ரீங்கா ஆனந்த் திருமணம்

சமீபத்தில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் ஒரு குடும்பம் போல நின்று நடத்திய நிகழ்ச்சி என்றால் ரீங்கா -ஆனந்த் உன்னத் திருமணத்தைச் சொல்லவேண்டும். இருவருமே வாசகர்குழும உறுப்பினர்கள். ரீங்காவின் அம்மா உஷா மதிவாணன் கனடாவில் இருக்கிறார். சென்றமுறை நான் கனடாவுக்குச்சென்றபோது அவர் இல்லத்தில்தான் தங்கியிருந்தேன். ரீங்காவுடன் அப்போதுதான் பழக்கம். அறிவார்ந்த விஷயங்களில் ஆர்வமும் வாசிப்புமுள்ள வெகுசில பெண்களில் ஒருவர்.



ஆனந்த் உன்னத் என் நண்பர், வாசகர். எங்கள் அரங்குகளில் பங்கேற்றிருக்கிறார். கணிப்பொறித்துறையில் பெங்களூரில் பணியாற்றுகிறார். அவரிடம் ரீங்கா பற்றி சொன்னேன். காதலாகி திருமணம் வரை வந்தது



[எஸ்.கெ.பி.கருணா அறம் நூலின் பிரதியை ஆனந்த் -ரீங்காவுக்கு அளிக்கிறார். அருகே பவா செல்லத்துரை]


ஆனந்த் உன்னத்துக்கு அதிக உறவினர் இல்லாத காரணத்தால் குழும நண்பர்களே உறவாக நின்று திருமணத்தை நடத்தி வைக்கவேண்டியிருந்தது. அரங்கசாமி முழு முயற்சி எடுத்துக்கொண்டார். உஷா மதிவாணனுக்குத் திருவண்ணாமலை கோயிலில் திருமணம் நிகழவேண்டுமென ஆசை. அவர்களின் சொந்த ஊர் கடலூர். அரங்கசாமி திருவண்ணாமலைக்குச் சென்று என் 'பாலியகால' நண்பர் பவா செல்லத்துரையிடம் சொல்ல மீதி எல்லாமே அவர் பொறுப்பேற்று நிகழ்த்தி வைத்தார்.



பவாவிற்கும் எனக்கும் நண்பரான எஸ்.கெ.பி.கருணா அவர்களின் எஸ்.கெ.பி பொறியியல் கல்லூரி வளாகம் திருமணத்துக்காக அளிக்கப்பட்டது. வசதியான நட்சத்திர ஓட்டல் வசதிகொண்ட அறைகள். சர்வதேச தரம் கொண்ட அரங்கம். மிகச்சிறப்பான உணவு. இருபத்தைந்து வருடங்களாக பவா மிகச்சிறப்பாக அல்லாமல் எந்த நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்து நான் கண்டதில்லை. ஆகவே எனக்கு ஆச்சரியமொன்றும் இல்லை. ஏதாவது குறை இருந்தால்தான் ஆச்சரியப்பட்டிருப்பேன்.



[சீனிவாசன், சுனில்,இளங்கோ,பாலமுருகன், ராஜகோபாலன், கார்த்தி,மோகனரங்கன், கடலூர் சீனு, விஜயராகவன்,சிறில்]


நானும் அருண்மொழியும் ஆறாம் தேதியே சென்றுவிட்டோம். பொறியியல் கல்லூரி வளாகத்தில் தங்கினோம். குழுமநண்பர்கள் அனேகமாக அனைவருமே வந்தார்கள். சென்னையிலிருந்து கெ.பி.வினோத் குடும்பத்துடன் வந்தார். சிறில் அலெக்ஸ், ராஜகோபாலன், வசந்தகுமார், செல்வ புவியரசன், ச.முத்துவேல், செந்தில்குமார் தேவன் வந்திருந்தார்கள். ஸ்ரீனிவாசனும் சுதா சினிவாசனும் வந்திருந்தார்கள்.


காரைக்குடியில் இருந்து சுனில் [காந்தி இன்று இணையதள ஆசிரியர்] வந்திருந்தார். பெங்களூரில் இருந்து கார்த்தி வந்திருந்தார்.


ஈரோட்டிலிருந்து கிருஷ்ணன், விஜயராகவன், இளங்கோ, மோகனரங்கன், பாலமுருகன் வந்தனர். கடலூர் சீனு வந்திருந்தார். சேலத்தில் இருந்து சதீஷ் வந்திருந்தார். தேவதேவனும் அரங்கசாமியும் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். டெல்லியில் இருந்து எம்.ஏ.சுசீலா வந்திருந்தார்கள்.



[அறை உரையாடல் நண்பர்களுடன் அருண்மொழி, எம்.ஏ.சுசீலா]


ஆறாம்தேதி மாலையில் வரவேற்பு. திருவண்ணாமலை மலையின் பிரம்மாண்டமான படத்தின் பின்னணியில் பச்சைப்புல் விரிந்த திறந்தவெளி அரங்கில். புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி. ஒரு வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி. நாதஸ்வர நிகழ்ச்சி. விருந்து. திறந்தவெளியில் இசை கேட்பதே அபாரமான அனுபவம். மழை பெய்து குளிர்ந்திருந்த சூழலில் உற்சாகமாக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம்.


இரவெல்லாம் ஒரே அறையில் பேசிக்கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட தூங்கவேயில்லை. மறுநாள் அதிகாலை ஆறு மணிக்கு திருவண்ணாமலை கல்யாணசுந்தரர் சன்னிதியில் திருமணம். அதன்பின் மீண்டும் எஸ்.கெ.பி. கல்லூரி அரங்கில் விருந்து. மீண்டும் ஒரு முழுமையான நாதஸ்வரக்கச்சேரி. மதியம் நண்பர்கள் கிளம்பிச்சென்றார்கள். நான் மாலையில் கிளம்பி விழுப்புரம் சென்று அங்கிருந்து நாகர்கோயில் பஸ்ஸைப் பிடித்தேன். கடலூர் சீனு வந்து நின்று ஏற்றி வைத்தார்.


இரண்டுநாளும் பேச்சும் சிரிப்பும் கிண்டலுமாகச் சென்றது. மோகனரங்கன் நுட்பமான கிண்டலுக்குப் புகழ்பெற்றவர். சிரித்துக்கொண்டு அவ்வப்போது தீவிரமான இலக்கியவிவாதத்துக்குச் சென்று மீண்டு ஒரு மிகச்சிறந்த நண்பர் சந்திப்பு.


பவாவை சிறிய இடைவெளிக்குப்பின் சந்திக்கிறேன். இடதுசாரி இலட்சியவாதம் என நான் நினைக்கும் ஒன்றின் மனிதவடிவமென அவரை எண்ணிக்கொள்பவன் நான். எந்நிலையிலும் எப்போதும் மனிதர்களுக்கு உதவத் தயாராக இருப்பவர். எங்கும் எதிலும் நல்லதை மட்டுமே பார்க்கக்கூடியவர். எந்தக் கரன்ஸியை விடவும் நல்லியல்புக்கு செலாவணி அதிகமென அவரைக் கொண்டே நான் நம்பிவருகிறேன். அவரது 'வம்சி' பதிப்பகம் என்னுடைய 'அறம்' சிறுகதைத் தொகுதியை வெளியிட்டிருக்கிறது. அதன் கதைமாந்தர்களின் உலகைச்சேர்ந்தவர் அவர்.[பவாவின் இணையதளம்]



அறம் நூலின் பிரதிகள் வந்திருந்தவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன. ஒரே நாளில் பலர் கைகளுக்கு ஒரு நூல் சென்று சேர்வது உற்சாகமான அனுபவம். சட்டென்று வாசக எதிர்வினைகள் வந்து சேர ஆரம்பிக்கும். முன்னரும் வாழ்விலே ஒருமுறை, சங்கசித்திரங்கள் போன்ற நூல்களை நண்பர்கள் மொத்தமாக வாங்கித் தங்கள் திருமண விருந்தினர்களுக்கு அன்பளிப்பாக அளித்திருக்கிறார்கள். புதிய வாசகர்களிடையே நூல் சென்று சேர அது வழிவகுக்கிறது.


அனைத்துக்கும் மேலாக நன்றி சொல்லவேண்டியவர் எஸ்.கெ.பி.கருணா. மிக எளிய உற்சாகமான இளைஞர். ஒரு பொறியியல் கல்லூரியின் தாளாளராக அத்தனை இளைய ஒருவரைப் பார்ப்பது ஆச்சரியம். அதைவிடக் கல்லூரியை ஓர் கல்விநிறுவனமாக மட்டுமே பார்க்கும் அர்ப்பணிப்பை அபூர்வமாகவே காணமுடியும். கல்லூரியின் எந்த ஒரு இடத்திலும் அந்த அர்ப்பணிப்பின் நுண்ணிய தடங்களைக் காணமுடியும். [எஸ்.கெ.பி.கருணாவின் பதிவு]


நிறைவூட்டும் இருநாட்கள். ஆனந்த் ரீங்கா இருவருக்கும் வாழ்த்துக்கள்.


http://vishnupuram.wordpress.com/


தொடர்புடைய பதிவுகள்

யுவன் வாசிப்பரங்கு
பவாவும் யோகியும் நானும்
கலாப்ரியா படைப்புக்களம் – நிகழ்வுக் குறிப்புகள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 11, 2011 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.