Jeyamohan's Blog, page 23
October 19, 2025
தற்கடமை
மானுட மட்காக்குப்பைகள்
ஒரு கேள்வி. ஒருவர் தன்னுடைய குடும்பத்தை மட்டுமே முழுநேரமாக பேணினார் என்றால்; பிள்ளைகளை பற்றி மட்டுமே எண்ணி, பிள்ளைகளை நல்ல நிலையில் நிறுத்துவதை மட்டுமே செய்து வாழ்க்கையை முடித்தார் என்றால்; அவர் முக்தி அடைய தகுதியானவர் என்று இந்து மெய்யியல் சொல்லுமா? அதாவது மரபான இந்து நம்பிக்கைப்படியே அவர் முக்திக்கு அருகதைகொண்ட ‘சாத்விகர்’ தானா? அல்லது கூடுதலாக கடைசிக்காலத்தில் கொஞ்சம் நாமஜெபம், கொஞ்சம் கோயில்குளம் வழிபாடு, கொஞ்சம் பிரார்த்தனைகள் மட்டும் செய்தால் போதுமா?
விரிவாக சித்தரிக்கிறேன். ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத் தலைவர், ஒரு வேலையும் வாழ்வதற்கான அடிப்படை வசதிகளையும் கொண்டவர். அவர் தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் ஊர் மெச்சும்படி மருத்துவம் அல்லது ஐஐடியில் சேர்க்க வேண்டும், வெளிநாட்டு வேலைக்கு அனுப்பவேண்டும் என்பதை மட்டுமே இலக்காகக்கொண்டு வாழ்கிறார். ஒரு பைசாகூட வீணடிக்கவில்லை. தன்னைப்பற்றி எண்ணியதே இல்லை. அவர்கள் இருவரையும் அவர் உயர்ந்த பொறுப்புகளில் ஏற்றிவிட்டு, அவர்களுக்குச் செய்ய வேண்டிய சமூகக்கடமைகள் அனைத்தையும் செய்துவிட்டார் என்று கொள்வோம்.
நம் பொதுப்பார்வையின்படி அவர் தன் கடமையைச் செய்தவர். சமூகம் மதிக்கும் ஒன்றை நிகழ்த்தியவர். நடைமுறையில் ஒரு தியாகி. கடமையைச் செய்தபின் அவர் வயோதிகத்தில் கோயில்களுக்குச் செல்கிறார். சில அறச்செயல்களில் ஈடுபடுகிறார். நோன்புகள் நோற்கிறார். அதாவது அவர் இங்கே அனைத்தையும் செய்து முடித்து, விண்ணுலகம் செல்வதற்குரியவற்றையும் செய்கிறார். சரி, அவர் விண்ணகம் செல்வார், அல்லது முக்தி அடைவார் என்று இந்து மரபு சொல்லுமா?
இந்து மத அடிப்படைகளை கற்ற ஒருவருக்கு தெரியும், ஒருபோதும் அப்படி இந்து மரபு சொல்லாது. அறிவற்ற பௌராணிகர்கள் அல்லது பேச்சாளர்கள் தவிர எந்த மத அறிஞரும் அதைச் சொல்ல மாட்டார். அந்த தந்தை தன் உலகியல் கடமைகளை மட்டுமே செய்தவர், அதற்கப்பாலுள்ள இரு கடமைகளை செய்யாதவர், ஆகவே முக்திக்கு அல்லது விண்ணுலகுக்குச் செல்லமுடியாதவர். அந்த இரண்டு கடமைகள் இவை. ஞானத்தை தேடி முன்னகர்ந்து அகவிடுதலையை அடைதல், வாழ்நாளெல்லாம் நற்செயல்களைச் செய்து புண்ணியத்தை ஈட்டிக்கொள்ளுதல். உலகியலை விரும்புபவர் உலகியலிலேயே உழல்வார். ஆகவே அவர் திரும்பவும் அதே உலகியல்சுழற்சியில்தான் பிறந்து விழுவார் என்றுதான் இந்துமரபு அறுதியிட்டு கூறும். உலகியலை வெட்டி விடுதலை அடைவதையே கீதை முதல் நிபந்தனையாகச் சொல்கிறது.
இதே கேள்வியுடன் வந்த முதியவர் ஒருவருக்கு விடை அளிக்கையில் நித்யா பாதி நகைச்சுவையாகச் சொன்னார். “உங்கள் உலகியல் வாழ்க்கையில் உங்களுக்கு முழுநிறைவா?”. அவர் “இல்லை குரு” என்றார். “அந்த அடையப்படாதவற்றை எல்லாம் அடைவதற்காக உங்கள் மனம் தவிக்கிறது அல்லவா”. அந்த நபர் புரிந்துகொண்டு தலையசைத்தார். “பிறகு எப்படி நீங்கள் வீடுபேறு அடைய முடியும்?” என்றார் நித்யா. உலகியல் ஒருபோதும் நிறைவை அளிக்காது. அடையுந்தோறும் அதிருப்தியே வளரும். செய்யுந்தோறும் செயல் மிச்சமிருக்கும். நாம் பிறருடன் நம்மை ஒப்பிட்டுக்கொண்டு மனக்குறைகளையே பெருக்கிக்கொள்வோம். அந்த மனக்குறைகளே நம்மை உலகியலில் கட்டிப்போடும். அதிலிருந்து விலகவே முடியாது. அதில் இருந்து சாவு நம்மை விடுவிப்பதில்லை என்பதே இந்து மெய்யியலின் கூற்று.
உலகியல் என்பது ஒரு வணிகம். ஆகவே அங்கே எதற்கும் விலை உண்டு. உண்மையில் உலகியலில் தியாகம் என்பது கிடையாது. நாம் எவருக்கு எதை அளித்தாலும் நிகரான ஒன்றை திரும்ப எதிர்பார்ப்போம். பிள்ளைகளுக்கான கடமையை தன்னை அப்படியே தியாகம் செய்து நிறைவேற்றிய ஒருவர் அவர்கள் அதற்காக தன்னிடம் நன்றியுடன் இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பதே விலை கோருவதுதான். நாம் ஏதேனும் ஒரு மகிழ்ச்சியை அளித்தே பிறிதொன்றை பெற்றுக்கொள்கிறோம். ஆகவே நாம் அளித்தது எது என்னும் கணக்கு நம்மிடம் எப்போதும் இருக்கும்.
கடமையைச் செய்வதை மட்டுமே வாழ்வென அமைத்துக் கொண்டவர் அதிலிருந்து எந்த நிறைவையும் அடைந்திருக்க மாட்டார். மாறாக அவர் அடைந்திருப்பதெல்லாம் ‘இப்படி இருந்திருக்கலாமே’ என்னும் எளிய் அதிருப்திகளும், ‘இது நிகழ்ந்திருக்கலாமே’ என்னும் விடுபடல்களும் மட்டுமேதான். அந்த அதிருப்திகளையும் விடுபடல்களையும் நிரப்புவதற்காக அவர் மீண்டும் பிறப்பார் என்று நித்யா சொன்னார். அடுத்த பிறவிக்கு கொண்டுசெல்வது அவற்றை மட்டுமே. அவை விதைகள் போல. இந்த பிறவியில் ஈட்டியவை அவை. ‘உள்ளங்கையில் ஒரு பிடி விதைகளை பிடித்துக்கொண்டு மீண்டும் கருப்பையில் இருந்து வெளிவருவீர்கள்’ என்றார் நித்யா. கேள்வி கேட்டவர் வெளிறிப்போனதை நினைவுகூர்கிறேன்.
ஆகவே உலகில் ஈடுபடுபொருவர் அந்த உலகில் மட்டுமே மீண்டும் மீண்டும் உழல்பவராகவே நீடிப்பார். ஒரு புதிர்ப்பாதை போல உலகியல் அவரை முழுமையாக இழுத்து ஈடுபடுத்திக் கொள்ளும். முடிவில்லாமல் சுற்றிவரச் செய்யும். உலகியலில் இருந்து விடுபட வேண்டும் என்ற வேட்கை ஒரு துளியாவது ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் என்றுதான் இந்து மதம் சொல்கிறது. உலகியலில் இருந்து விடுபடுவதற்காக ஒரு அடியை ஏனும் ஒரு எடுத்து வைத்தாக வேண்டும்.
அந்த காலடிதான் வீடுபேறின் தொடக்கம். அதிலிருந்து தான் அவர் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த உலகியலின் சுழற்சியில் இருந்து அடுத்த நிலை நோக்கிச் செல்லமுடியும். அவர் அந்த விழைவுடன் மறைந்தால்கூட அது மீண்டும் ஒரு தொடக்கமாக அடுத்த பிறவியில் தொடரும் என மரபான மதநம்பிக்கை சொல்கிறது. ‘அறஞ்செய விரும்பு’ என்னும் சொல்லின் பொருள் இதுவே. அந்த விருப்பமே அவரை மீட்பது.
ஆகவே உலகில் கடன்களை முழுக்க முற்றாக முடித்த ஒருவர் ஒருபோதும் வீடுபேறு அடைய மாட்டார் என்றுதான் இந்து அடிப்படைகளைக்கொண்டு சொல்ல முடியும். ஆனால் நம்மிடையே இருக்கும் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் உலகியலை மட்டுமே தங்களுடைய வாழ்க்கையின் சாரம் எனக் கொண்டிருக்கிறார்கள். அதுவே வாழ்நாள் சாதனை என நினைக்கிறார்கள். அவர்கள் மாபெரும் ஆன்மீக இருளில் இருக்கிறார்கள்.
மதத்தை விட்டுவிட்டு நடைமுறை நோக்கில் பார்த்தால் கூட ஒருவர் தன்னுடைய வாழ்க்கையின் இறுதியில் ஏதேனும் நிறைவை அடைய வேண்டுமென்றால் அதற்கான வழி ஒன்றே. தன்னுடைய இயல்பு என்ன என்று உணர்ந்து, அந்த இயல்பை நிறைவு செய்யும் செயல்களை செய்து, அதனூடாக தன்னியல்பாகவே ஒரு முழுமையை நோக்கி நகர்வதுதான். ‘நான் வாழ்ந்தேன், நான் இதை இயற்றினேன்’ என்று சொல்ல அவருக்கு ஏதேனும் ஒன்று உலகியலுக்கு அப்பால் இருந்தாகவேண்டும். ஏனென்றால் அங்கே மட்டுமே அவர் மெய்யான இன்பத்தை அடைகிறார். விடுதலையையும் நிறைவையும் அளிக்கும் செயலே மெய்யான இன்பம் என்பது.
அந்த தன்னறத்தை இயற்றி நிறைவை அடையாத ஒவ்வொருவரும் அதிருப்தியும் கசப்பும் நிறைந்தவர்களாகத்தான் எஞ்சுவர். அந்த அதிருப்தியை கசப்பையும் தங்களுடைய வாரிசுகள் மேல் ஏற்றி வைத்து அன்பின்மையையும் வெறுப்பையும் திரும்ப ஈட்டி கொள்வார்கள். அந்த இருளில் இறுதி காலத்தில் திளைத்து மடிவார்கள். அவர்கள் ஒவ்வொருவரிடம் திரும்பத் திரும்ப இந்த காணொளிகள் வழியாக நான் சொல்வது ‘உங்களுக்கான உலகத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்’ என்பதையே
இன்று ஒருவரின் அறுபது வயதில் அவருடைய பிள்ளைகள் அவர்களின் வாழ்க்கை அமைத்துக் கொண்டிருப்பார்கள். அவருக்கென்று ஒரு தனி வாழ்க்கை இல்லை என்றால், அவர் பிள்ளைகளின் வாழ்க்கையில் ஓர் ஒட்டுண்ணியாக கடித்துத் தொங்கிக்கொண்டிருக்க நேரிடும். அப்படி உலகியலுக்காக வாழ்ந்தாலும் ஒரு கட்டத்தில் ‘என் கடன் முடிந்தது, என் வாழ்க்கையை நான் இனியாவது வாழ வேண்டும்’ என்று சொல்பவர்கூட ஒருவகையில் விடுதலையை அடைய வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் விடுபடுவதற்கான விழைவாவது உருவாகியிருக்கிறது. அது ஒரு சிறு பொறி. அதுகூட போதும்.
நினைவில் நிறுத்துக, கடமைகளில் முதன்மையானது ஒருவர் தனக்குத் தானே நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய கடமைதான். அதை தற்கடமை என்று சொல்லலாம்.
பூவை செங்குட்டுவன்
தமிழின் முருகபக்திப் பாடல்களில் மிகப்புகழ்பெற்ற பத்தில் இரண்டு பாடல்கள் ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’ மற்றும் ‘திருப்புகழை பாடப்பாட’ . இரண்டையும் எழுதியவர் பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன். திராவிட இயக்க ஆதரவாளராக இருந்து ‘கருணையும் நிதியும் ஒன்றால் சேர்ந்தால் கருணாநிதி’ போன்ற பாடல்களை எழுதியவரும் அவரே
பூவை செங்குட்டுவன்
பூவை செங்குட்டுவன் – தமிழ் விக்கி
ரமேஷ் பிரேதன் விருது- எதிர்வினைகள்
அன்புள்ள ஜெ,
ரமேஷ்– விருதுகள் பற்றி நீங்கள் எழுதிய கட்டுரை கண்டேன். இந்த விருதுகள் பற்றிய கருத்தை ஒரு நண்பர் ஆவேசமாகச் சொன்னார். “எவ்ளவோ நல்ல எழுத்தாளங்க இருக்காங்க” என்றார்.
நான் சொன்னேன். “நீங்க உங்களை தவிர அஞ்சு எழுத்தாளர் பேரைச் சொல்லுங்க…” கூடவே சேர்த்துக்கொண்டேன். “ஆனா அவங்களைப் பத்தி நீங்க முன்னாடியே ஒரு பத்தியாவது எழுதியிருக்கணும். இப்ப அவங்க ஏன் முக்கியமானவங்கன்னு அவங்களோட புத்தகங்களை முன்வைச்சு ஒரு பத்து நிமிஷமாவது பேசணும்”
அவர் திகைத்துவிட்டார். இங்கே எவரும் எந்த நூலைப்பற்றியும் பேசுவதில்லை. எந்தப் படைப்பாளிகளையும் குறிப்பிடுவதில்லை. ஒரு புத்தகம் வெளிவந்தால் மயான அமைதிதான். ஆனால் ஒரு வம்பு என்றால் பாய்ந்து வருவார்கள். எவ்வளவு சிறிய மனிதர்கள். நினைக்க நினைக்க குமட்டலை அளிக்கும் அற்பர்கள்.
ராஜ மருதுபாண்டியன்
அன்புள்ள ஜெ
உங்கள் கட்டுரை வரும்வரை விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் விருதுகள் பற்றிய விவாதங்களை மட்டும் கவனித்துக்கொண்டிருந்தேன். சரியான விளக்கம் வரும் என்று எதிர்பார்த்தேன். கண்டிப்பாக உங்களிடம் விரிவான விளக்கம் இருக்கும். போகிறபோக்கில் விஷ்ணுபுரம் அமைப்பு முடிவெடுக்காது என்ற நம்பிக்கை இருந்தது. இத்தனை விரிவான கணக்கீடும் விவாதங்களும் நிகழ்ந்த பின்புதான் இந்த விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன என்பதே இந்த விருதுகளின் மதிப்பை காட்டுகிறது.
விஷ்ணுபுரம் அமைப்புகளின் விருதுகளைத் தீர்மானிப்பதில் இளையதலைமுறை வாசகர்களின் பங்களிப்பு இத்தனை தூரம் இருப்பதும் மிக மகிழ்ச்சியான ஒன்று.
எம்.பாஸ்கர்
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் ரமேஷ் விருது பெற்றுள்ள படைப்பாளிகள் பற்றிய சுருக்கமான அறிமுகம் வாசித்தேன். நான் தேவிலிங்கம் எழுதிய நெருப்பு ஓடு நாவல் வாசித்துக்கொண்டிருக்கிறேன். மிக வித்தியாசமான ஒரு படைப்பு.
ஆர். குமரேஷ்
விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 1 – தேவி லிங்கம் விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 2 – சஜு விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 3 – செல்வகுமார் பேச்சிமுத்து விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 4 – அசோக் ராம்ராஜ் விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 5 – அழகிய மணவாளன்கீதையை அறிதல், கேட்டலும் வாசித்தலும்- கிரி
அன்புள்ள ஆசிரியருக்கு,
கோவையில் நீங்கள் ஆற்றிய கீதை உரைகளை பலமுறை கேட்டிருக்கிறேன். வீட்டில், காரில் செல்லும் போது, நடைபயிற்சியின்போது. முக்கியமான வரிகள் அதைக்கேட்ட இடத்துடன் என் மனதில் பதிந்திருக்கிறது. அந்த இடத்திற்குச் செல்லும்போது அந்தந்த வரி மனதில் எழுந்துவருவதையும் உணர்ந்திருக்கிறேன்.
கீதையை அறிதல் கட்டுரைகள் தளத்தில் வெளியானபோது சில பகுதிகளை வாசித்தேன். அது உங்கள் குரலாகவே எனக்குள் ஒலித்தது.
இம்முறை வெள்ளிமலையில் வாசிப்புப்பயிற்சி முடிந்தவுடன், தொடர்பயிற்சிக்க்காக கீதையை அறிதல் புத்தகத்தை வாசிக்கலாம் என சில நண்பர்கள் முடிவுசெய்தோம். அதன்படி அவரவர் எழுதிய சுருக்கக்குறிப்புகளை வாட்சப் குழுவில் பகிர்ந்துகொள்ளத்துவங்கினோம்.
கீதையை அறிதலை குறிப்புகள் எடுக்கத் தொடங்கியதுமே என் பிழை புரிதல்களும், இடைவெளிகளும் தெரிய ஆரம்பித்தன. தனித்தனி செய்திகளாக, கருத்துக்களாக, உவமைகளாக, கதைகளாக நினைவில் வைத்திருந்தேனே தவிர அதை சரியாக தொடர்புருத்திக்கொள்ளவில்லை. அதன் தர்க்கக்கட்டமைப்பும், தத்துவார்த்தக்கட்டமைப்பும் தெளிவாகி வந்தது.
இதுவரை காதால் கேட்க்கும் விஷயங்களையே நான் சரியாக உள்வாங்குகிறேன், புரிந்துகொள்கிறேன் என்று நினைத்திருந்தேன். ஆனால் புத்தகமாக வாசிக்கும்போது உங்கள் உரையின் மொத்த கட்டமைப்புமே புரிகிறது என்று கண்டுகொண்டேன். இந்த காரணத்திற்காக இப்புத்தகத்தை நண்பர்கள் அனைவருக்கும் பரிந்துரை செய்வேன். நான் உங்கள் கீதை உரையை பலமுறை கேட்டவன், எல்லாவற்றையும் புரிந்துகொண்டேன் என்னும் ஆணவத்தை இந்தப்புத்தகம் உடைப்பதை நாமே உணர்ந்து ரசிக்கலாம்.
இன்று அதிகாலை 4 மணிமுதல் சரியாக தூக்கம் வராமல், அடுத்தடுத்த அத்தியாயங்களைப் படிக்கலாம் என அமர்ந்தேன்.
குறிப்பாக நான்காம் நாள் உரையின் கட்டுரைகள். எவ்வளவு மேலோட்டமாக தகவல்களைமட்டும் நினைவில் வைத்திருந்து இருக்கிறேன்!. கீதையின் புனைவுப்பாவனைகளுக்கு அப்பால் சென்று அறிய வேண்டிய மறைஞானப்பொருள் பற்றிய வரிகள், சர்வமிதம் ஜகத் மோகிதம், ஈஸோவாஸ்வம் ஜகத் சர்வம் இவைகளிலிருந்து நீங்கள் சென்ற தொலைவு. மூன்று வகையான காம்ங்களைப் பற்றி குறிப்பிட்டது. புகை நெருப்பை மறைப்பதுபோல, அழுக்கு கண்ணாடியை மறைப்பதுபோல, கருப்பை கருவை மறைப்பதுபோல. இம்முறை தெரிந்துகொள்ளவில்லை, உணர்ந்துகொண்டேன். இதை நீங்கள் உணர்த்தியவிதம் bliss.
முந்தியநாள் சனிக்கிழமை படையலுக்காக வைக்கப்பட்டிருந்த பலவகையான காய்கறிகள், பழங்கள், மலர்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எவ்வளவு வண்ணங்கள், வடிவங்கள், சுவைகள், ஈஸோவாஸ்யம் இதன் சர்வம் என்று கண்ணீருடன் சொல்லிக்கொண்டேன்.
இது அனைத்திலும் உறைகின்ற அதை அறிவேனா தெரியவில்லை. ஆனால், அது வெளிப்படும் இதை அறிகிறேன். இதை உணர்த்திய உங்களுக்கு என் நன்றிகள்.
ஒவ்வொரு முறை உங்கள் பாதம் பணியும்போதும் சங்கடமாக மறுத்துவிடுவீர்கள். இம்முறை அதை அறியும் முகூர்த்தம் எனக்கு வாய்க்கட்டும் என வாழ்த்துங்கள்.
கிரி
ஆஸ்டின்
October 18, 2025
தெற்கு கரோலைனா நூலறிமுக நிகழ்வுகள்
அக்டோபர் 27, திங்களன்று காலை 11 மணிக்கு நீங்கள் கால்ட்டன் கவுண்டி உயர்நிலைப்பள்ளி மாணவர்களிடையே உரையாடுகிறீர்கள். ஆங்கிலத்துறை ஆசிரியர் முனைவர் ஏஞ்சல் டக்கருடன் உங்கள் கதைகள் குறித்தும், இலக்கியப் புனைவுகளை வாசித்தல், புனைவெழுத்தின் நுட்பங்கள் குறித்தும் உரையாடல்; மாணவர்கள் உங்கள் கதைகளைக் குறித்து பேசுவர்; பின் கேள்வி நேரமும் உண்டு.
கால்ட்டன் கவுண்டி உயர்நிலைப் பள்ளி 1400 மாணவர்கள் கொண்டது. நான் இங்குதான் கணிதத்துறைத் தலைவராக இருக்கிறேன். வாசிப்பிலும், புனைவெழுத்திலும் ஆர்வம் கொண்ட மாணவர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள். உங்களைச் சந்திக்க பல மாணவர்களும், ஆசிரியர்களும் ஆர்வமாக உள்ளனர்.
இரண்டாவது நிகழ்வு அன்று மாலை 4 மணிக்கு கால்ட்டன் மெமோரியல் நூலகத்தில் நடைபெறுகிறது. இந்தக் கவுண்டியைச் சேர்ந்த எழுத்தாளர்களின் அமைப்பு “Writers Who Write” என்பது. இதில் உறுப்பினராக உள்ள அனைவருமே குறைந்தது ஒரு நூலாவது எழுதி வெளியிட்டவர்கள். நாவலாசிரியர் பிகே பாட்ஸ் இதன் தலைவர். இவர்கள் மத்தியில் Unsung India என்ற தலைப்பில் மேற்குலகம் அறியாத இந்தியாவின் இலக்கிய, ஆன்மிகப் பக்கங்களை அறிமுகப்படுத்தி உரையாற்ற இருக்கிறீர்கள். இங்கும் கேள்வி நேரம் உண்டு.
அன்புடன்
ஜெகதீஷ் குமார்
Regards
Jegadeesh Kumar
நம் கதாபாத்திரங்களை மாற்றுவோம்
நாம் யார்? நாம் நமக்கே உருவாக்கிக்கொண்ட கதாபாத்திரம் ஒன்று உண்டு. அதையே நாம் என நம்பி முன்வைக்கிறோம். உண்மையில் அந்த கதாபாத்திரத்தையே திரும்பத் திரும்ப நடிக்கிறோம். குடும்பத்தலைவர், அலுவலக ஊழியர் என பல கதாபாத்திரங்கள். ஏன் நாம் அவற்றை மாற்றிக்கொள்ளக்கூடாது?
அமெரிக்காவின் வேரும் நீரும்
சென்ற அக்டோபர் 8 அன்று காலை சான் ஃப்ரான்ஸிஸ்கோ வந்து இறங்கினேன். இலையுதிர்காலத்தில் அமெரிக்கா வருவது சென்ற சில ஆண்டுகளாகவே வழக்கமாக ஆகிவிட்டிருக்கிறது. வழக்கமான பூன் இலக்கிய- தத்துவ முகாம். அது மெல்ல உலகம் முழுக்க பரவி வருகிறது. ஐரோப்பாவில் சென்ற ஜூலையில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் தத்துவ முகாம். வரும் நவம்பரில் பிரிட்டனில். அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவிலும் விஷ்ணுபுரம் சார்பில் ஒரு இந்து தத்துவ வகுப்பு நடத்தும் திட்டம் விவாதத்தில் உள்ளது.
இம்முறை அமெரிக்காவில் கூடுதலாக ஒரு பயணநோக்கமும் உண்டு. என் அறம் கதைகளின் ஆங்கில மொழியககமான Stories of the True அமெரிக்காவில் வெளியாகியுள்ளது, அதை வாசகர்களிடையே கொண்டுசென்று சேர்ப்பதற்கான நூலறிமுக நிகழ்வுகள். ஒரு பெரிய பதிப்பகம் தமிழில் இருந்து ஒரு நூலை வெளியிடுவது முதல்முறை. இந்நூல் பெறும் வரவேற்பே வரவிருக்கும் நூல்களுக்கான வழித்திறப்பாக அமையும். தமிழிலிருந்து குறைந்தது 20 ஆசிரியர்களின் நூல்களை அடுத்த பத்தாண்டுகளில் அமெரிக்கா கொண்டுவர எண்ணம் உள்ளது. அதன்பொருட்டே அடுத்த கோடையில் தமிழ் நவீன இலக்கிய மாநாட்டையும் இங்கே கூட்டவிருக்கிறோம்.
சாரதா -பிரசாத் இல்லத்து சந்திப்புவிமான நிலையத்திற்கே நண்பர் சாரதியும் அவர் மகள் மதுராவும் Stories of the True நூலின் ஒரு பிரதியுடன் வந்திருந்தனர். அந்நூலில் கையெழுத்திட்டு மதுராவுக்கு அளித்தேன். அது ஓர் அழகிய தொடக்கம். அமெரிக்கப்பதிப்பு நூலை நான் அப்போதுதான் பார்த்தேன், இந்தியாவில் எனக்கு பிரதி வந்துசேரவில்லை. மதுரா என் நூலில் சில கதைகளை படித்திருந்தாள். சாரதாவின் பதின்பருவ மகள் அஞ்சலியும் நூலை படித்திருந்தார். இம்முறை சட்டென்று நான் செல்லும் இல்லங்களிலெல்லாம் பதின்பருவத்தினர் என் வாசகர்களாக இருப்பதைக் காண்கிறேன். நான் விரும்பிய தொடக்கமே இதுதான்.
சாரதாவின் இல்லத்தில் ஒரு நண்பர் சந்திப்பு. பிரசாத் முன்னெடுப்பில் அங்கே ஒரு மாதாந்திர இலக்கியக் கூடுகையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். எதிர்பார்த்ததற்கு மேலாகவே தொடர்ச்சியாக அதில் வாசகர்களும் நண்பர்களும் கலந்துகொள்கிறார்கள். அன்று அசோகமித்திரனின் நான்கு கதைகளைப் பற்றிய விவாதம். நான் என் கோணத்தையும் சொன்னேன். அனைவருமே விவாதத்தில் பங்குகொண்டதும், வெவ்வேறு கோணங்களில் கதைகளை ஆராய்ந்ததும், எவரும் தலைப்புவிட்டுப்பேசாமலிருந்ததும் சிறப்பாக இருந்தது. அந்த நண்பர்சந்திப்பை மேலும் எப்படி முன்னெடுக்கலாம் என ஒரு சிறு ஆலோசனை உரையை ஆற்றினேன்.
அன்று காலையில் சான் பிரான்ஸிஸ்கோவின் அருகே சான் மட்டேயோ (புனித மத்தேயூ) நகரின் புகழ்பெற்ற புத்தகக்கடையான Barnes and Noble ல் ஒரு நூலறிமுகச் சந்திப்பு. நான் அதை அத்தனை பெரிய தனிக்கட்டிடம் என நினைத்திருக்கவில்லை. ஏறத்தாழ எழுபதுபேர் வரை வந்திருந்தார்கள். முகப்பிலேயே நிகழ்வு. அஞ்சலி என் நூலில் இருந்து அவருக்கு உகந்த ஒரு பகுதியை வாசித்தார். (உலகம் யாவையும்). தூய அமெரிக்க உச்சரிப்பில் அதைக் கேட்க ஏதோ அன்னிய நூல் போலிருந்தது.
முதல் கேள்விகளை அஞ்சலி எழுப்பினார். இன்றைய உலகச்சூழலில் உலகம் யாவையும் கதை முன்வைக்கும் ஓருலகம் என்னும் கொள்கைக்கு என்ன இடம்? நான் இவ்வாறு பதில் சொன்னேன். அமெரிக்கா என்பது வணிகத்தின், தொழிலின், தேசியவாதத்தின் நிலம் மட்டுமல்ல என்றேன். அது ‘எக்ஸெண்டிரிக்கு’களின் நிலமும் கூட. எல்லைகளை மீறிச்சென்றுகொண்டே இருப்பவர்கள் அவர்கள். உண்மையில் அவர்கள்தான் அமெரிக்காவை உருவாக்கியவர்கள். அவர்களில் ஒருவர்தான் உலகம் யாவையும் கதையின் நாயகன்.
சென்ற நூற்றாண்டில் உலகை காலனியாக்கிச் சுரண்டியது ஐரோப்பா. ஆனால் அதே ஐரோப்பாதான் உலகுக்கே ஜனநாயகத்தை, மானுட உரிமையுணர்வை உருவாக்கி அளித்தது. இந்தியாவின் மாபெரும் சிந்தனையாளர்கள், குறிப்பாக காந்தி, அந்த இரண்டாவது ஐரோப்பாவையே ஏற்றுக்கொண்டனர். அதேபோல நான் அந்த இரண்டாவது அமெரிக்காவையே முன்வைக்கிறேன். அந்த அமெரிக்கா அழியாது. அது உலகின் ஒளியென என்றுமிருக்கும். அவ்வாறு பல கேள்விகள்.
சான் மட்டாயோஅன்று மாலையே சாக்ரமண்டோ நகரிலுள்ள சின்மயா மிஷன் கூடத்தில் இன்னொரு இலக்கிய உரை மற்றும் சந்திப்பு. நண்பர் அண்ணாத்துரை அதை ஏற்பாடு செய்திருந்தார். இளையதலைமுறையைச் சேர்ந்த மூன்றுபேர் கதைகளைப் பற்றிப் பேசினர். தமிழில் சிறப்பாகப் பாடினர். தமிழில் பேச்சைத் தொடங்கினார்கள். ஆனால் தொடர்ந்து அமெரிக்க ஆங்கிலத்தில் கதைகளைப் பற்றிப் பேசினர். சிவநேயன், சமீக்ஷா, அம்ருதா பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினார்கள்.உணர்ச்சிகரமாகவும் ஈடுபாட்டுடனும் அவர்கள் பேசியது எழுத்தாளனாக மனநிறைவூட்டும் அனுபவம். அதன்பின் நான் கேள்விகளுக்குப் பதில் சொன்னேன். நூல்களில் கையெழுத்திடும் நிகழ்வு.
நாங்கள் நடத்தவிருக்கும் தமிழ் நவீன இலக்கிய மாநாடு அடுத்த கோடையில் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நிகழவுள்ளது. அதன் முக்கியத்துவம் என்ன என்பதை கேள்விகளுக்குப் பதிலாகச் சொன்னேன். சென்ற அமெரிக்க இலக்கிய மொழிபெயர்ப்பாளர் சங்க (ஆல்டா) விருதுவிழாவுக்கு அவ்விருதுக்காக சர்வதேச அளவிலான இறுதிப்பட்டியலில் இருந்த என் மொழிபெயர்ப்பாளரான பிரியம்வதா வந்தபோது அவர்களுக்கு தமிழ் என்னும் மொழி இருப்பதே தெரியவில்லை என்பது தெரியவந்தது.
தமிழ் மாநாட்டுக்கு நன்கொடை செக், சாக்ரமண்டோகிட்டத்தட்ட ஏழுலட்சம் தமிழர்கள் அமெரிக்காவில் இருக்கிறோம். தமிழுக்கு, தமிழ்ப்பண்பாட்டுக்கென இங்கே ஓர் இடம் இல்லை. அந்த இடத்தை அரசியல் வழியாக, கொண்டாட்டங்கள் வழியாக அடைய முடியாது. நவீன இலக்கியம் மட்டுமே அதை உருவாக்கி அளிக்கும். அதுவும் தரமான நவீன இலக்கியம். நாம் வெற்றுப்பெருமை பேசினால் நம் வாரிசுகளே நம்மை பொருட்படுத்த மாட்டார்கள். நம் பலவீனங்களை, இருளை நாம் ஒளிக்கவேண்டியதில்லை. ஏனென்றால் அவற்றையெல்லாம் அமெரிக்கக் கல்விமுறையே நம் வாரிசுகளுக்குச் சொல்லிக்கொடுக்கிறது. அந்த இருளில் இருந்து நாம் மீண்டகதையை, நம் பண்பாட்டிலுள்ள அடிப்படையான ஒளியை நாம் முன்வைக்கவேண்டும். அத்தகைய கதைகள் உள்ள தொகுதியே Stories of the True.
அந்நூல் அமெரிக்காவில் எனக்கு உருவாக்கியளிக்கும் வெளிச்சத்தை அனைத்து நவீன இலக்கியத்தை நோக்கியும் ஈர்க்கும் முயற்சியே எங்கள் இலக்கிய மாநாடு. அதை நியூயார்க்கில் நடத்துவது இங்குள்ள பண்பாட்டின் கவனத்தை ஈர்க்கும்பொருட்டே. அதற்கு இங்குள்ள அனைத்துத் தமிழ்ச்சங்கங்களின் ஒத்துழைப்பும் தேவை. அவர்கள் நடத்துவதுபோன்ற பெருவாரியான மக்கள் பங்கேற்குள்ள விழாக்கள் வேறொருவகையில் தேவைதான். அவை தமிழ்ச்சமூகத்தை ஒருங்கிணைக்கின்றன. ஆனால் இவையே நம் பெருமிதங்களை உலகறியச்செய்பவை. எளிய அரசியலை கடந்து இந்த வகையான முயற்சிகளை அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்கள் ஆதரிக்கவேண்டும் என்று கோரினேன்.
நியூயார்க் விழாவுக்காக எங்களுக்கு சாக்ரமண்டோ தமிழ் அமைப்புகள் சார்பாக வாக்களிக்கப்பட்ட தொகையை அளித்தனர். ஓர் அலங்காரச் செக் ஆக அந்த தொகை அளிக்கப்பட்டது. அது மிக மனநிறைவூட்டும் ஒரு நிகழ்வாக அமைந்தது.
அங்கிருந்து நேராக வால்நட் கிரீக் வந்து நண்பர் பிரமோதினி- விஸ்வநாதன் இல்லத்தில் தங்கினேன். அது மறுநாள் அங்கே ஒரு நாவல் பயிலரங்கு. மானசா பதிப்பகம் சார்பில் சென்னையில் நிகழ்ந்த நாவல் பயிலரங்கின் அதே வடிவம். ( Manasa Lit Prize ) பெண்களுக்கான நாவல்போட்டிகளை மானசா பதிப்பகம் அறிவித்துள்ளது. அமெரிக்கவாழ் இந்தியர்களும் கலந்துகொள்ளலாம்.
காலை பத்து முதல் மாலை 5 வரை பயிற்சி நடைபெற்றது. நாவல் வடிவங்களை பொதுவாக மூன்றாகப் பிரிக்கலாம். சிறியநாவல், பெருநாவல் மற்றும் மாற்றுநாவல். பின்னிரண்டுக்கும் வடிவம் இல்லை. வடிவ இலக்கணம் உடையது சிறிய நாவல் மட்டுமே. அதன் வடிவ வரையறை, எழுதும் முறை ஆகியவற்றை கற்பித்தேன். முப்பத்தைந்துபேர் கலந்துகொண்டனர்.
நாவல் பயிலரங்கு குழுவினர்மறுநாள் நண்பர் ஶ்ரீராமின் காரில் லாஸ் ஆஞ்சல்ஸ் நோக்கி பயணம். மேற்குக் கடற்கரை ஓரமாகவே முழுநாளும் காரில் சென்றோம். உடன் ஓவியர் அருண் இருந்தார். கடற்கரையை தொட்டும் விலகியும் பல ஊர்கள் வழியாகச் சென்ற அந்தப் பயணம் அழகியது. இலையுதிர்காலம் அமெரிக்காவில் மென்மையான குளிரும், சுடர்விடும் வானொளியும் கொண்ட அழகிய பருவம். எப்போதுமே ஒரு மாலைநேர மனநிலை நீடிக்கும். பசிபிக் கடல் ஆழ்ந்த நீலமும், அலையில்லா பெருவிரிவுமாக உடன் வந்துகொண்டே இருந்தது.
பல இடங்களில் கடல் உள்வளைந்து சிறிய குடாக்களாகியிருந்தது. மலைகளின் விளிம்புகளில் இருந்து நேரடியாக கடல் நோக்கி இறங்கியது நிலம். ஓரிடத்தில் யானைச் சீல்களும், கடற்சிங்கங்களும் கரையில் கரிய கடற்பறவைகளுடன் ஊடுகலந்து நெளிந்துகொண்டிருந்தன. நீர்நிறைந்த தோற்கலங்கள் போல ஒரு கணமும், மிகப்பெரிய குழந்தைகள் போல மறுகணமும் தோன்றச்செய்தன அவை. கரையில் அவை புழுக்களை போலத் தவழ்ந்தன. நீரில் துள்ளி அம்புகள் போல எழுந்து விழுந்து மூழ்கி மீண்டும் சீறிக்கிளம்பின.
ஶ்ரீராம்- சிவப்ரியா இல்லத்தில் நண்பர்கள் வந்து சந்தித்தனர். நான் இந்துவா கட்டுரையின் தொடக்கக் கேள்வியை எழுப்பிய காளிராஜ் இங்குதான் இருக்கிறார். அக்கட்டுரை ஆங்கிலம் வழியாகவும் இன்று இந்தியாவெங்கும் புகழ்பெற்றுள்ளது. (நான் இ துவா?) காளிராஜ் அவர் மகளுடன் வந்து சந்தித்தார். அவர் மகளும் என் நூலை ஆங்கிலத்தில் வாசித்திருந்தார். அருணுடன் அருகே உள்ள கடற்கரைக்கும் குன்றுகளுக்கும் சிறிய பயணங்கள் மேற்கொண்டோம்.
யூனிவர்சிட்டி ஆஃப் சதர்ன் கலிஃபோர்னியாவில் ஒரு நிகழ்வு. ஐம்பது பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டார்கள். பெரும்பாலும் வெவ்வேறு ஆசிய, ஆப்ரிக்க நாடுகளை பூர்விகமாகக் கொண்டவர்கள். இந்தியர்களும் உண்டு. ஆனால் அனேகமாக அனைவருமே அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த அமெரிக்கக் குழந்தைகள்.
மாணவிகள் ஶ்ரீநிதியும், பெக்கியும் என்னை அறிமுகம் செய்து என் நூல் பற்றிக் கேள்விகள் கேட்டனர். அதன்பின் பங்கேற்பாளர்களிடமிருந்து கேள்விகள். ஒரு மணிநேரம் கேள்விபதில், அதன்பின் நூல்களில் கையெழுத்து. அமெரிக்காவில் ஒரு பல்கலையில் ஒரு நூலறிமுக நிகழ்வுக்கு அத்தனைபேர் வந்திருந்தது மிக அரிய நிகழ்வு என்றனர். நான் ஓர் அயல்நாட்டு எழுத்தாளன் என்னும் கவற்சியே காரணம் என நினைக்கிறேன்
கேள்விகள் பெரும்பாலும் இன்றைய அமெரிக்க இளம்தலைமுறையின் வினாக்கள். முதன்மையாக ‘வேர்’ குறித்தது. நான் ஒரு நிலத்தில், ஒரு நாட்டில், ஒரு பண்பாட்டில் மாறாத்தொடர்பு கொண்டிருப்பதே வேர் என நினைக்கவில்லை என்று பதில் சொன்னேன். நம் கற்பனைக்கும் தர்க்கத்துக்கும் அப்பாற்பட்ட கடந்தகால ஆழத்துடன் நாம் கொண்டிருக்கும் தொடர்பே வேர் என்பது. அது ஆழ்படிமங்களாக நம் கனவில் நீடிக்கவேண்டும். வேர் எங்குமாகலாம். உலகம் முழுக்க வேர் பரவியிருக்கலாம். என் வேர் கன்யாகுமரியில் மட்டுமல்ல இமைய மலையில் கூடத்தான். அதைப்போலவே மௌண்ட் சாஸ்தாவும் எனக்கு புனிதமானது, ஆழமானது என்றேன்.
இந்நூற்றாண்டு நம்மை சராசரிப்படுத்திக்கொண்டே இருக்கிறது என்றேன். உலகம் முழுக்க அந்தச் சராசரித்தன்மை பரவிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மூலையையும் சென்றடைகிறது. உலகமே ஒரே முகம் கொள்கிறது. இன்று நாம் கொள்ளவேண்டிய முதன்மை எதிர்ப்பு என்பது நம்மை எளிய சராசரிகளாக ஆக்கும் ஊடகங்கள், இலக்கியங்கள் ஆகியவை. எனவே எவை புகழ்பெற்றவையோ அவற்றை ஐயப்படவேண்டும். எவை அனைவராலும் முன்வைக்கப்படுகின்றனவோ அவற்றை கடந்து செல்லவேண்டும்.
வேர் என்றும் தனித்தன்மை என்றும் இரண்டு சொற்களாகச் சொல்லப்பட்டாலும் அவை ஒன்றே. நம்மை நாமாக நாமே வகுத்துக்கொள்வது. நம்மை இன்னொரு உலகளாவிய பெரும் சக்தி வகுத்துக்கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவிப்பது. அது தொழில்நுட்பமோ, கல்வியோ, சமூகமுறைமையோ, அரசியலோ எதுவானாலும். ஆகவே எல்லாவகையான கிறுக்குகளும் உயர்ந்தவையே என்பதே என் எண்ணம் என்று நான் சொன்னேன். நாம் இன்று முன்வைக்கவேண்டியது நம் பண்பாட்டின் அசல்சுவையை. அதை மேற்குக்காக எளிமையாக்க வேண்டியதில்லை. அவர்களிடம் எது சென்று சேருமோ அதைச் சொல்லவேண்டியதில்லை. அவர்கள் சற்று முயன்று நம்மை நோக்கி வரட்டுமே.
அந்த உரையாடலே சிறப்பாக அமைந்தது. என் ஆங்கில உச்சரிப்பு பற்றிய தயக்கம் இருந்தமையால் என் சொற்றொடர்களை நிதானமாகவும், ஒன்றுக்கு இரண்டுமுறையும் சொன்னேன். ஆகவே ஒருவகையான ‘தீர்க்கதரிசனத்தன்மை’ அவற்றுக்கு வந்ததோ என எண்ணிக்கொண்டேன். என்னை ஒரு குலப்பாடகன், நான் பேராளுமைகளையும் விழுமியங்களையும் பாடுபவன் என்றே உணர்கிறேன் என்றேன்.
ஒரு பெண், இந்தவகை எழுத்து இதழியலில் இருந்து எப்படி வேறுபடுகிறது என்றார். இதழியலும் இலக்கியமாக நோபல் கமிட்டியால் இரண்டுமுறை ஏற்கப்பட்டுள்ளது என்றேன். ஆனால் இதழியல் வெளியே இருந்து பார்ப்பது. இலக்கியம் உள்ளிருந்து பார்ப்பது, உள்ளே சென்று வாழ்ந்து அறிவது. நூறுநாற்காலிகள் கதை ‘அவன்’ என்று பேசவில்லை, ‘நான்’ என்றே பேசுகிறது என்றேன். அந்த தன்மயபாவனையே இலக்கியத்தின் அடிப்படை. வாசகனும் அதேபோல அந்த வாழ்க்கைக்குள் நுழைந்து வாழமுடிகிறது. அது அறியும் அனுபவம் அல்ல, வாழும் அனுபவம்.
நான் ஓர் எண்ணம் கொண்டிருந்தேன், இளையதலைமுறை ஒரு நிலம், ஒரு நாட்டுடன் தொடர்பற்றதாக உருவாகி வருகிறது என. குறிப்பாக அமெரிக்க இளையதலைமுறை. எதிர்கால உலகக்குடிமகன் அப்படிப்பட்டவன் என எண்ணியிருந்தேன். ஆனால் என் உரை முடிந்தபின் மாணவர்கள் பேசியபோது நேர்மாறாக ஒவ்வொருவரும் தங்கள் வேர்நிலம் குறித்த ஒரு புரிதல், தேடல் அல்லது ஏக்கம் கொண்டிருப்பதை உணரமுடிந்தது.
மொராக்கோ நாட்டுப் பெண் ஒருவர் நான் சொன்ன ‘அசல் சுவை’ என்பதை தன் நாட்டை வைத்து புரிந்துகொள்வதாகச் சொன்னார். வங்காளத்தில் இருந்து கிளம்பி அமெரிக்காவில் வேர்கொண்ட குடும்பத்து இளைஞர் ஒருவர் ‘வங்கத்தை தேடிக்கண்டடைந்து ஒரு தொடர்பை அடையவேண்டுமா என யோசிக்கிறேன்’ என்றார். அந்த கருத்துக்கள், அவற்றிலிருந்த உணர்ச்சிகரம் என் எண்ணத்தை நேர் எதிர்த்திசை நோக்கி திருப்பின.
ஶ்ரீநிதி, பெக்கிஆனால் ஓர் இளம்பெண் என்னிடம் “நீங்கள் வந்து அமர்ந்ததைக் கண்டதுமே இதோ எங்கள் இடம் என்ற எண்ணம் வந்தது” என்றதுமே நெகிழ்ந்து கண்ணீர் மல்கிவிட்டார். அவரை ஶ்ரீநிதி அணைத்துக்கொள்ள கண்ணீரைத்துடைத்துக்கொண்டு சிரித்து “நமக்கான ஓர் அடையாளம். நமக்கான குரல்” என்றார்.அவர் மிகநல்ல மாணவி என்றும், கல்லூரிப் பேரவை உறுப்பினர் என்றும் கேள்விப்பட்டேன். அந்த நெகிழ்வை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. அது எனக்கு அவர்களைப் பற்றிய என் புரிதலை வேறுவகையில் தொடங்கவேண்டும் என்னும் எண்ணத்தை உருவாக்கியது.
கா.பெருமாள்
மலேசிய எழுத்தாளர், வானொலித் தொகுப்பாளர், ஓவிய கலைஞர் . கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், வில்லுப்பாட்டு போன்றவற்றை எழுதியுள்ளார். இவரது துயரப்பாதை நாவல் மலேசியாவில் கவனம் பெற்ற படைப்பு.
கா.பெருமாள் – தமிழ் விக்கி
பிரபந்தம், ஒரு வகுப்பு, ஒரு தளம்
வணக்கம் !
உங்களுக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ தெரியவில்லை.
சென்ற ஆண்டு குருபூர்ணிமாவில், அந்தி மாலையில், வெள்ளிமலையில் உங்கள் அருகாமையில் நண்பர்கள் சூழ அமர்ந்து உங்கள் உரை தொடங்குவதற்கு முன் கபீர் தாசரின் பாடலைப் பாடியது பசுமையாய் நினைவில் இருக்கிறது. நான் உங்களை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாய் ஆசைப்பட்டுக் கொண்டிருந்தது நிகழ்ந்ததில் எனக்கு நிறைவாக இருந்தது. உங்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். 2022 ஆம் வருடம் குருபூர்ணிமாவிற்கு வெண்முரசின் நீலத்தில் சில பகுதிகளை இணையம் வழியாக வாசித்தோம்.
அதன் பின் அதில் அழகியல் தாண்டி தத்துவத்தைப் புரிந்து கொள்ள ஜாஜாவின் உதவியை நாடினோம். முழு நீலத்தையும் அதன் அழகியல், நாடகீய தருணங்கள், தத்துவப் பார்வை என ஜாஜாவுடன் கலந்துரையாடி வாசித்து மகிழ்ந்தோம். நீலத்தை வாசிக்கும்போது ஆழ்வார்களின் பாடல்களை ஜாஜா மேற்கோள் காட்டுவார்.
புதிய அறிமுகங்கள், திறப்புகள் என மகிழ்ந்த தருணங்கள் அது.
அதிலிருந்து நாம் ஆழ்வார்களை வாசித்தால் என்ன என்று ஆர்வம் எழுந்தது அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் மணிநீலம் பிரபந்தம் என்ற குழுமம். அதிலிருப்பது இந்திய, அமெரிக்க விஷ்ணுபுரம் நண்பர்கள்தான். அந்த அமர்வுகளில் நானும் பார்கவி, மற்றும் சில நண்பர்கள் சில பாடல்களைப் பாடுவதுண்டு. ஜாஜா சொல்வார், “வாசித்துக் கேட்பதை விட பாடிக் கேட்கும்போது அப்பாடலின் பொருள் உடனே நம்மை வந்தடைகிறது“, என்று. அதைக் கேட்டு என் கணவருக்கு நாலாயிரம் பாடல்களையும் கர்நாடக அல்லது இந்துஸ்தானியில் பாடல்களைப் பாடி வெளியிடும் முயற்சி செய்தால் என்ன என்று ஆரம்பித்ததுதான் இது. ஜாஜாவும் நண்பர்களும் உற்சாகம் அளித்தனர்.
இப்போதுதான் அதற்குரிய இணையதளத்தை வடிவமைத்திருக்கிறோம். நம்முடைய விஷ்ணுபுரம் குழுமங்களில் பாடக்கூடிய நண்பர்கள் முடிந்த பாடல்களைப் பாடி உதவி செய்யக் கேட்டிருக்கிறோம். இது முழுக்க முழுக்க பக்தி இலக்கியத்தை இசையுடன் தர எடுக்கும் லாப நோக்கமற்ற முயற்சி. உங்களுடைய ஆசியை வேண்டி நிற்கிறோம். இதை முடிக்க சில காலம் ஆகலாம்.
4000 பாடல்களையும் கர்நாடக அல்லது இந்துஸ்தானியில் பாடல்கள் பாடப்பட்டவுடன் அவற்றைத் தொகுத்து விட்டு உங்களிடம் சொல்கிறேன். உங்களுடைய ஆசியை வேண்டி நிற்கிறோம். அது இருந்தால் போதும் வாழ்வை நிறைவாக்கக் கூடிய செயல் செய்ய. நன்றி!
என்றும் பிரியமுள்ள வாசகி,
ஜமீலா.G
பிரபஞ்சமும் நம் வாழ்வும், கடிதம்
உங்கள் காணொளிகளில் நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் உங்களிடம் வெவ்வேறு தரப்பிலிருந்து உரையாடிக் கொண்டே இருக்கிறார்கள் என்பதுதான் .உங்களுக்கு அவரிடம் சொல்வதற்கு நிறையவே இருக்கிறது. உங்களுடைய பார்வையை முன்வைக்கிறீர்கள். ங்கள் பார்வையை விரிவாக்கம் செய்யும்பொருட்டு நீங்கள் செய்து கொண்டிருக்கும் பயணங்களும் அதில் தெரிகின்றன.
பிரபஞ்சமும் நம் வாழ்வும், கடிதம்
I came to know that you are conducting classes on Vedanta philosophy and other religious philosophies through your United Wisdom endeavor. Are you aware of the significant oversight you might be committing?
There is a mistake in your teaching.Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers


