பிறழ்வெழுத்து

அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,


வணக்கம்.


பாரதி, கல்கி போன்றவர்களின் படைப்புகளைப் படித்தே வளர்ந்ததாலோ என்னமோ, என்னைப் பொறுத்தவரையில் எழுத்து மனிதர்களிடையே நேர்மறையான மாற்றங்களைத் தோற்றுவிப்பதற்கே என்ற எண்ணம் ஆழ வேரூன்றி இருக்கிறது.


சமீபத்தில் "டிரான்ஸ்க்ரேசிவ் பிக்சன்" என்ற சொற்றொடரைப் படிக்க நேர்ந்தது. தமிழில் இத்தகைய படைப்புகள் வந்துள்ளனவா? இத்தகைய படைப்புகள் ஏதேனும் சமூக நன்மையை    அளிக்கவல்லனவா? அல்லது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு உத்தியாகவே இத்தகைய நாவல்கள் எழுதப்படுகின்றனவா?


உங்களின் கருத்தைக் கூறுங்களேன்?


நன்றி

கணேஷ்

நியூ டெல்லி


அன்புள்ள கணேஷ்,


எல்லாவகையான எழுத்தும் இயல்பாக உருவாகி வருமென்றால் அதற்கான இன்றியமையாமை அச்சமூகத்தில் உள்ளது என்பதே அர்த்தம். ஆகவே அது தேவையில்லை என்று எவரும் சொல்லமுடியாது. இலக்கியம் என்பது ஒருவகையில் ஒரு சமூகம் கனவுகாண்பது போல, அச்சத்தில் உளறுவது போல, பைத்தியத்தில் பிதற்றுவதுபோல .அது தேவையா என்பதை ஒட்டி அது உருவாவதில்லை.


பிறழ்வெழுத்து [ Transgressive fiction ] என்ற சொல் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உருவான ஒரு சில எழுத்துக்களைக் குறிப்பிடுவதற்காக உருவாக்கப்பட்டது. விமர்சகர் மைக்கேல் சில்வர்பிளாட் அச்சொல்லை உருவாக்கினார் என்கிறார்கள். பல்வேறு அக நெருக்கடிகளால் மனப்பிளவுண்டு சமூக நெறிகள் பொது நம்பிக்கைகள் ஆகியவற்றில் இருந்து முற்றிலும் பிறழ்ந்து போன நிலையில் எழுதப்படும் எழுத்து இது. கட்டற்ற பாலியல், குற்றகரமான அறமீறல்கள் என அனைத்து வகைப் பிறழ்வுகளையும் உள்ளடக்கியது. ஒரு வகையில் நோய்க்கூறானது.


இலக்கியத்தில் இவ்வகையான ஒரு கூறு எப்போதுமே இருந்துகொண்டிருப்பதைக் காணலாம். பழைய காலகட்டத்திலேயே பொது எல்லைகளை மீறிய நூல்கள் இருந்துவந்துள்ளன. ஓர் உதாரணம் என்றால் தமிழில் உள்ள கூளப்பநாயக்கன் காதல்,விறலி விடுதூது போன்ற நூல்களைச் சொல்லலாம்.


உரைநடை இலக்கியம் உருவானபோது யதார்த்தவாத எழுத்தின் ஒரு கூறாக இந்த அம்சம் இருந்துகொண்டிருந்தது. அதை அந்தந்தக் காலகட்டத்து மரபுவாதிகள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். எழுத்தாளர்கள் நீதிமன்றத்துக்கு இழுக்கப்பட்டிருக்கிறார்கள். தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்கள் இக்குற்றச்சாட்டுக்கு ஆளாயின. ஒழுக்கவாதியான தல்ஸ்தோய் எழுதிய 'இருட்டின் ஆற்றல்' என்ற நாடகம் பிறழ்வுத்தன்மை கொண்டது என்று சொல்லப்பட்டது. எமிலி ஜோலா, மாப்பசான், டி.எச்.லாரன்ஸ், ஜேம்ஸ் ஜாய்ஸ் போன்றவர்களின் எழுத்துக்கள் பிறழ்வுகள் கொண்டவை என்று குற்றம்சாட்டப்பட்டன.


சில ஆசிரியர்கள் அவர்கள் எழுத்தில் உள்ள பிறழ்வுத்தன்மையாலேயே இலக்கிய அடையாளம் பெற்றனர். உதாரணம் மார்கி து சேத் [Marquis de Sade] இவரது ஒரு நூல் காதலின் வேதனை என்ற பேரில் தமிழினி வெளியிட்டாக வந்துள்ளது.


சில நூல்கள் பிறழ்வுத்தன்மையால் மட்டுமே கவனிக்கப்பட்டவை. உதாரணம் பியரி லாக்லாஸ் [ Pierre Ambroise François Choderlos de Laclos] எழுதிய Dangerous Liaisons என்ற நாவல். இதன் திரை வடிவத்தின் தமிழாக்கம் தமிழினி வெளியீடாக வந்துள்ளது.


அதன் பின் நவீனத்துவ காலகட்டத்தில் சர்ரியலிச எழுத்துக்களில் பெரிதும் மனப்பிறழ்வுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதை ஒட்டி உருவான குரூர அரங்கு போன்ற மேடைக்கலைகள் அந்தோனின் ஆர்ட்டாட் போன்ற கலைஞர்களை உருவாக்கின. நவீனத்துவத்தின் ஒரு முகம் தனிமனிதனின் அகப்பிறழ்வை எழுத முயன்றது. அதற்காக நனவோடை உத்தி போன்றவை உருவாக்கிக்கொள்ளப்பட்டன.


பின்நவீனத்துவ காலகட்டத்தில் பிறழ்வு என்பது ஒரு களியாட்டநிலையாக, அர்த்தங்களில் இருந்துகூட விடுபட்ட மொழியின் வெளிப்பாடாக, உன்மத்தமாகக் கருதப்பட்டது. அத்தகைய ஆக்கங்கள் பல உருவாயின.


விரிவான ஒரு பட்டியலைப் போடலாம். தமிழில் கிடைப்பனவற்றை மட்டுமே நான் குறிப்பிடுகிறேன். நான் சொல்ல வருவது இது ஒரு புதிய விஷயமல்ல என்றும் எல்லாக் காலகட்டத்திலும் இலக்கியத்தின் ஒரு அம்சமாக இது தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது என்றும்தான். இப்போது இந்தப் பெயர் அளிக்கப்பட்டுள்ளது அவ்வளவுதான்


வழக்கமான பாலியல் எழுத்துக்கும் இதற்குமான வேறுபாடு என விமர்சகர்கள் குறிப்பிடுவது இது முழுமையாகவே சமூக நெறிகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு மனப்பிறழ்வு நிலைக்கு சமீபத்தில் நின்றுகொண்டிருக்கிறது என்பதை மட்டுமே. அழகியல் ரீதியாக இவ்வகை எழுத்து ஒருவகை தட்டையான சித்தரிப்பைக் கொண்டிருக்கும். வர்ணனைகளோ விவரிப்புகளோ நுட்பங்களோ இல்லாத தன்மை.


இந்தவகை எழுத்துக்கள் உருவாக்கும் அதிர்ச்சிமதிப்பு, சிலசமயம் சட்டநடவடிக்கைகள் காரணமாக உடனடியான கவனமும் புகழும் இவற்றுக்குக் கிடைக்கின்றன. இளைய வாசகர்கள் நடுவே ஒரு சிறப்புக்கவனம் இவற்றுக்குக் கிடைக்கிறது. ஆகவே சட்டென்று ஒரு மோஸ்தராக ஆகி அதேபோலப் பலர் எழுத ஆரம்பிக்கிறார்கள். அல்லது செயற்கையான பாலியல் சுரண்டல் எழுத்துக்கு இந்த லேபிலை ஒட்டிக்கொள்கிறார்கள்


மிகமிக அபூர்வமாகவே இவை அடுத்த தலைமுறை வரை சென்று சேர்கின்றன. இந்த வகை எழுத்தில் எவை ஆழமான மன எழுச்சியில் இருந்து பிறக்கின்றனவோ, எவை நேர்மையானவையோ அவை மட்டுமே நிற்கின்றன.


எந்தவகையில் இது முக்கியமானது என்றால் இது சமூக ஆழ்மனத்தின் அதிகம் பார்க்கப்படாத சில பக்கங்களை வெளிக்கொணர்கிறது என்பதனால்தான். இலக்கியம் மனித ஆழ்மனதை வெளிப்படுத்துவதற்கான அறிவதற்கான முயற்சி என்பதனால் இதற்கான இடம் உருவாகி வருகிறது.


ஆனால் இன்றைய காட்சி ஊடகம் குறிப்பாக இணையம் பிறழ்வின் எல்லா எல்லைகளுக்கும் சென்று விட்டபின் இவ்வகை எழுத்துக்களின் உண்மையான மதிப்பு என்ன என்பது ஐயமாகவே இருக்கிறது. மொழியில், கூறுமுறையில், படிமங்களில் இவை புதியநகர்வுகளை உருவாக்கினால் மட்டுமே இவை இலக்கியமதிப்புப் பெறுகின்றன


மனித அகநிலை அது எவ்வகையில் வெளிப்பட்டாலும், என்ன விளைவை உருவாக்கினாலும், அது உண்மையானதும் தீவிரமானதுமாக இருக்கும்பட்சத்தில் இலக்கியத்துக்கு முக்கியமானதே. இலக்கியத்துக்கு எந்த நிபந்தனைகளும் இருக்கமுடியாது.


இலட்சியவாதம் சார்ந்த, ஒழுக்கம் சார்ந்த, அறம் சார்ந்த எழுத்துக்கு என்ன முக்கியத்துவம் இருக்கமுடியும்? அது நேர்மையான தீவிரமான அக எழுச்சியின் விளைவா என்பது மட்டுமே ஒரே செல்லுபடியாகக்கூடிய கேள்வி. அதே கேள்விதான் இந்த வகை எழுத்துக்களுக்கும்.


இந்திய எழுத்தில் பிறழ்வுத்தன்மை மெல்லிய கூறாகவே எப்போதும் உள்ளது. பெரிய அளவில் மேலோங்கியிருந்ததும் இருப்பதும் இலட்சியவாத சமூக விமர்சன நோக்குதான். நம் நவீன எழுத்தின் தொடக்கப்புள்ளிகளில் ஒன்றாகிய புதுமைப்பித்தனின் கதைகளிலேயே பிறழ்வெழுத்தின் முதல்தடயங்கள் உள்ளன. செத்துக்கிடக்கும் நண்பனின் சடலத்தின் அருகே வைத்து அவன் மனைவியுடன் உறவுகொள்ளும் ஒருவனைப்பற்றிய கதையான  'விபரீத ஆசை'யை அதற்கான சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். ஜி.நாகராஜனின் சில கதைகள், கரிச்சான்குஞ்சுவின் 'பசித்தமானுடம்' ஆகியவற்றில் சில தடங்களைக் காணலாம்.


நனவோடை எழுத்து, தன்னோட்ட எழுத்து, மனப்பிறழ்வைப் பதிவுசெய்யும் எழுத்து போன்றவற்றை நான் இந்த வகையில் சேர்க்கவில்லை. லா.ச.ரா, நகுலன், மு.தளையசிங்கம்,சம்பத் போன்றவர்கள் அவ்வகையில் எழுதியிருக்கிறார்கள்.


முழுமையான பிறழ்வெழுத்து தமிழில் மட்டுமல்ல பிற இந்திய மொழிகளிலும் இல்லை என்றே நினைக்கிறேன். மேலைநாட்டு எழுத்துக்களைப்பார்த்துப் போலிசெய்வதையோ நாலாந்தரப் பாலியல் எழுத்துக்கு அந்தப் பூச்சு போட்டுக்கொள்வதையோ நான் கணக்கில் கொள்ளவில்லை.


ஐரோப்பாவும் அமெரிக்காவும் அவர்கள் இன்று தங்களுடையெதனக் கருதும் ஜனநாயக, மதசார்பற்ற, தாராளவாத நாகரீகத்தையும் சமூக அமைப்பையும் உருவாக்கிக்கொண்டு இருநூறாண்டுகளாகின்றன. அவற்றின் முதிர்ச்சிக்காலகட்டத்தில்தான் இந்த பிறழ்வெழுத்துக்கான இடம் உருவாகிறது. நாகரீகத்துக்கு எதிரான குரல் இந்த அளவு தீவிரமாக எழுகிறது.


நாம் கடந்த முக்கால்நூற்றாண்டாகத்தான் நம் நவீன நாகரீகத்தைக் கட்டி எழுப்ப முயன்றுகொண்டிருக்கிறோம்.நாம் காணும் பிறழ்வுகள் முழுக்க நம் இறந்த காலத்திலேயே உள்ளன. அவற்றை நோக்கிய கொந்தளிப்பும் எதிர்ப்புமே நம் இலக்கியத்தில் பெரும்பகுதி. ஆகவே இங்கே இலட்சியவாதமே இலக்கியத்தின் முகமாக உள்ளது.


வெவ்வேறு காலகட்டத்தில் ஐரோப்பிய மோஸ்தர்களை சிலர் இங்கே அறிமுகம் செய்வதும் அவை கொஞ்சகாலம் நகல்படைப்புகளை உருவாக்கி உதிர்வதும் சாதாரணமாக நடப்பதுதான். எண்பதுகளில் இருத்தலியல் மனஇறுக்கத்தை எழுதுவது ஒரு மோஸ்தராக இருந்தது.


இருப்பின் சுமையை விட, பாலியல் கட்டுப்பாட்டை விட பக்கத்து வீட்டான் பசியால் இறப்பதும் அண்டை வீட்டார் மாறி மாறிக் கழுத்தை அறுத்துக்கொள்வதும்தான் நமக்கு முக்கியமாகப் படுகிறது. நமது பிரச்சினை நமது மரபைச் சலித்துச்சலித்து எடுத்து அதைக்கொண்டு நம்முடைய நிகழ்காலத்தை உருவாக்கிக்கொள்வதில் உள்ளது.  நம்முடைய வாழ்க்கையை, நம்முடைய பிரச்சினையைத்தான் நம் எழுத்தாளர்கள் எழுதமுடியும், எழுதுகிறார்கள். அதுவே மிக இயல்பானது, வரலாற்று நியாயம் உள்ளது.


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

ராமாயணம்-கடிதங்கள்
கடிதங்கள்
பாரதி விவாதம் -6 – இறை,உரைநடை
திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 2
கடைத்தெருவை கதையாக்குதல்…
புதுமைப்பித்தன் இன்று…
புதுமைப்பித்தனின் வாள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 17, 2011 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.