தூரன் விழா, கடிதம்
அன்புள்ள ஜெ,
மூத்த அறிஞர் வெ.வேதாசலம் அவர்களுக்கு விருது அளிக்கப்பட்ட நிகழ்வு நிறைவளிப்பது. அண்மையிலே வரலாற்றாய்வாளர் என்று சொல்லிக்கொண்டு டிவிகளிலெல்லாம் வந்து அமர்ந்து பேசும் ஒருவர் அமெரிக்காவுக்கு வரலாற்றாசிரியர் என்று அழைக்கப்பட்டார். மன்னர்மன்னன் என்று பெயர் ,கேள்விப்பட்டிருப்பீர்கள். அங்கே சென்று அவர் ராஜேந்திரசோழன் மின்சார ஈல்மீன்களை பயன்படுத்தி எதிரிக்கப்பல்களின் ஆணிகளை காந்தவிசையால் கழன்றுபோகச்செய்து அவர்களை வென்றான் என்றெல்லாம் உளறித்தள்ளினார்.
அடிப்படை அறிவியல் தெரிந்த எவருக்கும் அந்த பேச்சு அபத்தத்தின் உச்சம் என்று தெரியும். கொஞ்சம் பொதுப்புத்தி இருந்தாலே அதைக்கேட்டல மண்டையில் அறையத்தோன்றும். அமெரிக்காவிலுள்ள தமிழர்கள் பெரும்பாலும் கம்ப்யூட்டர் தட்ட கற்றுக்கொண்டு அங்கே சென்றவர்கள். பொதுவான வாசிப்போ அடிப்படை அறிவோ கிடையாது. கிராமங்களிலுள்ளவர்கள் சினிமா பார்ப்பதுபோல காகிதத்தை எல்லாம் கிழித்துவிசி கூச்சலிட்டு தமிழ் சினிமா பார்க்கும் கூட்டம். ஆனால் அந்த மனிதர் பேசியது அமெரிக்க நிலத்தில். எவராவது வெளிநாட்டுக்காரர் வந்திருந்தால் நாம் எவ்வளவு கேவலப்பட்டிருப்போம்.
ஆனால் இதுதான் எல்லா ஆய்வரங்குகளிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் நிகழும் சர்வதேச ஆய்வரங்குகளில் ஆய்வாளர் என்ற போர்வையில் மிகமோசமான இனவாதம், மதவெறி எல்லாம் பேசுவது மிகச் சாதாரணமாக உள்ளது. ஐஐடி தலைவர் சாணியை நியாயப்படுத்திப் பேசிய சூடோ அறிவியலை நாம் கேட்டோம் அல்லவா/
இச்சூழலில் வேதாசலம், சுப்பராயலு போன்ற மதிப்பு மிக்க ஆய்வாளர்களை கௌரவிப்பதென்பது மிகமிக முக்கியமான செயல். உண்மையான ஆய்வாளர்களை அடையாளம் காட்டும் செயல். சுப்பராயலு மேடையிலே பேசும்போதுகூட ஆய்வு என்பது எத்தனை நிதானமாக, எவ்வளவு படிப்படியாகச் செய்யவேண்டியது என்றுதான் பேசுகிறார். எவ்வளவு விவாதங்களுக்குப் பிறகு முடிவுகள் அறிவிக்கப்படவேண்டும் என்றுதான் சொல்கிறார்.
வேதாசலம் அவர்களின் நூல்களை வாசித்துள்ளேன். அவை கலைக்களஞ்சியம் என்று நீங்கள் சொன்னது சரிதான். அவ்வளவு தரவுகள். அவற்றை அவர் காலவரிசைப்படி, இடவரிசைப்படி அபாரமாக ஒழுங்குசெய்து அளிக்கிறார். சான்றுகள் அனைத்தையும் சேகரிக்கிறார். கல்வெட்டுகளை தானே நேரில்சென்று பார்க்காமல் எழுதுவதில்லை. எந்த மிகையான ஊகங்களையும் செய்வதுமில்லை.
அவரைப்போன்றவர்களே ஆய்வாளர்கள். அவர்கள்தான் நம் பெருமிதங்கள். நம் இளையதலைமுறை அவர்களைத்தான் தெரிந்துகொள்ளவேண்டும். அவர்களை அடையாளம்காட்டும் பணி போற்றுதற்குரியது. விழாவுக்கு என் வாழ்த்துக்கள்.
செல்வ. ராஜகணபதி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
