Jeyamohan's Blog, page 2268

December 4, 2011

ஈரோடு-கடிதங்கள்

அன்பு ஜெயமோகனுக்கு,


எங்கள் ஈரோட்டில் உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.


அறம் என்கிற சொல் எப்போதும் புதிரானது. அதற்கென்று தனித்த அர்த்தத்தை நம்மால் சுட்டிவிட முடியாது என்பது என் எண்ணம். அதன் புதிர்த்தன்மைதான் ஒவ்வொரு முறையும் உங்களைப் போன்ற எழுத்தாளரைத் தூங்கவிடாமலும், எங்களைப் போன்ற வாசகரை வாசிப்பில் நிறைவடையச் செய்யாமலும் தேடியபடியே இருக்கச் செய்கிறது. தேடுதலில் நாம் சந்தித்துக் கொள்கிற தருணம் வாழ்வை இலகுவாக்குகிறது;கூர்மையாக்குகிறது.


தத்துவங்களும்,தர்க்கங்களும் நிரம்பியிருக்கும் நம் மனதிற்கு உவப்பான – நிரந்தரமான – நித்திய சுகம் என்பது எப்போதும் சாத்தியமே இல்லை என்வும் படுகிறது. சாகும்வரை ஏதோ ஒன்றைக் கண்டடையும் பொருட்டு இயங்கிக்கொண்டிருப்பவர்களாகவே இருக்கப்போகிறோம் – 'ஏதோ ஒன்று' இருக்கிறதா,இல்லையா என்பது தெரியாமலே!


அடுத்த முறை உரையாடும் வாய்ப்பிருப்பின், பகிர்ந்துகொள்வோம்.


இறுதியாக,


நண்பர் அரங்கசாமிக்கு பிரத்யேக நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம், யானை டாக்டர் இலவசப் பிரதிக்காக.


சிவவாக்கியன்(சக்தி)

1826 மீடியா/99769 515 85


அன்புள்ள சக்தி


நன்றி. ஈரோட்டில் நண்பர்களை சந்தித்தது உற்சாகமூட்டுவதாக இருந்தது. உரையாடலில் எப்போதும் நிகழ்வது ஒன்றுண்டு. சேர்ந்து நீந்தும்போது கைகால்கள் தொட்டுக்கொள்வதுபோல நம் மனங்கள் ஆழத்தில் உரசிக்கொள்வதுதான். அந்தரங்கமாக நம்மை நாம் கண்டுகொள்ளும் தருணம் அது.


அந்த வகையான நிமிடங்கள் சில வாய்த்தன


ஜெ


அன்புள்ள ஜெயமோகன்,


இன்னும் வெளிவர முடியாக் கனவென இறுக்குகிறது உங்களை

நேரில் கண்ட அந்த நிமிடங்கள். ஈரோட்டில் அறம் சிறுகதைத்தொகுப்பு

வெளியீட்டு விழா நவம்பர் 26 சனிக்கிழமை மாலை நடந்த பொழுது முதன் முதலாக

உங்களைப் பார்த்தேன். பேசுவதற்குப் பெரும் தயக்கம் .பெரும் பிரமாண்டத்தின்

முன் நிற்கிற சிறு துகளென என்னை உணர்ந்ததால் குரல் ஏதோ நீண்டகாலம்

படுக்கையிலிருந்து மீண்டவனுடையது போல மாறிப் போனது. உண்மையில் உங்களோடு

பேசியது நெடும் கனவோ என்ற அச்சம் இப்பொழுது வரை தொடர்கிறது.உங்களோடு

பேசவும் விவாதிக்கவும் நிறைய உள்ளன . இந்தத் தமிழ் தட்டச்சுதான் பெரும்

தடை …மீண்டும் வருவேன்


ம.கோவர்த்தனன்,ஈரோடு


அன்புள்ள கோவர்த்தனன்


பகலில் காலைமுதலே அறையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். நாம் அப்போது சந்தித்திருந்தால் இன்னும் நிறையவே பேசியிருக்கலாம். நிகழ்ச்சிக்குப்பின் சந்திப்பு என்று சொல்லமுடியாது. ஒரு மெல்லிய அறிமுகம் அவ்வளவுதான்.


ஈரோடு என்னுடைய ஊர். வந்துகொண்டேதான் இருப்பேன். அனேகமாக இனி ஜனவரி 13 தேதி வாக்கில் வருவேன் என நினைக்கிறேன்


சந்திப்போம்


ஜெ


அன்புள்ள ஜெ…


எந்தத் தொழிலிலும் வாரிசுகளை பார்க்க முடிகிறது, அரசியல், சினிமா, வணிகம், மருத்துவம் இப்படி.. அப்பாவோ, அம்மாவோ இருக்கும் துறையில் தாங்களும் நுழைந்து அவர்களுக்கு இணையாகவோ அல்லது அவர்களை விட சிறப்பாகவோ செயல்படும் வாரிசுகளைப் பார்க்க முடிகிறது…. இலக்கியத்துறை தவிர.. எனக்குத் தெரிந்து பிரபல இலக்கியவாதிகள் குழந்தைகள் இலக்கியத்துக்கு வருவதே இல்லை, அப்படியே வந்தாலும் அவர்கள் அளவுக்குப் புகழ் பெறுவதில்லை. இது தமிழில் மட்டுமா, இல்லை உலக அளவிலுமா? ஏன் என்று நினைக்கிறீர்கள்?


பி.கு: ஈரோடு புத்தக வெளியீட்டு விழா புகைப்படங்களில் அஜிதனைப் பார்த்தபோது, இவரும் அப்பா மாதிரி கதை எழுதுவாரோ என்று தோன்றியதால் எழுந்த கேள்வி இது…


நன்றி..


அன்புடன்

வெங்கட்

http://venpu.blogspot.com/


அன்புள்ள வெங்கட்


ஜெயகாந்தன் ஒருமுறை சொன்னார். எல்லாக் கலையிலும் பெரும்பகுதியைக் கற்பிக்க முடிகிறது. ஆகவே இசைக்கலைஞர்களின் பிள்ளைகள் இசைக்கலைஞர்களாக முடிகிறது. இலக்கியத்தைக் கற்பிக்கவே முடிவதில்லை. ஆகவே வாரிசுகளை இலக்கியவாதிகளாக ஆக்கமுடிவதில்லை என்று. ஆகவே இலக்கியம் கலை அல்ல, அது தரிசனம் என்று.


அஜிதன் நானறிந்த மகத்தான வாசகர்களில் ஒருவன். இன்றைய தகவல்தொடர்பு யுகம் அளிக்கும் வசதிகளை அனுபவிக்கும் தலைமுறை. தேவையான சிறந்த நூல்களை மட்டுமே வாசிக்க வாய்ப்பிருக்கிறது, அவன் வயதில் நானெல்லாம் நூல்களுக்காகத் தேடி அலைந்துகொண்டிருந்தேன். பத்து குப்பைகளுக்கு ஒரு நல்லநூல் என்று கிடைத்துவந்தது. மிகச்சிறந்த வழிகாட்டுதல் அம்மாவிடமிருந்து கிடைத்தபோதிலும், மிகச்சிறந்த நூலகங்களால் சூழப்பட்டிருந்தபோதிலும் வேறு வழியிருக்கவில்லை.


அஜிதனின் ஆங்கில நடையும் தமிழ் நடையும் மிகச்சிறப்பானவை. துல்லியமான சொல்லாட்சியும் மெல்லிய வேடிக்கையும் கொண்டவை. ஆனால் அவனுக்கு இலக்கியம் இரண்டாம்பட்சமே. அவனுடைய ஆர்வம் சூழியல் சார்ந்தே உள்ளது. அத்துறையில் எதிர்காலத்தில் சிறந்த ஆக்கங்களை எழுதக்கூடும்.


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 04, 2011 10:30

December 3, 2011

உறைகாலம்

1973ல் அச்சணி என்ற மலையாளப்படம் வெளிவந்தது. மேலும் மூன்றுவருடம் கழித்து நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது அந்தப்படத்தை அருமனை திரையரங்கில் பார்த்தேன். பிரேம் நசீரும் ,சுதீரும், சுஜாதாவும் நடித்தபடம். ஏ.வின்செண்ட் இயக்கியது. மலையாளத்தின் செவ்வியல் திரைப்படங்களில் ஒன்று.


அச்சாணிபடத்தின் பாடல்கள் எல்லாமே அந்தக்காலத்தில் மிக மிகப்பிரபலம். ' மல்லிகா பாணன் தன்றே வில்லொடிச்சு, மந்தார மலர்கொண்டு சரம் தொடுத்து' 'சமயமாம் நதி' போன்ற பாடல்கள். ஆனால் அன்றும் இத்தனை வருடங்கள் கழித்து இன்றும் மலையாள திரையிசையில் ஒரு முக்கியமான அடையாளமாக இருப்பது இந்தப்பாடல்


என்றெ ஸ்வப்னத்தின் தாமர பொய்கயில்

வந்நிறங்ஙிய ரூபவதி

நீல தாமர மிழிகள் துறந்நு

நின்னே நோக்கி நிந்நு

சைத்ரம்

நின்றெ நீராட்டு கண்டு நிந்நு


என்றே ஃபாவன ரஸனவனத்தில்

வந்நு சேர்ந்நொரு வன மோகினி

வர்ண சுந்தரமாம் தாலங்ஙளேந்தி

வன்ய புஷ்ப கணம் நிரயாய் நின்னெ

வரவேல்குவானாய் ஒருங்ஙி நிந்நு


பிரேம சிந்த தன் தேவ நந்தனததிலே

பூமரங்ஙள் பூத்த ராவில்

நின்றே நர்த்தனம் காணான் ஒருங்ஙி

நின்னே காத்து நிந்நு சாரே

நீலாகசவும் தாரகளும்




[என் கனவின் தாமரைப்பொய்கையில்

வந்திறங்கிய அழகி

நீலத்தாமரை கண்களை திறந்து

உன்னை பார்த்து நின்றது

சித்திரை மாதம்

உனது நீராடலைக் கண்டு நின்றது


என் கற்பனையின் அழகியகாட்டில்

வந்து சேர்ந்தாள் ஒரு வனமோகினி

வண்ணம் பொலிந்த தட்டுகளேந்தி

வனமலர் கூட்டம் வரிசையாக நின்றது

உன்னை வரவேற்க காத்து நின்றது


காதல் எண்ணங்களின் தேவ நந்தவனத்தில்

பூமரங்கள் பூத்த இரவில்

உனது நடனத்தைப்பார்ப்பதற்காக

உன்னைக்காத்து நின்றன தூரத்தில்

நீலவானமும் தாரகங்களும் ]



நெடுநாட்களுக்குப்பின் இந்த பாடலைப்பார்த்தேன். நினைவுகள் இலையை மழைத்துளி போல மனதைக் கனத்துச் சொட்டவைத்தன. கற்பனாவாதம் கனிந்த பாடல்களில் ஒன்று. பெண் ஒரு கனவு மட்டுமாக மனதில் நிறைந்திருந்த நாட்களின் நினைவு.


ஆனால் இப்போது இன்னும் பல சுவாரசியங்கள். எழுபதுகளின் ஹிப்பி அலையை இந்த பாடல் சுட்டிக்காட்டுகிறது. பாடல் நடக்குமிடம் ஹிப்பிகளின் ஒரு 'குகை'. ஆனால் அதை மிகவும் படைப்பூக்கம் கொண்ட ஓர் இடமாக காட்டுகிறார் இயக்குநர். இசை, ஓவியம்,புகை, போதை என ஒரு விசித்திரமான இனிமை கனிந்த சூழல். ஏ.வின்செண்டின் அற்புதமான ஒளிப்பதிவு விசித்திரமான கோணங்கள் மற்றும் நகர்வுகள் வழியாக குறைந்த செலவில் ஒரே இடத்தில் எடுக்கப்பட்ட காட்சியிலேயே ஒரு மனப்பிறழ்வுநிலையை கொண்டுவர முயல்கிறது.


ஆச்சரியம், பாடிக்கொண்டிருப்பவர் ஜேசுதாஸ். அதைவிட ஆச்சரியமொன்றுண்டு, ஒரு முதிரா இளைஞர் பின்னணியில் முகம் காட்டுகிறார். பின்னாளில் பெரிய நடிகர்.ஒரு காலத்தில் மலையாளத்தின் தரமான படங்களின் ஓரத்தில் எங்கோ இருந்துகொண்டிருந்தார். உண்மையில் அவர் அந்த இயக்கத்தால் உருவாக்கப்பட்டவர்.


இலக்கியம் காலத்தை நிகழ்வாகவே எப்போதும் காட்டுகிறது. சினிமா காலத்தை கற்சிற்பம் போல அப்படியே உறையச்செய்துவிடுகிறது

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 03, 2011 10:30

இலட்சியவாதம் அழிகிறதா?

எரிக் ஹாப்ஸ்பாமின் வரலாற்றுச்சிந்தனைகள் பதினேழாம்நூற்றாண்டு ஐரோப்பிய அறிவொளிக்காலத்தை வரலாற்றின் ஒரு முக்கியமான திருப்புமுனையாக கருதும் போக்கு கொண்டவை. மானுட இலட்சியவாதத்தின் ஓர் உச்சகட்ட தருணம் அது என்றே ஹாப்ஸ்பாம் எண்ணுகிறார். இந்த விஷயத்தில் எப்போதும் அவருடன் நான் ஒத்துப்போவதனால் அவர் எனக்கு நெருக்கமானவராக இருக்கிறார் என்று சொல்லலாம்.



[எரிக் ஹாப்ஸ்பாம்]


ஐரோப்பிய அறிவொளியுகம் தொடங்கிய அந்தக்காலகட்டத்தில்தான ஐரோப்பா உலகளாவிய காலனியாதிக்கத்தை உருவாக்கியது. தென்னமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் பிரம்மாண்டமான இனப்படுகொலைகள் வழியாக ஒட்டுமொத்த பழங்குடிகளையும் அழித்தொழித்தது. ஆப்ரிக்காவிலும் இந்தியாவிலும் முழுமையான சுரண்டலதிகாரத்தை உருவாக்கிக்கொண்டு அதன் வழியாக மாபெரும் பஞ்சங்களை உருவாக்கி லட்சக்கணக்கான மக்களை சாகடித்தது. அவ்வாறு பஞ்சங்களில் இடம்பெயர்ந்த மக்களை அடிமைகளாக்கிக்கொண்டு நியூசிலாந்து முதல் மேற்கிந்தியத் தீவுகள் வரை உலகளாவிய அடிமைச்சமூகத்தை உருவாக்கியது.சுரண்டலுக்கும் அடிமைத்தனத்துக்கும் அறிவியலைப் பயன்படுத்துவது தொடக்கம்கொண்ட காலகட்டம் அது.


ஐரோப்பிய அறிவொளிக்காலத்தை விமர்சிக்கும் வரலாற்றாய்வாளர்கள் அறிவொளிக்காலம் என்பது ஐரோப்பாவின் அப்பட்டமான உலகச் சுரண்டலை சமாதானப்படுத்திக்கொள்ள ஐரோப்பாவின் மேல்மட்ட போலி அறிவுஜீவிகள் உருவாக்கிக்கொண்ட அசட்டு இலட்சியவாதம்தான் அது என்று சொல்வது வழக்கம். அந்த இலட்சியவாதம் மூலம் ஐரோப்பாவால் சுரண்டப்பட்ட நாடுகளில் ஒரு நடுத்தர வர்க்க சிந்தனை மட்டுமே உருவாகியது என்பார்கள்.


அதை எப்போதும் எரிக் ஹாம்ஸ்பாம் நிராகரிப்பது வழக்கம். 'அறிவொளிகொண்ட சாரவாதிகள்' [Enlightened absolutists ]என பொதுவாக ஹாப்ஸ்பாம் குறிப்பிடும் நவ உலக இலட்சியவாதிகள் அனைவருக்குமே முதல் தூண்டுதலாக இருந்தது ஐரோப்பிய அறிவொளிக்காலமே. கம்யூனிஸ்டுகள் , தாராளவாதிகள், தனிமனிதசுதந்திரவாதிகள், இன்றைய பசுமையியலாளர்கள் என அனைவருமே அறிவொளிக்கால இலட்சியவாத ஊற்றில் இருந்தே தங்கள் தொடக்கநீரை மொண்டு கொண்டிருக்கிறார்கள். மனித குலத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு இலட்சிவாத அலை உருவாக அறிவொளிக்காலம் மிகமுக்கியமான பங்களிப்பாற்றியிருக்கிறதென்று எப்போதுமே வாதிடுகிறார்.


அதை நிராகரிக்கும் பின்நவீனத்துவச் சிந்தனைகளை 'இன்றைய மோஸ்தர்' என்றும் 'ஆழமற்ற எதிர்வாதங்கள்' என்றும் நிராகரிக்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம்.ஐரோப்பிய அறிவொளிக்காலத்தை விமர்சிப்பவர்களின் சிந்தனைகள் எவையும் அதனுடன் ஒப்பிடத்தக்க எந்த சாதகமான விளைவையும் உலகளாவிய தளத்தில் உருவாக்கியதில்லை. பெரும்பாலும் அவை வெறும் கல்வித்துறை சலசலப்புகள் மட்டுமே. இலட்சியவாத அம்சம் இல்லாத சிந்தனைகள் சமூக அளவில் சலனங்களை உருவாக்குவதில்லை என்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம்.


அறிவொளிக்காலச் சிந்தனைகளுக்கு அன்று உருவாகி வந்த காலனியாதிக்கம் அடித்தளமாக அமைந்தது என்பதை மறுக்கமுடியாது. உலகளாவ விரிந்த ஐரோப்பிய ஆதிக்கமே உலகளாவிய ஐரோப்பியப் பார்வை உருவாவதற்கும் காரணம். உலக மொழிகளின் இலக்கியங்கள் ஐரோப்பிய மொழிகளில் கிடைத்தது உலகளாவிய விவாதம் ஒன்றை உருவாக்க உதவியது. நவீன அறிவியல் உருவாக்கிய செய்தித்தொடர்பு அந்தச் சிந்தனை வளர ப்ரவ வழிவகுத்தது. அந்த ஊடகங்கள் வழியாக அன்றைய ஐரோப்பா செய்துவந்த சுரண்டல் வெளிப்பட்டபோது அதற்கு எதிராக எழுந்த ஐரோப்பிய மனசாட்சியின் குரல் என்றுகூட அறிவொளிக்காலத்தைச் சொல்லலாம்.


பெரும்பாலும் அந்த வரலாற்றுப்புள்ளியில் இருந்து சிந்திக்க ஆரம்பிக்கும் எரிக் ஹாம்ஸ்பாம் இப்போது அந்த இலட்சியவாதம் ஒரு தொடர் சரிவில் இருப்பதாக நினைக்கிறார். அவரது 'வரலாற்றைப்பற்றி' என்ற நூலில் உள்ள 'காட்டுமிராண்டித்தனம், ஒரு பயனர் கையேடு' என்ற கட்டுரையில் உலகளாவிய தளத்தில் இலட்சியவாதம் வீழ்ச்சி அடைந்து அந்த இடத்தில் கட்டற்ற வன்முறைப்போக்கு, வன்முறைச்சிந்தனை ஆதிக்கம் கொள்வதாகச் சொல்கிறார். 1994ல் ஆக்ஸ்போர்டில் செய்த ஆம்னஸ்டி பேருரை இது.


இந்த உரையில் என்னை சட்டென்று அசைத்த ஒரு சொல்லாட்சி 'வெர்சேல்ஸ் உடன்படிக்கை முதல் ஹிரோஷிமா வரை' என்பது. என் வரலாற்றுப்பிரக்ஞையில் ஒரு புரளலை உருவாக்கியது அது. 17.. ல் பிரெஞ்சுப்புரட்சியின் வெர்சேல்ஸ் உடன்படிக்கை 'சமத்துவம் சகோதரத்துவம் ' என்னும் ஆதார மதிப்பீடுகளின் முதல் அதிகாரபூர்வ பிரகடனமாக அமைந்தது. உண்மையில் அது உலகுக்கு விடுக்கப்பட்ட அறைகூவல். அந்த முரசொலி உலகமெங்கும் நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தில் ஆழ்ந்து கிடந்த சமூகங்களை எழுப்பியது. நூற்றுக்கணக்கான தேசங்களில் சாதாரண மனிதர்கள் அரசியலுரிமைக்காக கிளர்ந்தெழ அது வழி வகுத்தது. ஜனநாயகம் என்ற விழுமியம் உலகம் முழுக்க சென்று சேர வழிவகுத்தது. இன்றைய உலகின் இடது வலது இலட்சியவாதங்கள் இரண்டுமே அதையே முதல்புள்ளியாகக் கொண்டவை


ஹிரோஷிமா? இருநூறாண்டுக்காலம் நீடித்த அந்த உலகளாவிய அலையின் முழுமையான முடிவுப்புள்ளியா அது? பிரெஞ்சுப்புரட்சி மானுட மேன்மைக்கான ஒரு சாசனம் என்றால் மானுடக்கீழ்மைக்கான ஒரு ஆவணமா ஹிரோஷிமா? இவ்விரு புள்ளிகள் நடுவே என்ன நடந்தது? ஒரு மாபெரும் பின்வாங்கல் என்று எரிக் ஹாப்ஸ்பாம் குறிப்பிடுகிறார். மானுட இலட்சியவாதமும் அறிவியலும் மனிதனைக்கைவிட்ட புள்ளிதான் ஹிரோஷிமா.


இரு உலகப்போர்களில் நேரடியான வன்முறை மூலம் பலகோடிபேர் இறந்தார்கள். போர்களை ஒட்டிய வதைமுகாம்களில், பஞ்சங்களில் மேலும் சிலகோடிபேர் இறந்தார்கள். ஒருவேளை கணக்கிட்டுப்பார்த்தால் அதன்பின் அந்த அளவுக்கு நேரடியான வன்முறையும் அழிவும் உலகளாவிய தளத்தில் உருவாகவில்லை என்று சொல்லலாம். ஆனால் எரிக் ஹாப்ஸ்பாமின் நோக்கில் அதன்பின்பு சிந்தனை அளவில் மிகப்பெரிய ஒரு மாற்றம் நிகழ்ந்தது. அதையே காட்டுமிராண்டித்தனத்தின் வளர்ச்சி என்று அவர் கருதுகிறார்.


அறிவொளிக்காலத்திலும் அதன்பின் உலகப்போர்களிலும் வன்முறை இருந்தாலும் வன்முறைக்கு எதிரான இலட்சியவாதம் ஓங்கியிருந்தது. மானுடசமத்துவம் அடிப்படைநீதி ஆகியவற்றுக்கான பெரும் கனவு உலகமெங்கும் இருந்தது. ஆனால் ஐம்பதுகளுக்குப் பின்னர் படிப்படியாக அவை அழிந்தன. பதிலுக்கு நேரடியான வன்முறையின் அதிகாரம் மட்டுமே ஒரே மதிப்பீடாக உலகசிந்தனையில் வேரூன்றியது. அந்த அதிகாரத்திற்காக செய்யப்படும் எதுவும் நியாயமே என்றாகியது. அரசியல் ஆய்வாளர்கள், சமூகசிந்தனையாளர்கள் அதிகாரத்தை மட்டுமே உண்மையான சமூகஆற்றலாகக் கருதலானார்கள். இது ஒரு பெரும் வீழ்ச்சி என்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம்.


எரிக் ஹாப்ஸ்பாம் இந்த மாறுதலை நிகழ்த்திய பல கூறுகளைத் தொட்டுச்செல்கிறார். ஒன்று பனிப்போர். பனிப்போரின் இருபக்கமும் தங்களை நியாயப்படுத்திக்கொள்ளும் போக்கில் அதிகாரத்தையே நியாயப்படுத்தின. ருஷ்யாவின் முதலாளித்துவ வெறுப்பும் சரி அமெரிக்காவில் ஒலித்த Better dead than red போன்ற கோஷங்களும் சரி அடிப்படையில் இலட்சியவாதத்துக்கு எதிரானவையே.


இரண்டாவதாக எரிக் ஹாப்ஸ்பாம் சுட்டிக்காட்டுவது தீவிரவாதம் என்ற உலகளாவிய நிகழ்வை. எரிக் ஹாப்ஸ்பாம் 1960களில் கியூப புரட்சியை ஒட்டி உருவான ஒன்றாகவே இதை கருதுகிறார். அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஆதிக்க அரசுக்கு எதிராக சிறுபான்மையினர் செய்ய சாத்தியமான போர் இது. ஆனால் மெல்லமெல்ல அரசுகளை அச்சுறுத்தும் நிழல் அரசுகளை அமைப்பதாக இது இன்று மாறிவிட்டிருக்கிறது. உலகமெங்கும் தொடர்ந்து மானுட அழிவுகளைத்தீவிரவாதம் உருவாக்கி வருகிறது.


மூன்றாவதாக எரிக் ஹாப்ஸ்பாம் மதப்போர்களை சொல்கிறார். உலகளாவிய தளத்தில் இன்று நிகழ்ந்துவரும் வன்முறைகள் பெரும்பாலும் மதச்சார்பு கொண்டவை. அல்ஜீரியாவின் பிரெஞ்சுப்படை தளபதி ஒருவர் சொன்ன வரியை மேற்கோள் காட்டுகிறார் எரிக் ஹாப்ஸ்பாம்– 'உண்மையில் போர் என்றால் அது மதப்போர் மட்டுமே' இந்த ஐம்பதாண்டுக்காலத்தில் அரேபியாவில் ஆப்ரிக்காவில் நிகழ்ந்த மாபெரும் மதப்போர்களால் லட்சக்கணக்கானவர்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள்


மதப்போர்கள் தீவிரவாதத்தைத் துணைகொள்ளும்போது ஒருபோதும் முடியாமல் நீளும் உள்நாட்டுப்போர்கள் உருவாகின்றன. அரசு வன்முறை அதற்கு எதிராக உச்சம் கொள்கிறது. பல்லாயிரம்பேர் நோயிலும் பஞ்சத்திலும் செத்து அழிகிறார்கள். கூடவே மானுட மதிப்பீடுகளும் அழிகின்றன. இலட்சக்கணக்கான மக்கள் போர்களிலும் குண்டு வெடிப்புகளிலும் கூட்டம்கூட்டமாகக் கொல்லப்படும்போது அதைப் போரின் தவிர்க்கமுடியாத பக்கவிளைவு என்று கூறும் மனநிலை உருவாகி வந்துவிட்டிருக்கிறது.


ஐரோப்பாவை அரசியல்புரட்சிகள் உலுக்கிய பதினெட்டாம்நூற்றாண்டில் பல இலட்சியவாத மதிப்பீடுகள் இருந்தன என்பதை எரிக் ஹாப்ஸ்பாம் கவனப்படுத்துகிறார். ருஷ்யாவின் ஜார் இரண்டாம் அலக்ஸாண்டரைக் கொன்ற நரோத்னாயா வோல்யா குழுவினரின் அரசியல் அறிக்கையில் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான போரில் கலந்துகொள்ளாதவர்களை நடுநிலையாளர்களாகவே கருதவேண்டும், அவர்களுக்குத் தீங்கிழைக்கக்கூடாது என்ற அறிவிப்பு இருந்தது. ஐரோப்பியப் புரட்சிகளை எல்லாம் முற்போக்கானவையாகக் கண்ட ப்ரெடெரிக் எங்கல்ஸ் ஐரிஷ் புரட்சியாளர்கள் லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் குண்டுவைத்து அப்பாவிகளைக் கொன்றதைக் கடுமையாகக் கண்டித்தார் என்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம்.


ஆனால் இன்று அந்த இலட்சியவாதங்கள் அர்த்தமிழந்துவிட்டன; அரசுகள் தரப்பிலும் அரசுக்கு எதிரானவர்களின் தரப்பிலும். இன்று பிரம்மாண்டமான அழிவுகள்கூட மக்களின் அறவுணர்ச்சியைத் தீண்டுவதில்லை. பதினெட்டாம்நூற்றாண்டு ஐரோப்பாவில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியவை சிறிய நிகழ்ச்சிகள் என்பதை எரிக் ஹாப்ஸ்பாம் சுட்டிக்காட்டுகிறார். தளபதி டிரைஃபஸ் துரோகிகளால் தண்டிக்கப்பட்டபோது பிரான்சில் எழுந்த கொந்தளிப்பை எடுத்துக்காட்டும் ஹாப்ஸ்பாம் இன்று அநீதிகள், வன்முறைகளை அன்றாட நிகழ்வுகளாக நியாயப்படுத்திக்கொள்ளும் போக்கு அதிகரித்திருப்பதாகச் சொல்கிறார்.


இன்று நேரடியாக வன்முறை ஒப்புநோக்க குறைந்திருப்பதற்குக் காரணம் வன்முறைக்கு எதிரான இலட்சியவாதம் அல்ல. சமூக நெறிமுறைகளும் அல்ல. அதிகாரச் சமநிலைகளே. அவை நிரந்தரமானவையே அல்ல என்று எரிக் ஹாப்ஸ்பாம் நினைக்கிறார்.


எரிக் ஹாப்ஸ்பாம் காட்டும் சித்திரத்தை வாசித்துவிட்டு இரவில் நெடுநேரம் சிந்தனைசெய்துகொண்டிருந்தேன். ஒருபக்கம் அது ஒரு பழைய பாணி இடதுசாரியின் மிகைப்படுத்தப்பட்ட கவலை என்று தோன்றியது. நேற்றை விட இன்று வன்முறை குறைந்திருப்பதே ஒரு முக்கியமான விஷயம்தான். ஆனால் உலகளவில் மானுட இலட்சியவாதம் முனைமழுங்கி வருகிறதா என்று கேட்டால் ஆம் என்ற எண்ணம்தான் எழுகிறது. இன்று வணிகமானாலும் அரசியலானாலும் எந்த ஒரு தளத்திலும் அறமதிப்பீடுகளை விட ஆற்றலுக்கே முதலிடம் கொடுக்கும் போக்கு உருவாகி வந்திருக்கிறது. இலட்சியவாதத்தை விட நடைமுறைவாதமே அறிவார்ந்ததாக எண்ணப்படுகிறது.


இருபதாம்நூற்றாண்டின் தொடக்கம் வரை உலகளாவிய புகழ்பெற்ற சிந்தனையாளர்கள் அனைவருமே இலட்சியவாதிகளாக இருந்தார்கள். இன்று பெரும்பாலும் அப்படி அல்ல. நடைமுறைவாதம் சார்ந்த 'பயனுள்ள' சிந்தனைகளை முன்வைப்பவர்களுக்கு முதல்முக்கியத்துவம் உள்ளது. பின்நவீனத்துவ அலையைச் சேர்ந்த நவீன மொழியியல் , குறியியல் சிந்தனையாளர்களைப்போல அவநம்பிக்கையாளர்கள், மறுப்பாளர்கள் அவ்வப்போது கவனம்பெற்று மறைந்துகொண்டிருக்கிறார்கள் . எரிக் ஹாப்ஸ்பாம் சொல்வது உண்மைதானா?


[On History. Eric Hobsbawm. ABACUS London]


 


எரிக் ஹாப்ஸ்பாம் -வரலாற்றின் மீது எஞ்சும் நம்பிக்கை


வரலாற்றெழுத்தில் நான்கு மாற்றங்கள்


 


இடதுசாரிகளிடம் எதிர்ப்பார்ப்பது என்ன?



உலகத்தொழிலாளர்களே




மார்க்ஸியம் இன்று தேவையா?


 


கலாச்சாரம் இரு புதுவரலாற்றுவாத கருதுகோள்கள்


 


மார்க்ஸ் கண்ட இந்தியா


 


வெறுப்புடன் உரையாடுதல்



சேகுவேராவும் காந்தியும்


 


மாவோயிச வன்முறை ஒன்றுஇரண்டுமூன்று நான்கு


 


இந்த ஊழல் ஜனநாயகம் போதுமா? 



கலைச்சொற்களை அறிய




1.கலைச்சொற்கள்




கலைச்சொற்களை அறிய ஒரு தளம்


 


 


 


 


 

தொடர்புடைய பதிவுகள்

எரிக் ஹாப்ஸ்பாம்- வரலாற்றின் மீது எஞ்சும் நம்பிக்கை
அறம் வாழும்-கடிதம்
திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 3

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 03, 2011 10:30

இன்றைய புராணங்கள்

எனக்கு எப்போதுமே புராணங்களில் ஈடுபாடுண்டு. ஏனென்றால் அவை நடந்தவை மட்டும் அல்ல, நடந்ததைச்சொல்பவனையும் உள்ளடக்கியவை. அந்த value added வரலாறு எப்போதுமே நாம் ஊகிக்கமுடியாத மர்மங்களையும் நுட்பங்களையும் கொண்டது.



உலகத்தில் எங்கும் எப்போதும் புராணங்கள்தான் மையக்கதையோட்டமாக உள்ளன, யதார்த்த இலக்கியமெல்லாம் எந்நிலையிலும் இரண்டாம்கதையோட்டங்கள்தான். டார்ஜான்,ஃபாண்டம்,ஜேம்ஸ்பாண்ட் எல்லாருமே புராணக்கதாபாத்திரங்கள்தானே? விண்வெளிக்கதைகள், பேரழிவுக்குப்பிந்தைய கதைகள் என நவீன புராணங்களுக்கு எத்தனையோ வடிவங்கள்.


இலக்கியத்தில் புராணத்தன்மை கொண்ட பல்வேறு அழகியல் வடிவங்கள் வந்துவிட்டன. மிகைகற்பனை படைப்புகள், மாய யதார்த்த படைப்புகள். அத்தனையும் போதாதென்று பழைய புராணங்களையே லார்ட் அஃப் த ரிங்ஸ் போல மீண்டும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.


இந்தியமனம் புராணங்களை விட்டு விலகுவதே இல்லை. புராணக்கூறு இல்லாமல் நம்மால் சமகால வரலாற்றையே பார்க்கமுடிவதில்லை. வள்ளலார், பாரதி போன்ற இந்த நூற்றாண்டு ஆளுமைகளின் வரலாறே புராணங்களைக் கலந்துதான் எழுதப்பட்டுள்ளது. எம்ஜியாரின் கைக்கடிகாரம் சமாதிக்கடியில் இன்னும் துடிப்பது, கிருபானந்தவாரியார் சொற்கத்தில் இருந்து திருமண வாழ்த்து சொல்லி வெண்பா அனுப்புவது என நம் மக்கள் இன்றும் பௌராணிக யுகத்தில்தான் வாழ்கிறார்கள்.


இதை எதிர்மறை அம்சமாகக் கொள்ளவேண்டியதில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். இது ஒருபண்பாட்டின் இயல்பான செயல்பாடு. அது பிறிதொன்றை பிரதி செய்வதை விட தன்னுடைய சுயத்தை முன்னெடுப்பதே சிறந்தது.



சமீபத்தில் வாசித்த மிகச்சிறந்த புராணப்படுத்தல் என்று இந்த புனைகதையைச் சொல்வேன்.
இதில் உள்ள கற்பனை வளம் நம்முடைய புராணமரபின் இரு அடிப்படை அம்சங்களை துல்லியமாக உள்ளடக்கியிருக்கிறது. மையக்கதாபாத்திரங்களின் ஆளுமையை மிகைப்படுத்தி இலட்சியவடிவம் நோக்கி கொண்டு செல்கிறது. எதிர்க்கதாபாத்திரங்களை உயர்தர அங்கதம் மூலம் எதிர்மறையாகக் காட்டுகிறது.


தமிழின் மரபான புனைவுவளம் நம்மிடம் எப்போதும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 03, 2011 05:01

December 2, 2011

இந்துமதம் சம்ஸ்கிருதம் பிராமணர்-கடிதங்கள்

பெருமதிப்பிற்குரிய திரு.ஜெமோ. அவர்களுக்கு,


இன்று உங்கள் வலை தளத்தில் " இந்து மதம்,சமஸ்கிருதம், பிராமணர்" என்ற தலைப்பில் நீங்கள் திரு.செல்வம் அவர்களுக்கு எழுதிய பதில் கட்டுரை,மிகுந்த ஆழமான,ஆராய்ச்சி பூர்வமான, அர்த்தமுள்ள கருத்துக்களுடன் அருமையாக இருந்தது.


உண்மையில் இதைப் படித்தவுடன்,நானும் இந்து மதத்தை சார்ந்தவன் என்ற பெருமித உணர்வு ஏற்பட்டது.வைணவ பிராமணன் என்ற (உண்மையான பிராமணனா நான் என்று எனக்கு தெரியாது ) முறையில் என்னால் உறுதிபடக் கூறமுடியும் இன்றும் எங்கள் வைணவக் கோயில்களில் நாலாயிர திவ்யப் பிரபந்தப்பாடல்களுக்குத்தான் முன்னுரிமை உள்ளது.தெய்வத்திற்கு அடுத்தபடியாக (ஏன் சில சமயங்களில் மேலாகவே ) போற்றப்படும் பன்னிரு ஆழ்வார்களில் பெரும்பான்மையோர் அந்தணர்களே அல்ல என்பது தாங்களும் அறிந்ததே.இந்தக்கால சூழ்நிலையில், தாங்கள் தான் பெரிய அறிவு ஜீவிகள் என்று கூறிக் கொண்டு இந்து மதத்தை வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் கொச்சைப்படுத்திக் கொண்டு இருக்கும் நேரத்தில்,நீங்கள் ஒருவர் மட்டும் தனி ஆளாக நின்று விளக்கம் அளிப்பதற்கு உங்களுக்கும் அந்த ஆண்டவனுக்கும் நன்றி கூறுகிறேன்.தொடரட்டும் உங்கள் பணி என்றும்.


என்றும் அன்புடன்,

அ.சேஷகிரி



அன்புள்ள சேஷகிரி


ஆம், நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் இந்துக்களிலேயே ஒருசாராருக்கு சம்ஸ்கிருத மோகம் காரணமாகத் தமிழ்மீது இளக்காரம் இருந்தது என்பதையும் மறுக்கமுடியாது. அறியாமையின் விளைவான அந்தக் கூற்றுக்களே அந்த அவதூறுகள் உருவாகக் காரணமாகவும் அமைந்தன இல்லையா?


ஜெ


ஜெ,


சமஸ்கிருதம் எல்லாத் தரப்பு மக்களாலும் பயன்படுத்தபட்டது. அது பிராமணருக்கு மட்டுமான மொழி அல்ல.


கணபதி ஸ்தபதி ஒரு பேட்டியில் கூறுகிறார்.


சிந்து என்கிற வார்த்தை எப்படி வந்தது? இந்து என்கிற வார்த்தையிலிருந்து மருவி வந்ததாகப் பலரும் சொல்கிறார்கள். இது தவறு. விந்திய மலையிலிருந்து வந்ததுதான் இந்து. இப்படிப் பல திரிப்பு வேலைகள் இங்கே நடந்திருக்கின்றன. விந்திய மலையில் சிவபெருமான் உடுக்கடிக்க, அந்த உடுக்கிலிருந்து தோன்றிய சத்தம் தெற்குப் பகுதியில் தமிழாகவும், வடக்குப் பகுதியில் சமஸ்கிருதமாகவும் மாறியது என்கிறார் பாணினி. இதுவும் தவறு. சமஸ்கிருதம் தமிழனின் மொழி. தமிழனுக்குச் சொந்தமான மொழி. காலப்போக்கில் அது தமிழர்களுக்கு சம்பந்தமில்லாததாக மாறிவிட்டதே ஒழிய ஆதியில் சமஸ்கிருதத்தைப் பேசியவன் தமிழன்தான். எங்களுக்கெல்லாம் ஞான குருவாக விளங்கும் மயன்தான் தெற்கிலிருந்து வடக்குக்கு சமஸ்கிருதத்தைக் கொண்டு போனான். நான் சொல்கிற இந்தக் கருத்துகளை மறுத்துச் சொல்கிற தெளிவு யாருக்காவது உண்டா? உண்டு என்றால் தாராளமாக எடுத்துச் சொல்லலாம்.(http://www.thamilworld.com/forum/index.php?showtopic=595)


இது உண்மையோ இல்லையோ ஆனால் சமஸ்கிருதம் அனைவராலும் பயன்படுத்தப்பட்டது.


கருணாநிதி ஒரு விகடன் பேட்டியில் அவர் தந்தைக்கு சமஸ்கிருதம் தெரியும் என்று கூறுகிறார்.


சமஸ்கிருதத்துக்குத் தமிழ்நாட்டில் இந்த நிலை ஏற்பட்டது போன்ற தற்கால உதாரணம் கர்னாடக இசை. முற்காலத்தில் அனைத்து மக்களும் பாடிய ரசித்த கர்னாடக இசை இப்போது 95% பிராமணர்களால் செய்யப்படுகிறது. இன்னும் 50 ஆண்டுகளில் கர்நாடக இசை பிராமண இசை அதற்கும் தமிழர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பிரச்சாரம் ஆரம்பித்து விடும்.


ராஜேஷ் கோவிந்தராஜன்


அன்புள்ள ஜெயமோகன் சார் வணக்கம் ,


தங்களின் ,சமஸ்க்ருதம் ,ஹிந்து மதம் பதில் மிகத் தெளிவாக இருந்தது . பொதுமை மற்றும் தமிழ்ப் பற்றாளர்கள் பெரும்பாலும் சாதியைத் தாண்டிப் பேசுவது மிகவும் குறைவு என நானும் பலமுறை கண்டிருக்கிறேன் .எங்கள் கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையான திருமணங்கள் பிராமணர்களை வைத்து நடந்து வந்தது .கடந்த நான்கைந்து ஆண்டுகளாகத் தமிழ்க் குழுக்கள் பிராமண எதிர்ப்புப் பிரசாரத்தைத் துவக்கித் தொடர்ந்து நடத்தினார்கள் . தற்பொழுது பல திருமணங்கள் தெய்வத் தீந்தமிழ் முறைப்படி என்று அழைப்பிதழில் போடுவது அதிகரித்து வருகிறது. தெய்வத் தீந்தமிழ் முறை என்று திருமண முறை இருந்ததா .தாங்கள் விளக்க வேண்டும் .


என் சொந்த அனுபவம் , எங்கள் பகுதியில் பிரபலமான செஞ்சேரிமலை மந்தரகிரி வேலாயுதசாமி திருக்கோவில், இங்கு பிராமணர்களால் பூஜை செய்யப்படுகிறது .கோவிலில் ஓதப்படும் சமஸ்க்ருத மந்த்ரங்கள் புரியாவிட்டாலும் கூட மனதில் தன்னை மறந்த நிலையை நான் பலமுறை உணர்ந்துள்ளேன் .நண்பர்களும் இதுபோல உணர்ந்துள்ளார்கள் .இறைவனை வழிபட மொழி ஒரு காரணம் அல்ல என்பது என் எண்ணம் .மேலும் பிராமணர்களை வைத்து சடங்கு என்பது அவரவர்களுக்குத் திருப்தி அளிக்கும் விதத்தில் இருப்பதால் செய்கிறார்கள் .பிராமணர்களிலேய பிராமணர் என்பதற்காக யாரையும் அழைப்பதில்லை .அவர் நன்றாக பூஜை மற்றும் யாகங்களை நடத்துகிறாரா பார்த்து என்று அவரவர் வசதிக்கேற்ப அழைக்கிறார்கள் என நான் எண்ணுகிறேன்.தாங்கள் இது பற்றியும் விளக்க வேண்டும்.பிழை இருந்தால் மன்னிக்கவும் .


சி.மாணிக்கம் மந்த்ராசலம் ,

செஞ்சேரிமலை.


அன்புள்ள மாணிக்கம் அவர்களுக்கு,


தமிழகமெங்கும் இன்று பல சாதியினர் தங்கள் திருமணங்களையும் சடங்குகளையும் பிராமணர்களைக்கொண்டு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். முன்பெல்லாம் எல்லா சாதிக்கும் அவர்களுக்குரிய புரோகிதர்கள் இருந்தனர். அவர்கள் இப்போது இல்லை. சடங்குகள் மனித வாழ்க்கைக்குத் தேவையாகின்றன. அச்சடங்குகளை முறையாகச்செய்பவர்கள் லௌகீக வாழ்க்கைக்கு இன்றியமையாதவர்களாக ஆகிறார்கள். அந்த பிராமணர் அவருக்கு தட்சிணை அளித்து சடங்குக்கு அழைப்பவர் மேல் கருத்தியல்செல்வாக்கு செலுத்துகிறார் என்பதெல்லாம் அபத்தம்.


இந்த வகையான வாதங்களெல்லாம் ஒரு பத்தாயிரம் பேருக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. வெளியே இந்துக்கள் அவர்கள் நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த அதே பாணியில் காலத்துக்கேற்ற மாறுதல்களுடன் தங்கள் நம்பிக்கைகளைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகளின் கூச்சல்களுக்கும் அவர்களின் நம்பிக்கைகளுக்கும் உரையாடல்புள்ளிகளே இல்லை


ஜெ


அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம். தங்கள் பதிவுகளை ஓராண்டுக்கும் மேலாக வாசித்து வருகிறேன். சிறப்பாக இருக்கிறது,

கடைசியாக நீங்கள் செல்வம் அவர்களுக்கு கொடுத்த விரிவான விளக்கம் அருமையாக இருந்தது.


ராமகிருஷ்ணன் டி எஸ்


அன்புள்ள ராமகிருஷ்ணன்


நன்றி


சொல்லிச்சொல்லி சில பதில்கள் எனக்கே தெளிவாக உள்ளன போலும்


ஜெ


அன்பின் ஜெ…


என்னுடைய மின்னஞ்சலை மதித்துத் தங்கள் பதிலை வலைத்தளத்தில் இட்டமைக்கு நன்றி.


மிக விரிவானதொரு விளக்கம். இன்னும் நிறைய கேள்விகள் மனதில் இருந்தாலும் நீங்களே கட்டுரையில் கூறியுள்ளபடி இன்னும் நிறைய விடயங்களைத் தெரிந்து கொண்டு பின்பு உங்களிடம் அவை குறித்து கேட்கிறேன்.


மேலும் இத்தகைய விவாதங்களை நான் கருத்துப் பரிமாற்றமாகவே பார்க்கிறேன். வெற்றி / தோல்வியாக அல்ல என்பதையும் கூற ஆசைப்படுகிறேன்..


இது எல்லாவற்றையும் விட.. மாறுபட்ட கருத்துக்கள் இருப்பினும் எளியேனாகிய என் கேள்விகளை மதித்து உங்கள் கருத்துகளை வெளியிட்ட அந்த ஜனநாயகம் மிகவும் பிடித்திருந்தது என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன்.


மீண்டும் நன்றி

தொடர்புடைய பதிவுகள்

நாட்டார் தெய்வங்களும் சம்ஸ்கிருதமும்
பரிணாமவாதமும் இந்திய மதங்களும்
யார் இந்து?-கடிதம்
சிங்காரவேலரின் பிராமண வெறுப்பு
அயோத்திதாசர் என்னும் முதல்சிந்தனையாளர்-4
ஹிந்து பைபிள்
சம்ஸ்கிருதம் கடிதங்கள்
சம்ஸ்கிருதம் யாருடைய மொழி?
திராவிட இயக்கம்,இந்துத்துவம்- இன்னொரு கடிதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 02, 2011 10:30

தமிழர்மேளம்

அன்புள்ள ஜெயமோகன்,


தவில் குறித்த என்னுடைய கட்டுரையை உங்கள் இணையதளத்தில் வெளியிட்டதற்கு நன்றி.


இதில் நான் எழுதாத ஒரு விசயம் என்னவென்றால் நாகசுரத்தையும் தவிலையும் தமிழர்கள் கைகழுவி விட்டதைத்தான். தமிழர்களின் பெயராலும், மொழியாலும் உரத்த குரலில், பொருளற்ற வாதங்களைப் பேசி அதிகாரத்தைக் கைபிடித்தவர்கள் இக் கலைகளின் புனரமைப்புக்கு உருப்படியான எந்தக் காரியத்தையும் செய்யவில்லை. கோயில்களிலும் அரசவைகளிலும் இருந்து இருந்து சபாக்களுக்குக் குடியேறிய கலைகள் பாட்டும் நாட்டியமும். நாட்டியம் ஒரு காலகட்டத்தில் தேவதாசிகளால் ஆடப்பட்டது. ஆனால் அதைப் பிராமணர்கள் சுவீகரித்துக் கொண்டு அதற்கு ஒரு சமூக அந்தஸ்தை வாங்கிக் கொடுத்து விட்டார்கள். இன்று ஒரு பெண்ணுக்கு பரதநாட்டியம் ஆடத் தெரிந்திருந்தால் அது கூடுதல் தகுதியாகக் கருதப்படுகிறது. பாட்டைப் பற்றியோ, இதர இசைக்கருவிகள் குறித்தோ சொல்ல வேண்டியதே இல்லை. பெரும் கல்வி நிலையங்களில் பயின்று, பெரிய தகுதிகளுடன் இலட்சக்கணக்கில் சம்பாதிக்கக் கூடிய பொறுப்புகளை விட்டு விட்டுக்கூட ஏராளமான பிராமண இளைஞர்கள் முழு நேரமாக இசைத்துறைக்கு வந்திருக்கிறார்கள். வந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் வருவார்கள்..


[image error]


ஆனால் நாகசுரம் தவிலின் நிலை என்ன? குறிப்பிட்ட சில சாதியினர் மட்டுமே இந்த இரு கருவிகளையும் வாசிக்கிறார்கள். நம் தென்மாவட்டங்களில் கம்பர் சாதியினர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சுண்ணாம்பு பறையர் சாதியினரும், காவேரி நாவிதன் என்று அழைக்கப்படும் சாதியினரும் நாகசுரம் தவில் வாசிக்கின்றனர். ஆனால் அவர்களில் பெரும்பான்மையானவர்கள் தேர்ந்தெடுத்திருப்பது நையாண்டி மேளம்தான். நிறைய தலித் இனத்தவர்களும் நையாண்டி மேளம் வாசி்க்கிறார்கள். படையாச்சிகள் சிலரும் இத்தொழிலை செய்கின்றனர். முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் சட்டநாதனின் தந்தை நாகசுரக் கலைஞர்தான். சோழ மண்டலத்தில் இசை வேளாளர்களே இத்துறையின் வல்லுனர்கள். தஞ்சை மாவட்டத்துக்காரர்களிடம் நாகசுரம் தவில் வாசிப்பதில் யாரும் போட்டி போட முடியாது. அது ஒரு காலத்தில் இக் கலைஞர்கள் செழித்து வளர்ந்த ஒரு வனம். எந்த ஊரைச் சொன்னாலும் அந்த ஊரில் ஒரு மேதை இருந்திருக்கிறார். சென்னை போன்ற தொண்டை மண்டலத்தில் நாவிதர் சாதியினரே இக்கருவிகளை வாசிக்கின்றனர்.


அறுபதுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் இக் கலைக்கு ஒரு புத்துணர்வைத் தந்திருக்க முடியும். ஆனால் அவர்களுக்குக் கலைகள் குறித்து எந்த அக்கறையும் கிடையாது. என்னுடைய அசைக்க முடியாத கருத்து என்னவெனில் பிராமணரல்லாதவர்களுக்கு இசை குறித்த அக்கறையே இல்லை. சென்னை சபாக்களில் தெலுங்கும் சமஸ்கிருதமும் பாடப்படுகிறது. அதை ஒழித்தே கட்டுவோம் என்று புறப்பட்டார்கள். இவர்களால் அதையும் ஒழிக்க முடியவில்லை. தமிழை வாழ வைக்கவும் முடியவில்லை. இன்று நிறைய தமிழ்ப் பாடல்கள் பாடப்படுகின்றன என்பது உண்மைதான். ஆனால் கச்சேரிக்கு வருபவர்களில் 10 விழுக்காடு பேர் கூட பிராமணர்களல்லாதவர்கள் இல்லை. பிராமணர்கள் சென்னை முழுக்க முழுக்க சபைகளை நிறுவி விட்டார்கள். அவர்கள் எங்கெல்லாம் குடி போகிறார்களோ அங்கே ஒரு சபை முளைத்து விடும். ஆலந்தூரில் இருக்கிறது. வேளச்சேரியில் இருக்கிறது. மடிப்பாக்கத்தில் இருக்கிறது. ஆனால் தமிழ் இசைச் சங்கம் பூகோள ரீதியாகவே ஒதுக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களும் நிறுவனங்களும் உள்ள பாரி முனையில் ஒதுங்கி விட்டது.


நாகசுரம் தவில் தமிழர்களின் கலை. நிறையப் பேரை இசைப் பக்கம் ஈர்த்தது இந்த இரு வாத்தியங்களும்தான். ஒன்றும் தெரியாதவன் கூட மேளம் கேட்பதில் உற்சாகம் காட்டுவான். ஒரு மாபெரும் இசைகேட்கும் கூட்டத்தை நாம் உருவாக்கியிருக்க முடியும். அதை செய்யவில்லை. மாணவர் நகலகம் நா. அருணாசலம் அவர்கள் சென்னையில் நாகசுர விழாக்களை நடத்தினார். ஆனால் கடை விரித்தார் கொள்வார் இல்லை என்ற நிலைமைதான் ஏற்பட்டது. தற்போது பல சபைகள் தனியாக நாகசுர இசை நடத்துகிறார்கள். நல்ல வரவேற்பு. மறுபடியும் அங்கு வருபவர்களில் பெரும்பான்மையானவர்கள் பிராமணர்கள்தான். தமிழன் சினிமாவில் விழுந்து கிடக்கிறான் என்று பொதுவான குற்றச்சாட்டை நான் சுமத்தவில்லை. ஒய் திஸ் கொலைவெறி இவ்வளவு பெரிய வரவேற்பைப் பெறுகிறது என்றால் எம்தமிழரின் இசை இரசனையை என்னவென்பேன்?


கோலப்பன்

நாகர்கோயில்



அன்புள்ள கோலப்பன்,


ஒரு கலாச்சார இயக்கம் அந்த கலாச்சாரக்கூறுகளுடன் தொடர்பில்லாத அரசியல்வாதிகளால் கையாளப்பட்டால் என்னாகும் என்பதற்கான உதாரணமாகவே நான் தமிழிசை இயக்கத்தைக் காண்கிறேன். உரிய வரலாற்று நியாயங்களுடன் மிகுந்த படைப்பூக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் அது. நம்மூரைச் சேர்ந்த லட்சுமணபிள்ளை முதலான பல மேதைகளின் பங்களிப்பு நிகழ்ந்த களம். ஆனால் ஒரு கட்டத்தில் அது எளிய பிராமண எதிர்ப்பாக திரிக்கப்பட்டது. பிராமண எதிர்ப்பு அரசியல்வாதிகளின் கைகளுக்குச் சென்று சேர்ந்தது. அவர்களுக்கு இசையில் எந்த ஆர்வமும் இருக்கவில்லை. அவர்களும் சரி அவர்களின் வாரிசுகளும் சரி இசையை கற்கவில்லை.


ஆகவே இன்று தமிழகம் முழுக்க உள்ள தமிழிசைச்சங்கங்கள் வெறும் கட்டிடங்களாகவும் சடங்குசம்பிரதாயங்களாக நிகழும் நிகழ்ச்சிகளாகவும் எஞ்சுகின்றன. தமிழிசை விழாக்களில் இசையை விட வசைதான் அதிகமாக நிகழ்கிறது. சில தமிழிசை விழாக்களில் சென்று அமர்ந்து நொந்து எழுந்தோடி வந்திருக்கிறேன். இன்று தமிழிசைச் சங்கங்கள் கொஞ்சமாவது செயல்பட்டுக்கொண்டிருப்பதே தமிழிசை பாடும் பிராமண பாடகர்களால்தான். பாட்டைக்கேட்க வருபவர்களும் அவர்களே. தமிழின் மரபிசையை பிராமணரல்லாத தமிழர்கள் முழுமையாகவே கைவிட்டுவிட்டிருக்கிறார்கள்.


தஞ்சை, அதிலும் கீழத்தஞ்சை, இசையின் விளைநிலம். திருவாரூரில் என் மாமனாரின் குடும்ப திருமணத்துக்குச் சென்றிருந்தேன். நாதஸ்வரக்காரர் சில்லறை சினிமாப்பாட்டுகளாகவே வாசித்துத்தள்ளிக்கொண்டிருந்தார். ஆச்சரியமாக இருந்தது. ஒரு கட்டத்தில் அவர் 'நாத தனுமனுசம்' என ஆரம்பித்தார். நன்றாக வாசிக்கிறாரே என நினைத்தேன். ஆனால் உடனே இருவர் பாய்ந்துசென்று அவரிடம் சினிமாப்பாடல் வாசிக்கச் சொன்னார்கள். அவர் அப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டு 'பார்த்தமுதல்நாளே…' என வாசிக்க ஆரம்பித்தார். சென்ற தலைமுறை வரை இசையை அன்றாட வாழ்க்கையாகக் கொண்டிருந்தவர்கள். இதுதான் இன்றைய நிலை.


செவ்வியல்கலைகள் சாதியடையாளத்துடன் இருக்கையில் அவற்றை பயில அச்சாதியில் இருந்தே ஆட்கள் வரவேண்டியிருக்கிறது. பரத நாட்டியம் சாதியடையாளத்தில் இருந்து மீட்கப்பட்டமையால்தான் வாழ்கிறது. அது தமிழ் மேளமான நாதஸ்வரத்துக்கும் தவிலுக்கும் நிகழவேண்டும். அப்படி நிகழவேண்டுமென்றால் இசைக்கான ஊதியம் இன்னும் அதிகரிக்கவேண்டும். ருக்மிணிதேவி போல எவராவது அதற்காக இறங்கி அதன் சாதியடையாளத்தை அழித்து அதை மீட்கவேண்டும்


ஜெ



தங்கமே தமிழ்ப்பாட்டு பாடு-நாஞ்சில்நாடன்




கர்ணாமிர்த சாகரம்


தமிழிசை மீண்டும் கடிதங்கள்

காழ்ப்பே வரலாறாக


இசை, மீண்டும் சில கடிதங்கள்


தமிழிசையா?


இசை, கடிதங்கள்



இசை நீடிக்கும் விவாதம்


தமிழிசையும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் – 1 பேட்டி : இசை ஆய்வாளர் நா. மம்மது சந்திப்பு : ஜெயமோகன்



தொடர்புடைய பதிவுகள்

தவில்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 02, 2011 10:30

December 1, 2011

எரிக் ஹாப்ஸ்பாம்- வரலாற்றின் மீது எஞ்சும் நம்பிக்கை

1996 காலகட்ட்த்தில் நான் விஷ்ணுபுரம் நாவலை எழுதி மீண்டு, அன்று இங்கே பேசப்பட்டு சற்றே ஓய்ந்துவிட்டிருந்த பின்நவீனத்துவச் சிந்தனைகளை மூலநூல்களைக் கொண்டு புரிந்துகொள்ள முயன்றபோது நித்ய சைதன்ய யதியின் மதிப்புமிக்க வழிகாட்டுதல் கிடைத்தது. பின்நவீனத்துவச் சிந்தனைகளை வாசிக்கையில் நேர் எதிரான இருவகை சிந்தனைகளை இருபக்கமும் நிறுத்திக்கொண்டு வாசிப்பதே சமநிலையை உருவாக்கும் என்று நித்யா சொன்னார். ஒன்று மார்க்ஸிய இலட்சியவாதம். இன்னொன்று நரம்பியல் தொகுப்புநோக்கு.அவர் எனக்குப் பரிந்துரைத்த நூல்களில் ஒருபக்கம் எரிக் ஹாப்ஸ்பாம் இருந்தார். மறுபக்கம் ஆலிவர் சாக்ஸ் இருந்தார்.



[எரிக் ஹாப்ஸ்பாம்]


பின்நவீனத்துவத்தைத் தர்க்கத்தின் கொண்டாட்டம் எனலாம். இலக்கு இல்லாத, தர்க்கம் மட்டுமேயான தர்க்கம் மூலம் நிறுவப்பட்ட எல்லாவற்றையும் உடைக்கும் ஒரு வேகம் மட்டுமே அது. ஒரு கோணத்தில் அதை புதுமறுப்புவாதம் [neo nihilism] எனலாம்.


நித்யாவைப்பொறுத்தவரை ஒரு பெரும் இலட்சியவாதக் காலகட்டத்தின் முடிவுக்கும் இன்னொன்றின் பிறப்புக்கும் இடைப்பட்ட சிறிய, மிகமிகச் சிறிய, இடைவெளியில் நிகிலிசங்கள் உருவாகும். கிரேக்க இலட்சியவாதத்துக்கும் கிறித்தவ இலட்சியவாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டம்தான் ஐரோப்பிய சிந்தனையின் முதல் ஐயவாதத்தின், மறுப்புவாதத்தின் காலகட்டம். கிறித்தவ இலட்சியவாதம் சரிந்து இடதுசாரி இலட்சியவாதமும் நவீனஜனநாயக இலட்சியவாதமும் உருவாவதற்கு இடைப்பட்ட காலகட்டமே இவான் துர்கனேவின் 'தந்தையும் தனயர்களும்' நாவல் சித்தரிக்கும் ருஷ்ய மறுப்புவாதத்தின் சூழல்.


இடதுசாரி இலட்சியவாதமும் நவீன தாராளவாத ஜனநாயக இலட்சியவாதமும் தோற்றுப்போய் விழுந்த இடைவெளியே பின்நவீனத்துவ நிகிலிசத்தின் பிறப்புக்கான பின்னணி . ஆனால் மானுடம் இலட்சியவாதமில்லாமல் இருக்க முடியாது என்று நித்ய சைதன்ய யதி அழுத்தமாக நம்பினார். மார்க்ஸிய இலட்சியவாதம் மீது அவருக்கிருந்த ஈடுபாடு கடைசி வரை நீங்கவும் இல்லை. சோவியத் ருஷ்யா உடைந்த நாட்களில் அவர் தன் நண்பர்களான இடதுசாரித் தலைவர்களுடன் கொண்ட நீண்ட கடிதப்பரிமாற்றங்கள் நூலாக வெளிவந்துள்ளன. அதில் அந்நம்பிக்கையைப் பேணிக்கொள்ள நித்யா முயல்வதைக் காணமுடிகிறது


1997ல் வெளிவந்த 'வரலாறைப்பற்றி' என்ற நூலில் எரிக் ஹாப்ஸ்பாம் சென்ற தொண்ணூறுகளில் ஆற்றிய பல பல்கலைக்கழக உரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. மார்க்ஸிய வரலாற்றாய்வாளர்கள் பின்நவீனத்துவ சிந்தனைகளை எதிர்கொண்டு கடந்துசென்ற காலகட்டம் என தொண்ணூறுகளைச் சொல்லலாம். இந்நூல் முழுக்க அந்தக் கருத்துமோதலின் மார்க்ஸியத்தரப்பை நாம் காணமுடிகிறது. இன்று ஓர் இடைவெளிக்குப்பின் நான் கட்டுரைகள் நடுவே எழுதிவைத்த குறிப்புகளுடன் சேர்த்து இந்நூலை வாசிக்கும்போது ஒட்டுமொத்தமாக இந்நூலை வரலாற்றின் புறவயத்தன்மையை நிறுவுவதற்கான முயற்சி என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது.


வரலாறு என்ற அடிப்படை உருவகம் மீது ஆழமான தாக்குதல்களைத் தொடுத்தவர் என்று ஜெர்மானியச் சிந்தனையாளர் நீட்சேயை சொல்லலாம். வரலாறு என்பது நினைவில் உருவாக்கி நிறுத்தப்படும் வம்சாவளி வரலாறுமட்டும்தான் என்றார் நீட்சே. பிற எல்லா வரலாறுகளும் சமகாலத்தில் அதிகாரத்தை உருவாக்கி நிலைநாட்டும் நோக்கத்துடன் கட்டமைக்கப்படுபவை மட்டுமே. இன்றைய கருத்தியல்களுக்கு ஏற்ப நேற்றை உதவிகரமான தகவல்களின் அடிப்படையில் கட்டி எழுப்பக்கூடியவை. அத்தகவல்களைத் தேர்வுசெய்வது வரிசைப்படுத்துவது ஆகியவற்றில் வரலாற்றெழுத்தாளனின் நோக்கம் செயல்படுகிறது. ஆகவேதான் வரலாறு ஒடுக்குபவர்களுக்கும் ஒடுக்க்கப்படுபவர்களுக்கும் நடுவே, வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்கும் நடுவே முழுமையாக வேறுபடுகிறது.


நீட்சே பின்நவீனத்துவகால சிந்தனையாளர்களில் ஆழமான பாதிப்பை உருவாக்கியவர். இன்றைய கருத்தியல்தேவைக்கு வரலாற்றைப் பின்னணியாக்குவதை வரலாற்றுவாதம் என ஒட்டுமொத்தமாகவே நிராகரிக்கும் பின்நவீனத்துவர்கள் வரலாறென்பது ஒட்டுமொத்தமாகவே ஒரு புனைவுதான் என்று கூறினார்கள். அந்தப் பெரும்புனைவுக்குள் இனமேன்மைகள், குலமேன்மைகள் ,தனித்துவம் கொண்ட பண்பாட்டுப் பாரம்பரியங்கள், தேசியங்கள் போன்ற பெரும்புனைவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் உண்மையில் மொழிக்குள் நிகழக்கூடிய சொல்லாடல்கள் மட்டுமே. பெருமொழிபுகள் என பின்நவீனத்துவம் இவற்றை ஒட்டுமொத்தமாக அடையாளப்படுத்தி இவையெல்லாமே அதிகாரத்தை அடைந்து ஆள்வதற்கான உத்திகள் மட்டுமே என தீர்மானிக்கிறது. எந்தப் பெருமொழிபும் உள்ளடக்கத்தில் ஆதிக்கத்தையே கொண்டிருக்கும் என்கிறது.


இந்த அணுகுமுறைக்கு எதிராகவே என்றும் இடதுசாரி வரலாற்றாய்வாளர்கள் நிலைகொண்டிருக்கிறார்கள். அவர்களைப்பொறுத்தவரை வரலாற்றின் புறவயத்தன்மை என்பது எப்போதும் சற்று மழுங்கலானதுதான், ஆனால் அதைவைத்துப் புறவயமான வரலாறு என்பதே கிடையாது என்று வாதிடுவது என்பது அபத்தமானது. இப்படி வாதிடுபவர்கள் தங்கள் வாதங்கள் மட்டும் புறவயமானவை என்று நம்புவதைக் காணலாம். அந்த வாதங்களும் அவற்றின் சொற்களன்களும் கூட அகவயமானவை என்றால் அறிவுத்தளத்தில் புறவயமாக என்னதான் இருக்கிறது என்கிறார்கள் அவர்கள்.


வரலாற்றை ஒரு பெரும்புனைவாக எடுத்துக்கொண்டால்கூட அது புறவயமான பெருந்தர்க்கம் கொண்ட, கூட்டான பெரும்புனைவு. மொழிக்குள் உள்ள நிகழ்வாகவே எடுத்துக்கொண்டாலும் கூட,தன் எல்லைக்குள் அது புறவயமான விதிகளை, இயங்குமுறைகளைக் கொண்டுள்ளது. அதன் இயக்கவிதிகள் சமகாலத்தை அறிந்துகொள்ள உதவக்கூடியவை. ஆகவே வரலாற்றின் பெருமொழிபுத்தன்மையைக் கணக்கில்கொண்டு வரலாற்றை விவாதிக்கும் புதுவரலாற்றுவாதச் சிந்தனையாளர்கள் உருவாகி வந்து பின்நவீனத்துவம் வரலாற்றுக்கு அளித்த விவரணைகளை நிராகரித்தார்கள்


புதுவரலாற்றுவாதத்தை உருவாக்கிய ஆரம்பகட்டச் சிந்தனையாளர்களில் ஒருவர் என எரிக் ஹாப்ஸ்பாமைச் சொல்லலாம். இடதுசாரி வரலாற்றுக் கோட்பாட்டாளரான ஹாப்ஸ்பாமின் 'வரலாறு குறித்து' என்றநூலின் முன்னுரையிலேயே இந்தத் திட்டவட்டமான நிராகரிப்பும் நிலைபாடும் வந்துவிடுகிறது. புறவய வரலாற்று உண்மை சாத்தியமே இல்லை என நம்பும் சமகால மோஸ்தரை நிராகரிக்கும் எரிக் ஹாப்ஸ்பாம் 'சுருக்கமாகச் சொன்னால் எது உள்ளது எது இல்லை என்ற திட்டவட்டமான வேறுபாடு இல்லாமல் வரலாறே இல்லை' என்கிறார்.


இப்படிச் சொல்வதை positivism என்று ஒற்றைச் சொல்லில் பின்நவீனத்துவர் நிராகரிப்பதைச் சுட்டிக்காட்டும் எரிக் ஹாப்ஸ்பாம் ரோம சாம்ராஜ்யம் பூனிக் போர்களில் கார்தேஜை தோற்கடித்து அழித்தது என்பது 'உள்ள' விஷயம், அதை எந்த வரலாற்றெழுத்தும் 'இல்லா'மலாக்காது என்கிறார். அதற்கான காரணங்களை விளக்குவதில் மட்டுமே அகவயத்தன்மை வரமுடியும். இன்றைய சார்புவாதிகள் [relativists] வரலாற்றை ஒரு வெறும் விவாதக்களனாகச் சித்தரிக்க முயல்கிறார்கள் என்று சொல்லும் எரிக் ஹாப்ஸ்பாம் 'இன்றைய வரலாற்றெழுத்தில் சார்புவாதத்துக்கு உள்ள அதிகபட்ச இடம் என்பது ஒரு நீதிமன்றத்தில் உள்ள அளவுக்கே' என்கிறார்


தன்னை ஒரு மார்க்ஸிய வரலாற்றாய்வாளர் என்று குறிப்பிட விழையும் எரிக் ஹாப்ஸ்பாம் மார்க்ஸியநோக்கு இல்லையேல் தனக்கு வரலாற்றை ஆராய்வதற்கான நோக்கம் இல்லாமலாகிவிட்டிருக்கும் என்கிறார். அது வரலாற்றை ஆராய்வதற்கான கருவிகளை அளிப்பது இரண்டாம் பட்சமே , ஏன் வரலாற்றை ஆராயவேண்டும், அதிலிருந்து எதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தெளிவே மார்க்ஸியம் அளிக்கும் முக்கியமான பங்களிப்பு. வரலாற்றாய்வில் ஒரு இலட்சியவாத அம்சத்தைச் சேர்த்தது மார்க்ஸியமே என்கிறார் ஹாப்ஸ்பாம்.


ஹாப்ஸ்பாம் மார்க்ஸிய வரலாற்றாய்வே மானுடவரலாற்றின் பரிணாமச்சித்திரத்தை அளிக்கக்கூடியது என நம்புகிறார். மார்க்ஸிய அரசியல் மட்டுமே நல்லது என்றோ, அல்லது போதுமானது என்றோ தான் நம்பவில்லை என்று சொல்லும் ஹாப்ஸ்பாம் ஆனால் மார்க்ஸிய வரலாற்றாய்வுமுறைமையே நவீன வரலாற்றாய்வில் ஒப்புநோக்க அதிக முழுமையும் ஒருங்கிணைவும் உள்ளது என இந்நூலில் மீண்டும் மீண்டும் வாதிடுகிறார்.


மார்க்ஸிய ஆதரவாளரல்லாத எர்னஸ்ட் கெல்னர் [ Ernest Gellner] கூறிய மேற்கோள் ஒன்றை ஒரு இடத்தில் ஹாப்ஸ்பாம் எடுத்துக்காட்டுகிறார். இன்றுவரை வரலாற்றாசிரியர்கள் மனிதனின் வரலாற்றுப் பரிணாமத்தை விளக்கக் கையாண்ட கருவிகளில் மார்க்ஸியமே முக்கியமானது, பிற அனைவரும் தங்கள் சொந்த ஐயங்களையும் மறுப்புகளையும் மட்டுமே முன்வைக்க முடிந்திருக்கிறதே ஒழிய ஒரு மாற்று வரலாற்று மொழிபை உருவாக்க முடிந்ததில்லை என்கிறார் கெல்லர்.


புதுவரலாற்றுவாதத்தின் அடிப்படைச்சிந்தனைகளைப் புரிந்துகொள்வதற்கு உதவக்கூடிய மூன்று முக்கியமான கட்டுரைகளை எரிம் ஹாபஸ்பாமின் இந்நூலில் காணலாம். மிக விரிவான விவாதத்துக்குரியவை அக்கட்டுரைகள். வரலாற்றெழுத்தாளர்கள் மார்க்ஸுக்கு எவ்வகையில் கடன்பட்டிருக்கிறார்கள் என்ற கட்டுரையில் எரிக் ஹாப்ஸ்பாம் மார்க்ஸியம் ஒன்றே வரலாற்றை ஒரு பரிணாமத்தொடர்ச்சியில் வைத்து பார்க்கிறது, தனிநிகழ்வுகளை ஒட்டுமொத்ததில் பொருத்துவதற்கான விரிவான சட்டகத்தை அளிக்கிறது என்கிறார்.


நூறு வருடத்தில் வரலாற்றெழுத்தில் மார்க்ஸியம் செலுத்திய செல்வாக்கு காரணமாகவே வரலாறு சமூகவியலுக்கு இத்தனை நெருக்கமானதாக ஆகியது, பண்பாட்டாய்வுக்கு அடித்தளமாக அமைந்தது என்று சொல்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம். இன்று எல்லா சமூக அறிவியல்துறைகளுமே 'வரலாற்றுமயமாக்க'ப்பட்டிருப்பதற்கு மார்க்ஸ் காரணம். பாசிட்டிவிச நோக்கின் மிதமிஞ்சிய எளிமைப்படுத்தல்களை தாண்டி வரலாற்றை நடைமுறைநோக்கில் தொகுத்துப்பார்க்கும் ஆய்வுமுறைமைகளை அது அளித்திருக்கிறது.


சம்பிரதாய மார்க்ஸியர்களின் ஒற்றைப்படையான கோட்பாட்டு விசுவாசத்தை 'அசிங்கமான மார்க்ஸியம்' என நிராகரிக்கும் ஹாப்ஸ்பாம் எவ்வகையான எளிமைப்படுத்தல்களையும் ஏற்பதில்லை. வரலாற்றாய்வின் மூலம் வாழ்க்கை பற்றியோ சமூகம் பற்றியோ வாய்ப்பாடுகளை உருவாக்கிக்கொள்ளமுடியாதென்றே அவர் நினைக்கிறார். வர்க்கநலன், அடித்தளம்-மேற்கட்டுமானம் போன்றவற்றை எளிய உருவகங்களாகப் பயன்படுத்தி வரலாற்றை ஆராயும் முறையை அவர் ஏற்பதில்லை. ஆனால் மார்க்ஸிய அடிப்படைகளான முரணியக்கப் பொருள்முதல்வாதமும், உபரிக்கோட்பாடும் வரலாற்றை விளக்குவதற்கான, எல்லைக்குட்பட்ட, உபயோகமான கருவிகள் என நினைக்கிறார்.


நூறு வருட வரலாற்றெழுத்தில் மார்க்ஸின் செல்வாக்கை நான்கு அடிப்படைக் கருத்துக்களாக 'மார்க்ஸும் வரலாறும்' என்ற கட்டுரையில் தொகுத்தளிக்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம். ஒன்று, உலகமெங்கும் சோஷலிசத்தை ஏற்றுக்கொள்ளாத சமூகங்களில் இன்றும் மார்க்ஸியத்தை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றை ஆராயும்போக்கு வலுவாகவே உள்ளது. மார்க்ஸிய வரலாற்றாய்வாளர்கள் ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் வலியுறுத்திவந்த அடிப்படைக் கருதுகோள்கள் பல இன்று மையநீரோட்ட வரலாற்றின் அடிப்படைகளாகவே ஆகிவிட்டிருக்கின்றன. உதாரணமாக ஒரு வரலாற்றுக்காலகட்டத்தின் உற்பத்தி முறைகள் உபரிசேமிப்பு பற்றிய புரிதல் அந்த வரலாற்றுக்காலகட்டத்தை அறிவதற்கு எந்த அளவுக்கு முக்கியமானது என்பது.


[தமிழகத்தில் இருந்து உதாரணம் காட்டவேண்டுமென்றால் மார்க்ஸியரே அல்லாத கெ.கெ.பிள்ளை சோழர்காலகட்ட உற்பத்தி மற்றும் வரிவசூல் முறைகளைப்பற்றி ஆராய்ந்ததைச் சொல்லலாம். அவரது கருவிகள் மார்க்ஸியத்தால் உருவாக்கப்பட்டவையே அவர் மார்க்ஸிய ஆய்வாளராக அல்ல, மையநீரோட்ட ஆய்வாளராகவே கருதப்படுகிறார். பர்ட்டன் ஸ்டெயின், நொபுரு கரஷிமா போன்ற சோழர்வரலாற்று ஆய்வாளர்களும் மார்க்ஸிய ஆய்வுமுறைகளை இயல்பாகவே பயன்படுத்துகிறார்கள்]


இரண்டு, மார்க்ஸிய வரலாற்றாய்வுமுறை கையாளப்படும் எல்லா நாடுகளிலும் மார்க்ஸ் ஒரு தொடக்கப்புள்ளியாக இருக்கிறாரே ஒழிய முடிவுப்புள்ளியாக அல்ல. அதாவது வர்க்கப்போர், புரட்சி, பொதுவுடைமைச் சமூகம் போன்ற இலக்குகளை வந்தடைவதற்காக அந்த ஆய்வுகள் நிகழ்த்தப்படவில்லை. முரணியக்கப் பொருள்முதல்வாத நோக்குடன் வரலாற்றைப் பார்ப்பதை மட்டுமே மார்க்ஸிடம் இருந்து இந்த வரலாற்றாய்வாளர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்


[இந்திய அளவில் உதாரணம் சொல்வதாக இருந்தால் டி.டி.கோசாம்பியை மார்க்ஸியவரலாற்றுநோக்குள்ள ஆய்வாளர் என்று சொல்லலாம். அவரது வழிவந்தவர்கள் என ரொமிலா தாப்பர், இர்ஃபான் ஹபீப், ஆர்.எஸ்.சர்மா போன்ற வரலாற்றாசிரியர்கள் மார்க்சிய அரசியல் செயல்திட்டத்துக்குள் சென்றவர்களே அல்ல. அவர்கள் இந்தியாவின் வரலாற்றை ஒரு பெரும் சமூக-பொருளியல் பரிணாமமமாகப் பார்ப்பதற்கு மட்டுமே மார்க்ஸியத்தைக் கைக் கொள்கிறார்கள்]


மூன்றாவதாக, மார்க்ஸிய வரலாறு நோக்கு என்பது இன்று மிகுந்த பன்மைத்தன்மையுடன் உள்ளது. அது ஒரு கோட்பாட்டு வழிமுறையோ அரசியல்பார்வையோ ஆக இல்லை. ஒரு பெரிய விவாதப்பரப்பாகவே உள்ளது. உலகம் முழுக்க அப்படித்தான். வரலாற்றை விளக்குவதற்கு மார்க்ஸியம் ஒரு வழிமுறையை அளிக்கிறது என்பதை விட வரலாற்றைப்பற்றிய ஒரு விரிவான விவாதத்தை உருவாக்குகிறது என்று சொல்வதே சரியானதாக இருக்கும்


நான்காவதாக, இன்று மார்க்ஸிய நோக்கிலான வரலாற்றாய்வுகளைப் பிற வரலாற்றாய்வுகளில் இருந்து பிரித்துநோக்க முடியாது. இது இருமுனை கொண்டது என்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம். ஏனென்றால் நெடுங்காலமாக மார்க்ஸிய வரலாற்றாசிரியர்கள் பிற வரலாற்றாய்வுகளைத் தரவுகளுக்காக அன்றி பொருட்படுத்தியதில்லை. மார்க்ஸியர்களுக்கும் பிறருக்குமான கொள்கைமோதல்கள் நீடிக்கிறதென்றாலும் மார்க்ஸிய வரலாற்றெழுத்து இல்லாமல் ஒட்டுமொத்த வரலாற்றெழுத்து நிறைவடையாது என்ற நிலை இன்று உருவாகியிருக்கிறது.


[இந்திய அளவில் நோக்கினால் டி.டி.கோசாம்பியைத் தொடக்கப்புள்ளியாகக் கொண்ட இந்திய மார்க்ஸிய நோக்கிலான வரலாற்றெழுத்து நெடுநாட்களாகக் கல்வித்துறைக்கும் சம்பிரதாய வரலாற்றெழுத்துக்கும் வெளியேதான் நின்றுகொண்டிருந்தது. எண்பதுகளுக்குப்பின் அந்த நிலை மாறிவிட்டிருப்பதை சமீபகால ஆய்வேடுகளைப்பார்த்தால் அறியலாம். இன்று அதிகம் மேற்கோள்காட்டபடும் வரலாற்றாசிரியர்கள் பலரும் கோசாம்பியின் மரபைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதற்கு ஜவகர்லால் நேரு பல்கலை ஒரு முக்கியமான காரணமாகவும் உள்ளது]


முடிவாக எரிக் ஹாப்ஸ்பாம் 'நம்மால் ஊகிக்கக்கூடிய வருங்காலத்திற்காக நாம் அரசியல் மற்றும் கருத்தியல் நோக்கில் தாக்குதல் தொடுப்பவர்களிடமிருந்து மார்க்ஸையும் மார்க்ஸியத்தையும் காத்துக்கொள்ள வேண்டிய இடத்தில் இருக்கிறோம். அதன் வழியாக நாம் உண்மையில் வரலாறு என்பதையே காத்துக்கொள்கிறோம், இந்த உலகம் இந்த இடத்தை நோக்கி எப்படி வளர்ந்து வந்து சேர்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள மனிதனால் முடியும் என்பதையும் இன்னும் மேலான எதிர்காலத்தை நோக்கிச் செல்ல மனிதனால் முடியும் என்பதையும் நிறுவிக்கொள்கிறோம்' என்கிறார்.


இந்நூலில் எரிக் ஹாப்ஸ்பாமின் ஆர்வமூட்டும் உரைகள் அத்தியாயத் தொடர்ச்சியுடன் தொகுக்கப்பட்டுள்ளன. பல்வேறு கோணங்களில் வரலாற்றைப்பற்றிய வினாக்களை எழுப்பிக்கொண்டு முன்செல்லும் இந்நூல் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு கேள்விகளுடன் அணுகப்படவேண்டிய ஒன்றாகும். 'வரலாறு முன்னகர்ந்திருக்கிறதா?' 'சமூகவியல் வரலாறும் சமூகத்தின் வரலாறும்' போன்று தலைப்புகள் ஒவ்வொன்றும் ஆர்வத்தை எழுப்பக்கூடியவை.


உதாரணமாக, வரலாற்றை நீங்கள் உள்ளே நின்று பார்க்கிறீர்களா இல்லை வெளியே நின்று பார்க்கிறீர்களா என்பது எப்போதுமே முக்கியமானது என 'வரலாற்றுக்கு உள்ளேயும் வெளியேயும்' என்ற கட்டுரையில் ஹாப்ஸ்பாம் விவாதிக்கிறார். வரலாற்றுக்கு வெளியே நின்று விவாதிப்பதென்பது பெரும்பாலும் அன்னிய வரலாற்றை ஆராய்வதிலேயே சாத்தியம். ஐரோப்பா இந்தியாவை அப்படி ஆராயலாம். சோவியத் ருஷ்யாவை முதலாளித்துவ ஐரோப்பா அப்படி ஆராயலாம். அது புறவயத்தன்மையை அடையக்கூடும் என்பது ஒரு சாதகமான அம்சம் என்றால் அது அந்த வரலாறுமீதான அன்னியனின் தீர்ப்பளிப்பாக ஆகிவிடுமென்பது எதிர்மறையான அம்சம்.


சோவியத் ருஷ்யாவின் வரலாற்றில் ஸ்டாலின் ஆட்சிக்காலகட்டம் மிகமோசமான ஒடுக்குமுறைகளாலானது என்பதை ஹாப்ஸ்பாம் ஒத்துக்கொள்கிறார். ஆனால் 1930களில் அந்தக் கம்யூனிச ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த ஏழைமக்களில் கணிசமானவர்களுக்கு அது பொற்காலமாக இன்றும் நினைவில் நீடிக்கிறது என்பதும் உண்மை. சுதந்திரமான படைப்பூக்கத்தை இறுக்கமான நிர்வாகம் மூலம் தடைசெய்தது, நெகிழ்வின்மைகாரணமாகப் புதிய வணிகச்சூழல்களுடன் ஒத்துப்போக முடியாதது ஆகியவை அச்சமூகஅமைப்பை அழித்தன. என்றாலும் இச்சாதனைகளை நாம் மறுக்கமுடியாது. சுதந்திர ஐரோப்பிய சமூகத்தில் இருக்கும் அன்னியனுக்கு இருக்கும் அதே வரலாற்று மனப்பதிவல்ல ஸ்டாலினிய ருஷ்யாவில் வாழ்ந்த அடித்தள வர்க்க தொழிலாளிக்கு இருக்கக்கூடியது. வரலாற்றெழுத்தில் இந்த வேறுபாடு என்றும் முக்கியமானது


வரலாற்றின் சமகாலப் பயன் என்ன என்ற கேள்வியை இன்று மீண்டும் மீண்டும் வரலாற்றுக்கோட்பாட்டாளர்கள் சந்திக்க நேர்கிறது. 'சமகால சமூகத்தைப்பற்றி வரலாறு என்ன சொல்ல முடியும்?' என்ற கட்டுரையில் அந்த வினாவை ஹாப்ஸ்பாம் எழுப்பிக்கொள்கிறார். பொதுவாக, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரைக்கும் கூட வரலாறென்பது இன்று நாம் நடந்துகொள்வதற்கான நேற்றைய முன்னுதாரணங்களைச் சுட்டிக்காட்டக்கூடிய ஒன்றாகவே எண்ணப்பட்டது. முன்மரபுகளின் பெருந்தொகை.


முன்னோர்கள் என்ன செய்தார்கள் என்பதன் விவரிப்பே வரலாறு என இந்த நோக்கை தொகுக்கலாம். அதாவது வரலாற்றெழுத்து என்பது சென்ற காலத்தில் இருந்து இன்றும் செல்லுபடியாகக்கூடிய விழுமியங்களைக் கண்டெடுப்பதும் அதனடிப்படியில் இன்றைய நம் நடவடிக்கைகளைத் தீர்மானித்துக்கொள்வதுமாகும். நீதி,நிர்வாகம் போன்ற தளங்களில் இன்றும்கூட வரலாறு அவ்வாறுதான் புரிந்துகொள்ளப்படுகிறது.


இன்னொருவகையில் வரலாறு தேவையாகிறது, அரசியல் காரணங்களுக்காக. இன,மொழி,தேசிய அடையாளங்களை கட்டி எழுப்புவதற்காக. அவை அரசியல் செலாவணிகள். இந்த நோக்கில்தான் பழங்காலம் பொற்காலம் என்ற கற்பிதங்கள் உருவாக்கப்படுகின்றன. பெரும்பாலும் அரைகுறை வரலாற்றாய்வுகளால், அவற்றை பயன்படுத்திக்கொள்ளும் அரசியல்வாதிகளால் இவை உருவாக்கப்படுகின்றன. எரிக் ஹாப்ஸ்பாமைப் பொறுத்தவரை ஐரோப்பாவில் அந்த வகையான வரலாற்றுநோக்கு பெரிதும் வழக்கொழிந்துவிட்டது. இந்தியாவில் பிரபலமாக இருப்பது அது என நாம் அறிவோம்.


கடைசியாக, சமகாலக் கொள்கை வகுப்புக்கு வரலாறு தேவையாக ஆகிறது.அரசியல், பொருளியல் கொள்கை வகுப்பாளர்கள் ஒரு சமூகச்சூழலை புரிந்துகொள்ள அதன் வரலாற்றைப் பயன்படுத்துகிறார்கள். லெபனான் பற்றிப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ருஷ்ய நூல் ஒன்றின் மொழியாக்கத்தை வாசிக்கநேர்ந்த இஸ்ரேலிய ராணுவத்தளபதி ஒருவர் இந்நூலை முன்னரே வாசித்திருந்தால் ஏராளமான ராணுவப்பிழைகளைக் களைந்திருக்கலாம் என்று சொன்னதை எரிக் ஹாப்ஸ்பாம் சுட்டிக்காட்டுகிறார். ஒரு மக்கள்தொகையின் மனநிலைகள், ருசிகள் ,பழக்கவழக்கங்கள் மற்றும் அவர்களின் மனதில் உள்ள முன்னுதாரணங்கள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள வரலாற்றாய்வு உதவுகிறது.


ஹாப்ஸ்பாம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற அதிகவரலாறு இல்லாத, தொடர்ச்சியான சமூகக்கொந்தளிப்புகள் மூலம் மாற்றங்கள் நிகழ்ந்த, புதிய தேசங்களைப் பற்றிப் பேசும்போது இந்த வரலாற்று உருவகம் எவ்வகையில் பொருள்படுகிறது என்று இக்கட்டுரையில் ஆராய்கிறார். முக்கியமாக அமெரிக்காவை. அமெரிக்காவின் சமகால வரலாற்று நிகழ்வுகள் வரலாற்றுப்பரிணாமத்தைப்பற்றிய ஒரு சித்திரத்தை அளிக்கக்கூடியவை என்கிறார்


மார்க்ஸிய உபரிக் கோட்பாட்டை வரலாற்றை விளக்குவதற்கான முக்கியமான ஆய்வுக்கருவியாக எரிக் ஹாப்ஸ்வாம் நினைக்கிறார். சென்ற காலகட்டங்களில் உலகமக்கள்தொகையில் 90 சதவீதம்பேரும் உணவுற்பத்தியில் ஈடுபட்டிருந்தார்கள். இன்று வட அமெரிக்க நிலப்பகுதியில் வெறும் 3 சதவீத மக்கள் அந்நாட்டின் 97 சதவீதம் பேருக்கும் உணவை அளிக்கமுடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அடிப்படை உழைப்பில் இருந்து வெளியே வரும் மக்கள் மேற்கட்டுமானத்தை மேலும் மேலும் விரிவுபடுத்துகிறார்கள் என்பது ஒரு நடைமுறை உண்மையாகவே நம் கண்முன் உள்ளது என்கிறார்.


மார்க்ஸ் முன்னரே ஊகித்திருந்தும் கூட 1960கள் வரையிலும் இந்த அளவுக்கு உணவுற்பத்தியில் உழைப்புக்குறைவு நிகழும் என்பது கண்கூடாக நிகழ்ந்திருக்கவில்லை. அறுபதுகளுக்குப்பின்னர் மெல்லமெல்ல பிற உற்பத்தித்துறைகளிலும் உழைப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டிருக்கிறது. மெல்லமெல்ல சேவைத்துறையில் மானுடப்பங்களிப்பு அதிகம் நிகழ்கிற நிலை வந்துள்ளது. இது எதைக்காட்டுகிறது என்றால், உபரி மூலம் மேலும் மேலும் மேல்கட்டுமானம் வலுப்பெறும் நிலையைத்தான்.


இவ்வாறு மேல்கட்டுமானம் வலுப்பெறும் நிலையில் இரு தளங்கள் செயலூக்கம்பெறுகின்றன. ஒன்று பணப்பரிமாற்ற வணிகம். இன்னொன்று பண்பாட்டு விவாதங்கள். இதை அமெரிக்க சமூகத்தில் காணமுடிகிறது. அமெரிக்காவே இவ்விரு தளங்களில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று சொல்லமுடியும். அறிவையும் பணத்தையும் அது வியாபாரப்பொருளாக ஆக்கிவிட்டிருக்கிறது இன்று. ஆக இங்கே வரலாற்றாய்வு என்பது சமகால அமெரிக்காவைப் பற்றிய ஆய்வாக உருக்கொள்கிறது.


எரிக் ஹாப்ஸ்பாம் மிக வலுவான நிலையில் நின்று பின்நவீனத்துவ சிந்தனைகளின் ஐயவாதத்தை, வெற்றுத்தர்க்கத்தை எதிர்கொள்கிறார். அவரது சாராம்சம் மார்க்ஸியத்தைச் சார்ந்த இலட்சியவாதமே. எந்தச் சிந்தனையும் மனித மேம்பாட்டுக்கான சிறந்த விழுமியங்களை உருவாக்கக்கூடியதாகவும், மேலான எதிர்காலத்துக்கான கனவைக்கொண்டதாகவும் இருந்தாகவேண்டும். பின்நவீனத்துவ சிந்தனைகள் அவ்வகையான சாரம் அற்றவை, பயனற்றவை என்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம்.


ஓர் ஆசிரியரின் ஒட்டுமொத்தப் பார்வையைக் கச்சிதமான ஒரு சொற்றொடரில் கண்டுகொண்டு அதை நினைவில் மீட்டிக்கொள்வது என் வழக்கம். 'வரலாற்றாசிரியர்கள் தவிர்க்கக்கூடாத கேள்வி என்பது குகைமனிதனில் இருந்து விண்வெளிப்பயணி எப்படி உருவானான் என்பது. அல்லது கொடுவாள் பல்லுள்ள புலியை அஞ்சிய நிலையில் இருந்து அணுகுண்டை அஞ்சும் நிலை எப்படி வந்தது என்பது' என்ற ஹாப்ஸ்பாமின் வரி என்னை நெடுநேரம் சிந்தனைகளை மீட்டிக்கொள்ளச் செய்தது.


இந்தவரியில் ஹாப்ஸ்பாமின் அணுகுமுறை துல்லியமாக உள்ளது. ஒன்று, அவர் ஒரு மார்க்ஸியர். ஆகவேதான் அந்த முதல் வரி. ஆனால் அவர் ஒரு சம்பிரதாய மார்க்ஸியர் அல்ல. அவருக்கு மானுட விழுமியங்களைப்பற்றிய கவலை எப்போதுமுண்டு. அதுவே அவரது அடிப்படையான நோக்கு. ஆகவே அந்த இரண்டாவது வரி.


[On History. Eric Hobsbawm. ABACUS London]

தொடர்புடைய பதிவுகள்

இந்துமதம்,சம்ஸ்கிருதம்,பிராமணர்
எம்.டி.முத்துக்குமாரசாமியின் விமர்சன அடித்தளம்
எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு நல்வரவு
கேள்விகள்
காந்தியின் எதிரிகள்
மார்க்ஸியம் இன்று தேவையா?
மார்க்ஸ்-கடிதம்
மார்க்ஸ் கண்ட இந்தியா
கிறிஸ்து,கிருஷ்ணன்,பகுத்தறிவு…
மார்க்ஸ்,ஹெகல்,முஜீப்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 01, 2011 10:30

கார்ல் சகனும் அரவிந்தரும்

இன்று உங்கள் தளத்தில் ஒரு கட்டுரையில் காணப்பட்ட ஒரு சுட்டியில் இருந்து கார்ல் சாகன் கட்டுரைக்குச் சென்று படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் பத்தி எனக்கு அரவிந்தரின் சாவித்திரியை நினைவுபடுத்தியது:


'ஆனால் கிறித்தவத்தின் மனிதாபிமான தத்துவ எல்லைக்கு மேல் நகர கார்ல் சகனால் முடியவில்லை என்பது உண்மையில் புரிந்துகொள்ளச் சிரமமான ஒன்று. நாவல் எல்லியில் குவிந்து அவள் கண்டடைந்த இறுதி தரிசனத்தை அடைந்து முழுமை பெறுகிறது. அது கிறிஸ்துவின் மனிதநேயம் மட்டும்தான் – தொடும்போது அது அதுவரை நாவல் உருவாக்கிய அனைத்து மன விரிவுகளையும் எதிர்த் திசைக்கு திருப்பிவிட்டு ஒற்றைப்புள்ளியில் குவிப்பதாக மாறிவிடுகிறது. அதாவது அந்த மாபெரும் பயணமே தேவை இல்லை என்பதுபோல அது அர்த்தப்படுகிறது. அறிவுக்கு எதிரானதாக அன்பை வைத்துப் பேசிய கிறித்தவ மரபின் குரலையே அங்கு நாம் கார்ல் சகனில் காண்கிறோம். இந்நாவலின் மிகப்பெரிய பலவீனம் இந்த திரும்பிச் செல்லல்தான்.'


The sages ask Savitri (Book XII, Epilogue) what was that she found after her quest that spanned travelling psychically the entire cosmos, and her reply is almost the same as Ellie's :


'Then one spoke there who seemed a priest and sage:


"O woman soul, what light, what power revealed,


Working the rapid marvels of this day,


Opens for us by thee a happier age?"


Her lashes fluttering upwards gathered in


To a vision which had scanned immortal things,


Rejoicing, human forms for their delight.


They claimed for their deep childlike motherhood


The life of all these souls to be her life,


Then falling veiled the light. Low she replied,


"Awakened to the meaning of my heart


That to feel love and oneness is to live


And this the magic of our golden change,


Is all the truth I know or seek, O sage."


Wondering at her and her too luminous words


Westward they turned in the fast-gathering night.'


Incidentally it is a woman in both cases and both have travelled in realms outside our sensory world. Both seem to say the same! There is indeed a subtle difference which is nevertheless crucial in interpreting Savitri's message. I would leave it to JM for elaborating it, if he wants to.


Regards,


vishvesh

தொடர்புடைய பதிவுகள்

யோகமும் கிறித்தவமும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 01, 2011 10:30

November 30, 2011

பின்தொடரும் நிழலின்குரலும் அறமும்


அன்புள்ள ஜே


நீண்ட நாட்களாக எதுவும் எழுதாமல் இருந்தபின், எண்ணங்களைக் கோர்வையாக்கி எழுத விழைகிறேன்.


இந்தக்`குழுமத்தில் சேர்ந்த பிறகு உங்கள் படைப்புகளைத் திரும்பவும் ஒரு புதிய கோணத்தில் படிக்க எண்ணி ,இரண்டாம் முறையாகப் "பின் தொடரும் நிழலின் குரல்" படிக்க ஆரம்பித்தபொழுது இவ்வாறு ஒரு அனுபவத்திற்குள்ளாவேனென்று நினைக்கவேயில்லை. அதன் தாக்கம் என்னைப் பல திசைகளுக்கு இழுத்துச்சென்றது.


அருணாச்சலம், கெ.கெ.எம், வீரபத்ரபிள்ளை, புகாரின், அன்னா, குழந்தை, ஜெயமோகன், டால்ஸ்டாய்….. அனைவருமே என்னோடு கூடவே இருப்பதுபோல் ஒரு உணர்வு என்னால் தவிர்க்க முடியவில்லை. ஒரு காகிதத்தில் கருப்பு அச்சுகளாய்த் தோன்றும் எழுத்துக்கள் உயிர்பெற்றுத் தாண்டவமாடி அழியாச்சுவடு விட்டுச்சென்றன.


அருணாச்சலம், வீரபத்ரபிள்ளையைக் குறித்துத் தேடும்பொழுது நான் இணையத்தில் புகாரினைத் தேடிக்கொண்டிருந்தேன். ஒரு சின்ன பொறியாய்த் தொடங்கியது அதனுள்ளே மூழ்கும் அபாயம் வரை சென்றபொழுது ஓரளவு என் நிஜம் புரிய கட்டுப்படுத்திவிட்டேன். உங்களைத் தொடர்பு கொண்டு அருணாச்சலம், வீரபத்ரபிள்ளை, கெ.கெ.எம் என்று நிஜமான மனிதர்கள் இருந்தால் அவர்களை சந்தித்க்க முடியுமா என்றும் கேட்கலாமென இருந்தேன்.


புகாரின். ருஷ்ய புரட்சி, மார்க்சீய சித்தாந்தங்கள், அறம், டால்ஸ்டாய், அன்னா கரினினா…. இவை எல்லாமே ஒரு வட்டத்திற்குள் அடங்கமுடியாதவை. இவை மானுடத்தின் சாட்சிகள். வலிகள் மட்டுமே உன்மையனெ உணர்த்தும் குறிப்புகள்.


இவைகளின் நீட்சியாகப் பல வினாக்கள்:


• மானுட வாழ்வு ஏன் இத்தனை உட்சிக்கல்கள் மிகுந்ததாயிற்று? இவையனைத்தும் நம்மால் உருவாக்கப்பட்டவையே என்றால் அதை விடுவிக்கவும் முடியுமே?


• அறம், தர்மம். சித்தாந்தம், உரிமை, உடைமை எல்லாமே நாம் உருவாக்கியவையே. வேறேதும் உயிரினத்திற்கு இந்த சுமை இல்லையே!!


• அறம் வலுப்பெறுவது எதிர் அறம் மூலமாகத்தானா?? (தர்மத்தை ஸ்தாபிக்க அதர்மம் இருந்தால்தானே முடியும்?)


• புகாரினின், அருணாச்சலத்தின், வீரபத்ரபிள்ளையின் அறம் அவர்கள் எதிர்கொண்ட "எதிர் அறம்" மூலமாகவே உருவானதா?


• கெ.கெ,எம் கிருஷ்ன பக்தரானது ஒரு லட்சியவாதத்தின் தோல்வியா அல்லது ஒரு ஆன்மா தன்னைக் கண்டடையும் பிரயாணத்தின் முடிவா?


• லட்சியவாதம் என்பது நிறுவனமயமாக்கவேமுடியாததா?? ஒரு கனவின் நீட்சியாக, விதையாகத் தோன்றும் என்னம் நடைமுறையில் உருப்பெறும்போது அதன் தூய்மையைத் தொலைத்துவிடுமா?


• ஒரு வகையில் ஸ்டாலினின் செய்கைகளும், ருஷ்யப் புரட்சியின் படுகொலைகளூம், சைபீரியப் பனிகளில் உருகியோடிய உதிரமும் அதன் "அறத்தால்" நியாயப்படுத்தப்பட்டவையா?


• டால்ஸ்டாயின் / புகாரினின் அறம் அவர்கள் சிந்தையின் விளைவே. ஆனால் இரண்டும் வெவ்வேறு திசைகளில் பயணிப்பவை. இதில் எது சரி?


• அறம் என்ற ஒரு உணர்வே ஒரு மிகைப்படுத்தல்தானா? மிகுந்த சுமையாகவும், அயர்ச்சியாகவும் இருக்கிறது. இப்படி யோசிக்கக் காரணம் – வேறெந்த ஒரு உயிரினத்திற்கும் இல்லாதமையால் நாம் மட்டும் சுமந்து திரிகிறோமா?


• அறம் – "அறிதலின் / ஞானத்தின்" முதல் படியா?? அறிதலின் / ஞானம் தேடுதலின் வலி அறத்திலும் உள்ளதா?


• அறம் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியா? Is it an outcome of mankind's eternal search of answers to unravel the mystery of this universe?


உங்கள் தளத்தில் "பி.தொ.நி.கு" குறித்த கடிதங்கள், விவாதங்கள் நிறையப் படித்தாலும் மனதின் ஏதோ ஒரு மூலையில் அருணாச்சலம் அழுதது ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. அது என் குரலா??? தெரியவில்லை….


ஒரு புனைவின் எல்லைகளை மீறி உயிர் வாழும் அருணாச்சலம் நலமாக இருக்க வேண்டுகிறேன்,


சதீஷ் (மும்பை)


அன்புள்ள சதீஷ்


பின் தொடரும் நிழலின் குரல் அதன் பரப்புக்குள்ளேயே இந்த வினாக்களை எழுப்பிக்கொள்கிறது என நினைக்கிறேன். அவை சார்ந்த ஐயங்களை சஞ்சலங்களை உங்களிடம் உருவாக்குவது மட்டுமே அதன் பணி. விடைகள் அவரவர் வாழ்க்கை சார்ந்து அறிதல் சார்ந்து நிகழ்கின்றன.


மனிதவாழ்க்கையை இத்தனை உட்சிக்கல்கள் கொண்டதாக ஆக்குவது எது என்பது மிக முக்கியமான வினா. மனிதமனம்தான். அது பல அடுக்குகளாகப் பிரிந்து தன்னைத்தானே கண்காணித்து தன்னைத்தானே கலைத்துக்கலைத்து அடுக்கிக்கொண்டு நிகழ்கிறது. மானுட மனமே அனைத்தையும் சிக்கலாக்கிக்கொள்கிறது. வாழ்க்கைநியதிகளை, உறவுகளை மட்டுமல்ல. இயற்கையைக்கூட அது படிமங்களாக ஆக்கி சிக்கலாக்குகிறது.


அந்தவினாக்களுக்கான விடைகளை உங்களிடம் நீங்கள் தேடலாம். மீண்டும் ஒருமுறை எப்போதாவது நாவலுக்குள் சென்று பார்க்கலாம்


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

அறம் விழா
அறம் – சிறுகதைத் தொகுப்பு கிடைக்குமிடங்கள்
எதற்காக அடுத்த தலைமுறை?
அறம் வாழும்-கடிதம்
மண்ணாப்பேடி
உங்கள் கதைகள்-கடிதம்
அறம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறதா?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 30, 2011 10:30

பலிகளின் பயணம் -கடிதம்

அன்புள்ள ஜெ,


'மாபெரும்பயணம்' மறுபடியும் படித்தேன்.


எருமைகள் பகல் சாயத்தான் சென்றுசேர முடியும். அவற்றின் காலம் மேலும் அகன்றது . உருளும் பாறைக்கூட்டங்கள் போல அவை பின்னால் ஓலமிடும் வண்டிகளுக்கு வழிவிடாது செல்லும் . பெரிய உருண்டவிழிகளை விழித்து பசுமையை பார்க்கும் . ஆள்கூட்டத்தில் எவருடைய சாயலையாவது கண்டடைந்து ம்றே ? என வினவும் .தண்ணீர்கண்டால் முட்டி மோதி சென்று படுத்துக் கொள்ளும்.அசைபோட்டுக் கொண்டு யோக மோனத்தில் ஆழ்ந்துவிடும். வாழ்க்கை பற்றி துயரத்துடன் ஆழ்ந்து சிந்தித்து பெருமூச்சுவிடும். கொம்பு தோளில் படாமல் நாசூக்காக திரும்பிப்பார்க்கும்.


என்ற வரிகளின் வழியாக எருமையின் நிதானத்தில் மெல்லக் கலந்து, நரம்புகள் தளர்ந்து இளகி அசைவற்று இருக்கையில்




நாசியில் மிளகாய்ப் பொடி ஏற்றி அவற்றைக் கிளப்பவேண்டும்.


என்ற வரி சுருக்கென்று குத்தும் எரிச்சலுடன் படிப்பவனையும் கிளப்புகிறது – அடிமாடுகளின் மரணத்திற்கான பயணத்தை நோக்கி!


புரட்சி, சித்தாந்தம், ஆயுதம், போர், பலி, கொள்கை, தியாகம் என்றெல்லாம் "நீர்சிகிட்சை நிபுணர்களால்" வாயில் குடம் குடமாகக் கொட்டப்பட்ட நீரால் உடல் உப்பிப் பளபளப்பாகத் தொடர்கிறது அடிமாடுகளின் பயனம் – சாவை நோக்கி.


காஷ்மீர் போராளி, இலங்கைப் புரட்சியாளன் இன்னும் பலவாறு பகல் கற்பனை செய்து கொள்ளும் எல்லா அடிமாடுகளும் வழிகாட்டி மாடுகளின் பின்னால் சென்று கில்லட்டினை அடைந்ததும் தோலையும், காதுகளையும் இழந்து உயிருடன் இருந்த உருவத்திலிருந்து முற்றிலும் வேறாக மாறி எல்லாம் ஒன்றுபோல குருதி சொட்டும் சிவப்பு மாமிசப் பிண்டமாகிக் கொக்கியில் தொங்குகின்றன. காஷ்மீரோ, இலங்கையோ- 'கொம்பின்' வடிவத்திற்கேற்ப கசாப்புக்கட்டையில் சரிந்த தலைகள், கழுத்து வெட்டப்படும் முன் கண்டடைந்த ஞானத்தைச் சொல்லத் துடித்து, சொல்லப்படாமல், வெறித்த விழிகளுடன் கிடக்கின்றன.


கோலப்பன் தற்கொலை செய்து கொண்டாலும், வாழ்வில் எல்லாவற்றையும் மறந்து வெகுதூரம் வந்து விட்ட கதை சொல்லி, உருக்கள் நதியாகச் சுழித்து மரணத்தின் பீடத்தை நோக்கிச் செல்லும் அந்தப் பொள்ளாச்சி சாலைக்கே சைபீரிய நாரை போல தன்னையறியாமல் வந்து சேர்கிறான். கதை சொல்லிக்குப் பெயரே இல்லை – வெறும் 'அவன்' தான். ஆம், அடிமாடுகளாக இழுத்துச் செல்லப்படும் யாராக இருந்தாலும் அது 'அவன்' தான். ராவ்ஜி, கோலப்பனுக்குப் பிறகு 'அவன்'. மீண்டும் நீர்சிகிட்சை, மீண்டும் பயணம், மீண்டும் கில்லட்டின்.


பிறந்து விழுந்தது முதல் தவழ்ந்தும், நடந்தும் மரணத்தை நோக்கியே செல்லும் ஒரு மிகச் சிறிய நேர்கோட்டுப் பயணம் தானா வாழ்க்கை? அதைப் பெரும்பயணமாக்குவது மீண்டும் மீண்டும் வரும் 'அவன்'களால் வட்டத்தின் முடிவின்மை போல் சுழலும் இந்த அடிமாட்டு வாழ்க்கை தானா?


ஏதேதோ காரணங்களுக்காக இழுத்துச் செல்லப்பட்டு கும்பலாக மடியும் போராளிகள் – அடிமாடுகளின் பயணம் என்கிற குறியீடு, பொருள் கொள்ளலுக்குத் தரும் சாத்தியங்கள் முடிவிலியாக விரிகின்றன.


நன்றி ஜெ,

அன்புடன்,

பிரகாஷ்.

தொடர்புடைய பதிவுகள்

மாபெரும் பயணம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 30, 2011 10:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.