அன்பை வாங்கிக்கொள்ளுதல்…[கடலூர் சீனு]

20-2-2011


இனிய ஜெ.எம்.,


'யானை டாக்டர்' எடுப்பிலேயே க்ளைமேக்ஸ் பாராவைத்தான் படித்தேன். கதை வரிசையைப் படித்த பாதிப்பு. யானை டாக்டர் அதிலும் வித்தியாசம். வெல்லத்தை எந்தப்பக்கம் கடித்தாலும் இனிக்கும் என்பதுபோல உச்சங்களால் மட்டுமேயான கதை. யானை விரும்பி நண்பர் ஒருவரிடம் அக்கதை பற்றிப் பேசினேன். அவர் முதுமலையில் எடுத்த வீடியோ ஒன்றைக் காட்டினார். ஜீப்பில் இருந்தவாறே, பிறந்து சிலவாரமான யானைக் குட்டியை வீடியோ எடுக்கிறார். தூரத்திலிருந்து அம்மா யானை, குட்டிக்கு ஆபத்து என்று கருதி ஓடி வருகிறது. நம் நண்பர் ஜீப்பைக் கிளப்பி ஓட்டியபடி படம் எடுக்கிறார்.


செடிகள் முறிய, புழுதி பறக்க, உடம்பெல்லாம் ஏதோ களிமண் பூச்சு உதறிப் பறக்க, யானை ஓடி வருகிறது. ஓடிவரும் யானை இத்தனை வேகமாக வரும் என்பதையே இப்போதுதான் பார்த்தேன். உருண்டுவரும் பெரும்பாறை எனத் தோன்றவைக்கும், அடிவயிற்றில் கிலி கிளப்பும் காட்சி. இதுதான் கோயிலில் பிச்சை எடுக்கிறது என்பதை நினைத்தால் அடப்பாவமே என்றுதான் இருக்கிறது. ஒரு மிருகம், ஒரு மனிதன் சக மனிதனை எந்த அளவு புரிந்து கொள்கிறானோ அதைக்காட்டிலும் நுட்பமாகப் புரிந்து கொள்கிறது தன் எஜமானை என்பதைப் பலமுறை கண்டிருக்கிறேன்.


மற்றொரு வீடியோ. ஆப்பிரிக்கக் காட்டில் பெண்சிங்கங்களின் எண்ணிக்கை குறைகிறதா என ஆராய ஒரு மனிதர் செல்கிறார். சிங்கங்களின் எண்ணிக்கையைக் கூட்டும் முயற்சியில் இருக்கிறார் அவர். அவரிடம் கால் ஒடிந்த சிங்கக்குட்டி ஒன்று இருக்கிறது. அதை குணமாக்கி கழுத்தில் சிப் மாட்டி மீண்டும் காட்டுக்குள் சில மாதம் கழித்து விட்டுவிடுகிறார்.


சில வருடங்கள் கழித்து அதே காட்டுக்கு வருகிறார். சிப் தரும் சிக்னல் மூலமாக அந்த சிங்கம் உள்ள இடத்தை அடைகிறார். காத்திருக்கிறார். சிங்கம் வருகிறது. தூரத்தில் இருந்து அவரைப் பார்க்கிறது. உடல் விரைக்கிறது. கூர்ந்து பார்க்கிறது. அதன் உடல்மொழி சட்டென மாறுகிறது. அட நீயா? என்பதான பாவம். துள்ளி ஓடிவந்து, அவர் மீதேறி விழுந்து புரண்டு நக்கி, உருமி, செல்லக் கடி கடித்து – ஒரே கணம் 100 வயலினின் ஒலி நம்மை சுழற்றி அடிக்கிறது.


உருண்டு புரண்டு இருவரும் ஆசுவாசம் ஆனபின்தான் கிளைமேக்ஸ். தூரத்துப் புதருக்குள் இருந்து அதன் 2 குட்டிகள் தத்தித் தத்தி நடந்து வருகின்றன. அவற்றை வாஞ்சையோடு கொஞ்சுகிறார். தூரத்துப் புல்வெளிக்குள் நின்றபடி வேடிக்கை பார்க்கின்றன மற்ற சிங்கங்கள். அதில் பெண்குட்டி ஒன்றுக்கு சிப் மாட்டுகிறார். விட்டுவிட்டுத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி மீள்கிறார். இசையருவி வீழ அந்த பி பி சி டாகுமெண்டரி முடிந்தது. எனக்குள் படிமங்களாகிப் போனவைகளில் ஒன்று அந்த டாகுமெண்டரி.


வீட்டுக்கு எப்போதும் லட்சுமி என்ற மாடு வரும். அதன் எஜமான் வீடு 2 கி.மீ. தள்ளி. நகர்முடிவில் கெடிலம் ஆற்றுப் புல்வெளி ரயில்வே பாலம். யாரும் இருக்கமாட்டார்கள். அங்கேதான் லட்சுமி புல்மேயும். ஒருமுறை ரத்தம் ஒழுக ஒழுக நொண்டியபடி மிகமிகப் பக்கம் இருக்கும் அதன் எஜமானர் வீட்டை விட்டுவிட்டு, 2கிமீ தள்ளி இருக்கும் எங்கள் வீட்டுக்கு வந்து வராண்டாவில் படுத்துவிட்டது. பின்காலில் பதிந்திருந்தது ஒரு முழு பீர்பாட்டில் மூடி. லாடம் அடிப்பவரைக் கூட்டிவந்து அதன் குளம்பை சரி செய்தோம். மாட்டு ஓனர் ரொம்ப ஆச்சர்யப்பட்டார். லட்சுமி இங்க ஏன் வந்தது அப்படின்னு.


தாத்தா (அம்மாவோட அப்பா) ஒரு குரங்கு வளர்த்தார். மரத்தில்இருந்து விழுந்த குட்டி. அண்ணன் அதற்குக் கூடவே வளர்ந்தார். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நம் இந்தியப் பண்பாடு எனத் திரும்பத்திரும்ப சத்தம் போட்டு மனதுக்குள் உருவேற்றுவார். குட்டி, அண்ணன் மடியில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கும். என் அண்ணனின் பள்ளி நாட்கள் அந்தக் குட்டியோடுதான் கழிந்தது. அதன் பேர் ரஜி. தாத்தா என்றால் அதற்கு உயிர். யாருக்கும் அடங்காக ரஜி,தாத்தா ஒரு அதட்டுப் போட்டால் நின்றுவிடும். வயது ஏற அதன் தொல்லைகளும் ஏறின. பற்கள் எல்லாம் ராவிய பின்னும் பிடிக்காதவர்களை ரத்தம் வரக் கடித்து வைத்தது. தொல்லை தாங்கமுடியவில்லை. ஒருநாள் அதுவாகவே காணாமல் போய்விட்டது. எல்லாரும் சில நாள் கவலைப்பட்டுவிட்டு விட்டுவிட்டனர்.


சில வருடம் கழிந்தது. தாத்தாவுக்கு ஹார்ட் அட்டாக். ஆஸ்பிடலில் சேர்த்தோம். ஒரு மாதப்படுக்கை. அங்கே ஜன்னலுக்கு வெளியே ஓர் குரங்கு. தாத்தா அறையையே சுற்றிச் சுற்றி வரும். யார் எது கொடுத்தாலும் சாப்பிடாது. ஆனால் இரவுபகலாக அதே அறையைச் சுற்றிச் சுற்றி வரும். தாத்தா தேறியபின் கண்டுகொண்டார். அது ரஜி. டிஸ்சார்ஜ் ஆகி ஆட்டோவில் ஏறினார். சாலை பூராப் பக்கத்து மரம், காம்பவுண்ட், கட்டிடம் என துரத்தி வந்தது. தாத்தா, வீட்டு வாசல் ஏறினார். ரஜி வந்து காலடியில் அமர்ந்தது. தாத்தா ஒரு கேரட்டை எடுத்துத் தந்தார். வாங்கிக் கடித்துத் தொண்டையில் அதக்கியது. அவரைப் பார்த்தது. அவரும் கலங்கி இருந்தார். மெல்ல அதன் தலையில் செல்லமாகத் தட்டினார். நிமிர்ந்து ஒருமுறை அவர் முகத்தைப் பார்த்துவிட்டு விறுவிறு என எதிர்சாரி மரத்தில் ஏறி ஓடி மறைந்தது. ரஜி குரங்குக் கூட்டத்தோடு சேரமுடியாத ரஜி.


இரவு நடுஜாமம் வீடு திரும்புவேன் என நகர்நாய் முழுக்க வால்குழைத்து என் பின்னால் வரும். எல்லா நாய்க்கும் என்னைத் தெரியும். ஆம் அவைகளுக்கு என்னைத் தெரியும். எந்த ஊரிலும் நாயோடு உண்டு உறங்கும் ஒரு பிளாட்பாரப் பரதேசியைப் பார்க்கலாம். ஒரே ஒரு நாய்க்குட்டி போதும். நாம் அனாதை அல்ல என்று புரிந்துகொள்ள. நாம் இயற்கையால் கைவிடப்பட்ட மிருகங்களல்ல. மிருகங்களால் நேசிக்கப்பட்ட, நேசிக்கப்படும் நாம். "மகத்தான நாம்"  நாம் நாம்! 'வானில் பறக்கும் புள்ளெலாம் நாம்'. எப்போதும் நான் தொட்டு மீளும் இந்த மனவிரிவை இன்னொருமுறை உங்கள் எழுத்தால் உண்டாக்கித் தந்தீர்கள்.


மனங்களை உள்ளடக்கிய மகாமனம். பிரிவேயற்ற தன்மை இந்தக்கணம். மானசீகமாக உங்களைக் கட்டியணைத்து முத்தமிடுகிறேன்.


சீனு

கடலூர்

தொடர்புடைய பதிவுகள்

முகம் விருது
அன்புள்ள ஜெயமோகன் — ஒரு நூல்
கடிதங்கள்
கடிதங்கள்
அறம் வாழும்-கடிதம்
யானை- கடிதம்
யானைடாக்டர்-ஓர் உரை
வாழும் கணங்கள்-கடிதங்கள்
இலங்கையில் இருந்து ஒரு கடிதம்
யானை டாக்டர் இலவச நூல் வினியோகம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 25, 2011 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.