Jeyamohan's Blog, page 15
November 6, 2025
பொதுரசனைச் செவ்வியல் உருவாகும் தருணம்
அண்மையில் ஒரு துயரமான மனநிலையில் புதுச்சேரியில் இருந்து கோவைக்கு காரில் வந்து கொண்டிருந்தபோது எண்ணங்களை மாற்றும் பொருட்டு இசையை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். வெவ்வேறு கவிஞர்கள் முருகனைப் பற்றி எழுதிய பாடல்களைப் பற்றி பேச்சு சென்றது. பூவை செங்குட்டுவன் எப்படி ஒரு பக்தி கவிஞர் ஆனார் என்பதை அவர் ஒரு உரையாடலில் சொன்னதை நான் நினைவு கூர்ந்தேன். 2006ல் அவர் இளையராஜாவை சந்திக்க வரும்போது ஒருமுறை சந்தித்திருக்கிறேன். இளையராஜா அவரை ஒரு முனிவரை எதிர் வருவது போல வணங்கி எதிர்கொள்வதை பார்த்தேன். அதன் பிறகு தான் அவர் எவர் என்று விசாரித்து தெரிந்து கொண்டேன்.
தமிழ் விக்கியில் அவரைப் பற்றிய ஒரு பதிவு போடும்போது மீண்டும் அவருடைய வாழ்க்கை வரலாற்றை தொகுத்துக் கொண்டேன். (பூவை செங்குட்டுவன் தமிழ்விக்கி). அவர் நாத்திகராக இளமையில் தன் சிந்தனையை தொடங்கியவர். திராவிட இயக்க நாடக ஆசிரியராக தான் அவருடைய இலக்கியப் பணி உருவாகியது. தொடர்ந்து தமிழகம் முழுக்க பயணம் செய்து திராவிட இயக்கத்தின் கருத்துக்களை பிரச்சாரம் செய்து வரும் போது பொருளியல் தேவைக்காக அவ்வப்போது வானொலிக்கும் எழுதி வந்தார். வசதியான அம்பலக்காரர் குடும்பத்தைச் சேர்ந்தவர். திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக ஆசிரியராகவும் ஆகவேண்டும் என்னும் கனவுடன் கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து குடும்பத்துடன் போராடிக்கொண்டிருந்தார்.
அன்று குன்றக்குடி வைத்தியநாதன் திருச்சி வானொலிக்காக பணியாற்றிக் கொண்டிருந்தார். தனியாக இசைத்தட்டுகளையும் வெளியிட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு திரைப்படக்கனவு இருந்தது, அதற்கான முயற்சிகள் கைகூடாமலிருந்தது. குன்னக்குடி வைத்தியநாதனுடன் பூவை செங்குட்டுவன் நட்புகொண்டார். திருச்சி வானொலிக்காக குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் பல நாடகங்களையும் ஓரிரு பாடல்களையும் பூவை செங்குட்டுவன் எழுதினார். ஒருமுறை மிகுந்த பணக்கஷ்டத்துடன் இருந்தபோது நாடகம் எழுத வாய்ப்பு தேடி குன்னக்குடி வைத்தியநாதனை அணுகினார்.
குன்னக்குடி வைத்தியநாதன் அப்போது நாடகத்திற்கான வாய்ப்பில்லை, ஒரு பாடல் எழுத வாய்ப்புள்ளது, அதை எழுத முடியுமா என்று கேட்டார். அது ஒரு முருக பக்தி பாடல். பூவை செங்குட்டுவன் அதற்கு தன்னால் முடியாது என்றும், எந்த வகையிலும் பக்தியுடனும் தனக்கு தொடர்பில்லை என்றும் சொன்னார். அதற்கு குன்னக்குடி ‘உங்களுக்கு தமிழ்தெரியும்தானே? தமிழ் தெரிந்த எவராலும் பக்திப்பாடல் எழுதமுடியும். தமிழையும் பக்தியையும் பிரிக்கமுடியாது’ என்று சொன்னார்.
ஆனால் தன்னால் எழுத முடியும் என்ற நம்பிக்கை குன்னக்குடி வைத்தியநாதன் எத்தனை சொல்லியும் பூவை செங்குட்டுவனுக்கு வரவில்லை. ‘அப்படி என்றால் பணம் இல்லை, கிளம்புங்கள்’ என்று குன்னக்குடி சொன்னபோது பணத்தின் பொருட்டு அப்பாடலை எழுதலாம் என்று முடிவு எடுத்து ஓர் அறையில் அமர்ந்து எழுத முயன்றார். தொடக்கம் அமையாமல் வெவ்வேறு வகையில் சொற்களுடன் முட்டி மோதிக்கொண்டிருந்தார். அன்றெல்லாம் இசைக்காக பாடல் எழுதும் பழக்கம் கிடையாது. பாடல் எழுதிய பிறகு பாடலில் உள்ளுறைந்துள்ள இசையை அறிந்து, அதற்கான ராகத்தை கண்டுபிடித்து, அதற்கு இசையமைத்து அதன் பிறகு பதிவு செய்வதுதான் பழக்கம். ஆகவே இசையும் அவரிடத்தில் தோன்ற வேண்டி இருந்தது.
பாடல் இசையுடன் நிகழ வேண்டியிருந்தது. அது எளிமையாக அனைவருக்கும் சென்றடையும் பாடலாக இருக்க வேண்டும். அதே சமயம் முருகனின் பெருமையை சொல்லும் பாடலாகவும் அமைய வேண்டும். திடீரென்று தோன்றி ஒரு பாடலை முழுமையாக எழுதி முடித்தார்.ஒரு வார்த்தைக்கு பின் இன்னொரு வார்த்தையை பற்றி யோசிக்கவில்லை. ஒரு வரி இன்னொரு வரியை இயல்பாகவே கொண்டு வந்தது. அது அவருக்கும் முருகனுக்குமான ஒரு மிகக் குறுகிய உரையாடல்தான். ஒரு பத்தியை சரசரவென்று கிறுக்குவது போலத்தான் அதை எழுதினார்.
இளமையில் அவருடைய கிராமத்தில் முருகன் கோயிலின் பாறையை நோக்கி அவர்கள் கூச்சல் போட்டு அதிலிருந்து ஒரு எதிரொலி எழும் நினைவுதான் அப்பாடலுக்கான தூண்டுதல். அது சூலமங்கலம் சகோதரிகள் பாட ஒலிப்பதிவானது. அந்தப் பாடல் ஒலிபரப்பான நாள் முதல் தமிழகத்தின் மிக புகழ்பெற்ற முருகன் பாடல் அதுவே. முருகன் பாடல்களிலேயே இன்று வரைக்கும் தமிழகத்தில் மிக அதிகமாக ஒலிப்பதும் அதுதான். எழுபது ஆண்டுகளாக நான்கு தலைமுறையினரால் பாடப்படுவது. அனேகமாக அதை எவருமே கேட்டிருக்காமலிருக்க வாய்ப்பில்லை.
‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும். திருச்செந்தூரிலே வேலாடும் திருப்புகழ் பாடியே மயிலாடும்’. அந்தப் பாடலை ஒரு விழாவில் சூரமங்கலம் சகோதரிகள் பாடக் கேட்டபோது அந்த விழாவிற்கு வந்திருந்த கவிஞர் கண்ணதாசன் இயக்குனர் கே.சங்கரிடம் “உங்கள் கந்தன் கருணை என்ற பாடலில் படத்திற்கு முருகனைப் பற்றி வள்ளியும் தெய்வானையும் பாடும் ஒரு பாடலைக் கேட்டு இருந்தீர்கள். அதற்கு இதைவிடச் சிறந்த ஒரு பாடலை என்னால் எழுத முடியாது. இதெல்லாம் தெய்வ அனுக்கிரகத்தில் இயல்பாக வரும் பாடல். இந்த இத்தனை எளிமையும் இத்தனை ஒழுக்கும் இத்தனை ஆழமும் ஒரே சமயம் அமைவது என்பது தன்னிச்சையாக நிகழ்வது. இது முருகனே எழுதச் சொன்ன பாடல். இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று சொன்னார்.
சங்கர் சூலமங்கல சகோதரிகளை அணுகி அந்த பாடலுக்கான உரிமை எங்குள்ளது என்று கேட்டார். சூலமங்கலம் சகோதரிகள் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்த பூவை செங்குட்டுவனை அறிமுகம் செய்து “இவர் தான் அதை எழுதினார்” என்றனர். செங்குட்டுவன் அப்போது ஒல்லியாக இளைஞனாக இருந்தார். பாடலின் உரிமையை கோரியபோது அவர் கண்ணதாசனை சென்று வணங்கி ஆசி பெற்றார். கண்ணதாசன் “வாழ்க்கையில் முருகன் அருளால் எல்லாமே வெற்றியாகும்” என்று வாழ்த்தினார். குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்த அதே வடிவில் அந்த பாடல் மறுநாளே ஒலிப்பதிவாகியது.
கே.வி மகாதேவன் அப்படத்திற்கு இசையமைத்தார். கே.வி.மகாதேவன் அதை மறு அமைப்பு செய்தபோது பின்னணிஇசை மட்டுமே சற்று மாறுபட்டது சூலமங்கலம் ராஜலட்சுமியும் பி.சுசிலாவும் இணைந்து அந்த பாடலை பாடினார்கள். கந்தன் கருணை படத்தில் அந்த பாடலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அப்படத்துக்காக மகாதேவன் தேசிய விருது பெற்றார். விருதுக்கான பாராட்டுவிழாவில் அவ்விருது குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் உரியது என மகாதேவன் அறிவித்தார். குன்னக்குடி வைத்தியநாதனும் பின்னர் இசையமைப்பாளராக அறிமுகமாக அந்தப்பாடலே வழியாகியது.
இரவு முழுக்க அந்த பாடலை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். அதன் பிறகு தொடர்ந்து இரண்டு இரவுகளில் அந்த பாடலை கேட்டேன்.அந்த பாடல் இளமையில் என்னை மிக கவர்ந்த பாடலாக இருந்தது. அதை நான் பாடி அலைந்ததை நினைவு கூர்ந்தேன். அந்த பாடலின் வெற்றிக்கு என்ன காரணம் என்று இன்றைய என்னுடைய பார்வையைக்கொண்டு யோசித்தேன்.
அதில் உள்ள கச்சிதமான தாளம் முதன்மைக்காரணம். பக்திப் பாடல்களில் நெகிழ்வு அமையும் போது நிறைய தருணங்களில் தாளம் அமைவதில்லை. நல்ல பாடல் நினைவில் நிற்பதற்கு கச்சிதமான தாளம் ஒரு முக்கியமான காரணமாக அமைகிறது. இந்தப் பாடல் ஒரு ஒரு நடனப் பாடல் அளவுக்கு தாளத்துடன் இருக்கிறது. தாளம் சரியாக வந்த பாடலில் அந்த வேகம் அமையும்போது நெகிழ்வு இல்லாமலாகிவிடும். இந்த பாடலில் எல்லா தருணங்களிலும் பக்தியின் நெகிழ்வும் நிகழ்கிகறது. சூலமங்கலம் சகோதரிகளின் பாடலிலேயே ‘உனக்கான மனக்கோயில் கொஞ்சம் இல்லை’ போன்ற வரிகளில் ஆழ்ந்த நெகிழ்வு கண்ணீர்மல்க வைக்கும் அளவுக்கு வெளிப்படுகிறது. அதை அப்படியே திரைப்படப் பாடலிலும் கொண்டுவர முடிந்திருக்கிறது. பக்திப் பாடல்களில் வழக்கமாக நிகழும் செயற்கையான நெகிழ்வாக இல்லாமல் மிக இயல்பான உருக்கம் இதில் அமைந்துள்ளது.
இதன் வரிகள் எந்த சிறு குழந்தைகள்கூட நினைவில் வைக்கக் கூடிய அளவு எளிமையானவை. குழந்தைக்கு புரியுமளவுக்கு நேரடியானவை. ஆனால் ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்’ என்ற வரி மொத்த தமிழகத்தின் ஒரு நிலக்காட்சியை அளிக்கிறது. முதல் வரியிலேயே தமிழகநிலம் முழுக்க ஆட்சி செய்யும் முருகனின் சித்திரம் வந்துவிடுகிறது. ‘சென்னையிலும் கந்த கோட்டம் உண்டு ‘என்ற வரி வழியாக நவீன காலகட்டத்திற்கு வருகிறது. அதன் பிறகு ‘உனக்கான மனக்கோயில் கொஞ்சம் இல்லை’ என்ற வரி வழியாக இத்தனை ஆயிரம் ஆலயங்களுக்கு மேல் கோடான கோடி இதய ஆலயங்களிலும் நீ குடியிருக்கிறாய் என்று முடிகிறது.
அத்துடன் ஒன்றை இசையறிந்தவர்கள் சொல்வார்கள். தமிழ்ச்செவிகளுக்கு மிகப்பழக்கமான ‘நாதஸ்வரப் பிடிகள்’ இப்பாடலில் உள்ளன. திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் – முருகா என்ற வரியிலுள்ள முருகா என்னும் சொல்லில் உள்ள விசையை உதாரணமாகக் காட்டலாம். திருப்பரங்குன்றத்தில் என்ற சொல் நான்கு அலகுகளாக சரியான தாளச்சொல் போலவே அமைந்துள்ளதும் காரணம். பல்லாயிரம் முறை நாதஸ்வர நிகழ்வுகள் வழியாக இப்பாடல் தமிழுள்ளத்தில் நிலைகொண்டது. இன்றும் இந்தப்பாடலை பெரும்பாலான நிகழ்வுகளில் வாசிக்கிறார்கள். ‘அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை’யிலுள்ள அந்த லை சுழலும் விதம் நாதஸ்வரத்துக்கே உரியது.
இந்த பாடல் எளிமையில் அமைந்த இயல்பான ஆழத்தால் தமிழ்மொழியில் எழுதப்பட்ட தலைசிறந்த பாடல்களில் ஒன்று என்று சொல்லலாம். இந்த பாடல் பூவை செங்குட்டுவனை ஒரு பக்திக் கவிஞராக நிலை நிறுத்தியது. அவர் விரும்பாமலே அவர் முருகனைப் பற்றிய பாடல் எழுத வேண்டிய நிலைமைக்கு ஆளானார். மிகச் சில ஆண்டுகளில் மிகத் தீவிரமான முருக பக்தராக மாறினார். நான் அவரை சந்தித்தபோது என்னிடம் அவர் சொன்னார் . ‘நான் முருகனை நோக்கி செல்லவில்லை. அவன் வந்து என்னை தூக்கிக்கொண்டு சென்றான். நான் வீட்டிலிருந்து கிளம்பி அருகிருக்கும் டீக்கடை வரைக்கும் நடந்து சென்று விட்டு திரும்பி வந்தால் என்னுடைய முருக பக்திப் பாடல் ஏதேனும் ஒன்று என் காதில் விழும்’
‘பாப்புலர் கிளாசிக்’ என ஒருவகை எப்போதும் இலக்கியத்திலும் கலையிலும் உண்டு. அவை ஒரு தனிக்கலைஞரின் அகவெளிப்பாட்டால், கலைத்திறமையால் அந்த நிலையை அடைவன அல்ல. மக்களின் கூட்டான உள்ளமும் ஒரு குறிப்பிட்ட கலைவெளிப்பாடும் ஒரு வரலாற்றுத்தருணத்தில் இயல்பாக ஒருங்கிணைவதன் வழியாக நிகழ்பவை. அவை ஒருவகையான தற்செயல்கள்தான். அவற்றை திட்டமிட்டு திரும்ப நிகழ்த்தவே முடியாது. சிலசமயம் மிகமிக எளிய வரிகள், மிக எளிய மெட்டு, மிக எளிய கதை அந்த பெரும் அலையை உருவாக்கிவிடும். அது நிகழ்ந்தபின் அது ஏன் நிகழ்ந்தது என ஆய்வதே நாம் செய்யக்கூடுவது.
நாலாயிரத்துக்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களை செங்குட்டுவன் எழுதியிருக்கிறார். பெரும்பாலான பாடல்கள் புகழ்பெற்றவை. இன்றும் அவருடைய பாடல்கள் தமிழகமெங்கும் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. நான் வீட்டில் அமர்ந்து ஒருமுறை அந்தப் பாடலை கேட்ட பின்னர் யோசித்தேன். கிளம்பி அருகில் இருக்கும் டீக்கடைக்குள் சென்று ஒரு டீ குடித்துவிட்டு வருவதற்குள் அவரது பாடல்களில் ஏதேனும் ஒன்று கேட்கிறதா என்று பார்க்கலாம் என்று. டீ குடித்துவிட்டு வரும்போது தொலைவில் ஓர் ஆலயத்தில் செங்குட்டுவனின் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. ‘திருப்புகழை பாடப்பாட வாய் மணக்கும். எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்’
பூவை செங்குட்டுவன் தமிழ் விக்கிலோகமாதேவி
தாவரவியல் பேராசிரியர், துறைசார் எழுத்தாளர், கட்டுரையாளர். அரிஸோனா பல்கலைக்கழக வலைத்தளத்தில் அறிவியல் தகவல்களை தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளார். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் பக்கத்தின் திருத்துனர். தொடர்ந்து தாவரவியல் சார்ந்த தமிழ் கட்டுரைகளை மின்னிதழ்களில் எழுதி வருகிறார்.
லோகமாதேவி – தமிழ் விக்கி
டாலஸ் நிகழ்வுகள்– மூர்த்தி
அன்புள்ள ஜெயமோகன்,
நலமே விழைகிறேன்.
இரண்டு மாதங்களுக்கு முன் கம்பராமாயணக் கச்சேரி முடிந்தவுடன் கலைஞர்களுடன் டாலஸ் வாசிப்பு வட்ட நண்பர்களும் ஆஸ்டின் நண்பர்களும் சேர்ந்து இரவுணவுக்காக சென்றோம். கச்சேரி குறித்த எங்கள் மகிழ்ச்சியையும் அதற்கான செயல் கொடுத்த நிறைவையும் கொண்டாடிவிட்டு பிரியும் போது சௌந்தர் சார் மெதுவாக, “அடுத்து ஜெ. வருகிறார் – SOTT புத்தக அறிமுக விழா – டாலஸில் தான் – கெட் ரெடி” என்றார்.
நிகழ்ச்சி நிரல் குறித்தும் இடம் குறித்தும் வெவ்வேறு கருத்துகள் கொண்டிருந்த டாலஸ் நண்பர்களிடம் பாலாஜி “ஆஸ்டின் வரும் ஜெ. வை நாம் சென்று அழைத்துவரலாம். என்ன நினைக்கிறீர்கள்? ” என்று கேட்டவுடன் எல்லோரும் ஒத்துக்கொண்டு கைதூக்கி விட்டதோடு மட்டுமல்லாமல், அப்போதே சௌந்தர் சாரை அழைத்து துண்டு போட்டு வைத்துவிட்டோம். முன் பின், இடம் வலமென மாறிய எல்லாவற்றிலும் மாறாமல் இருந்தது இது மட்டும் தான். ஒருவேளை நாங்கள் இதை முடிவெடுத்தது “துடுவ்” என்று அவராலும் உங்களாலும் அழைக்கப்படும் துருவ் முன்னிலையில் என்பதால் தானோ என்று ஒரு எண்ணம்.
நண்பர்கள் அனைவருக்கும் தொடர்ந்து செயலால் நிரம்பிய நாட்கள். Barnes & Noble புத்தக்கடையின் பணியாளர் எமிலியிடம் நம் நிகழ்வு குறித்து “குறைந்தபட்சம் 50 முதல் 70 பேர் வரை வருவார்கள், அவர்கள் அமர நாற்காலிகள் வேண்டும்” என்று கேட்ட போது கொஞ்சம் நம்ப முடியாமல்தான் “Let me see what I can do for you” என்றுதான் கூறினார். இரண்டு நாட்கள் கழித்து அழைத்து “Fifty or Fifteen” என்று கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டு, “சரி, 30 பேருக்கு இருக்கை ஏற்பாடு செய்துவிடுகிறோம், 50 புத்தகங்கள் விற்பனைக்கு இருக்கும்” என்று கூறினார். சௌந்தர் சாரிடம் “சார், புக் 50 காபி தான் ஸ்டாக் பண்ணியிருக்காங்க, ஓகேவா?” என்ற போது “30 வித்துட்டா ஜெயிச்சிட்டோம்பா” என்றார். இதெல்லாமே தொலைபேசியில் தான் நடந்தது.
நிகழ்வுக்கு ஒரு வாரம் முன்னர், நேரில் சென்று பார்த்துவருவோம் என்று கடைக்கு சென்றபோது ஒரு எழுத்தாளர் கையெழுத்து நிகழ்வு இருந்தது. வாசலருகே ஒரு மேசை போட்டு அதில் சில புத்தகங்களை அடுக்கி அதன் ஆசிரியர் தனியே அமர்ந்திருந்தார். வாசிப்புக்கு மரியாதை உள்ள அமெரிக்காவில் இப்படியா என்று கொஞ்சம் திக்கென்றுதான் இருந்தது. எமிலியிடம் கேட்டபோது “இது தான் வழக்கம். உன் எண்ணிக்கை குறித்து நான் கேட்ட கேள்வி இப்போது உனக்கு புரியுமென்று நினைக்கிறேன். நீ அதை மறுபரிசீலனை செய்ய விரும்புகிறாயா?” என்றார். டாலஸ் மற்றும் ஆஸ்டின் நண்பர்களின் குடும்பங்களை மனதிற்குள் எண்ணிக்கொண்டிருக்கும்போதே மற்றொரு குரல் “டேய், வரப்போவது ஜெயமோகன் டா” என்றது. “இல்லவே இல்லை எமிலி. வாசலினருகே ஒற்றை மேசை என்பதை மறந்துவிடுங்கள். சற்றே பெரிய இடம் கண்டிப்பாக வேண்டும். மீதமுள்ள 20 பேரை அமர வைக்க உங்களால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டு அதே “Let me see what I can do for you” வை பெற்றுக்கொண்டேன்.
உங்களையும் அருண்மொழி அக்காவையும் அழைத்து வர பாலாஜி, அன்னபூர்ணா, நான் மூவரும் ஆஸ்டின் கவிதா பாலா இல்லத்திற்கு வருவதாக திட்டம். ஆனால், ஆஸ்டின் நண்பர் கிரியின் கீதை நூல் குறித்து உங்கள் தளத்தில் வந்த அவர் கடிதம் அதேயுணர்வில் குறளினிது உரையை மாற்றிக்கொண்டிருந்த எனக்களித்த உணர்வெழுச்சியும், உங்கள் சந்திப்பு புகைப்படங்களில் அவரில்லத்தில் இருந்த இளையராஜாவின் போஸ்டரும் “சரிதான், இங்கு யாரும் தனியில்லை. குறிப்பாக, கிறுக்கர்கள்” என்றெண்ணிக்கொண்டு வண்டியை அங்கே விட்டோம். நீங்கள் கவிதா இல்லத்திற்கு வந்துவிட்டதை சௌந்தர் சார் போனில் சொன்னதும் உடனே புறப்பட்டு வந்து அவர் வீட்டு வாசலில் செருப்பைக் கழட்டும் வரை இருந்த ஆர்வமும், வேகமும், உங்களைக் காணப்போகும் குதூகலமும் எல்லாம் என்னவோ ஆகி உள்ளங்கை வியர்க்கும் அளவிற்கு பதட்டம் அதிகரித்தது. முதல்முறையாக உங்களை சந்திக்கவிருந்த அன்னபூர்ணாவுக்கு வாய்ப்பளிப்பதான பாவனையில் அவரை முன்னால் அனுப்பிவிட்டு ஒரு வேலையும் இல்லாமல் திரும்பவும் காருக்குப் போய் வெறுமே திறந்து மூடிவிட்டு சற்று நேரம் கழித்தே நுழைய முடிந்தது. ஆசிரியரை காணும், அவரை எண்ணிக்கொண்டிருக்கும் ஆவலை / தவிப்பைக் குறித்து நீங்கள் கூறிய வரிகள் முழுமையாக புரிந்த இன்னொரு தருணம்.
காரில் செல்லும்போது ஏதேனும் மஞ்சள் வாகனத்தைக் கண்டால் வாய்விட்டுச் சொல்லி அருகிலிருப்பவரை அடிக்கும் ஒரு விளையாட்டு எங்கள் குடும்பத்தில் உண்டு. மகளிடமிருந்து விளையாட்டாக தொடங்கிய இப்பழக்கம் தனியாக செல்லும் போதும் வெறும் சீட்டை அடிக்குமளவிற்கு அனிச்சையாக மாறிப்போனது. “ஓட்டுகிறீர்களா?” என்று பாலாஜி கேட்டவுடன் மகிழ்ச்சியுடன் சரியென்று சொல்லிவிட்டேன். வழக்கமான என் காரை விட பெரிய & புதிய கார், எனவே கவனம் ஓட்டுவதில் தான் இருந்தது. முதல் மஞ்சள் வாகனத்தைக் கண்டவுடன் எழுந்த கை அருகிலமர்ந்திருந்த உங்களை உணர்ந்தவுடன் தாழ்ந்து போயிற்று.அப்போதுதான் நான் ஜெ. வுக்கு காரோட்டிக்கொண்டிருக்கிறேன் என்று மனம் உணர்ந்தது. அதன் பின்னர் கடந்து போன மஞ்சள் வாகனங்கள் எல்லாம் “அருகிருப்பது ஜெ. நீ அவருக்கு காரோட்டிக் கொண்டிருக்கிறாய்” என்ற சொல்லையே மீண்டும்மீண்டும் நினைவுறுத்த என் நல்வாய்ப்பை நினைத்து அகமகிழ்வோடே இருந்தேன். அடுத்த ஆறு மணிநேரங்கள் முழுக்க உங்கள் அருகாமையிலும், கற்றலிலும், கண்ணீர் வந்து மறைக்குமளவிற்கு சிரிப்பிலும் கழிந்தது. எங்கள் கேள்விகளுக்கு உங்களின் விரிவான பதில்கள், வழிகாட்டுதல்கள் என என்றென்றும் நினைவில் இருக்கப்போகும் தருணங்கள்.
மறுநாள் பாலாஜி இல்லத்தில் மேலும் சில டாலஸ் வாசக வட்ட நண்பர்களோடு சந்தித்த போது உணவுக்கு முன் நேரம் சிரித்துக் கழிந்தது. எதுவும் உதவி செய்யவா எனக் கேட்ட எல்லா நண்பர்களிடமும் “எதுவும் வேண்டாம்ங்க, நீங்க வந்தால் மட்டும் போதும்ங்க” என்று கூறிய ராதா பாலாஜி அத்தனை உணவு வகைகளை தயார் செய்து வைத்திருந்தார். அவரில்லத்தின் பின்கட்டு ஒரு அபாரமான இடம். அங்கே, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தீவிரமான விஷயங்களை வழக்கம் போல் கோர்வையாக நீங்கள் விளக்கிக்கொண்டிருந்தீர்கள். மாலை நிகழ்வு நடக்கும் புத்தகக் கடைக்கு சற்று முன்னரே செல்ல வேண்டியிருந்ததால் பாதியிலேயே கிளம்ப வேண்டியிருந்தது.
Barnes & Noble கடையின் சற்று விசாலமான இடத்தில் ஒரு மேசையும் 20 நாற்காலிகள் மட்டும் போட்டிருந்தார்கள். எமிலி விடுமுறையில் இருந்ததால் கிறிஸ்டெல் எனும் புதியவர் – மீண்டும் வலியுறுத்தியவுடன் கூடுதலாக இரண்டு பெஞ்ச்சுகள் போடப்பட்டன. எங்களிடம் இவ்வளவுதான் இருக்கிறது என்பவர்களிடம் செய்ய வேறெதுவும் இல்லை. நிகழ்வு தொடங்க ஐந்து நிமிடங்கள் வரை பதினைந்து பேர் மட்டுமே இருந்ததற்கும் “வேறெதுவும் வேண்டுமென்றால் கேள்” என்று கிறிஸ்டெல் சொன்னதிற்கும் ஏதும் தொடர்பிருக்குமோ என்றெல்லாம் யோசிக்கத்தொடங்கினேன். அப்போது காதில் இயர்போன் போட்டுக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்த அருண்மொழி அக்காவைப் பார்த்ததும் உங்கள் பாஸ்போர்ட் மீட்பு அனுபவக்கட்டுரையின் (“நகுக”) கடைசி வரி நினைவிலெழுந்தது – “செய்யவேண்டியதை எல்லாம் செய்துவிட்டோம். ஆகவே நிம்மதி. இனி அந்த பாஸ்போர்ட் கிடைத்துவிட்டால் மகிழ்ச்சி. நல்லவிஷயம்தானே…” ஆம், புன்னகைக்க வேண்டியது தான்.
ராஜனின் இசையில் “உலகம் யாவையும்” பாடலைப் பாடி நிகழ்வை தொடங்கி வைத்தார் பிரியா. அன்னபூர்ணாவின் உங்களைப்பற்றிய அருமையான அறிமுகத்தில் தொடங்கி சித்தார்த்தின் உரை. ஒரு கையால் எண்ணிவிடக்கூடிய அளவிற்கே இந்தியாவிற்கு வந்திருப்பதாக சொன்ன அவருக்கு SOTT கதைகள் காட்டிய இந்தியா கிட்டத்தட்ட அங்கேயே பிறந்து வளர்ந்த எங்களுக்கு தெரிந்த இந்தியாவிற்கு மிக அருகே இருந்தது கதைகளுக்கும் ப்ரியம்வதாவின் மொழிபெயர்ப்புக்கும் சான்று.
தொடர்ந்து மீனாக்ஷியின் உரை. முன்னரே தன் வாசிப்பு குறித்து தமிழில் எழுதி வைத்திருந்த அவளின் குறிப்பை பேச இருந்தவளிடம் நிகழ்வுக்கு காரில் வரும்போது ஆங்கிலமும் கலந்து பேச முடியுமா என்றபோது முறைத்தாள். ஆனால், தமிழ்க்குறிப்பைப் பார்த்து ஆங்கிலத்தில் பேசிவிட்டது குறித்து அவளுக்கே ஆச்சரியம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவளுக்கு சொன்ன வணங்கான் கதையை நினைவிலிருந்து எடுத்து அதை ஆங்கிலத்தில் வாசித்து தானே எழுதிய உரையை ஜனனி கொடுத்து, “Do I have a chance?” என்றாள். “உன் கடைசி பாரா ரொம்ப சின்னக் குழந்தை தனமாக இருக்கிறது” என்றதற்கு “Yes, I don’t want to share all my philosophical thinking” என்றாள். நண்பர்கள் அவள் உரையைப் பற்றிக் கூறும் போது அந்த குழந்தைத்தனமான முடிவு இயல்பாக இருந்ததாக கூறினார்கள்.
மூன்று நகர்களிலிருந்து கடைக்கு வரும் அனைத்து சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக தாமாதமான பல நண்பர்களும் வந்து சேர்ந்துகொண்டேயிருக்க நிகழ்வின் நடுவே பார்த்தபோது இறுதி ஐந்துவரிசை நாற்காலிகளுக்குப்பின் ஐந்து வரிசைகளிலும் பக்கவாட்டிலும் நண்பர்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.
சஹாவின் கேள்விகளும் அதற்கு உங்களின் பதில்களும் சுவாரசியமாக இருந்தன. தொடர்ந்து பார்வையாளர்களின் கேள்விகளுக்கு உங்கள் கூரிய பதில்கள் வந்திருந்த சில முதல் முறை கேட்பவர்களுக்கு சிறிய அதிர்ச்சியையும் பெரிய ஆச்சர்யத்தையும் அளித்தது. குறிப்பாக, பலரும் “நெருப்பு அழுக்காகாது” என்ற உங்கள் வரி குறித்து சொன்னார்கள். பலரும் டாலஸ் வாசிப்பு குழு குறித்தும் அதில் இணைவது குறித்தும் கோரிக்கைகள் அனுப்பிய வண்ணம் உள்ளனர்.
நான் அங்கேயே நின்று புகைப்படம் எடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்ததற்கு இன்னொரு காரணம் புத்தக விற்பனையை கவனிக்கவும்தான். விழாவில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களில் மூன்றே மூன்றைத்தவிர எல்லாமும் 12 நிமிடங்களில் காலியானது. அந்த மூன்றும் 26வது நிமிடத்தில் வாங்கப்பட்டன. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நின்று கொண்டே எல்லோரிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசி கையெழுத்திட்டு, எல்லாக் குழந்தைகளையும் கொஞ்சிக்கொண்டிருந்த உங்களைக் காணவே அவ்வளவு நிறைவாக இருந்தது.
விழா முடிந்து நன்றி கூறச் சென்று கிறிஸ்டெலிடம் பேசும் போது பார்வையாளர்கள் எண்ணிக்கை குறித்தும், நிகழ்விலேயே எல்லா பிரதிகளும் விற்றுப்போனது குறித்தும் தனது அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் தெரிவித்தார். பல விதங்களில் இது ஒரு தொடக்கம், முன்நிகழ்வில்லாதது என்றவர் இந்த நிகழ்வைக் காட்டி மைக், கூடுதல் நாற்காலிகள் போன்றவற்றை கோரிப்பெறப்போவதாகவும் கூறினார். உங்களின் மற்ற புத்தகங்களைப் பற்றியும் பட்டியல் வாங்கிக்கொண்டார். கிளம்பி வாசலுக்கு வந்தவன்பின் ஓடிவந்து உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
நம் விருப்பங்களுக்கும் ஊகங்களுக்கும் திட்டங்களுக்கும் மீறித்தான் சில விஷயங்கள் நடக்கும் என்று எண்ணம் வலுப்பெற்றது – என்ன ஆனாலும், நெருப்பு அழுக்காகாது. ஆம், அவ்வாறே ஆகுக.
எல்லாம் முடிந்து சௌந்தர் சார் காரில் நீங்கள் ஏறிக்கொண்டபின் சௌந்தர் “நல்லது மூர்த்தி, அடுத்தது New York Lit Fest” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். இன்ஷா அல்லா …
என்றென்றும் அன்புடன்,
மூர்த்தி
டாலஸ்
கீதையை அறிதல், வாசிப்புப் பயிற்சி
I recently watched the teaser of a film starring Ravi Mohan. It was like a story of my life. I was stuck in a toxic relationship called ‘marriage.’ I lived independently until the age of 29. My wife could not understand that I have thoughts and feelings of my own.
A toxic relationship [image error]நான் மண்புழு போல வாசிக்கிறேனோ? என்ற ஐயம் எனக்குள்ளே வந்தது. எப்படி சரியாக வாசிப்பது என்றும் தெரியவில்லை. இந்தத் கேள்வி மனதுக்குள், உறுத்திக் கொண்டே இருந்த சமயத்தில்தான் நண்பர் ராஜேஷின் முயற்சியை பற்றி தெரிந்து கொண்டேன். தேதி தெரியாததால், முதலிலேயே பதிவு செய்ய இயலவில்லை
கீதையை அறிதல், வாசிப்புப் பயிற்சி
November 5, 2025
இலக்கியமும் புறவுலகும்
அன்புள்ள ஜெ,
ஒரு புனைவு எழுத்தாளன் சித்தரிக்கும் உலகம் என்பது அவனது தேடல் அலைக்கழிப்புச் சார்ந்தது; தன் பார்வையினூடாகக் கற்பனையைப் பெருக்கி விரித்து எழுதுகிறான். நிச்சயம் அவனது கோணல்கள் தடுமாற்றங்கள் அப்படைப்பில் வெளிப்படும். அதனால் பொது மனநிலையில் இருக்கும் சித்திரத்தை விட்டு விலகியே அவனது நோக்கு அமைந்திருக்கும். இங்கே ஒரு படைப்பை நிராகரிக்க முன்வைக்கப்படும் விவாதங்களின் போது “அசலாக அந்தப் பிரதேசத்தின் மண்ணையோ மக்களின் பேச்சு வழக்கையோ சரியாக உள்வாங்கவில்லை. மேலோட்டமாக உள்ளது” அல்லது “இது யதார்த்தம் இல்லை, இப்படியான ஆண்களோ பெண்களோ எங்கள் நிலத்தில் இல்லை” என்றவகையான வாதங்களைத்தான் பார்க்க இயலுகிறது. படைப்பின் முக்கிய அம்சமான உன்னதமாக்கல், கவித்துவ தருணங்களை புரிந்துகொள்ள முடியாத தரப்பிலிருந்து வரும் குரல்களாகவே அவற்றை நினைக்கிறேன். இதுபோன்ற வாசிப்பால் அ.முத்துலிங்கத்தை நிராகரிப்பவர்கள் பலரை சந்தித்திருக்கிறேன்.
கற்பனையாக ஒரு நிலத்தைச் சித்திரிக்கும் போது எழுத்தாளனுடைய Flavor நிச்சயம் படைப்பிலிருக்கும். அது அவனுடைய ரசிப்புத் தன்மை, அந்தரங்க விருப்பு சார்ந்தது. கலையின் முக்கிய இடமே sublimation தான் என்கிற போது, மேற்கூறிய நிராகரிப்பின் குரல்கள் இரண்டாம் பட்சம்தான். எனினும் எனக்கிருக்கும் கேள்வி ஒரு புனைவு எழுத்தாளன் இவ்வாறான விவாதங்களை எந்த அளவுக்குப் பொருட்படுத்த வேண்டும்? கலையில் இந்தக் கேள்விக்கான பதில்கள் எந்தளவில் உள்ளன?
அன்புடன்
அனோஜன் பாலகிருஷ்ணன்
அன்புள்ள அனோஜன்,
ஓர் எழுத்தாளன் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய சோர்வூட்டும் தருணம் அழகியல்நோக்கே இல்லாத இத்தகைய விமர்சனங்கள்தான். படைப்பை ரசிக்கும் நுண்ணுணர்வோ அதை மதிப்பிடும் அறிவுப்பயிற்சியோ இல்லாத நிலையில் எழுபவை இவை. ஆனால் இலக்கியப் பயிற்சி இல்லாத ஒரு சமூகத்தில், இலக்கியம் சார்ந்த புரிதல்களை உருவாக்க அமைப்புசார்ந்த எந்த முனைப்பும் இல்லாத சூழலில், இலக்கியத்திற்கு எதிராகவே அரசியல் செயல்பட்டுக்கொண்டிருக்கும் களத்தில் இதை தவிர்க்கவும் முடியாது.
ஒரு படைப்பை மதிப்பிட அதன் அழகியலே முதன்மை அளவுகோல். ஏனென்றால் முதன்மையாக ஓர் அழகியல் படைப்பாகவே அது எழுதப்படுகிறது – கருத்துத் தொகையாகவோ செய்தித் தொகையாகவோ அல்ல. அழகியல் ரீதியாக படைப்பை மதிப்பிட வாசகனின் அழகுணர்வு, அந்தச்சூழல் அதுவரை உருவாக்கிய பேரிலக்கியங்களின் இருந்து உருவான ஒப்பீடுகள், இலக்கியத்தின் அடிப்படை மதிப்பீடுகள் என மூன்று அளவீடுகள் உண்டு. அவை எவற்றையுமே அறியாத வாசகர்களிடமிருந்தே இந்தவகையான மதிப்பீடுகள் உருவாகி வருகின்றன.
இலக்கியப்படைப்பை மதிப்பிடுகையில் அந்த இலக்கிய ஆக்கத்தின் கலைப்பாவனை [Artistic pretension] இலக்கிய வகைமை [Literary genre] வடிவச்சீர்மை [Structural symmetry] உணர்வுநிலை [Emotionality] தரிசனம் [Vision] ஆகியவற்றை அளவுகோலாகக் கொள்ளவேண்டும் என்பதுதான் இலக்கிய விமர்சனத்தில் இருநூறாண்டுகளாக சொல்லப்பட்டு வரும் கருத்து.
உதாரணமாக ஒரு கலைப்படைப்பு தன்னை ஒரு சுயசரிதையாக, அல்லது வரலாறாக, அல்லது கனவாக புனைந்து கொள்ளும் என்றால் அதை அவ்வாறே ஏற்றுக்கொண்ட பின்னர்தான் அதை அணுகமுடியும். அந்த புனைவுப் பாவனைக்குள் அதன் கூறுமுறையின் ஒழுக்கும் அமைப்பும் எப்படி நிலைகொள்கிறது என்பதே வாசகனின் கேள்வி.
அப்படைப்பு யதார்த்தவாத அழகியல்கொண்டதா, மிகைபுனைவுத்தன்மை கொண்டதா, அல்லது அனைத்து வகைமைகளையும் கலக்கும் செவ்வியல் தன்மையை நோக்கிச் செல்கிறதா என்பது வாசகன் அதை மதிப்பிடுவதற்கான அளவுகோலில் இரண்டாவது. ஒவ்வொன்றுக்கும் உரிய இயல்புகளும் இலக்குகளும் வேறுவேறு.
அதன் பின்னரே அப்படைப்புக்குரிய வடிவச்சீர்மையை மதிப்பிடமுடியும். யதார்த்தவாதப் படைப்பு அதற்குள் ஒரு கனவை முன்வைத்தால் வடிவ ஒருமையை இழக்கிறது. நடைமுறை வாழ்க்கையைச் சொல்லும் படைப்புக்குரிய வடிவச்சீர்மை அல்ல கட்டற்ற கனவுத்தன்மை கொண்ட படைப்புக்குரியது. அடிப்படையில் வடிவச்சீர்மையையே அழகியல் விமர்சகர்கள் மதிப்பீட்டின் மாறா அளவுகோலாக கொள்வார்கள்.
அதேபோல எந்த அழகியல் வகைமை என்பது உணர்வுநிலையை மதிப்பிட மிக இன்றியமையாதது. கற்பனாவாதப் படைப்புகளில் உணர்வுநிலைகள் பொங்கிப் பீறிடக்கூடும். இயல்புவாதப் படைப்புகளில் அவை மிகமிக மெலிதாக கோடிட்டுக் காட்டப்படும்.
இவை அனைத்தினூடாகவும் ஒரு படைப்பு சென்றடையும் தரிசனம் என்ன, அது அப்படைப்பின் அனைத்துக் கூறுகளினூடாகவும் திரண்டுவருவதாக உள்ளதா, அந்தப் புனைவுச்சூழலால் முழுமையாக முன்வைக்கப்படுகிறதா என்பது இறுதியான வினா.
படைப்பின் மேல் அரசியல், சமூகவியல், தத்துவம் சார்ந்த கேள்விகளை முன்வைக்கக்கூடாதா? முன்வைக்கலாம், ஆனால் அழகியல்ரீதியாக நிலைகொண்டுவிட்ட படைப்பின்மீதுதான் அவ்வினாக்கள் எழவேண்டும். அழகியல்ரீதியான தோல்வியடைந்த படைப்பின்மேல் பிணஆய்வு செய்வதில் பொருளில்லை. ஆகவேதான் எச்சூழலிலும் இலக்கிய அழகியலே முதன்மை திறனாய்வு முறையாக இருக்கவேண்டும் எனப்படுகிறது. உலகின் எந்த இலக்கியச்சூழலிலும் அப்படித்தான் இன்றுவரை உள்ளது.
அழகியல் விமர்சனம் எனும்போது அது வெறுமனே பாடப்புத்தகக் கொள்கைகளை இயந்திரத்தனமாக போட்டுப் பார்ப்பது அல்ல. கல்வித்துறை சார்ந்தவர்கள் அழகியல் விமர்சனத்தின் அளவுகோல்களை செக்கேது சிவலிங்கமேது என அறியாமல் போட்டுப் பார்ப்பதை நாம் காணலாம். நான் மேலே சொன்னதுபோல அது வாசகன் என தன்னை நிலைநிறுத்திக் கொள்பவனின் தனிப்பட்ட ரசனையையே முதன்மையாக சார்ந்துள்ளது.
இந்த இலக்கிய விமர்சன அணுகுமுறையில் எங்கும் ‘இது நிசம்மாவே இப்டித்தானா?” பாணி விமர்சனத்திற்கு இடமில்லை. முப்பதாண்டுகளுக்கு முன்பு சுந்தர ராமசாமி என்னிடம் இதைப்பற்றி சொன்னார். அப்போதே அவரிடம் முப்பதாண்டுகளுக்கு முன்னரே க.நா.சு சொன்னதைத்தான் சொல்வதாக சொன்னார். சாத்தூர் சர்வமானிய அக்ரஹாரம் எங்கே இருக்கிறது என ஒரு விவாதம் அன்று ஓடியது. க.நா.சு சொன்னாராம், “அப்டி தேடிப்போய் பாக்க முடியும்னா நாவல் எதுக்கு?” என்று.
தி.ஜானகிராமனின் கும்பகோணம் பற்றிய சித்தரிப்பை சொல்லும்போது சுந்தர ராமசாமி “அது ஜானகிராமனோட கும்பகோணம். அதை மேப்பா வச்சுகிட்டு போனா நாம வேற பல ஊர்களுக்கு போயிடுவோம்” என்றார். சுந்தர ராமசாமியின் நாகர்கோயில் எப்போதுமே இருந்ததில்லை, புளியமரத்தின் கதையில் மட்டுமே அது உள்ளது. ஒரு படைப்புக்கு அப்படி வெளியே திட்டவட்டமான புறவயத்தன்மை இருக்கும் என்றால் அது இலக்கியத்தகுதி அற்றது என்றே சுந்தர ராமசாமி வாதிடுவார்.
ஒரு வட்டார வழக்கை ‘அப்படியே’ பதிவு செய்வதற்கு இலக்கியம் தேவை இல்லை. அப்படி பதிவு செய்தால் அதில் எந்த நுட்பமும் இருக்கவும் இருக்காது. புனைவிலுள்ள வட்டாரவழக்கு செவியால் தொட்டு எடுக்கப்படும் சில நுட்பங்களை ஆசிரியன் கற்பனையால் இணைத்து தனக்குள் உருவாக்கிக் கொள்ளும் ஒரு புனைவுமொழி. கி.ராஜநாராயணன் எழுதுவது புனைவுமொழி. அதே நிலம் அப்படியே பதிவாவது பாரததேவியின் வட்டாரக்கதைப் பதிவுகளில்தான். அதில் கலையம்சம் இருக்காது, ஆவணநேர்த்தி மட்டுமே இருக்கும்.
ஒரு நகரை, ஒரு சமூகத்தை ஒரு படைப்பாளி எழுதியபின் நேரடியாக அங்கே சென்றும் அதை காணமுடியும் என்றால் அவர் ஆவணப்படுத்தும் இதழாளர் மட்டுமே. அவருக்கு இலக்கியத்தில் இடமில்லை. இதை நூறாண்டுகளாக இலக்கியத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறோம். தலைமுறை தலைமுறையாக மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது என்பது இப்படி ஒரு வினா எழும்போதுதான் புரிகிறது. முப்பதாண்டுகளில் நானே இதை பதினைந்து தடவைகளுக்குமேல் விரிவாக பேசியிருக்கிறேன்.
அ.முத்துலிங்கமும் ஷோபா சக்தியும் உருவாக்கும் ஈழச்சூழல் அவர்களின் கற்பனையால், அவர்களின் தரிசனம் நிகழும் பொருட்டு, உருவாக்கப்பட்ட ஒன்று. அங்கே மெய்யாகவே இருப்பது அல்ல. ஆகவேதான் அவற்றை வாசகர் தங்கள் கற்பனையில் முழுமைப்படுத்திக் கொள்ள முடிகிறது. அங்குள்ள சூழலை ‘அப்படியே’ எழுதும் பலர் இருக்கிறார்கள். அவர்களை பத்துபக்கம் படிப்பதற்குள் நான்கு சுருள் வைக்கோலை மென்று விழுங்கிய சலிப்பு எஞ்சுகிறது
ஏன் புறவயமான யதார்த்தம் ‘அப்படியே’ இலக்கியத்தில் அமையக்கூடாது, அமைந்தால் அது கலையே அல்ல என்று தலைமுறை தலைமுறையாக அழகியல் விமர்சகர்களும் இலக்கியவாதிகளும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்? புறவய யதார்த்தம் என்பது, பருவடிவ உலகம் என்பது அந்த ஒழுங்கும் இலக்கும் அற்றது. எந்த அமைப்புக்குள்ளும் அடங்காதது. எல்லா நோக்குகளுக்கும் இடமளிக்கக் கூடியது. கட்டற்றது. வாழ்க்கையைப் போலவே தனக்கென பொருள் ஏதும் அற்றது. இலக்கியம் பொருளற்ற வாழ்வுப்பெருக்கில் பொருளை உருவாக்கும் முயற்சி. ஆகவே பொருளற்ற பருவடிவ உலகில் இருந்து அது தனக்குரியவற்றை மட்டும் தெரிவுசெய்து அடுக்கி பொருளேற்றம் செய்யப்பட்ட ஒர் உலகை தன் படைப்புக்குள் உருவாக்கிக் காட்டுகிறது. அது புறவுலகம்தான், ஆனால் ஆசிரியனின் அகவுலகால் உருவாக்கப்பட்ட ஒன்று. ஆகவே அது பழைய சைவமொழியில் சொல்லப் போனால் அகப்புறம். புறப்புறம் என்பதற்கு இலக்கியத்தில் இடமே இல்லை.
இலக்கியத்தில் இலங்கை என்னும் நிலம் இல்லை. ஷோபா சக்தியின் இலங்கையும் அ.முத்துலிங்கத்தின் இலங்கையும் ஆசி.கந்தராசாவின் இலங்கையும்தான் உள்ளது. புறவுலகில் ‘சும்மா’ ஒரு பொருள் அங்கே இருக்கமுடியும், இலக்கியத்தில் பொருளற்ற பொருள் என ஏதுமில்லை. அதை பலவகையில் இலக்கிய விமர்சன முன்னோடிகள் சொல்லியிருக்கிறார்கள். இலக்கியம் உருவாக்கும் வெளியில் அனைத்துப் பொருட்களும் குறியீடுகளே என்று ஒரு கூற்று உண்டு. இலக்கியத்தின் தோட்டத்தில் எல்லா மரங்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்று ஒரு கூற்று உண்டு. ஓர் எழுத்தாளனின் புனைவில் எழும் புறவுலகக் காட்சி அவனுடைய அகவுலகத்தின் பருவடிவ வெளிப்பாடே, அவனுடைய உணர்ச்சிகளையும் தரிசனத்தையும் தான் ஏற்றுக்கொண்டதே என்பதை இலக்கிய விமர்சனம் நூறாண்டுகளாக சொல்லி வருகிறது.
நான் சுந்தர ராமசாமி சொன்ன ஓர் உவமையை அடிக்கடி சொல்வதுண்டு. குழந்தைகள் வீட்டுக்குள் ஒரு தெருவை உருவாக்கி விளையாடும். டம்ப்ளர் பேருந்தாகும். ஸ்பூன் சைக்கிள் ஆகும். ஊடே அக்குழந்தையின் கட்டுப்பாட்டில் இல்லாத எறும்புகளும் அலையும். அது புறவுலகமா? அல்ல, அக்குழந்தையின் அகம். ஆனால் புறப்பொருட்களால் உருவாக்கப்பட்டது. ஆனால் விரிந்த ஒரு தத்துவநோக்கில் அதற்கும் வெளியே மலைகளும் கடல்களுமாக விரிந்திருக்கும் புறவுலகுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அதுவும்கூட அகப்புறம் மட்டுமே.
உங்கள் கேள்வியை இப்படி சுருக்கிக் கொள்கிறேன். இலக்கியவாதி கற்பனையாக ஒரு நிலத்தையும் மக்களையும் உருவாக்கிக் கொள்ளலாமா? விடை இதுதான், கற்பனையால் மட்டும்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அது அவருடையது மட்டுமாக, அவர் படைப்புக்குள் மட்டுமே இருப்பதாக மட்டுமே இருக்க வேண்டும். அவருடைய அகவுலகை, தரிசனத்தை சென்றடைவதற்கான பாதைதான் அது. அவர் தன்னை நிகழ்த்திக்கொள்ள உருவாக்கிய களம் மட்டும்தான் அது. அவருடைய கற்பனையைத் தூண்டும் கூறுகளும், அக்கற்பனையை வாழ்க்கையெனக் கட்டமைக்கத் தேவையான செய்திகளும் மட்டுமே வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட வேண்டும். அதற்குமேல் வாழ்க்கையுடன் நேரடித் தொடர்பிருந்தால் அது இலக்கியம் அல்ல.
இந்த அடிப்படைகள் அனைத்தும் இலக்கிய வாசகனுக்காகச் சொல்லப்படுகின்றன, அவனுக்கு இவை புரியும். புரிந்துகொள்ளும் திராணியற்றவர்களே எண்ணிக்கையில் மிகுதி. இன்றைய சமூகவலைத்தளச் சூழலில் அந்தப் பெரும்பான்மையின் கூச்சலை அதிகமாகக் கேட்க நமக்கு வாய்க்கிறது. அவர்கள் இல்லை என்றே எண்ணிக்கொள்வதுதான் ஒரே வழி.
ஜெ
Feb 19, 2019 முதற்பிரசுரம்
ஜா.ராஜகோபாலன்
கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், மேடைப் பேச்சாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர். வைணவ இலக்கிய அறிமுக வகுப்புகளை முழுமையறிவு அமைப்பின் சார்பில் நடத்தி வருகிறார்.
ஜா.ராஜகோபாலன் – தமிழ் விக்கி
அருட்செல்வப் பேரரசன் ராமாயணம் நிறைவு
வணக்கம் ஜெ.
இராமாயணம் மொழிபெயர்ப்பு நிறைவடைந்தது.
விவேக்ராஜ் என்று ஒரு நண்பர். மின்னஞ்சல், வாட்சாப் மூலம் மட்டுமே பழக்கம். அவரது முகத்தை ஒரு முறையும் பார்த்ததில்லை. இராமாயணம் மொழிபெயர்ப்பு தொடங்கியது முதல் நிறைவு வரை ஒவ்வொரு காண்டத்திலும் ஒவ்வொரு சர்க்கத்திலும் பிழை சுட்டிக் காட்டித் திருத்தியிருக்கிறார்.
வாட்சாப்பில் அவருக்கு நன்றி தெரிவித்த போது, அவரளித்த மறுமொழி பின்வருமாறு.
*
இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் சமகால தமிழ்நடைக்கு மொழிபெயர்க்கும் பெரும்பணியை செய்திருக்கிறீர்கள். பாரதத்தின் கும்பகோணம் பதிப்பும், இராமாயணத்தின் தமிழ் பதிப்புகள் பலவும் பழைய தமிழ் நடையில் அமைந்தவை. இனி வரும் இளைஞர்கள் அதற்குள் செல்வதென்பது சற்று கடினம்தான். உங்களுடைய இந்த மொழிபெயர்ப்பு பணி அவர்களையும் வாசிக்க வைக்கலாம். உங்களுடைய மொழிபெயர்ப்பை வாசிக்கும்போதுதான் நான் கும்பகோணம் பதிப்பையும் வாசித்தேன். இல்லையெனில் அதற்குள் சென்றிருப்பேனா என்பது தெரியாது.
மேலும் உங்கள் பணியை நான் அறிந்ததே ஜெயமோகன் வழியாகத்தான். அதனால் உங்கள் நன்றியை நான் அவருக்கு அளிக்கிறேன். தற்போது அன்றாடம் வெண்முரசு வாசித்துக் கொண்டிருக்கிறேன். முடிக்க சில ஆண்டுகள் ஆகலாம். புத்தக வாசிப்பிலேயே காவிய வாசிப்பு தனித்துவமான ஒன்றுதான்.
நன்றி. உங்கள் பணி மேலும் தொடரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
*
இப்படி எவர் மூலம் ஓர் உதவி கிட்டினும், அது தங்கள் மூலம் நிகழ்ந்ததாகவே இருக்கிறது.
அனைத்துக்கும் மிக்க நன்றி சார்.
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
முகுந்த் நாகராஜன் சந்திப்பு
பிரியமுள்ள ஜெயமோகன் ,
ஏதாவது ஒரு வகையில் கலையில் திளைத்திருப்பது மகிழ்ச்சியிலும், விழிப்புணர்வோடும் வைத்துக் கொண்டிருக்கிறது. நித்தியவனம் அந்த பழக்கத்தை மேலும் ஆழமாக்கி இருக்கிறது.
கவிஞர் வேணு வேட்ராயன் அவர்களால் ஒருங்கிணைக்கப் பட்டு அக்டோபர் 25 அன்று ஓசூரில் நடந்த கவிஞர் முகுந்த் நாகராஜ் அவர்களது சந்திப்பில் கலந்து கொண்டேன். அது குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.
பள்ளியோ, கல்லூரியோ நினைவு இல்லை. வாசித்த முதல் கவிதையாக நினைவில் எஞ்சுவது அப்துல் ரஹ்மான் அவர்களின்,
“ஏய் தோட்டக் காரனே
வேலிக்கு வெளியே செல்லும்
என் இலைகளை வெட்டுகிறாய்.
என் வேர்களை உன்னால் என்ன செய்ய முடியும்?”
என்பதுதான்.
கவிதைக்கும் எனக்குமான தொடர்பு சிறு வயதில் இருந்தே இருந்து வந்திருக்கிறது. பள்ளி நாட்களில் என்னை கவிஞனாக நினைத்துக் கொண்டது உண்டு. சுற்றிலும் நண்பர்கள் அப்படிதான் அழைப்பார்கள். கவிதை போல ஒன்றை கிறுக்கிக் கொண்டே இருப்பேன். அப்பொழுது அதை கவிதை என்று நம்பியும் இருந்தேன். கல்லூரி முடியும் வருடத்தில் நோட்டு புத்தகத்தில் நம்மை பற்றி நண்பர்கள் பிரியா மொழி என்று எழுதிக் கொடுக்கும் பழக்கம் ஒன்று உண்டு. சேமித்து வைத்த அப்படி ஒரு நோட்டில் “அன்புள்ள கவிஞருக்கு” என்றுதான் ஆரம்பித்திருப்பார்கள். கவிதை என்ன என்று அறிய முயன்ற நாட்களில் அதை எண்ணி சிரித்ததும் உண்டு. ஆனால் எனக்குள் இருந்த அந்த கவித் தன்மைக்கு தொடர்ந்து நான் நீர் ஊற்றவில்லை. என் மனம் அதன் பின் எழுத்தாளன், நாடக நடிகன் எனத் திரிந்து சினிமாவில் இப்போது இருக்கிறேன். ஆனாலும் கவிதை வாசிக்கும் பழக்கம் என்னை விட்டு விலகவில்லை என்பது இயற்கையின் அருள் என்றே உணர்கிறேன்.
இப்பொழுது கவிதை என்றவுடன் மனதில் முதலில் எழுவது
தேவதேவனின் ,
“அசையும்போது தோணி
அசையாத போதே தீவு
தோணிக்கும் தீவுக்குமிடையே
மின்னற் பொழுதே தூரம்”
என்னும் வரிகளே.
மேற்கண்ட இரண்டு கவிதைகளுக்கும் உள்ள இடைவெளிகளில் நிறைய கவிஞர்களை வாசித்தது உண்டு. ஆனால் தேவதேவனை கண்டு கொண்டதில் இருந்து மனதில் ஒரு விதமான பறத்தல் வந்து ஒட்டிக் கொண்டது. ஆனால் அந்த பறத்தல் இளைப்பாறுதல் பொருட்டு மட்டும் தான் நடக்கும். நமது வெள்ளிமலை நித்தியவனத்தில் நடந்த இஸ்லாமிய மெய்யியல் அறிமுக வகுப்பில் கலந்து கொண்டேன். அப்போது கவிஞர் வேணு வேட்ராயன் அவர்களுடன் நடந்த சந்திப்பிலும், அதன் பின் அவ்வப்பொழுது அவரது அருகாமையிலும், கவிதைப் பற்றி இன்னும் துலக்கமாக உணர முடிந்தது.
அப்படித்தான், மிகுந்த ஆசையுடனும் எதிர்பார்ப்புடனும் கவிஞர் முகுந்த் நாகராஜ் அவர்களின் சந்திப்பிற்கு காத்திருந்தேன். அதற்காக துவங்கப் பட்ட குழுவில் தொடர்ந்து இரு மாதங்களாக படித்த, பகிரப் பட்ட கவிதைகளும், கவிஞர் முகுந்த் நாகராஜன் அவர்களின் முழு கவிதைத் தொகுப்பில் வாசித்த பாதி கவிதைகளும் எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டே இருந்தது.
விடியற்காலை ஐந்து மணிக்கு ஓசூரில் நிகழ்வு இடம் போய் சேர்ந்து காலை உணவு உண்ணலுக்குப் பின் சரியாக 9 மணிக்குத் துவங்கி 4 க்கு சந்திப்பு நிறைவுற்றது. இடையில் மதிய உணவு இடைவேளையும் கழித்தால் 6 மணி நேரம் தொடர்ந்து கவிதை வாசித்தலும், அது குறித்த கேள்விகளும் தான்.
ஒரு கவிஞரின் முன்னிலையில் அவர் எழுதிய கவிதைகளை வாசிப்பது என்பது ஒரு பெரும் அனுபவம் தான். ஆனால் கவிஞருக்கு அது எப்படி என்று உணர முடியவில்லை.
கவிஞர் வேணு வேட்ராயன் அவர்கள் கவிஞர் முகுந்த் நாகராஜன் அவர்களின் மொத்தக் கவிதைகளையும் “கனவுலகம், ரயில் உலகம்” என சில பகுதிகளாக பிரித்து குறிப்புகளாக மாற்றிக் கொண்டு வந்திருந்தார். அதை அவரும் வாசித்தார், எல்லாரையும் வாசிக்க வைத்தார்.
அதன் அடிப்படையில் முதலில் அறிந்தது கவிஞர் முகுந்த் நாகராஜன் அவர்கள் வெறும் குழந்தை உலகத்தை முன் நிறுத்தி கவிதை எழுதுபவர் அல்ல. குழந்தை உலகம் மூலம் நம் கண்ணில் படாத அல்லது நம் கண்கள் பார்க்க விரும்பாத வேறு ஒன்றை, வேறு ஒரு உலகத்தைதான். திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கிறார். அது கள்ளமின்மையின் உலகம்.
முகுந்த் நாகராஜன் எங்கள் மிக அருகில் இருந்து கொண்டிருந்தார். மிக அருகில் இல்லாமலும் இருந்தார். ஆனால் இல்லாமல் இருந்த அவரது அரூபத்தை எங்களால் உணர முடிந்தது. ஒரு புனைவு எழுத்தாளன் தன் இல்லாமையை மறைக்க முடிகிறது. மாறுவேடம் போட்டுக் கொள்ள முடிகிறது. கூடு விட்டு கூடு பாய்வதற்கு குறிப்பிட்ட இடமும், காலமும், திசையும் அமைத்துக் கொள்ள முடிகிறது. ஆனால் கவிஞனால் அப்படி முடிவதில்லை. அப்படி முடியாமல் இருப்பதால் தான் அவர்கள் கவிஞர்கள் போல. வீடு, பொதுவெளி எல்லாவற்றிலும் அந்த அரூபத்தையும் துணைக்கு அழைத்துக் கொண்டு அலைய வேண்டியதிருக்கிறது. இப்படி சந்திப்புகளில் அந்த அரூபம் நம் மீது சற்று கனிவோடு இருக்கிறது. நம்மையும் சற்று நெருங்கி வந்து ஒட்டிக் கொள்கிறது. ஒட்டிக் கொண்ட அந்த மிகச் சிறு அரூபத்தோடு வீடு திரும்புவது எவ்வளவு பெரும் நிலை! குழந்தையைப் போல ஒட்டிக் கொண்ட அந்த அரூபம் விலகி விடாமல். கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்து என்னுடைய அரூபமாக மாற்றிக் கொள்ள விழைகிறேன்.
சாதரணமும், பெரும் திறப்பும் ஒரு பெரும் கருந்துளையின் இரு பக்கங்கள் போல. கவிதைகள் வாசிக்கும் பொழுது கவிஞர் முகுந்த் நாகராஜ் அவர்கள், அந்த கவிதை எழுதப்பட்ட ஒரு வாழ்வின் தருணத்தை அவ்வப்பொழுது எடுத்துச் சொல்லிக் கொண்டு இருந்தார். அந்த தருணம் எல்லாரும் புழங்கும் அன்றாடம் தான். ஆனால் கவிதை அன்றாடத்தை சொல்லவில்லை. அவரது கவிமனம் மிக நுணுக்கமாக அந்த நொடியின் மிகச் சிறு பொழுதைப் பிளந்து அன்றாடத்தை தாண்டி நிகழ்ந்திருக்கிறது. வாசிக்கப் பட்ட அந்த கவிதை, கவிதை தந்த அனுபவம், அந்த கவிதை நிகழ்ந்த கவியின் அன்றாடம், இந்த மூன்றுக்கும் நடுவில் உள்ள இடைவெளிகள் என் மனதில் ஒரு தாவலால் நிரப்பப்பட்ட போது கவிதையை மிக அணுக்கமாக அறிந்தேன்.
வகுப்பின் ஒரு இடைவெளியில் நான் கவிஞர் வேணு வேட்ராயன் அவர்களிடம் கேட்டேன். “குழந்தைகளின் உலகம் தான் கவிஞனின் உலகமா?” அவர் சொன்னார் “கடவுளின் உலகம்“
அன்புடன் – பா.கின்ஸ்லின்
விபாசனாவின் விடுதலை
I have been consistently reading your articles. The pieces you write on Vedanta for this site are significant. They have penetrated the Tamil context like a small root breaking through a massive rock.
The sprouting of Advaidha
நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். பல வருடங்களுக்குப் பிறகு உங்களுக்கு எழுதும் கடிதம் இது. நான் அக்டோபரில் ஆசிரியர் அமலன் ஸ்டான்லி அவர்கள் நடத்திய விபாஸனா தியானம் இரண்டாம் நிலை வகுப்பில் பங்கு கொண்டேன். அந்த அனுபவத்தைப் பகிரவே இக்கடிதம்
விபாசனாவின் விடுதலைNovember 4, 2025
நவவேதாந்தத்தைக் கற்பது எப்படி?
வேதாந்தம் என்பது இந்திய சிந்தனையின் உச்சம். அது எல்லா தத்துவ – மத மரபுகளையும் ஒருங்கிணைத்து தன்னை முன்வைக்கும் தரிசனம். ஆகவே எல்லா சிந்தனைகளுக்கும் அதில் இடமுண்டு. நவ வேதாந்தம் என்பது அந்த தொன்மையான இந்திய வேதாந்த மரபு நவீன மேலைநாட்டுக் கல்விமுறை மற்றும் உலகச் சிந்தனைமரபுகளுடன் இணைத்து விரிவாக்கிக் கொள்வது. அதற்கான வழிமுறை என்ன?
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

