வெளியேறும் வழி – 3
(தொடர்ச்சி)
அருஞ்செயல்கள் எனும் போது நான் மிகப்பெரும் செயல்களை குறிப்பிடவில்லை. வரலாற்றில் என்றும் நின்றிருக்கும் பெருஞ்செயலை தான் ஒருவராக செய்து முடிக்க வேண்டும் என்ற கனவு இளமையில் எவருக்கும் எழுவதுதான். அத்தகைய பெருஞ்செயலாற்றியவர்கள் எல்லா யுகத்திலும் உள்ளனர் என்பதும் உண்மையே. ஆனால் அது அனைவருக்கும் இயல்வது அல்ல. நம் எல்லைகள் பலவும் நம்மை மீறியவை. நம் உடலின் எல்லைகள், அறிவின் எல்லைகள், நம் சூழலின் எல்லைகள். எல்லா எல்லைகளையும் மீறமுடியும் என்பது இளமைக்குரிய நம்பிக்கை. அவ்வாறல்ல என்பது அனுபவம் அளிக்கும் தெளிவு.
செயலாற்றுவது மட்டுமே நம் கையில் உள்ளது. செயலின் விளைவு என்பது காலத்தில், சூழலில், இன்னும் எத்தனையோ இணைவுகளில் உள்ளது. அதையே ‘விளைவை இயற்றுபவன் நான்’ என்று ஊழின் முகமாக வந்து நின்று கீதையில் கிருஷ்ணன் சொல்கிறார். செயலாற்றுவது என்பது நம் பொருட்டே. அதன் விளைவுகள் என்ன ஆகும் என்பதை எண்ணிச்செய்யும் செயல் நமக்கு நிறைவை அளிப்பதில்லை. அதன் விளைவென்ன என்று நாம் அறியக்கூடுவதுமில்லை.
இங்கு நாம் எதுவும் செய்யாமல் இருந்தாலும் ஒன்று ஆகப்போவதில்லை என்ற உணர்வை ஓர் அகவைக்கு பிறகு நாம் இயல்பாகவே வந்தடைகிறோம். பல ஆண்டுகளுக்கு முன் என் ஆசிரியரான துறவியிடம் வெண்முரசு எழுதும் பெருங்கனவைப் பகிர்ந்தேன். ‘நல்ல காரியம். செய். ஆனால் எழுதாமலிருந்தாலும் ஒன்றும் ஆகாது என்பதையும் உணர்ந்துகொள்’ என்றார். எழுதி முடித்ததும் அதை உணர்ந்தேன்.
ஆகவே பெருஞ்செயலாற்றுக எனும்போது மாபெரும் செயல்களுடன் இருத்தல் என்பதையே குறிப்பிடுகிறேன். பெருங்கனவுகள் மற்றும் பெரும் இலக்குகள் நோக்கிச் செல்லும் செயல்களையே பெருஞ்செயல் என்று சொல்கிறோம். அவற்றில் நமது தனிப் பங்களிப்புண்டு என்றாலும் அவை கூட்டான செயல்களே. அவற்றில் ஒரு துளியே நம்முடையது. நான் ஒரு நாவல் ஆசிரியர். என் நாவல் என் ஆக்கம். ஆனால் அதை எனக்குரியது என்று நான் எண்ணவில்லை. இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் இலக்கியச்செயல்பாடு என்னும் கூட்டியக்கத்தின் ஒரு பகுதியாகவே என்னுடைய படைப்பிலக்கியங்களும் இருக்கின்றன. ஆகவே அவை என்னுடையவை அல்ல. இங்கிருக்கும் ஒரு பெரும் செயலின் ஒரு பகுதி மட்டுமே. அப்படியே சேவைகளை, பிற செயல்பாடுகளையும் ஒருவன் கொள்ள முடியும் என்றால் அவன் பெருஞ்செயல் ஆற்றுபவன்தான்.
இங்கு ஒவ்வொரு உயிரும் அத்தகைய பெருஞ்செயலில்தான் இருக்கிறது என்று ஒரு வகையில் சொல்லலாம். இங்கே என்ன நிகழ்கிறது என்று நமக்கு தெரியாது. இங்கு மானுடஉயிர் திரளெனன நிகழ்ந்து கொண்டிருப்பதற்கு என்ன காரணம்? இங்கு உயிர் என்று ஒன்று நிகழ்வதற்கு என்ன காரணம்? இயற்கை என்று ஒன்று திகழ்வதற்கு என்ன காரணம் ? எதன் நோக்கத்தை இவை நிறைவேற்றுகின்றன? எதையுமே நாம் அறிந்து விட முடியாது. இப்பெருஞ்செயலில் ஒரு பகுதியாகவே நம்மை உணர்கிறோம்.
அதற்கப்பால் நமது அகம் தேடும் ஒரு செயல் உள்ளது. எதைச் செய்தால் நாம் நம்மை நாமே முழுமைப்படுத்திக் கொள்கிறோமோ, எதன் மூலமாக நாம் நம்மை விடுதலை செய்துகொள்கிறோமோ, எதைச் செய்கையில் நாம் முழுமையான இன்பத்தை அடைகிறோமோ அதுவே நம் செயல். அச்செயலைச் செய்யும்போது நாம் நம்முடன் தனித்திருக்கிறோம். அச்செயல் ஒரு தியானம். ஆனால் அதைச் செய்யும்போது நாம் மாபெரும் கூட்டுச்செயல்பாட்டின் ஒரு பகுதியாகவும் இருக்கிறோம்.
இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த காந்தி ஆற்றியது பெருஞ்செயல். ஆனால் காந்தி ஆற்றிய அப்பெருஞ்செயல் அவருடன் நின்ற பல்லாயிரம் கோடி மக்களால் ஆனது. அதேபோன்று அதில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் காந்தி ஆற்றிய பெருஞ்செயலில் ஈடுபட்டவர்களே. இன்று திரும்பிப் பார்க்கையில் அத்தகைய பெரும் லட்சியவாதச் செயல்பாடுகளில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் மகிழ்ச்சியும் நிறைவும் கொண்டவர்களாக இருப்பதைக் காண்கிறோம். எத்தனை பணமும் புகழும் ஈட்டினாலும் தன்னலச் செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள் நிறைவற்றவர்களாக, கைவிடப்பட்டவர்களாக உணர்வதையும் காண்கிறோம்.
நான் இன்று இந்த அகவையில் எண்ணிப் பார்க்கையில் எவர் நல்ல நினைவுகளை ஈட்டிக் கொண்டிருக்கிறாரோ அவர்தான் வாழ்ந்தார் என்று சொல்ல முடியும் என்று தோன்றுகிறது. நான் என் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கையில் படைப்புகளை எழுதிய காலகட்டம், என் நண்பர்களுடன் சேர்ந்து செய்த பயணங்கள், வாசிப்புகள் ஆகியவற்றின் ஊடாக எனக்குரிய செயலைச் செய்து நிறைவடைந்து கொண்டிருந்தேன் என்று உணர்கிறேன். அதுவே எனது வாழ்க்கையின் இலக்கென்றும் தோன்றுகிறது.
கீதை ‘வேள்வி என செய்யப்படாத உணவை உண்ண வேண்டாம்’ என்கிறது. வேள்வி என்றால் என்ன என்பதற்கான கீதையின் வரையறை இது. ‘விளைவை எண்ணி கணக்கிடாமல், தன்னலமின்றி, உலகநலனுக்காக செய்யப்படும் செயல்’. செய்பவன் நிறைவையும் விடுதலையும் அடையும் செயல் எதுவோ அதுவே வேள்வி என்பது. “செயலை வேல்வியாக்குக!” என்பதுதான் கீதை சொல்லும் செய்தி.
ஒவ்வொரு முறையும் நான் சொல்லிக் கொண்டிருப்பது ‘செயல்புரிக’ என்றே. நமக்கான செயல், வேள்வியென ஆகும் பெருஞ்செயல். அது ஒன்றே இங்கே நம்மை விடுதலை அடையச்செய்யும், சேவையோ, கலையோ, இலக்கியமோ எதுவாயினும். இதை நம்பமுடியாதவர்கள் உண்டு. இயல்பிலேயே அவநம்பிக்கைவாதிகளாக ஆகிவிட்டவர்கள் அவர்கள். கசப்பை, எதிர்நிலையை இயல்பென திரட்டிக்கொண்டவர்கள். அது ஓர் உளக்குறைபாடு, அதை அவர்கள் கடக்கமுடியாது. அவர்கள் அவநம்பிக்கையை பரப்புவார்கள், எட்டுத்திசையில் இருந்தும் அதுவே எதிரொலித்து அவர்களிடம் திரும்பி வரும். அவர்கள் மேல் எனக்கு என்றும் அனுதாபம்தான். அவர்களிடம் நான் விவாதிப்பதில்லை. நான் பேசுவது நம்பிக்கை கொஞ்சமேனும் எஞ்சியுள்ளோரிடம் மட்டுமே.
செயலை இரு திசைகளிலும் சென்று அடையலாம். துறந்து வெளியே நோக்கிச் சென்று தன் செயலை கண்டடைந்து அதற்கு தன்னைக் கொடுப்பதே வேள்விப்பெருஞ்செயல். அதை எய்துவோர் சிலர். குறைந்தபட்சம் அந்த வேள்வியின் அவியன்னத்தில் ஒரு சிட்டிகையையாவது பங்கிட்டுக்கொள்வதையே பிறருக்குச் சொல்கிறேன்.
(நிறைவு)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

