Jeyamohan's Blog, page 2281
October 7, 2011
பாரதி விவாதம் 2 – மகாகவி
ஜெ,
பாரதியின் சமூகப்பாடல்களில் சில,தேச வணக்கப் பாடல்களில் சில நீங்கலாகப் பார்த்தால் பெரும்பான்மையான பாடல்கள் பேரிலக்கியவகைமையைச் சார்ந்தவைதாம். சாக்த வழிபாட்டு நிலையில்கூடபக்தியையும் கடந்து சாக்தம் குறித்த தத்துவம் பொதிந்த கவிதைகள்பாரதியிடம் இருந்து தோன்றியுள்ளன.
காலமா வனத்தில் அண்டக்
கோலமா மரத்தின்மீது
காளிசக்தி என்ற பெயர் கொண்டு
என்ற கவிதையில் உள்ள உருவகம் ஓர் உதாரணம்.
"பல்வகை மாண்பினிடையே -கொஞ்சம்
பயித்தியம் அடிக்கடித் தோன்றுவதுண்டு"
என்று 'கண்ணன் என் தந்தை'யில் பாடும்போது தந்தை-மகன் உறவினிலான உளவியல் சிக்கலை அழகாகப் பேசுகிறார்.
இப்படி பல இடங்கள் பாரதியின் பேரிலக்கிய ஆளுமையின் பேரிகைகள்.அவரது சக்தி உபாசனை அரவிந்தரிடமிருந்துதான் வந்ததா என்கிற கேள்விஉண்டு. அப்படியே இருந்தாலும் சாக்த உபாசகர்களுக்கான தீட்சை முறைகளை பாரதி பின்பற்றியதாகத் தெரியவில்லை.தன்னளவில்சக்தியை மிக நெருக்கமாக உணர்ந்த சாக்தனாகவே அவன் தெரிகிறான். குரல் காட்டி அன்னை பராசக்தி தன் கவிதைகளைக் கேட்கும் அளவு இயல்பான நாட்டம் சாக்தத்தில் அவனுக்கு இருந்திருக்கிறது
தனித்தன்மை ஒருபுறமும்,ஷெல்லி போன்றவர்களை உள்வாங்கிய புரிதலும் பல்வகை தெய்வானுபவங்களில்(ஆனைமுகன் தொடங்கி அல்லா வரை)மன விகசிப்புடன் திளைத்தலும்,அப்படித் திளைத்த பின்னரும் " சுத்த அறிவே சிவமென்று கூறும் சுருதிகள் கேளீரோ -சில பித்த மதங்களிலேதடுமாறி பெருமை அழிவீரோ"என்ற தெளிவும் பாரதியின் மகத்துவத்தை நிலையான இடத்தை உணர்த்துகிற கூறுகள்.
யாப்பு வடிவத்தை நெகிழ்வித்ததில் சென்னிகுளம் அண்ணாமலைரெட்டியாருக்குப் பங்குண்டு எனினும் அவரது பாடுபொருள் முருகவழிபாடு மட்டுமே.அதிலும் பாரதி பல்வகைப் பொருட்களைப்பாடுகிறான்.
"சூதர் மனைகளிலே அண்ணே தொண்டு மகளிருண்டு
சூதில் பணயமென்றே ஆங்கொரு தொண்டச்சி போவதில்லை"
என்கிறவரிகள் கேசனோவா வரை செல்லுபடியாகக் கூடிய சிந்தனை.எந்தக் கவித்துவமும் உலகளாவிய நிலையில் சிந்தனை பலத்தால்தான்நிற்கும்.திருக்குறள் நிற்பது அதன் சிந்தனைக் கட்டமைப்பால்தான்.
கம்பனை அளவுகோலாக்குவதில் எனக்கு மறுப்பில்லை.காவிய காலத்துமகாகவி ஒருவன் தன் படைப்புகளின் விரிந்த களம் சார்ந்த வாசல்களால்வெளிப்படுகிறான்.பாரதி தன் கள எல்லைக்குள் நின்றே ஒரு மகாகவியின்இலக்கணங்களை உணர்த்துகிறான். கம்பன் முன்னிறுத்திய ஆளுமைஅம்சங்கள் கம்பனின் இதர படைப்புகளிலேயே காணப்படாதபோது, பாரதி எழுதும் சின்னஞ்சிறு கவிதைகளிலேயே கம்பனுக்குஇணைவைக்கக் கூடிய ஆளுமை அம்சங்கள் தெறிக்கின்றன என்பதேஎனது வாதம்.
மரபின்மைந்தன் முத்தையா
நண்பர்களே,
என்னுடைய எளிமையான கேள்வி இதுதான். பராதி மகாகவி, அவரது படைப்புகள் காலம் இடம் தாண்டிய பெரும்படைப்புகள் என்பதை நாம் ஏதேனும் இலக்கிய விமர்சன அளவுகோலைக்கொண்டு மதிப்பிடப்போகிறோமா இல்லை ஒரு உணர்ச்சிகரமான நம்பிக்கையாக வைத்துக்கொண்டாலே போதும் என நினைக்கிறோமா?
1. நாம் பாரதி கவிஞனா இல்லையா, நல்ல கவிஞனா இல்லையா என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கவில்லை. அவர் மகாகவியா இல்லையா என்று பேசுகிறோம். தமிழின் பெருங்கவிஞர்களின் வரிசையில் அவன் இடமென்ன என்று. பெருங்கவிஞர்கள் வந்துகொண்டே இருக்கமாட்டார்கள். கம்பனுக்குப்பின் சேக்கிழார் ஒரு பெருங்கவிஞர் என்பது என் எண்ணம். தாயுமானவர், குமரகுருபரர் போன்றவர்கள் என் நோக்கில் முக்கியமான கவிஞர்கள். அவர்களின் காலகட்டத்தை வைத்துப்பார்த்தால் பெருநிகழ்வுகள். அவ்வகையில் பாரதிக்கு நிகரானவர்கள். ஆனால் பெருங்கவிஞன் என்பவன் இன்னும் மேலானவன்.
2. பெருங்கவிஞர் என்பவர் யார் என்பதைப்பற்றிப் பெரும் விவாதங்கள் மேலைத்திறனாய்வு தளத்தில் நடந்துள்ளன. ஒரு பெருங்காப்பியத்தை- வாழ்க்கையின் எல்லாக் கூறுகளையும் தொட்டு எழுதுவதும் எல்லா வினாக்களுக்கும் பதில் உள்ளதும் ஒரு பண்பாட்டின் அடித்தளமாகவே எக்காலத்துக்கும் நிலைகொள்வதுமான காவியம்- உருவாக்கியவனே பெருங்கவிஞன் என்பது கூல்ரிட்ஜின் வாதம். ஷேக்ஸ்பியரின் எல்லா நாடகங்களையும் சேர்த்து ஒற்றைப்பெருங்காவியமாகக் கொள்ளலாம், ஆகவே அவர் பெருங்கவிஞரே என்கிறார் எலியட்
பெருங்கவிஞன் யார் என்ற விவாதம் சென்ற நூற்றாண்டின் இறுதியில் இலக்கியத் திறனாய்வில் எழுந்த பெரும் கேள்வி. பலசமயம் ஒரு முக்கியமான கவிஞனை மிக அணுகி, அவன் வாழும் காலத்தில் வாழ்ந்து அவன் பேசும்தளத்தில் நின்று, பார்க்கையில் அவனை மகாகவி என மயங்குகிறோம். அத்துடன் உலக இலக்கியம் என்ற விரிந்த பகைப்புலம் இல்லாமல் பார்க்கையில் நாம் பெரும்பாலும் நம் மொழியின் கவிஞனை மேலே தூக்குகிறோம். ஆனால் இருபதாம் நூற்றாண்டில் உலக இலக்கியம் உருவான பின்னர் நாம் உலகளாவிய மதிப்பீடுகளை உருவாக்கியே ஆகவேண்டும். அதன் பொருட்டே கூல்ரிட்ஜில் தொடங்கி ஒரு கூட்டுபெரு விவாதம் நிகழ்ந்தது
கூல்ரிட்ஜ் ஆழமான அசல்தத்துவசிந்தனையாளனாக அல்லாதவன் பெருங்கவிஞன் அல்ல என்கிறார். ஏனென்றால் பெரும் கவிதை என்பது மானுட ஞானத்தின் ஒட்டுமொத்தத்தின் நறுமணம். மானுட உணர்ச்சிகள் சிந்தனைகள் மொழி ஆகியவற்றின் கூட்டு வெளிப்பாடு என்கிறார். ரிஷி அல்லாதவன் கவி அல்ல என்கிறது ஒரு சம்ஸ்கிருதக் கூற்று. நாம் பெருங்கவிஞனிடம் எதிர்பார்ப்பது சில நல்ல கவிதைகளை அல்ல. சமகாலத்தன்மை கொண்ட சிந்தனைகளையோ மரபின் நீட்சியாக நிற்கும் சிந்தனைகளையோ அல்ல. அவனுக்கே உரித்தான ஞானதரிசனங்களை. தன்னளவில் ஒரு தனி தத்துவவாதியாகவும் நிற்கும் தகைமை கொண்டவனே பெருங்கவிஞன். அந்த ஞானதரிசனம் கால இட எல்லைக்குட்பட்டதாக இருக்காது. மானுடமளாவிய முக்கியத்துவம் கொண்டதாக, அழியாத தன்மை கொண்டதாக இருக்கும்.
மொத்ததில் ஒரு பெருங்கவிஞன் நல்ல கவிதைகள் சிலவற்றை உருவாக்கியவன் அல்ல. எக்காலத்துக்குமுரிய பெரும் படைப்புகளை உருவாக்கியவன். ஒரு பண்பாட்டுக்கே அடித்தளமாக அமையும் தகைமை கொண்டவன். மானுடகுலத்துக்கே பொதுவானவன்
3. பாரதி கையாண்ட யாப்பு வடிவில் அவனுடைய பங்களிப்பு ம் முக்கியம். ஆனால் அவர் அதை அந்தரத்தில் இருந்து உருவாக்கவில்லை. யாப்பு வடிவம் தொடர்ந்து நெகிழ்ந்தபடியே வந்துகொண்டிருந்தது. சேக்கிழார் முதல் குமர குருபரர் வரையிலான யுகத்துக்குப்பின்னர் நாட்டார் அம்சங்களையும் இசைப்பாடல் அம்சங்களையும் சேர்த்து கவிதைமொழியை நெகிழச் செய்தவர்கள்பலர். அவர்களின் வரிசையில் வருபவர் பாரதி. சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார், திரிகூட ராசப்ப கவிராயர் போன்றோர் ஒருபக்கம். கோபாலகிருஷ்ண பாரதி போன்றோர் இன்னொரு பக்கம்.
மூன்றாவதாக இன்னொரு தரப்பும் உண்டு. நவ வேதாந்தக் கொள்கைகளைத் தமிழில் பாடியவரும் தென்காசியைச்சேர்ந்தவருமான செங்கோட்டை ஆவுடை அக்கா. அக்காவின் பல சொல்லாட்சிகளையே பாரதி எடுத்தாண்டிருக்கிறார். ஆவுடையக்காவின் கவிதைகளைப் பார்ப்பவர்கள் அவ்வகையில் ஒரு அறியப்படாத கவிமரபு இருந்திருக்கிறது என்பதை உணரமுடியும். அதன் தொடர்ச்சியே பாரதி.
4. கம்பனில் நாம் காண்பது பல தளங்களில் விரியும் கவித்துவ உச்சம். மானுட விழுமியங்கள் வெளிப்படும் தருணங்கள். இயற்கையின் அழகு மொழியைச் சந்திக்கும் தருணங்கள். சிந்தனைகள் சரியான மொழியைக் கண்டுகொள்ளும் இடங்கள். கம்பனில் அப்படி உச்சகட்ட கவித்துவம் வெளிப்படும் இடங்கள் என எப்படியும் ஒரு இரண்டாயிரம் பாடல்களை எடுத்துவிடமுடியும். பாரதியில் இருபது பாடல்களைக் கண்டுகொள்வதே கடினம்– வ.வே.சு.அய்யரோ, க.நா.சுவோ, வையாபுரிப்பிள்ளையோ சொல்வது அதைத்தான்.
ஜெ
*
ஜெ,
மோகனரங்கனின் நூல் தொகுத்துக் கூறல் மட்டுமல்ல, அதில் விமர்சனப் பார்வை உண்டு. பாரதியின் பரிணாம வளர்ச்சி பற்றி விரிவாகப் பேசுகிறார்.
ஆரம்ப காலகட்டங்களில் பாரதி ஒரு "தமிழ்ப் பண்டிதராக" மட்டுமே தெரிகிறார்.சிவஞான மாபாடியம் அச்சில் வருவது குறித்துப் புளகாங்கிதமடைந்துஎழுதியிருக்கிறார். இக்காலகட்டத்தில் அவர் எழுதியவை செய்யுள்கள்களும்சம்பிரதாயமான கட்டுரைகளும் மட்டுமே. 1897 – 1903 (15 முதல் 21 வயதுவரை)
அடுத்து தேசபக்தித் தீ அவர் உள்ளத்தில் ஏறியபோது பாடலாசிரியராக,உரைநடையில் புதுஜீவன் பாய்ச்சுபவராக, பத்திரிகையாளராக ஆகிறார். அவரதுதேசபக்தி இந்து மதாபிமானம், மரபு வழிபாட்டுணர்வு, ஆன்மிகம் ஆகியவை ஒருபக்கமும், சமூக, பொருளாதார, அரசியல் சிந்தனைகள் இன்னொரு பக்கமும்சரிசமாமாகக் கலந்தது. சமூக சமத்துவமா, சுதந்திரமா எது வேண்டும் முதலில்என்ற மனப்போராட்டத்திற்கு அக்காலத்திய பலரைப் போல பாரதியும்ஆட்பட்டிருந்தார். அவருக்குத் தெளிவு ஏற்படுத்தியதில் தாதாபாய் நவுரோஜியின் சிந்தனைகளுக்கு முக்கியப் பங்குண்டு. பிரிட்டிஷாரின் பொருளாதாரச்சுரண்டல் பற்றி முதன்முதலில் பேசியவர் நவுரோஜி. அவரை மிகப் புகழ்ந்துபாரதி எழுதியுள்ளார்.
நீங்கள் சொல்வது போல நவ வேதாந்த அலையின் தாக்கம்பாரதியின் மீது பெரும் பாதிப்பு செலுத்தியது. ஆனால் இந்த அலையிலும்அவருக்குத் தனித்துவமான சிந்தனைகள் உண்டு. விவேகானந்தரைப் பெரிதும்போற்றியவராயினும், அவரது சில கருத்துக்களை விமர்சிக்க பாரதி தயங்கவில்லை- கீதை முன்னுரையில் துறவறத்தை விட இல்லறமே சிறந்தது என்று வாதிடும் புள்ளி ஒரு உதாரணம். பாடலாசிரியராக உணர்ச்சிகளைக் கொட்டுவதை மட்டுமேசெய்கிறார் – "ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி" போல. ஆனால் இதே பாரதி, அதே காலகட்டத்தில் பல கட்டுரைகளில்சாதிப்பிரச்சினையின் பல பரிமாணங்களைப் பகுத்தாய்கிறார், அது ஒதுக்கவேண்டிய விஷயம் என்று கருதவில்லை. அவரது அகம் கொந்தளித்துக் கொண்டிருந்த காலம்இது. 1904 முதல் 1910 வரை.
1910 அவரது வாழ்வில் பெரும் திருப்புமுனை. புதுவை வாசம், அரவிந்தர்தொடர்பு ஆகியவை அவருக்குள்ளிருக்கும் கவிஞனை வெளிக்கொணர்கின்றன். தேவார,திருவாசகங்களைப் பயின்ற சைவ மரபில் வந்த அவர், நம்மாழ்வாரையும்ஆண்டாளையும் தாயுமானவரையும் கம்பனையும் கண்டு கொள்கிறார். உண்மையில் அவர்"கவிதை" எழுதியது 1910க்குப் பின்பு தான்.
* 'கனவு' உலகப் பெரும்கவிதைகளில் இடம்பெறவேண்டும் என்கிறார் மோகனரங்கன்.அது பாரதியின் சொந்தக் கதை, சோகக்கதை மட்டுமல்ல, ஆழ்ந்த படிமம் கொண்டது.
* குயில் பாட்டில் கவிதையின் தரிசனமே பாரதிக்குக் கிடைக்கிறது. ஆனால் அதன்கடைசி வரிகள் "ஆன்ற தமிழ்ப்புலவீர், கற்பனையே ஆனாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானும் சற்றே இடமிருந்தால் கூறீரோ" என்றவரிகளில் அதுவரையில் இருந்த கவியின் ஆளுமையை, இளசை சி.சுப்பிரமணியனின் வார்த்தைகள் நெட்டிச்சாய்க்கின்றன என்கிறார் ரங்கன்.
* பாஞ்சாலி சபதம் பாட்டும், கவிதையும் சரிசமாகக் கலந்தது. மகாபாரதம்முழுவதையும் பாடாமல் போய்விட்டாரே என்று நினைக்க வைப்பதே அதன் வெற்றி.
* கண்ணன் பாட்டு தான் பாரதியின் கவித்துவ உச்சம்.பாரதி தன்னை விஞ்சிப்படைத்த படைப்பு அது.காலத்தின் கொடுங்கரங்களால், 1921ம் ஆண்டு மரணமடைந்து விட்டார்.
இந்தப் பத்தாண்டுகளில் இந்தக் கவிதைகள் போக, ஏராளமான உரைநடையும் எழுதிக்குவித்திருக்கிறார். இன்னும் ஒரு 20-30 ஆண்டுகள் பாரதிவாழ்ந்திருந்தாரேயானால், அவரது படைப்பூக்கம் முழுமையாக விகசித்து அபாரமானகவித்துவம் கொண்ட இலக்கியப் படைப்புகளை அவர் படைத்திருக்கக் கூடும்.
இரண்டு நாவல்களே எழுதிய ப.சிங்காரத்திற்கு தமிழ் இலக்கிய உலகில் "இடம்"அளிக்கப் படுகிறது. புத்தம் வீடு என்ற ஒரே ஒரு படைப்பு எழுதியவருக்கும் அப்படியே. அத்தகைய இலக்கிய உலகில், பாரதிக்கு முன்னோடி என்ற சம்பிரதாயப்பட்டத்தை விட இன்னும் செறிவான ஒரு இடமே அளிக்கப் படவேண்டும்.
"பாரதிக் கல்வி" கட்டுரையின் முதல் பாகம் இப்படி முடிகிறது -
பாரதியைப் பற்றி நிறையவே பேசிவிட்டேன்; எழுதிவிட்டேன். இனி நான் என்னசெய்ய? என்று கேட்ட கரிச்சான் குஞ்சுக்குத் திரிலோக சீதாராம் தந்த பதில்- 'அப்படியா இப்பொழுது பாரதியை மீண்டும் படி' என்பதாம். மீண்டும்மீண்டும் 'படிக்கப் பட' வேண்டியவர் தான் பாரதி. வழிபாடு செய்யவோ,வெறுக்கவோ அன்று.
ஜடாயு
ஜடாயு,
நான் சொன்னவற்றை மீண்டும் சொல்கிறேன்
இங்கே பாரதிக்கு 'இடம்' உண்டா என்று நாம் பேசிக்கொண்டிருக்கவில்லை. எந்த ஒரு படைப்பாளியும் குறிப்பிடும்படி ஒரு படைப்பை உருவாக்கியிருந்தால்கூட இலக்கியத்தில் இடம் உண்டு. தாமஸ் மூர் 'An elegy written on a country courtyard' என்ற ஒரே கவிதையால் ஆங்கில இலக்கியத்தில் அழியாக இடம்பெற்றிருக்கிறார். நான் சொல்வது பேரிலக்கியம்படைத்தவர் என்ற இடம் பற்றி.
கண்ணன்பாடல்கள் நம்மாழ்வார் முதல் அஷ்டபதி வரையிலான ஒரு பெரிய மரபின் நீட்சியாகவே நிற்கின்றன. அவற்றின் நினைவை மீட்டுகின்றன. அவற்றின் சுவையைத் திருப்பித் தருகின்றன– சற்று குறைவாக. [வ.வே.சு.அய்யர் அதைக் கண்ணன்பாடல்களுக்கான முன்னுரையிலேயே எழுதியிருக்கிறார்]
குயில்பாட்டு நல்ல கவிதைதான். அதை பாரதி சொன்னதுபோல வேதாந்தமாக விரித்தால் அது கீழேதான் வரும். அதன் சொல்லாட்சிகளின் வேகமே அதன் அழகு. உங்களில் எத்தனைபேர் குயில்பாட்டை ஒன்றுக்குமேல் தடவை வாசித்திருக்கிறீர்கள்? மறு வாசிப்புகளில் அதன் பெரும்பகுதி வெறும் பேச்சாகவே நகர்வதை உணரமுடியும். நான் சொல்வதை மீண்டும் எடுத்துரைக்கிறேன். கண்ணன் பாட்டு முதலியவற்றில் வரும் வேதாந்த தரிசனம் என்பது பாரதியின் அசல் ஞானவெளிப்பாடல்ல. அன்று இந்திய அளவில் உருவாகிவந்திருந்த நவவேதாந்த விவாதத்தின் எளிய பதிவு மட்டுமே. இளசை சுப்ரமணியம் எழுதியதை நான் வாசித்திருக்கிறேன். அவர் இந்தப் பின்னணி ஏதும் தெரியாமல் எழுதியிருக்கிறார். அத்துடன் இந்த 'வெட்டிச் சாய்க்கிறது' போன்ற சொல்லாட்சிகள் முதிர்ந்த விமர்சனத்துக்குரியவை அல்ல, மேடைப்பேச்சுக்குரியவை. எல்லாமே வெவ்வேறு தரப்புகள் மட்டுமே
கனவு பாரதியின் சுயசரிதை. அதை உலகப்படைப்பு என்று சொல்வதெல்லாம்….சரிதான், நான் கவிதை என்று சொல்வது முற்றிலும் வேறு அனுபவத்தை….திரிலோக சீதாராமை தமிழில் பாரதிக்கு அடுத்து பெரிய கவிஞராக எண்ணுபவர் ஸ்ரீரங்கம் மோகனரங்கன். அவருக்குக் கவிதை என்றால் என்ன அர்த்தம் என்பது எனக்கு புரிவதேயில்லை.
பஞ்சாலி சபதம், குயில்பாட்டு, போன்ற மிகச்சில படைப்புகளிலேயே பாரதி கவிஞனாக வெளிப்பாடுகொண்டிருக்கிறான். நான் சொல்வது பெரும்பாலான பாரதியார் கவிதைகள் செய்யுள் என்ற நிலைவிட்டு மேலெழவில்லை என்பதையே. பாரதியின் தோத்திரப்பாடல்கள் போன்றவற்றை உதாரணமாகச் சுட்டுகிறேன். நல்ல கவிதை 'நவில்தோறும் நூல்நயம்' கொண்டது. அதாவது வாசிக்க வாசிக்க ஆழ்பிரதிகளைப் புதியதாக உருவாக்குவது. காலந்தோறும் புதியதாகப் பிறப்பது.
பாரதியார் கவிதைகள் ஒருபக்கம் தேர்ந்த விமர்சகர்களால் அவற்றின் ஆழமின்மைக்காக சுட்டிக்காட்டப்பட்டன. வவேசு அய்யர் முதல் சுந்தர ராமசாமி வரை. மறுபக்கம் வ ரா ,திரிலோக சீதாராம் முதல் மோகனரங்கன் வரையிலானவர்கள் பன்னிப்பன்னிப் பேசியும்கூட பெரிதாக அவற்றில் ஆழ்பிரதிகள் எவையும் உருவாகவில்லை. எல்லாருக்கும் தெரிந்த வரிகளை எடுத்துச்சொல்லி,ஆகாகா என்பதற்கு அப்பால் எந்த புதிய வாசிப்பையும் அவர்கள் அளிப்பதில்லை.
பெருங்கவிஞர்கள் ஒரு அர்த்தவெளியை உருவாக்கியவர்கள் அல்ல. எப்போதும் அர்த்தங்கள் முளைத்துக்கொண்டே இருக்கும் ஒரு அந்தரங்க படிம வெளியை உருவாக்கியவர்கள்
ஜெ
ஜெ,
தொ.மு.சி.ரகுநாதன் அவர்கள் குறித்து சில இடங்களில் நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவர் பாரதியை மிக உயர்ந்த இடத்தில் வைப்பதாக நான் நினைக்கிறேன். அவரது பாரதி காலமும் கருத்தும் என்னும் ஆய்வு நூலுக்கு 1983ல் சாகித்ய அகாடெமி விருது கிடைத்தது என்றும் படிக்கிறேன். பாரதி ஆய்வுக்கு என்றே அவர் தம் வாழ்க்கையை அர்ப்பணித்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
எனக்கு அந்தப் புத்தகங்கள் படிக்கக்கிடைக்கவில்லை. ஆயினும், அதுகுறித்து நீங்கள் ஏதும் சொல்ல உள்ளதா?
ராம்
ராம்,
ரகுநாதன் அவர்களின் பாரதியும் ஷெல்லியும் என்ற நூல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக வந்துள்ளது. படிக்க வேண்டிய ஓர் புத்தகம். பாரதி பற்றிய புதிய வாசல்களைத் திறந்து காட்டிடும் ஒரு அருமையான ஒப்பீட்டு நூல்.
சங்கர்
சங்கர்,
கலாநிதி கைலாசபதியின் இரு மகாகவிகள் (தாகூர் பாரதி ஒப்பீடு) நூலையும் நினைவுகூரலாம்.
எம்.ஏ.சுசீலா
நண்பர்களுக்கு
பாரதியைக் கொண்டாடுபவர்களில் இரு வகையினர் உண்டு. திரிலோகசீதாராம் போன்றவர்கள் பாரதியின் வேதாந்தநோக்கை முக்கியமாகக் கருதுபவர்கள். எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் அவன் நவீன ஜனநாயக சமூகத்தின் உருவாக்கத்துக்கு ஆற்றிய பங்களிப்பைப் பெரிதாக எண்ணுபவர்கள். அவை இரு தனி மரபுகளாக வளர்ந்தன
எஸ்.ராமகிருஷ்ணன் மரபே ஜீவானந்தம் முதல் இடதுசாரி ஜெயகாந்தன் வரை பாரதி பக்தர்களை உருவாக்கியது. கைலாசபதி முதல் ரகுநாதன் வரை இடதுசாரி பாரதி ஆய்வாளர்களை உருவாக்கியது . திரிலோக சீதாராம் மரபில் இருந்து ரா.அ.பத்மநாபன் போன்ற பாரதி ஆய்வாளர்கள் உருவானார்கள்.
இவ்விரு தரப்பும் பாரதிக்கு அளிக்கும் இடம் என்பது நான் முன்னரே சொன்னதுபோல நவீனத் தமிழ்ப்பண்பாட்டு உருவாக்கத்தில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவே. கால இடம் கடந்த கவிதையனுபவம் என நான் சொல்லும் ஒன்றை அவர்கள் பேசியதில்லை. அந்த தளத்தில் எழுந்த விமர்சனங்களுக்கு அவர்கள் உணர்ச்சிக்கொந்தளிப்புடன் மட்டுமே பதில் சொல்லியிருக்கிறார்கள்.
ஜெ
[குழும விவாதத்தில் இருந்து]
தொடரும்
தொடர்புடைய பதிவுகள்
பாரதி விவாதம் 3 – பிற மொழிகளில்
பாரதி விவாதம் – 1- களம்-காலம்
பாரதியின் இன்றைய மதிப்பு
தமிழில் இலக்கிய விமர்சனம்
இருவகை எழுத்து
அயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்-1
எஸ்ராவுக்கு கண்ணதாசன் விருது
கண்ணன் பாடல்கள் ஒரு கடிதம்
நாஞ்சில்நாடன் பாராட்டுவிழா பதிவுகள்
பாரதி வரலாறு…
இரு ஈழக்கடிதங்கள்
அன்புள்ள ஜெ வணக்கம்
நான் உங்கள் ஆக்கங்களை விரும்பிப் படிப்பேன் தற்போது உங்கள் இணையத்தைத் தொடர்ந்து படித்து வருகிறேன். என்னைப்பொறுத்த வரையில் மிகவும் பயனுள்ளதொன்றாகவே இதைக் கருதுகிறேன். உங்களிடம் ஒரு விடயம் கேட்டுத் தெளிவைப் பெற வேண்டியுள்ளது.
நீங்கள் அதிகமும் 'அன்' விகுதியைப் பயன்படுத்துகிறீர்கள் உதாரணமாக
எழுத்தாளன், வாசகன் என்பவற்றைக் குறிப்பிடலாம். இதை இரண்டு பாலாருக்கும் சமமாகப் பயன்படுத்துவதாயின் 'அர்' விகுதிதானே வரவேண்டும். ஒரு வேளை நான் பிற்போக்குத்தனமாகச் சிந்திக்கிறேனோ தெரியவில்லை. முடிந்தால் இது பற்றிய
தெளிவை எனக்கு ஏற்படுத்திவிடுங்கள் மிக்க பயனுள்ளதாக இருக்கும்.
கேதீஸ்
அன்புள்ள கேதீஸ்
ர் விகுதி போடும்போது அது மரியாதையைக் குறிப்பிடுவதாக ஆகிறது. அப்போது அது ஒரு தனி மனிதரைக் குறிக்கிறது. ன் விகுதி அந்த முன்னிலையை ஒரு உருவகமாகக் காட்டுகிறது. இறைவன் என்பது போல,கலைஞன் என்பது போல.
ஆனால் நீங்கள் குறிப்பிடுவது யோசிக்கவேண்டியதுதான். ன் விகுதி ஆண்பாலை மட்டுமே குறிப்பிடுவதாக உள்ளது. ர் தான் பொதுவானது.
இனிமேல் ர் போடலாமென்று நினைக்கிறேன். நன்றி
ஜெ
அன்புடன் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம்
நான் சிலகவிதைகள் எழுதும் ஒரு ஆர்வலர். உங்கள் நூல்களை வாசிக்கும் ஒரு வாசகன் . நவீன இலக்கியம் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் உண்டு.அந்தவகையில் எனது சந்தேகம் ஒன்றினை உங்களிடம் கேட்கலாம் என்று எண்ணுகிறேன். நவீன கவிதையில் கையாளப்படும் மொழி வடிவம் எத்தகையது. பாரதி குறிப்பிட்ட வசன கவிதை என்ற தளத்துக்குத்தான் செல்கிறதா? கவிதை என்பது ஒரு புரிதல் மொழி அது சாதாரண மொழிகளாக இருக்கும் போது அக்கவிதை தரமான கவிதையாக ஆகமுடியுமா? சொல் உருவாக்கம் என்பது இன்றைய கவிஞர்களில் எந்தளவுக்கு உள்ளது? போன்ற எண்ணங்கள் என்னுள் எழுந்த வண்ணம் உள்ளது. இது பற்றி எனக்கு விளக்கம் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் எனது கவிதை ஒன்றும் அனுப்பி வைக்கிறேன் இது தரமான கவிதையா என விமர்சனம் சொல்வீர்களா?
விடிவு
அப்படி ஒன்றும் விடிந்ததாகத் தெரியவில்லை
சூரியன் வரவை
மேகம் மறைத்துக்கொண்டுதான் நிற்கிறது
வெள்ளிகள் விரட்டியடிக்கப்பட்ட
கொடிய இருளின் வன்மை
இன்னும் நீங்கவேயில்லை
விடிதலுக்கான அறிகுறிகள் தென்படடாலும்
விடியாமலேயே இருக்கிறது
பறவைகள் வரவேற்புப்பாடி களைத்துவிட்டன
மலர்கள் ஆரத்தி எடுப்பதற்காக
இன்னமும் காத்துக்கொண்டுதான் நிற்கின்றன
இது விடிதலுக்கான பொழுது
எனினும்
விடியாமலேயே இருக்கிறது
முகங்கள் மாற்றப்படடாலும்
பொழுது புலரவில்லையே
மரக்கிளையில் ஆந்தையின் விளிப்பு
அச்சத்தையல்லவா திணிக்கிறது
இன்னும்
புலர்தலுக்கான காலம் கூடவில்லையோ…..?
கு.றஜீபன்
அன்புள்ள றஜீபன்
கவிதை பற்றி நிறைய எழுதிவிட்டிருக்கிறேன். அவற்றையே சுருக்கமாகச் சொல்கிறேன்
1. கவிதை நேரடியாகச் சொல்லப்படுவதல்ல. நேரடியாக ஒன்றை சொல்லிவிடமுடியும் என்றால் அப்படியே சொல்லிவிடுவதே நல்லது. சொல்லமுடியாத ஒன்றைக் குறிப்புணர்த்தல் வழியாகச் சொல்வதே கவிதை
2. ஆகவே கவிதை என்பது மொழிக்குள் செயல்படும் தனிமொழி. வார்த்தைகளை நேரடியாகப் பொருள்கொள்வதன் மூலம் அல்ல அவற்றைக் குறியீடுகளாகவும் அடையாளங்களாகவும் எல்லாம் எடுத்துக்கொண்டு பொருள் கொள்வதன் மூலமே கவிதையை அறிகிறோம்.
இந்த அம்சங்கள் கவிதையில் உள்ளனவா என்று பார்த்தால் உங்கள் கவிதை நேரடியாகவே உரையாட முயல்கிறது இல்லையா? இது முதல் சிக்கல்
கவிதையின் அழகியல்குறைபாடுகளை உருவாக்கும் சில அம்சங்கள் உள்ளன
1. பழகிப்போன சம்பிரதாயமான உவமைகள், வருணனைகள், படிமங்கள் போன்றவை. கவிதையில் ஒரு உவமை வந்தால் அது புதியதாக இருக்கவேண்டும். வருணனைகள் உண்மையான அனுபவத்தின் வெளிப்பாடாக இருக்கவேண்டும். [உங்கள் கவிதையில் புலரிக்கான எல்லா விஷயங்களும் வர்ணனைகள் என்ற அளவிலும் படிமங்கள் என்ற அளவிலும் பழையவை]
2. குறிப்புணர்த்தியபிறகு அத்துடன் நின்றுவிட வேண்டும். மேலும் விளக்க முனையக்கூடாது. [ இன்னும்
புலர்தலுக்கான காலம் கூடவில்லையோ போன்ற வரிகள் விளக்க முயல்கின்றன]
3.கவிதையில் உணர்ச்சிகளை மிகையாகச் சொல்லக்கூடாது. எந்த அளவுக்கு அனுபவம் உள்ளதோ அதை விட மிகக்கூடாது
இந்த அம்சங்களைப் பரிசீலியுங்கள்
நல்ல கவிதையின் இலக்கணங்கள் மூன்று 1. பிறிதொன்றிலாத புதுமை 2. கச்சிதமான வடிவ ஒருமை 3. உண்மையான அகவெழுச்சி
நல்ல கவிதைகளைத் தொடர்ந்து படிப்பதும் விவாதிப்பதும் வடிவச்சிக்கல்களைத் தாண்ட உதவும். தமிழினி வெளியீடான ராஜமார்த்தாண்டன் தொகுத்த 'கொங்குதேர்வாழ்க்கை2' ஒரு நல்ல தொகுதி. அனேகமாக எல்லா நல்ல கவிதைகளும் உள்ளன
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
சாதனைக்கவிதைபற்றி
ஒரு கவிதைச்சாதனை
கடிதங்கள்
நகுலன்
கணிதம்
என் கவிதைகள்
நிழலில்லாத மனிதன்
உறவுகளின் ஆடல்
பருந்து
திருப்பரப்பு
October 6, 2011
உணவும் விதியும்
வணக்கம். எனது பெயர் கார்த்திகேயன், வசிப்பிடம் கோவை.
கடந்த சில வாரங்களாகத்தான் உங்கள் எழு த்துகளோடு அறிமுகம். உங்களுடைய சிறுகதைகளையும், கட்டுரைகளையும் மட்டுமே இப்போது புரிந்துகொள்ள முடிகிறது.
ஆன்மிகம் சம்பந்தம்பட்ட விஷயங்களில் ஆழமான நூலறிவும் அனுபவமும் உள்ள நீங்கள் சில ஐயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.
1 ) அசைவ உணவு நீங்கள் உண்கிறீர்கள். இது ஆன்மீகத்துக்கு ஒத்துப் போகும் விஷயமா?
2 ) விதியைப் பற்றியும் அதனோடு ஒப்பிட்டு சுய முயற்சியின் திறனைப் பற்றியும் உங்கள் கருத்துக்களைத் தெரிந்துகொள்ள விரும்புகின்றேன்.
நன்றி.
அன்புடன் கார்த்திகேயன்.
அன்புள்ள கார்த்திகேயன்
அசைவ உணவுக்கும் ஆன்மீகத்துக்கும் சம்பந்தமில்லை – விவேகானந்தரே அசைவம் உண்டவர்தான்.திபெத், சீன,ஜப்பானிய பௌத்தம் அசைவம் உண்ணுவதை விலக்கவில்லை. உலகம் முழுக்க ஆன்ம ஞானத்தின் படிகளில் ஏறியவர்களில் பெரும்பாலானவர்கள் அசைவ உணவாளர்களே. ஜென் ஞானிகள் சீன மெய்யியலாளர்கள் ஐரோப்பிய இறையியலாளர்கள். நீங்கள் உங்கள் குலவழக்கப்படி கற்றறிந்த சிலவற்றைக்கொண்டு ஆன்மீகம் போன்றவற்றை மதிப்பிட விழைய வேண்டாம்.
அசைவம் உண்ணுவது இந்தியாவில் தவிர்க்கப்படவேண்டியது என்றே நான் நினைக்கிறேன். ஆனால் அதற்கான காரணங்கள் குடல்சார்ந்தவை. இந்தியப் பொருளியல் சார்ந்தவை. ஓரளவு ஜீவகாருண்யம் சார்ந்தவை.
ஆன்மீகம் என்பது எது வாய்வழியாக உள்ளே செல்கிறது என்பதைச் சார்ந்தது என நம்புவது ஒரு இந்திய மூடநம்பிக்கை. இந்தியர்களுடைய மதமே எங்கே எதை எப்படி உண்பது என்பது மட்டும்தான் எனப் பலர் இந்த மனநிலையை கிண்டல்செய்திருக்கிறார்கள்.
விதி என நான் சொல்வது எல்லாமே முன்னால் தீர்மானிக்கப்பட்டுள்ளன என்று அல்ல. மண்மீது கோடானுகோடி உயிர்கள் இயற்கைசக்திகள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டும் முயங்கியும் செயலாற்றிக்கொண்டிருக்கின்றன. அவற்றின் ஒட்டுமொத்தமான விளைவு என்ன, திசை என்ன என நம்மால் ஊகிக்கமுடிவதில்லை. நாம் அதன் பகுதியாகவே இருக்கிறோம். நம் எல்லாச் செயல்களும் செயல்களின்விளைவுகளும் அதைச்சார்ந்தே உள்ளன. இதையே நான் விதி என்கிறேன்
ஒருதனிமனிதன் தன் முழு ஆற்றலாலும் செயல்படவும், முழுமனத்தாலும் சேர்ந்து பணியாற்றவும் கடமைப்பட்டிருக்கிறான். அதுவே அவன் சுவதர்மம்- தன்னறம். ஆனால் அதன் விளைவுகள் அந்த பேரொழுக்கின் சாத்தியக்கூறுகளில் உள்ளன. அதை எண்ணி அவன் பதற்றமும் கவலையும் கொள்வதில் அர்த்தமில்லை.
இவ்வளவே என் எண்ணங்கள். கீதை உரையில் விரிவாகவே எழுதியிருக்கிறேன்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
கடிதங்கள்
ஆழியின் மௌனம்:சாங்கியயோகம் 6
அலையறியா கடல்:சாங்கிய யோகம்-5
செயலே விடுதலை:சாங்கிய யோகம்
செயலெனும் யோகம் சாங்கிய யோகம் 4
தன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம்
ஆத்மாவும் அறிவியலும்:ஒரு விவாதம்
கீதை, கடிதங்கள்
கடிதங்கள்
3.செயல்தரும் முழுமை:ஸாங்கிய யோகம் 2
பாரதி விவாதம் – 1- களம்-காலம்
பாரதியின் இலக்கிய இடம் ஜெ. சொல்லியிருக்கும் கருத்துக்கள் விவாதத்துக்குரியவை.அவற்றை நான் மறுக்கிறேன்.இத்துடன், அயோத்திதாசர் குறித்த கட்டுரையில் பாரதியை "வழிச்சிந்தனையாளர்" என்று குறிப்பிட்டது, அவருடன் ஈவேராவையும் இன்னொரு வழிச்சிந்தனையாளர் என்று இணை வைத்தது – இரண்டையும் மறுக்கிறேன்.
இந்தத் திரியில் பேசுபவர்களில் எத்தனை பேர் பாரதியார் கவிதைள் புத்தகத்தையும், சில உதிரிக் கட்டுரைகளையும் தாண்டி, சீனி.விசுவநாதன் பதிப்பித்த "காலவரிசைப் படுத்தப் பட்ட பாரதி படைப்புகள்" தொகுதிகளைப்பார்த்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. (ஜெ, நீங்கள் 1995ல் அந்தமதிப்புரை எழுதும் போது இந்தத் தொகுப்புகள் வந்திருக்கவில்லை என்று
நினைக்கிறேன்). பாரதி என்ற பன்முக ஆளுமையின் முழு வீச்சையும் புரிந்துகொள்ள அது அவசியம்.
இது குறித்துக் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு நீள்கட்டுரை – ஸ்ரீரங்கம் மோகனரங்கன் எழுதிய "பாரதிக் கல்வி". தமிழினியில் தொடராக வந்தது. இத்துடன்பாரதியின் சாக்தம் என்ற இன்னொரு கட்டுரையும் சேர்த்து "பாரதிக் கல்வி"என்ற பெயரில் தனிப் புத்தகமாகவும் வந்திருக்கிறது. பாரதி அன்பர்கள்அனைவரிடமும் இருக்கவேண்டிய புத்தகம்.
இணையத்தில் தேடிப் பார்த்தேன், இந்தக் கட்டுரை கிடைக்கவில்லை..யாருக்காவது கிட்டினால் சுட்டி தரவும். பாரதி மீது வழிபாட்டுணர்வுஎன்பதைத் தாண்டி முழு விமர்சன நோக்கில் மதிப்பீடு செய்திருக்கிறார்.மோகனரங்கன் ஒரு சிறந்த கவிஞர், தத்துவவாதி, தமிழறிஞர், பன்முகசிந்தனையாளர்.
இந்த நூலைப் பற்றிக் கட்டாயம் ஒரு புத்தக அறிமுகம்/விமர்சனம் எழுதவேண்டும்என்று நினைக்கிறேன்.. அவகாசம் கிடைக்கும்போது எழுதுவேன்.
[தளத்தில் உள்ள குறிப்பு: கண் என்பது கண் திறக்கும் அறிவேயாகும் பாரதிஒரு கல்வி பாரதியைப் புரிந்து கொண்டால் பல விஷயங்களை நாம் புரிந்துகொண்டால் தான் பாரதியைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது.பாடலாசிரியரின்,கவிஞன்,கட்டுரையாளன் பத்திரிக்கையாளன் கதை சொல்லிஎன்பதையெல்லாம் மீறி அவனுடைய உள்ளியல்பில் சிந்தனையாளன் என்ற
பரிமாணத்தை உன்னிப்பான அவதாகத்திற்கு இந்நூல் கொணர்கிறது உணர்ச்சிமயமாகக் கனவுகளில் திரிதருவோன் என்ற வழக்கமான பிடித்து வைத்தஎண்ணத்திலிருந்து நாம் மாற வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.இந்நூல்.யதார்த்தங்களைப் புரிந்துகொண்டு, கடந்த காலத்தின் நன்மைகளில் எதுவும்சேதாரம் ஆகாமல், நாட்டின் நலந்திகழ் எதிர்காலம் நனவாக வேண்டும் என்றுகனவு கண்டவன் பாரதி என்று நிறுவுவது இந்நூலின் பயன்.]
[புத்தகம் வாங்க -http://www.udumalai.com/index.php?prd=barathik%20kalvi&page=products&id=9697]
ஜடாயு
[ஜடாயு]
*
ஜடாயு,
பாரதியின் மிகப்பெரும்பாலான படைப்புகள் எழுபதுகளிலேயே அச்சில் ரா.அ.பத்மநாபன் அவர்களால் கொண்டுவரப்பட்டுவிட்டன.[ பாரதி ஆய்வாளர்களுக்கு அவரே முன்னோடி. மேலும் பலர் உள்ளனர், ஐம்பதுகள் முதலே பாரதி ஆய்வுகளும்வெளியீடுகளும் தொடர்ந்து நடந்து வந்துள்ளன] பாரதியாரின் ஆக்கங்களை அனேகமாக முழுமையாகவே வாசித்திருக்கிறேன். சீனி.விசுவநாதன் கொண்டுவந்த காலவரிசைப்படுத்தப்பட்ட படைப்புகளில் சிற்சில விடுபடல்களை மட்டுமே சரிபார்த்துக்கொள்ளவேண்டியிருந்தது.
ரா.அ.பத்மநாபனின் ஆய்வுப்பதிப்புகளைக் கொண்டு பாரதியை மட்டுமே வாசிக்கமுடியும். நான் பாரதி யாருடனெல்லாம் விவாதித்தாரோ அவர்களையும் கிட்டத்தட்ட முழுமையாகவே வாசித்திருக்கிறேன். ஜஸ்டிஸ் சுப்ரமணிய அய்யர், அயோத்திதாசபண்டிதர் உட்பட. நவீனத்தமிழின் தொடக்கப்புள்ளி என்ற அளவில் பாரதி மீதான கவனத்தை நெடுங்கால உழைப்பால் வளர்த்திருக்கிறேன். வேறெந்த பாரதி ஆய்வாளர் அளவுக்கு பாரதியை வாசித்தவர்களே ஜேசுதாசன் போன்றோர். [திருவனந்தபுரம் பல்கலைநூலகம் ஒரு பெரிய புதையல்] ஆகவே என் வாசிப்பை நீங்கள் ஓரளவு நம்பலாம்
ஸ்ரீரங்கம் மோகனரங்கனின் எழுத்தை அது தமிழினியில் வெளிவந்த காலகட்டத்திலேயே வாசித்திருக்கிறேன்.
உணர்ச்சிவசப்படாமல் இதைப்பற்றி பேசும்போதே நாம் இலக்கியம் பற்றி விவாதிப்பவர்களாக ஆகிறோம். இலக்கியவிமர்சனம் என்பது உலகளாவிய ஒரு அறிவுத்துறை. உலகின் எல்லா மொழிகளிலும் இலக்கிய முன்னோடிகள் மீண்டும் மீண்டும் ஒவ்வொரு தலைமுறையிலும் விவாதிக்கப்படுகிறார்கள். விமர்சிக்கப்படுகிறார்கள். அது அவர்களை அறிய, உள்வாங்கிக்கொள்ள, ஏற்கனவே இருக்கும் மரபின் விரிந்த புலத்தில் அவர்களை சரியாகப் பொருத்த மிகமுக்கியமானது.
ஒருபடைப்பாளியைத் துல்லியமான ரசனையுடனும், எதிர்பார்ப்புடனும் அணுகி அவர் அளித்த உச்சங்களைப் பெற்றுக்கொள்வதுதான் அவருக்குச் செய்யும் சிறந்த வாசிப்பு. அவர் எழுதியதெல்லாமே உச்சங்கள் என்றால் நமக்கு வாசிக்கத்தெரியவில்லை என்றே பொருள். பாரதிக்கு நிகரான கவிஞர்களான தாகூர், ஆசான் போன்றவர்களை அம்மொழிகளில் எல்லாக் கோணங்களிலும் விரிவாகவே விமர்சித்திருக்கிறார்கள். ஆசானின் வழிவந்த நித்ய சைதன்ய யதியே கூட ஆசானை விமர்சித்து இரு நூல்களை எழுதியிருக்கிறார்.
நான் என்னுடைய கருத்துக்களில் பாரதி எப்படி தமிழ் நவீன இலக்கியத்துக்கும், இன்றைய நவீன தமிழ்பண்பாட்டுச்சூழலுக்கும், இன்றுள்ள உரைநடைமொழிக்கும் முன்னோடியாக விளங்கினார் என்று திட்டவட்டமாகவே சொல்லியிருக்கிறேன். இவ்வளவும் சொன்னபின் 'அவர் முன்னோடி தெரியுமா?' என்று விவாதத்தை ஆரம்பிப்பதில் அர்த்தமே இல்லை.
அதற்கு அப்பால் நான் கேட்கும் கேள்விகள் இரண்டுதான். பாரதியின் கவிதைகளில் முழுமையான கவிதையனுபவத்தை அளிக்கும் கவிதைகள் எவ்வளவு? அவற்றை மட்டும் கொண்டு அவரை ஒரு மகாகவி என்பது எவ்வளவுதூரம் சரி? அவரது புனைகதைகளும் கட்டுரைகளும் அவரது சமகால பிற இந்திய எழுத்தாளர்களுடன் ஒப்பிடுகையில் எந்த அளவுக்கு முக்கியமானவை?
மோகனரங்கனின் வாசிப்புக்கும் நான் சொல்வதற்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளது. அவருடையது ஒரு சம்பிரதாயமான 'தொகுத்துச்சொல்லும்' அணுகுமுறை மட்டுமே
இந்தியச்சூழலில் 1830களில் பிரம்மசமாஜத்தின் சொல்லாடல்கள் வழியாக நவீன இந்தியச்சூழலில் வேதாந்தம் மறுவிவாதத்துக்கு வந்தது. ஆங்கிலம் மூலம் வந்துசேர்ந்த மேலைநாட்டுச் சிந்தனைகளை உள்வாங்கிக்கொண்டு உருவான இந்த வேதாந்தத்தை நவவேதாந்தம் என்று சொல்லலாம். தயானந்தசரஸ்வதி, சுவாமி விவேகானந்தர் ,அரவிந்தர் முதல் நாராயணகுரு வரை பலரால் அரை நூற்றாண்டுக்காலம் இந்த விவாதங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன.
பாரதி இந்த ஒட்டுமொத்த நவவேதாந்த விவாதத்தின் எதிர்வினையாகவே சிந்தனைசெய்திருக்கிறார். அந்த நவவேதாந்தப் பெருவிவாதத்தில் அரவிந்தர் ஒரு முக்கியமான தரப்பு. பாரதி அந்தத் தரப்பின் ஒரு சிறு பகுதியே. அவரது பெரும்பாலான கருத்துக்கள் அந்த நவவேதாந்த விவாதத்தில் மிகமிக விரிவாக பேசப்பட்டவை. சொல்லப்போனால் பி.ஆர்.ராஜம் அய்யர் கூட அதில் பாரதியை விட அதிகமாகப் பங்களித்திருக்கிறார். [Rambles in Vedanta ]
பாரதி பின்னர் சக்தி உபாசனைக்குத் திரும்பினார். அதுவும் அரவிந்தரிடமிருந்து , அரவிந்த ஆசிரமத்து வங்காளிகளிடமிருந்து, பெற்றுக்கொண்டதே.
பாரதியின் சிந்தனைகளை அவர் தத்துவக் கட்டுரைகளாக எழுதியதில்லை. அவரது சிந்தனைகளாக நாம் அவரது இதழியல் எழுத்துக்களில் இருந்தும் கவிதைகளில் இருந்தும் எடுத்து தொகுப்பவை – மோகனரங்கன் முன்வைப்பவை- எல்லாமே இந்த இரு நவீன இந்து மறுமலர்ச்சி விவாதங்களில் இருந்து பெற்றுக்கொண்ட கருத்துக்கள் மட்டுமே. அவரது அசல் சிந்தனைகள் அல்ல. அவற்றில் அவரது பங்களிப்பு மிகமிக குறைவு
தமிழகத்தில் திராவிட-மார்க்ஸிய எழுத்துக்கள் அதிகமாக வந்ததன் காரணமாக 1830 முதல் நடந்த இந்த மாபெரும் ஞானவிவாதம் பற்றி தமிழில் அனேகமாக எதுவுமே எழுதப்பட்டதில்லை. பாரதி அந்த அலையின் சிருஷ்டி என்பதை நாம் பொருட்படுத்துவதில்லை. தாகூரும் ஆசானும் கூட அதன் சிருஷ்டிகளே. தமிழகத்தில் நாம் அந்த அலையை அறியாமல் பாரதியை அதில் இருந்து துண்டாக்கிக்கொண்டு சிந்திக்கிறோம். ஆகவே பாரதி எழுதியதெல்லாம் பாரதி உருவாக்கிய சிந்தனைகள் என்ற அளவில் மதிப்பிட்டுக்கொள்கிறோம்.
ஜெ
*
[மரபின்மைந்தன் முத்தையா]
ஜெ,
இந்தத் விவாதத்தின் சௌகரியம்,அசௌகரியம் இரண்டுமே தனிப்பட்டஅபிப்பிராயங்களின் தொகுப்பாக இருப்பதுதான்.பாரதியை அளக்கக் கம்பனை அளவுகோலாக்கும்போது,கம்பனை அளக்கக் கம்பன் அளவுகோலானால் என்ன மதிப்பீடு என்று பாருங்கள்.காவியம் பாடியகம்பனை அளவுகோலாக்கிக் கொண்டு,ஏரெழுபது பாடிய கம்பனை,சடகோபர் அந்தாதி பாடிய கம்பனை அளக்கும்போது என்ன நிகழ்கிறது?
களம்-காலம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரதியின் சொல்லாட்சி,பாடுபொருள் ஆகியன கணக்கிலெடுக்கப்பட்டால் அவன் மகாகவிஎன்பதில் மறுப்புச் சொல்ல முடியாது.
மரபின்மைந்தன் முத்தையா
அன்புள்ள முத்தையா
இலக்கியம் எப்போதும் இலக்கியம் சம்பந்தமான அளவுகோல்களாலேயே அளக்கப்படுகிறது. அந்த அளவுகோல்களை உருவாக்குவது அந்த மொழியின் இலக்கியப் பாரம்பரியம்தான். அதையே நாம் கிளாஸிஸம் என்கிறோம். அதேபோல உலக அளவில் ஒரு இலக்கிய ஆக்கத்தை மதிப்பிடுவதற்கான அளவுகோல்களை உருவாக்குவது மானுடப்பொதுவான செவ்விலக்கியங்களாக அங்கீகரிக்கப்படும் நூல்கள். அதைத் தமிழின் முதல் நவீன இலக்கிய விமர்சகரான வ.வே.சு அய்யர் அவரது கம்பன் பற்றிய கட்டுரையில் பேசுகிறார். உலகப்பெருங்கவிகளின் ஒரு பட்டியலை அவர் போடுகிறார் [அதில் காளிதாசன் இல்லை] அதில் கம்பனை ஏன் சேர்க்கலாம் என எழுதுகிறார். அரவிந்தரும் அதே நோக்கில் விரிவாக எழுதியிருக்கிறார்.
இலக்கிய விமர்சனத்தில் ரசனைவிமர்சனம் என்பதே அடிப்படையானது. அதைப்பற்றிய விரிவான சித்திரத்தை நான் என்னுடைய இலக்கியமுன்னோடிகள் வரிசை நூலின் முன்னுரையில் பேசியிருக்கிறேன். ரசனை விமர்சனம் உருவாக்கிக்கொண்டிருக்கும் எல்லா அளவுகோல்களும் முந்தைய பேரிலக்கியங்கள்மீதான வாசிப்புகளில் இருந்தே உருவாக்கிக் கொள்ளப்படுகின்றன.
அதைத் தவிர்க்கமுடியாது. ரசனை என்பதே அதுதான். ஒன்றை நீங்கள் ரசித்துத் தரம் பிரிக்கும்போது அதுவரை நீங்கள் வாசித்து ரசித்தவற்றைக்கொண்டே அதைச் செய்கிறீர்கள். அப்படித் தரம்பிரிக்காமல் ஒரு ரசனை நிகழ்வதே இல்லை. இலக்கியத்தில் மட்டுமல்ல எதிலும்.
இங்கே தனிப்பட்ட அபிப்பிராயங்களை நான் சொல்லவில்லை என்பதை கவனித்தால் அறிந்துகொள்ளலாம். நான் ரசனை விமர்சனம் சார்ந்த ஓர் அளவுகோலை உருவாக்குகிறேன். இந்த அளவுகோல் தமிழில் ஒரு புறவயமான மதிப்பீடாக பாரதி எழுதிய காலம் முதல் இருந்து வருவதைச் சுட்டிக்காட்டுகிறேன்.
இன்று நம் கையில் கிடைக்கும் படைப்பு நமக்களிப்பது என்ன என்பதே கேள்வி. ஷேக்ஸ்பியரையும் கம்பனையும் அப்படித்தான் வாசிக்கிறோம். கவியனுபவத்துக்காக என்றால் பாரதியையும் அவ்வாறே வாசிக்கவேண்டும். பாரதியின் கவிதைகள் அன்றைய சூழலில் ஆற்றிய பணியை நான் நிராகரிக்கவில்லை. நான் பேசுவது அவை இன்று என்னவாக நமக்கு இருக்கின்றன என்பதைப்பற்றித்தான். அப்படி யோசிக்கவேகூடாது என்று தயவுசெய்து சொல்லாதீர்கள். அது இலக்கியவிமர்சனத்தின் வழி அல்ல
இன்றைய வாசகனுக்கு அவர் கவிதைகள் என்ன அளிக்கின்றன என்று பேசும்போது அவர் அன்றைய அரசியலில் என்ன செய்தார், எந்தசூழலில் அவற்றை எழுதினார் என்பதெல்லாம் பொருட்டல்ல. அவை இன்று அக்கவிதைகளின் கவித்துவத்தை மதிப்பிடும் அளவுகோல்களும் அல்ல. அந்தப் படைப்புகளை பொருள்கொள்ள அந்தப் பின்னணி உதவலாம். ஆனால் மதிப்பிடுவதைக் கவித்துவ அனுபவத்தை மட்டும் கொண்டே செய்யவேண்டும்
இலக்கியம் என்பது காலம் கடந்தது, மொழி கடந்தது. நூறு வருடம் முன்னால் எழுதப்பட்ட படைப்புகளை நாம் இன்று வாசிப்பது அன்றைய சூழலை வைத்து அல்ல. இன்றைய சூழலில் நின்றுதான். அப்படியும் இலக்கிய அனுபவம் அளிக்கும் படைப்பே காலத்தை வென்றது எனப்படுகிறது. பேசும் சூழலும் மொழிச்சூழலும் கடந்தும் படைப்புகள் எங்கோ வாழும் எவனோ ஒருவனுக்கும் இலக்கிய அனுபவம் அளிக்கும். அதுவே பேரிலக்கியம். நாம் உலக இலக்கியமாக வாசிக்கும் பெரும்பாலான கவிதைகள், படைப்புகள் அத்தகையவை.
பாரதி எழுதிய காலகட்டத்தைப் பார்,பாரதி எழுதிய சூழலைப் பார், இன்றைய சூழலை வைத்து மதிப்பிடாதே என்றெல்லாம் சொல்வது அவரது எழுத்து,கால இடம் கடந்த பேரிலக்கியம் இல்லை என்று நீங்களே சொல்வதுதான். பேரிலக்கியம் படைப்பவர்களே பெரும் கவிஞர்கள்.
பாரதியின் கவித்துவம் எப்போதும் உச்சநிலையில் வைத்து மதிப்பிடப்பட்டதில்லை என்பதையே நான் குறிப்பிடுகிறேன். அவர் எழுதிய காலகட்டத்திலேயே வ.வே.சு.அய்யர் அவரது இடத்தைத் தமிழ்ப் பேரிலக்கிய மரபில் வைத்துக் கறாராகவே மதிப்பிட்டிருந்தார். அதன் பின் இன்றுவரை திறனாய்வுத்தளத்தில் அவரது பாடல்களின் கவித்துவம் பற்றிய ஒரு விமர்சனம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. அதையே நான் குறிப்பிட்டேன்
நான் ஒரு விமர்சகனாகச் சொல்லும் இரு கருத்துக்களை மட்டும் வாசகர்களாகப் பரிசீலியுங்கள் என்றே கோருகிறேன்.
1. பாரதியின் கவிதைகளில் அன்றைய சூழலை விட்டு உயர்ந்து எப்போதும் எக்காலத்துக்கும் உரிய பேரிலக்கியத் தன்மையுடன் இன்றும் நீடிக்கும் படைப்புகள் மிகக்குறைவே. அவரை ஒரு முக்கியமான கவிஞர், ஒரு காலகட்டத்தின் குரல் என்று சொல்லலாம், மகாகவி என்று சொல்லக்கூடாது.
2 பாதியின் புனைகதைகளில் அவரது சமகால இந்திய எழுதாளர்களின் படைப்புகளின் அளவுக்கு முக்கியமானவை எவையும் இல்லை. இன்றும் எந்த சமகால உலகநாவல்களுக்கு நிகராக நிற்கும், இன்றும் பேரிலக்கியமாக வாசிக்கப்படும் , தாகூரின் 'கோரா' என்ற மகத்தான நாவல் 1910ல் பாரதி அவரது 'ஆறில் ஒருபங்கு ' போன்ற எளிய ஆரம்பநிலைக் கதைகளை எழுதியபோதே வெளிவந்துவிட்டது. இன்றும் மனதை உலுக்கும் முன்ஷி பிரேம்சந்தின் கதைகள் வெளிவந்துவிட்டன. அந்தப்பின்னணியில் நாம் பார்க்கவேண்டும்.
மற்றபடி பாரதியின் பண்பாட்டு பங்களிப்பு, முன்னோடித்தன்மை, மொழி பற்றியெல்லாம் இங்கே பிறர் எழுதியதைவிட நானே எழுதிவிட்டேன். அதற்கு மேலாக நான் வைக்கும் விமர்சனங்கள் இவை.
ஜெ
[குழும விவாதத்தில் இருந்து]
[தொடரும்]
தொடர்புடைய பதிவுகள்
பாரதியின் இன்றைய மதிப்பு
வ.வே.சு.அய்யரும் சாதிவெறியும்
அயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்-1
கண்ணன் பாடல்கள் ஒரு கடிதம்
பாரதி வரலாறு…
வைணவ பரிபாஷை
பாரதியை பற்றி செல்லம்மாள்
சிலைகள்
October 5, 2011
பாரதியின் இன்றைய மதிப்பு
ஜெ,
பாரதியின் பாடல்களுக்கு இந்திய சுதந்திரம் என்ற பின்னணி இல்லாமல் பொருள் இருக்கிறதா? நான் பாரதி படித்திருக்கிறேன். சுதந்திரப்பாடல்கள் என்பவை ஒரு பிரிவே. அதைத்தாண்டி அவர் வசனக்கவிதை, கண்ணன் பாட்டு குயில் பாட்டு என பல வகைகளில் எழுதியுள்ளார். நீங்கள் சொல்லுங்கள், அவர் முன்னோடி என்பது ஒப்புக்கொள்ளக்கூடியதே. ஆனால் அதையும் தாண்டி சமகால இலக்கிய உலகில் அவரது இடம் என்ன?
-ராம்

பாரதி
ராம்,
முதன்முதலாக 1995ல் இலங்கையில் ஹட்டன் நகரில் இருந்து வந்த ஒரு இதழில் பாரதி பற்றிய என் கருத்தை எழுதியிருந்தேன். இதழின் பெயர் நந்தலாலா என நினைக்கிறேன்.
சுருக்கமாக அக்கருத்துக்கள் இவை.
1. பாரதி நவீனத்தமிழின் முதல்புள்ளி. நவீனத்தமிழ்க்கவிதையின் தொடக்கம். இந்திய தேசிய எழுச்சியின் விளைவாக உருவான இந்திய நவகவிஞர்களில் முக்கியமான சிலரில் ஒருவர். தாகூர், ஜீபனானந்ததாஸ், குமாரன் ஆசான்,குவெம்பு என்று நீளும் அந்த நவகவிஞர்கள்தான் நவீன இந்திய இலட்சியவாதத்தை உருவாக்கியவர்கள். நம் ஜனநாயகத்தின் உண்மையான சிற்பிகள். அந்த இடம் பாரதிக்கு உண்டு
2. பாரதி நவீனத் தமிழ்ப்பண்பாட்டு அடையாளத்தை உருவாக்கிய முன்னோடி. நாம் இன்று உணரும் தமிழ்ப் பண்பாட்டு சுயம் என்பது பாரதியால் தமிழ்ச்சமூக மனத்தில் உருவாக்கப்பட்டது. செவ்விலக்கியம், நாட்டார் கலை, மதங்கள் அனைத்தையும் இணைத்து அவர் அதை உருவாக்கினார்.
3. பாரதியின் ஆக்கங்களில் பெரும் புகழ்பெற்றுள்ளவை இசைப்பாடல்கள். ஆனால் அவை கவிதைகள் அல்ல. அவை எடுத்தாளப்பட்ட கவிதைகள். இசைப்பாடல் என்பது நேரடியான கவிதை வடிவம் அல்ல. இசையில்லாமல் அவற்றின் இடம் முழுமையடைவதில்லை.பாரதியின் இசைப்பாடல்கள் பெரும்பாலும் நாலாயிர திவ்யப் பிரபந்தம் மற்றும் அஷ்டபதியின் சாயல் கொண்டவை. அவரைத் தமிழின் மிகச்சிறந்த இசைப்பாடலாசிரியர்களில் ஒருவராக கருதலாம்
4. பாரதியின் காலகட்டத்திலேயே நல்ல நவகவிதைகள் எல்லா மொழிகளிலும் உருவாகிவிட்டிருந்தன. பாரதியின் கவிதைகளில் குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் மற்றும் சில தனிக்கவிதைகள் முக்கியமானவை. மழை, அக்கினிக்குஞ்சு, பிழைத்த தென்னந்தோப்பு போன்றசில கவிதைகள் மிகச்சிறப்பானவை.ஆனால் ஒட்டுமொத்தமாக அவை எண்ணிக்கையில் மிகக்குறைவு. ஒரு பெரும் கவிஞரை நிறுவுவதற்கு அவை போதாது.
5. ஆகவே பாரதி ஒரு சிறந்த கவிஞர், மகாகவிஞர் அல்ல. தமிழின் மாபெரும் கவிமரபை வைத்துப்பார்த்தால் மகாகவி என்ற பட்டத்தை ஒருவருக்கு எளிதில் வழங்கிவிடமுடியாது. கபிலர், பரணர், அவ்வையார்,பாலைபாடிய பெருங்கடுங்கோ, இளங்கோ,திருத் தக்கதேவர், திருவள்ளுவர், நம்மாழ்வார், கம்பர் , சேக்கிழார் என நம் பெருங்கவிஞர்களை நாம் பட்டியலிட்டால் அதில் ஒருபோதும் பாரதியைச் சேர்க்கமுடியாது.
6. பாரதியின் நல்ல கவிதைகள் கூடத் தரிசனத்தாலும் மொழிநுட்பத்தாலும் என்றும் நீடிக்கும் அழியாத பெருங்கவிதைகள் அல்ல. மனவேகத்தால் மட்டுமே நிலைகொள்வன. வேகம் மூலம் கைவரும் அபூர்வமான சொற்சேர்க்கைகளுக்கு அப்பால் நல்ல கவிதைகளில் நிகழும் வடிவ-தரிசன முழுமை அவரது கவிதைகளில் மிக அபூர்வமாகவே நிகழ்ந்திருக்கிறது. பலகவிதைகளில் நல்ல வரிகள் உண்டு, ஒட்டுமொத்தக் கவிதையில் அந்த முழுமை கைகூடியிருப்பதில்லை.
7. பாரதி தமிழின் வழக்கமான மரபுக்கவிதையை இசைத்தன்மை மற்றும் நாட்டார்தன்மையை சேர்த்துக்கொண்டு உடைத்துப் புதிதாக ஆக்கினார்.அதன் மூலம் நம் மரபுக்கவிதையில் ஒரு குறுகியகால சலனத்தை உருவாக்கினார். ஆனால் அவரது சாதனை உரைநடையில்தான். அவர் நவீன உரைநடையின் பிதா என்பதே அவரது முதல்முக்கியத்துவம். அவரில் இருந்தே இன்றைய புதுக்கவிதை பிறந்தது
8.பாரதி தமிழ் இதழியலின் தொடக்கப்புள்ளி. இன்றைய இதழியல்தமிழ் அவரது உருவாக்கமே. அதன் சொல்லாட்சிகள், அதன் மொழிபுமுறை எல்லாமே அவரால் உருவாக்கப்பட்டவையே
9. பாரதி உலக இலக்கியத்தை நோக்கித் திறந்த தமிழின் முதல் சாளரம். மொழியாக்கத்திலும் மேலைக்கருத்துக்களை எடுத்தாள்வதிலும் அவர் தமிழின் முன்னோடி.
10. பாரதி தமிழ் நவீன உரைநடையின் அமைப்பை உருவாக்கியவர். ஆனால் பாரதியின் புனைகதைகள் மிகச்சிலவே இலக்கியமாகப் பொருட்படுத்ததக்கவை. அவரது சமகால வங்க, இந்தி, கன்னட ஆக்கங்களுடன் ஒப்பிட்டால் பாரதியின் கதைகள் எளிய நற்போதனைக்கதைகளாக உள்ளன. கதைமாந்தரும் சரி, கதைச்சந்தர்ப்பங்களும்சரி, சித்தரிப்பும்சரி மிக ஆரம்பநிலையில்மட்டுமே உள்ளன.
இக்கருத்துக்கள் ஈழத்தில் பெரிய விவாதத்தைக் கிளப்பின.பாரதியை ஆதரித்து எனக்குப் பல கடிதங்கள் வந்தன. அந்த இதழில் எழுதிய கட்டுரை மட்டும் என்பார்வைக்கு வரவே இல்லை. பின்னர் தமிழ்நாட்டிலும் அக்கருத்துக்களை எழுதி அவை விவாதமாக ஆயின.
[எஸ்.வையாபுரிப்பிள்ளை]
ஆனால் இக்கருத்துக்கள் ஒன்றும் புதியவை அல்ல. இவற்றுக்கு என் வரையில் இரு மரபுகள் உண்டு.
ஒன்று எஸ்.வையாபுரிப்பிள்ளை மரபு. அவர் பாரதியை நேரில் அறிந்தவர். பாரதியைப் போற்றுபவர். ஆனால் பாரதி ஒரு மகாகவி அல்ல என்றே எண்ணினார். உண்மையான எழுச்சி நிகழ்ந்த கவிதைகள் குறைவு என்றே எண்ணினார். அதை வகுப்புகளில் சொல்லியும் ,மென்மையாக எழுதியுமிருக்கிறார்.
வையாபுரிப்பிள்ளையின் மாணவர் பேராசிரியர் ஜேசுதாசன் வையாபுரிப்பிள்ளையின் அதே கருத்தை கொண்டிருந்தார். வையாபுரிப்பிள்ளைக்கும் ஜேசுதாசனுக்குமெல்லாம் கம்பனே அளவுகோல். கம்பனை வைத்து வாசித்தால் பாரதியின் ஆகிருதி சுருங்குவதை எவராலும் உணரமுடியும். 2001ல் சொல்புதிதுக்கு அவரளித்த பேட்டியில் ஜேசுதாசன் பாரதியாரின் நல்ல கவிதைகள்கூட மிட்டாய் சப்புவதுபோல எளிய தித்திப்பை மட்டுமே அளிக்கின்றன என்று சொன்னார். அதை ஒட்டி அப்போதும் ஒரு பெரிய விவாதம் நிகழ்ந்தது.
இன்னொரு பாரதி விமர்சன மரபு க.நா.சுவில் இருந்து ஆரம்பித்தது. பாரதியின் சிறந்த கவிதை மழை என்று சொல்லும் க.நா.சு.,அந்தத் தரத்தில் மிகச்சில கவிதைகளே உள்ளன , அவர் ஒரு பெரும் கவிஞர் அல்ல என்று சொன்னார். இலக்கியவட்டம் இதழில் வந்த அவரது கருத்துக்கள் ஐம்பதுகளில் விவாதத்துக்கு உள்ளாயின.
அதன்பின் சுந்தர ராமசாமி கநாசுவை ஆதரித்து அதே கருத்தை எழுதினார். 'பாரதியும் நானும்' என்ற அவரது கட்டுரையில் சுந்தர ராமசாமி பாரதி ஒரு கவிஞராகத் தன்னைக் கவரவில்லை, பாரதியின் வசனமே தனக்கு முக்கியம் என்று எழுதினார். அது அறுபதுகளில் பெரிய அலையைக் கிளப்பியது. சுந்தர ராமசாமியை வசைபாடி நிறையவே எழுதப்பட்டது. க.நா.சுவின் கருத்தே நகுலனுக்கும் இருந்தது. சுந்தர ராமசாமியை ஆதரித்து அக்காலகட்டத்தில் வலுவாக எழுதியவர்களில் நகுலனும் ஒருவர்.
[ஹெப்ஸிபா, சுந்தர ராமசாமி, பேரா.ஜேசுதாசன்]
ஜேசுதாசன், சுந்தர ராமசாமி ஆகியோரின் கருத்துக்களில் இருந்து நான் என் தர்க்கங்களை உருவாக்கிக் கொண்டேன். ஆனால் என் வாசிப்பில் இளமையிலேயே பாரதியின் போதாமையையும் உணர்ந்திருந்தேன். ஏனென்றால் நான் முறைப்படி தமிழ்கற்று, கம்பனைப் பாடம் கேட்டபின்புதான் பாரதியை முழுமையாக வாசித்தேன்.
இந்த விவாதத்துக்கு முன்னால் ஒரு விவாதம் நிகழ்ந்தது. கல்கி பாரதியை ஒரு மகாகவி எனக் கொள்ளமுடியாது என்று எழுதினார். கல்கி டி.கே.சிதம்பரநாதமுதலியாரின் தொடர்பால் கம்பனில் கொண்ட ஈடுபாடுதான் அந்த மதிப்பீட்டை உருவாக்கியது. அது சரியானதும்கூட.
ஆனால் அன்று கல்கிமேல் பொறாமையால் கொதித்துக்கொண்டிருந்த மணிக்கொடி எழுத்தாளர்கள் அதைக் கல்கியைத் தாக்குவதற்கான சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டார்கள். கு.ப.ராஜகோபாலன், சிட்டி இருவரும் சேர்ந்து கல்கி மகாகவிதான் என வாதாடி ஒரு பெரிய கட்டுரைத்தொடரை எழுதினர். அது 'கண்ணன் என் கவி' என்ற பேரில் பின்னர் நூலாக வெளிவந்தது.
கல்கி சொல்லும் வாதங்கள் அதற்கு முன்னரே இலக்கிய விமர்சகராக வ.வே.சு.அய்யர் சொன்னவை. வ.வே.சு.அய்யர் பாரதியை ஒரு மறுமலர்ச்சிக் கவிஞர் என்ற எல்லைக்குள் மட்டுமே நிறுத்தினார். கம்பனே அவரது அளவுகோலைத் தீர்மானித்தவர். கிட்டத்தட்ட அதே அளவுகோலை ரா.ஸ்ரீ.தேசிகனும் கொண்டிருந்தார்.
கல்கி தெளிவாகவே அவற்றைச் சொல்லி வாதிட்டார். பாரதியாரின் கவிதைகள் முழுமையான வாழ்க்கைநோக்கையும் கவித்துவமான எழுச்சியையும் ஒரேசமயம் அடையும் மகத்தான கவிதைகள் அல்ல, அவை ஷெல்லி எழுதியவை போன்ற மாற்றத்துக்கான உணர்ச்சிகரமான அறைகூவல்கள் மட்டுமே என்றார்.
ஆனால் கு.ப.ராஜகோபாலன், சிட்டி இருவரும் கல்கியை உணர்ச்சிகரமாகவே எதிர்கொண்டனர். பாரதியின் கவிதைகளை விட அவரது ஆளுமை, தனிவாழ்க்கை இரண்டையுமே அவர்கள் முன்வைப்பதைக் காணலாம். அவர்கள் கல்கியின் வாதங்களை எதிர்கொள்ளவேயில்லை.
கு.ப.ராஜகோபாலன், சிட்டி இருவரின் தரப்பே வென்றது. அதற்குக் காரணம் அன்றிருந்த தேசிய எழுச்சியை ஒட்டி பாரதி ஒரு பெரும் பிம்பமாக கட்டமைக்கப்பட்டிருந்தமை. ஆகவே பாரதி மேல் விமர்சனம் கொண்டிருந்தவர்கள் அமைதியானார்கள். கல்கி சடாரெனத் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். பாரதிக்கு மணிமண்டபம் கட்டி அந்த உரையில் பாரதி மகாகவிஞரே என்று சொன்னார்.
அதன் பின் இன்றுவரை இலக்கியச்சிற்றிதழ்களின் உலகுக்கு வெளியே, பொதுத்தளத்தில், திட்டவட்டமான இலக்கிய விமர்சன நோக்குடன் பாரதி அணுகப்பட்டதே இல்லை. பாரதிபற்றிய வரலாற்றாய்வுகள் நிறைய நிகழ்கின்றன. ஒட்டுமொத்தமாக பாரதியின் படைப்புகளை எடுத்துக்கொண்டு அவற்றின் கலைப்பெறுமதி, கருத்தியல் உள்ளடக்கம் பற்றி விமர்சனங்கள் எழுதப்பட்டதில்லை. அதற்குப் பல மானசீகமான தடைகள் நமக்குள்ளன.
அவை ஒருபக்கம் பாரதி பற்றி உருவாக்கப்பட்டுள்ள பெரும் பிம்பம். மறுபக்கம் கலைநோக்கோ சமநிலையோ இல்லாமல் அவரை சாதிய நோக்கில் அவதூறுசெய்யும் எழுத்துக்கள். இரண்டும் இரண்டு வகையில் இலக்கிய வாசகனைக் கட்டாயப்படுத்துகின்றன.
பாரதியின் கவிதைகள்,கதைகள் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டு அவற்றின் சாதனைகளை சரிவுகளை விரிவான விமர்சன விளக்கத்துடன் எழுதவேண்டியிருக்கிறது. அதையே இன்றைய இளைஞர்களில் பலரின் எதிர்வினைகள் காட்டுகின்றன. 'ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா' 'செந்தமிழ் நாடெனும் போதினிலே' போன்ற பாரதியின் தேசியப்பாடல்கள் இன்றைய இலக்கிய ரசிகனுக்குப் பெரிய அனுபவத்தை எதையும் அளிப்பவை அல்ல.
இன்னொருபக்கம் அவரது தோத்திரப்பாடல்கள் போன்றவை வெறும் செய்யுள்களாகவே நின்றுவிட்டவை. இன்று முழுபாரதி தொகுப்பை வாசித்தால் அந்த செய்யுட்களே அளவில் அதிகம் என்பதை ஒரு வாசகன் காணமுடியும்.
இவ்விரு தளங்களுக்கும் அப்பால் பாரதியின் சாதனைகள் அவரது குறைவான பாடல்களில் அவர் அடைந்த நேரடியான மன எழுச்சியை சார்ந்தவை. க.நா.சு சுட்டிக்காட்டிய மழை ஒரு சிறந்த உதாரணம். வசனகவிதைகளில் பாரதி அவரைத் திணறடித்த யாப்பின் தளை இல்லாமல் சுதந்திரமாகப் பறந்திருக்கிறார்.
இதெல்லாம் இன்றைய இலக்கியவாசகனுக்குத் தெளிவாகவே தெரிபவை. ஆனால் இவற்றை எழுத, விவாதிக்க நம்மிடம் பெரும் மனத்தடை இருக்கிறது.
எதையுமே உணர்ச்சிக்கொந்தளிப்பாக ஆக்கிக்கொள்வது, வெட்டிச்சண்டையாக மாற்றுவது என்றே நம் இலக்கிய விமர்சனச்சூழல் இருக்கிறது. எந்த விமர்சனமும் ஒரு படைப்பாளி மீதான வாசிப்பைக் கூர்மையே ஆக்கும் என்ற புரிதலுடன் நாம் விவாதித்தால் ஒருவேளை வரும்காலத்தில் நம்மால் பாரதி பற்றி ஒரு நல்ல கூட்டுவாசிப்பை நோக்கிச் செல்லமுடியலாம்
ஜெ
[குழும விவாதத்தில் இருந்து]
வ வே சு அய்யரின் விமர்சன அணுகுமுறை பற்றி வேதசகாயகுமார்
வையாபுரிப்பிள்ளை பற்றி வேதசகாயகுமார்
கண்ணன் பாடல்கள் ஒரு கடிதம்
பாரதி வரலாறு…
ஆவுடையக்கா
பாரதிபற்றி செல்லம்மாள்
தொடர்புடைய பதிவுகள்
தமிழில் இலக்கிய விமர்சனம்
கல்கியின் சமணம்
தீராநதி நேர்காணல்- 2006
அயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்-1
படைப்பாளிகளின் மேற்கோள்கள்
சுரா 80- இருநாட்கள்
சுரா 80
கண்ணன் பாடல்கள் ஒரு கடிதம்
பாரதி வரலாறு…
வெ.சா-ஒரு காலகட்டத்தின் எதிர்க்குரல்
ஆல்காட்-கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன்
ஆல்காட் மீதான பல தாக்கங்களைக் குறிப்பிட்டுள்ளீர்கள். இதில் விடுபட்டுப் போன இந்தியத் தாக்கம் ஒன்று உண்டு. சுவாமி தயானந்தருடையது அது. சுவாமி தயானந்தருக்கும் ஆல்காட்டுக்கும் நல்ல உறவு இருந்தது. பின்னாளில் பிரம்மஞான சபையின் மறைஞானப் போக்கும் பௌத்த சார்பும் அந்த உறவைக்கசந்துகத்தரிக்க வைத்துவிட்டது. ஆனால் ஆரிய சமாஜத்தின் சாதிய எதிர்ப்பு நிச்சய்மாக ஆல்காட்டின் ஆளுமையில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
ஏனெனில் ஆல்காட்டின் ஆன்மிக குருவான ப்ளாவட்ஸ்கியின் உலக பார்வை இனவாதபார்வையே. மேலும் 1880களிலேயே ஆரிய சமாஜம் 'ஆரிய தலித்தோத்தார் பாடசாலா'என்கிற பாட சாலையை நிறுவியிருந்தது. 'தலித்' என்கிற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்திய முதன்மையான இந்திய அமைப்பு ஆரிய சமாஜமே.
பின்னாட்களில் ஆரிய சமாஜமும் இடைநிலை சாதிகளால் தேக்க நிலை அடைந்ததுஎன்றாலும் தொடக்க கால தலித் போராளிகள் பலரை தென்னிந்தியாவிலும் ஆரியசமாஜத்தால் தாக்கம் பெற்ற துறவிகளே த்வேகப்படுத்தினர். எனவே இந்தியசூழலில் ஆல்காட்டின் பஞ்சமர் பள்ளி ஆரிய சமாஜ தாக்கத்தினால்
ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
பணிவன்புடன்
அரவிந்தன் நீலகண்டன்
"தலித் இயக்க முன்னோடி ஆல்காட்".
எப்பொழுதும் போல ஜெயமோகனின் அருமையான பதிவு.
நமது வரலாற்று பார்வை அல்லது குருடு…தெளிவாகத் தெரிகிறது.
ஆஷா என்ற NGO நிறுவனத்திற்காக ஆல்காட் அடையாறு பள்ளி ப்ராஜெக்ட் விஷயமாக 8/10 வருடம் முன்னர் பேசியது நினைவுக்கு வருகிறது.
இப்பொழுது தான் அதன் வரலாற்று தன்மை தெரிகிறது.
நாம் வெறும் அக்பர் பீர்பால் இது தான் வரலாறு என்று நினைக்கிறோம்.
வரலாற்று பார்வை இருந்தது என்றால் (அதாவது இந்த பதிவை அப்பொழுதே நான் படித்திருந்தால் ) இன்னும் விஷயம் அதன் உட்கருத்து, நன்றாக உள்வாங்கி அதன் மூலம் என் ஆர்வம உணர்ச்சி வேகத்துடன் வெளிப்பட்டிருக்கும்
வரலாற்றைக் குறித்து எனக்கு ஒரு புத்துணர்ச்சி கொடுத்ததற்கு நன்றி
காதலுடன்
ஸ்ரீதர்
அன்புள்ள ஜெயமோகன்,
உங்களது பதிவில் Nandanar's Children: The Pariaiyans' Tryst with Destiny, Tamil Nadu 1850-1956 என்ற ராஜ் சேகர் பாசு எழுதிய நூலைத் தமிழாக்கம் செய்யவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இந்தப் புத்தகத்துக்கான தமிழாக்க உரிமத்தை சேஜ் பதிப்பகத்திடமிருந்து கிழக்கு பதிப்பகம் பெற்று தமிழாக்க வேலைகளிலும் இறங்கியுள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.
வேலைகள் தீவிரமாக நடந்தால், ஒருவேளை புத்தகம் ஜனவரி புத்தகக் கண்காட்சியில் புத்தகம் வெளியாகலாம்.
சேஜ் பதிப்பகத்தின் விற்பனை மேலாளரிடம் இந்தப் புத்தகம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, புத்தகத் தலைப்பில் 'பறையர்கள்' என்ற வார்த்தை வருவதால் இந்தப் புத்தகத்தை விற்பதில் கடைக்காரர்கள் தயக்கம் காட்டுகிறார்கள் என்பதாகவும் அதனால் புத்தகம் அவர்கள் எதிர்பார்த்த அளவு விற்கவில்லை என்றும் சொன்னார். அகடெமிக் பேராசிரியர்களும் மாணவர்களும்தான் பெரும்பாலும் இந்தப் புத்தகத்தின் வாசகர்கள். அப்படிப்பட்டவர்களுக்குப் புத்தகங்களை விற்கும் கடைக்காரர்களுக்கே இந்தத் தயக்கம்! புத்தகம் தலித்துகளைக் கீழ்மைப்படுத்தும் ஒன்றல்ல. எந்தப் பொருளில் இந்த வார்த்தை (பறையர்கள்) பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைக்கூட அறியாத அளவுக்குத்தான் இங்கே சூழல் இருக்கிறது.
தமிழில் வெளியாகும்போது விற்பனைக் காரணங்களுக்காக மிக நியூட்ரலான தலைப்பு ஒன்றைத்தான் வைப்பதாக உள்ளேன்.
பத்ரி
Badri Seshadri
Managing Director and Publisher
அன்புள்ள பத்ரி,
பறையர் என்ற சொல்லை ஆய்வுநோக்கில் பயன்படுத்துவதில் பிழை ஏதும் இல்லை என்றே நினைக்கிறேன். நான் தலித் ஆய்வு அமைப்புகளில் பலமுறை அச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறேன். அதை இழிவுபடுத்தும் சொல்லாகப் பயன்படுத்துவதே பிழை. ஆனால் அப்படி இழிசொல்லாக அது இருந்த காலகட்டம் மாறிவிட்டது என்றும் தோன்றுகிறது.
ஆனால் நீங்கள் இன்னும் பெரிய வணிக விற்பனைச்சூழலில் இருக்கிறீர்கள். எனக்கு அந்தக் கட்டாயங்கள் புரியவில்லை. என்னைவிட நீங்களே அதை அறிவீர்கள்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
October 4, 2011
எழுத்தாளர் படங்கள்-கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
என் 'ஃபிலிக்கர் போட்டோஸ்ட்ரீம்' தொகுப்பு பற்றி உங்கள் தளத்தில் எழுதியிருந்ததைப் படித்தேன். இதற்கு முன்பும் இரண்டு முறை என் வலைத்தளம் பற்றி உங்கள் தளத்தில் எழுதியிருந்தீர்கள். அப்பொழுது, அதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியது. ஆனால் நன்றி சொல்வது, நான் ஏன் பிளாக் வைத்திருக்கிறேன் என்பதையும் அதைப் பரவலாக வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் உங்கள் எண்ணத்தையும் ஏதோ ஒருவகையில் கொச்சைப்படுத்துவதாக அமையும் என்று உணர்ந்தேன். எனவே, அதனை கைவிட்டு விட்டேன்.
பத்திரிகைப் பணி காரணமாகக் கடந்த பத்து வருடத்தில் என் கைக்கு நிறைய புகைப்படங்கள் வந்து சென்றிருக்கிறது; தொடர்ந்தும் வருகிறது. அதில் சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள், இசைக் கலைஞர்கள் போன்ற பிரபலமானவர்கள் படங்கள் மிகச் சுலபமாகக் கிடைப்பவை; மேலும், பல தனி மனிதர்களாலும் அமைப்புகளாலும் சேகரிக்கப்பட்டும் வருபவை. ஆனால், நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் எழுத்தாளர்களின் படங்கள் சேகரிக்கப்படாமல் அப்படியே மறைந்துவிடுகின்றன.
வேறு யாரும் செய்யமாட்டார்கள்; மேலும், அதற்கான வாய்ப்பும் நமக்குத்தான் உள்ளது என்ற எண்ணத்தில்தான் எழுத்தாளர்களின் படங்களை சேகரிக்கத் தொடங்கினேன். இதற்காக நான் படங்கள் தேடி அலைந்தேன் என்று அர்த்தமில்லை. பணி காரணமாக என் கைக்கு வந்து செல்லும் படங்களில் ஒரு பிரதியை வைத்துக்கொண்டேன், அவ்வளவுதான். அப்படி என் கையில் இப்பொழுது அனேகமான படைப்பாளிகளின் படங்கள் சேர்ந்துவிட்டது.
ஃபிலிக்கர் இலவச பக்கத்தில் 200 படங்கள் ஏற்றுவதற்கு மட்டும்தான் இடம் தருகிறார்கள். எனவே, ஒருவருக்கு ஒரு படம் வீதம் அதில் ஏற்றியிருக்கிறேன். சில பெண் படைப்பாளிகள் படங்கள் இடம்பெற்றிருப்பது பற்றி எழுதியிருந்தீர்கள். அந்த பக்கத்தைப் பொறுத்தவரைக்கும், என் ரசனை அடிப்படையில் இல்லாமல், என்னைக் கவர்ந்த படைப்பாளிகள் கவராத படைப்பாளிகள் என்ற பாகுபாடியின்றி, தமிழில் எழுதுபவர்கள் என்ற அடிப்படையில் அனைத்துத் தரப்பினரையும் ஏற்றியிருக்கிறேன். ஒரே ஆண்கள் கூட்டமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகவும், பெண்கள் பிரதிநிதித்துவத்துக்காகவும் மிகக் குறைவாகவே எழுதியிருக்கும் ஜெனிஃபர் போன்றவர்களையும் சேர்த்திருக்கிறேன். அனேகமாக அத்தொகுப்பில் உள்ளவர்களில் ஒரு புத்தகம்கூட இன்னும் வெளிவராதவராக ஜெனிஃபர் மட்டுமே இருப்பார். அவர் தொடர்ந்து எழுதவும் இல்லை.
தமிழ் எழுத்தாளர்களின் படங்களை, வியாபார நோக்கமின்றி, முறைப்படி யாராவது சேகரிப்பார்கள் என்றால் என் கையில் இருப்பவற்றை அவர்களுக்குக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். குறிப்பாக, சாஃப்ட்வேர் தெரிந்த யாராவது ஒருவருக்கு இதில் ஆர்வம் ஏற்பட்டால் நல்லது. அவரால் அந்தப் படங்களின் ஆயுள் காலம் அதிகரிக்கவும் அனைவருக்கும் சுலபமாகக் கிடைக்கவும் வாய்ப்புண்டு.
நன்றி.
அன்புடன்
தளவாய் சுந்தரம்
அன்புள்ள தளவாய்
முக்கியமான முயற்சி. ஏற்கனவே ஒரு தளத்தில் அவர்களுக்குக் கிடைத்த சில படங்களை போட்டிருந்தார்கள். அவர்களால் நடத்த முடியவில்லை
ஆர்வம் கொண்ட நண்பர்களிடம் கேட்டுப்பார்க்கிறேன். பணம் செலுத்தி ஒரு தளத்தைத் தொடங்கி அதில் இந்த எல்லாப் புகைப்படங்களையும் ஏற்றலாமென்று தோன்றுகிறது
வேறுபடங்கள் கிடைக்குமா என்றுகூடத் தேடிப்பார்க்கலாம்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
எழுத்தாளர் முகங்கள்.
அயோத்திதாசர்-கடிதங்கள்,படங்கள்
அயோத்திதாசர்- மதுரை பேருரை ஒலிவடிவம் – புகைப்படங்கள்
பயண நண்பர்கள்
பூட்டான், குழந்தைகள்
அந்தப்பெண்கள்…
பூட்டான்- கட்டிடங்கள்
பனிவெளியிலே
வடகிழக்கு நோக்கி 8, திபெத்தின் குழந்தை
வடகிழக்கு நோக்கி, 7. மடாலயங்களில்
கேரளத்திலும் ஆந்திரத்திலும் ஏன் திராவிடவாதம் இல்லை?
அன்பின் ஜெ,
நலம்தானே. அண்மையில் ம பொ சி அவர்கள் எழுதிய தமிழகத்தில் பிற மொழியினர் என்ற ஒரு சரளமான நடையில் அமைந்த நிதானமான தொனியில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தை வாசித்தேன்.அதில் அவர் ஜஸ்டிஸ் கட்சியின் முக்கியமான தலைவர்களான டி.எம். நாயர், பனகல் அரசர், பி டி தியாகராயர் ஆகியோர் மீது வைக்கும் முக்கியமான ஒரு குற்றச்சாட்டு, அவர்களின் சொந்த மாநிலங்களில் திராவிடர் என்ற கருத்தாக்கத்தைப் பரப்ப அவர்கள் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்பதும், திராவிடர் என்ற கருத்தாக்கம் ஆந்திர கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களில் ஒருபோதும் எடுபடவில்லை என்பதும். அந்தக் கருத்தாக்கமே தமிழகத்தில் பிற மொழியினரின் ஆதிக்கத்தை மறைப்பதற்கான ஒரு திரை என்றும் வாதிடுகிறார். நீதிக் கட்சி மற்றும் திராவிடர் என்ற கருத்தாக்கம் என்பவை கேரளத்தில் எப்படிப் பார்க்கப்பட்டது? மேலும் டி எம் நாயர் அவர்களின் செயல்பாடுகள் கேரளத்தில் கவனிக்கப்பட்டதா ? அங்கே அவருக்கான அவரது முயற்சிகளுக்கான எதிர்வினை என்ன ? நீதிக்கட்சி மற்றும் திராவிடர்கழகம் கேரளத்தில் உண்டாக்கிய பாதிப்புகள் என்ன?
அன்புடன்
வே. சுரேஷ் கோவை.
அன்புள்ள சுரேஷ்
ஆர்வமூட்டும் ஒரு வினாதான் இது. டி.எம்.நாயர், பனகல் அரசர் போன்றவர்கள் கேரளத்திலும் ஆந்திரத்திலும் திராவிட இனவாதக் கொள்கையைக் கொண்டு செல்லவில்லை என்பது உண்மை. அதற்கான காரணம் இங்கிருந்த தெலுங்கர் மலையாளி நலன்களைப் பாதுகாப்பதே என்ற மபொசியின் வாதம் வெறும் ஐயம். வரலாற்றுப் பின்புலம் அற்றது. இவை பேசப்பட்ட காலகட்டத்தில் சென்னை மாகாணம் என்பது மலபாரையும் கடலோர ஆந்திராவையும் உள்ளடக்கியதாக இருந்தது. தமிழ்நிலம் என்ற கருதுகோள் இருக்கவில்லை. நாயரும் பனகல் அரசரும் தங்கள் நிலத்து மக்களைக் கருத்தில் கொண்டே பேசினார்கள்.இங்கே ஊடுருவுவதைப்பற்றி அல்ல.
திராவிட இனவாத சித்தாந்தம் என்பது பல்வேறு மொழி,சாதிபேதங்கள் கொண்ட பிராமணரல்லாதார் அனைவரும் பிராமணர்களுக்கு எதிராக ஒருங்கிணைவதற்கான ஒரு பொது அடையாளமாகவே முன்னெடுக்கப்பட்டது. தமிழகத்தில் பிரிட்டிஷ் அரசு ஊழியத்தில் பிராமணர் வகித்த முன்னிலைப்பங்குக்கு எதிராகத் தங்களுடைய பங்கைக் கோரி எழுந்த இயக்கம்தான் அது. பின்னர் பிரிட்டிஷார் இந்தியர்களுக்கு அரசியலுரிமைகள் அளிக்க ஆரம்பித்தபோது அரசியல் சார்ந்து விரிந்தது.
ஆரம்பத்தில் அதற்கு பிராமணரல்லாதார் என்ற அடையாளமே முன்வைக்கப்பட்டது. அதை விட திராவிட இன அடையாளம் அழுத்தமானது என்பதைக் கண்டுகொண்டதும் அந்த அடையாளத்துக்கு அழுத்தம் அளிக்கப்பட்டது. இவ்வாறுதான் திராவிட அரசியல் உருவாகி வந்தது.
இந்தப் பிரச்சினை ஆந்திரத்திலும் கேரளத்திலும் வேறு வகையில் இருந்தது. கேரளத்தில் பிராமண ஆதிக்கம் இருவகையில் இருந்தது. நிலப்பிரபுக்களான நம்பூதிரிகளின் ஆதிக்கம், அரசுப்பணிகளை ஆக்ரமித்திருந்த தெலுங்கு பிராமணர், தமிழ் பிராமணர்களின் ஆதிக்கம். நம்பூதிரிகளின் நில ஆதிக்கத்தை இரண்டாம்நிலைச் சாதியினரான நாயர்கள் எளிதில் கைப்பற்றினார்கள். ஆனால் 'பரதேச பிராமணர்கள்' என நாயர்கள் சொன்ன ஐயர்கள்,ராவ்களின் அரசூழிய மேலாதிக்கத்தை வெல்லமுடியவில்லை. மலபாரிலும் திருவிதாங்கூரிலும் அவர்களுக்கு எதிராக உருவான இயக்கமே சென்னையில் பிராமணரல்லாதார் இயக்கமாக டி.எம்.நாயரால் கொண்டுசெல்லப்பட்டது.
கேரளத்தில் இந்த இயக்கத்துக்கு இனவாதம் தேவைப்படவில்லை. ராவும் அய்யரும் மலையாளிகள் அல்ல, அன்னியர்கள் என்பதே போதுமானதாக இருந்தது. அதாவது இன அடையாளத்துக்குப் பதில் மொழி அடையாளம்.'பரதேச பிராமணர்' என்ற சொல்லை அக்காலங்களில் எல்லா நாயர் தலைவர்களும் மீண்டும் மீண்டும் சொன்னார்கள். அது பொது எதிரியாக அந்த சிறுபான்மை பிராமணரை ஆக்கி அவர்களை எளிதில் அதிகாரச்சூழலில் இருந்து விலக்கியது. ஆகவே அங்கே திராவிட இனவாதம் தேவைப்படவில்லை.
மேலும் அதிகாரத்தைப்பெற்றதுமே நாயர்கள் மேலும் மேலும் தங்களை சம்ஸ்கிருதமயமாக்கவும், ஆரிய அடையாளம் நோக்கிச் செல்லவுமே முயன்றார்கள். மலையாளம் முக்கால்வாசி சம்ஸ்கிருதமாக ஆன காலம் இது. தங்களை ஆரியர் என்று சொல்லிக்கொள்வதே நாயர்களுக்குப் பிடித்தமானதாக இருந்தது. இன்றும் கேரளத்தில் நடைமுறையில் அதிகாரம் நாயர்களிடம் இருந்து போகவில்லை. அதை ஈழவர்களிடம் பகிர்ந்துகொள்ள நாயர்கள் முன்வந்ததுமே பிரச்சினை முடிந்துவிட்டது.
இதே நிலைதான் ஆந்திரத்திலும். விஜயநகர ஆட்சியில் நியோகி பிராமணர் நிர்வாக அதிகாரத்தில் இருந்தனர். பிரிட்டிஷ் ஆட்சியில் அவர்களுக்கு ஒரு சின்ன மேலாதிக்கம் வந்தது. ஆனால் மிக எளிதில் அதை அங்கே ரெட்டிகள் உடைத்தார்கள். எண்ணிக்கை பலத்தாலும் செல்வ பலத்தாலும். சென்னையில் மட்டுமே அவர்களுக்கு இங்கிருந்த பிராமணர்களிடம் ஒரு போட்டி இருந்தது. அதை வெல்லவே பிராமணரல்லாதார் இயக்கத்தில் ஆர்வம் காட்டினார்கள். ஆந்திராவில் இன்றும் ரெட்டி ஆதிக்கம் தான். அதன்பின் எதற்கு திராவிட வாதம்?
பிராமணரல்லாத உயர்சாதியினரான நாயர்களும் ரெட்டிகளும் ஜனநாயக அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளுமளவுக்கு எண்ணிக்கை பலமும் கொண்டவர்கள் என்பதை கவனிக்கவேண்டும்.தமிழ்நாட்டில் அப்படி அல்ல நிலைமை. பிராமணரல்லாத உயர்சாதியினர் எண்ணிக்கைபலமற்றவர்கள். ஆகவே உருவாகி வந்த பிற்படுத்தப்பட்டவர்களை தங்கள் அணியில் நிறுத்தவேண்டியிருந்தது. அதற்கு திராவிட இனவாதம் போல ஒரு பொது அடையாளம் தேவைப்பட்டது. ஆகவே அது முன்னெடுக்கப்பட்டது.
மேலும் திராவிட இனவாதம் தமிழகத்தில் உருவான ஒன்று. எல்லிஸ், கால்டுவெல் துரைகளால் முன்வைக்கப்பட்டு மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, ஞானியார் அடிகள் போன்ற உயர்சாதிச் சைவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டது. அதற்கு அன்று தமிழ்நாட்டு அதிகார அரசியலில் ஒரு தேவை இருந்தது. பின்னர் பிற்படுத்தப்பட்டோர் அரசியலில் பிராமணரல்லா உயர்சாதியினர் ஆதிக்கம் மூழ்கியபோது அதுவும் மூழ்கியது. அவ்வளவுதான்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
ம.பொ.சி
காந்தி-சுபாஷ் , கடிதம்
ஜெயமோகன்,
என் கட்டுரைக்குப் பல கடிதங்கள்வந்தன. ஆனால் காந்தியை மட்டம் தட்டி சுபாஷ் புகழ் பாடும் கட்டுரையென்று என்ற கோணத்தில் ஒருவரும் அந்தக் கட்டுரையைப் பார்க்கவில்லை. எனக்கே அது புதியதாகத்தான் இருந்தது.
உண்மையில் நான் எங்குமே அப்படிச்சொல்லவில்லை. அஹிம்சைப்போர்களைஎதிர்கொள்ளும் விதத்தை இருபதாண்டுகளில் பிரிட்டிஷார் நன்கு அறிந்திருந்தனர். காந்தியின் கீழுள்ள காங்கிரஸ் எந்தெந்த எல்லைகளைத் தாண்டாது என்கிற கணக்கில் காலனி அரசு தெளிவாக இருந்தது. சத்தியாக்கிரகப்போர்களின் போக்கு என்பது அளவில் விரிந்தது என்றாலும், அனுமானிக்கக்கூடிய ஒன்றாக அவர்களுக்கு இருந்தது. ஆனால் காங்கிரசிலிருந்து விலகிய போஸ் அவர்களுக்கு ஒரு வைல்ட் கார்ட். அதனால்தான் அவரைக் கொலை செய்ய நாட்டுக்கு நாடு ஆள் அனுப்பியது சர்ச்சிலின் அரசு. இதுதான் நான் சொல்லியிருப்பது.
போஸின் வழி வென்றிருக்கும் என்றும் நான் எங்கும்சொல்லவில்லை. அது போர்க்கால வேகத்தில் உருவெடுத்த ஒரு அதிரடி முயற்சி மட்டுமே. ஆனால் காந்தியின் நிதானம் பேதங்கள் தாண்டி பலதரப்பு மக்களை ஒன்றிணைத்தது போலவே போஸின் வேகமும் பேதங்கள் தாண்டி பலதரப்பு மக்களை ஒன்றிணைத்தது என்பது வரலாறு. இந்திய மக்களை விடுதலைக்குத் தயார் செய்ததில் காந்தியின் சரித்திரப் பங்கை மறுப்பவர் இந்திய வரலாற்று அறிவில்லாதவர்களாக, காந்தியின் மீது காழ்ப்பு உடையவர்களாக மட்டுமே இருக்க முடியும். அதே போல இரண்டாம் உலகப்போரின் மத்து உலகைக்கடைந்தபோது வெளியான வரலாற்று நிகழ்வுகளில் சுபாஷ் போஸின் படை திரட்டலும், கடற்படையின் கலகமும் முக்கியமானது என்பதையும் மறுக்க முடியாது.
இரண்டாம் உலகப்போரின் இறுதியில் பிரிட்டிஷ் படை நொறுங்கிக்கிடந்தது. சர்ச்சில் தரப்பு இங்கிலாந்திலேயே வெகுவாய் வலுவிழந்திருந்தது. வரலாற்றின் காற்று இந்திய விடுதலைக்கு வெகு சாதகமாய் இருந்தது. அந்த சமயத்தில் கடற்படை தனக்கு எதிராகத்திரும்பியது கண்டு பிரிட்டிஷ் அரசு அதிர்ந்து போனது. "இந்தியா முழுதும் பரவக்கூடிய அரசியல் பூகம்பம்" என்று அதனை வர்ணித்தார் ஜவஹர்லால் நேரு. அதை பிரிட்டிஷார் அடக்கியிருக்க முடியுமா என்றால் கட்டாயம் அடக்கியிருக்க முடியும்தான், ஆனால் அதுவல்ல இங்கே செய்தி. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய பிரிட்டிஷ் அரசைப் பொறுத்தவரையில், இந்தியா கைநழுவிக்கொண்டிருக்கிறது என்பதற்கான இறுதி நிரூபண அம்சமாக அது காணப்பட்டது என்பதுதான் இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
காலனியாதிக்கத்தின் கடைசி நாட்கள் என்று வருகையில் இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாகப்பார்ப்பது அவசியம் என்ற வகையில் அமைந்ததே என் கட்டுரை.மற்றபடி காந்தியின் மீது அவதூறு பொழியும் இந்துத்துவத்தரப்பு என்ற ஒன்று இருக்குமானால்அதிலிருந்தும், போஸின் தியாகத்தை மலினப்படுத்தும் காந்தியத்தரப்பு என்ற ஒன்று இருக்குமானால் அதிலிருந்தும் நான் விலகியிருக்கவே விரும்புகிறேன்.
"
''உங்களைப்போன்றவர்கள்" என்று சொல்கையில் நீங்கள் மனதில் உருவகித்து வைத்திருக்கும் ஏதோ ஒரு ஒட்டுமொத்தத் தரப்பில் என்னையும் ஒட்ட வைத்து, அந்தத் தரப்பின் மீதான உங்கள் அத்தனை விமர்சன அம்புகளையும் என்மீது எறிந்திருக்கிறீர்கள். என் சிந்தனைகளில் நான் சுதந்திரமாய் இருக்கவே விரும்புகிறேன். வசதியான முன்முடிவுகளுடன் சித்தாந்தக் குப்பிகளில் என்னை யாரும் அடைப்பதில் எனக்கு சம்மதமில்லை.
ருவாண்டாவின் ரத்த அழிவின் பின்புலத்தில்"ஆரிய" வாதம் என்கிற 2006-ஆம் வருட திண்ணைக்கட்டுரையிலேயே "கீதையின் அடிப்படையில் எழுந்த காந்தியடிகளின் இந்து தார்மீகத்தின் முன்" ருவாண்டா போன்ற ஒரு பேரழிவுப் பிரசாரம் இந்தியாவில் எடுபடாமல் போனது என்று எழுதியவன் நான்.
இதோ இன்று கூட, கலிபோர்னியா பாடப்புத்தகத்தில் "காந்தியடிகள் உலக அளவில் பிரபலம் பெறுவதற்காக உண்ணாவிரதங்களை மேற்கொண்டார்" என்று மகாத்மாவை மலினப்படுத்தும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகத்தைத் திருத்தக் கோரிக் கடிதம் எழுதி விட்டுத்தான் உங்களுக்கு இந்த பதிலை எழுதவே வந்திருக்கிறேன்.
மற்றபடிஇது குறித்து எனக்கு வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.
அருணகிரி
அன்புள்ள அருணகிரி
உங்கள் கட்டுரையில் அந்த வரி, அதிலும் அது சாதாரணமாக சொல்லப்பட்டிருக்கும் விதம், என்னை வருத்தமுறச்செய்தது. அதைவிட எவ்வளவோ மடங்கு கீழ்த்தரமாகவெல்லாம் பலர் இணையத்தில் காந்தி பற்றி, இந்தியா பற்றி எழுதுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு எந்த வாசிப்பும் கிடையாது . ஒருவகையான விடலைகள் அவர்கள், தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றுகூடத் தெரிந்துகொள்ளாத அளவுக்கு முதிர்ச்சியற்றவர்கள். நான் உங்களைத் தொடர்ந்து அரசியல் சார்ந்து வாசித்து எழுதிவரும் ஓர் அறிஞனாகக் காண்பதனால் எனக்கு உங்கள் எல்லா வரிகளுமே முக்கியமெனத் தோன்றியது. ஆகவேதான் அப்படி.
நீங்கள் சொன்னபடி உங்கள் நோக்கம் அதுவல்ல எனில் நான் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறேன். ஆகவே மன்னிக்கக் கோருகிறேன்.
உண்மையில் சுபாஷ் உத்தேசித்த போராட்டமே பிரிட்டிஷ் அரசுக்கு எளிமையாக எதிர்கொள்ளத்தக்கது. உலகமெங்கும் அவர்கள் ஆதிக்கம் செலுத்திய எல்லா நாடுகளிலும் அவர்கள் எதிர்கொண்டது அதையே. உலகிலேயே மூர்க்கமும் வேகமும் கொண்ட ஆயுதப்போராட்டமாக அறியப்பட்ட ஐரிஷ் விடுதலைப்போரை அவர்கள் எப்படி வெற்றிகரமாக சமாளித்தார்கள் என்பதையே உதாரணமாக காணலாம்.
மேலும் சுபாஷின் செல்வாக்கு காங்கிரஸுக்குள், மிகஎளிமையான அளவிலேயே இருந்தது என்ற யதார்த்தமும் அவர்களுக்கு தெரியும். கண்டிப்பாக அது அவர்களுக்கு சிக்கலை அளிப்பதே. ஆனால் அவர்கள் ஆட்சிக்கு சவாலே அல்ல.
ஆனால் காந்தியின் போராட்டம் அப்படி அல்ல. அதுதான் அவர்கள் முன்னர் சந்தித்திராதது. அவர்கள் கடைசி வரை முழுமையாக புரிந்துகொள்ளமுடியாமல் போனது. இன்றும்கூட அவர்களுக்கு மர்மம் விலகாதது. அதன் விரிவான பாதிப்பு இன்றுகூட பிரிட்டிஷ் ராஜ் பற்றிய வரலாற்றை ஆட்டிப்படைக்கிறது. ஆகவேதான் இன்றும் கூட அவரைப்பற்றிய வரலாற்றை நுட்பமாகத் திரிக்கிறார்கள். அவதூறு செலுத்துகிறார்கள்–நீங்கள் சுட்டிக்காட்டியதுபோல.
பிரிட்டிஷாரின் ஆட்சியைத் தக்கவைத்த முக்கியமான வலிமை கருத்தியல் சார்ந்தது. உலகிலேயே நாகரீகமான, ஜனநாயக நாடு என அவர்கள் தங்களை சித்தரித்துக்கொண்டார்கள். தாங்கள் சென்ற இடத்து மக்களை அநாகரீகமானவர்கள் என்று விவரித்து அவர்களின் வரலாறுகளையும் தாங்களே எழுதிக்கொண்டார்கள். அந்த அநாகரீக மக்களை நாகரீகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே தாங்கள் அதிகாரத்தைக் கையாள்வதாக உலகையும் அந்த அடிமைமக்களில் பெரும்பான்மையினரையும் நம்பவைத்தார்கள்.
ஆஸ்திரேலியாவில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையையும் அவர்கள் அப்படித்தான் சித்தரித்தார்கள் –எழுபதுகள் வரை கூட.அதுவே அவர்களின் ஆதிக்க உத்தி. அந்தக் கருத்தியல் மேலாதிக்கமே மிகச்சிறுபான்மையினரான அவர்களை அந்த மக்கள் அதிகாரத்தில் தொடர அனுமதித்தது. அந்த மக்கள் எதிர்த்துக் கலகம் செய்யும்போது அதைக் காட்டுமிராண்டிகளின் ஆயுத தாக்குதல் என்றே அவர்கள் உலகுக்கு சித்தரித்த்தார்கள். ஆஸ்திரேலிய பழங்குடிகள் மற்றும் அமெரிக்கச் செவ்விந்தியர்களின் எதிர்ப்புகளை ஆங்கில இதழியல் எழுத்தும் இலக்கியங்களும் எப்படிக் காட்டியிருக்கின்றன என்று பாருங்கள். கௌபாய் படங்களில் செவ்விந்தியர்கள் காட்டுமிராண்டி கொள்ளையர்களாகவே இன்றும் காட்டப்படுகிறார்கள்.
நைஜீரியா முதலிய நாடுகளை இன்றும்கூட உலகின் கண்முன்னால் காட்டுமிராண்டி நாடுகளாகக் காட்டுகிறார்கள் பிரிட்டிஷ் எழுத்தாளர்கள். சுதந்திரம் கொடுத்தபோது பிரிவினையை விதைத்துக் கலவரத்தை ஆரம்பித்துவிட்டு சென்றார்கள். அந்தக் கலவரத்தைக் காரணம் காட்டினால்,அதைக் காட்டுமிராண்டிநாடு என்றும் தாங்கள் செலுத்திய ஆதிக்கம் அதை சீர்திருத்தவே என்றும் சொல்கிறார்கள்.
அந்த உத்திக்கு எதிராகப் போராட அடிமைநாடுகளால் முடியவில்லை. அந்த உத்தியை வெற்றிகரமாக எதிர்கொண்டவர் காந்தி. 'holier-than-thou.என்பதே காந்தியின் அணுகுமுறை. பிரிட்டிஷாரின் ஜனநாயகத்தைவிட மேலான ஜனநாயகத்தை காந்தி முன்வைத்தார். அவர்களின் மனிதாபிமானத்தை விட மேலான மனிதாபிமானத்தைப் பேசினார். எங்கும் எப்போதும் சட்டம் ஒழுங்கை மீறவில்லை. வன்முறையைப்பற்றிப் பேசவில்லை.
மேலும் இந்த மதிப்பீடுகளை ஐரோப்பாவிடமிருந்து கற்றுக்கொண்டதாகச் சொல்லவில்லை. கிருஷ்ணனிடமிருந்து கற்றுக்கொண்டதாகச் சொன்னார். பண்டைய இந்து ஞானமரபில் இருந்து வருவதாகத் தன்னை சித்தரித்தார். விளைவாக இருநூறாண்டுகளாக இந்தியா பற்றி பிரிட்டிஷார் உருவாக்கிய எல்லா சித்தரிப்பையும் முழுமையாகவே தோற்கடித்தார். எது பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் அடித்தளமோ அதை, அவர்களின் "The White Man's Burden" என்ற கருத்தியலை முழுமையாகவே தோற்கடித்தார். அந்தப் போராட்டத்தை பிரிட்டிஷாரால் எதிர்கொள்ளமுடியவில்லை.
இந்தியாவை நைஜீரியா போல அவர்களால் இன்று சித்தரிக்கமுடியவில்லை. நீங்கள் சொன்னதுபோல நாசூக்கான திரிபுகளே சாத்தியம். காரணம் காந்தி நவீன ஜனநாயக மதிப்பீடுகளின் அடையாளமாக உலக மக்களில் பெரும்பாலானவர்களால் இன்று கருதப்படுகிறார். அவர் எதிர்த்துப் போராடியமையாலேயே வரலாற்றில் பிரிட்டிஷ் ராஜ் எதிர்மறையாக சித்தரிக்கப்பட்டுவிட்டது. அதைக்களைய இன்றும் பலகோடி ரூபாய் செலவிட்டு வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
சுபாஷின் பங்களிப்பை குறைத்து நான் மதிப்பிடவில்லை. நீங்கள் சொன்னபடி அவரது தியாகம் ஒரு கட்டத்தில் இந்திய இளைஞர்களை எழுச்சிக்கொள்ளச்செய்வதாகவே இருந்தது. அவரது ஆளுமை இன்றும் ஒரு மாபெரும் இந்திய முன்னுதாரணமே. நான் காந்தியை மட்டம் தட்ட அவரை மிகைப்படுத்திக்காட்டும் முயற்சிகளையே சுட்டிக்காட்டினேன். உங்களைப்போன்றவர்கள் என நான் சொன்னது இந்த அணுகுமுறை மிகவும் பொதுப்படையான ஒரு போக்காக உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டவே. அது உங்கள் தனிப்பட்ட கருத்தாக மட்டும் இல்லை என்பதைக் காட்டவே.
காந்தியை நுட்பமாக மட்டம் தட்டும் முயற்சிகள் எல்லாக் கிறித்தவப்பின்புலம் உள்ள ஐரோப்பிய நூல்களிலும் , பாடத்திட்டங்களிலும் உள்ளவைதான். அவற்றுக்கு எதிரான உங்கள் போராட்டத்திற்கு தலைவணங்குகிறேன்
நன்றி
ஜெ
உப்பும் காந்தியும்
தொடர்புடைய பதிவுகள்
கேள்விகள்
காந்தி,அனந்தமூர்த்தி
காந்தியின் எதிரிகள்
உப்பும் காந்தியும்
உப்பு,மேலும் கடிதங்கள்
உப்பு-கடிதங்கள்
உலகின் மிகப்பெரிய வேலி
காந்தியும் மேற்கும் -குகா
நைபால்
அண்ணா ஹசாரே- காந்திய போராட்டமா?
October 3, 2011
கேள்விகள்
அன்புள்ள ஜெ,
உங்கள் இணையதளத்தில் காந்தியின் எதிரிகள் என்ற கட்டுரையில் ஒரு வரி 'இந்தியாவிலே பிராமணர்கள் பிராமணரல்லாத ஒருவரின் ஆன்மீகத் தலைமையை ஏற்றுக்கொண்ட சரித்திரமே கிடையாது என்பதை நீங்கள் கவனிக்கவேண்டும்'
நீங்கள் இதை ஏற்றுக்கொள்கிறீர்களா?
ரமணன்
அன்புள்ள ரமணன்,
அது இந்து மதத்தின் அடிப்படை மனநிலை சார்ந்த புரிதல் இல்லாத ஒரு கூற்று மட்டுமே. தமிழகத்தைப்பொறுத்தவரை அதிகமான பிராமணர்களால் கடவுளாகவும் குருநாதராகவும் கருதப்பட்டவர் சத்யசாய்பாபா– சங்கராச்சாரியார்கூட அல்ல.
தீண்டாமை நடைமுறையாக இருந்த காலகட்டத்திலேயே நாராயண குருவின் காலடியில் நம்பூதிரிகள் வந்து விழுந்திருக்கிறார்கள். மீனவப்பெண்ணான மாதா அமிர்தானந்தமயியை குருவாக காண்பவர்களில் உயர்சாதியினரே அதிகம்
சாதிமனநிலை எல்லா இந்துக்களுக்கும் ஆழத்தில் ஒரே அளவில் ஒரே வீச்சில் இருந்துகொண்டிருக்கிறது. தலித்துகளிடமும்தான். அதைத் தாண்டுவதற்கு ஆழமான சுயபரிசோதனையும் ஆன்மீக உறுதியும் தேவை. ஆனால் பொதுவாக அந்த சாதியுணர்வு லௌகீகம் சார்ந்ததாகவே உள்ளது. பரமார்த்திக விஷயங்களை அது கட்டுப்படுத்துவதில்லை என்பதே இந்துமதத்தின் பொது வழக்கமாக உள்ளது.
ஜெ
*
ஜெ,
நேரடியான கேள்வி, காந்திசெய்தவற்றிலேயே பெரிய பிழைகள் என்னென்ன? [மழுப்பாமல் பதில் சொல்லவும்]
முருகபூபதி
அன்புள்ள முருகபூபதி,
மழுப்பாமல் ஏற்கனவே பல பக்கங்களுக்கு விரிவாகச் சொல்லியிருக்கிறேன்
1. முதல்பெரும்பிழை கிலாஃபத் இயக்கத்தை ஆதரித்தது. அது இஸ்லாமிய மதகுருக்களைப் பிற மதங்களின் குருக்களுடன் இணைத்துப் புரிந்துகொண்டமையால் வந்தது. பிரிட்டிஷார் உருவாக்கிய இந்து முஸ்லீம் பிரிவினையைத் தவிர்க்க அவர் கண்ட வழி அது. அந்த ஒருங்கிணைப்புக்கு அவர் மட்டுமே முயற்சி செய்தார். மற்றவர்கள் அந்த முயற்சியும் எடுக்கவில்லை.
2. வைணவத்தின் தாந்த்ரீக மதத்தில் உள்ள சகசயனம் போன்ற சில வழிமுறைகளை முறையான வழிகாட்டல் இல்லாமல் செய்து பார்த்தது. அவை ரகசியமாக செய்யவேண்டியவை, யோகி- யோகினிகளுக்குரியவை. அவர் அதை வெளிப்படையாகச் செய்தார். தன்னை ஒரு தாயாக ஆக்கிக்கொள்ள நினைத்தார். ஆகவே அவை அவரை தார்மீக சிக்கல்களை நோக்கித் தள்ளின.
ஜெ
*
ஜெ,
மீண்டும் ஒரு கேள்வி
காந்தியின் பாலியல் சோதனைகளைப்பற்றி சொன்னீர்கள். அவருக்கு இந்தியாவின் தந்தை என்று சொல்ல என்ன தார்மீக அருகதை இருக்கிறது? என் மார்க்ஸிஸ்டு தோழர்கள் கேட்கிறார்கள்
முருகபூபதி
அன்புள்ள முருகபூபதி,
காந்தி அவர் புரிந்துகொண்ட முறையில் சில யோகமுறைகளை சோதனைசெய்துபார்த்தார். தன்னை ஒரு தாயாக ஆக்கிக்கொள்ளமுடியும் என்றும் மானுடநிலைகளில் அதுவே சிறந்தது என்றும் நினைத்தா. அந்த முயற்சிகளை ரகசியமாக வைக்கவில்லை. அப்பட்டமாகச் செய்தார், வெளிப்படையாக விவாதித்தார். அவருடன் இருந்த எந்தப் பெண்ணும் அதை கடைசிநாள் வரை ஒரு தவறாக உணரவில்லை. தன் தாயுடன் இருந்த உணர்வே இருந்தது என மனுபென் ஒருமுறை சொன்னார்
மார்க்ஸிஸ்டுகளுக்குச் சொல்லுங்கள், மார்க்ஸ் அப்படிப்பட்டவரல்ல என்று. அவர் பெண்களுடன் முறைகேடானபாலியல் உறவுகள் உடையவர். அதை எதிர்த்த ஜென்னியை அடித்து உதைத்து வதைத்தவர். தன் பெண்களை வெறிகொண்டு அடிக்கும் வழக்கம் கொண்டிருந்தவர். அவர்களால் மூர் [காட்டுமிராண்டி] என அழைக்கப்பட்டவர்.
தன் இல்லத்து அனாதைப் பணிப்பெண் ஹெலன் டெமுத்தை வருடக்கணக்காக பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியவர் மார்க்ஸ். அந்த உறவில் உருவான கருவை அழித்தவர். மீறி ஹெலென் டெமுத் ஒரு பிள்ளையைப்பெற்றபோது அந்தப் பிள்ளைக்குத் தந்தையாக இருக்க மறுத்தவர். அந்த சோரபுத்திரனுக்கு எங்கெல்ஸ்தான் தன் குடும்ப அடையாளத்தைக் கொடுத்தார். அனாதையாக அவமதிக்கப்பட்டவனாக வாழ்ந்து மறைந்தான் அவன்.
காந்தியைப்பற்றிப் பேசும் யோக்கியதை கொண்ட மார்க்ஸியர்கள் வெகுசிலரே.
*
ஜெ,
கடைசியாக ஒரு கேள்வி, மன்னிக்கவும்
இந்தியாவின் பிரிவினையை ஒட்டிய மதக்கலவரங்கள்தானே இந்தியாவின் உண்மையான முகத்தைக் காட்டுகின்றன? எப்படி நம்மை நாம் ஆன்மீகதேசம் பண்பாடுள்ள தேசம் என்றெல்லாம் சொல்லிக்கொள்ள முடியும்?
முருகபூபதி
அன்புள்ள முருகபூபதி,
சரி, பண்பாடுள்ள தேசம் வேறு எது?
இருநூறாண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் பொருளியல் ரீதியாக ஒட்டச்சுரண்டப்பட்டு பஞ்சத்தால் நாலில் ஒருபங்கு மக்கள் செத்து அழிந்துபோன தேசம் இந்தியா. அது பிரிட்டிஷார் நிகழ்த்திய முதல் மானுடப்பேரழிவு.
திட்டமிட்டு பிரிட்டிஷார் உருவாக்கிய இரண்டாவது மானுடப்பேரழிவு என தேசப்பிரிவினையைச் சொல்லலாம். அதற்கான மதம்சார்ந்த மனப்பிளவை உருவாக்கியது அவர்களே. முஸ்லீம் லீக் நடத்திய நேரடிநடவடிக்கை வன்முறையை அவர்களின் அரசே ஆதரித்து ஊக்குவித்தது. மதக்கலவரங்களுக்கு ராணுவத்தை ஒருபோதும் அர்த்தபூர்வமாக பிரிட்டிஷார் பயன்படுத்தவில்லை
தேசப்பிரிவினையை அவர்கள் நிகழ்த்திய விதமே பேரழிவை உருவாக்கியது. ராட்கிளிஃப் ஒருவாரத்தில் ஒரு மாபெரும் தேசத்தை இரண்டாக்கினார். அவர் ஒருபோதும் கண்ணால் பார்த்திராத இடங்களை வெறும் வரைபடத்தைப்பார்த்து கோடுபோட்டு பிளந்தார். மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்கள் திட்டம்போட்டு பிளக்கப்பட்டன
ராட்கிளிஃப் செல்லும்போது எல்லா இந்திய வரைபடங்களையும் தன்னுடன் எடுத்துச்சென்றார். இந்தப் பிரிவினைக்கோடு அமலுக்கு வருவதற்குள்ளாகவே அவர் கிளம்பிச்சென்றார். போதிய விரிவான வரைபடங்கள் இல்லாமல் சுதந்திர இந்திய நிர்வாகம் கைவிடப்பட்டது.
தேசத்தின் புதிய எல்லையை அறிவிப்பதற்கு இரண்டு மணிநேரம் முன்புதான் அந்த வரைபடம் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டது. மிகத் தெளிவற்ற நான்கே நான்கு வரைபடங்களுடன். இரண்டுமணி நேரத்தில் அதை ஆரய்ந்து தேசப்பிரிவினையை அறிவித்தார்கள். இது திட்டமிடப்பட்ட ஒரு அழிவுச்செயல்.
ஒரு வலுவான கூட்டரசை உருவாக்கியபின் தேசப்பிரிவினையை அறிவித்து படிப்படியான மக்கள் பரிமாற்றத்தை அரசே செய்திருந்தால் வன்முறை வந்திருக்காது. அந்த எல்லைக்கோட்டை அவசரமாக அறிவிக்காமலிருந்தால்கூட வன்முறை நிகழ்ந்திருக்ககாது
சரி, அப்படியே செய்தாலும்கூட உலகிலேயே பெரிய ராணுவத்தின் ஒரு பகுதியை அந்த எல்லைகளில் நிறுத்திவிட்டு அதை செய்திருக்கலாம். சரி ஒழிகிறது, கலவரம் ஆரம்பித்தபின்னாவது ராணுவத்தை அனுப்பியிருக்கலாம். இந்திய ராணுவம் முழுக்க இந்தியாவை விட்டு கிளம்பிய பிரிட்டிஷாருக்கு காவலுக்கு நிறுத்தப்பட்டது. அதன் மீது இந்தியர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இருக்கவில்லை. மௌண்ட்பாட்டன் அதைக் கட்டுக்குள் வைத்துத் தன் விருப்பப்படி செயல்படச்செய்தார்.
எந்த மக்கள் திரளும் வன்முறையாக இடம்பெயரச்செய்யப்பட்டு, அரசும் விலகிக்கொண்டால் அராஜகமும் வன்முறையும்தான் உருவாகும். மக்கள்தொகை மிக்க இந்தியாவில் அதன் வாய்ப்பு பல மடங்கு.
இந்தியாவை அராஜகத்தில் விட்டுச்செல்ல திட்டமிட்டனர் பிரிட்டிஷார். நாட்டை காங்கிரஸாரிடம் அவர்கள் கொடுக்கவில்லை. அத்தனை சம்ஸ்தானங்களையும் அந்தந்த மன்னர்களிடமும் நவாபுகளிடமும்தான் கொடுத்தனர். பிடித்திருந்தால் இந்தியாவில் சேரலாம் என்றனர். அதில் பாதிப்பேர் பிரிய நினைத்தால்கூட உலகின் பிரம்மாண்டமான அராஜக வெளியாக இந்தியா ஆகும் என எதிர்பார்த்தனர்.
அது நிகழவில்லை. ஏனென்றால் காந்தி நிகழ்த்திய அகிம்சைப் போராட்டம் பிரிவினைகளைப் போக்கி ஒருங்கிணைக்கும் சமரசத் தன்மை உடையது. பிரிவினைகளை வளர்க்கும் ஆயுதப்போராட்டம் அல்ல அது. அது ஏற்கனவே மக்கள் மனதில் ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கிவிட்டிருந்தது.
இந்தியா இந்தியரான பட்டேல் கைக்கு வந்தபின் வெறும் மூன்றுமாதத்தில் இந்தியா அமைதிக்குத் திரும்பியது. பகைமையை மன்னித்தது. பேதங்களை மெல்லமெல்ல சமரசம் செய்துகொண்டது. இன்னும் அழியவில்லை.
ஆகவே இந்தியா எந்த மேலைநாட்டைவிடவும் பண்பாடான நாடுதான். அமெரிக்க உள்நாட்டுப்போரையோ ஐரீஷ்விடுதலைப் போரையோ இதனுடன் ஒப்பிட்டுப்பாருங்கள். அவர்களின் மக்கள்தொகையுடன் இறப்பு எண்ணிக்கையைக் கணக்கிட்டு விகிதாச்சாரம் என்னவென்று ஆராயுங்கள்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
காந்தியின் எதிரிகள்
உப்பு-கடிதங்கள்
காந்தி,அனந்தமூர்த்தி
உப்பும் காந்தியும்
உப்பு,மேலும் கடிதங்கள்
உலகின் மிகப்பெரிய வேலி
காந்தியும் மேற்கும் -குகா
நைபால்
அண்ணா ஹசாரே- காந்திய போராட்டமா?
அண்ணா ஹசாரே- மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
