Jeyamohan's Blog, page 2271
November 17, 2011
பிறழ்வெழுத்து
அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
பாரதி, கல்கி போன்றவர்களின் படைப்புகளைப் படித்தே வளர்ந்ததாலோ என்னமோ, என்னைப் பொறுத்தவரையில் எழுத்து மனிதர்களிடையே நேர்மறையான மாற்றங்களைத் தோற்றுவிப்பதற்கே என்ற எண்ணம் ஆழ வேரூன்றி இருக்கிறது.
சமீபத்தில் "டிரான்ஸ்க்ரேசிவ் பிக்சன்" என்ற சொற்றொடரைப் படிக்க நேர்ந்தது. தமிழில் இத்தகைய படைப்புகள் வந்துள்ளனவா? இத்தகைய படைப்புகள் ஏதேனும் சமூக நன்மையை அளிக்கவல்லனவா? அல்லது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு உத்தியாகவே இத்தகைய நாவல்கள் எழுதப்படுகின்றனவா?
உங்களின் கருத்தைக் கூறுங்களேன்?
நன்றி
கணேஷ்
நியூ டெல்லி
அன்புள்ள கணேஷ்,
எல்லாவகையான எழுத்தும் இயல்பாக உருவாகி வருமென்றால் அதற்கான இன்றியமையாமை அச்சமூகத்தில் உள்ளது என்பதே அர்த்தம். ஆகவே அது தேவையில்லை என்று எவரும் சொல்லமுடியாது. இலக்கியம் என்பது ஒருவகையில் ஒரு சமூகம் கனவுகாண்பது போல, அச்சத்தில் உளறுவது போல, பைத்தியத்தில் பிதற்றுவதுபோல .அது தேவையா என்பதை ஒட்டி அது உருவாவதில்லை.
பிறழ்வெழுத்து [ Transgressive fiction ] என்ற சொல் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உருவான ஒரு சில எழுத்துக்களைக் குறிப்பிடுவதற்காக உருவாக்கப்பட்டது. விமர்சகர் மைக்கேல் சில்வர்பிளாட் அச்சொல்லை உருவாக்கினார் என்கிறார்கள். பல்வேறு அக நெருக்கடிகளால் மனப்பிளவுண்டு சமூக நெறிகள் பொது நம்பிக்கைகள் ஆகியவற்றில் இருந்து முற்றிலும் பிறழ்ந்து போன நிலையில் எழுதப்படும் எழுத்து இது. கட்டற்ற பாலியல், குற்றகரமான அறமீறல்கள் என அனைத்து வகைப் பிறழ்வுகளையும் உள்ளடக்கியது. ஒரு வகையில் நோய்க்கூறானது.
இலக்கியத்தில் இவ்வகையான ஒரு கூறு எப்போதுமே இருந்துகொண்டிருப்பதைக் காணலாம். பழைய காலகட்டத்திலேயே பொது எல்லைகளை மீறிய நூல்கள் இருந்துவந்துள்ளன. ஓர் உதாரணம் என்றால் தமிழில் உள்ள கூளப்பநாயக்கன் காதல்,விறலி விடுதூது போன்ற நூல்களைச் சொல்லலாம்.
உரைநடை இலக்கியம் உருவானபோது யதார்த்தவாத எழுத்தின் ஒரு கூறாக இந்த அம்சம் இருந்துகொண்டிருந்தது. அதை அந்தந்தக் காலகட்டத்து மரபுவாதிகள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். எழுத்தாளர்கள் நீதிமன்றத்துக்கு இழுக்கப்பட்டிருக்கிறார்கள். தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்கள் இக்குற்றச்சாட்டுக்கு ஆளாயின. ஒழுக்கவாதியான தல்ஸ்தோய் எழுதிய 'இருட்டின் ஆற்றல்' என்ற நாடகம் பிறழ்வுத்தன்மை கொண்டது என்று சொல்லப்பட்டது. எமிலி ஜோலா, மாப்பசான், டி.எச்.லாரன்ஸ், ஜேம்ஸ் ஜாய்ஸ் போன்றவர்களின் எழுத்துக்கள் பிறழ்வுகள் கொண்டவை என்று குற்றம்சாட்டப்பட்டன.
சில ஆசிரியர்கள் அவர்கள் எழுத்தில் உள்ள பிறழ்வுத்தன்மையாலேயே இலக்கிய அடையாளம் பெற்றனர். உதாரணம் மார்கி து சேத் [Marquis de Sade] இவரது ஒரு நூல் காதலின் வேதனை என்ற பேரில் தமிழினி வெளியிட்டாக வந்துள்ளது.
சில நூல்கள் பிறழ்வுத்தன்மையால் மட்டுமே கவனிக்கப்பட்டவை. உதாரணம் பியரி லாக்லாஸ் [ Pierre Ambroise François Choderlos de Laclos] எழுதிய Dangerous Liaisons என்ற நாவல். இதன் திரை வடிவத்தின் தமிழாக்கம் தமிழினி வெளியீடாக வந்துள்ளது.
அதன் பின் நவீனத்துவ காலகட்டத்தில் சர்ரியலிச எழுத்துக்களில் பெரிதும் மனப்பிறழ்வுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதை ஒட்டி உருவான குரூர அரங்கு போன்ற மேடைக்கலைகள் அந்தோனின் ஆர்ட்டாட் போன்ற கலைஞர்களை உருவாக்கின. நவீனத்துவத்தின் ஒரு முகம் தனிமனிதனின் அகப்பிறழ்வை எழுத முயன்றது. அதற்காக நனவோடை உத்தி போன்றவை உருவாக்கிக்கொள்ளப்பட்டன.
பின்நவீனத்துவ காலகட்டத்தில் பிறழ்வு என்பது ஒரு களியாட்டநிலையாக, அர்த்தங்களில் இருந்துகூட விடுபட்ட மொழியின் வெளிப்பாடாக, உன்மத்தமாகக் கருதப்பட்டது. அத்தகைய ஆக்கங்கள் பல உருவாயின.
விரிவான ஒரு பட்டியலைப் போடலாம். தமிழில் கிடைப்பனவற்றை மட்டுமே நான் குறிப்பிடுகிறேன். நான் சொல்ல வருவது இது ஒரு புதிய விஷயமல்ல என்றும் எல்லாக் காலகட்டத்திலும் இலக்கியத்தின் ஒரு அம்சமாக இது தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது என்றும்தான். இப்போது இந்தப் பெயர் அளிக்கப்பட்டுள்ளது அவ்வளவுதான்
வழக்கமான பாலியல் எழுத்துக்கும் இதற்குமான வேறுபாடு என விமர்சகர்கள் குறிப்பிடுவது இது முழுமையாகவே சமூக நெறிகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு மனப்பிறழ்வு நிலைக்கு சமீபத்தில் நின்றுகொண்டிருக்கிறது என்பதை மட்டுமே. அழகியல் ரீதியாக இவ்வகை எழுத்து ஒருவகை தட்டையான சித்தரிப்பைக் கொண்டிருக்கும். வர்ணனைகளோ விவரிப்புகளோ நுட்பங்களோ இல்லாத தன்மை.
இந்தவகை எழுத்துக்கள் உருவாக்கும் அதிர்ச்சிமதிப்பு, சிலசமயம் சட்டநடவடிக்கைகள் காரணமாக உடனடியான கவனமும் புகழும் இவற்றுக்குக் கிடைக்கின்றன. இளைய வாசகர்கள் நடுவே ஒரு சிறப்புக்கவனம் இவற்றுக்குக் கிடைக்கிறது. ஆகவே சட்டென்று ஒரு மோஸ்தராக ஆகி அதேபோலப் பலர் எழுத ஆரம்பிக்கிறார்கள். அல்லது செயற்கையான பாலியல் சுரண்டல் எழுத்துக்கு இந்த லேபிலை ஒட்டிக்கொள்கிறார்கள்
மிகமிக அபூர்வமாகவே இவை அடுத்த தலைமுறை வரை சென்று சேர்கின்றன. இந்த வகை எழுத்தில் எவை ஆழமான மன எழுச்சியில் இருந்து பிறக்கின்றனவோ, எவை நேர்மையானவையோ அவை மட்டுமே நிற்கின்றன.
எந்தவகையில் இது முக்கியமானது என்றால் இது சமூக ஆழ்மனத்தின் அதிகம் பார்க்கப்படாத சில பக்கங்களை வெளிக்கொணர்கிறது என்பதனால்தான். இலக்கியம் மனித ஆழ்மனதை வெளிப்படுத்துவதற்கான அறிவதற்கான முயற்சி என்பதனால் இதற்கான இடம் உருவாகி வருகிறது.
ஆனால் இன்றைய காட்சி ஊடகம் குறிப்பாக இணையம் பிறழ்வின் எல்லா எல்லைகளுக்கும் சென்று விட்டபின் இவ்வகை எழுத்துக்களின் உண்மையான மதிப்பு என்ன என்பது ஐயமாகவே இருக்கிறது. மொழியில், கூறுமுறையில், படிமங்களில் இவை புதியநகர்வுகளை உருவாக்கினால் மட்டுமே இவை இலக்கியமதிப்புப் பெறுகின்றன
மனித அகநிலை அது எவ்வகையில் வெளிப்பட்டாலும், என்ன விளைவை உருவாக்கினாலும், அது உண்மையானதும் தீவிரமானதுமாக இருக்கும்பட்சத்தில் இலக்கியத்துக்கு முக்கியமானதே. இலக்கியத்துக்கு எந்த நிபந்தனைகளும் இருக்கமுடியாது.
இலட்சியவாதம் சார்ந்த, ஒழுக்கம் சார்ந்த, அறம் சார்ந்த எழுத்துக்கு என்ன முக்கியத்துவம் இருக்கமுடியும்? அது நேர்மையான தீவிரமான அக எழுச்சியின் விளைவா என்பது மட்டுமே ஒரே செல்லுபடியாகக்கூடிய கேள்வி. அதே கேள்விதான் இந்த வகை எழுத்துக்களுக்கும்.
இந்திய எழுத்தில் பிறழ்வுத்தன்மை மெல்லிய கூறாகவே எப்போதும் உள்ளது. பெரிய அளவில் மேலோங்கியிருந்ததும் இருப்பதும் இலட்சியவாத சமூக விமர்சன நோக்குதான். நம் நவீன எழுத்தின் தொடக்கப்புள்ளிகளில் ஒன்றாகிய புதுமைப்பித்தனின் கதைகளிலேயே பிறழ்வெழுத்தின் முதல்தடயங்கள் உள்ளன. செத்துக்கிடக்கும் நண்பனின் சடலத்தின் அருகே வைத்து அவன் மனைவியுடன் உறவுகொள்ளும் ஒருவனைப்பற்றிய கதையான 'விபரீத ஆசை'யை அதற்கான சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். ஜி.நாகராஜனின் சில கதைகள், கரிச்சான்குஞ்சுவின் 'பசித்தமானுடம்' ஆகியவற்றில் சில தடங்களைக் காணலாம்.
நனவோடை எழுத்து, தன்னோட்ட எழுத்து, மனப்பிறழ்வைப் பதிவுசெய்யும் எழுத்து போன்றவற்றை நான் இந்த வகையில் சேர்க்கவில்லை. லா.ச.ரா, நகுலன், மு.தளையசிங்கம்,சம்பத் போன்றவர்கள் அவ்வகையில் எழுதியிருக்கிறார்கள்.
முழுமையான பிறழ்வெழுத்து தமிழில் மட்டுமல்ல பிற இந்திய மொழிகளிலும் இல்லை என்றே நினைக்கிறேன். மேலைநாட்டு எழுத்துக்களைப்பார்த்துப் போலிசெய்வதையோ நாலாந்தரப் பாலியல் எழுத்துக்கு அந்தப் பூச்சு போட்டுக்கொள்வதையோ நான் கணக்கில் கொள்ளவில்லை.
ஐரோப்பாவும் அமெரிக்காவும் அவர்கள் இன்று தங்களுடையெதனக் கருதும் ஜனநாயக, மதசார்பற்ற, தாராளவாத நாகரீகத்தையும் சமூக அமைப்பையும் உருவாக்கிக்கொண்டு இருநூறாண்டுகளாகின்றன. அவற்றின் முதிர்ச்சிக்காலகட்டத்தில்தான் இந்த பிறழ்வெழுத்துக்கான இடம் உருவாகிறது. நாகரீகத்துக்கு எதிரான குரல் இந்த அளவு தீவிரமாக எழுகிறது.
நாம் கடந்த முக்கால்நூற்றாண்டாகத்தான் நம் நவீன நாகரீகத்தைக் கட்டி எழுப்ப முயன்றுகொண்டிருக்கிறோம்.நாம் காணும் பிறழ்வுகள் முழுக்க நம் இறந்த காலத்திலேயே உள்ளன. அவற்றை நோக்கிய கொந்தளிப்பும் எதிர்ப்புமே நம் இலக்கியத்தில் பெரும்பகுதி. ஆகவே இங்கே இலட்சியவாதமே இலக்கியத்தின் முகமாக உள்ளது.
வெவ்வேறு காலகட்டத்தில் ஐரோப்பிய மோஸ்தர்களை சிலர் இங்கே அறிமுகம் செய்வதும் அவை கொஞ்சகாலம் நகல்படைப்புகளை உருவாக்கி உதிர்வதும் சாதாரணமாக நடப்பதுதான். எண்பதுகளில் இருத்தலியல் மனஇறுக்கத்தை எழுதுவது ஒரு மோஸ்தராக இருந்தது.
இருப்பின் சுமையை விட, பாலியல் கட்டுப்பாட்டை விட பக்கத்து வீட்டான் பசியால் இறப்பதும் அண்டை வீட்டார் மாறி மாறிக் கழுத்தை அறுத்துக்கொள்வதும்தான் நமக்கு முக்கியமாகப் படுகிறது. நமது பிரச்சினை நமது மரபைச் சலித்துச்சலித்து எடுத்து அதைக்கொண்டு நம்முடைய நிகழ்காலத்தை உருவாக்கிக்கொள்வதில் உள்ளது. நம்முடைய வாழ்க்கையை, நம்முடைய பிரச்சினையைத்தான் நம் எழுத்தாளர்கள் எழுதமுடியும், எழுதுகிறார்கள். அதுவே மிக இயல்பானது, வரலாற்று நியாயம் உள்ளது.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
ராமாயணம்-கடிதங்கள்
கடிதங்கள்
பாரதி விவாதம் -6 – இறை,உரைநடை
திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 2
கடைத்தெருவை கதையாக்குதல்…
புதுமைப்பித்தன் இன்று…
புதுமைப்பித்தனின் வாள்
November 16, 2011
சாஸ்தா
அன்புள்ள ஜெ,
சம்ஸ்கிருதம் பற்றி சராசரி தமிழ் மனதில் பொதுவாக உருவாகியிருக்கும் தவறான பிம்பங்களையும், புரிதல்களையும் களையும் வகையில் அருமையாக பதிலளித்திருக்கிறீர்கள். (நாட்டார் தெய்வங்களும் சமஸ்கிருதமும்) மிக்க நன்றி.
சென்ற நூறாண்டுக்காலத்துக்குள்தான் ஐயப்பனுக்கு சம்ஸ்கிருத தோத்திரங்கள் உருவாயின.
இல்லை. ஐயப்பன் குறித்த சம்ஸ்கிருத புராணங்கள், தோத்திரங்கள்,ஐதிகங்கள் குறைந்தது 8-9 நூற்றாண்டுகளாவது பழையவை. பதினெட்டு புராணங்களில் ஒன்றான பிரம்மாண்ட புராணம் என்னும் புராணத்தில் பூதநாதோபாக்கியானம் என்னும் பகுதியில் இன்று கேரளத்திலும், தமிழகத்திலும் பிரபலமாக உள்ள ஐயப்பன் சரித்திரம் கூறப்படுகிறது. இது ஒரு தனி நூலாக இயற்றப்பட்டுப் பிறகு இந்தப் புராணத்தில் சேர்க்கப் பட்டிருக்கக் கூடும். சபரிமலை குறித்து இந்த நூல் கூறுகிறது. போரில் தோற்ற பிற்காலப் பாண்டியர்களிடமிருந்து கிளை பிரிந்ததே பந்தள ராஜவம்சம்; அந்தக் கிளையில் வந்த ராஜசேகர பாண்டியனே ஐயப்பனின் தந்தையாகச் சித்தரிக்கப் படுபவர் என்று சில வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கும் கருத்தும் இந்தக் காலகட்டத்துடன் (11,12ம் நூற்றாண்டு) பொருந்தி வருகிறது.
கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்த புராணத்தில் மகா சாத்தாப் படலம் என்ற பகுதி சாஸ்தா குறித்த புராணக் கதையை முழுவதுமாகச் சொல்லி விடுகிறது. கச்சியப்பரின் காலம் கி.பி 1400க்குச் சற்று முன்… எனவே அதற்கு முன்பே சம்ஸ்கிருத புராண மரபில் சாஸ்தா/ஐயப்பன் உறுதியாக இடம்பெற்று விட்டார் என்பது தெளிவு.
அங்கண் மேவி அரிகரபுத்திரன்
சங்கையில் பெரும் சாரதர் தம்மொடும்
எங்குமாகி இருந்து எவ்வுலகையும்
கங்குலும் பகல் எல்லையும் காப்பனால்
என்று கந்தபுராணத்தில் வரும் பாடல் தான் "காசி ராமேஸ்வரம் பாண்டி மலையாளம் அடக்கியாளும் ஹரிஹரசுதன்" என்று ஐயப்ப பக்தர்கள் இன்றுவரை கூறும் சரண கோஷத்திற்கு அடிப்படையாக இருக்கிறது.
பல குலதெய்வங்கள், பரிவார தேவதைகளுக்கான சம்ஸ்கிருத துதிகள் இன்றும் எழுந்த படியே உள்ளன என்று நீங்கள் குறிப்பிடுவது மிகச் சரி.. இணைப்பில் உள்ள படங்களைப் பாருங்கள் – முதலில் உள்ளது ஸ்ரீ கருப்ப ஸ்வாமி அஷ்டோத்தர சத நாமாவளி , பிற்கு வருவது வீரனார் என்ற காவல் தெய்வம் குறித்த ஸ்ரீமஹாவீர அஷ்டோத்தர சத நாமாவளி.
(ஸ்ரீ மஹா சாஸ்தா விஜயம், வெளியீடு: மகா சாஸ்தா சேவா சங்கம், கோவை).
கறுப்பர் அஷ்டோத்திரத்தில் "வராஹ ரக்த ப்ரியாய நம:" [பன்றிக்குருதியை விரும்புபவனே வணக்கம்] " அஜிபலி ப்ரியாய நம:" [ஆட்டு பலியை விரும்புபவனே வணக்கம் ] போன்ற நாமங்களும், ஸ்ரீம் / ஸௌம் / ஹம் ஆகிய பீஜாட்சரங்களுடன் இணைந்த நாமங்களும் கலந்தே உள்ளன.
எல்லா நாட்டாரியல் கோட்பாடுகளையும் கீழே போட்டு மிதிக்கிறது கருப்பசாமியின் குதிரை (அஸ்வாரூடாய நம:). விளாசுகிறது அவருடைய சாட்டை (கடி ஹஸ்தாய நம:) !
அன்புடன்,
ஜடாயு
அன்புள்ள ஜடாயு
தகவல்களுக்கு நன்றி
சாஸ்தா மிகப்பழைய தமிழ்நிலத்து தெய்வம். அவர் பற்றிய கதைகள் மிகத் தொன்மையானவை. கேரளத்தில் பல ஆயிரம் சாஸ்தாக்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரே சபரிமலை சாஸ்தா. பல சாஸ்தாக்கள் சபரிமலை சாஸ்தாவைவிட மிகமிகப்பழையவை.
சபரிமலை சாஸ்தா கோயிலின் வழிபாடு தாந்த்ரீக விதிகளின் அடிப்படையில் அமைந்தது. அர்ச்சனை முறை சென்ற நூற்றாண்டில்தான் வந்தது. அப்போதுதான் சம்ஸ்கிருத சுலோகங்கள் உருவாகி வந்தன. அதையே நான் குறிப்பிட்டிருந்தேன்.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
காந்தியும் லோகியாவும்
லோகியா அவரே சொன்ன ஒரு நிகழ்ச்சி இது. அவரும் காந்தியும் குரு சீட உறவு கொண்டவர்கள். கடைசிவரை லோகியா காந்தியுடன் இருந்தார். உடைமைகளற்றவரும் அலைந்து திரிபவருமான லோகியாவுக்கு சிகரெட் புகைக்கும் பழக்கமிருந்தது. அவர் ஜெர்மனியில் படித்தபோது கற்றுக்கொண்டது அது.
காந்தி சொன்னார் 'நீங்கள் சிகரெட் பிடிப்பதை விட்டுவிடவேண்டும்'. லோகியா 'என்னுடைய தனிப்பட்ட விஷயங்களில் நீங்கள் தலையிடுவதை நான் விரும்பவில்லை' என்று பதில் சொன்னார். 'எனக்கு அப்படி பேதங்கள் ஏதுமில்லை. நான் கண்டிப்பாகத் தலையிடுவேன்.நீங்கள் சிகரெட் பிடிப்பதை விட்டுவிடவேண்டும். அது உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது'.லோகியா காந்தியுடன் வாதாடவில்லை. ஆனால் ஏற்றுக்கொள்ளவுமில்லை. காந்தி மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
[லோகியா]
கடைசியாக காந்தி இன்னொரு காரணத்தைச் சொன்னார். 'நீங்கள் சிகரெட் பிடிப்பது எளியமக்களிடமிருந்து உங்களை அன்னியப்படுத்தும். உங்களை அவர்கள் மேட்டிமைவாதியாக நினைக்க வழிவகுக்கும்' அந்தக் கோணத்தில் லோகியா யோசித்திருக்கவில்லை. அது உண்மை என்று அவர் உணர்ந்தார். சிகரெட் ஒரு குறியீடென்ற நிலையில் அப்படித்தான் பொருள் கொள்ளப்படும். சிகரெட்டை விட்டுவிட்டார்.
காந்தியையும் லோகியாவையும் புரிந்துகொள்வதற்கான அழகிய நிகழ்ச்சி இது. காந்தி அகமும் புறமும் வேறுவேறற்றவர். தான் வேறு சமூகம் வேறு என நினைக்காதவர். தன் உடல்பற்றியும் வெளியுலகம் பற்றியும் அவர் கொண்டிருந்த அக்கறை சமமானது. ஆனால் லோகியா தன் அகத்தைத் தன் சொந்த விஷயமாகக் கண்டவர், அதை ஒரு பொருட்டாக நினைக்காதவர். தன் உடலைப் புறக்கணித்தவர், தான் வாழும் உலகைப்பற்றி மட்டுமே கவலைப்பட்டவர். இருவேறு வாழ்க்கை நோக்குகள்.
அதைவிட முக்கியமாக ஒன்றுண்டு. காந்திக்கு மக்களைப்பற்றி, அவர்களின் மனம் செயல்படும் நுண்ணிய வழிகளைப்பற்றித் தெரிந்திருந்தது. லோகியாவுக்குத் தெரியவே இல்லை. அவர் சிந்தனையாளர் மட்டுமே. ஒருபோதும் அவரால் மக்களுடன் உறவாட முடியவில்லை. அந்த எளிய மக்களுக்காகவே அவர் சிந்தித்தார், அவர்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தார். ஆனால் அவர்களிடமிருந்து தொலைவில் இருந்தார். அவர்கள் அவரைப் புரிந்துகொள்ளவோ ஏற்கவோ இல்லை.
காந்தி இருக்கும்வரை லோகியா காங்கிரஸில் இருந்த சோஷலிஸ்டு குழுவின் மையக்குரலாக இருந்தார். காந்தியைத் தலைவராக ஏற்றுக்கொண்டு காந்தியுடன் ஓயாது விவாதித்துக்கொண்டு செயல்பட்டார். காந்தியின் மறைவுக்குப்பின் சோஷலிஸ்டுகள் காங்கிரஸில் இருந்து விலகிச்சென்று தனி இயக்கமாக ஆனார்கள். காங்கிரஸின் வலுவான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டார்கள். அதற்கான சூசகமாகவே காந்தியிடம் லோகியா முரண்படும் இடத்தைப் பார்க்கிறேன்.
ஆனால் இந்தியாவில் சோஷலிச இயக்கம் எங்குமே உண்மையான அரசியல் வலிமையைப் பெறவில்லை. அதன் தலைவர்களை மக்கள் அறியக்கூட இல்லை. பல்வேறு காலகட்டங்களில் இந்தியாவின் அரசியல் விடுத்த சில வெற்றிடங்களை நிரப்புவதாக மட்டுமே அதன் அரசியல் பங்களிப்பு இருந்தது. அதற்கான காரணத்தையும் அந்த நிகழ்ச்சியில் உருவகமாகக் காண்கிறேன்.
ராம் மனோகர் லோகியா இந்திய சோஷலிஸ்டு இயக்கத்தின் முன்னோடி. அதன் முதன்மை முகமும் அவரே. இந்திய சோஷலிச இயக்கத்தை ஐரோப்பியபாணி மார்க்ஸியத்துக்கும் காந்தியத்துக்கும் நடுவே நிகழ்ந்த உரையாடலின் விளைவு என்று சொல்லலாம். வன்முறை இல்லாமல் பாராளுமன்ற ஜனநாயகம் வழியாக சோஷலிச அமைப்பொன்றை நோக்கி நகர்வதற்கான அரசியலை அவர்கள் உருவாக்கினார்கள்.
சுதந்திரம் பெற்ற தொடக்க காலகட்டத்தில் இந்திய அரசியலின் ஆளும்தரப்பும் எதிர்த் தரப்பும் இடதுசாரித்தன்மையைக்கொண்டதாக அமைந்தமைக்கு எதிர்க் கட்சியாகச் செயல்பட்ட சோஷலிஸ்டுகளே பெரும்பாலும் காரணம் என்று சொல்லலாம். வலதுசாரிக் குரல் கிட்டத்தட்ட இல்லாத நிலை இங்கே உருவானதும் அதனால்தான். பின்னர் சோஷலிஸ்டுகளின் இடம் இந்திய அரசியலில் இல்லாமலானபோதுதான் வலதுசாரி அரசியல் மேலெழுந்தது.
இந்தியாவில் ஓங்கியிருந்த இடதுசாரி அணுகுமுறைதான் இந்தியச்சூழலில் ஆரம்பத்திலேயே அடிப்படை மக்கள்நலத்திட்டங்கள் சார்ந்த அணுகுமுறையை உருவாக்கியது. கல்வி, போக்குவரத்து, தொழிலாளர் நலம், சமூகநலம் சார்ந்த அக்கறைகள் கொண்ட அரசுகள் இங்கே உருவாயின. அவற்றின் முக்கியத்துவம் என்ன என்று நம்முடன் சுதந்திரம் பெற்று இடதுசாரி நோக்கு இல்லாத மதவாத, இனவாத வலதுசாரி அரசுகளை உருவாக்கிக்கொண்ட பாகிஸ்தான், பர்மா, மலேசியா,இந்தோனேசியா போன்றநாடுகளின் நிலையைப் பார்க்கையில் உணரலாம்.
இடதுசாரி அரசியலே இங்கே வலுவான தொழிற்சங்கங்களை உருவாக்கியது. இன்றும் இந்தியாவின் முக்கியமான மக்கள்சக்திகளாக அவை நீடிக்கின்றன. இன்றைய வலதுசாரிப் பொருளியல் அலையின் பெரும் ஆபத்துகள் பலவற்றில் இருந்து இந்தியாவைக் காப்பாற்றியது இந்திய அரசியலில் வலுவான எதிர்த்தரப்பாக நீடிக்கும் இடதுசாரிக்குரலே என்பது ஓர் உண்மை. இன்று இந்தியாவின் சுதந்திரப்பொருளியலில் அடித்தள மக்களுக்கான உரிமைக்குரலாக அது நீடிக்கிறது.
நேரு உருவாக்கிய 'அரசாங்க சோஷலிசம்' அதிகாரிகளிடம் கடிவாளங்களைக் கொடுத்து 'கோட்டா -பர்மிட்- லைசன்ஸ்' அரசை உருவாக்கி இந்தியத் தொழில்வளர்ச்சியைத் தேங்கவைத்தது என்பது இன்னொரு பக்க உண்மை என்றாலும் இடதுசாரி அரசியலின் பங்களிப்பு இந்தியாவின் முக்கியமான ஆக்கபூர்வ அம்சம் என்றே சொல்லலாம். அதில் சோஷலிஸ்டுகளின் இடம் முக்கியமானது.
ராம் மனோகர் லோகியா பற்றித் தமிழில் வெளிவந்துள்ள முக்கியமான நூல்,விடியல் பதிப்பக வெளியீடாக வந்துள்ள 'வாழ்வும் போராட்டமும்- ராம் மனோகர் லோகியா' . இந்நூல் முன்னர் கோவை சமுதாய பதிப்பக வெளியீடாக வந்த மூன்று நூல்களின் தொகுதி. மு. ரங்கநாதன் எழுதிய லோகியாவின் வாழ்க்கை வரலாறு, லோகியாவின் கட்டுரைகளின் தொகுதியாகிய 'சரித்திர சக்கரம்' . காந்தியையும் மார்க்ஸையும் விரிவாக ஆராயும் 'மார்க்ஸுக்குப்பின் பொருளாதாரம்'.
லோகியா உத்தரப்பிரதேசத்தில் அக்பர்பூரில் ஹீராலால் லோகியாவுக்கு மகனாக 1910 ஆம் வருடம் மார்ச் 23ல் பிறந்தார். லோகியாவின் அப்பா ஹீராலால் லோகியாவைப்போலவே அதிதீவிரமான அரசியல் செயல்பாட்டாளர். காந்தியப் போரில் ஈடுபட்டு அப்போராட்டத்துக்குச் செல்லும் வழியில் மரணமடைந்தவர். அப்போது லோகியா காந்தியப்போரில் சிறையில் இருந்தார்
மும்பையிலும் காசியிலும் கல்விபயின்ற லோகியா எப்போதுமே மிகச்சிறந்த மாணவராக இருந்தார். 1926 ல் தன் பதினாறாம் வயதில் கௌகாத்தி காங்கிரஸ் மாநாட்டைப் பார்க்கச்சென்ற லோகியாவைப் பஞ்சாபிலிருந்து வந்த காங்கிரஸார் தங்கள் குழுவில் சேர்த்துப் பிரதிநிதியாக ஆக்கினார்கள். அவரது அரசியல்வாழ்க்கை அங்கே ஆரம்பித்தது.
1929ல் லோகியா மேல்படிப்புக்காக ஜெர்மனி சென்றார். அந்த வாழ்க்கை அவருக்கு உலக அரசியல் பற்றிய தெளிவை உருவாக்கியது. அவர் அங்கேதான் சோஷலிசத்தின் அடிப்படைகளைப் புரிந்துகொண்டார். உலக சோஷலிச இயக்கத்துடன் தொடர்பு கொண்டார். முனைவர் பட்டம் முடித்துத் தன் 23 ஆவது வயதில் இந்தியா திரும்பினார்.
1933 ல் லோகியா காந்தியைச் சந்தித்தார். ஜமுனாலால் பஜாஜ் காந்தியிடம் லோகியாவைக் கூட்டிச்சென்று அறிமுகம் செய்துவைத்தார். அந்த நட்பு காந்தியின் மறைவு வரை நீடித்தது. ஆனால் லோகியா காந்தியை வழிபடவில்லை, பின் தொடரவுமில்லை. அவர் காந்தியிடம் பெருமதிப்பு கொண்டிருந்தார், இடைவெளியில்லாமல் காந்தியிடம் பேசிக்கொண்டிருந்தார். காந்தியையும் மார்க்ஸையும் சந்திக்கச்செய்ய முயன்றார் லோகியா.
இருபத்துமூன்று வயதான இளைஞராகிய லோகியாவுடன் காந்தி கொண்டிருந்த உறவைப் புரிந்துகொள்வது கடினம். அவர் லோகியாவைத் தன் மகனைப்போல நினைத்தார். மாணவரைப் போல அவருக்குக் கற்பித்தார். அதேசமயம் தோழனைப்போல நடத்தினார். அவரிடமிருந்து ஒரு மாணவராகக் கற்றுக்கொண்டும் இருந்தார்.
காந்தியைச் சந்தித்த அதே வருடம் மே 17 அன்று பாட்னாவில் ஆச்சாரிய நரேந்திரதேவா தலைமையில் அதிகாரபூர்வமாக ஒரு இந்திய சோஷலிச கட்சியை நிறுவ முடிவெடுத்தது. அதேவருடம் அக்டோபரில் மும்பையில் கட்சியின் அமைப்பு மாநாடு கூட்டப்பட்டது. சோஷலிஸ்டுகள் காங்கிரஸுக்குள்ளேயே ஒரு தனி கருத்துக்குழுவாகச் செயல்பட முடிவெடுத்தார்கள். லோகியாவின் வாழ்நாள் பணி அன்று ஆரம்பித்தது எனலாம்.
லோகியாவின் அரசியல் வாழ்க்கையை இந்நூல் விரிவாகவே விவரிக்கிறது. கோவா விடுதலைப்போராட்டம் முதலிய நேரடிப்போராட்டங்கள். அவற்றில் லோகியா காட்டிய அஞ்சாமையும் உறுதியும் அவரை ஒரு பெரும் தலைவராக நமக்குக் காட்டுகின்றன. இன்னொரு முகம் அவர் காங்கிரஸுக்குள் சோஷலிஸ்டுகளின் குரலாக ஒலித்தது. லோகியா சலிக்காமல் ஏதாதிபத்தியத்துக்கும் இந்தியப் பெருமுதலாளித்துவத்துக்கும் எதிராகச் செயல்பட்டார்
மூன்றாவது சுதந்திரத்துக்குப்பின் காங்கிரஸின் எதிர்க்கட்சியாக நேருவை எதிர்த்துச் செயல்பட்டமை. லோகியா நேருவின் சோஷலிசம் வெறும் அரசாங்கசீர்திருத்தம் மட்டுமே என நினைத்தார். அது அதிகாரிகளை மட்டுமே வலுப்படுத்துகிறது என்றார். அவர் முன்வைத்த சோஷலிசம் கிராமியப்பொருளியலை முக்கியமாகக் கருத்தில்கொண்டதாக இருந்தது. நேருவின் பொருளியல் தொடர்ந்து விவசாயிகளையும் அடித்தள மக்களையும் சுரண்டி நகரங்களை உருவாக்கக்கூடியதாக இருப்பதைச் சுட்டிக்காட்டியபடியே இருந்தார் லோகியா
ரங்கநாதன் எழுதிய வரலாற்றில் என்னைக் கவர்ந்த முக்கியமான விஷயம் காந்திமீது லோகியா செலுத்திய செல்வாக்கு. பல முக்கியமான சர்வதேச விஷயங்களில் காந்தியின் கோணத்தைத் தலைகீழாகத் திருப்பியிருக்கிறார் லோகியா. காந்தி அவர் எழுதிய பல அறிக்கைகளை லோகியா முற்றாகக் கிழித்தெறிய அனுமதித்திருக்கிறார். அவரது பல அறிக்கைகளின் முன்வடிவை லோகியாவே எழுதவிட்டிருக்கிறார். காந்தியை லோகியா கிராமிய சோஷலிசம் என்ற கருத்தியலை நோக்கித் தள்ளிக்கொண்டே செல்வதை காண்கிறோம். ஒருவேளை சுதந்திரத்துக்குப்பின் காந்தி பத்தாண்டுக்காலம் வாழ்ந்திருந்தாரென்றால் அவர் லோகியாவின் முகாமின் பெரும் சக்தியாக இருந்திருப்பாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.
அதைப்போல லோகியா காந்தியால் தீவிரமாக மாற்றமடைந்துகொண்டே இருப்பதை இந்நூல் காட்டுகிறது. ஐரோப்பாவில் வன்முறைசார்ந்த அரசியலைக் கற்றுத்திரும்பிய லோகியா வன்முறை அரசியலை முழுமையாகக் கைவிடுகிறார். நூற்றுக்கணக்கான சமூக ஆற்றல்கள் அதிகாரத்துக்காக மோதிக்கொள்ளும் ஒரு பெருவெளியே அரசியல் என்றும் அங்கே வன்முறையற்ற திறந்த உரையாடலே ஆக்கபூர்வமான மாற்றத்தைக் கொண்டு வரும் என்றும் புரிந்துகொள்கிறார்.
காந்தியின் கடைசிக்காலத்தில் லோகியாதான் அவருடன் இருக்கிறார். வன்முறை கட்டவிழ்ந்த கல்கத்தா தெருக்களில் லோகியா காந்தியுடன் உயிரைத் துச்சமாக நினைத்து இறங்கிச்சென்று அமைதியை உருவாக்க முயல்கிறார். காந்தியின் பணி இரண்டாகப் பிளந்த வானத்தை ஒட்டவைக்க நினைப்பது போல இருந்தது என நினைக்கும் லோகியா மெல்லமெல்ல அந்த மருந்து வேலைசெய்வதைக் காண்கிறார்
கல்கத்தாவில் வன்முறையாளர்களிடமிருந்து ஆயுதங்களைத் திரும்பப்பெற காந்தி காட்டிய வழியில் லோகியா செய்யும் துணிச்சலும் தியாகமும் நிறைந்த முயற்சி ஒரு காவியநிகழ்வு போலிருக்கிறது. வன்முறையாளர்கள் நடுவே தன்னந்தனியாகச் செல்கிறார், அவர்களிடம் மனச்சாட்சியின் குரலில் பேசுகிறார். அவர்களை வென்று ஆயுதங்களைப் பெற்று கொண்டுவந்து காந்தி தங்கியிருந்த இடிந்த மாளிகையில் குவித்துவிட்டுத் தூங்கச்செல்லும் அந்த இரவு லோகியாவை இன்னொரு காந்தியாக நமக்குக் காட்டுகிறது.
1948ல் காந்தி லோகியாவைக் கூப்பிட்டனுப்பினார். காங்கிரஸ் காந்தியின் கையில் இருந்து நழுவிக்கொண்டிருப்பதை அவர் உணர்ந்துகொண்டிருந்த நாட்கள் அவை. 'நீங்கள் கட்டாயம் வாருங்கள், காங்கிரஸ் பற்றியும் சோஷலிஸ்டுக் கட்சிபற்றியும் நான் பேசவேண்டியிருக்கிறது' என்று காந்தி சொன்னார். அதற்கு மறுநாள் ஜனவரி 30 அன்று லோகியா காந்தியைச் சந்திக்க மும்பையில் இருந்து கிளம்பினார். செல்லும்போதே காந்தி கொல்லப்பட்ட தகவல் அவருக்குக் கிடைக்கிறது.
1967இல் லோகியா மறைந்தார். நேரு யுகம் என அழைக்கப்பட்ட காலகட்டம் ஒருவகையில் லோகியா யுகமும் கூட என இந்நூல் வாதிடுகிறது. லோகியாவை இந்திய நவீன அரசியல் சிந்தனையின் மிக முக்கியமான ஒரு வரலாற்று நிகழ்வு என சித்தரிக்கிறது.
நூலின் இரண்டாம்பகுதியில் எஸ்.சங்கரன் பி.வி சுப்ரமணியம் இருவரும் மொழியாக்கம் செய்த சரித்திர சக்கரம் என்ற நூல் உள்ளது. இந்நூலில் லோகியா விவாதிப்பவை சோவியத் பாணி மார்க்ஸியம் தோல்வியடைந்து மார்க்ஸியத்துக்கு ஜனநாயக வடிவம் ஒன்று இருக்கமுடியுமா என்ற வினா எழுந்துள்ள இந்தக்காலகட்டத்தில் மிகமிக முக்கியமானவை. இங்கே மார்க்ஸிய செயல்திட்டத்தை நிராகரிக்கும் லோகியா மார்க்ஸிய வரலாற்றுவாதத்தை விரிவாக உலக அரசியலுக்கும் உலகப்பொருளியலுக்கும் பொருத்திப்பார்ப்பதைக் காணலாம்
மூன்றாவது பகுதி பி.வி.சுப்ரமணியம் மொழியாக்கத்தில் மார்க்ஸுக்குப்பின் பொருளாதாரம் என்ற தலைப்பில் லோகியா எழுதிய கட்டுரைகள். காந்தியப்பொருளியலில் உள்ள பல அம்சங்களை லோகியா ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாகக் காந்தியின் தர்மகர்த்தா கொள்கை, காந்தியின் பாரம்பரியவாதம் போன்றவற்றை. ஆனால் கிராமியப்பொருளியலை மேம்படுத்தும் ஒரு சோஷலிச அரசியலுக்காக அவர் வாதாடுகிறார். ஒருங்கிணைந்த உற்பத்தி பெருந்தொழில் ஆகியவற்றுக்கு மாற்றாக சிறிய அளவில் வட்டார ரீதியாக உருவாகி வரும் கிராமிய உற்பத்திப் பொருளியலை முன்வைக்கிறார்.
லோகியாவையும் அவரது சிந்தனைகளையும் விரிவாக அறிந்துகொள்ள உதவியான அரிய நூல் இது
[வாழ்வும் போராட்டமும்-டாக்டர். ராம் மனோகர் லோகியா,விடியல் பதிப்பகம்]
தொடர்புடைய பதிவுகள்
கடிதங்கள்
பாரதி விவாதம் 8 – விமர்சனம் எதற்காக ?
காந்தி-சுபாஷ் , கடிதம்
கேள்விகள்
காந்தி,அனந்தமூர்த்தி
காந்தியின் எதிரிகள்
உப்பும் காந்தியும்
உப்பு,மேலும் கடிதங்கள்
உப்பு-கடிதங்கள்
உலகின் மிகப்பெரிய வேலி
November 15, 2011
தமிழும் திராவிடமும்
திண்ணை இதழில் ஆய்வாளர் அ.கணேசனும் தி.ராமச்சந்திரனும் எழுதியிருக்கும் கட்டுரை தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும் முக்கியமான ஒன்று. ஆ.இரா.வேங்கடாசலபதி காலச்சுவடு இதழில் எழுதியிருக்கும் கட்டுரை ஒன்றுக்கான பதில் அது.
சென்ற பல ஆண்டுகளாகத் தமிழில் முன்வைக்கப்பட்டு வரும் ஒரு கருத்து தமிழகம் மீது பிராமண- வைதீக ஆதிக்கம் மேலோங்கியிருந்தமையால் 'தன்னியல்பாக' 'அடித்தள மக்களால்' உருவாக்கப்பட்ட ஒர் அரசியலெழுச்சிதான் திராவிட இயக்கம் என்பது. திராவிட இயக்கம் தமிழைக் காக்கவே செயல்பட்டது என்னும் மாயை. இதற்கு மாறானவற்றை எழுதவோ பேசவோ ஆளில்லாமல் இருந்தது.
இன்று திராவிட இயக்கம் எவரால் எந்த அரசியல் நோக்குடன் கட்டமைக்கப்பட்டது, அதன் பயன்கள் எங்கெல்லாம் சென்று சேர்ந்தன என்பது இன்று மிக விரிவாகப் பேசப்படுகிறது. ஒருபக்கம் தலித் ஆய்வாளர்களால்,இன்னொரு பக்கம் சமநிலை நோக்குள்ள நவீன வரலாற்றாசிரியர்களால்.
அவ்வாறு ஆய்வுகள் எழும்போதெல்லாம் அவற்றை எளிய சாதியமுத்திரைகளைக் குத்தித் தாண்டிச்செல்வதே திராவிட இயக்க ஆய்வாளர்களின் வழக்கம். பொதுவாகவே அவர்களுடையது பிறரைக் குற்றம்சாட்டித் தாக்குதல் தொடுப்பதனூடாகத் தங்களைக் காத்துக்கொள்ளும் உத்திதான். இன்று அந்த உத்திகள் அவர்களுக்கு உதவாமலாகிவிட்டிருக்கின்றன. அடிப்படையான வலுவான வினாக்கள், திட்டவட்டமான ஆதாரங்களுடன் எழுந்து வந்தபடியே இருக்கின்றன.
அதை மீண்டும் இக்கட்டுரையில் காண்கிறேன்
தொடர்புடைய பதிவுகள்
திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 2
கல்வாழை- நாத்திகம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்…3
கல்வாழை [ நாத்திகவாதம் தமிழகத்திலும் கேரளத்திலும்] 2
திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்? 2
திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்?-1
மிஷனரி வரலாறு, வாஞ்சி, சக்கிலியர்
வாஞ்சி,ஆஷ்,வேங்கடாசலபதி
காலச்சுவடுக்கு தடை
காலச்சுவடு நூறாவது இதழ்
திராவிட இயக்கம்,இந்துத்துவம்- இன்னொரு கடிதம்
திருச்சியில் பேசுகிறேன்…
திருச்சியில் வரும் நவம்பர் 19 அன்று பேசுகிறேன்.
எழுத்து பதிப்பகத்தின் தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சனக் கூட்டம் ராணிப்பேட்டை, சென்னை, மதுரை,சிவகங்கை,சேலம், புதுச்சேரி, இலங்கையில் ஹட்டன், கண்டி, யாழ்ப்பாணம், கொழும்பு நகர்களைத் தொடர்ந்து திருச்சியில் நடைபெறுகிறது. இதை ஒரு இயக்கமாக முன்னெடுப்பதனால் அலெக்ஸின் நண்பராக நான் இதில் தொடர்ந்து பங்கெடுக்கிறேன்
19 -11 -11 அன்று நிகழவிருக்கும் தலித் நூல்வரிசை விமர்சனக் கூட்டத்தில் பேசுகிறேன்
தலித் நூல் வரிசை அறிமுகக் கூட்டம்
நாள் : 19-11-2011
இடம்: ஓட்டல் அருள் புகைவண்டி நிலையம் அருகே திருச்சி
நேரம் மாலை 5 மணி
பேச்சாளர்கள்
பேரா. அந்தோணி குரூஸ்
குணசேகரன்
பேரா ஸ்டாலின் ராஜாங்கம்
ஜெயமோகன்
தொடர்புடைய பதிவுகள்
பாண்டிச்சேரியில் பேசுகிறேன்
சித்ரா
அ.முத்துலிங்கம் எழுதிய சிறிய கதை பவித்ரா. அதை பாலுமகேந்திராவின் மாணவர் விக்னேஸ்வரன் விஜயன் படமாக்கியிருக்கிறார். ஐந்து நிமிட குறும்படம்
நிழல்
தொடர்புடைய பதிவுகள்
அத்வைதம் – ஒரு படம்
டியூலிப் மலர்கள்
நாஞ்சில்நாடன் பாராட்டுவிழா பதிவுகள்
அடையாளங்கள்
ஆ.மாதவனுக்கு விருது: அ முத்துலிங்கம்
கடிதங்கள், இணைப்புகள்
கடிதங்கள்
அ.முவின் நாட்கள்
துளை
அ.முத்துலிங்கத்துக்கு வயது ஆறு
November 14, 2011
நாஞ்சில் மகள் திருமணம்
நவம்பர் பன்னிரண்டு பதிமூன்றாம் தேதிகளில் நாஞ்சில்நாடனின் மகள் சங்கீதாவின் திருமணம். சங்கீதா ஒரு மருத்துவர் மயக்கவியல் நிபுணர். மணமகனும் மருத்துவர்தான். கிட்டத்தட்ட ஓர் இலக்கியவிழா என்றே சொல்லலாம். நஞ்சில்நாடன் எல்லாருக்கும் வேண்டியவர். எல்லாத் தரப்புக்கும் நெருக்கமானவர். ஆகவே எழுத்தாளர்கூட்டம்.
[image error]
12 ஆம்தேதி காலையிலேயே என் வீட்டுக்கு யுவன் சந்திரசேகர் வந்துவிட்டான். விஜயராகவன் ஈரோட்டில் இருந்து வந்தார். அவர்களுடன் என் மகனும் சேர்ந்து பறக்கைக்கும் வட்டக்கோட்டைக்கும் சென்று வந்தார்கள். பதினொரு மணிக்கு தண்டபாணி வந்தார். அதன்பின்னர் நண்பர்கள் பலர்
12 ஆம்தேதி மாலை வரவேற்பு. நெடுநாட்களுக்குப்பின் பல நண்பர்களைப்பார்த்தேன். சு.வேணுகோபாலுக்கு அந்த அளவுக்கு நரை வந்திருப்பது வருத்தமாக இருந்தது. சூத்ரதாரி [எம்.கோபாலகிருஷ்ணன்] யைக் கொஞ்சம் இடைவேளைக்குப்பின் கொஞ்சம் குண்டாகப் பார்க்க முடிந்தது. சுதீர் செந்தில் [உயிரெழுத்து] வந்திருந்தார். வசந்தகுமார், க.மோகனரங்கன் வழக்கம்போல வந்து அமைதியாக இருந்தார்கள். சென்னையில் இருந்து சிறில் அலெக்ஸ் வந்திருந்தார். நானும் குழந்தைகளும் சிறில் அலெக்ஸும் விஜயராகவனும் ஒரு காரில் சென்றோம்.
பொதுவாக நல்லகூட்டம். என்ன சிக்கலென்றால் நாதஸ்வர தவில் ஓசைதான். நல்ல நாதஸ்வரம். ஆனால் ஒரு கூடத்துக்குள் ஒலிப்பெருக்கி வைத்து ஆளுயரப் பெட்டிகளின் வழியாகத் தவிலைக் கேட்பதென்பது சிரமமாக இருந்தது. அத்துடன் இன்று தவில் மிகமிக மாறிவிட்டது. முன்பெல்லாம் தவில் மரத்தால் செய்யப்பட்டு வாரால் இழுத்துக்கட்டப்பட்டுக் கட்டையால் இறுக்கப்பட்டு வாசிக்கப்படும். கொஞ்சம் வாசித்ததும் 'பதம்வரும்' என்பார்கள். திம் திம் என மென்மையான ஒரு முழக்கம் உருவாகும். அதுவே தவிலின் இன்னிசை. தவில் நாதஸ்வரம் இரண்டுமே பெரிய திறந்தவெளிகளில் நெடுந்தூரம் கேட்பதற்காக வடிவமைக்கப்பட்டவை. ஆகவே அவற்றுக்கு ஒலிபெருக்கி தேவையில்லை
ஆனால் இன்று தவிலை உள்ளே இரும்பு வளையம் கொடுத்துச் செய்கிறார்கள். இழுத்துக்கட்ட திருகியையும் மரையையும் பயன்படுத்துகிறார்கள். எருமைத்தோல் போட்டு நன்றாக இறுக்கி வாசிக்கிறார்கள். ஓசை டண் டண் என செவிகளில் அறைகிறது. தலைக்குள் அதிர்கிறது. கூடவே ஒலி பெருக்கி வேறு. பலசமயம் அவர்களே மைக் கொண்டு வருகிறார்கள். தவிலுக்குமுன்னால் கூட மைக் தேவை என வித்வான் அடம்பிடிக்கிறார். நாதஸ்வரம் ஒலிக்கும் நேரத்தை விடப் பலமடங்கு தவிலை வாசிக்கிறார்கள்.
விளைவாக எல்லாத் திருமணங்களிலும் நாதஸ்வரம் அந்த இனிய நிகழ்ச்சியின் கொண்டாட்டநிலையை இல்லாமலாக்குகிறது. நட்பான உரையாடல் முகமன் எதற்குமே வாய்ப்பில்லாமல் செய்கிறது. நம் திருமண நிகழ்ச்சிகளில் தவில் நாதஸ்வரத்தைக் கட்டுப்படுத்தவேண்டிய நேரம் வந்துவிட்டது
[image error]
அதிலும் நாஞ்சில்நாடனின் வீட்டுத்திருமணமென்பது பல துறைகளில் முக்கியமானவர்கள் வந்து நெடுங்காலம் கழித்து சந்தித்துப்பேசும் தருணம். ஒரு முகமன் வார்த்தையைக்கூடக் காதுக்குள் குனிந்து உரத்த குரலில் கூவவேண்டும் என்ற நிலை சரியாகப்படவில்லை.நான் பல மதிப்புக்குரிய எழுத்தாளர்களை, நண்பர்களை சந்தித்தாலும் போதிய அளவுக்கு மரியாதையாகப் பேசமுடிந்ததா என்பது ஐயமே. உதாரணமாக பாரதிமணி வந்திருந்தார். நாலைந்து சொற்களே பேசமுடிந்தது.
அன்றுமாலை சிறிலும் விஜயராகவனும் என் வீட்டில் தங்கினர். இரவு மூன்றுமணி வரை பேசிக்கொண்டிருந்தோம். 13 ஆம்தேதி காலை பத்துமணிக்குத் திருமணம். இன்னும் பெரிய கூட்டம். விருந்தினர் பட்டாளம். நானறிந்து இந்த அளவுக்கு எழுத்தாளர்கள் பங்கெடுத்த திருமணம் சமீபத்தில் இல்லை. அ.மார்க்ஸைப் பார்த்தேன், தூரத்தில். கெ.எம்.விஜயனுடன் கொஞ்சநேரம் பேசினேன். தங்கர் பச்சான், ஞான ராஜசேகரன், அழகம்பெருமாள் என திரைத்துறையாளர்கள். மணல்வீடு ஹரிகிருஷ்ணனை சந்தித்தேன். பெங்களூரில் இருந்து ஜடாயு வந்திருந்தார். பாவண்ணன், மகாலிங்கம் வந்திருந்தார்கள். கோவையில் இருந்து நிறையப்பேர் முந்தையநாளே வந்திருந்தார்கள். அருட்கவி ரமணன், சௌந்தர் அண்ணா, ரவீந்திரன், மரபின்மைந்தன் முத்தையா, விஜயா வேலாயுதம் என பலரை சந்தித்தேன்.
ஆ.மாதவன் வந்திருந்தார். நான் அவர் அருகேதான் இருந்தேன். அதிகம் பேசமுடியவில்லை. கடையை மூடிவிட்டதாகவும் மகள் வீட்டில் இருப்பதாகவும் சொன்னார். வண்ணதாசனைப் பார்த்தது மிக நிறைவூட்டும் அனுபவமாக இருந்தது. முந்தையநாள்தான் அறம் தொகுதி வாசித்து முடித்தேன் என்றார். கதைகளைப்பற்றி மிகுந்த உத்வேகத்துடன் பேசினார். கண்களில் ஈரத்துடன் அவர் என்னை அணைத்துக்கொண்டு 'நல்லா இருய்யா…வேறென்ன சொல்ல' என்று சொன்னபோது அது என் முன்னோடிகளின் ஆசி போலவே தோன்றியது. ஆம், நான் எழுதியிருக்கிறேன் என நினைத்துக்கொண்டேன்.
நாஞ்சில்நாடன் வீட்டுத் திருமணம் என்பதனாலேயே சாப்பாடு பற்றி மிகையான எதிர்பார்ப்பு சூழலில் நிலவியது. ஆனால் சாப்பாடு அந்த எதிர்பார்ப்பைவிட நன்றாக இருந்தது என்றே சொல்லவேண்டும். குறிப்பாக நெடுநாள் கழித்து, சீசன் அல்லாத சமயத்தில், கிடைத்த சக்கைப்பிரதமன். [பலாப்பழபாயசம்]. அன்னாசிபழ புளிசேரி போன்றவை. மிக விரிவான விருந்து.
விருந்து ஏற்பாடு நாஞ்சில்நாடனின் நெருங்கிய நண்பரான ஆரியபவன் அதிபர் ரமேஷ் அவர்களுடையது. ரமேஷ் ஈஷா ஜக்கி வாசுதேவின் பக்தர். நாகர்கோயிலில் இன்று மிகச்சிறப்பான உணவகம் அதுவே. அவரைத் தனியாகக் கூப்பிட்டுதான் பாராட்டவேண்டும்.
ஆனால் எந்தப் பதார்த்தம் எது என எவராவது விளக்கியிருக்கலாம் என்றார்கள் சாப்பிட்ட செந்தமிழ்நாட்டு மக்கள் சிலர். எஸ்.ஐ. சுல்தான் மனைவியுடனும் தம்பியுடனும் வந்திருந்தார். தம்பியும் நல்ல வாசகர் என்று தெரிந்துகொண்டேன். புளிசேரி என்பது நாஞ்சில்நாடனின் கதாநாயகிகளில் ஒருவர் அல்ல , ஒரு உணவுவகைதான் என தெரிந்துகொண்டதாகச் சொன்னார்.
நாஞ்சில்நாடன் களைத்து ஆனால் மகிழ்ந்த முகத்துடன் அழகாக இருந்தார். முந்தையநாள் தூங்கவே இல்லை என்றார். பெண்ணருகே நின்றுகொண்டிருக்கும்போது அவர் ஒரு கனவில் நிற்பது போல் இருந்தது. எப்போதுமே குழந்தைகள் குடும்பம் என இணைந்திருக்கும் அன்பான தந்தை அவர். அவரது மனநிலையை என்னால் ஊகிக்க முடிந்தது. நிறைந்த மனத்துக்குள் எந்தத் தகவலும் உள்ளே நுழைய இடமிருந்திருக்காது.
சங்கீதாவுக்கும் மணமகனுக்கும் வாழ்த்துக்கள் சொல்லித் திரும்பினோம். ஜடாயுவும் சிறிலும் கடலூர் சீனுவும் விஜயராகவனும் சென்னையில் இருந்து வந்த இளம்நண்பர் பிரகாஷும் வீட்டுக்கு வந்தார்கள். நீலகண்டன் அரவிந்தன் வீட்டுக்கு வந்தார். மாலை ஆறுமணி வரை பேசிக்கொண்டிருந்தோம். ஒவ்வொருவராகச் சென்றார்கள். நானே ஒரு திருமணத்தை நடத்தி முடித்த நிறைவை அடைந்தேன்.
மணமக்களுக்கு எல்லா நலன்களும் அருளப்படுவதாக.
படங்கள்1 , படங்கள் 2
மேலும் புகைப்படங்களைக் காண
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
நாட்டார் தெய்வங்களும் சம்ஸ்கிருதமும்
அன்புள்ள ஜெ,
வணக்கம். உங்களின் வலைத்தளத்தில் "நான் இந்துவா?" என்ற கேள்விக்கான பதிலைப் படித்தேன். உணர்ச்சிவசப்பட வைத்தது. முக்கியமாக "உங்களுக்குக் கருப்பசாமி அல்லது சுடலைமாடனைப்பற்றி என்ன தெரியும்? ஏதாவது தெரிந்துகொள்ள முயன்றிருக்கிறீர்களா?" என்ற வரிகள் ஓங்கி மண்டையில் அடித்தாற் போல இருந்தது
உங்களின் பல கட்டுரைகளில் பதில்களில் "தெரிந்துகொள்ள முயன்றிருக்கிறீர்களா" என்று அடிக்கடி கேட்கிறீர்கள். உங்களுடைய இந்தக் கேள்வி என்னை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது. தெரிந்து கொள்ளத் தூண்டுகிறது. நாற்பத்திரண்டு வயதில்தான் தெரிந்து கொள்ள வேண்டுமென ஆர்வம் பிறப்பதை நினைத்து வெட்கமாக இருக்கிறது. ஆனால் இப்போதாவது ஆர்வம் வருகிறதே என்று ஒருபக்கம் சந்தோஷமாக உள்ளது. எனக்குள் தேடலைத் தூண்டியது நீங்கள் தான். என் மனமார்ந்த நன்றி. உங்களை நேரில் சந்தித்துப் பேசியபோது ஏதேதோ வீணாகப் பேசி வாய்ப்பைத் தவற விட்டு விட்டோமே எனத் தோன்றுகிறது.
நீங்கள் இந்து மதம் பற்றிக் கூறும்போது கோவிலில் பிராமணர்கள் ஓதும் சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் பற்றி எதுவும் கூறவில்லை. இது எப்படி வந்தது. எல்லா தெய்வங்களும் நாட்டார் தெய்வங்களாகத்தான் ஆரம்பித்தது என்றால் இந்த ஸ்லோகங்கள் எப்படிப் பிறந்தது? இது ஏதோ அறிவு பூர்வமான விஷயம் போலத் தோன்றுகிறது. ஏன் இவை அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருக்கிறது? தமிழில் எதுவும் இல்லை.
இந்த சைவம் அசைவம் என்ற பிரிவு ஜாதியை சார்ந்து வந்ததா இல்லை மதத்தை வைத்து வந்ததா? அனைத்து நாட்டார் தெய்வங்களுக்கும் புலால் படைக்கிறார்கள் என்றால் எல்லோரும் ஒரு காலத்தில் அசைவமாகத்தானே இருந்திருக்க வேண்டும்? பிறகு எப்போது இவர்கள் சைவமாக மாறினார்கள்?
ஒருவேளை இதற்கான பதிலை நீங்கள் ஏற்கனவே கூறியிருந்தால் அதற்கான சுட்டியை மட்டும் அனுப்பவும்.
நன்றி
அருள்
அன்புள்ள அருள்,
நன்றி.
பெரும்பாலும் எதையும் தெரிந்துகொள்ளாமல் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் இல்லாமல் எளிய மனப்பதிவுகள், செவிவழி அறிதல்களை நம்பியே நம்மில் பலர் பேசுகிறார்கள் . ஒவ்வொருமுறையும் அடிப்படைத்தகவல்களைச் சொன்னபின்னரே பேசவேண்டியிருக்கிறது.
தமிழில் எப்போது நமக்கு எழுதப்பட்ட நூல்கள் கிடைக்கின்றனவோ அப்போதே சம்ஸ்கிருதத்தின் செல்வாக்கையும் அறிகிறோம். இந்தியாவில் தமிழல்லாத எல்லா மொழிகளும் சம்ஸ்கிருதத்தின் செல்வாக்கால் இன்றைய வடிவம் பெற்றவைதான். சம்ஸ்கிருதமில்லாமல் செயல்பட முடியாதவையும்கூட. அந்த செல்வாக்கால் அவை அடிமைப்படவோ அழியவோ இல்லை, மாறாக வளமும் வளர்ச்சியுமே பெற்றுள்ளன. பிரம்மாண்டமான ஒரு செவ்வியல் மரபையும் மாபெரும் சொற்களஞ்சியத்தையும் அவை சம்ஸ்கிருதம் வழியாகப் பெற்றன.
இந்த செல்வாக்கு என்பது ஓர் உரையாடலின் விளைவே. சம்ஸ்கிருதத்தில் இருந்து இந்தியமொழிகள் பெற்றுக்கொண்டவை அனைத்துமே பிற வட்டாரமொழிகளில் இருந்து சம்ஸ்கிருதம் பெற்றுக்கொண்டவைதான். சம்ஸ்கிருதத்துக்கு சொற்களை, இலக்கியத்தைக் கொடுக்காத எந்த மொழியும் நம்மிடம் இல்லை. சம்ஸ்கிருதம் வழியாக இந்திய வட்டாரமொழிகள் ஒன்றுடனொன்று உரையாடி வளர்ந்தன என்பதே உண்மை
இதை இங்கே வந்த ஆங்கிலேய சிந்தனையாளர்கள் ஒரு ஆதிக்கம் என்று கதை விட்டு அதை நம்பும் [ அல்லது நம்பி வாழும் ] அறிவுஜீவிப்பட்டாளம் ஒன்றையும் உருவாக்கி விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்தியாவின் முக்கியமான அசல் சிந்தனையாளர்களில் பெரும்பாலானவர்கள் அந்த எளிமைப்படுத்தலை நிராகரிக்கிறார்கள்.
பலமொழிகள் புழங்கும் எந்த ஒரு சமூகச் சூழலிலும் பல்வேறு வரலாற்றுக்காரணங்களால் ஏதாவது ஒருமொழி இணைப்பு மொழியாக மெல்லமெல்ல உருவாகிறது. பெரும்பாலும் பிறமொழிகளில் இருந்து சொற்களை எடுத்துக்கொண்டு வளர்வதற்குரிய விரிவான இலக்கண அமைப்பை உருவாக்கிக் கொண்ட மொழிகளே அவ்வாறு ஆகின்றன. அல்லது அதிகமாக இடப்பெயர்ச்சி செய்யும் மக்களின் மொழிகள்.
உதாரணமாக வடகிழக்கு மாநிலங்களில் நூற்றுக்கணக்கான பழங்குடி மொழிகள் உள்ளன. ஆனால் சென்ற இருபத்தைந்தாண்டுகளில் நேபாள மொழி பொதுவான இணைப்பு மொழியாக ஆகியிருப்பதை அங்கே சென்றபோது காணமுடிந்தது. நேபாள மொழியில் பழங்குடிமொழியின் சொற்கள் கலந்து அது பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது. முக்கியமான காரணம் நேபாள வணிகர்களே வடகிழக்கு மாநிலத்தின் மலைக்கிராமங்கள் தோறும் செல்லும் வணிகர்கள் என்பதுதான்.
இவ்வாறு உருவாகும் இணைப்புமொழி ஆரம்பத்தில் அவை ஒரு இனம் அல்லது நிலத்தின் மொழியாக இருக்கும். ஆனால் வளர்ச்சிப்போக்கில் அவை அந்த அடையாளங்களையும் எல்லைகளையும் மீறி விரிந்துவிடும். எந்தக் குழுவுக்கும் இடத்துக்கும் உரிமை கொண்டாட முடியாததாக ஆகிவிடும். அதன் மொழிக்களஞ்சியமே பலநூறு மொழிகளில் இருந்து பெறப்பட்டதாக இருக்கும். ஆங்கிலம் உலகமொழியாக ஆனது அவ்வாறுதான்.
சம்ஸ்கிருதமும் அப்படிப்பட்ட மொழி. அதன் நெகிழ்வான இலக்கண அமைப்பு ஏராளமான பிற சொற்களை மட்டுமல்ல பிறமொழி வழக்குகளைக்கூட எடுத்துக்கொள்ளக்கூடியது. இரண்டாயிரம் வருடங்களாக சம்ஸ்கிருதம் எந்த இனத்துக்கும் நிலத்துக்கும் உரிய மொழி அல்ல. புராதன வேத மொழியில் இருந்து வளர்ந்து விரிந்து எல்லா இந்திய மொழிகளையும் இணைப்பதாக ஆகியது. பிறமொழிகளுடன் உரையாடி அது வளர்ந்தது. அது பிறமொழிகளைப் பாதித்து புதிய மொழிகளை உருவாக்கியது.
இன்றைய சம்ஸ்கிருதம் வழிபாட்டுக்கும் அறிவுச்செயல்பாட்டுக்கும் மட்டும் உரிய மொழியாகக் கட்டமைக்கப்பட்டது. செம்மையாக செய்யப்பட்டது என்பதே சம்ஸ்கிருதம் என்ற சொல்லின் பொருள் .
இந்துமதமும் சம்ஸ்கிருதமும் இணையாகவே வளர்ந்தவை. இந்துமதம் என்பது ஒரு மாபெரும் தொகுப்புமதம். அதன் தொகுப்புமொழியாக சம்ஸ்கிருதம் உருவெடுத்தது. நாமறியும் வரலாற்றுக்காலகட்டத்துக்கு முன்னரே இது நிகழ்ந்துவிட்டது. இந்து ஞானமரபின் எல்லாப் பிரிவுக்கும் சம்ஸ்கிருதமே மூலநூல் மொழி. ஆத்திகக் கொள்கைகளுக்கும் சரி நாத்திகக் கொள்கைகளுக்கும் சரி.
இவ்வாறு சம்ஸ்கிருதம் இணைப்புமொழியாக இருப்பதனால்தான் அது இந்து வழிபாடுகளுக்குரிய தனி மொழியாக ஆகியது. எல்லா மதங்களும் அவ்வாறு பொது வழிபாட்டுமொழி கொண்டவையே. உலகமெங்கும் அரபி மொழிதான் இஸ்லாமின் வழிபாட்டு மொழி. லத்தீன்தான் கத்தோலிக்கர்களின் வழிபாட்டு மொழி.
ஏனென்றால் மதம் நாடு, மொழி சார்ந்த எல்லைக்குள் நிற்பதல்ல. ஆந்திரத்து பக்தர் கன்யாகுமரியில் வழிபடவேண்டும். கன்யாகுமரி பக்தர் பத்ரிநாத்தில் வழிபடவேண்டும். ஆகவேதான் ஒரு பொது வழிபாட்டுமொழிக்கான தேவை ஏற்பட்டது. சம்ஸ்கிருதம் அந்த இடத்தை அடைந்து பல நூற்றாண்டுகளாகின்றது. அதை ஓர் ஆதிக்கம் என்றல்ல ஒரு மகத்தான தொகுப்புமுறை என்றே நான் நினைக்கிறேன்.
அந்தத் தொகுப்பு வன்முறைமூலம் நிலைநாட்டப்பட்டதல்ல. பற்பல நூற்றாண்டுக்காலம் பல தளங்களில் நிகழ்ந்த நீடித்த அறிவார்ந்த விவாதம் மூலம் உருவானது. அது ஒருவழிப்பாதை அல்ல. கொண்டும் கொடுத்தும் உருவான உரையாடல். அந்த உரையாடல் மூலம்தான் இந்து மதத்தின் இன்றைய பன்மைத்தன்மை உருவானது. எதையும் உள்ளடக்கும் நெகிழ்வுத்தன்மை உருவானது.
அந்த உரையாடலும் தொகுப்பும் நிகழ்ந்தமையால்தான் இத்தனை ஆயிரம் இனக்குழுக்களும் இவ்வளவு மொழிகளும் கொண்ட இந்த மாபெரும் நிலப்பரப்பு உலகின் பல நாடுகளில் இன்றும் நிகழ்ந்துவரும் மாபெரும் இனமோதல்கள் நிகழாது ஒரு பண்பாட்டுத்தேசியமாக இருந்தது, அரசியல் தேசியமாக நீடிக்கிறது.
இவ்வாறாக இந்து மதத்தின் மையப்போக்கில் சம்ஸ்கிருதம் வழிபாட்டுமொழியாக உள்ளது. ஒரு தெய்வம் இந்து மையப்போக்குக்குள் நுழையும்போதே சம்ஸ்கிருதத்தில் அதற்கான மந்திரங்களும் தோத்திரங்களும் உருவாகிவந்துவிடுகின்றன. வழிபாட்டுக்கு அது தேவையாகிறது.
சென்ற நூறாண்டுக்காலத்துக்குள்தான் ஐயப்பனுக்கு சம்ஸ்கிருத தோத்திரங்கள் உருவாயின. அதன்பின்னர்தான் கேரள நாட்டார் தெய்வமான ஐயப்பன் இந்தியாவெங்கும் , உலகமெங்கும் இந்துக்கள் வழிபடும் தெய்வமாக ஆகியது. சபரிமலையில் மலையாளம் மட்டுமே ஒலித்திருந்தால் இத்தனை தமிழர்களும் ஆந்திரர்களும் பிகாரிகளும் அங்கே ஒன்றாக நின்று வழிபட்டிருக்க முடியாது.
பெரும்பாலான கேரள பகவதி கோயில்களில் இந்த சம்ஸ்கிருதமயமாக்கல் அரைநூற்றாண்டில் நிகழ்ந்தது. தமிழக மாரியம்மன்களுக்கு சம்ஸ்கிருத வழிபாடு கண்ணெதிரே உருவாகிக்கொண்டிருக்கிறது. சென்ற இருபதாண்டுக்காலத்துக்குள் சுடலைமாட சாமிக்கு சம்ஸ்கிருத சுலோகங்கள் உருவாகிவந்திருக்கின்றன. இந்து மதம் தன்னைத் தொகுத்துக்கொண்டு விரிவடையும் வழிமுறை இதுதான்.
அதாவது ஒரு நாட்டார் தெய்வம் ஒரு குலக்குழுவுக்குள் ஓர் மொழிச்சூழலுக்குள் ஒரு வட்டாரத்துக்குள் மட்டும் வழிபடப்படும்போது அதற்கு வட்டார மொழி போதுமானதாக உள்ளது. அது உலகம் முழுக்க உள்ள அனைத்து இந்துக்களும் வழிபடும் தெய்வமாக ஆகும்போது அது சம்ஸ்கிருதம் என்ற பொதுமொழியை வழிபாட்டுமொழியாகக் கொள்ளவேண்டியிருக்கிறது.
இது தவறா சரியா என்ற விவாதம் பெரும்பாலும் பொருளற்றது. இது சிக்கலான பலநூறு காரணிகள் வழியாக வரலாறு செயல்படும் முறை. நதி தன் வழியைக் கண்டுகொள்வதுபோன்றது. சம்ஸ்கிருதத்தை அந்த இடத்திலிருந்து அகற்றவேண்டுமென்றால் நாம் வரலாற்றையே மறுபக்கம் நோக்கி சுழற்றவேண்டும்.
மேலும் அத்தகைய முயற்சிகள் எல்லாமே ஏதோ வழியில் இந்துமதம் என்ற உலகளாவிய போக்கை உடைத்து அழிக்கும் நோக்கமுள்ளவையாக உள்ளன என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அந்தப் பொதுப்போக்கிலிருந்து ஒரு வட்டார, இனம்சார்ந்த தனிப்போக்கை வெட்டிக்கொள்வதற்காகவே அவை சொல்லப்படுகின்றன. அதற்குப்பின்னால் உள்ள நோக்கம் என்பது ஆன்மீகமோ வழிபாடோ அல்ல, அரசியல் மட்டுமே.
மையத்தில் சம்ஸ்கிருத வழிபாட்டுமுறை இருப்பது பிறமொழிகளில் வழிபடுவதற்கான தடை அல்ல. எல்லா இந்திய வட்டார மொழிகளும் இந்து வழிபாட்டு மொழிகளாகவே உள்ளன. எல்லா மொழிகளிலும் பல்லாயிரம் தோத்திரங்களும் பாடல்களும் உள்ளன. அவை ஆலயங்களில் பாடப்படுகின்றன. சம்ஸ்கிருதத்தில் உள்ள எல்லா மதக்கருத்துகளுக்கும் தமிழிலும் கன்னடத்திலும் துளுவிலும் எல்லாம் மொழியாக்க வடிவம் இருக்கும். தமிழில் இல்லாத எதுவும் சம்ஸ்கிருதத்தில் இல்லை.
நாலாயிர திவ்யப் பிரபந்தமும், தேவார திருவாசகமும் எல்லாம் சம்ஸ்கிருதத்துக்கு இணையான வழிபாட்டு நூல்களாகவே சைவ வைணவ மதங்களால் தமிழகத்தில் பலநூற்றாண்டுகளாகக் கருதப்படுகின்றன, பாடப்படுகின்றன. 'கோயிலுக்குள் தமிழ் இல்லை' என்பதைப்போல அபத்தமான அப்பட்டமான பொய் வேறு இல்லை. கோயிலுக்குள் செல்லாதவர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் பொய்யைக் கோயிலுக்குச் செல்பவர்கள் எப்போதுமே பொருட்படுத்தியதில்லை. ஏனென்றால் எல்லா ஆலயங்களிலும் தமிழ்த் தோத்திரங்களும் பாடல்களும் பாடப்படுகின்றன. தமிழே அறியாத ஆந்திரக் கோயில்களில் திருப்பாவை பாடப்படுகிறது.
அதாவது வழிபாட்டுமுறையின் மையம் இந்திய அளவில், உலக அளவில் ஒன்றாக இருக்கவேண்டும் என்ற நடைமுறைத்தேவைக்காக மட்டுமே கருவறையின் பூஜை மந்திரங்களாக சம்ஸ்கிருதம் இருக்கலாம் என முறைப்படுத்தப்பட்டுள்ளது. பாலி தீவிலும் கலிஃபோர்னியாவிலும் ஒரு இந்து சக இந்துக்களுடன் இணைந்து வழிபட வழிசெய்வது அந்தப் பொது அம்சமே. காசியில் போஜ்புரியில் சிவபெருமானைத் துதிப்பதில்லை, சம்ஸ்கிருதத்தில்தான். ஆனால் அங்கே நாம் 'பொன்னார்மேனியனே' என்று பாட எந்தத் தடையும் இல்லை.
அரசியல்வாதிகளால் நமக்குச் சொல்லப்பட்டிருப்பது போல சம்ஸ்கிருதம் வடவர்களின் மொழியோ, பிராமணர்களின் மொழியோ, வைதிகத்தின் மொழியோ, இந்துமதத்தின் மொழியோ அல்ல. சம்ஸ்கிருதத்தின் இலக்கணத்தையும் இலக்கியத்தையும் உருவாக்கிய மேதைகளில் கணிசமானவர்கள் தென்னாட்டினர். அதன் பெரும்கவிஞர்களும், ஞானிகளும் பெரும்பாலும் பிராமணரல்லாதவர்கள். அது வைதிகத்துக்கு மட்டுமல்ல சமணத்துக்கும் பிற்கால பௌத்ததுக்கும் மொழிதான். அதுதான் இந்திய நாத்திகத்திற்கும் மூலமொழி.
தமிழ் சம்ஸ்கிருதம் மூலம் ஒட்டுமொத்த இந்தியமரபுடன் உரையாடி வளர்ந்துதான் இன்றைய வடிவை அடைந்தது. சம்ஸ்கிருதம் இல்லையேல் நமக்கு சிலப்பதிகாரமோ, மணிமேகலையோ, சீவகசிந்தாமணியோ, கம்பராமாயணமோ இல்லை. இன்று ஆங்கிலத்தையும் நான் இப்படித்தான் சொல்வேன். உலக மொழிகளில் இருந்து நமக்கு வருவதெல்லாம் ஆங்கிலம் வழியாகவே. ஆங்கிலம் இல்லையேல் பாரதியும், புதுமைப்பித்தனும் இல்லை.
இந்து தெய்வங்களைப்பற்றி , தத்துவங்களைப்பற்றி இன்று அதிகமாக எழுதப்படுவது ஆங்கிலத்திலேயே. காரணம் அதுவே இன்றைய இணைப்பு மொழி. நாராயணகுரு சம்ஸ்கிருதத்தில் அதிகமாக எழுதினார். அவரது மாணவர்களான நடராஜகுருவும் நித்ய சைதன்ய யதியும் ஆங்கிலத்தையே ஊடகமாகக் கொண்டார்கள். இந்து வழிபாட்டுக்குரிய மொழியாக சம்ஸ்கிருதமும் இந்து தத்துவசிந்தனைக்குரிய மொழியாக ஆங்கிலமும் இன்று திகழ்கிறது.இதுவும் இயல்பானதே என்றுதான் நினைக்கிறேன்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
பரிணாமவாதமும் இந்திய மதங்களும்
யார் இந்து?-கடிதம்
அயோத்திதாசர் என்னும் முதல்சிந்தனையாளர்-4
ஹிந்து பைபிள்
சம்ஸ்கிருதம்:கடிதங்கள்
இந்தி,சம்ஸ்கிருதம்,தமிழ்
திராவிட இயக்கம்,இந்துத்துவம்- இன்னொரு கடிதம்
அறம் – சிறுகதைத் தொகுப்பு கிடைக்குமிடங்கள்
ஜெயமோகன் எழுதிய அறம் – சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துவிட்டது ,
400 பக்கங்கள் , விலை.ரூ.250 , ISBN – 978-93-80545-42-4 வெளியீடு : வம்சி பதிப்பகம் – திருவண்ணாமலை – 94448 67023 , 04175 251468
கிடைக்குமிடங்கள் (கடைகளின் முகவரி கீழே இணைக்கப்பட்டுள்ளது)
இணையம் வழி வாங்க
உடுமலை http://udumalai.com/?prd=aram&page=products&id=10294
கிழக்கு https://www.nhm.in/shop/100-00-0000-190-9.html
Dial For Books (தொலைபேசி வழியாக வாங்கலாம் , விபிபி வசதி) +91-94459 01234 , +91-9445 97 97 97
சென்னை -
நீயூபுக்லேண்ட், #52C, Basement Floor North Usman Road ,T. Nagar Chennai -600017 Phone: 044-28158171, 044-28156006 Mobile: 9840227776
Udumalai Book Centre, G-11, Ground Floor, Rainbow Arcade, Pondy Bazaar (Opp Holy Angels Convent), T-Nagar, Chennai – 17
Ph: 8925 456 330
கோவை
விஜயா புக்ஸ் கிளைகள் ,0422 2382614
ஈரோடு
பாரதி புத்தக நிலையம் , ஸ்டேட்பேங்க் மெய்ன் ரோட் , ஈரோடு – 92454 48353
திருவண்ணாமலை
வம்சி புக்ஸ் , பெரியார் சிலை அருகில் , திருவண்ணாமலை – 94448 67023 , 04175 251468
தொடர்புடைய பதிவுகள்
எதற்காக அடுத்த தலைமுறை?
அறம் வாழும்-கடிதம்
கதைகளின் வழி
மண்ணாப்பேடி
உங்கள் கதைகள்-கடிதம்
அறம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறதா?
அறம் – சிறுகதைத் தொகுப்பு கிடைக்குமிடங்கள் {{{புதிய பதிவுகள் கீழே}}}
(புதிய பதிவுகளுக்கு கீழே ஸ்க்ரால் செய்யுங்கள்,இது மாறாப்பக்கம்)
ஜெயமோகன் எழுதிய அறம் – சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துவிட்டது ,
400 பக்கங்கள் , விலை.ரூ.250 , ISBN – 978-93-80545-42-4 வெளியீடு : வம்சி பதிப்பகம் – திருவண்ணாமலை – 94448 67023 , 04175 251468
கிடைக்குமிடங்கள் (கடைகளின் முகவரி கீழே இணைக்கப்பட்டுள்ளது)
இணையம் வழி வாங்க
உடுமலை http://udumalai.com/?prd=aram&page=products&id=10294
கிழக்கு https://www.nhm.in/shop/100-00-0000-190-9.html
Dial For Books (தொலைபேசி வழியாக வாங்கலாம் , விபிபி வசதி) +91-94459 01234 , +91-9445 97 97 97
சென்னை -
நீயூபுக்லேண்ட், #52C, Basement Floor North Usman Road ,T. Nagar Chennai -600017 Phone: 044-28158171, 044-28156006 Mobile: 9840227776
Udumalai Book Centre, G-11, Ground Floor, Rainbow Arcade, Pondy Bazaar (Opp Holy Angels Convent), T-Nagar, Chennai – 17
Ph: 8925 456 330
கோவை
விஜயா புக்ஸ் கிளைகள் ,0422 2382614
ஈரோடு
பாரதி புத்தக நிலையம் , ஸ்டேட்பேங்க் மெய்ன் ரோட் , ஈரோடு – 92454 48353
திருவண்ணாமலை
வம்சி புக்ஸ் , பெரியார் சிலை அருகில் , திருவண்ணாமலை – 94448 67023 , 04175 251468
தொடர்புடைய பதிவுகள்
எதற்காக அடுத்த தலைமுறை?
அறம் வாழும்-கடிதம்
கதைகளின் வழி
மண்ணாப்பேடி
உங்கள் கதைகள்-கடிதம்
அறம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறதா?
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
