Jeyamohan's Blog, page 7
September 28, 2025
சோனம் வாங்சுக், லடாக்.
லடாக் பகுதி மாநில அந்தஸ்து கோரி நடத்திய போராட்டத்தை மைய அரசு ஒடுக்க முனைந்துள்ளது. இன்றைய சமூக ஊடகக் காலகட்டத்தில், ஒவ்வொரு அரசியல்கட்சியும் தனக்கான சமூக ஊடக அணியை தயாரித்து வைத்திருக்கும் சூழலில், இனி வரவிருப்பது மிகக்கடுமையான பிரச்சாரப் போர்.
பாரதிய ஜனதாக் கட்சியின் ஊடக அணி ஒற்றைப்படுத்தப்பட்டதும் திரிக்கப்பட்டதுமான ஒரு சித்திரத்தை மூர்க்கமாக முன்னிறுத்தி, அதை எதிர்ப்பவர்களை எல்லாம் தேசத்துரோகிகள் என முத்திரையடிக்கும். அதற்கு மறுபக்கமாக இந்தியா என்னும் அமைப்பை எதிர்க்கும் சக்திகள் சோனம் வாங்சுக் மற்றும் லடாக் போராட்டக்காரர்களை தங்களுடன் சேர்த்துக்கொள்வார்கள். தங்களைப்போல வெறுமொரு இந்திய எதிர்ப்பாளர் அவர் என முத்திரையடிப்பார்கள். லடாக்கில் நிகழ்வது ‘சுதந்திரப்போர்’ என ஆரம்பிப்பார்கள்.
இந்த முத்திரை பாரதிய ஜனதாவின் நோக்கங்களுக்கு மிகமிக உதவியானது. உண்மையில் இரு தரப்பும் சேர்ந்து ஒன்றையே செய்யவிருக்கிறார்கள். திரும்பத் திரும்ப அதுவே இங்கே நிகழ்கிறது.
இச்சூழலில் சோனம் வாங்சுக் மற்றும் லடாக் பற்றிய ஒரு சுருக்கமான சித்திரத்தை பதிவுசெய்ய விரும்புகிறேன். இதைப்பற்றி நடுநிலையுடன் சிந்தனை செய்பவர்களுக்கான ஒரு வழிகாட்டிக் கருத்து இது.
காஷ்மீர் மாநிலமாக இதுவரை இருந்து வந்தது உண்மையில் மூன்று கலாச்சாரப் பரப்புகள். ஜம்மு ஓர் இந்து நிலம். லடாக் ஒரு பௌத்த நிலம். காஷ்மீர் சமவெளி இஸ்லாமிய நிலம். இதில் காஷ்மீர் சமவெளியிலுள்ள இஸ்லாமியரில் சுன்னிகளில் ஒரு தீவிரப்போக்கு கொண்ட ஒரு பிரிவினர் மட்டுமே பாகிஸ்தான் ஆதரவு மனநிலையும், இந்திய எதிர்ப்பு அரசியலும் கொண்டவர்கள். அங்குள்ள ஷியாக்கள் பொதுவாக இந்திய ஆதரவாளர்கள். அங்குள்ள சூஃபி நம்பிக்கையாளர்களிலும் இந்திய எதிர்ப்பரசியல் பெரும்பாலும் இல்லை. காஷ்மீரின் அரசியலை இந்த கலாச்சாரப் பின்புலம் இன்றி பேசமுடியாது.
ஆனால் சென்ற ஐம்பதாண்டுகளில் காஷ்மீர் பிரிவினைவாத அரசியல் பற்றி தமிழகத்தில் பேசிய எந்த ‘அரசியல் நிபுணரும்’ இந்த யதார்த்தம் பற்றிப் பேசியதில்லை. ஒட்டுமொத்த காஷ்மீரும் இஸ்லாமிய நிலம் என்றும், அவர்களில் பெரும்பாலானவர்கள் தனிநாடுக்கோரிக்கையோ, பாகிஸ்தான் ஆதரவோ கொண்டவர்கள் என்றும் அனைவருமே இந்திய எதிர்ப்பாளர்கள் என்றும் சொல்லப்பட்டது. இங்குள்ள பிரிவினைவாதிகள் அங்குள்ள பிரிவினைவாதிகளை போற்றிப்புகழ்ந்து ஒரு சித்திரத்தை உருவாக்கினர். இன்றும் தமிழில் கிடைக்கும் பலநூறு நூல்களில் இச்சித்திரமே உள்ளது.
உண்மையில் காஷ்மீரின் அரசியல்- சமூகச் சூழல் பற்றிய நேரடியான ஒரு சித்திரம் தமிழில் நான் எழுதிய பயணக்கட்டுரைகள் வழியாகவே உருவாகியது. அன்று நான் பொய்சொல்கிறேன் என்றெல்லாம் எழுதித்தள்ளினர். பின்னர் அதை அவர்களே ஏற்றுக்கொள்ளவும் நேர்ந்தது, ஏனென்றால் அப்பட்டமான தகவல்களை எளிதில் மறுக்கமுடியாது. அதன்பின் ஒரு சில கட்டுரைகளில் மெய்யான சித்திரம் வரத்தொடங்கியது.
காஷ்மீர் பிரிவினைவாதிகள் இரு சாரார். அவர்களில் காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணையவேண்டும் என்று சொல்பவர்கள் சாமானியர். தனிநாடு வேண்டும் என கோருபவர்கள் உயர்குடியினர். அவர்களுக்கு மொத்தக் காஷ்மீர் மீதும் தங்கள் தங்குதடையற்ற ஆதிக்கம் நிலவவேண்டும் என்னும் ஆசையே உள்ளது.
லடாக், ஜம்மு இரண்டு நிலமும் காஷ்மீர் சமவெளியின் வல்லாதிக்கத்தின் கீழ் இருந்தன என்பதே உண்மை. ஜம்முவும் சரி, லடாக்கும் சரி காஷ்மீரின் உருதுவையே பயிலவேண்டும்; அதிலேயே தேர்வுகள் எழுதவேண்டும். காஷ்மீரின் தனி அந்தஸ்து காரணமாக அங்கே தலித் மக்களுக்கு இட ஒதுக்கீடு உட்பட எந்தச் சலுகையும் இல்லை. அவர்கள் அங்கே குடியேறி 100 ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனால் அவர்களுக்கு அங்கே எந்த உரிமையுமில்லை, சொந்தமாக ஒரு குடில்கூட கட்டிக்கொள்ள முடியாது.
ஆகவே காஷ்மீர் மூன்றாகப் பிரிக்கப்பட்டதும் சரி, அப்பகுதிக்கு அளிக்கப்பட்டிருந்த தனி அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதும் சரி, சரியான நடவடிக்கையே. அது லடாக் மற்றும் ஜம்மு பகுதிகளின் விடுதலைதான். அப்படி ரத்துசெய்யப்பட்டால் காஷ்மீர் மக்கள் கொதித்தெழுவார்கள், ரத்த ஆறு ஓடும் என்பதெல்லாம் வெறும் அரசியல் பாவலாக்கள். அப்படியெல்லாம் அங்கே வலுவான மக்கள்தரப்பு ஏதும் இல்லை. அதற்காக வாதிடுபவர்கள் உண்மையில் சுன்னிகளின் ஒரு தரப்பு மட்டுமே.
ஆனால் அதன்பின் மத்திய அரசு செய்துகொண்டிருப்பது ஒவ்வொன்றுமே மிக எளிய அதிகார அரசியல். அதன் விளைவுகளை இந்தியா அனுபவிக்கப்போகிறது. இந்திரா காந்தியின் அரசு எப்படிச் செயல்பட்டதோ அப்படிச் செயல்படுகிறது இன்றைய மைய அரசு. ஒரு சிறிய ‘அடுக்களைக்குழு’ முடிவுகளை எடுக்கிறது. அதிகாரிகளிடமிருந்து செய்திகளை அறிந்து முடிவெடுக்கிறார்கள். அதிகாரிகள் வழியாக அந்த முடிவுகள் மக்கள்மேல் அழுத்தப்படுகின்றன. களநிலவரம் பற்றி அறியும் எண்ணமே இல்லை. அதிகாரிகளின் போக்கு எப்போதுமே ஆணவம் சார்ந்தது. சென்ற காலகட்டத்தில் காஷ்மீரை வன்முறைக்கு கொண்டுசென்றது காங்கிரஸின் இந்த அணுகுமுறையே. அது அப்படியே தொடர்கிறது.
காஷ்மீர் சமவெளிக்குன முழுமையான மாநில அந்தஸ்து உடனே வழங்கப்பட்டிருக்க வேண்டும்.ஏனென்றால் அது அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி. ஓர் அரசு அளித்த வாக்குறுதியை அது பொருட்படுத்தாது என்றால் அது மோசடி செய்கிறது என்றே பொருள். அரசு மீது நம்பிக்கையிழந்த மக்களிடமிருந்தே வன்முறை உருவாகிறது. வன்முறையை ஒடுக்குகிறேன் என்ற பாவனையில்அரசு மக்களை ஒடுக்குகிறது.
லடாக்கின் யதார்த்தம் என்ன? நீண்டகாலம், லடாக் காஷ்மீரின் ஆதிக்கத்தின் கீழ் நசுக்கப்பட்டிருந்தது. லடாக்கிய மொழி சீனச்சாயல் கொண்டது. ஆனால் லடாக்கின் மக்கள் அவர்களுக்கு சம்பந்தமே இல்லாத உருது மொழியில்தான் பள்ளிக்கல்வி பயிலவேண்டும். இந்த மோசடியால் லடாக்கில் இரண்டு சதவீதம்பேர் கூட பள்ளிக்கல்வியை முடிப்பதில்லை. காஷ்மீருக்கு அளிக்கப்படும் மொத்த நிதியும் காஷ்மீர் சமவெளியில் செலவிடப்பட்டது. லடாக் நிலம் மிகப்பெரியது, அங்கே ராணுவம் செய்யும் சாலைப்பணிகள் அன்றி வளர்ச்சிப்பணிகள் என்பதே கிடையாது. காஷ்மீரின் வன்முறையாளர்கள் லடாக்கிலும் ஊடுருவுவதனால் சுற்றுலாவும் தேங்கியிருந்தது.
சென்ற இருபதாண்டுகளுக்கு முன்பு வரைக்கூட லடாக்கின் வாழ்க்கை என்பது இருநூறாண்டுக்கு முன்பிருந்த அதே நாடோடி வாழ்க்கையே. லடாக்கியர் வட இந்தியாவுக்கு நாடோடி விற்பனையாளர்களாக வரவேண்டிய நிலை. மலைமக்களாகிய அவர்களுக்கு அது மாபெரும் சித்திரவதை. (லடாக்கில் இருந்து பஞ்சம்பிழைக்க ராஜஸ்தான் சென்று அங்கே தெருக்களில் கொதிக்கும் வெயிலில் கம்பிளி விற்பவர்கள் பற்றிய ஆவணப்படம் ஒன்றை யூடியூபிலேயே பார்க்கலாம்)
சோனம் வாங்சுக் லடாக்கின் இந்தப் பரிதாபநிலையைக் கண்டு போராட முன்வந்தவர். அடிப்படையில் அவர் காந்தியர். மேலைநாட்டுக்கல்வி பயின்ற அறிவியலாளர் என்றாலும் இயற்கைப்பாதுகாப்பு, தற்சார்புப் பொருளியல் பற்றிய பிரக்ஞை கொண்டவர். லடாக்கின் கல்வியிலுள்ள பின்தங்கிய நிலை கண்டு அதற்காக இளைஞர்களை திரட்டி பயிற்சி அளிக்க ஆரம்பித்தவர். லடாக்கில் கோடையில் பல இடங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதைக் கண்டு அதற்கான வழிமுறைகளை உருவாக்கியவர். லடாக்கின் இயற்கைவளங்களைப் பாதுகாக்கப் போராடுபவர். முழுக்கமுழுக்க அறவழிப்போராட்டம் செய்பவர்.
இப்போது சோனம் வாங்க்சுக்கை தேசவிரோதி என்றும், வன்முறையாளர் என்றும் முத்திரையடித்துவிட்டனர். இனி லடாக்கின் நிலவரம் என்ன என்றே தெரியாத இந்தியாவின் பெரும்பான்மை இந்துக்களிடம் அதை நிறுவிவிடுவார்கள். மொத்த லடாக்கையும் இந்தியாவுக்கு எதிரியாக்குகிறார்கள். இவர்களே அங்கே வன்முறையை உருவாக்கி அதை ஒடுக்க வன்முறையை கைக்கொள்வார்கள். அதற்கு இந்தியாவின் தேசியவெறி மூர்க்கர்கள் ஆதரவளிப்பார்கள்.
லடாக் மக்கள் பௌத்தர்கள். இக்கணம் வரை உறுதியான இந்திய தேசியவாதிகள். அவர்கள் கோருவது தங்கள் பகுதி மத்திய அரசின் அதிகாரிகளால் ஆட்சி செய்யப்படும் யூனியன் பகுதியாக இருக்கக்கூடாது, ஒரு மாநிலமாக இருக்கவேண்டும் என்பதையே. தங்கள் பகுதியின் நிலம், இயற்கைவளம் பாதுகாக்கப்படும் தனிச்சட்டப்பாதுகாப்பு தேவை என்பதை மட்டுமே.
இது அசாதாரண கோரிக்கையும் அல்ல. ஏற்கனவே சிக்கிம் உட்பட வடகிழக்கு மாநிலங்கள் பெரும்பாலும் இந்த மாநில அந்தஸ்து, பழங்குடிக்கௌன்ஸில் அரசியல், சட்டப்பாதுகாப்புடனே உள்ளன. லடாக் கேட்பது சிக்கிம் போன்ற ஒரு நிலையை. அது மிகமிக அடிப்படையான ஒரு கோரிக்கை. ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய கோரிக்கை.
ஏன் அதை புறக்கணிக்கிறார்கள்? முதல் விஷயம் அம்மக்களின் மக்கள்தொகை குறைவு. ஆகவே ஓட்டுசக்தி இல்லை. அங்கே உள்ள கனிவளம் நேரடியாக மைய அரசின் கையில் இருக்கவேண்டும் என நினைக்கிறார்களா? அல்லது என்ன நடக்கிறது என்றே தெரியாமல் ஆணவம் மிக்க அதிகாரிகளின் பேச்சை மட்டும் கேட்கிறார்களா?
லடாக் மக்கள் இந்தியப்பற்று கொண்டவர்கள். அவர்களை தேசவிரோதிகளாகக் கட்டமைத்தால் எல்லைப்பகுதியில் உருவாகும் அபாயம் பற்றி இவர்கள் அறியாமலிருக்கிறார்களா? அப்பழுக்கற்ற காந்தியவாதியான சோனம் வாங்சுக் இடத்தில் ஒரு தீவிரவாத தலைவர் வந்தால்தான் உண்மையில் அரசின் நோக்கம் நிறைவேறுமா? திகைப்பாக இருக்கிறது.
அலையின் காவியம்
மயிர் மின்னிதழில் வெளிவந்துள்ள கடல் நாவல் பற்றிய கட்டுரை. என் நாவல்களின் பொதுவான கட்டமைப்பில், மொழிப்போக்கில், கூறுமுறையில் இருந்து விலகிய நாவல் இது. இரண்டு பேரின் நீண்ட தன்னுரையாடல்களாகச் செல்லும் இந்நாவல் கிறிஸ்தவ மெய்யியலின் அடிப்படைகளைக் கொண்டு புரிந்துகொள்ளப்பட வேண்டியது. ஆனால் எந்த நல்ல நாவலும் அது எதைப்பேசுகிறதோ அதை அதுவே கற்பிக்கும் என நான் நினைக்கிறேன். ஆகவே அனைவருக்கும் உரியதுதான்.
கிறிஸ்தவ இறையியல் கற்பிப்பவரான சிறில் அலெக்ஸ் நாவல் அவரை மிகவும் பாதித்ததாகவும், விரிவாக எழுதுவதாகவும் சொன்னார். வெளியாகும் முதல் மதிப்புரை அவருடையதாக இருக்கும் என எண்ணினேன். ஜி.எஸ்.எஸ்.வி. நவீனின் இந்த மதிப்புரை முதலில் வெளிவந்துள்ளது. கிறிஸ்தவ காவியப்பின்னணியை கருத்தில்கொண்டு நாவல் முன்வைக்கும் அகநிகழ்வுகளை விரிவாகப்பேசியிருக்கும் கட்டுரை இது.
ஆழி அறிவது- ஜி.எஸ்.எஸ்.வி.நவின்மா.கமலவேலன்
எழுத்தாளர். சிறுகதை, நாடகம், நாவல், வாழ்க்கை வரலாறு எனப் பல தளங்களில் இயங்கி வருகிறார். சிறார் இலக்கியப் படைப்பாளி. சாகித்ய அகாடமி வழங்கும் பால சாகித்ய புரஸ்கார் விருதினை, தமிழில், முதன் முதலில் பெற்றவர்.

மாபெரும் கோயில்களை உண்மையில் நாம் தான் கட்டினோமா?
Hindutva is not Hinduism My article on radicalism in politics and its relationship with religion was published in the October issue of Frontline English magazine.
My article on Frontlineஇன்றைய தொழில் நுட்பத்த்தில் முன்னேற்றம் அடைந்த நவீன காலத்தில் கூட நம்மால் (தமிழர்கள் மட்டுமில்லை) ஒரு சிறந்த பாலத்தையோ ஒரு திட்டமிட்ட நகரத்தையோ அல்லது ஒரு சமூக ஒழுங்கையோ செய்ய முடியாத நாம், எப்படி மதுரை , தஞ்சை மற்றும் திருஅரங்கம் போன்ற கோவில்களை கட்ட முடிந்தது?
மாபெரும் கோயில்களை உண்மையில் நாம் தான் கட்டினோமா?September 27, 2025
ரமேஷ் பிரேதன் நினைவஞ்சலி

ரமேஷ் பிரேதன் சென்ற 25 செப்டெம்பர் அன்று இரவு ஒரு கவிதையை எழுதி தன் முகநூலில் வலையேற்றியிருந்தார். அது ஒரு காதல் கவிதை. அதன்பின் சில மணிநேரங்களில் மயக்கமுற்றிருக்கக் கூடும்.கடுமையான இதய அடைப்பு மற்றும் ரத்த அழுத்த உயர்வு. உடனடியாக 26 காலையில் மருத்தவமனையில் சேர்க்கப்பட்டார். 27 செப்டெம்பர் 2025 மாலை 520க்கு உயிர்பிரிந்தது.
அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் நம் நண்பர்கள் உடனிருந்தனர். ஒவ்வொரு மணிநேரத்திற்கும் செய்திகளை அளித்தனர். முதல் நாளிலேயே ரமேஷ் மீள்வது அரிதினும் அரிது என்று கூறிவிட்டனர். மூளையில் முழுமையான ரத்தக்கசிவு. உள்ளுறுப்புகள் செயலிழந்துகொண்டிருந்தன. இதயம் நின்று நின்று இயங்கியது. கருவிகளின் உதவியுடன் உயிர் நீடித்தது. கருவிகளை எப்போது நீக்கவேண்டும் என்ற முடிவை எடுப்பது மட்டுமே 26, 27 ஆம் தேதிகளில் எஞ்சிய கேள்வியாக இருந்தது.
சென்ற 2019 ல் ரமேஷ் என்னிடம் “எனக்கு விஷ்ணுபுரம் அவார்டு குடுய்யா” என்றார்.
“இப்ப என்ன அப்டி அவசரம்? வாலிப வயசுதானே?” என்றேன்.
“பணம் தேவை இருக்கு” என்றார்.
“பணம்தானே? அத அனுப்பிடறோம்…” என்றேன். அந்தப் பணத்தை அனுப்பினோம்.
அதன்பின் மீண்டும் 2021 ல் அழைத்தார். “இப்பயாச்சும் அவார்டு குடுய்யா. நான்லாம் கோவிட்ட தாண்டமாட்டேன்” என்றார்.
“உங்களுக்கெல்லாம் கல் மாதிரி ஆயுசு… அவார்டு முறையாத்தான் வரும்… சின்னப்பசங்களுக்கு குடுக்கிற அவார்டு இல்ல இது” என்றேன்.
அதன்பின் அவ்வப்போது தன் ஆயுள் முடிவதைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் கோவிட் அதன்பின் வந்த ஒரு நெருக்கடிக்காலம் ஆகியவற்றை கடந்துவிட்டார். அவருக்கு விருதை வரிசையை முந்திக்கொண்டு அறிவிப்பதே அவருடைய உடல்நிலை, ஆயுள் பற்றி நானும் ஐயப்படுகிறேன் என்று ஆகிவிடுமோ என்னும் குழப்பம் இருந்துகொண்டே இருந்தது. ஆகவே அவருடைய நிரந்தர ஐயத்தை வேடிக்கையாகவே கடந்துகொண்டிருந்தேன்.
இந்த முறை அவருக்கு இயல்பாகவே வரிசையில் இடம் அமைந்தது. அதை ஆகஸ்டில் அவரிடம் சொன்னேன். “இப்பவே குடுத்திரு… டிசம்பரில் நான் இருக்கமாட்டேன்” என்றார்.
“நீங்க இருப்பீங்க….” என்றேன்.
மீண்டும் ஜூனில் அழைத்து “செப்டெம்பரில் தூரன் விழாவோட சேத்தே நடத்திரு… இருப்பேனான்னு தெரியலை” என்றார்.
ஆனால் உண்மையில் உடல்நிலை சற்று மேம்படத் தொடங்கியிருந்தது. ஃபோனில் அழைத்தால் உடல்நிலை மேம்படுவதைப்பற்றியே சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கும் நம்பிக்கை வலுப்பெற்றது, நலம்பெறுவது இயல்வதல்ல. ஆனால் இன்னும் சில ஆண்டுகள் வாழ்வார் என எண்ணினேன்.
விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டபின் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தார். உண்மையில் அவர் உடல் மிகவும் நலிந்து எல்லையை அடைந்துகொண்டிருந்தது. நான் கண்ட அந்த ஊக்கம் என்பது விருது அளித்த மகிழ்ச்சியின் விளைவாக அவரே உருவாக்கிக்கொண்டதுதான். சென்ற பதினைந்தாண்டுகளில் அவரை அத்தனை உற்சாகமாக நான் பார்த்ததே இல்லை. வாழ்த்துவதற்காக அவர் எண், மின்னஞ்சல் இரண்டையும் கொடுத்திருந்தேன். தினம் இருபது முப்பதுபேர் கூப்பிட்டு வாழ்த்தினர்.தினம் மின்னஞ்சல்கள்.
“நோய் ஆஸ்பத்திரின்னு இல்லாம ஒரு ஃபோன் வர்ரதே இப்பதான்… ” என்று என்னிடம் சொன்னார். “இத்தனை பேர் படிச்சிருக்கானுக. இவங்கள்லாம் இதுவரை எங்க இருந்தாங்க?”
அழைத்த ஒவ்வொருவரையும் நினைவில் வைத்திருந்தார். குறிப்பாக 30 வயதுக்குக் குறைவான இளைஞர்கள், இளம்பெண்கள் அழைத்தால் மிகுந்த குதூகலம் அடைந்தார்.அடுத்த தலைமுறை வாசிக்க வருகிறது என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் அழைத்தபோது ‘உங்க மனைவி கிருபா நேத்து கூப்பிட்டாங்க’ என்றாராம். இருவரையும் அவருக்கு முன்னர் தெரியாது.
“ஒருத்தன் சிறுபத்திரிகைச் சூழலுக்கு வெளியே இருந்து கூப்பிட்டாலே சந்தோஷமா இருக்கு. புதிய ஆளுங்க வர்ராங்க” என்று நண்பரிடம் சொன்னார்.
நான் அவரிடம் செப்டெம்பர் 22 ஆம் தேதி, திங்களன்று பேசினேன். “உடம்பு நல்லா இருக்கு. கொஞ்சமா சுவரைப்பிடிச்சு நானே டாய்லெட் போய்ட்டேன்” என்று சொன்னார்.
நீண்டகாலமாக அவரால் படுக்கைவிட்டு அசையமுடியாத நிலை இருந்தது. ஆகவே அது மிகப்பெரிய முன்னேற்றம். நான் உற்சாகம் அடைந்து நிறைய பேசினேன். பெரும்பாலும் கேலி கிண்டல். தமிழிலுள்ள ஏறத்தாழ எல்லா எழுத்தாளர்களையும் கேலி செய்துவிட்டோம். குறிப்பாக யுவன் சந்திரசேகரை.
ரமேஷ் எனக்கு குற்றாலத்தில் கலாப்ரியா நிகழ்த்திய பதிவுகள் அரங்கில் அறிமுகமானார். வழக்கம்போல மிகக்கடுமையான எதிர்க்கருத்துக்களுடன் மோதிக்கொண்டோம். ஆனால் விஷ்ணுபுரம் 1997ல் வெளியானபோது ரமேஷ் அதை இந்தியாவில் எழுதப்பட்ட முதன்மையான இலக்கியப்படைப்பு என மதிப்பிட்டார்- அதை எழுதியுமிருக்கிறார். நேரில் சந்தித்தபோது எங்கள் உறவு சட்டென்று அணுக்கமாக ஆகியது. என்னைத் தழுவிக்கொண்டு “நாங்க கொள்கையா பேசினதெல்லாமே உங்க கிட்டேருந்து எழுத்தா வந்திருச்சி” என்றார்.
அது எனக்கும் மகிழ்ச்சி அளித்தது. விஷ்ணுபுரம் போன்ற ஒரு படைப்பை புரிந்துகொள்ள அன்றுமின்றும் சாமானிய வாசகர்களால் இயல்வதில்லை. ஒரு படைப்பில் கருத்துக்கள், உணர்ச்சிகள், தரிசனங்களின் முரணியக்கமாக உருவாகி வருவது என்ன என்று அவர்களுக்கு பிடிகிடைப்பதில்லை. அதன் ஏதேனும் சிலபகுதிகள், சில வரிகளைக்கொண்டு அதை வகுத்துவிடுவதையே இங்கே உள்ள அரசியல்சார்ந்த வாசிப்பு கற்றுத்தருகிறது.
விஷ்ணுபுரம் பற்றி அன்று ஒரு பெரும் கூட்டம் அது இந்துத்துவ நாவல் என்று பிரச்சாரம் செய்து வந்தது. அதை ரமேஷ் ‘பௌத்தம் கடந்த பௌத்த நாவல்’ என்று வரையறை செய்தார். அறுதியாக அந்த பேருருவன் தொல்தந்தை மட்டுமே என்றும், அவனுடைய புரண்டுபடுத்தலில் அந்நாவல் முழுமையடைவதும் அவரை மிகவும் கவர்ந்திருந்தன. ‘எல்லாமே போய்ச்சேரும் பழங்குடிமனம்’ என்ற ஒன்றை வெளிப்படுத்திய நாவல் என்றார்.
அதன்பின் எங்களுக்குள் நட்பு உருவாகியது. ரமேஷ், பிரேம், மாலதி எங்கள் பத்மநாபபுரம் இல்லத்துக்கும், பின்னர் பார்வதிபுரம் இல்லத்திற்கும் வந்து தங்கினர்.நான் ஊட்டியிலும் பிற ஊர்களிலும் ஒருங்கிணைத்த கவிதை உரையாடல் அரங்குகளில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டனர். ரமேஷின் வாழ்க்கையில் பின்னரும் நான் தொடர்புகொண்டிருந்தேன்.
நடுவே ஓர் இடைவெளி. அதற்கான காரணங்கள் நானோ ரமேஷோ அல்ல. அதை பிறிதொரு தருணத்தில் சொல்லவேண்டும். 2011 ல் வெள்ளையானை நாவல் நண்பர் அலெக்ஸின் எழுத்து பிரசுர வெளியீடாக வந்தபோது அவர் புதுச்சேரியில் ஒரு மதிப்புரைக்கூட்டம் ஏற்பாடு செய்தார். அந்நிகழ்ச்சி முடிவில் மீண்டும் ரமேஷைச் சந்தித்தேன். மெலிந்து ஒடுங்கி அழுக்கு வேட்டியும் சட்டையுமாக இருந்தார்.
“நல்லா இருக்கீங்களா?” என்று சம்பிரதாயமாகக் கேட்டேன்.
“நல்லா இல்லை” என்றார்.
நிகழ்ந்ததை அவர் சொன்னார். பிரேம், மாலதி இருவரும் அவரை கைவிட்டுவிட்டதாகவும், ஓராண்டுக்குமேல் ஒரு தோப்பில் காவலராக பணியாற்றியதாகவும், உடல்நிலை மோசமாக ஆனதனால் அவ்வேலையைச் செய்யமுடியாமல் அப்போது பாரதி நினைவில்லம் வராந்தாவில் வாழ்வதாகவும் சொன்னார். உறவினர்களிடம் செல்ல அவர் விரும்பவில்லை. உறவுகளை முன்னரே அவர் வெட்டிவிட்டிருந்தார். இரண்டு முனைவர்பட்ட ஆய்வாளர் நண்பர்கள் உணவு வாங்கி அளித்து உதவிவருவதாகவும் பெரும்பாலும் நினைவில்லம் வருபவர்களிடம் கையேந்தி வாழ்வதாகவும் சொன்னார். “பிச்சை எடுக்கிறேன் ஜெயமோகன்” என்றார்.
நான் உணர்ச்சிவசப்பட்டு அவர் கைகளைப் பற்றிக்கொண்டேன். “நான் சாப்பிடுற வரை நீங்களும் சாப்பிடுவீங்க. நான் கூரைக்குக் கீழே இருக்கிற வரைக்கும் நீங்க தெருவிலே இருக்க மாட்டீங்க” என்றேன்.
அன்றே அவரை ஒரு வாடகை அறையில் அலெக்ஸ் உதவியுடன் தங்கவைத்தேன். ஒரு வாரத்தில் மணி ரத்னம் அளித்த நிதி, என் சொந்த நிதி மற்றும் கே.வி.அரங்கசாமி அளித்த நிதியுடன் அவருடைய அக்காவின் வீட்டிலேயே ஒரு பகுதியை நிரந்தரக் குத்தகைக்கு எடுத்தோம். அப்பகுதியை செப்பனிட்டு குளிர்சாதன வசதி செய்து, கட்டில் போன்றவை வாங்கி அவரை குடியமர்த்தினோம்.
குளிர்சாதனப்பெட்டி, தொலைக்காட்சி என பிற பொருட்களை வாங்க பல்வேறு நண்பர்கள் உதவினர். அவர் ஓர் இல்லத்திற்குச் சென்றதுமே அமைதியடைந்தார். அதன்பின்னர் தான் கைவிடப்பட்டதைப் பற்றிய அகக்கொந்தளிப்பு உருவாகியது. முகநூலில் வசைகளை எழுதத்தொடங்கினார்.
நான் புதுச்சேரிக்குச் சென்று அவரிடம் பேசினேன். “நீங்கள் இந்தக்கசப்பிலிருந்து வெளியேறாத வரை உங்களால் எழுத முடியாது. உங்களுடைய அடிப்படைப்பிரச்சினைக்கு திரும்புங்கள்” என்றேன். அவர் அழுது கொந்தளிக்க நான் திரும்பத் திரும்ப “எழுதுங்கள். படைப்பு ஒன்றே மீளும் வழி. அது ஒன்றே உயிர்வாழ்வதன் பொருள்” என்றேன்.
சீற்றத்துடன் நான் சொன்ன ஒருவரி அவரை புண்படுத்தியது. “நான் நிதியளிப்பது ரமேஷ் என்ற எழுத்தாளனுக்கு. இந்த உடலுக்கு அல்ல” என்றேன்.
அவர் என்னை வசைபாடினார். “உனக்கு வந்தா தெரியும்…” என்றார்
ஆனால் நான் வந்தபின் நீண்ட கடிதம் எழுதினார். “நீ சொல்றதுதான் சரி. உன்னோட கிப்ட் நீ யார்னு உனக்கு சின்னவயசிலேயே தெரியும்கிறதுதான்… எனக்கு இப்ப தெரியுது. நான் எழுத்தாளன், கலைஞன், அது மட்டும்தான். வேற ஒண்ணுமே இல்லை”
அதன்பின்னர்தான் அவர் தன் தீவிரமான படைப்புகளை எழுதினார். அவருடைய படைப்புகள் அவர் இணைந்து எழுதியவையாகவும் வெளிவந்துள்ளன. ஆனால் எந்த வாசகரும் அவற்றில் இருப்பது அவருடைய ஆளுமை மட்டுமே என அறியமுடியும். இந்த இரண்டாம் கட்ட ரமேஷ் அவருக்கே உரிய பயணங்களின் வழியாக தமிழ்மெய்யியல் களத்திற்குள் நுழைந்தவர். அதுவே அவருடைய கலைச்சாதனை.
ரமேஷிடம் தொடர்ச்சியாக தொடர்பிலும் உரையாடலிலும் இருந்தேன். கடலூர் சீனு, சிவாத்மா என புதுச்சேரி நண்பர்கள் தொடர்பில் இருந்தார்கள். ரமேஷ் இறுதியாக வெளியே வந்தது 2013ல் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டபோதுதான். அப்போதும் உடல்நிலை மோசமாக இருந்தது. அவர் வர விரும்பியமையால் பயண ஏற்பாடு செய்திருந்தோம். அன்று தன் வாசகர்கள் பலரை சந்தித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தார். என்னிடம் விடைபெற்றபோது கண்களில் கண்ணீர் இருந்தது. “போதும், இத்தனைபேர் வாசிக்கிறாங்கன்னு தெரிஞ்சதே போதும்” என்றார்.
மீண்டும் புதுச்சேரிக்குச் சென்ற சிலநாட்களிலேயே பக்கவாதத் தாக்குதல். அதன்பின் வெளியே சென்றதெல்லாமே மருத்துவத்தின் பொருட்டுதான். ஆகவே இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விழாவுக்கு வந்தே தீர்வேன் என்று உறுதியாக இருந்தார். ஓர் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து அழைத்து வருவதாகச் சொன்னோம். மேடைக்கு ஒரு தனிப்பாதை அமைக்கவும் முடிவுசெய்திருந்தோம்.
ரமேஷின் நோய் என்பது அவருடைய மரபணுவில் உள்ளது. பிறப்பு முதல் மிகமிக உயர்ந்த ரத்த அழுத்தம் அவருக்கு இருந்தது. 25 ஆண்டுகளுக்கு முன்பு அவர் என் இல்லத்திற்கு பிரேம், மாலதியுடன் வரும்போதே அச்சிக்கல் கடுமையாக இருந்தது. அவரால் குனியமுடியாது, மயங்கி விழுந்துவிடுவார். முகத்திலுள்ள சிறு பருக்கள் வெடித்து ரத்தம் கசியும். அவருடைய ரத்த அழுத்த அளவு நம்பவே முடியாத அளவு மிகுதி. சாமானிய ரத்த அழுத்தத்தைவிட இரு மடங்கு.
அவர் உடல் அதற்கு பழகியிருந்தமையால்தான் அவர் வாழமுடிந்தது. 2010 ல் எங்கள் கவனிப்புக்கு வந்தபின் தொடர்ச்சியாக மருத்துவக் கவனிப்பிலேயே இருந்தார். பக்கவாதம், உள்ளுறுப்புகள் செயலிழப்பு எல்லாமே ரத்த அழுத்தத்தின் விளைவுதான். ஆனால் வாழ்வின்மீதான பற்று உடலை தாக்குப்பிடிக்கச் செய்தது.
பதிமூன்றாண்டுக்காலம் நோயுற்றிருந்தார். படுக்கையில் மலம் கழிப்பவராகவும் இருந்தார். ஆனால் இறுதிக்கணம் வரை கலைஞனாக வாழ்ந்தார். அது மட்டுமே தான் என உணர்ந்தவராக விடுதலை அடைந்தார். வீடுபேறு என்பது வாழ்விலேயே அடைவது என்பதே என் கொள்கை. அவர் அவ்வகையில் நிறைவாழ்க்கை. அஞ்சலி ரமேஷ். நான் ஒரு துளியும் குறைவைக்கவில்லை என ஒரு முறை சொன்னீர்கள். அந்நிறைவே போதுமானது இன்று.

மத்தகமும் சியமந்தகமும்- சாரதி
நலமா? அக்டோபரில் உங்களை மீண்டும் நேரில் சந்திப்பதற்கும் பூன் தத்துவ முகாமில் கலந்து கொள்வதற்கும் ஆவலோடு காத்துகொண்டிருக்கிறோம்.
2024 பூன் முகாமிற்குப் பின்னர் கலிபோர்னியா வளைகுடா பகுதி நண்பர்கள் கடந்த 10 மாதங்களாக மாதமொரு முறை நேரில் சந்தித்து இலக்கிய வாசிப்பிலும் விவாதத்திலும் ஈடுபட்டு வருகிறோம். ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு எழுத்தாளர் என எடுத்துக்கொண்டு அவரது கதைகளை வாசித்து, அதையொட்டிய எண்ணங்களையும் வாசிப்பனுபவத்தையும் பகிர்ந்துகொள்கிறோம். நிற்க. டாலஸ் நண்பர்களின் சென்ற மாதப் பதிவுகளில் மத்தகம் நாவல் பற்றி திரும்ப திரும்ப குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டவுடன், நாவலை மீண்டும் படிக்கும் ஆவல் என் மத்தகத்திலும் ஏறிவிட்டது. எங்கள் வளைகுடா கூடுகை பாடத்திட்டத்தைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு மத்தகத்தில் மூழ்கிவிட்டேன். கேசவனின் ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் காட்டிலும் நதியிலும் பாய்ந்து விழுந்து ஓடிக்கொண்டிருக்கும் யானைப்பாப்பான்களை போல, மத்தகத்தின் நடைவேகத்திற்கு ஈடுகொடுக்க வாசகனும் ஒரே ஓட்டமாக ஓட வேண்டியிருக்கிறது.
மார்த்தாண்ட வர்மாவின் களித்தோழனாகி, அரசனுக்கிணையான அதிகார நிமிர்வோடு வரும் கேசவன், தவறிழைப்பவன் வாள்கொண்ட நாயரானாலும் தயங்காமல் தண்டிக்கிறான். தவறி எழுந்த ஒரேயொரு அவச்சொல்லையும் பொறுக்காது தன் பாகனையே காலிலிட்டு மிதிக்கிறான். ஆதிகேசவனுக்கும் மார்த்தாண்ட வர்மாவுக்கும் மட்டுமே தன் மத்தகம் மேல் இடம் கொடுத்தவன், இறுதியில் புதிய அரசனால் தன்முன் நீட்டப்பட்ட துப்பாக்கியைக் கண்டு அதிகார மாற்றத்தை உணர்ந்து கொள்வதும், கொலையும் கள்ளமும் புரியும் மூன்றாந்தர பாகன் பரமனின் கட்டளைக்கு்ப பணிந்து தன் மத்தகத்தில் அவனுக்கு இடம் கொடுப்பதும் மனச்சோர்வையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. ஆனால் மத்தகம் முன்வைப்பது உன்னதமான விழுமியங்கள் கூட அதிகாரத்தின் முன் மண்டியிடக்கூடும் வாழ்க்கையின் அந்த அவலத்தையும் சிறுமையையும் தான்.
கேசவனின் அதே நிலை தான் ராமலட்சுமிக்கும். தன் கணவனைக் கொன்ற அதே பரமனுக்கே உடன்பட்டு வாழவேண்டியிருக்கிறது. “செத்தவங்களுக்கு கவலை இல்ல. இருக்கவங்களுக்குல்லா வயிறுன்னு இருக்கு. அந்த தீயில மண்ண வாரி இடணுமே மூணு நேரம். அதுக்கு மானம் மரியாத எல்லாம் விட்டு ஆடணுமே” என்று அவள் சொல்லும் நியாயம் கேசவனுக்கும் பொருந்தும் என்றாலும் அதை ஏற்க மனம் ஏனோ மறுக்கிறது. என்ன இருந்தாலும் அவன் ஆனையில்லா?!
மத்தகம் வாசிப்பைக் குழுமத்தில் பகிர்ந்து கொண்டபோது டாலஸ் நண்பர்கள் பிரதீப் மற்றும் மூர்த்தி, பரமன் நகையைத் திருடுவதையும் கேசவன் நாராயணனின் இடத்திற்கு ஆசைப்பட்டு பின்னாலிருந்து தாக்குவதையும் குறிப்பிட்டுச் சொன்னார்கள். “தனக்குரியது என கேசவன் உணர்வதை நாராயணன் பெறுவதை சகிக்காமல் மூத்தவனான நாராயணனை – அதுவரை யாரிடம் அடங்கியிருந்தானோ அவனை – அங்கிருந்து நகர்த்த தாக்குகிறான். பரமனின் எண்ணத்தில் இந்த நிகழ்வும், அம்பிளியின் சிரிப்பும் வர, அவளை அடைய எண்ணும் அவன் மூத்தவனான அருணாச்சலத்தை கொல்கிறான்.” என மூர்த்தி குறிப்பிட்டார். அதே இடம் எனக்கு வேறொரு அர்த்தத்தையும் அளித்தது. கேசவன் தன்னைத் தாக்கியதும் நாராயணன் சட்டென ஒரு பிளிறிலில் அதன் வயோதிகம் எனும் பலவீனத்தைப் பின்தள்ளி, கேசவனை அடக்கிவிடுகிறது. தன் காலுக்கு கீழே உள்ளவர்களை அதிகார நிமிர்வோடு நோக்கியிருந்த கேசவன், தனக்கு மேலுள்ள அதிகார அடுக்கை அப்போது உணர்ந்து கொள்கிறது. கதையின் முடிவில் பரமனின் பலவீனத்தைத் தாண்டி அவன் அதிகாரத்தை கேசவன் உணர்வதற்கும் அந்த இடம் ஒரு முக்கிய காரணம் என்று தோன்றுகிறது. கேசவனின் அந்தக் கீழ்மையை அறிந்திருந்ததனால் தான், பரமனும் தைரியமாக அருணாச்சலத்தைக் கொன்று கேசவன் மீதே பழியைச் சுமத்தத் துணிகிறான்.
எத்தனை முயன்றும் கேசவனின் இந்தச் சரிவை ஏற்க மனம் மறுத்தாலும், அந்த இடத்தில் நாம் என்ன செய்திருப்போம் என்பதை எண்ணிப் பார்க்கையில் மனம் நடுக்கம் கொள்கிறது. நான் பணிபுரியும் இடத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல நிர்வாக மாற்றங்கள், பணி நீக்கங்கள். முழுமனதோடு ஏற்றுக்கொள்ள முடியாத போதும் மத்தகத்தின் மீது மற்றவர்களை ஏற்றிக் கொண்டு தொடர்ந்து செல்லத்தான் வேண்டியிருக்கிறது.
இம்முறை மத்தகம் படித்த அதே நாட்களில், தற்செயலாக வில்லியம் டேல்ரிம்பிளின்
The Empire (podcast)ல் கோஹினூர் பற்றி கேட்டுக்கொண்டிருந்தேன் (காந்தியைப் பற்றி பேசியதைக் காட்டிலும் நான்கு மடங்கு கோஹினூரைப் பற்றித்தான் பேசுகிறார்கள்!). கேசவனைப் போலவே இந்த வைரமும் அதிகாரச் சரிவின் மாபெரும் குறியீடல்லவா. கோஹினூருக்குண்டான பல புராணங்களில் ஒன்று அதை சியமந்தகம் என்கிறது. சூரியனின் துளியாக பூமிக்கு வந்த நாள் முதல், இளைய யாதவன் தொட்டு இன்று வரை எத்தனை அதிகார மாற்றத்தை அது கண்டுவிட்டது. கேசவனைப் போலவே அதன் வரலாறும் ரத்தத்தில் ஊறியது. முகலாயர்கள், ஈரானியர்கள், சீக்கியர்கள் எனத் தன்னை உடமையாக்குபவர்களை எல்லாம் அது தன் கைப்பொம்மையென ஆக்கி அவர்களைக் காவு வாங்கியது. ஆனால் காலமாற்றத்தில், அதிகாரத்தின் முன் அதுவும் பணிய வைக்கப்பட்டு அறுக்கப்பட்டு இன்று எங்கோ ஓர் இடத்தில் இருக்கிறது, அதன் மத்தகத்தின் மீது யாரை வேண்டுமானாலும் ஏற்றிக் கொண்டு!
சாரதி

Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers