கூட்டுவாசிப்பு, சாத்தியங்களும் எல்லைகளும்
கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி வெண்முரசு நாவலை குழுவாக வாசிக்கலாம் என திட்டமிட்டு நாங்கள் ஐந்து நண்பர்கள் “முதல் அரும்பு” என்ற கூட்டு வாசிப்பு குழுவை ஆரம்பித்தோம். அதை உங்களிடம் பகிர்ந்திருந்தேன். நீங்கள் உங்கள் தளத்தில் அந்த கடிதத்தை பகிர்ந்திருந்தீர்கள். அதன் பின் மேலும் சிலர் குழுவில் இணைந்தார்கள். இப்பொது பன்னிரண்டு நண்பர்கள் குழுவில் உள்ளனர்.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் முதற்கனல் நாவலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை வாசித்து அதை பற்றிய குழு உரையாடல் மற்றும் விவாதமாக தொடர்ந்தோம். நேற்றோடு (06-09-2025) முதற்கனல் நாவலை வாசித்து முடித்துவிட்டோம். ஒரு மிகுந்த நிறைவோடு கடைசி பகுதியை வாசித்து முடித்தோம். நண்பர் கிரியின் ஆலோசனை படி வேத பாடசாலையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை கற்று முடிக்கும் போது அதன் முதல் வரிகளை வாசித்து வணக்கத்தோடு முடிப்பது போல் வாசித்து முடித்தோம்.
ஒரு பெரிய நாவலை பகுதி பகுதியாக வாசித்து மிக நுண்ணிய பகுதிகளை மேற்கொள்களாக நண்பர்களிடம் விவாதித்து முடிக்கும் போது ஒரு மிகப் பெரிய சித்திரமாக அந்த நாவல் அனைவர் நெஞ்சிலும் விரிந்துள்ளது. இன்னும் ஒரு முறை முதற் கனல் நாவலை வாசித்தாலும் அதில் நாம் உரையாடாமல் விட்ட பகுதிகள் நிறைய இருக்கும் என்று நண்பர்கள் உணர்வோடு ஒத்துக்கொண்டர்கள்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் எங்கு இருந்தாலும் கிடைத்த நேரத்தில் வாசித்து விவாதத்தில் மிக ஆர்வமாக பங்கு கொண்டார்கள். நண்பர்களின் இந்த ஆர்வம் என் போன்றவர்களை மேலும் ஆர்வம் கொள்ள செய்தது. எந்த வயது வேற்றுமையும் இல்லாமல் முத்து சாமி அய்யா, தென்காசி குமார் அய்யா, ஸ்வர்ணா ரவி அம்மா போன்றோர் சிறுவர்களாகிய எங்களிடம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து அதில் சந்தேகம் கேட்டு தெளிவு பெறுவது மிகுந்த உத்வேகத்தைத் தருகிறது.
கற்றல் என்பது எவ்வளவு இனிமையானது, வீரியமைக்கது என்று ஒவ்வொரு சனிக்கிழமையும் உணரமுடிகிறது. மிகுந்த நிறைவோடு முதற்கனல் நாவலை வாசித்து முடித்தோம். வரும் சனிக்கிழமையில் இருந்து மழைப்பாடல் வாசிக்க உள்ளோம்.
இவை அனைத்திற்கும் நீங்கள் தான் ஊற்று. உங்களின் அருகமைவு மேலும் மேலும் எங்களை கற்றலை நோக்கித் தள்ளுகிறது. எங்கள் ஆசிரியருக்கு என்றும் எங்கள் அன்பும் வணக்கங்களும்.
நன்றி
சரவணன் சிவன்ராஜா
அன்புள்ள சரவணன்,
நம் நண்பர்கள் ஒருங்கிணைக்கும் கூட்டுவாசிப்புகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. வெண்முரசுக்காக கூட்டுவாசிப்பு தொடங்கப்பட்டது. வெண்முரசு முடிந்தபின் சிலர் கம்பராமாயணக் கூட்டுவாசிப்பை நிகழ்த்தி அதை முடிக்கும் நிலையில் இருக்கிறார்கள்.
உலகம் முழுக்கவே கூட்டுவாசிப்பு என்பது செவ்வியல் நூல்களைப் பயில்வதற்கான ஒரு வழிமுறையாக உள்ளது. தொடர்ச்சியாக வாசிப்பை நிகழ்த்துவதற்கும் கூட்டுவாசிப்பு உதவுகிறது. ஒருவரின் ஊக்கம் சற்றுத் தளர்ந்தால்கூட இன்னொருவரின் ஊக்கம் அவருக்கு உதவி முன்னெடுத்துச் செல்லும் என்பதே கூட்டுவாசிப்பின் முதல் பயன்.
கூட்டுவாசிப்பு ஒருவரின் வாசிப்பை இன்னொருவரின் வாசிப்பு நிறைக்கிறது என்பதனால்தான் ஊக்குவிக்கப்படுகிறது. நம் வாசிப்பு எத்தனை சிறப்பானதாக இருந்தாலும் இன்னொருவரின் வாசிப்புக்கோணம், அவர் பெற்றுக்கொண்ட அர்த்தம், நமக்குச் சிக்காமல் இருக்கலாம். அவரிடமிருந்து அதைப்பெற்றுக்கொண்டு நம் வாசிப்பு மேலும் கூர்மையடையலாம்.
ஏனென்றால் வாசிப்பு என்பது உண்மையில் வாசகன் கற்பனையில், சிந்தனையில் நிகழ்வது. ஒரு நூல் தன்னளவில் அளிப்பது தகவல்களை, நிகழ்வுகளை, படிமங்களை, கருத்துக்களை மட்டுமே. அவற்றை வாசகன் தன்னுள் நிகழ்த்திக்கொள்ளவேண்டும், தொகுத்துக்கொண்டு வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு நூலைநோக்கிச் செல்லாத வாசகன் அதை இழந்துவிடுவான்.
அப்பயணத்தை நாம் நிகழ்த்திக்கொள்கையில் நமக்குரிய தடைகள் இருக்கலாம். நம்முடைய வாழ்க்கைச்சூழல், நாம் நின்றிருக்கும் அறிவுத்தளம் ஆகியவை நமக்கு ஓர் ஆளுமையை அளிக்கின்றன. அது நம் அடையாளம். ஆனால் அதுவே நமக்கு எல்லையாகவும் ஆகலாம். அந்த வாழ்க்கைச்சூழல், அறிவுத்தளத்துக்கு அப்பாலுள்ளவற்றை நாம் உணரமுடியாமலாகும். அப்போது இன்னொருவரின் வாசிப்பு நமக்கு உதவும். அதன்பொருட்டே கூட்டுவாசிப்பு தேவை.
ஆனால் கூட்டுவாசிப்புக்கான நிபந்தனைகள் சில உள்ளன. கூட்டுவாசிப்பை இணையுள்ளம் கொண்டவர்களின் சிறு குழுமம் ஆக அமைக்கவே நான் எப்போதும் கூறுகிறேன். ஒரு கூட்டுவாசிப்புக் குழுவில் ரசனையம்சமே இல்லாத ஒருவர் இருந்தால்கூட மொத்தமாகவே குளறுபடி உருவாகிவிடும். ஒரே ஒருவர் முழுக்க எதிர்மனநிலையுடன் இருந்தாலும் வாசிப்பே நிகழமுடியாமலாகும். நம் சூழலில் இலக்கியத்தை வெறும் அரசியல்கருத்துக்களாக, அல்லது சமூகக்கருத்துக்களாக மட்டுமே எடுத்துக்கொள்வோர்தான் பெரும்பாலானவர்கள். அரசியல் அல்லது சாரதி அல்லது மதம் சார்ந்த கடும் காழ்ப்புகளையே கருத்துநிலைபாடுகளாகக் கொண்டவர்களும் பலர் உண்டு. அவர்களைத் தவிர்க்காமல் ஒரு நல்ல வாசிப்புக் குழுமம் அமைய முடியாது.
இணையுள்ளம் கொண்ட நண்பர்களுடனான வாசிப்பு- உரையாடலிலும் கூட சில நெறிகள் பேணப்படவேண்டும். அதாவது மட்டுறுத்துநர் தேவை. உதாரணமாக, ஒரு நூலைப் பற்றிய வாசிப்பு- விவாதத்தின்போது அந்நூலில் தொடங்கி எங்கெங்கோ செல்பவர்கள் நம்மிடையே உண்டு. நினைவுகளைச் சொல்வார்கள், தன் அனுபவங்களைச் சொல்வார்கள், சம்பந்தமற்ற வேறு நூல்களையோ சமகால அரசியலையோ சொல்வார்கள். அந்நூல்தான் பேசுபொருள், அதை விட்டு விலகிச் செல்லும் எந்த உரையாடலும் வீண்அரட்டையே.
ஓர் இலக்கிய உரையாடல் தீவிரமாகவே இருந்தாகவேண்டும். நகைச்சுவை, பகடிகள் இருக்கலாம். ஆனால் ‘சில்லறைப்படுத்துதல்’ நிகழக்கூடாது. trivialization என்பது நம் பொதுமனநிலையில் வேரூன்றியது. சினிமாச்செய்திகளைச் சொல்வது. சம்பந்தமில்லாத நகைச்சுவைகளை சொல்வது. சொற்களை திரித்துப் பகடிசெய்வது என பல இயல்புகளை நாம் அரட்டைகளில் காண்கிறோம். நம் மேடைப்பேச்சுக்கள் இந்தவகையான அற்பப்படுத்தல்களால் ஆனவை. அவற்றை ஓர் இலக்கியவிவாதத்தில் அனுமதிக்கலாகாது.
வெண்முரசு நூல்களுக்கு பல விவாதங்கள் முன்னரே நிகழ்ந்துள்ளன. வெண்முரசு விவாதங்கள் என்னும் இணையதளம் உள்ளது. அதில் பல்லாயிரம் கடிதங்கள் உள்ளன. பல கடிதங்கள் தனிப்பட்ட அத்தியாயங்களைக் கூர்ந்து வாசித்து எழுதப்பட்டவை. ஒட்டுமொத்தப்பார்வைகளும் உள்ளன. அவற்றை கருத்தில்கொண்டு வாசிப்பவர் மேலும் ஆழமான பார்வையை அடையமுடியும்.
வெண்முரசு என்றல்ல, எந்நூலையும் அதன் எல்லா சாத்தியக்கூறுகளையும் கருத்தில்கொண்டு வாசிப்பதே நல்ல வாசிப்பாகும். உதாரணமாக, ஒருவர் முதற்கனல் நாவலை வாசிக்கும் ஒருவர் அதிலுள்ள நுணுக்கமான ஓர் ஊடாட்டத்தை கவனித்திருக்கவேண்டும். அதில் துணைக்கதைகளாக வரும் புராணக்கதைகள் அந்நாவலுக்குள் நிகழும் கதைகளுக்கு இணையானவையாக உள்லன. நிகழ்வுகளிலுள்ள ஆழமான சிலவற்றையே அந்த புராணக்கதைகள் குறிப்புணர்த்துகின்றன. தாட்சாயணி கதைக்கும் அம்பை கதைக்கும் உள்ள ஒற்றுமை உதாரணம்.
அத்தகைய பல வாசிப்புகள் உள்ளன. கிராதம் அர்ஜுனனின் பயணம் மட்டுமல்ல, வேதங்கள் தோன்றிய நிலங்களினூடாக செல்லும் வேதத்தைக் கண்டடையும் பயணமும் கூட. அது பாசுபதத்தில் முடிவடைவது அப்போதுதான் பொருளாகும். வெறுமே கதை, கதாபாத்திரங்கள் என வாசித்துச்செல்பவர்கள் அவற்றை தவறவிடக்கூடும். அவற்றை தவறவிடலாகாது என்பதற்காகவே கூட்டுவாசிப்பு பரிந்துரைக்கப்படுகிறது.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers


