Jeyamohan's Blog, page 14

September 20, 2025

ரமேஷ் பிரேதன் விருது, ஒரு கேள்வி

ரமேஷ் பிரேதன்

அன்புள்ள ஜெ,

நீங்கள் விஷ்ணுபுரம் விருதை ரமேஷ் பிரேதனுக்கு வழங்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள், மகிழ்ச்சி. ஆனால் ரமேஷ் பிரேதன் என்ற பெயரில் இன்று எழுதும் எழுத்தாளர் முன்பு பிரேம் அவர்களுடன் இணைந்துதான் தன் படைப்புக்களை எழுதியுள்ளார். (உங்கள் சொல் புதிது இதழிலேயே அவர்கள் இருவரும் எழுதியதாகவே படைப்புகள் வெளியாகியுள்ளன. அவற்றை அப்போதே நான் வாசித்துள்ளேன்) இந்த விருது அப்படியென்றால் பிரேமுக்கும் சேர்த்துத்தானே வழங்கப்படவேண்டும்?

ராஜப்ரியன்

அன்புள்ள ராஜப்ரியன்,

இந்த விருது குறிப்பிட்ட படைப்புக்காக அல்ல, படைப்பாளியின் ஒட்டுமொத்த ஆளுமைக்காகவே வழங்கப்படுகிறது. கௌரவிக்கப்படாத படைப்பாளிகளுக்கான விருது இது. ரமேஷ் தமிழின் முதன்மையான இலக்கிய ஆளுமைகளில் ஒருவர், கௌரவிக்கப்படவேண்டியவர். அவர் தன் பெயரில் எழுதிய படைப்புக்களே அவர் எவர் என்பதற்கான சான்றுகள். அந்த அடிப்படையிலேயே இந்த விருது வழங்கப்படுகிறது.

ஜெ

அன்புள்ள ஜெ,

உங்கள் பதிலுக்கு நன்றி. அப்படியென்றால் நீங்கள் முன்பு ரமேஷ் பிரேமுடன் இணைந்து எழுதிய கதை கவிதைகளிலும் ஓங்கியிருப்பது ரமேஷின் ஆளுமைதான் என நினைக்கிறீர்களா? அவர் மட்டும்தான் கௌரவிக்கப்படவேண்டும் என நினைக்கிறீர்களா?

ராஜப்ரியன்

அன்புள்ள ராஜப்பிரியன்,

நீங்கள் உண்மையில் வாசகரா என தெரியவில்லை. ரமேஷ் தனியாக பிரிந்தபின் எழுதிய படைப்புகளில் அவர் மேலும் பலமடங்கு வீரியத்துடன், அசலான படைப்பாளிக்குரிய அலைக்கழிப்புகளுடனும் ஆழ்நிலைகளுடனும் வெளிப்படுகிறார். அதுவே சான்று.

ஜெ 

உடல்நலிந்த நிலையில் இருக்கும் ரமேஷ் பிரேதனுக்கு தனிப்பட்ட முறையில் உதவிசெய்ய விரும்புபவர்கள் செய்யலாம்.

RAMESH . MS.B. A/C. No. 32821202848STATE BANK OF INDIAMUTHIALPET BRANCHIFSC CODE: SBIN0015420
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 20, 2025 11:31

மாய யவனிகையின் பின்னே எழுந்த மலர்த்திடல்

தடுத்தாட்கொண்ட நாதர் மீதான சுந்தரர் தேவாரத்தோடு திரு. ஜெயக்குமார் இந்த ஆலயக்கலை வகுப்பை ஆரம்பித்தார். பித்தா பெருமானே என அவர் குரலுயர்ந்த அந்தத் தருணம்,  பலவிதங்களில் அலைந்து கொண்டிருந்த சிந்தனையையும், மனத்தையும் தடுத்தாட்கொண்டது. அடுத்த மூன்று நாள்களும் எங்களை பக்தியால். பாரம்பரியப் பெருமைகளால், ஆலயக்கோட்பாடுகளால், சிற்ப மரபால், இசையால், நகைச்சுவையால் மற்ற எந்த உலகாதீயச் செயல்களுக்கும் கவனம் கொண்டு செல்லாமல் ஆட்கொண்டிருந்தார்.

மாய யவனிகையின் பின்னே எழுந்த மலர்த்திடல்

They believe every nonsensical claim made by silly so-called gurus. They develop hatred for other religions. They have meaningless beliefs and a kind of ridiculous mentality about all kinds of rational things.

About ritualism…
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 20, 2025 11:30

September 19, 2025

இன்று இலட்சியவாதம் உள்ளதா என்ன?

”இன்றைக்கு எவன் சார் யோக்கியன்? காமராஜர் கக்கன் காலமெல்லாம் இனிமே வராது சார்” என்று சொல்பவரை நாம் நல்லவர், இலட்சியவாத நம்பிக்கை கொண்டவர், மனம் புண்பட்டவர் என நினைக்கிறோம். இல்லை, அவர் உண்மையில் இலட்சியவாதம் என்பது இன்று இல்லை என நிறுவவிரும்பும் ஓர் அயோக்கியர். ஏனென்றால் அவர் தன் அயோக்கியத்தனத்தை மறைக்க விரும்பி, அல்லது நியாயப்படுத்த விரும்பித்தான் அதைச் சொல்கிறார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 19, 2025 11:36

இந்தியா மீதான அலட்சியம், சல்மான் ருஷ்தியின் விக்டரி சிட்டி.-2

சல்மான் ருஷ்தியின் இந்த நாவல் பாம்பா என்னும் ஒரு பெண்ணில் இருந்து தொடங்குகிறது. அவள் எந்த குலத்தை சேர்ந்தவள் என்பதும் அவளுடைய வரலாற்றுப் பின்னணி என்ன என்பதும் இந்நாவலில் இல்லை. குத்துமதிப்பான ஒரு கற்பனையே அளிக்கப்படுகிறது. ஆனால் பாம்பாவின் சிற்றரசை ஆக்ரமிக்கும் எதிரிகளிடமிருந்து தப்பிக்கும்பொருட்டு அவளுடைய அன்னையும் பிற அரசகுடிப்பெண்டிரும் தீக்குளித்து இறக்கிறார்கள். பொதுவாக படை எடுத்து வருபவர்களிடம் தப்பும் பொருட்டு ஜோஹர் எனும் எரியூட்டலுக்கு ஆளாவது என்பது ராஜஸ்தானிய அரசு அரசகுடிக்கு மட்டுமே இருந்துவந்த ஒரு தனித்தன்மை. அதிலும் அவர்கள் சுல்தானியப்படையெடுப்பை ஒட்டி உருவாக்கிக்கொண்ட ஒன்று. தென்னிந்தியாவில் எங்கும் அது நிகழ்ந்ததற்கான சான்று இல்லை. இவ்வாறு தொடக்கம் முதலே இந்நாவல் ஒரு அந்தரத்திலேயே நிகழ்கிறது. 

உயிர்தப்பும் பாம்பா அவள் பெயரைக்கொண்ட தெய்வத்திடமிருந்து மந்திர சக்திகளை பெறுகிறாள். அங்கு மாடு மேய்ப்போராக ஒளிந்து வாழும் இருவருக்கு (இவர்கள் ஹரிஹரன் புக்கரின் மாற்று வடிவங்கள் என்பது வெளிப்படை) சில விதைகளை கொடுக்கிறார். அந்த விதைகளை அவர்கள் விதைக்க அது முளைத்து வெற்றி நகராக மாறுகிறது. பிறகு அந்நகரின் வரலாறு பல்வேறு நிகழ்வுகள் வழியாக விரிகிறது. அது வெவ்வேறு காலகட்டங்களாக நகர்ந்து சரிகிறது. இந்தச் சித்தரிப்பில் வெவ்வேறு நார்ஸ்–கெல்டிக் தொன்மங்களின் சாயல்கள் கொண்ட மாயங்கள் நிகழ்கின்றன. 

இந்தியாவில் நிகழும் கதையில் எந்த இந்தியச் சாயலும் இல்லை. எல்லா நிகழ்வுகளும் செயற்கையாக கட்டமைக்கப்பட்டவையாக, பெரும்பாலும் நவீனப்புனைகதை எழுத்தாளர்கள் எழுதும் வழக்கமான நிகழ்வுகளின் சாயல்கொண்டவையாக உள்ளன. இந்த அறுநூறு பக்க நாவலில் எங்குமே வாழ்க்கையின் நுட்பங்களோ, தவிர்க்கமுடியாமைகளோ வெளிப்படும் தருணங்கள் இல்லை. எங்குமே இந்திய வரலாற்றை அல்லது மானுட வரலாற்றை நோக்கும் ஒரு புனைவெழுத்தாளன் மட்டுமே கண்டடையும் புள்ளிகள் இல்லை. ஒரு கட்டத்தில் வெறும் சொற்சுழலாக மட்டுமே இந்நாவலை வாசித்துச்செல்லவேண்டியிருந்தது.

விஜயநகரத்தின் மெய்யான வரலாறு என்பது இந்நாவலை விட பல மடங்கு உத்வேகமும் திருப்பங்களும் அபத்தங்களும் நிறைந்தது. நம்ப முடியாத பெரும் துரோகங்களின் கதைகள் கொண்டது. விஜயநகர சாம்ராஜ்யத்தின் முதன்மை மன்னராகிய கிருஷ்ணதேவராயரின் மகன் திருமலைராயன் சிறுவனாக இருக்கையிலேயே அவருடைய அமைச்சரால் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டான். மகனின் மரணத்தால் மனமடைந்து கிருஷ்ணதேவராயர் மறைந்தார். மொத்த விஜயநகர வரலாறும் துரோகங்களின் தொடர்தான். அதற்குக் காரணங்கள் மிக நுட்பமானவை. விஜயநகரை வெவ்வேறு பெருங்குடும்பங்கள்தான் ஆட்சி செய்தன. ஒரு குடும்பத்தை வீழ்த்தாமல் இன்னொரு குடும்பம் ஆட்சிக்கு வரமுடியாது.

விஜயநகரின் இறுதிப்போர்க்களமான தலைக்கோட்டையில் விஜயநகரத்தின் அமைச்சரும் அரசரும் ஆகிய ராமராயர் மறைந்துவிட்டார் என்று எதிரிகள் வதந்தி கிளப்ப தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்கும் பொருட்டு அவர் யானை மேலே தோன்றினார். அக்கணமே அவர் அம்பெய்து வீழ்த்தப்பட்டார். அவர் வீழ்ந்ததும் படை பின்வாங்கியது. அது ஒரு சூழ்ச்சி. எதிரிப்படைகளை விட விஜயநகரப்படை மிகப்பெரியது. ஒரு தனிமனிதருக்கு ஒரு கணத்தில் உருவான ஏதோ ஒரு தாழ்வுணர்ச்சியால் ஒரு பேரரசு அழிந்தது. அவர் பிராமணர் என்பது அந்த தாழ்வுணர்ச்சிக்குக் காரணமாக இருக்கலாம். 

விஜயநகரம் அழிந்ததே ஒரு அபாரமான சித்திரம். ஓராண்டுக்காலம் அது தொடர்ச்சியாக இடிக்கப்பட்டது. கல்லால் ஆன அதன் கட்டிடங்கள் நெருப்பு மூட்டி சுட்டுப்பழுக்கவைத்து, அதன் மேல் குளிர்ந்த தண்ணீரை ஊற்றி கற்களை வெடிக்க வைத்து யானைகளைக் கொண்டு இடித்துத் தள்ளப்பட்டது. பல நூற்றாண்டு காலம் விஜயநகரம் மயான நகரமாக திகழ்ந்தது. இன்று கூட விஜயநகரத்தைப் பார்ப்பவர்கள் அந்த மாபெரும் இடிபாடு விரிiவை ஒரு பெரும் மாய அனுபவமாகத்தான் அடைய முடியும். அந்நகரம் மறக்கப்பட்டது. அங்கிருந்த அரசகுடியினர் வெவ்வேறு ஊர்களுக்கு இடம்பெயர்ந்தனர். பின்னர் அந்நககரத்தை ராபர்ட் சிவெல் (Robert Sewell) கண்டடைந்தார். மறக்க முடியாத நகரம் என்ற பெயரிலே அதைப் பற்றி ஒரு நூல் எழுதினார். அதனூடாக விஜயநகரம் உலகின் கவனத்திற்கு வருகிறது.

இந்த மெய்யான வரலாறு அளிக்கும் திகைப்புகளில் ஒரு துளி இல்லாமல் முற்றிலும் செயற்கையாக கட்டமைக்கப்பட்ட மாயப்படிமங்களால் ஆன ஒரு நாவல் இது. இத்தகையவை யாருக்காக எழுதப்படுகின்றன? இந்தியாவைப் பற்றி மெல்லிய ஆர்வம் கொண்ட ஐரோப்பிய, அமெரிக்கர்களுக்காக. மேலோட்டமாக மட்டுமே அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், அதற்கு அப்பால் அதை அறிய எந்தக் கவனத்தையும் அளிக்கத் அளிக்கத தயாராக இல்லை என்றும் எண்ணும் ஒரு மேல் நாட்டு வாசகர்கூட்டம் உள்ளது. அவர்களுக்கான படைப்பு இது அவ்வகையில் ஓர் அமெரிக்க ’பெஸ்ட்செல்லர்’ நூலுக்கான அனைத்து இலக்கணங்களும் கொண்ட படைப்பு இது என்று சொல்ல முடியும்.

இதன் வாசிப்பு இரண்டு வகைகளில் மட்டுமே செயல்படுகிறது. ஒன்று மாயதார்த்தம் பற்றி தெரிந்தவர்களுக்கு ஒவ்வொன்றும் எந்தெந்த திசைகளுக்கு செல்லும் என்பதை எளிதாக ஊகித்து அதை ரசிக்க முடிகிறது, அவ்வாறு நாம் ஊகிப்பதை அவ்வப்போது ருஷ்டி சில உத்திகள் வழியாக தோற்கடிப்பதையும் ரசிக்க முடிகிறது. இந்நாவலின் கதையோட்டத்தின்படி ஒரு பானையிலிருந்து ஒரு சம்ஸ்கிருத காவியம் மீட்டெடுக்கப்படுகிறது. அதிலுள்ளதே இந்நாவலின் கதை.(முப்பதாண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய விஷ்ணுபுரம் நாவல் இந்த வடிவம் கொண்டது, இந்நாவலை விட மிக நுட்பமான அடுக்குள் கொண்டது) ருஷ்டியின் இந்நாவலில், அதாவது அந்த மூலக்காவியத்தில் உள்ள பேசுபொருட்கள் எல்லாமே சமகாலத்தைச் சேர்ந்த அரசியல்தலைப்புகள்.

உதாரணமாக, ஆணும் பெண்ணும் நிகராக வாழ்ந்த ஒரு பொற்காலம் அந்த வெற்றிநகரில் அமைந்திருந்ததாக ருஷ்தி குறிப்பிடுகிறார். பாம்பாவின் நோக்கமே அதுவாக இருந்தது. அது நிகழவில்லை. உண்மையில் இந்தியாவெங்கும் ஒரேவகையான பெண்ணடிமைத்தனம் இருக்கவில்லை. ஒவ்வொரு இடத்திலும் அதன் இயல்புகள் நுணுக்கமாக வேறுபட்டன. விஜயநகரைப் பொறுத்தவரை அரசி என்னும் இடம் அரசனுக்கு நிகரானதாகவே இருந்தது. பிற இடங்களில் பெண்கள் போருக்குச் செல்லவில்லை, அதிலும் விஜயநகரம் விதிவிலக்கு. உதாரணமாக, விஜயநகரப் பேரரசின் படையில் பெண் போராளிகள் இருந்தார். விளமர் எனும் குடியைச் சேர்ந்த வில்லாளிகளில் பெண்கள் நிறையபேர் உண்டு. வில்லில் தேர்ச்சி பெறுவதன் பொருட்டு ஒரு மார்பை வெட்டி கொண்டார்கள் அவர்கள் என்று ஒரு கதை உண்டு. அவர்களின் சிற்பங்களை அகோபிலத்திலும், சிவசைலத்திலும் காணலாம். இந்தியாவின் பெண்ணடிமைத்தனம் பற்றி ஓரு சராசரி அமெரிக்க வாசகனுக்கு இருக்கும் பொதுப்புரிதலையே ருஷ்டி இங்கே கையாள்கிறார்.

பாம்பா ஓர் அழிவற்ற அன்னை. 200 ஆண்டுகளுக்கும் மேல் அவள் உயிர்வாழ்கிறாள். அத்தகைய அன்னையுருவகங்கள் இந்தியாவில் உண்டு. ஆனால் அவர்களின் வண்ணங்களும் இயல்புகளும் வேறு. தென்னிந்திய வரலாற்றிலேயே ராணி ருத்ராம்பா, ராணி மங்கம்மாள் போன்ற அன்னையுருவங்கள் உண்டு. மங்கம்மாளின் துயரம் நிறைந்த முடிவு பாம்பாவின் முடிவை விட ஆழமான ஒரு வரலாற்று நிகழ்வு. ஆனால் பாம்பா கப்ரியேல் கர்ஸியா மார்க்யூஸில் உர்சுலாவின் சாயலுடன் படைக்கப்பட்டிருக்கிறார். பாம்பா அவர் உருவாக்கிய நகர் பற்றி அவரே எழுதிய காவியத்தின் பலவகையான விளக்கங்களாக இந்நாவல் உள்ளது. ஆனால் இதில் இந்தியக் காவியங்களின் அழகியலோ, மனநிலையோ இல்லை. இந்நாவலை வாசித்தால் பாம்பா எழுதியது ஒரு லத்தீன் அமெரிக்க மாயயதார்த்த நாவல் என்று தோன்றிவிடும்.

‘பாலியல் சமத்துவம்’ என்னும் கருத்தை வரலாற்று மாயப்புனைவாக ஆக்கியிருப்பதாக இந்நாவல் பற்றிய மதிப்புரைகளில் வாசித்தேன். பாலியல் சமத்துவத்தை வலியுறுத்துவது, அதன் அடிப்படையாக அனைத்து விதைகளையும் அளிக்கும் அன்னைமரமாக ஒரு பெண்ணை உருவகிப்பது எல்லாமே எத்தனை தேய்ந்துபோன உருவகங்கள். எந்த அரசியலெழுத்தாளனும் பேசும் ஒரு கருத்துக்கு செயற்கையாக படிமங்களை அளிப்பதா ஒரு இலக்கியப் படைப்பாளியின் வேலை? பாலியல்சமத்துவம் என்னும் அந்த பேசுபொருளுக்குள்ளேயே பொதுப்புத்தியால் கண்டடைய முடியாத வாழ்க்கையின் உண்மைகளை, வரலாற்றின் உள்ளுறைகளை வெளிப்படுத்தவில்லை என்றால் எதற்காக இலக்கியம் எழுதவேண்டும்? இத்தனை பக்கங்கள் வழியாக ருஷ்டி உருவாக்குவது மிகச்சாதாரணமான அரசியல் கருத்துநிலையைத்தான் என்பது அளிக்கும் சலிப்பு மிகப்பெரியது.

நான் எப்போதும் இந்திய ஆங்கில இலக்கியத்தைப் பற்றி ஓர் ஒவ்வாமையை அடைவதுண்டு. அவை இந்தியாவின் நுணுக்கமான பண்பாட்டுத்தகவல்களை அறியாத இந்திய உயர்குடியினருக்காகவும் அமெரிக்கர்களுக்காகவும் எழுதப்படுகின்றன. அவற்றை இந்திய எழுத்து என்று ஒரு அமெரிக்க இலக்கிய வாசகன் வாசிப்பானாயின் அவன் இந்திய பண்பாட்டுக்கும் இந்திய மக்களுக்கு மிகப்பெரிய அநீதி ஒன்றை இழைக்கிறான். ஒருவரைப் பற்றி மேலோட்டமாக தெரிந்து கொள்வது என்பது உண்மையில் அவர்மீது பெரும் அலட்சியத்தை காட்டுவதுதான். எப்படி ஓர் அமெரிக்கர் இந்தியாவை பார்க்க விரும்புகிறார், எப்படி அவருடைய எல்லைகள் அமைந்திருக்கும் என நன்கறிந்து அதற்குள் நின்று எழுதப்பட்ட ஒரு செயற்கையான நாவல் இது. உலகெங்கும் இத்தகைய படைப்புகளே இந்தியாவின் இலக்கியமாக வாசிக்கப்படுவது என்பது மிகவும் துரதிஷ்டவசமானது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 19, 2025 11:35

எஸ்.ஜெயக்குமார்

இசைக்கலைஞர், கோயிற்கலை ஆய்வாளர், வரலாறு, கோயில் கட்டிடகலை, சிற்பகலை ஆசிரியர், சினிமா துறையில் வரலாற்று ஆராய்ச்சி ஆலோசகராக உள்ளார். ப்ரஸ்தாரா அமைப்பின் நிறுவனர். பண்பாட்டு சுற்றுலா பயணங்களை இந்தியா முழுவதும் ஒருங்கிணைத்து வருகிறார்.

எஸ்.ஜெயக்குமார் எஸ்.ஜெயக்குமார் எஸ்.ஜெயக்குமார் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 19, 2025 11:32

ரமேஷ், தனிவாழ்க்கை, இன்னொரு ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

சில ஆண்டுகளுக்கு முன்பு விமலாதித்த மாமல்லன் ரமேஷ் பிரேதனுக்கு நிதிச்சேகரிப்பு ஒன்றை நடத்தினார். ஆனால் அந்த நிதியெல்லாம் பிரேமா என்பவருக்குச் செல்கிறது என்றும் பிரேமாவுடன் ரமேஷுக்கு தொடர்பு உள்ளது என்றுமெல்லாம் விரிவாக எழுதி, ரமேஷை சாக்கடை என்றெல்லாம் வசைபாடினார். அந்தக் கட்டுரைகள்தான் இப்போது நாம் தேடும்போது உடனடியாகக் கிடைக்கின்றன. (வசைகளை எழுதி அவற்றை பிரபலப்படுத்துவதில் மாமல்லன் ஒரு நிபுணர். அவருடைய ஒரே இலக்கியப்பங்களிப்பும் அதுதான் என நினைக்கிறேன்). நீங்கள் ரமேஷுக்கு அளித்த பணமும் அப்படி வீணடிக்கப்பட்டது என்று எழுதியிருந்தார். நான் இந்த விஷயத்தில் உங்களுடைய எதிர்வினையை அறிய விரும்புகிறேன்.

ராம.சங்கரநாராயணன்

அன்புள்ள சங்கரநாராயணன்,

ரமேஷ் பிரேதனுக்கு விருது அறிவிக்கப்பட்டபின் எந்த அளவுக்கு வாழ்த்துக்கடிதங்கள் வந்தனவோ அதைவிட கூடுதலாகவே வம்புவிசாரிப்புகளும் வந்தன. ஆனால் ஒன்றும் செய்வதற்கில்லை. அவர் இங்கே உத்தேசித்ததே நம் சமூகமனதிலும், ஒழுக்கவியலிலும் ஒரு நிலைகுலைவைத்தான். அந்த நிலைகுலைவு அவருடைய படைப்புகளுக்குள் செல்வதற்கான ஓர் அழைப்பு, அவரை புரிந்துகொள்வதற்கான ஒரு தொடக்கம். ஆகவே அது நல்லதுதான்.

பொதுவாக இன்னொருவர் வாழ்வை விசாரிப்பது அநாகரீகம். ஓர் உதவியை நிபந்தனையுடன் செய்வது அராஜகம். இன்னொருவர் வாழ்வின்மேல் நிபந்தனை விதிக்க எவருக்கும் உரிமையில்லை.

ரமேஷ் அவர்களுக்கும் பிரேமா அவர்களுக்குமான நட்பு பற்றி நான் நேரில் அவரிடம் கேட்டு அறிந்தேன். அவர் ரமேஷின் பள்ளித் தோழி. அவர் பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாக ஆனபின்னர்தான் பிரேமா ரமேஷை மீண்டும் சந்திக்கிறார். பத்தாண்டுகளாக ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் ரமேஷை வந்து பார்த்து, உடல்தூய்மை செய்து, அறையைச் சீரமைத்து கவனித்துக்கொள்கிறார். ரமேஷ் எடைமிக்கவர். அப்பணிவிடைகளை செய்வது எளிதல்ல.

நமக்கே தெரியும், இன்று குடும்பங்களில்கூட நோயுற்றவர்களை நீண்டகாலம் இப்படி எவரும் கவனித்துக்கொள்வதில்லை. இன்னொருவருக்கு எவரும் பொறுப்பேற்றுக் கொள்வதில்லை. பல லட்சரூபாய் ஊதியமாக அளித்தால்கூட இதற்கு இன்று ஆள் கிடைப்பது அரிதினும் அரிது. மனிதர்களுக்கிடையே மிகமிக அரிதாக உருவாகும் நட்பு இது. முன்பு நகுலனுக்கு மட்டுமே அத்தகைய ஒரு தூய நட்பு அமைந்தது. அதை மிக எளிதாகக் கொச்சைப்படுத்தும் மலின உள்ளங்களை நவீன இலக்கிய வம்புச்சூழல் உருவாக்கியுள்ளது.

பிரேமாவுக்கு தமிழிலக்கிய உலகம் கடன்பட்டிருக்கிறது. நகுலனை கவனித்துக்கொண்ட பிறுத்தா அம்மையாருக்குக் கடன்பட்டிருப்பதுபோல. விஷ்ணுபுரம் விழாவில் அவரையும் மேடையேற்றி ஒரு மலர்ச்செண்டு அளிக்கவேண்டும் என்பது எங்கள் விருப்பம். மகத்தானவை சில இங்கே நிகழும் என்பதை நமக்கு நாமே உறுதிசெய்து கொள்வதற்காகவும்தான்.

ஜெ

பாண்டிச்சேரியில்… ரமேஷ் ஒரு கடிதம்

உடல்நலிந்த நிலையில் இருக்கும் ரமேஷ் பிரேதனுக்கு தனிப்பட்ட முறையில் உதவிசெய்ய விரும்புபவர்கள் செய்யலாம்.

RAMESH . MS.B. A/C. No. 32821202848STATE BANK OF INDIAMUTHIALPET BRANCHIFSC CODE: SBIN0015420

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 19, 2025 11:31

நம் பேச்சுக்கள் ஏன் இப்படி இருக்கின்றன?

இன்றைய சூழலில் கோர்வையாக பேசும் ஒருவரை காண்பதென்பதே அரிதினும் அரிதாகவே உள்ளது. காரணம் பெரும்பான்மையோர் யாரும் வாசிப்பதில்லை. அப்படி வாசிப்பு இல்லாத ஒருவரிடம் அதிக நேரம் பேசுவது சலிப்பை ஏற்படுத்துகிறது. நண்பர்கள், சுற்றத்தார் ஆகியோரிடம் பேசும்போது எளிய நகைச்சுவைக்கு அப்பால் அங்கு அறிவாந்த உரையாடலே நிகழ்வதில்லை. அன்றாட அரசியல், சினிமா, உணவு பழக்கங்கள் ஆகியவையே மிகுதி. அதற்கும் அப்பால் நமக்கான ஒரு அறிவாந்த சுற்றத்தை அமைக்காவிடில் காலப்போக்கில் நாமும் சாமானியர்களாகிவிடுவோம். 

நம் பேச்சுக்கள் ஏன் இப்படி இருக்கின்றன?

But the applications I got mostly contained three or four simple lines. Some men applied through WhatsApp messages, without any detail. One application even had no name on it. When I asked about the name, he said that he thought that there was a number on that message and I could ask him his name if needed. Very strange.

Our youth, their mentality…
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 19, 2025 11:30

September 18, 2025

இந்தியா மீதான அலட்சியம், சல்மான் ருஷ்தியின் விக்டரி சிட்டி.

மலையாள எழுத்தாளர் பி கே பாலகிருஷ்ணன் ஒரு பேட்டியில் சொன்ன வரி சட்டென்று இந்த பின்னிரவில் நினைவுக்கு வந்தது. ஒரு படைப்பை படித்து முடித்த கணம் அந்த மேஜை எப்படி இருக்கிறது என்பது எப்படியோ அந்த படைப்பு உருவாக்கும் மனநிலையுடன் சம்பந்தப்பட்டது. சல்மான் ருஷ்தியின் Victory City நாவலைப் படித்து முடித்தவுடன் என்னுடைய மேஜையை ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அருண்மொழி ஊரில் இல்லை. அவள் வீட்டில் இல்லாத போது வீடு எப்படி இருக்குமோ அப்படித்தான் மேஜை இருக்கிறது. அதாவது ஒட்டுமொத்தமாக ஒரு திறந்த குப்பைக் கூடை. அதன் நடுவே இந்தப் புத்தகம். மிக அழகாக தயாரிக்கப்பட்ட புத்தகம் பற்றி எனக்கு சாதகமாக ஏதேனும் சொல்வதற்கு இருக்கிறது என்றால் முதன்மையாக அது இது மட்டும்தான்.

இந்த நாவலை இப்படி சொல்லலாம், நான் இத்தாலிக்கு அல்லது ஸ்பெயினுக்குச் அங்கிருக்கும் பண்பாட்டை பற்றி அங்கு இருக்கும் நூல்களில் ஏதேனும் ஒன்றில் இருந்து சில செய்திகளை மேலோட்டமாகத் திரட்டி கொண்டு, அந்தத் தரவுகளைக் கொண்டு என்னுடைய இந்திய மனநிலையை ஒட்டி, என் இந்திய பொதுச்சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாவ்லை எழுதினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இந்த நாவல். இந்நாவலில் முற்றிலும் விடுபடுவது என்னவென்றால் ‘இந்தியத் தன்மை’ அல்லது ‘அசல் தன்மை’. இந்நாவல் இந்தியாவின் வரலாறு பற்றி, அல்லது இந்தியப்பண்பாடு பற்றி எந்த நுண்பார்வையையும் கொண்டிருக்கவில்லை. இந்தியக்களத்தை முன்வைத்து மானுடம் சார்ந்த எந்த அடிப்படைக் கேள்வியையும் எழுப்பிக்கொள்ளவில்லை. ஆகவே இது ஓர் எளிய புனைவு விளையாட்டாகவே எஞ்சுகிறது. காலாவதியாகிப்போன ஒரு விளையாட்டு.

சல்மான் ருஷ்டியின் இந்த நாவல் விஜயநகரப் பேரரசின் எழுச்சி- வீழ்ச்சியை குறித்த ஏதோ ஒரு சாதாரணமான புத்தகத்தை மட்டுமே சார்ந்து எழுதப்பட்டது. ஆகவே மிகமேலோட்டமான சில வரலாற்று நிகழ்வுகளை வேறொருவகையில் இது நகலெடுக்கிறது. அதன் கற்பனை என்பது லத்தீன் அமெரிக்கா மாய யதார்த்தவாதப் புனைவுகளைப் போலி செய்து அடையப்பட்டது. ருஷ்தியின் ஆங்கில விளையாட்டுத் தன்மை இந்த நூலின் நடையை சுவாரசியமாக வாசிக்கச் செய்கிறது. வீட்டில் எவருமில்லாததனால் இரண்டு நாட்களில் படித்து முடித்த நாவல் இது. இந்த ‘படிக்கவைக்கும் தன்மை’ என்பது தான் இந்நாவலின் ஒரே தனிச்சிறப்பு என்று நினைக்கிறேன். மிக விரைவான வாசிப்பு அனுபவத்தைத் தருவது ருஷ்தியின் இயல்பான ஒழுக்கு கொண்ட மொழிவிளையாட்டு.

The first circle of hell was right there in the council chamber, where Bukka Raya I was plunged in to the inferno of impossible choices – to support his wife and outlaw his children, or to protect the little princes and alienate Pampa Kampana ,may be permanently- while all around him were the members of the council, looking his direction trying to decide which way they would jumb after he had made his unhappy leap. 

(இந்த வகையான் சொற்சுழற்சி ஆங்கிலத்தை அழகாக ஆக்குவது. இங்கே எவரேனும் இதை தமிழாக்கம் செய்கிறேன் என்று ஆரம்பித்து, இந்த மூலச் சொற்றொடர் அமைப்பை தமிழுக்கு அப்படியே மாற்ற தொடங்கினால் இது புதிர்ப்பாதை விளையாட்டாக மாறிவிடும். ஏனென்றால் தமிழின் எழுவாய் பயனிலை அமைப்பும் கூட்டுச்சொற்றொடர் அமைப்பும் ஆங்கிலத்தில் இருந்து முற்றாக வேறுபட்டவை. இந்தப் புரிதலற்றவர்கள் ஆங்கிலத்தில் எளிமையாக உள்ள கூட்டுச்சொற்றொடர்களே அப்படியே ‘தமிழ்ப்பெயர்த்து’ வைக்கிறார்கள். ஆங்கிலத்தில் படிக்கும் பழக்கம் இல்லாத உள்ளூர் எளிய வாசகர்கள் அந்த சொற்றொடர்ச் சிக்கல்தான் உயர் இலக்கியம் போலிருக்கிறது என்று பரவசம் அடைந்து, அதேபோல தமிழில் சொற்குதறல்களாகவே எழுதும் அபத்தம் இங்கே ஓர் இலக்கிய வகைமையாகவே ஆகியுள்ளது.

அவர்கள் இவ்வாறு இதை ‘தமிழில்’ வாசிக்கலாம். ‘நரகத்தின் முதல் வட்டம் கவுன்சில் அறையில் இருந்தது, அங்கு புக்க ராயன் I சாத்தியமற்ற தேர்வுகளின் நரகத்தில் மூழ்கடிக்கப்பட்டார் – அவரது மனைவியை ஆதரிப்பது மற்றும் அவரது குழந்தைகளை சட்டவிரோதமாக்குவது, அல்லது சிறிய இளவரசர்களைப் பாதுகாப்பது மற்றும் பம்பா கம்பனாவை நிரந்தரமாக அந்நியப்படுத்துவது – அவரைச் சுற்றிலும் கவுன்சில் உறுப்பினர்கள் அவரது திசையைப் பார்த்துக் கொண்டிருந்தனர், அவர் தனது மகிழ்ச்சியற்ற பாய்ச்சலைச் செய்த பிறகு அவர்கள் எந்த வழியில் குதிக்க வேண்டும் என்று முடிவு செய்ய முயன்றனர்.’ (கூகிள்).உண்மையில் தமிழில் வெளிவந்துள்ள பல மொழியாக்கங்களை விட இந்த கூகிளாக்கம் பல மடங்கு மேல்.

*

சல்மான் ருஷ்டியின் இந்த நூலில் உள்ள மாய யதார்த்தவாதத்தன்மைதான் இந்த நூலுக்கு எந்த வகையிலும் அசல் தன்மையை அளிக்காமல் இதை ஓர் எரிச்சல் ஊட்டும் அனுபவமாக ஆக்குகிறது. மாய யதார்த்த வாதம் என்பது ஒரு குறிப்பிட்ட அழகியல்முறை. அது லத்தீன் அமெரிக்காவுக்குச் சொந்தமானது. அதற்கு அவர்களுக்கு என சில பண்பாட்டு வேர்கள் உள்ளன.ஒன்று, அங்கே உள்ள பழங்குடிக்கதைகள், மற்றும் நம்பிக்கைகள். ஏற்கனவே ஃபாக்னர் போன்றவர்கள் அதையொட்டிய நுணுக்கமான புனைவுகளை எழுதிவிட்டனர். இப்போது வாசிக்கையில் அமெரிக்க யதார்த்தத்தை கறாரான மொழியில் எழுதிய ஜாக் லண்டனிலேயே லத்தீன் அமெரிக்க எழுத்தின் தொடக்கங்களைக் காணமுடிகிறது.

இரண்டு ஐரோப்பிய மாலுமிக்கதைகள். ஐரோப்பியக் கடலோடிகளின் நவீனத்தொன்மங்களுக்கு ஐரோப்பிய இலக்கியத்தில் ஒரு நீண்ட வரலாறு உண்டு. முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பியர்கள் உலகம் எங்கும் கடற்பயணம் செய்து வருகிறார்கள். அவர்கள் சென்ற கீழைநாடுகள் ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நிலஙகளை பற்றி அவர்களுக்கு இருந்த அறிவு மிகக் குறைவானது. அந்த நாடுகளின் அனுபவங்களை அவர்கள் தங்கள் ஐரோப்பிய உள்ளத்தைக் கொண்டு ‘புரிந்து கொள்ள’ முயன்றபோது  உருவான மாயங்கள் அவை.ஐரோப்பாவில் ஒரு காலகட்டத்தில் மாலுமிக் கதைகள் பல வகையான புனைவுகளாக பெரும் புகழ் பெற்றிருந்தன. சாகசக் கதைகள், சிறுவர் கதைகள் அவ்வரிசையில் வரும். அதன் தொடக்கங்களை கலிவரின் பயணங்களிலோ, ராபின்ஸ் குரூஸோவின் சாகசங்களிலோ ,டிரஷர் ஐலேண்ட் போன்ற சாகசங்களிலோ தேடிச் செல்லமுடியும்தான்.

மேற்குறிப்பிட்ட இரு சரடுசுளும் நவீன எழுத்தின் கூறுமுறையால் மறுஆக்கம் செய்யப்பட்டபோது உருவான ஒரு நவீன இலக்கிய வடிவம் என்று மாய யதார்த்தவாதத்தைச் சொல்லலாம். அதன் வகைமாதிரிகள் வெவ்வேறானவை. கார்லோஸ் புயன்டஸ், போர்ஹெ போன்ற சிலர் தவிர பொதுவாக பெரும்பாலான லத்தின அமெரிக்கப் படைப்பாளிகள் ஒரு பொது வாசிப்புக்குரிய படைப்பு அளவுக்கே சரளமான வாசிப்புத் தன்மை கொண்ட படைப்புகளையே எழுதி இருக்கிறார்கள். அவர்களில நோபல் பரிசு பெற்ற லோசா போன்றவர்களை எந்த வகையிலும் இலக்கியத்தரமானவர்கள் என்று என்னால்  சொல்ல முடிந்ததில்லை. யுவான் ருல்போவின் பெட்ரோ பரோமா போன்ற சில படைப்புகள் அவற்றின் கவித்துவத்தால் காலம கடந்து செவ்வியல் ஆக்கங்களாக நிலை கொள்கின்றன.

லத்தீன் அமெரிக்க யதார்த்தம் என்பது இந்த மாய யதார்த்தத்தால் மட்டுமே சொல்லத் தக்க சில அக உண்மைகள் கொண்டது. ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் ஐந்து புரட்சிகள் நடக்கும் என்றால் அதை யதார்த்தவாதத்தால் விளக்கமுடியுமா என்ன?  லத்தின அமெரிக்காவின் மாய யதார்த்த கதைகள் அனைத்துமே அங்குள்ள மெய்யான அரசியல் சூழலை, அதனுள் உறைந்திருக்கும் அபத்தத்தை நோக்கித் திறப்பவை. அவற்றின் கலையமைதி  அந்த மெய்நோக்கிய பயணத்தால்தான் உருவாகிறது. நாங்கள் நடத்திய சொல் புதிது இதழில் கப்ரியேல் கர்ஸியா மார்க்விஸின் உறைபனியின் உனது குருதியின் தாரை என்னும் கதையை செங்கதிர் (பின்னர் ராஜஸ்தான் ஐபிஎஸ் அதிகாரியானார்) மிகச்சிறப்பாக மொழியாக்கம் செய்திருந்தார். மார்க்யூஸின் மொழிவிளையாட்டையே தமிழிலும் ரசிக்கும்படிச் செய்திருந்தார்.அந்தக் கதையை ஒரு மகத்தான காதல் தோல்விக் கவிதையாக வாசிக்க முடியும். சிண்ட்ரெல்லா, ஸ்லீப்பிங் பியூட்டி, பியூட்டி ஆன்ட் பீஸ்ட் என  பல தொன்மங்கள் முயங்கிய அழகியல் கொண்டது அது.  அதை வெறும் கதைச்சூழ்ச்சி என புரிந்து கொண்ட ஒருவர் என்று சல்மான் ரஷ்யை நான் பார்க்கிறேன்.

ருஷ்தியின் முதல்நாவலில் மட்டுமே நேர்மையான இலக்கியத்திற்குரிய அகம் வெளிப்பட்டது. மற்ற எல்லா நாவல்களும் வெவ்வேறுவகையான சீண்டல்கள், மேலைநாட்டு வாசகர்களுக்கு விந்தையாகத் தென்படும் செய்திகளை சேகரித்து விளையாட்டாக அடுக்குதல்,மொழிவிளையாட்டு ஆகியவற்றுடன் சிறந்த சந்தைப்படுத்தல் வழியாக இலக்கியத்தில் ஓர் இடத்தை அடைந்துவிடலாம் என்னும் அவருடைய நம்பிக்கையின் வெற்றிச்சின்னங்கள் மட்டுமே.அவருடைய முந்தைய நாவல்களிலும் அந்த மாய யதார்த்தவாதம் வழியாக அவர் அடைய நினைப்பது என்ன என்று பார்த்தால் சலிப்பூட்டும் வெறுமையே எஞ்சியது. இந்நாவலிலும்தான்.

இதிலுள்ள இந்தியப்பின்னணி, அதனுடன் இணைந்த மாயங்கள் வழியாக ருஷ்தி வெளிப்படுத்தவோ கண்டடையவோ முற்படுவது என்ன? அக்கேள்வியுடன் இந்நாவலுக்குள் சென்றால் அவர் முன்வைப்பவை மிகமிகமிக எளிய அன்றாட அரசியல்சரிநிலைகள் மட்டுமே என்றும், அவற்றை ஒரு கலகக்காரரின் பாவனையுடன் சீண்டலாக முன்வைக்கிறார் என்றும் தெரியவருகிறது. இந்திய இலக்கியத்தில் இந்த எளிய சீண்டல்கள் எல்லாம் நிகழ்ந்து அரைநூற்றாண்டுகள் கடந்துவிட்டிருக்கிறது என அவர் இன்னமும் அறியவில்லை. இந்நாவலில் ஒரு மேலைநாட்டு வாசகருக்கு எளிய அறிதலின் வியப்பை அளிக்கும் தகவல்களைச் சொல்வதிலேயே அவருடைய கவனம் குவிகிறது. உதாரணமாக செரெல்தா லி  பாம்பாவிடம் மன்மதனின் ஐந்து அம்புகளிலுள்ள ஐந்து மலர்களின் இயல்பை விவரிக்குமிடத்தைச் சொல்லலாம். இந்திய வாசகனுக்கு அது மேலும் கவித்துவமாக மேலெழாவிட்டால் அது வெறும் செய்திதான். ஆனால் அத்தகைய எளிய செய்திகளை திரட்டிவைத்துச் செல்கிறது இந்நாவல்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 18, 2025 11:35

ஐசக் பேசில் எமரால்ட்

ஐசக் பேசில் எமரால்டின் சிறுகதைகளின் உத்தியில் Interior Monologue எனப்படும் உள் உரையாடல் தன்மை இருப்பதாக , எழுத்தாளர் தமிழவன் குறிப்பிடுகிறார். ‘அபினி’ நாவல் நவீன இருத்தலியல் எழுத்து வகைமைக்குள் வருவதாக கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் மதிப்பிடுகிறார்.

ஐசக் பேசில் எமரால்ட் ஐசக் பேசில் எமரால்ட் ஐசக் பேசில் எமரால்ட் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 18, 2025 11:33

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.