Jeyamohan's Blog, page 2275
October 31, 2011
அறம் வாழும்-கடிதம்
அன்புள்ள ஜெயன்
யானை டாக்டர் , மத்துறு தயிர் , மற்றும் சோற்று கணக்கு மூன்று கதைகளும் இரண்டு வாரங்களாக எனது சிந்தனையிலும் உணர்விலேயும் மத்துக் கொண்டு கடைவது போலவே இருக்கிறது. டாக்டர் கே , கேத்தேள் சாஹிப், பேராசிரியர், போன்ற மனிதர்கள் எங்காவது தென் படுகிறார்களா அல்லது இந்த முப்பது வருஷ வாழ்க்கையில எங்கேயாவது சந்தித்திருக்கின்றோமா என்று மனம் தேடிக் கொண்டே இருக்கின்றது .
டாக்டர் தம்பையா, எனது ஐந்தாம் வகுப்பு சாமுவேல் சார், சென்னை அண்ணா நகரில் பெரும்பாலான சிவில் செர்விசெஸ் போட்டித் தேர்வுக்குப் படிக்கும் இளைஞர்களுக்கு ஐம்பது ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து மாத்திரையும் கொடுக்கும் டாக்டர் ஜெயக்குமார், இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு ரயில் பயணத்தின் போது தாத்தா ஒருவர் கண்ணீருடன் சொன்ன அவருடைய ஆசிரியர் (அந்த ஆசிரியர் ஒரு பாதிரியார். பள்ளியில் பேனா நோட் போன்றவற்றை ஒரு மேஜையில் வைத்து விடுவாராம் . மாணவர்கள் காசு போட்டு விட்டு அவர்களே எடுத்து கொள்ளலாம். மாணவர்கள் திருடுவதில்லை. ஏமாற்றுவதில்லை. மன சாட்சியோடு வளர்த்தெடுக்கப்பட்டனர். ) இன்னும் சில மனிதர்கள் என்று மிகச் சிலரே தென் பட்டனர். அனைவருமே எழுபது தாண்டியவர்கள். புதிய தலை முறையில் யாரும் தென்படவில்லை. என் குறுகிய அனுபவம் காரணமாக இருக்கலாம். இருந்தாலும் இது போன்ற மனிதர்களும் அவர்களின் வேராக இருந்த அறங்களும் சமுதாயம் முழுவதும் பரவி இருக்க வேண்டாமா என்ற ஆதங்கமும் , நாம் இன்று யதார்த்தம், காசு இருந்தாதான் மதிக்கும் போன்ற அறிவுரைகளாலும், அறம் என்ற ஒன்றே இல்லை என்ற தத்துவங்களாலும் வாழ்க்கையோடு காம்ப்ரமைஸ் செய்கிறோமோ என்ற குற்ற உணர்வும் எழும்பிக் கொண்டே இருக்கின்றது.
பேராசிரியர் போன்று மாணவர்களிடம் உணர்வு பூர்வமாகப் பிணைந்திருக்கும் ஆசிரியர்களோ, தாய்மை உணர்வோடு உணவளிக்கும் உணவகத்தையோ காண முடிய வில்லை. எல்லாம் பணம் என்ற ஒன்றின் வழியாகவே பிணைக்கப்பட்டது போலத் தோன்றுகின்றது. எழுத்துலகமும், அரசியல் உலகமும் இந்த அற உணர்வுகளை, மனிதர்களை முன்னால் வைக்காமல் சமூக நீதி, முற்போக்கு, பகுத்தறிவு, என்ற மேலான விஷயங்களையே முன்னால் வைத்தனவோ என்று தோன்றுகிறது. உதாரணமாக, கோட்டாறு குமரன் பிள்ளை பேராசிரியருக்குக் கல்வி கொடுத்தார் என்றால் அதில் உள்ள அற உணர்வைப் பார்க்காமல் அவர் சாதீய வெறி கொண்டவர், குரு குலத்தை ஆதரிப்பவர் என்று ஒதுக்கும் மனப்பக்குவமே இலக்கிய உலகத்துக்கு உள்ளது. உதாரணமாக விளிம்பு நிலை மனிதர்களைக் காட்டும் போக்கில் அவர்கள் வாழும் வாழ்க்கையினை நியாயப்படுத்துவது மற்றும் சிலாகிப்பது. குடிப்பது தவறு என்று ஒரு அறம் சொன்னால் நீ யார் அறம் சொல்ல, அது மேல் குடியின் அறம் என்று மறுத்துக் குடிப்பதைப் பெருமையாக எழுதி மீண்டும் மீண்டும் அந்த மனிதர்களை விளிம்பு நிலையிலேயே வைத்திருப்பது ( இவர்கள் கதை கட்டுரை எழுத விளிம்பு நிலை மனிதர்கள் வேண்டும் அல்லவா). அரசியல் அதற்கு மேல். அரசு வேலை, அதிகாரம் வேண்டும். அது சமூக நீதி. ஆனால் அவர்கள் செய்யும் ஊழலைக் கேட்க முடியாது. இவ்வளவு நாள் பார்ப்பனர்கள் ஊழல் செய்யவில்லையா, என்று மறு கேள்விவரும் . மேல் சாதியின் சதி என்பார்கள்.
ஆனாலும் ஜெயன் சார், இந்த அறங்கள் புகாரின், வீர பத்ரபிள்ளை, அருணாசலம் என்ற வரிசைபோல யாரோ ஒருவரால் எடுத்து செல்லப்படும் என் நம்புகிறேன். ஆனால் இது எல்லாராலும்,எடுத்து செல்லப்பட வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதற்கு அறத்தை மையமாகக் கொண்ட இலக்கியங்களும், தத்துவங்களும், பேச்சுக்களும் கட்டுரைகளும், திரைப்படங்களும் வரவேண்டும். சங்க காலம் தொட்டு சிலம்பு, கம்ப ராமாயணம், பாரதி, மு வ, ஜெய மோகன் என அறம் ஏதோ ஒரு வடிவத்தில் நீந்தி வந்து கொண்டே இருக்கின்றது . அந்த ஆறு வற்றி விடக் கூடாது. இது போன்ற அற உணர்வுள்ள மனிதர்களைத் தொடர்ந்து காட்டுங்கள். அது இன்றைய மிகப் பெரிய தேவை என்றே நினைக்கிறேன்.
என்றும் அன்புடன்
கேசவன்
அன்புள்ள கேசவன்
இலட்சியவாதம் எப்போதுமே மிகமிகச் சிறுபான்மையினரால்தான் ஒரு வாழ்க்கைமுறையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு அது வாழ்க்கையின் ஒரு சிறு பகுதி. அந்தரங்கத்தின் ஆழம், அவ்வளவுதான்.
சென்றகாலத்தில் ஒருமரபான இலட்சிய வாழ்க்கையை வாழ இடமிருந்தது. அதை வாழ்ந்தவர்கள் இருந்தார்கள். ஆனால் இன்று நாம் உருவாக்கியிருக்கும் நுகர்வுக்கலாச்சாரத்தில் அப்ப்டி ஒரு இயல்பான இடம் கிடையாது. ஒருவர் தனக்கென ஒரு இலட்சியவாழ்க்கையைத் தானே உருவாக்கிக்கொள்ளவேண்டியதுதான். அப்படி உருவாக்கிக்கொள்ள அவர் தன் இயல்புகளை அறிந்திருக்கவேண்டும். அவற்றின் வெளிப்பாட்டுக்கான தருணம் அவருக்கு வாய்க்க வேண்டும். அது பலசமயம் தற்செயலாகவே நிகழ்கிறது.
சில வரலாற்றுத்தருணங்களில் இலட்சியவாத வாழ்க்கை பெரும் அலைபோல சமூகம் முழுக்க பரவுகிறது. அப்போது லட்சக்கணக்கானவர்கள் அதனால் ஈர்க்கப்படுகிறார்கள். புத்தரும் காந்தியும் அந்த அலையை இந்தியாவில் உருவாக்கினார்கள்.
ஆனால் எப்போதுமே இலட்சியவாதம் சார்ந்த வாழ்க்கை அதற்குரிய கவர்ச்சியுடன் இருந்துகொண்டுதான் இருக்கிறது. லௌகீகத்தின் எல்லையைத்தாண்டி அதற்குள் மனிதர்கள் சென்றுகொண்டேதான் இருக்கிறார்கள்.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
உங்கள் கதைகள்-கடிதம்
யானை- கடிதம்
யானைடாக்டர்-ஓர் உரை
வாழும் கணங்கள்-கடிதங்கள்
மண்ணாப்பேடி
இலங்கையில் இருந்து ஒரு கடிதம்
யானை டாக்டர் இலவச நூல் வினியோகம்
அறம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறதா?
அசடன், யானைடாக்டர்- கடிதங்கள்
யானைடாக்டர் இலவச நூல்
ஆர்.கே.நாராயணன், மீண்டும்
டியர் ஜெயமோகன்,
உங்கள் ப்ளாக் பார்த்துகொண்டிருந்த பொழுது , நீங்கள் ஆர்.கே.நாராயண் பற்றி எழுதி இருந்ததை கவனித்தேன். பழைய பதிவு போல் இருந்தது. இருந்தாலும் அதைப் பற்றி உங்களுக்கு எழுத வேண்டும் என்று இதோ எழுதுகிறேன்.
ஆர்.கே.நாராயண் பற்றி உங்கள் கருத்து வெறும் நுனிப் புல்லாகவே உள்ளது.அவருடைய swami and friends பற்றிய உங்கள் விமர்சனம் சுமார். அவரை தேவன்,p.g.wodehouse போன்றவர்களுடன் ஒப்பிடுவது சற்று நெருடலாக உள்ளது. தேவன் போன்றவர்கள் humour என்பதை உருவாக்கி எழுதுபவர்கள், அவர்கள் எழுத்தால்,வார்த்தைகளால் நகைச்சுவை உருவாக்குபவர்கள். அதிலும் தேவன் ரொம்ப சுமார்.
நாராயணின் swami and friends இந்தியாவின் மிக சிறந்த சிறுவர் நாவல் என்றே சொல்லலாம். இன்று ஒரு பத்து வயது சிறுவனிற்கு படிக்கப் பரிந்துரை செய்ய வேண்டிய novel என்றால் swami and friends நிச்சியம் உண்டு. அது alice and wonderland , போன்ற ஓர் அற்புதப் படைப்பு. நீங்கள், தமிழில் அதைப் போன்ற ஒரு சிறுவர் நாவல் இருந்தால் கொடுங்கள்.
நாராயண் எழுத்து கண்டிப்பாக வெள்ளைக்காரனுக்கான எழுத்து இல்லை. அவரது நடையைப் படித்தால் நிச்சயமாக , ஒரு சாதாரண தமிழ் பேசும் ஆங்கில எழுத்தாகவே உள்ளது. இது சற்று நிதானமாகப் படித்தாலே தெரியும். அவரது எழுத்து புகழ் பெற்றதற்குக் காரணம் அவரது நடையில் உள்ள சிம்ப்ளிசிட்டி,நேர்மை,மற்றும் எதார்த்தமான நகைச்சுவை. நிச்சயமாக அது அருந்ததி ராய் , விக்ரம் செத் வகை கிடையாது. நீங்கள் நாராயண் பற்றிய முன் முடிவுடன் படித்தால் அது நிச்சயம் இலக்கிய விமர்சனத்திற்குத் தடை ஆகலாம். ஒட்டு மொத்தப் பார்வையுடன் பார்த்தால் நிச்சயம் சுவாமி அண்ட் பிரண்ட்ஸ் ஓர் அற்புதமான படைப்பே.
நன்றி
பாலா
அன்புள்ள டி.எஸ்.எஸ். பாலா
பல பாலாக்கள் இருப்பதனால் சிக்கல் ஆகவே பேரை மாற்றிவிட்டேன்.
நான் ஆர்.கே. நாராயணனைப்படித்தது பட்டப்படிப்பு இறுதிநாட்களில். அன்று எனக்கு முன்முடிவுகள் எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை.
அந்த வயதில்கூட எனக்கு மெல்லிய சுவாரசியம், நீங்கள் சொல்லும் 'நேர்மை' இதெல்லாம் போதவில்லை.2009ல் ஆங்கில இலக்கியம் பற்றிய அந்த விவாதத்துக்குப் பின் Waiting for the Mahatma படித்தேன். கொஞ்சம் படிக்கும்போதே அதைப் படித்திருப்பது நினைவுக்கு வந்தது. 80களில் அது பல்கலையில் ஆங்கில இலக்கியத்துக்குத் துணைப்பாடமாக இருந்திருக்கிறது. அப்போது வாசித்திருக்கிறேன். மெல்லிய அங்கதம், குறைவாகச் சொல்வது என்ற இரு அம்சங்கள் தவிர அதை வாசித்துப் பெறுவதற்கு ஏதும் இல்லை என்று பட்டது. நான் முடிக்கவில்லை.
ஆர்.கே.நாராயணனைப் பேரிலக்கியவாதி என்று சொல்பவர்களுக்கும் எனக்கும் இடையே ரசனையில், வாசிப்புப்பழக்கத்தில், இலக்கியப்பார்வையில் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. அவர்கள் உலகிலேயே நான் இல்லை.
அடூர் கோபாலகிருஷ்ணனின் ஒரு படத்தில் தோசை மாவை தோசைக்கல்லில் ஊற்றி சுடும் காட்சி ஒரு முழுநிமிடம் காட்டப்பட்டிருக்கும். அந்தக் காட்சி தோசையைப்பார்த்திராத ரசிகர்களை உத்தேசித்தது. அந்த ரசிகர்கள் அதை விரும்புவார்கள். அதேபோல அவர்களின் படங்களில் நாம் விரும்பும் அம்சங்கள் உண்டு.
இதைப் புதுமையீர்ப்பு [exotic ] என்று சொல்லலாம். கலையை மதிப்பிடுவதில் மிக நுட்பமான சிக்கல்களை உருவாக்கக்கூடியது இது. அன்னியமான ஒரு சாதாரண விஷயம் நமக்களிக்கும் ஒரு கவர்ச்சி இது. இதைக் கலையின் ஈர்ப்புடன் நாம் குழப்பிக்கொள்கிறோம்.
கலை நாம் அன்றாடம் காண்பவற்றைப் பெரிய பின்னணியில் அமைப்பதன்மூலம் பழக்கமழிப்பு[Defamiliarization] செய்து புதியதாகக் காட்டுகிறது. அப்போது அது ஒரு குறியீடாக ஆகிவிடுகிறது. ஒரு கண்டடைதலின் பரவசத்தை அளிக்கிறது.அறிமுகமான ஒன்றின் புதிய தோற்றம்- இதுவே கலையின் இன்பம்.
ஆனால் அறிமுகமற்ற அன்னியமான ஒன்று நமக்கு அதேபோலப் பரவசத்தை அளிக்க முடியும். சிலசமயம் அறியாத நாடு அல்லது பண்பாட்டின் குறியீடாகவும் அக்கணத்தில் அது ஆகிவிடமுடியும். அதற்கும் கலை அளிக்கும் கண்டடைதலுக்கும் வேறுபாடுண்டு
தேர்ந்த ரசிகர்கள் திறனாய்வாளர்கள்கூட இந்த வேறுபாட்டை அறியாத தருணங்கள் உண்டு. அதிலும் அமெரிக்க ஐரோப்பிய மனம் இந்தியா , ஆப்ரிக்கா போன்ற நாடுகளை ஒரு வகை மேட்டிமைநோக்குடன் குனிந்தே நோக்குகிறது. 'கலையெழுச்சி, தரிசனம் எதையும் நீ அளிக்கவேண்டாம், உன் வாழ்க்கையைப்பற்றி ஏதாவது சுவாரசியமாக எனக்குச் சொல்லு, உன்னால் அதைத்தான் செய்யமுடியும்' என்ற பாவனை. ஆகவே இந்தப் புதுமையீர்ப்பை அவர்கள் பெரிதாக நினைக்கிறார்கள்
ஐரோப்பாவில் கொண்டாடப்பட்ட பெரும்பாலும் எல்லா இந்திய ஆக்கங்களும் நமக்குச் சாதாரணமாக தெரியவதை இப்படித்தான் நான் விளங்கிக்கொள்கிறேன். ஆர்.கே.நாராயணன் பற்றிய ஃபாஸ்டர், ஜான் அப்டைக்கின் கருத்துக்கள் இப்படிப்பட்டவை. ஆர்.கே.நாராயணனில் இந்த வெள்ளைக்காரனுக்கான எக்ஸோடிக் அம்சம் அல்லாமல் வேறேதும் இல்லை.
ஆம் எதுவுமே. நான் இலக்கியம் என எதையெல்லாம் நினைக்கிறேனோ எதுவுமே. வாழ்க்கையின் முழுமையான சித்திரம், கதைமாந்தரின் அகம், உணர்ச்சிகரமான தருணங்கள், தரிசனம் எதுவுமே. கனகச்சிதமான 'நாண்டிடேய்ல்' எழுத்து.
தமிழில் குழந்தைகளுக்கான நாவல்கள் என அதிகம் எழுதப்பட்டதில்லை- அதற்கான 'மார்க்கெட்' தமிழில் இல்லை. ஏனென்றால் தமிழ்ப்பெற்றோர் தமிழ் நூல்களை வாங்கிப் பிள்ளைகளுக்குக் கொடுப்பதில்லை
இருந்தாலும் கி ராஜநாராயணனின் 'பிஞ்சுகள்' ஒரு முக்கியமான சிறு நாவல். கண்டிப்பாக சுவாமி அண்ட் பிரண்ட்ஸை விட மேலானது. வாசித்துமுடிக்கும் குழந்தைக்கு வயதாகும்போது அதன் மனத்தில் அந்நாவல் வளர்ந்துகொண்டே செல்லும்.
அற்புத உலகில் ஆலீஸ் நீங்கள் வாசித்திருக்கக்கூடியதுபோல ஒரு சின்னப்புள்ளைக்கதை அல்ல. இலக்கியம் வாசிக்கும் பழக்கமிருந்தால் அதன் சொல்விளையாட்டுகள் மற்றும் படிமங்களில் உங்கள் வாழ்க்கை முழுக்க கூடவே வரக்கூடிய ஆழமான தத்துவத்தருணங்கள் மெய்த்தரிசனங்கள் உண்டு. சுவாமியும் நண்பர்களும் பத்துநிமிடத்துக்குமேல் நினைத்துப்பார்க்கும் எந்த உள்ளடக்கமும் இல்லாத நாவல்
நம்முடைய பார்வைகள் வேறு. நான் இலக்கியம் என்று சொல்வதற்கான அளவுகோல்கள் அல்ல உங்களுடையது.இதற்குமேல் நாம் விவாதிப்பதென்றால் இருபதாண்டுக்காலமாக நான் இலக்கியம் என்று எதைச் சொல்கிறேன் என்பதை நீங்கள் ஓரளவேனும் தெரிந்துகொண்டிருக்கவேண்டும்.
ஜெ
இந்திய இலக்கியம் ஆங்கிலக்கட்டுரை
தொடர்புடைய பதிவுகள்
சு.வேணுகோபால், ஒரு கடிதம்
இலக்கியத்தில் இன்று …
ஆர்.கே.நாராயணன்,ஆங்கில இலக்கியம்:கடிதங்கள்
October 30, 2011
தஸ்தயேவ்ஸ்கி-கடிதம்
சுகம் தன்னேயல்லே..?
ஒரு எழுத்தாளரால் உருவான மன உளைச்சலை மனதுக்கு நெருக்கமான எழுத்தாளரிடம் பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன்..
இலக்கிய கர்த்தா தஸ்தாயெவ்ஸ்கியின் சிறுகதைகள் படித்து பிரமித்து, எழுத்தாளர் பெரும்படவம் எழுதிய "ஒரு சங்கீர்த்தனம் போலே" நாவல் வாங்கிப் படித்துக் கொண்டிருந்தேன். தஸ்தாயெவ்ஸ்கியும் அன்னாவும் பழகிய நாட்களும் "சூதாடி"யின் கதையை எழுத அன்னா உதவியதும் கண் முன்னே விரிந்தது. பிறகு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் தளத்தில் தஸ்தாயெவ்ஸ்கி பற்றி தேடி இந்தச் சுட்டியைக் கண்டடைந்து http://www.sramakrishnan.com/?p=689 அதிர்ச்சியடைந்தேன். 1981ல் வெளிவந்த Twenty Six Days From the Life of Dostoyevsky திரைப்படத்தை (Dostovesky at the roulette. Novel from the life of great writer என்ற நாவலை)அப்பட்டமாக நகலெடுத்தது போல இருக்கிறது பெரும்படவத்தின் நாவல் (அதிலிருந்து ஒரு காட்சித் துண்டு : http://www.youtube.com/watch?v=jT3j8oDCz-I ) – நாவல் வெளிவந்த வருடம் 1993. இந்த நாவலைப் பற்றியோ திரைப்படத்தைப் பற்றியோ பெரும்படவம் எங்கும் குறிப்பிடவில்லை. இன்னும் சில அத்தியாயங்கள் மீதமிருக்கையில் பெரும்படவத்தின் நாவலை என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. ஏனோ நானே ஏமாற்றப்பட்டது போல் உணர்கிறேன். சமீபகால மலையாள/தமிழ்த் திரைப்படங்களில் தொடர்ந்து காணப்படும் கதைத் திருட்டு அல்லது அன்றாட வாழ்வில் நான் காணும் அறிவுத் திருட்டு (எ.கா: கணிணி பொறியாளர்களின் cut n paste code திருட்டு) கூடக் காரணமோ எனத் தெரியவில்லை.
ஒரு நன்றியாவது சொல்லியிருக்கலாம் பெரும்படவம். வேறு என்ன சொல்ல?
ஆதங்கத்துடன்,
ரா.சு.
பி.கு: நீங்கள் பெரும்படவம் ஸ்ரீதரன் அவர்களை வாசித்திருக்கிறீர்களா? வயலார் விருது வாங்கிய நாவலிது.
https://www.youtube.com/watch?v=jT3j8oDCz-I&feature=player_embedded#at=36
அன்புள்ள ரா சுப்பு
பெரும்படவம் ஸ்ரீதரன் மலையாளத்தில் தரமான இலக்கியவாதியாகக் கருதப்பட்டவர் அல்ல. ஒரு பொழுதுபோக்கு எழுத்தாளர். இந்நாவல் வயலார் விருது பெற்றாலும்கூட முக்கியமானதாக விமர்சகர்களால் கொள்ளப்படவில்லை. இதன் மூலமாக அமைந்தவை தஸ்தயெவ்ஸ்கி பற்றிய வாழ்க்கை வரலாறுகள். அந்த வரலாறுகளை அடிப்படையாகக் கொண்டே நாவலை எழுதியதாக அவர் சொல்கிறார். சினிமாவும் அந்த வாழ்க்கைவரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கலாம். வாழ்க்கைவரலாறு பொதுவானது அல்லவா?
நான் இந்நாவலை வாசிக்கவில்லை. நான் எப்போதுமே பெரும்படவம் ஸ்ரீதரனை ஒரு நாவலாசிரியராகப் பொருட்படுத்தியதில்லை
தொடர்புடைய பதிவுகள்
தஸ்தயெவ்ஸ்கி தமிழில்
மாநில உணர்வுகள்
அன்பின் ஜெ..
மிக மிக அவசரமாக ஓட வேண்டிய இரு வேலை – எனினும், இவ்வரிகளுக்கு எனது எண்ணங்களைத் தெரிவிக்க ஆசைப் படுகிறேன்.
இங்கே பேசப்படும் பிராந்திய தேசியங்கள் எல்லாமே மதம்,இனம், மொழி அடையாளம் மூலம் தேசியங்களைக் கட்டமைப்பவை. அவை தங்கள் மக்களில் பாதிப்பேரைப் பிறராகக் கட்டமைப்பவை. தமிழ்த் தேசியம் முந்நூறாண்டுகளாக இங்கே வாழும் தெலுங்கர்களையும் கன்னடர்களையும் அன்னியராக்குகிறது.கன்னடதேசியம் நூறாண்டுகளாக அங்கே வாழும் தமிழர்களையும் தெலுங்கர்களையும் அன்னியமாக்குகிறது
நிச்சயமாக, தமிழ்த் தேசியம், கன்னட தேசியம், மராட்டிய தேசியம் என்பது மறுக்கப் படவேண்டியதே.
ஆனால், கன்னடர், மராட்டியர், தமிழர் என்னும் அடையாளங்கள் இருப்பதில் என்ன பிழை? அதை அங்கீகரிக்கும் தேசியமே நமது தேவை. இன்றைய தேசியங்கள் அவ்வாறு உள்ளனவா? பிராந்திய உணர்வுகளை, அடையாளங்களை, ஒரு சம உரிமை பாவனையோடு அணுகும் தேசியங்கள் உள்ளனவா?
ஒரு சிறு அடையாளம் – ஒடிஸி என்னும் புத்தகக் கடையில் சென்று பாருங்கள் – ஆங்கிலம், இந்தி, மற்றும் பிராந்தியம் என்றே இசைத் தட்டுக்கள் வரிசைப் படுத்தப் பட்டுள்ளன. அதுவும் சென்னையில்.
தமிழ் தேசியம் பேசினாலே, இந்தியாவுக்கு எதிரி என்று குரல்கள் எழுகின்றன – நான் அவற்றைத் தமக்கும் ஒரு அடையாளம் வேண்டும் என்னும் நியாயமான எண்ணங்களின் அதீத வெளிப்பாடு என்று நினைக்கிறேன். என்னுடைய கணிப்பில், சீமானின் சினிமாத் துப்பாக்கிகள்தான் அவை. (நான் மத்திய இந்தியாவின் மாவோ இயக்கத்தை சொல்ல வில்லை – அவை வேறு)
இன்று பாரதிய ஜனதா மட்டுமல்ல, காங்கிரஸின், பொருளாதார மூர்க்கர்கள் (மாண்டேக் சிங் அலுவாலியாவும், மன்மோகன் சிங்கும்) – கொண்டு வரும் கொள்கைகளும், மையப் படுத்தப் பட்ட தேசியமே. அவர்களின் value added Tax – மிக மூர்க்கமான, ஆனால், நவீன முகம் கொண்ட ஒரு கொள்கையே.. முன்பு, எங்கிருந்து பொருள் விற்கப் படுகிறதோ, அந்த ஊரில் விற்பனை வரி. ஆனால், CST களையப் பட்டு, இப்போது, எங்கே பொருள் வாங்கப் படுகிறதோ – அங்கே செல்கிறது வரி. அதாவது, பீஹார் போன்ற உற்பத்தி மாநிலங்களில் இருந்து, மும்பை போன்ற நுகரும் தலங்களுக்கே வரி வருமானம் செல்லும். மிகத் துல்லியமாகத் திட்டமிடப் பட்டு நிறைவேற்றப் பட்டுள்ள, மைய நோக்கில் அமைக்கப் பட்ட ஒரு நுகரும் கலாச்சாரம்.
அதற்கடுத்தபடியாக, Goods and services tax என்று ஒன்று வரப் போகிறது – எல்லா வரிகளும், மாநில, மைய வரிகளும் ஒன்றாக்கப் பட்டு, வசூலிக்கப் பட்டு, பின் பகிர்ந்து கொள்ளப்படும் –இது வந்தால், பொருளாதாரம் 4 மடங்கு உயரும் என்று உலக, இந்திய பொருளாதாரக் கிறுக்கர்கள் கூறுகிறார்கள்.. எனில், மத்தியில் ஒரு சிறுபான்மை அரசு உட்கார்ந்து கொண்டு, மாநிலத்தில், நியாயமாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு மாநில அரசை, இந்த நிதி பலம் கொண்டு அசைக்க முடியும்.. கவர்னர் கொண்டு, மாநில அரசை கவிழ்க்கும் உத்தி போன்றதே இது.. this is against the basic federal structure envisaged by constitution
இந்தத் தனிநாடு, உரிமை போன்றவற்றை, அதன் அடிப்படை உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அவற்றை அங்கீகரிக்கும் ஒரு தாராளமய மத்திய அரசே இன்றைய தேவை – தெலுங்கானா வேண்டும் என்றால், அது நியாயமான கோரிக்கையாக இருந்தால், கொடுக்க வேண்டியதுதானே.. மும்பையில் 24 மணி நேரமும் மின்சாரம், விதர்பாவில் 18 மணி நேரம் மின்வெட்டு, எனில், விதர்பா ஒரு தனிமாநிலம் கோருவதில் என்ன தவறு?? 60 களில் பிரிக்கப் பட்ட மொழிவாரி மாநிலங்களால், இந்தியா பிரிந்தா போய்விட்டது?
என் நண்பர் ஒருவர் சொன்னார் – தமிழகத்தில், மொழியால் திராவிட முன்னேற்றக் கழகம் அரசமைத்தது கண்டு, சிங்கப்பூரின் பிரதமர், அங்கு பேசப் படும் எல்லா மொழியையும் தேசிய மொழிகள் என்று அறிவித்தாராம்.. அது உண்மையோ பொய்யோ தெரியாது.. ஆனால், சரி என்று தோன்றுகிறது.. ஏன் துளுவையும், கொங்கணியையும் தேசிய மொழியாக ஒத்துக் கொண்டு, அந்தக் கலாச்சாராத்தை பேண முயலக் கூடாது? We need a paternalistic, liberal central government. Not one which says majority brute would rule.
காந்தி நேருவைத் தேர்ந்தெடுத்தது என்பது மீண்டும் மீண்டும் எனக்கு ஒரு தெய்வச் செயல் – அல்லது ஒரு கர்ம யோகியின் உள்ளுணர்வு அல்லது பாரதத்தின் நல்லூழ் என்றே படுகிறது..
பாலா
அன்புள்ள பாலா,
நான் இந்தவிஷயத்தில் எப்போதுமே ஒரு நெகிழ்வான, நடைமுறை சார்ந்த நிலைபாட்டையே விரும்புகிறேன். இதுதான் முற்போக்கு என்பதற்காக ஒரு நிலைபாடு எடுக்க விரும்பவில்லை. அதே சமயம் இதுதான் சரி என ஒரு உறுதியான கடைசி நிலைபாட்டையும் எடுக்கவிரும்பவில்லை.
இந்தியாவின் மாநிலங்கள் தங்கள் தனித்துவத்தைப் பேணிக்கொள்ளவேண்டும் என்பதே என் எண்ணம். பன்மைத்தன்மையில் இருக்கும் படைப்பூக்கமும் சுதந்திரமும் வேறு எதிலும் இல்லை. பொருளியல் ரீதியான தன்னாட்சியும் பண்பாட்டுத் தனித்துவமும் கொண்டவையாக அவை இருக்கையிலேயே உண்மையான வளர்ச்சி சாத்தியமாகிறது. ஆகவே எந்தவகையான மையப்படுத்தும் போக்குக்கும் நான் எதிரானவனே.
இந்தியாவில் இன்னும் பற்பல மடங்கு அதிகாரப்பரவல் சாத்தியமாகவேண்டும். இன்னும் சின்ன மாநிலங்கள் வரலாம். யார் கோரினாலும் அதையெல்லாம் பரிசீலிக்கலாம். அதிகாரப்பரவலாக்கம் எந்நிலையிலும் எதிர்மறை விளைவை அளிக்காதென்றே நம்புகிறேன்
அதேசமயம் இந்தப் பன்மையாக்கம் மாநிலங்களின் மையத்திலும் தேவை. ஒரு மாநிலத்தின் மொத்த அதிகாரமும் ஒரு புள்ளியில் குவிவதையும் அதிகார மையப்படுத்தலாகவே எண்ணவேண்டும். நான் எச்சரிக்கை கொள்வது அதைச்சார்ந்தே.
மொழி,இன அடிப்படையில் உருவாக்கப்படும் தேசிய உருவகங்கள் இந்திய மைய அரசை எதிர்ப்பவையாக இருக்கலாம். ஆனால் மாநில அளவில் அவை அதிகாரக்குவிப்பு நோக்கம் கொண்டவையாகவே உள்ளன. வட்டார அளவில் மையப்போக்கு ஒன்றை உறுதியாக நிலைநாட்டி சிறுபான்மையை வெளியே தள்ளும் இயல்பு கொண்டவை அவை. எந்த வகையிலும் சிறுபான்மையைக் கட்டமைக்கும் எந்த மையப்படுத்தல்போக்கும் தவறானதே.
நான் ஒரு உதாரண இந்தியாவாக நினைப்பது கிராம அளவில், வட்டார அளவில் நிர்வாகத்தில் சுதந்திரமும் பண்பாட்டுத் தனித்தன்மையும் கொண்ட இந்திய அமைப்பைத்தான். எவருமே சிறுபான்மையினராக உணராமலிருககக்கூடும்.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
October 29, 2011
வரலாற்றெழுத்தில் நான்கு மாறுதல்கள்
வரலாறு என்பதை வரலாற்றெழுத்தாக நம்மில் பெரும்பாலானவர்கள் பார்ப்பதில்லை என்பது ஆச்சரியமான உண்மை. தமிழக வரலாற்றைப்பற்றிச் சொல் என்று சாதாரண வரலாற்று மாணவர் ஒருவரிடம் கேட்டால் அவர் சங்ககாலம், களப்பிரர் காலம், பல்லவர்கள் மற்றும் பிற்கால சோழபாண்டியர்களின் காலம், சுல்தானிய படையெடுப்புகளின் காலம், நாயக்கர் காலம், பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் என ஒரு வரலாற்றைச் சொல்லக்கூடும். ஆனால் இது வரலாறு அல்ல, இருபதாம் நூற்றாண்டில் நம்மால் எழுதப்பட்டதுதான் என்று அவரிடம் சொன்னால் ஆச்சரியம் கொள்வார்.
[ஆர்னால்டோ மொமிக்லியானோ]
உதாரணமாக மேலே சொன்ன வரலாற்றுக்காலகட்டங்கள் எப்படி இவ்வாறாகப் பிரிக்கப்பட்டன? அந்த அளவுகோல் என்ன? 'நம்மவர் x அன்னியர்' என்ற பிரிவினைதான். சங்ககால மன்னர்கள் தமிழர்கள். களப்பிரர் அன்னியர். பிற்காலப் பல்லவர்களும் சோழர்களும் பாண்டியர்களும் நம்மவர்கள். மீண்டும் இஸ்லாமிய அன்னியர்கள். அந்த அன்னியரை வென்ற இன்னொரு வகை அன்னியர்கள். அவர்களை வென்ற பிரிட்டிஷ் அன்னியர்கள்.
இவ்வகை வரலாற்றில் பிற்காலத்தைய மூன்று காலகட்டங்களில் நம்மவர் அன்னியர் பிரிவினை சார்புத்தன்மை கொண்டதாக ஆவதைக் காணலாம். சுல்தானிய அன்னியர்களுடன் ஒப்பிடுகையில் நாயக்கர்கள் நம்மவர்கள். பிரிட்டிஷாருடன் ஒப்பிடுகையில் இஸ்லாமியரும் நம்மவரே.
இந்தியா தன்னுடைய நவீனதேசியத்தைக் கட்டமைத்துக்கொண்டிருந்த பத்தொன்பதாம்நூற்றாண்டில் நம் வரலாற்றெழுத்து ஆரம்பித்தது. ஆகவே நம்மவர் அன்னியர் என்ற அளவுகோல் இயல்பான ஒன்றாக அமைந்தது. அதன்மேல் நமக்கு ஐயமே இல்லை. அந்த வரலாற்றையே நாம் உண்மையிலே நிகழ்ந்த இறந்தகாலம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம். இறந்தகாலம் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. நாம் வரலாறென்று பேசுவது அவ்விறந்தகாலத்தில் இருந்து நம்மிடம் இன்று மிஞ்சுபவற்றைப் பற்றி மட்டுமே.
நினைவுகளே உண்மையான நேரடி வரலாறு. ஆனால் ஒரு சமூகம் எதை நினைவில்கொள்கிறது என்பது அதன் பண்பாட்டுத்தேவையைப் பொறுத்தது. நமக்குத் தேவையற்றவற்றை நாம் மறந்துகொண்டே இருக்கிறோம். ஒரு வரலாற்று நிகழ்வு நினைவில் நிறுத்தப்படுவது அதன் உள்ளுறையாக உள்ள விழுமியங்களுக்காகவே. நேற்றைய நம் வாழ்க்கையில் இருந்து நாம் பெற்றுக்கொண்ட அறங்களை, படிப்பினைகளை, வழக்கங்களை நீட்டித்துக்கொள்ளும் பொருட்டே வரலாற்றை நினைவுகூர்கிறோம்.
அதேபோல இன்று நாம் சென்ற காலத்தை நோக்கி ஆராய்ந்து எழுதிக்கொள்ளும் வரலாறு என்பதும் இன்று நாம் நிறுவ, முன்னெடுக்க விரும்பும் விழுமியங்களுக்காகவே. அவ்விழுமியங்களை நிரூபிக்கும் ஆதாரங்களையே வரலாற்றில் தேடுகிறோம். இன்றைய நிகழ்ச்சிகளுக்கு நேற்றில் ஒரு நீட்சியை நாடுகிறோம். முன்ஊகங்களே வரலாற்றாய்வுக்கான முகாந்திரங்களாகின்றன. அவை வலைகள். அவ்வலையில் எது சிக்கவேண்டும், எது விடப்படவேண்டுமென வலையே தீர்மானிக்கிறது.
வரலாற்றெழுத்தைப் பற்றிய தெளிவில்லாவிட்டால் வரலாற்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியாது. யாரால் எப்போது எதற்காக எழுதப்பட்ட வரலாறு என்பது எப்போதும் வரலாற்றைத் தீர்மானிப்பதாகவே அமைந்துள்ளது. உதாரணமாக நவீன இந்திய வரலாற்றின் முழுமையான முதல் முன்வரைவும் 1911ல் வெளிவந்த வின்செண்ட் ஸ்மித்தின் The Oxford History Of India என்ற நூல்தான் என்று சொல்லப்படுவதுண்டு. முழுக்கமுழுக்க ஆக்ரமிப்பாளர்களின் கோணத்தில் எழுதப்பட்ட இந்நூல் இந்தியவரலாற்றைப் படையெடுப்புகளின் கதையாகச் சொல்லியது. அந்த முன்வரைவை ஒட்டி அதற்கு நேர் எதிர்கோணத்தில் நின்றபடி இந்திய தேசிய வரலாறுகள் எழுதப்பட்டன.
வேறுகோணங்களில் நம் வரலாற்றை நாம் ஏன் எழுதக்கூடாது? உதாரணமாக இந்தியா நான்கு மதங்களின் பிறப்பிடம். இந்து,பௌத்தம்சமண,சீக்கிய மதங்கள் உருவாகி இந்தியப்பண்பாட்டை வடிவமைத்தன. இந்தியாவை வேதகாலம் முதல் நிகழ்ந்த பண்பாட்டுச்சலனங்களின் வரலாறாக எழுதலாமே. மன்னர்களையும் போர்களையும் எல்லாம் அதன்பகுதியாக விளக்கலாமே?
அப்படிப்பார்த்தால் தமிழக வரலாற்றைப் பழங்குடிவழிபாடுகளின் காலம் [சங்ககாலம்] வைதிகத்தின் காலகட்டம் [சங்கம் மருவிய காலம்] பௌத்தசமண மதங்களின் காலகட்டம் [களப்பிரர் காலம்] பக்தி இயக்க காலகட்டம்[ பிற்கால சோழ பாண்டியர் காலம்], இஸ்லாமியர் காலகட்டம் [ சுல்தானிய ஆதிக்கம்] இந்து மறு எழுச்சிக்காலகட்டம்[நாயக்கர் காலம்] நவீன ஜனநாயகக் காலட்டம் [பிரிட்டிஷ் காலம்] என்று பிரிக்கமுடியும் அல்லவா?
இன்னும் சொல்லப்போனால் பலநூறு பழங்குடிகளும் பல்லாயிரம் இனக்குழுக்களும் கலந்து வாழ்ந்த இந்தப் பெருநிலம் எப்படி எந்தெந்த வரலாற்றுச் சந்திகள் மூலம் ஒரு நவீன ஜனநாயக தேசமாக ஆகியது என்று எழுதலாமே?
அந்தக் கோணத்தில் பார்த்தால் பழங்குடிக் காலகட்டம், சிறுகுடிமன்னர்களின் காலகட்டம் [சங்ககாலம்], மூவேந்தர்களின் தோற்றம் நிகழ்ந்த காலகட்டம்[சங்கம் மருவியகாலம்], வணிக மயமாதலின் காலகட்டம்[களப்பிரர் காலம்], பேரரசுகளின் காலகட்டம்[பிற்கால சோழ பாண்டியர் காலம்] குடியேற்றங்களின் காலகட்டம் [ இஸ்லாமிய,நாயக்க படையெடுப்புகள்] நவீன ஐரோப்பிய மதிப்பீடுகளின் காலகட்டம் [பிரிட்டிஷ் காலகட்டம்] என தமிழக வரலாற்றைச் சொல்லலாம் இல்லையா?
பழைய புத்தகம் ஒன்றைப் புரட்டியபோது பத்துவருடம் முன்பு எழுதப்பட்ட ஒரு குறிப்பு கீழே விழுந்தது. அதில் அப்போது படித்த எதையோ எழுதிவைத்திருந்தேன். ஆர்னால்டோ மொமிக்லியானோ [Arnoldo Momigliano][ என்ற இத்தாலிய வரலாற்றெழுத்தியல் நிபுணர் சொன்னது. 1908 முதல் 19087 வரை வாழ்ந்த இத்தாலிய யூதரான மொமிக்லியானோ ஃபாசிச காலகட்டத்தில் லண்டனுக்குக் குடிபெயர்ந்தார். ஆக்ஸ்போர்டிலும் லண்டன் யூனிவர்சிட்டி காலேஜிலும் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் சிக்காகோ பல்கலையில் வரலாறு கற்பித்தார். நியூயார்க் ரிவ்யூ ஆப் புக்ஸில் கட்டுரைகள் எழுதினார். பழங்கால கிரேக்க,ரோமாபுரி வரலாறு குறித்த ஆய்வுகளுக்காகப் புகழ்பெற்றவர்.
அந்தக் குறிப்பில் மொமிக்லியானோ நவீன காலகட்டத்தில் வரலாற்றெழுத்தில் நான்கு அடிப்படையான மாற்றங்கள் வந்துவிட்டன என்று சொல்வதை எழுதி வைத்திருந்தேன். அவை கீழ்க்கண்டவை
1. அரசியல் வரலாறும் மதவரலாறும் வழக்கொழிந்தன. தேசியவரலாறுகள் பழையவையாக ஆயின.சமூகப்பரிணாம- பொருளாதார பரிணாம வரலாறே இன்று முக்கியமானவதாக உள்ளது .
நெடுங்காலமாக வரலாற்றெழுத்தை உருவாக்கும் அளவுகோல்களை மதமும் தேசியமும்தான் அளித்திருக்கிறது. மதமோ தேசியமோ உருவாக்கும் ஒரு கூட்டான சுய அடையாளத்தைக்கொண்டு அந்த சுய அடையாளம் உருவானது, தாக்குதல்களுக்கு உள்ளானது, மீண்டது என்ற அடிப்படையிலேயே இதுநாள் வரை வரலாறுகள் எழுதப்பட்டுள்ளன. தமிழ் வரலாறு இன்றுள்ளது போல. இப்போது வரலாற்றெழுத்தின் வழி சமூகம் எப்படி பரிணாமம் கொண்டது எப்படி அது பொருளியல் ரீதியாக கட்டமைவு கொண்டது என்பதை விளக்குவதாகவே அமையும்.
2 வரலாற்றை சில கருத்துக்களைக் கொண்டு விளக்குவது எளிதல்லாமலாகிவிட்டிருக்கிறது.
வரலாற்றை முன்னெல்லாம் ஒரு சில மையக்கருத்துக்களைக் கொண்டு விளக்குவதுண்டு. உதாரணமாக ஒட்டுமொத்த கிரேக்க வரலாற்றையும் ஜனநாயக விழுமியங்களின் வரலாறு என்று ஆர்னால்ட் டாயன்பி சொல்கிறார். இந்திய வரலாற்றை அருவமான இறையுருவத்தில் இருந்து பன்மைத்தன்மை கொண்ட இறையுருவகம் நோக்கி செல்லும் பரிணாமம் என சொல்வதுண்டு. அந்தவகை வரலாறு வழக்கொழிந்துள்ளது. இன்றைய வரலாற்றெழுத்தில் ஒரு மையச்சரடாக ஒரு கருத்தியலை ஊடாடவிடுவதில்லை.
3.சமூகத்தின் ஒட்டுமொத்த இயங்குமுறையைக் கொண்டு தனிநிகழ்வுகளை ஆராயும் போக்கு வழக்கொழிந்துள்ளது
இது நாம் வரலாற்றைப் பயன்படுத்தும் முறையில் எப்போதுமிருப்பது. குறிப்பாக இடதுசாரி வரலாற்றெழுத்தில் இது சகஜம். உதாரணமாக காஷ்மீர் மன்னன் ஸ்ரீஹர்ஷன் என்பவன் இந்து ஆலயங்களைக் கொள்ளையிட்டான் என்ற ஒற்றை நிகழ்வைக்கொண்டு இந்து மன்னர்கள் இந்து ஆலயங்களைப் படையெடுப்புக்காலங்களில் கொள்ளையிட்டனர் என்று மீண்டும் மீண்டும் நம் இடதுசாரி ஆராய்ச்சியாளர்கள் எழுதிவருகிறார்கள். இஸ்லாமியப் படையெடுப்பாளர்கள் மதநம்பிக்கையால் இந்து ஆலயங்களை இடித்தது இந்து மன்னர்களும் செய்ததே என வாதிடுகிறார்கள்.
ஜாலியன் வாலாபாக் நிகழ்வை மட்டும் கொண்டு பிரிட்டிஷ் ஆட்சியை மதிப்பிடுவதும் இப்படிப்பட்டதே. அதே பிரிட்டிஷார்தான் நிறுவனமயமாக்கப்பட்ட நீதியை இந்தியாவில் அறிமுகம் செய்தனர் என்பதை அதன் மறுபக்கமாக எடுத்துக்கொள்ளாமல் செய்யும் ஆய்வுகளுக்கு மதிப்பில்லை
4 இன்று வரலாற்றுக்கு திசையைக் கூறிவிட முடிவதில்லை.
வரலாறு ஒரு ஒரு திசை நோக்கி, ஒரு கருத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை பெரும்பாலான அரசியல்கோட்பாடுகளுக்கு ஆதாரமாக இருக்கிறது. மார்க்ஸியத்தின் சாராம்சமே இந்த வரலாற்றுவாதம்தான். ஆனால் வரலாறு அப்படி ஒரு திசைநோக்கிய பரிணாமப் பயணத்தில் உள்ளது என்ற கோணத்தில் செய்யப்படும் வரலாற்றாய்வுகள் வழக்கொழிந்துவிட்டன. தமிழ்ச்சமூகம் எங்கே செல்கிறது என இதுவரையிலான தமிழ் வரலாற்றைக்கொண்டு கூறிவிட முடியும் என்ற கோணத்தில் தமிழக வரலாற்றை எழுதுவது அபத்தம்.
இந்த நான்கு அடிப்படைகளும் இன்றைய தமிழ் வரலாற்றெழுத்தைத் தீர்மானிக்கும் கூறுகளாக உள்ளனவா? இந்த அடிப்படையில் தமிழ் வரலாறு மீண்டும் எழுதப்படுகின்றதா? அப்படி ஒரு வரலாறு எழுதப்பட்டால் அது எப்படிப்பட்டதாக இருக்கும்?
தொடர்புடைய பதிவுகள்
கேள்விகள்
உப்பு-கடிதங்கள்
அண்ணா ஹசாரே- அவதூறுகள்
அன்பின் ஜெ..
ஸ்வாமிநாதன் அய்யர் ஒரு புத்திசாலியான பத்தி எழுத்தாளர். மரபான பொருளாதார விஷயங்களை எழுதும் நிபுணர். அண்ணா ஹஸாரேயின் குழு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றிய அவரது பத்தி. இதில், முரண்பாடான பல விஷயங்கள் இருந்தாலும், அடிப்படையான பிரச்சினை ஒன்று – ஹஸாரேயின் இயக்கத்துக்குக் கறை சேர்ப்பது –
கிரண் பேடியும், கேஜ்ரிவாலும் நடந்து கொள்ளும் முறை. "நாங்கள் தவறு செய்திருந்தால், எங்களைத் தூக்கில் போடுங்கள்; ஆனால், லோக்பால் மசோதாவை நிறைவேற்றுங்கள்" என்னும் கேஜ்ரிவாலின் பேச்சு மிக முட்டாள்தனமான ஒன்று. Confession statement போல இருக்கிறது.
என்கவுண்டர் காவலர்கள் என்று ஒரு குழு உண்டு. அவர்கள் சமூக எதிரிகளை சுட்டுக் கொல்வது, ஒரு பெரும் cleansing என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், கொஞ்சம் அருகில் சென்றதும் தான் தெரிகிறது – அதுவும் ஒரு தொழில்தான். (மும்பையில்). எடுத்துக் காட்டாக, ஒரு செல்வந்தருக்கு, பணம் கேட்டு மிரட்டல் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அவர், அகில உலகப் பிரசித்தி பெற்ற போக்கிரியாக இருந்தார், மரியாதையாகக் கொடுத்து விடுவார். லோக்கலாக, இருந்தால், ஒரு பொருளாதார அளவீடு செய்வார். கேட்கும் தொகை அதிகமாக இருந்தால், என்கவுண்டர் காவலரிடம் செல்வார். அவர்கள், அந்த லோக்கல் போக்கிரியைக் குறைந்த செலவில் என்கவுண்டரில் போட்டுத் தள்ளிவிடுவர். (கொஞ்சம் அருகில் இருந்து பார்த்த ஒரு சம்பவமே இதன் மூலம்).
அப்படி எதுவும் ஆகிவிடாமல், பாரதத்தையும், அண்ணா ஹஸாரேயையும் எப்போதும்போல் இறைவன் காப்பாற்றுவாராக..
பாலா
அன்புள்ள பாலா,
ஆம், அண்ணா ஹசாரே குழுவினர் ஊடகங்களை எதிர்கொள்ளும் முறை அப்பாவித்தனமாகவே உள்ளது. அரசியல்வாதிகளின் தேர்ந்த நடவடிக்கைகளை, ஊடகநரித்தனங்களை எதிர்கொள்ள இதெல்லாம் போதாது.
அண்ணாஹசாரே ஊடகங்களின் உருவாக்கம் என்று கூவியவர்கள் இப்போது ஊடகங்கள் எந்த உருப்படியான குற்றச்சாட்டும் இல்லாதபோது, வெறும் வதந்திகளையும் அவதூறுகளையும் ஆயுதமாக்கி, அண்ணா ஹசாரே குழுவினரை அவமதிக்க முயல்வதை எப்படி விளக்குகிறார்கள்?
இந்த வகையான அவதூறுகள் மூலம் அவர்களின் தலைவர்கள் சிறுமைப்படுத்தப்பட்டிருந்தால் என்ன சொல்வார்கள்? அண்ணா ஹசாரே முதலாளித்துவ ஊடக உருவாக்கம் எனப் பேசிய எல்லா இடதுசாரிகளும் தீவிர இடதுசாரிகளும் அதிதீவிர இடதுசாரிகளும் அந்த முதலாளித்துவ ஊடகங்களில் சென்று அமர்ந்து அவரை அவதூறுசெய்கிறார்கள்.
அண்ணா ஹசாரேயின் இயக்கம் இந்திய ஊடக முதலாளிகள் விரும்பாத ஒன்றாகவே இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் அதற்கு நாடெங்கும் ஆதரவு அலை கிளம்பியபோது அவர்கள் அதைக் காசாக்கிக்கொண்டார்கள். அதாவது அண்ணா ஹசாரே ஊடக உருவாக்கம் அல்ல. அவர் தன்னைத் தியாகம் மூலம் உருவாக்கிக்கொண்டவர் . ஊடகங்களால் அவரைப்போன்ற ஒருவரை ஒருபோதும் உருவாக்க முடியாது. அப்படி ஒருவர் உருவாகி வரும்போது அவரை அவர்கள் விற்க முயல்வார்கள்
ஆனால் அவர் என்றுமே அவர்களுக்கு எதிரி தான். ஆகவே இப்போது அந்த அலை அடங்கியதும் அவரை அழிக்க முயல்கிறார்கள்
அவர்களை வெல்ல அண்ணா ஹசாரேவால் முடியவேண்டும்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
இரு பழைய கடிதங்கள்
அண்ணா ஹசாரே,ராலேகான் சித்தியில்
அண்ணா ஹசாரே-சில கடிதங்கள்
அண்ணா ஹசாரே சாதிவெறியரா?
தூக்கு-எதிர்வினைகள்
இந்தப்போராட்டத்தில்…
அண்ணா- மீண்டும் ஓர் உரையாடல்
ஒரு வரலாற்றுத்தருணம்
அண்ணா ஹசாரே- என் விமர்சனங்கள்
அண்ணா ஹசாரே- இரு தரப்புகள்
October 28, 2011
ராமாயணம்-கடிதங்கள்
ஜெயமோகன் அவர்களுக்கு
மகாபாரதத்தைத் தழுவி வந்த பல கதைகளை நாவல்களாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் படித்து வந்துள்ளேன். ஆனால், ராமாயணத்தைத் தழுவிய புத்தகங்களை இதுவரை நான் அறிந்ததில்லை. இருந்தால் சொல்லவும். அனுமனின் தரப்பில் இருந்து கதை சொல்வது போலவோ, ராவணனின் தரப்பில் இருந்து கதை சொல்வது போலவோ, அந்த மாதிரிப் புத்தகங்கள் தமிழிலோ ஆங்கிலத்திலோ இருந்தால் சொல்லுங்கள்.
Regards
Suresh Kumar
http://crackedpots.co.in/
எனக்குத்தெரிந்து ராஜாஜியின் சக்ரவர்த்தித் திருமகன் மட்டுமே ராமாயணம் சார்ந்து தமிழில் எழுதப்பட்டுள்ளது.
அகலிகை கதை புதுமைப்பித்தனால் சாபவிமோசனம் என்ற பேரில் எழுதபட்டுள்ளது
ராமாயணக்கதை நவீன வடிவில் எழுதப்பட்டுள்ளது.
ராமாயணக்கதை நவீன இலக்கியத்தில் பெரிய பாதிப்பை செலுத்தவில்லை. காரணம் அதில் தர்ம அதர்ம மயக்கம் இல்லை என்பதே
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
பாரதி விவாதம் -6 – இறை,உரைநடை
ராமாயணத்தை விடத் தொன்மையானதா இலியட்?
ராஜாஜி ஒரு கடிதம்
ராஜாஜி,மபொசி_ கடிதங்கள்
மபொசி,காமராஜ், ராஜாஜி..
புதுமைப்பித்தன் இன்று…
புதுமைப்பித்தனின் வாள்
361 டிகிரி
சிற்றிதழ்களுக்கான ஒரு தேவை மீண்டும் உதயமாகியிருக்கிறதா என்ன? தொடர்ச்சியாக இவ்வருடம் பல சிற்றிதழ்களைப் பார்க்கமுடிகிறது. ஏதோ ஓரு தேவை இல்லாமல் இவ்விதழ்கள் பலமுனைகளில் இருந்து வெளிவர முடியாது. அந்த தேவை என்ன?
[சந்திரா ]
ஒரு வசதிக்காக மூன்றாயிரம் பிரதிகளுக்குமேல் விற்கும் இதழ்களை நடுத்தர இதழ்கள் என வகுத்துக்கொள்கிறேன். காலச்சுவடு,உயிர்மை,தீராநதி, அமிர்தா, உயிர்எழுத்து ஆகிய நான்கு மாத இதழ்கள் தொடர்ந்து வருகின்றன. வாரம் ஒன்று என கொள்ளலாம். அவையெல்லாமே விரிந்த தாளில் அறுபது பக்கங்கள் வரை இடமுள்ளவை. அவற்றை நிரப்பவே இலக்கியப்படைப்புகள் போதவில்லை என்கிறார்கள். உயிரெழுத்து போன்ற இதழ்கள் பெரும்பாலும் எல்லா படைப்புகளையும் பிரசுரித்துவிடுகின்றன. அவற்றில் கணிசமான எழுத்துக்கள் புதியவர்களால் எழுதப்பட்டவை. பெரும்பாலும் முதிரா முயற்சிகள், அவ்வப்போது சில நல்லபடைப்புகள் வருகின்றன.
இவற்றுக்கு அப்பாலும் ஏன் சிற்றிதழ்கள் தேவையாகின்றன? நடுத்தர இதழ்களுக்கு சிலநிபந்தனைகள் உள்ளன. வாசக எண்ணிக்கை அதிகரிக்கும்போது உருவாகி வரும் கட்டாயம் அது. அவ்வாசகர்கள் முற்றிலும் அடையாளப்படுத்திக்கொள்ளாத ஓர் ஆக்கத்தை அவை பிரசுரிக்க முடியாது. அவற்றின் பக்கங்களில் ஒரு விஷயப்பகிர்வு இருந்தாகவேண்டுமென்பதனால் மிக நீளமான ஆக்கங்களை அவை பிரசுரிக்கமுடியாது. மொழிபெயர்ப்புகளை ஓரளவுக்குமேல் பிரசுரிக்கமுடியாது. அவற்றை எல்லாம் கணக்கில்கொள்ளாமல் படைப்புகளை பிரசுரிக்க சிற்றிதழ்கள் தேவையாகின்றனவா?
ஆனால் சிற்றிதழ்களின் உண்மையான தேவை அங்கே இல்லை. நடுத்தர இதழ்களில் உண்மையான புத்தம்புதிய இலக்கிய முயற்சிகளை பிரசுரிக்கமுடியாது. அந்த படைப்புகள் வாசகச்சூழலில் ஓரளவேனும் தங்கள் இலக்கிய இடத்தை உருவாக்கியபின்னரே பிரசுரிக்கமுடியும். ஆனால் அதுவும் நடைமுறையில் உண்மை அல்ல. கேரளத்தில் நடுத்தர இதழ்கள் பெரும் எண்ணிக்கையில் வெளிவருவதனால் சிற்றிதழ் இயக்கமே அனேகமாக இல்லை. அந்த இதழ்களுக்கு வெளியே ஒரு சிற்றிதழ் இயக்கத்தை உருவாக்கும் எல்லா முயற்சிகளுடனும் நான் இணைந்திருக்கிறேன். ஆனால் அந்தச் சிற்றிதழ்கள் என்ன புதிய அம்சத்தை உருவாக்கினாலும் உடனே அவை எல்லாம் நடு இதழ்களால் உள்ளெடுக்கப்பட்டுவிடும். சிற்றிதழ்கள் எவையுமே தொடர்ந்து மேலெழவில்லை. தமிழிலும் அவ்வகையில் நிகழ்கிறதா என்ன?
இந்த சிற்றிதழ்களை கவனிக்கையில் இவை மேலதிகமாக எதை முன்வைக்கின்றன என்ற வினா எழுகிறது. சென்னையில் இருந்து நரன்,நிலாரசிகன் இருவரையும் ஆசிரியராகக் கொண்டு வெளிவந்துள்ள 361 டிகிரி என்ற சிற்றிதழ் பக்க அளவில் கனமானது. இதில் எழுதியிருக்கும் ஏறத்தாழ அனைவருமே நடு இதழ்களில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர்கள். ஒரு சிற்றிதழில் இவர்கள் எதை புதியதாக எழுதியிருக்கிறார்கள் என்ற எண்ணமே முதலில் ஏற்பட்டது. நடு இதழ்கள் 'தாங்காத' படைப்புகள் சில இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும்.
361 டிகிரியை முதலில் பார்த்ததுமே எழுந்த எண்ணம் எண்பது,தொண்ணூறுகளில் வந்த எந்த ஒரு சிற்றிதழுடனும் இதை இயல்பாக கலந்துவிடலாம் என்பதுதான். பல படைப்பாளிகள் அக்காலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மட்டுமல்ல. அந்தச்சிற்றிதழ்களுக்கென்றே ஒரு வடிவ சூத்திரம் இருந்தது. இதிலும் அதுவே உள்ளது. நிறைய புதியவர்களின் கவிதைகள், சொற்றொடர்ச்சிக்கல்களுடன் மொழிபெயர்ப்புக் கவிதைகள், திருகலான செயற்கைமொழியில் சிலசிறுகதைகள், சில நிகழ்ச்சிக்குறிப்புகள், ஒன்றோ இரண்டோ கோட்பாட்டு மொழியாக்கக் க்கட்டுரைகள். அவ்வளவுதான். இவ்விதழில் குறைவது, நூல்மதிப்புரைகள்.
சிற்றிதழ்களின் கவிதைகள்மேல் பொதுவாக வாசகக் கவனம் எதுவும் இன்று இல்லை என்பதே உண்மை. முக்கியமான காரணம் பெரும்பாலான கவிதைகள் கவிஞருக்கென்று தனிமொழி ஏதும் இல்லாமல் பொதுவான ஒரு ஆங்கில நெடியடிக்கும் தமிழில் உள்ளன. 'நீங்கள்' 'உங்கள்' போன்ற முன்னிலையில் பேசும் கவிதைகளின் சொல்லாட்சிகள் ஆங்கிலமாகவே பிரக்ஞையில் பதிகின்றன. இருபதாண்டுகளுக்கும் மேலாக தமிழ்நவீனக்கவிதை இந்த செயற்கை மொழியை பழகி இன்று இரண்டாம்தலைமுறைக்கும் வந்துவிட்டது என்ற எண்ணம் ஏற்பட்டது.
கவிதையின் பேசுபொருட்கள் உலகமெங்கும் மாறிவிட்டிருந்தபோதிலும் கூட தமிழில் நவீனகவிதை ஓர் இயக்கமாக எழுந்த எண்பதுகளின் இருத்தலியல் கருக்களே அதிகமும் ஒலிக்கின்றன. தனிமை, உறவுகளின் வன்முறை பற்றிய வரிகளே அதிகம். ஆச்சரியமாக இன்னும்கூட அதே கடவுளைப்பற்றிய கவிதைகள்! கடவுள் சவரம் செய்கிறார் என்பதுபோல சம்பிரதாய கடவுளை மறுக்கும் கவிதைகள், கடவுள்-சாத்தான் என வழக்கமான இருமையை முன்வைக்கும் கவிதைகள்! எப்படி இது நிகழ்கிறதென்றே ஆச்சரியமாக இருக்கிறது.
கவிதைகள் எழுதுபவனின் அக உலகில் இருந்து வந்திருந்தால் அவற்றில் இருக்கக்கூடிய தனிப்பட்ட மொழி, தனிப்பட்ட பேசுபொருள் இரண்டும் இவற்றில் இல்லை. பெரும்பாலான தமிழ்ச்சிற்றிதழ்க் கவிதைகளை ஒன்றுடன் ஒன்று கலந்தால் எவற்றையும் எவரும் எழுதியிருக்கக்கூடும் என்றே நாம் உணர்வோம். நிறைய கவிதைகள் கொண்ட ஒரு இதழை வாசித்து முடிக்கையில் ஒரு கவிதை தனித்து நிற்பது அபூர்வமாகவே நிகழ்கிறது.
[இசை]
இந்த இதழில் என்னைக்கவர்ந்த கவிதைகள் 'இசை' எழுதிய மேயாத மான்.
மேயாத மான்
* மான்கள்
மிரண்டதுபோல்
ஒருபார்வை பார்க்கும்
அதற்கு நீ மிரண்டுவிட்டால்
புரண்டுவிட்டாய் போ
* மொட்டைக்கருவேலத்தின் சொப்பனத்தில்
எப்போதும்
ஒருகாயாத கானகம்
அதில் ஏராளம் மான்கள்
* பொழுதுவிடிந்தது
பொற்கோழி கூவிற்று
அம்மா வந்து அறைக்கதவை இடிக்கிறாள்
ஜன்னல்கம்பிகளூடே
ஓடி மறைகின்றன சில மாயமான்கள்
* சாயாத கொம்பிரண்டும்
முட்டிமுட்டிக் கொன்றிட்டான்
களிமோடம் உனக்குத்தான் சா
* சொல் 'மகாலிங்கம்'
எத்தனை மான்தான்
வேண்டும் உனக்கு?
வழக்கமான தமிழ்ப்புதுக்கவிதைகளில் உள்ள இருத்தலியல்சார்ந்த அதிதுக்கம், பொத்தாம்பொதுவான தத்துவார்த்தம், கலகம் போன்ற பாவனைகளே இல்லாமல் மிகச்சாதாரணமான ஒன்றை நுட்பமான புன்னகையுடன் சொல்வதனாலேயே இந்தக்கவிதை எனக்கு தனித்து தெரிகிறது. இன்றைய கவிதைகளுக்கே உரிய வகையில் பல்வேறு பண்பாட்டு உட்குறிப்புகள் பகடியாக ஒன்று கலக்கப்பட்டுள்ளன. உதாரணமாக 'மேயாதமான்' என்ற வரி நம் நாட்டார் நாடக மரபிலிருந்து வருவது. 'பொழுதுவிடிந்தது பொற்கோழிகூவிற்று' செவ்வியல் மரபிலிருந்து. பகடி இரண்டையும் ஒரே இடத்தில் இணையவைக்கிறது.
வே.பாபு, கார்த்திகை பாண்டியன், நிலா ரசிகன் கவிதைகள் ரசிக்கத் தக்கவை. ஆனால் அவை இந்த ஒட்டுமொத்ததில் இருந்து மேலெழவில்லை. பா.வெங்கடேசன் கவிதைகளும் பொதுவான தளத்தில், அவரது வழக்கமான மொழியில் இருக்கின்றன. ஆனால் மொத்த கவிதையை மீறி
'இன்று மீண்டும் பிறந்தநாள்
பழைய மலைகள் புரண்டு
அவளுள் புதைந்தன'
என்ற வரி என்னை தொற்றிக்கொண்டது. விதவிதமான அர்த்தங்களுடன் என்னுடன் வந்தது. கவிஞன் மொழியில் செய்யும் விளக்கமுடியாத மாயத்தின் தடையம் இது. இந்த இதழில் நான் பெற்ற மிகச்சிறந்த விஷயங்களில் ஒன்று இந்தவரி.
கதைகளில் இருவகை. லட்சுமி சரவணக்குமார், கவின்மலர் கதைகள் அடையப்படாதவை என்று தோன்றியது. கவின்மலர் கதைக்கு வெகுதூரம் முன்னரே ஒரு எளிய மையத்தில் நின்றுவிடுகிறார். லட்சுமி சரவணகுமாரின் கதை அதன் கருவிலேயே தவறான திறப்பைக் கொண்டுள்ளது. அகஅனுபவத்தின் முன் அப்பாவித்தனமாக நிற்பது எப்போதும் கலைக்கு தேவையாகிறது. செயற்கையான ஒரு வடிவம் காரணமாக இக்கதை அந்த அகநிகழ்வை நம்பகமாக உருவாக்க முடியவில்லை. ஆனாலும் இரு கதைகளும் முயற்சிகள். இரு எழுத்தாளர்களுமே நான் எப்போதுமே கவனிப்பவர்கள்.
பிறகதைகள் வெவ்வேறு வகையில் தோல்விகள். கோணங்கி, முருகபூபதி இருவரின் ஆக்கங்களையும் வெறுமே மனப்பிம்பங்களையும் மொழியையும் செயற்கையாக அளைந்துகொண்டிருக்கும் யத்தனங்கள் என்றே நான் உணர்கிறேன். கலையின் வெற்றி தோல்வி என நான் என்ன சொல்கிறேன் என ஏதேனும் வகையில் கலையை உருவாக்க, வாசிக்க முடிந்தவர்களால் புரிந்துகொள்ளமுடியும். அது வாசகனை அடைதலில் உள்ள வெற்றிதோல்வி கூட அல்ல. எழுத்தாளன் தானே உணரும் வெற்றிதோல்வி அது. வெற்றியை கலைஞன் அவனே உணர்ந்தால் மட்டும்போதும். மிக நுட்பமாக நல்ல வாசகனும் அதை உணர்வான்.
படைப்பை தன்னுள் உணர்தல் – மொழியில் நிகழ்த்திக்கொள்ளுதல் என்ற இரு புள்ளிகள் நடுவே நிகழ்ந்துகொண்டிருக்கும் விளங்கவே முடியாத பிரம்மாண்டமான தற்செயல்களின் பெருக்கை உணர்ந்த ஒருவனே இந்த வெற்றி தோல்வியை உணர முடியும். பிடிக்கநினைத்த பட்டாம்பூச்சி அதுவே கைவிரல்களில் வந்து சிறகு மடக்கி அமர்வதுபோன்றது அது.
ஒரு படைப்பை தன்னுள் உணர்வதில் ஆரம்பிக்கிறது எழுத்து. அதைச்சொல்ல ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் அவனுக்கான வார்த்தை இருக்கும். தரித்தல் என அதை வண்ணதாசன் ஒருமுறை சொன்னார். conceive என்ற சொல்லின் மொழியாக்கமாக. அது தன்னிச்சையாக நிகழ்வது. அதை நிகழ்த்திக்கொள்ள ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் அந்தரங்கமான வழிமுறைகள் உத்திகள் இருக்கும்.
ஒரு படைப்பை ஓர் எழுத்தாளன் எழுத ஒரே வழிதான் உள்ளது என்பார்கள். அதை கண்டடைந்தால் அதுவே படைப்பின் வடிவத்தை அதன் நோக்கை தீர்மானிக்கிறது. சிலசமயம் உணர்ந்த அக்கணத்திலேயே மிகச்சரியாக அதை பிடித்துவிடமுடியும். சிலசமயம் வருடங்கள் தாண்டிச்சென்றாலும் திறக்கப்படாததாக படைப்பு நெஞ்சுக்குள் கிடக்கும். சிலசமயம் வேறெதையோ செய்ய புதியதாக அது கிளம்பி வரும். எழுத்து என்ற இயக்கத்தில் உள்ள ஆதாரமான மகிழ்ச்சி என்பதே இந்த தற்செயல்களை அறியும் கணங்கள்தான். படைப்பு கிடைப்பதுதான் அது. அமைதல் என அதை வண்ணதாசன் சொல்கிறார்.
சரியாக 'தரிக்க'ப்பட்ட ஆக்கம் சரியாக 'அமைவ'தே படைப்பின் வெற்றி என்பது. எந்த எழுத்தாளனுக்கும் அது பலநூறு கைநழுவல்கள் வழியாக தற்செயலாக, அற்புத நிகழ்வாக, பெறப்படுவதாகவே இருக்கும். படைப்பின் வெற்றி என்பது ஒருவகையில் மொழியும் எழுத்தாளனும் கொள்ளும் சரியான இசைவு. நவீன வாசிப்புசார்ந்த கொள்கைகள் வாசிப்பை எந்த அளவுக்கு மையப்படுத்தினாலும் எழுதும் தரப்பில் உள்ள இந்த நிகழ்வை அவை விளக்கிவிடமுடியாது.
அவ்வாறு எழுத்தாளன் தரப்பில் வெற்றிபெற்ற ஓர் ஆக்கமே வாசகனுக்கும் வெற்றிபெற்றது. அதை மிக எளிதாக வாசகன் உணர்ந்துகொள்ள முடியும். ஓர் எழுத்தாளன் ஒரு படைப்பில் இரண்டு பத்திகளை 'தன்னைமறந்து' எழுதினான் என்று கொள்வோம். அவனுடைய கூர்ந்த வாசகர் அனைவருமே தவறாமல் அந்த இரு பத்திகளை முக்கியமானவையாகச் சுட்டிக்காட்டுவதை அவன் காண்பான். இது எழுத ஆரம்பிக்கும்பருவத்தில் எழுத்தாளனை பிரமிக்கச்செய்யும். பின்னர் அதுவே இயல்பானது என அவன் அறிந்துகொள்வான். படைப்பின் வெற்றி என்பது அவ்வாறு வாசகன் எழுத்தாளனை கண்டுகொள்ளும் கணம் நிகழ்வதே.
மேலே சொன்ன கதைகளில் அதற்கான முயற்சியே இல்லை. ஒரு மனப்பழக்கமாக ஒருவகையான செயற்கையான படிம மொழி பழக்கப்பட்டுவிடுகிறது. காதிலும் கருத்திலும் விழும் எல்லாவற்றையும் அந்த மொழிக்குள் திருகித்திருகி செலுத்திக்கொண்டே செல்லும் தொழில்நுட்பம் மட்டும்தான் அது. காத்திருத்தல் இல்லை, தரித்தலின் துயரமும் உவகையும் இல்லை, அமைவதன் களியாட்டமும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் அமர்ந்து எத்தனை பக்கங்களை வேண்டுமானாலும் அந்த எந்திரத்தால் எழுத்தை உருவாக்கிக்கொள்ளமுடியும்.
இருபதாண்டுகளாக மாற்றமே இல்லாமல் கோணங்கி இதையே சலிக்காமல்செய்து வருகிறார். மிக எளிதாக அதை அவர் தம்பி அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவும் முடிகிறது. அதுவும் அதே மாதிரி இருக்கிறது. நல்ல கலை கலைஞனின் அந்தரங்கம் சார்ந்தது. அது தற்செயலால் என்றும் அலையடித்துக்கொண்டே இருக்கும். பெரும் கலைவெற்றியை அடைந்த படைபபளி அடுத்த படைப்பை கேனத்தனமாக எழுத நேர்வதும் அதனால்தான். கலையின் தொழில்நுட்பத்தையே பிறருக்கு கற்றுக்கொடுக்க முடியும், கலையை ஒருபோதும் கற்பிக்க முடியாது.
ஏன் இவ்வகை முயற்சியை இலக்கியமென அங்கீகரிக்க நான் மறுக்கிறேன்? உண்மையான இலக்கியம் என்பது வாழ்க்கையேதான். வாழ்க்கையைப்பற்றி துளியாகவும் முழுமையாகவும் பேசிக்கொண்டிருக்கிறது இலக்கியம். மொழிவிளையாட்டு என்பது வாழ்க்கைபற்றி எதுவும் அறியப்படவில்லை, எதுவும் வெளிப்படுவதற்குமில்லை என்ற நிலையில் மட்டுமே உருவாகக்கூடியது.
இந்த இதழிலேயே அந்த வகையான கலைவெற்றிக்கு உதாரணமாக நான் சுட்டிக்காட்டும் ஒரு கதை இருப்பது மகிழ்ச்சியளித்தது. சந்திரா எழுதிய 'அறைக்குள் புகுந்த தனிமை' சென்ற மாதம் கோயில்பட்டி சென்றிருந்தபோது நான் இந்தக்கதை பற்றி தேவதச்சனிடம் பேச ஆரம்பித்ததுமே அவர் உத்வேகத்துடன் 'எக்ஸாட்லி இதே கதையைத்தான் நான் யோசிச்சிட்டிருந்தேன்' என ஆரம்பித்தார்.
'உப்பைப்போல் வெறுமை கொண்டிருந்த உடலாக' தன்னை உணரும் ஒரு பெண்ணின் ஒரு நாள் இந்தக்கதை. தோழியைச் சந்திக்கச் செல்கிறாள். தோழியுடனான அவளுடைய உறவின் நுட்பமான சிலதருணங்கள் வழியாகச் செல்லும் கதை அவள் ஒரு ஆணைச் சந்திக்கும்போது புதியதாக ஆரம்பிக்கிறது. அவளை அவன் கவர முயல்கிறான். அவள் அதை அனுமதிக்கிறார். மெல்லிய சல்லாப பாவனைகள். ஓர் இடத்தில் 'நான் படிக்கலை, பிராஸ்டிடியூட்டா இருக்கேன்' என்கிறாள் பொய்யாக.
உடனே அவன் பாவனைகள் அனைத்தும் தலைகீழாகின்றன. அவன் அலட்சியமும் திமிரும் கொண்டவனாக ஆகிறான். அவள் அவனை தன் வீட்டுக்குக் கொண்டு வருகிறாள். ஏமாற்றி அவனை ஓர் அறைக்குள் மூடிவிடுகிறாள். இரவெல்லாம் அவனை அங்கே வைத்திருக்கிறாள். அவன் சட்டென்று இன்னொரு தோற்றம் கொள்கிறான். அஞ்சி நடுங்கி அழுது புலம்புகிறான். காலையில் அவள் திறந்து விடும்போது குழிந்த கண்களும் நடுங்கும் உடலுமாக குறுகிப்போய் வெளியேறுகிறான்.
பலதளங்களில் பலவாசிப்புகளுக்குச் சாத்தியமளிக்கும் இக்கதையை நான் சொல்லவோ விளக்கவோ போவதில்லை. நான் இதை வாசித்த இரு முக்கியமான வழிகளை மட்டும் கோடிகாட்ட விரும்புகிறேன். ஒன்று தோழியுடன் அவளுக்கிருக்கும் உறவுக்கும் ஆணுடன் இருக்கும் உறவுக்குமான வேறுபாடு. தோழியுடனான உறவு இயல்பானதாக ஆனால் சற்றே சலிப்பானதாக இருக்கிறது. அங்கே அவளுக்கு மர்மங்கள் இல்லை. ஆகவே அவள் சீண்டப்படுவதில்லை. அவள் இயல்பாக இருக்கிறாள்.
ஆனால் ஆணுடனான உறவு அவளை கொந்தளிக்கசெய்கிறது. அதில் அவளுக்கு பலவகையான மர்மங்கள் உள்ளன. ஆகவே விதவிதமான சுயபாவனைகள் வழியாக அவள் அவனை அணுகுகிறாள். கொஞ்சிக்குலாவும் காதலியாக, விபச்சாரியாக, அவனை தண்டிக்கும் குரூரம் கொண்டவளாக. ஒருபாவனையில் இருந்து இன்னொன்றுக்கு இயல்பாகச் செல்கிறாள். எல்லா பாவனைகளுமே அவளுக்கு முன்னரே தெரிந்திருக்கிறது.
அந்த பாவனைகளுக்கு ஏற்ப அவள்முன் அவன் மாறிக்கொண்டே இருக்கிறான் என்பதே இந்தக்கதையின் இரண்டாவது நுழைவு வழி. பெண்ணை அவள்போக்கிலேயே சென்று கொஞ்சி புகழ்ந்து வசியப்படுத்த நினைக்கும் காதலனாக இருக்கிறான். அவள் விபச்சாரி என்றதுமே அவன் வாடிக்கையாளனாக ஆகிவிடுகிறான்.வாடிக்கையாளனுக்கான எல்லா முகங்களும் வந்து விடுகிறது. அவள் உடலை விலைகொடுத்து வாங்கிய அவன் அதை உடல்மட்டுமாகவே அடைய நினைக்கிறான். ஆகவே அவள் மனதை வதைத்து ஆளுமையை அவமதிக்க முனைகிறான்
அவள் சட்டென்று தண்டிப்பவளாக ஆகிறாள். அந்த புரிந்துகொள்ளமுடியாமை காரணமாக அவனை தாண்டிச்செல்கிறாள். அந்நிலையில் அவனுக்கு அவளை எதிர்கொள்ள்ள எந்த முன்னர் தயாரிக்கப்பட்ட பாவனையும் கைவசமில்லை. சட்டென்று சரணடைகிறான். மன்றாடுகிறான். தோற்று பின்வாங்குகிறான். அவள் வெற்றியின் வெறுமையில் அமர்ந்திருக்கிறாள்
ஆண்-பெண் உறவின் பாவனைகளின் நடனம் இந்தக்கதை. நாம் வாழ்க்கையில் காணும் எல்லாவகையான ஆண்-பெண் உறவுகளுடன் இதை பொருத்தி விரித்துக்கொள்ளமுடியும். ஒவ்வொரு தளத்திலும் நம் வாழ்க்கையை நாம் புரிந்துகொள்ள திறப்புகளை அளித்துக்கொண்டே செல்கிறது . இந்த உண்மையான வாழ்க்கை அம்சம்தான் கலையை அர்த்தமுள்ளதாக்குகிறது. சந்திராவின் இந்தக்கதையை கலையாக்குவதே ஆணின் மாறிமாறிச் செல்லும் நுண்பாவனைகள் பற்றிய அற்புதமான அவதானிப்புதான்.
இதை ஒருவர் மொழியை அளைந்து அடைய முடியாது. செயற்கையாக உருவாக்க முடியாது. மொழியும்வடிவமும் நிலமும்நீரும் போல. விதை விழுந்தால்மட்டுமே முளை எழமுடியும். விதை வாழ்க்கைபற்றிய ஆழ்ந்த அவதானிப்பில் இருந்து வருகிறது. அந்த அவதானிப்பு ஆராய்ச்சியாலோ ,வாசிப்பாலோ, சிந்தனையாலோ, விவாதத்தாலோ அடையப்படுவதல்ல. ஆராய்ச்சியும், வாசிப்பும், சிந்தனையும் கொண்டவர்கள் மேலோட்டமான கோட்பாடுகளையே பேசமுடியும். கலைக்கான கச்சாப்பொருள் எழுத்தாளனின் நுட்பமான ஆழ்மனம் தன்னைச்சுற்றி நிகழும் வாழ்க்கையில் இருந்து தன்னை அறியாமலேயே தொட்டு எடுக்கக்கூடிய ஒன்று.
பெரும்பாலும் அந்த அவதானிப்பை எழுத்தாளர்களால் கலைக்கு வெளியே விளக்கமுடிவதில்லை. அப்படி ஓர் அவதானிப்பு நிகழ்ந்திருப்பதை எழுதுவதற்கு முன் அந்த தூண்டுதல் வரும்போது மொத்தையாக உணரமுடியும். எழுதிமுடித்தபின்னரே அது அவருக்கே தெளிவாகிறது. அடைந்துவிட்டோம் என்ற நிறைவு, வெற்றி பெற்றுவிட்டோம் என்ற எண்ணம் எழுகிறது. மிகச்சரியாக வாசகன் அதை அடையவும் செய்வான். அதுவே கலையின் வெற்றி.
மீண்டும் சிற்றிதழ்கள் பற்றி. இந்தக்கதையை உயிர்மையோ காலச்சுவடோ மிக விரும்பி பிரசுரிக்கும் என்றே நினைக்கிறேன். அப்படியானால் எதற்காகச் சிற்றிதழ்? கலைவெற்றியை உத்தேசிக்கவே செய்யாத , செயற்கையான 'சோதனைகளை' பிரசுரிக்கவா?
சிற்றிதழ்கள் செய்யவேண்டிய பணி மிச்சமிருப்பதாகவே இச்சிற்றிதழ் எனக்குச் சொன்னது. இன்றைய இலக்கியத்தின் பிரச்சினைகள் வேறு. முக்கியமான சில அவதானிப்புகளைச் சொல்லமுடியும். நுண்ஓளிப்பதிவுக்கருவிகள், வரைகலை, நேர்கோடற்ற படத்தொகுப்பு ஆகியவற்றின் மூலம் காட்சிக்கலை படிம உருவாக்கத்தில் புதுப்புதுச் சாத்தியங்களை திறந்துவிட்டிருக்கிறது. எண்பதுகளில் கவிதைகளும் கதைகளும் படிமங்களை நம்பி செயல்பட்டன. இன்று அப்படி அல்ல. படிமம் என்ற உத்தியையே இலக்கியம் கைவிடவேண்டிய நிலை.
ஆகவே இன்று கவிதைகள் நுண்சித்தரிப்பு என்ற உத்தியை நோக்கிச் சென்றுவிட்டிருக்கின்றன. படிமங்கள் அணிகள் அற்ற வெற்றுக்கவிதை என்னும் வடிவம் பெரிதும் முயலப்படுகிறது. கலாச்சாரநினைவு என்ற பொதுவான பெருவெளியின் மர்மப்புள்ளிகளைத் தீண்டி எழுப்புவது, அவற்றைப் பின்னிப்பின்னி புதிய ஆக்கங்களை உருவாக்குவது என்ற வழி இன்று பெரிதாகத் திறந்திருக்கிறது. மொழிக்குள் நிறைந்திருக்கும் பண்பாட்டுநினைவுகளே இன்றைய இலக்கிய வடிவங்களின் கட்டுமானப்பொருள்களாக உள்ளன. இசை எழுதிய 'மேயாதமான்' கவிதை அவ்வகைப்பட்ட முயற்சி.
கதைகளில் மிகநேரடியான நுண்சித்தரிப்புள்ள ஆக்கங்கள் முயலப்படுகின்றன, சந்திராவின் 'அறைக்குள் புகுந்த தனிமை' கதை அவ்வகையானது. பல்வேறு பண்பாட்டு உட்குறிப்புகளை பிறஎழுத்துக்கள், வெகுஜனக்கலைகள், செய்திகள், வரலாறு ஆகியவற்றில் இருந்து எடுத்துக்கொண்டு உருவாக்கக்கூடிய வடிவங்கள் முயலப்படுகின்றன, லட்சுமி சரவணக்குமார் 'தஞ்சை பிரகாஷும் மிஷன்தெரு ரம்பாவும்' கதையில் அதை முயற்சி செய்திருக்கிறார். செவ்விலக்கியங்கள் திரும்ப எழுதப்படுவது, வரலாறும் செய்திகளும் புனைவாக்கப்படுவது என பல முறைகள் வாசிக்கக் கிடைக்கின்றன. ஆனால் அவை வெறு உத்திச்சோதனைகளாக அல்லாமல் வாழ்க்கையில் இருந்து கிளைத்து வாழ்க்கையை விளக்கக்கூடியவையாக ஆகும்போதே கலைமதிப்பு பெறுகின்றன.
தமிழ்ச்சிற்றிதழ் இயக்கம் இந்த புதிய எல்லைகளை நோக்கி செல்லும் திறப்புகளை நிகழ்த்திக்கொள்ள தன் பக்கங்களைச் செலவிடுமென்றால் ஒரு புதிய தொடக்கம் நிகழக்கூடும். அந்த எண்ணத்தில் இச்சிற்றிதழை வரவேற்கிறேன்.
அறைக்குள் புகுந்த தனிமை சந்திரா சிறுகதை
361 டிகிரி .சிற்றிதழ். தொடர்புக்கு 4/117 சி.வடக்குப்பட்டு,நான்காவது குறுக்குத்தெரு, கோவிளம்பாக்கம், மேடவாக்கம், சென்னை 600100
மின்னஞ்சல் 361degreelittlemagazine@gmail.com
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
360 டிகிரி
சிற்றிதழ்களுக்கான ஒரு தேவை மீண்டும் உதயமாகியிருக்கிறதா என்ன? தொடர்ச்சியாக இவ்வருடம் பல சிற்றிதழ்களைப் பார்க்கமுடிகிறது. ஏதோ ஓரு தேவை இல்லாமல் இவ்விதழ்கள் பலமுனைகளில் இருந்து வெளிவர முடியாது. அந்த தேவை என்ன?
[சந்திரா ]
ஒரு வசதிக்காக மூன்றாயிரம் பிரதிகளுக்குமேல் விற்கும் இதழ்களை நடுத்தர இதழ்கள் என வகுத்துக்கொள்கிறேன். காலச்சுவடு,உயிர்மை,தீராநதி, அமிர்தா, உயிர்எழுத்து ஆகிய நான்கு மாத இதழ்கள் தொடர்ந்து வருகின்றன. வாரம் ஒன்று என கொள்ளலாம். அவையெல்லாமே விரிந்த தாளில் அறுபது பக்கங்கள் வரை இடமுள்ளவை. அவற்றை நிரப்பவே இலக்கியப்படைப்புகள் போதவில்லை என்கிறார்கள். உயிரெழுத்து போன்ற இதழ்கள் பெரும்பாலும் எல்லா படைப்புகளையும் பிரசுரித்துவிடுகின்றன. அவற்றில் கணிசமான எழுத்துக்கள் புதியவர்களால் எழுதப்பட்டவை. பெரும்பாலும் முதிரா முயற்சிகள், அவ்வப்போது சில நல்லபடைப்புகள் வருகின்றன.
இவற்றுக்கு அப்பாலும் ஏன் சிற்றிதழ்கள் தேவையாகின்றன? நடுத்தர இதழ்களுக்கு சிலநிபந்தனைகள் உள்ளன. வாசக எண்ணிக்கை அதிகரிக்கும்போது உருவாகி வரும் கட்டாயம் அது. அவ்வாசகர்கள் முற்றிலும் அடையாளப்படுத்திக்கொள்ளாத ஓர் ஆக்கத்தை அவை பிரசுரிக்க முடியாது. அவற்றின் பக்கங்களில் ஒரு விஷயப்பகிர்வு இருந்தாகவேண்டுமென்பதனால் மிக நீளமான ஆக்கங்களை அவை பிரசுரிக்கமுடியாது. மொழிபெயர்ப்புகளை ஓரளவுக்குமேல் பிரசுரிக்கமுடியாது. அவற்றை எல்லாம் கணக்கில்கொள்ளாமல் படைப்புகளை பிரசுரிக்க சிற்றிதழ்கள் தேவையாகின்றனவா?
ஆனால் சிற்றிதழ்களின் உண்மையான தேவை அங்கே இல்லை. நடுத்தர இதழ்களில் உண்மையான புத்தம்புதிய இலக்கிய முயற்சிகளை பிரசுரிக்கமுடியாது. அந்த படைப்புகள் வாசகச்சூழலில் ஓரளவேனும் தங்கள் இலக்கிய இடத்தை உருவாக்கியபின்னரே பிரசுரிக்கமுடியும். ஆனால் அதுவும் நடைமுறையில் உண்மை அல்ல. கேரளத்தில் நடுத்தர இதழ்கள் பெரும் எண்ணிக்கையில் வெளிவருவதனால் சிற்றிதழ் இயக்கமே அனேகமாக இல்லை. அந்த இதழ்களுக்கு வெளியே ஒரு சிற்றிதழ் இயக்கத்தை உருவாக்கும் எல்லா முயற்சிகளுடனும் நான் இணைந்திருக்கிறேன். ஆனால் அந்தச் சிற்றிதழ்கள் என்ன புதிய அம்சத்தை உருவாக்கினாலும் உடனே அவை எல்லாம் நடு இதழ்களால் உள்ளெடுக்கப்பட்டுவிடும். சிற்றிதழ்கள் எவையுமே தொடர்ந்து மேலெழவில்லை. தமிழிலும் அவ்வகையில் நிகழ்கிறதா என்ன?
இந்த சிற்றிதழ்களை கவனிக்கையில் இவை மேலதிகமாக எதை முன்வைக்கின்றன என்ற வினா எழுகிறது. சென்னையில் இருந்து நரன்,நிலாரசிகன் இருவரையும் ஆசிரியராகக் கொண்டு வெளிவந்துள்ள 360 டிகிரி என்ற சிற்றிதழ் பக்க அளவில் கனமானது. இதில் எழுதியிருக்கும் ஏறத்தாழ அனைவருமே நடு இதழ்களில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர்கள். ஒரு சிற்றிதழில் இவர்கள் எதை புதியதாக எழுதியிருக்கிறார்கள் என்ற எண்ணமே முதலில் ஏற்பட்டது. நடு இதழ்கள் 'தாங்காத' படைப்புகள் சில இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும்.
360 டிகிரியை முதலில் பார்த்ததுமே எழுந்த எண்ணம் எண்பது,தொண்ணூறுகளில் வந்த எந்த ஒரு சிற்றிதழுடனும் இதை இயல்பாக கலந்துவிடலாம் என்பதுதான். பல படைப்பாளிகள் அக்காலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மட்டுமல்ல. அந்தச்சிற்றிதழ்களுக்கென்றே ஒரு வடிவ சூத்திரம் இருந்தது. இதிலும் அதுவே உள்ளது. நிறைய புதியவர்களின் கவிதைகள், சொற்றொடர்ச்சிக்கல்களுடன் மொழிபெயர்ப்புக் கவிதைகள், திருகலான செயற்கைமொழியில் சிலசிறுகதைகள், சில நிகழ்ச்சிக்குறிப்புகள், ஒன்றோ இரண்டோ கோட்பாட்டு மொழியாக்கக் க்கட்டுரைகள். அவ்வளவுதான். இவ்விதழில் குறைவது, நூல்மதிப்புரைகள்.
சிற்றிதழ்களின் கவிதைகள்மேல் பொதுவாக வாசகக் கவனம் எதுவும் இன்று இல்லை என்பதே உண்மை. முக்கியமான காரணம் பெரும்பாலான கவிதைகள் கவிஞருக்கென்று தனிமொழி ஏதும் இல்லாமல் பொதுவான ஒரு ஆங்கில நெடியடிக்கும் தமிழில் உள்ளன. 'நீங்கள்' 'உங்கள்' போன்ற முன்னிலையில் பேசும் கவிதைகளின் சொல்லாட்சிகள் ஆங்கிலமாகவே பிரக்ஞையில் பதிகின்றன. இருபதாண்டுகளுக்கும் மேலாக தமிழ்நவீனக்கவிதை இந்த செயற்கை மொழியை பழகி இன்று இரண்டாம்தலைமுறைக்கும் வந்துவிட்டது என்ற எண்ணம் ஏற்பட்டது.
கவிதையின் பேசுபொருட்கள் உலகமெங்கும் மாறிவிட்டிருந்தபோதிலும் கூட தமிழில் நவீனகவிதை ஓர் இயக்கமாக எழுந்த எண்பதுகளின் இருத்தலியல் கருக்களே அதிகமும் ஒலிக்கின்றன. தனிமை, உறவுகளின் வன்முறை பற்றிய வரிகளே அதிகம். ஆச்சரியமாக இன்னும்கூட அதே கடவுளைப்பற்றிய கவிதைகள்! கடவுள் சவரம் செய்கிறார் என்பதுபோல சம்பிரதாய கடவுளை மறுக்கும் கவிதைகள், கடவுள்-சாத்தான் என வழக்கமான இருமையை முன்வைக்கும் கவிதைகள்! எப்படி இது நிகழ்கிறதென்றே ஆச்சரியமாக இருக்கிறது.
கவிதைகள் எழுதுபவனின் அக உலகில் இருந்து வந்திருந்தால் அவற்றில் இருக்கக்கூடிய தனிப்பட்ட மொழி, தனிப்பட்ட பேசுபொருள் இரண்டும் இவற்றில் இல்லை. பெரும்பாலான தமிழ்ச்சிற்றிதழ்க் கவிதைகளை ஒன்றுடன் ஒன்று கலந்தால் எவற்றையும் எவரும் எழுதியிருக்கக்கூடும் என்றே நாம் உணர்வோம். நிறைய கவிதைகள் கொண்ட ஒரு இதழை வாசித்து முடிக்கையில் ஒரு கவிதை தனித்து நிற்பது அபூர்வமாகவே நிகழ்கிறது.
[இசை]
இந்த இதழில் என்னைக்கவர்ந்த கவிதைகள் 'இசை' எழுதிய மேயாத மான்.
மேயாத மான்
* மான்கள்
மிரண்டதுபோல்
ஒருபார்வை பார்க்கும்
அதற்கு நீ மிரண்டுவிட்டால்
புரண்டுவிட்டாய் போ
* மொட்டைக்கருவேலத்தின் சொப்பனத்தில்
எப்போதும்
ஒருகாயாத கானகம்
அதில் ஏராளம் மான்கள்
* பொழுதுவிடிந்தது
பொற்கோழி கூவிற்று
அம்மா வந்து அறைக்கதவை இடிக்கிறாள்
ஜன்னல்கம்பிகளூடே
ஓடி மறைகின்றன சில மாயமான்கள்
* சாயாத கொம்பிரண்டும்
முட்டிமுட்டிக் கொன்றிட்டான்
களிமோடம் உனக்குத்தான் சா
* சொல் 'மகாலிங்கம்'
எத்தனை மான்தான்
வேண்டும் உனக்கு?
வழக்கமான தமிழ்ப்புதுக்கவிதைகளில் உள்ள இருத்தலியல்சார்ந்த அதிதுக்கம், பொத்தாம்பொதுவான தத்துவார்த்தம், கலகம் போன்ற பாவனைகளே இல்லாமல் மிகச்சாதாரணமான ஒன்றை நுட்பமான புன்னகையுடன் சொல்வதனாலேயே இந்தக்கவிதை எனக்கு தனித்து தெரிகிறது. இன்றைய கவிதைகளுக்கே உரிய வகையில் பல்வேறு பண்பாட்டு உட்குறிப்புகள் பகடியாக ஒன்று கலக்கப்பட்டுள்ளன. உதாரணமாக 'மேயாதமான்' என்ற வரி நம் நாட்டார் நாடக மரபிலிருந்து வருவது. 'பொழுதுவிடிந்தது பொற்கோழிகூவிற்று' செவ்வியல் மரபிலிருந்து. பகடி இரண்டையும் ஒரே இடத்தில் இணையவைக்கிறது.
வே.பாபு, கார்த்திகை பாண்டியன், நிலா ரசிகன் கவிதைகள் ரசிக்கத் தக்கவை. ஆனால் அவை இந்த ஒட்டுமொத்ததில் இருந்து மேலெழவில்லை. பா.வெங்கடேசன் கவிதைகளும் பொதுவான தளத்தில், அவரது வழக்கமான மொழியில் இருக்கின்றன. ஆனால் மொத்த கவிதையை மீறி
'இன்று மீண்டும் பிறந்தநாள்
பழைய மலைகள் புரண்டு
அவளுள் புதைந்தன'
என்ற வரி என்னை தொற்றிக்கொண்டது. விதவிதமான அர்த்தங்களுடன் என்னுடன் வந்தது. கவிஞன் மொழியில் செய்யும் விளக்கமுடியாத மாயத்தின் தடையம் இது. இந்த இதழில் நான் பெற்ற மிகச்சிறந்த விஷயங்களில் ஒன்று இந்தவரி.
கதைகளில் இருவகை. லட்சுமி சரவணக்குமார், கவின்மலர் கதைகள் அடையப்படாதவை என்று தோன்றியது. கவின்மலர் கதைக்கு வெகுதூரம் முன்னரே ஒரு எளிய மையத்தில் நின்றுவிடுகிறார். லட்சுமி சரவணகுமாரின் கதை அதன் கருவிலேயே தவறான திறப்பைக் கொண்டுள்ளது. அகஅனுபவத்தின் முன் அப்பாவித்தனமாக நிற்பது எப்போதும் கலைக்கு தேவையாகிறது. செயற்கையான ஒரு வடிவம் காரணமாக இக்கதை அந்த அகநிகழ்வை நம்பகமாக உருவாக்க முடியவில்லை. ஆனாலும் இரு கதைகளும் முயற்சிகள். இரு எழுத்தாளர்களுமே நான் எப்போதுமே கவனிப்பவர்கள்.
பிறகதைகள் வெவ்வேறு வகையில் தோல்விகள். கோணங்கி, முருகபூபதி இருவரின் ஆக்கங்களையும் வெறுமே மனப்பிம்பங்களையும் மொழியையும் செயற்கையாக அளைந்துகொண்டிருக்கும் யத்தனங்கள் என்றே நான் உணர்கிறேன். கலையின் வெற்றி தோல்வி என நான் என்ன சொல்கிறேன் என ஏதேனும் வகையில் கலையை உருவாக்க, வாசிக்க முடிந்தவர்களால் புரிந்துகொள்ளமுடியும். அது வாசகனை அடைதலில் உள்ள வெற்றிதோல்வி கூட அல்ல. எழுத்தாளன் தானே உணரும் வெற்றிதோல்வி அது. வெற்றியை கலைஞன் அவனே உணர்ந்தால் மட்டும்போதும். மிக நுட்பமாக நல்ல வாசகனும் அதை உணர்வான்.
படைப்பை தன்னுள் உணர்தல் – மொழியில் நிகழ்த்திக்கொள்ளுதல் என்ற இரு புள்ளிகள் நடுவே நிகழ்ந்துகொண்டிருக்கும் விளங்கவே முடியாத பிரம்மாண்டமான தற்செயல்களின் பெருக்கை உணர்ந்த ஒருவனே இந்த வெற்றி தோல்வியை உணர முடியும். பிடிக்கநினைத்த பட்டாம்பூச்சி அதுவே கைவிரல்களில் வந்து சிறகு மடக்கி அமர்வதுபோன்றது அது.
ஒரு படைப்பை தன்னுள் உணர்வதில் ஆரம்பிக்கிறது எழுத்து. அதைச்சொல்ல ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் அவனுக்கான வார்த்தை இருக்கும். தரித்தல் என அதை வண்ணதாசன் ஒருமுறை சொன்னார். conceive என்ற சொல்லின் மொழியாக்கமாக. அது தன்னிச்சையாக நிகழ்வது. அதை நிகழ்த்திக்கொள்ள ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் அந்தரங்கமான வழிமுறைகள் உத்திகள் இருக்கும்.
ஒரு படைப்பை ஓர் எழுத்தாளன் எழுத ஒரே வழிதான் உள்ளது என்பார்கள். அதை கண்டடைந்தால் அதுவே படைப்பின் வடிவத்தை அதன் நோக்கை தீர்மானிக்கிறது. சிலசமயம் உணர்ந்த அக்கணத்திலேயே மிகச்சரியாக அதை பிடித்துவிடமுடியும். சிலசமயம் வருடங்கள் தாண்டிச்சென்றாலும் திறக்கப்படாததாக படைப்பு நெஞ்சுக்குள் கிடக்கும். சிலசமயம் வேறெதையோ செய்ய புதியதாக அது கிளம்பி வரும். எழுத்து என்ற இயக்கத்தில் உள்ள ஆதாரமான மகிழ்ச்சி என்பதே இந்த தற்செயல்களை அறியும் கணங்கள்தான். படைப்பு கிடைப்பதுதான் அது. அமைதல் என அதை வண்ணதாசன் சொல்கிறார்.
சரியாக 'தரிக்க'ப்பட்ட ஆக்கம் சரியாக 'அமைவ'தே படைப்பின் வெற்றி என்பது. எந்த எழுத்தாளனுக்கும் அது பலநூறு கைநழுவல்கள் வழியாக தற்செயலாக, அற்புத நிகழ்வாக, பெறப்படுவதாகவே இருக்கும். படைப்பின் வெற்றி என்பது ஒருவகையில் மொழியும் எழுத்தாளனும் கொள்ளும் சரியான இசைவு. நவீன வாசிப்புசார்ந்த கொள்கைகள் வாசிப்பை எந்த அளவுக்கு மையப்படுத்தினாலும் எழுதும் தரப்பில் உள்ள இந்த நிகழ்வை அவை விளக்கிவிடமுடியாது.
அவ்வாறு எழுத்தாளன் தரப்பில் வெற்றிபெற்ற ஓர் ஆக்கமே வாசகனுக்கும் வெற்றிபெற்றது. அதை மிக எளிதாக வாசகன் உணர்ந்துகொள்ள முடியும். ஓர் எழுத்தாளன் ஒரு படைப்பில் இரண்டு பத்திகளை 'தன்னைமறந்து' எழுதினான் என்று கொள்வோம். அவனுடைய கூர்ந்த வாசகர் அனைவருமே தவறாமல் அந்த இரு பத்திகளை முக்கியமானவையாகச் சுட்டிக்காட்டுவதை அவன் காண்பான். இது எழுத ஆரம்பிக்கும்பருவத்தில் எழுத்தாளனை பிரமிக்கச்செய்யும். பின்னர் அதுவே இயல்பானது என அவன் அறிந்துகொள்வான். படைப்பின் வெற்றி என்பது அவ்வாறு வாசகன் எழுத்தாளனை கண்டுகொள்ளும் கணம் நிகழ்வதே.
மேலே சொன்ன கதைகளில் அதற்கான முயற்சியே இல்லை. ஒரு மனப்பழக்கமாக ஒருவகையான செயற்கையான படிம மொழி பழக்கப்பட்டுவிடுகிறது. காதிலும் கருத்திலும் விழும் எல்லாவற்றையும் அந்த மொழிக்குள் திருகித்திருகி செலுத்திக்கொண்டே செல்லும் தொழில்நுட்பம் மட்டும்தான் அது. காத்திருத்தல் இல்லை, தரித்தலின் துயரமும் உவகையும் இல்லை, அமைவதன் களியாட்டமும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் அமர்ந்து எத்தனை பக்கங்களை வேண்டுமானாலும் அந்த எந்திரத்தால் எழுத்தை உருவாக்கிக்கொள்ளமுடியும்.
இருபதாண்டுகளாக மாற்றமே இல்லாமல் கோணங்கி இதையே சலிக்காமல்செய்து வருகிறார். மிக எளிதாக அதை அவர் தம்பி அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவும் முடிகிறது. அதுவும் அதே மாதிரி இருக்கிறது. நல்ல கலை கலைஞனின் அந்தரங்கம் சார்ந்தது. அது தற்செயலால் என்றும் அலையடித்துக்கொண்டே இருக்கும். பெரும் கலைவெற்றியை அடைந்த படைபபளி அடுத்த படைப்பை கேனத்தனமாக எழுத நேர்வதும் அதனால்தான். கலையின் தொழில்நுட்பத்தையே பிறருக்கு கற்றுக்கொடுக்க முடியும், கலையை ஒருபோதும் கற்பிக்க முடியாது.
ஏன் இவ்வகை முயற்சியை இலக்கியமென அங்கீகரிக்க நான் மறுக்கிறேன்? உண்மையான இலக்கியம் என்பது வாழ்க்கையேதான். வாழ்க்கையைப்பற்றி துளியாகவும் முழுமையாகவும் பேசிக்கொண்டிருக்கிறது இலக்கியம். மொழிவிளையாட்டு என்பது வாழ்க்கைபற்றி எதுவும் அறியப்படவில்லை, எதுவும் வெளிப்படுவதற்குமில்லை என்ற நிலையில் மட்டுமே உருவாகக்கூடியது.
இந்த இதழிலேயே அந்த வகையான கலைவெற்றிக்கு உதாரணமாக நான் சுட்டிக்காட்டும் ஒரு கதை இருப்பது மகிழ்ச்சியளித்தது. சந்திரா எழுதிய 'அறைக்குள் புகுந்த தனிமை' சென்ற மாதம் கோயில்பட்டி சென்றிருந்தபோது நான் இந்தக்கதை பற்றி தேவதச்சனிடம் பேச ஆரம்பித்ததுமே அவர் உத்வேகத்துடன் 'எக்ஸாட்லி இதே கதையைத்தான் நான் யோசிச்சிட்டிருந்தேன்' என ஆரம்பித்தார்.
'உப்பைப்போல் வெறுமை கொண்டிருந்த உடலாக' தன்னை உணரும் ஒரு பெண்ணின் ஒரு நாள் இந்தக்கதை. தோழியைச் சந்திக்கச் செல்கிறாள். தோழியுடனான அவளுடைய உறவின் நுட்பமான சிலதருணங்கள் வழியாகச் செல்லும் கதை அவள் ஒரு ஆணைச் சந்திக்கும்போது புதியதாக ஆரம்பிக்கிறது. அவளை அவன் கவர முயல்கிறான். அவள் அதை அனுமதிக்கிறார். மெல்லிய சல்லாப பாவனைகள். ஓர் இடத்தில் 'நான் படிக்கலை, பிராஸ்டிடியூட்டா இருக்கேன்' என்கிறாள் பொய்யாக.
உடனே அவன் பாவனைகள் அனைத்தும் தலைகீழாகின்றன. அவன் அலட்சியமும் திமிரும் கொண்டவனாக ஆகிறான். அவள் அவனை தன் வீட்டுக்குக் கொண்டு வருகிறாள். ஏமாற்றி அவனை ஓர் அறைக்குள் மூடிவிடுகிறாள். இரவெல்லாம் அவனை அங்கே வைத்திருக்கிறாள். அவன் சட்டென்று இன்னொரு தோற்றம் கொள்கிறான். அஞ்சி நடுங்கி அழுது புலம்புகிறான். காலையில் அவள் திறந்து விடும்போது குழிந்த கண்களும் நடுங்கும் உடலுமாக குறுகிப்போய் வெளியேறுகிறான்.
பலதளங்களில் பலவாசிப்புகளுக்குச் சாத்தியமளிக்கும் இக்கதையை நான் சொல்லவோ விளக்கவோ போவதில்லை. நான் இதை வாசித்த இரு முக்கியமான வழிகளை மட்டும் கோடிகாட்ட விரும்புகிறேன். ஒன்று தோழியுடன் அவளுக்கிருக்கும் உறவுக்கும் ஆணுடன் இருக்கும் உறவுக்குமான வேறுபாடு. தோழியுடனான உறவு இயல்பானதாக ஆனால் சற்றே சலிப்பானதாக இருக்கிறது. அங்கே அவளுக்கு மர்மங்கள் இல்லை. ஆகவே அவள் சீண்டப்படுவதில்லை. அவள் இயல்பாக இருக்கிறாள்.
ஆனால் ஆணுடனான உறவு அவளை கொந்தளிக்கசெய்கிறது. அதில் அவளுக்கு பலவகையான மர்மங்கள் உள்ளன. ஆகவே விதவிதமான சுயபாவனைகள் வழியாக அவள் அவனை அணுகுகிறாள். கொஞ்சிக்குலாவும் காதலியாக, விபச்சாரியாக, அவனை தண்டிக்கும் குரூரம் கொண்டவளாக. ஒருபாவனையில் இருந்து இன்னொன்றுக்கு இயல்பாகச் செல்கிறாள். எல்லா பாவனைகளுமே அவளுக்கு முன்னரே தெரிந்திருக்கிறது.
அந்த பாவனைகளுக்கு ஏற்ப அவள்முன் அவன் மாறிக்கொண்டே இருக்கிறான் என்பதே இந்தக்கதையின் இரண்டாவது நுழைவு வழி. பெண்ணை அவள்போக்கிலேயே சென்று கொஞ்சி புகழ்ந்து வசியப்படுத்த நினைக்கும் காதலனாக இருக்கிறான். அவள் விபச்சாரி என்றதுமே அவன் வாடிக்கையாளனாக ஆகிவிடுகிறான்.வாடிக்கையாளனுக்கான எல்லா முகங்களும் வந்து விடுகிறது. அவள் உடலை விலைகொடுத்து வாங்கிய அவன் அதை உடல்மட்டுமாகவே அடைய நினைக்கிறான். ஆகவே அவள் மனதை வதைத்து ஆளுமையை அவமதிக்க முனைகிறான்
அவள் சட்டென்று தண்டிப்பவளாக ஆகிறாள். அந்த புரிந்துகொள்ளமுடியாமை காரணமாக அவனை தாண்டிச்செல்கிறாள். அந்நிலையில் அவனுக்கு அவளை எதிர்கொள்ள்ள எந்த முன்னர் தயாரிக்கப்பட்ட பாவனையும் கைவசமில்லை. சட்டென்று சரணடைகிறான். மன்றாடுகிறான். தோற்று பின்வாங்குகிறான். அவள் வெற்றியின் வெறுமையில் அமர்ந்திருக்கிறாள்
ஆண்-பெண் உறவின் பாவனைகளின் நடனம் இந்தக்கதை. நாம் வாழ்க்கையில் காணும் எல்லாவகையான ஆண்-பெண் உறவுகளுடன் இதை பொருத்தி விரித்துக்கொள்ளமுடியும். ஒவ்வொரு தளத்திலும் நம் வாழ்க்கையை நாம் புரிந்துகொள்ள திறப்புகளை அளித்துக்கொண்டே செல்கிறது . இந்த உண்மையான வாழ்க்கை அம்சம்தான் கலையை அர்த்தமுள்ளதாக்குகிறது. சந்திராவின் இந்தக்கதையை கலையாக்குவதே ஆணின் மாறிமாறிச் செல்லும் நுண்பாவனைகள் பற்றிய அற்புதமான அவதானிப்புதான்.
இதை ஒருவர் மொழியை அளைந்து அடைய முடியாது. செயற்கையாக உருவாக்க முடியாது. மொழியும்வடிவமும் நிலமும்நீரும் போல. விதை விழுந்தால்மட்டுமே முளை எழமுடியும். விதை வாழ்க்கைபற்றிய ஆழ்ந்த அவதானிப்பில் இருந்து வருகிறது. அந்த அவதானிப்பு ஆராய்ச்சியாலோ ,வாசிப்பாலோ, சிந்தனையாலோ, விவாதத்தாலோ அடையப்படுவதல்ல. ஆராய்ச்சியும், வாசிப்பும், சிந்தனையும் கொண்டவர்கள் மேலோட்டமான கோட்பாடுகளையே பேசமுடியும். கலைக்கான கச்சாப்பொருள் எழுத்தாளனின் நுட்பமான ஆழ்மனம் தன்னைச்சுற்றி நிகழும் வாழ்க்கையில் இருந்து தன்னை அறியாமலேயே தொட்டு எடுக்கக்கூடிய ஒன்று.
பெரும்பாலும் அந்த அவதானிப்பை எழுத்தாளர்களால் கலைக்கு வெளியே விளக்கமுடிவதில்லை. அப்படி ஓர் அவதானிப்பு நிகழ்ந்திருப்பதை எழுதுவதற்கு முன் அந்த தூண்டுதல் வரும்போது மொத்தையாக உணரமுடியும். எழுதிமுடித்தபின்னரே அது அவருக்கே தெளிவாகிறது. அடைந்துவிட்டோம் என்ற நிறைவு, வெற்றி பெற்றுவிட்டோம் என்ற எண்ணம் எழுகிறது. மிகச்சரியாக வாசகன் அதை அடையவும் செய்வான். அதுவே கலையின் வெற்றி.
மீண்டும் சிற்றிதழ்கள் பற்றி. இந்தக்கதையை உயிர்மையோ காலச்சுவடோ மிக விரும்பி பிரசுரிக்கும் என்றே நினைக்கிறேன். அப்படியானால் எதற்காகச் சிற்றிதழ்? கலைவெற்றியை உத்தேசிக்கவே செய்யாத , செயற்கையான 'சோதனைகளை' பிரசுரிக்கவா?
சிற்றிதழ்கள் செய்யவேண்டிய பணி மிச்சமிருப்பதாகவே இச்சிற்றிதழ் எனக்குச் சொன்னது. இன்றைய இலக்கியத்தின் பிரச்சினைகள் வேறு. முக்கியமான சில அவதானிப்புகளைச் சொல்லமுடியும். நுண்ஓளிப்பதிவுக்கருவிகள், வரைகலை, நேர்கோடற்ற படத்தொகுப்பு ஆகியவற்றின் மூலம் காட்சிக்கலை படிம உருவாக்கத்தில் புதுப்புதுச் சாத்தியங்களை திறந்துவிட்டிருக்கிறது. எண்பதுகளில் கவிதைகளும் கதைகளும் படிமங்களை நம்பி செயல்பட்டன. இன்று அப்படி அல்ல. படிமம் என்ற உத்தியையே இலக்கியம் கைவிடவேண்டிய நிலை.
ஆகவே இன்று கவிதைகள் நுண்சித்தரிப்பு என்ற உத்தியை நோக்கிச் சென்றுவிட்டிருக்கின்றன. படிமங்கள் அணிகள் அற்ற வெற்றுக்கவிதை என்னும் வடிவம் பெரிதும் முயலப்படுகிறது. கலாச்சாரநினைவு என்ற பொதுவான பெருவெளியின் மர்மப்புள்ளிகளைத் தீண்டி எழுப்புவது, அவற்றைப் பின்னிப்பின்னி புதிய ஆக்கங்களை உருவாக்குவது என்ற வழி இன்று பெரிதாகத் திறந்திருக்கிறது. மொழிக்குள் நிறைந்திருக்கும் பண்பாட்டுநினைவுகளே இன்றைய இலக்கிய வடிவங்களின் கட்டுமானப்பொருள்களாக உள்ளன. இசை எழுதிய 'மேயாதமான்' கவிதை அவ்வகைப்பட்ட முயற்சி.
கதைகளில் மிகநேரடியான நுண்சித்தரிப்புள்ள ஆக்கங்கள் முயலப்படுகின்றன, சந்திராவின் 'அறைக்குள் புகுந்த தனிமை' கதை அவ்வகையானது. பல்வேறு பண்பாட்டு உட்குறிப்புகளை பிறஎழுத்துக்கள், வெகுஜனக்கலைகள், செய்திகள், வரலாறு ஆகியவற்றில் இருந்து எடுத்துக்கொண்டு உருவாக்கக்கூடிய வடிவங்கள் முயலப்படுகின்றன, லட்சுமி சரவணக்குமார் 'தஞ்சை பிரகாஷும் மிஷன்தெரு ரம்பாவும்' கதையில் அதை முயற்சி செய்திருக்கிறார். செவ்விலக்கியங்கள் திரும்ப எழுதப்படுவது, வரலாறும் செய்திகளும் புனைவாக்கப்படுவது என பல முறைகள் வாசிக்கக் கிடைக்கின்றன. ஆனால் அவை வெறு உத்திச்சோதனைகளாக அல்லாமல் வாழ்க்கையில் இருந்து கிளைத்து வாழ்க்கையை விளக்கக்கூடியவையாக ஆகும்போதே கலைமதிப்பு பெறுகின்றன.
தமிழ்ச்சிற்றிதழ் இயக்கம் இந்த புதிய எல்லைகளை நோக்கி செல்லும் திறப்புகளை நிகழ்த்திக்கொள்ள தன் பக்கங்களைச் செலவிடுமென்றால் ஒரு புதிய தொடக்கம் நிகழக்கூடும். அந்த எண்ணத்தில் இச்சிற்றிதழை வரவேற்கிறேன்.
அறைக்குள் புகுந்த தனிமை சந்திரா சிறுகதை
360 டிகிரி .சிற்றிதழ். தொடர்புக்கு 4/117 சி.வடக்குப்பட்டு,நான்காவது குறுக்குத்தெரு, கோவிளம்பாக்கம், மேடவாக்கம், சென்னை 600100
மின்னஞ்சல் 361degreelittlemagazine@gmail.com
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
October 27, 2011
சாரல் விழா உரை
ஒரு காலத்தில் மீசையுடன் இருந்தபோது திலீப் குமாருக்கு சாரல் விருது கொடுக்கப்பட்டபோது ஆற்றிய உரை
http://www.youtube.com/watch?v=PXWq3Ghqiz0
தொடர்புடைய பதிவுகள்
அசோகமித்திரனுக்கு சாரல் விருது
திலீப்குமாருக்கு விளக்கு விருது
ஞானக்கூத்தன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers