காட்டின் கனவு
நல்ல நாவல். அட்டகாசமான வாசிப்பனுபவம் நல்கியதோர் படைப்பு. ஜெயமோகனிடம் மொழி தண்ணீரைப்போல புழங்குகிறது எல்லாவற்றிலும் அவரால் அதை மொழியை நினைத்தபடி சொற்களாக்கிப் பிடித்துவைத்துவிட முடிகிறது. நதிபோல, காட்டாற்றைப்போல, மழையைப்போல அதன் வேகலாவகங்களில் வாசகனைத் திணறடிக்கச் செய்யும் அற்புதமான எழுத்தாளன். காடு நாவலின் கதை கிரிதன் எனும் இளைஞன் வேலை நிமித்தமாகத் தனது மாமாவிடம் வேலைக்குச் சேர்கிறான். அவர் மலையில் கல்வெர்ட் (தண்ணீர் கடந்து செல்லும் கால்வாய்) அமைக்கும் பணியைக் கான்ட்ராக்ட் எடுத்துச் செய்கிறார். அவரிடம் கிரி சூபர்வைசராகச் சேர்கிறான். அங்கே அந்தக் காட்டில் சில வருடங்கள் தங்கி இருக்கும்போது அவனுக்கு நேரும் அனுபவங்களே பெரும்பாலான நாவலின் பகுதிகள். அவனது இளம்பிராயத்து நினைவுகளும், வயதான பிறகான வாழ்க்கையும் ஊடாக காட்டில் வாழ்ந்த நினைவுகளுமாக கதை தாவித்தாவிச் செல்லும் நான் லீனியர் பாணி கதைகூறல் முறையில் எழுதப்பட்டிருக்கிறது.
வாசிக்கும்போது அது ஒரு பிரச்சனையாகவே இல்லை. அற்புதமான மகத்தான நெகிழ்ந்து திளைத்திருக்கும் சில தருணங்கள் இந்த நாவலில் உண்டு அதற்காகவும் இந்த நாவல் வாசிக்கும் அனுபவத்திற்காகவுமே இதை வாசிக்கலாம். கிரி நீலியைத் தேடிச்செல்லும் முதல் பயணத்தின் போது காட்டின் அதன் மரங்கள், பூக்கள், அந்தத்தனிமை ஆகியவற்றினூடாக எழுத்தின் மூலம் உச்சத்தில் கொண்டு போய் வாசகனை நிறுத்தும் அந்த இடம் அற்புதம். எனது வாழ்நாளில் மறக்கமுடியாது அதை.
காட்டில் போய்க்கொண்டு இருக்கும்போது அதன் பிரம்மாண்டத்தில் கரைந்துபோய் இந்த காடு வேறு நாம் வேறு என இல்லாது இக்காட்டோடு நாம் கலந்துபோய்விட மாட்டோமாவென கிரி கலங்கி நிற்கும் தருணத்தில் நாம் கிரியாக மாறி நிற்கிறோம். அந்த தருணத்தில் திளைக்கிறோம். அப்போது அவளைப் (நீலியை) பார்ப்பது கூட இனி தேவை இல்லை என்பது போன்ற ஒரு மனநிலைக்கு அவன் வந்துவிடுவான். எப்போதாவது மனிதன் இயற்கையோடு கொள்ளும் ஒரு அற்புத உறவுத்தருணம் அது.
இந்த நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மனதில் மிக ஆழமாகப்பதிந்து விட்டது. நாவலின் ஆரம்பத்தில் வரும் தொன்மக்கதை போன்ற ஒரு அமானுஷ்ய கதையில் வரும் யட்சி வன நீலியின் கதை அவளின் ஆகிருதி மனதில் அப்படியே தங்கிவிட்டது.பிறகு நாவலில் வரும் ஒரு காலத்துல் காட்டை ஆண்ட பழங்குடி மக்களின் எஞ்சியவர்களான மலையனின் மகளான நீலியின் உருவமும் கிரி எத்தனை வருணித்தாலும் அந்த யட்சி நீலியின் தணிந்த ரூபமாகவே மலையன் மகள் என் மனதில் தங்கிவிட்டாள்.
ஆரம்பத்தில் ஒரு பெரிய ஆளுமையாக நாவல் முழுக்கவே வரும் குட்டப்பன் (மேஸ்திரி ரெசாலத்தின் வலது கையாக இருந்து மலை வேலையில் முக்கியமான ஆளாக இருந்து அத்தனை வேலைகளையும் கவனித்து எல்லோருக்கும் வேளா வேலைக்கு உணவும் சமைத்துப் பரிமாறுபவன்) எனக்கு நீலிக்கு அடுத்தபடியாக மிகப்பிடித்த ஒரு கதாபாத்திரம். தேவாங்கு குட்டியை குட்டப்பனிடம் இருந்து வாங்கி வளர்த்து அதை சிறுத்தை தூக்கிக் கொண்டு போனபிறகு பைத்திமாகும் மேஸ்திரி ரெசாலம், எல்லோரிடமும் உடம்பைப் பகிர்ந்துகொள்ளும் அது குறித்து எந்த குற்றவுணர்வும் கொள்ளாத பேரழகி சினேகம்மை (சித்தாள்), தானுண்டு தன்னுடைய வேலையுண்டு என்று இருக்கும் ரெஜினாள் மேரி. பைபிளை எழுத்துக்கூட்டி எழுத்துக்கூட்டிப் படித்து குட்டப்பனால் அடிக்கடி கலாய்க்கப்படும் குரிசு,
கிரி அடிக்கடி சந்தித்துப் பேசும் மலை வேலைகளை கவனிக்கும் கலாரசிகனாகிய இஞ்சினியர் அய்யர் அவரது புத்தக வாசிப்பு மற்றும் இசை ஞானம்.சதாசிவம் மாமா ,மாமி,கிரியின் அம்மா, அம்பிகா அக்கா, நீலி, கீறைக்காதன் யானை, மிளா மான், தேவாங்கு, கெட்ட வார்த்தைகளைக் கொண்டு மனிதர்களை வெறும் குறிகளாகவே இனம்காணும் அனந்தலட்சுமி அம்மா, குரிசு ரெஜினாள்மேரியின் கணவன் இறந்த பிற்பாடு அவளோடு சேர்ந்துகொண்டு அடிவாரத்தில் செட்டிலாகிவிட அவர்களுக்கு பதிலாக வேலைக்கு வரும் இருவர் ஆபேல், ராபி இவர்கள் gay இருவரின் உறவும் மிகப் பூடகமாக குட்டப்பன் மூலம் நமக்கு சொல்லப்படுகிறது. கிரியின் மாமாவின் மனைவியோடு தொடர்பில் இருக்கும் கண்டன்புலையன், அவர்களுக்குப் பிறந்தவளும் கிரியின் மனைவியுமான வேணி, காட்டு வாழ்வின் சித்தரிப்பின்போது தொடர்ந்துகொண்டே வரும் அந்த பிரம்மாண்ட “அயனிமரம்“. அய்யருக்குப்பிறகு வேலைக்கு வரும் இஞ்சினியர் மேனன், அவரது குண்டு மனைவி, இப்படி இந்த நாவல் கதாபாத்திரங்களை பல காலம் மறக்க முடியாதென்றே நினைக்கிறேன்.
நமக்கு கனவென ஒரு வாழ்வின் மீது பித்து இருக்கும் அதை நோக்கி பயணிப்போம், அதை நாம் அடையலாம் அல்லது அடையாமல் போகலாம் ஆனால் அதை நோக்கின நமது பயணம் அல்லது நம்மை நாமே அதை நோக்கி தள்ளிச்செல்லும் ஒரு காரியம் நம்முடைய யதார்த்த வாழ்வை நகர்த்திச்செல்லும் ஒரு கிரியாஊக்கியாக இருக்கலாம்.
இன்னொன்று நமது வாழ்வில் நாம் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்த காலம் என ஒன்றிருக்கும் பெரும்பாலோருக்கு அது இளம்பிராயத்தில் அதன் துடிப்பான உச்சத்தில் நிகழ்ந்திருக்கும். பிறகான அவர்களின் வாழ்க்கை அந்த நினைவை திரும்பத்திரும்ப மீட்டிப்பார்ப்பதாகவே அமையும். அப்படி இல்லாமல் மொத்த வாழ்வும் அட்டகாசமாக வாய்க்கப் பெற்றவர்களும் இருக்கலாம். இந்த காடு நாவலில் கிரியின் கனவு வாழ்க்கை அந்த கானகத்தில் வாழ்ந்த சில வருடங்களே. நீலியின் நினைவும், கானகத்தின் “விசும்புதோய் பசுந்தழைகளுமே,” அவனது பிற்கால வாழ்வு நகர்தலின் காரணமாக நிற்பது. கிரி தொழிலுக்கு தோதுப்பட்டவன் அல்ல, அவனால் தொழில் செய்ய இயலாது ஏனென்றால் அவனொரு கவிஞன், படைப்பாளி அவன் அப்படித்தான் இருப்பான் என்றே தோன்றியது.
நீலியை நினைத்து ஓயாமல் பிதற்றும் கிரி அவளைத் தேடித்தேடி கானகத்தில் அலைந்து திரிகிறான். அவனது பித்து நிலை கண்டு அவனுக்கு இறங்கும் நீலி அவனோடு பழகவும் செய்கிறாள். பிறகு அப்படி ஒரு தீவிர காதலைக் கண்டு அதற்கு அடிபணிகிறாள் என்றே சொல்லவேண்டும். மலை மக்களின் கட்டுப்பாடுகளை மீறி அவனைத்தேடி அர்த்தராத்திரியில் அவனது குடிலுக்கே வருகிறாள், அவனோடு் காடு மலை என அலைந்து திரிகிறாள். அவளுக்கு கிரியிடம் வேண்டியது அந்தக் காதல் மட்டும்தானா?? கிரிக்கும் அவள் ஒரு வன நீலியின் ரூபமாகத்தான் தெரிந்தாளா…?? அவளோடு சம்போகித்துவிட்டால் அந்த உறவு அப்போதே முடிந்துபோகுமென பயந்துவிட்டானா. அதனால்தான் அதை அவன் அதை முயற்சிக்கவே இல்லையா. ஒரு சிறு தங்க மூக்குத்தியை அவள் முகத்தில் வைத்துப் பார்த்தபோதே அது அவளை சாதாரண மானிடப்பெண்ணாக மாற்றிவிட்டதைக் காணச் சகிக்க முடியாத கிரி எப்படி அவளோடு துணிந்து உறவு கொள்வான். ஆகவே அதை அந்த மூக்குத்தியைக் காட்டாற்றில் விட்டெறிகிறான். அவள் சாமான்ய நிலைக்கு வருவதை அவன் ஒருபோதும் விரும்பவில்லை என்றே படுகிறது. இவன் அவளோடு உறவு கொண்டாலும் அவள் சாமான்யமாகிவிடுவாள் என்றே அதைத் தவிர்த்தான் போலும். கடைசியில் விஷக்காய்ச்சல் வந்து அவள் இறந்துவிட்டதைக் குட்டப்பன் மூலம் கேள்விப்பட்டு மூர்ச்சையடைந்து வீழ்வது அதனால்தானா. இப்படி இந்த நாவல் முழுக்கவே பலவிதமான கேள்விகளும் மனக்கொந்தளிப்புகளும் உருவாகிக்கொண்டே இருந்தது. நீலி விஷக்காய்ச்சலில் இறந்துபோனதை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. அண்ணாந்து பார்த்து பிரமித்து அந்த உச்சியில் போய் நின்றால் எப்படி இருக்கும் என்று நம்மை பிரமித்துப் பார்க்கவைப்பது மலை. அங்கே வாழ்க்கை கனவெனத் திகழ்கிறது. குட்டப்பன் மூலமாக விவரிக்கப்படும் இந்த மலைகாடும் அதன் மழையும், இருளும் வினோதமான வசீகரிப்பை ஏற்படுத்துகிறது. மழையில் காடு வேறொரு நெருப்பில் எரிகிறது அதைக்காண குட்டப்பனின் கண்கள் நமக்கு வேண்டும்.
நாவலில் எனைத்திகைத்து நிற்க வைத்த தருணங்களில் சில…
கிரி நீலியைத்தேடிச்செல்லும் முதல் பயணம்,அப்போது அவன் அடையும் மன எழுச்சி,
கிரி காட்டில் மாமியை நினைத்துக்கொண்டு சுய இன்பம் அனுபவிப்பது,
காட்டில் வழிதவறிச்சென்று பிறகு மிளாமானின் உதவியோடு மீள்வது. அப்போது கானைத்தின் திசைகள் மனிதனின் திசைஅறவை எப்படி வீழ்த்திவிடுகிறது எனும் சித்தரிப்பில் வரும் கீழ்க்கண்ட இந்தப் பகுதி அற்புதமாக இருந்தது…
“அன்று காட்டில் ஒருகணம் நிலைபதறிச் சற்றுதூரம் ஓடியதுமே நான் மிகப் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்த திசையுணர்வு எங்கோ நழுவி விழுந்துவிட்டது. மூச்சிளைக்க நின்றதும் வழி தவறிவிட்டேன் என்று புரிந்துகொண்டேன். காடு என்பது ஒவ்வொரு கணமும் புதிதாக மாறியபடியே இருக்கக்கூடிய ஓர் இடம். அதேசமயம் ஒவ்வொரு இடமும் ஏற்கனவே பார்த்தது போலவும் இருக்கும். காடு திசைகள் இல்லாதது. ஏனெனில் மொத்தக் காடுமே வானம் என்ற ஒரே திசையை நோக்கி எழுந்து கொண்டிருப்பது. பெரும் மரங்கள் முதல் சிறு புற்கள் வரை கிடைத்த இடைவெளிகளையெல்லாம் நிரப்பியபடி வானம் நோக்கி எம்பிக் கொண்டிருக்கின்றன. அங்கே பக்கவாட்டில் திசை தேடும் மனிதன் அபத்தமான ஓர் அந்நியன்.”
அடுத்து நாவலில் மிளாமானின் ரூபத்தில் அந்த வன நீலி உலவுவதாக நாவலில் நிறைய இடங்களில் வருகிறது.கீறைக்காதன் எனும் பெரிய யானை வரும் இடங்களும் அட்டகாசமாக இருக்கும். அதற்கு மதம்பிடித்து காட்டில் உலவிக்கொண்டிருக்கும் போது கூட்டத்தை விட்டு பிரிந்துவிடுவது பிறகு காட்டாற்று வெள்ளத்தைக் கடக்க முடியாமல் அது மாட்டிக்கொண்டு திணறுவதை கிரி ஏதும் செய்ய இயலாமல் பார்க்கும் காட்சி கொடூரமானது.பிற்பாடு பல ஆண்டுகள் கழித்து கிரியை தொழிலில் ஏமாற்றின அண்ணாச்சியைக் காணப் போகும்போது அங்கே கீறைக்காதனின் தலையைப் பாடம் செய்து மாட்டியிருப்பதாக ஒரு வரியில் கடந்தது போகிறது கதை .அய்யருக்குப்பிறகு வரும் இஞ்சினியர் மேனன்தான் அதை சுட்டுக்கொல்கிறார். மகன் இறந்த துக்கத்தில் மனநிலை பிறழ்ந்து ஓயாமல்கெட்ட வார்த்தைகளைப் பொழியும் அனந்தலட்சுமி அம்மாள். குட்டப்பன் வைக்கும் நாரங்கா பாயசம், கஞ்சா புகைத்துவிட்டு ரெசாலம், குட்டப்பன், ராசப்பன் அடிக்கும் கூத்துக்கள்.
ரெசாலம் ஆசையாய் வளர்க்கும் தேவாங்கு அயனி மரத்தில் ஏறிக்கொண்டு ஆட்டம் காட்டுவது, இஞ்சினியர் அய்யருக்கும், கிரிக்குமான உரையாடல்கள் அதனூடாக நாவலில் நிறைய இடங்களில் வரும் கபிலரின் (குறுந்தொகை) பாடல்கள். உண்மையில் இந்த நாவல் எனக்கு சங்க இலக்கியங்களை வாசித்தே வேண்டும் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டது. குறைந்தபட்சம் கபிலரின் குறிஞ்சிப்பாட்டையும் குறுந்தொகைப் பாடல்களையுமாவது வாசிக்க வேண்டும்.
கிரி நீலியை முதன்முறைக் கண்டவுடன் அவன் கொள்ளும் மன எழுச்சி, பிறகு அவளது குடில்முன்பு அவளுக்காக காத்திருப்பது,
மேஸ்திரி ரெசாலம், குட்டப்பன், சினேகம்மை, குரிசு, ரெஜினாள்மேரி, கானகத்தில் கல்வெர்ட் வேலை நிமித்தமாக ஒன்று சேரும் இவர்களுக்கிடையில் நிகழும் உரையாடல்கள், வேலைகள், உறவுகள், என்பதே இந்த நாவலின் பெரும்பகுதி இதற்குள் சம்பந்தமில்லாமல் வந்து மாட்டிக்கொண்டு நீலியைக்கண்டடைந்து பித்து கொண்டு மலையையும், காட்டையும், அந்த வாழ்க்கையையும் பார்த்து பிரமித்து அந்த பிரமிப்பும், ஆச்சர்யமும் தீர்வதற்குள்ளேயே அதிலிருந்து வெளியேறுபவன் கிரி.
வேணியோடு முதலிரவு முடிந்த பிறகு கிரி சுருட்டுப் புகைக்க ஆரம்பிப்பது. பிறகு வாழ்க்கை இறுதி வரை வேணியும், மகனும் வெறுத்தும் கண்டித்தும் கூட அதை விடாதிருப்பது. நாவலில் வரும் இந்த அற்புதமான வரிகள் எப்போதுமே மறக்க முடியாதவை “இந்த சுருட்டுப் புகை எனக்குள் நிரப்பும் வெற்றிடங்களை முழுக்க நான் வேறு எதை வைத்து நிரப்பிக்கொள்ள முடியும்.”
கிறிஸ்தவ மதம் அப்பொது எப்படி நகரங்களில் மெல்ல செல்வாக்கைப் பெற்றது எனும் குறிப்புகள் நாவலில் கதையோட்டத்தோடு சொல்லப்படுகிறது. ஒரு பக்கம் ஆங்கில மருத்துவம் நோயிகளில் இருந்து காப்பாற்றுகிறது. மறுபுறம் சாதிப்பிரச்சனையில் ஒதுக்கப்பட்ட மக்களை ஏற்றுக்கொள்ளும் கிறிஸ்தவம் அவர்களின் வாழ்வை பொருளாதார ரீதியில் மேம்படுத்துகிறது. குரிசு அப்படித்தான் பிற்காலத்தில் மதச்சொற்பொழிவாளராகவும், ஒரு கடைக்கு ஓனராகவும் மாறிப்போய விடுகிறார்.
குட்டப்பன் ஒரு முறை கிரியிடம் யானையின் மதம்பற்றி குறிப்பிட்டு பூவின் தேனும் மணமும் ஒவ்வொரு காட்டு தெய்வமெனச் சொல்லி விளக்கும் இடம் அற்புதம். ஒரு முறை கடும் மன உளைச்சலில் கிரி பச்சை அருகே நண்பனின் வன பங்களாவில் தங்கியிருக்கும்போது ஜன்னல் வழியே பெய்யும் மழையை குறுந்தொகைப்பாடல் ஒன்றின் நினைவோடு பார்த்துக்கிடப்பது. வெறுமனே தான். அனைத்திற்கும் சாட்சியாக இருப்பதாக உணர்வுது.
அற்புதமாக வாழ்த்த கனத்தை வெறுமையின் தீவிரத்தில் உழலும்போது எண்ணிப்பார்ப்பது கொடுமையானது. அப்படி நீலியோடான ஒரு இனிமையான கனத்தை நினைத்துப்பார்த்து எத்தனை வேகமாக அவை கடந்துபோய்விட்டது என்று கிரி அடையும் மனத்தவிப்பு. அப்போது வரும் கவித்துவமான இவ்வரிகள் “இளமையே, காதலே, மனித வாழ்வின் மகத்துவங்களே, ஒளியே வானகமே, தெய்வங்களே! எத்தனை மூர்க்கமான தீர்மானத்துடன் மனிதனைக் கைவிடுகிறீர்கள் நீங்கள்” அற்புதம். நாவல் முழுக்க இப்படியான கவித்துவ வரிகள் ஏராளமாக உண்டு். ஜெயமோகன் கவிதை ஏதும் எழுதியிருக்கிறாரா என்ன?
குறிஞ்சிப்பூவைப் பார்க்க கிரியும் நீலியும் மேற்கொள்ளும் ஒரு மலைப்பயணம்.
ரெசாலத்தின் தேவாங்கை சிறுத்தை கொண்டு போன பிறகு அவர் பைத்தியமாவது, அவரை வீட்டுக்குக் கொண்டுபோய் கிரி சேர்க்கும்போது அங்கே அவன் பார்க்கும் குறைபிரசவத்தில் பிறந்த ஒரு பெண். ரெசாலத்தின் வீட்டில் இருக்கும் அவனது மாமா. சத்தமில்லாமல் கிரி அங்கிருந்து திரும்பிவிடுவது. இந்த இடம் நாவலில் கொஞ்சம் குழப்பமாகத்தான் இருந்தது. ரெசாலத்தின் மனைவிக்கும் கிரியின் மாமாவிற்கும் உள்ள உறவில் பிறந்த பெண்தான் அவளோ என்று தோன்றுகிறது. இதனால்தான் ரெசாலம் கடைசியில் மாமாவைக் கத்தியால் குத்திக்கொல்கிறானோ என்னவோ தெரியவில்லை.
மலையில் கானகத்தில் மேட்டர்செய்வது எல்லாம் ஒரு மேட்டரே இல்லை என்பது போல ரொம்பவும் சர்வசாதாரணமாக நிகழ கீழே நகரத்தில் அந்த ஒரே விஷயத்திற்காக அவனவன் படாதபாடு பட்டு சாகிறார்கள். அங்கே வாழ்க்கை கனவெனத் திகழ்ந்தால் கீழே யதார்த்தம் கொடூரமாக இருக்கிறது. திடீரென பரவும் விஷக்காய்ச்சலால் பாதிகப்படும் gay ஜோடிகளில் ஒருவனான ராபிக்கு விஷக்காய்ச்சல் வர அவனை மற்றவர் நெறுங்க விடாமல் தடுக்கும் ஆபேல் மலையடிவாரம் வரைத் தூக்கிக்கொண்டு நடந்தே கொண்டு வந்து சேர்ப்பது. அற்புதமான காதல் ஜோடி அவர்கள். அத்தோடு காட்டு வாழ்க்கை திசைமாறிப்போவது. குட்டப்பனும் ஆஸ்பத்திரியில் இங்கிலீஷ் டாக்டருக்கு உதவியாளாக இருந்து விடுவது.நிலியும் இறந்துவிட. அய்யர் வேலையில்இருந்து விலகப்பட்டு மோசமான பேராசைக்கார மேனன் இஞ்சினியராக வந்துவிட. கடைசியில் நீலியின் ஆவி அரற்றிக்கொண்டு பங்களாவை சுற்றி வர. மேனனின் மனைவி கிலியை மேட்டர் செய்வது. கொடுமைடா சாமி.
குட்டப்பன் அய்யர் இல்லாமல் கதையை மேற்கொண்டு படிக்க எனக்கு சுவாரஸ்யமே எழவில்லை. ஆனாலும் கதை போகிறது. மாமா இறந்துபோய் என்னென்னமோ ஆகி மனைவியால் சதா ஏசப்பட்டு மகன் கொடுத்த தைரியத்தில் வாழும் கிரி ஒரு நாள் பெட்டிக்கடை வைத்து பிழைப்பை நடத்தும் நிலைக்கு வந்து சேர்கிறான். அப்போது தற்செயலாக நண்பருன் வாழைக்குலை லோடு வாங்கும் விஷயமாகத் திரும்ப அதே மலைக்குப்போகிறான். அங்கே பல தங்கியிருக்கும்போது கானகத்தில் அவன் வேலை செய்யும்போது பல நாள் பார்த்துப்பழகின மழை பொழிகிறது.அந்த மழையினூடாக நீலியின் நினைவுகள் கிளரந்தெழுகிறது.அய்யர் அங்கே பட்டர்சாமி எனும் பேரில் ஒதுங்கி வாழ்வதை அறிந்து அவரைப்போய் பார்க்கிறான்.அவனது பல நாள் சந்தேகத்தை அவரிடம் கேட்பது.அவர் அதற்கு அளிக்கும் அற்புதமான பதில்.
நாடார், நாயர், அய்யர், மேனன் போன்ற சாதியப் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களின் குணாதிசியங்கள் இதுதான் எனச்சொல்வதை எப்படி எந்த பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வதெனத் தெரியவில்லை. நாவலின் கடைசியில் வரும் தேவசகாயம் நாடார் கம்பராமாயணத்தில் மூழ்கி வாழ்வைக் கடந்து போகிறவர். அற்புதமான ஆத்மா. ஆனால் சதா அவரது மனைவி அவரைத்திட்டிக் கொண்டே இருக்கிறாள். கடவுளர்கள் கூட பொண்டாட்டி வசவிற்கு தப்பினவர்களில்லையே.
என்னென்னமோ யோசனைகள் மனதில் தறிக்கெட்டுப் பாய்கின்றன. இப்போது தெரிகிறது இந்த நாவல் பற்றி எழுதுவது எனக்கு குருவிதலைபனங்காய் போலவென்று. எதுவுமே முழுதாய்ச் சொல்ல முடியவில்லை இந்த நாவல் பற்றி என்கிற அங்கலாய்ப்போடு இப்போதைக்கு இதை நிறைவு செய்கிறேன். நாவல் கதையாக பல தளங்களில் தாவித்தாவிச் சென்று நிறைவடைந்தாலும் எங்குமே உறுத்தவில்லை.
நான் எழுதியிருப்பது நிச்சயம் படுசுமாராகத்தான் இருக்கும். கச்சாமுச்சா பாணியில் மன ஆவேசங்களுக்கேற்ப இந்த நாவல் பற்றி ஜெயமோகன் அவர்கள் முன்னுரையில் “காடு நாவல் நான் சென்று மீண்ட கனவு” என்கிறார். இந்த காடு வார்த்தையை எப்போது கேட்க வாசிக்க (குடுப்பினை இருந்தால்) பார்க்க நேர்ந்தாலும் இந்த நாவல் சரேலென எழுந்து நிற்கும். இதைப்பற்றி எழுத நினைத்த போது திரும்ப அந்தந்த இடங்களுக்கு நாவல. வாசிக்கும்போது நேர்ந்ததைப் போலவே திரும்பவும் கிரியோடு அலைந்து திரிந்தேன். அல்லது நானே கிரியாக மாறினேன் என்றும் சொல்லவேண்டும். மறக்க முடியத வாசிப்பனுபவம் நல்கிய நாவல்…
மகத்தான நாவலிற்கு எனது மொக்கையான எழுத்தை மன்னியுங்கள்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

