பிரபஞ்சனும் சங்ககாலமும்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,


உயிர்மையில் வெளிவரும் திரு.பிரபஞ்சனின் சங்க காலகட்டத்தின் தமிழர் வாழ்வு பற்றிய கட்டுரைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


அவர் அக் காலத்தில் 'பெண்கள் ஒன்றும் தமிழ்ச் சமூகத்தில் பெரிய நிலையில் இல்லை, கவிஞர்கள் பாட ஒரு பொருளாகவே இருந்தனர்' போன்ற கருத்தினை முன் வைக்கிறார். இப்போதிருக்கும் காலகட்டத்தினைக் கொண்டு அக்கால வாழ்வினை ஆழ்ந்து விமரிசிப்பது சரியா? உலகில் எந்த ஒரு பண்டைய சமூகத்திலாவது பெண்கள் சம அந்தஸ்துடன் அனைத்து நிலையிலும் நடத்தப்பட்டிருக்கிறார்களா? அல்லது அவர் நம்மை நம் 'சங்க காலம் பொற்காலம்' என்ற 'மாயை'யிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று எண்ணி எழுதுகிறாரா?


ராம்குமார் சாத்தூரப்பன்


 



பிரபஞ்சன்


 சங்ககாலம் பொற்காலம் என்ற தரப்பையும் சரி , சங்க காலம் அடக்குமுறைக்காலம் என்ற தரப்பையும் சரி, இருவகை எல்லைநிலைகளாகவே நான் நினைக்கிறேன். பிரபஞ்சன் முறையாகத் தமிழ் கற்றவர். ஆராய்ந்தவர். அவருடன் நான் நேரிலும் விரிவாக இதைப்பற்றி உரையாடியிருக்கிறேன். அவரது நோக்கம் இன்றுள்ள சில பிரமைகளை உடைப்பதே என நினைக்கிறேன்.


நாற்பதுகளில் வேதகாலம் பொற்காலம் என்ற வடக்கத்திய கோஷத்துக்கு மாற்றாக இங்கே ஒரு கோஷமாக சங்ககாலம் பொற்காலம் என்று சொல்லப்பட்டது. சங்க காலத்தில் சாதி இல்லை, பெண்ணடிமைத்தனம் இல்லை, மூடநம்பிக்கைகள் இல்லை என்று  மேடைகள் தோறும்  ஓங்கிச்சொல்லப்பட்டு சமூக மனத்தில் நிறுவப்பட்டது. பாடநூல்களில் பதிக்கப்பட்டது.


பின்னர் வந்த ஆய்வாளர்களால் அதெல்லாமே விருப்பக்கற்பனைகளே என நிறுவப்பட்டன. சங்ககாலத்தில் சாதி இருந்தது, பெண்ணடிமைத்தனம் இருந்தது, மூடநம்பிக்கைகள் இருந்தன, ஏன் அடிமைமுறையே இருந்தது என்பதைச் சங்ககாலப்பாடல்களே காட்டுகின்றன.


ஆனால் உடனே அதை ஒரு 'கெட்ட' காலம் என்று சொல்வதும் பிழையாகிவிடும். அது வரலாற்றின் வளர்ச்சிப்போக்கில் ஒரு ஆரம்ப காலகட்டம். நாற்றங்கால்காலகட்டம் எனலாம். நம் இன்றைய பல்வேறு பண்பாட்டுக்கூறுகளின் வேர்கள் அங்கே உள்ளன.


 



முதல் விஷயம் சங்க இலக்கியங்களை நேரடியான வரலாற்றுப்பதிவுகளாக எடுத்துக்கொள்ளலாமா என்பதுதான். புறப்பாடல்களில் வளர்ந்த நகர நாகரீகத்தையும், அரசியல் சிக்கல்களையும் காண்கிறோம். அகப்பாடல்களில் அரைப்பழங்குடி வாழ்க்கையைச் சித்தரிக்கக் காண்கிறோம். புறப்பாடல்களில் தொன்மையான பாடல்களுக்கும் பிற்காலப் பாடல்களுக்குமிடையே மூன்று நூற்றாண்டுக்கால இடைவெளி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.


புறப்பாடல்கள் காட்டும் சங்ககாலம்,வேளிர்கள் முதலிய சிறுகுடி மன்னர்களின் காலகட்டம் மெல்ல மெல்லப் பெருங்குடி மன்னர்களால் அழிக்கப்பட்டு மைய அரசுகள் உருவாகி வரும் பரிணாமத்தில் உள்ளது. ஆகவே ஒரு பக்கம் பழங்குடி மரபுகள் உள்ளன. மறுபக்கம் நகர நாகரீகம் உள்ளது. பழங்குடி மரபுகள் அகத்துறையில் பண்பாட்டு அடையாளங்களாகக் கலைகளில் நீடித்தன- இன்றும் மன்னர்கள் கலைகளில் இருப்பதைப்போல.


இந்தக்காலகட்டத்தில் ஒருபக்கம் ஒரு நிலவுடைமைச்சமூகத்தின் எல்லாச் சுரண்டல்களும் அடக்குமுறைகளும் இருந்தன. அப்படி சுரண்டலும் அடக்குமுறையும் இல்லாமல் மக்களிடம் உருவாகும் உபரிநிதி மைய அரசுக்குச் சென்று குவிய முடியாது. அப்படிக்குவிந்தால்தான் அரசுகள் வலுப்பெற முடியும். வலுப்பெற்றால்தான் பண்பாடு வளர முடியும். இது சிக்கலான ஒரு வட்டம்.


ஆகவே நிலவுடைமைச்சமூகத்தில் எங்கும் நிகழ்வதுபோல மக்கள் பிறப்பு, உற்பத்தி முறை ஆகியவற்றின் அடிப்படையில் ஓர் அடுக்கதிகாரத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். தொன்மையான குலப்பிரிவினைகள், இனக்குழுப்பிரிவினைகள் சாதிகளாகி அவை,மேல் கீழ் என்ற அடுக்குநிலைக்குள் வைக்கப்பட்டன. தந்தைவழிச் சொத்துரிமை உருவாகி நிலைபெற்றது. பெண்களின் உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டன. காரணம் வாரிசுரிமை என்ற ஒன்று இருந்தால் கருப்பை காவலுக்குள் வைக்கப்படவேண்டும்.


அதேசமயம் பழங்குடி வாழ்க்கையின் பல விழுமியங்கள் உருமாறியேனும் நீடித்தன. பெண்கள் குடும்ப அமைப்புக்குள் வரையறுக்கப்பட்டு நிறுத்தப்பட்டாலும் அவர்களின் உரிமைகளும் கௌரவங்களும் குலஆசாரங்கள் மூலம் நிலைநிறுத்தப்பட்டன.


 



இரு விஷயங்களை மட்டும் சுட்டலாம். ஒன்று, சங்க இலக்கியங்கள் பெண்களைத் தூக்கிக்கொண்டு சென்று மணப்பதைச் சித்தரிக்கவில்லை. அவளே விரும்பி உடன்போக்கு நிகழ்ந்தால்தான் உண்டு. ஆனால் வட இந்திய தொல் இலக்கியங்களில் காந்தருவமணம் எப்போதுமே பேசப்பட்டுள்ளது.


இரண்டு, பௌத்தமும் சமணமும் வட இந்தியாவிலிருந்தபோது பெண்களை மையமாக்கியவையாக இருக்கவில்லை.  அவை பெண்களின் முக்தியை, தெய்வநிலையைப் பேசவில்லை. ஆனால் தமிழகத்தில் அவை வந்ததுமே பெண்மையச் சித்தரிப்புக்குள் வந்தன. கண்ணகி, மணிமேகலை, குண்டலகேசி, நீலகேசி என பௌத்தசமண காவியங்களின் பெருங்கதாபாத்திரங்கள் பெண்களே. அவர்களைத் தெய்வங்களாகவும் இறுதி மீட்பு அடைபவர்களாகவும் அவை சித்தரித்தன. [இந்த அம்சத்தை அயோத்திதாசர் சுட்டிக்காட்டுகிறார். இதைப்போன்ற சிலவற்றை வைத்தே தமிழ்பௌத்தம் என்ற தனி பௌத்த தரிசனத்தை அவர் நிறுவ முயல்கிறார்.]


அதற்குக் காரணம் இங்கிருந்த சமூகச் சூழ்நிலை. பெண்மையச் சமூகமாக இது இருந்திருக்கவேண்டும். அன்றைய ஆழ்படிமங்களும் மனநிலைகளும் நீடித்திருக்கவேண்டும். பல்வேறு பெண்தெய்வங்கள் இங்கே வழிபடப்பட்டிருக்கவேண்டும். ஆகவே இந்த மதங்கள் அம்மக்களை உள்ளிழுக்கத் தங்கள் தரிசனத்தை மாற்றியமைத்துக்கொண்டன. இது பெண்களுக்கு நாட்டுப்புறமரபில், அடிமட்டநிலையில் அன்றிருந்த மதிப்பின் அடையாளமென்றே நான் நினைக்கிறேன். அது ஒருவேளை உயர்மட்டத்தில் இல்லாமலிருந்திருக்கலாம்.


சங்ககாலம் பற்றி எல்லாவகையான பார்வைகளும் வரட்டுமே. விவாதம்மூலம் தெளிவுகள் உருவாகட்டும்.


பி.கு இவ்விவாதத்தில் மிக முக்கியமாகக் கொள்ளத்தக்கவை பேரா ராஜ்கௌதமன் எழுதிய இரு நூல்கள். 'பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்' , 'ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்' [தமிழினி வெளியீடு]


 


 


ஜெ


 


 


ராஜ்கௌதமனின் இரு நூல்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 12, 2011 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.