புதிய எழுத்தாளர்களுக்கு…
எனக்கு வரும் கடிதங்களில் ஒரு பகுதி தங்களுடைய கதை, கவிதைகள் ஆகியவற்றை எனக்கு அனுப்பி கருத்து கோரும் தன்மை கொண்டவை. நிறைய படைப்புகளில் ஒரு பயில்முறைத்தன்மை அதாவது தேர்ச்சியின்மை மட்டுமே இருக்கும். தொடக்க நிலையாளர்களுக்குள்ள எல்லா சிக்கல்களும் தெரியும். அச்சிக்கல்கள் பெரும்பாலும் ஒன்றே .அவற்றுக்கு உண்மையில் நான் ஒரு நிரந்தர பதில் எழுதி வைத்திருந்து அதை அனுப்பினாலே போதுமானது, ஆனால் அப்படி ஒரு பதிலை அனுப்பக்கூடாது என்று நினைக்கிறேன்.
ஏனென்றால் எழுதுபவர் தன்னை ஓர் தனித்த ஆளுமை என, தன் எழுத்துக்கென ஒரு தனித்தன்மை உண்டு என எண்ணுகிறார். தன் எழுத்தைப் பற்றிய குழப்பமான மதிப்பீடுகளுடன் அதை அனுப்புகிறார். தொடர்ந்து எழுதலாமா, தன் எழுத்தை பற்றி இன்னொருவர் என்ன நினைப்பார் என்றெல்லாம் அவர் தயங்கிக் கொண்டிருப்பது தெரியும். நானும் அத்தகைய தயக்கங்களுடன் எழுதியவன்தான். என் படைப்புகளுடன் மூத்த படைப்பாளிகளைச் சென்று பார்த்தவன். ஆகவே அந்த உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. தன்னம்பிக்கையும் தயக்கமும் ஒருங்கே கலந்த ஒரு குழப்ப மனநிலை அது. அத்துடன் இலக்கிய உலகுக்குள் வரும் ஒருவரைப் பற்றி, அவர் எந்த நிலையில் எழுதினாலும், எனக்கு மதிப்பும் பிரியமும்தான் உள்ளது .
ஆனால் இந்தக் கடிதங்களுக்கு எல்லாம் நான் பதில் அளிக்க முடியாது. ஏனெனில் அனேகமாக ஒவ்வொரு நாளும் இரண்டு கடிதங்களாவது இவ்வகையில் வருகின்றன. இவை அனைத்திற்கும் நான் பதில் அளிப்பேன் என்றால் அது மட்டுமே என்னுடைய வேலையாக இருக்கும். மட்டுமல்ல, அவற்றுக்கு எளிமையான ஒற்றை வரி பதில்களை அளிக்க முடியாது. காரணம் அந்த பதில்கள் மேலும் கேள்விகளை எழுப்பும். அந்த கேள்விகளுக்கெல்லாம் மேலும் பதில்களை சொல்ல வேண்டும். குறைந்தது ஏழு எட்டு தொடர் கடிதங்கள் வழியான ஓர் உரையாடல் மட்டுமே ஒரு தெளிவை உருவாக்க முடியும். இதனால் பெரும்பாலான தருணங்களில் நான் பதிலளிப்பதை தவிர்த்து விடுகிறேன்.
அப்படி என்றால் எழுத வரும் ஒருவர் என்னதான் செய்வது? தன் படைப்பை அவர் எப்படி மதிப்பிட்டுக் கொள்வது? தனக்கான பயிற்சிகளை எப்படி அடைவது? அதற்கான வழிமுறைகள் பல உள்ளன. அதற்காகத்தான் தொடர்ச்சியாக புதிய வாசகர் சந்திப்புகளை நான் ஏற்பாடு செய்து வருகிறேன். நாவல், சிறுகதை பட்டறைகள் நடத்துகிறேன். அப்படி பல நிகழ்வுகள் இங்கே உள்ளன. அவற்றிற்கு வருபவர்கள் எல்லாம் வாசிப்பவர்களும் எழுதுபவர்களும்தான். அந்த தொடக்க ஆக்கங்களை அங்கே வாசித்து அவற்றின் மீதான மதிப்பீடுகளை முன் வைத்திருக்கிறேன். வடிவம், மொழி, உள்ளடக்கம், எழுதும் மனநிலை பற்றி விரிவாக விளக்குகிறேன்.அவற்றுக்கு வந்த பலர் இன்று அறியப்படும் எழுத்தாளராக மாறிவிட்டிருக்கிறார்கள். பலர் சிற்றிதழ்ச் செயல்பாடு போன்ற பல தளங்களில் குறிப்பிடத்தக்க சாதனைகளையும் புரிந்து இருக்கிறார்கள்.
இந்தவகையான சந்திப்புகள் வழியாகவே மெய்யான இலக்கியப் பயிற்சி நிகழமுடியும். மூத்த படைப்பாளிகளுடனான உரையாடல் செய்திகளை மட்டும் அளிப்பது அல்ல. அவர்களின் ஆளுமை நமக்கு முன்னுதாரணமாக ஆகிறது. அவர்களிடமிருந்து நாம் அகத்தூண்டலை, செயல்மீதான நம்பிக்கையைப் பெற்றுக்கொள்கிறோம். மானசீகமாக அவர்களின் தொடர்ச்சி என நம்மை உருவகித்துக்கொள்கிறோம். கூடவே அங்கு வரும் பிற படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்களுடன் நட்பு உருவாகிறது. அது ஓர் உரையாடற்களத்தை உருவாக்கி அளிக்கிறது.
ஆனால் இன்று எழுதும் புதியவர்கள் பெரும்பாலும் அதற்கு வருவதில்லை . அதற்கு தங்களுடைய இயல்பான தயக்கம், தங்களுடைய தகுதியின்மை பொதுவெளியில் வெளிப்பட்டுவிடும் என்ற குழப்பம் என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் பொதுவாக இருப்பது சோம்பல்தான். அதைத்தான் பல்வேறுவகையில் திரித்துச் சொல்கிறார்கள். சோம்பல் கலைக்குரியது அல்ல. கலைஞர்கள் எல்லாம் தங்கள் கலையில் சோம்பல் அற்றவர்கள். அதன்பொருட்டு எதையும் செய்யத்துணிந்தவர்கள். சோம்பேறிகளுடன் எனக்குப் பேச்சில்லை.
அப்படி ஓர் இளைய படைப்பாளியிடம் நான் கேட்டேன். “நீங்கள் பயில்முறை எழுத்தாளராக இருக்கிறீர்கள. எந்த ஒரு கலைக்கும் அதற்கான அடிப்படைப் பயிற்சி தேவை. ஒரு விளையாட்டுக்கு, ஓர் இசைக்கருவியை வாசிப்பதற்கு நீண்டகால தொடர் பயிற்சி தேவை. ஏதேனும் ஒரு ஆசிரியர் அதைக் கற்பிக்க வேண்டும். இலக்கியத்திலும் தொடக்ககாலத்தில் மொழிப்பயிச்சி, வடிவப்பயிற்சி ஆகியவை தேவை. அவற்றை யாராவது சொல்லிக் கொடுக்க முடியும் என்றால் , தொடக்ககாலப் படைப்புகளை திருத்தி அமைக்க முடியும் என்றால் மிக எளிதாக முதல்நிலைச் சவால்களைத் தாண்டி உள்ளே செல்ல முடியும். அதற்காகத்தான் பல்வேறு பயிற்சி வகுப்புகள் இன்றைக்கு உருவாக்கப்படுகின்றன. நீங்கள் ஏதேனும் பயிற்சி வகுப்புகளில் நேரில் சென்று கலந்து கொண்டு இருக்கிறீர்களா ?”
அதற்கு அவர் சொன்னார் .”பயிற்சி வகுப்புகள் நீண்ட தொலைவில் நடக்கின்றன. என்னால் செல்ல முடியாது”
நான் “எவ்வளவு தொலைவில் நடக்கின்றன?” என்றேன்.
“ஓர் இரவு பயணம் செய்து நான் செல்ல வேண்டி இருக்கிறது. மூன்று நாள் விடுப்பு எனக்கு அலுவலகத்தில் கிடைக்காது. குடும்பச் சூழலில் இருந்து இரண்டு நாள் விலகி நிற்க முடியாது” என்றார்.
“ஆக, வாழ்க்கையில் நீங்கள் எதற்குமே வேலையையும் குடும்பத்தையும் ஓரிருநாட்கள் விட்டு விலகுவதே இல்லை. சரியா?”
“அப்படி இல்லை, தவிர்க்கமுடியாத கடமைகளுக்காக விடுமுறை எடுத்தாகவேண்டும். பயணம் செய்தாகவேண்டும்”
அதாவது எழுத்து அவருக்கு ‘தவிர்க்கக்கூடிய’ விஷயம். நான் கேட்டேன். “எழுத்து உங்களுடைய வாழ்நாள் தேடலா? எழுத்து உங்களுடைய தவமா? எழுத்து உங்களுடைய மிஷன் என்று சொல்லலாமா ?”
அவர் “ஆம் அப்படித்தான் அதற்காகத்தான் வாழ்கிறேன்” என்றபின் “ஆனால் என்னால் வேலையையும் குடும்பத்தையும் விட்டுப் போக முடியாது” என்றார்.
எனக்குச் சலிப்பு ஏற்பட்டுவிட்டது. “அதாவது மற்ற விஷயங்கள் எல்லாம் நிறைவேறியபின் நீங்கள் செய்யும் ஒரு செயல் எழுத்து. பொழுதுபோவதற்காக. கூடுதல் அங்கீகாரத்துக்காக. அப்படி அக்கறையில்லாமல் எழுதப்படும் ஒரு எழுத்தை வாசித்து நான் என்னதான் செய்யப் போகிறேன்? எதை அடையப் போகிறேன்? நான் அதில் ஏன் என் நேரத்தை, பணத்தை, கவனத்தை வீணடிக்கவேண்டும்? உங்களுடைய வாழ்க்கையின் முதன்மையான பணியாக நீங்கள் இலக்கியத்தைக் கருதும்போது , அதற்கு உங்களை அளித்திருக்கும்போது மட்டும்தான் அதற்குமேல் எனக்கு ஏதாவது மதிப்பு வருகிறது.” என்றேன்.
என்னுடைய எழுத்தை என்னுடைய வாசகர் தன் வாழ்க்கையின் வேறெந்த விஷயத்தையும் ஒத்திவைத்துப் படிக்கலாம் என்று நான் சொல்வேன். அதன்பொருட்டு அவர் முழுநேரத்தையும் ஒதுக்கலாம். பணத்தை செலவிடலாம். இது அவருக்கு பயனுள்ள செல்வம்தான். ஏனென்றால் இது என் தவம். இதன் பொருட்டு நான் எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராக இருக்கிறேன். எங்கு வேண்டுமானாலும் செல்லத் தயாராக இருக்கிறேன். அப்படி இல்லாத ஒருவர் எழுத வேண்டாம் என்றுதான் சொல்வேன் .
அவரிடம் சொன்னேன். “பொழுதுபோக்காக, அற்ப சந்தோஷத்திற்காக, சிறுசிறு அடையாளங்களுக்காக நீங்கள் எழுதுகிறீர்கள் என்றால் அதைச் செய்யுங்கள். அதை இலக்கியத்திற்குள் கொண்டு வந்து நிறுத்தவேண்டும் என்று எண்ணாதீர்கள். இலக்கிய அங்கீகாரம் வேண்டும் என்று கூறாதீர்கள். இலக்கியத்தின் பொருட்டு நீங்கள் கிளம்பிச் செல்ல முடியும் என்றால், இலக்கியத்தின் பொருட்டு நீங்கள் எதையேனும் இழக்க முடியும் என்றால், இலக்கியத்தின் பொருட்டு வாழ்க்கையை எடுத்து வைக்க முடியுமென்றால் மட்டும்தான் நீங்கள் எழுதுவது இலக்கியமாக இருக்க முடியும், அப்படிப்பட்டவர்கள் மட்டும் எழுதினால் போதும்”.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

