Jeyamohan's Blog, page 2282
October 3, 2011
ஏழாம் உலகம்-கடிதம்
பிரியமுள்ள ஜெமோ,
சமீபத்திய இந்தியப் பயணத்தில் "ஏழாம் உலகம்" படிக்க வாய்ப்புக் கிடைத்தது. அப்போதும் அப்புறமும் மனதில் பட்டவற்றைக் கோர்வையாக சொல்ல முயன்றிருக்கிறேன்.
நமது தின வாழ்க்கையில் நாம் இருக்கும் உலகிலிருந்து பல்வேறு உலகங்களுக்குப் போய்வருகிறோம். விதவிதமான முகமூடிகளுடன் அதே மாதிரி விதவிதமான முகமூடிகள் அணிந்த மனிதர்களை சந்திக்கிறோம். பிற உலகங்களை எட்டிப்பார்த்துப் பின் நமது உலகத்திற்குத் திரும்பிவிடுகிறோம்.
சில வருடங்களுக்கு முன் சென்னை பொது மருத்துவமனையில் ஒரு பதினாறு நாட்கள் தங்க வேண்டியதிருந்தது. லண்டனிலிருந்து நேராக மருத்துவனை, அதே போல் பதினாறு நாட்களுக்குப் பின் மருத்துவமனையிலிருந்து நேராக விமான நிலையம். அதற்கு முன் எத்தனையோ தடவை அந்த மருத்துவமனையைத் தாண்டிப்போயிருக்கிறேன். எதிரில் இருக்கும் சென்ட்ரல் நிலையத்தில் எத்தனையோ தடவை வந்து போயிருக்கிறேன். ஆனால் அந்தப் பதினாறு நாட்கள் நான் அந்த மருத்துவனையில் கண்ட உலகமே வேறு. பிணியுடன் வறுமை, அதனுடன் மூப்பு…நான் இத்தனைக்கும் மூடிய, சவுகரியமான, கண்ணாடி சன்னலின் வழியேதான் இந்த உலகத்தைப்பார்த்தேன்.(தந்தை குளிர்சாதன, கட்டண அறையில் சேர்க்கப்பட்டிருந்தார்) இருந்தும் மருத்துவத் துறையைச்சாராத என்னை உலுக்கிவிட்டது அந்த உலகம்.
தினமும் இரவு அவசரப் பிரிவு வழியாகத்தான் உள்ளே போகவேண்டும் (முன் வாசல் ஏழு மணிக்குப்பின் அடைத்துவிடுகிறார்கள்).கண்ணில் படும் காட்சிகள், பதட்ட முகங்கள், அழுகுரல்கள், அப்பப்பா…மின் தூக்கிக்குக் காத்திருக்கும்போது பக்கத்து அழுகுரல்கள், காட்சிகள் கேட்டுப் பதைபதைக்கும் மனத்துடிப்பு இரண்டாவது வாரத்தில் குறைந்து, லேசாகப் பழகி, மின் தூக்கி வந்துவிட்டதா என அனிச்சையாகக் கண்கள் தேடுவதைப் பின் வந்த காலங்களில் எண்ணி திடுக்கிட்டிருக்கிறேன்.காலை உணவு அருந்தாமல் ரத்த மாதிரி கொடுக்க வந்து (நீரழிவுப்பிரிவு) பாதி மயக்கத்தில் இருக்கும் மூதாட்டிகளிலிருந்து, அப்போதுதான் கைகள்,மண்டை உடைந்து கொட்டிக்கொண்டிருக்க (சொட்டி இல்லை) உள்ளே செல்லும் இளைஞர்கள், மருந்து குடித்துவிட்டு ஸ்ட்ரெச்சரில் தரதரவென்று இழுத்துச் செல்லப்படும் பதின்ம வயதுப் பெண், காலை 6 மணிக்குப் பார்த்த மின் ரயிலில் அடிபட்ட, கால் மட்டும் தெரிந்த பிரேதம், எவ்வளவோ காட்சிகள்….
திரும்ப லண்டன் வந்த பிறகு ஐந்தாறு பேர் உள்ள வரிசைக்கே பொறுமையிழப்பது, ட்ராபிக் சிக்னலிற்கெல்லாம் எரிச்சலடைவதிலிருந்து, அலுவலக டெட் லைனிற்குப் பதறி உறைவது, குழந்தைகளின் உடல் சற்றே சுட்டால்கூட சட்டென்று சிறு கவலை கொள்வது – எல்லாமே அற்பமாகப்பட்டது.முன் கோபம், பதட்டம் எல்லாமே போய்விட்டது. மனைவி, குழந்தைகள் வியக்குமளவிற்கு.
கொஞ்ச நாட்களுக்குப் பின் திரும்பப் "பழைய உலகிற்கு"ப் போய்விட்டாலும் கூட இதுவரை அறியாத உலகை அறிந்தது குறித்து சற்று இறுமாந்திருந்தேன் என்றுகூடக் கொள்ளலாம்.
அத்தனையும் தூள்தூளாக நொறுக்கிவிட்டது நீங்கள் காட்டும் இந்த "ஏழாம் உலகம்"
தின வாழ்க்கையில் மிகச்சாதாரணமாகக் கண்ணில் படும் களங்கள், மனிதர்கள்.இப்படிப்பட்ட உலகம் நம்மோடுதான் இருக்கிறது. அதைப்பற்றி சின்ன அறிதல்கூட நமக்குக் கிடையாது.
இந்த உலகத்தை எழுத்தாளர் கண்களின் வழியாகப் பார்க்கிறேன்.இந்த நாவலில் பின்னணி இசை கிடையாது; வார்த்தைப்பூச்சு கிடையாது; "இதனால் அறியப்படுவது யாதெனில்" நீதி உபதேசம் கிடையாது. அசோகமித்திரன் அவர்களின் "கச்சிதம்" என்று பலமுறை நீங்கள் குறிப்பிடும் கச்சிதம் என்னவென்று இப்போது ஒருவாறு புரிகிறது.
இந்த உலகத்திலும் நம் உலகைப்போலவே கோபம், குரோதம், எள்ளல், வருத்தம், துரோகம், பிணி…கதாபாத்திரங்கள் தரும் அதிர்ச்சிகள் எருக்கு, ராமப்பன், குய்யன், முத்தம்மா, போத்தி, ரசனிகாந்த், "அனைத்தும் நாமறிவோம்" என்றவர், மலையில் விபச்சாரம் செய்பவர், போத்திவேலு பண்டாரத்தின் சம்பந்தி, ofcourse போத்திவேலு…மனதில் தங்கிவிட்டவர்கள்…
எதிர்பார்த்தமாதிரியே இந்தப் புத்தகம் வாழ்க்கை, கடவுள் நம்பிக்கை பற்றிய சந்தேகம், வேதனை, சலிப்பு…பல கேள்விகளை ஏற்படுத்தியிருக்கிறது.மனம் சமநிலையை அடைந்து இந்தக் கேள்விகள் என்னை அடுத்த நிலைக்கு முன்னகர்த்திச் செல்லும் என்பதில் மிக நம்பிக்கையாக இருக்கிறேன்.இதைத்தழுவிய திரைப்படத்தை இன்னும் பார்க்கவில்லை; நல்லது என நினைத்துக்கொண்டேன்.
தங்கள் தளத்தில் உள்ள அனைத்தும் (உலோகம், இரவு), பி.தொ.நி.கு., சில சிறுகதைத்தொகுப்புகள் (ஆயிரங்கால் மண்டபம்), சங்க சித்திரங்கள், அப்புறம் இந்த நாவல்…இன்னும் போக வேண்டும் வெகுதூரம்…பெரிய, மிகப்பெரிய தட்டில் பிடித்த பண்டங்கள் இருக்க, அனைத்தையும் உடனே தீர்த்துவிட மனமில்லாமல் கொஞ்சம், கொஞ்சமாக ருசித்துக்கொண்டு இருக்கும் குழந்தையின் மனநிலையில் இருக்கிறேன்.
Essex சிவா
தொடர்புடைய பதிவுகள்
கடிதம்
கடிதங்கள்
ஏழாம் உலகம், கடிதங்கள்
ஏழாம் உலகம்: மீண்டும் எதிர்வினைகள்
ஏழாம் உலகம்: கடிதங்கள்
ஏழாம் உலகம் :கடிதங்கள்
விவேக் கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன்
வணக்கம். நலம்தானே? விவேக் கதைகளின் மொழிபெயர்ப்பைத் தொடர்ந்து
வெளியிடுவது மகிழ்ச்சியாகவே உள்ளது. அவர் பெயரில் ஒரு சிறு திருத்தம்
செய்யுங்கள். அவர் பெயரை விவேக் ஷான்பாக் என்று எழுதவேண்டும்.
மற்றபடி எல்லாம் சரி.
அன்புடன்
பாவண்ணன்
அன்புள்ள பாவண்ணன்
திருத்திவிடுகிறேன்
ஆனால் சித்தலிங்கய்யா அவரது மண்ணும் மனிதரும் மொழியாக்கத்தில் ஷன்பேகர்கள் என்றே எழுதியிருக்கிறார் என நினைவு
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்.
விவேக் ஷன்பேக் கதைகள் உங்கள் பதிவில் படித்தேன். பிடித்திருக்கிறது.
ஆனால், ஒரு மனிதனின் வாழ்கையில் – எப்படி அவரவர் வாழ்க்கையில் தத்தம் செயல்களுக்கு ஒரு அர்த்தம் உள்ளது, என்பது புரிகிறது.
விவேக் யார் பக்கம் நின்று பேசுகிறார் என்பதும் புரிபடுகிறது.
அதற்கு மேல் எதாவது நான் விட்டு விடுகிறேனா என்பது தெரியவில்லை. சில விஷயங்கள் -ஆனந்த விகடனில் வரும் 3-D stereoscope மாதிரி – புரியவில்லை என்றால் புரிய வைக்க முடியாது. அப்படி என்றால், நீங்கள் இதில் புரிந்து கொண்டது, நீங்கள் எடுத்துக் கொள்வது என்ன என்று கோடி காட்டுங்கள்.
முக்கியமான தரிசனத்தைத் தொலைத்து விட்டுப் படிக்கிறேனோ என்ற ஒரு பயம் உள்ளது.
Thanks
Sridhar
அன்புள்ள ஸ்ரீதர்
விவேக்கின் கதைப்பாணி சாதாரணமான விஷயத்தை சாதாரணமாகச் சொல்லும் பாவனை கொண்டது. அது ஒரு புனைவுமுறை மட்டுமே. கதைகளின் எளிமையான போக்குக்கு அடியில் வாழ்க்கை சார்ந்த ஒரு நுண்ணிய அவதானிப்பை எப்போதும் வைத்திருக்கிறார்.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
ஷரவணா சர்வீஸ் [விவேக் ஷன்பேக்]
ஜாமீன் சாஹேப்-2
ஜாமீன் சாஹேப்- [விவேக் ஷன்பேக்]-1
சுதீரின் அம்மா-விவேக் ஷன்பேக்
சில்லறை-கடிதங்கள்
சில்லறை-கடிதம்
சில்லறை [கன்னடச் சிறுகதை]
விவேக் ஷன்பேக் சிறுகதை- 4
விவேக் ஷன்பேக் சிறுகதை 3
விவேக் ஷன்பேக் சிறுகதை- 2
காந்தி,அனந்தமூர்த்தி
ரயிலில் முதல் வகுப்பில் அமர்ந்த காந்தியை வெளியே தள்ளிவிட்டபோது, அவருக்கு வெறுமனே கோபம் மட்டும் வந்திருந்தால் அவர் சாவர்கர் ஆகியிருப்பார். அந்தக் கோபத்தோடு அவருக்கு நம் தேசத்தில் நாமும் மற்றவர்களை அப்படி நடத்துகிறோம் எனத் தோன்றியதால் அவர் காந்தியானார். கோபம் மட்டும் தோன்றியிருந்தால் அது பிரிட்டிஷ்காரர்களோடான கிளர்ச்சிக்கு உபகாரமாகியிருக்கும். தன்னைக் கருப்பன் என வெளியே தள்ளிவிட்டபோது, நாம் பறையன் என்று வெளியே நிறுத்துகிறோமல்லவா என நினைவுக்கு வராதிருந்தால் அவர் காந்தி ஆகியிருக்கமாட்டார்.
காந்தி பற்றி யு.ஆர்.அனந்தமூர்த்தியின் அற்புதமான கட்டுரை காந்திடுடே இணைய இதழில்
தொடர்புடைய பதிவுகள்
காந்தியின் எதிரிகள்
உப்பும் காந்தியும்
உப்பு,மேலும் கடிதங்கள்
உப்பு-கடிதங்கள்
உலகின் மிகப்பெரிய வேலி
காந்தியும் மேற்கும் -குகா
நைபால்
அண்ணா ஹசாரே- காந்திய போராட்டமா?
அண்ணா ஹசாரே- மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?
காந்தியின் தேசம்
October 2, 2011
கனவுபூமியும் கால்தளையும்
சம்சாரத்தைப்பற்றிய ஏராளமான இந்திய, ஜப்பானிய கதைகளில் ஒன்றில் நாரதர் மாயை என்றால் என்ன என்று பெருமாளிடம் கேட்கிறார். பெருமாள் ஒரு வீட்டைக்காட்டி அங்கே சென்று ஒரு செம்பு தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு வா என்கிறார். தண்ணீர் கொண்டுவருபவள் ஒரு பேரழகி. நாரதர் அவளிடம் காதல்வயப்பட்டு, அவள் குடும்பத்தினரிடம் போராடி திருமணம் செய்துகொண்டு, குழந்தைகள் பெற்றுக்கொண்டு, அவர்களை வளர்த்து ஆளாக்கி திருமணம்செய்து வைத்து, பேரன் பேத்திகள் எடுத்து வாழ்ந்துகொண்டிருக்கும்போது பெருமாள் திரும்பி வரும்படி அழைக்கிறார். 'இதோ என் கொள்ளுப் பேத்திக்குத் திருமணம் முடிந்தபின் வருகிறேன்' என்கிறார் நாரதர். பிரமை கலையும்போது அது ஒரு கணநேர மாயமே என அறிகிறார். அந்த பெண் மாயாதேவி.

தல்ஸ்தோய்
குடும்ப வாழ்க்கை நம்மை ஐந்து பெரும் கற்பனைகளால் கட்டிப்போட்டிருக்கிறது. ஒன்று நாம் நம் குடும்பம் மீது கொண்டுள்ள அன்பு. இரண்டு, நம் மீது அவர்கள் கொண்டுள்ள அன்பு. மூன்று, நாமில்லாவிட்டால் அவர்கள் இருக்கமுடியாது, அவர்கள் வாழ்க்கைக்கு நாமே பொறுப்பு என்ற நம் அகந்தை. நான்கு அவர்கள் இல்லாமல் நாம் வாழமுடியாது என்ற நம் பலவீனம். ஐந்து, நம்முடைய காலம் முடிவற்றது என்ற பிரமை. நமக்குப்பிடித்தமானதைச் செய்ய நாம் இந்த வாழ்க்கையின் கட்டுகளைக் காலப்போக்கில் அறுத்தபின் நிறையவே நேரமிருக்கிறது என்ற நம்பிக்கை.
சம்சாரத்தின் கட்டுகளை மெல்லமெல்ல அறுத்தவர் எவருமில்லை என்பது இந்திய ஞானமரபின் முக்கியமான கொள்கைகளில் ஒன்று. ஒரு தருணத்தில், ஒரு கணநேரத்துத் தீர்மானத்தில் , வைராக்கியத்தையே வாளாகக் கொண்டு அறுத்துக்கொண்டால்தான் உண்டு. புத்தர் முதல் ராமானுஜர் வரை, சங்கரர் முதல் நாராயணகுரு வரை நாம் காண்பது அந்தக் கணநேரத்து வைராக்கியத்தைத்தான். அவர்களே ஞானத்தை தங்கள் முழு இருப்பாகக் கொள்ளும் நிலை நோக்கிச் செல்கிறார்கள். அதையே 'கூறாமல் சன்யாசம் கொள்ளுதல்' என்று மரபு சொல்கிறது. லட்சோபலட்சம்பேர் அந்தக் கணத்துக்கு முந்தைய கணத்தில் நின்று தவித்துத் தவித்து இறந்துகொண்டிருக்கிறார்கள்.
ரிஷி அல்லாதவன் கவிஞனல்ல என்று ஒரு சம்ஸ்கிருதக் கூற்று உண்டு. ஞானம் கனியாத இலக்கியமென்பது உயர்தரக் கேளிக்கை அல்லாமல் பிறிதல்ல. ஆனாலும் எழுத்தாளன் ஞானி அல்ல. ஏனென்றால் அவனுடைய ஊடகம் இலக்கியம். அதன் கச்சாப்பொருள் இக உலக வாழ்க்கை. அதை சாதகம் செய்து அவன் தன் ஞானத்தை அடைகிறான். அதேசமயம் அது அவனை வாழ்க்கையில் கட்டிப்போடவும்செய்கிறது. தல்ஸ்தோயை ஒரு மெய்ஞானி என்று சொல்பவர்கள் உண்டு. இந்திய ஞான மரபின் பெரும் பாரம்பரியத்தில் நின்று பார்க்கும்போது அவரை ஞானத்தைத் தொட்டுத் தொட்டு மீளும் முடிவிலாத ஊசலாட்டத்தில் தவித்த பெரும் படைப்பாளி என்று மட்டுமே சொல்லமுடியும் என நான் நினைக்கிறேன்.
எந்த எழுத்தாளனும் அந்த இடத்திலேயே இருக்கிறான். தன் படைப்பூக்கத்தின் உச்சநிலையில் அவன் ஞானியர் தொடும் உச்சியைத் தானும் தொடுகிறான். ஆனால் உடனே திரும்பி வந்து சாதாரண மனிதனாக வாழவும் செய்கிறான். சாதாரண மனிதனாக அவனிருக்கையில் தன் படைப்பூக்க நிலையின் உச்சிகள் அவனை பிரமிப்படையச்செய்கின்றன. ஆனால் அந்த ஆளுமையைத் தன்னுடையதாக அவனால் கொள்ள முடிவதில்லை, அது அவனைவிட பிரம்மாண்டமானதாக இருக்கிறது. அதைத் துறக்கவும் அவனால் முடிவதில்லை, ஏனென்றால் அது அவன் என்பதும் உண்மை. ஆகவே முடிவில்லாத ஒரு ஊசலாட்டத்தில் அவன் இருக்கிறான். குற்றவுணர்ச்சியில் இருந்து பெருமிதத்துக்கும், கொந்தளிப்பில் இருந்து பரவசத்துக்கும் அவன் அலைபாய்ந்துகொண்டே இருக்கிறான். தல்ஸ்தோயின் வாழ்க்கை அதற்கு மிகச்சிறந்த உதாரணம்.
[image error]
[பிளம்மர் திரையில் தல்ஸ்தோயாக]
தல்ஸ்தோயின் அகவாழ்க்கையும் புறவாழ்க்கையும் எப்போதும் மோதிக்கொண்டிருந்தன. இளமையில் செல்வந்த பிரபுகுடும்பத்து இளைஞராக, போர்வீரராக, போகக்களியாட்டங்களில் திளைத்தார். ஆனால் இனம்புரியாத ஒரு முழுமைக்காக அவரது அகம் தேடிக்கொண்டும் இருந்தது. அந்த முரண்பாட்டின் கொந்தளிப்பே அவரை எழுத்தாளனாக ஆக்கியது. அவரது மையக்கதாபாத்திரங்களான பியர், லெவின், நெஹ்ல்யுடோவ் ஆகிய அனைவரிடமும் அந்த அகமோதல் மையம் கொண்டிருப்பதைக் காணலாம்.
தல்ஸ்தோயின் மெய்த்தேடல் அவரை கடைசியில் தல்ஸ்தோய்தரிசனம் என்று பின்னாளில் அடையாளம் காணப்பட்ட ஒரு கொள்கைநிலை நோக்கி கொண்டு சென்றது. உடைமையற்றிருத்தல், உழைப்பால் வாழ்தல், போக மறுப்பு, இயற்கையில் இருந்து மெய்மையை நேரடியாகப் பெற்றுக்கொள்ளுதல், அமைப்புகளுக்குக் கட்டுப்படாமலிருத்தல் என்று அதன் அடிப்படைகளை வகுக்கலாம். அன்று ஐரோப்பிய இலட்சியவாதத்தின் உச்சமாக இருந்த தரிசனம் அது. தோரோவிடமும் எமர்சனிடமும் வெளிப்பட்டது. அது பதினேழாம்நூற்றாண்டு முதலே ஐரோப்பிய சிந்தனையில் உருக்கொண்டு வளர்ந்து வந்த ஒன்று. காந்திய சிந்தனையின் தொடக்கப்புள்ளிகளில் ஒன்றாக தல்ஸ்தோயின் தரிசனம் இருந்தது என்பது நாமறிந்ததே.
தல்ஸ்தோயின் தனிவாழ்க்கையில் இதற்கு நேர் எதிரான உத்வேகங்கள் அவரைத் துரத்தின. தன் வாழ்க்கையின் கடைசிநாள் வரை அவருக்குக் காமம் தேவைப்பட்டது. தன் தீவிரமான பாலியல் வேட்கையுடன் ஓயாது போராடினார் தல்ஸ்தோய். தன் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் கட்டற்ற பிரியம் கொண்டிருந்தார். அவரது மனைவி சோஃபியா அலக்ஸாண்டிரவ்னா அவரைத் தன் காமத்தால், பிரியத்தால், உணர்ச்சிகரமான தீவிரத்தால், பிடிவாதத்தால், கட்டற்ற உலகியல் வேட்கைகளால் முழுமையாகவே கட்டிப்போட்டிருந்தார்.
இந்த இருமைநிலை காரணமாக தல்ஸ்தோய் அவரது வாழ்க்கையின் இறுதிநாட்களில் தீவிரமான மனப்போராட்டங்களுக்கு ஆளானார். கடைசி இரு வருடங்களில் தன் மனைவியுடன் கொண்ட மோதலால் கடும் துயரமும் ஏமாற்றமும் அடைந்தார். அவரது கொள்கைநிலை சம்சாரத்தை முழுமையாகத் தாண்டிவிட்டிருந்தது. அவர் செய்ய வேண்டியிருந்தது குடும்பத்தையும் உறவுகளையும் துறந்து செல்லுதலே. அதைச் செய்யமுடியாமல் அவர் தன் மனைவியிடம் கட்டுண்டு கிடந்தார். அவளைத் துயரப்படுத்த, அவளிடமிருந்து துண்டித்துக்கொள்ல, அவரால் முடியவில்லை. தானும் வதைபட்டுப் பிறரையும் வதைத்தார்.

சோபியா டால்ஸ்டாயா
கடைசியில் அன்று தல்ஸ்தோய் அந்த முடிவை எடுத்தார். தன் மனைவியிடமும் குடும்பத்திடமும் இருந்து பிரிந்து தன் இல்லத்தை விட்டு வெளியேறினார். தெளிவான திட்டம் ஏதும் இல்லாமல் தெற்கு ருஷ்யாவுக்குப் பயணம் செய்தார். ஆனால் மிகமிகக் காலம்தாழ்ந்த முடிவு. அப்போது அவருக்கு வயது 81.இன்னொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் அளவுக்கு அவருக்கு உடல்நிலை இருக்கவில்லை. அஸ்டபோவோ ரயில் நிலையத்துக்கு வந்திறங்கிய தல்ஸ்தோய் அங்கே இருந்த ரயில்நிலைய விடுதியில் தங்கி நோயுற்று மரணமடைந்தார்.
தல்ஸ்தோய் வீட்டை விட்டு வெளியேறியதும் ரயில் நிலையத்தில் இறந்ததும் உலக அளவில் பெரும் முக்கியத்துவம் உடைய செய்திகளாக ஆயின. அவரது தரிசனத்துக்கு அடிக்கோடிடுவதாக அந்த மரணம் அமைந்தது. தல்ஸ்தோயின் கொள்கையும் அவரது மரணமும் ருஷ்ய அறிவுலகில் ஆழமான பாதிப்பைச் செலுத்தின. பின்னர் ருஷ்யாவில் மார்க்சிய சிந்தனைகள் எளிதில் வேரூன்ற தல்ஸ்தோய் ஒரு முக்கியமான காரணம் என்பதை மறுக்க முடியாது. அதை லெனின் அவர் கார்க்கியிடம் நிகழ்த்திய உரையாடலில் உணர்ச்சியுடன் குறிப்பிடுகிறார். தல்ஸ்தோயின் மரணம் மூலம் அவரது படைப்புகள் ருஷ்ய பாமரனுக்கு இன்னமும் நெருக்கமானவையாக ஆயின என்கிறார்.
தல்ஸ்தோயின் வரலாறு பலரால் எழுதப்பட்டுள்ளது. புல்ககோவ் 'தல்ஸ்தோயின் கடைசி வருடம்' என்ற நூலைஎழுதியிருக்கிறார். விக்டர் ஸ்கெலோவ்ஸ்கி [ Viktor Borisovich Shklovsky] எழுதி ராதுகா பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்ட ' லெவ் தல்ஸ்தோய்' நூல்தான் தல்ஸ்தோயின் வாழ்க்கையைப்பற்றிய விரிவான உள்தகவல்களுடன் எழுதப்பட்ட மிகச்சிறந்த நூல் என்பது என் எண்ணம். தமிழகத்தில் பரவலாக வாசிக்கப்பட்ட நூல்களில் ஒன்றும் கூட. தல்ஸ்தோயின் ஆன்மீக பரிணாமத்தையும் அதை ஒட்டித் தனிவாழ்க்கையில் வந்த அகக்கொந்தளிப்புகளையும் விரிவாக சித்தரிக்கும் இந்நூல் அவர் வெளியேற நேர்ந்த சூழலை ஒரு பேரிலக்கியத்தன்மையுடன் விவரிப்பதாகும்.

ஹெலென் மிரன், சோஃபியாவாக
தல்ஸ்தோய் தன் இறுதிக்காலத்தில் வீட்டை விட்டுச் சென்ற நிகழ்ச்சியை சித்தரிக்கும் The last station என்ற திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். ஜேய் பாரினி [Jay Parini] எழுதிய நாவலை ஒட்டி மைக்கேல் ஹாஃப்மான் [Michael Hoffman ]இயக்கத்தில் வெளிவந்துள்ள அமெரிக்கப் படம். ஸ்கொலோவ்ஸ்கியின் நூலுடன் ஒப்பிட்டு நிறுவப்பட்ட வரலாற்று உண்மைகளை வைத்துப்பார்த்தால் இந்தப்படம் தல்ஸ்தோயை அமெரிக்காவின் முதலாளித்துவ கோணத்தில் விளங்கிக்கொள்வதற்கான ஒரு முயற்சி. உண்மையை நோக்கி செல்வதற்குப் பதிலாக உண்மையைத் தனக்குச் சாதகமாக விளக்கிக்கொள்ளும் தன்மையே இதில் அதிகம்.
ஒரு படமாகப் பல வகையிலும் நிறைவளித்த ஆக்கம். முக்கியமாக தல்ஸ்தோய் ஆக நடித்த கிறிஸ்டோபர் பிளம்மர் [ Christopher Plummer]. தல்ஸ்தோய் மிக உயரமான பிரம்மாண்டமான ஆகிருதி கொண்ட மனிதர். அவரது கைகளும் முகமும் மிகப்பெரிய்வை. அவரே தன் சாயலில் படைத்த கதாபாத்திரமான போரும் அமைதியும் நாவலின் பியர் ஒரு ராட்சதனாகவே காட்டப்படுகிறான். வெறும் கையால் சுவரில் ஆணியை அடித்து இறக்க பியரால் முடியும் என்கிறார் தல்ஸ்தோய். ஒரு கட்டத்தில் ஒழுக்கமற்ற மனைவியான ஹெலென் மீது கடும் சினம் கொண்டபோது பியர் மிகப்பெரிய கல்மேஜை ஒன்றை அப்படியே தூக்கி வீசுகிறான். குலைநடுங்கிய ஹெலென் தப்பி ஓடுகிறாள்.
அத்தகைய தல்ஸ்தோயின் தோற்றத்துக்கு பிளம்மர் மிகச்சரியாகப் பொருந்துகிறார். பல படங்களில் டிராக்குலாவாக நடித்தவர் அவர் என்று தெரிந்தபோது ஒரு புன்னகை வருவதைத் தடுக்கமுடியவில்லை. தல்ஸ்தோயின் பெரிய கைகள் கொண்ட தோற்றம், சற்றே கூனலுடன் நடக்கும் நடை, அரைவார் பட்டையில் இரு கைகளையும் புகுத்திக்கொண்டு நிற்கும் தோரணை, சிரிப்பு ,பேச்சு எல்லாவற்றையும் அழகாக நடித்துக்காட்டியிருக்கிரார் பிளம்மர். எனக்கு ஒரு கோணத்தில் தல்ஸ்தோய் நித்ய சைதன்ய யதியை நினைவூட்டிக்கொண்டே இருந்தார்.
பிற கதாபாத்திரங்களையும் உண்மையான மனிதர்களின் சாயலிலேயே அமைத்திருப்பதை ஆச்சரியமென்றே சொல்லவேண்டும். தல்ஸ்தோயின் மனைவி சோபியா அலக்ஸாண்டிரவ்னா [ஹெலென் மிரன் . Helen Mirren] , அவரது பிரியத்துக்குரிய மாணவர் விளாடிமிர் செர்க்கோவ் [ பால் கியாமட்டி, Paul Giamatti ] ஆகியோரும் பெரும்பாலும் துல்லியமான முகச்சாயலுடன் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். [ஒருவேளை ருஷ்யர்களுக்கு நம்மை விட அதிகத் தோற்ற வேறுபாடு புலப்படலாம்.]
[image error]
விளாடிமிர் செர்க்கோவ்
சோபியா வாக நடித்துள்ள ஹெலென் மிர்ரன் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். பதினெட்டாம் நூற்றாண்டு பிரபுகுலச் சீமாட்டி ஒருவரின் நாசூக்கும் பெருமிதமும் கொண்ட நடவடிக்கைகளையும் சோபியாவின் அடம், கட்டுக்கடங்காத சீற்றம் எல்லாவற்றையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
தல்ஸ்தோயின் இரு பக்கங்களையும் தெளிவாக சித்தரித்துக்கொண்டு ஆரம்பிக்கிறது திரைப்படம். அவரது ஆன்மீகஞானத்தை அறிந்து அதை மட்டுமே காணக்கூடியவராக செர்க்கோவ் வருகிறார். வரலாற்றில் செர்க்கோவ் ஒரு 'தல்ஸ்தோயியன்' என தன்னை அறிவித்துக்கொண்டவர். தல்ஸ்தோய் முன்வைத்த உயர் இலட்சிய வாழ்க்கையைப் பரப்பத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். ருஷ்யாவில் தல்ஸ்தோய், செக்கோவ் போன்றவர்களின் நூல்களை மிகக்குறைவான விலையில் அச்சிட்டு மக்களிடையே பரப்பியவர்அவர்.
தல்ஸ்தோயிய கொள்கைகளில் முழுமையாக ஈடுபட்ட செர்க்கோவ் அதற்காக தல்ஸ்தோயிய கம்யூன் ஒன்றை அமைத்து நடத்தி வந்தார். தல்ஸ்தோயின் எழுத்துக்களை முழுக்க நாட்டுடைமையாக ஆக்கி அவற்றை அத்தனை மக்களுக்கும் இலவசமாகக் கொண்டுசென்று சேர்க்கவேண்டும் என்ற தீவிரத்துடன் இருந்தார்.
தன் வாழ்நாள் முழுக்க தல்ஸ்தோயிய நம்பிக்கையுடன் வாழ்ந்த செர்க்கோவ் பலவாறாக சிதறி, பலவகைப்பட்ட பாடபேதங்களுடன் கிடந்த தல்ஸ்தோயின் எழுத்துக்கள் சீராகத் தொகுக்கப்படவும் அவரது கருத்துக்கள் அனைத்து உலகமொழிகளிலும் சென்று சேரவும் பெரும் பங்காற்றியவர். கடைசிக்காலத்தில் தல்ஸ்தோய் முன்வைத்த கருத்துக்கள் அமைப்புக்கு எதிரான கலகக்குரலாக இருந்தமையால் செர்க்கோவ் அரசிடமிருந்தும் ருஷ்ய திருச்சபையிடமிருந்தும் கடுமையான எதிர்ப்புகளுக்கு ஆளானார். பலகாலம் ஜாரின் ருஷ்யாவில் இருந்து தப்பி இங்கிலாந்தில் தலைமறைவாக இருந்தார். ஆனாலும் அவர் தளராமல் தல்ஸ்தோய் தரிசனங்களை முன்னெடுத்தார்.
இடதுசாரி நம்பிக்கைகள் கொண்டிருந்த செர்க்கோவ் ருஷ்யப் புரட்சிக்குப்பின் ருஷ்யா திரும்பி தல்ஸ்தோயின் படைப்புகளுக்கு முழுமையான செம்பதிப்புகள் உருவாகக் கடைசிவரை உழைத்தார். தல்ஸ்தோயை ஒருபோதும் செர்க்கோவ் வணிகப்பொருளாக ஆக்கவில்லை. அவரை ஒரு நவீன ஞானியாக மட்டுமே எண்ணினார். அவரை உலகம் முழுக்கக் கொண்டுசெல்வதற்காக மட்டுமே உழைத்தார். செர்க்கோவ் தல்ஸ்தோயின் இலக்கியமதிப்பை அறிந்தவரல்ல, அவரது மெய்ஞானத்தை மட்டுமே பெற்றுக்கொண்டவர்.

பால் ஜியாமெட்டி,செர்க்கோவாக
ஆனால் செர்க்கோவ் நம்பிக்கையுடன் ஆரம்பித்த தல்ஸ்தோய் கம்யூன் சீக்கிரமே வீழ்ச்சி அடைந்தது. அதை அரசும் திருச்சபையும் அழித்தன என்று ஒரு பக்கம் சொன்னாலும் உயர்லட்சியங்களின்படி ஒரு அமைப்பை உருவாக்குவதென்பது எப்போதுமே தோல்வியடைகிறது என்பதையும் சேர்த்துக்கொண்டே அதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஆனால் பின்னாளில் ருஷ்யாவில் உருவான பொதுவுடைமைக் கம்யூன்கள் பலவற்றுக்கு தல்ஸ்தோய் கம்யூன் பெரும் முன்னுதாரணமாக அமைந்தது என்பதை அதன் வரலாற்றுப்பங்களிப்பாகக் கொள்ளலாம். செர்க்கோவ் பின்னாளில் ருஷ்ய கம்யூனிச சமூக அமைப்புக்குப் பணியாற்றினார்.
நேர்மாறாக சோபியா தல்ஸ்தோயின் அகவாழ்க்கையை மட்டுமே அறிந்து அதனூடாக மட்டுமே தல்ஸ்தோயை மதிப்பிடக்கூடியவராக இருந்தார். ஸ்கெலோவ்ஸ்கியின் நூலில் சோபியாவின் குணச்சித்திரம் மிக விரிவாக வருகிறது. பிரபுகுலத்தில் பிறந்து, நுண்கலைகள் நாகரீகநடத்தைகள் உயர்குடிப்பாவனைகள் வழியாகவே வளர்ந்து முதிர்ந்த சோபியா தல்ஸ்தோய் நம்பிய எதையும் ஏற்றுக்கொண்டவரே அல்ல. விவசாயிகளை ஒழுக்கமற்ற, அழுக்கான மக்கள் என்றும் அரைமிருக வாழ்க்கை வாழ்பவர்கள் என்றும் அன்றைய ருஷ்ய நிலப்பிரபுக்களைப் போலவே அவரும் நம்பினார். அவர்கள் கடுமையாக உழைக்க வைக்கப்பட்டுக் குறைவான ஊதியத்துடன் கட்டுப்படுத்தப்பட்டால் மட்டுமே ஒழுங்காக இருப்பார்கள், இல்லையேல் அது அவர்களுக்கே நல்லதல்ல என அவர் நினைத்தார். அவர்களுக்கு நிலம் கொடுக்கப்பட்டால் அவர்கள் அதை குடியிலும் விபச்சாரத்திலும் அழிப்பார்கள் என்று வாதாடினார்
ஆகவே இயற்கையுடன் போராடிப்போராடி ருஷ்ய விவசாயி பெற்ற ஆன்ம பலம், மண்ணுடன் அவனுக்கிருக்கும் தெய்வீகமான உறவு ஆகியவற்றைப்பற்றி தல்ஸ்தோய் கொண்டிருந்த மதிப்பைத் தன் கணவரின் ஒரு வகை அசட்டுத்தனம் என்றே சோபியா கருதினார். ருஷ்ய பழமைவாத திருச்சபையின் தீவிர நம்பிக்கையாளராக இருந்த சோபியா அதன் ஆடம்பர திருப்பலிகள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றில் மிகவும் ஈடுபட்டு வந்தார். 'ஏழைகளின் ஏசு' என்ற தல்ஸ்தோயின் நம்பிக்கையைத் திருச்சபைக்கு எதிரான ஒரு அவமதிப்பாகவே சோபியா எடுத்துக்கொண்டார்.
சோபியா தன் குடும்பத்தைப்பற்றி மட்டுமே கவலைப்பட்டார். தல்ஸ்தோய் குடும்பம் பாரம்பரியம் மிக்கது. ஆனால் அன்றைய ஜார் ஆட்சியில் பலவகையிலும் சேவையாற்றிப் பிற பிரபுக்கள் மேலே சென்றுகொண்டிருந்தபோது தல்ஸ்தோய் குடும்பம் அத்தகைய பொருளியல் வெற்றியை, அதிகாரத்தை அடையவில்லை என்ற கவலை அவருக்கிருந்தது. அவர் தன் மகன்களின் எதிர்காலத்தைப்பற்றிப் பெரிதும் கவலைகொண்டிருந்தார். தல்ஸ்தோயின் வாரிசுகளில் கடைசி மகளான அலக்ஸாண்டிரா அல்லது சாஷா மட்டுமே ஒரு இலக்கியவாதியாக, ஞானத்தேடல்கொண்டவராக தல்ஸ்தோயின் மதிப்பை அறிந்திருந்தார்.

விளாடிமிர் புககோவ், தல்ஸ்தொயுடன்
மகன்களுக்கு தல்ஸ்தோயின் இலக்கியம் மீது அறிமுகமோ மரியாதையோ இல்லை. அவர் மீது தனிப்பட்ட முறையிலும் அவர்கள் நன்மதிப்புடன் இருக்கவில்லை. குறிப்பாக மூத்தமகன் செர்ஜி சூதாடியாகவும் குடிகாரனாகவும் இருந்தார். சில சீமாட்டிகளுடன் அந்தரங்க உறவுகளில் திளைத்த தல்ஸ்தோயின் இன்னொரு மகன் லேவ் தல்ஸ்தோய் தந்தையைக் கடுமையாக வெறுத்து நிராகரித்தார். . சோபியாவுக்கு நெருக்கமான மகனாக இருந்தவர் அவரே. சோபியாவை கடைசிக்காலத்தில் பின்னின்று இயக்கியதும் அவரே.
இந்நிலையில் சோபியா தல்ஸ்தோயின் எழுத்துக்களை ஒரு முக்கியமான சொத்தாக நினைத்தார். உண்மையில் ஐரோப்பாவெங்கும் உடனடியாக மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல லட்சம் மக்களால் விரும்பி வாசிக்கப்பட்டுவந்த தல்ஸ்தோய் நாவல்கள் தல்ஸ்தோயின் குடும்ப சொத்துக்களைவிடப் பற்பல மடங்கு அதிக செல்வத்தை ஈட்டித்தருபவையாக இருந்தன. சோபியா உண்மையில் தல்ஸ்தோயின் அந்த செல்வத்தின் மீது மட்டுமே ஆர்வம் கொண்டிருந்தார்.தல்ஸ்தோய் மீது தன் குழந்தைகளின் தந்தை, தன் கணவர், ஆகவே தனக்கும் தன் குடும்பத்திற்கும் மட்டுமே உரியவர், என்ற அளவில் மட்டுமே ஈடுபாடு கொண்டிருந்தார். வாழ்க்கையின் கடைசிக்காலகட்டத்தில் தல்ஸ்தோய் மீது வேறு எவ்வகையான அன்பையும் கனிவையும் சோபியா காட்டவில்லை. சொல்லப்போனால் தல்ஸ்தோய் விரைவில் இறந்து விடவேண்டும் என்றே சோபியா விரும்பினார்.
சோபியா இலக்கியத்தை சமூக மாற்றத்துக்கான வழியாக நினைக்கவில்லை. ஏழை எளிய மக்களுக்கும் இலக்கியத்திற்கும் சம்பந்தமில்லை என்ற எண்ணம் கொண்டிருந்தார். அதே சமயம் மிகச்சிறந்த வாசகி. தல்ஸ்தோயை அவர் மணம் செய்யும்போது தல்ஸ்தோய் எழுதிய அனேகமாக எல்லா ஆக்கங்களையும் வரிக்குவரி வாசித்து நினைவில் வைத்திருந்தார். தல்ஸ்தோயை சோபியா கவர்ந்தமைக்கு முக்கியமான காரணமே அந்த இலக்கிய ஆர்வம்தான். காதல் நாட்களில்தான் தல்ஸ்தோய் போரும் அமைதியும் நாவலை எழுதிக்கொண்டிருந்தார். அந்த ஒட்டுமொத்த நாவலையும் சோபியா ஆறுமுறை கையால் திருப்பித்திருப்பிப் பிரதி எடுத்திருக்கிறார்.
ஆனால் சோபியா தல்ஸ்தோய் படைப்புகளில் உள்ள மொழியழகு, விவரணை நுட்பம், கதாபாத்திரங்களின் சிக்கலான குணச்சித்திரம், நிகழ்ச்சிகள் பின்னிச்செல்லும் பிரம்மாண்டம் ஆகியவற்றை மட்டுமே ரசித்தார். அவரைப்பொறுத்தவரை இலக்கியமென்பது பிற நுண்கலைகளைப்போல இத்தகைய கூரிய ரசனைக்குரிய ஒரு கலைவடிவம் மட்டுமே. இசைநிகழ்ச்சிகள் எப்படி பிரபுகுல வீடுகளில் நிகழ்கின்றனவோ, இசைக்கலைஞர்கள் எப்படிப் பெரும் செல்வத்தை ஈட்டுகிறார்களோ அப்படியே இலக்கியமும் செல்வமீட்ட வேண்டும் என அவர் நினைத்தார்.
'கடைசி நிலையம்' செர்க்கோவுக்கும் சோபியாவுக்குமான இந்த முரண்பாட்டை முன்வைத்தபடி ஆரம்பிக்கிறது. செர்க்கோவ், வாலண்டின் புல்ககோவ் என்ற இளம் எழுத்தாளரை தல்ஸ்தோயின் செயலராக நியமிக்கிறார். புல்ககோவ்,தல்ஸ்தோயின் அகிம்சை, எளியவாழ்க்கை போன்ற கொள்கைகளைப் பரப்புவதற்காக வாழ்நாளெல்லாம் போராடியவர். காந்தியுடன் தொடர்பு கொண்டிருந்தவர். புரட்சியின்போது ருஷ்யாவிலிருந்து வெளியேறினார். பின்னர் ருஷ்யா சென்று தல்ஸ்தோயின் யாஷ்னா பல்யானா மாளிகையில் தங்கி அவரது நூல்களையும் கடிதங்களையும் சீர்ப்படுத்தி வெளியிடுவதில் முழு வாழ்க்கையையும் செலவிட்டார்.
திரைப்படத்தின் தொடக்கத்தில் செர்க்கோவ் வீட்டுச்சிறையில் இருக்கிறார். மாஸ்கோவிலும் தல்ஸ்தோயின் சொந்த ஊரான டுலாவிலும் தல்ஸ்தோயிய கம்யூன்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. கல்லூரிப்படிப்பை விட்டுவிட்டு எழுத்தாளனாக அறிமுகமாகியிருக்கும் புல்ககோவ் செயலராகப் பணியாற்ற வருகிறார், தல்ஸ்தோயின் கருத்துக்களை வாழ்க்கையாக ஏற்றுக்கொண்ட புல்ககோவ் உடைமையற்ற வாழ்க்கை, போகமறுப்பு ஆகியவற்றைக் கடைப்பிடிப்பவர். தல்ஸ்தோயை சந்திக்கும்போது தல்ஸ்தோய் அவரது நூலை வாசித்திருப்பதாகச் சொல்லக்கேட்டு மனம் நெகிழ்ந்து கண்ணீர் சிந்துகிறார்.
புல்ககோவ் தல்ஸ்தோயின் இல்லமான யாஷ்னா பல்யானாவுக்கு வரும்போது தல்ஸ்தோய்க்கும் சோபியாவுக்குமான முரண்பாடு உச்சமடைந்திருக்கிறது. சோபியா தல்ஸ்தோயின் நூல்களுக்கான மொத்த பதிப்புரிமையையும் அவர் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் எழுதிவைக்கவேண்டுமென விரும்புகிறார். அதற்காக தல்ஸ்தோயைக் கட்டாயப்படுத்துகிறார். சோபியாவை ஊதாரியும் அதிகார மோகம் கொண்டவனுமாகிய மகன் லேவ் தூண்டி விடுகிறான். சோபியா தல்ஸ்தோயை உணர்வு ரீதியாகத் தாக்குகிறார். அன்பு காட்டுகிறார், கெஞ்சி அழுகிறார், வெறிகொண்டு கத்திக் கூச்சலிட்டு அவரைப் பொறுமையின் விளிம்புக்குத் தள்ளுகிறார்.
செர்க்கோவ் புல்ககோவிடம் சோபியா செய்வதை எல்லாம் ஒரு நாட்குறிப்பில் பதிவுசெய்து தனக்கு அளிக்கவேண்டும் என்று கோரி அனுப்பியிருக்கிறார். ஆனால் யாஷ்னா பல்யானாவுக்கு வந்ததும் சோபியா புல்ககோவை இனிய, நேர்மையான இளைஞராக அடையாளம் கண்டுகொண்டு இன்னொரு நாட்குறிப்பேட்டைக் கொடுத்து செர்க்கோவ் செய்வதை எல்லாம் பதிவுசெய்து அளிக்க வேண்டும் என்று கோருகிறார். இரு தரப்புகளுக்கும் நடுவே, இரு தல்ஸ்தோய்களுக்கும் நடுவே, புல்ககோவ் மாட்டிக்கொள்கிறார்.
செர்க்கோவ் , தல்ஸ்தோய் ஒரு உயில் மூலம் அவரது மொத்த எழுத்துக்களையும் ருஷ்ய மக்களுக்காக எழுதி வைக்கவேண்டும் என்று கோருகிறார். செர்க்கோவை ஏமாற்றுக்காரன், பொறுக்கி, முகஸ்துதி மூலம் கிழவரை மயக்கி சொத்துக்களை அபகரிக்க முயல்பவர் என்று சோபியா குற்றம்சாட்டிக்கொண்டே இருக்கிறார். செர்க்கோவ் சோபியா தல்ஸ்தோயின் வாழ்க்கையை நரகமாக்குவதாகவும், அவரை எழுதவோ சிந்திக்கவோ விடாமல் செய்வதாகவும், தன் மனைவி அப்படிச் செய்தால் அவளை விட்டு ஐரோப்பாவுக்கு ஓடிப்போவேன் அல்லது மண்டையில் சுட்டுக்கொள்வேன் என்றும் சொல்கிறார்.

விக்டர் ஸ்ஹொகலாவ்ஸ்கி
உண்மையில் சோபியாவால் தல்ஸ்தோய் பற்றிப் பிறர் கொண்டிருக்கும் மதிப்பை புரிந்துகொள்ளவே முடியவில்லை. 'நீங்கள் இவரை என்ன என்று நினைக்கிறீர்கள்? இவர் ஒரு கிறிஸ்து என்று சொல்கிறீர்கள். இவர் கிறிஸ்து அல்ல என எனக்குத் தெரியும்' என்கிறார். 'ஆம்,அவர் கிறிஸ்து அல்லதான், ஆனால் ஒரு ஞானி' என்று செர்க்கோவின் ஆதரவாளரான டாக்டர் செர்ஜியெங்கோ சொல்கிறார். சோபியா நக்கலாகச் சிரிக்கிறார். அவர்கள் சொத்துக்களுக்காகப் பசப்புகிறார்கள் என நினைக்கிறார்.
உண்மையில், சோபியா தன்னை தல்ஸ்தோய் அளவுக்கே முக்கியமான எழுத்தாளராக நினைத்தார். பின்னர் வெளியான பல கடிதங்களில் அவர் எழுதப்போகும் நாவல்களை தல்ஸ்தோய் எழுதிய நாவல்களை விட மேலானவையாக, உலகப்புகழ்பெறப்போகின்றவையாக சொல்லியிருக்கிறார் என்பதை நாம் ஸ்கெலோவ்ஸ்கியின் நூலில் வாசிக்கலாம் . தல்ஸ்தோயின் நாவல்கள் எல்லாம் தன்னால் செம்மைப்படுத்தப்பட்டமையால்தான் உலகப்புகழ்பெற்றன, ஆகவே அவற்றில் தனக்கும் முக்கியமான பங்கு உண்டு எனக் கருதினார்.
ஆனால் சோபியா எழுதிய கடிதங்கள் அவருக்கு அன்றைய ருஷ்ய உயர்குடிகள் கையாண்ட செயற்கையான சம்பிரதாய பாவனைகளும் ஆடம்பரமான சொல்லாட்சிகளும் கொண்ட அசட்டு நடை மட்டுமே கைவரும் என்று மட்டுமே காட்டுகின்றன. ஆக, பிரச்சினை சோபியாவால் தல்ஸ்தோயின் உண்மையான மதிப்பைப் புரிந்துகொள்ளமுடியவில்லை, அதற்கு அவரது அறியாமையின் விளைவான ஆணவம் தடையாக நின்றது என்பதுதான் . இதை இத்திரைப்படம் காட்டாமல் விட்டு விட்டது.
இத்திரைப்படம் காட்டும் சித்திரம் இது. செர்க்கோவின் கோரிக்கையின்படி தல்ஸ்தோய் அவரது நூலின் உரிமையை ருஷ்ய மக்களுக்கு எழுதி வைக்கிறார். பின்னாளில் சில அமெரிக்க எழுத்தாளர்கள் சொன்னது போல செர்க்கோவின் பெயருக்கு அல்ல, இலவசப்பதிப்புகளாக வெளியிடும் உரிமை மட்டுமே செர்க்கோவுக்கு அளிக்கப்பட்டது. தன்னுடைய நிலங்களை விவசாயிகளுக்கு அளிக்க அவர் ஆசைப்பட்டாலும் சோபியாவின் எதிர்ப்பால் அது கைகூடவில்லை. தல்ஸ்தோய் எழுதிய உயிலை வாசிக்க நேர்ந்த சோபியா கடும் கோபம் கொள்கிறார். தல்ஸ்தோய் தனக்குப் பெரும் அநீதி இழைத்துவிட்டதாகச் சொல்கிறார். தற்கொலைசெய்து கொள்வதாக மிரட்டுகிறார். தீவிரமான ஒரு மோதலுக்குப்பின் தல்ஸ்தோய் யாஷ்னா பல்யானாவை விட்டு வெளியேறுகிறார். புல்ககோவிடம் சோபியாவுக்கு ஒரு கடிதத்தை கொடுத்துச் செல்கிறார். தன்னைத்தேடவேண்டாம் என்றும், திரும்பி வரப்போவதில்லை என்றும் குறிப்பிடுகிறார்
செல்லும் வழியில் தல்ஸ்தோய் மகள் அலக்ஸாண்டிரா அல்லது சாஷாவை மட்டும் கூடவே அழைத்துக்கொள்கிறார். அவரது அந்தரங்க மருத்துவர் கூடவே இருக்கிறார். அவர்கள் தெற்கு மாகாணத்துக்குச் செல்கிறார்கள். தல்ஸ்தோய்க்கு எங்கே செல்வது என்ற திட்டமேதும் இல்லை. வழியில் நோய்வாய்படுகிறார். காய்ச்சல் இருக்கிறது. நுரையீரல் பாதிக்கப்பட்டிருக்கிறது. ரயில்நிலையத் தங்கும் அறையில் அவரை வைத்திருக்கிறார்கள். செர்க்கோவைப் பார்க்க தல்ஸ்தோய் ஆசைப்படுகிறார். செர்க்கோவ் வருகிறார். அவரிடம் தான் விடைபெற்றுக்கொள்வதாகவும் தன் நம்பிக்கைகளை செர்க்கோவ் முன்னெடுக்கவேண்டும் என்றும் , சோபியாவுக்கு அவர் அங்கிருப்பது தெரிந்தால் தேடிவந்துவிடுவார் என்றும் அவரைப்பார்க்க விரும்பவில்லை என்றும் சொல்கிறார்
உலகம் முழுக்க இருந்து செய்தியாளர்கள் வந்து அந்த ரயில்நிலையம் முன்னால் கூடுகிறார்கள். தல்ஸ்தோயின் மரணம் அனேகமாக உறுதியாகி விட்டிருக்கிறது. அவர் சொத்துக்களை உதறியது பற்றிய விவாதம் ஊடகங்களில் நிகழ்கிறது. அப்போது சோபியா வந்துசேர்கிறார். ருஷ்ய பாரம்பரிய திருச்சபையின் பாதிரியாரையும் கூட்டி வருகிறார். ஆனால் அவரைச் சந்திக்க தல்ஸ்தோய் விரும்பவில்லை என்று செர்க்கோவ் தெரிவிக்கிறார். தனக்கு தல்ஸ்தோய் மேல் உரிமை உண்டு என்று சோபியா கத்துகிறார். 'இல்லை, அவர் உங்களை அழைக்கவில்லை. செர்க்கோவைத்தான் வரச்சொன்னார்' என்று தல்ஸ்தோயின் மகளே சொல்ல சோபியா திரும்புகிறார். அருகிலேயே ஒரு அறையில் தங்கியிருக்கிறார்
மறுநாள் தல்ஸ்தோய் உடல்நிலை மேலும் மோசமடைகிறது. சோபியா வந்து தல்ஸ்தோயைச் சந்திக்கிறார். தல்ஸ்தோய் நினைவிழந்த நிலையில் இருக்கிறார். தல்ஸ்தோய் அருகே அமரும் சோபியா தன்னை மன்னிக்கும்படி கோருகிறார். தன்மேல் பிரியம் இருக்கிறதா என்று சோபியா கேட்க 'ஆமாம்' என்று தல்ஸ்தோய் சொல்வது அவள் இதயத்துக்குக் கேட்கிறது. 'கடைசிவரை அன்பிருக்கிறதா ? ' என்று சோபியா கேட்க தல்ஸ்தோய் 'கடைசிவரை' என்று பதில் சொல்கிறார். தல்ஸ்தோய் உயிர் பிரிகிறது. சோபியா துயரத்துடன் ரயிலில் திரும்பிச்செல்கிறார்.
துல்லியமான ஆவணத்தன்மையுடன் அதேசமயம் உத்வேகமான நாடகத்தருணங்கள் வழியாக நகரும் இந்தத் திரைப்படம் பலவகையிலும் என்னைக் கவர்ந்தது. கண்முன் வரலாறு ஓடிச்செல்லும் அனுபவத்தை அளித்தது. என் ஆதர்சமான தல்ஸ்தோயை நேரில் பார்த்துக்கொண்டிருப்பதாகவே உணர்ந்தேன். கிழவரின் நகைச்சுவை [நான் சொல்வதை நம்பவேண்டாம், நான் தல்ஸ்தோய்வாதி இல்லை] உணர்ச்சிகரத்தன்மை எல்லாமே அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வரலாற்றைப் புனைவாக்கும்போது நாம் இன்றைய மதிப்பீடுகளை அதன் மேல் ஏற்றுகிறோம், அது இயல்பும்கூட. இந்தப்படம் சமகால அமெரிக்க- ஐரோப்பிய நோக்கில் அமைந்தது. தல்ஸ்தோய் பற்றி ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பலவகையான கசப்புகளும் அவதூறுகளும் திரிபுகளும் உண்டு. அவற்றின் பின்னணியிலேயே நாம் இந்தப் படத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்.
தல்ஸ்தோயை கம்யூனிச ருஷ்யா அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட இலக்கியப்பதாகையாக ஆக்கிக்கொண்டது. அவரது கொள்கைகள் கம்யூனிசத்துக்கான முதல் திறப்புகளாக முன்வைக்கப்பட்டன. இதற்கு எதிர்வினையாக ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தல்ஸ்தோயைக் குறைத்து மதிப்பிடும் விமர்சனங்கள் ஏராளமாக எழுந்து வந்தன. தல்ஸ்தோயின் கொள்கைகளும் நம்பிக்கைகளும் கிறுக்குத்தனமானவை, சுய ஏமாற்றுத்தன்மை கொண்டவை, நடைமுறைப்பார்வையற்றவை எனத் திரும்பத்திரும்ப எழுதப்பட்டது. தல்ஸ்தோயியர்கள் கனவுஜீவிகள் அல்லது மோசடியாளர்கள் என வசைபாடப்பட்டார்கள். அதற்கேற்ப,செர்க்கோவ் உள்ளிட்ட தல்ஸ்தோயியர்கள் இடதுசாரி சிந்தனைகளை ஏற்றுக்கொள்பவர்களாக மாறிவிட்டிருந்தார்கள்.
இரண்டாவதாக, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள கத்தோலிக்க எழுத்தாளர்கள் தல்ஸ்தோயைக் கடுமையான கத்தோலிக்க எதிர்ப்பாளர் என அடையாளம் கண்டார்கள். ஆகவே அவரது கிறிஸ்து பற்றிய விளக்கங்களையும், இயற்கைவாழ்க்கை நோக்கையும் , உடைமை மறுப்பையும் அவர்கள் போலித்தனம் என்று முத்திரை குத்தினார்கள்.
இந்த எதிர்ப்புகள் கீழ்மட்டத்தில் அப்பட்டமான வெறுப்புடன் முன்வைக்கப்பட்டாலும் மேல்மட்டத்தில் நுட்பமான இலக்கியதந்திரங்களுடன் கலந்து முன்னெடுக்கப்பட்டது. தல்ஸ்தோயை சுயஏமாற்றுக்காரர் என்று காட்ட தஸ்தயேவ்ஸ்கியை நேர்மையான அப்பட்டமான பெரும்கலைஞர் என ஒரு படி மேலே தூக்குவது அதில் முக்கியமான உத்தி. தல்ஸ்தோயின் பலவீனங்களை ஒன்றுவிடாமல் கணக்கிட்டுப் பார்ப்பவர்கள் தஸ்தயேவ்ஸ்கியின் பலவீனங்களை கணக்கில்கொள்வதில்லை. தல்ஸ்தோய் தன் பிழைகளையும் பலவீனங்களையும் அப்பட்டமாக வாக்குமூலமிட்டார் என்பதையும் தஸ்தயேவ்ஸ்கி அப்படி செய்யவில்லை என்பதையும்கூட அவர்கள் பொருட்படுத்தவில்லை.
அத்
காந்தியின் எதிரிகள்
அன்புள்ள ஜெ,
உங்கள் காந்தி பதிவை கண்டதுமே உடனே எழுத ஆரம்பித்தேன். நீண்டநாளாகவே எழுத நினைத்து ஒத்திப்போட்டுக்கொண்டே வந்த கடிதம்தான். எழுத நினைத்து பாதிஎழுதி விட்டுவிடுவேன். எனக்கு கம்ப்யூட்டரிலே அதிகமாக எழுதி பழக்கமில்லை. ஆனால் எட்டுவருஷங்களாக உங்களை விடாமல் படித்து வருகின்றேன்.இந்த விஷயங்களைப்பற்றி நாம் நிறைய பேசியிருக்கின்றோம். நான் உங்களுக்கு கடிதங்கள் எழுதியிருக்கின்றேன். ஞாபகமிருக்கலாம்.
காந்தியைப்பற்றிய மட்டம்தட்டிய எழுத்துக்கு பதில் சொல்கிறீர்கள். நீங்கள் இரண்டுவருடங்களாகவே இதனை சலிப்படையாமல் செய்து வருகின்றீர்கள். நான் தொடர்ந்து காந்தியைப்பற்றி ஆர்வத்துடன் வாசித்துவந்தவகையிலே இப்போது எனக்கு சில தெளிவுகள் உள்ளன. அதைச் சொல்லவிரும்புகின்றேன். பொறுத்தருள்க.
காந்தியை எதிர்ப்பவர்கள் எல்லாம் யார் யார் என்று சிந்தித்துப் பாருங்கள். முஸ்லீம்கள் காந்தியை எதிர்க்கின்றார்கள் இன்றையதினம் என்று பொதுவாக பலர் நம்புகின்றார்கள். ஆனால் அவர்கள் அப்படி பெரிய வெறுப்புடன் இல்லை என்றே நினைக்கின்றேன். அவர்கள் முஸ்லீம் அல்லாத ஒருவரை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். முற்போக்கு முஸ்லீம்கள்கூட இந்த மத அடிப்படையையை விட்டுவிட மாட்டார்கள். அது அவர்களின் மதநம்பிக்கை. அவ்வளவுதான். அவர்களிடம் விவாதிக்க முடியாது.
இடதுசாரிகள் காந்தியை புரிந்துகொள்ளவில்லை என்று நான் நினைக்கின்றேன். நான் இடதுசாரி எண்ணம் கொண்டவன் என்றும் களச்செயல்பாட்டில் இருப்பவன் என்றும் உங்களுக்கு தெரியும். ஆனால் இடதுசாரிகள் எங்கெல்லாம் காந்தியை புரிந்துகொண்டிருக்கின்றார்களோ அங்கேல்லாம் ஏற்றுக்கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆரம்பகாலத்தில் காந்தியைப்பற்றி இருந்த கசப்பு அவர்களுக்கு இன்று இல்லை. அவர்களில் கொஞ்சம் வாசிக்கவும் சிந்திக்கவும்கூடியவர்கள் இன்றைக்கு வேறுமாதிரி சிந்திக்கின்றார்கள். திராவிட இயக்க மனநிலையை இடதுசாரித்தனமாக உருவம் மாற்றி காட்டும் சிலரே காந்தியை இடதுசாரியாக நின்று வசைபாடுகின்றார்கள். இன்றைக்கு இடதுசாரிகளின் போராட்டவழிகள் காந்திய வழிகளாகவே உள்ளன. காந்தியின் பொருளாதாரக் கொள்கையை இடதுசாரிகள் கொள்கை அடிப்படையில் நிராகரித்தாகவேண்டியிருக்கிறது.
திராவிட இயக்கத்தினர் காந்தியை வெறுக்கின்றார்கள். அவர்களுடைய அரசியல் என்பதானது இனவாதம் மற்றும் சாதியவாதம் சார்ந்த அரசியல். அதற்கு காந்தி எதிரி. ஆகவே அவர்கள் காந்தியை எதிர்த்துத்தான் ஆகவேண்டும். அவர்களால் காந்தியை சும்மா திட்டத்தான் முடியும். அவதூறாக எதையாவது எழுதுவார்கள். மற்றவர்கள் சொல்வதை தாங்களும் சொல்வார்கள்.
தலித் இயக்கத்தினரின் காந்தி வெறுப்பு அம்பேத்கரிடம் இருந்து வந்தது. அம்பேத்கர் காந்திக்கும் காங்கிரஸுக்கும் எதிராக பிரிட்டிஷாரால் அரசியலுக்குக் கொண்டுவரப்பட்டவர் என்பது ஒரு வரலாற்று உண்மை. ஆகவே அவர் காந்தியை எதிர்த்தார். ஆனால் அதே காந்தியால்தான் அவர் இந்திய சட்ட அமைச்சரானார். தலித்துக்களுக்கு இன்று கிடைக்கும் இட ஒதுக்கீட்டை அளித்தார். அம்பேத்கருக்கு அதற்கான ஆதரவை காங்கிரஸ் அளித்ததற்கு காந்தியே காரணம்.
இன்றைக்கும் பெரும்பாலான இந்திய தலித்துக்கள் காங்கிரஸின் ஆதரவாளர்கள். அவர்கள் காங்கிரஸை நம்புவதற்கு காரணம் அவர்களுக்கு காந்தி மேல் உள்ள நம்பிக்கை. அவர்களை காங்கிரசில் இருந்து பிரிக்கும் எண்ணத்துடன் தலித் அரசியல்வாதிகள் காந்தியை எதிர்த்து கொச்சைப்படுத்துகின்றார்கள். அதற்கு 1935ல் அம்பேத்கர் எழுதிய வரிகளை தந்திரமாக பயன்படுத்துகின்றார்கள். இதையெல்லாம் நீங்களும் எழுதியிருக்கின்றீர்கள்.
இதெல்லாமே அரசியல். அரசியலில் எல்லா தரப்பும் இருக்கத்தான் செய்யும். இவை எல்லாம் வெளிப்படையாகவே உள்ளன. வெளிப்படையாக இல்லாமல் இரு காந்திய எதிர்ப்பு சக்திகள் உள்ளன. அவர்கள்தான் எல்லாவற்றையும் தூண்டிவிடுகின்றார்கள். அவர்களைப்பற்றித்தான் நாம் கவனமாக இருக்கவேண்டும்.
முக்கியமான சக்தி கிறிஸ்தவ சக்தி. காந்தி மீதான அவதூறுகளை அதிகமாக உருவாக்கக்கூடியவர்கள் அவர்கள்தான். இங்கே காந்தியை அவதூறு செய்யும் திராவிட இயக்கங்களும் தலித் இயக்கங்களும் கிறிஸ்தவர்களின் கருத்துக்களையே சொல்கிறார்கள். அதற்காக பெரிய அளவிலே நிதியுதவியும் பெறுகிறார்கள். இங்கே உள்ள எல்லா என்.ஜி.ஓக்களும் காந்தியை வெறுக்கவே சொல்லிக்கொடுக்கின்றன தெரியுமா? களத்தில் இறங்கினால் அதை காண்பீர்கல். காந்தியை கேவலமாக அவதூறு செய்து எழுதிய எஸ்.வி.ராஜதுரையின் புத்தகங்கள் எல்லாமே கிறிஸ்தவ அமைப்புகளின் நிதியுதவியுடன் வெளியிடப்பட்டவை.
ஏன் இதை செய்கின்றார்கள்? ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் இருநூறு முந்நூறு வருடக்காலமாக இந்தியா மீது சொல்லிவரும் குற்றச்சாட்டுகள் சில உண்டு. இந்தியா பிற்பட்ட பண்பாடு கொண்டது என்று சொன்னார்கள். செத்து உறைந்துபோன நாகரீகம் கொண்டது இந்தியா என்றார்கள். இங்கே உள்ள மதம் காட்டுமிராண்டி வழிபாட்டு முறை கொண்டது என்றும் அதனால் இங்கிருந்து எந்த நவீன சிந்தனையும் உருவாகாது என்றும் சொன்னார்கள். இன்றைக்கும்கூட இந்தியாவைப்பற்றி எழுதும் வெள்ளைக்கார ஆய்வாளர்களிலே முக்கால்வாசிப்பேரின் உண்மையான நம்பிக்கை இதுதான்.
இந்தியாவை நாகரீகப்படுத்தியது பிரிட்டிஷ் ஆட்சியும் கிறித்தவ மதமும்தான் என்று இவர்கள் சொல்கின்றார்கள். இந்தியாவின் பண்பாட்டிலேயே ஏழைகளுக்கு உதவக்கூடிய மனிதாபிமானமும், சேவையும், ஜனநாயகப்பண்புகளும் கிடையாது என்கிறார்கள். பழங்குடிநம்பிக்கைகளும் மூர்க்கமான பூசலிடும் தன்மையும்தான் இங்கே உள்ளது என்று சொல்கிறார்கள். இதையே இன்றைக்கும் ஐரோப்பா முழுக்க பிரச்சாரம் செய்கிறார்கள்.
இந்தமாதிரி எதைச் சொன்னாலும் உடனே 'அப்படியானால் காந்தியைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?' என்றுதான் எதிர்கேள்வி கேட்பார்கள். இன்றைக்கு உலகத்துக்கே வழிகாட்டக்கூடிய சிந்தனையாளராக காந்தி இருக்கின்றார். நவீன ஜனநாயகம் என்றாலே முன்னுதாரணமான சிந்தனையாளர் காந்திதான். சுற்றுச்சூழல் சிந்தனைக்கே அவர்தான் முன்னோடி. அவரிடமிருந்தே அதிகாரப்பரவலாக்கம் பற்றிய சிந்தனைகள் ஆரம்பிக்கின்றன. அவர் எந்த ஐரோப்பிய மரபையும் ஏற்றுக்கொண்டவர் அல்ல. தன்னை ஹிந்து என்றும், பழைமையான இந்தியச் சிந்தனையை சேர்ந்தவர் என்றும் சொல்லிக்கொண்டவர்
ஆகவே காந்தியை கிறிஸ்தவ ஐரோப்பா மட்டம்தட்டுகிறது. அவர் போலியானவர் என்கின்றார்கள். அவர் உயிருடன் இருந்தபோதே அவர் மதவெறி கொண்டவர், இனவெறி கொண்டவர், நிறவெறி கொண்டவர் என்றெல்லாம் திரிபுகளை சொல்லிக்கொண்டே இருந்தார்கள். இன்றைக்கு காந்தி மிக அதிகமான முக்கியத்துவம் பெற்றிருப்பதனால் அவர்கள் இன்னும் அதிகமாக காந்தியை தூற்றுகின்றார்கள்.
அதற்கு சமானமாகவே காந்தியை வெறுக்கக்கூடியவர்கள் பிராமணர்கள். இதைத்தான் நீங்கள் பார்க்க மறுக்கிறீர்கள். அல்லது மழுப்பிக்கொண்டிருக்கின்றீர்கள். காந்தி ஒரு இந்து, ஆனால் பிராமணர் அல்ல என்பதுதான் இவர்களுக்குப் பிரச்சினை. அவர் தன்னுடைய குருவாக பிராமணர் எவரையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியாவில் உள்ள சங்கராச்சாரிகள் யாரையும் பொருட்டாகவே நினைக்கவில்லை. இந்த ஒரு காரணத்தால்தான் அவரை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்கள்.
இந்தியாவிலே பிராமணர்கள் பிராமணரல்லாத ஒருவரின் ஆன்மீக தலைமையை ஏற்றுக்கொண்ட சரித்திரமே கிடையாது என்பதை நீங்கள் கவனிக்கவேண்டும். விவேகானந்தர் மாதிரி காந்தியும் ஒரு பிராமணரை குருவாகச் சொல்லியிருந்தால் ஒருவேளை அரைமனதுடன் ஏற்றுக்கொண்டு வசைபாடாமல் இருந்திருப்பார்கள். பிராமணர்கள் விவேகானந்தரைக்கூட இரண்டாம் இடத்திலேதான் வைப்பார்கள் என்பதற்கு நீங்கள் பெ.சு.மணி போன்ற பிராமணவெறியர்களின் புத்தகங்களைபார்த்தால் அறியலாம்.
இந்துமதம் என்று சொல்லும்போது பிராமணர்கள் அதை இரண்டு பகுதிகளாகவே பார்க்கின்றார்கள். ஒன்று, வேதமும் வேதாந்தமும் கோயில்களும். அதெல்லாம் பிராமணர்களுக்கு சொந்தமானவை என்கின்றார்கள். இந்துமதத்தின் மற்ற சாதிகள் எல்லாருமே Shamanism தான் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள் என்று சொல்கின்றார்கள். ஆகவே ஒரு பிராமணரல்லாதவரை நவீன இந்து அடையாளமாக உலகம் நினைப்பது அவர்களுக்கு சகிக்க்கக்கூடியதாக இல்லை.
இப்படி பல்வேறு உள்நோக்கங்களுடன் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள்தான் நம்மிடம் அதிகம். காந்தியைப்பற்றி எழுதுபவர்களின் தர்க்கங்களை பார்க்கவேண்டியதில்லை, அவர்களுக்கு உள்ளே உள்ள நோக்கம் என்ன என்று மட்டும் பார்த்தால் போதும்.
காந்தி ஒரு மகான் என்று நான் நினைக்கவில்லை. அவருடைய தர்மகர்த்தா பொருளாதாரக் கொள்கை எல்லாமே ஒருவகை அசட்டு நம்பிக்கை ஆகும். ஆனால் இன்றைக்கு நாம் சர்வதேசமூலதனம் என்ற மிகப்பெரிய சக்தியை எதிர்த்து மக்கள் போராட்டங்களை எடுக்கவேண்டிய நிலைமையில் இருக்கின்றோம். அதற்கு நமக்கிருக்கும் முக்கியமான முன்னுதாரணம் காந்திதான்
நீங்கள் சொல்லி வருவதுபோல காந்தி மக்கள்போராட்டங்களை ஒருங்கிணைத்த விதமும் அவர் பொருளாதாரச் சுரண்டலை மக்களுக்கு புரியவைத்த முறையும் நாம் கவனிக்கவேண்டியவை. மார்க்ஸின் வரலாற்று அணுகுமுறையும் காந்தியின் போராட்ட அணுகுமுறையும் இணையவேண்டும். அரசாங்கத்தை புரிந்துகொள்ள மார்க்ஸையும் அதிகாரத்தை புரிந்துகொள்ள காந்தியையும் நாம் பயன்படுத்தவேண்டும். அதற்கு காந்தியை இடதுசாரிகள்தான் அவதூறுகளில் இருந்து மீட்டு எடுக்கவேண்டும்
செம்மணி அருணாச்சலம்
[சுருக்கப்பட்டது]
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
October 1, 2011
உப்பும் காந்தியும்
அன்புள்ள ஜெ.மோ. அவர்கட்கு,
உலகின் மிகப் பெரிய வேலி கட்டுரை மாபெரும் ஆச்சரியத்தை அளித்தது. அந்த வேலி எப்படி இருந்திருக்கும், அங்கே கால்நடைகள் என்ன செய்திருக்கும், அதை சுற்றி இருந்த காடு எப்படி இருந்திருக்கும் என்றெல்லாம் மனதில் ஓயாத கேள்விகள் எழுகின்றன. ஒரு மாக்ஸ்காம் வந்ததால் இதை அறிந்து கொள்ள முடிந்தது. இப்படி எதனை ஆச்சரியங்கள், விஷயங்கள் வரலாற்றின் பக்கங்களில் புதைந்து கிடக்கிறதோ?
கொங்கு வட்டாரத்தில் திருமண சடங்குகளில் உப்பு பிரதான இடம் வகிக்கிறது. நிச்சயம் செய்வதற்கு முன் கோவிலில் உப்பு, சக்கரையை ஒரு கூடை நிறைய வாங்கி மாப்பிள்ளை- பெண் வீட்டார் பரிமாறிக் கொள்வார்கள்.
ரகுநாதன்
கோவை
ஜெ,
உலகின் மிகப்பெரிய வேலி படித்தேன். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் ஒவ்வொரு கால கட்ட கோர முகமும் இப்போதுதான் புதிய ஆவண ஆதரங்களுடன் பேசப்படத்தொடங்கியுள்ளன. மதுஸ்ரீ முகர்ஜியின் சர்ச்சிலின் மறைமுகப்போர் இவ்வரிசையில் குறிப்பிடத்தக்க ஒரு புத்தகம். ஆனால் பொதுவில் இந்தியாவிலும் சரி, உலக அளவிலும் சரி இத்தகைய புத்தகங்கள் வெளிச்சம் போடப்படுவதே இல்லை. வலையுலகத்தில் மட்டுமே பேசப்படும் புத்தகங்களாகவே பெரும்பாலும் இவை இருக்கின்றன.
கல்வி, பிரசாரம், பிரித்தாளும் கொள்கை ஆகியவற்றால் உலகின் மிகப்பெரிய வேலியை உண்மையில் அவர்கள் இந்தியாவின் மனங்களில் உருவாக்கினார்கள். அதன் விளைவாக இந்திய சமுதாயப்பரப்பில் உருவான இடைவெளிகளில் வெகு கவனமாக தங்கள் அதிகாரத்தை நிரப்பி தம் ஆட்சிக்கான இடத்தை உறுதி செய்து கொண்டார்கள்.
விளைவாக, கொத்துகொத்தாக ஒருபகுதி மக்கள் செத்து மடிகையில் கூட பிரிட்டிஷ்கார்களுக்கு எதிராக பெரும் கலகம் என்பது முதல் இந்திய சுதந்திரப்போருக்குப்பின் இந்தியாவில் பெரிய அளவில் உருவாகவே இல்லை. இதன் உச்ச கட்டமாக இரண்டாம் உலகப்போரின்போது ஒரே வருடத்தில் சர்ச்சிலின் இனவெறிக்கு முப்பது லட்சம் வங்காள மக்கள் – பெரும்பாலானவர் ஏழை எளிய கிராம மக்கள்- ஒரே வருடத்தில் பலியானார்கள். கண்ணீரால் காத்த பயிர் என்று நான் எழுதிய சொல்வனக்கட்டுரையை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
அருணகிரி.
அன்புள்ள அருணகிரி,
மதுஸ்ரீ முக்கர்ஜியின் புத்தகத்தை ஒட்டி எழுதப்பட்டுள்ளவை ஆதாரபூர்வமானவை, வரலாற்றுபூர்வமானவை. பத்தொன்பதாம்நூற்றாண்டு பிரிட்டிஷ் இனவெறிக்கான ஆதாரங்கள் ஆஸ்திரேலியா முதல் ஆப்ரிக்காவரை உலகமெங்கும் பரவிக்கிடக்கின்றன. உலகவரலாற்றின் மோசமான இனவெறியர்களுள் ஒருவரான சர்ச்சில் ஒரு அசட்டு படைப்புக்காக இலக்கியத்துக்கான நோபல் பரிசைப்பெற்றதும் இனவெறியின் ஆதாரமேயாகும்
ஆனால் உங்கள் கட்டுரையில் 'காந்தியை சமாளிப்பது எளிது என்று நினைத்த பிரிட்டிஷார் சுபாஷை கண்டுதான் அஞ்சினர்' என்ற வகையிலான உங்கள் சொந்த வரிகள் வரலாற்றுப்பிரக்ஞையில்லாத எளிய முன்முடிவு மட்டுமே. நெடுங்காலமாகவே இதை உங்கள் தரப்பு சொல்லிவருகிறது. ஒரு தேசத்தின் பொதுக்கருத்து எவ்வாறு உருவாக்கப்படுகிறது, அது எப்படி அதிகார சக்தியாக ஆகிறது என்ற பிரக்ஞையேஇல்லாத 'அடிச்சா உட்டுட்டு ஓடிருவாங்க' என்ற வகை அரசியல் புரிதல் இது.
1918ல் காந்தி இந்தியா வந்தார். படித்த உயர்குடிகளின் அமைப்பாக இருந்த காங்கிரஸை இந்திய சாமானியர்களின் அமைப்பாக, போராடும் அமைப்பாக ஆக்கினார். மிதவாதி தீவிரவாதி பிரிவினையால் கிட்டத்தட்ட செயலற்றிருந்த காங்கிரஸ் அவர் தலைமையில் கோடானுகோடி பேர் பங்கெடுக்கும் மாபெரும் போராட்ட அமைப்பாக ஆகியது. 1925ல் அவர் காங்கிரஸை வழிநடத்த ஆரம்பித்தார். வெறும் இருபத்தைந்து வருடத்தில் அவர் இந்தியாவை சுதந்திரம் நோக்கி கொண்டுவந்தார்.
இந்தியாவின் பாதிப்பங்குத நிலம் அன்று மன்னராட்சியில் இருந்தது. மக்களில் பாதிப்ப்பேர் ராஜபக்தியில் மூழ்கிக் கிடந்தனர்.மிச்சநிலத்தில் பிரிட்டிஷ் பக்தி.1950களில்கூட சொந்த சிந்தனை, சொந்த அடையாளமில்லாமல், சொந்தமாக பெயர்கூட இல்லாமல் வாழ்ந்தவர்கள் இந்தியாவின் பாதிப்பங்கு மக்கள். அந்த மக்கள் திரளை காந்தி மக்களை அரசியல்படுத்தினார். ஜனநாயக உரிமைப்போராட்டத்தை கற்றுதந்தார். அவர்களுக்காக அவர்களே போராடவைத்தார். அதன்வழியாக பேதங்களை களைந்த நவீன தேசியப்பிரக்ஞை ஒன்றை உருவாக்கிக் காட்டினார்.
காந்தி 1918ல் ஆற்றீய முதல் உரையே இந்திய சுயராஜ்யம் பற்றித்தான். ஆனால் அவர் சௌரிசௌராவில் கற்றபாடத்தின் பின் மக்கள்திரளை நம்பாமல் ஓர் அரசியல் போராட்டத்துக்காக இந்தியர்களை பயிற்ற ஆரம்பித்தார். 1918ல் அவர் 1925ல் இந்தியா முழு விடுதலை பெறமுடியும் எண்ரு சொன்னார்.இரு பெரும்போர்களும் பஞ்சங்களும் அவர் கணக்கை தவறாக்கின. அதைவிட முக்கியமாக பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூட்சி மூலம் உருவான முஸ்லீம் லீக் அவரை கிட்டத்தட்ட செயலிழக்கச் செய்தது. பதினைந்தாண்டுக்காலம் காந்தி அந்த முஸ்லீம் மதவெறியுயுடன் போராடினார்.
இந்தியாவில் பெரும் பஞ்சங்களை உருவாக்கியபோதும் கூட இந்திய மக்கள் பிரிட்டிஷாரையே ஆதரித்தனர். அதைப்பற்றி சுவாமி விவேகானந்தர் வெதும்பி எழுதியதை நீங்கள் வாசிக்கலாம். காரணம் பிரிட்டிஷ் அரசு மேலோட்டமாக சட்டம் ஒழுங்கை பேணியதும், கல்வி மற்றும் ரயில் உட்பட நவீன வசதிகளைக் கொண்டுவந்ததுமாகும். சுதந்திரம் கிடைத்து முக்கால்நூற்றாண்டாகியும் நம் அறிவுஜீவிகள்கூட இன்னும் அவர்களின் பொருளியல் சுரண்டலை உணர்ந்துகொள்ளவில்லை.
அந்நிலையில் கோடிக்கணக்கான இந்திய மக்களுக்கு அவர்கள் நுட்பமான பொருளியல் சுரண்டல்வலையில் சிக்கி அடிமையாக இருக்கிறார்கள் என்பதை உணர்த்தி, இருநூறாண்டுகளில் பிரிட்டிஷார் உருவாக்கிய நம்பிக்கையை இருபதாண்டுகளில் அழித்து, பிரிட்டிஷாரைஆட்சி செய்ய அனுமதித்த இந்தியவெகுஜன ஆதரவை களைந்த, மனிதகுல வரலாற்றின் மிகப் பிரம்மாண்டமான மக்களியக்கத்தை அற்பமாகச் சித்தரிப்பது உங்களைப்போன்றவர்களின் முன்முடிவு அரசியலாக சென்ற அரைநூற்றாண்டாக இருந்து வருகிறது. உண்மையில் இதுவே என்னை சர்ச்சிலின் இனவாத அரசியலை விட கசப்படையச் செய்கிறது
காந்தியின் உண்மையான ஆற்றல் பிற அனைவரையும் விட பிரிட்டிஷாருக்கு நன்றாகவே தெரியும். இந்திய வரலாற்றில் காந்திக்கு எதிராகவே பிரிட்டிஷார் உச்சபட்ச பிரச்சாரத்தை செய்திருக்கிறார்கள். அவருக்கு எதிராகவே அதிகமான போட்டி தலைவர்களை உருவாக்கியிருக்கிறார்கள். காந்தி எதிர்ப்புப் பிரச்சாரம் இக்கணம்கூட உச்சகட்டத்தில் தொடர்கிறது. அனேகமாக மனித வரலாற்றில் காந்திக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் அளவுக்கு வேறெந்த மனிதருக்கும் நிகழ்ந்ததில்லை.இன்றும் இந்திய தேசத்தின் ஜனநாயகத்தன்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிரான ஐரோப்பிய சக்திகளின் முதல் இலக்கு காந்தி. அவர்களுக்கு ஆதரவாகவே உங்களைப்போன்றவர்களின் திரிபரசியல் செயல்படுகிறது
சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரஸுக்குள் உள்ள உட்குழு அரசியலால் தலைமைக்கு வென்றவர்.இந்தியா முழுக்க மக்களால் அறியப்பட்டவர் அல்ல. இந்தியா முழுக்க பயணம்செய்தவர்கூட அல்ல. காங்கிரஸில் இருந்து வெளியேறிய பின்னர் அவர் ஒரு இந்தியத்தலைவராக எந்த ஆதரவையும் பெறவில்லை. அவரது செல்வாக்கு வங்கத்துக்குள் மட்டுமே இருந்தது. அவரும் ஆயுதப்போராட்டத்தைப்பற்றி பேசவில்லை. உண்ண்ணாவிரதம், ஒத்துழையாமை போர் உட்பட காந்திய வழிகளிலேயே போராடினார்.
சுபாஷின் வழிமுறையை ஆயுதப்போராட்டம் என்றல்ல செயல்பாட்டாளரியம் [ volunteerism] எனலாம்.ர அவர் ஆயுதப்போர், ராணுவம் என்று முயன்றது ஜப்பானியரின் தூண்டுதலினாலேயே. ஜப்பானியர் வென்றிருந்தால் பிரிட்டிஷாரைவிட கொடூரமான, பழைமைவாத நோக்கும் இனவெறியும் நிறைந்த, ஓர் அன்னிய அரசின் கைப்பாவை ஆட்சியாளராக அவர் இருந்திருப்பார். விதி அவருக்குச் சாதகமக இருந்தது. அவரது வழியின் பிழைகள் இன்று கொஞ்சம் வரலாற்றை அறிந்தவர்களுக்கு வெட்டவெளிச்சமானவை. அவரை பொய்யான பிம்பங்களின் அடிப்படையில் நிலைநிறுத்த முயலவேண்டாம்
சுபாஷின் நாடகியமான தப்பிச்செல்லலே அவரை பிரபலப்படுத்தியது. உலகப்போருக்குப்பின் சரண்டைந்த இந்திய தேசிய ராணுவத்தினர் மீதான விசாரணையை பிரிடிஷ் அரசு நடத்தியபோது அதை ஒரு வாய்ப்பாக கருதி நாடெங்கும் கொண்டுசென்று பிரச்சாரம்செய்தனர் காங்கிரஸார். அதன்பின்னரே சுபாஷ் இன்றுள்ள வீரத்திருமகன் என்ற பிம்பத்தைப் பெற்றார்
இன்று சுபாஷ் பற்றி உள்ள பிம்பங்கள் பெரும்பாலும் மிகைப்படுத்தப்பட்டவை. காந்தியைச் சிறுமைசெய்து எழுதிய வங்காள எழுத்தாளர்களால் ஊதி பெரிதாக்கப்பட்டவை. சுபாஷின் படை பெரும்பாலும் இந்திய பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்து சரணடைந்தவர்களை கொண்டு உருவாக்கப்பட்டது. சிறைக்கைதிகளை எந்த சர்வதேச நிபந்தனைக்கும் கட்டுப்படாமல் நடத்திய ஜப்பானிய கொத்தடிமை முறையில் இருந்து விடுபடுவதற்காக அவர்கள் அதில் சேர்ந்தார்கள். ஐஎன்ஏ ஒரே ஒருமுறை மட்டுமே பிரிட்டிஷ் படைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. வெள்ளைக்கொடியுடன் கூட்டம் கூட்டமாக சென்று பிரிட்டிஷாருடன் சேர்ந்துகொண்டார்கள் ஐ.என்.ஏ வீரர்கள். அதன்பின் அவர்கள் ஜப்பானிய ராணுவத்தின் எடுபிடி வேலைக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். அன்றைய இந்திய ராணுவ பொதுமனநிலை அது.
ஆக சுபாஷ் இந்தியாவில் ஒரு வகையான ஆயுதக்கிளர்ச்சியையும் உண்டுபண்ணியிருக்கமுடியாது. முயன்றிருந்தால் அதையே சாக்காக வைத்து இந்திய சுதந்திரப்போரை ரத்தத்தால் நசுக்கியிருப்பார் சர்ச்சில். அதற்கு இந்திய ராணுவத்தையே பயன்படுத்தியிருப்பார். 1947 வரைக்கும் கூட இந்திய ராணுவம் பிரிட்டிஷ் விசுவாசத்துடனேயே இருந்தது என்பது வரலாறு.
சயாம் வழியாக இந்தியாவுக்கு ஜப்பானியர் போட்ட 'மரணரயிலில்' ஏறத்தாழ 15 லட்சம் பேராவது செத்திருக்க கூடும் என்பது கணக்கு– அவர்களில் பாதிபேர் தமிழர்கள். கொடூரமான அடிமைமுறையில் அவர்கள் கொல்லப்பட்ட அந்த பாதை வழியாக பலமுறை சென்றிருக்கிறார் சுபாஷ். அங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று தெரிந்தும் ராஜதந்திர மௌனத்தையே கடைப்பிடித்தார். அவரால் வேறெதுவும் செய்திருக்கமுடியாது. காந்தி ஒருபோதும் அந்த மானுட அழிவுக்கு துணை போயிருக்கமாட்டார்.
சுபாஷ் மீதான இந்த பொய்யான பிம்பம் காந்தியை மட்டம்தட்டுவதற்கானது மட்டுமே. அவரது நோக்கங்கள் உயர்ந்தவை, வழிமுறைகள் முதிர்ச்சியற்றவை, அழிவை கொண்டுவரக்கூடியவை. அதை அவரே கடைசியில் உணர்ந்தார்.
இனியாவது உங்களைப்போன்றவர்கள் காந்தி மீது கொண்டுள்ள காழ்ப்பை கைவிடவேண்டும். வரலாற்றின் விரிவான பின்னணியில் வைத்து காந்தியை மதிப்பிடவேண்டும். காந்தி இந்த தேசத்தின் வாழும் இலட்சியவாதத்தின் அடையாளம். இந்து ஞானமரபின் உள்ளே என்றும் இருந்துவந்த கருணைக்கும், அதன் ஜனநாயகத்தன்மைக்கும் கண்கூடான சான்று. நவீன உலகுக்கு இந்திய ஞானிகள் அளித்த பெரும்கொடை அவர்.
காந்தியைப்புரிந்துகொள்ளாத ஒருவர் இந்தியாவின் மெய்ஞானமரபையோ இங்குள்ள கோடானுகோடி எளிய மக்களின் ஆன்மாவையோ புரிந்துகொள்ளாதவர் மட்டுமே
காந்தியும் சுபாஷும் கடிதம்
http://www.poetryconnection.net/poets/Bertolt_Brecht/661
பழசி ராஜா
காந்தியும் சுந்தர ராமசாமியும் (சு.ரா. நினைவின் நதியில் புத்தகத்திலிருந்து)
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
கொற்றவை- கரு. ஆறுமுகத் தமிழன்
தொன்மொழியான தென்மொழி தோன்றிய குமரிக் கண்டத்தைக் கடல்கொண்ட காலம் தொடங்கி, கன்னியாகுமரிவரை மட்டுமாகத் தமிழ்நிலம் குறுகிப் போய்விட்ட இன்றைய காலம் வரையிலான பல்லாயிரம் ஆண்டுகளின் பரப்பைக் களமாகக் கொண்டிருக்கிறது "கொற்றவை'.
சிலப்பதிகாரத்தின் மையம், தீதிலா வடமீனின் திறமுடைய கண்ணகி. "கொற்றவை'யின் மையம், பெற்றம் புரந்தும் புதைத்தும் தெய்வமாக நிலைபெற்றிருக்கிற கொற்றவை.
"கொற்றவை' கண்ணகியின் கதையைத் தன்னில் ஒரு பாகமாக்கி புனைந்து செய்த புதுக்காப்பியம். சிலப்பதிகாரத்தின் மையம் சிதைவு படாமல், ஆனால் சிலப்பதிகாரம் கொடுக்கிற இடைவெளிகளை வளமான கற்பனையால் இட்டு நிரப்புகிற காப்பியம். காப்பியத்துக்குச் சொல்லப்படுகிற எல்லா அமைதிகளையும் பெற்று நிற்கிறது இது.
கதையை வேறுபட்ட ஒன்றுக்கொன்று மாறுபட்ட பல்வேறு பார்வைகளின் ஊடாக நகர்த்திச் செல்கிறது. உரைநடை வடிவத்தில் இருக்கிறதென்று பெயரே ஒழிய, பாவியமாகவே எழுதப்பட்டிருப்பதுபோன்ற உளமயக்கை உருவாக்குகிறது. திசைச் சொற்களின் துணையின்றி முற்றாகத் தமிழில் இயல்கிறது இக்காப்பியம்.
தன்னேரில்லாத் தமிழின் வளமைக்கும் அழகுக்கும் மீண்டும் ஒரு சான்று இது.
பெண்களைப் பேசுகிறது "கொற்றவை'. பெண்ணின் பாடுகளை, கேட்கச் செவிதருவாரில்லாமல் தங்கள் உள்ளத்தைத் தங்களுக்குள்ளேயே ஒளித்துக் கொள்கிற அவர்களுடைய உள்ளொடுக்கத்தை, கடலன்ன காமம் உழந்தும் மடலேறாத் தொல்பெருந்தகைமையை, துன்பங்கள் அனைத்தையும் தாய்மையினால் வென்று மேற்செல்கிற தெய்வ நிலையைப் பேசுகிறது கொற்றவை.
அன்னையர் பிறக்க, அன்னையர் மறைய, தாய்மை மட்டும் அழியாமல் வாழ்கிறது என்பதுதான் கொற்றவையின் காப்பிய மையம்.
தெய்வங்களின் தோற்றத்துக்குப் பகுத்தறிவும் ஏற்றுக்கொள்கிற காரணங்கள் கற்பிக்கிறார் ஜெயமோகன். "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில்' முன்தோன்றிய மூதன்னை ஒருத்தி அவளுடைய சமூகத்தால் கொற்றவைத் தெய்வமாக்கப்படுகிறாள். அவளுடைய வழித்தோன்றல்களான முக்கண்ணன், திருமால், முக்கண்ணனின் மக்களான ஆனைமுகன், ஆறுமுகன் என்று நினைக்கத்தக்க பெருவாழ்வு வாழ்ந்த முன்னோர்கள் தெய்வங்களாகிறார்கள். வாழ்வாங்கு வாழ்ந்தவர்களைத் தெய்வமாக்கும் இந்த மரபுதான் கண்ணகியையும் தெய்வமாக்குகிறது.
தமிழ்மரபின் தெய்வங்கள், மனிதர்கள் கால்பாவி நடக்கிற தரையிலிருந்து, அத்தரையில் கூடியும் முரண்பட்டும் அவர்கள் வாழ்கிற சமூகங்களிலிருந்தே கிளம்பியிருக்கிறார்களேயன்றி விண்ணிலிருந்து இறங்கி வந்துவிடவில்லை என்று தெய்வக்குழப்பம் கொண்ட மாற்று மரபுகளுக்குத் தாய்மையை அடையாளம் காட்டிச் சொல்கிறது "கொற்றவை'.
மணிமேகலையும், காப்பியப் புனைஞர்களான சாத்தனாரும் இளங்கோவடிகளும் "கொற்றவை'யில் கதைமாந்தர்களாக உலவுகிறார்கள். தமிழ் வழிபாட்டு மரபின் அடிப்படையில், தென்தமிழ்ப் பாவைக்குக் காப்பியம் செய்த இளங்கோ சபரணமலையில் பெருநிலை பெற்று ஐயப்பன் எனத் தெய்வமாகிறார்.
ஜெயமோகனின் புனைவாற்றல் காற்றின் விரைவு. அறியாக் கடலாழத்தில் அது மீனின் சிறகலைப்பு. தர்க்கத்தின் அடர்காடுகளில் அது தாவும் மானின் குளம்பு. உள எழுச்சியில் அது விண்ணளக்கும் பருந்து.
கொற்றவை – ஜெயமோகன், பக்.600 ரூ.280, தமிழினி, 67, பீட்டர்ஸ் சாலை, சென்னை -600 014
நன்றி: தினமணி, கரு. ஆறுமுகத்தமிழன்
கொற்றவை- எஸ்ஸார்சி
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
ஓர் ஓவியம் ஒரு போர்
அன்புள்ள ஜெ.
இதை நீங்கள் பார்த்தீர்களா ? உங்கள் 'ஏரியா' ஆரல்வாய்மொழியில் நடந்த
போரைப் பற்றிய சுவர்சித்திரமாம்…
http://www.thehindu.com/arts/history-and-culture/article2440107.ece
மது
[பத்மநாபபுரம் அரண்மனை]
அன்புள்ள மது
ஆய்வாளர் பாலுசாமி சொல்லும் சித்திரம் சரியாக இருக்கலாம். ஆனால் சில சின்ன சிக்கல்கள் இருக்கின்றன.
சோழர் ஆட்சி 1200களின் இறுதியில் திருவிதாங்கூர் மண்ணை விட்டு நீங்கிய பின்னர் இங்கே என்ன நடந்தது என்பதற்கான முறையான வரலாறு இன்னும் எழுதப்படவில்லை.கேரள அரச ஆவணங்களான மதிலகம் சுவடிகளைக்கொண்டு திருவிதாங்கூர் அரசின் திவானாக இருந்த பி.சங்குண்ணிமேனன் எழுதிய திருவிதாங்கூர் சரித்திரம் தகவல் அடிப்படையில் நம்பகமான நூல் எனப்படுகிறது.
இந்த நூலில் ஆரம்ப கால திருவிதாங்கூர் [அல்லது வேணாடு அல்லது கூபகநாடு] வரலாறு தெளிவற்றதாகவே உள்ளது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் சோழர்களின் ஆட்சி முடிந்து பாண்டியர்களின் ஆட்சி தொடங்கிய காலகட்டத்தில்தான் இன்றைய திருவிதாங்கூர் அரச வம்சம் உருவாகி வந்தது. இது இங்கே இருந்த பல அரச வம்ச குடும்பங்களில் ஒன்று. திருப்பாம்பரம் சொரூபம் என்ற பேரில் கல்குளம் என்ற கிராமத்தில் இருந்தார்கள். பத்மநாப புரத்துக்குத் தங்கள் தலைமையிடத்தை மாற்றிக்கொண்டு இந்நிலப்பகுதிமீது அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டார்கள். தங்களை வஞ்சியை ஆண்ட சேரன் செங்குட்டுவனின் குருதிவழியினர் என சொல்லிக்கொண்டார்கள். வஞ்சீசபால என்ற பட்டத்தைச் சூடிக்கொண்டார்கள். இங்கே இருந்த பிற அரசகுலங்களைப் போரில் வென்றோ அல்லது திருமணம் மூலமோ எதிர்ப்பில்லாமலாக்கிக்கொண்டார்கள்.
ஆனால் சோழர்காலம் முதலே நில அதிகாரமும் கோயிலதிகாரமும் கொண்டிருந்த பிரபுக்கள் பலர் இங்கிருந்தனர். அவர்களே எட்டுவீட்டுப் பிள்ளைமார் என்று சொல்லப்படுபவர்கள். அவர்களுக்கும் இந்தத் திருவிதாங்கூர் அரச குலத்துக்கும் நிரந்தரமான அதிகாரக் கலகம் இருந்து வந்தது. ஆரம்பத்தில் சோழர்காலப் பின்னணி கொண்ட நிலப்பிரபுக்களால் பொதுவாகத் தேர்வுசெய்யப்படும் தலைவராகவே மன்னர் இருந்தார். 1732ல் பதவிக்கு வந்த மார்த்தாண்ட வர்மா இந்த பிரபுக்களை வேருடன் அழித்தார்
ஆரம்பகால வேணாட்டின் வரலாறு சிக்கலானது. முதலில் பாண்டியர்களுக்குக் கப்பம் கட்டினர். மதுரையை சுல்தான்கள் பிடித்தபோது தோற்று எங்கிருந்தார்கள் எனத் தெரியாமல் இருந்தார்கள். மதுரை நாயக்கராட்சிக்குப் போனபோது அவர்களிடம் கப்பம் கொடுப்பவர்களாகத் திரும்பி வந்தார்கள். நாயக்கர் ஆட்சி பலவீனமாக ஆன காலகட்டங்களில் தனியதிகாரம் தேடிக்கொண்டார்கள். உள்ளூரில் எட்டு வீட்டுப் பிள்ளைமாரிடம் அதிகாரப்போட்டி. கொல்லம் காயங்குளம் மன்னர்களுடன் நிலப்போர். இதுவே இவர்களின் வரலாறு. பெரும்பாலும் பெயர்களே கிடைக்கின்றன
சங்குண்ணி மேனனின் நூலின்படி கிபி 1528ல் மார்த்தாண்ட வர்மா திருவிதாங்கூருக்கு மன்னரானார். ஒன்பது வருடம் மட்டுமே ஆண்டார். இவருக்குப்பின் 1537ல் இவரது மருமகன் உதயமார்த்தாண்ட வர்மா பதவிக்கு வந்தார். மார்த்தாண்ட வர்மா காலகட்டத்தில் கொல்லம் ஜெயத்துங்க அரசின் கீழிருந்த தென்காசி களக்காடு சேர்மாதேவி பகுதிகளை இவர் கைப்பற்றிக்கொண்டார். களக்காடு கோயிலுக்கு சில கொடைகள் செய்திருக்கிறார். இவருக்கும் மதுரை நாயக்கர்களுக்கும் சில பூசல்கள் நிகழ்ந்தன.
பாலுசாமி சொல்வதைப்போல 1532ல் உதயமார்த்தாண்ட வர்மா எப்படி அச்சுதப்ப நாயக்கரிடம் போரிட்டிருக்க முடியும் எனத் தெரியவில்லை. அது அவரது மாமா மார்த்தாண்டவர்மாவாக இருக்கலாம். மதுரை ஆவணங்களில் எப்போதுமே பெயர்கள் மாறி மாறித்தான் இருக்கின்றன. திருமலை நாயக்கர் காலம் வரை மதுரை நாயக்கர்களின் தென்னகச் செல்வாக்கு வலுவானதாக இருக்கவில்லை. திருவிதாங்கூர் மன்னர்கள் கொஞ்சம் சுதந்திர முயற்சிகளைச் செய்திருக்கலாம்.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
பாரதி உரிமை
அன்புள்ள ஜெமோவுக்கு
சமீபத்தில் ஒரு இணைய இதழில் பாரதியைப் பற்றிய ஒரு கட்டுரை படித்தேன். அதற்கான சுட்டி
பாரதியும் ஏவிஎம்மும் — சில உண்மைகள் பகுதி 1
இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன ?
அதே இதழில் ஏற்கனவே நீங்கள் பாராட்டியுள்ள பாலாசி என்பவரின் கதை ஒன்று வந்துள்ளது. அதற்கான சுட்டி வதம்
உங்கள் கருத்துகளை எதிர்பார்த்து
சாரா
அன்புள்ள சாரா
இந்தக் கட்டுரையை திரு ஹரிகிருஷ்ணன் எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். அவர் முன்னர் 'ஓடிப்போனானா பாரதி' என்ற நல்ல கட்டுரையை எழுதியிருக்கிறார். பாரதியைப்பற்றி உள்நோக்குடன் பரப்பப்படும் அவதூறுகளுக்கான வலுவான பதில் அந்தக்கட்டுரைத்தொடர். நூலாகவும் வெளிவந்தது.
பாரதி பாடல்கள் ஏ.வி.எம் பாதுகாக்காவிட்டால் அழிந்திருக்கும் என்ற கூற்று அறியாமை அல்லது அலட்சியத்தின் விளைவு மட்டுமே. பாரதி பாடல்கள் அவரது காலத்திலேயே தமிழின் வேறெந்த இலக்கியத்தை விடவும் பிரபலமாகவே இருந்தன. சுதந்திரப்போராட்ட காலத்தில் சத்தியமூர்த்தியால் தமிழகமெங்கும் கொண்டுசெல்லப்பட்டபின்னர் அவை ஒரு மக்களியக்கமாகவே ஆயின.
ஆனால் அவை உரியமுறையில் பதிப்பிக்கப்படவில்லை. அதற்கு அனுபவமும் வணிகத்திறனும் கொண்ட பதிப்பாளர் அமையாததே காரணம். பாரதி பாடல்களின் உரிமையைக் கையில் வைத்திருந்தவர்களின் முதிரா முயற்சிகளாகவே அவை அமைந்தன. ஆனால் எந்த ஒரு தருணத்திலும் அவை ஒரு பெரும் மக்களியக்கம் அல்ல என்ற நிலை இருந்ததே இல்லை. இன்றும் தமிழில் அச்சிடப்பட்ட நூல்களில் திருக்குறளுக்கு அடுத்தபடியாக அதிகம் விற்கும் நூல் பாரதி கவிதைகளே.
பாரதி பாடல்களை ஒலிப்பதிவு செய்து கேளிக்கையாகப் பயன்படுத்துவதற்கு உள்ள உரிமையை மட்டும் ஏ.வி.எம் விலைகொடுத்து வாங்கினார். ஆனால் பாரதி பாடல்களை நூலாக அச்சிடுவது, இதழ்களில் வெளியிடுவது அனைத்தையுமே அவர் கட்டுப்படுத்தினார். அவற்றுக்குக் கட்டணம் வாங்கினார், இதுதான் உண்மை.
ஏனென்றால் அன்று பதிப்புரிமைச் சட்டங்கள் தெளிவாக இருக்கவில்லை. பாரதி பாடல்களின் சட்டபூர்வ உரிமை எவரிடம் உள்ளது எனக் கண்டுபிடிப்பதே கடினம் . யாராவது ஒருவர் ஏதேனும் ஒரு உரிமையை வைத்திருந்தால் அவரே சட்டபூர்வ உரிமையாளர். அவரை நீதிமன்றத்தில் சந்திக்கும் அளவுக்கு வேறு எவரிடமும் எந்த ஆவணமும் இருக்காது.இதுவே ஏவிஎம் செட்டியாரால் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது.
இது இன்றுகூடப் பெரும்பாலான எழுத்தாளர்களின் நூல்களின் நிலைமை. ப.சிங்காரம் படைப்புகளின் பதிப்புரிமை எவரிடம்? யாரிடமும் இல்லை. ஆவணங்களே இல்லை. யாராவது ப.சிங்காரம் கொடுத்த ஏதேனும் ஒரு அனுமதிச் சீட்டை வைத்திருந்தால் அவர் தனதெனச் சொல்லிக்கொள்ளலாம்.
பின்னர் பாரதி பாடல்களின் உரிமை பெரிய விவாதமாக ஆகியது. அந்த உரிமையை மீட்கும் விஷயத்த்தில் அன்றைய பெரும் அரசியல் சக்தியான ராஜாஜி தலையிட்டார். ஆகவே ஏ.வி.எம் செட்டியார் உரிமையை விட்டுக்கொடுத்தார். ஏ.வி.எம் எந்த பாரதி பாடலையும் சேமிக்கவோ பாதுகாக்கவோ இல்லை. சேமித்து வைத்திருந்ததைப் பிறர் வெளியிடுவதற்கு கட்டணம் மட்டுமே வசூலித்தார்கள்
ஏவிஎம் திரைக்கதைகள் போல அவர்களின் சொந்த ஆவணங்களைக்கூட அவர்கள் பாதுகாக்கவில்லை. இன்று ஏவிஎம்மின் எந்தத் தகவலையும் அவர்களிடமிருந்து பெற முடியாது என்பதே உண்மை. அவர்கள் பாரதி பாடல்களைப் பாதுகாத்தார்கள் அல்லது பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தார்கள் இரண்டுமே இன்று உருவாக்கப்படும் பொய்வரலாறு.
நன்றாகவே கட்டுரை எழுதப்பட்டுள்ளது
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
நகுலனும் சில்லறைப்பூசல்களும்
ப.சிங்காரம்,ஒருகடிதம்
September 30, 2011
தமிழில் சிறுகதை எழுத ஆங்கில அறிவு அவசியமா?-கடிதம்
வணக்கம் ஜெயமோகன் சார், என்னுடைய பெயர் சு.இரமேஷ். சென்னையில் வசித்து வருகிறேன். ஒரு தனியார் கல்லூரியில் தமிழ் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறேன். உங்களிடம் மூன்று முறை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். நீங்கள் எனக்குக் கையெழுத்தும் இட்டுக் கொடுத்திருக்கிறீர்கள். இதுவரை உங்களிடம் தொடர்பு கொண்டதில்லை. உங்கள் எழுத்தின் மீது தணியாத ஆர்வம் கொண்டவன்.
ஒருசில கட்டுரை நூல்களைத் தவிர எல்லா நூல்களையும் படித்திருக்கிறேன். உங்களிடம் நிறையப் பேசவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. உங்களின் நேரமும் முக்கியம். எனக்கு நீங்கள் ஒர் உதவி செய்ய வேண்டும். 90களுக்குப் பிறகு வந்த தமிழ் நாவல்களில், வண்ணார் சமூகம் குறித்த பதிவுகள் உள்ள நாவல்களின் பட்டியல் தங்களிடம் இருந்தால் எனக்கு அனுப்பி வைக்கவும். கோவேறு கழுதைகள், வெள்ளாவி என்று இரண்டு நாவல்களை மட்டும் நான் வாசித்திருக்கிறேன். பதில் அனுப்பினால் மகிழ்வேன். நன்றி!
ரமேஷ் சுப்ரமணி
அன்புள்ள ரமேஷ் சுப்ரமணி
கோவேறு கழுதைகள்,வெள்ளாவி தவிர வேறு நாவல்கள் இந்த தளத்தில் வெளிவந்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை நண்பர்கள் வாசித்திருக்கக்கூடும். யாராவது சொன்னால் தகவல் அனுப்பி வைக்கிறேன்
நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?
ஜெ
அன்புள்ள ஜெ.மோ,
உங்களது எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்தே எழுதத் தொடங்கியவன் நான். தங்களது சிங்கப்பூர் வகுப்பான சிறுகதை ஒரு சமையல் குறிப்பு எனது அடிப்படை இலக்கண நூலாகவே ஆகிவிட்டது. ஒரு பதிவில், தனது நோய் குறித்து மிகக் கவலைப்பட்டு நொந்திருந்த ஒரு இளைஞனுக்குத் தாங்கள் கொடுத்த அறிவுரையின்படியே, சுயமாக எழுத ஆரம்பித்தபோதுதான் என்னை உணர்ந்தேன்.
அப்படி எழுதும்போது, இயல்பாக ஒரு தாழ்வுமனப்பான்மை வந்து அமர்ந்துவிட்டது. இதுகூட உங்களது பதிவுகளில் இருந்தே வந்தது. தாங்கள் மேற்கோள் காட்டும் சிறந்த இலக்கியங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு கிட்டத்தட்ட இல்லையென்றே சொல்லலாம். இந்த நிலையில், நானோ தமிழ்வழியில் கல்வி பயின்றவன்.ஆங்கில அறிவு சுமார்தான். ஆங்கிலப் புத்தகங்களைப் படித்துப் புரிந்துகொள்ளுவதற்கு வாய்ப்பே இல்லை. இந்த நிலையில், தமிழ் மட்டுமே தெரிந்த என்போன்றவர்கள் தமிழில் தரமான படைப்புகளைப் படைக்க முடியுமா. வேறுவார்த்தைகளில் கூறினால், தமிழில் எழுத, குறிப்பாக சிறுகதை எழுத ஆங்கிலத்தை அவசியம் அறிந்து இருக்கவேண்டுமா?. தயவுசெய்து எனக்கு உதவுங்கள்.
சிறீதரன்.
அன்புள்ள சிறீதரன்
நான் பெரும்பாலும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வந்துள்ள நூல்களை மேற்கோள் காட்டவேண்டும் என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறேன். அபூர்வமாகவே ஆங்கில நூல்களை மேற்கோள்காட்டுகிறேன். தமிழில் எழுத ஆங்கிலம் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதில்லை. தமிழிலேயே சாதனை எழுத்துக்கள் உள்ளன. அத்துடன் ஆங்கிலத்தில் இருந்து நல்ல தரமான நூல்கள் மொழியாக்கமும் செய்யப்பட்டுள்ளன. அவற்றைப் பெரும்பாலும் நான் சுட்டி வந்துள்ளேன். தமிழில் உள்ள நல்ல நூல்களைப் படித்தாலே ஒருவர் இலக்கியம் பற்றிய தெளிவை அடைய முடியும்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
ஐன்ஸ்டீனின் கனவுகள்
சில்லறை-கடிதம்
முடிவின்மையின் விளிம்பில்-மொழியாக்கம்
லங்காதகனம், வாசிப்பனுபவம்.
அலை அறிந்தது…
மாடன் மோட்சம் – ஒரு பார்வை
'நதிக்கரையில்'- கடிதம்
வடக்கு் முகம்-மீள்வாசிப்பு
ஒரு சிறுகதை
களம்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
