மழையும் துளிரும்- சாரதி
அன்புள்ள ஜெ,
செப்டம்பர் மாதத்தின் ஒரு மாலைப்பொழுதில் எனக்கும் என் வீட்டிற்குமிடையே இருந்த டயப்லோ மலைத்தொடரை அல்டமாண்ட் கணவாய் வழியே கடப்பதற்கான போக்குவரத்து நெரிசலில் சிக்கி, அந்த வறண்டு போன மலைத்தொடரின் காய்ந்த புற்களைப் பார்த்துக்கொண்டு காரில் அமர்ந்திருந்தேன். மழையே இல்லாத நீண்ட கோடையின் அந்த இறுதி நாட்களில் காட்டுத்தீக்கு மிஞ்சிய மலைச்சரிவின் புற்கள் எல்லாம் வெயிலில் வாடி வெளிறிப்போயிருந்தன. எங்கள் ஊரைச் சுற்றிலுமிருந்த பாதாம் மரத்தோட்டங்களுக்கு இடையிடையே அந்தக் கரிசல் நிலங்களில் வைக்கோலுக்காக வளர்க்கப்பட்ட புற்கள் ஏற்கனவே அறுக்கப்பட்டு கனசதுரங்களாகக் கட்டப்பட்ட பின், அந்த நிலங்கள் எல்லாம் வெறுமையாய்க் கிடந்தன. ஒரு கனசதுரத்தின் கொள்ளளவுக்கான வாய்ப்பாடு என்ன என்று மிகத்தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த போது நண்பர் விசு திடீரென்று தொலைபேசியில் அழைத்து, “ஜெ நம் கலிபோர்னியா வளைகுடா பகுதிக்கு வரும்போது அவரைக் கொண்டு ஒரு நாவல் பயிற்சி வகுப்பை நடத்தலாமா?” என்று கேட்டார்.
விசுவின் தீவிரமும் உற்சாகமும் உடனடியாக அடுத்தவருக்கும் பற்றிக்கொள்வது. நானும் அதே உற்சாகத்துடன் “நல்ல யோசனை விசு. கடந்த ஒரு வருடமாக நாம் தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் சிறுகதைகள் எல்லாம் வாசித்து விவாதித்திருக்கிறோம். அடுத்து நாவலை சரியாக வாசிப்பதற்கு ஒரு பயிற்சி வகுப்பு, அதுவும் ஜெவே நடத்துவாரென்றால் நிச்சயம் நாம் எல்லாருமே கலந்து கொள்ளலாம்” என்றேன். “இல்லல்ல… நாவல் வாசிக்கிறதுகில்ல, நாவல் எழுதுவதற்கான பயிற்சி” என்று சொன்னபோது என் உற்சாகமெல்லாம் வடிந்து தயக்கமும் பயமும் சூழ்ந்துகொண்டது. “எனக்கு இன்னும் கடிதமும், கட்டுரையுமே சரியா எழுத வரலை. போன தடவ சொல்வனத்துல வந்த என் கட்டுரையப் படிச்சுட்டு, அடுத்த தடவையாவது உருப்படியா ஏதாவது எழுதுங்கனு பிரசாத் திட்டிட்டார். அதுக்குள்ள நாவலா? நாம வேணும்னா சிறுகதை பயிற்சி முகாம்னு வச்சுக்கலாமா? நாவல் அடுத்த வருஷம்…” என்றேன்.
விசு விடுவதாயில்லை. “இல்ல, இன்னும் ஒரு வருஷத்தை நாம வீணடிக்கக் கூடாது. இதுவே ரொம்ப தாமதம். நாம நிச்சயம் இதை நடத்தலாம். எனக்கு உங்க மேலயும், நம்ம நண்பர்கள் மேலயும் நம்பிக்கை இருக்கு” என்று எப்போதும் போல தன் முடிவில் மிகுந்த நம்பிக்கையுடனும் உறுதியுடனும் இருந்தார். அவர் என்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையில் கால்வாசி என் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்திருந்தால் கூட வாழ்க்கை எவ்வளவு நன்றாக இருக்குமென்ற கற்பனையை ஓரக்கட்டிவிட்டு, “சரி விசு, நானும் கலந்து கொள்கிறேன். ஜெவிடம் திட்டு வாங்காமல் எங்களைக் காப்பற்றுவது உங்கள் பொறுப்பு” என்று கூறி சம்மதித்து விட்டேன்.
பயிற்சி வகுப்புக்கு உங்கள் அனுமதி கிடைத்த ஓரிரு நாட்களுக்குள்ளேயே நிகழ்வுக்கான தேதி, இடம், நிதி என எல்லாமே சட்டென ஒருங்கிவிட்டன. சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியிலிருந்து மட்டுமல்லாமல் மேலே சியாட்டில் மற்றும் போர்ட்லாந்திலிருந்து கீழே லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் சான் டியாகோ வரை, மேற்கு கடற்கரையின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் நண்பர்கள் முன்பதிவு செய்துவிட்டனர். நிகழ்வுக்கான பணிகளுக்கு உதவி கோரி அனுப்பப்பட்ட பட்டியல் சில மணிநேரங்களில் நண்பர்களால் நிரப்பப்பட்டுவிட்டது. பூங்கொத்தை வாங்கிவரும் பணிமட்டுமே எனக்கு மிச்சமிருந்தது.
இதற்கிடையே வளைகுடா பகுதியின் வாசகர் வட்டத்தின் முதலாமாண்டு நிறைவை ஒட்டி உங்கள் முன்னிலையில் ஒரு கூட்டமும் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, கலிபோர்னியா வளைகுடா பகுதி நண்பர்களின் இந்த வாசிப்பு வட்டம் சென்ற ஆண்டு தொடங்கப்பட்டது. நண்பர்கள் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு எழுத்தாளர் என எடுத்துக்கொண்டு அவரது கதைகளை வாசித்து, அதையொட்டிய எண்ணங்களையும் வாசிப்பனுபவத்தையும் பகிர்ந்துகொள்கிறோம். மாதமொரு முறை நேரில் சந்தித்து இலக்கிய வாசிப்பிலும் விவாதத்திலும் ஈடுபட்டு வருகிறோம். வாசிப்பு வட்டத்தின் முதலாமாண்டு நிறைவையொட்டி இம்முறை அசோகமித்திரனின் கதைகளைத் தேர்ந்தெடுத்திருந்தோம். இந்த நிகழ்வு உங்கள் அமெரிக்கா பயணத்திட்டத்தோடு இணைந்து கொண்டது எங்கள் நல்லூழ். சாரதா மற்றும் பிரசாத் முன்னெடுப்பில் உங்கள் முன்னிலையில் இந்த முதலாமாண்டு நிறைவு நிகழ்ச்சி நடக்குமென உறுதி செய்யப்பட்டது. நண்பர்கள் சத்யா மற்றும் பாலாஜியுடன் இணைந்து நானும் அசோகமித்திரனின் ஒரு கதையைப் பற்றிப் பேசுவதற்கு ஒத்துக்கொண்டிருந்தேன்.
அக்டோபர் 8 புதனன்று உங்கள் வருகை, வெள்ளிக்கிழமை மாலை எழுத்தாளர் அருண்மொழி நங்கை மற்றும் உங்கள் முன்பு பேச வேண்டிய 7 நிமிட உரை, சனிக்கிழமை சான் மாட்டியோவிலும், சாக்ரோமெண்டோவிலும் உங்கள் நூலறிமுக நிகழ்வு, இறுதியாக ஞாயிறு அன்று முழுநாள் நாவல் பயிற்சி வகுப்பு என அடுத்தடுத்து நிகழ்ச்சி நிரல் உறுதியாகியது. மற்ற யாவற்றையும் விட நாவல் பயிற்சி வகுப்புதான் அதிகமான பதட்டம் தந்தது. இந்த பிரமோதினி வீட்டில் இன்னும் கொஞ்சம் கண்டிப்போடு இருந்து விசுவை கட்டி வைக்கக்கூடாதா என்று தோன்றியது. பின்னர் நண்பர்களிடம் எல்லாம் பேசி அவர்களுக்கும் வகுப்பு குறித்த அதே குழப்பமும் பயமும் தான் எனத் தெரிந்துகொண்ட பிறகு தான் கொஞ்சம் நிம்மதி. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
புதன்கிழமை மதியமாக நீங்கள் வருவதாக இருந்ததால் உங்களையும் அருண்மொழி அக்காவையும் நேரில் வரவேற்க, சான் பிரான்சிஸ்கோவிலிருக்கும் என் அலுவலகத்தில் இருந்து நேரடியாக விமான நிலையத்துக்கு வருவதாகத் திட்டம். என் மகள் மதுராவிற்கு அந்த வாரம் முழுக்க இலையுதிர்கால விடுமுறையாதலால் உங்களை வரவேற்க தானும் வருவேன் எனச்சொல்லி Stories of the True நூலை எடுத்து பையில் கட்டிக்கொண்டு கூடவே வந்துவிட்டாள். விமான நிலையத்திற்கு வந்துசேரும்வரை இருந்த படபடப்பெல்லாம் உங்களை மீண்டும் நேரில் கண்டவுடன் கரைந்து மனம் அமைதியானது. அங்கிருந்து ஒவ்வொரு நிகழ்வும் திட்டமிட்டபடி, அல்ல அதற்கும் மேலாகவே மிகச்சிறப்பாக நிகழ்ந்தது. எதிர்பார்க்கப்பட்ட நேரத்திற்கு முன்னரே உங்கள் விமானம் வந்து சேர்ந்ததால், நண்பர்கள் வந்து சேரக் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. சோற்றுக்கணக்கின் ஆங்கில வடிவை நானும் மதுராவும் சேர்ந்து வாசித்ததிலிருந்து கெத்தேல் சாகிப்பை மிகவும் பிடித்துப் போனது அவளுக்கு. எல்லோருக்கும் முன்பாக வந்து உங்களையும் அருண்மொழி அக்காவையும் வரவேற்றதிலும், சோற்றுக்கணக்கு கதையை ஒரு எளிய ஓவியமாக வரைந்து உங்களுக்கு அளித்து, புத்தகத்தில் முதல் கையெழுத்தை உங்களிடமிருந்து பெற்றதிலும் ஏகப்பெருமை அம்மணிக்கு.
அக்டோபர் 10 அன்று அசோகமித்திரனின் கதைகளைப் பற்றிய உரைநிகழ்வு சாரதா பிரசாத் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது. வளைகுடா பகுதி நண்பர்கள் அனைவரும் வந்திருந்து விவாதத்திலும் கலந்து கொண்டனர். உங்கள் முன் உரையாற்ற ஒரு வாய்ப்பு கிடைத்ததும், கதை பற்றிய உங்கள் கருத்துக்களை அறிந்து கொண்டதும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. மறுநாள் சான் மெட்டியோவில் காலையிலும் சேக்ரமெண்டோவில் மதியத்திலும் நூலறிமுக நிகழ்வும் இனிதே நடந்தேறியது. இரு நிகழ்விலும் இரண்டாம் தலைமுறையினர் Stories of the True நூலைப் படித்து அந்தக் கதைகளைப் பற்றி சிறப்பாக உரையாற்றினர்.
இரு நாட்களும் உங்களோடு தொடர்ந்து இருந்ததன் நற்பலனாக ஞாயிறு அன்று நாவல் பயிற்சி வகுப்பில் உற்சாகமாகக் கலந்து கொள்ளமுடிந்தது. நாவலுக்கான எண்ணம் எதுவும் மனதில் தற்போதைக்கு இல்லாவிட்டாலும் கூட உங்களிடமிருந்து நேரடியாக அடையும் கல்வி எத்தனை முக்கியம் என்பதை முழுதாக மனம் உணர்ந்திருந்தது. நாம் ஏன் நாவல் எழுத வேண்டும், நாவல் ஏன் எழுதப்பட வேண்டும் என்பதில் தொடங்கி, நாவலின் கரு, கதைக்கட்டு, நடை, கதாப்பாத்திரங்களின் வளர்ச்சி என்பதையெல்லாம் விளக்கி, நாவலின் தரிசனமாவது எது எனத் தெளிவுபடுத்தினீர்கள். ஒரு நல்ல நாவலின் முதல் அத்தியாயம் சிறந்த சிறுகதையாக அமைவதை நீங்கள் சுட்டிக்காட்டியபோது, நினைவில் நிற்கும் பல நல்ல நாவல்களோடு அதைத் தொடர்புபடுத்திப் பார்க்க முடிந்தது.
“எந்தப் பயிற்சியும் ஆளுமைப் பயிற்சியே என்று ஒரு சொல்லை நித்ய சைதன்ய யதி சொல்வதுண்டு. ஒரு மேடையுரைப் பயிற்சி, ஒரு தியானப் பயிற்சி மட்டும் அல்ல; ஒரு சிறு கைத்தொழில்பயிற்சி கூட நம்மை அறியாமலேயே நம் ஆளுமையை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறது. அந்தப் பயிற்சி உண்மையான ஆசிரியர்களால் அளிக்கப்படவேண்டும். அதை நாம் நம்மை அளித்துக் கற்றுக்கொள்ளவேண்டும்.” என்று நீங்கள் ஒரு வாசகர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். இந்த நாவல் பயிற்சி வகுப்பு ஆகச்சிறந்த ஆசிரியரால் எங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்பதை நண்பர்கள் அனைவருமே உணர்ந்திருக்கிறோம் என்றும், அந்த கல்விக்காக உண்மையாகவே நாங்கள் முயல்கிறோம் என்றும் நிச்சயம் நம்புகிறேன்.
முழுநாள் வகுப்புக்குப் பின்னரும் கூட அத்தனை எளிதில் விடைபெற்றுச் சென்றுவிட யாரும் தயாராக இல்லை. அதன் பின்னரும் உங்களோடு உரையாடியும், நண்பர்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டும் இருந்தார்கள். மனதிலுள்ள கேள்வியைச் சரியாகச் சொல்ல முடியாமல் உளறிவிடுவது எனக்கு வழக்கம்தான் என்றாலும், உங்கள் முன்னர் அது இரட்டிப்பாகிவிடுகிறது. கடிதம் எழுதும்போது இருக்கும் தைரியம் நேரில் வருவதில்லை. அன்றும் சித்தார்த்தா நாவலைப் பற்றி எதையோ உளறி, ஒழுங்காகப் படி என்று உங்களிடமிருந்து வாங்கிக்கொண்டேன். கூடவே இருந்த பத்மநாபாவும் உங்களோடு சேர்ந்து கொண்டார். படித்த எல்லாவற்றையும் சரியாக ஞாபகம் வைத்து இப்படித்தான் அடிக்கடி மடக்கிவிடுவார். என் கணக்குப்படி என் வயதளவு அவர் வாசிப்பனுபவம். அவர் கணக்குப்படியோ அவர் வயதளவு.
வாசிப்பனுபவக் கடிதம் என்ற நிலையிலிருந்து ஒரு நல்ல இலக்கியக் கட்டுரை அல்லது நூல் மதிப்புரை எழுத என்ன செய்யவேண்டும் என்ற என் கேள்விக்கு, “கதைச் சுருக்கம் எழுதக் கூடாது, திரைப்பட நகைச்சுவைத் துணுக்குகள் போன்றவற்றை எழுதி கட்டுரையை மலினப்படுத்திவிடக் கூடாது (Don’t Trivialize). மாறாக உங்கள் வாழ்க்கை அனுபவத்தோடு அந்த நூல் எப்படி தொடர்பு கொள்ளுகிறது என்று எழுதலாம். நூலாசிரியரை உங்கள் தரத்திற்கு இழுக்கக் கூடாது. நீங்கள் தான் அந்தத் தளத்திற்கு உயரவேண்டும்” என்ற உங்களின் பதில் தெளிவான விளக்கத்தைக் கொடுத்தது. இறுதியாக நண்பர் பன்சியும் அவரது மனைவியும் அத்தனை பேருக்கும் அளித்த கல்யாண விருந்தோடு அந்த நாள் இனிதே நிறைவுற்றது.
வளைகுடா பகுதி நிகழ்ச்சிகள் முடிந்து நீங்கள் சென்றபின்னர் அந்த நாட்களை நினைக்கையில் முதலில் நினைவுக்கு வருவது நண்பர்களோடு கூடி இருந்து மகிழ்வாகச் சிரித்துக் கொண்டேயிருந்ததும், அந்த மகிழ்வுடனே உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள முடிந்ததும் தான். எங்கள் வாசகர் வட்டம் அடுத்து என்ன செய்யவேண்டுமென உங்களிடம் கேட்டபோது, எப்போதும் மகிழ்ச்சியோடு கூடுங்கள், ஒன்றாக சேர்ந்திருந்து விவாதியுங்கள் என்று வேதம் கூறுவதையும், புதிய நண்பர்களுக்கான வாசலைத் திறந்து வைத்திருக்க வேண்டிய அவசியத்தையும் குறிப்பிட்டீர்கள். நிச்சயம் அதுவே எங்கள் முதல் இலக்காக இருக்கும். சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் நடக்கும் எங்கள் வாசகர் வட்டத்தில் கலந்து கொள்ள் விரும்பும் நண்பர்கள் vishnupurambayarea@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தொடர்புகொள்ளலாம்.
ஜெ, நீங்கள் இங்கிருந்து சென்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு பருவத்தின் முதல் மழை வலுத்துப் பெய்தது. பல மாதங்களாக வெயிலில் காய்ந்து வெறுமையாகக் கிடந்த கரிசல் நிலங்களில் எல்லாம் இப்போது சின்னஞ்சிறு புற்கள் பசுமையாகத் துளிர்த்து நிற்கின்றன. வெளிறிய மஞ்சள் நிற மலைச்சரிவுகள் புத்திளம்பச்சை சூடி அடுத்த பருவத்திற்குத் தயாராகி நிற்கின்றன. உங்களிடம் பெற்றுக்கொண்ட கல்வி அந்த மழையென எங்களுள் நிறைக. பசும்புல்லெனத் துளிர்த்து எழுக.
நன்றி!
சாரதி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

