ங போல் வளை. கடிதம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
ஒரு சில புத்தகங்களை, காவியங்களை, இலக்கிய படைப்புகளை மீண்டும் மீண்டும் வாசிப்பவர்கள் இருக்கிறார்கள். அவ்வெழுத்து அவர்களது வாழ்வின் ஒரு பகுதியாக, வாழ்வை வழிநடத்தும் ஒரு ஆற்றலாக மாறிவிடுவதுண்டு. அப்படி வாசித்த அனுபவம் உள்ளவர்கள் அறியும் ஒன்றுண்டு. அந்த நூல் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் ஒரு புதிய வெளிச்சத்தை, ஆழ்ந்த அறிதலை, அல்லது ஒரு நகர்வை அளித்துவிடும். ஒரு சிலருக்குத் திருக்குறள் அப்படி வாழ்நாள் மொத்தமும் உடன்வரும் நூலாக இருக்கும். பல தலைவர்களுக்கும் கீதை அவ்விதம் இருந்திருக்கிறது. ஒரே குறள் வெவ்வேறு வாழ்க்கைத் தருணங்களில் வெவ்வேறு விதமாகத் தன்னைத் திறந்து காட்டும். அது பேசப்படும் பொருளின் என்றைக்குமான தன்மை காரணமாகவும், அந்நூலை எழுதியவர்கள் தங்கள் வாழ்நாள் முழுமையையும் அந்த நூலின் உள்ளடக்கத்தின் செயல்முறை விளக்கமாக வாழ்வை நடத்திப் பார்த்தவர்களாக, அதாவது தங்கள் சாதனாவில் உறுதியாக அமைந்தவர்களாக இருப்பதையும் சற்று கவனித்தால் உணரலாம். வெறும் அறிவுத்திறனில், கற்பனைத்திறனில் இருந்து எழுதப்படும் சொற்கள் அவ்விதம் காலம்தாண்டி நீடிப்பதில்லை.
அவ்விதம் என்னைத் தொடர்ந்து வழிநடத்திக் கொண்டே இருக்கும் இலக்கியப் படைப்பாக வெண்முரசை உணர்வதுண்டு. நமது வாசிப்பு மேம்படுவதால், நண்பர்களோடு தொடர்ந்து விவாதிப்பதால் அல்லது நாமும் அனுபவங்கள் வழியாக மாற்றமடைந்து கொண்டே இருப்பதால் அது ஒவ்வொரு முறையும் ஒரு திறப்பை அளிப்பதாக எண்ணிக் கொள்வேன். இது குறித்து ஒரு முறை நண்பரும் ஆசிரியருமான குருஜி சௌந்தரிடம் குறிப்பிட்ட போது, அதற்கு வேறு ஒரு பரிமாணத்தில் மற்றொரு காரணம் இருக்கிறது என்றார். நமது பிராணன் உத்தானன் ஆகும் போது, (மேன்மேலும் வளர்ச்சி அடையும் போது), இத்தகைய மேலான பேசுபொருள் கொண்ட ஆக்கங்களை மீள வாசிக்கையில், அந்த நூல்களின் உண்மையான சாரம், மேலான மெய்ப்பொருள் நம்மை வந்தடையும் என்றார்.
இந்த ‘ஙப் போல் வளை‘ என்னும் யோக நூலை, அது தொடராக வந்த போதும், அதன் பின்னரும், இன்று நூலாக நம் கையில் வந்தபிறகும் என பலமுறை வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் இதன் பல வரிகள் புதிய ஒளியில் தெரிகின்றன. தன் வாழ்வையே சாதனாவாக மாற்றி வைத்திருக்கும் ஒரு யோகியின் சொற்கள் என்பதால் வரும் செறிவு.
உதாரணமாக “ஒன்றுடன் வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டே இருப்பதை விட, அதை ஆளும் ஒன்றை, ஆற்றல் மிக்க ஒன்றாக மாற்றுவதையே யோகமுறைமை முன்வைக்கிறது” என்னும் வரி. பொருள் விளக்கம் தேவையற்ற எளிய சொற்கள். ஆனால் சாதனாவின் பாதையில் நமது அக எல்லைகளில் முட்டித் திகைத்து நிற்கும் போது சட்டென விளக்கேற்றி வைக்கிறது இந்த வரி.
இயம நியமங்கள் குறித்து சொல்லும் போது, “சந்தோஷமான மனநிலையை நீண்ட நேரம் தக்கவைத்துக் கொள்ளுதல், முடிந்தவரை ஒன்றின் மீது அதீத பற்றும், பிடிப்பும் கொள்ளாதிருத்தல். இது ஒரு தொடக்கப்புள்ளிதான். ” என்கிறார். சந்தோஷமாக நீண்ட நேரம் இருத்தலும், அதீத பற்றிலாதிருத்தலும் சிறு தொடக்கமே, அதைப் பயில் முயல்வதில் வரும் தொய்வுகளை அனுபவிக்கும் போது, இந்த வரி இப்போது மேலும் செறிவு கொள்கிறது
முதல் வாசிப்புக்கு எளிய நடை போல மயக்கம் காட்டிவிடக் கூடியது இந்த புத்தகம். ஆனால் இது தொட்டுக்காட்டும் பல முக்கியமான பேசுபொருட்கள், கடல்நீருக்கு மேல் தன் நுனி மட்டும் காட்டும் பனிமலைச் சிகரங்கள் போன்றவை. அலைகளைக் கடல் என அறிந்திருக்கும் முதல்நிலை கடந்து கடலை அறிவதற்கு ஆழத்தை நோக்கி இறங்குபவர்களுக்கு அடி காணவியலாது நிற்பது ஆழி. இந்த நூல் வழியாக யோகத்தில் நுழையும் ஒருவருக்கு புதிய ஆழங்கள் திறப்பது உறுதி.
இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகளை தொகுத்துக் கொள்ளும் வசதிக்காக மூன்று விதமாக வகைப்படுத்தலாம் என நினைக்கிறேன்.
முதலாவது மரபார்ந்த யோகக் கல்வியின் ஆதாரமான கருதுகோள்கள் – பஞ்ச கோஷங்கள், பஞ்ச பிராணன், நாடிகள், த்ரயக் தனாவ் எனப்படும் மூன்றடுக்குப் பதற்றங்கள், வாழ்வின் ஆறு நிலைகள், தமோகுணத்தின் ஐந்து நிலைகள், யோகத்தின் எட்டு அங்கங்கள், சங்கல்பம், சித்தாகாசம், முக்குணங்கள், மூன்று சரீரங்கள், ஷட் ஊர்மி எனப்படும் அறுவகைத் துயர்கள், ஷட்கர்மா என்னும் ஆறுவகை சுத்திகரிப்பு, மனதின் கட்டமைப்பு, மூன்று க்ரந்திகள், இரண்டு மார்க்கங்கள் போன்றவை. இவை குறித்த புரிதல் படிப்படியாக ஒரு ஆர்வலருக்கும், ஆரம்ப நிலை யோகப் பயிற்சியாளருக்கும், யோக சாதகருக்கும், ஆன்மீக சாதகருக்கும் ஆழ்ந்து விரிந்து கொண்டே போகக் கூடியவை.
இரண்டாவது வகைமை கட்டுரைகள் பயன்பாடு கருதி நேரடியாக பேசுபவை. இதில் யோகம் குறித்து அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும், ஏதோ ஒரு விதத்தில் யோகம் கற்றுக் கொண்டு மேற்செல்ல திசை தெரியாமல் வழி தேடுபவர்களுக்கும், யோகம் குறித்து பொதுவில் இருக்கும் தவறான தகவல்களில் தடுமாறி, யோகத்தை சரியாக அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் வழிகாட்டுபவை.
உதாரணமாக,
யோகப்பள்ளியைத் தேரந்தெடுக்கும் விதம், நான்கு விதமான மனிதர்களுக்கு ஏற்ற நான்கு முக்கிய யோகக்கிளைகள், யோகத்தை எல்லாம் வல்ல மாற்று மருத்துவமாக சித்தரிக்க முயலும் போலிகள் குறித்த கவனம், சரியான அளவான பயிற்சிகளுக்கான அவசியம், மனிதர்களின் ப்ரக்ருதிக்கேற்ற பயிற்சிகள், காலத்துக்கேற்ற பயிற்சிகள், யோகசிகிச்சையின் சாத்தியங்கள் மற்றும் எல்லைகள்,
முதுமையைக் கையாளும் விதம் என விரிந்து செல்பவை.
பந்தங்கள், முத்திரைகள், சக்கரங்கள், தாரணை, ஓஜஸ், போன்ற உயர்நிலை பயிற்சிகளைச் சுற்றியுள்ள மாயத்தை உடைத்து அதனை அறிமுகப்படுத்தும் மூன்றாவது வகைமைக் கட்டுரைகள்.
சித்த சுத்தி, நாத யோகம்,
சாதகருக்கான தடைகள், ஆயுள், ஆமம் குறித்த ஆயுர்வேதத்தின் பார்வை போன்ற செறிவான பல கட்டுரைகளும் இதில் அடங்கும்.
இந்த நூல் வெறும் யோக மரபின் பார்வை அல்ல, யோகமரபு – தாந்த்ரீகம் – ஆயுர்வேதம் என்னும் மூன்று துறைகளின் தொடர் உரையாடலின் நீட்சி என ஆசிரியரே குறிப்பிடுவது போல இந்தப் புத்தகத்தின் பார்வை யோகத்தை இந்திய ஞான மரபுகளின் ஒருங்கிணைவுப் பார்வையில் விளக்குகிறது. இத்தகைய ஒரு பார்வைக்கு பரந்துபட்ட வாசிப்பும், அதை வாழ்வாகப் பயின்ற அவரது அனுபவமும் கைகொடுக்கிறது.
தான் ஈடுபட்டிருக்கும் யோகமரபின் முதன்மை நூல்களான
பதஞ்சலி யோக சூத்திரம், ஸ்வாமி ஸ்வாதமாராமா எழுதிய ஹத யோக பிரதீபிகை, யோக உபநிஷத்துகள், ஷட் கர்ம சங்கிரஹம் தவிர கடந்த நூற்றாண்டு கண்ட முக்கியமான ஞானியர் அனைவரது யோகம் தொடர்பான பார்வைகளையும் விவரிக்கிறது இப்புத்தகம். அரவிந்தரின் பூர்ண யோகம், ஸ்வாமி சிவானந்தர், ஸ்வாமி சத்யானந்தர், குரு நித்ய சைதன்ய யதியின் பதஞ்சலி யோக சூத்திர உரை, சச்சிதானந்த சரஸ்வதியின் உரை, ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் எனத் தான் எடுத்துக் கொண்ட தலைப்பை விளக்க பல்வேறு ஞானியரின் சொற்களில் தெளிவாக விவரிக்கிறார்.
ஒரு சிறு பகுதியை சொல்வதென்றால், “அளவுக்கு மீறிய தேகப்பயிற்சியால் ஆறுவிதமான தீங்குகள் நேரும் என்றும் தன் சக்திக்கு மீறி அவற்றை செய்பவன், யானையை வம்புக்கு இழுக்கும் சிங்கத்தை போல அழிவான்” என்று அஷ்டாங்க ஹிருதயத்தில் ஆச்சாரியர் வாக்பட்டர் எழுதியிருப்பதை சொல்கிறார். இது அளவான பயிற்சிக்கான அவசியம் குறித்து ஆயுர்வேதம் சொல்லும் தகவல்.
ஒரு கட்டுரையில், “இந்தியா போன்ற மிக நீண்ட, புராண, வரலாற்று, நவீனத்துவ பின்னணி கொண்ட தேசத்தில், எந்த ஒரு மரபார்ந்த கருத்திற்கும், புராணத்தில் அதன் இடம் என்ன? வரலாற்றுக் காலகட்டத்தில் என்ன நிகழ்ந்தது? நவீன காலத்தில் அதன் முக்கியத்துவம் என்ன? என்கிற இந்த மூன்று அல்லது ஐந்தடுக்கு கொண்ட பார்வையும் புரிதலும் முக்கியமாகக் கருதப்படும்.” என்கிறார். அதுவே இந்த புத்தகம் யோகத்தை அணுகும், விவரிக்கும் முறையாக இருக்கிறது.
உபநிடதங்கள், இதிகாச புராணங்கள் தொடங்கி,
நவீன மருத்துவம், நவீன உளவியல், தாந்த்ரீகம், ஆதிசங்கரரின் தத்வபோதம், ஆயுர்வேத முதன்மை நூல்களான சரக சம்ஹிதை, சுஸ்ருத ஸம்ஹிதை, வாக்பட்டர் எழுதிய அஷ்டாங்க ஹிருதயம், சாங்கிய தத்துவம், வெண்முரசு, சூஃபி மெய்ஞானம் சொல்லும் நப்ஸ் என ஒட்டுமொத்த இந்திய ஞானமும் இதில் யோகத்தை விளக்க உதவுகிறது. கிரிக்கெட், நீயா நானா, விளம்பரங்கள் என இன்றைய சமகாலம் வரை நீள்கிறது இதன் களம்.
அனல் குறித்த கட்டுரையில் ஆயுர்வேதத்தின் சரக ஸம்ஹிதை சொல்லும் பித்தம் எனும் அனல், யோக மரபின் ஜடராக்னி உதராக்னி குறித்த கருத்துக்கள், வேத மரபின் அக்னி எனும் தேவனுக்கான துதியும் வைஷ்வாநரன், மேதாக்னி எனும் உருவகங்களும் என அனைத்தையும் தொடர்புறுத்தி விளக்கும் பகுதி. இக்கட்டுரையின் இறுதி வரி அலாதியானது – “வைஸ்வாநரன் எனும் அக்னியோ எதையும் செரிக்கவல்லவன், மரண பயம் உட்பட.”
ஆயுர் வேதத்திலும் யோகத்திலும் விளக்கப்படும் ஓஜஸை நவீன மருத்துவத்துடன் ஒப்பிட்டு விளக்குதலும் அது போல ஒரு முக்கியமான பகுதி. சமீபத்தில் ஒரு யோக வகுப்பில் கலந்து கொண்ட பயிற்சியாளர் ஒருவர் இறுதிநாளில் தான் ஒரு மருத்துவர் என்பதைத் தெரிவித்தார். ஆசிரியர் சௌந்தரின் ‘சான்றுகள் அடிப்படையிலான அணுகுமுறை‘ (Evidence based approach) தனக்கு யோகத்தின் மீது மிகவும் நம்பகத்தன்மையை கொடுக்கிறது என்றார். எதையும் பகுத்து அறிய விழைபவர்களுக்கும் இப்புத்தகம் யோகம் குறித்த மிகச் சரியான அறிமுகம் எனலாம்.
முன்னர் ஒரு புத்தகத்தை வாசித்து முடித்த பின் வாசிப்பனுபவத்தை பேசிக் கொண்டிருந்த போது ஆசிரியர் சௌந்தர் சொன்னார் – “இந்த நூலின் ஒற்றை வரியாவது உனது வாழ்வை ஏதேனும் ஒரு விதத்திலாவது தொட்டிருக்கிறதா? எதேனும் ஒரு வரியையேனும் நீ அனுபவமாக மாற்றிக் கொண்டிருக்கிறாயா? இல்லையெனில் அந்த வாசிப்பு சுமைதானே?” என்று கேட்டார்.
அன்று முதல் எடை சுமப்பதில்லை என சங்கல்பம் எடுத்துக் கொண்டேன். இந்த நூலில் ஒரு கட்டுரையில், “ஒருவர் யோக பயிற்சிகளை படிப்படியாக கற்று தேர்வதன் மூலம், உடலளவில் அடைந்த சமநிலை, மெதுவாக காலப்போக்கில் உள்ளத்தளவிலும் அமைகிறது. இதை ‘சித்த சுத்தி‘ என்கிறது மரபு,… சித்த சுத்தி அடைந்த ஒருவர் அறிவு சேகரம் செய்வதையோ, அறிவுச் செயல்பாட்டில் ஈடுபடுவதையோ நிறுத்தி விட மாட்டார், ஒருவகையில் இன்னும் கூர்மையான மதி படைத்தவராக, ஆழ்ந்து வாசிக்கக் கூடியவராக, தனக்கான செய்திகளையும் தரவுகளையும் மட்டும் புத்தியில் வைத்துக்கொண்டு தேவையற்ற தரவுகளை அன்றாடம் அழித்து விடுபவராக மாறிவிடுகிறார்.” என்கிறார் ஆசிரியர்.
வாசிப்பதில் ஒரு துளியேனும் எனது ஒரு பகுதியாக மாறவில்லையெனில் அத்தகைய வாசிப்பை சுமந்தலைவதில்லை எனும் சங்கல்பம் வாசிப்பை கூர்படுத்தியிருக்கிறது. இந்த நூலின் பல வரிகள் நமது வாழ்வாக மாறக் கூடியவை. “இனி யோகம் பயில்வோம்‘ எனும் ஈற்றடிவரை.
அனைத்துக்கும் நன்றி குருஜி.
மிக்க அன்புடன்,
சுபா
SOUNDAR.G
SATYAM TRADITIONAL YOGA
11/15, south perumal Koil Lane
Vadapalani – Chennai- 600026
+91 9952965505
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
