ரமேஷ், கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
நான் தத்துவம் பயில்வதற்காக 1992 ல் டெல்லி பல்கலையில் சேர்ந்த ஆண்டில்தான் ஒரு நூலை வாசிக்க நேர்ந்தது. சார்த்ர் எழுதிய Nausea என்ற நாவல். ஒரு நாவலுக்கு வாந்தி என்று தலைப்பு இருப்பது எனக்கு கடுமையான அருவருப்பை உருவாக்கியது. ஆனால் அதைப்பற்றிய ஒரு ஏற்பை என் மூத்த நண்பர்கள் பேசிப்பேசி உருவாக்கினார்கள். ஒவ்வாமையே ஓர் இலக்கியப்படைப்பின் காரணமாக ஏன் இருக்கக்கூடாது என்று சொன்னார்கள். இன்று அந்நாவலை ஓர் உயர்வான படைப்பாக நான் நினைக்கவில்லை. அது மூளைசார்ந்த நாவல். சார்த்ரின் சிந்தனைகளை வெளிப்படுத்தும் ஒரு ஃப்ரேம்வர்க் மட்டும்தான். ஆனால் அது வெளிப்படுத்திய சிந்தனைகள் முக்கியமானவை. ஒவ்வாமை, விலக்கம் ஆகியவற்றின் ஓர் ஆவணம் அது.
2012ல் உங்கள் தளத்தின் வழியாக நான் ரமேஷ் பிரேதனை அறிமுகம் செய்து கொண்டேன். அவருடைய எழுத்து பின்நவீனத்துவ எழுத்துமுறை கொண்டது. அதாவது மெட்டா ஃபிக்ஷன் வகைமை கொண்டது. ஆனால் அவருடைய பார்வையும், அவர் படைப்புகளின் உள்ளடக்கமும் சார்த்ரின் படைப்புகளுக்குத்தான் நெருக்கமானவை. Nausea ரமேஷ் படைப்புக்களை புரிந்துகொள்ள மிகவும் உதவும் ஒரு நாவல். ஒவ்வாமை கடுமையான தீவிரத்துடன் வெளிப்படும் படைப்புகளாகவே நான் அவர் கதைகளைப் பார்க்கிறேன். வேறுபாடு ஒன்றே. சார்த்ர் போன்றவர்கள் ஒரு மனதை ஒரு தனிப்பட்ட அமைப்பாகவும், ஒரு மனிதனை ஒரு பெர்சனாலிட்டியாகவும் பார்க்கிறார்கள். ரமேஷ் மனதை ஒருவகை உடல் என்றும், மனிதனை ஒரு சமூகக்கட்டுமானமாகவும் பார்க்கிறார்.
இந்தவகை நாவல்கள் ‘செரிபரெல்’ என்று சொல்லத்தக்கவை. பிரச்சினைகளை ஐடியாக்களாக ஆக்கி, அந்த ஐடியாக்களை சொல்ல புனைவு என்னும் கட்டமைப்பை உருவாக்கிக் கொள்கிறார்கள். புனைவுகளை உருவாக்கி அதன் வழியாக இவர்கள் ஆழ்ந்து செல்வதில்லை. ஆகவே வாசகனுக்கு அவனே கண்டடையும் நுட்பங்களும் ஆழங்களும் இருப்பதில்லை. அவன் அவனை இவற்றில் பார்க்கமுடிவதில்லை. ஆசிரியனையே எல்லா பக்கங்களிலும் பார்க்கவேண்டியுள்ளது. ஆசிரியனின் குரல் மட்டுமே உள்ளது. ஆசிரியனின் தத்துவப்பார்வையும் கொந்தளிப்புகளும் இந்நாவல்களில் உள்ளன. அந்தவகையில் இவை முக்கியமான இலக்கியப் பாகுபாட்டைச் சேர்ந்தவையகாவே உள்ளன. ரமேஷ் பிரேதனுக்கு வாழ்த்துக்கள்.
எம்.சபரிகிரீசன்
அன்புள்ள ஜெ,
ரமேஷ் பிரேதனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ளமைக்கு வாழ்த்துக்கள். அவருடைய சொல் என்றொரு சொல் நூலை மட்டுமே வாசித்துள்ளேன். மனித இருப்பு மொழியால் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், மொழியே மனிதனின் வதைக்களம் என்றும் அந்நாவல் சொல்வதாக எனக்குத் தோன்றியது. ஒருவகையான நெருக்கடியுடனேயே நான் வாசித்த படைப்பு அது. ரமேஷ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
ஆர்.ஜி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
