வன்முறை, குரூரம், கலை- ‘அவள்’ கடிதங்கள்.

அவள்

அன்புள்ள ஆசிரியருக்கு,

‘அவள்‘ மிகுந்த தொந்தரவு செய்யும் கதை. வாசிக்கும் போதே இதை அப்படியே மறந்து கடந்துவிட வேண்டும் எனத் தோன்றிக்கொண்டிருந்தது. எப்போதும் எல்லா காலத்திலும் மீள மீள நிகழ்வது. அல்லது இத்தனை விழுமியங்களும் அறங்களும் அதற்கான பொதுப்பாவனைகளும் உருவாக்கி எடுத்த பின்னரும் மீண்டும் அத்தனை சிறுமைகளுடன் அதுவே நிகழ்கிறதென்றால் மேலும் இழிவை, இருளை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறோமா என்ன? கதையை வாசித்ததும் பன்னிருபடைக்களத்தில் துகிலுருப்பிற்கு பின் வெளிப்படும் பீமனின் சொற்களே நினைவுக்கு வந்தன. ஆணென பிறந்தமையாலேயே சூடிக்கொள்ளும் கீழ்மை.

பாலியல் வன்முறைகளில் பொதுமனம் எப்போதும் தவறாமல் புலனாய்வது பாதிக்கப்பட்டவரின் நடத்தையைதான். இங்கு பொதுமனம் என்று ஒரு தப்பித்தலுக்கு சொல்கிறேனே ஒழிய எந்த மனமும் ஆணோ பெண்ணோ, அவ்வாறான மதிப்பிடலை ஒருகணமேனும் செய்யாமல் இருக்காது என்றே உணர்கிறேன். குற்றச்சாட்டாக சொல்லாவிட்டாலும் குற்றத்திற்கான ஊற்றை ஆராய்கிறேன் என்று ஆரம்பிப்பார்கள். இக்கதையில் அப்படி நடத்தையை பாதகமாக மதிப்பிடுவதற்கான அத்தனை வாய்ப்புகளை வழங்கிய பின்னரும் எஞ்சி நிற்கும் வன்முறையின் கீழ்மையை கண்முன் நிறுத்துகிறது. அவள் எல்லைக்கோடுகளை அழித்து விளையாடுபவளாகவே இருக்கட்டும், சாட்சியாக நிற்கும் தாயை இரத்தம் கசிய தாக்கிவிட்டு செல்பவளாக இருக்கட்டும், அவளாகவே அழைத்திருக்கட்டும்.. எப்படியும் ஒருதுளியும் நியாயப்படுத்த முடியாமல் எஞ்சி நிற்கும் வன்முறையின் குரூரத்தின் கீழ்மைக்கு முன்னால் வியர்த்தம் என்பதற்கப்பால் எச்சொல்லும் எஞ்சி நிற்கவில்லை.

இது கதையின் நடைமுறை தளத்தில் வாசக மனதில் நிகழ்த்திப் பார்க்கும் கூரிய சோதனை. இந்த அளவிலேயே இக்கதை முக்கியமானதுதான். இதற்கு அப்பால் கூவமும் கடலும் அவளை அழைக்கும், அவளுடன் உரையாடும் இடங்கள் ஒட்டுமொத்த  நோக்கு கொண்ட ஒரு கலைஞன் மட்டுமே சென்றடையக்கூடியது. நம் அழுக்குகள் அத்தனையும் அவளில் கலந்துவிட்டு அவளை அழுக்கானவள் என்கிறோம். அவளோ அத்தனைக்கும் அப்பால் ஒளி சூடி நிற்கிறாள். வழக்கமாக தன் கதைகளில் வெளிப்படும் ஒளி இதில் இல்லையோ என ஓரிடத்தில் அஜிதன் சொல்லியிருந்தார். பின் மதிய வெயிலில் பளிங்குப் பரப்புபோல பிரதிபலித்து நிற்கும் கூவம் நதியின் காட்சியே இக்கதையை மீண்டும் தொகுத்துப் பார்க்கவும் நினைவு கூர்வதற்குமான தைரியத்தை அளித்தது. அந்த ஆழத்து இருள், தன்னுள் தானென அமைந்திருப்பதன் கருணை எப்போதும் மண்மீது இருக்கட்டும்.

டி.ஏ. பாரி

அன்புள்ள ஆசிரியருக்கு,

அவள் கதை படித்தேன். கதையின் கலைப்பாவனை என்பது ஒரு கொடூரத்தை ‘அப்படியே‘ சொல்வது என்பதுதான். ஆசிரியர் எதையும் சேர்க்கவில்லை என்றும், கதையின் வெவ்வேறு narration களுக்கு இடையே உள்ள ஒத்திசைவும் முரண்பாடும் எல்லாம் அப்படியே சொல்லப்பட்டுள்ளன அவ்வளவுதான் என்றும் பாவனை செய்கிறது கதை.  Plot எனப்படும் கதைவளர்ச்சியும் முடிவும் கொண்ட கதைகளைக் கடந்து இந்தவகையான கதைகள் அண்மையில் எழுதப்படுகின்றன. பிரான்ஸில்தான் இந்தவகை எழுத்து தொடங்கியது. ஆனால் ஜப்பானிய, கொரிய படைப்புகளில்தான் எல்லா எல்லைகளையும் கடந்துவிட்டார்கள். கூடவே Heavy metal போன்ற இசையும். இதை எந்தவகையிலே எடுத்துக்கொள்வது என்று எனக்கு இன்னமும்கூட சிக்கல்தான். இந்த வகையான கதைகளில் கிளாஸிக் என்று சொல்லப்படும் கதைகள் பலவற்றை வாசித்திருக்கிறேன். கலைப்படங்களையும் பார்த்துள்ளேன். ஓவியங்களையும் பார்க்கிறேன். எனக்கு அவை கடுமையான ஒவ்வாமையைத்தான் அளித்தன. அதிர்ச்சி, உடனே விலகிவிடவேண்டும் என்ற மனநிலை.

இந்தக் கதைகளில் எப்போதும் இருப்பது செய்திகளில் வரும் விஷயங்கள்தான். சமகால யதார்த்தங்கள்தான். அவற்றை மிகமிக நுணுக்கமான காட்சிகளாகவும் நிகழ்வுகளாகவும் எழுதிக்காட்டுகிறார்கள். ஒரு குவியாடியால் பெரிதாக்கிக் காட்டுவது போல. ஏன் இப்படிக் காட்டவேண்டும்? அதற்குப் பதில் இதுதான். இந்தவகையான குரூரம், வன்முறை இதையெல்லாம் ஒருகணம் பார்த்துவிட்டு உடனடியாக நாம் பார்வையை திருப்பிக்கொள்கிறோம். அது ஒரு Mass hypocrisy. நம் தலையைப் பிடித்துத் திருப்பி இதோ இதைப்பார் என்று சொல்கிறார்கள். இதில் ஏன் பிளாட் இல்லை? ஆசிரியர் ஒன்றுமே சொல்வதுபோல இல்லையே? அதற்கான பதில் இதுதான். இந்த வேறுவேறு நிகழ்வுகளுக்கு நடுவே உள்ள இணைப்பை வாசகன் உருவாக்கிக்கொண்டு அவற்றிலுள்ள அகயதார்த்தம் நோக்கிச் செல்லவேண்டும். இந்தகதை உணர்த்தவிரும்பும் விஷயம் கதைமுடிவில் இல்லை. கதையின் நிகழ்வுகளுக்கு இடையே உள்ளது.

‘அவள்‘ அந்த வகையில் தமிழில் எழுதப்பட்ட ஒரு முக்கியமான கதைதான். ஒரு வதையாக ஆகும் வாசிப்பனுபவத்தை அளிக்கிறது. Seemingly reporting என்று சொல்லத்தக்க இந்தக் கதையின் இடையே வாசகன் பொருத்திக்கொள்ள பல நுட்பமான இடங்கள் உள்ளன. ஒரு குறியீடாக ஆகக்கூடாது என்ற கவனத்துடன் வந்துகொண்டிருக்கும் கூவம். அதன் பளபளக்கும் அழகு. அதேபோல கொல்லப்பட்ட பெண்ணுக்கும் அவள் அம்மாவுக்குமான உறவு. அந்த வன்முறையை அவள்மேல் நிகழ்த்தியவர்கள் கூட்டாக ஒரு collective personality ஆக காட்டப்பட்டிருக்க பெண் தன்னந்தனியாக அதன்முன் நிற்கிறாள். இப்படி பல விஷயங்கள். எனக்கு அவள் ஒரு தற்கொலைத்தனமான வெறியுடன், கூவத்தில் குதித்துச் சாவதுபோல அந்த சாவு நோக்கிச் செல்கிறாள் என்று பட்டது. அவளுக்குள் இருந்தது தன்னை அழித்துக்கொள்ளும் ஆங்காரமா இல்லை அவளுக்கே தீமை நோக்கிய ஈர்ப்பு இருந்ததா? அவளிடமும் கடும் வன்முறை இருக்கிறது. தன்னை அழிக்கும் வன்முறை. அது எதிர்வினையா இல்லை அதுவும் சமகால வன்முறையா? இரண்டுக்கும் கதை இடம் கொடுக்கிறது. கூவம் அவ்வளவு ஈர்ப்பானது (இது எனக்கே உள்ள அனுபவம். 90ல் நான் ஒருமுறை முழங்கால்வரை இறங்கிப்பார்த்தேன்) இது மனிதாபிமானக்கதையா, ஃபாசிசக்கதையா? அண்மைக்கால இந்தவகை எழுத்துக்களை இரண்டும்தான் என்றுதான் சொல்லமுடியும்.

இன்றைய புதிய கதைவடிவம் ஒன்றை எழுதியிருக்கிறார் ஆசிரியர். அண்மைக்கால செய்திகளில் அமைதியிழந்து எழுதியிருக்கலாம்.மிக நுணுக்கமாகவும், ஒன்றோடொன்று செய்திகள் பொருந்துவதுபோலவும், ஆனால் வேண்டுமென்றே பொருத்தமாக செய்யப்படாததுபோல தெரிவதாகவும் எழுதியுள்ளார். மனதின் நுணுக்கமான சித்திரங்களும் உள்ளன. ஆனால் இந்தவகை கதைகளை எந்த அளவு நாம் வரவேற்கவேண்டும், இவற்றுக்கு உண்மையில் உள்ள இடம் என்ன என்பதெல்லாம் பெரிய கேள்விகள். நாம் இவற்றை வாசிக்கையில் உண்மையில் (நான் பிரெஞ்சு, ஜப்பானிய, கொரியக் கதைகளை எல்லாம் சேர்த்தே சொல்கிறேன்) உண்மையில் ஆசிரியர் உத்தேசிக்கும் catharsis நடக்கிறதா, இல்லை நாம் நம் மன அழுக்கைக்கொண்டு இந்த வன்முறையை உண்மையில் ரசிக்கிறோமா என்பதெல்லாம் சிக்கலான கேள்விகள். இந்தவகையான கதைகள் நவீனச் சமூகத்தில் பெருகிவரும் வன்முறைக்கு கலை அளிக்கும் எதிர்வினைகள். கழிப்பறைக் கோப்பையை கொண்டுவந்து சிற்பமாக ஆக்கி வைக்கிறார்கள். ஏன் மலத்தையே ஓவியமாக வரைகிறார்கள். ஆனால் இந்த எதிர்வினைகள் அறம் சார்ந்தவையா இல்லை, இவையும் இன்னொருவகை வன்முறைகள்தானா? நமக்கு நாமே செலுத்திக்கொண்டாலும் வன்முறைதானே?

எனக்கு இவற்றின்மேல் ஒவ்வாமைதான் உள்ளது. இவை தேவையில்லை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் இங்கே ஐரோப்பாவில் ஓவியங்கள், நாடகங்கள், இசை எல்லாவற்றிலும் இதே வன்முறையின் உச்சமான நுணுக்கம்தான் உள்ளது. என் ஒவ்வாமையையும் மறுப்பையும் மட்டும் பதிவுசெய்கிறேன். I understand the type of art this represents, yet I choose to reject it.

ஶ்ரீனிவாஸ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 21, 2025 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.