருத்தமாக இருந்தது.
அலை ஓய்ந்து கடலாட நினைத்திருந்தேன். அலை ஓய்ந்த பின் கடலாடல் எதற்கு? என்ற உணர்வு முன்பே வந்திருக்கலாம்.
சுந்தர வடிவேலன் சுப்புராஜ்
நேற்று கோவையில் நடந்த விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவுக்கு வந்திருந்தேன். மதியம் ஜெ.மோ அவர்களை சந்தித்தபோது அரங்க சாமி அவர்கள் அறிமுகப்படுத்திய போது அவர் என்னை ஞாபகம் வைத்து முத்துகிருஷ்ணனை எனக்குத் தெரியுமே என்று கூறி நல்லா இருக்கீங்களா என்று கேட்டது ரொம்ப சந்தோசமாக
இருந்தது. எஸ்ராவை சந்தித்தபோது அவரும் திருப்பூரில் சந்தித்த
நிகழ்ச்சியை சொல்லிப் பேசினார். எழுத்தாளர் யுவன் சந்திரசேகரிடம் அவரின் மணற்கேணி, ஒளிவிலகல் புத்தகத்தைப் படித்துள்ளேன். மிகவும் பிடித்திருந்தது என்று சொன்னபோது மிகவும் சந்தோசப்பட்டு அருமையாகப் பேசினார். நிகழ்ச்சியும் மிக அருமையாக இருந்தது. பயனுள்ளதும் மறக்கமுடியாத நாளாக இருந்தது.
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. மிக்க நன்றி.
த.முத்துகிருஷ்ணன்
அன்புள்ள ஜெயமோகன்,
நான் மிகுந்த மனநிறைவுடன் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் "விஷ்ணுபுரம் விருது விழா"வும் ஒன்று. கோவை ஞானி அவர்கள் "மேடையில் அமர்ந்திருக்கும் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன்,அருண் சந்திரசேகர்(?)……"என்று விளிக்க,நீங்கள் சின்ன திடுக்கிடலுடன் யுவன் சந்திரசேகரைத் திரும்பிப் பார்க்க அமர்களமாய் ஆரம்பமாகியது விழா.
விழாவில் யுவன் சந்திரசேகரின் பேச்சு தான் A1 – பூமணியின் "நைவேத்தியம்" சிறுகதையில் பிராமண பாஷை authentic காக இல்லை என்றதற்கு "அப்படியா சொல்லுதீக,நமக்கு அவுக பாஷ பழக்கமில்லப்பா" என்று ஒப்புக்கொண்டதை சொன்னதாகட்டும் "பிறகு" நாவலிலிருந்து நெகிழ்ச்சியான பகுதிகளைக் குறிப்பிட்டதாகட்டும் பூமணியின் முக்கியமான சிறுகதைகளைக் கோடிட்டுக் காட்டியதாகட்டும் அப்ளாசை அள்ளிக் கொண்டு சென்றார்.
பாரதிராஜா இந்த கூட்டத்திற்கு ஒரு label அவ்ளோதான் என்றது இன்றைய தினத்தந்தியைப் பார்த்த பிறகுதான் உறுதியாகியது. நீங்கள் பேசியதோ எஸ்.ரா பேசியதோ பத்தியாகவில்லை. இத்தனை எழுத்தாளர்கள் கலந்து கொண்டார்கள் என்கிற அளவிலேயே செய்தியாகி இருந்தது. இயக்குனர் இமயம் பேசியது மட்டுமே அச்சில் காணக் கிடைத்தது.
வழக்கம் போல எஸ்.ரா…. தன் கி.ரா.பள்ளியின் அனுபவங்கள், "நெய்கரிசல்", கரிசலின் வெக்கை, ராஜநாராயணன் வேம்புன்னா பூமணி கருவேலம் என்று ஒப்பிட்டது…….அடடா!
நீங்கள் பேசுவதை நேற்றுதான் முதல் முறையாக நேரில் பார்கிறேன்,கேட்கிறேன். தாங்கள் பேசியதை எந்த அளவு கிரகித்துக் கொள்ள முயன்றேனோ அதே அளவு தங்கள் உடல் மொழியையும் கவனித்தேன். பூமணி சில கணங்களில் மிகுந்த நெகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்தார். மெல்லிய குரல் அவருடையது. அவரிடம் autograph கேட்ட பொழுது "நான் அதெல்லாம் போடுறது இல்லப்பா.அந்த அளவுக்கு பெரியாளா நானு?" என்றார். ஒரு எழுத்தாளனின் கவசமாக நான் எப்பொழுதும் கர்வத்தையும் மிடுக்கையுமே கருதி வந்திருக்கிறேன். எளிமையும் பணிவும் கூட என்பதற்கு பூமணியே உதாரணம். இம்மண்ணின் உண்மையான இலக்கியவாதிகளை கௌரவித்ததற்கு இலக்கிய சமூகமும் வாசகர்களும் தங்களை என்றென்றும் நினைவுகொள்வர்.
நன்றி.
அன்புடன்,
கோகுல் பிரசாத்.
தொடர்புடைய பதிவுகள்
விழா
விஷ்ணுபுரம் விழா- வடகரை வேலன்
விஷ்ணுபுரம் விருது பற்றி…
கடிதங்கள்
ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.
தங்களது அறம் நூல் வாசித்துக்கொண்டு இருக்கிறேன்.. ஒரு வாரத்திற்கு முன்பு முதல் கதையான அறம் வாசித்து அதன் பாதிப்பில் இருந்து வெளி வர இயலாததால் தொடர்ந்து படிக்கவில்லை. நேற்று வணங்கான் வாசித்தேன்.
"மனிதன் கள்ளமற்று இருக்கும்போது கடவுள் அவரது இரக்கமில்லாத விதிகளை எல்லாம் கொஞ்சம் தளர்த்திக்கொள்ள வேண்டும். வேறு வழியே இல்லை அவருக்கு."
கடவுள் எத்தனையோ முறை இக்கட்டான சூழல்களில் இருந்து காப்பாற்றி இருக்கிறார். அப்போதெல்லாம் மிகுந்த நன்றிமட்டுமே இருந்தது. உங்கள் இந்த வரிகள் வேறொரு கோணத்தில் இருக்கிறது.. பிரமிப்பாக இருக்கிறது. இப்படி எல்லாம் கூட யோசிக்க முடியுமா என்று தோன்றுகிறது. தங்களை வாசிக்க ஆரம்பித்தது குறித்து இன்னும் அதீதப் பெருமை கொள்கிறேன். சொல்லத்தோன்றியது சொல்லிவிட்டேன். மிக்க நன்றி.
பணிவுடன்,
வானவன் மாதேவி.
அன்புள்ள வானவன் மாதேவி,
நலமாக இருக்கிறீர்களா? உடல்நிலை எப்படி இருக்கிறது. உங்கள் கடிதம் மனநெகிழ்ச்சியூட்டியது. வாழ்க்கையின் எல்லாத் தருணங்களிலும் வாழ்க்கையை இனிதாக ஆக்கிக்கொள்ள இலக்கியம் உதவும் என்பதற்கான வாழும் உதாரணம் நீங்கள். சில சமயங்களிலேனும் இதெல்லாம் எதற்கு என்று எழும் ஐயத்துக்கான பதில்கள் போல.
எழுதும்போது சில வரிகள் அந்த மன எழுச்சியைப் பின்பற்றி அமைகின்றன. நானெல்லாம் யோசித்து எழுதும் வகை அல்ல. எழுதியபின் யோசிக்கக்கூடியவன்
ஜெ
அன்புள்ள ஜெ,
தினமும் உங்கள் ஒரு பதிவையாவது படித்து விடுவது என் அன்றாட வேலைகளில் ஒன்று. படித்த பின், தம் அடிக்கும் நண்பர்கள் முகத்தில் காணப்படும் ஒரு ஏகாந்தக் களை என் முகத்தில் இருப்பதை என்னால் உணர முடியும்.
'ஒரு மரம், மூன்று உயிர்கள்' என்னைப் பாதித்த அளவு அதிகம். ஒரு வகையில் பார்த்தால், எல்லாமே அறியாமை, எல்லாரிடம் இருப்பதுவும் ஒரு குழந்தைத்தனம் என்று நினைத்தால் இது போன்ற மனிதர்களை சுலபமாகக் கடந்து போக இயல்கிறது. அந்த முதிர்ச்சி நமக்கு வருவதற்கு உங்கள் எழுத்துக்கள் துணை செய்கின்றன.
அது போக, நமது நடத்தையையும் கண்ணாடி போல் பார்த்துக்கொள்ளவும், முடிந்த அளவுக்கு நம் பலவீனங்களை சரி செய்து கொண்டு, முடியா விட்டால், மறைத்துக் கொண்டு போகவும் ( முடி இருந்தால் தலை சீவவும், இல்லா விட்டால் சொட்டையை மறைத்துக் கொள்வது போல) வழி வகுக்கும் உங்கள் எழுத்துக்கள், என் தனி மனித வாழ்க்கையில் செய்த செல்வாக்கு மிக அதிகம்.
என்றும் உங்கள் அபிமானி,
உமாசங்கர்.
அன்புள்ள உமாசங்கர்
அந்தக் கட்டுரையை மீண்டும் வாசித்தேன்.
இந்த உலகில் வெற்றி என எப்போதும் எண்ணியிருக்கக்கூடியவற்றைப்பற்றி ஒரு பொதுப்பார்வை அது. எது வெற்றி என்பதை நிறைவைக்கொண்டு அளப்பதே முறை என்று தோன்றுகிறது
பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் ஒரு கவிதை
இரு பறவைகள்
வல்லூறு ஆற்றல் மிகுந்த பறவை
காற்றின் படிக்கட்டுகள்
அதன் கண்களுக்கு மட்டுமே தெரியும்
பூமி ஒரு கசங்கிய போர்வை அதற்கு.
சிட்டுக்குருவி சின்னஞ்சிறியது
கிளைகள் மீது எம்பித்தாவுகிறது
வானம் அதற்கு
தொலைதூரத்து ஒளிகடல்.
இரு பறவைகள்
இரண்டிலுமிருந்து வானம்
சமதூரத்தில் இருக்கிறது.
ஒருமரம் மூன்று உயிர்கள்
வணங்கான்
தொடர்புடைய பதிவுகள்
கடிதங்கள்
பின்தொடரும் நிழலின்குரலும் அறமும்
அறம் விழா
அறம் — சிறுகதைத் தொகுப்பு கிடைக்குமிடங்கள்
எதற்காக அடுத்த தலைமுறை?
அறம் வாழும்-கடிதம்
மண்ணாப்பேடி
உங்கள் கதைகள்-கடிதம்
அறம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறதா?
நூறுநாற்காலிகளும் நானும்
December 19, 2011
விழா
விஷ்ணுபுரம் விருது விழாவுக்கு நான் ஒரு வகையில் தாமதமாகவே சென்றேன். இப்போது இந்த விழா பழங்காலக் கூட்டுக்குடும்பக் கல்யாணங்களைப்போல மூன்றுநாள் கொண்டாட்டமாக ஆகிவிட்டது. 17 ஆம் தேதி காலையிலேயே இருபதுபேர் வரை கோவைக்கு வந்துவிட்டார்கள். ஈரோடு திருப்பூர் கரூர் பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் பெங்களூர் ஹைதராபாத் என வெளியூர்களில் இருந்தும் நிறைய நண்பர்கள்.
எஸ்.ராமகிருஷ்ணன் ஈரோடுக்கு வந்து அங்கிருந்து நண்பர்களுடன் கோவைக்கு 17 ஆம்தேதி காலை பத்துமணிக்கே வந்திருந்தார். அவரைச்சுற்றி ஒரு கும்பல் அமர்ந்து அவரது படைப்புகளையும் படைப்பனுபவங்களையும் பற்றிப் பேச ஆரம்பித்தது கிட்டத்தட்ட மறுநாள் காலைவரை நீடித்தது. யுவன் சந்திரசேகர் பதினேழாம் தேதி இரவில் வந்துசேர்ந்தார். அவரைச்சூழ்ந்து இன்னொரு குழு.
நான் சென்றபோது நள்ளிரவு 12 மணி. எனக்கு திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளியில் ஒரு நிகழ்ச்சி. நான் அந்நிகழ்ச்சியைக் காலையில் முடித்துக்கொண்டு மதியம் கிளம்பி மாலையில் கோவை வருவதாகச் சொல்லியிருந்தேன். ஆனால் மாலையில் களம் அமைப்பு சார்பில் திருச்சியில் அறம் தொகுதி பற்றி ஒரு கூட்டம். அதை எனக்குத் தெரிவித்திருந்தார்கள். மறந்துவிட்டேன்.
திருச்சியில் இரு நிகழ்ச்சிகளுமே மிகச்சிறப்பாக நடைபெற்றன. காலையில் மாணவர்களிடம் புத்தகப்படிப்பின் அவசியம் பற்றிப் பேசினேன். மாலையில் அறம் கூட்டத்தில் ஒரிசா மாநிலத்தின் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியும் சிந்துசமவெளி ஊர்ப்பெயர்கள் பற்றிய ஆய்வாளருமான பாலகிருஷ்ணன் என் அறம் கதைகளைப்பற்றிப் பேசினார். இந்திய ஆட்சிப்பணிக்குச் செல்வதற்கு முன்னால் காங்கிரஸின் கள ஊழியராக இருந்திருக்கிறார். தங்குதடையற்ற சிறப்பான பேச்சு. நுட்பமான பேச்சும் கூட. நான் அறம் எழுத நேர்ந்ததன் மன எழுச்சி பற்றிப் பேசினேன்
உடனே காரில் கிளம்பிக் கோவை வந்தேன். கோவை தங்கும் விடுதியில் முப்பது பேர் காத்திருந்தார்கள். பேச ஆரம்பித்தோம். விடியற்காலை ஐந்துமணி வரை பேச்சு நீண்டது. நான் ஐந்து முதல் ஏழு மணிவரை தூங்கினேன். அதற்குள் அடுத்த குழு நண்பர்கள் வர ஆரம்பித்தனர். பூமணி வந்துசேர்ந்தார்.
பாரதிராஜா ஒன்பதுமணிக்கு வந்தார். அவர் கோரியபடி லீ மெரிடியன் ஓட்டலில் அவருக்கு அறை போட்டோம். நானும் எஸ்ராவும் சென்று அவரை சந்தித்தோம். உண்மையில் இது ஏதோ ஒரு டிரஸ்ட் நடத்தும் விழா, நான் அதன் பொறுப்பாளர் என்றே அவர் நினைத்திருந்தார். வந்த பின்புதான் நானும் நண்பர்களும் நடத்தும் விழா என அறிந்து ஆச்சரியப்பட்டார். அவரது தங்குமிடம் மற்றும் செலவுகளைத் தானே ஏற்றுக்கொண்டார்.
கூட்டம் ஐம்பது அறுபதுபேர் என ஆனதும் விடுதியினர் சுதாரித்துக்கொண்டார்கள். உடனே காலிசெய்யவேண்டும் என சொல்ல ஆரம்பித்தனர். நீங்கள் தங்குவதற்கு நான்கு சூட் கேட்டீர்கள். இப்போது அறுபதுபேர் வந்திருக்கிறீர்கள் என்றார்கள். கொஞ்சநேரத்தில் பிளேட்டை மாற்றி எம் எல் ஏவும் குழுவும் வருகிறார்கள் காலி செய்யுங்கள் என சொல்ல ஆரம்பித்தனர்.
வேறுவழியில்லாமல் ஒன்பதுமணி வாக்கில் முருகன் ஓட்டலுக்குச் சென்றோம். அங்கே ஐந்து அறை போட்டோம். ஆனால் அதற்குள் ஐம்பதுபேர் செல்லமுடியாதென்று சொல்லிவிட்டனர். ஓட்டல் உரிமையாளரிடம் அரங்கசாமி பேசி ஒருவழியாக அனுமதி பெற்றுத்தந்தார். மூன்று அறைகளில் மூன்று கூட்டம். ஒன்றில் பூமணி. அவரைப்பார்க்க வந்த ஞானி மற்றும் நண்பர்கள். இன்னொரு அறையில் எஸ்ரா. இன்னொன்றில் யுவன் சந்திரசேகர்.
மதியம் தாண்டியபின் கூட்டம் இன்னும் அதிகரித்தது. அறைக்குள் அமரவே முடியாதபடி. ஓட்டல்காரர்கள் இது இலக்கியக்கூட்டம் மாதிரி இருக்கிறதே எனச் சொல்ல ஆரம்பித்தனர். ஆகவே கூட்டமாக மூன்றுமணிக்கே அரங்குக்குச் சென்றோம். அரங்குக்குள் பல குழுக்களாக அமர்ந்து இலக்கிய விவாதம்.
அடுத்தமுறை ஒரு கல்யாண மண்டபம் எடுக்கவேண்டும் என முடிவெடுத்தோம். இரவு தங்கவும் பகலெல்லாம் பேசவும் அதுவே வசதி.
மாலை ஆறுமணிக்கே அரங்கு நிறைந்துவிட்டது. கீதா ஹால் உரிமையாளர் எல்லாருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. அதைப் பலர் எழுதி விட்டார்கல், எழுதப்போகிறார்கள். விழாவில் என்னுடைய மனப்பதிவுகள் மிகவும் நிறைவூட்டுவனவாக இருந்தன. பாரதிராஜா மிக ஆத்மார்த்தமாகப் பேசினார். வெ.அலெக்ஸ், பிரதீபா நந்தகுமார் ஆகியோர் கச்சிதமாகவும் பொருத்தமாகவும் பேசினர்.
எஸ்ரா மகத்தான பேச்சாளர் என்பது எனக்குத் தெரியும். என் நோக்கில் தமிழின் இலக்கிய வரலாற்றிலேயே மிகச்சிறந்த மேடைப்பேச்சாளர்கள் அவரும் ஜெயகாந்தனும்தான். ஆனால் யுவன் சந்திரசேகர் கிட்டத்தட்ட அவருக்கிணையாகப் பேசியது ஆச்சரியமளித்தது. அவரும் எஸ்ராவும் கோயில்பட்டியை மையமாகக் கொண்டு வளர்ந்தவர்கள். பூமணியின் இளவல்கள். அந்த நினைவுக்கொந்தளிப்புகள் காரணமாக இருக்கலாம்.
விழாவின் நிறைவு என எனக்குப்பட்டது பூமணி அடைந்த மகிழ்ச்சிதான். தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார். விருது என்னும்போது ஒரு சின்னக் கூட்டத்தையே அவர் எதிர்பார்த்தார். கோவை முழுக்க அவருக்கு விளம்பரத் தட்டி வைத்திருந்தோம். ஆனால் அதைவிட அவ்வளவு பெரிய இளைஞர் கும்பல் , அவரை நன்றாக வாசித்து நுணுகி ஆரய்ந்து தொடர்ந்து அவரை சூழ்ந்து அமர்ந்து அவரிடம் பேசியது அவரால் நம்பவே முடியாத ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொருவரிடமும் அவர்கள் உண்மையாக வாசித்தார்களா என்பது போலக் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார். அவர்கள் வாசித்த நுட்பம் தெரிந்தபோது பிரமிப்பு. தன் உரையில் கூட அவர் அந்த இளம் வாசகர்களுக்குத்தான் நன்றி சொல்லியிருந்தார்.
விழாவில் பூமணியின் துணைவி கௌரவிக்கப்பட்டதும் அவர் கண்கலங்கினார். கண்ணீர் விட்டபடி இறங்கினார். அப்போதுதான் உண்மையில் இதோ முக்கியமான ஒன்றைச் செய்திருக்கிறோம் என்ற நிறைவை அடைந்தேன். நண்பர்களும் அதையே சொன்னார்கள்
இரவே எஸ்ரா, யுவன் எல்லாரும் கிளம்பிச் சென்றார்கள். விஷ்ணுபுரம் அமைப்பைச்சேர்ந்தவர்களும் அல்லாமலுமாக 25 பேர் தங்கினார்கள். எல்லாரும் படுக்க அறைகள் போதவில்லை. ஆகவே ஒரு பதினைந்துபேர் இரவெல்லாம் விழித்திருந்து பேசிக்கொண்டே இருந்தோம். ரயில்நிலையம் சென்று டீ குடித்துத் திரும்ப நடந்து திரும்ப டீகுடித்து பொழுதை விடியச்செய்தோம்
மறுநாள் முழுக்க கோவையில் இருந்தேன். நண்பர்கள் கூடவே இருந்தார்கள். 19 இரவு எட்டரை மணிக்கு எனக்கு நாகர்கோயில் எக்ஸ்பிரஸ். அதுவரைக்கும் நண்பர்களுடன் தொடர்ந்து இலக்கிய விவாதம். அறிவியல் புனைகதைகள் முதல் ஆன்மீகம் வரை. எட்டரை மணிக்கு ரயிலேறியதும் தூங்க ஆரம்பித்தேன். விடிந்து நாகர்கோயிலில் எழுந்தபோது ஒரு மூன்றுநாள்கனவு நிறைவுடன் கலைந்தது போலிருந்தது.
விழாவின் பிரச்சினையே இது எங்களை மீறிப் பெரிதாகியபடியே செல்வதுதான். இத்தகைய விழாவுக்கான ஒரு தேவை இருந்திருக்கிறது. அதை இந்த விழா நிரப்புகிறது. பலரால் பல திசைகளில் முன்னெடுக்கப்படும் இந்த விருது இன்று தமிழகத்திலேயே முக்கியமான இலக்கிய விருதாக ஆகிவிட்டது என்றார்கள் பலர். அந்த முக்கியத்துவத்தைக் கையாளுமளவுக்கு நாங்கள் இன்னும் தயாராக்கிக்கொள்ளவேண்டும்.
விஷ்ணுபுரம் விழா பற்றி வடகரை வேலன் எழுதிய பதிவு
படங்கள் சிறில்
படங்கள் ஆனந்த்
தொடர்புடைய பதிவுகள்
விஷ்ணுபுரம் விழா- வடகரை வேலன்
விஷ்ணுபுரம் விருது பற்றி…
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
