ரமேஷ், கடலூர் சீனு
இனிய ஜெயம்
ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு நீங்கள் எழுதிய அஞ்சலி குறிப்பில், அவரை, செய்த உதவிகளை சொல்லிக்காட்டியும், உடல் ரீதியாகவும் நீங்கள் அவமதித்துவிட்டதாக சொல்லி சக எழுத்தாளர்கள் பொங்கிய நிலை கண்டு உண்மையாகவே மகிழ்ந்தேன். தமிழில் ஒரு எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரால் அவமதிக்கப்பட்டால் சக எழுத்தாளர்கள் பொங்கி எழுந்துவிடுவார்கள் எனும் நிலை ஒரு நல்ல விஷயம்தானே.
ஆனால் அந்த பொங்கல்களில் அவர்கள் செத்துப்போனதால் தன்னை அவமதிக்கும் கூற்றுக்களுக்கு எதிராக தன்னால் தற்காத்துக்கொள்ள முடியாது என்ற நிலையில் இருக்கும் ரமேஷ்க்கு உடுக்கை இழந்தவன் கை போல் அங்கே இடுக்கண் களைய ஓடிவந்து அவருக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாக நினைத்து தங்களது மிடில் க்ளாஸ் அம்மாஞ்சிதனத்தைதான் கடைவிரித்திருக்கிறார்கள். ரமேஷ் பிரேதன் அவர்களை, அவரும் தங்களை போல மிடில் கிளாஸ் அம்மாஞ்சி என்று நம்பியதால்தான் “அய்யோ அவருக்கு எப்புடி வலிக்கும்… எவ்ளோ கசக்கும்” என்றெல்லாம் சக எழுத்தாளர்கள் சிணுங்கி வைத்திருக்கிறார்கள். காரணம் இப்போது குலுங்கி குமுறிக்கொண்டு இருக்கும் “எழுத்தாளுமைகள்” யாரும் சமீப காலங்களில் ரமேஷ் உடன் நெருங்கி பழகியதோ, அவரது அடுத்தகட்ட நேர்காணல்கள் ஆக்கங்கள் எதையும் வாசித்து இல்லை என்பதுதான்.
ரமேஷ் அவர்களின் அம்மா இறந்தபோது அவர் கேட்ட தொகையை திரட்டி அவர் வசம் அளிக்க போயிருந்தேன். பேருந்து நிலையம் வந்திருந்தார். அவரை அழைத்து செல்ல ஒரு நண்பர் வருவதாக சொல்ல, அந்த நண்பர் வரும் வரை பேசிக்கொண்டு இருந்தோம்.
அப்போது அவர் எங்கெங்கோ சுற்றி சென்று பேசிய பலவற்றில் இருந்து கீழ் கண்டவற்றை தொகுத்து சொல்கிறேன்.
பாசிசம் இல்லாமல் இங்கே உயிர் வாழ்க்கை இல்லை. பாசிசம் இல்லாவிட்டால் பிறக்கவே முடியாது. (கொட்டின மொத்த விந்தும் பொறக்கணும் அதுதான் ஜனநாயகம் அப்டின்னு இயற்கை விதிச்சிருந்தா என்னாகும்? கிளிஞ்சிறாது… என்றுவிட்டு வெடித்து சிரித்தார்) பிறந்த குழந்தை உடல் முதல் முதிய உடல் வரை அதை நீங்காது உடன் இருப்பது பாசிசம். பொருளாதார சமத்துவம் என்ற கனவை வீழ்த்தியது இந்த பாசிசம்தான். முதலீட்டியம் இந்த பாசிசத்துக்கு சேவை செய்வது. ஆகவே அதுவே வெல்லும். அதில் அறம் என்பதெல்லாம் கிடையாது. அறம் ஒரு சமூக உடன்படிக்கைதானே அன்றி மனித உடலின் இயல்பில் பாசிசம் அன்றி எந்த அறமும் கிடையாது. இனி இந்த பொருளாதார நிலைதான் ஒரே ஒரு இருப்பு. இதில் ஒரு எழுத்தாளனாக கலைஞனாக உணரும் ஒருவன் பிச்சை எடுத்து வாழ்வது மட்டுமே இந்த நிலைக்கு எதிராக வாழ்வை கொண்டு செல்லும் கலக செயல்பாடாக இருக்க முடியும்.
ரமேஷ் எப்போதுமே எதை சொல்கிறாரோ அதை ஏற்று வரம்புகளை மீறிய வாழ்வை வாழ்ந்தவர் என்பதை எல்லோரும் அறிவோம். பிற்கால ரமேஷ் என்று நாம் காண்பது மேலே சொன்ன அவரது சொற்களின் படி வாழ முயன்ற ரமேஷ் அவர்களைதான். (நான் சொன்னவற்றை தேடி பார்த்தால் ரமேஷ் அவர்களின் எழுதிலேயே வாசிக்க கிடைக்கும்) அதிலும் அவர் வரம்புகளை மீறிய கலகக்காரனாகவே வாழ்ந்தார். அந்த வாழ்வை அவர் வாழ எத்தனை பேர் துணை நின்றார்கள் என்பது வெளியே தெரிவது எவரது அவமானதுக்குக்கும் உரிய விஷயம் இல்லை. அவர் யாசகனாக இல்லை எழுத்தாளனாக வாழ்ந்தார், பிரேமா கையில் குழந்தையாக வாழ்ந்தார். போகும்போது பேரரசனாக போனார். அது ஒரு ஆவணம். அது போக இந்த வகை வாழ்கையில் ரமேஷ் மானம் அவமானம் என்ற மிடில் கிளாஸ் விழுமியங்களுக்கு அப்பால் இருந்தார். (இதன் பொருள் ரமேஷ் மானம் கெட்டவர் என்பதல்ல என்பதையும் இந்த மிடில் கிளாஸ் அம்மாஞ்சிகளுக்கு சேர்த்தே சொல்லிவிட வேண்டும்)
ரமேஷ் நோயுற்ற பிறகு ஒரு சராசரி மனிதன் கண்டால் நம்பவே இயலாத அளவுக்கு உடல் மையம் கொண்டவராக ஆனார். (ஒரு சராசரி மனிதனால் ஒரு மணி நேரம் அவர் அருகே அமர்ந்திருக்க முடியாது. அவர் என்னிடம் அவரது மற்றும் பிற உடல் குறித்து பேசிய எதையும் இங்கே எழுதினால் இந்த மிடில் கிளாஸ் அமாஞ்சிகளால் அதை ஜீரணிக்கவே முடியாது.) அந்த உடலுக்கு ஆண் பெண் என்ற மையம் கிடையாது. சாரம் என்று ஒன்று கிடையாது. ஆன்மா கிடையாது. மொழி சமூகத்தால் உற்பத்தி செய்யப்பட்டு இந்த உடலுக்கு அளிக்கப்பட்டது… இப்படி இன்னும் இன்னும் நிறைய கண்டடைதல்கள். அவரை இருள் அன்றி எங்கும் கொண்டு சேர்க்காத கண்டடைதல்கள். அவரை உடைத்து முன்னே நகர்த்த எந்த சொல்லை சொல்ல வேண்டுமோ அது அவருக்கு சொல்லப்பட்டது அவர் எழுத்தாளனாக முன்னே சென்றார். இதுவும் சொல்லப்பட வேண்டிய ஆவணம்.
இதையெல்லாம் இந்த மிடில் கிளாஸ் அம்மாஞ்சி எழுத்தாளர்கள் இன்று இல்லாவிட்டாலும் என்றேனும் புரிந்து கொள்வார்கள் என்று விதியை நம்புவோம்:).
கடலூர் சீனு
ரமேஷ், கடிதங்கள் ரமேஷ் பிரேதன் விருது, ஒரு கேள்வி ரமேஷ், தனிவாழ்க்கை, இன்னொரு கடிதம் ரமேஷ் பிரேதன், கடிதங்கள் ரமேஷ், ஒழுக்கவியல் – கடிதம் ரமேஷ் பிரேதன், வாழ்த்துக்கள் விஷ்ணுபுரம் விருது, கடிதம். ரமேஷ் வாழ்த்துக்கள் ரமேஷ், கடிதங்கள்ரமேஷ் பிரேதன், தனிவாழ்க்கை- கடிதம்
ரமேஷ் பிரேதனுக்கு விருது, வாழ்த்துக்கள்
ரமேஷ் பிரேதனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்.
ரமேஷ் பிரேதன்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

