மானசா பதிப்பகம், ‘புக் கிளப்’, அலுவலகத் திறப்பு
சைதன்யாவும் கிருபாவும் இணைந்து தொடங்கியிருக்கும் மானசா பதிப்பக அலுவலகம் அடையாறில் உள்ளது. மானசா பதிப்பகம் சார்பில் பெண்களுக்கான ஓர் ஆங்கில நாவல் போட்டி அறிவித்துள்ளனர். 25 வயதுக்குக் குறைவானவர்களுக்கு ஒரு போட்டி. 25 வயதுக்கு மேலானவர்களுக்கு ஒரு போட்டி. அவர்களின் படைப்புகள் மானசா பதிப்பகத்தால் வெளியிடப்படும். முதல்பரிசுகள் தலா ஒரு லட்சம் ரூபாய். (மானசா பதிப்பகம் போட்டி அறிவிப்பு)
யஇந்தியாவின் எல்லா மாநிலங்களில் இருந்தும் தரமான, ஆங்கிலப்புனைவுகள் வந்துகொண்டிருக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வரும் ஆங்கிலப் புனைவெழுத்துக்களே மிகுதி. தமிழகத்தில் இருந்து அதில் பங்கு என அனேகமாக ஏதுமில்லை என்றே சொல்லவேண்டும். இளைய தலைமுறையின் மொழியாகவே ஆங்கிலம் உருவாகியுள்ள இன்று, ஆங்கிலத்தில் எழுதுவதென்பது நம் பண்பாட்டு இடத்தை நாம் உருவாக்கிக்கொள்வது. அதிலும் குறிப்பாகப் பெண்கள் எழுதுவதென்பது ஒரு முதன்மையான விடுதலைச் செயல்பாடும்கூட. அதன்பொருட்டே இந்தப் போட்டி.
தமிழகத்தில் இத்தனை கல்லூரிகள் இருந்தும், இத்தனைபேர் ஆண்டுதோறும் ஆங்கிலத்தில் பட்டமேற்படிப்பும் முனைவர் பட்டமும் பெற்றாலும், நம் நகரங்களில் பெரும்பாலான உயர்நடுத்தரவர்க்கத்தின் வீட்டுமொழியே ஆங்கிலமாக இருந்தும்கூட நம் ஆங்கிலத்தின் தரம் மிகமிகக் குறைவு. நமக்கு நல்ல பதிப்பகங்கள் ஏற்கும் தரமுள்ள மொழியாக்கங்கள் கிடைப்பதே இல்லை. தரமான மொழிபெயர்ப்பாளர்கள் மிகமிகச் சிலர் மட்டுமே.
ஏனென்றால் இங்கே ஆங்கில வாசிப்பு மிகக்குறைவு. சென்னையில் ஆங்கில நூல்களை விற்கும் ஒரு கடைகூட இல்லை. இணையம் வழியாகவும் நூல்கள் விற்பனையாவதில்லை. ஆங்கில பதிப்பாளர்களின் கணக்குப்படி இந்தியாவில் ஆங்கில நூல்கள் விற்கும் முதல் முப்பது நகரங்களில் சென்னையோ, தமிழகத்தின் எந்த ஒரு நகரமோ இல்லை. முன்பு சென்னையில் ஆங்கில நூல்களை விற்பதற்காகச் செய்யப்பட்ட எல்லா முயற்சிகளும் தோல்வியையே அடைந்தன. இருந்தாலும் இம்முறை ஒரு முயற்சியை செய்துபார்க்க மானசா பதிப்பகம் முயல்கிறது.
ஆகவே ஓர் இலக்கிய உரையாடல் அரங்கு , ஆங்கில நூல்களுக்காக, தொடர்ந்து அடையாறு அலுவலகத்தில் நடத்தும் எண்ணமும் உள்ளது. இளைய தலைமுறையினர் சிலராவது வருவார்கள் என்றால் அது ஒரு நல்ல தொடக்கமாக அமையலாம். அதன் தொடக்கமாகவும், நாவல் எழுத எண்ணுபவர்களுக்கு ஓர் ஊக்கமாக அமையட்டும் என்றும் ஒரு நாவல் பயிலரங்கை அடையாறு அலுவலகத்தில் மானசா பதிப்பகம் நடத்த திட்டமிட்டது.
ஆகஸ்ட் 30 , 31 தேதிகளில் அந்த நாவல் பயிலரங்கை நான் நடத்துகிறேன். அவ்வாறு திட்டமிட்டபோது அது மானசா பதிப்பக அலுவலகத்தின் தொடக்கமும் அல்லவா என்ற எண்ணம் ஏற்பட்டது. மானசா பதிப்பகத்திற்கான இந்த அலுவலக இடம் சென்ற மூன்று மாதங்களாகவே தயாராகி வருகிறது. நண்பர் சண்முகம்தான் எல்லாவற்றையும் செப்பனிட்டு அளித்தார். நல்ல இடம். நல்ல இடவசதியும் உள்ளது. ஆனால் அலுவலகத் திறப்புவிழா என ஏதும் பெரியதாகச் செய்யவில்லை. முதல்நூல் வெளியீட்டை பெரிதாகச் செய்யலாம் என்பது எண்ணம்.
(என் சிற்றுரை. பின்னணியில் புரொப்ரைட்டர் மானசாவின் குரல்)
நான் பேசும்போது நண்பர்கள் பங்குகொள்ளாமல் தொடங்குவதுபோல உள்ளது என்று சொன்னேன். ஆகவே 29 மாலை ஒரு தேநீர் விருந்தை ஏற்பாடு செய்யலாம் என்ற திட்டம் இறுதிநேரத்தில் வகுக்கப்பட்டது. அதிகமானபேர் வருவதற்கான வசதி இல்லை. அதிகபட்சம் 30 பேருக்கான இடம் மட்டுமெ இருந்தது. ஆகவே நெருக்கமானவர்களை மட்டும் அழைத்தேன்.
நான் எர்ணாகுளத்தில் ஒரு சினிமாவேலைக்காகச் சென்றுவிட்டு சென்னைக்கு 28 மாலை வந்து சேர்ந்தேன். அன்றுதான் நான் முதல்முறையாக மானசா அலுவலகத்தைப் பார்த்தேன்.கிருபாவும் சைதன்யாவும் சிறப்பாக அமைத்திருந்தார்கள். அவர்கள் இருவரையும் இன்றைய கணக்கில் சிறுமிகள் என்றுதான் சொல்லவேண்டும். அவர்களுக்கான ஓர் அலுவலகம் என்பது ஒரு சிறப்பான விஷயம்தான்.
29 காலை மணி ரத்னத்தைச் சென்று பார்த்தேன், சினிமா பணிகளுக்காக. மாலை சிறிது ஓய்வெடுத்துவிட்டு மானசா அலுவலகம் சென்றேன். நண்பர்கள் வரத்தொடங்கினர். 40 பேர் வந்தமையால் கொஞ்சம் இடநெருக்கடியும் புழுக்கமும் இருந்தாலும் நண்பர்களின் கூட்டமாதலால் கொண்டாட்டமான மனநிலை இருந்தது. விஷ்ணுபுரம் விழாக்களின் மனநிலை கூடிவந்தது.
நான் அலுவலகத்தை ரிபன் வெட்டி திறந்துவைத்தேன். அலுவலகத்தில் விளக்கும் ஏற்றினேன். நண்பர்களுக்கு டீ வழங்கப்பட்டது. வழக்கம்போல உற்சாகமான கேலியும் கிண்டலுமாகப் பேசிக்கொண்டிருந்தோம். நண்பர், இசைவிமர்சகர் ஷாஜி சென்னை இப்போது நடிகரும் பாடகருமாக ஆகிவிட்டிருக்கிறார். அவர் மூன்று பாடல்களை பதிவுசெய்யப்பட்ட பின்னணி இசையின் உதவியுடன் பாடினார். பாப் டைலனின் ஓர் ஆங்கிலப்பாடல். ஓர் இந்திப்பாடல். ஒரு தமிழ்ப்பாடல். ஒரு கொண்டாட்டத்துக்கான மனநிலை உருவாகியது.
நான் இரண்டுநிமிடம் பேசினேன். சைதன்யா மானசாப் பதிப்பகத்தின் நோக்கம், இலக்கு பற்றி ஒரு சிற்றுரை ஆற்றினாள். கிருபா மானாசாவின் திட்டங்கள் பற்றி பேசி, உறுதுணையாக நின்றவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இரவு ஒன்பது மணிவரை நண்பர்கள் இருந்தனர். ஒவ்வொருவராக விடைபெற்றுச் சென்றபின் வீடு திரும்பினோம். ஒரு நிறைவான தொடக்கம் என்னும் உணர்வு உருவானது.
நாவல் பயிற்சியில் முதல்நாள் இருபத்தைந்து வயதுக்குக் குறைவான இளம் படைப்பாளர்கள். இரண்டாம் நாள் அடுத்த நிலை படைப்பாளர்கள். நாவல் என்னும் கலைவடிவம் எல்லா கலைவடிவங்களையும்போல புறவயமான ஒரு இலக்கணம் உடையது. அது அதன் கட்டமைப்பின் இலக்கணம். அதைக் கற்றுக்கொடுக்கலாம். ஒரு பாடகர் ராகங்களைக் கற்றுக்கொள்வதுபோல. ஆனால் ராகங்கள் தெரிந்த அனைவரும் நல்ல பாடகர்கள் அல்ல. ராகத்தை பயிலலாம். குரலை பயிற்றுவிக்கலாம். ஆனால் அறுதியாக உள்ளத்திலுள்ள உணர்வெழுச்சியே கலை ஆகிறது.
(கிருபா, நவீன், மானசா)
இந்தப் பயிற்சி ஆங்கில நாவல் எழுதுவதற்கு உரியது, பெண்களுக்கு மட்டுமானது என்பதனாலேயே பங்கேற்பாளர்களின் எல்லை குறுகிவிட்டது. இதை அக்டோபரில் அமெரிக்காவில் அனைவருக்குமாக நடத்தும் எண்ணம் உண்டு. நண்பர் விசு விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமெரிக்கா (viswanathan.mahalingam@gmail.com) இதை ஒருங்கிணைக்கிறார். கற்பிக்கப்படத்தக்க ஓர் அம்சம் எப்போதும் கலையில் உண்டு. தானாக வெளிப்படவேண்டிய கற்பனை அம்சம் முறையாக வெளிப்படுவதற்குத் தடையாக அப்பயிற்சியின்மை அமையாமல் இருப்பதற்காகவே அப்பயிற்சியை அடையலாம்.
மானசா பதிப்பகம் சார்பில் மாதந்தோறும் அடையாறு அலுவலகத்தில் மாதந்தோறும் ஆங்கிலத்தில் இலக்கியம், பொது அறிவு, தத்துவ நூல்களை விவாதிக்கும் ஓர் வாசகர் அரங்கத்தை ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மானசா புக் கிளப். ஓர் அரங்கு மாணவர்நிலை வாசகர்களுக்காக. ஓர் அரங்கு அனைத்துவாசகர்களுக்காக என எண்ணியுள்ளோம். ஆர்வமுள்ள நண்பர்கள் கலந்துகொள்ளவேண்டும்.
குறிப்பாக தங்கள் குழந்தைகளை வாசிப்பின் சுவை நோக்கி இட்டுச்செல்லவேண்டும். புனைவை படிப்பது மட்டும் அல்ல, கொஞ்சம் கடினமான புனைவல்லாத நூல்களையும் முழுக்கவனத்துடன் படித்து முடிக்கும் பயிற்சி இன்றைய மாணவர்களுக்கு மிக அவசியமான ஒன்று. தத்துவநூல்களை அவர்களால் வாசிக்கமுடியும் என்றால் அது மிகப்பெரிய ஒரு தொடக்கம். இன்றைய முறைசார் கல்வி வழியாக அதை பயிற்றுவிக்க முடியாது. ஏனென்றால் அது அனைத்துக் குழந்தைகளுக்கும் உரிய கல்வி அல்ல. கொஞ்சம் சுய ஆர்வமும், அறிவுத்தரமும் கொண்ட குழந்தைகளுக்கானது.
வரும் செயற்கையறிவுக் காலகட்டத்தில் சுயசிந்தனையே முதன்மை தகுதியாகக் கொள்ளப்படும். அதற்கான தயாரிப்பு என்பது தானாகவே தன் உலகை வாசித்து உருவாக்கிக்கொள்ளும் தேடல்தான்.அதை உருவாக்கவே முயல்கிறோம். இந்தியாவில் பெங்களூர் உட்பட எல்லா நகரங்களிலும் இத்தகைய ‘புக் கிளப்’கள் ஏராளமாக நிகழ்கின்றன. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பெரிய இயக்கமாகவே முன்னெடுக்கிறார்கள். இங்குள்ள பெற்றோர் பெரும்பாலும் பள்ளிமதிப்பெண், தொழிற்கல்விக்கு அப்பால் யோசிக்காதவர்கள். சென்னையில் ஓர் ஐம்பது பெற்றோராவது கொஞ்சம் முன்னகர்ந்து யோசிக்கக்கூடும் என நம்புகிறோம்
தொடர்புக்கு connect@manasapublications.com
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
