Jeyamohan's Blog, page 2284
September 27, 2011
ஊட்டி- பெண்களுக்கு இடமுண்டா?
நண்பர் ஜெயமோகன் அவர்களுக்கு
ஊட்டி இலக்கியச் சந்திப்பு பற்றிய தகவல்களைத் தொடர்ந்து படித்து வருகின்றேன். அருமையாகவுள்ளது. கொஞ்சம் எரிச்சலாகவும் எனக்கு உள்ளது. கனடாவில் சில வார இறுதி நாட்களில் கட்டிடக் காட்டிற்குள் மிக சொற்ப நேரத்தில் எமது இலக்கியச் சந்திப்புக்கள் முடிந்து விடுகின்றன.
சந்திப்பு பற்றி அறிவிப்பை முதலில் படித்த போது இந்த வருடம் இல்லாவிட்டாலும் எப்பொழுதாவது ஒரு வருடம் இந்தியா சென்று இப்படியான ஒரு இலக்கியச் சந்திப்பில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைக்கலாம் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டு உங்கள் அனுபவங்களைத் தொடரந்து வாசித்துக் கொண்டிருந்தேன். நேற்று சில நண்பர்களுடன் இதுபற்றி உரையாடி எனது ஆதங்கத்தைத் தெரிவித்த போது ஒரு பெண் நண்பர் கூறினார்'அது ஆண்களுக்கான சந்திப்பு என்று நினைக்கின்றேன், நீங்கள் விரும்பினாலும் இணைந்திருக்க முடியாது'என்று.அப்போதுதான் எனக்கு அது உறைத்தது. முதல் வேலையாக வீட்டிற்கு வந்தவுடன் உங்கள் தளத்திற்குச் சென்று மீண்டும் மேலோட்டமாக எங்காவது ஆண்களுக்கு மட்டுமானது என்று குறிப்பிட்டிருக்கின்றீர்களா என்று பார்வையிட்டேன். என் கண்ணில் தட்டுப் படவில்லை, இருந்தும் உங்கள் நிபந்தனைகளைப் பார்வையிடும் போது மறைமுகமாகவே ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளமுடியும் என்று தாங்கள் குறிப்பிட்டிருப்பதாய் நான் உணர்ந்து கொண்டேன் காரணம். ஒன்றாக அனைவரும் தங்க வேண்டும் என்பது அதைக் குறிப்பிடுவதாய் நான் உணர்ந்தேன். ஆண்கள் பெண்கள் ஒன்றாகத் தங்குவது ஜரோப்பிய இலக்கியச்சந்திப்பில் அசூசை எதுவுமின்றி இயல்பாக நடப்பது .ஆனால் உங்கள் சந்திப்பில் அது சாத்தியமா? காரணம் படங்களில் பெண்ணின் ஒரு முகமாவது தட்டுப் படுமா என்று தேடினேன் கிடைக்கவில்லை.
நான் அறிந்து கொள்ள விரும்புவது என்னவெனில் இது ஆண்களுக்கு மட்டுமான இலக்கியச் சந்திப்பா? பெண்கள் கலந்து கொள்ளவேண்டும் என்று விண்ணப்பிக்கவில்லையா? நான் கலந்து கொள்ளவேண்டும் என்று அறிவித்திருந்தால் தவிர்த்திருப்பீர்களா?
சுமதி (கறுப்பி) கனடாவிலிருந்து
அன்புள்ள சுமதி
இந்த இலக்கியச்சந்திப்புகளில் எல்லாமே பெண்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் விகிதாச்சாரம் குறைவு. சாதாரணமாக ஒரு கூட்டத்தில் இரண்டுமூன்றுபேர். பெரும்பாலான கூட்டங்களில் அருண்மொழி, சைதன்யா கலந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களைச் சேர்க்காமல் சொல்கிறேன்.
பெண்கள் பங்கெடுப்பது வரவேற்கப்படுகிறது என்பது மட்டும் அல்ல, அவர்களுக்குத் தேவையான எல்லா வசதிகளும் செய்துகொடுக்கப்படுகிறது. சேர்ந்து தங்குதல் என்றால் ஒரே அறையில் அல்ல, ஒரே வளாகத்தில்தான். பெண்களுக்குத் தனி அறைகள் உண்டு.
பெண்கள் கணவர்களில்லாமல் வருவது இந்தியாவில் சாத்தியமில்லை. ஆகவே அவர்கள் கணவர்களுடன் வந்தால் அவர்களுக்கும் தங்குமிடம் ஏற்பாடு செய்கிறோம். தனியாகப் பெண்கள் வரவிருந்தால் அவர்கள் விரும்பினால் இன்னொரு பெண்ணுடன் வரவும் ஏற்பாடு செய்கிறோம்.
இவ்வளவுக்கும் அப்பால் பங்கெடுப்பாளர்களில் பெண்கள் மிகக் குறைவு என்பதற்கான சமூகக் காரணங்களை ஆராயவேண்டும். பொதுவாக எந்த இலக்கியக்கூட்டங்களிலும் , தத்துவ அரசியல் கூட்டங்களிலும் பெண்கள் மிகக் குறைவாகவே காணப்படுகிறார்கள்
ஆச்சரியமென்னவென்றால் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் கனடாவிலும்கூட தமிழ் இலக்கியக்கூட்டங்கள் அப்படித்தான் இருக்கின்றன
ஜெ
அன்புள்ள ஜெ,
மாணவர்கள் என்னை நாடித் தடையின்றி வரவேண்டும்!
மாணவர்கள் எல்லா திசைகளிலிருந்தும் வரவேண்டும்!
புலன்களை வெல்லும் திண்மை உடைய மாணவர்கள் வரவேண்டும்!
சாந்தமான மனதுடைய மாணவர்கள் வரவேண்டும்!
எவ்வாறு ஆழமான இடத்தை நோக்கி ஓடைகள் ஓடுகின்றனவோ,
எவ்வாறு மாதங்கள் சேர்ந்து வருடத்தை நிரப்புகின்றனவோ
அவ்வாறே திசையெங்கும் இருந்து தேடல் உள்ள மாணவர்கள் வரவேண்டும்!
அவர்களால் என் வாழ்வு முழுமையடைய வேண்டும்!
என்னை ஒளிபொருந்தியவனாக்கி உன்மயமாக்கிக் கொள்வாய்!
-தைத்திரீய உபநிஷத், சீக்ஷாவல்லீ
நமது ரிஷிகள் மேற்கண்ட மந்திரம் சொல்லி 'ஆவஹந்தீ' ஹோமம் செய்து தேடலும், தீராத அறிவுத்தாகமும், ஒழுக்கமும் உடைய மாணவர்களை வேண்டிக் காத்திருந்தனர்.
உங்கள் ஆசிரியர்களும் அப்படி விரும்பியிருப்பார்கள், உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதன் மூலமும், உங்களோடு விவாதிப்பதன் மூலமும் உள்ளூர நிறைவடைந்திருப்பார்கள். நீங்களும் அப்படித் தான் விரும்புகிறீர்கள் என்றே எண்ணிக்கொள்கிறேன். சமீபத்தில் ஊட்டி காவிய முகாமில் கலந்து கொண்ட நண்பர்களின் பரவசமான பகிர்வுகளைப் படிக்கும் போது அப்படித்தான் தோண்றுகிறது. கடந்த சில வருடங்களாக உங்களை நேரில் சந்திப்பவர்களும், நீங்கள் நடத்தும் இலக்கியக் கலந்துரையாடல்களில் கலந்து கொள்பவர்களும், உங்கள் ஆக்கங்களைப் படித்து மடலில் உரையாடியும், விவாதித்தும் வளரும் ஒரு இளந்தலைமுறை மெல்ல பரவிக்கொண்டிருக்கிறது. புதிது புதிதாக அறிமுகமாகிப் பழைய கேள்விகளையே கேட்கும் ஆரம்பநிலையில் உள்ளவர்களிடமும் இத்தனை பொறுமையாகவும், பொறுப்பாகவும், உண்மையான ஆர்வத்துடனும் பதில் சொல்லி ஊக்குவிக்கும் இன்னொரு எழுத்தாளர், சிந்தனையாளர், உரையாடல்காரர் நமது சூழலில் வேறு யாரும் இருப்பதாகத் எனக்கு தெரியவில்லை. ஆனால் அப்படி உரையாடுவது 'குரு மனப்பான்மை' என்றால் தயவுசெய்து நீங்கள் குருவாகவே தொடர்ந்து இருக்க வேண்டுகிறேன். ஞானத்தாலும், அனுபவத்தாலும் உயர்ந்தவர்களைப் புகழ்ந்து பாராட்டக் கூட ஒரு தகுதி வேண்டும் என்பதே மரபு. எனவே, உங்களோடு விவாதிக்கவும், பேசவும் தகுதியுள்ளவனாக மேம்படுத்திக்கொள்ள முயற்சி மட்டுமே இப்போதைக்கு செய்துவருகிறேன்.
நன்றி,
பிரகாஷ்.
அன்புள்ள ஜெயமோகன்
ஊட்டி காவிய முகாம் இலக்கிய வாசிப்பின் புதிய வாசல்களைக் காட்டுவதாக அமைந்தது இப்போது காளிதாசன் மிக நெருங்கியவனாகக் காட்சி அளிக்கிறான்.இலியட்டை உடனே படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.இலக்கியம் தவிர்த்து என்னை வியப்பில் ஆழ்த்திய விசயங்களும் உள்ளன.அவை ஜெயமோகன் மற்றும் தேவதேவனின் ஆளுமைகள்.
நீங்கள் உங்களுடைய பழைய கட்டுரைகளில் நான் இனி மேல் சோர்வுற்று இருக்கவோ கவலைப்பட்டுக்கொண்டு இருக்கவோ போவதில்லை என்று எழுதியிருந்தீர்கள் .எழுதுவதன் மன எழுச்சியில் நீங்கள் வெளிப்படுத்திய வாசகங்கள் அவை என்றே எண்ணியிருந்தேன்.ஆனால் உங்களுடன் இருந்த மூன்று நாட்களிலும் நான் எண்ணியது தவறு என்றும் நீங்கள் கூறியதே உங்களின் ஆளுமை என்பது போலும் தோன்றுகிறது.எப்படிக் குழந்தை போல உங்களால் உற்சாகத்துடன் இருக்க முடிகிறது ? உங்களிடமே இதைப்பற்றிக் கேட்டேன் .நீங்கள் "இனி மேல் கவலைப்படக்கூடாது என்று ஒரு நாள் முடிவெடுத்தேன் அன்றிலிருந்து நான் கவலைப்படுவதில்லை " என்று கூறினீர்கள் .
அதெப்படி நாம் ஒரு முறை முடிவெடுத்து விட்டால் நம் கவலைகள் பறந்து போய் விடுமா?.இழப்புகள், தோல்விகள்,ஏமாற்றங்கள், புறக்கணிப்புகள் போன்ற சக்திகள் நம்மைச் சூழும் போது நாம் எப்படி கவலை கொள்ளாமல் இருப்பது ? நானும் கவலைப்படாமல் தான் இருக்க வேண்டும் என்று எண்ணுபவன் ஆனால் இந்த சக்திகள் அப்படி இருக்க விடுவதில்லை. கவலைகளிலிருந்து விடுபடுவது ஆன்மீகத் தெளிவிலா? இல்லை வாழ்க்கையைப் பற்றிய புரிதலிலா? இல்லை வேறு ஏதேனும் வழிகள் உள்ளனவா? இல்லை இது எளிதில் கடந்து செல்லக்கூடிய அற்ப விசயமா? உங்களை விடப் பல மடங்கு நான் வியந்த ஆளுமையும் உண்டு . அது பாரதி! தனி வாழ்க்கையில் எவ்வளவு தான் துன்பத்தில் இருந்தாலும் அவருடைய சொற்களில் என்றுமே சோர்வோ விரக்தியோ நான் கண்டதில்லை . ஒளிமிக்க நம்பிக்கை கொண்ட படைப்புகளையே அவர் உருவாக்கியுள்ளார் .அவர் இந்த நிலையை எப்படிச் சென்றடைந்தார் ?
நான் ஆச்சரியப்பட்ட இன்னொரு ஆளுமை தேவதேவன். தமிழின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான அவரால் எப்படி படைப்பாளிக்குரிய அகங்காரமோ கர்வமோ இல்லாமல் அவ்வளவு எளிமையாக இருக்க முடிகிறது ? அவர் அவற்றைக் கடந்து வந்து விட்டாரா? இல்லை வெளிப்படுதுவதில்லையா? அவருடன் பழகுவது ஒரு மென்மையான தந்தையுடன் பிள்ளை பழகுவது போலவே தோன்றுகிறது .
நான் நிச்சயமாக உங்களையோ தேவதேவனையோ பாராட்டுவதற்காக இதைக் கேட்கவில்லை . உங்களைச் சந்தித்த போது எனக்குள் எழுந்த வினாக்களுக்கான விடைகளை நாடியே இதனைக் கேட்கிறேன்.
அன்புடன்
தர்மராஜன்
தொடர்புடைய பதிவுகள்
மாசு
கவிதை என்னும் கலைத்துக்கொள்ளுதல்
ஊட்டி முகாம்-கடிதம்
ஊட்டி முகாம் -கடிதங்கள்
அறம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறதா?
கடிதங்கள்
ஊட்டி காவிய முகாம் – வீரராகவன்
நாரயணகுருகுல துறவியர்
ஊட்டி காவிய முகாம் (2011) – 4
ஊட்டி காவிய முகாம் (2011) – 3
September 26, 2011
புதிய பிரபஞ்சம்
நேற்று முன்தினம் காலை மலையாள அறிவியல் இதழாளர் ஒரு அழைத்து ஐன்ஸ்டீனின் எதிர்காலம் பற்றிய கவலையைப் பகிர்ந்துகொண்டார். சுவிட்சர்லாந்தில் உள்ள அணு ஆராய்ச்சிக்கூட்டமைப்பு நிகழ்த்திய பரிசோதனையில் அதிநுண்துகள்களான நியூட்ரினோக்கள் ஒளியைவிட வேகமாகச் செல்வதைப் புறவயமாக நிரூபித்துள்ளது என்று சொன்னார். இணையத்தில் அதைப்பற்றிய செய்திகளை வாசித்தேன். இது உண்மையென்றால் பிரபஞ்ச ஈர்ப்பு விசைகள் பற்றிய நியூட்டனின் கண்டுபிடிப்பு முன்வைக்கப்பட்டது போல, சார்பியல் கோட்பாடு முன்வைக்கப்பட்டதைப்போல, மானுட சிந்தனை வரலாற்றின் ஒரு முக்கியமான திருப்புமுனை இது.
முதலில் தோன்றிய எண்ணமே இந்த ஆய்வின்மீது மாற்றுக்கருத்துக்கள் என்னென்ன வருகின்றன என்று கவனிக்கவேண்டும் என்றுதான். அது ஒரு எச்சரிக்கைமனநிலை. 1989 ல் இதேபோல ஒரு மகத்தான கண்டுபிடிப்பு இரு அறிவியலாளர்களால் அறிவிக்கப்பட்டது. மார்ட்டின் ஃப்ளெஷ்மான் மற்றும் ஸ்டேன்லி பொன்ஸ் என்ற ஒரு அறிவியலறிஞர்கள் குளிர்அணுஇணைப்பு மூலம் அணுஆற்றலை உருவாக்கமுடியும் என்றும் அந்தச்சோதனையில் தாங்கள் வென்றுவிட்டதாகவும் அறிவித்தனர். இருவருமே மதிப்புமிக்க ஆய்வுநிறுவனங்களைச் சார்ந்தவர்கள். [சௌத்தாம்ப்டன் பல்கலை மற்றும் உட்டா பல்கலை] மறுநாள் உலகமெங்கும் எல்லா செய்தித்தாள்களிலும் முகப்புச்செய்தியே அதுதான்.
மனிதகுலத்தின் மிகப்பெரிய சவாலான ஆற்றல்பற்றாக்குறையை அதன்மூலம் முழுமையாக வென்றுவிடமுடியும் என்றார்கள். வெப்பக்கொந்தளிப்பு இல்லாத அணுஇணைப்பு என்பது சாத்தியமென்றால் கையடக்க அணுஉலைகளைக்கூட என்றாவது உருவாக்கிவிடமுடியும். வாகனங்கள் அணு ஆற்றலில் ஓடும். அதன் சாத்தியங்களை நினைக்கவே பிரமிப்பாக இருந்தது. ஆனால் இரண்டு வருடங்களுக்குள் அந்தச்சோதனைகள் ஆய்வகப்பிழைகளே என்று நிரூபிக்கப்பட்டது. மார்ட்டின் ஃப்ளெஷ்மான்,ஸ்டேன்லி பொன்ஸ் இருவரும் உருவாக்கிய ஆய்வக உபகரணம் வேலைசெய்யவேயில்லை. இன்று அந்தக் கருதுகோளே பிழை என ஆய்வாளர் நினைக்கிறார்கள்.
ஆகவே நேற்றும் இன்றும் இணையத்தில் கட்டுரைகளை வாசித்துக்கொண்டிருந்தேன். ஒளியைவிட அதிகவேகத்தில் ஒரு துகள் செல்லமுடியும் என்றால் ஐன்ஸ்டீனின் e=mc2 என்ற புகழ்பெற்ற சூத்திரம் பிழையாக ஆகிறது. இந்தப் பிரபஞ்சத்தின் காலதூர பரிமாணங்கள் பற்றிய இதுவரையிலான பல கொள்கைகளை முழுமையாக மாற்றியமைக்கவேண்டியிருக்கும். இதுவரை பெரும்பாலான அணுவிஞ்ஞானிகள் ஐயத்துடன்தான் இருக்கிறார்கள். ஆனால் இன்று காலை வரை வந்துகொண்டிருக்கும் செய்திகள் இச்சோதனைமுடிவுகள் உறுதிசெய்யப்படும் என்ற எண்ணத்தையே உருவாக்குகின்றன. அப்படி நிகழ்ந்தால் அது ஒரு மகத்தான மானுடநிகழ்வுதான்.
இந்த விஷயத்தைப்பற்றி நல்ல கட்டுரை ஒன்றை சி.சரவணகார்த்திகேயன் தமிழ் பேப்பரில் எழுதியிருக்கிறார்.[ஐன்ஸ்டீனின் கண்ணீர்த்துளி] வழக்கமாக இவ்வகை விஷயங்களை எழுதுபவர்கள் தாங்கள் ஏதோ அதிநுண்நிலையில் இருந்து பாமரர்களுக்காக இறங்கி வந்து எழுதுவதான பாவனையில் அசட்டுநகைச்சுவை கலந்து அரைகுறையாக ஏதாவது எழுதுவதே வாடிக்கை. சரவண கார்த்திகேயனின் கட்டுரை விஷயத்தை நன்கு புரிந்துகொண்டவருக்குரிய தெளிவுடன், கச்சிதமாக ,ஆர்வமூட்டுவதாக, அமைந்துள்ளது.
அக்கட்டுரையின் முடிப்பு முக்கியமானது. எப்படி நியூட்டனிய இயற்பியலை ஐன்ஸ்டீனிய இயற்பியல் இன்னொரு நுண்தளத்தில் கடந்து சென்றதோ அதேபோல ஐன்ஸ்டீனிய தரிசனங்களை இந்தக் கண்டுபிடிப்பு மூலம் உருவாகும் புதிய இயற்பியல்விதிகள் இன்னொரு மேலும் நுண்ணிய தளத்தில் கடந்துசெல்லும் என்கிறார். ஐன்ஸ்டீன் காலாவதியாவதில்லை, கடந்துசெல்லப்படுகிறார்.
நியூட்டனோ ஐன்ஸ்டீனோ உருவாக்கும் அறிவியல்விதிகளை பிரபஞ்ச இயக்கத்தின் விதிகள் என்பதை விட நாம் பிரபஞ்சத்தை அறிவதன் விதிகள் என்று கொள்வதே இன்னும் பொருத்தமானதாக இருக்கும். நாம் பிரபஞ்சத்தை மேலும் மேலும் நுட்பமாக அறியும்தோறும் புதிய விதிகளுடன் புதிய பிரபஞ்சத்தோற்றங்கள் உருவாகி வரலாம். அப்படிப்பார்த்தால் நூறாண்டுகளுக்கும் மேலாக ஐன்ஸ்டீனின் கொள்கை நீடித்திருந்ததே ஓர் ஆச்சரியம்தான்.
http://www.bbc.co.uk/tamil/science/2011/09/110923_lightspeedbroken.shtml
ஒளி – விக்கிபீடியா
http://www.pcmag.com/article2/0,2817,2393587,00.asp#fbid=qbbrfRK6Ry5
http://news.xinhuanet.com/english2010/sci/2011-09/27/c_131161271.htm
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
மாசு
நேற்று மாலைநடை சென்றிருந்தேன். பாறையடியில் மலையடிவாரத்தில் வயல்கள் அந்தியில் மயங்கி விரிந்துகிடக்கும் தனிமையில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை மனிதர்கள் இல்லை. மிருகங்கள் இல்லை. வானத்தில் வழுக்கிச்செல்பவை போல சென்றுகொண்டிருந்த தனிப்பறவைகள் மட்டும். அந்தி இருண்டு மரங்கள் வானப்பின்னனியில் சிவப்பாக ஆவது வரை பார்த்துக்கொண்டிருந்தேன். இயல்பாகவே தேவதேவன் எந்த வார்த்தைகளில் இந்தக் காட்சியைச் சொல்வார் என்ற எண்ணம் ஏற்பட்டது. சந்தேகமே இல்லை தூய்மை.
தூய்மை தேவதேவனுக்குப் பிடித்த சொற்களில் ஒன்று. வேறெந்த நல்ல கவிஞரையும்போல அச்சொல்லுக்க்கு அவருக்கே உரிய பொருளை அவர் உருவாக்குகிறார். அவரது இயற்பெயரான கைவல்யம் என்பதற்கு நிகரான சொல்லாக அதை அவர் கையாளுகிறார். தான் மட்டுமே இருக்கும் நிலை. அது மட்டுமே ஆன நிலை. பிறழ்வில்லாத பெரு நிலை. திரிபடையாத ஆதி நிலை. அதையே மீண்டும் மீண்டும் அவர் தூய்மை என்கிறார். ஒரு புல்நுனியின் தூய்மை,அது ஏந்திய பனித்துளியின் தூய்மை. அதை உறிஞ்சும் சூரியனின் தூய்மை. இவையெல்லாமாக ஆகிய பெருவெளியின் தூய்மை.
நிறைநிலையின் ஒரு தருணம் தன்னைக்கொண்டு தன்னைக்கலைத்து இவையாகியது என்று வேதாந்தம் சொல்கிறது. முடிவிலியின் கருவில் எப்படி உருவானது எல்லையற்ற சமனழிவுகளால் தன்னை இயக்கிக்கொண்டிருக்கும் இந்தப் பிரபஞ்சம்? அது தூய்மையானதென்றால் இது அதன் மாசு போல. மாயை பிரம்மம் மீது அதுவே படரவிட்ட களிம்பு என்பார்கள் அத்வைதிகள். இல்லை பிரம்மத்தின் அழகிய முகத்தின் ஒப்பனையழகு அது என்பார்க்ள் வைணவர்கள். மாயையை பிரம்மத்தைப்போலவே பேரழகு கொண்டது என்பார்கள். அதுவே கண்முன் தெரியும் பிரம்மம் என்பார்கள்.
ஆம், இதைத் திரிபு என்று சொல்லலாம். காலத்தை நிறைத்து பொங்கி வழிந்து கிடக்கும் அதன் சிறிய அழகிய வடிவம். அதில் விழுந்த மாசு. ஆனால் இந்த மாலையில் இந்த மோனத்தில் இதுவே எல்லையற்ற தூய்மையுடன் ஒளிர்வதாகப்படுகிறது
நினைவுக்கு வந்த தேவதேவனின் சிறிய கவிதையை மீண்டும் வீடு சென்று வாசித்தேன்
தூய்மையில்
புல்லிய
சிறு மாசும்-
அது தாளாத
துயர்க் கனலும்
பிறப்பித்தன
ஒளிரும் ஒரு
முத்தினை.
ஒரு பிரபஞ்ச தரிசனமே ஆன அழகிய சிறு கவிதை. எல்லையற்ற அத்தூய்மையில் விழுந்த சின்னஞ்சிறு மாசு. அந்த எல்லையின்மை அடைந்த பெருந்துயரால் புடம்போடப்பட்டு இது கருவாகியது. ஒளிரும் முத்தாக. தூய்மை தன்னுள் இருந்து ஒளியை அன்றி எதைப் பிறப்பிக்க முடியும்?
தொடர்புடைய பதிவுகள்
ஊட்டி- பெண்களுக்கு இடமுண்டா?
கவிதை என்னும் கலைத்துக்கொள்ளுதல்
அறம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறதா?
கடிதங்கள்
நிழலில்லாத மனிதன்
உறவுகளின் ஆடல்
பருந்து
திருப்பரப்பு
கடிதங்கள்
தேவதேவன்-கடிதம்
கல்கியின் சமணம்
கல்கியின் சமணம் பற்றிய என் கட்டுரை உங்கள் கவனத்துக்காக
அன்புடன்
நமதன்
அன்புள்ள நமதன்,
உங்கள் கட்டுரை வாசித்தேன்
சமணம் மற்றும் பௌத்தம் பற்றி மரபான ஒரு சைவ நோக்கு உள்ளது. அது சைவ பக்தி இயக்கத்தால் உருவாக்கப்பட்டு மடங்கள் வழியாக நிலைநாட்டப்பட்டது. சைவமதம் சமண பௌத்த மதங்களுடன் விவாதித்துப் போட்டியிட்டு உருவானதாகையால் அந்த மனவிலக்கமும், எதிர்மறை நோக்கும் அதனிடம் இருந்தது.
சிவகாமியின் சபதத்தில் பௌத்த பிட்சு நாகநந்தி காமகுரோதமோகங்களின் குவியலாகவே வருகிறார் இல்லையா? கல்கி முன்வைப்பது சீனிவாச சாஸ்திரி, சதாசிவ பண்டாரத்தார் போன்றோர் தங்கள் நூலில் முன்வைத்த நோக்கையே. அது அன்று பிரபலமாக இருந்தது.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
அயோத்தி தாசர்-கடிதங்கள்
அயோத்திதாசர் என்னும் முதல்சிந்தனையாளர்-5
அயோத்திதாசர் என்னும் முதல்சிந்தனையாளர்-4
மதங்களின் தொகுப்புத்தன்மை
கடிதங்கள்
தீபாவளியும் சமணமும்:கடிதம்
சமணம்,பிரமிள்: கடிதங்கள்
புதுமைப்பித்தனின் வாள்
தமிழ்ச் சமணம்
சமணம் ஒரு கடிதம்
கவிதை என்னும் கலைத்துக்கொள்ளுதல்
சார்,
ந.பிச்சமூர்த்தியின் கொக்கு, சாகுருவி கவிதைகளை இன்று அழியாச்சுடர்கள் தளத்தில் வாசித்தபோது, உங்களது கவிதைகள் –விமரிசகனின் சிபாரிசு கட்டுரையை மீண்டும் படித்தேன். மிகவும் நிறைவாக இருந்தது. அதில் கீழ்வருமாறு சொல்லியிருக்கிறீர்கள். எவ்வளவு உண்மை அது!
வருடத்தில் நூறு தொகுப்புக்குமேல் தமிழில் வருகின்றன. பெரும்பாலான தொகைகளில் ஒருசில நல்ல கவிதைகளாவது உள்ளன. ஆனால் கவிஞன் என்பவன் அப்படி கவிதை எழுதும் ஒருவனல்ல. கவிஞன் தனகே உரிய மொழி கொண்டவன். தனக்கான வாழ்க்கை நோக்கு கொண்டவன். வாழ்க்கையை கவிதைமூலமே அறிய முயல்பவன். அதன் மூலம் மறுக்கமுடியாத ஆளுமை கொண்டவன்.
கவிதையை ரசிக்கவே ஒரு தனிப்பட்ட மனநிலை தேவைப்படும்போது, எழுதுவதற்கு அது எவ்வளவு ஆழமானதாக, நிலையானதாக இருக்கவேண்டும். ஆனால் என்னைப் போன்றவர்களுக்கு தூக்கத்தில் சிரிக்கும் குழந்தையைப் பார்ப்பதுபோல, எப்போதாவதுதான் கவிதா-தருணம் சிக்குகிறது. அதை வார்த்தைகளுக்குள் இழைப்பதைப்போல, அழகான அவஸ்தை வேறெதுவும் கிடையாது.
உங்களைத் தொடர்பு கொள்ளத் தொடங்கியதுமே, என்னுடைய கவிதைகள் சிலவற்றை அனுப்பி உங்களை இம்சித்திருக்கிறேன். உங்களிடமிருந்து பதில் வராதபோதே அவற்றின் தரம் எனக்குப் புரிந்தது. இருந்தாலும், என்னளவில் நான் மிகவும் ரசிக்கும் என்னுடைய சில கவிதைகளைப் பற்றி உங்கள் பார்வையை மீண்டும் வேண்டுகிறேன். (இந்தக் கவிதைகளை உங்களுக்கு இதற்குமுன் அனுப்பவில்லை)
தேவதேவனிடம், 'எப்படி இவ்வளவு கவிதைகள் எழுதுகிறீர்கள்?' என்று கேட்டபோது, 'என்ன செய்வது, வருதே?' என்றார். அவரைப் பார்த்துப் பொறாமைப்படத்தான் முடிகிறது. ஒரு சில கவிதைகளையாவது சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தால் அந்தப் பொறாமையின் வீச்சு கொஞ்சமாவது குறையும் என்று நினைக்கிறேன்.
ஆனந்த் உன்னத்
அன்புள்ள ஆனந்த்
கவிதைகளை வாசித்தேன். கவிதை என அரசியலையோ அன்றாட வாழ்க்கையையோ எழுத முயலாதது முக்கியமான விஷயம். கவிதை என்பது சாதாரணமாகச் சொல்லிவிட முடியாத ஒன்றை உணர்த்துதல் மூலம் சொல்லிவிடுவதற்கான ஒரு முயற்சி. இக்கவிதைகளில்
எங்கேயோ
இருக்கிறது என் வீடு.
கண்மூடினால்
தெரிகிறது பாதை
கவிதையின் கணத்தைத் தொட்டிருக்கிறது. ஆனால் கவிதை என்னும் சமகால இயக்கத்தில் அதன் இடம் மிக பழையது, பலமுறை சொல்லப்பட்டது
சாலையோரக் குளத்தில்
மீன்பிடிக்கும் பறவை,
எதையோ
விட்டுச் செல்கிறது,
எனக்காக.
என்ற கவிதையின் சிக்கல் அந்த 'எதையோ' தான். ஒரு காட்சி தன்னளவில் பூர்ணமானது.அதில் தத்துவார்த்தமாக எதையோ சேர்க்கக்கூடாது. அந்தக் காட்சியே படிமமாகி வாசகனிடம் ஒன்றை உணர்த்தவேண்டும். அதுவே நவீன கவிதை
மெல்ல இலையுதிர்த்து
தன்னைக் கலைத்துக்கொள்கிறது
குளக்கரை மரம்
ஒரு பழைய ஜென் கவிதை. இதில் கவிஞன் எதையோ சொல்லவரவில்லை. ஒரு காட்சி மட்டுமே உள்ளது. அதுவே கவிதை
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
ஊட்டி- பெண்களுக்கு இடமுண்டா?
மாசு
அறம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறதா?
கடிதங்கள்
நிழலில்லாத மனிதன்
உறவுகளின் ஆடல்
பருந்து
திருப்பரப்பு
அழகிரிசாமியின் ராஜா
கடிதங்கள்
காந்தியும் மேற்கும் -குகா
ராமச்சந்திர குகா அவரது தெளிவுக்காகவும் சுயநோக்குக்காகவும் நான் எப்போதுமே மதிக்கும் சிந்தனையாளர். அவர் எழுதிய ஒரு நல்ல கட்டுரையின் தமிழாக்கம் காந்தி டுடே இணைய இதழில்
சரளமாக மொழியாக்கம் செய்திருக்கிறார் சுனில் கிருஷ்ணன்
தொடர்புடைய பதிவுகள்
காந்தியின் தேசம்
நைபால்
குகா-இந்திரா
அண்ணா ஹசாரே சாதிவெறியரா?
அண்ணா ஹசாரே- காந்திய போராட்டமா?
அண்ணா ஹசாரே- மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?
அண்ணா ஹசாரே மீண்டும்
காந்தியும் அரட்டையும்
சங்கப்பாடல் நவீனவாசிப்புகள்
ஊட்டி முகாம்,சுனில் கிருஷ்ணன் 2
September 25, 2011
வ.வே.சு.அய்யரும் சாதிவெறியும்
தமிழிலக்கியத்தின் இரு கிளைகளுக்கு முன்னோடியானவர் வ.வே.சு.அய்யர். தமிழ்ச்சிறுகதையின் தொடக்கப்புள்ளிகளில் ஒன்று என அவர் எழுதிய மங்கையர்க்கரசியின்காதல் என்ற சிறுகதைத்தொகுதி குறிப்பிடப்படுகிறது. அதில் உள்ள குளத்தங்கரை அரசமரம் தமிழின் முதல் இலக்கணம் அமைந்த சிறுகதை என க.நா.சு. மரபினர் சொல்வார்கள். வ.வே.சு.அய்யர் பாரதிபாடல்களுக்கு எழுதிய முன்னுரை தமிழின் விமர்சன மரபுக்கு வழிகோலியது.

வ.வே.சு.அய்யர்
வாழ்க்கையின் கடைசிக்காலகட்டத்தில் வ.வே.சு.அய்யர் கடும் சர்ச்சைகளுக்கு ஆளானார்.பாரதியார் உத்தேசித்த சுதேசிக்கல்வியைப் பரப்பும்பொருட்டு வ.வே.சு.அய்யர் ஒரு கல்விநிலையத்தை சேர்மாதேவியில் நிறுவினார். தமிழ்நாடு ஆசிரமம் என்ற அக்குருகுலத்தில் எல்லா சாதி மாணவர்களும் பயின்றார்கள். அய்யரின் மகன் வ.வே.சு.கிருஷ்ணமூர்த்தியும் பிற மாணவர்களும் இணைந்து சமமாகவே அமர்ந்து உணவுண்டார்கள். ஆனால் இரு பிராமண மாணவர்களுக்குத் தனியாக அங்கே உணவு பரிமாறப்பட்டது
வாவில்லா குடும்பம் என்ற பிரபலமான வைதிக குடும்பத்தின் இரு மாணவர்கள் அவர்கள். ஆசிரமத்துக்கு நிதியுதவி செய்தவர்கள். அன்று கடுமையான பிரிட்டிஷ் அடக்குமுறைச் சூழலில் சுதேசிப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கப்படுவது கடினமாக இருந்தது. வீடுவீடாகச் சென்று மாணவர்களை சேர்க்கவேண்டியிருந்தது. ஆசாரம் கெட்டுப்போகலாகாது என்று அந்தக் குடும்பத்தினர் இட்ட நிபந்தனையை ஏற்றுத்தான் வ.வே.சு.அய்யர் அவர்களை சேர்த்துக்கொண்டார். அதற்கேற்ப அவர்களை மட்டும் தனியாக உணவருந்தச் செய்தார்.
அன்றைய காங்கிரஸில் இருந்த இருபெரும் குழுக்களுமே பிராமணத்தலைமை கொண்டவை- சத்தியமூர்த்தி குழு, ராஜாஜி குழு. இரண்டுக்கும் எதிராக உருவாகிவந்தவர்கள் பி. வரதராஜுலு நாயுடு, திரு.வி. கல்யாணசுந்தர முதலியார், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் போன்றவர்கள் தலைமையில் கிளர்ந்துகொண்டிருந்தார்கள்.
உண்மையில் இது பிராமணர்களுக்கு எதிரான பிராமணரல்லாத உயர்சாதியினரின் அதிகாரக் கலகம். காங்கிரஸின் முன்னோடிகள் பிராமணர்கள். ஆனால் 1920களுக்குப்பின் காங்கிரஸுக்குள் பிராமணரல்லாத உயர்சாதியினர் பெருமளவுக்கு வந்து உறுப்பினர் எண்ணிக்கையில் அவர்கள் பெரும்பான்மை ஆகியிருந்தனர். அது தலைமையில் பிரதிபலிக்கவில்லை. இதுவே உண்மையான பிரச்சினை
வரதராஜுலுநாயுடுவின் சீடரும் தனக்கெனத் தனி செல்வாக்கு கொண்டவருமான ஈ.வே.ராமசாமி அவர்கள் இந்த எதிர்ப்புக்குத் தலைமை ஏற்க ஆரம்பித்தபோது கடுமையான நிலைப்பாடுகளை எடுத்தார். இவர்கள் தமிழகக் காங்கிரஸின் அதிகார அமைப்புடன் முரண்பட்டுக் காங்கிரஸை விட்டு விலகும் நிலையில் இருந்தார்கள். இச்சூழலை நாம் கோவை அய்யாமுத்து, டி.எஸ்.எஸ்.ராஜன் போன்றவர்களின் சுயசரிதைகளிலும் ஈவேரா எழுத்துகளிலும் இன்று வாசித்தறிய முடிகிறது.
வ.வே.சு.அய்யர் அப்போது காங்கிரஸ் தலைமையால் மதிக்கப்படும் நிலைமையில் இருந்தார். அப்போது காங்கிரஸில் வளர்ந்து வந்துகொண்டிருந்த ஈவேராவுக்கும் வ.வே.சு.அய்யருக்கும் இடையே அகங்கார மோதல் உருவானது. வ.வே.சு.அய்யர் பொதுவாகவே கொஞ்சம் தோரணை கொண்டவர் என்பது பலரால் எழுதப்பட்டிருக்கிறது. வெளிநாட்டில் படித்தவர், விரிவான வாசிப்பு கொண்டவர், தியாக வரலாறு கொண்டவர். காங்கிரஸில் தன்னை அவர் விதிகளுக்கு அப்பாற்பட்ட பிதாமகனாக எண்ணிக்கொண்டிருந்தார்.
பொதுவாகவே எவருக்கும் பணிந்து போகாதவர் ஈவேரா. அத்துடன் காந்தியைப்போலப் பண விஷயத்தில் மிதமிஞ்சிய கண்டிப்பு கொண்டவர். காங்கிரஸ் கட்சியின் செயலராகக் காசோலையில் கையெழுத்திடும் இடத்தில் இருந்தார் ஈ.வே.ரா. பொதுவாகவே ஈவேரா ஐந்துபைசாவுக்கும் ஆயிரம் கணக்கு கேட்பார், துளைத்து எடுப்பார். அதை கோவை அய்யாமுத்து விரிவாகவே எழுதியிருக்கிறார். வ.வே.சு. அய்யர் பணத்துக்கு வந்தபோது ஈவேரா கணக்குகளைக் கேட்டு குறுக்கு விசாரணை செய்தார். அதை வ.வே.சு.அய்யர் தனக்குச் செய்யப்பட்ட அவமதிப்பாக எடுத்துக்கொண்டார். ஈவேரா , வ.வே.சு.அய்யரின் தோரணையால் எரிச்சல் கொண்டார்
காங்கிரஸ் கட்சி ஆசிரமத்துக்கு ஒதுக்கிய பத்தாயிரம் ரூபாய் பணத்துக்கான காசோலையை வ.வே.சு.அய்யர் கேட்க வந்தபோது காங்கிரஸ் கமிட்டியின் எல்லா நிபந்தனைகளையும் அய்யரின் ஆசிரமம் நிறைவேற்றுகிறதா எனத் தன்னிடம் ஐயர் வாக்குமூலம் கொடுத்தால் காசோலையில் கையெழுத்திடுவதாக ஈ.வே.ரா சொன்னார். அய்யர் ஈவேராவை அலட்சியம் செய்து கூட்டுச்செயலாளாரிடம் ஐயாயிரம் ரூபாய்க்குக் காசோலையை வாங்கிக்கொண்டு போய்விட்டார்.

ஈவேரா
நான்குநாள் கழித்து இந்தத் தகவல் ஈவேராவுக்குத் தெரிய வந்தது. அந்த அலட்சியத்தால் சீண்டப்பட்ட ஈவேரா மிச்சத் தொகையைக் கொடுக்காமல் நிறுத்தி வைத்துவிட்டார். அய்யருக்கும் ஈவேராவுக்கும் கடுமையான பூசல் ஏற்பட்டுவிட்டது. அய்யர் ஈவேராவை சமாதானப்படுத்த முயலவில்லை. மாறாக காங்கிரஸ் மாகாணக் கமிட்டிக் கூட்டம் டாக்டர் டி.எஸ்.எஸ் ராஜன் இல்லத்தில் நடந்தபோது ஈவேராவிடம் உள்ள பூசலைப்பற்றி சொல்லாமல் தனக்கு மிச்ச ஐயாயிரம் ரூபாய் கிடைக்கவில்லை என்று புகார் சொன்னார். ராஜன் உடனே ஈவேராவைக் கூட்டத்திலேயே கடிந்து பேசினார்
கோபம்கொண்ட ஈவேரா,வ.வே.சு.அய்யர் கட்சியின் செயலராகிய தன்னை மதிக்கவில்லை, தன்னிடம் அறிக்கை அளிக்கவில்லை என்று கூறி ஐயாயிரம் ரூபாய்க்குக் கையெழுத்துப் போட முடியாது என்று மறுத்தார். கூட்டத்தில் சிலர் ஈவேரா வயதில் மூத்த அய்யரை எதிர்த்துத் துடுக்காகப் பேசுவதாக சொன்னார்கள். அதில் ஈவேராவின் நெருக்கமான நண்பராகிய கோவை அய்யாமுத்து முன்னணியில் இருந்தார். ஈவேரா அய்யர் தன்னிடம் வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்றார். வ.வெ.சு.அய்யர் ஈவேராவிடம் எந்த வருத்தமும் தெரிவிக்காமல் எழுந்து சென்றார். கட்சி ஈவேராவைக் கண்டித்தது. வேறு செயலர் கையெழுத்துப் போடட்டும், நான் போடமாட்டேன் என்று ஈவேரா கறாராகச் சொன்னார்.
இந்த நிகழ்ச்சியில் எல்லா பிராமணர்களும் ஒரே தரப்பாகக் கூடிவிட்டதாக வரதராஜுலு நாயுடு கருதினார். அதை அங்கே அவர் கோபத்துடன் சொல்ல டி.எஸ்.எஸ்.ராஜன் அவர் வகுப்புவாதப்பேச்சு பேசுவதாக நாயுடுவைக் கண்டித்தார். கூட்டம் முடிந்ததும் பிராமணரல்லாதவர்களும் பிராமணர்களும் தனித்தனியாகப்பிரிந்து பேசிக்கொண்டார்கள். கடினமான சொற்கள் வீசப்பட்டன. மனக்கசப்புகள் பலப்பட்டன. ஈவேரா கையெழுத்து போடாததனால் வ.வே.சு.அய்யருக்குக் கடைசிவரை மீதிப் பணம் கொடுக்கப்படவில்லை.
அதைத் தொடர்ந்து திருச்சியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ஈவேரா அவர்கள் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது சேவையைப்பாராட்டி ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தேர்தல் நடந்த அதே மாநாட்டில் வ.வே.சு.அய்யர்,ஈவேரா மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார். இது வெறும் தனிப்பட்ட மனக்கசப்பின் விளைவே என கோவை அய்யாமுத்து பதிவு செய்கிறார். ஈவேரா கடுமையாகப் புண்பட்டார். ஈவேராவின் நண்பரான திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் அவருக்கே உரிய படபடப்புடன் இது ஒரு சாதிய மனநிலையின் வெளிப்பாடு, பிராமணர் கூட்டாகச் சேர்ந்து இதைச் செய்கிறார்கள் என்று அந்த மாநாட்டில் குற்றம்சாட்டிப் பேசினார்.
வ.வே.சு.அய்யரின் தீர்மானம் தோல்வி அடைந்தது. இது தொண்டர் மட்டத்தில் பிராமணர்களைவிட பிராமணரல்லாதாரின் எண்ணிக்கை அதிகரித்து அதிகாரச்சமநிலை மாறியமைக்கான திட்டவட்டமான ஆதாரமாக இருந்தது. இது பிராமணர்களுக்கு ஒரு சுவரெழுத்தாகத் தெரிந்தது. உள்ளே ஈவேராவுக்கும் வ.வே.சு.அய்யருக்குமான பூசல் வலுத்துக்கொண்டே வந்தது. அதற்கு வ.வே.சு.அய்யரின் பிதாமக மனநிலையே காரணம் என்று இப்போது பலவாறாக ஊகிக்க முடிகிறது. காங்கிரஸ் மாறிவிட்டதை அய்யர் புரிந்துகொள்ளவில்லை.
இந்நிலையில் அய்யருக்கு வெள்ளைய அரசு கடுமையான நெருக்கடிகளைக் கொடுக்க ஆரம்பித்தது. காங்கிரஸின் நிதியைக் காங்கிரஸ் தலைவராக இருந்த ஈவேரா முற்றாக நிறுத்திவிட்டார். பள்ளியை நடத்துவது சிரமம் ஆகியது.வ.வே.சு.அய்யர் தன்னை வந்து பார்த்து சமாதானம் செய்வார் என ஈவேரா எதிர்பார்த்தார். ஆனால் அய்யர் தனிப்பட்டமுறையில் மக்களிடம் வசூல் செய்ய ஆரம்பித்தார். காங்கிரஸ் தலைவர்கள் அதை ஆதரித்து இதழ்களில் எழுதினர். திருவிகவும், வரதராஜுலு நாயுடுவும்கூட அதை ஆதரித்தனர்
கொதிப்படைந்த ஈவேரா நாயுடுவைக் கண்டித்துக் கூட்டங்களில் பேசினார். பிராமணச்சதிக்கு நாயுடு விலை போய்விட்டார் என்றார். நாயுடு திருவிகவை ஈவேராவிடம் தூதனுப்பினார். அவர்களுக்கிடையே ஒரு சமரசம் ஏற்பட்டது. இந்தத் தருணத்தில் ஒற்றுமையாக இருந்து வ.வே.சு.அய்யரையும் அவருக்குப்பின்னால் உள்ள பிராமண அதிகாரத்தையும் தோற்கடிப்பது என முடிவெடுத்தார்கள். ஈவேரா, நாயுடு ஆகியோர் வ.வே.சு.அய்யர் பிராமண சாதிபேதத்தைப் பரப்புவதாகவும் ஆகவே பிராமணரல்லாதார் அவருக்கு நிதியுதவி செய்யவேண்டாம் என்றும் இதழ்களில் எழுதினார்கள். இது வ.வே.சு.அய்யரைக் கொதிப்படையச்செய்தது.அவர் மேலும் தீவிரமாக வசூலில் ஈடுபட்டார். அவர் நாடறிந்தவராதலால் ஆதரவும் அதிகம் இருந்தது.
சிலநாட்கள் கழித்து ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருடைய மகன் வந்து சேர்மாதேவி ஆசிரமத்தில் இரு பிராமண மாணவர்களுக்குத் தனிப் பந்தி போடப்படுவதாகத் தெரிவித்தார். இந்த விஷயத்தைப் பெரிய அளவில் வெளியே கொண்டுவந்து வ.வே.சு.அய்யரை ஒடுக்கவும், பிராமணத்தலைமைக்கு எதிராக பிராமணரல்லாதாரைத் திரட்டவும் முடியும் என வரதராஜுலு நாயுடுவும் ஈவேராவும் கருதினர். அதை ஒரு பெரிய விஷயமாக முன்னெடுத்தனர். வ.வே.சு அய்யரின் ஆசிரமத்தில் பிராமணரல்லாதார் கொடுமைக்குள்ளாவதாகவும் பிரார்த்தனை உட்பட அனைத்திலுமே சாதிபேதம் காட்டப்படுவதாகவும் ஈவேராவும் நாயுடுவும் கடுமையாக எழுதினர்.
இந்த விவகாரம் தமிழகம் முழுக்க காங்கிரஸில் இருந்த பிராமணரல்லாதாரைக் கொந்தளிக்கச் செய்தது. ஆனால் வ.வே.சு.அய்யர் அவருக்கே உரித்தான மிதப்பில் இதைப் பொருட்படுத்தவில்லை. அவர் விளக்கமளிக்கவும் இல்லை. காந்தி உட்படப் பலர் விளக்கம் கோரியும்கூட தான் காங்கிரஸ் கட்டுப்பாட்டில் இல்லை என்பதனால் பதிலளிக்க முடியாது என்ற நிலையை வ.வே.சு.அய்யர் எடுத்தார். சில விஷயங்களை அவர் விளக்கியிருந்தால் அன்றே இச்சிக்கல் ஓய்ந்திருக்கும்.
உதாரணமாக ஆசிரமத்தில் பிரார்த்தனைகளில் மாணவர்களுக்கு அவர்களின் குடும்பங்களில் என்ன வகையான பிரார்த்தனைகள் இருக்கின்றனவோ அதுவே பின்பற்றப்பட்டது. அதாவது சைவர்களுக்கு தேவாரம்,திருவாசகமும், வைணவர்களுக்குத் திருவாய்மொழியும், பிராமணர்களுக்கு உபநிடத பாடங்களும் சொல்லிக்கொடுக்கப்பட்டன. ஒரு வழிபாட்டுமுறை கொண்டவர்கள்மேல் பிற வழிபாட்டுமுறைகள் திணிக்கப்படவில்லை. இது அன்றைய சூழலில் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஒருசைவ வேளாளப்பிள்ளைக்கு உபநிடதம் சொல்லிக்கொடுப்பது பெரும் மத அவமதிப்பாகவே கொள்ளப்படும். வ.வே.சு.அய்யர் அந்த உறுதிமொழியைக் கொடுத்தே பிள்ளைகளைச் சேர்த்திருந்தார்
ஆனால் அங்கே விருப்பமுள்ள அனைவருக்குமே உபநிடதங்கள் கற்பிக்கப்பட்டன. அய்யர் மாணவர்கள் குர் ஆன், பைபிள் ஆகியவற்றையும் கற்றுக்கொள்ளவேண்டும் என அறிவுறுத்துபவராக இருந்தார். அதைப் பல இடங்களில் எழுதியிருக்கிறார். ஆனால் அவரால் அதை ஒரு பாடத்திட்டமாக ஆசிரமத்தில் வைக்க முடியாத நிலை இருந்தது என்பதே உண்மை. ஆனால் இதையெல்லாம் அவர் விளக்க முயலவில்லை. தன்னைப்பற்றி அனைவருக்கும் தெரியும் என்று அவர் நினைத்தார்.
ஈவேரா காங்கிரஸில் இருந்து வெளியே வந்து சுயமரியாதை இயக்கத்தையும் பின்னர் திராவிடர் கழகத்தையும் ஆரம்பிப்பதற்கான தூண்டுதல் நிகழ்ச்சி இது. தமிழக அரசியல் வரலாற்றில் மிகமிக முக்கியமான இடம் வகிப்பது. இந்தப் போராட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே அய்யர் தன் மாணவர்களுடன் பாபநாசம் அருவியில் குளிக்கச்சென்று வெள்ளத்தில் சிக்கிய மகளைக் காப்பாற்றுவதற்காக முயன்று மரணம் அடைந்தார். பிரச்சினை அங்கே முடிந்தாலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் சம்பந்தமான விஷயத்தில் மீண்டும் பிராமணர் -பிராமணரல்லாதார் பேதம் மேலோங்கி, காங்கிரஸில் இருந்து ஈவேரா வெளியேறினார். இந்தக் காலகட்டத்தில்தான் சிலமாதங்கள் வைக்கம் சென்று அந்தப் போரில் பங்குபெற்றார்.
இதையொட்டி வ.வே.சு அய்யர் ஒரு இந்துசனாதனி என்றும் சாதியவாதி என்றும் தொடர்ந்து வரலாறு எழுதப்பட்டு வந்தது. அதை மறுத்து அவரது உண்மையான ஆளுமையை முன்வைக்கும் எழுத்துக்கள் எழுதப்படவில்லை. பிராமண சனாதனிகளும் அவரைத் தங்களவர் என்று எழுதத்தலைப்பட்டார்கள். சேர்மாதேவி ஆசிரமத்தில் உண்மையில் என்ன நிகழ்ந்தது என்பதை அறிந்தவர்கள் மிகமிகக் குறைவே. சாதிவெறியர் என ஒற்றைவரி முத்திரையால் அய்யர் வரலாற்றில்ன்ஒதுக்கப்பட்டார்.
இப்போது தலித் சிந்தனையாளர்கள் சுட்டிக்காட்டுவது என்னவென்றால், 1925 வாக்கில் சேர்மாதேவி ஆசிரமத்தில் பிராமணரல்லாத உயர்சாதி மாணவர்களுக்குத் தீட்டு கற்பிக்கப்பட்டது எனக் கொதித்தெழுந்த திராவிட இயக்க அரசியல்வாதிகள் 1960 களில்கூட அதே ஒதுக்கு தலித் மாணவர்களுக்கு அனேகமாக எல்லாப் பள்ளிகளிலும் இருந்ததை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. 1990 களில்கூட பல்வேறு ஆலயங்களில், தேர்த்திருவிழாக்களில் தலித்துக்கள் ஒதுக்கப்பட்டது அவர்கள் கண்ணில் படவில்லை.
ஈவேரா,வ.வே.சு.அய்யருக்கு எதிராகப் போராடிய அக்காலகட்டத்தில் ஈவேராவின் சாதியினர் உட்பட பல பிராமணரல்லாத உயர்சாதியினர் நடத்திவந்த பள்ளிகளில் தலித் மாணவர்கள் சேர்ந்து அமரவோ உணவுண்ணவோ அனுமதிக்கப்படவில்லை. அதைப்பற்றி அன்றைய தலித் தலைவர்கள் தங்கள் இதழ்களில் எழுதியிருக்கிறார்கள். அவை எந்த மனசாட்சிப்பிரச்சினையையும் உருவாக்கவில்லை. இன்றும்கூடப் பல பள்ளிகளில் அந்நிலை நீடிக்கிறது. அதற்கு எதிராகத் தமிழ்ப் பொதுமனநிலை இன்றும் திரண்டிருப்பதாகச் சொல்லமுடியாது. எண்பதுகளுக்குப்பின் உருவாகி வந்த தலித் இயக்கங்களே அந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றன.
ஆனால் இதை ஈவேராவின் சாதிய நோக்கு என சில தலித் எழுத்தாளர்கள் எழுதுவதை என்னால் ஏற்கமுடியவில்லை என்பதைச் சொல்லிவிடுகிறேன். அவர் இந்த மனநிலைகளுக்கு அப்பாற்பட்ட சீர்திருத்தவாதி என்றே நான் நினைக்கிறேன். ஆனால் எந்த அரசியல்தலைவரையும்போல அவரும் தன் ஆதரவு அடித்தளத்தை மீறி எதையும் செய்துவிடமுடியாத நிலையிலேயே இருந்தார். அவரது ஆதரவுத்தளம் என்பது முதன்மையாக பிராமணரல்லாத உயர்சாதியாகவே [முக்கியமாக நாயுடு, நாயக்கர், மற்றும் முதலியார்] அன்று இருந்தது.
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் அரசியலில் முன்னிடம் பெற ஆரம்பித்த பின்னரே திராவிட இயக்கம் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் இயக்கமாக உருமாற்றம் கொண்டது. ஈவேராவின் ஆதரவுத்தளமும் மாறியது. இன்று அவர் பிற்படுத்தப்பட்டோரின் அரசியல் முகமாகவே அறியப்படுகிறார்.தமிழகத்தில் ஈவேரா தலித்துக்களுக்காக எந்தப் போராட்டத்தையும் செய்யவில்லை. அந்த வரலாற்று உண்மையை மறைக்கவே அவர் சிலநாட்கள் பங்குபெற்ற வைக்கம்போராட்டம் முழுக்கமுழுக்க அவரால் நடத்தப்பட்டது என்ற வரலாற்றுத் திரிபு செய்யப்பட்டது.
வ.வே.சு.அய்யர் செய்துகொண்ட சமரசம் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. ஒரு அமைப்பு அதன் நிலைநிற்புக்காக ஆதாரமான கொள்கைகளில் சமரசம் செய்துகொள்வதென்பது அபத்தம். சேர்மாதேவி ஆசிரமம் மூடும்நிலையில் இருந்தது என்பது உண்மை என்றாலும் அந்நிலையில் அதை மூடியிருக்கவேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.
வ.வே.சு.அய்யர் தன்னுடைய கல்விப்பணிகளுக்கும் ஆன்மீகத்துக்கும் வாரிசாக நியமித்தது கொங்குகவுண்டரான சுவாமி சித்பவானந்தரைத்தான். சித்பவானந்தர் தமிழகத்தில் ஒரு பெரிய கல்வி இயக்கத்தை உருவாக்கினார். அதற்கு நிதியாதரவு அளித்தவர்கள் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த பிராமணரல்லாத செல்வந்தர்களே. அன்றும் இன்றும் எல்லாவகையிலும் சாதி ஒதுக்குதல்களுக்கு அப்பாற்பட்ட அமைப்பாக இருந்து வருகிறது சித்பவானந்தரின் கல்வியமைப்பு. இதையும் நாம் கணக்கில் கொண்டாகவேண்டும்.
சமீபகாலமாக வ.வே.சு.அய்யர் மீதான மொத்தையான அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு அப்பால்சென்று அவரை அணுகும் நோக்கு உருவாகி வருகிறது. அதற்கு உதாரணம் என்று சொல்லத்தக்க ஒரு நல்ல கட்டுரை செப்டம்பர் 2011 'உயிர் எழுத்து' இதழில் மீனா எழுதி வெளிவந்துள்ள 'வ.வே.சு- ஒற்றை வரலாறுகளுக்கு இடையே உருப்பெறும் பன்முகம்' என்ற கட்டுரை.
வ.வே.சு.அய்யர் பற்றிய திராவிட இயக்க திரிபுகளுக்கு மட்டுமல்லாமல் அவரைச் சொந்தம்கொண்டாடும் சனாதன தரப்பு திரிபுகளுக்கும் பதிலாக அமைந்துள்ளது திராவிட இயக்கத்தினரின் தரப்பில் இருந்து வெளிவந்துள்ள இக்கட்டுரை. வ.வே.சு.அய்யர் எப்படி மத,இன நோக்குக்கு அப்பாற்பட்டவராகத் திகழ்ந்தார் என்பதைப் பல்வேறு சான்றுகளுடன் வாதிடுகிறது. தென் தமிழ்நாட்டில் மதநோக்குக்கு அப்பார்பட்டவர் என இஸ்லாமியர் தரப்பால் எண்ணப்பட்டவர் அவர். பெரும்பாலான பூசல்களில் சமரசம்செய்யும் தரப்பாகத் திகழ்ந்தவர். நம்பிக்கையிலும் தனிவாழ்க்கையிலும் சாதிபேத நோக்கு இல்லாதவராக வாழ்ந்தவர்.
வன்முறைப்பாதையில் நம்பிக்கை கொண்டிருந்து,அந்தப் போராட்டங்களிலும் பங்கெடுத்தவரான வ.வே.சு அய்யர் காந்தி இந்தியாவுக்கு வந்து காங்கிரஸின் தலைவர்களில் ஒருவராக ஆன ஆரம்பகாலத்தில் காந்தியை நேரில் சந்திக்கிறார். அந்த சாதாரண சந்திப்பில் காந்தியின் தோற்றத்தாலேயே மனமாற்றம் கொண்டு உறுதியான அகிம்சைவாதியாக ஆனார்.
சேர்மாதேவி ஆசிரம விஷயத்தை பிராமணரல்லாத ஒருவரின் கோணத்தில் நின்றுதான் ஆசிரியர் விமர்சிக்கிறர். வ.வே.சு.அய்யர் எடுத்த நிலைப்பாடு தவறானது என்றாலும் அது அவர் அந்த மாணவர்களின் பெற்றோருக்கு அளித்த தனிப்பட்ட உறுதிமொழி சார்ந்தது என்றும் , பெரும் எதிர்ப்பு எழுந்தபோதும் அவர் அந்த மாணவர்களை நீக்கமுடியாது என்ற முடிவில் நீடிக்க அதுவே காரணம் என்றும் மீனா குறிப்பிடுகிறார். ஆனால் வ.வே.சு.அய்யர் 'குருகுலத்தில் இனி எந்த ஒரு மாணவருக்கும் தனிப்பந்திமுறையை அனுமதிக்கமுடியாது' என்று அறிவித்து அந்த அறிவிப்பை 'தி இந்து' நாளிதழில் வெளியிட்டார் என்கிறார்.
கட்டுரையாசிரியர் 'காலாகாலமான பார்ப்பனிய ஒதுக்குதலுக்கு எதிரான சீற்றத்தில் வ.வே.சு.அய்யர் பலியானது சோகமானது' என்கிறார். ' இது பார்ப்பனரல்லாதாரிடம் பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியது புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால் இந்த முறையை வ.வே.சுவே புகுத்தியதைப்போன்ற ஒரு கருத்து இங்கே கட்டமைக்கப்பட்டதில் தட்டையான வரலாறு எழுதும் முறையும் வறட்டுத்தனமான அரசியல் அணுகுமுறையும் பெரும்பங்கு வகித்துள்ளது'என்கிறார் ஆசிரியர்
வ.வே.சு அய்யரின் மறைவை ஒட்டி வெளியிடப்பட்ட ஓர் இரங்கல் கட்டுரையில் இருந்து ஒரு நீண்ட பகுதியை மீனா மேற்கோள் காட்டுகிறார். அப்போது அவரது ஆசிரமத்துக்கு எதிரான பிரச்சாரம் உச்சநிலையில் இருந்தது. 'சாதி மத பேதம் கடந்த பெரியார் ஆவர் நம் ஐயர். மக்கள் யாவரும் நிகரெனும் கொள்கையுடைவரவர். சமூக வாழ்க்கையை குலைத்து பெருங்கேடு விளைவித்து வரும் கொடிய வழக்கங்களை அறவே ஒழிக்கவேண்டும் என்ற சீரிய எண்ணம் உடையவர். …இதுகாலை நடந்துவரும் குருகுலப்போர் இவரது சமூகக் கொள்கைகளின் மேல் மக்களுக்குள் ஒருவித ஐயத்தை உருவாக்கி விட்டதென்றாலும் அவ்வையப்பாட்டுக்குச் சிறிதும் ஆதாரமில்லை. உடனுண்ணலையும் வேறு சாதியார் இல்லங்களில் உணவெடுத்தலையும் இவர் கைக்கொண்டிருந்தார் என உண்மையை யாமறிவோம்'
இந்த இரங்கல் கட்டுரையை எழுதியவர் ஈ.வே.ரா அவர்கள்தான். 'பிரச்சினைகளைப் பன்முகப் பரிமாணங்களுடன் பார்க்கும் பண்பும் விமர்சனங்களுக்காகப் பங்களிப்புகளைப் புறக்கணித்துவிடாத நடுநிலைமையும் பெரியாரிடம் இருந்தது. இத்தகைய பண்புநலன்கள் ஒரு சிறிதும் இன்றி காஞ்சி சங்கராச்சாரியாருடன் வ.வே.சுவை ஒப்பிட்டுப்பார்த்தவர்கள்,தம்மைப் பெரியாரின் வழிவந்தவர்களாக சொல்லிக்கொண்டு பிழைப்பு நடத்தும் அவலத்தை என்னவென்பது?' என்கிறார் கட்டுரையாசிரியர்.
பின்னாளைய திராவிட இயக்க நூல்களில் சற்றும் அடிப்படை இல்லாமல் வ.வே.சு.அய்யரின் ஆசிரமக் கல்விநிலையத்தில் அப்பட்டமான சாதிக்கொடுமைகள் நிகழ்ந்ததாக எழுதப்பட்டுள்ளன.இணையத்தில் இந்த விஷயத்தைப்பற்றி என்ன எழுதப்பட்டுள்ளது என தேடினேன். 'அதிகம் படித்த வ.வே.சு அய்யர் நடத்தி வந்த குருகுலத்தில் வருணாசிரம அடிப்படையில் நடத்தப்பட்டு வந்தது. பார்ப்பன சிறுவர்களுக்கு தனியிடம், தனித்தண்ணீர், தனி உணவு என்றும் பார்ப்பனர் அல்லாத குழந்தைகளுக்கு வேறு இடம், வேறு தண்ணீர், வேறு உணவு என்று வித்தியாசத்தை கடைப்பிடித்து வந்தார். பார்ப்பன சிறுவர்களுக்கு காலை உணவாக உப்புமா போன்றவை சூடாக பரிமாறப்பட்டது. பார்ப்பனர் அல்லாதகுழந்தைகளுக்கு பழைய சேற்றையே கொடுத்து வந்தனர்' என எழுதப்பட்ட கட்டுரையைக் கண்டு உண்மையிலேயே வருத்தமடைந்தேன்.
'புறக்கணிக்கப்பட்டும் இருட்டடிப்பு செய்யப்பட்டும் கிடக்கும் வரலாற்றுப்பக்கங்களில் வெளிச்சமிட்டுக் காட்டுவதும் முன்முடிவுகளைக் கைவிட்டு சனநாயக வாசிப்பை சாத்தியப்படுத்துவதுமே நமக்குரித்தான பணிகள்.' என்று மீனா சொல்லும் வரிகளை மீண்டும் ஆமோதிக்கிறேன். இத்தகைய கட்டுரைகள் இனிமேலாவது அதிகார விளையாட்டுக்காகச் செய்யப்பட்ட அநீதிகளைச் சமன் செய்யட்டும்.
எம் வேதசகாயகுமார் வ வே சு அய்யர் பற்றி
வ வே சு அய்யர் பற்றி ஒரு கட்டுரை
தொடர்புடைய பதிவுகள்
வைக்கமும் காந்தியும் 2
வைக்கமும் காந்தியும் 1
அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை
ஹனீஃபா கடிதம்
மதிப்பு மிகு ஜெயமோகனுக்கு
வணக்கம்
உங்கள் வலைப்பூவில் என்னைப்பற்றிய பதிவைப்படித்தேன். இன்னும் கொஞ்சம் இளமை பூத்தது.நல்ல எழுத்து மனித மனத்துக்கு 'கூட்'டுப்பசளை' போல.
படிக்கும் தோறும் நினைக்கும் தோறும் கொத்துக்கொத்தாய் பூத்துக்குலுங்கும் மனசு. அத்தகைய எழுத்துக்களின் சொந்தக்காரர் அல்லவா நீங்கள்.யானை டாக்டர் அவ்வப்போது விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார்.
என்ன சொன்னீர்கள் விவசாயம் விஷக்கன்னியா?உண்மைதான் வெள்ளாப்பில் எழுந்து வாப்பாவின் கைப்பிடித்து தோணியில் ஆற்றைக்கடந்து வயலுக்குப்போன முதல் நாள் எந்த நாளோ என்ன நட்ஷத்திரமோ நானறியேன் ?
வயலும் பயிரும் எனக்கு தீராக்காதலி போல. லா.ச.ரா என்னிடம் " எழுத்தை வேசி என்பேன். உயிரையே குடிக்கும் வேசி என்பேன் " என்றார்.
1980க்குப்பிறகு வயல் வாழ்வும் இப்படித்தான்.என்னதான் பசுமைப் புரட்சி வந்தாலும் விவசாயியின் வாழ்வு தூக்குக்கயிற்றில் தொங்கும் வாழ்வுதான்.ஆனாலும் நீங்கள் சொன்னீர்கள் அங்கு ஐந்து இரப்பர் மரம் இருந்தால் இரு நூறு வருமானம் என்று.உங்களுடனான உரையாடலில் மனசு குளிர்ந்த சங்கதிகளில் அதுவும் ஒன்று.
இங்கு இலங்கையில் ஒரு கிலோ மரவள்ளிக்கிழங்கு நூறு ரூபா. ஒரு கிலோ நெல் இருபது ரூபா.யாரிடம் சொல்லி சிரிப்பது.அங்கு கேரளத்தில் நிறைய மரவள்ளி சேனைகளைப்பார்த்து மகிழ்ந்தேன்.
சமீப நாட்களாக உங்கள் கதைகளைக்காணவில்லையே ! மெய்தான் லா.ச.ரா என்னை வைத்து ஒரு கதை எழுதினார்.1990களில் தினமணிக்கதிரில் பிரசுரமானது."சங்கு புஷ்பம்" ஒரு கதையில் இரண்டு நிகழ்வுகள். ஒரு சிறீலங்கன் என்னைத்தேடி வந்தார் என்ற பகுதி என்னைப்பற்றியது .அவரைத்தேடிச்சென்ற ஒரே இலங்கையனும் நான்தானாக்கும்.
இன்று ஆபிதீன் பக்கங்களில் அம்ரிதா ஏ.யெம் தொகுதியிலிருந்து குளம் கதை வலையேறுகிறது.நான்கு வரியில் உங்கள் எண்ணத்தைப் பதிவு செய்யுங்களேன்.
நான் மீண்டும் உங்களைப் படிக்கத்தொடங்குகிறேன்.எனது மேசையில் 1995 இல் ஸ்நேகா கொண்டு வந்த மண்தொகுதியும், இரப்பர் நாவலும் .
அன்புடன்
எஸ்.எல்.எம். ஹனீபா.
அன்புமிகு ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
எனக்குப் பதில் அனுப்பியதில் ரொம்ப சந்தோஷம். எல்லோராலும் முடிவதில்லை. என்னளவில் மட்டுமல்ல, என்னைப் போல் பலரின் மனத்தில் ஜெயமோகன் என்கின்ற மானிடச் சுடர் ஒளிவீசிக் கொண்டேயிருக்கும். தேக சௌக்கியத்திற்கும் நீடித்த ஆயுளுக்கும் பிரார்த்திக்கிறேன்.
உங்கள் மனைவி பிள்ளைகளைப் பார்ப்பதற்காக வேண்டியே மீண்டும் நான் பார்வதிபுரம் வருவேன்.
இன்று காலையில் நானும் பாரதி மணி ஐயா அவர்களும் பூர்வீக பார்வதி புரம் பற்றிப் பேசிக் கொண்டோம். அவர் மனத்தில் அவரின் உசுக்குட்டிப் பருவ பார்வதி புரம் ஒரு அழகான கவிதையாக ஓவியமாக ஒட்டிக் கிடக்கிறது. தொலைபேசியில் தனது கிராமத்தைப் பறிகொடுத்த ஆற்றாமை அருவியாகக் கொட்டியது. ஒவ்வொரு கிராமங்களும் இவ்வாறுதான் அழிந்து போகிறது. நான் வாழ்ந்த கிராமத்தில் பிரமாண்டமான விருட்சங்கள் ஆங்காங்கே விண்ணை நோக்கி எழுந்து நின்றன. அந்த விருட்சங்கள் இருந்த இடத்தில் மாடி மனைகள் விண்ணை நோக்குகிறது.
விடை பெறுகிறேன்.
அன்புடன்
எஸ்.எல்.எம். ஹனீபா
குறிப்பு: அம்ரிதா ஏயெம்மின் கதை பற்றி எனக்கு ஒரு குறிப்பு எழுதுங்களேன். அது எப்படி இருந்தாலும் பரவாயில்லை. அவனுடைய பயணம் சரிதானா என்பதை அறிவதுதான் எனது ஆசை.
அன்புள்ள ஹனிபா அவர்களுக்கு,
நன்றி
மணியின் பார்வதிபுரம் கொஞ்சம் தாமதமாக மாறிக்கொண்டிருக்கிறது, அவ்வளவுதான். நினைவுகளில் உள்ள ஊர்களே எப்போதுமே அழகானவை.அம்ருதா இன்னும் வாசிக்கவில்லை. வாசிக்கிறேன்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
அனலும் அணுவும்
கூடங்குளம்-கடிதம்
கடிதங்கள்
அண்ணா ஹசாரே-சில கடிதங்கள்
தூக்கு- எதிர்வினை
அண்ணா ஹசாரே-கடிதங்கள்
அண்ணா ஹசாரே மீண்டும் ஒரு கடிதம்
அண்ணா ஹசாரே- இன்னொரு கடிதம்
அண்ணா ஹசாரே- ஒரு கடிதம்
அயோத்திதாசர், கடிதங்கள்
September 24, 2011
பரமக்குடி
உங்களது உளவியல் கட்டுரைகள் பல படித்திருக்கிறேன். பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி உங்கள் கருத்து என்ன. நீங்கள் முதற் கொண்டு எந்த எழுத்தாளரும் இதை பற்றி கருத்து தெரிவிக்காதது பற்றி என்ன நினைக்கிறீர்கள் .
அன்புடன்
ஆனந்த்
அன்புள்ள ஆனந்த்
ஜனநாயகம் நடைமுறையில் இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில்அரசியல் என்பது தொடர்ச்சியான போராட்டங்கள், கிளர்ச்சிகள், மோதல்கள், விவாதங்களால் ஆனது. இந்தச் சூழலில் ஓர் எழுத்தாளன் அரசியல் விஷயங்கள் அனைத்துக்கும் உடனடியாக எதிர்வினை தெரிவித்து விவாதிக்க ஆரம்பித்தால் அவன் அரசியல் விமர்சகனாக மட்டுமே இருக்க முடியும். அது ஓர் ஓயாத அலை
ஆகவே கூடுமானவரை சமகால அரசியல் நிகழ்வுகளுக்கு எதிர்வினையாற்றுவதில்லை என்பதை என் கொள்கையாக வைத்திருக்கிறேன். பெரும்பாலும் அப்படித்தான் செயல்படுகிறேன். அதை மீறி கருத்துச்சொல்லும் தருணங்கள் என்பவை ஒரு விரிவான கருத்துவிவாதத்துக்கான வாய்ப்பும், எழுத்தாளனாக என் பங்களிப்பு தேவை என்ற கட்டாயமும் உள்ளவையாக இருக்கும் – கூடங்குளம் போல.அத்தகைய இடமேதும் பரமக்குடி துப்பாக்கிச்சூடு விஷயத்தில் இல்லை என்றே நினைக்கிறேன்.
என்னுடைய கட்டுரைகள நீங்கள் தொடர்ந்து வாசித்திருந்தால் நான் என்ன சொல்கிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்.
தமிழில் சமகால அரசியல் விவாதங்களில் ஈடுபடும் எல்லா எழுத்தாளர்களும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். அரசியல் விவாதங்களில் ஈடுபடாதவர்களைக் கட்டாயப்படுத்தும் உரிமை எவருக்கும் கிடையாது.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
விதி-கடிதம்
ஜெ,
விதி சமைப்பவர்கள் கட்டுரை மற்றும் அதன் எதிர்வினைகள் மூலம் நான் அடைந்த கருத்துக்களை என்னால் வார்த்தைப் படுத்த முடிந்த அளவிற்கு எழுதி இருக்கிறேன். இதைச்சார்ந்து உங்கள் கருத்துகள், என் மன விரிவிற்கு உதவலாம்.
நாம் அனைவரும் இயலாமை என்னும் பெரும் கட்டுக்குள் கட்டுண்டு இருக்கிறோம் – இங்கு இயலாமை என்பது தனிமனித அளவில் கூறப்படவில்லை, உலகம் முழுவதையும் ஒரே இருப்பாகக் காணும்போது அதில் மனிதன் என்னும் சிறு துகளின் இயலாமை!
உலகின் இயக்கம் ஒரு மாபெரும் கூட்டு நியதிக்குள் கட்டுப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டு விதி அல்லது நியதிகளின் தொகுப்பு மகாதர்மம் என சில புத்த கலாச்சாரங்களில் கூறப்படுகிறது. இந்த விதிகளின் தொகுப்பிலிருந்து உலகத்தின் எந்த இயக்கமும் விலக முடியாது. இதே இயக்க விதிகள், உலகில் உள்ள ஒவ்வொருபொருளிலும், ஒவ்வொரு உயிரினத்திலும் அந்தப் பொருளுக்கு அல்லது உயிரினத்துக்கான தனித்தன்மையுடன் இயங்கிக் கொண்டிருக்கும். எந்தப் பொருளும் அல்லது உயிரினமும் அதற்கான இயக்க விதிகளிலிருந்து எவ்வகையிலும் தப்பிச் செல்ல முடியாது. ஆம், நாம் அனைவரும் நமக்கேயான இயக்க நியதிகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளோம். நமக்கேயான அந்த நியதிகளிலிருந்து விடுதலை என்பது நம்மில் எவராலும் இயலாததாகவே இருக்கக் கூடும். அந்த நியதிக்குட்பட்டு இயங்குவதே நமது பிறப்பின் குறிக்கோளாகவும் இருக்கக் கூடும்.
ஜடப் பொருட்களுக்கு, உலகத்தின் ஒருமையிலிருந்து தனிமைப் படுத்திப் பார்த்தாலும், அவற்றின் இயக்க நியதிகள் மட்டுமே இயல்பாக இருக்க முடியும். உயிரினங்கள் ஜடப்பொருள்களிலிருந்து வேறுபடுவது,அவற்றின் தம்மைத்தாமே உருவாக்கும் அல்லது படைக்கும் இயல்பாகும்.அதாவது, உயிரினங்கள் அவற்றின் சூழலில் இருந்து சக்தியைப் பெற்று, அவற்றின் அடிப்படை இயல்புக்கு ஏற்ப அந்த சக்தியை தமது இச்சைகளை செயல்படுத்த உபயோகப்படுத்துகின்றன. அதன் இச்சைகளில் மிக அடிப்படையானது இனப்பெருக்கமாகும். இங்கு கவனிக்கப்படவேண்டியது, தனிப்பட்ட முறையில் உயிரினங்களின் இச்சைகள் அவற்றுக்கே உரியதாகவும் அவற்றால் செயல்படுத்தப்படுவதாக இருந்தாலும், அந்த உயிரினத்தின் இச்சைகள், அவை அவற்றினுள் கொண்டுள்ள வேதிப்பொருட்களின் கூட்டமைப்பைப் பொறுத்தே அமையும் – அவற்றின் மூளையின் வேதிப்பொருட்களின் கூட்டமைப்பு. இந்த வேதிக்கூட்டமைப்போ, உலகின் மகாநியதிக்கு உட்பட்டது.
மனிதனும் இந்த நியதிக்கு விலக்கல்ல. நமது உளவியல் இயல்புகளும் செயல்பாடுகளும் கூட நம் மூளையில் வேதிப்பொருட்களின் கூட்டமைப்பைப் பொறுத்தே அமையும். நம் மூளையின் கட்டமைப்பு, நாம் கருவாக உருவாகும்போதே முடிவு செய்யப்பட்டுவிடுகிறது – நாம் பெறும் மரபணுக்கள் மூலம்! அதாவது இந்த உலகத்தில் நாம் அடையப்போகும் மகிழ்ச்சிகளுக்கும் துயரங்களுக்குமான அடிப்படை இயக்க நியதிகள் நாம் கருவாக உருவெடுக்கும்போதே முடிவு செய்யப்பட்டுள்ளது. நமது மூளையின் வேதிக்கூட்டமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள இந்த நியதிகள், நமது சுற்றுச்சூழலின் இயக்கத்துடன் சேர்ந்து இயங்கும்போது, நாம் உணரும் மகிழ்ச்சிகளாகவும் துன்பங்களாகவும் வெளிப்படுகின்றன. இங்கு நமது மகிழ்ச்சிகளுக்காகவும், துயரங்களுக்காகவும் நாம் செய்யக்கூடியது என எதுவும் இல்லை. நம் மூளையின் வேதிக்கூட்டமைப்பும், நமது சுற்றுச்சூழலும் அவற்றை முடிவு செய்கின்றன – நாம் வாழத் தேர்ந்தெடுக்கும் சுற்றுச்சூழலையும் கூட நம் மூளையின் வேதிக்கூட்டமைப்பே முடிவு செய்கிறது.ஆக நம் மூளையின் வேதிக்கூட்டமைப்பு ஏற்படுத்தியுள்ள நியதிக்கேற்ப செயல்படுவதைத் தவிர வேறு சாத்தியங்களே நமக்கு இல்லை – மனிதனின் இயலாமையின் உச்சம்!
ஆனால், ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு உயிருக்கும், விடுதலை என்பதும் அதனதன் அடிப்படை இயக்க நியதியிலேயே உள்ளது எனத் தோன்றுகிறது. உதாரணமாக சூரியன் அதன் ஈர்ப்பு சக்தியை கொண்டிருக்கும்வரைதான், பூமியும் மற்ற கோள்களும் சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கும். இன்னும் சில நூறு கோடி வருடங்களில் சூரியன் அதன் ஈர்ப்பு விசையை இழக்கும்போது, பூமியும் மற்ற கோள்களும் சூரியனிலிருந்து விடுபட்டு, அவற்றுக்கேயான வழிகளில் பயணிக்கத் தொடங்கலாம். இந்த விடுதலையின் நியதி, ஒவ்வொரு அணுவின் சிறு துகளுக்கும், அணுவுக்கும், பொருள்களுக்கும், உயிரினங்களுக்கும் கூட இருக்கக் கூடும். நமது சுற்றுப்புற இயக்கங்களை நம்மால் சற்று உற்று நோக்க இயலுமானால், ஒருவேளை நம்மால் இந்த அடிப்படை விடுதலைக்கான போராட்டத்தை உணர்ந்து கொள்ள இயலும்.
எந்த ஒரு பொருளும் அல்லது உயிரினமும், அதன் அடிப்படை இயக்கத்தையே அல்லது அடிப்படை இயல்பையே உணர்வாக (அவற்றுக்கு உணர்வு என்ற ஒன்று இருக்குமானால்) கொண்டிருக்குமானால், அவை மகிழ்ச்சி அல்லது துயரம் என்னும் பொறிகளில் சிக்குவதற்கு வாய்ப்பே இல்லை. எந்த உயிரினமும் அதன் அடிப்படை இயல்புகளையே அல்லது நியதிகளையே உணர்வாகப் பெற்றிருக்கும்போது, அவற்றின் உணர்வுகளுக்கும் செயல்களுக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பதில்லை. இந்த முரண்பாடுகளற்ற உணர்வு நிலையே ஆனந்த நிலையாக இருக்கக் கூடும் – அந்த உணர்வுகளின் எல்லைகளைப் பொறுத்து! மற்ற உயிரினங்களுக்கு உணர்வு என்ற ஒன்று இருக்குமானால், அவை அவற்றின் இயல்பையே உணர்ந்து கொண்டிருக்கக் கூடும் – அவற்றின் உணர்வுக்கான எல்லைவரை. அவ்வாறெனில், அவற்றின் வாழ்வில், முரண்பாடுகள் இருக்க இயலாது.
மனிதனுக்கு விடுதலையின் தேவை மிக மிக அதிகமாகவே, மனிதனுக்கான நியதிகள் மூலம், நிலைநிறுத்தப் பட்டிருக்கலாம்எனத் தோன்றுகிறது. இந்த விடுதலைக்கான தேவையே, மனிதனின் அடிப்படை இருப்பின் கட்டுப்பாடுகளுடன் முரண்பட்டு, நமது மகிழ்ச்சிகளையும் துயரங்களையும் உருவாக்குகிறது. ஆனால், நம்மால் இருப்பின் நியதிகளிலிருந்து ஒருபோதும் விலக இயலாது. எனில் விடுதலையின் குறிக்கோள் என்னவாக இருக்க முடியும்? ஒருவேளை, நமது இருப்பின் இயல்பை உணர்ந்து, அதன் நியதிகளை உணர்ந்து, அந்த இயல்பிற்கேற்ப, நியதிக்கேற்ப நம் வாழ்க்கையை அமைத்து, செயல்களின் முரண்பாடுகளிலிருந்து விடுதலை பெறுவதுதான் அதன் குறிக்கோளாக இருக்கலாம். அல்லது இந்த முரண்பாடுகளைக் கிரியா ஊக்கிகளாகக் கொண்டு, நமது இருப்பை, அதன் மூலம் உலகத்தின் இருப்பை உணர்வதுதான் விடுதலைக்கான தேவையின் குறிக்கோளாக இருக்கலாம்.
மனித மனம் எல்லையற்ற சாத்தியங்களை உடையது – மனம், அதன் செயல்பாட்டின் எல்லைக்குள், அதற்குத் தேவையான மூளையின் கூட்டமைப்பை உருவாக்க கூடியதாகக்கூட இருக்கலாம். அவ்வாறு கூடுமெனில், அதற்கான கிரியா ஊக்கிகள், நமது சுற்றுச்சூழலிலுருந்து மட்டுமே பெற முடியும். ஆனால் அந்த கிரியா ஊக்கிகள் மூளையின் வேதிக்கட்டுமானத்துடன் வினை புரிய வேண்டுமெனிலும், மூளையின் கட்டமைப்பு அதற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். இதிலும் நம்மால் செய்ய இயலுவதென எதுவும் இல்லை. நாம், நம் உடல் மற்றும் மூளையின் வேதிக்கூட்டமைப்பிற்கேற்ப, அந்த வேதிக்கூட்டமைப்பினால் நிலைநிறுத்தப்பட்ட நியதிகளுக்கேற்ப செயல் புரிந்து கொண்டிருக்கிறோம். அது மட்டுமே நம்மால் இயன்றது!
இந்த மகத்தான இயலாமையை நம்மால் உணர முடிந்தால், அந்த உணர்வே கிரியா ஊக்கியாக செயல்பட்டு, மூளையின் செயல்பாட்டின் ஒழுங்கு முறையையே மாற்றி அமைக்கக் கூடும். ஒருவேளை நம்மால் மனிதனின் இயலாமையை உணர நேர்ந்தால், மனித இனத்தின் மீது பெருங்கருணையைத் தவிர வேறு எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்த இயலாமல் போகலாம். அப்பெருங்கருணையினால், எதிரிகளையும், துன்பம் இழைப்பவர்களையும் கூட நம்மால் வெறுக்க இயலாமல் போகலாம். ஏனெனில் அவர்கள் துன்பம் இழைப்பது கூட அவர்களின் இயலாமையினால் மட்டுமே! அவர்கள் மூளையின் வேதிக்கட்டமைப்பே அதற்கு காரணம்! அவர்களோ அல்லது வேறு எவருமோ, அந்த இயல்புகளை எவ்வகையிலும் மாற்ற முடியாது.
அகிலன்
விதிசமைப்பவர்கள் கடிதங்கள்
தேர்வுசெய்யப்பட்டவர்கள்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
