Jeyamohan's Blog, page 2272
November 13, 2011
அதிரம்பாக்கம் – ஒரு தொல்லியல் புரட்சி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
சமீபத்தில் தொல்லியல் துறையில் நடந்த ஒரு முக்கியமான ஆய்வைத் தங்கள் முன் வைக்க விரும்புகிறேன். சென்னையில் சர்மா ஆய்வு மையத்தைச் சேர்ந்த சாந்தி பாப்பு மற்றும் குழுவினரும் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்தேக்கத்திற்கு அருகில் இருக்கும் அதிரம்பாக்கத்தில் நடத்திய விரிவான ஆய்வில், அங்கு இருக்கும் கொற்றள்ளயாறு பள்ளத்தாக்கில் 15 லட்சம் ஆண்டுகள் பழமையான பழங்கற்கால மனிதர்கள் வாழ்ந்து இருந்ததைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இது உலகத் தொல்லியலில் ஒரு புரட்சி என்றே வருணிக்கப்படுகிறது.
இந்த ஆய்வுக் கட்டுரை இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சயின்ஸ் (உலக அளவில் அறிவியல் ஆய்விதழ்களில் இரண்டாவது) ஆய்விதழில் வெளிவந்து இருக்கிறது. அதே இதழில் இந்தக் கட்டுரையின் முக்கியத்துவத்தை முன் வைத்து இன்னொரு கட்டுரையும் வெளிவந்து இருக்கிறது. அதில், அதிரம்பாக்கம் ஆய்வின் மூலம், பல தொல்லியல் புதிர்கள் (குறிப்பாக ஆப்பிரிக்காவில் இருந்து சீனாவிற்குக் கற்கால நாகரிகம் போன விதம்) விடுபடுவதாகக் கூறப்பட்டுள்ளது. அதோடு, ஆப்ரிக்காவிற்கு அடுத்தபடியாகப் பழமை வாய்ந்த கற்கால நாகரிகம் நம்முடையதே என்பதும் இதில் தெளிவாகிறது. இதை பற்றி இந்து நாளிதழில் வெளியான கட்டுரை http://www.thehindu.com/sci-tech/science/article1568651.ece).
அனைத்துக் கட்டுரைகளையும் இங்கு இணைத்து உள்ளேன்.
நன்றி.
தங்கள் அன்புள்ள,
சரவணக்குமார்.
[அதிரம்பாக்கம் அகழ்விடம்]
அன்புள்ள சரவணக்குமார்
நன்றி.
ஏற்கனவே ஒரு விவாதத்தில் அ.கா.பெருமாள் அதிரம்பாக்கம் பற்றி சொன்னார். ஆனால் உங்கள் சுட்டிகள் மற்றும் கட்டுரைகள் வழியாக விரிவாகவே அறிந்துகொண்டேன். ஒருவகையில் ஆச்சரியமாகவும் ஒருவகையில் ஆச்சரியத்துக்கிடமில்லாமலும் இருக்கிறது. நல்ல மழைவளமும் வெயிலும் கொண்ட நம் நிலம் ஆதிமனிதன் உருவான இடமாக இருப்பது மிக இயல்பானதே.
தமிழகத்தின் மானுட வரலாறு வெவ்வேறு தனித்தனிப் புள்ளிகளாகத் தெரிந்துகொண்டே இருக்கிறது. கற்காலக் கருவிகள், குகை ஓவியங்கள், ஆதிச்சநல்லூர் மற்றும் மகேந்திரமங்கலம் அகழ்வாதாரங்கள் என. அவற்றை அர்த்தபூர்வமாக இணைத்து ஒரு வரலாற்றுச்சித்திரத்தை உருவாக்கும் சிந்தனை வீச்சு இன்று நமக்கில்லை. வரும்காலத்தில் ஆய்வுகள் மூலம் இன்னும் பல திறப்புகள் நிகழலாம். புள்ளிகள் கோலமாகலாம்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
உண்மைதான். அப்படிப்பட்ட சிந்தனை நம்மிடம் தற்போது இல்லை. அதோடு நம்முடைய தொல்லியல் துறையின் நிலை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. உதாரணமாக தமிழ்நாடு தொல்லியல் துறையின் இணையதளத்திற்கு (http://www.tnarch.gov.in)சென்று பாருங்கள். கொடுமை. பல ஆண்டுகளாக அப்டேட் செய்யப்படாமல் இருக்கிறது. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களின் எளிய வரலாறு கூடப் பதிவேற்றம் செய்யப்படவில்லை. ஒரு சில கோவில்களுக்கு வெளியே மட்டும் ஒப்பிற்கு ஒரு தகவல் பலகை இருந்து வந்தது. தற்போது அது கூட இல்லை.
ஆதிச்சநல்லூர் சென்றபோது, எனக்கு ஒன்றுமே புரியவில்லை. சாலைக்கு இருபுறமும் தொல்லியல் துறை பலகை மட்டுமே இருக்கிறது. ஒரு தகவல் பலகை செய்ய அவ்வளவு செலவாகுமா அல்லது போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லையோ தெரியவில்லை. அது மட்டுமில்லாமல், ஒரு தனியார் நிறுவனம்(http://www.sharmaheritage.com/) உலகத் தரமான ஆய்வு செய்ய முடியும் என்றால் ஏன் அரசுத்துறையினரால் முடியாமல் போனது?
தங்கள் அன்புள்ள,
சரவணக்குமார்.
ஆதிச்சநல்லூர் சிதம்பரம்
தொடர்புடைய பதிவுகள்
ஆதிச்சநல்லூர்:கடிதங்கள் மேலும்
ஆதிச்சநல்லூர்:மேலும் கடிதங்கள்
ஆதிச்சநல்லூர்:கடிதங்கள்
ஆதிச்சநல்லூர் சிதம்பரம்
பங்கர் ராய்
திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
எனக்கு அனுப்பப்பட்ட ஒரு சுட்டியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நம்முடைய கல்வி அமைப்பின் குறைபாடுகளைப் பற்றியும், தற்போதைய கல்வி அமைப்புகள் எப்படி முழுதும் வணிகரீதியாக செயல்படுகின்றன என்பதும் உங்கள் வலைப்பக்கங்கள் அதிகம் விவாதித்திருக்கின்றன . பொறுப்பில்லாத ஆசிரியர்கள், அரசியல்மயமாக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், இருக்கும் இயற்கையான திறமைகளையும், மழுங்கடிக்கப்பட்டு பட்டதாரி என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வெளியேற்றப்படும் ஆயிரக்கணக்கான இளைஞர் பட்டாளம், இவை நாட்டுப்புறங்களில் பரம்பரையாக இருந்துவரும் நுட்பமான திறமைகளையும், வழி வழி வந்த கைவேலைகளையும் , நுண் கலைகளையும் , மரபு வழி வைத்திய முறைகளையும், வரும் தலைமுறைகளுக்கு தெரியாமல் அழிந்துவிடச் செய்கின்றன .
ராஜாஜி அறிமுகப்படுத்திய கல்விமுறை பற்றிய உங்கள் கருத்துக்கள் நம் பாரம்பரியக் கற்பித்தல்களை அடுத்த தலைமுறைக்கு ஓரளவு கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பை அளிக்கக் கூடியதாக இருந்தது என்பதாக இருந்தது.
இந்தச் சுட்டியின் 'பங்கர் ராய்' என்பவரின் கல்வி முயற்சியை உண்மையிலேயே ஒரு சிறந்த முன்னுதாரணமாக நான் காண்கிறேன்.
இது பற்றி உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.
இது போன்ற முயற்சிகள் தமிழ் நாட்டில் எடுக்கப்பட்டால் அதற்கான ஆதரவு எப்படி இருக்கும்? அத்தகைய முயற்சிகள் கொச்சைப்படுத்தப்படும் வாய்ப்புகளைப் பற்றி?
http://www.ted.com/talks/bunker_roy.html?awesm=on.ted.com_9sle
அன்புடன்,
சங்கரநாராயணன்
[பங்கர் ராய்]
அன்புள்ள சங்கர நாராயணன்,
ஓர் உரையாடலில் ஜெயகாந்தன் சொன்னார், 'காந்தியம் இந்தியமண்ணில் மணலில் விதைபோலக் கலந்திருக்கிறது . எங்கெல்லாம் சிறு முயற்சியின் ஈரம் படிகிறதோ அங்கெல்லாம் காந்தியம் முளைத்தெழும். ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊருக்கான காந்தி இருப்பார். கொஞ்சம் கவனித்தால் நம் கிராமங்கள் அனைத்திலுமே ஒரு காந்தியைக் காணமுடியும்'
பங்கர் ராய் நவகாந்தியவாதிகளில் ஒருவர். காந்தியக் கல்வி என்ற கருதுகோளின் நடைமுறை வடிவம் அவர். காந்தியக்கல்விக்கொள்கை மூன்று அடிப்படைகள் கொண்டது.1. கல்வி,நடைமுறைத்தன்மை கொண்டதாக, அன்றாடவாழ்க்கையில் பயன் தருவதாக இருக்கவேண்டும். புறவாழ்க்கையின் ஓர் அம்சமாக அது இருக்கவேண்டும். வாழ்க்கையிலிருந்து மாணவர்களைத் தனித்து விடுவதாக இருக்கலாகாது 2. விழுமியங்களை மாணவர்களுக்கு அளிக்கவேண்டும். வெறும் தகவலறிவை, தொழில்நுட்பத்தை அளிப்பதாக இருக்கக்கூடாது . ஒட்டுமொத்த ஆளுமைப்பயிற்சியாக இருக்கவேண்டும் 3. ஆசிரியர் மாணவர் என்ற அந்தரங்கமான பகிர்வுக்கு இடமிருக்கவேண்டும்
காந்தியக்கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்த வாழ்க்கையைச் செலவிட்டவர் பங்கர் ராய். பிரபல சமூக சேவகியும் தகவல் உரிமைக்கான போராளியும் லோக்பால் மசோதாவுக்கான முன்வரைவை உருவாக்கியவருமான அருணா ராய் இவரது மனைவி.
நீங்கள் சொல்வது உண்மை. தமிழகத்தில் காந்தியவாதிகளைப்பற்றிய ஆழமான அவநம்பிக்கையை இங்குள்ள திராவிட இயக்கம் உருவாக்கியிருக்கிறது. திராவிடசிந்தனை அடிப்படையில் இலட்சியவாதத்துக்கு எதிரானது , நடைமுறையில் சுயநலத்தையே சார்ந்தது. ஆகவே அது தமிழக சிந்தனையில் எல்லாவகையான நல்ல முயற்சிகளையும் எள்ளி நகையாடும் மொண்ணைத்தனத்தை உருவாக்கி விட்டிருக்கிறது. ஊழல்செய்பவர்களை உள்ளூர வழிபடுபவர்களே இங்கே அதிகம். காந்தி முதல் அண்ணா ஹசாரே வரையிலானவர்களை வசைபாடும், எள்ளி நகையாடும் மனங்கள் இங்கே இவ்வளவு இருப்பதற்கான காரணம் இதுவே
ஆனால் காந்தியம் அந்த எதிர்ப்புக்கும் அவதூறுக்கும் அவமதிப்புக்கும் அஞ்சுவதாக இருக்காது. அடிப்படையில் காந்தியம் அத்தகைய எதிர்நிலைகளைத் தனக்குரிய உரமாக எடுத்துக்கொண்டு வளர்வது. இங்கும் காந்தியவாதிகள் தங்கள் இயல்பான அர்ப்பணிப்புடன் பெரும்பணி ஆற்றியிருக்கிறார்கள் — கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் தம்பதிகள்போல
பங்கர் ராய் பற்றி விரிவாக எப்போதாவது எழுதவேண்டும் என நினைத்திருக்கிறேன்.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
இரு கடிதங்கள்
காந்தியம் ஒரு கடிதம்
November 12, 2011
காந்தி-வாசிப்பு-சுயம்:ஒரு கடிதம்
மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். நலமா ?. மீண்டும் உங்களை கடிதம் மூலம் தொடர்பு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. கடந்த மாதம் "இன்றைய காந்தி " படித்து முடித்தேன். உடனே கடிதம் எழுதவேண்டும் என்று எண்ணினேன் . இருந்தாலும் ஒரு அவரசநிலையில் எழுதவேண்டாம் , ஆறப்போட்டு எனக்குள் அப்புத்தகத்தின் கருத்துக்கள் என்ன செய்கின்றன என்று பார்த்த பின் எழுதலாம் என்று எண்ணத்தில் இப்பொழுது எழுதுகிறேன்.
பொதுவாக எனக்கு அரசியல் சார்ந்த புத்தகங்கள் படிப்பதில் பெரும் ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் இப்புத்தகம் என்னை அதற்குள் வாரி, சுருட்டி எடுத்துக்கொண்டது. இப்புத்தகத்திற்கு முன்னால் காந்தியைப் பற்றி எனக்குத் தாக்கம் ஏற்படுத்திய விஷயங்கள் இரண்டே இரண்டு . 1 . Kettle நிகழ்ச்சி 2. பகத் சிங்கை காந்தி காப்பாற்றவில்லை என்ற வாதம் .
ஆனால் இந்தப் புத்தகம் எனக்கு அளித்தவைகள் வார்த்தைகளால் கூற முடியாதவை. இப்படி ஒரு சிறந்த புத்தகம் என்னைப் போன்ற இளம் வாசர்கள் கண்டிப்பாகப் படிக்கவேண்டிய ஒன்று ( 2 நண்பர்களுக்கு இந்தப் புத்தகத்தைப் பிறந்தநாள் பரிசாக அளித்தேன் ). நீங்கள் இந்த புத்தகத்தை ஒரு ஆராய்ச்சி அன்று என்று கூறியிருக்கிறீர்கள். ஆனால் பகத் சிங், அம்பேத்கர், பெரியார் பற்றி நீங்கள் கூறிய விஷயங்களில் மிக ஆழ்த்த ஆராய்ச்சி இருப்பதாகவே கருதுகிறேன்.
காந்தியுடன் , சமணத்தின் மீதும் எனக்கு ஓர் ஆர்வத்தை ஊட்டியது. அறியாதவை இன்னும் எவ்வளவு விஷயங்கள்?காந்தியைப் பற்றி நல்ல விஷயங்களை விட அவதூறுகளே என் போன்ற இளைஞர்கள் மத்தியில் உலவுகிறது. இரண்டாம் முறை இப்புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது. இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பாகத்தை (கேள்விகள்) முடிக்கும் போதும் 25 வருடம் இந்த உலகத்தில் காந்தி பற்றியும் , பெரியார்,போஸ், அம்பேத்கர் பற்றியும் ,எனக்குப் பள்ளிப்புத்தகங்களும் , நான் கேட்ட அறிந்த விஷயங்களின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டதைப் போல ஒரு உணர்வு.
நீங்கள் ஒரு கட்டுரையில் எழுதிய ஒரு வாக்கியம் " வரலாற்று நிகழ்வுகளை , நடப்பவற்றைத் திரிப்பது மிகப்பெரிய அயோக்கியத்தனம்" (சரியாக வார்த்தைகள் நினைவில் இல்லை ) மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது . அவ்வாக்கியத்தின் உண்மையான உணர்வை , பாதிப்பை உணர்கிறேன் . மிகுந்த மன உளச்சலுக்கு ஆளானேன்.
எந்த ஒரு நிகழ்வுக்கும் பலவகை கோணங்களில் அவரவர் கண்ட , ஆராய்ந்த , உணர்த்த கருத்துக்களை மட்டுமே சொல்லமுடியும். அப்படி இருக்க இப்பொழுதெல்லாம் ஏதாவது நிகழ்வு பற்றி என்னைக் கருத்து சொல்லக் கேட்டால் எனக்கு மிகுந்த பயமும் , சந்தேகமும் உண்டாகிறது. நான் புரிந்து கொண்டது சரியா, இந்தக் கருத்துக்கு மாறாக உண்மையான கருத்து ஏதேனும் இருக்கிறதா? என்ற பல கேள்விகள் எழுகிறது . இது இந்தப் புத்தகத்தின் ஒரு விளைவே என்று எண்ணுகிறேன். இது நல்லதா ? கெட்டதா ? என்று ஒரு சந்தேகம் வேறு வாட்டுகிறது .
இவை அனைத்தும் ஒரு பக்கம் இருக்க , காந்தி என்றொரு அரிய மனிதரைப் பற்றி அறிய, உணரச் செய்தமைக்கு நன்றி. இந்த வருடம் Oct 2 தான் காந்தியின் பிறந்தநாளை அவரைப்பற்றி ஓர் அளவேனும் அறிந்து அர்த்தமுள்ள நாளாய்க் கொண்டாடியதாய் ஒரு எண்ணம். இந்தியா உலகிற்கு அளித்த ஒரு மிகச்சிறந்த ஆன்மாவைப் பற்றி விரிவாய் , ஆழமாய் உணரச் செய்தமைக்கு என் மனதார உங்களுக்கு நன்றி கூறுகிறேன் .
இப்படிக்கு உங்கள் வாசகன்,
பிரவின் சி.
http://ninaivilnintravai.blogspot.com/
அன்புள்ள பிரவீன்,
உங்கள் தயக்கத்தைப் புரிந்துகொள்கிறேன். எல்லா வாசகர்களுக்கும் வாசிப்பின் ஆரம்பத்தில் உருவாகும் பிரமிப்பு அல்லது தயக்கமே இது. கருத்துக்கள் அறிவுலகில் கொட்டிக்கிடக்கின்றன. பல்வேறு கோணங்கள். பலநூறு எண்ணங்கள். எல்லாவற்றையும் எங்கே எப்படித் தொகுத்துக்கொள்வது? எதைச்சார்ந்து நிலைப்பாடு எடுப்பது? அந்த நிலைப்பாட்டுக்கு என்ன மதிப்ப்பிருக்க முடியும்?
ஆனால் காலப்போக்கில் இந்தத் தயக்கம் விலகும். எது உண்மை என்பதை அறிவதற்கு உங்களுக்கு மட்டுமேயான ஓர் அளவுகோல் உங்களுக்கு உள்ளது. உங்கள் வாழ்க்கைதான் அது. நீங்கள் மட்டுமே சொல்லக்கூடிய ஒரு கருத்தை உருவாக்குவதும் உங்கள் வாழ்க்கையே. அங்கே நின்றபடி நீங்கள் எவரும் பொருட்படுத்தக்கூடிய ஒன்றைச் சொல்லமுடியும். மண்ணில் கோடிகோடி பேர் பேசியபின்னரும் நீங்களும் பேசமுடியும்.
வாசிப்பின் ஆரம்ப கட்டத்தில் நீங்கள் சுயம் என ஒன்று இல்லாத நிலையில் நின்று ஒவ்வொரு நூலுக்கும் முழுமையாக உங்களைக் கொடுத்து வாசிக்கிறீர்கள். ஆனால் போகப்போக வாசிப்பு மூலமே உங்களுக்கென ஒரு சுயம் உருவாகிறது. வாசித்தவற்றைக் கொண்டு உங்களுக்கு நிகழும் வாழ்க்கையை மதிப்பிடவும் பரிசீலிக்கவும் முயல்கிறீர்கள். அதனூடாக நீங்கள் உங்கள் வாழ்க்கை சார்ந்து ஒரு பார்வைக்கோணத்தை உருவாக்கிக் கொள்கிறீர்கள்
இது வாசிப்பின் இரண்டாம் நிலை. அந்த நிலையில் வாசிப்பை உங்கள் சொந்த ஆளுமையால், சொந்த வாழ்க்கையால் எதிர்கொள்கிறீர்கள். அப்போது உங்களிடம் தெளிவான மதிப்பீடுகள் இருக்கும். திட்டவட்டமான கருத்துக்களும் இருக்கும்
வாழ்த்துக்கள்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
விவாதத்தின் நெறிமுறைகள்
எப்படி வாசிப்பது?
கடிதங்கள்
கோவை
உங்கள் கதைகள்-கடிதம்
ஒரு கவிதைச்சாதனை
புனைவு வாசிப்பு குறைந்துள்ளதா?
பின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்
சுஜாதா
இரு கடிதங்கள்
கடவுளின் உருவம்-கடிதம்
திரு ஜெயமோகன்
" கடவுளை நேரில் காணுதல் " படித்தேன். இது குறித்து என் அனுபவத்திலும், நான சமீபத்தில் படித்தவற்றில் சிலவற்றிலும் பகிர்ந்து கொள்கிறேன்.
எனக்கு சிறு வயது முதலே உள்ள திக்கு வாய்க்குறைபாட்டைப் போக்கிக் கொள்ள இருபது வருடம் முன்பு ஒரு உளவியல் சிகிச்சை நிபுணரிடம் பயிற்சி எடுத்தேன். அதில் ஒரு முக்கியமான பயிற்சி மகாரத்தை " ம் ம் ம் " என்று இழுத்து ஒரு மூச்சுக்கு ஒரு தடவை சொல்லுவது. (இரண்டாம் தடவை அவர் ஓமுக்கு மாறிவிட்டார் ). ஏறக்குறைய இருபது நிமிடம் கழித்து உச்சரிப்பு தானாகவே நின்றுவிடும் அளவுக்கு அந்த த்வனி நம்முள் நிறைந்து விடும். அப்போது அவர் என்னுடைய இரத்த அழுத்தத்தை அளந்தார். நாடித் துடிப்பையும் அளந்தார். அழுத்தம் 55 -30 . நாடி 40 இருந்திருக்கலாம்.
எனக்கு தியான அனுபவம் அப்போதே உண்டு. அங்கே உள்ளவர்கள் அனைவரிலும் என்னுடையதே குறைந்த அழுத்த அளவு. மிகவும் ஆழ்ந்த நேரங்களில் அது இன்னும் குறையும் என்று அவர் கூறினார். அப்படிப்பட்ட நேரங்களில் மிக ஆழ்ந்த ஒரு ஓய்வு நுழையும், தளர்வும் கிடைக்கும் என்றார். பிறகு அதில் இருந்து நானாக ஊகித்தது இதுதான். ஒரு கட்டத்தில் இரத்த அழுத்தம் பூஜ்யமாகி விடும். நாடி துடிக்காது. இதயம் நின்று விடும். (அதனால் மூச்சும் அதன் தேவை இன்றி நின்று விடும் ) ஆனாலும் பூரண பிரக்ஞை இருக்கும். ஹட யோகத்தின் கேவல கும்பகத்திற்கு ஒப்பானதொரு நிலையாக இதை நான் கருதுகிறேன். இதன் இன்னும் ஆழ்ந்த நிலையை சமாதி எனலாம் என ஊகிக்கிறேன். இந்த விஷயங்களை அனைவரும் பரிசோதித்துப் பார்க்கலாம்.
அந்த நிலைகளில் உடல் இயக்கம் அற்று விடுவதால், உணவு தேவை இராது. புராணங்களில் ஆண்டுக் கணக்கில் தவம் செய்தார் என்று சொல்வதை அன்று தான் நம்ப ஆரம்பித்தேன்.
கோகுலின் கடிதத்தில் தியானத்தில் உருவக் காட்சிகளைக் காண்பது பற்றி ஒரு கேள்வி இருந்தது. என் விளக்கம் இது. சைவ , வைணவ, வைதீக உபாசனைகளின் அடிப்படையே இதுதான். முதலில் மனத்தைக் குவிக்க ஒரு உருவம் தேவைப்படும். ஆனால் இதை ஒரு சைவ சித்தாந்தி வெறியோடு மறுத்தார்.
இந்த நிலையில் நான " கண்ணாடிகள் இல்லாமல் தெளிந்த பார்வை " என்ற ஒரு பயிற்சி நூலைப் படிக்க நேர்ந்தது. அதில் ஆசிரியர் வில்லியம் பேட்ஸ் படிப்பவரால் ஒரு சிறு கரும் புள்ளியை எந்நேரமும் மனத்திரையில் நிலை நிறுத்த முயன்றால் அற்புதமான கண் நோக்கு சாத்தியம் என்கிறார். இதில் முழு வெற்றி பெற்றவர் மனதை மிக நெகிழ்வாக வைத்துள்ளார் என கூறுகிறார். (ஏறக்குறைய ஹட யோகத்தின் திராடகம்). அந்த நூலில் சாராம்சமே நெகிழ்ந்த மனது உள்ளவரால் மட்டுமே தெளிவான் பார்வை பெற முடியும் என்பது. பல கோணங்களில் இந்த உண்மையை விளக்கியுள்ளார். ஐம்பது வருடத்துக்கு முந்திய இந்த நூல் இன்னும் விரும்பிப் படிக்கப் படுகிறது.
சுவாமி சிவானந்தர் இன்னொரு விளக்கம் தருகிறார். மனதில் உங்கள் இஷ்ட தெய்வத்தின் பிம்பத்தை உங்களால் ஒரு சிலையிலோ, படத்திலோ கண்டது போல நிலை நிறுத்த முடியும் போது நீங்கள் சித்திகளை அடையத் தகுதி பெறுகிறீர்கள் ; உங்கள் மனம் உச்சகட்டக் குவிதலை அடைந்து விட்டது. உங்களால் உங்கள் புலன்களை அடக்க முடியும். இந்த நேரத்தில் உங்கள் பிராணன் உங்கள் இஷ்ட தெய்வத்தின் வடிவு எடுத்து உயிருள்ள பிம்பமாகக் காட்டும். இது உயர்நிலைக் காட்சி அல்ல என்றாலும் தியான முன்னேற்றத்தின் படியே. சைவ , வைணவர்கள் பாவ பக்தியோடு செய்வதால் இது போன்ற காட்சிகளால் அவர்கள் உருவங்கள் கருவிகளே என்பதை ஏற்க மறுக்கின்றனர்.
தியானத்தில் (உருவ உபாசகர்கள் ) காணும் காட்சி பொய் அல்ல. அவர்கள் மட்டில் அது உயர்நிலை.
வேங்கடசுப்ரமணியன்
தொடர்புடைய பதிவுகள்
கடவுளை நேரில் காணுதல்
யோகம்,ஞானம்
யோகம், ஒரு கடிதம்
November 11, 2011
ரீங்கா ஆனந்த் திருமணம்
சமீபத்தில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் ஒரு குடும்பம் போல நின்று நடத்திய நிகழ்ச்சி என்றால் ரீங்கா -ஆனந்த் உன்னத் திருமணத்தைச் சொல்லவேண்டும். இருவருமே வாசகர்குழும உறுப்பினர்கள். ரீங்காவின் அம்மா உஷா மதிவாணன் கனடாவில் இருக்கிறார். சென்றமுறை நான் கனடாவுக்குச்சென்றபோது அவர் இல்லத்தில்தான் தங்கியிருந்தேன். ரீங்காவுடன் அப்போதுதான் பழக்கம். அறிவார்ந்த விஷயங்களில் ஆர்வமும் வாசிப்புமுள்ள வெகுசில பெண்களில் ஒருவர்.
ஆனந்த் உன்னத் என் நண்பர், வாசகர். எங்கள் அரங்குகளில் பங்கேற்றிருக்கிறார். கணிப்பொறித்துறையில் பெங்களூரில் பணியாற்றுகிறார். அவரிடம் ரீங்கா பற்றி சொன்னேன். காதலாகி திருமணம் வரை வந்தது
[எஸ்.கெ.பி.கருணா அறம் நூலின் பிரதியை ஆனந்த் -ரீங்காவுக்கு அளிக்கிறார். அருகே பவா செல்லத்துரை]
ஆனந்த் உன்னத்துக்கு அதிக உறவினர் இல்லாத காரணத்தால் குழும நண்பர்களே உறவாக நின்று திருமணத்தை நடத்தி வைக்கவேண்டியிருந்தது. அரங்கசாமி முழு முயற்சி எடுத்துக்கொண்டார். உஷா மதிவாணனுக்குத் திருவண்ணாமலை கோயிலில் திருமணம் நிகழவேண்டுமென ஆசை. அவர்களின் சொந்த ஊர் கடலூர். அரங்கசாமி திருவண்ணாமலைக்குச் சென்று என் 'பாலியகால' நண்பர் பவா செல்லத்துரையிடம் சொல்ல மீதி எல்லாமே அவர் பொறுப்பேற்று நிகழ்த்தி வைத்தார்.
பவாவிற்கும் எனக்கும் நண்பரான எஸ்.கெ.பி.கருணா அவர்களின் எஸ்.கெ.பி பொறியியல் கல்லூரி வளாகம் திருமணத்துக்காக அளிக்கப்பட்டது. வசதியான நட்சத்திர ஓட்டல் வசதிகொண்ட அறைகள். சர்வதேச தரம் கொண்ட அரங்கம். மிகச்சிறப்பான உணவு. இருபத்தைந்து வருடங்களாக பவா மிகச்சிறப்பாக அல்லாமல் எந்த நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்து நான் கண்டதில்லை. ஆகவே எனக்கு ஆச்சரியமொன்றும் இல்லை. ஏதாவது குறை இருந்தால்தான் ஆச்சரியப்பட்டிருப்பேன்.
[சீனிவாசன், சுனில்,இளங்கோ,பாலமுருகன், ராஜகோபாலன், கார்த்தி,மோகனரங்கன், கடலூர் சீனு, விஜயராகவன்,சிறில்]
நானும் அருண்மொழியும் ஆறாம் தேதியே சென்றுவிட்டோம். பொறியியல் கல்லூரி வளாகத்தில் தங்கினோம். குழுமநண்பர்கள் அனேகமாக அனைவருமே வந்தார்கள். சென்னையிலிருந்து கெ.பி.வினோத் குடும்பத்துடன் வந்தார். சிறில் அலெக்ஸ், ராஜகோபாலன், வசந்தகுமார், செல்வ புவியரசன், ச.முத்துவேல், செந்தில்குமார் தேவன் வந்திருந்தார்கள். ஸ்ரீனிவாசனும் சுதா சினிவாசனும் வந்திருந்தார்கள்.
காரைக்குடியில் இருந்து சுனில் [காந்தி இன்று இணையதள ஆசிரியர்] வந்திருந்தார். பெங்களூரில் இருந்து கார்த்தி வந்திருந்தார்.
ஈரோட்டிலிருந்து கிருஷ்ணன், விஜயராகவன், இளங்கோ, மோகனரங்கன், பாலமுருகன் வந்தனர். கடலூர் சீனு வந்திருந்தார். சேலத்தில் இருந்து சதீஷ் வந்திருந்தார். தேவதேவனும் அரங்கசாமியும் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். டெல்லியில் இருந்து எம்.ஏ.சுசீலா வந்திருந்தார்கள்.
[அறை உரையாடல் நண்பர்களுடன் அருண்மொழி, எம்.ஏ.சுசீலா]
ஆறாம்தேதி மாலையில் வரவேற்பு. திருவண்ணாமலை மலையின் பிரம்மாண்டமான படத்தின் பின்னணியில் பச்சைப்புல் விரிந்த திறந்தவெளி அரங்கில். புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி. ஒரு வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி. நாதஸ்வர நிகழ்ச்சி. விருந்து. திறந்தவெளியில் இசை கேட்பதே அபாரமான அனுபவம். மழை பெய்து குளிர்ந்திருந்த சூழலில் உற்சாகமாக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம்.
இரவெல்லாம் ஒரே அறையில் பேசிக்கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட தூங்கவேயில்லை. மறுநாள் அதிகாலை ஆறு மணிக்கு திருவண்ணாமலை கல்யாணசுந்தரர் சன்னிதியில் திருமணம். அதன்பின் மீண்டும் எஸ்.கெ.பி. கல்லூரி அரங்கில் விருந்து. மீண்டும் ஒரு முழுமையான நாதஸ்வரக்கச்சேரி. மதியம் நண்பர்கள் கிளம்பிச்சென்றார்கள். நான் மாலையில் கிளம்பி விழுப்புரம் சென்று அங்கிருந்து நாகர்கோயில் பஸ்ஸைப் பிடித்தேன். கடலூர் சீனு வந்து நின்று ஏற்றி வைத்தார்.
இரண்டுநாளும் பேச்சும் சிரிப்பும் கிண்டலுமாகச் சென்றது. மோகனரங்கன் நுட்பமான கிண்டலுக்குப் புகழ்பெற்றவர். சிரித்துக்கொண்டு அவ்வப்போது தீவிரமான இலக்கியவிவாதத்துக்குச் சென்று மீண்டு ஒரு மிகச்சிறந்த நண்பர் சந்திப்பு.
பவாவை சிறிய இடைவெளிக்குப்பின் சந்திக்கிறேன். இடதுசாரி இலட்சியவாதம் என நான் நினைக்கும் ஒன்றின் மனிதவடிவமென அவரை எண்ணிக்கொள்பவன் நான். எந்நிலையிலும் எப்போதும் மனிதர்களுக்கு உதவத் தயாராக இருப்பவர். எங்கும் எதிலும் நல்லதை மட்டுமே பார்க்கக்கூடியவர். எந்தக் கரன்ஸியை விடவும் நல்லியல்புக்கு செலாவணி அதிகமென அவரைக் கொண்டே நான் நம்பிவருகிறேன். அவரது 'வம்சி' பதிப்பகம் என்னுடைய 'அறம்' சிறுகதைத் தொகுதியை வெளியிட்டிருக்கிறது. அதன் கதைமாந்தர்களின் உலகைச்சேர்ந்தவர் அவர்.[பவாவின் இணையதளம்]
அறம் நூலின் பிரதிகள் வந்திருந்தவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன. ஒரே நாளில் பலர் கைகளுக்கு ஒரு நூல் சென்று சேர்வது உற்சாகமான அனுபவம். சட்டென்று வாசக எதிர்வினைகள் வந்து சேர ஆரம்பிக்கும். முன்னரும் வாழ்விலே ஒருமுறை, சங்கசித்திரங்கள் போன்ற நூல்களை நண்பர்கள் மொத்தமாக வாங்கித் தங்கள் திருமண விருந்தினர்களுக்கு அன்பளிப்பாக அளித்திருக்கிறார்கள். புதிய வாசகர்களிடையே நூல் சென்று சேர அது வழிவகுக்கிறது.
அனைத்துக்கும் மேலாக நன்றி சொல்லவேண்டியவர் எஸ்.கெ.பி.கருணா. மிக எளிய உற்சாகமான இளைஞர். ஒரு பொறியியல் கல்லூரியின் தாளாளராக அத்தனை இளைய ஒருவரைப் பார்ப்பது ஆச்சரியம். அதைவிடக் கல்லூரியை ஓர் கல்விநிறுவனமாக மட்டுமே பார்க்கும் அர்ப்பணிப்பை அபூர்வமாகவே காணமுடியும். கல்லூரியின் எந்த ஒரு இடத்திலும் அந்த அர்ப்பணிப்பின் நுண்ணிய தடங்களைக் காணமுடியும். [எஸ்.கெ.பி.கருணாவின் பதிவு]
நிறைவூட்டும் இருநாட்கள். ஆனந்த் ரீங்கா இருவருக்கும் வாழ்த்துக்கள்.
http://vishnupuram.wordpress.com/
தொடர்புடைய பதிவுகள்
யுவன் வாசிப்பரங்கு
பவாவும் யோகியும் நானும்
கலாப்ரியா படைப்புக்களம் – நிகழ்வுக் குறிப்புகள்
ஊமைச்செந்நாய்- ஒருகடிதம்
அன்பின் ஜெயமோகன்,
நான் பா.சரவணன் – ஒரு மென்பொருள் பொறியாளன். கடந்த 4 வருடமாக உங்கள் எழுத்தை வாசிக்கிறேன். தங்களின் அரசியல் என்றும் எனக்கு ஏற்பானது அல்ல என்றாலும், ஒரு உச்சகட்ட கலை வெளிப்பாடு கொண்ட உங்கள் புனைவுகள் மற்றும் அபுனைவுகளில் ஒரு வாசகனாய் மனஎழுச்சி கண்டிருக்கிறேன். அநேகமாக 2007 -இல் இருந்து தொடர்ந்து வாசிப்பதில், உங்கள் எழுத்துகள் வாசிப்புக்கு நேர்மையாய் இருந்துள்ளன(நேர்மறையாகவோ/ எதிர்மறையாகவோ). தங்களின் இயற்கை குறித்த பதிவுகள் எனக்குள் பல திறப்புகளை ஏற்படுத்தி உள்ளன.
உங்கள் ஊமைச்செந்நாய் கதையைப் படித்துவிட்டு "கொன்னுட்டான்யா இந்த ஆளு" னு ஒரு வாரம் வாசிப்பின் ருசி அறிந்த நண்பர்களிடம் பேசி இருக்கிறேன். அதற்கு முன்பே உங்கள் புனைவுகளில் பல உச்சங்களைக் கண்டிருந்தாலும், தூ எனத்துப்பும் ஊமைச்செந்நாயின் உணர்வின் ஆழத்தைக் காட்டும் அந்த வரிகள் உச்சங்களின் உச்சம் என்றே நினைக்கிறேன்.
கைவிடப்பட்ட வளர்ப்பு நாய்கள் (Stray Dogs) குழுவாய்ச் செயல்பட்டு வேட்டை ஆடுவதை நான் கண்டிருக்கிறேன். அவை எப்படி வேட்டை இயல்பை இழப்பதில்லையோ அதே போல் மனிதனிடம் இருந்து பெற்ற குணஇயல்புகளையும் முழுவதும் இழப்பதில்லை. மனிதர்களின் எச்சில் சோற்றைத் தின்னும் 2 -ஆம் மூன்றாம் தலைமுறை – கைவிடப்பட்ட வளர்ப்பு நாய்கள் (Feral Dogs) உண்டு. ஆனால் என் உறவினர் வீட்டில் வளர்த்த நரி ஒன்று மனித எச்சில் பட்ட உணவை மிக நீண்ட நேரம் புறக்கணித்து விட்டுப் பின் வேறு வழி இல்லை எனும்போது மட்டுமே உண்பதைப் பார்த்திருக்கிறேன். அதே போல ஊமைச்செந்நாயும் இருவேறு குணங்களுடன் இருக்கிறான். ஒன்று தன் அடிமைப்பிறப்பு அது சார்ந்து பெற்ற குணம், கட்டற்ற ஆதிவாசிப் பின்னணியில் இருந்து பெற்ற மற்றொரு குணம். அவன் கதை முழுவதும் போராடுவதென்னவோ தற்காலிகமாகப் பெற்ற அடிமை என்ற எண்ணத்தை எதிர்த்துதான். எப்பக்கமும் சேர வழியற்ற அவன் தனித்த ஒற்றைக் கொம்பனைப் போல அலைந்தவாறே இருக்கிறான்.
மிருகங்களில் மோசமான மிருகமான மனிதப்பிறப்பு அவனைப் புற உலகில் அலைக்கழிப்பதும், கவலைகளிலேயே பெரும் கவலையான தன் அடையாளம் குறித்த கவலை அவன் அகஉலகைச் சிதைப்பதும்தான் கதையை நகர்த்துகிறது. அதில் வரும் எந்த மிருகமும் முட்டாள் இல்லை என்ற வரியில் மனிதனைத் தவிர என்றொரு பதம் சொல்லப்படாமல் கடந்து செல்கிறது.
அதே போல் துரை இன்னொரு அடிமை மட்டுமே. அவனுக்குத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முடிகிறது. தான் எங்கோ இருக்கும் ஒரு சமூகத்தின் அடிமை – ஒரு உயர்குடிப் பெண்ணும் தன்னை ஏறிட்டுப் பார்ப்பதில்லை என்னும் அளவுக்கு.
எந்த ஒரு வேட்டையின் இறுதியிலும் சாவின் மூலம் மிருகம் மனிதனை வெல்கிறது. மிருகம் தன்னை வேட்டையாடும் யாரிடமும் இரக்கத்தை எதிர்பார்ப்பதில்லை. அது எதிர்பார்ப்பதெல்லாம் தான் தவிர்க்கவே முடியாத அல்லது தவிர்க்கவே விரும்பாத மரணத் தருணத்தைத்தான்.அந்த ஒரே மிருகம் முதலில் கொம்பனாகவும் பின் ஊமைச்செந்நாயாகவும், இன்னும் பல மிருகங்களாகவும் புனைவு முழுவதும் வாழ்கிறது.
செந்நாய் குறித்த குறிப்புகள் உங்கள் எழுத்தின் வெவ்வேறு இடங்களில் அதிகமும் தென்படுகின்றன. இல்லையா?
இது தவிர உங்கள் எழுத்தில் எனக்குப் பிடித்த விஷயம் இயல்பாய் நிகழ்ந்த ஒரு நிகழ்வைப் புனைவுக்குள் இணைக்கும் உத்தி.உதாரணமாக யானை டாக்டர் கதையில் வரும் செந்நாய் பற்றிய குறிப்பு. அதை முன்னரே உங்கள் அவலாஞ்சி, பங்கித்தபால் கட்டுரையில்கூடக் குறிப்பிட்டுள்ளீர்கள்.
"மலையைச்சுற்றிக்கொண்டு திரும்பி காருக்கு வந்து சேர்ந்தோம். திரும்பும் வழியில் வனக்காவலர் செந்நாய் ஒன்றைக் காட்டினார். அதன் காதுகள் நுட்பமாக எங்களை நோக்கி கூர்ந்திருந்தன. சிலைபோல பார்த்தபடி நின்றது. சற்று தள்ளி இன்னொரு செந்நாய். சற்று தள்ளி இன்னொன்று. ஆனால் அவை ஓடவில்லை. ஒருவகை வியூகம் அமைப்பதுபோல இடம் மாறி மாறி நின்றன. அப்போதுதான் படுத்திருந்த இன்னொரு செந்நயைக் கண்டோம். பெரியது. ஆனால் அது எழுந்து விலகியபோது கால் ஒடிந்திருப்பது தெரிந்தது"
ஒரு அனுபவம் புனைவில் எப்படி மற்றொரு அழியா வடிவத்தை அடைகிறதென்று மேல் குறிப்பிட்ட வரிகளையும், யானை டாக்டர் கதையில் வரும் செந்நாய் குறித்த வரிகளையும் சேர்த்து படித்த போது புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எழுத்தின் ஆற்றல் இந்தப் புனைவை ஒரு உண்மை எனும் அளவிற்கு கொண்டு சென்றுவிட்டது. உண்மையில் Dr.K போற்றப்பட வேண்டியவர்தான் என்றாலும், சொல்லப்பட்டது புனைவு என்பது வாசகனுக்கு தெரிய வேண்டும் இல்லையா? ஏனென்றால் அந்தப் புனைவைப் பற்றிய சில கடிதங்கள் Dr.Kயை மிஸ்டிக் மருத்துவர் எனும் அளவிற்கு எடுத்துச் சென்றுவிட்டன. ஆனால் அவர் அப்படித் தவறாக அறியப்படக்கூடாது என்றே நீங்கள் நினைப்பீர்கள் இல்லையா? இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இந்த மென்பொருள் தயாரிப்பு வாழ்வில் உள்ள புற & அக தேவைகள்/நெருக்கடிகளில் இருந்து என்னைப் பாதுகாப்பது இந்த வாசிப்பு மட்டுமே. தங்களுடனான ஒரு சந்திப்பில் சு.வேணுகோபாலைப் பற்றித் தெரிந்து கொண்டு படித்தேன். உண்மையில் விவசாயிகளைப் பற்றியும்/ இயற்கை பற்றியும் எழுதும் ஒரு இயல்பான எழுத்து. அதே போல் James Herriot-இன் புத்தகங்கள். சலீம் அலியின் சில புத்தகங்களைப் படித்து இருக்கிறேன். இவற்றை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
மேலும் தங்களின் புத்தக அறிமுகங்களின் மூலம் பல நல்ல படைப்புகளை வாசித்து இருக்கிறேன். தமிழில் மா.கிருஷ்ணன்,தியோடர் பாஸ்கரன், முகமது அலி தவிர்த்து இயற்கை, சூழலியல், பிற உயிரினங்கள் குறித்து எழுதி இருக்கிறார்களா? எனக்கு இயற்கை, சூழலியல், பிற உயிரினங்கள் குறித்து தமிழிலும், ஆங்கிலத்திலும் சில புத்தகங்களை சொன்னால் பயனாய் இருக்கும். நன்றி.
என்றும் அன்புடன்,
பா.சரவணன்
அன்புள்ள பா.சரவணன்,
என்றுமே என்னுடைய படைப்பூக்கத்துக்கான விதையை இயற்கையில் இருந்தே எடுத்திருக்கிறேன். என்னுடைய நோக்கில் மனிதர்களும் இயற்கையின் ஒரு பகுதிதான். அந்த விரிந்த புலத்தில் நிறுத்தாமல் நான் மனிதனை அணுகுவதில்லை. ஊமைச்செந்நாயும் அப்படியே.
செந்நாய், காட்டுநாய்களை நான் எப்போதும் கவனித்து வருகிறேன். அவற்றின் சிந்தனையும் கற்பனையும் இன்றுவரை விலங்கியல் அனுமானித்திருப்பதை விட அதிகம் என்றும், நாளை இன்னும் அதிகமான கண்டுபிடிப்புகள் வெளிவரும் என்றும் நினைக்கிறேன். அவற்றை நான் எப்போதுமே எழுதிக்கொண்டிருக்கிறேன்.
ஊமைச்செந்நாய் எளிதில் அறியமுடியாத ஆழம் உடையவன். இந்த பிரம்மாண்டமான தேசத்தின் ஆன்மா அந்த யானை. அதற்கும் துரைக்கும் நடுவே இருக்கும் தொடர்பான ஊமைச்செந்நாயின் அகத்தை வரையறை செய்யாமலேயே கதையில் விட்டுவிட்டேன். ஏனென்றால் அதை என்னாலேயே முழுமையாக சொல்லிவிடமுடியாது.
புனைவு எப்போதுமே சாரமான உண்மையை முன்வைக்கக்கூடியது. அதற்காகப் புறவய உண்மையை அது வளைக்கிறது. அதற்கான உரிமை புனைவெழுத்தாளனுக்கு உண்டு. வாசகன் அதிலிருந்து பெற வேண்டியது அந்த சாராம்சமான உண்மையையே. புனைவின் தகவல்களை அல்ல. ஊமைச்செந்நாய் யானைடாக்டரை மிஸ்டிக் என்று காட்டவில்லை. உண்மையிலேயே டாக்டர் கெ பைரன் மீது பேரன்பு கொண்டவர். அந்த எல்லைக்குள்ளேயே அவர் காட்டப்படுகிறார்.
தமிழில் இயற்கை மற்றும் மிருகங்கள் பற்றி மிகமிகக் குறைவாகவே எழுதப்பட்டுள்ளது. நான் வாசித்தவரை பொருட்படுத்தக்கூடிய எழுத்து மா.கிருஷ்ணன், தியோடர் பாஸ்கரன் எழுதியவை. மா.கிருஷ்ணன்கூட பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே எழுதினார். பழங்குடிகளைப்பற்றி என்றால் ஃபிலோ இருதயநாத் எழுதிய பழைய கட்டுரைகள் சுவாரசியமானவை. தமிழில் இயற்கைபற்றிய எழுத்துக்கு வாசிப்புத்தளமே இல்லை
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
பரிணாமவாதமும் இந்திய மதங்களும்
கதைகளின் வழி
ஓராயிரம் கண்கள் கொண்டு
நாவலைப் படித்தபின் எனக்கு முதலில் தோன்றிய எண்ணம் இந்த நாவலை இருவர் எழுதியிருக்கிறார்கள் என்பதுதான். ஒன்று ஜோ எனும் படித்த மீனவ இளைஞர், களப்பணியாளர், ஆய்வாளர், இன்னொருவர் டி. குருசா எனும் மீனவ கிராமத்துக் கிழவி. கொஞ்சம் கற்பனை செய்தால் அவளைக் கண்கள் முன் கொண்டுவந்துவிடலாம். ஓலைக் குடிசையின் கீழ் அமர்ந்து கொண்டு, இடித்து இடித்துக் குழிவிழுந்த ஒரு கல்லில் மழுங்கிப்போன இன்னொரு கல்லை வைத்து, கல்லைப் பல்லாக்கி செக்கச் செவேலென வெற்றிலையை இடித்துக்கொண்டே, கதை கேட்க யாராவது வரமாட்டார்களா என்று காத்துக்கிடப்பவள். 'எய்யா, எக்கி எங்க போற இங்கன இரி' என வருவோரையும் போவோரையும் கதை சொல்ல அழைத்துக்கொண்டிருப்பவள். ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு ஊரின் மூலை முடுக்குகளில் நிகழும் மிகவும் அந்தரங்கமான தகவல்களைக் கூடத் தெரிந்து வைத்திருப்பவள். அவளின் கதைகளும் இந்த நாவலில் சரி சமமாக இடம் பெற்றுள்ளன..
சிறில் அலெக்ஸ் ஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு பற்றி எழுதிய கட்டுரை
[சிறில் அலெக்ஸ்]
விமர்சனங்கள்
ஜோ டி குரூஸின் ' ஆழிசூழ் உலகு ' – கடலறிந்தவையெல்லாம்…
ஆர்வி -ஆழிசூழ் உலகு பற்றி
நவீன் ஆழிசூழ் உலகு பற்றி
கரு ஆறுமுகத்தமிழன் ஆழிச்சூழ் உலகு
ஜோ டி குரூஸ் பேட்டி
தொடர்புடைய பதிவுகள்
நாஞ்சில்நாடன் பாராட்டுவிழா பதிவுகள்
சென்னைக்கு சிறில்
சிறில் அலெக்ஸ் இசை
மதமும் பூசகர்களும்
கத்தோலிக்க மதம்-ஒரு கடிதம்
முடிவின்மையின் அடி:சிரில் அலெக்ஸின் 'முட்டம்'
November 10, 2011
விவாதத்தின் நெறிமுறைகள்
ஜெ,
2009 ல் உங்கள் அமெரிக்க வருகையினை ஒட்டி கலிஃபோர்னியா ஃப்ரீமாண்டில் நாங்கள் குழுமமாக் இயங்க தொடங்கினோம். அதன் முக்கிய பங்கு ராஜனையே சாரும்.
மாதம் ஒரு முறை நாங்கள் கூடுவதன் முக்கிய பயன் ஒரு புத்தகத்தை தனி அறையில் படித்து குருடன் யானையைப் பார்த்த கதையாக ஒரு குறிப்பிட்ட கருத்தை வளர்த்து கொண்டு இருந்த மனப்பான்மை விலகுகிறது. பல புதிய கோணங்கள் வெளிப்படுகிறது. கூடவே நட்பான சச்சரவுகளும் சில சமயம் வெளிப்படுகிறது. அதனால் விவாதம் சில சமயம் திசை மாறுகிறது. புறவயமான கருத்தை கண்டு பிடிக்க முடிவதில்லை என்ற ஏக்கமே மிஞ்சுகிறது.
சமீபத்தில் ஜடாயு கலந்து கொண்ட பொழுது கம்ப ராமாயாணம் விவாதம் நடந்தது. அவரின் ஞானம் மற்றவர்களை காட்டிலும் அதிகம் என்பதால் அனேகமாக ஒரு வகுப்பு மாதிரி நடந்து முடிந்தாலும் மகிழ்ச்சி தருவது என்னவென்றால் ஒரு கட்டமைப்புக்குள் அடங்கியது என்பதே. இதனால் அந்த மூன்று மணி நேரம் தரமான நேரமாக அமைந்தது.
இது போல் பிற மாதக் கூட்டங்களின் தரத்தை உயர்த்த என்ன செய்யவேண்டும்? எனக்கு இருக்கும் சில கேள்விகள்
1) இந்த மாதிரி புத்தக குழு விவாதிப்பை ஒரு கட்டமைப்புக்கள் கொண்டு வருவது எப்படி? – இப்பொழுது நடப்பது என்னவென்றால் எல்லோரும் தங்கள் கருத்துகளை தன் போக்கில் தோன்றியவாறெல்லாம் பேசுகிறோம். இதனால் பல கருத்துக்கள் சிதறி ஒருங்கிணைக்க முடியாமல் போய் விடுகிறது.
2) பொதுவாக ஒரு புத்தக விவாதிப்பிற்கு வேண்டிய அம்சங்கள் யாவை?
3) புத்தகத்தின் எந்தக் கூறுகளை விவாதிப்பது? உதாரணத்திற்கு, ஆசிரியரின் சரிதை, புத்தகத்தின் கதைச் சுருக்கம், கதையின் கருத்து, கருத்துக்களில் சார்பு நிலை எடுத்துக் கொண்டு குழுக்களாக பிரிந்து விவாதிப்பது போன்றவை. இவற்றில் விவாதிக்கத் தக்கவை எவை, விவாதிக்க வேண்டாதவை எவை? இது தவிர வேறு எது விவாதிக்கப் பட வேண்டியவை?
4) ஒரு case study மூலம் இதை விவரிக்க முடியுமா? உதாரணம் 18ஆம் அச்சக் கோடு என்ற புத்தகத்தை எப்படியெல்லாம் விவாதிக்கலாம்?
5) முக்கிய கேள்வி – கூட்டத்தின் முடிவில் உறுப்பினர்கள் என்ன எதிர்பார்க்க வேண்டும்? என்ன சாதித்திருக்க வேண்டும்?
6) வேறு என்ன இதன் நோக்கமாக இருக்க வேண்டும்?
இதற்கு ஒரு கோணார் நோட்ஸ் நீங்கள் போட்டால் மிக உதவியாக இருக்கும்.
நன்றி.
bags
அன்புள்ள bags
முப்பது வருடங்களுக்கு முன்னரே பயணம், விவாதம் ஆகியவற்றைப்பற்றி நித்யா சில விதிகளை அமெரிக்க குருகுலத்திற்காக எழுதியிருந்தார். அவற்றின் நடைமுறைப்பயன்பாடுகளை கண்டு நானே கொஞ்சம் அவ்விதிகளை கொஞ்சமாக விரித்துக்கொண்டேன். அவற்றை பல தருணங்களிலாக நண்பர்களுக்கு எழுதியிருக்கிறேன்.
இவை விவாதங்களுக்கான நடைமுறை விதிகள். நான் நடத்திய பல்வேறு கூட்டங்கள் வழியாக அடைந்த அனுபவ அறிவு என இதைச்சொல்லலாம்.
1. ஒருவிவாதத்துக்கு எப்படியும் ஒரு மட்டுறுத்துநர் [moderator] தேவை. அவர் யார் என்பதை பொதுவாக தீர்மானிக்கலாம். ஆனால் அவர் ஒரு கட்டுப்பாட்டுச் சக்தியாக செயல்பட்டாகவேண்டும். அந்த விவாதத்தில் அவரது சொல்லுக்கு பிறர் அடங்கியாகவேண்டும். கூடவே அவர் ஒரு சமரச சக்தியாகவும் செயல்படவேண்டும். அவர் ஒரு தரப்புக்காக செயல்படாமல் எல்லா தரப்பும் தங்கள் சிறந்த கருத்துக்களை முன்வைக்க உதவக்கூடியவராக இருந்தாகவேண்டும்.
2. ஓர் அமர்வுக்கு எப்போதுமே பேசுதளம் வரையறுக்கப்பட்டாகவேண்டும். [Frame of Reference] ஒரு விவாதத்தில் அந்த விவாதக்குழு எந்த தளத்தில் நின்றுபேசப்போகிறது என்பதை அவர்கள் பொதுவாக ஒத்துக்கொண்டாகவேண்டும். ஒரு தலைப்பு, அந்த தலைப்பை ஒட்டி பேச்சுக்கு எடுத்துக்கொள்ளவேண்டிய விஷயங்கள், அங்கே விவாதிக்கவேண்டிய விவாதமுறைமை ஆகியவற்றைப்பற்றிய ஒரு பொதுவான புரிதல் இது.
உதராணமாக அசோகமித்திரனின் நாவல்கள் என்ற தலைப்பில் ஒருவர் பேசலாம். அப்போது விஷயம் அசோகமித்திரனின் எழுத்து என்ற தளத்தை முதல் வட்டமாக கொண்டுள்ளது. இது முதல் பேசுதளம். அசோகமித்திரன் செயல்படும் நவீன இலக்கியச்சூழல் அதை உள்ளடக்கிய இரண்டாவது வட்டம், அதாவது இரண்டாவது பேசுதளம். உலகநவீன இலக்கியச் சூழல் மூன்றாவது பேசுதளம். இலக்கியம் பொதுவாக நான்காவது பேசுதளம். சமகால அரசியல் அல்லது சினிமா அல்லது வரலாறு போன்றவை பேசுதளத்துக்கு வெளியே உள்ளவை.
எப்போதுமே ஒரு தலைப்பை, ஒரு மையத்தை வைத்துக்கொண்டே பேசவேண்டும். எல்லா பேச்சும் கண்டிப்பாக மையத்தை தொடர்புகொள்வதாக மட்டுமே இருக்கவேண்டும் . ஒருபோதும் விவாதம் பேசுதளத்துக்கு வெளியே செல்ல மட்டுறுத்துநர் அனுமதிக்கக் கூடாது. மன்னிக்கவும் இது வெளியே செல்கிறது, நாம் விஷயத்துக்கு திரும்புவோம் என அவர் திருப்பி கொண்டு வரவேண்டும். உண்மையிலேயே முக்கியமான விஷயம் ஒன்று பேசுதளத்துக்கு வெளியே பேச்சில் உருவாகி வந்தாலும்கூட அனுமதிக்க கூடாது. அதற்கு வேறு ஒரு அமர்வு வைத்துக்கொள்ளலாம். அதைச் சொல்லி விட்டு விவாதத்தை பேசுதளத்துக்குள் கொண்டு வந்தாகவேண்டும்
தலைப்பை ஒட்டி முதற்பேசுதளத்திலேயே விவாதம் நிகழ அனைவரும் முயலவேண்டும். அதற்கே அதிக நேரம் அளிக்கப்படவேண்டும். தேவை என்றால் இரண்டாவது மூன்றாவது தளத்துக்குச் செல்ல அனுமதிக்கலாம். மிகவும் தேவை என்றால் நான்காவது தளத்துக்கு செல்ல அனுமதிக்கலாம். ஆனால் அளிக்கப்படும் நேரம் அந்த விகிதாச்சாரப்படியே இருக்கவேண்டும்.
அதாவது அசோகமித்திரன் பற்றிய விவாதத்தில் ஒருவர் ஞானக்கூத்தனைப்பற்றி இருபது நிமிடம் பேசலாம். ஐசக் பாஷவிஸ் சிங்கரைப்பற்றி பத்துநிமிடம் பேசலாம். கம்பனைப்பற்றி ஐந்து நிமிடம் பேசலாம். க்மபனைப்பற்றி ஒருமணிநேரம் பேசி அதேபோலத்தான் அசோகமித்திரன் என சொல்வதையெல்லாம் அனுமதிக்கக்கூடாது.
3. ஓர் அமர்வுக்கு விவாதப்புள்ளிகள் [ Premises] முதலிலேயே முன்வைக்கப்படவேண்டும். அதாவது ஒருவர் அல்லது ஒரு சிறுகுழு விவாதிக்கப்போகும் விஷயம் பற்றிய தங்கள் தரப்பை அடிப்படையான வாதங்களாக தொகுத்து முன்வைக்கவேண்டும். நம் மரபில் இதற்கு தோற்றுகை என்று பெயர். அந்த வாதங்களை அவர்கள் விரிவான தர்க்கங்கள் மூலம் நிறுவலாம். அங்கே உள்ள பிறர் அந்த தர்க்கங்களை பரிசீலித்து மறுதர்க்கங்களை உருவாக்கி அவர்கள் முன்வைக்கும் விவாதப்புள்ளிகளை ஏற்கவோ மறுக்கவோ செய்யலாம்.
தோற்றுகைகள் எப்போதுமே ஒன்றில் இருந்து ஒன்றாக நீளும் சில விவாதப்புள்ளிகளாகவே இருக்கும். அதாவது அசோகமித்திரனைப்பற்றிய ஓர் அரங்கில் ஒருவர் இப்படிச் சொல்லலாம். 'அசோகமித்திரன்தான் தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர். ஏனென்றால் அவர் அன்றாட யதார்த்ததை எழுதுகிறார். அன்றாடவாழ்க்கையே பெரும் போராட்டாமாக இருக்கும் இந்தியா போன்ற ஒரு தேசத்தில் அன்றாடயதார்த்தத்தை சிறப்பாகச் சொல்வதே மிகச்சிறந்த கலையாக இருக்கமுடியும்' இந்த மூன்று வரிகளும் மூன்று படிகள் கொண்ட ஒரு வாதமுகம், தோற்றுகை.
அதற்கு ஆதாரமாக அவர் தமிழில் எழுதப்பட்ட அன்றாட யதார்த்தக்கதைகளின் சிறப்பை விளக்கியிருக்கலாம். அன்றாட யதார்த்த அம்சமே இல்லாத தமிழ் கதைகள் எப்படி உண்மையான அனுபவத்தை அளிக்காமல் இருக்கின்றன என்று வாதாடலாம். உதாரணங்களைச் சொல்லலாம். அப்படி பல வாதங்களை முன்வைக்கலாம்.
விவாதத்துக்கு வந்தவர்கள் அந்த வாதங்களை எதிர்த்து மறுப்பை தெரிவித்து அந்த முதல்கூற்றுகளை மறுக்கலாம். உதாரணமாக அவர்கள் புதுமைப்பித்தனின் கபாடபுரம் போன்ற கதைகளை சுட்டிக்காட்டலாம். இந்திய சூழலில் வரலாறு எப்போதுமே மிகப்பெரிய அன்றாடப்பிரச்சினை என்று விளக்கலாம். வரலாற்றை தொன்மங்கள்மூலம் தான் சொல்லமுடியும், அதற்கு அன்றாட யதார்த்த கதைகள் உதவாது என்று சொல்லலாம். இப்படித்தான் நல்ல விவாதம் நகரமுடியும்.
இவ்வாறு நல்ல விவாதம் நிகழ நான் மட்டுறுத்துநராக இருக்கும் சபைகளில் நடைமுறையில் செய்பவை சில உண்டு. எப்போதுமே ஒரு மையக்கட்டுரை அல்லது உரை இருக்கும்படி செய்வேன். அது 10 நிமிடத்துக்குள் முடியக்கூடியதாக இருக்கவேண்டும். அந்தக்கட்டுரையில் தெளிவாக தோற்றுகைகள் சொல்லப்பட்டிருக்கவேண்டும். விரிவான வரலாற்று விளக்கமோ பட்டியல்களோ எல்லாம் இருக்கக்கூடாது. அத்துடன் அந்த கட்டுரையாளரிடமே ஒட்டுமொத்தமாக நீங்கள் சொல்லவருவது இதுதானே என்று கேட்டு தோற்றுகைகளை தெளிவாக்கியபின் அதன் மேல் விவாதிக்க பிறரை அழைப்பேன். அதுதான் தோற்றுகை, அதை ஏற்கலாம் மறுக்கலாம் ஆனால் அந்த எல்லைக்கு வெளியே செல்லவேண்டாம் என கோருவேன்.
இந்த மூன்று அம்சங்களும் எந்த விவாதத்துக்கும் முக்கியமானவை. இதை நாம் பள்ளியிலேயே படித்துக்கொண்டிருக்கவேண்டும். ஆனால் நமக்குச் சொல்லித்தருவதில்லை. ஆகவே ஒரு விவாதத்தில் சம்பந்தமே இல்லாமல் அப்போது மனதுக்கு தோன்றியதைச் சொல்கிறோம். விவாதத்தை ஒட்டுமொத்தமாக கடத்திக்கொண்டு செல்கிறோம். வாதங்களின் பலமே இல்லாமல் அதிரடியாக பேச ஆரம்பிக்கிறோம். கோபாவேசமாக பேசுகிறோம். தனிப்பட்ட முறையில் தாக்கி பேச ஆரம்பிக்கிறோம். பலசந்தர்ப்பங்களில் நம்முடைய அரசியல் நம்பிக்கைகளை எல்லா விவாதங்களிலும் சொல்ல ஆரம்பிக்கிறோம். சிலர் சொந்த அனுபவங்களை எல்லா பேச்சுகளிலும் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.
நிறையதருணங்களில் இங்கே வாதிட வருபவர்கள் எல்லா திசையிலும் பரவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆதாரமே இல்லாமல் அடுக்கியபின்னரே ஒரு விவாதக்க்கருத்தை சொல்கிறார்கள். பலவகையான முத்திரைகளுக்குப்பின்னரே பேச ஆரம்பிக்கிறார்கள். உதாரணமாக ஒருவர் 'ஜெயமோகன் ஓர் இந்துத்துவ சாதியவெறியர், மலையாளமேட்டிமைவாதம் பேசுபவர், அவர் பூமணி இயல்புவாத எழுத்தாளர் என்று சொல்வதை நான் மறுக்கிறேன். இயல்புவாதம் ஓர் குறைவான அழகியல்கொள்கை' என விவாதத்துக்கு வந்தால் நான் என்ன செய்ய முடியும்? பூமணியையோ இயல்புவாதத்தையோ எடுத்து பேசமுடியுமா என்ன? முதலில் அவர் சொல்லும் ஒற்றைவரியிலான முத்திரைகளை எல்லாம் நிராகரித்து விளக்கி அவரை இழுத்து பூமணிக்கும் இயல்புவாதத்துக்கும் கொண்டு வந்து நிறுத்தியபின்னரே பேச ஆரம்பிக்க முடியும். ஆனால் இதற்கே இருபது பக்கம் செலவிடவேண்டியிருக்கும். தமிழில் வேறு வழியே இருப்பதில்லை
ஆகவேதான் இந்த வகையான நெறிமுறைகளை மீண்டும் மீண்டும் சொல்லவேண்டியிருக்கிறது. அத்துடன் சில நடைமுறை விதிகளை கைகொள்ளவேண்டியிருக்கிறது. அந்த விதிகளை இப்படிச் சொல்லலாம்
1. ஓர் எல்லைக்குமேல் கடுமையான கருத்துக்களை பொது விவாதங்களில் சொல்லக்கூடாது. அப்படிப்பட்ட தனிக் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அது விவாதத்துக்கு உரியதல்ல. ஒருவர் ஒரு சபையில் 'மன்மோகன்சிங் இந்தியாவின் சாபக்கேடு' என்றோ 'புதுமைப்பித்தன் இலக்கியவாதியே இல்லை' என்றோ அதிரடியாகச் சொல்லப்போனால் விவாதமே உருவாகாது. அதை அதேமாதிரியான அதிரடி கருத்துக்களால்தான் மறுக்கமுடியும்.வெறும் சண்டைதான் மிச்சமாகும்
2. உணர்ச்சிகரமாக கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது. ஏனென்றால் அதன்பின் விவாதமே நிகழமுடியாது. அதேபோல பிறரும் உணர்ச்சிவசப்படுவார்கள்
3. விவாதத்தில் சிலசமயம் இருவர் ஒருவருக்கொருவர் பேசுவார்கள். ஒருவரை சிலர் சேர்ந்து மடக்குவார்கள். அதை மட்டுறுத்துநர் அனுமதிக்கக் கூடாது
4.விவாதத்தில் எவரும் தங்களுக்குள் தனியாகப்பேச அனுமதிக்கக்கூடாது
5.தனிப்பட்ட விஷயங்களை பேச அனுமதிக்கக்கூடாது.
6.விவாதம் முடிந்தபின் கண்டிப்பாக ஒரு நட்பான அளவளாவல் பொதுவாக நிகழவேண்டும். அதில் விவாத விஷயங்களை விட்டுவிட்டு வேறு பொது விஷயங்கள்தான் பேசப்பட்டாகவேண்டும்.
இந்தவகையான விதிகளை சிலர் கட்டுப்பாடு , அதிகாரம் , அடக்குமுறை, ஒழுக்கம் என்றெல்லாம் பெரிய வார்த்தைகளைப்போட்டு விமர்சிப்பார்கள். இதெல்லாம் இல்லாத 'சுதந்திர' விவாதம் தேவை என்பார்கள். எங்கள் விவாதங்களெல்லாமே அப்படி விமர்சிக்கப்பட்டு பக்கம் பக்கமாக கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் அப்படிச் சொன்னவர்கள் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது இன்னொருவர் குறுக்கிட்டாலே கொந்தளிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்பதை கண்டிருக்கிறேன்.
கட்டுப்பாடற்ற விவாதம் என்பது நேர விரயம். ஏனென்றால் விவாத நேரம் அனைவருக்குமானது. பிறர் நேரத்தை வீணடிக்க எவருக்கும் உரிமை இல்லை. ஆகவே நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடுவதற்கான ஒரு சுய ஒழுங்குதான் இவை. ஹிப்பிகளின் சபைகளில்கூட இத்தகைய ஒழுங்குகள் இருந்ததை நித்யா பதிவு செய்திருக்கிறார்
இதெல்லாம் என் வழிகள். இவை நடைமுறையில் பயனளித்துள்ளது என்பதையே கிட்டத்தட்ட 20 விவாத அரங்குகளை நிகழ்த்திய அனுபவத்தில் இருந்து அறிகிறேன். பல அரங்குகளில் மிகமிகச்சூடான விவாதங்கள் நிகழ்ந்துள்ளன– குறிப்பாக தமிழ், மலையாள அரங்குகளில். ஆனால் நட்பின் எல்லை மீறப்படவில்லை. நேர விரயமும் நிகழவில்லை.
நித்யா சொல்வார், சிரிக்காமல் முடியக்கூடிய எந்த விவாதமும் கதவுகளை திறப்பதாக இருக்காது. மூடுவதாகவே இருக்கும்
*
ஒரு புத்தகத்தை எப்படி விவாதிப்பது என்று கேட்டிருக்கிறீர்கள். பல அரங்குகளில் இது சார்ந்த சிக்கல்களை நான் கண்டிருக்கிறேன். புத்தகத்தை இரு வகைகளில் விவாதிக்கலாம்.
ஒன்று, புத்தக அறிமுகம். சபைக்கு அறிமுகமில்லாத ஒரு நூலை ஒருவர் அறிமுகம் செய்யலாம். அப்போது அவர் அந்நூலின் உள்ளடக்கம், அமைப்பு ஆகியவற்றை விளக்கவேண்டும். அதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டவேண்டும். உதாரணம் ராய் மாக்ஸ்ஹாமின் 'இந்தியாவின் மிகப்பெரிய வேலி' பற்றி நான் எழுதிய நூல் அறிமுகம். நூல் அறிமுகம் மீது விவாதமே நிகழமுடியாது. மேலதிக விளக்கங்கள் மட்டுமே கேட்கப்பட முடியும்
இரண்டு, நூல் விவாதம். அதற்கு முன்னதாகவே அந்நூலை விவாதிப்பவர்களில் ஏறத்தாழ அனைவருமே வாசிக்கவேண்டும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். அந்நூலைப்பற்றி ஒருவர் ஒரு மையக்கட்டுரையை முன்வைப்பது நல்லது. அந்த கட்டுரையில் அவர் அந்நூலை அந்நூலைப்பற்றிய ஒரு மதிப்பீட்டை மட்டுமே முன்வைக்கவேண்டும்.வெறுமே தகவல்களை சொல்லகூடாது.
அந்தக்கட்டுரையில் அவர் அந்நூல் பற்றி சொல்லும் மதிப்பீடே விவாதத்துக்கான தோற்றுகை . அந்த தோற்றுகைக்கு ஆதாரமாக அவர் சில வாதங்களை முன்வைக்கலாம். அந்த வாதங்களுக்காக அவர் எந்த தகவலையும் சொல்லலாம். அந்த வாதங்களின் மீது விவாதசபை தங்கள் வாதங்களை முன்வைக்கலாம்.
உதாரணமாக ஒருவர் பதினெட்டாவது அட்சக்கோடு ஒரு 'வயதடைதல்' [Coming of age ]வகை நாவல் எனலாம். கதைநாயகன் இளமையில் இருந்து வளர்ந்து அரசியல் சூழல்கள் வழியாக அவனுடைய ஆளுமையை அடைவது வரை அது காட்டுகிறது என்று வாதிடலாம். அதற்கான காரணங்களை விவரிக்கலாம். அந்நாவலில் பல இடங்களைச் சுட்டிக்காட்டலாம். ஜெ.டி.சாலிங்கரின் The Catcher in the Rye போன்ற நாவல்களை சுட்டிக்காட்டி ஒப்பிடலாம். அல்லது வில்லியம் சரோயனின் My Name is Aram கதைகளின் நடையுடன் அந்நாவலின் இளமைக்காலச் சித்திரங்களை ஒப்பிடலாம்.
இப்படி ஒரு கருத்தை விவாதத்துக்காக வைக்காமல் 'நல்ல நாவல்' 'வாசிக்கவேண்டிய படைப்பு' 'நல்ல அனுபவத்தை அளித்தது' என்றெல்லாம் சொல்லும் கருத்துக்கள் எந்த விவாதத்தையும் உருவாக்காது. அப்படி ஏதேனும் ஒரு விமர்சனமையம் மூலக்கட்டுரைக்கு இருக்கும்படி முன்னரே திட்டமிட்டுக்கூட அமைக்கலாம்
அந்த மையத்தை மறுத்து இல்லை, இந்தியச்சூழலில் ஓரு நடுத்தர வர்க்க மனிதனுக்கு அரசியல் சார்ந்த புறமும் அரசியலே இல்லாத அகமுமாக இரட்டை வாழ்க்கை ஒன்று இருப்பதை அந்நாவல் சொல்கிறது என ஒருவர் மறுக்கலாம். அதற்கான காரணங்களை விவரிக்கலாம். அல்லது அது ஒரு நடுத்தர குடிமகனை அவனுக்குச் சம்பந்தமே இல்லாத அரசியல் அலைக்கழிப்பதைப்பற்றிச் சொல்கிறது என்று சொல்லலாம்.
இப்படி தோற்றுகை, விவாதக்களம் இரண்டையும் வரையறை செய்துகொண்டபின் விவாதிப்பதே சிறந்தது. இதற்கு வெளியே செல்லும் விவாதங்கள் எதையும் தவிர்த்தால் பல்வேறு வாசிப்புகள் அங்கே முன்வைக்கப்படும். அது நல்ல விவாதத்தை உருவாக்கும்.
கூட்டத்தின் முடிவில் உறுப்பினர்கள் என்ன எதிர்பார்க்க வேண்டும்? என்ன சாதித்திருக்க வேண்டும்? ஒரு விவாதத்தில் ஒருவர் சொல்லும் கருத்து என்பது அவரது ஆளுமை, அவரது வாசிப்பு, அவரது அனுபவம் சார்ந்தது. அதை அவர் விவாதம் மூலம் மாற்றிக்கொள்ளமுடியாது. ஆகவே விவாதம் மூலம் எவரும் வெல்லவோ தோற்கவோ முடியாது. அந்த நோக்கமே பிழை
நல்ல வாதங்கள் முன்வைக்கப்பட்டால் அதில் பங்கெடுத்தவருக்கு ஒரேசமயம் பல கோணங்களை கண்ட அனுபவம் ஏற்படுகிறது. அது அவரது வாசிப்பை விரிவடையச்செய்கிறது. அத்துடன் தன் சொந்தக்கருத்தை சரியான சொற்றொடர்களில் முன்வைக்கும் திறன் அமைகிறது. அது அவரது சிந்தனைத்திறனை வளர்க்கிறது. ஒரு விவாதத்தில் அதிகபட்சம் எதிர்பார்க்கக்கூடியது இதுவே.
ஜெ
விவாதம் என்னும் முரணியக்கம்
விவாதிப்பவர்களைப்பற்றி
இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும்
மலையாளவாதம்
விவாதங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? -கடிதம்
அந்த பார்வையாளர்கள்
கலைஞர்களை வழிபடலாமா?
சிலகேள்விகள்
விவாதங்களின் எல்லை…
இணையத்தில் விவாதம்…
எனது அரசியல்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
இரு கடிதங்கள்
அன்பின் ஜெ..
இந்த வாரம் இந்தியா இன்று படித்து எவ்வழியே சிரிப்பது என்றே புரியவில்லை. வழக்கம் போல, ஒவ்வொரு மாநிலத்துக்கும் மதிப்பெண்கள். அவுட்லுக் எவ்வழியோ அதற்கு நேர் மாறான வழி இந்தியா டுடே என்றறிவேன். ஆனால், அவர்களின் நகைச்சுவை உணர்வை இப்போதுதான் உணர்கிறேன்.
1. உத்தராகண்டின் வரிச் சலுகையும், 70% உள்ளூர் மக்களை வேலையில் அமர்த்த வேண்டும் என்ற கொள்கையும், மக்கள் வெளியேறியதைத் தடுத்து,முன்னேற்றங்களை ஏற்படுத்தியதாம். உண்மை: 10% சதம் கூட உள்ளூர் வேலையாட்கள் கிடையாது – எல்லாம் பீஹாரிகள்.. தொழிலதிபர்கள் எல்லாம் இப்போது நிதிஷ் குமாரை திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.. தாயோளி.. பொழப்பக் கெடுத்துருவான் போலிருக்கே..
2. மின்சார உற்பத்தியில் முதலீடு செய்து, தொழில் உற்பத்தியில் மராட்டியம் முன்னிலையில்.. அஜித் பவாரின் சாதனையாம்.. மும்பையில் இருந்து 30 கி,மி தள்ளி, கல்யாணில் 10 மணிநேர மின்வெட்டு..
கம்யூனிஸ்டுகள் சொர்க்கத்தைப் பற்றிய கட்டுரைகளை அவர்களே வெளியிட்டார்கள்.. நம்மவர்கள் அந்த வேலையை அவுட்ஸோர்ஸ் செய்துவிடுகிறார்கள்.. நாலாவது எஸ்டேட்டுக்கு..
தமிழுக்குத் தினமலரின் தனிப்பெரும் பங்களிப்பு, கோ.பி.நி.ச என்னும் சொற்றொடர்..
வாழ்க பாரதம்.
பாலா
திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
எனக்கு அனுப்பப்பட்ட ஒரு சுட்டியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நம்முடைய கல்வி அமைப்பின் குறைபாடுகளைப் பற்றியும், தற்போதைய கல்வி அமைப்புகள் எப்படி முழுதும் வணிகரீதியாக செயல்படுகின்றன என்பதும் உங்கள் வலைப்பக்கங்கள் அதிகம் விவாதித்திருக்கின்றன . பொறுப்பில்லாத ஆசிரியர்கள், அரசியல்மயமாக்கப்பட கல்வி நிறுவனங்கள், இருக்கும் இயற்கையான திறமைகளையும், மழுங்கடிக்கப்பட்டு பட்டதாரி என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வெளியேற்றப்படும் ஆயிரக்கணக்கான இளைஞர் பட்டாளம் . இவை நாட்டுப்புறங்களில் பரம்பரையாக இருந்துவரும் நுட்பமான திறமைகளையும், வழி வழி வந்த கைவேலைகளையும் , நுண் கலைகளையும் , மரபு வழி வைத்திய முறைகளையும், வரும் தலைமுறைகளுக்கு தெரியாமல் அழிந்துவிடச் செய்கின்றன .
ராஜாஜி அறிமுகப்படுத்திய கல்விமுறை பற்றிய உங்கள் கருத்துக்கள் நம் பாரம்பரிய கற்பிதல்களை அடுத்த தலைமுறைக்கு ஓரளவு கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பை அளிக்கக் கூடியதாக இருந்தது என்பதாக இருந்தது.
இந்த சுட்டியின் 'பங்கர் ராய்' என்பவரின் கல்வி முயற்சி உண்மையிலேயே ஒரு சிறந்த முன்னுதாரணமாக நான் காண்கிறேன்.
இது பற்றி உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.
இது போன்ற முயற்சிகள் தமிழ் நாட்டில் எடுக்கப்பட்டால் அதற்கான ஆதரவு எப்படி இருக்கும்? அத்தகைய முயற்சிகள் கொச்சைப்படுத்தப்படும் வாய்ப்புகளைப் பற்றி?
http://www.ted.com/talks/bunker_roy.h...
அன்புடன்,
சங்கரநாராயணன்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
November 9, 2011
கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன்
நலமா? ஆதாமிண்ட மகன் குறித்து நீங்கள் எழுதியிருந்ததைப் படித்தேன். நல்ல மென்மையான படம். சலீம்குமார் அபாராமன ஒரு நடிகர். நானும் இது குறித்து சொல்வனத்தில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். நான் நினைத்ததைச் சரியாகச் சொல்லவில்லை. நீளம் கருதி எழுதியவற்றில் பலவற்றை நீக்கி விட்டிருந்தேன். நேரம் கிட்டும் பொழுது வாசிக்கவும் http://solvanam.com/?p=17106
அன்புடன்
ராஜன்
அன்புள்ள ஜெ,
இந்த விவாதம் கண்டிப்பாய் எழுதப்பட வேண்டிய ஓன்று.கிரியேசன் என்று ஒரு புத்தகம் ஆர்ட் ஆப் லிவிங்கால் வெளியிடப்பட்டது. சின்ன புத்தகம்.ஓவ்வொரு மதங்களும் எப்படி இந்த பிரபஞ்ச தோற்றத்தை கையாண்டு கொண்டிருக்கின்றனஎன்பதை பற்றியும் இந்து மதம் அதை எவ்வாறு மிகச் சிறந்த தொலைநோக்கோடு கொண்டு செல்கிறதுஎன்பதை பற்றியும் ஆராயும் புத்தகம்.
இதை மேலும் ஆழமாக நீங்கள் செய்தால், தமிழில் எழுதப்பட்ட ஆன்மீக அறிவியலுக்கு அது ஒரு நல்ல கொடையாய் அமையலாம்.
அ) பிரபஞ்சம் பற்றிய மற்ற மதங்களில் கருத்துக்கள்
ஆ) டார்வின் கருத்துக்களின் துவக்கம்
இ) நமது மதங்களின் பிரபஞ்சம் பற்றிய கருத்துருவாக்கம்
ஈ) டார்வின் மற்றும் வளரும் அறிவியலோடு நம் மதம் இணையும்/ மாறுபடும் புள்ளிகள்
வேதாத்திரி மகரிஷி இதை ஓரளவு செய்ய முற்பட்டார். சில அறிவியல் ஆராய்ச்சி கட்டுரைகள் கூட சமர்ப்பிக்கப்பட்டன.
அப்புறம் என்னவாயிற்று என்று தெரியாது.
நல்லது.
மணி ராமலிங்கம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்கள் பதிலுரைக்கும், அங்கீகாரத்திற்கும் மிகவும் நன்றி. உற்சாகமாக இருக்கிறது. முதலில் ஏனோ தானோ என்றுதான் ஆரம்பிதேன். கொஞ்சம் கொஞ்சமாக சமண கோவில்களின் பழமை என்னை ஈர்த்து விட்டது. அதோடு, அங்கிருக்கும் சமணர்களுக்கு (நயினார்கள் என்று பொதுவாக குறிப்பிடப்படுகிறார்கள்) கோவிலின் வரலாறு பற்றி பெரும்பாலும் தெரியவில்லை. திறக்கோயில் பற்றி கூட அவர்கள் (தற்போது இரண்டு குடும்பங்கள் மட்டுமே இருக்கிறது) அளித்த பழைய நோட்டீஸ் வைத்துதான் எழுதினோம்.
முந்தைய மெயிலில் இரண்டு திருத்தங்கள்.
"இந்த சமணர் கோவிலுக்கு அருகில் வாழும் சமணர்கள் அனைவருமே நூறு சதம் விவசாயிகள்" என்பதற்கு பதில்,
"தொண்டை நாட்டு சமணர் கோயில்களுக்கு அருகில் வாழும் சமணர்கள் அனைவருமே நூறு சதம் விவசாயிகள்" என்று இருக்க வேண்டும்.
அடுத்தது சீனாபுரம் இருப்பது ஈரோடு மாவட்டத்தில். மாற்றி எழுதி விட்டேன். மன்னிக்கவும். விடுபட்ட மேலும் மூன்று சமணர் கோவில்களை பற்றி இங்கே இணைத்து உள்ளேன்.
1) ponnur jain temple
2) Thiruparuthikundram (samanakanchi)
3) Ponnur hill jain temple (Acharya kund kundar)
நீங்கள் திருவண்ணாமலை செல்வதாக தங்கள் இணையதளத்தின் மூலம் அறிகிறேன். அங்கிருந்து திருமலை சமண கோவிலும் , மடமும் 50 கிலோ மீட்டர் தொலைவில்தான் உள்ளது.
நன்றி.
தங்கள் அன்புள்ள,
க. சரவணகுமார்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
