Jeyamohan's Blog, page 28
August 31, 2025
ஓவியத்தைக் கண்டடைதல்

நான் வரைவெதெல்லாம் ஒரு Reference வைத்து அதை மிக தத்ரூபமாக பேப்பரில் present செய்வது மட்டுமே. இதில் என்ன artistic /creative எலிமெண்ட் உள்ளது என குழம்புவேன். இருந்த போதிலும் நான் வரைந்த ஓவியங்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையே அளித்தன. அவற்றை வரையும் போது எனக்கு மிகுந்த மன அமைதி ( therapeutic effect ) உண்டாவதை நான் கவனிக்க தவறியதே இல்லை .
ஓவியத்தைக் கண்டடைதல்
The videos of Egypt are not simple vlogger notes. They have many insights and thought-provoking questions. You stated that various alien forces ignite divisionist tendencies as soon as a nation emerges as economically free, leading to its immediate collapse.
Was it a spiring?August 30, 2025
உளச்சிக்கல்களில் இருந்து வெளியேறும் வழி
முன்பு ஒவ்வொரு நாளும் போராட்டமாக இருந்த நாட்களில் நாம் உள்ளத்தைக் கவனிப்பதில்லை. உள்ளத்திற்கு நேரமும் இருக்கவில்லை. இன்று ஒவ்வொருவரும் அவரவருக்கான உளச்சிக்கல்களில் சிக்கியிருக்கிறோம். முழுமையான உளச்சிக்கல் ஒரு நோய், சிகிச்ழ்சைக்குரியது. ஆனால் நம்மை நாமே அவதானித்து அறியும் உளச்சிக்கல்கள் நாமே சரிசெய்துவிடக்கூடியவை. அவற்றை பகுத்து அறிந்து கொள்ள நம்மால் முடியும் என்றால்போதும். அதற்கப்பால் சில நடைமுறைகளும் தேவையாகின்றன…
மானசா பதிப்பகம், ‘புக் கிளப்’, அலுவலகத் திறப்பு
சைதன்யாவும் கிருபாவும் இணைந்து தொடங்கியிருக்கும் மானசா பதிப்பக அலுவலகம் அடையாறில் உள்ளது. மானசா பதிப்பகம் சார்பில் பெண்களுக்கான ஓர் ஆங்கில நாவல் போட்டி அறிவித்துள்ளனர். 25 வயதுக்குக் குறைவானவர்களுக்கு ஒரு போட்டி. 25 வயதுக்கு மேலானவர்களுக்கு ஒரு போட்டி. அவர்களின் படைப்புகள் மானசா பதிப்பகத்தால் வெளியிடப்படும். முதல்பரிசுகள் தலா ஒரு லட்சம் ரூபாய். (மானசா பதிப்பகம் போட்டி அறிவிப்பு)
யஇந்தியாவின் எல்லா மாநிலங்களில் இருந்தும் தரமான, ஆங்கிலப்புனைவுகள் வந்துகொண்டிருக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வரும் ஆங்கிலப் புனைவெழுத்துக்களே மிகுதி. தமிழகத்தில் இருந்து அதில் பங்கு என அனேகமாக ஏதுமில்லை என்றே சொல்லவேண்டும். இளைய தலைமுறையின் மொழியாகவே ஆங்கிலம் உருவாகியுள்ள இன்று, ஆங்கிலத்தில் எழுதுவதென்பது நம் பண்பாட்டு இடத்தை நாம் உருவாக்கிக்கொள்வது. அதிலும் குறிப்பாகப் பெண்கள் எழுதுவதென்பது ஒரு முதன்மையான விடுதலைச் செயல்பாடும்கூட. அதன்பொருட்டே இந்தப் போட்டி.
தமிழகத்தில் இத்தனை கல்லூரிகள் இருந்தும், இத்தனைபேர் ஆண்டுதோறும் ஆங்கிலத்தில் பட்டமேற்படிப்பும் முனைவர் பட்டமும் பெற்றாலும், நம் நகரங்களில் பெரும்பாலான உயர்நடுத்தரவர்க்கத்தின் வீட்டுமொழியே ஆங்கிலமாக இருந்தும்கூட நம் ஆங்கிலத்தின் தரம் மிகமிகக் குறைவு. நமக்கு நல்ல பதிப்பகங்கள் ஏற்கும் தரமுள்ள மொழியாக்கங்கள் கிடைப்பதே இல்லை. தரமான மொழிபெயர்ப்பாளர்கள் மிகமிகச் சிலர் மட்டுமே.
ஏனென்றால் இங்கே ஆங்கில வாசிப்பு மிகக்குறைவு. சென்னையில் ஆங்கில நூல்களை விற்கும் ஒரு கடைகூட இல்லை. இணையம் வழியாகவும் நூல்கள் விற்பனையாவதில்லை. ஆங்கில பதிப்பாளர்களின் கணக்குப்படி இந்தியாவில் ஆங்கில நூல்கள் விற்கும் முதல் முப்பது நகரங்களில் சென்னையோ, தமிழகத்தின் எந்த ஒரு நகரமோ இல்லை. முன்பு சென்னையில் ஆங்கில நூல்களை விற்பதற்காகச் செய்யப்பட்ட எல்லா முயற்சிகளும் தோல்வியையே அடைந்தன. இருந்தாலும் இம்முறை ஒரு முயற்சியை செய்துபார்க்க மானசா பதிப்பகம் முயல்கிறது.
ஆகவே ஓர் இலக்கிய உரையாடல் அரங்கு , ஆங்கில நூல்களுக்காக, தொடர்ந்து அடையாறு அலுவலகத்தில் நடத்தும் எண்ணமும் உள்ளது. இளைய தலைமுறையினர் சிலராவது வருவார்கள் என்றால் அது ஒரு நல்ல தொடக்கமாக அமையலாம். அதன் தொடக்கமாகவும், நாவல் எழுத எண்ணுபவர்களுக்கு ஓர் ஊக்கமாக அமையட்டும் என்றும் ஒரு நாவல் பயிலரங்கை அடையாறு அலுவலகத்தில் மானசா பதிப்பகம் நடத்த திட்டமிட்டது.
ஆகஸ்ட் 30 , 31 தேதிகளில் அந்த நாவல் பயிலரங்கை நான் நடத்துகிறேன். அவ்வாறு திட்டமிட்டபோது அது மானசா பதிப்பக அலுவலகத்தின் தொடக்கமும் அல்லவா என்ற எண்ணம் ஏற்பட்டது. மானசா பதிப்பகத்திற்கான இந்த அலுவலக இடம் சென்ற மூன்று மாதங்களாகவே தயாராகி வருகிறது. நண்பர் சண்முகம்தான் எல்லாவற்றையும் செப்பனிட்டு அளித்தார். நல்ல இடம். நல்ல இடவசதியும் உள்ளது. ஆனால் அலுவலகத் திறப்புவிழா என ஏதும் பெரியதாகச் செய்யவில்லை. முதல்நூல் வெளியீட்டை பெரிதாகச் செய்யலாம் என்பது எண்ணம்.
(என் சிற்றுரை. பின்னணியில் புரொப்ரைட்டர் மானசாவின் குரல்)
நான் பேசும்போது நண்பர்கள் பங்குகொள்ளாமல் தொடங்குவதுபோல உள்ளது என்று சொன்னேன். ஆகவே 29 மாலை ஒரு தேநீர் விருந்தை ஏற்பாடு செய்யலாம் என்ற திட்டம் இறுதிநேரத்தில் வகுக்கப்பட்டது. அதிகமானபேர் வருவதற்கான வசதி இல்லை. அதிகபட்சம் 30 பேருக்கான இடம் மட்டுமெ இருந்தது. ஆகவே நெருக்கமானவர்களை மட்டும் அழைத்தேன்.
நான் எர்ணாகுளத்தில் ஒரு சினிமாவேலைக்காகச் சென்றுவிட்டு சென்னைக்கு 28 மாலை வந்து சேர்ந்தேன். அன்றுதான் நான் முதல்முறையாக மானசா அலுவலகத்தைப் பார்த்தேன்.கிருபாவும் சைதன்யாவும் சிறப்பாக அமைத்திருந்தார்கள். அவர்கள் இருவரையும் இன்றைய கணக்கில் சிறுமிகள் என்றுதான் சொல்லவேண்டும். அவர்களுக்கான ஓர் அலுவலகம் என்பது ஒரு சிறப்பான விஷயம்தான்.
29 காலை மணி ரத்னத்தைச் சென்று பார்த்தேன், சினிமா பணிகளுக்காக. மாலை சிறிது ஓய்வெடுத்துவிட்டு மானசா அலுவலகம் சென்றேன். நண்பர்கள் வரத்தொடங்கினர். 40 பேர் வந்தமையால் கொஞ்சம் இடநெருக்கடியும் புழுக்கமும் இருந்தாலும் நண்பர்களின் கூட்டமாதலால் கொண்டாட்டமான மனநிலை இருந்தது. விஷ்ணுபுரம் விழாக்களின் மனநிலை கூடிவந்தது.
நான் அலுவலகத்தை ரிபன் வெட்டி திறந்துவைத்தேன். அலுவலகத்தில் விளக்கும் ஏற்றினேன். நண்பர்களுக்கு டீ வழங்கப்பட்டது. வழக்கம்போல உற்சாகமான கேலியும் கிண்டலுமாகப் பேசிக்கொண்டிருந்தோம். நண்பர், இசைவிமர்சகர் ஷாஜி சென்னை இப்போது நடிகரும் பாடகருமாக ஆகிவிட்டிருக்கிறார். அவர் மூன்று பாடல்களை பதிவுசெய்யப்பட்ட பின்னணி இசையின் உதவியுடன் பாடினார். பாப் டைலனின் ஓர் ஆங்கிலப்பாடல். ஓர் இந்திப்பாடல். ஒரு தமிழ்ப்பாடல். ஒரு கொண்டாட்டத்துக்கான மனநிலை உருவாகியது.
நான் இரண்டுநிமிடம் பேசினேன். சைதன்யா மானசாப் பதிப்பகத்தின் நோக்கம், இலக்கு பற்றி ஒரு சிற்றுரை ஆற்றினாள். கிருபா மானாசாவின் திட்டங்கள் பற்றி பேசி, உறுதுணையாக நின்றவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இரவு ஒன்பது மணிவரை நண்பர்கள் இருந்தனர். ஒவ்வொருவராக விடைபெற்றுச் சென்றபின் வீடு திரும்பினோம். ஒரு நிறைவான தொடக்கம் என்னும் உணர்வு உருவானது.
நாவல் பயிற்சியில் முதல்நாள் இருபத்தைந்து வயதுக்குக் குறைவான இளம் படைப்பாளர்கள். இரண்டாம் நாள் அடுத்த நிலை படைப்பாளர்கள். நாவல் என்னும் கலைவடிவம் எல்லா கலைவடிவங்களையும்போல புறவயமான ஒரு இலக்கணம் உடையது. அது அதன் கட்டமைப்பின் இலக்கணம். அதைக் கற்றுக்கொடுக்கலாம். ஒரு பாடகர் ராகங்களைக் கற்றுக்கொள்வதுபோல. ஆனால் ராகங்கள் தெரிந்த அனைவரும் நல்ல பாடகர்கள் அல்ல. ராகத்தை பயிலலாம். குரலை பயிற்றுவிக்கலாம். ஆனால் அறுதியாக உள்ளத்திலுள்ள உணர்வெழுச்சியே கலை ஆகிறது.
(கிருபா, நவீன், மானசா)
இந்தப் பயிற்சி ஆங்கில நாவல் எழுதுவதற்கு உரியது, பெண்களுக்கு மட்டுமானது என்பதனாலேயே பங்கேற்பாளர்களின் எல்லை குறுகிவிட்டது. இதை அக்டோபரில் அமெரிக்காவில் அனைவருக்குமாக நடத்தும் எண்ணம் உண்டு. நண்பர் விசு விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமெரிக்கா (viswanathan.mahalingam@gmail.com) இதை ஒருங்கிணைக்கிறார். கற்பிக்கப்படத்தக்க ஓர் அம்சம் எப்போதும் கலையில் உண்டு. தானாக வெளிப்படவேண்டிய கற்பனை அம்சம் முறையாக வெளிப்படுவதற்குத் தடையாக அப்பயிற்சியின்மை அமையாமல் இருப்பதற்காகவே அப்பயிற்சியை அடையலாம்.
மானசா பதிப்பகம் சார்பில் மாதந்தோறும் அடையாறு அலுவலகத்தில் மாதந்தோறும் ஆங்கிலத்தில் இலக்கியம், பொது அறிவு, தத்துவ நூல்களை விவாதிக்கும் ஓர் வாசகர் அரங்கத்தை ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மானசா புக் கிளப். ஓர் அரங்கு மாணவர்நிலை வாசகர்களுக்காக. ஓர் அரங்கு அனைத்துவாசகர்களுக்காக என எண்ணியுள்ளோம். ஆர்வமுள்ள நண்பர்கள் கலந்துகொள்ளவேண்டும்.
குறிப்பாக தங்கள் குழந்தைகளை வாசிப்பின் சுவை நோக்கி இட்டுச்செல்லவேண்டும். புனைவை படிப்பது மட்டும் அல்ல, கொஞ்சம் கடினமான புனைவல்லாத நூல்களையும் முழுக்கவனத்துடன் படித்து முடிக்கும் பயிற்சி இன்றைய மாணவர்களுக்கு மிக அவசியமான ஒன்று. தத்துவநூல்களை அவர்களால் வாசிக்கமுடியும் என்றால் அது மிகப்பெரிய ஒரு தொடக்கம். இன்றைய முறைசார் கல்வி வழியாக அதை பயிற்றுவிக்க முடியாது. ஏனென்றால் அது அனைத்துக் குழந்தைகளுக்கும் உரிய கல்வி அல்ல. கொஞ்சம் சுய ஆர்வமும், அறிவுத்தரமும் கொண்ட குழந்தைகளுக்கானது.
வரும் செயற்கையறிவுக் காலகட்டத்தில் சுயசிந்தனையே முதன்மை தகுதியாகக் கொள்ளப்படும். அதற்கான தயாரிப்பு என்பது தானாகவே தன் உலகை வாசித்து உருவாக்கிக்கொள்ளும் தேடல்தான்.அதை உருவாக்கவே முயல்கிறோம். இந்தியாவில் பெங்களூர் உட்பட எல்லா நகரங்களிலும் இத்தகைய ‘புக் கிளப்’கள் ஏராளமாக நிகழ்கின்றன. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பெரிய இயக்கமாகவே முன்னெடுக்கிறார்கள். இங்குள்ள பெற்றோர் பெரும்பாலும் பள்ளிமதிப்பெண், தொழிற்கல்விக்கு அப்பால் யோசிக்காதவர்கள். சென்னையில் ஓர் ஐம்பது பெற்றோராவது கொஞ்சம் முன்னகர்ந்து யோசிக்கக்கூடும் என நம்புகிறோம்
தொடர்புக்கு connect@manasapublications.com
கண்ணதாசன் (இதழ்)
தனக்கென்று ஒரு கொள்கையோடு கண்ணதாசன் இதழ் வெளிவந்தது. இவ்விதழ் ஒருபோதும் பெண்களின் படங்களை அட்டையில் வெளியிட்டதில்லை. வரலாற்றுச் சம்பவங்கள் ; மரபுக்கவிதை, புதுக்கவிதை இரண்டுக்கும் அதிகப் பக்கங்களை ஒதுக்கியது. மொழிபெயர்ப்புக்கு மிக முக்கியத்துவம் கொடுத்தது . இந்தியாவின் பிற மொழிகளில் படைக்கப்பட்ட முற்போக்குப் படைப்புகளையும் அதிகம் வெளியிட்டது. பதினைந்தாயிரம் வரை விற்பனையான இவ்விதழுக்குக் கல்லூரி மாணவர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. தமிழின் குறிப்பிடத்தகுந்த இடைநிலை இலக்கிய இதழ்களுள் கண்ணதாசன் இதழுக்கு முக்கிய இடமுண்டு.

ஆய்வாளர்களை அறிதல் – சோ.தர்மன்
இரண்டு நாட்கள்.ஆகஸ்ட் பதினைந்து மற்றும் பதினாறு.ஈரோட்டில் நடைபெற்ற விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நண்பர்களால் நடத்தப்பட்ட “தமிழ் விக்கி தூரன் விருது” வழங்கும் விழா.
இந்தாண்டிற்கான விருது தொல்லியல் ஆய்வாளர் முனைவர் வெ..வேதாசலம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.முந்நூறு பேர்களுக்கு மேல் பங்குபெற்ற அரங்கு நிறைந்த கூட்டம்.பத்துக்கும் மேற்பட்ட அமர்வுகள்.சிற்பம்,ஓவியம்,கல்வெட்டுக்கள்,பாறை ஓவியங்கள் என்று பல் வேறு தலைப்புக்களில் இந்தியாவின் தலை சிறந்த ஆய்வாளர்களுடன் கலந்து கொண்டு கேள்விகள் கேட்டு மிகவும் பயனுள்ள உரையாடல்களாக இரண்டு நாட்களும் கழிந்தன.
முனைவர் வேதாசலம் அவர்களுடன் நான் பேசிக் கொண்டிருந்தேன்.இந்த விருது அறிவிக்கப்பட்டவுடன் தன்னுடைய நூல்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து போய் விட்டதாகவும் ஏராளமான பேர் தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவதாகவும் குறிப்பிட்டார்.இன்னும் சிலர் இவ்விருதினை ஏற்க வேண்டாம் என்று சொன்னதாகவும் வருத்தத்துடன் சொன்னார்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த துறை பெரும்பாலும் வேதாசலம் போன்ற தனிமனிதர்களின் கடுமையான உழைப்பால் மட்டுமே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் வருடம் ஒருவரை தெரிவு செய்து இது மாதிரியான கருத்தரங்கங்கள் நடத்தி இரண்டு லட்சம் ரூபாய் விருது வழங்குவதன் மூலமாக அரசின் கவனத்தையும் ஆர்வலர்களின் கவனத்தையும் ஈர்க்க வைத்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நண்பர்களின் பணி பாராட்டுதலுக்குரியது.இன்னும் நாம் இத்துறையில் ஈடுபட்டுள்ள பல வேதாசலங்களை அடையாளம் காண வேண்டியதிருக்கிறது.
சோ.தர்மன்
) முகநூலில்)
வளரும் நாடுகள் அழியத்தொடங்குவது எப்போது?
ஒரு நாடு வளரத் தொடங்கும்போது திடீரென்று அங்கே இனவாதமும், மொழிவாதமும், மதவாதமும் மற்ற பிரிவினைவாதங்களும் தலைதூக்குகின்றன. கலவரம் உண்டாகிறது. சிலசமயம் ஆட்சிமாற்றமும் நிகழ்கிறது. விளைவாக அந்த நாடு பொருளியலில் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கிறது.
வளரும் நாடுகள் அழியத்தொடங்குவது எப்போது?
We are ruthlessly avoiding certain people who we feel are not fit for our classes of unified wisdom. There are questions about our ‘rudeness.’
About the rules…August 29, 2025
தொன்மங்களுக்கான மனநிலை
மேடையுரை பயிற்சி வகுப்பின் இரண்டாம் நாள் மதிய உணவு இடைவேளை நேரம் அது. பலமுறை மனதிற்குள் கேள்விகளை ஒத்திகை பார்த்த பின்னர், அந்த கேள்வியாகவே நான் மாறி, பயத்துடனும் , பதற்றத்துடனும் தாங்களை அணுகினேன்.
ஜெ என்று அழைத்தேன், நீங்கள் நின்று என்னை பார்த்தீர்கள். உங்களின் கண்களின் கருணையும்,முகத்தின் சாந்தமும்,முழுமையாக என்னை பேச அனுமதித்து நீங்கள் அனுகிய விதமும், என் பயத்தை போக்கி நான் கேட்க நினைத்த கேள்வியை உள்ளவாறே கேட்க உதவியது. (உங்களின் கைகளை பற்றி மனதிற்குள் மௌனமாக எனது நன்றியை தெரிவிக்கிறேன்)
நாவல், சிறுகதை, கட்டுரைகள் ஆகியவற்றை தொடர்ந்து வாசித்து வருகிறேன். ஆனால் மகாபாரதம் போன்ற இதிகாசங்களை வாசிப்பதில் எனக்கு பயமும், மனத்தடையும் இருக்கின்றது. நான் அதற்கு ஏற்றவன் அல்ல. அவ்வாறே வாசித்தாலும் என்னால் புரிந்து கொள்ள முடியாது என்ற முன்முடிவை நானே எனக்குள் உருவாக்கி வைத்துள்ளேன். இது எங்கு இருந்து ஆரம்பித்தது, இதை நான் எவ்வாறு உருவகித்து கொண்டேன் என்று புரிந்துக்கொள்ள முடியவில்லை. இந்த மனத்தடையை எவ்வாறு எதிர்கொள்வது என்று எனது கேள்வி இருந்தது.
நீங்கள் அதற்கு ஒரு சிரிய சிரிப்புடன் பதில் அளித்தீர்கள். அணைவரும் இதிகாசம், மகாபாரதம் வாசித்தே ஆக வேண்டும் என்று இல்லை. விருப்பம் இருந்தால் படியுங்கள் இல்லயேல் வேண்டாம் என்று பதில் அளித்தீர்கள். அந்த பதில் எனக்கு மன நிறைவை அளிக்கவில்லை. நான் எதிர்பார்த்த பதில் கிடைக்க வில்லை என்பதால். இதுநாள் வரை எனது சுற்றம் உண்மையை விட உகந்த பதிலையே அளித்துவந்தமையின் பாதிப்பு. ஏனோ அந்த பதிலை உள்ளார்ந்து சரிவர என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. ஆனால் அன்றில் இருந்து வெண்முரசை வாசிக்க வேண்டும் என்ற வேட்கை எனக்குள் உருவானது.
(நித்யவனதில் புத்தக அலமாரி இல் வலதுபுறம் கீழ் அடுக்கில் வெண்முரசை பார்த்த நியாபகம் இப்போது வந்து செல்கிறது.)
பல நாட்கள் இதன் கனத்தை சுமந்து கொண்டு இருந்தேன். இன்று அந்த பாரம் நீங்கி மன நிறைவுடன் உணர்கிறேன். எழுதுக புத்தகத்தில் உங்களின் அந்த வரிகளை வாசித்த பின்னர். எனக்கான பதிலை நானே எடுத்துக்கொண்டேன். எனது மடமையை உங்களின் வரிகள் நன்குணர்த்தியது. உங்களின் படைப்புகளான காடு, ஒளிரும்பாதை, ஊமைசென்னாய் மற்றும் இன்றைய காந்தியுடன் பஞ்சாபின் போர்களத்தில் உள்ளேன். இந்த படைப்புகளை வாசித்த உடன் உங்களின் கையெழுத்து இடபட்ட வெண்முரசைப் பெற்றுக்கொள்வேன். அந்த நாளை ஆவலுடன் எதிர்பர்த்து காத்திருக்கும் உங்கள் வாசகன்
ரவிக்குமார் பாரதி
(காசோவால், பஞ்சாப்)
அன்புள்ள ரவிக்குமார்,
நான் அந்தப் பதிலை உதாசீனமாகச் சொல்லவில்லை. உண்மையிலேயே தொன்மங்களுக்குள் செல்ல அடிப்படைத் தடைகள் கொண்டவர்கள் உண்டு. அவர்கள் தொன்மங்களுக்குள் செல்லும் நூல்களை படித்தாகவேண்டும் என்பதில்லை. தொன்மங்கள் ஒன்றும் இலக்கியத்தின் தவிர்க்கமுடியாத கூறுகளும் அல்ல. அதேபோல சிலருக்கு எதிர்காலவியல், அறிவியல்புனைவுகளுக்குள் செல்லமுடியாது. சிலரால் மிகைக் கற்பனைகளுக்குள்ளும் செல்லமுடியாது. மிகச்சிலருக்கு யதார்த்தவாதக்கதைகள் சலிப்பூட்டுகின்றன. அவரவர் ரசனை, இயல்பு ஆகியவற்றைச் சார்ந்தது அது.
முதலில், ஏன் தொன்மங்கள் புனைவில் கையாளப்படுகின்றன. ஒன்று நினைவில் கொள்ளுங்கள். தொன்மங்கள் இல்லாத புனைவுகள் சென்ற இருநூறாண்டுகளாகவே உலக இலக்கியத்தில் உருவாகி வந்துள்ளன. அதாவது அன்றாடத்தை, யதார்த்தத்தைச் சொல்வது என்பதே இலக்கியத்தில் மிகமிகமிகப் புதிய ஒரு நிகழ்வு. அந்தப் புதுமையினால்தான் அத்தகைய இலக்கியத்திற்கு புதினம் novel என்ற பெயரே வந்தது. நூறாண்டுக்காலம் யதார்த்தவாதம் ஓங்கியும் இருந்தது. ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் தொன்மங்கள் தவறவிடப்படுவதனால் இலக்கியத்தில் மிகப்பெரிய இழப்பு இருப்பது கண்டடையப்பட்டது. தொன்மங்கள் திரும்பி வந்தன.
ஆனால் முன்பு, பழைய செவ்வியல் இலக்கியங்களில் இருப்பதுபோல அன்றி மூன்று புதிய வடிவில் மீண்டு வந்தன. ஒன்று, தொன்ம மறுபடைப்பாக்கம். இரண்டு, தொன்மங்களின் கட்டவிழ்ப்பு. மூன்று, தொன்மங்களை ஒட்டிய புதிய தொன்மங்களை உருவாக்குதல். இம்மூன்று வடிவங்களிலும் இன்று தொன்மங்கள் நவீன இலக்கியத்தில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்துகின்றன.
பழைய செவ்வியல் காலகட்டத்தில் ஒரு கதைக்கரு நீண்டகாலமாக புழக்கத்தில் இருந்து, மக்களின் ஏற்பு பெற்றாலொழிய, அதைக் காவியத்தின் பேசுபொருளாகக் கொள்ளக்கூடாது என்றே நிபந்தனை இருந்தது. புதியகதைகளுக்கோ சமகாலக் கதைகளுக்கோ இலக்கியத்தில் இடமில்லாமல் இருந்தது. ஏனென்றால் ஒரு கதைக்கரு நீண்டகாலமாகப் புழக்கத்தில் இருந்து தொன்மம் ஆக மாறும்போது அதற்குச் சில இயல்புகள் உறுதிப்படுகின்றன. ஒன்று அது காலத்தால் சோதிக்கப்பட்டு ஏற்கப்பட்டது. Time tested. இரண்டாவது அம்சம் அது மக்களால் ஏற்கப்பட்டுவிட்ட ஒன்று. மூன்றாவது அம்சம் அது மக்களால் பல தலைமுறைகளாகப் பொருளேற்றம் செய்யப்பட்டுக்கொண்டே இருந்த ஒன்று, அதாவது ஒரு சமூகத்தால் ஒட்டுமொத்தமாகப் புனையப்பட்ட ஒன்று. நான்காவது அம்சம், அந்தக் கவிஞன் அதை மறுபுனைவு செய்கிறான் என்பது.
நவீன இலக்கியத்தில் எதற்காக தொன்மங்கள் தேவையாகின்றன? இலக்கியத்தின் அடிப்படையான பணியே நேற்று, இன்று, நாளை என்னும் இணைப்பை உருவாக்குவதுதான். உண்மையில் வாழ்க்கைக்கு நேற்று என்பதே இல்லை. நாளை என்பதும் இல்லை. நேற்று என்பது நினைவுகள்.நாளை என்பது கனவுகள். இரண்டையும் உருவாக்குவது இலக்கியம்தான். நேற்றும் நாளையும் வெறும் உருவகங்கள்தான். அந்த உருவகங்களை தொன்மங்களாக ஆக்கித்தான் நிலைநிறுத்த முடியும். இலக்கியம் இன்றை மட்டுமே பேசிக்கொண்டிருக்க முடியாது. அப்படிப் பேசப்படும் இன்று உடனடியாக நேற்று ஆகிவிடும் அல்லவா? இன்று எம்.ஜி.ஆர் ஒரு தொன்மம். கருணாநிதி தொன்மம் ஆகிக்கொண்டிருக்கிறார். அந்த தொன்மங்கள் காலத்தால் செறிவாக்கப்படுகின்றன, தொடர்ந்து அர்த்த ஏற்றம் செய்யப்படுகின்றன. அவை எழுத்தாளனுக்கு கடந்தகாலத்தின் கருப்பொருட்கள். கடந்தகாலம் என்பது ஒரு கோலம் என்றால் அதன் புள்ளிகள் தொன்மங்கள்தான்.
பெரிய எழுத்தாளர்கள் கடந்தகாலத்தை உருவாக்கி ஒரு பண்பாட்டுக்கு அளிக்கிறார்கள், உருவாக்கப்பட்ட கடந்தகாலத்தை மறுஆக்கம் செய்கிறார்கள், விரிவாக்கவும் திருத்தியமைக்கவும் செய்கிறார்கள். ஒவ்வொரு பெரிய எழுத்தாளனின் படைப்புக்குப் பின்பும் உங்கள் இறந்தகாலம் மாறிவிடுகிறது என்று டி.எஸ்.எலியட் அவருடைய கட்டுரை (படைப்பும் தனித்திறனும்) சொல்கிறார். சிறிய எழுத்தாளர்கள் அந்த கடந்தகாலத்தை அடித்தளமாகக் கொண்டு, அதன்மேல் நின்று, நிகழ்காலத்தைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். கடந்தகாலம் என்பது மிகப்பெரிய ஒரு பரப்பு. அந்தப் பரப்பில் இருந்து எவற்றை வரலாற்றுக்கு எடுத்துக் கொள்வது? வரலாற்றாசிரியர்கள் ஒரு புறவயமான காலம்சார்ந்த வரலாற்றை உருவாக்கலாம். எழுத்தாளர்கள் உருவாக்கவேண்டியது பண்பாடு சார்ந்த, விழுமியம் சார்ந்த வரலாற்றை. அதில் இடம்பெறத்தக்கவை எவை? எவை அந்தப் பண்பாட்டில் வேரூன்றி வாழ்கின்றனவோ, அந்தப் பண்பாட்டால் பொதுவாகப் புனைந்துகொள்ளப்பட்டிருக்கின்றனவோ அவைதான். அவை தொன்மங்களாகவே நீடிக்கின்றன.
ராஜேந்திரசோழன், குலோத்துங்க சோழன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர்தான் வரலாற்றில் மிகப்பெரிய சோழ மன்னர்கள். ஆனால் தொன்மத்தில் நீடிப்பவர் ராஜராஜன்தான். சமுத்திரகுப்தன் மாமன்னன். ஆனால் இரண்டாம் சந்திரகுப்தனாகிய விக்ரமாதித்யன்தான் தொன்மம் ஆனவன். இது தற்செயல் அல்ல. இதற்குப்பின் ஒரு சமூகத்தின் நுட்பமான அளவுகோல்கள், பண்பாட்டு ஏற்பு உள்ளது. ஆகவேதான் தொன்மங்களை ஒட்டி பேரிலக்கியங்கள் உருவாகின்றன.
நவீன இலக்கியத்தில் தொன்மங்கள் கவித்துவப் படிமங்களாகவே கொள்ளப்படுகின்றன. (Poetic images). அவை நவீனக்கவிதையியல் வழியாக ஆழ்மன வெளிப்பாடாகவும், தத்துவ உருவகமாகவும் விரித்துக் கொள்ளப்பட வேண்டியவை. உதாரணமாக, அர்ஜுனன் திரௌபதிக்காக துருபதன் அவையில் வில்லை எடுத்து தலைக்குமேல் இருக்கும் மீன் பொம்மையை வீழ்த்துகிறான். எதிரில் திரௌபதியின் கண் எனும் மீன். தலைக்குமேல் உண்மையான மீன். ஆனால் நிழலைப் பார்த்து அதை மட்டுமே கவனித்து அம்பு தொடுத்தால்தான் வெற்றி. இது வெறும் ஒரு நிகழ்வு அல்லது கதை அல்ல, ஒரு கவித்துவப் படிமம்.
ஓர் உண்மையான வாழ்க்கைச்சித்திரத்தில் கவித்துவம் மிக அரிதாகவே அமைகிறது, அதுவே இயல்பு. உருவகங்களும் படிமங்களும் மிகக்குறைவாகவே உள்ளன. ஓர் அன்றாடப்பொருளை கவித்துவப் படிமம் ஆக்குவது கொஞ்சம் கடினம். ஏனென்றால் அதிலுள்ள பரிச்சயம் (familiarity) என்னும் அம்சம் அதை சாதாரணமாக ஆக்கிக்கொண்டே இருக்கிறது. அதை சித்தரிப்பு வழியாக பரிச்சயம் அழிப்பு ( Defamiliarization) செய்தால்தான் அது படிமம் ஆகும். ஆகவேதான் ஒரு செல்போன் கவித்துவப்படிமம் ஆவது கடினம். ஏடு, எழுத்தாணி எல்லாம் இயல்பாகவே படிமம் ஆக உள்ளன.
தொன்மங்களால் ஆன கதைவெளி என்பது கவித்துவப் படிமங்களை மட்டுமே கொண்ட ஒரு வாழ்க்கைப் பரப்பு. ஆகவேதான் எழுத்தாளர்களுக்கு அவை பெரும் ஈர்ப்பை அளிக்கின்றன. தொன்மங்களின் உலகுக்கு எழுத்தாளர் செல்வதே அவை அளிக்கும் கவித்துவம் வழியாக உணர்வுகளை வரையறை செய்யமுடியும், தத்துவ தரிசனங்களை விளக்கமுடியும் என்பதற்காகத்தான்.
இதே காரணத்துக்காகவே எழுத்தாளர்கள் அறிவியல்புனைவுலகுக்குள்ளும் நுழைகிறார்கள். அவையும் ஒருவகை தொன்மங்கள்தான். சொல்லப்போனால் கடந்த காலத் தொன்மங்களை எதிர்காலத்துக்குக் கொண்டுசென்றுதான் அறிவியல்புனைவுகள் எழுதப்படுகின்றன. அறிவியல்புனைவுகளை அறிவியல்புராணங்கள் என்றுகூட சொல்லிவிடலாம். ஆனால் சமகாலத்தைச் சித்தரிக்கும்போது கிடைக்காத படிம வெளி எதிர்காலத்தைச் சித்தரிக்கும்போது கிடைக்கிறது.
ஒருவருக்கு வரலாறு, மதம், பண்பாட்டு மரபு பற்றிய எந்த அறிமுகமும் இல்லை என்றால் அவரால் தொன்மங்களின் உலகுக்குள் செல்லமுடியாது, தொன்மப்புனைவை ரசிக்க முடியாது. அறிவியலின் அடிப்படையே தெரியாதவர் அறிவியல்புனைவையும் ரசிக்கமுடியாது. அன்றாடம், கண்முன் உள்ள யதார்த்தம் ஆகியவற்றைக் கடந்து கற்பனை செய்யமுடியாதவர்களும் இவ்விரு உலகங்களுக்குள்ளும் செல்லமுடியாது. வாழ்க்கையை அனுபவப்பிரச்சினைகளாக மட்டும் பார்ப்பவர்களும் இவ்விரு உலகங்களையும் அன்னியமாகவே பார்ப்பார்கள். வாழ்க்கையை தத்துவப்பிரச்சினையாகப் பார்ப்பவர்கள், கவித்துவமான படிமங்கள் வழியாக மனித உணர்ச்சிகளை அறியமுடிபவர்கள் தொன்மங்களுக்குள் இயல்பாகச் செல்லமுடியும்.
ஜெ
வடிவங்கள், வரையறைகள்அனுஷ்திக்கா
அனுஷ்திக்கா தமிழ்பித்து, தமிழுராள் என்னும் புனை பெயர்களில் எழுதிவருகிறார். பள்ளியிருந்தே புனைவுகள், கட்டுரைகள் எழுதினார். ‘தமிழ்பித்து அனுஷ்தி’ என்ற பெயரில் சமூக விழிப்புணர்வு, சமகால நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் கவிதைகளை எழுதி வருகிறார்.

தூரன் விழா, கடிதம்
அன்புள்ள ஜெ,
மூத்த அறிஞர் வெ.வேதாசலம் அவர்களுக்கு விருது அளிக்கப்பட்ட நிகழ்வு நிறைவளிப்பது. அண்மையிலே வரலாற்றாய்வாளர் என்று சொல்லிக்கொண்டு டிவிகளிலெல்லாம் வந்து அமர்ந்து பேசும் ஒருவர் அமெரிக்காவுக்கு வரலாற்றாசிரியர் என்று அழைக்கப்பட்டார். மன்னர்மன்னன் என்று பெயர் ,கேள்விப்பட்டிருப்பீர்கள். அங்கே சென்று அவர் ராஜேந்திரசோழன் மின்சார ஈல்மீன்களை பயன்படுத்தி எதிரிக்கப்பல்களின் ஆணிகளை காந்தவிசையால் கழன்றுபோகச்செய்து அவர்களை வென்றான் என்றெல்லாம் உளறித்தள்ளினார்.
அடிப்படை அறிவியல் தெரிந்த எவருக்கும் அந்த பேச்சு அபத்தத்தின் உச்சம் என்று தெரியும். கொஞ்சம் பொதுப்புத்தி இருந்தாலே அதைக்கேட்டல மண்டையில் அறையத்தோன்றும். அமெரிக்காவிலுள்ள தமிழர்கள் பெரும்பாலும் கம்ப்யூட்டர் தட்ட கற்றுக்கொண்டு அங்கே சென்றவர்கள். பொதுவான வாசிப்போ அடிப்படை அறிவோ கிடையாது. கிராமங்களிலுள்ளவர்கள் சினிமா பார்ப்பதுபோல காகிதத்தை எல்லாம் கிழித்துவிசி கூச்சலிட்டு தமிழ் சினிமா பார்க்கும் கூட்டம். ஆனால் அந்த மனிதர் பேசியது அமெரிக்க நிலத்தில். எவராவது வெளிநாட்டுக்காரர் வந்திருந்தால் நாம் எவ்வளவு கேவலப்பட்டிருப்போம்.
ஆனால் இதுதான் எல்லா ஆய்வரங்குகளிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் நிகழும் சர்வதேச ஆய்வரங்குகளில் ஆய்வாளர் என்ற போர்வையில் மிகமோசமான இனவாதம், மதவெறி எல்லாம் பேசுவது மிகச் சாதாரணமாக உள்ளது. ஐஐடி தலைவர் சாணியை நியாயப்படுத்திப் பேசிய சூடோ அறிவியலை நாம் கேட்டோம் அல்லவா/
இச்சூழலில் வேதாசலம், சுப்பராயலு போன்ற மதிப்பு மிக்க ஆய்வாளர்களை கௌரவிப்பதென்பது மிகமிக முக்கியமான செயல். உண்மையான ஆய்வாளர்களை அடையாளம் காட்டும் செயல். சுப்பராயலு மேடையிலே பேசும்போதுகூட ஆய்வு என்பது எத்தனை நிதானமாக, எவ்வளவு படிப்படியாகச் செய்யவேண்டியது என்றுதான் பேசுகிறார். எவ்வளவு விவாதங்களுக்குப் பிறகு முடிவுகள் அறிவிக்கப்படவேண்டும் என்றுதான் சொல்கிறார்.
வேதாசலம் அவர்களின் நூல்களை வாசித்துள்ளேன். அவை கலைக்களஞ்சியம் என்று நீங்கள் சொன்னது சரிதான். அவ்வளவு தரவுகள். அவற்றை அவர் காலவரிசைப்படி, இடவரிசைப்படி அபாரமாக ஒழுங்குசெய்து அளிக்கிறார். சான்றுகள் அனைத்தையும் சேகரிக்கிறார். கல்வெட்டுகளை தானே நேரில்சென்று பார்க்காமல் எழுதுவதில்லை. எந்த மிகையான ஊகங்களையும் செய்வதுமில்லை.
அவரைப்போன்றவர்களே ஆய்வாளர்கள். அவர்கள்தான் நம் பெருமிதங்கள். நம் இளையதலைமுறை அவர்களைத்தான் தெரிந்துகொள்ளவேண்டும். அவர்களை அடையாளம்காட்டும் பணி போற்றுதற்குரியது. விழாவுக்கு என் வாழ்த்துக்கள்.
செல்வ. ராஜகணபதி
Stories Of The True, USA, பரப்புரைகள்
காலையில் இருந்தே பல அழைப்புகள். நான் ஒரு திரைப்படவேலைக்காக எர்ணாகுளம் ஹாலிடே இன் விடுதியில் இருந்தேன். என்ன என்று தெரியாமல் ஒரு போனை பதற்றமாக தொடர்புகொண்டேன். பத்மாலக்ஷ்மி என் Stories Of The True நூல் பற்றி ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு போட்டிருப்பதாகச் சொன்னார்கள். முதலில் அந்தப் பரபரப்பு ஏன் என்று தெரியவில்லை. பத்மாலக்ஷ்மி எவர் என்றும். ஆனால் இணையத்தில் தேடியதும் தெரிந்துகொண்டேன். அவர் ருஷ்டியின் முன்னாள் மனைவி. அமெரிக்காவில் மிகப்புகழ்பெற்ற விளம்பர மாடல்களில் ஒருவர். தொலைக்காட்சித் தொகுப்பாளர். நூலாசிரியர். (பார்க்க பத்மா லக்ஷ்மி இன்ஸ்டா பதிவு)
நூல் அதன் வழக்கமான வாசகவட்டத்தைக் கடந்து இளையதலைமுறை வாசகர்களிடையே சென்று சேர அது ஒரு நல்ல வாய்ப்பு என்று சொன்னார்கள். மகிழ்ச்சிதான்.நான் உத்தேசிக்கும் வாசகர்கள் உண்மையில் அவர்கள்தான். இந்நூல் இந்தியா என்னும் சிக்கலான, இருட்டும் வெளிச்சமும் நிறைந்த, உலகத்தை அறிமுகம் செய்வது. அதன் வறுமையும், சுரண்டலும், சாதிப்பிரிவினையும் ஒருபக்கம். அந்த இருளில் இருந்து எழும் அழியாத ஒளி இன்னொரு பக்கம். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தலைமுறையினருக்கு அந்நூல் இந்தியாவின் அகத்தைக் காட்டுவதுபோல இன்னொரு நூல் காட்டாது என நினைக்கிறேன்.
New India Abroad என்னும் இணைய இதழில் நானும் பிரியம்வதாவும் கொடுத்த ஒரு பேட்டி வெளியாகியுள்ளது. இன்னொரு இலக்கிய இதழில் யானைடாக்டர் கதை ஒரு மாதிரிக்கதையாக வெளியாகிதுள்ளது. தொடர்ச்சியாக நூல் கொண்டுசென்று சேர்க்கப்படுகிறது.
Storied of the True MacmillanJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
