ஆகவே கொலை புரிக!

நானும் ஒரு வருஷத்துக்கு மேலாக சிலிகான் ஷெல்ஃப் என்று ப்ளாக் எழுதி வருகிறேன். என் பாணியில், என் ரசனைக்கு ஏற்றபடி, சமரசம் இல்லாமல் மனதுக்குப் பட்டதை எழுதி வருகிறேன். நான் எழுதுவது விமர்சனம் என்பதை விட, புத்தக அறிமுகம் என்பதுதான் இன்னும் பொருத்தமாக இருக்கும். ஒரு ஏழெட்டுப் பேர் மாதமொரு முறை கூடி ஏதோ ஒரு புத்தகத்தைப் பற்றிப் பேசுகிறோம்.


நான் மட்டுமல்ல இந்தக் குழும உறுப்பினர்கள் பலரும் ப்ளாக் எழுதுகிறார்கள். கூகிளில் buzz-கிறார்கள். ட்விட்டர், ஃ பேஸ்புக், இந்தக் குழுமம் எதிலாவது புத்தகம், இலக்கியம் பற்றி அவரவர் கருத்தைப் பதிவு செய்து கொண்டே இருக்கிறோம்.


இதனால் எல்லாம் பைசாவுக்கு பிரயோஜனம் உண்டா, இத்தனை நேரம் செலவழித்து என்னத்தைக் கண்டோம் என்று எனக்கு சமீப காலத்தில் ஒரு சோர்வு உருவாகி இருக்கிறது. செலவழிக்கும் நேரம் அதிகம், பயன் குறைவு என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது.


இது ஏன் படிக்கிறோம் என்ற கேள்வி இல்லை. அப்படி ஒரு கேள்வி எழாதபடி என் மூளை சலவை செய்யப்பட்டிருக்கிறது. புத்தக அறிமுகத்தால் என்ன பயன் என்ற கேள்வியும் இல்லை. சொந்த அனுபவங்கள் எனக்கு என்ன பயன் என்று தெளிவுபடுத்தி இருக்கின்றன. இப்படி மாய்ந்து மாய்ந்து எழுதுவதால் என்ன பயன்?


ஆர்வி


சிலிகான் ஷெல்ஃப்


அன்புள்ள ஆர்வி,


எல்லாச் செயல்களிலும், அவை எவ்வளவு பயனுள்ளவையாக உண்மையில் இருந்தாலும், ஒரு சோர்வுத்தருணம் உண்டு. அதுவும் அதன் பகுதியே. இதை எழுதும்போது காகா காலேல்கரின் சரிதையை வாசித்துக்கொண்டிருக்கிறேன். காந்தியின் சீடர். எழுத்தாளர். நம்மைப்போன்றவரல்ல, லௌகீக வாழ்க்கையே இல்லாத அர்ப்பணிப்புள்ள தேச சேவகர். அவர் தொடங்கிய பெரும்பாலான முயற்சிகள் வெள்ளைய அரசால் அழிக்கப்பட்டன. பல முயற்சிகள் பல காரணங்களால் தேங்கி நின்றன. கூட இருப்பவர்கள் மனம் சோர்கிறார்கள். ஆனால் 'இவற்றைச் செய்யாமலிருந்தால் அடையும் வெறுமையைவிட செய்து நிறைவேறாமல் போவது மேல்' என காகா பதிலளிக்கிறார். பெரும்செயல்வீரர்கள் இத்தகைய சோர்வை அறியாதவர்கள் அல்ல, சோர்வைக் குறைந்த கால அவகாசத்தில் சமாதானம் செய்துகொண்டு மீளத்தெரிந்தவர்கள்.


நம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கை நாம் புரிந்துகொள்ளக்கூடிய அளவு சிறிதல்ல. மிகப்பிரம்மாண்டமான, மிகச்சிக்கலான ஒரு கூட்டியக்கம் இது. ஒன்று இன்னொன்றாக நீளும் நிகழ்ச்சிகளின் வலை. தற்செயல்களின் நடனம் அல்லது விதியின் ஆடல். இதில் நாம் செய்யக்கூடிய எந்த செயலும் எப்படி என்ன விளைவை உருவாக்கும் என்று சொல்லிவிடமுடியாது. சின்னஞ்சிறு செயல் இந்த மாபெரும் வலையை உலுக்கலாம். பெரிய செயல் ஒன்றுமே ஆகாமலும் போகலாம். நம்மால் இதைப் புரிந்துகொள்ளவே முடியாது. நாம் செய்வதன் பலனை மதிப்பிட முயன்றால் ஒன்றுமே செய்ய முடியாது. ஆகவேதான் கீதை. 'பலனை என்னிடம் விட்டுவிட்டு உன் தன்னியல்புக்கு உகந்த கடமையை மட்டும் செய்' என்ற அறிவுரை.


ஆனால் இங்கே செய்யப்படும் எச்செயலும் வீணல்ல என்பதும் ஓர் அனுபவமே. எல்லாச் செயலுக்கும் எதிர்ச்செயலுண்டு. ஆகவே எல்லாமே எங்கோ எப்படியோ விளைவுகளை உருவாக்கிக்கொண்டேதான் உள்ளன. அந்த எண்ணமே நம்மை செயல்நோக்கிச் செலுத்தவேண்டும்.


கருத்தியல் தளத்திலான செயல்பாடுகள் உருவாக்கும் விளைவுகள் மிக மறைமுகமானவை. உங்களை நாள்தோறும் மறுத்துக்கொண்டே இருக்கும் ஒருவரை நீங்கள் உள்ளூர மாற்றிக்கொண்டே இருக்கக்கூடும் – நீங்கள் இருவருமே அதை அறிய மாட்டீர்கள். ஒரு கல் நீரில் விழுந்து அலைகளை உருவாக்குவது போலத்தான் ஒரு கருத்து சமூக மனதில் செயல்படுகிறது. முதலில் சின்ன வட்டம். அடுத்து பெரியவட்டம். அடுத்து அதைவிட பெரிய வட்டம். சின்னவட்டமே பெரிய வட்டத்தை உருவாக்குகிறது. சின்னவட்டம் தீவிரமானது. பெரிய வட்டம் பலவீனமானது.


கருத்துத்தளத்தில் செயல்படும் சிலர் ஒரு பிரம்மாண்டமான சமூகத்தை மாற்றுவது அப்படித்தான். அது சாத்தியமற்றதாகத் தோன்றும். ஆனால் அது நிகழ்ந்தபடி இருக்கிறது. 1880களில் பெண்களைப் பள்ளிக்கூடம் அனுப்பவேண்டுமெனத் தீவிரமாகத் தமிழில் எழுதி பேசியவர்கள் சிலநூறு பேர். நூறுவருடங்களில் தமிழகத்தில் ஆண்களைவிடப் பெண்கள் அதிகம் படிக்கும் காலம் வந்துவிடுமென அவர்கள் கனவுகூடக் கண்டிருக்கமாட்டார்கள். அதை நிகழ்த்தியது 250 பிரதி அச்சிடப்பட்ட இதழ்களில் அவர்கள் எழுதிய கட்டுரைகள் என்று அவர்களிடம் சொன்னால் மூர்ச்சையாகிவிடுவார்கள். இந்த பிரம்மாண்டமான நிகழ்வு ஒரு தனிமனிதனுடைய ஊகங்களைத் தாண்டியது.


இசைத்தட்டின் நடுவே உள்ள அச்சு அதைத் தூக்கிச்சுழற்றுவது போல ஒரு சமூகத்தின் கருத்தியல் மையமே அதை இயக்குகிறது. அதில் எல்லாக் கருத்துக்களுக்கும் இடமுண்டு. அரவிந்தன் நீலகண்டனும் அ.மார்க்ஸும் அதில் பங்களிப்பாற்றுகிறார்கள். ஆர்வியும் டாக்டர் சுனிலும் அதில் பங்களிப்பாற்றுகிறார்கள். கருத்துக்கள் என்பவை ஒன்றுடன் ஒன்று மோதி சமரசம் செய்தும் மீறியும் செயல்படுகின்றன.


நாம் நம் அன்றாடவாழ்க்கையின் அர்த்தமின்மையை உள்ளூர அறிந்தே இருக்கிறோம். தேடிச்சோறு நிதம் தின்னும் வாழ்க்கை. பிரபஞ்ச அர்த்தத்தை உணர்ந்து இந்த அன்றாட வாழ்க்கையில் சும்மா அமர்ந்திருக்க எல்லாராலும் முடியாது. இந்த அன்றாட வாழ்க்கையின் வெறுமையை வெல்லவே நாம் செயலில் ஈடுபடுகிறோம். செயல் இல்லாவிட்டால் இந்த வெறுமை நம்மைக் கொன்றுவிடும். 'போர் அடிக்கிறது' என நாம் சொல்வதே அர்த்தமற்ற காலத்தை நாம் உணர்வதுதான். அதைத் தாண்டவே மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள். உண்மையில் வேலையே குறி என்றிருப்பவர்கள் அந்த வேலை அளிக்கும் எந்த லாபத்துக்காகவும் அதைச் செய்யவில்லை. அந்த வேலை அவர்களின் அன்றாட அலுப்பை மறைத்து அவர்களை முன்னெடுத்துச் செல்லுகிறது என்பதனால்தான் செய்கிறார்கள். அதுவும் போதாமல் குடிக்கிறார்கள். சூதாடுகிறார்கள். அவ்வாறு செய்யும் செயல்கள் உருவாக்கும் வெறுமையை அவ்வப்போது உணர்ந்து இன்னும் சலிப்படைகிறார்கள்.


அதற்குப்பதிலாக நமக்குப்பிடித்த ஒன்றைச்செய்து இந்த அன்றாடவெறுமையைத் தாண்ட முடிந்தால் அதைவிட மகிழ்ச்சியானது ஏதும் இல்லை. நம் அடிப்படை இயல்புக்கு உகந்த ஒரு செயலைச் செய்வதன் மூலம் நாம் நம் நாட்களைப் பொருளுள்ளதாக ஆக்கிக்கொண்டால் வாழ்க்கை நிறைவுறுகிறது. அதற்கு அப்பால் வாழ்க்கைக்கு என பெரிய 'நோக்கமோ' 'அர்த்தமோ' இல்லை. இருந்தால் அது லௌகீக வாழ்க்கையில் அறியக்கூடியதும் அல்ல.


ஆகவே அர்ச்சுனா கொலை புரிக! ))))


ஜெ


ஆர்விக்கு ஒரு வாழ்த்து

தொடர்புடைய பதிவுகள்

சரித்திர நாவல்கள்
ஆர்வியின் கதை
வாசிப்புக்காக ஒரு தளம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 09, 2012 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.