Jeyamohan's Blog, page 13
November 12, 2025
விஷ்ணுபுரம் நன்கொடை கோரி!
விஷ்ணுபுரம் விருது விழா வரும் டிசம்பர் 20 மற்றும் 21 தேதிகளில் நிகழ்கிறது. விஷ்ணுபுரம் அறக்கட்டளையை மறு அமைப்பு செய்தோம். கல்வி, சேவை சார்ந்து சில புதிய அறக்கட்டளைகள் உருவாக்கப்பட்டு அவற்றுக்கு சில நண்பர்கள் சென்றமையால் இந்த மாற்றம். ஆனால் எங்கள் தாமதத்தால் அறக்கட்டளையை பதிவுசெய்து அதற்கு நிரந்தர வருமானவரி அட்டை பெற்று வங்கிக்கணக்கு தொடங்க தாமதமாகியது. ஆகவே தாமதமாக இந்த அறிவிப்பு.
விஷ்ணுபுரம் நிகழ்ச்சிகளுக்காக நாங்கள் ஒரே ஒருமுறைதான் நிதி பெறுகிறோம். ஆண்டில் மூன்று இலக்கியவிழாக்கள் நடைபெறுகின்றன. விஷ்ணுபுரம் விழா (கோவை), தமிழ்விக்கி தூரன் விருதுவிழா (ஈரோடு) மற்றும் குமரகுருபரன் கவிதை விருதுவிழா (சென்னை). இந்த விழாக்களுக்கான செலவுகள் ஒவ்வொரு ஆண்டும் பெருகுகின்றன. கூட்டமும் பெருகி வருகிறது. ஆகவே ஆண்டுதோறும் கூடுதல் நிதி தேவையாகிறது.
ஆகவே இந்த ஆண்டும் நண்பர்கள் நிதியளிக்கவேண்டும் என கோருகிறோம்.
புதிய வங்கிக்கணக்கு விவரம்
Account Name – Vishnupuram Literary Trust
Bank – HDFC
Branch – Edayarpalayam Branch
AC No – 50200115952780
IFSC – HDFC0006806
பணம் அனுப்பியவர்கள் தகவல்தெரிவிக்க : meetings.vishnupuram@gmail.com
ஜெயமோகன்
குடும்ப உறவுகளிலுள்ள சுயநலமும் பொறுமையும்
அன்பின் ஜெ,
எனது வாழ்க்கையில் நான் கவனித்து வரும் மூன்று நபர்களின் நடத்தைகளையும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக இந்திய கலாச்சாரத்தின் பின்னணியில் காட்டும் அசாதாரண பொறுமையையும் புரிந்துகொள்ள உங்கள் ஆலோசனையை நாடுகிறேன். மேலும், இந்த நபர்களுடன் பேசும்போது, அவர்கள் தங்களை மிகவும் புத்திசாலிகளாகவும், எல்லாம் தெரிந்தவர்களாகவும் கருதுவதை கவனித்துள்ளேன்.
நபர் 1: எனது உறவினர்களில் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்யாமல், தனது மனைவியின் வருமானத்தில் முழுமையாகச் சார்ந்து வாழ்கிறார். அவரது மனைவி குடும்பத்தில் பல சவால்களை எதிர்கொள்கிறார், மேலும் இவர் மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கியுள்ளதால் அவரது பிரச்சனைகள் மேலும் அதிகரித்துள்ளன. ஆனால், இவருடன் பேசும்போது, இவர் தன்னை மிகவும் புத்திசாலியாகவும், எல்லாம் அறிந்தவராகவும் கருதுகிறார்.
நபர் 2: எனது நண்பர் ஒருவர், 40 வயதாகியும் திருமணம் செய்யாமல், வேலை ஏதும் செய்யாமல், ஒரு சிறிய ஊரில் தனது தாயின் ஓய்வூதியத்தில் வாழ்கிறார். நான் அவரது வீட்டிற்கு செல்லும்போது, அவரது தாய் அடிக்கடி கவலையுடன் இருப்பதை காண்கிறேன். இவரும் தன்னை மிகவும் அறிவாளியாகவும், எல்லாம் தெரிந்தவராகவும் நினைத்துக்கொள்கிறார்.
நபர் 3: மற்றொரு உறவினர், 40 வயதை எட்டியும் உயர்கல்வி பெறவில்லை, நிலையான வேலை இல்லை, மேலும் திருமணமும் செய்யவில்லை. இவர் தனது சகோதரியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று, அங்கு மூன்று வேளையும் உணவு உண்கிறார். இவரது வருகை அந்த வீட்டில் பல முரண்பாடுகளையும் பதற்றங்களையும் ஏற்படுத்துகிறது. ஆயினும், இவரும் தன்னை மிகவும் புத்திசாலியாகவும், அனைத்தையும் அறிந்தவராகவும் எண்ணுகிறார்.
இந்த மூன்று நபர்களின் மனைவி, தாய், மற்றும் சகோதரி ஆகியோரின் பொறுமை என்னை ஆச்சரியப்படுத்துகிறது. இந்த ஆண்களின் குறைபாடுகளையும், அவர்கள் ஏற்படுத்தும் சிரமங்களையும் பொருட்படுத்தாமல், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து ஆதரவளித்து, பராமரித்து வருகின்றனர். இத்தகைய ஏற்பு இந்திய கலாச்சாரத்தில் மட்டுமே காணப்படுகிறதா என்று எண்ணத் தோன்றுகிறது, அங்கு குடும்ப பந்தங்கள் மற்றும் கடமைகள் தனிப்பட்ட சிரமங்களை மீறி நிற்கின்றன.
இவர்களின் பொறுமைக்கு பின்னால் உள்ள காரணங்களைப் புரிந்துகொள்ள எனக்கு உதவ முடியுமா? இந்த பெண்கள், இந்த சிரமங்கள் இருந்தபோதிலும் ஏன் இவர்களை ஆதரிக்கின்றனர்? இந்த ஏற்பு கலாச்சார மதிப்புகளில் வேரூன்றியதா? மேலும், தங்களை மிகவும் புத்திசாலிகளாகக் கருதும் இந்த நபர்களை எவ்வாறு கையாள்வது மற்றும் அவர்களைப் புரிந்துகொள்வது?
அன்புடன்
ராஜேஷ்
பெங்களூர்
அன்புள்ள ராஜேஷ்,
இது சாமானியமாகத் தோன்றினாலும் நம் குடும்பம் என்னும் அமைப்பை, அதன் தொடக்கம் முதல் இன்றைய நிலைவரையிலான பரிணாமத்தைக் கருத்தில்கொண்டு யோசிக்கவேண்டிய விஷயம்.
குடும்பம் என்னும் அமைப்பு எங்கல்ஸ் எண்ணியதுபோல (குடும்பம் தனிச்சொத்து சமூகம்) செயற்கையான ஒன்று அல்ல. முதிராச் சிந்தனையுடன் பின்நவீனத்துவர் சிலர் சொன்னதுபோல அது இல்லாமலாகப் போவதுமில்லை. அது ஏராளமான உயிர்களில் ஏதேனும் வகையில் நீடிக்கும் ஓர் அமைப்புதான். குடும்பம் என நாம் எண்ணுவது மனிதக்குடும்பம்.ஆனால் குடும்பம் என்னும் அமைப்பு குரங்குகளில் உள்ளது. எறும்புகள் வரை வெவ்வேறு உயிர்களில் வெவ்வேறுவகையான குடும்பங்கள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட குடும்ப மாதிரிகளை இன்றைய உயிரியலாளர் அடையாளப்படுத்தியுள்ளனர்.
குடும்பம் என்னும் அமைப்பு உயிரியல் பரிணாமத்தின் ஒரு பகுதியாக உருவாகி வந்தது. எந்த உயிரினமும் தனித்து வாழமுடிவதில்லை. சேர்ந்து வாழவேண்டும் என்றால் ஒரு திரள் அமைப்பு தேவை. தனியாக இருக்கையில் ஓர் உயிர் கொள்ளும் குறைபாடுகளை நிரப்பும் பிறர்தான் குடும்பம். மனிதக்குழந்தைக்கு அறிவும் உடற்திறனும் உருவாக நீண்ட ஆண்டுகள் ஆகின்றன. ஆகவே நிலையாந குடும்ப அமைப்பு தேவையாகிறது. உயிரியல்தேவை அமைப்பை உருவாக்கியது. அமைப்பு தன்னை பலபடியாக வளர்த்துக்கொண்டு நெறிகளை, நம்பிக்கைகளை , உணர்வுகளை உருவாக்கிக்கொண்டது.
ஓர் அமைப்பு, அது எதுவானாலும் அதில் அதிகப் பங்களிப்பாற்றுபவர், குறைவாகப் பங்களிப்பாற்றுபவர் என்னும் வேறுபாடு இருக்கும். கொடுப்பவர் -பெறுபவர் என்னும் இடங்கள் இருக்கும். ஆதிக்கம் செலுத்துபவர், வழிநடத்துபவர் என்னும் ஆளுமைகள் இருக்கும். அடங்குபவர்,தொடர்பவர் என்னும் ஆளுமைகளும் இருக்கும். நீங்கள் உங்கள் அலுவலகத்தையே உதாரணமாக எடுக்கலாம். அலுவலகம் என்பது அண்மைக்கால உருவாக்கம். அது இயற்கையானது அல்ல. அதில் ‘செண்டிமெண்ட்ஸ்’ இல்லை. ஆனாலும் இந்த வேறுபாடுகள் உள்ளன.
அப்படி வேறுபாடுகள் ஏதுமற்ற ‘சமத்துவ’ அமைப்புதான் தேவை என கற்பனை செய்யலாம். ஆனால் உயிரியல் ரீதியாக அது சாத்தியமல்ல. எறும்புகளிலும் சிம்பன்ஸிக்களிலும் இல்லாத ஒன்று மனிதனில் மட்டும் திகழமுடியாது. வேண்டுமென்றால் அந்த வேறுபாட்டை குறைக்கலாம். அந்த வேறுபாடு வன்முறையற்றதாக ஆகும்படி முயலலாம். ஆனால் அந்த வேறுபாடு இருக்கவே செய்யும்.
நம் குடும்பங்கள் அனைத்திலுமே அளிப்போர், பெறுவோர் என்னும் இரு நிலைகள் எப்போதும் இருக்கின்றன. நாம் வளர்ந்து நம் வருமானத்தில் நிற்பது வரை நாம் பெறுவோர் மட்டுமே. நம் பெற்றோர் அளிப்போராக திகழ்கிறார்கள். பல நடுத்தரக் குடும்பங்களில் தந்தை மட்டுமே பணமீட்டுபவர், பிற அனைவருமே அதைப் பெற்று வாழ்பவர்கள்தான்.
பழைய கூட்டுக்குடும்பங்களில் திறனற்றவர்களை அக்குடும்பங்களே பேணும் தன்மை இருந்தது. சிலரால் வேலை செய்ய முடியாது. சிலருக்கு போதிய அறிவுத்திறனோ உடல்வளர்ச்சியோ இருக்காது. அவர்கள் சுமை என கருதப்பட்டதில்லை. குடும்பத்தின் பொறுப்பு அவர்களையும் பேணுவதுதான் என்றே கொள்ளப்பட்டது.
குடும்பம் என்னும் நிறுவனத்தின் விரிவான அமைப்பே குலம். குலம் விரிந்து ஊர். ஊர் விரிந்து நாடு அல்லது சமூகம். சென்றகாலங்களில் தானாக வாழும் தகுதியற்ற ஒருவனை அக்குலம் பேணியதுண்டு. அந்த ஊர் பேணியதுண்டு. நான் சிறுவனாக இருந்தபோது என் ஊரில் பத்துக்கும் மேற்பட்ட மனவளர்ச்சி இல்லாதவர்கள், உடல்வளர்ச்சி இல்லாதவர்கள் இருந்தனர். முதுமையால் உடல்நலிந்தவர்கள் ஐம்பதுபேராவது இருந்தனர். அவர்களை ஊர்தான் பேணியது. என் அப்பா அவருடைய வருமானத்தில் கால்வாசிப்பங்கை வெவ்வேறு நபர்களுக்கு அளித்தார்.
இன்று சமூகம், நாடு அத்தகையோரைப் பேணுகிறது. அப்படிப் பேணுவதுதான் நல்ல சமூகம். நவீன மேலைச்சமூகங்களில் உழைப்பவர் அளிக்கும் வரிப்பணத்தில் கால்பங்கு உழைக்கமுடியாதவர்களுக்கு நலனுதவிகளாக வழங்கப்படுகிறது. அவர்களில் முதியோர், உடற்குறை உள்ளவர்கள் உண்டு. வேலை இழந்து வேலைதேடும் நிலையிலுள்ளவர்களும் உண்டு. வேலைசெய்யமுடியாது என அறிவித்து, தெருவில் வாழும் ஹிப்பிகள், சமூக எதிர்ப்பாளர்கள் மற்றும் போதையடிமைகளுக்கும் குறைந்தபட்சம் சாப்பாடாவது கிடைக்கும்படி அந்த அரசுகள் ஏற்பாடு செய்கின்றன. சாகவிடுவதில்லை.
பெறுபவர்கள் எல்லாமே இழிந்தோர், அவர்களுக்கு கொடுப்பது வீண் என்னும் மனநிலை சமூகத்தை அழிக்கும். ஒவ்வொருவரும் உழைக்கவேண்டும் , உழைக்காதவர் அழியவேண்டும் என்பது ஓர் உயர்ந்த மனநிலை என்றும்; அது ‘உழைப்பைப் போற்றும் மனநிலை’ என்றும் சிலரால் சொல்லப்படுகிறது. ஆனால் அது ஒரு குறுகிய, சுயநல மனநிலை. நீங்கள் எவரென்றாலும் உங்களால் ஈட்டப்படும் செல்வத்தில் சிறு பங்கையே நீங்கள் செலவழிக்கிறீர்கள். எஞ்சியதை முழுக்க குடும்பத்திற்காகச் செலவழிக்கிறீர்கள், சேர்த்து வைக்கிறீர்கள். அதில் ஒரு பங்கை இயலாதோருக்கு அளிப்பதில் என்ன பிழை?
ஒரு குடும்பத்தில் எவர் இயலாதோர்? குழந்தைகள், மாணவர்கள் எப்படியும் பிறரை நம்பி இருக்கவேண்டியவர்கள். முதியோரும் அவ்வாறே. இதைத்தவிர பலவகையான உடல், உளக் குறைபாடுள்ளவர்களும் பேணப்படவேண்டும். குடும்பம் அவர்களை பேணுவதே முறை. அல்லது ஊர் அல்லது சமூகம் பேணவேண்டும். ஏனென்றால் இங்கே இன்னும் முழுக்க அனைவர்நலனையும் நாடும் அரசு உருவாகவில்லை.
நம் சமூகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக துறவிகள், நாடோடிகள் பேணப்பட்டார்கள். ஒவ்வொரு நாளும் சாவடிக்குச் சென்று “இரவுணவு உண்ணாத எவரேனும் உண்டா?” என்று கேட்டு, இருந்தால் அவர்களுக்கு உணவிட்டுவிட்டே ஊர்த்தலைவர் உண்ணவேண்டும் என்னும் மரபு அண்மைக்காலம் வரை இருந்தது. என் அப்பா அவருடைய இறுதிவரை அதைச்செய்துவந்தார். அவ்வாறு சாப்பிடுபவர் உழைக்கமுடியாதவரா, உழைக்க மனமில்லாதவரா என்று பார்க்கக்கூடாது. அது அறமின்மை. ஏனென்றால் நாம் எப்படி அதை அறியமுடியும்?
“போய் உழைக்கவேண்டியதுதானே?” என்று பிச்சைக்காரர்களிடம் கேட்பவர்கள் உண்டு. (கேட்பவர் என்ன உழைக்கிறார் என்று பார்த்தால் பத்துரூபாய்க்கு பொருள் வாங்கி இருபது ரூபாய்க்கு விற்பவராக இருப்பார். உண்மையில் சமூகத்தைச் சுரண்டும் கிருமி அவர். அல்லது அதேபோல ஏதாவது வெட்டிவேலை செய்வார். எதையாவது உற்பத்திசெய்பவர் இங்கே எத்தனைபேர்?) அந்தப் பிச்சைக்காரர்களில் ஒருவராக நித்யசைதன்ய யதி இருந்திருக்கிறார். நடராஜகுருவும் நாராயணகுருவும் விவேகானந்தரும் இருந்திருக்கிறார்கள். அவர்களை அழியவிடவேண்டும் என்றும், இந்த சம்பாதிக்கும் கூட்டம் மட்டும் சோறுதின்று கொழுக்கவேண்டும் என்றும் நான் சொல்ல மாட்டேன்.
மிக அரிதாக நீங்கள் சொல்வது போல உழைக்க மனம் ஒவ்வாதவர்கள், இயல்பிலேயே உழைக்கும் உளமில்லாதவர்கள் குடும்பத்தில் இருப்பார்கள். அதுவும் மனித இயல்பே. மானுடத்தின் வண்ணமே. அவர்களுக்கான காரணங்கள் அவர்களுக்கு இருக்கலாம். அவர்கள் வேண்டுவது வெறுமே சோறு, உறைவிடம், துணி மட்டுமே என்றால் அதை அளிப்பது அவசியம் என்பதே என் எண்ணம். அது கொடுப்பவர்களுக்கு பெரிய சுமை அல்ல என்றால் கொடுப்பதன் வழியாக அவர்கள் உறவை நிலைநாட்டுகிறார்கள் என்றும், குடும்பம் என்னும் அமைப்பின் இயல்பான அறத்தை நிலைநாட்டுகிறார்கள் என்றும்தான் பொருள்.
அவ்வாறு சார்ந்திருப்பவர்கள் உழைப்பவர்களின் பணத்தை வாங்கி வீணடித்தார்கள் என்றால் அதை அனுமதிக்கக்கூடாது. போதைக்கோ சூதுக்கோ பணம் அளிக்கலாகாது. ஆனால் அவர்கள் உழைக்காவிட்டால் சாகவேண்டும் என்று சொல்வது குடும்பம் என்னும் அமைப்புக்கே எதிரானது. என் அப்பா வாழ்ந்த நாளெல்லாம் கடைப்பிடித்த அறம் இது. அவர் மறைந்தபோது கிட்டத்தட்ட இருபதுபேர் அவரைச் சார்ந்திருந்தனர் என அறிந்தேன். அவர்களில் பலர் வெறுமே சாப்பிட்டுவிட்டுச் சும்மா இருந்தவர்கள்தான்.
ஏனென்றால் குடும்பம் என்னும் அமைப்பே ஒருவரின் பலவீனத்தை, குறைபாட்டை இன்னொருவர் ஈடுகட்டுவதில்தான் உள்ளது. உழைக்கமுடியாதவர் உழைப்பவரைச் சார்ந்திருக்கிறார். அவர் உழைப்பவரைச் சுரண்டுகிறார் என்று எண்ணுவது குடும்பம் என்னும் மனநிலையை அழிப்பது. இன்றைக்கு உழைப்பவர் சட்டென்று நோயாளியாகி பிறரைச் சார்ந்திருக்கவும்கூடும். எந்நிலையிலும் ஒரு தனிநபரை குடும்பம் கைவிடக்கூடாது. அதுவே குடும்பம் என்னும் அமைப்பின் அடிப்படை அறம். அந்த நம்பிக்கையில்தான் நீங்களும் நானும் உயிர்வாழ்கிறோம். அந்த நம்பிக்கை இல்லாமலானால் நாமனைவருமே அனாதைகள், அல்லது அனாதைகளாக ஆகும் வாய்ப்புள்ளவர்கள்.
பிச்சை எடுக்க வருபவர்கள் ‘தர்மம் செய்யுங்க’ என்றுதான் சொல்கிறார்கள். ஈதல் அறம் என்றே நம் மரபு சொல்கிறது. ஒருவருக்கான அடிப்படை உணவு என்பது ஒருபோதும் வெட்டிச்செலவு அல்ல. அவர் என்னவாக இருக்கிறார் என நாம் அறியமுடியாது. ஒருவேளை அவர் சிந்தனையாளரோ, கலைஞரோ ஆக இருக்கலாம். அல்லது அப்படி எதிர்காலத்தில் மாறலாம். அல்லது வெட்டியாகவே இருந்தால்கூட அவரைப்போன்ற ‘வெட்டிக்கூட்டத்தில்’ ஒருவராக ஒருவேளை கலைஞனும் சிந்தனையாளனும் இருக்க வாய்ப்புண்டு. வெட்டிக்கூட்டத்தை ஒட்டுமொத்தமாகக் கைவிட்டோம் என்றால் கலைஞர்களையும் சிந்தனைகயாளர்களையும் அழித்துவிடுவோம். அதை உழைப்பை சிரமேற்கொண்டு போற்றும் மேற்குநாடுகளே கூட செய்வதில்லை.
நடராஜகுருவும் நித்யாவும் ரயிலில் செல்கிறார்கள். ஒரு குழந்தை வந்து பிச்சை கேட்கிறது. உடனிருக்கும் மார்க்ஸியர் ஒருவர் அருவருப்புடன் பிச்சை எடுப்பதை இழித்துப்பேசுகிறார். அது சோம்பலை வளர்க்கும் என்கிறார். நடராஜகுரு சொல்கிறார். ‘ஒரு குழந்தை எனக்குப் பசிக்கிறது என்று உலகத்திடம் கேட்பதில் மகத்தானதாக ஒன்று உள்ளது. இந்த உலகம் மீது அக்குழந்தை வைத்திருக்கும் நம்பிக்கை அது. அதை எப்போது பார்த்தாலும் எனக்குக் கண்ணீர் வருகிறது. அந்த நம்பிக்கையை ஒருபோதும் உலகம் இழந்துவிடலாகாது’
‘எனக்கு சோறு மட்டும் போதும்’ என சொல்லும் ஒருவரிடம் ‘சோறுதானே, சாப்பிடு’ என்று சொல்லும் நிலையில் உள்ள குடும்பமே அறம் சார்ந்தது, அப்படிச் சொல்லும் சமூகமும் நாடுமே வாழும் அறம் கொண்டவை. சோற்றில் கணக்குபார்ப்பவர்கள் ஒன்றை யோசிக்கலாம், அவர்கள் உண்ணும் சோறுக்கு எங்கோ கணக்குகள் பார்க்கப்படும்.
ஜெ
ஆ. மணிவண்ணன்
கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், பேச்சாளர், வழக்குரைஞர். தமிழக அரசின் காவல்துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றினார். திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய ’சித்தாந்த இரத்தினம்’ பட்டம் பெற்றார்.
ஆ. மணிவண்ணன் – தமிழ் விக்கி
பூன் தத்துவ முகாம், இந்துமதி
அன்புள்ள ஜெ,
இலையுதிர் காலத்தின் இதத்தை அனுபவிக்கும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் மனதிற்கு இன்னும் அணுக்கமாக உணரும் விஷயம் அமெரிக்காவில் உங்களை சந்திக்கப் போகிறோம் என்பதும் உங்கள் வகுப்பில் கலந்து கொள்ள போகிறோம் என்பதும். நவம்பர் 2 ,3 ஆம் தேதிகளில் தத்துவ வகுப்பின் இரண்டாம் நிலை முடிவுசெய்யப்பட்டிருந்தது. முகாமிற்கு பதிவு செய்த போதே நண்பர்களுடன் சேர்ந்து செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தோம்.அமெரிக்காவின் சார்லட் பூன் முகாமிற்கான எனது பயணம் கனடாவிலிருந்து அக்டோபர் 31 ஆம் தேதியே ஆரம்பமானது. டொரொன்டோவிலிருந்து அக்டோபர் 31 ஆம் தேதி ரயிலில் கனடாவின் வின்சரிலிருக்கும் நண்பர் வெங்கட் வீட்டிற்கு சென்றேன் . அடுத்த நாள் காலை நான், வெங்கட், டெட்ராய்ட்டிலிருந்து மது மூவரும் சேர்ந்து பயணிப்பதாக திட்டம். காலை 10:30 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் தாமதமாக 12:30 மணிக்கு கிளம்பும் என்ற முதல் அறிவிப்பு வந்தது. பின்னர் விமான நிலையத்திற்கு கிளம்பும் போது 2:00 மணிக்கு கிளம்பும் என்று இரண்டாவது முறை தாமதமானது. விமான நிலையத்திற்கு சென்ற பிறகு இரண்டரை மணிக்கு தான் கிளம்பும் என்று மூன்றாவது முறையாக அறிவிப்பு வந்த போது கொஞ்சம் பதட்டமாகியது. ட்ராவல் டெஸ்க் இல் சார்லட்டிற்கு செல்லும் வேறு விமானத்தில் மாற்றி தர முடியுமா என்று விசாரித்தோம் . அன்றைக்கு சார்லட்டிற்கு வேறு விமானம் இல்லை என்று சொன்னார்கள். மீண்டும் தாமாதமாகுமா என்று கேட்டதற்கு அதை உறுதியாக சொல்ல முடியாது , காத்திருக்க தான் வேண்டும் என்றார்கள். தொடர்ந்து தாமதமானதாலோ, அதனால் விமானம் ரத்து செய்யப்பட்டாலோ சரியான நேரத்திற்கு வகுப்பிற்கு வரமுடியாமல் போகுமே என்று கொஞ்சம் கவலையாக இருந்தது. என்ன செய்யலாம் என்று வெங்கட்டிடம் கேட்டதிற்கு , விமானம் இன்னுமொரு முறை தாமதமானால் நாம் காரில் கிளம்பி விடலாம் , பத்து மணி நேரம் டிரைவ், நள்ளிரவு சேர்ந்தாலும் அடுத்த நாள் வகுப்பை தவற விடாமல் கலந்து கொள்ளலாம் என்றார். இத்தனை தீவிரமாக நண்பர்கள் உடன் இருக்கும் போது என்ன கவலை எப்படியும் வகுப்பை தவற விட மாட்டோம் என்ற நம்பிக்கை வந்தது. நல்ல வேலையாக விமானம் மூன்றாவது முறைக்கு மேல் தாமதமாகாமல் கிளம்பியது .
விமான நிலையத்திலிருந்து இறங்கி பூன் முகாம் நடக்கும் blowing rock conference சென்டருக்கு வர இரவு 7:30 மணி போல் ஆகியது. குளிர் காலம் ஆரம்பிக்க துவங்கியதால் மலைப்பகுதி சீக்கிரமே நன்கு இருட்டியிருந்தது. முகாம் இடத்தை நெருங்க நெருங்க உங்களை பார்க்க போகிறோம் என்று எங்கள் மூவருக்குமே இருந்த ஆவலை பரஸ்பரமாக உணர முடிந்தது. தத்துவ வகுப்பு முதல் நிலை முடிந்து எல்லோரும் இரவு உணவிற்காக உணவருந்தும் இடத்தில் இருந்தீர்கள். அங்கு வந்து உங்கள் அனைவரையும் பார்த்தவுடனேயே பூன் முகாமிற்கான பரவச மனநிலை தொற்றிக் கொண்டது . முதல் தத்துவ வகுப்பில் கலந்து கொண்ட அத்தனை பேர் முகத்திலும் பெரும் மலர்ச்சியும் உற்சாகமும் இருந்தது. நவம்பர் 1 இரவு தத்துவ வகுப்பு முதல் நிலை முடித்தவர்கள் , இரண்டாம் நிலையில் கலந்து கொள்ள வந்தவர்கள் என்று கிட்டத்தட்ட 85 நபர்களுடன் blowing rock conference வளாகம் ஒரு கொண்டாட்ட நிலைக்கானது. உணவருந்தும் இடத்திலிருந்து மேலே வகுப்பு நடந்த இடத்திற்கு சென்றபோது போர்டில் தத்துவ வகுப்பில் முதல் நிலையின் கடைசி பாடக் குறிப்புகள் அழிக்காமல் இருந்தன . அதைக் கண்டவுடன் சட்டென்று எனக்கு உணர்வெழுச்சியாகியது. நான் தத்துவ முதல் வகுப்பு இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் வெள்ளிமலையில் கலந்து கொண்டேன். குரு நித்யா கூடத்தில் அன்று கொட்டிய பெருமழையின் ஆசிர்வாதத்தோடு நீங்கள் நடத்திய முதல் வகுப்பின் மொத்த சித்திரமும் கண்முன்னே வந்து போனது. அந்த கணமே அடுத்த நாள் வகுப்பிற்காக மனம் முழுக்க தயாராகிவிட்டது.
தத்துவ வகுப்பு இரண்டாம் நிலையின் முதல் நாள் நவம்பர் 2 , டே லைட் சேவிங்கால் நேரம் மாறியிருந்தது. அன்று காலை எழுகையில் ஒரு டே லைட் சேவிங் நாளன்று உங்களோடு சேர்ந்து இருக்கக்கிடைத்தது விசேஷமான உணர்வாக இருந்தது. குரு நித்யாவின் 101-வது பிறந்த நாளன்று உங்கள் ஆசிகளை எங்களுக்களித்து முதல் நாள் வகுப்பைத் தொடங்கினீர்கள் . இரண்டாம் நிலை வகுப்புகள் செல்ல செல்ல முதல் வகுப்பு வெறும் ஒரு அறிமுகம் தானென்றும் இரண்டாம் வகுப்பில் வேதங்கள் பற்றிய எவ்வளவு ஆழமான விஷயங்களை கற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதையும் உணர முடிந்தது. தத்துவ வகுப்பின் முதல் மற்றும் இரண்டாம் நிலைக்காக தொடர்ந்து நான்கு நாட்கள், தினமும் 8 மணி நேரம் நின்று கொண்டே எங்களுக்கு வகுப்பெடுத்தீர்கள். தத்துவ வகுப்பெடுக்கும் எங்கள் ஆசிரியரை நினைக்கும் போது ‘கற்பிக்கையில் முற்றிலும் கல்வியாக மட்டுமே மாறிவிடும் யோகத்தை அவர் அறிந்திருந்தார் ,விறகு தழலாக மாறி நிற்பது போல அவரது ஞானம் மட்டுமே முன்நின்றது ‘ என்று துரோணர் பற்றி வரும் வெண்முரசின் வரிகள் தான் நினைவிற்கு வந்தது. தத்துவ வகுப்பு முதல் நிலையில் தத்துவம் பற்றிய அறிமுகம் ஒரு விதை போல் நம்முள் விழுந்து நமக்கான தேடல்களுக்கும் வினாக்களுக்கும் பதில்களாக காலப்போக்கில் நம்மில் முளைத்தெழும் என்று சொல்லியிருந்தீர்கள். முதல் நிலை முடிந்து இரண்டாம் நிலைக்கான இந்த இடைவெளியான காலத்தில் வெண்முரசு வாசிப்பிலும், இயற்கையை அவதானிப்பதிலும் , வாழ்க்கை சார்ந்த பார்வையிலும் முதல் தத்துவ வகுப்பில் கற்ற விஷயங்கள் எப்படி எல்லாவற்றிலும் உடன்வந்து ஆழ விரிகிறது என்பதை உணர முடிந்தது. இரண்டாம் வகுப்பில் கன்றுகொண்ட விஷயங்கள் இன்னும் ஆழமான கற்றலையும் புரிதலையுமே தரப் போகிறது என்பது தெரிந்தது . கடந்த காலம் , எதிர் காலம் இல்லாமல் முழுக்க முழுக்க நிகழ்காலத்தில் மட்டுமே வாழும் கணங்கள் மிக அரிதானவை. தத்துவ வகுப்பின் இரண்டு நாட்களும் முழு குவிப்புடன் வகுப்பில் அந்த கணத்தில் லயித்து இருக்க முடிந்தது. உங்கள் குரலில் சிருஷ்டி கீதம் கேட்கக் கிடைப்பது ஒரு வரம். முதல் தத்துவ வகுப்பில், கட்டண உரைகளில் என்று எப்போது நீங்கள் வாசித்து கேட்டாலும் அது மிக உன்னதமான நிலைக்கு எடுத்துச் செல்லும் . இம்முறையும் அப்படித்தான். வகுப்பு முடிந்து எல்லோர் முகத்திலும் கற்றலின் இன்பம் நிறைந்திருந்தது. அன்று இரவு ராஜன் அவர்களிடம் இசை பற்றிய கேள்வி பதில்களுக்கான ஒரு அரங்கு அமைந்திருந்தது. எல்லோரும் கேட்ட கேள்விகளுக்கு ராஜன் அவர்கள் ஒரு கணம் கூட யோசிக்காமல் தன்னிச்சையாக ஆர்வமாக பதில் அளித்துக் கொண்டிருந்தார். அவர் கொடுத்த விளக்கங்களில் இசை மீது அவருக்கிருந்த அலாதியான ஆர்வத்தையும் இசையறிவையும் உணர முடிந்தது. கலை எத்தனை மகத்தான ஒன்று. மிகச்சிறிய இந்த வாழ்வுதனை எத்தனை பெரியதாய் அழகியதாய் மாற்றிவிடுகிறது என்று நினைத்துக் கொண்டேன்.
பூன் முகாமின் அழகிய நினைவுகளில் ஒன்று காலை நண்பர்களுடன் சூரிய உதயம் பார்ப்பது. வகுப்பின் முதல் நாள் ரிசார்டிற்கு வெளியே இருந்தபடியே சூரிய உதயம் பார்த்தேன். இரண்டாம் நாள் காலை நண்பர்கள் பாதிபேருடன் சென்று மலைக்குன்றில் சூரிய உதயம் பார்த்தோம் . தத்துவ வகுப்பு முடிந்து மூன்றாம் நாள் ஊருக்கு கிளம்பும் முன் அந்த காலை சூரிய உதயம் பார்க்க நீங்களும் அருண்மொழி அம்மாவும் வந்தீர்கள். கொஞ்ச நண்பர்கள் மட்டும் அன்று உதயம் பார்க்க வந்தோம். அதிகாலை புலரியின் நீலம் கொஞ்சம் களைந்து பொன்னும் சிவப்புமாக வானம் சூரிய உதயத்திற்கு ஆயத்தமாகியிருந்த நேரம். ஆழ்ந்த மௌனத்துடன் கதிரவனின் முதல் கீற்றைப் பார்க்க ஆர்வமாக அணிவகுத்து நின்றின்றிந்தோம்.ஆகாய வெளியில் பனியைக் கிழித்துக் கொண்டு பறவைகள் அங்குமிங்கும் வட்டமடித்துக் கொண்டிருந்தன. கருணையே வடிவாய் அந்நாளின் மொத்த மகிழ்வையும் தன்னொளியால் துவக்கி வைத்து மேகத்திரை விளக்கி சூரியன் வெளியே வந்தது . உதயத்தின் முதல் கீற்றைப் பார்த்த பரவசத்தை ஒரு வார்த்தையும் பேசாமல் அருகிலிருப்பவர்களால் உணர்ந்து கொள்ள முடிந்தது.சில வினாடிகளில் ஆரஞ்சுத் தழல்கொண்டு மொத்த வானையும் தன் பொன்னொளியால் ஆட்கொண்டது. சென்ற வருடம் இதே போலொரு சூரிய உதயத்தை நண்பர்கள் அனைவருடனும் சேர்ந்து பார்த்தோம். அன்று நீங்களும் அருண்மொழி அம்மாவும் வரவில்லை. நீங்கள் உங்கள் அறையில் எழுதிக் கொண்டிருந்தீர்கள். அன்று உள்ளுக்குள் நீங்கள் இருவர் மட்டும் அந்த இடத்தில் இல்லையே, இருந்திருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.இயற்கை என்றும் அலாதி கருணை கொண்டது. தத்துவ வகுப்பு முடிந்த மனநிலையில் என் ஆசிரியருக்கு அருகே நின்று அவருடன் சேர்ந்து பார்க்க கிடைத்த உதயம் எத்தனை பெரிய கொடுப்பினை. சூரியன் முழுதாக உதயமானதும் ராஜன், பழனி மற்ற நண்பர்கள் அனைவரும் மலைவளைவில் நின்று காயத்ரி மந்திரம் பாடினார்கள். முற்றாக வேறு எந்த உணர்வுமற்று முழு உதயத்தையும் முழுதாய் தங்கள் அனைவருடனும் அனுபவிக்கக் கிடைத்த அந்த காலை வாழ்வின் மிக பொக்கிஷமான தருணங்களில் ஒன்று. உதயம் முடிந்து ரெசார்ட்டிற்கு திரும்பும் போது ராஜன் சோமசுந்தரம் காரில் வந்தோம். அவர் காரில் எமிலி டிக்கன்ஸனின் ‘ஹோப்‘ கவிதைக்கு ராஜன் இசையமைத்த பாப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. நான் அந்த பாடலின் இசையையும், ஹம்மிங்கையுமே ரசித்துக் கொண்டிருந்தேன், பாடல் வரிகளை முதலில் சரியாக கவனிக்கவில்லை. ராஜன் குறுக்கிட்டு இந்த பாட்டின் பொருளை கவனிச்சீங்களா ‘நம்ம வாழ்க்கைல எத்தனை சோதனைகள் சவால்கள் வந்தாலும் நம்பிக்கை என்ற பறவை எப்போதும் சிறகு விரிச்சு எந்திருச்சு பறக்க காத்திட்டு இருக்கு , பதிலுக்கு அது நம்மகிட்ட எதையுமே எப்பவுமே எதிர்பாக்குறதில்ல ‘என்றார் . சட்டென்று அந்த வரிகளின் ஆழம் உணர்ந்து ‘சார் திரும்ப ஒரு தடவ சொல்லுங்க சார் , திரும்ப அந்த பாட்டை play பண்றிங்களா சார் னு ‘ கேட்டேன். அந்த நாள் காலை உதயத்தின் போது கிடைத்த ஒரு தூய மகிழ்ச்சியை இப்போது எமிலி டிக்கன்சனின் கவிதை வரிகள் அதன் கைகளில் கைமாற்றி ஏந்திக் கொண்டது.
நான் வெள்ளிமலையில் தத்துவ வகுப்பு முதல் நிலையில் கலந்து கொண்டபோது ரத்தசாட்சி இயக்குனர் ரபீக் , ‘ சரி , முதல்நிலையில இப்போ கலந்துக்கிட்டிங்க , அடுத்து ரெண்டாவது நிலைக்கெல்லாம் எப்படி கனடாலயிருந்து வருவீங்க ‘ என்று கேட்டார். அவர் கேட்டபின்பு தான் அதை பற்றி யோசித்தேன். அவரிடம் ‘ தெரில , கிடைக்கிற வாய்ப்புள்ள முதல கலந்துகிடலாம்னு வந்தேன் ‘ என்று சொன்னேன். அன்று நிஜமாக தத்துவ வகுப்பு இரண்டாம் நிலையை பூன் முகாமில் தொடர முடியும் என்று நினைத்து பார்த்ததில்லை. மனித மனதின் சிறிய திட்டங்களைக் காட்டிலும் இயற்கை அதன் பெரும் ஒழுக்கில் கருணைக் கரங்களோடு நம்மைக் கூட்டிச்செல்லும் விந்தையை நன்றியுடன் நினைத்துக் கொண்டேன். இரண்டாம் தத்துவ நிலையை பூன் காம்பில் ஒருங்கிணைத்து சாத்தியமாகிய ஆஸ்டின் சௌந்தர் சார் மற்றும் அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றி. இது போன்ற ஒவ்வொரு சந்திப்பிலும் ஒத்த மனமுள்ள நண்பர்கள் கிடைப்பது பெருகிக் கொண்டேயிருக்கிறது. உணவு இடைவேளையிலும் இரவிலும் இலக்கியம் பற்றி நண்பர்களுடன் உரையாட முடிந்தது. வாசிப்பை விரிவாக்கி ஆழமான வாசிப்பை அடைய, எழுத நண்பர்கள் மாறி மாறி ஒருவருக்கொருவர் உத்வேகம் அளித்துக் கொண்டிருந்தது மிகுந்த உற்சாகமாக இருந்தது. உங்களையும் அருண்மொழி அம்மாவையும் சந்தித்தது அத்தனை மகிழ்வாக இருந்தது. வெண்முரசின் காண்டீபம் வாசித்துக் கொண்டிருக்கையில் ஆசிரியரை நேரில் சந்திக்கக் கிடைத்தது பெருவரம். இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் கற்றுக்கொள்ளும் ஆர்வமுடையவர்களுக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று தாங்களே வந்து கற்றுக் கொடுக்கும் ஆசிரியருக்கு என்ன கைம்மாறு செய்துவிட முடியும், அவரவர் தன்னறத்திலிருந்து முழுமூச்சுடன் முடிந்த அளவு செயலூக்கத்துடன் செயல்படுவதைக் தவிர.
வகுப்பு முடிந்து பூன் மலையிலிருந்து திரும்பும் பயணம் முழுவதிலும் எமிலி டிக்சனின் ஹோப் கவிதையே மனதில் பிரதிபலித்துக்கொண்டிருந்தது. அந்த கவிதையை அலைபேசியில் எடுத்து வாசித்தேன்.
‘Hope is the thing with feathers
That perches in the soul ,
And sings the tune without the words,
And never stops at all ,
And the sweetest in the gale is heard;
And sore must be the storm
That could abash the little bird
That kept so many warm.
I’ve heard it in the chilliest land,
And on the strangest sea;
Yet , never, in extremity ,
It asked a crumb of me ‘
‘And never stops at all . Yet , never, in extremity ,
It asked a crumb of me ‘ என்ற வரிகள் எல்லாவற்றிற்கும் சேர்த்து கையளிக்கும் பதிலாகவும் நம்பிக்கையாகவும் மீண்டும் மீண்டும் உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. கார் ஜன்னல் வழியே மலைகளையும் மரங்களையும் பார்த்துக் கொண்டிருந்தேன். பாதி கொட்டிய இலைகளுடன் மர நுனியில் மட்டும் சில இலைகளை ஏந்திக் கொண்டு உச்சி வெயிலின் முழு மினுக்கத்துடன் ஒய்யாரமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது மரங்கள்.
பேரன்புடன் ,
இந்துமதி.
இசையில் மலர்ந்தது
You speak in English, and young minds from American colleges and schools are enjoying your ideas. It is now time to produce English videos and start your English classes
Classes in English
[image error]
தங்களுக்காக நான் எழுதும் முதல் கடிதம் இது. கடந்த வாரம் நான் கர்நாடக இசை அறிமுக வகுப்பில் கலந்து கொண்டேன். அதைக் குறித்து அனுபவப் பகிர்தல் ஒன்றை எழுத வேண்டும் என்ற பெருவிருப்பம் எனக்கு. ஆனால் அதை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் பல்வேறு அனுபவப் பகிர்வுக் கடிதங்களை உங்கள் வலைதளத்தில் படித்து பார்த்து இப்படி ஆரம்பிக்கலாமா அப்படி தொடங்கலாமா என்ற சிந்தனையிலேயே இரண்டு நாட்கள் சென்று விட்டிருந்தது..
இசையில் மலர்ந்தது…இங்கிலாந்தில் மேலைத்தத்துவ அறிமுக வகுப்பு
ஐரோப்பாவில் ஜூலையில் நடந்த இந்திய தத்துவ அறிமுக வகுப்பை தொடர்ந்து விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் பிரித்தானியா அமைப்பின் சார்பாக அஜிதன் நடத்தும் மேலைத்தத்துவ அறிமுக வகுப்பு மூன்று நாட்கள் நடக்க இருக்கிறது.
ஜனநாயகம், தனி மனித சுதந்திரம் போன்ற நம் நவீனச் சிந்தனைகள் பல மேலை தத்துவங்களை அடிப்படையாக கொண்டவை. நம் சிந்தனைகளை சரியாக தொகுத்துக்கொள்ள அந்த தத்துவ சிந்தையாளர்களை பற்றிய அறிமுகமும் அவர்களுடைய கோட்பாடுகளைப் பற்றிய புரிதலும் மிக அவசியம். இந்த வகுப்புகள் புராதன கிரேக்க தத்துவங்கள் முதல் மறுமலர்ச்சி மற்றும் நவீன தத்துவக் கோட்பாடுகள் வரை அறிமுகம் செய்கின்றன. இன்றைய சூழலில் நம் வாழ்வு, இன்றைய அரசியல் சார்ந்து தர்க்கபூர்வமான , வரலாற்றுப்பின்னணிகொண்ட சிந்தனைகளை நாம் வளர்த்துக்கொள்ள இவை அவசியமானவை.
ஏற்கனவே அஜிதன் இந்தியாவில் நடத்திய மேலைத்தத்துவ அறிமுக வகுப்புகள், மேலை இசை அறிமுக வகுப்புகள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.
இது முன்பதிவு செய்துகொண்டவர்களுக்காக மட்டும் பல்கலை வளாகத்தில் நிகழும் வகுப்பு. தத்துவத்தில் ஆர்வம் கொண்ட நண்பர்கள் வகுப்பில் கலந்துகொள்ள விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Contact : தீபா 00 44 790 999 7424Location: Royal Agricultural University, Cirencesterநாட்கள் நவம்பர் 28 29 மற்றும் 30(நிகழ்வின் முதல் நாள் நவம்பர் 28, வெள்ளிக்கிழமை மாலை “இந்திய தத்துவம் மேலைத்தத்துவத்தால் எப்படி மறுவடிவம் பெற்றது?” என்ற தலைப்பில் ஜெயமோகன் அவர்களின் சிறு உரை நடைபெறும்.)
November 11, 2025
தன்னறம் விருது 2025
“மொழியைப் பயன்படுத்துவது ஒரு மானுடச் செயல்பாடு. பானை செய்வதுபோல், அறிவியல் செய்வதுபோல் மொழியை பயன்படுத்துவதும் ஒரு மானுடச் செயல்பாடு. இதனால்தான், ‘என்னுடைய மொழியில்…’ என்று நாம் சொல்கிறோம். தொகுத்துச் சொல்வதென்றால், மொழியாக்கம் என்பது, ஒரு வார்த்தை எப்படியான அர்த்தங்களைக் கொண்டிருக்க முடியும் என்று துருவியகழும் செயலாகவே இருக்கிறது.
சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு வார்த்தையின், ஒரு வாக்கியத்தின், ‘தொனி’யைப் பிடிப்பதற்கு நாம் வார்த்தையை, வாக்கியத்தைக் கடந்துசெல்ல வேண்டியுள்ளது. அதாவது, மூலப்பிரதி அதன் மொழியின் தனித்த பண்புகளால் ஆனது. நாம் அதற்கு நிகரான சொற்களையோ மொழியையோ உருவாக்க முடியாது. இதனாலேயே மொழியாக்கம் படைப்பூக்கமிக்க விளையாட்டாகிறது. மூலப்பிரதியின் அச்சுஅசலாக மொழியாக்கம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கருத்தாக்கரீதியாக ஒரு புனைவு.
~ சீனிவாச ராமாநுஜம் (மொழியியல் தத்துவத்தின் அடிப்படையில் மொழியாக்கம் எனும் கட்டுரையிலிருந்து…)
எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான சீனிவாச இராமாநுஜம் அவர்கள் சாதத் ஹசன் மண்ட்டோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை ‘மண்ட்டோ படைப்புகள்‘ என்ற தலைப்பில் தொகுத்துத் தமிழாக்கம் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, ஆர்துரோ வான் வாகனோவின் ‘மௌன வதம்‘, டி.ஆர்.நாகராஜின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் அடங்கிய ‘தீப்பற்றிய பாதங்கள்‘, சுந்தர் சருக்கை எழுதிய நாடகங்களின் தொகுப்பான ‘இரண்டு தந்தையர்‘, கோபால் குரு, சுந்தர் சருக்கை இணைந்து எழுதிய ‘விரிசல் கண்ணாடி, சுந்தர் சருக்கை எழுதிய ‘சிறுவர்களுக்கான தத்துவம்‘ (த.ராஜனுடன் இணைந்து), ‘அறிவியல் என்றால் என்ன?’, பிரார்த்தனையைப் பின்தொடர்ந்து ஆகிய முக்கியமான நூல்களை மொழியாக்கம் செய்திருக்கிறார்.
அஷிஸ் நந்தி, சையித் ஹுஸைன் நஸ்ர் உள்ளிட்டோரின் படைப்புகளையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். ‘காந்தியின் உடலரசியல்‘, ‘தற்கொலைகளைக் கொண்டாடுவோம்‘, ‘சந்நியாசமும் தீண்டாமையும்‘, ‘Renunciation and Untouchability: The Notional and the Empirical in the Caste Order’, ‘இந்து மதம்: ஒரு விசாரணை‘ ஆகிய இன்றியமையாத நூல்களை எழுதியிருக்கிறார். இவர் பரீக்ஷா, ஐக்கியா, சென்னைக் கலைக்குழு, பல்கலை அரங்கம் ஆகிய நாடகக் குழுக்களில் பங்காற்றினார். அதன்பின் ‘ஆடுகளம்‘ எனும் நாடகக் குழுவைத் தொடங்கி, மிக முக்கியமான பல நாடகங்களை இயக்கியுள்ளார்.
“கருத்தாக்கத்தை முன்னகர்த்திச் செல்வதற்காக நடைமுறையை வளைக்கும் எந்த எத்தனமும் சீனிவாச ராமாநுஜத்திடம் வெளிப்படுவதில்லை. வாழ்வனுபவங்களிலிருந்து அந்நியப்பட்டுப்போவதை அவர் படைப்புகள் அனுமதிக்கவும் இல்லை. அதனால்தான், கருத்தாக்கத் தளத்துக்கு நகரும் வாழ்வனுபவங்கள் கூட உணர்வுபூர்வ அம்சத்தை இழந்துவிடாமல் ஈரத்தை அப்படியே தேக்கிவைத்திருக்கின்றன. மேலும் குடும்பம், சமூகம், பண்பாடு, அறிவியல், இலக்கியம், சினிமா. மொழி என எதுவாக இருந்தாலும், அவற்றை அர்த்தப்படுத்திக்கொள்ள முற்படும் ராமாநுஜத்தின் கருத்தாக்கத் தளமானது நடைமுறைத் தளத்திலிருந்து விலகிய பண்பைக் கொண்டிருக்கவில்லை. மாறாக, அன்றாடத் தன்மையை வலியுறுத்தும் அக்கறையைக் கொண்டிருக்கிறது” என்றுரைக்கும் எழுத்தாளர் த.ராஜனின் வார்த்தைகள் சீனிவாச ராமாநுஜம் அவர்களின் படைப்பியல்பை நமக்கு துல்லியப்படுத்திக் காட்டுகிறது.
தமிழ்ப்படைப்புலகில் தவிர்க்க முடியாத இலக்கியப் படைப்புகளைத் தந்து, அதன்மூலம் இவ்வாழ்வுக்கு நேர்மறைக்கோணம் அளிக்கும் முன்னோடி இலக்கிய ஆளுமைகளை மனமேந்தும் வாய்ப்பாகவும், சமகால இளம் வாசிப்பு மனங்களுக்கு அத்தகைய இலக்கியவாதிகளை இன்னும் அணுக்கப்படுத்தும் செயலசைவாகவும் ‘தன்னறம் இலக்கிய விருது’ ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதுவரையில் எழுத்தாளர் யூமா வாசுகி (2020) , எழுத்தாளர் தேவிபாரதி (2021), எழுத்தாளர் சு.வேணுகோபால் (2022), எழுத்தாளர் பாலைநிலவன் (2023), எழுத்தாளர் ஷோபாசக்தி (2024) ஆகிய ஆளுமைகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
இதன்நீட்சியாக, 2025ம் ஆண்டுக்கான ‘தன்னறம் இலக்கிய விருது’ மொழியெர்ப்பாளரும் கோபாட்டாளருமான சீனிவாச ராமாநுஜம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. சமூக இயங்கியலின் அடியாழத்தை தத்துவமும் வரலாறும் இணைந்த அரசியலாய்வுப் பிரதிகளாக முன்வைக்கும் சீனிவாச இராமாநுஜம் அவர்களின் தீவிரமிகு இலக்கியப் பணியை வணங்கி இவ்விருதைப் பணிந்தளிக்கிறோம்.
தன்னறம் இலக்கிய விருதளிப்பு நிகழ்வு வருகிற ஜனவரி மாதம், காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஊழியரகத்தில் நிகழவுள்ளது. காந்தியக் களப்போராளி மூதன்னை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்கள் இவ்விருதை வழங்கவுள்ளார். இந்நிகழ்வில் விருதுத்தொகையாக சீனிவாச ராமாநுஜம் அவர்களுக்கு ஒரு இலட்ச ரூபாய் வழங்கப்படவுள்ளது. மேலும், சீனிவாச ராமாநுஜம் அவர்கள் மொழிபெயர்த்த, எழுதிய படைப்புகள் அடங்கிய புத்தகமொன்றும் இளம் வாசிப்பு மனங்களுக்கு விலையில்லா பிரதியாக (ஆயிரம் பிரதிகள்) அனுப்பப்படும். அவருடைய வாழ்வனுபங்களையும் இலக்கியப் பார்வையையும் பகிர்ந்துகொள்ளும் நேர்காணல் ஆவணக் காணொளியும் விருதளிப்பையொட்டி வெளியாகும்.
எழுத்தாளனைப் பற்றிக் குறிப்பிடுகையில், “மானுடச் செயல்கள் ஒவ்வொன்றும் அதற்கான எதிர்வினையைக் கொண்டிருக்கின்றன. அது இருக்கும் ஏதோ ஒன்றில் குறுக்கீடு செய்கிறது. இந்தச் செயல் ஊடாக நாம் நம்மை படைத்துக்கொள்கிறோம். மொழியிலான உலகத்தைப் படைப்பதும் ஒருவிதமான மானுடச் செயல்தான். இந்தச் செயலும் அதற்கான எதிர்வினையை அதற்குள்ளாகக் கொண்டிருக்கிறது. இது ஒரு மனிதனை எழுத்தாளனாகப் படைக்கிறது” என்றெழுதும் சீனிவாச ராமாநுஜத்தின் ஒவ்வொரு படைப்பும் சமூக இயங்கியலின் ஆதாரவேர்களைத் தேடித் தொட்டடைந்து அதன் மானுட ஈரத்தையே ஆதாரமாக வெளிக்கொணர்பவை.
இலக்கியம் என்பது உடலெனக் கொண்டால் மொழிபெயர்ப்பு என்பது அதன் இரத்தசுழற்சி செயல்பாடாகிறது. ‘மொழிபெயர்ப்பு இல்லாமல் இருந்திருந்தால் நாம் மெளனத்தின் எல்லைகளால் கட்டமைந்த பகுதிக்குள் அடைபட்டு வாழ்ந்திருப்போம்‘ என ஜார்ஜ் ஸ்டைனர் சொல்வது அதைத்தான். தன்னுடைய படைப்புகளின் வழியாக சமூகப்புரிதல்களின் கோட்பாடுகளை துலக்கப்படுத்தி, ஒவ்வொன்றின் பின்னார்ந்த அரசியலையும் மொழியில் தெளிவுபடுத்தும் சீனிவாச ராமாநுஜம் அவர்களின் எழுத்துப்பங்களிப்பு சமகாலத்தில் குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டின் (2025) தன்னறம் இலக்கிய விருதை எழுத்தாளுமை சீனிவாச ராமாநுஜம் அவர்களுக்கு வழங்குவதில் நிறைவும் மகிழ்வும் கொள்கிறோம்.
~
தன்னறம் நூல்வெளி I குக்கூ காட்டுப்பள்ளி
—
Thanks & Regards,
Thannaram Noolveli
“செய்யக்கூடியது, செய்யக்கூடாதது மட்டுமல்ல
செய்தே ஆகவேண்டியதையும் சேர்த்ததுதான் தன்னறம்“
நெருப்பு நெருப்பை எழுப்புக!
சென்ற வாரம், (நவம்பர் 7, 8, 9) விஷ்ணுபுரம் நண்பர்களில் அணுக்கமானவர்கள் பெரும்பாலானவர்களை வெவ்வேறு நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் வழியாகக் காணநேர்ந்தது. அமெரிக்காவில் மட்டும் மூன்று நிகழ்வுகள். வாஷிங்டனில் ஒரு நாவல்பட்டறை, என் அறம் கதைகளின் ஆங்கில மொழியாக்கமான Stories of the True நூலின் அமெரிக்கப் பதிப்பின் நூலறிமுக நிகழ்வுகள் வாஷிங்டனிலும் பின்னர் நியூஜெர்ஸியிலும். மற்றும் அ.முத்துலிங்கம் படைப்புகள் பற்றி பே ஏரியா விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் ஒருங்கிணைத்த சந்திப்பு. ஒவ்வொன்றிலும் சராசரி ஐம்பது பேருக்கு மேல் கலந்துகொண்டனர்.
இந்தியாவில் பெங்களூரில் நண்பர் ஈரோடு கிருஷ்ணன் தர்க்கபூர்வ அறிதல் மற்றும் தத்துவக்கல்வி பற்றி நிகழ்த்திய பயிலரங்கில் நூறுபேர் வரை கலந்துகொண்டிருந்தனர். அதே நேரம் முழுமையறிவு சார்பில் தில்லை செந்தில் பிரபு நடத்திய தியானம் – யோகம் பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இன்னொரு கூட்டம் நண்பர்கள் ஜெயக்குமார் தலைமையில் திருமெய்யம் – சித்தன்னவாசல் – குடுமியான் மலை என பயணம் செய்துகொண்டிருந்தனர்.
இதே நாட்களில் எங்கள் நிகழ்வுகளின் ஆசிரியர்களில் ஒருவரான ஏ.வி.மணிகண்டன் சென்னை நேடிவ் கிரியா கேலரியில் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். சென்ற வாரம் குருஜி சௌந்தரும், சுனீல் கிருஷ்ணனும் மலேசியாவில் வகுப்புகள் நடத்தினர். லோகமாதேவியின் வகுப்பு ஒன்றும் நடைபெற்றுள்ளது. குக்கூ அமைப்பினர் இதே நாளில் திண்டுக்கல் காந்திய ஊழியரகத்தில் பனை எழுக என்னும் பனைவிதை நடும் இயக்கத்தை கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் தொடங்கிவைக்க முன்னெடுத்தனர். அதில் பங்குகொண்டவர்களும் நம் நண்பர்களே.
இது தவிர சுக்கிரி, கம்பராமாயண அரங்கு உட்பட வெவ்வேறு குழுமங்களில் இலக்கிய உரையாடல்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. நானே Invisible Magazine (A collective of Asian Pacific Islander South Asian American (APISAA) என்னும் இணைய இதழுக்காக ஒரு பேட்டியை கொடுத்தேன். இந்த மாதம் முழுக்க நிகழ்ந்தவற்றை இப்படி கணக்கெடுத்தால் இதைப்போல நான்கு மடங்கு இருக்கும். அடுத்த வாரமும் இதேபோல நிகழ்வுகள் உள்ளன. முழுக்க இதேபோன்ற சந்திப்புகள், வகுப்புகள் நிகழ்கின்றன. இலக்கியம், தத்துவம், யோகம் என பல களங்களில். ஒருவேளை தமிழில் இன்று நிகழும் மிகப்பெரிய தொடர் அறிவியக்கம் இதுதான்.
நான் என்றும் கனவுகண்டு வந்தது இதுவே. உறுதியான, கட்டுக்கோப்பான ஓர் அமைப்பை அல்ல. அதன் நிர்வாகம் என்பது மிகப்பெரிய சிக்கல். ஒரு கட்டத்தில் நிர்வாகம் மட்டுமே நிகழும், செயல்நிகழாது. பெரிய அமைப்புகள் ஒவ்வொருவரையும் தனித்தன்மையை இழக்கச் செய்து ஒரு பெரிய கட்டுமானத்தின் ஒரு பகுதியென ஆக்கிவிடுகின்றன. நான் உத்தேசிக்கும் இயக்கத்தில் ஒவ்வொருவரும் தங்கள் தனிவழிகளை தேடவேண்டும். தங்கள் தனித்த சாதனைகளைச் செய்யவேண்டும். ஒவ்வொருவரும் ஓர் அமைப்பாகச் செயல்படவேண்டும்.
முழுமையறிவு வகுப்புகளை தொடங்கியபோது நான் கிருஷ்ணனிடம் சொன்னது “இவை ஆசிரியர்களை உருவாக்குவதற்கான பயிற்சி வகுப்புகள்” என்றே. வாசிப்பு வழியாக மட்டும் அத்தகைய ஆசிரியர்கள் உருவாகி வர முடியாது. அவர்கள் தங்கள் கல்வியை பிற ஆசிரியர்களிடமிருந்தே அடையவேண்டும். ஆசிரியரின் ஆளுமை கல்வியில் செலுத்தும் செல்வாக்கு மிக அதிகம். ஒரு வகுப்பில் மட்டுமே கற்றல் எப்படியோ கற்பித்தலும் ஆகிறது. முழுமையறிவுக்கு வந்துகொண்டிருப்பவர்கள் ஒவ்வொருவரும் ஆசிரியர்களும் ஆகிக்கொண்டிருக்கின்றனர்.
ஒரு பயிற்சி வகுப்பு என்பதற்கு அப்பால் இந்த அமைப்பின் தேவை என்ன? ஒரே அடிப்படைதான். ஒரேவகையான ரசனை, ஒரே தேடல்கொண்டவர்கள் ஒருவரை ஒருவர் கண்டடைய வேண்டியுள்ளது. அந்த இணைப்பும் அதன் விளைவான நம்பிக்கையும்தான் அவர்களைச் செயல்நோக்கிக் கொண்டுசெல்கிறது. இத்தகைய ஓர் அமைப்பின் தேவை என்ன என்பதை இப்போது அமெரிக்காவிலேயே காணமுடிகிறது. மிக இளம்வயதான அடுத்த தலைமுறையினரே இந்த வகையான ஓர் ஒருங்கிணைப்பை விரும்புகிறார்கள், அவர்களுக்கு தேவை உள்ளது. எங்கள் பறவை பார்த்தல், தாவரங்களை அவதானித்தல் நிகழ்வுகளுக்கு வரும் இளையோர் ஒவ்வொருவரும் அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு வரத்தொடங்கியுள்ளனர். அவர்களுக்காக தர்க்கபூர்வ அறிதல், தத்துவார்த்தமான அறிதல் ஆகியவற்றைக் கற்பிக்கும் வகுப்புகளையும் விவாத அரங்குகளையும் ஒருங்கிணைக்கலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் எப்படியானாலும் ஓர் இலக்கிய அமைப்பு அல்லவா? அது ஓர் எழுத்தாளரை மட்டும் மையமாகக் கொண்டது அல்லவா? அந்த எண்ணத்தை புரிந்துகொள்கிறேன். இந்தச் செயல்பாடுகளை ‘வெளியே’ நின்று பார்க்கும் ஒருவருக்கு இயல்பாக அப்படித் தோன்றுவதும் இயல்பானதே. ஆம், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் மிக எளியமுறையில் ஒரு சில இலக்கிய வாசகர்கள் ஒருவரோடொருவர் இணைந்து செயல்படும் பொருட்டு, எளிய நட்புக்குழுமமாகவே தொடங்கப்பட்டது. அப்படித்தான் எல்லா நிகழ்வுகளும் தொடங்குகின்றன. அப்படித்தான் தொடங்கப்பட வேண்டும். செயல்வழியாக பாடங்களைக் கற்றுக்கொண்டு, புதிய கனவுகளை வளர்த்துக்கொண்டு விரியவேண்டும்.
நெறிகள் என நாங்கள் கொண்டிருப்பவை சிலவே. ஒன்று, எங்கள் நண்பர்களிடம் கடுந்தீவிர நிலைபாடுகள், அதைச்சார்ந்த காழ்ப்புகள் இருக்கலாகாது. அப்படி வெளிப்படும் நண்பர்கள் உண்டு, அவர்கள் நண்பர்களே ஒழிய நம் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஆகவே புண்படுத்தும் விவாதங்களுக்கு முழுமையாகவே இங்கே இடமில்லை. அன்றாடக் கட்சியரசியல் முழுமையாகவே தவிர்க்கப்படுகிறது. அரசியல் நிலைபாடு தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு இருக்கலாம். ஆனால் அதற்கு இச்சூழலில் இடமில்லை. கலை, இலக்கியம், பண்பாடு, மெய்யியல் ஆகியவற்றுக்கு மட்டுமே இங்கே இடம்.
(அரசியல் ஏன் தேவையில்லை என்பதை முன்னரும் விரிவாகவே எழுதியுள்ளேன். அரசியல் என நாம் இன்று சொல்வது கட்சியரசியல், அதிகார அரசியல். அதில் ஒரு வாக்காளர் என்பதற்கு அப்பால் சாமானியர் அறிவதற்கும் செய்வதற்கும் உண்மையில் ஏதுமில்லை. கும்பல் சேர்ந்து பூசலிடவும், காழ்ப்பைக் கொட்டவும், சாதிமதக் கசப்புகளை வளர்ப்பதற்கும் மட்டுமே அதில் ஈடுபடுகிறார்கள். அதை முழுமையாக கடக்காமல் இன்று எவரும் இலக்கியம், கலை, மெய்யியலில் ஈடுபடமுடியாது. அவ்வாறு இலக்கியம், கலை, மெய்யியலில் ஈடுபடுபவர்களின் உலகை அரசியல் வம்பர்களால் உணரவும் முடியாது.)
இத்தகைய ஓர் அமைப்பு எப்போதும் ஒரு மனிதரை மையமாகக் கொண்டே நிகழும். ஒரு மனிதர்தான் பிறரை ஒருங்கிணைக்க முடியும். அந்த மனிதரின் கருத்துக்கள் அளிக்கும் ஊக்கம் காரணமாகவே அவ்வியக்கம் தொடங்கியிருக்கும். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் ஓர் ஒருங்கிணைப்புப் புள்ளி, ஒரு குறியீடு மட்டுமே. ஒரு வட்டம் சுழலும்போது தானாக உருவாகும் மையப்புள்ளி போல. மையப்புள்ளி அவ்வட்டத்தை சுழற்றுவதுபோல தோன்றும், ஆனால் வட்டமே மையத்தை உருவாக்குகிறது. நான் தொடக்கத்தில் என் இலக்கிய அடையாளத்தை, என் புகழை இதற்கு அளித்தேன். இன்று என் பங்களிப்பு என பெரிதாக ஏதுமில்லை.
இத்தகைய அமைப்புகள் தங்கள் நோக்கத்தை விரிவாக்கிக்கொண்டே இருப்பதைக் காணலாம். சிற்றிதழ்களே கூட அவ்வாறு ஒரு நோக்கத்துடன் தொடங்கி அந்நோக்கத்தை விட்டு வளர்ந்தவைதான். எழுத்து இதழ் விமர்சனத்துக்காகத் தொடங்கப்பட்டது. புதுக்கவிதையை உருவாக்கியது. விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் இலக்கிய அமைப்பாகவே தொடங்கியது, இன்று அது இலக்கியத்துக்கு அப்பால் ஒரு பண்பாட்டுக் கல்வி இயக்கம்.
இதற்கு அப்பால் கலைக்கொள்கை, இலக்கியப்பார்வை என்பதில் எந்த விதமான ஒருங்கிணைப்பையும், வரையறையையும் கொண்டிருக்க வேண்டாம் என்பதே என் அணுகுமுறை. எல்லாவகையான பார்வையும் தனக்கான இடத்தில் தன்னியல்பாக வளரும் சூழலே உகந்தது. எங்கள் நண்பர்களில் ஒவ்வொருவருக்கும் கலை, இலக்கியம், மெய்யியல் சார்ந்து அவர்களுக்கான பார்வை உள்ளது. அவர்களுக்கான மாணவர்களும் உள்ளனர். ஒவ்வொருவரும் அவரவர் வழியில் முன்செல்கின்றனர்.
அவ்வாறென்றால் அவர்களிடம் நான் உருவாக்கும் பதிவு என்ன? என் கொடை என்ன? அவர்களை இணைக்கும் புள்ளி, அவர்கள் அனைவரும் மதிப்பு கொண்டுள்ள ஆளுமை, அவர்கள் விரும்பும் எழுத்தாளன், அவ்வளவுதான். மற்றபடி உண்மையிலேயே நான் எதுவும் செய்வதில்லை.
எழுத்தாளர்களுக்கான கூட்டமைப்பு? கைகோத்து முன்செல்லுதல்…சா.ராம்குமார்
ராம்குமார்ராம்குமார் தமிழில் சிறுகதைகள் எழுதிவரும் எழுத்தாளர். வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகப் பணியாற்றுபவர்
சா.ராம்குமார்
சா.ராம்குமார் – தமிழ் விக்கி
November 9, 2025
அடித்தளத்தை அமைத்துக்கொள்ளுதல்
நலமாய் இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
நான் இருக்கும் குடியிருப்புப் பகுதியில் நடந்த தோல்பாவைக்கூத்து நிகழ்வுக்கு முன் தமிழ் விக்கி பக்கத்தைப் படித்துவிட்டுச் சென்றேன், பார்த்து முடித்ததும் பின்னர் அ.கா.பெருமாள் , அவர் குறிப்புகளின் வழியே படித்து தோல்பாவைக் கூத்து பற்றிய புரிதலை அடைந்தேன். தமிழ் வீக்கி இல்லாமல் சரியாக இந்த நூல்களையும் , ஆளுமைகளையும் சரியாகத் தேடி அடைவது கடினம் என்றே நினைக்கிறேன். என் புரிதலை பின்னால் இரு பதிவுகளில் குறித்திருக்கிறேன். நன்றி.
முத்து,
பெங்களூர்
https://muthuvishwanathan.blogspot.com/2025/09/1.html
https://muthuvishwanathan.blogspot.com/2025/09/2.html
அன்புள்ள முத்து,
இன்று தமிழ் விக்கியின் இடம் என்பது வாசிப்பவர் எவராலும் மறுக்கமுடியாத ஒன்றாக நிறுவப்பட்டுவிட்ட ஒன்று. அதற்கு எதிரான கசப்புகள், வசைகள் எல்லாமே பழங்கதைகள். அந்த வகையான கசப்புகள் எழாத எந்த ஒரு பெருஞ்செயலும் இங்கே இதுவரை நிகழ்ந்ததில்லை.
அண்மையில் ஒருவர் அவருடைய தாத்தாகூட ஒரு தமிழறிஞர்தான் என்றும், அவரைப்பற்றிய அதிகாரபூர்வப் பதிவு ‘அரசு கலைக்களஞ்சியத்தில்’ உள்ளது என்றும் சொல்லி அதைக் காட்டினார். அது தமிழ்விக்கி பதிவு. நான் புன்னகைத்ததுடன் சரி.
தமிழ்விக்கியின் பதிவிலுள்ள மூன்று அம்சங்கள்தான் அதன் மதிப்பை உருவாக்குகின்றன.
ஒன்று, அதன் ஆசிரியர்குழு. சோதிக்கப்பட்டு வெளியிடப்படும் செய்திகள் என்னும் நம்பிக்கை. இன்று பிற ஊடகங்களில் செய்திகள் அப்படி சரிபார்க்கப்படுவதில்லை. ஆசிரியர்கள் உள்ள நிறுவனங்களில்கூட பலசமயம் இந்தவகையான செய்திகள் எளிய துணை ஆசிரியர்களின் பொறுப்புகளுக்கு விடப்படுகின்றன. அவை பிற தளங்களில் இருந்து வெட்டி ஒட்டப்படுகின்றன. (இன்று பலர் தமிழ் விக்கியில் இருந்தே எடுக்கிறார்கள்) தமிழ்விக்கி செய்திகள் பெரும்பாலும் நூல்களில் இருந்தே எடுக்கப்படுகின்றன. அந்நூல்களும் இணையநூலக தளங்களில் உள்ளவைதான். அவற்றை வாசித்து எழுதத்தான் ஆளில்லை. எங்கள் பதிவுகளை எழுதுபவர்கள் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள். எவரோ அல்ல. எங்கள் பதிவுகளில் அந்நூல்களுக்கான இணைப்புகளும் இருக்கும்.
இரண்டு, தமிழ்விக்கி பதிவுகளின் கட்டமைப்பு. தெளிவான பகுப்புகளுடன் அமைந்துள்ள அதன் செய்திவரிசைகள். எல்லா கட்டுரைகளுக்கும் ஒரே கட்டமைப்பு இருக்கும். ஆகவே தகவ்ல்களைத் தேடி எடுப்பது மிக எளிது. செய்திகள் பிற செய்திகளுடன் சீராக இணைக்கப்பட்டிருப்பது இன்னொரு வசதி. அந்த இணைப்பு அந்த பேசுபொருளில் தேர்ச்சிகொண்ட ஆய்வாளர்களால் கவனமாகச் செய்யப்படுகிறது. ஒரு வாசகன் ஒரு பதிவில் இருந்து இன்னொன்றுக்குச் சென்றுகொண்டே இருக்கலாம். முழு வரலாற்றையும் அறியலாம். கல்கி என்னும் ஒரு பதிவில் இருந்து நீங்கள் அவர் வரலாற்றை எழுதிய சுந்தா வரை செல்லமுடியும்.
மூன்று, தமிழ்விக்கியின் மதிப்பிடு. இன்று தமிழில் ஒருவரைப் பற்றிய தகவல்களைவிட அவரது பங்களிப்பு என்ன, இடம் என்ன என்று அறிவதே கடினம். அதற்கு எவரிடமும் கேட்கவும் முடியாது. தமிழ்விக்கி எவரையும் நிராகரிப்பதில்லை. ஆனால் மொத்த வரலாற்றில் ஒவ்வொரு ஆளுமையின் பங்களிப்பையும் வகுத்துரைக்கிறது. பிற இடங்களில் அனைவரைப் பற்றியும் ஒரே வகையான பாராட்டுரைகள்தான் கிடைக்கின்றன. இந்தச்சூழலில் கருத்துத்தரப்பு இல்லாத, ஆனால் ஒட்டுமொத்த வரலாற்றுப்பார்வை கொண்ட, ஒரு மதிப்பீடு என்பது அரிதானது.
அண்மையில் ஓர் இலக்கியவிழாவின் ஒருங்கிணைப்பாளர் எங்கள் தளமே எழுத்தாளர்களை கண்டுபிடிக்க உதவுகிறது என்றார். ஏனென்றால் மிகக் கறாரான மதிப்பீடுடன் இங்கே எழுத்தாளர்கள் அறிமுகம் செய்யப்படுகிறார்கள். வெறும் புகழ்மொழிகள் இல்லை. அந்த மதிப்பீட்டின் அடிப்படையிலேயே எழுத்தாளர்களை அழைக்க முடியும்.
எங்கள் பதிவுகள் விரிந்துகொண்டே செல்கின்றன. நாட்டாரியல் கலைகள், ஆலயங்கள், இஸ்லாமிய இலக்கியம், தமிழகத்தில் பணியாற்றிய ஐரோப்பியர் ஆகியவற்றைச் சார்ந்து நிறைய பதிவுகள் உள்ளன. ஆனால் அவற்றை இன்னும் பலமடங்கு விரிவாக்கமும் செய்யவேண்டியுள்ளது.
இது ஒரு தீராப்பணி. ஒரு கலைக்களஞ்சியம் என்பது ஒரு மொழியும் பண்பாடும் தன் அடித்தளத்தை கட்டி எழுப்பிக்கொள்ளும் செயல்பாடுதான். வலுவான கலைக்களஞ்சியத்தொகுப்பு மீதுதான் உண்மையான அறிவியக்கச்செயல்பாடு நிகழமுடியும். இன்றுகூட தமிழில் ஓர் அறிஞர் பற்றிப் பேசுபவர்கள் கலைக்களஞ்சியத்தில் விரிவான பதிவு இருப்பதை அறியாமல் மிக எளிய செய்திகளை நினைவிலிருந்து எழுதிக்கொண்டிருப்பதைக் காண்கிறேன். அதுதான் அடித்தளமில்லா செயல்பாடு என்பது.
இதில் ஈடுபட்டுள்ள நண்பர்கள் உண்மையில் தமிழுக்குப் பங்களிப்பாற்றுவதை மட்டும் செய்யவில்லை. அவர்கள் இதில் ஈடுபடுவதன் வழியாக தமிழ்ப்பண்பாடு, வரலாறு பற்றிய தங்களுடைய தகவலறிவை விரிவாக்கம் செய்துகொள்கிறார்கள். தங்களுக்கான அடிப்படைக்கட்டுமானத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். அந்த தகவல்களின் அடிப்படைக்கட்டுமானம்தான் அவர்கள் சிறந்த கட்டுரைகளையும், புனைவுகளையும் எழுதுவதற்கான அடிப்படையாக அமைகிறது. ஓரிரு ஆண்டுகளுக்குள் இதில் செயல்பட்டவர்களின் அறிவுத்தளம் எந்த அளவுக்கு முன்னோக்கிய பாய்ச்சலை அடைந்துள்ளது என்பதைக் காண்கையில் என் எண்ணம் மேலும் உறுதியாகிறது.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers


