Jeyamohan's Blog, page 10
September 24, 2025
ரமேஷ் வாழ்த்துக்கள்
ரமேஷ் பிரேதன் பற்றி விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்ட பிறகுதான் அறிந்தேன். இணையத்திலே நான் வாசித்தவற்றில் 90 சதவீதம் வாழ்த்துக்களும் அன்பால் சொல்லப்பட்டவை. வாசிப்பனுபவத்தில் இருந்து வந்த வாழ்த்துக்கள் மிகக்குறைவாகவே வெளிவந்துள்ளன. இந்த மாதிரியான சூழலில் வெவ்வேறு வாசகர்கள் தங்கள் வாசிப்பனுபவத்தை எழுதுவதென்பது அவசியமான ஒரு செயல்பாடு. அதன் வழியாகவே நாம் அவர் உலகுக்குள் நுழைய முடியும். ஒரு படைப்பாளி யுனீக் ஆன ஓர் உலகத்தை உருவாக்கினார் என்றால் அதற்குள் நுழைவது கடினம்தான். அதற்கு கூட்டான வாசிப்பு உதவியானது. ஆகவே வாசிப்பவர்கள் அவரைப்பற்றி எழுதினால் அது உதவியானதாக இருக்கும் என நினைக்கிறேன்.
சா.ராமதாஸ்.
அன்புள்ள ஜெ
ரமேஷ் பிரேதனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ள செய்தியை அறிந்தேன்.அவருடைய படைப்புகளில் சில கதைகளை மட்டுமே நான் வாசித்திருக்கிறேன். அவற்றைப் பற்றிய என் எண்ணம் இது. அனுபவங்கள், உணர்ச்சிகள், கருத்துக்கள் ஆகியவை அவர் படைப்பில் ஒரு அந்தரங்கமான தீவிரத்துடன் உள்ளன. ஆனால் அவற்றை அவர் நேரடியாக முன்வைப்பதில்லை. அவருக்கு ஒரு வாசகர் உள்ளார். ஓர் அந்தரங்கமான வாசக உருவகம் அது. அந்த வாசகருடனான ஒரு புதிர்விளையாட்டாக அவர் அந்த அனுபவங்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துகிறார். அந்த வாசகன் தன்னை கண்டுபிடிக்கவேண்டும் என விரும்புகிறார். ஆனால் எளிதாகக் கண்டுபிடித்துவிடக்கூடாது என்று முக்கால்வாசி ஒளித்தும் வைக்கிறார். அவரை ஒரு காட்டில் இலைகளுக்குள் பதுங்கியிருந்து கண்களை மட்டுமே காட்டிக்கொண்டிருக்கும் ஒரு விலங்கு என்று நான் உருவகம் பண்ணி வைத்திருக்கிறேன். அந்த விளையாட்டு வழியாக நாம் கொஞ்சம் அவரை அறிகிறோம். கொஞ்சம் அவரை கற்பனைசெய்துகொள்கிறோம். அப்படி எங்கும் காட்டிக்கொள்ளாமல் திகழும் கலை உடைய எழுத்து அவருடையது என்று படுகிறது.
சாரநாதன் ஜெயசீலன்
வன்முறை,குரூரம், அவள்- கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
அவள் கதை பற்றிய பாராட்டு விமர்சனம் இரண்டையும் படித்தேன். பாராட்டுக்கள் அந்தக் கதையின் நுணுக்கமான சித்தரிப்பு அளித்த ஆழமான உணர்ச்சிகரமான பாதிப்புகள் சார்ந்து இருந்தன. அந்தக் கதையில் கூவம் மௌனமான படிமமாக இருந்ததையும் சொல்லியிருந்தார்கள். அந்தக்கதை குரூர அழகியல் கொண்டது, அந்த வகையான கதைகள் இந்தக் காலகட்டத்தின் அழகியல் என்றும் சொல்லியிருந்தார்கள். அது உண்மைதான். ஆனால் ஒரு வலுவான அரசியல் இல்லாத இடத்தில் கலை ஃபாஸிசத்தின் பக்கம்தான் போகும் என்பதற்குச் சரியான உதாரணம் இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விருது பெறும் ரமேஷ் பிரேதன். அவருடைய கதைகள் எல்லாமே அறம் அற்றவை, அடிப்படையில் நசிவை முன்வைக்கும் ஃபாஸிசம். அதே வரிசையில் வரும் கதை இது. இதிலும் உள்ளது ஃபாசிசம்தான். அந்தக் கொலை ஒரு குற்றம். அதை மறைமுகமாக ரசிக்கத்தக்கதாக ஆக்குவதும் ஃபாசிசம்தான். உலகம் முழுக்க இன்றைய கலையில் பெரும்பகுதி ஃபாசிசம்தான். ஆப்ரிக்காவில் பஞ்சத்தில் மக்கள் சாகிறார்கள். காசாவில் கொல்லப்படுகிறார்கள். ஒருவன் மலத்தை சிற்பமாக செதுக்கி வைக்கிறான் என்றால் அவன் ஒரு ஃபாசிஸ்டு என்று மட்டுமே சொல்லமுடியும்.
மா.அறவேந்தன்.
சீமான், தமிழ்ப்பெருமிதம், கடிதம்
இன்றைக்கு சீமான் பேசும் தமிழ்த்தேசியம் ஒரு முக்கியமான அரசியல் தரப்பாக மாறியிருக்கிறது. அதை நம்பி தீவிரமாக உள்ளே செல்லும் ஒரு பெரிய இளைஞர்கூட்டமும் உருவாகியுள்ளது. சீமானுக்கு அரசியலில் உண்மையில் என்ன இடம் என்பது நம்மால் இன்னும் புரிந்துகொள்ளப்படவில்லை என்பதே உண்மை.
சீமான், தமிழ்ப்பெருமிதம், கடிதம்I understand that you are imagining an alternate society that has proper training on cultural things. I wonder what your final goal is. Are you envisioning an elite inner circle? Or a social change?
What, then, is the ultimate dream?அஞ்சலி எஸ்.எல்.பைரப்பா
September 23, 2025
Another novel workshop at Virginia.
I conducted a workshop on writing novels in Chennai for Manasa Publications. Now, my friends in the USA are asking me to hold similar classes there. A one-day class is scheduled at Virginia
This is an introductory class designed to cover the fundamentals of writing a short modern novel. Manasa Publications is hosting a novel competition and is inviting submissions from writers in the USA as well.
https://www.manasapublications.com/manasalitprizeநம் பிள்ளைகளை எப்படி வாசிக்கவைப்பது?
என்னிடம் எங்கும் பெற்றோர் கேட்கும் கேள்வி தங்கள் பிள்ளைகளை எப்படி வாசிக்கச் செய்வது என்பதுதான். பிள்ளைகள் ஒன்றுமே வாசிப்பதில்லை, புத்தகங்களை கொடுத்தாலும் வாசிக்கச்செய்ய முடியவில்லை, செல்பேசிகளும் கணிப்பொறிவிளையாட்டுமே அவர்களின் உலகமாக உள்ளது. இதைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்காக இந்த காணொளி…
செயற்கைநுண்ணறிவு மொழி, மொழிச்செயல்பாடுகள், கனவுகள்
சுசித்ரா ராமச்சந்திரன் தமிழ் விக்கி இயந்திர மொழியாக்கம், இனிவரும் சவால்கள்..
‘இந்த செயற்கை நுண்ணறிவுக் காலகட்டத்தில் மொழியாக்கத்தை ஓர் இயக்கமாக முன்னெடுப்பது முட்டாள்தனம் இல்லையா?’ என்று தெரிந்தவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கேட்பதுண்டு ஒரே பதில்தான். மொழிகள், தனி மொழிகள், அகமொழிகள், நமக்கே ஆன தனிவழிகள் பேணப்பட வேண்டும் என்றால் அதைச் சிலரை என்றும் மூளைப் பழக்கமாகவும் கைப்பழக்கமாகவும் பயின்று தொடர்ந்துவரும் தலைமுறைகளுக்கு கையளிக்க வேண்டும்.
எனக்குள் அந்த தனிமொழிக்கான திறன் உள்ளது. இனறு நல்ல வெகுமானமாக மாறக்கூடிய கணித மூளையும், பகுப்பாய்வுத் திறனும், துறை அனுபவமும் நிறையவே உண்டென்றாலும் அவற்றைவிட என் மொழித்திறன் பலபடிகள் மேலானது ,தனித்துவமானது என்று நம்புகிறேன் . மேலும் இந்த அறிவியல்சராசரித்தன்மையின் யுகத்தில்மனிதத்தன்மை பேணப்படபோவதூயர்சிந்தனையிலும் தனிமொழி வெளிப்பாட்டிலும்தான் என நம்புகிறேன். ஆகவே வேறு எதிலும் என்னால் மையல் கொள்ள முடியவில்லை.
செயற்கை மொழியின் சூழல் வரப்போகும் எதிர்காலத்தில் இல்லை. நாம் இப்போதே ஒரு சராசரிச் செயற்கை மொழிக்குள்தான் பழகிக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன். அன்றாட ஆங்கிலம் மட்டுமல்ல, இலக்கியவகை ஆங்கிலம் கூட உலகம் முழுக்க ஒரு தரப்படுத்தப்பட்ட செயற்கைத் தன்மையை அடைந்து விட்டது. ஏனென்றால் உலக ஆங்கிலப் புத்தகச்சந்தை என்பது ஒன்றுதான். அதற்கு ஒரே மொழிதான் தேவை. அந்தச் சந்தைக்கு ஏற்ப தரப்படுத்தப்பட்ட பொதுமொழிக்குள் சின்னச் சின்ன வேறுபாடுகளை உருவாக்குவதுதான் உண்மையில் இன்று ரசிக்கப்படுகிறது. சிந்தனைக் கட்டுமானமும் ஒன்றுதான். இந்த சராசரித் தன்மையால் சலிப்புக்கு தான் தமிழ் வாசிப்பிற்குள்ளேயே நான் வந்தேன். இங்கு வேறு வகையான கூத்துகள். ஆனால் என் தேடல் கூர்மை அடைந்துள்ளது.
யோசித்துப் பார்த்தால் என்னை மொழியாக்கத்திற்குள் முதன் முதலாக ஈர்த்தது ‘பெரியம்மாவின் சொற்கள்’ என்ற கதை என்பது இப்போது வியப்பாகவோ தற்செயலாகவோ தோன்றவில்லை .இந்த விஷயங்களை குறித்த ஒரு fable போலத்தான் தோன்றுகிறது அந்த கதை. (பெரியம்மாவின் சொற்கள். சர்வதேசப்பரிசு பெற்ற ஆங்கில மொழியாக்கம்)
பெரியம்மா தனக்கான மொழி கொண்டவர். அவரை பொதுமொழிக்குள் கொண்டுவர முயற்சிக்கப்படுகிறது. ஆனால் அதிலிருந்தும் அவர் தனக்கான ஒரு தனிமொழி ஒன்றைத்தான் உருவாக்கிக் கொள்கிறார். Love என்று ஆங்கிலச் சொல்லின் புழங்கு அர்த்தம் அவரை சந்தேகம் கொள்ளச் செய்கிறது .ஆனால் அங்கிருந்து அது bond என்ற இடத்தை அடைகிறார் . You is bond, You is kind என்று கண்டடைகிறார். த்ன் நெஞ்சில் கை வைத்து self என்று சொல்லும்போது பெரியம்மா உணர்வது தான், தன்இடம் என்பதைத்தான்.
பெரியம்மா அந்த கதையில் உணரும் சுயம் அவர்தான். அது அவர் தன் மொழி வழியாக அடைந்த ஒன்று. உலகம் அவரை சுற்றி உடைந்து உருமாறிக் கொண்டிருக்கிறது. அவர் மொழியும் நெம்பி நெகிழ்த்தப்படுகிறது. ஆனால் அதை நேர்மையாக, தன் உண்மை அன்றி வேறொன்றையும் கைக்கொள்ளாமல் சந்திக்கும் இடத்தில் அவர் தனக்கான தனிமொழியை, ‘தன்னிடத்தை’ கண்டடைகிறார் .
இந்த கதையை கதை என்பதை மீறி, என் சொந்த வாழ்க்கைப் பயணத்தோடு இணையும் ஒரு தரிசனமாகவே உணர்கிறேன். இந்த கதைக்கு ஓர் ஆன்மீகம் உள்ளது. அதை எனக்கானதாக, எந்னை அறியாமல் தொட்டு ஏற்றுக் கொண்டிருப்பதை இப்போது உணர்கிறேன். என் செயல்களுக்கு, விழுமியங்களுக்குப் பின்னால் உள்ள ஒரு நம்பிக்கை ஒரு வகையில் இந்த கதையை நான் சந்தித்த இடத்தில் உருவானது.
அதை ‘மொழி’ சார்ந்த இலட்சியவாதம் என்பதை விட தான் தான் சார்ந்த இலட்சியவாதம் என்று இன்று கூற துணிவேன். இது சிக்கலான இடம். இங்கே நான் ‘தான்’ என்பதை பால் ,இன, மத, மொழி சார்ந்த அடையாளத் தன்னிலையைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தவில்லை. இவ்வம்சங்கள் ஒரு தனனிலையை வடிவமைப்பில் பங்கு கொண்டாலும் அதன் வழியாக உருவாகி வரும் சுவையாகிய ‘தான்’ என்பதில் உருவாகிவரும் தெய்வம் இன்னொன்று. இதை என்னால் முழுவதும் வகுத்துரைக்க முடியவில்லை ,ஆனால் உணர்கிறேன் .இனறு என் தேடல் அந்தத் தானே சேர்ந்ததாகவே உள்ளது.
செயற்கை நுண்ணறிவின் மொழிக்கு ‘தான்’ அல்லது ‘தன்னிடம்’ இல்லை. செயற்கை நுண்ணறிவால் மொழியின் சாயலை நகலெடுக்க முடியும். அந்த மொழிச் சூழலுக்கு உள்ளே ஒரு புதிய மொழியை உருவாக்க முடியாது.
இந்த தேடல் பகுதியாக உருவான அமைப்பிற்கு மொழி என்று பெயர் அமைந்ததும் ஆச்சரியமான ஒன்றாக தோன்றவில்லை. மொழி மொழியாக்கத்தை ஊக்குவதற்கான உருவாக்கப்பட்ட ஒரு தளம் என்றும், ஒரு வகையான கொள்கை பரப்பு ஊடகம் என்றும் இலக்கியத்திற்குள்ளேயே பல நண்பர்கள் பேசிக் கேட்டதுண்டு இந்த விஷயங்கள் செயல்பாடு சார்ந்து மட்டுமே நிறுவப்படும் என்று அறிவேன் என்பதனால் நான் அவர்களுடன் வாதித்ததில்லை.
உண்மையில் மொழி அமைப்பில் நாங்கள் உத்தேசிப்ப்து மொழி வழியாக, இலக்கியம் வழியாக, தனக்கான மொழியை தானே கண்டறிந்தவர்களை முன்னிறுத்துவதுதான்.இப்படிப்பட்டவர்கள் இயல்பாகவே தங்களுக்கான அழகியல் சார்ந்த அளவீடுகள் கொண்டுள்ளதை காண்கிறோம். அது எப்படியோ அவளுடைய ஆளுமையை வகுக்கும் அளவிடாகவும் உள்ளது.

மொழி இணைய தளத்தில் தற்போது மலையாள விமர்சகர் கே.சி நாராயணனுடன் ஒரு நீண்ட பேட்டி வெளியாகி உள்ளது. கே.சி அவர்களை தன்னிடத்தை (மலையாளத்தில் அது தன்றேடம். தன் இடம், துணிவு, கம்பீரம் ஆகிய பொருட்கள் கொண்ட சொல்) தன் மொழி வழியாகவும் கலை வழியாகவும் அடைந்த ஒருவராகவே இந்த நேர்காணல் வழியாக கண்டடைந்தோம். அவ்வாறே அவரை அறிமுகம் செய்கிறோம்.
‘எனக்கும் இருத்தலியல் சிக்கல் உண்டு ,ஆனால் கலைகளில் அபத்தம் என்பது இல்லை’ என்று கே.சி கூறுமிடத்தில் அவரை எவரென்று கண்டு கொண்டோம். ஊடகவியலாளர், வாசகர், விமர்சகர் கே.சியைத் தாண்டி கதகளி வழியாக செண்டை மேளம் வழியாக நாங்கள் கண்டடைந்த கே.சி எங்களுக்கு மேலும் அணுக்கமானவர். அது ஒரு வகையில் ஆழமான வேரை பின்தொடர்ந்து சென்ற பயணம். அந்த அறிதல் கே.சியின் ஆளுமையும் பணியை மேலும் துலக்கம் கொள்ளச் செய்தது.

இதே இதழில் மொழிபெயர்ப்பாளராகிய அழகியமணவாளனுடன் ஒரு பேட்டி இடம்பெற்றுள்ளது. இளம் வயதுக்காரர் என்றாலும் மொழி வழியாகவும், மாற்றுப் பண்பாடு ஒன்றில் ஆழ்ந்ததின் வழியாகவும் தன் இடத்தை கண்டறிந்த ஒருவர் என்பதனாலேயே நாங்கள் அவரை முக்கியமானவராகக் கருதுகிறோம். ‘கலைமனம் கொண்டவன் வேரற்றவனாக இருக்க முடியாது’ என்கிறார் மணவாளன். ஆனால் அந்த வேர் பிறந்த மரபில் தான் இருக்க வேண்டும் என்பது இல்லை .பிகே பாலகிருஷ்ணன் பின்தொடர்ந்து சென்று மணவாலன் அவருடைய உலகத்தில் தன்னை கண்டறிந்தார் .தனக்கான தன்றேடமான மொழி என்று உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்த நேர்காணல்கள் மூன்று மொழிகளில் மொழியாகி உள்ளன .பிற மொழிகளிலும் வெளியாகும். ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் ஒரு புதிய தலைமுறை வாசகர் பரப்பை திரட்டி உரையாடுவது எங்கள் நோக்கம் .முழுக்க முழுக்க மனிதமொழிச் செயல்பாடு இது. தனித்துவமான மொழியும் அறிதலும் கொண்ட மனிதர்களை முன்வைப்பது. செயற்கை நுண்ணறிவின் தரப்படுத்தல் மொழிக்கு முற்றிலும் எதிரானது.
இது தமிழ்ச் சூழலில் இருந்து கிளம்பியுள்ள ஓர் இயக்கம். ஆனால் தமிழில் இருந்து ஓரிருவர் தவிர எவரும் இதைக் கவனித்ததாக தெரியவில்லை. ஒரு நாலாந்தர மொழிபெயர்ப்பைப் பற்றிய வாக்குவாதத்தில்தான் அனைவருடைய கவனமும் குவிந்திருக்கிறது. சரிதான், செயல்கள் பொன்னைப் போன்றவை. தங்கள் மதிப்பை அவை தாங்களேதான் நிறுவ வேண்டும் என்று சமீபத்திய காணொளி நீங்கள் சொன்னதாக நினைவு. அதைத் தலைக்கொள்கிறேன் மகிழ்ச்சி.
சுசித்ரா ராமச்சந்திரன்
மொழி இணைய இதழ் கே.சி.நாராயணன் பேட்டி அழகிய மணவாளன் பேட்டிஅன்புள்ள சுசித்ரா,
நீங்கள் உயிரியலில் முதுமுனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவிலும் சுவிட்சர்லாந்திலும் உலகின் முதன்மை ஆய்வகங்களில் முதுநிலை அறிவியலாளராகப் பணியாற்றிவிட்டு, அறிவியலை உதறிவிட்டு முழுநேர இலக்கியப்பணிக்கு வந்தபோது நான் சிலவற்றை கொஞ்சம் கறாராகவே சொன்னேன் என நினைக்கிறேன். அதையெல்லாம் மீண்டும் சொல்கிறேன். உங்களைப்போல, பிரியம்வதாவைப்போல, நேரடியாகவே ஆங்கிலக் கல்வி கற்று, ஆங்கில இலக்கியத்தில் ஆழ்ந்த வாசிப்பை அடைந்து, அதன்பின் சலிப்புற்று , நுணுக்கமான கலாச்சார உட்கூறுகளைத் தேடி தமிழிலக்கியத்திற்கு வரும் புதுத்தலைமுறை வாசகர்களை சந்தித்துக்கொண்டே இருக்கிறேன். குறிப்பாக அமெரிக்காவில். (ஆச்சரியமாக மிகச்சிலர் தவிர அனைவருமே பெண்கள்). அவர்கள் அனைவருக்குமாக நான் சொல்வன இவை.
தமிழிலக்கியம் சிற்றிதழ் சார்ந்தே நீண்டகாலமாகச் செயல்பட்டது, அதற்கான சரித்திரக்காரணங்கள் பல உண்டு. புறக்கணிக்கப்பட்டு, வாசகர்களே இல்லாமல் இது இயங்கியது. ஓர் எழுத்தாளருக்கு இன்னொரு எழுத்தாளரே வாசகர். ஆகவே இங்க நட்புக்குழுக்கள், பகைக்குழுக்கள் மிக அதிகம். ஆனால் வாசகர்கள் இலக்கியத்திற்கு எப்போதுமே கட்டாயம் இல்லை. வாசகர்கள் இல்லை என்றால் எழுத்தாளன் தன் கனவுக்கும் தேடலுக்கும் மட்டுமே தன்னை முழுதளிக்கவும்கூடும். ஆகவே இதற்குள் சில மகத்தான இலக்கியங்கள் உருவாயின. அந்த இலக்கியச் சாதனைகளுக்காகவே ஒரு புதிய தமிழ்க்குழந்தை தமிழிலக்கியத்தை வாசிக்கவேண்டும். உங்களைப்போன்றவர்களால் அது உலகவாசகர்களை நோக்கிக் கொண்டுசெல்லப்படவும் வேண்டும்.
ஆனால் அதேசமயம் இச்சூழலுக்குள் இரண்டு எதிர்மறை அம்சங்களும் உண்டு. ஒன்று வம்பு. இது ஒரு சிறுகுழு ஆனதனால் ஒரு பெரிய கூட்டுக்குடும்பத்திற்குள் உள்ள ஓயாத வம்புச்சண்டை இங்குண்டு. வம்பின் பொருட்டு மட்டுமே உள்ளே வந்து, எதையுமே படிக்காமல் உள்ளேயே உழல்பவர்கள் பலர் உண்டு. சலிக்காமல் வம்புகளை உருவாக்கிக்கொண்டே இருப்பார்கள். பெரிய இலக்கியச் சூழலுக்குள் இவர்களின் இடம் பொருட்படுத்தப்படாது, ஆனால் இங்கே தொடர்ச்சியாக இருந்துகொண்டிருந்தால்போதும் இவர்களுக்கும் இடம் உருவாகிவிடும். மிக அற்பமான, அபத்தமான கருத்துக்களைச் சொல்லிக்கொண்டே இருந்தால்கூட, விடாப்பிடியாக இருந்தால் ஒரு பத்தாண்டுகளில் இலக்கியவிமர்சகர், இலக்கியச் செயல்பாட்டாளர் என்றெல்லாம்கூட அடையாளம் வந்துவிடும்.
இங்கே இலக்கிய விவாதங்களில் எவருக்கும் சொந்தத் தரப்பு பெரும்பாலும் இருப்பதில்லை. ‘என் கருத்து வேறு’ என்பார்கள். சரி அதைச் சொல்லு என்றால் பம்மிவிடுவார்கள். எந்த நூலைப்பற்றியும் எதுவுமே எழுதப்பட்டிருக்காது. மூத்த எழுத்தாளர்கள் பற்றிக்கூட ஒரு சில நல்ல கட்டுரைகளைக் காணமுடியாது.ஏன், ஓயாது சினிமா பார்ப்பார்கள், ஆனால் நல்ல சினிமா பற்றிக்கூட இங்கே ஓரிரு வரிகளுக்குமேல் எதுவுமே வாசிக்கக் கிடைக்காது. இங்கே தனிநபர் சார்ந்த பற்றும் காழ்ப்பும் மட்டுமே அணிசேரலுக்கும் அடிப்படை. வம்புகள் அதைச் சார்ந்தே. என்னை வெவ்வேறு காரணங்களுக்காக பிடிக்காதவர்களுக்கு நான் என்ன சொன்னாலும் அது பிழை, எனக்கு எதிராக எவர் என்ன சொன்னாலும் அதெல்லாம் சரி. அவ்வளவுதான் இவர்களின் அறிவுத்தளம்.
இரண்டாவது விஷயம், பாவனைகள். மிகக்குறைவாக படித்த ஒருவர் பெரும்படிப்பாளி போல இச்சூழலுக்குள் பாவனைகாட்டி இருபது முப்பது ஆண்டுகளை ஒட்டிவிடமுடியும். பிறரை மட்டம்தட்டும் பாவனை உட்பட அதற்கான தோரணைகளைக் காட்டிக்கொண்டாலே போதும். இங்கே ஒரு பழைய சிற்றிதழுடன் சம்பந்தப்பட்டிருந்ததனால், ஓரு மூத்த எழுத்தாளரை அடிக்கடிச் சந்தித்ததனால் மட்டுமே ஒருவர் மூத்த இலக்கியவாதியாக திகழமுடியும். இங்கே எந்த நூலைப்பற்றியும் பெரிதாக எதுவுமே எழுதப்பட்டதில்லை. ஆனால் நூல்களின் பெயர்கள் மட்டும் புழங்கிக்கொண்டே இருக்கும். அத்துடன் மொழிபெயர்ப்பு என்றபேரில் நிகழும் கூத்துகள். அந்த அபத்தமான மொழிநடையை நகலெடுத்து எழுதப்படும் அசட்டுப்படைப்புகள். அதற்கும் ஒரு நாலுபேரை இந்த சின்ன வட்டத்திற்குள் திரட்டிவிடமுடியும்.
இங்கே எதையுமே படிக்காமல் அங்கே இங்கே தட்டிச்சேர்த்து கட்டுரைகளை எழுதி நூல்களை வெளியிட்டு அறிஞராக இங்கே திகழமுடியும். அப்படி பலபேர் உண்டு. (எப்போதாவது மொழியாக்கம் செய்தால்தான் மாட்டிக்கொள்வார்கள், மொழியே தெரியவில்லை என்று வெளிப்பட்டுவிடும்). இதை அமெரிக்கச் சூழலில் செய்யமுடியாது. அங்கே FSG போன்ற பிரசுரநிறுவனங்கள், அதன் நிபுணர்கள் உண்டு. அவர்கள் வடிகட்டிவிடுவார்கள். இந்தக்கூட்டம் அங்குமிருக்கும், ஆனால் வெளியே தெரியாது.
இங்கே இலக்கியம் வாசிக்கவரும் 30 வயதுக்குக் குறைவானவர்கள் இங்குள்ள இந்த பாவனைகளைக் கண்டு முதலில் அரண்டுபோவதும், ஓரிரு ஆண்டுகளில் சலிப்புற்று எரிச்சலுடன் பேச ஆரம்பிப்பதையும் காண்கிறேன். சக சிற்றிதழாளர்களிடம் பாவலா காட்டுவதற்காக படிப்பாளி வேடமிடுபவர்கள் இந்த இளைய தலைமுறைக்கு முன் கோமாளிகள் ஆகிறார்கள், ஆனால் அவர்களுக்கு அது தெரிவதே இல்லை.
இந்த வம்புகள், பாவலாக்களை ஒரு சிறு குழுவாக இலக்கியம் இயங்கியமையின் எதிர்விளைவுகளாகவே காணவேண்டும். இவற்றை முழுக்க உதாசீனம் செய்து உண்மையான படைப்புகளை அடையாளம் கண்டு அவற்றை மட்டுமே தமிழிலக்கியம் என பொருட்படுத்தி வாசிப்பதே செய்யக்கூடுவது. அது ஏற்கனவே உலக இலக்கியத்தின் படைப்புகளை வாசித்து விட்டு இங்கே வருபவர்களுக்கு ஒன்றும் கடினமாக இருக்கப்போவதில்லை.
ஆகவே இந்த வம்பாளர்கள் உங்கள் அரியமுயற்சிகளை அடையாளம் காணவில்லை என்பதை ஒரு பொருட்டாக நினைக்கவேண்டியதில்லை. அவர்கள் அல்ல தமிழிலக்கியம், அது வேறு. அதன் வாசகர்களும் வேறு.அந்த வாசகர்களையும் மிக எளிதாக அடையாளம் காணமுடியும். அவர்களிடமே நீங்கள் பேசுகிறீர்கள் என எண்ணிக்கொண்டால் போதுமானது.
செயல் குறித்த கனவுகள் எப்போதுமே சற்று அவநம்பிக்கையுடன் மட்டுமே பார்க்கப்படும். அது மானுட இயல்பு. செயலின் வெற்றி ஒன்றே அதற்கான பதில். அதிலும் பெண்கள் தொடங்கும் ஓர் இயக்கத்தை தமிழ்ச்சமூகத்தின் பொதுமனநிலை இன்னும் ஒரு படி கூடுதலான அவநம்பிக்கையுடன், உதாசீனத்துடன் மட்டுமே எதிர்கொள்ளும்.
மொழி அமைப்பின் தொடர்செயல்பாடுகளால் இன்று தமிழிலக்கியத்திற்கு இந்திய அளவில் ஒரு கவனம் வந்துள்ளது. நேற்றுவரை இங்கே நவீன இலக்கியம் என ஒன்று உண்டு என்பதே இந்திய இலக்கியச் சூழலில் ஏற்கப்படாத ஒன்றாக இருந்தது. உங்களைப்போன்ற இளைய தலைமுறையினரின் பணிகள் அதை மாற்றத்தொடங்கியுள்ளன. அப்பணிகளை தென்னிந்தியாவை உள்ளடக்கி முன்னெடுப்பது மேலும் வீச்சு கூட்டும் என நினைக்கிறேன்.
இந்திய ஆங்கில இலக்கியச் சூழலில் இன்று இதழாளர்களே விமர்சகர்கள் என அறியப்படுகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் அரசியல் சார்ந்த, சமூகவியல் சார்ந்த எளிய உள்ளடக்கப்பார்வையையே கொண்டிருக்கிறார்கள். அல்லது வெறுமே மேலை அழகியயல் கோட்பாடுகளை எழுதும் பேராசிரியர்கள். இச்சூழலில் முதன்மையான அழகியல் விமர்சகர்களின் அசலான குரலை முன்வைத்து ஒரு அடிப்படையான உரையாடலை உருவாக்க முன் வந்திருக்கிறீர்கள். எந்தச் செயலும் அதன் தீவிரத்தால், தொடர்ச்சியால் மட்டுமே வெற்றிநோக்கிச் செல்கிறது. வாழ்த்துக்கள்.
ஜெ
ரமேஷ், கடிதங்கள்
அன்புள்ள ஜெ
ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டுள்ளமை அறிந்து மகிழ்ந்தேன். தமிழில் அவர் எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்ற அளவிலேயே வாசிக்கப்பட்டுள்ளார் என நினைக்கிறேன். வெவ்வேறு எழுத்தாளர்கள் அவரைப்பற்றிப் பேசியுள்ளனர். ஆனால் வாசகர்கள் குறைவாகவே அவரை வாசித்துள்ளார்கள். இந்த விருது அவருக்கு மேலும் அதிக வாசகர்களைப் பெற்றுத்தர வழிவகுக்கும் என நினைக்கிறேன்.
வாசகர்கள் இல்லாமல் எழுதும்போது எழுத்தாளர் உண்மையில் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். தானே சிந்தனை செய்தவற்றுக்கும், தானே எழுதியவற்றுக்கும் அவரே எதிர்வினை ஆற்ற ஆரம்பிக்கிறார். அது ஒரு சுழல் போல ஆகிவிடுகிறது. உண்மையில் எழுத்து என்பது ஓர் உரையாடல். வாசகருடன் எழுத்தாளர் உரையாடுகிறார். அந்த வாசகர் ஒரு திரள் அடையாளம்தானே ஒழிய உண்மையில் இருக்கும் ஒருவர் அல்ல. அந்த எதிர்வினைகளில் இருந்தே அவர் மேலே செல்லவேண்டும். அந்த வாசகர் என்பவர் சமூகம் அல்லது சமூகத்தின் அறிவு என்று சொல்லலாம்.அந்த உரையாடல் வழியாக நகரும் எழுத்து தீவிரம் அடைகிறது. ஆனால் பல பெரிய எழுத்தாளர்களுக்கு நீண்டகாலம் கழித்தே அந்த உரையாடல் அமைகிறது. ரமேஷ் அந்த உரையாடலுக்குள் வரவேண்டும் என வாழ்த்துகிறேன்.
ஆர். அர்விந்த்
அன்புள்ள ஜெ,
ரமேஷ் பிரேதனுக்கு அளிக்கப்பட்டுள்ள விஷ்ணுபுரம் விருது செய்தி அறிந்து மகிழ்ச்சி. இந்த விருதை ஒட்டி மேலதிக வாசிப்புகள் நிகழும் என நினைக்கிறேன். நான் அவருடைய எழுத்துக்களை தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். இந்தியப் பண்பாடு சிலைகளின் பண்பாடு என்று சொல்லலாம். இத்தனை சிலைகளை நாம் ஏன் உருவாக்கிக் கொள்கிறோம்? இந்த சிலைகளில் ‘சாமுத்ரிகா லட்சணம்’ என்று ஒன்று உண்டு. அது ஓர் ஐடியல். அந்த ஐடியல் உடல்தான் நம் தெய்வங்கள். ஆனால் இங்கே மனிதர்களில் அந்த லட்சணத்துக்கு சாயல் கொண்ட மனித உடல்களே கம்மி. அப்படியென்றால் இங்கே நாம் செய்வது என்ன? நாம் செய்வது உடல்நிராகரிப்பு. ஒரு ஐடியலை முன்வைத்து அத்தனை உடல்களையும் நிராகரிக்கிறோம். பெண் உடலை வர்ணிக்கும் கவிதைகள் எல்லாமே உண்மையில் 90 சதவீதம் பெண்களின் உடல்களை இழிவுசெய்கின்றன இல்லையா? இந்த உடல் ஒடுக்குமுறையை தமிழ்ச்சூழலில் ஆக்ரோஷமாகப்பேசியவர் என்று ரமேஷ் பிரேதனை மட்டும்தான் சொல்லமுடியும். அவ்வகையில் அவர் ஒரு தனிக்குரல். அந்தக்குரலுக்கு ஏற்பு நிகழ்ந்துள்ளது. வாழ்த்துக்கள்.
ஸ்டேன் ஜெகந்நாதன்
வன்முறை, குரூரம், அவள்- கடிதங்கள்

நல்ல சிறுகதை. நான் கல்லூரி படிக்கும் போது இதே போல ஒரு சம்பவம் எங்க ஊர் அருகில் உள்ள சொத்தவிளை கடற்கரையில் நடந்தது. நிறைய நாள் இரவில் நண்பர்கள் நாங்கள் கடற்கரையில் இருக்கும் போது கார் அல்லது பைக் சொத்தவிளை கடற்கரை நோக்கி செல்வதை பார்த்திருக்கிறோம்.. நண்பர்கள் சிலரை கையும் களவுமாக பிடித்தும் இருக்கிறார்கள். ஆனால் அந்த சம்பவத்தை நாங்கள் அறிந்த போது யாரும் அதிர்ச்சியடையவில்லை. அதை எதிர்பார்த்தவர்கள் போல மிக எளிதாக கடந்து சென்றோம்.
உங்கள் கதையில் உள்ள கொடூரம் நிஜமாக புல்லரிக்க செய்கிறது. காமத்தின் சில சமயங்களில் அந்த கொடூரம் முகத்தைக் காட்டி மறைவது உண்டு ஆனால் இது காமத்தினால் அல்லாமல் வெறுப்பினால் வரும் கொடூரம். அதற்கு எல்லை கிடையாது. தன்னையும் தான் சார்ந்த பிறரையும் சிதைக்காமல் அது நிறைவடையாது.
உங்கள் சிறுகதைகள் என் உலகத்துக்கு நெருக்கமாக இருக்கின்றன. கிட்டத்தட்ட இப்படி ஒரு சிறுகதையை எழுத தொடங்கி பாதியில் விட்டிருக்கிறேன். ஒருவேளை வேறொரு வடிவில் அது கதையாகலாம்.
காதல் தோல்வி உறவுகளைப் பற்றிய அவநம்பிக்கையை மனதில் விதைக்கும். இஷ்டம் போல சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஆசையில் வழி தவறி போவது மிக எளிதாக நடக்கும்.அவளுக்காக காரணங்களை பயன்படுத்தி அவளை வேட்டையாட பல மிருகங்களும் காத்திருக்கும்.
வாழ்த்துக்கள் அஜிதன்
ரோட்ரிக்ஸ்அன்புள்ள ஆசிரியருக்கு,அவள் கதை பற்றிய விவாதத்தில் வன்முறை , குரூரம் பற்றிய கருத்துக்களை வாசித்தேன். நாம் இன்றைக்கு போரில் குழந்தைகள் செத்துக்குவிவதைப் பார்த்தபடி சாப்பிடுகிறோம். இணையத்தில் மிக அதிகமாகப் பார்க்கப்படும் வீடியோக்கள் விபத்து வீடியோக்கள். ஒருபக்கம் நேரில் இவை நடந்தால் அப்படியே கடந்துபோகிறோம். நம் மிடில்கிளாஸ் பபிள் உடையாமல் பாதுகாத்துக்கொள்கிறோம். இன்னொரு பக்கம் இவற்றையே கேளிக்கைகளாக ஆக்கி ரசிக்கிறோம். நீங்கள்கூட ஆணவகொலை எப்படி வேடிக்கை நிகழ்ச்சியாக ஒரே வாரத்தில் மாறியது என எழுதியிருந்தீர்கள். நம்முடைய அந்த மனநிலைதான் இந்தவகை கலை உருவாக்கத்துக்கான காரணம்.அஜிதனின் இந்த இரண்டு கதைகளுமே அப்படிப்பட்ட அழகியல் கொண்டவை. கலை என்பது சாதாரணத்தை அசாதாரணமாக ஆக்குவதுதான். நாம் அறிந்தவற்றை அது வேறு கோணத்தில் சொல்கிறது. மிகவும் விலக்கியோ மிகவும் நெருக்கமாகவோ காட்டுகிறது. இந்தக்கதை நாமறிந்து அப்படியே கடந்துவந்த ஒரு செய்தியை பல கோணங்களில் திருப்பித் திருப்பிக் காட்டுகிறது. திருப்பித் திருப்பி காட்டுவது மர்மத்தை அவிழ்ப்பதற்காக அல்ல. எத்தனைபேர் எப்படியெல்லாம் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று காட்டுவதற்காகத்தான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் எதிர்வினை செய்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் அந்த ரியாலிட்டி கொஞ்சம் மாறுபடுகிறது.இந்தக்கதை ஒரு Aesthetics of Cruelty என்பதைக் கடந்து செல்வது இதில் கூவம் சித்தரிக்கப்பட்டிருக்கும் விதத்தால்தான். முதல்முறையாக கூவம் இந்தக்கதையில் ஒரு அழகான, ஆழமும் கனிவும் கொண்ட அன்னையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. நகரத்தின் மொத்த அழுக்கும் அங்கேதான் போகிறது. நகரத்தில் இல்லாத கனிவு கூவத்தில் இருக்கிறது. அந்தக் கவித்துவம்தான் இந்தக்கதையின் இறுதி.ராஜு சிவசங்கர்.ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். அஜிதனின் “அவள்” கதையை வாசித்து முடித்த கணம், எங்காவது ஒரு மலர் பூக்கும், மரம் தளிரிடும். அதே நேரத்தில் ‘அவள்’ யாராலோ சிதைக்கப்பட்டுக்கொண்டிருப்பாளோ என்ற பதற்றம் தொற்றிக்கொண்டது. கலைஞனும் நதியும் இரு வேறு அல்லவே ? இருவரது பார்வையிலும் அனைவரும், அனைத்தும் கண்ணில் படும்தானே? அப்படித்தானே என் கண்ணில் தெரியாத அவள் கலைஞனின் கண்களில் படுகிறாள். நான் , பூனை போல கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டுவிட்டது என நினைக்கும்பொழுது கலைஞன்–தானே ஒளி ஏற்றி என் கண்ணில் எல்லாவற்றையும் காண்பிக்க வேண்டும். அஜிதன் கலைஞனாக அதைத்தானே செய்துள்ளார்.
ஒரு போலிஸ், அவள் தோழி, அவள் அம்மா, கரிய கூவம் நதி, அவன் என எல்லார் பார்வையிலும் சொல்லப்படும் கதையில்தான் எவ்வளவு நேர்த்தி. எழுத்து நடையில் மட்டும்தான் அஜிதன் என்பது தெரிகிறது. மற்ற யாவையும் அந்தந்த பாத்திரங்கள்தானே ? எந்தவிதமான கருத்தும் சொல்லவில்லை. அவை அவை அப்படியே. இந்தக் கதைக்கு அவர் என்ன பெயர் வைப்பார் ? அவ்வப்பொழுது செய்தி வாசிக்கும் எனக்கே, நிரூபமா, ஆயிஷா, அந்த ஹைதராபாத் கால்நடை மருத்துவம் படித்த பெண், அண்ணா விட்டுருங்கண்ணா என்று சொன்ன அந்த பொள்ளாச்சி பெண், ஆஸ்டின் பல்கலைக்கழகத்தில் படித்த ஹருகா வீய்ஷர், என எத்தனை அவள்கள் மனதில் வந்து அலைமோதுகிறார்கள். கலைஞனுக்கு பாதிக்கப்பட்ட ஆயிரம் அவள்களைத் தெரியும் அல்லவா? அதனால்தான் இதற்கு ‘அவள்’ என்று பெயர் வைத்தாரோ ?
இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் அவ்வளவு இடைவெளிகள் இல்லை என ஒவ்வொரு கதையிலும் அஜிதன் நிரூபித்த வண்ணம் உள்ளார். அவரது “ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும்” கதையை மீள்வாசிப்பு செய்து கொஞ்சம் சிரித்து ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.
அன்று காலை எழும்பொழுதே எங்கே அஜிதனின் கதையை கொஞ்ச நாட்களாக காணோம் என்று ராதாவிடம் பிராது படித்தேன். மூஞ்சில் குத்துவதைப்போல ஒரு கதையை அன்று அவர் கொடுப்பார் என்று அறியாத எளியவனாக இருந்திருக்கிறேன் என்று என்னை நானே நினைத்தும் சிரித்துக் கொண்டேன்.
அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
