தற்கடமை
மானுட மட்காக்குப்பைகள்
ஒரு கேள்வி. ஒருவர் தன்னுடைய குடும்பத்தை மட்டுமே முழுநேரமாக பேணினார் என்றால்; பிள்ளைகளை பற்றி மட்டுமே எண்ணி, பிள்ளைகளை நல்ல நிலையில் நிறுத்துவதை மட்டுமே செய்து வாழ்க்கையை முடித்தார் என்றால்; அவர் முக்தி அடைய தகுதியானவர் என்று இந்து மெய்யியல் சொல்லுமா? அதாவது மரபான இந்து நம்பிக்கைப்படியே அவர் முக்திக்கு அருகதைகொண்ட ‘சாத்விகர்’ தானா? அல்லது கூடுதலாக கடைசிக்காலத்தில் கொஞ்சம் நாமஜெபம், கொஞ்சம் கோயில்குளம் வழிபாடு, கொஞ்சம் பிரார்த்தனைகள் மட்டும் செய்தால் போதுமா?
விரிவாக சித்தரிக்கிறேன். ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத் தலைவர், ஒரு வேலையும் வாழ்வதற்கான அடிப்படை வசதிகளையும் கொண்டவர். அவர் தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் ஊர் மெச்சும்படி மருத்துவம் அல்லது ஐஐடியில் சேர்க்க வேண்டும், வெளிநாட்டு வேலைக்கு அனுப்பவேண்டும் என்பதை மட்டுமே இலக்காகக்கொண்டு வாழ்கிறார். ஒரு பைசாகூட வீணடிக்கவில்லை. தன்னைப்பற்றி எண்ணியதே இல்லை. அவர்கள் இருவரையும் அவர் உயர்ந்த பொறுப்புகளில் ஏற்றிவிட்டு, அவர்களுக்குச் செய்ய வேண்டிய சமூகக்கடமைகள் அனைத்தையும் செய்துவிட்டார் என்று கொள்வோம்.
நம் பொதுப்பார்வையின்படி அவர் தன் கடமையைச் செய்தவர். சமூகம் மதிக்கும் ஒன்றை நிகழ்த்தியவர். நடைமுறையில் ஒரு தியாகி. கடமையைச் செய்தபின் அவர் வயோதிகத்தில் கோயில்களுக்குச் செல்கிறார். சில அறச்செயல்களில் ஈடுபடுகிறார். நோன்புகள் நோற்கிறார். அதாவது அவர் இங்கே அனைத்தையும் செய்து முடித்து, விண்ணுலகம் செல்வதற்குரியவற்றையும் செய்கிறார். சரி, அவர் விண்ணகம் செல்வார், அல்லது முக்தி அடைவார் என்று இந்து மரபு சொல்லுமா?
இந்து மத அடிப்படைகளை கற்ற ஒருவருக்கு தெரியும், ஒருபோதும் அப்படி இந்து மரபு சொல்லாது. அறிவற்ற பௌராணிகர்கள் அல்லது பேச்சாளர்கள் தவிர எந்த மத அறிஞரும் அதைச் சொல்ல மாட்டார். அந்த தந்தை தன் உலகியல் கடமைகளை மட்டுமே செய்தவர், அதற்கப்பாலுள்ள இரு கடமைகளை செய்யாதவர், ஆகவே முக்திக்கு அல்லது விண்ணுலகுக்குச் செல்லமுடியாதவர். அந்த இரண்டு கடமைகள் இவை. ஞானத்தை தேடி முன்னகர்ந்து அகவிடுதலையை அடைதல், வாழ்நாளெல்லாம் நற்செயல்களைச் செய்து புண்ணியத்தை ஈட்டிக்கொள்ளுதல். உலகியலை விரும்புபவர் உலகியலிலேயே உழல்வார். ஆகவே அவர் திரும்பவும் அதே உலகியல்சுழற்சியில்தான் பிறந்து விழுவார் என்றுதான் இந்துமரபு அறுதியிட்டு கூறும். உலகியலை வெட்டி விடுதலை அடைவதையே கீதை முதல் நிபந்தனையாகச் சொல்கிறது.
இதே கேள்வியுடன் வந்த முதியவர் ஒருவருக்கு விடை அளிக்கையில் நித்யா பாதி நகைச்சுவையாகச் சொன்னார். “உங்கள் உலகியல் வாழ்க்கையில் உங்களுக்கு முழுநிறைவா?”. அவர் “இல்லை குரு” என்றார். “அந்த அடையப்படாதவற்றை எல்லாம் அடைவதற்காக உங்கள் மனம் தவிக்கிறது அல்லவா”. அந்த நபர் புரிந்துகொண்டு தலையசைத்தார். “பிறகு எப்படி நீங்கள் வீடுபேறு அடைய முடியும்?” என்றார் நித்யா. உலகியல் ஒருபோதும் நிறைவை அளிக்காது. அடையுந்தோறும் அதிருப்தியே வளரும். செய்யுந்தோறும் செயல் மிச்சமிருக்கும். நாம் பிறருடன் நம்மை ஒப்பிட்டுக்கொண்டு மனக்குறைகளையே பெருக்கிக்கொள்வோம். அந்த மனக்குறைகளே நம்மை உலகியலில் கட்டிப்போடும். அதிலிருந்து விலகவே முடியாது. அதில் இருந்து சாவு நம்மை விடுவிப்பதில்லை என்பதே இந்து மெய்யியலின் கூற்று.
உலகியல் என்பது ஒரு வணிகம். ஆகவே அங்கே எதற்கும் விலை உண்டு. உண்மையில் உலகியலில் தியாகம் என்பது கிடையாது. நாம் எவருக்கு எதை அளித்தாலும் நிகரான ஒன்றை திரும்ப எதிர்பார்ப்போம். பிள்ளைகளுக்கான கடமையை தன்னை அப்படியே தியாகம் செய்து நிறைவேற்றிய ஒருவர் அவர்கள் அதற்காக தன்னிடம் நன்றியுடன் இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பதே விலை கோருவதுதான். நாம் ஏதேனும் ஒரு மகிழ்ச்சியை அளித்தே பிறிதொன்றை பெற்றுக்கொள்கிறோம். ஆகவே நாம் அளித்தது எது என்னும் கணக்கு நம்மிடம் எப்போதும் இருக்கும்.
கடமையைச் செய்வதை மட்டுமே வாழ்வென அமைத்துக் கொண்டவர் அதிலிருந்து எந்த நிறைவையும் அடைந்திருக்க மாட்டார். மாறாக அவர் அடைந்திருப்பதெல்லாம் ‘இப்படி இருந்திருக்கலாமே’ என்னும் எளிய் அதிருப்திகளும், ‘இது நிகழ்ந்திருக்கலாமே’ என்னும் விடுபடல்களும் மட்டுமேதான். அந்த அதிருப்திகளையும் விடுபடல்களையும் நிரப்புவதற்காக அவர் மீண்டும் பிறப்பார் என்று நித்யா சொன்னார். அடுத்த பிறவிக்கு கொண்டுசெல்வது அவற்றை மட்டுமே. அவை விதைகள் போல. இந்த பிறவியில் ஈட்டியவை அவை. ‘உள்ளங்கையில் ஒரு பிடி விதைகளை பிடித்துக்கொண்டு மீண்டும் கருப்பையில் இருந்து வெளிவருவீர்கள்’ என்றார் நித்யா. கேள்வி கேட்டவர் வெளிறிப்போனதை நினைவுகூர்கிறேன்.
ஆகவே உலகில் ஈடுபடுபொருவர் அந்த உலகில் மட்டுமே மீண்டும் மீண்டும் உழல்பவராகவே நீடிப்பார். ஒரு புதிர்ப்பாதை போல உலகியல் அவரை முழுமையாக இழுத்து ஈடுபடுத்திக் கொள்ளும். முடிவில்லாமல் சுற்றிவரச் செய்யும். உலகியலில் இருந்து விடுபட வேண்டும் என்ற வேட்கை ஒரு துளியாவது ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் என்றுதான் இந்து மதம் சொல்கிறது. உலகியலில் இருந்து விடுபடுவதற்காக ஒரு அடியை ஏனும் ஒரு எடுத்து வைத்தாக வேண்டும்.
அந்த காலடிதான் வீடுபேறின் தொடக்கம். அதிலிருந்து தான் அவர் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த உலகியலின் சுழற்சியில் இருந்து அடுத்த நிலை நோக்கிச் செல்லமுடியும். அவர் அந்த விழைவுடன் மறைந்தால்கூட அது மீண்டும் ஒரு தொடக்கமாக அடுத்த பிறவியில் தொடரும் என மரபான மதநம்பிக்கை சொல்கிறது. ‘அறஞ்செய விரும்பு’ என்னும் சொல்லின் பொருள் இதுவே. அந்த விருப்பமே அவரை மீட்பது.
ஆகவே உலகில் கடன்களை முழுக்க முற்றாக முடித்த ஒருவர் ஒருபோதும் வீடுபேறு அடைய மாட்டார் என்றுதான் இந்து அடிப்படைகளைக்கொண்டு சொல்ல முடியும். ஆனால் நம்மிடையே இருக்கும் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் உலகியலை மட்டுமே தங்களுடைய வாழ்க்கையின் சாரம் எனக் கொண்டிருக்கிறார்கள். அதுவே வாழ்நாள் சாதனை என நினைக்கிறார்கள். அவர்கள் மாபெரும் ஆன்மீக இருளில் இருக்கிறார்கள்.
மதத்தை விட்டுவிட்டு நடைமுறை நோக்கில் பார்த்தால் கூட ஒருவர் தன்னுடைய வாழ்க்கையின் இறுதியில் ஏதேனும் நிறைவை அடைய வேண்டுமென்றால் அதற்கான வழி ஒன்றே. தன்னுடைய இயல்பு என்ன என்று உணர்ந்து, அந்த இயல்பை நிறைவு செய்யும் செயல்களை செய்து, அதனூடாக தன்னியல்பாகவே ஒரு முழுமையை நோக்கி நகர்வதுதான். ‘நான் வாழ்ந்தேன், நான் இதை இயற்றினேன்’ என்று சொல்ல அவருக்கு ஏதேனும் ஒன்று உலகியலுக்கு அப்பால் இருந்தாகவேண்டும். ஏனென்றால் அங்கே மட்டுமே அவர் மெய்யான இன்பத்தை அடைகிறார். விடுதலையையும் நிறைவையும் அளிக்கும் செயலே மெய்யான இன்பம் என்பது.
அந்த தன்னறத்தை இயற்றி நிறைவை அடையாத ஒவ்வொருவரும் அதிருப்தியும் கசப்பும் நிறைந்தவர்களாகத்தான் எஞ்சுவர். அந்த அதிருப்தியை கசப்பையும் தங்களுடைய வாரிசுகள் மேல் ஏற்றி வைத்து அன்பின்மையையும் வெறுப்பையும் திரும்ப ஈட்டி கொள்வார்கள். அந்த இருளில் இறுதி காலத்தில் திளைத்து மடிவார்கள். அவர்கள் ஒவ்வொருவரிடம் திரும்பத் திரும்ப இந்த காணொளிகள் வழியாக நான் சொல்வது ‘உங்களுக்கான உலகத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்’ என்பதையே
இன்று ஒருவரின் அறுபது வயதில் அவருடைய பிள்ளைகள் அவர்களின் வாழ்க்கை அமைத்துக் கொண்டிருப்பார்கள். அவருக்கென்று ஒரு தனி வாழ்க்கை இல்லை என்றால், அவர் பிள்ளைகளின் வாழ்க்கையில் ஓர் ஒட்டுண்ணியாக கடித்துத் தொங்கிக்கொண்டிருக்க நேரிடும். அப்படி உலகியலுக்காக வாழ்ந்தாலும் ஒரு கட்டத்தில் ‘என் கடன் முடிந்தது, என் வாழ்க்கையை நான் இனியாவது வாழ வேண்டும்’ என்று சொல்பவர்கூட ஒருவகையில் விடுதலையை அடைய வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் விடுபடுவதற்கான விழைவாவது உருவாகியிருக்கிறது. அது ஒரு சிறு பொறி. அதுகூட போதும்.
நினைவில் நிறுத்துக, கடமைகளில் முதன்மையானது ஒருவர் தனக்குத் தானே நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய கடமைதான். அதை தற்கடமை என்று சொல்லலாம்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

