Jeyamohan's Blog, page 3
November 28, 2025
இந்து மெய்யியல், இருநூல்கள்
அன்புள்ள ஜெ,
வணக்கம்.
நானும், ஈஸ்வரியும் இரண்டாவது புத்தகமாக இந்து ஞானம் அடிப்படை கேள்விகள் எடுத்து வாசித்தோம். நேற்றுடன் கலந்துரையாடலை முடித்து விட்டோம். இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் புத்தகத்தை அடுத்ததாக வாசிக்கலாம் என்று இருக்கிறோம்.
இப்போதெல்லாம் புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது திருப்தியாக உள்ளது. அதன் கருத்துக்கள் மனதில் பதிந்து விடுகிறது. மற்றவர்களுக்கு விளக்கும் போதும் , சரளமாக சொல்ல முடிகிறது. மிகவும் நன்றி ஜெ.
பின்குறிப்பு: எல்லா சுருக்கங்களையும் இணைத்துள்ளேன்.
இந்து ஞானம் Synopsis:
பழங்குடியினரின் காலகட்டத்தில், இயற்கை மதமான இந்துமதம் தோன்றியது. இன்று வரை உள்ள உணர்வு ரீதியான தொடர்ச்சியே இதன் தனித்தன்மை. இனக்குழுக்கள் இணையும் போது, சாதி தோன்றியது. சிந்து நதிக்கு அப்பால் இருந்ததால், பாரசீகர்கள் அம்மக்களை இந்து என்று அழைத்தனர். மூன்றடுக்கு நம்பிக்கை இருப்பதால்தான் இது மதம் அல்ல; இந்து தர்மம் ஆகிறது. பல வகையான வழிபாடுகள் இந்து மதத்தால் உள்ளிழுக்கப்பட்டு, உருமாறாமல் உள்ளது. உருவ வழிபாடு, அருவ வழிபாடு இரண்டும் இந்து மதத்தில் உள்ளது. ஆலயங்களை அறிவது, பக்தியை பெருக்கும். பக்தி இயக்கம் வழியாகவே தத்துவம், சாமானிய மக்களை அடைந்தது. இந்து மதத்தின் பாடத்திட்டத்தை அறிந்து, தனக்கான மரபை ஆழ்ந்த கற்பது, ஒவ்வொரு இந்துவின் கடமை.
என்றும் அன்புடன்,
S.ராஜேஷ்வரி
கோவை.
அன்புள்ள ஜெ
அண்மையில் வாசித்த இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் எனக்கு இந்து மரபு பற்றிய ஒரு மிகப்பெரிய தெளிவை அளித்த நூல்
நான் இந்து மதம் என்பதே இந்து தத்துவ மரபு என நினைத்திருந்தேன். இந்து மரபும் இஸ்லாமிய, கிறிஸ்தவ மரபைப்போல ஆன்மிகம், பக்தி ஆகியவற்றைப் பற்றி மட்டுமே சொல்கிறது என நினைத்தேன். இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்களில் நான்கு நாத்திகவாத தரிசனங்கள் என்பதும் மிகமிக ஆழமான விவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பது எனக்கு பெரிய அதிர்ச்சி. இந்து மதம் முன்வைக்கும் ஆன்மிகமும் பக்தியும்கூட அத்தனைக் கூர்மையான நாத்திகமரபுகளுடன் விவாதித்து உருவானவையே என்பது இன்னும் பெரிய அதிர்ச்சி. நான் இந்நூலை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள இன்னும் நீண்டநாட்கள் ஆகலாம். நன்றி
செல்வ. திருக்குமரன்
நாவல் அரங்கு – கடிதம்
While we are trying to promote our work within the Indian context, we continuously struggle in that effort. This challenge arises mainly from our limited understanding of global literature.
வெர்ஜீனியாவில் நவம்பர் மாதம் நீங்கள் நடத்திய புனைவு பயிற்சி பட்டறையில் நானும் கலந்து கொண்டேன். மிக சிறப்பாக இருந்தது. உங்கள் கதைகள் கச்சிதமாக பொருத்தும் தைக்கப்பட்ட கதைகளாக இருப்பதைக் கண்டு இதற்கு ஒரு சமன்பாடு இருக்க வேண்டும் என எண்ணியதுண்டு. அதை உறுதி செய்யும் விதமாக இருந்தது பயிற்சியில் நீங்கள் பகிர்ந்துக் கொண்ட உத்திகள்.
நாவல் அரங்கு – கடிதம்
November 27, 2025
தமிழ்ப்பண்பாடு, தமிழிசை மரபு
தமிழ்ப்பண்பாடு என நாம் நினைக்கும் பேரமைப்பு இயல், இசை, நாடகம் என்னும் மூன்று பிரிவுகள் கொண்டது. அதில் முதன்மையானது இயல். அதாவது இலக்கியம். இரண்டாவது மரபு இசை. தமிழிசை மரபின்றி தமிழ் இல்லை. ஆனால் தமிழகத்தில் தமிழிசைமரபைப் பற்றிய மிகக்குறைவான அறிமுகமே இலக்கியவாதிகள் நடுவேகூட உள்ளது.
இந்திய ஆங்கில இலக்கியம், விவாதம்.
‘Indian English writing is very inferior…’: Author Jeyamohan on language, Salman Rushdie!
அன்புள்ள ஜெயமோகன்,
இந்திய ஆங்கில இலக்கியத்தின் தரம் ஒரு படி குறைவானது என்பதை நீங்கள் இண்டியன் எக்ஸ்பிரஸ் பேட்டியில் சொல்லி இருந்தீர்கள். அது வெவ்வேறு உரைகளில் நீங்கள் முன்பு குறிப்பிட்டு இருந்த விஷயமும் அதை புதியதாகக் கேட்ட சிலர் இங்கு கருத்துக்களை சொல்வதை பார்த்தேன். நீங்கள் அதற்கு எதிர்வினை ஆற்றுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஆயினும் அவற்றை கவனித்தீர்களா என்று அறிய விரும்புகிறேன்.
பரத் ராஜாராம்
அன்புள்ள பரத்,
நான் இப்போது இருந்து கொண்டிருக்கும் அவசரத்தில் அந்த விவாதங்களை கவனிப்பதற்கான பொழுது இல்லை. எல்லா நாளும் எழுத்து, திரைவிவாதம், பயணம் என்று சென்று கொண்டிருக்கிறது. இன்னும் சில மணி நேரத்தில் லண்டன் கிளம்பவிருக்கிறேன்.
அந்தப் பேட்டி ஒரு காணொளியினூடாக் மூன்று மாதம் முன்பு எடுக்கப்பட்டது. அந்த உரையாடலின் ஒரு பகுதியாக நான் சொன்ன கருத்து அது. அந்தக் கருத்தை மிக விரிவாக முப்பதாண்டுகளுக்கு முன்பே இதே இந்தியன் எக்ஸ்பிரஸ் பேட்டியிலும், அதில் அன்று நான் எழுதிவந்த ஒரு தொடரிலும் சொல்லியிருக்கிறேன். பல ஆண்டுகளாக என்னுடைய தரப்பு அது.
இலக்கியத்தில் அப்படி ஒரு கறாரான தரப்பிற்கு எல்லா வகையான இடமும் உண்டு என்பதை இலக்கியமென்றால் என்ன என்பதை உணர்ந்தவர்கள் அறிவார்கள். இலக்கியத்தில் எல்லா வகையான தீவிரமும் அனுமதிக்கப்படுவதே. அதனூடாக முன்வைக்கப்படும் கோணம், அதன் தர்க்கம் என்ன என்பதை மட்டுமே இலக்கியவாசகர்கள் கருத்தில்கொள்வார்கள். அதனூடாக உருப்பெற்றுவரும் பார்வை என்ன, அப்பார்வையின் இலக்கிய இடம் என்ன என்று மட்டுமே பார்ப்பார்கள். இது இலக்கியவிமர்சனம், இலக்கிய கோட்பாடு சார்ந்த விவாதம்.
என்னென்ன ‘விவாதம்’ நிகழ்ந்திருக்கும் என என்னால் எளிதில் சொல்லிவிட முடியும். பல ஆண்டுகளாக நான் பார்த்துக்கொண்டிருப்பதுதானே இது.
‘அப்படியெல்லாம் பொதுமைப்படுத்தலாகாது’ என ஆரம்பித்து ‘இன்னின்னாரெல்லாம் நல்ல எழுத்தாளர் அல்லவா?’ என்று ஒருவர் ஆரம்பித்தாரென்றாலே அவர் ஒரு பொதுவாசகர், இலக்கியம் அறிந்தவர் அல்ல என்றுதான் பொருள். அவர் இலக்கிய விவாதங்களில் ஈடுபடும் தகுதி கொண்டவர அல்ல. அவர் வெறுமே ‘கதை’ படித்துவிட்டு ‘நல்லா இருக்கு- இல்லை’ என்று சொல்பவர் மட்டுமே. அத்தகையோர் கருத்து சொல்லலாமா? சொல்லலாம், பேசிக்கொள்ளலாம். அது இலக்கிய அரட்டை. எந்தவகையான பேச்சும், உரையாடலும் இலக்கியத்துக்கு தேவையானதுதான். ஆனால் இலக்கியவிவாதங்களில் அவர்களைப் பொருட்படுத்தவேண்டியதில்லை என்பது என் எண்ணம்.
இந்த விவாதத்திலேயே அசட்டுத்தனமான குரல் என்பது, ‘இவர் எத்தனை நூல்களை படித்தார்? எல்லா நூல்களையும் படித்துவிட்டாரா? படித்தவற்றில் எத்தனை சதவீதம் படைப்புகள் இலக்கியம் என்னும் கணக்கு இருக்கிறதா? அதை அவரால் நிரூபிக்க முடியுமா?’ என்ற வகையிலான சலம்பல்கள். இலக்கிய விமர்சனம் என ஒன்று உலகில் தோன்றி முந்நூறாண்டுகளாகியும் இத்தகைய குரல்கள் எழுவது இந்தியச்சூழலில் மட்டும்தான் என நினைக்கிறேன்.
பொதுமைப்படுத்தாமல் கருத்துக்களுக்கும், முடிவுகளுக்கும் வரமுடியாது. கருத்துக்கள், அவற்றுக்கான விளக்கங்கள்தான் இலக்கியவிமர்சனம் எனப்படுகின்றன. இலக்கிய விமர்சகன் அவனுடைய தேடலினூடாக தொடர்ச்சியாக வாசிப்பவன். தன் வாசிப்பினூடாகவும், வாழ்க்கைசார்ந்த தன் பார்வையினூடாகவும், தன் அழகியல் கொள்கையினூடாகவும் ஒரு கருத்தை முன்வைப்பவன். இலக்கிய விமர்சகன் என்பவன் ‘சர்வேயர்’ அல்ல.
இன்னொரு சாரார் எங்கே எந்த இலக்கியவாதம் நடந்தாலும் சென்று தங்கள் ஏற்கனவே நிறைய படித்து விட்டதாக ஒரு பாவனையை காட்டும் snob கள். இலக்கிய வாசகர் எவருமே ஓரிரு ஆண்டுகளிலேயே இந்த ‘ஸ்னாபர்’களை அடையாளம் கண்டு கொள்ள முடியும். மெய்யான இலக்கிய வாசகர்கள் இலக்கியம் பற்றி, வாசித்த நூல்களைப் பற்றி தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருப்பார்கள். ஸ்நாப்கள் பெயர் உதிர்ப்பார்கள், உதிரிக்கருத்துக்களைச் சொல்வார்கள். ஆகவே சூழலில் ஏறத்தாழ அனைவருக்குமே அவர்களின் தகுதியும் தெரிந்திருக்கும். என்றாலும் ஸ்னாபுகள் அதை உணர்வதே இல்லை, திரும்பத் திரும்ப அவர்கள் அந்த தங்களுடைய தோரணையை சமைத்துக் கொள்வதிலேயே கவனமாக இருப்பார்கள். அது ஒரு தனி உலகம்.
ஓர் இலக்கிய விவாதத்தில் நான் கருத்தில் கொள்வது இரண்டு தரப்பினரை மட்டுமே. ஏற்கனவே தரமான இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை எழுதியவர்கள். கல்வியியலாளர்களின் பங்களிப்பு எனக்குத் தெரியும், ஆனால் அவர்களிடம் நான் பேச ஒன்றுமில்லை. அரசியல்கோட்பாட்டை இலக்கியத்துக்குப் பயன்படுத்துபவர்களிடமும் எனக்கு பொதுப்புள்ளி ஏதுமில்லை. அடுத்தபடியாக தேர்ந்த வாசகர்கள் என்று நான் நினைக்கக் கூடியவர்களை கருத்தில் கொள்வேன்.
தேர்ந்த வாசகர் என்பவர் ஐந்து அடிப்படை தகுதிகளை கொண்டவர் என நான் வகுத்துக் கொண்டிருக்கிறேன்.
தன் மொழியின் முதன்மைப் படைப்புகள் அனைத்தையும் வாசித்தவராக இருக்கவேண்டும்.இந்திய இலக்கியம் பற்றிய , உலக அளவிலான இலக்கியம் பற்றிய ஓர் பொதுப்புரிதலை தன் வாசிப்பினூடாக அடைந்தவராக இருக்கவேண்டும்.இந்திய இலக்கியத்தின் முக்கியமான செவ்வியல்படைப்புகள் மூன்றையாவது வாசித்திருக்கவேண்டும்.சர்வதேச அளவில் பெரும் செவ்வியல்படைப்புகள் என கருதப்படும் நூல்களில் ஐந்தையாவது வாசித்திருக்கவேண்டும்.அவர்கள் வெவ்வேறு நாடுகளை, பண்பாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். (உதாரணமாக, தல்ஸ்தோய், தாமஸ் மன், விக்டர் யூகோ, ஹெர்மன் மெல்வில், ஜார்ஜ் எலியட் என ஐந்து பெரும்படைப்பாளிகளை ஒருவர் வாசிப்பதைச் சொல்லலாம்)இலக்கியக் கொள்கைகள், இலக்கியக் கலைச்சொற்கள், இலக்கிய விமர்சன மரபு ஆகியவற்றைப் பற்றிய அடிப்படைப் புரிதல் இருந்தாகவேண்டும்.இத்தகைய ஒருவரிடம் மட்டுமே விவாதிக்க முடியும், இல்லையென்றால் அது சொற்களை வீணடிப்பதுதான். நாம் சொல்ல வருவதென்ன என்று அவரால் புரிந்துகொள்ள முடியாது. அவர் செய்யும் எளிமைப்படுத்தல்களை நாம் எரிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்திய ஆங்கில இலக்கியம் பற்றி கடுமையான கருத்துக்கள் உருவாகி வரும் காலம் இது. அண்மையில் தாமஸ் மீனீ எழுதிய குறிப்பு கூட நான் பகிர்ந்திருந்தேன். கிராண்டா, கழுமாடன், ஒரு விவாதம். (அவரிடமும் நீங்கள் எடுத்த சர்வே என்ன என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள் சிலர்.) இந்திய ஆங்கில இலக்கியத்தின் போலிமுற்போக்குப் பாவனைகள், உள்ளீடற்ற தாராளவாத அரசியல் சரிகள், மேட்டிமைத்தனம் வழியாக உருவாகும் ‘பாலீஷ்’, மேலைநாட்டு வாசகர்களுக்காக இந்தியாவை சமைத்தளிக்கும் அழகியல், மேலைநாட்டினருக்கு ஆர்வமுள்ள இதழியல் செய்திகளையே இலக்கியமாக ஆக்கிக்கொண்டிருக்கும் அசட்டுத்தனம் – ஆகியவற்றை பற்றிய ஒரு கவனத்தை நாம் உருவாக்கிக்கொள்ளவேண்டிய காலம் இது. இந்திய ஆங்கில இலக்கியம் என்னும் போலிப்படலத்தைக் கிழிக்காமல் இந்திய இலக்கியத்தை உலகளாவ முன்வைக்கவே முடியாது.
இந்திய ஆங்கில இலக்கியத்தின் அடிப்படையான எல்லைகள் பற்றிய ஒரு விவாதமே நான் உத்தேசிப்பது. அதில் என் இலக்கிய விமர்சனத் தரப்பை விரிவாக என்னால் கூற முடியும். ஆங்கிலத்தில் விரிவாகவே எழுதுவதாக இருக்கிறேன். அதற்கு படைப்பு வாசிப்பு தளத்திலிருந்து எதிர்வினைகள் வரும், விவாதம் நிகழும் என்று எதிர்பார்க்கிறேன்.
ஜெ
Manasa Book Club, Chennai.ஆட்சிப்பாக்கம் குன்று
சுற்றிலும் சமண மதத்தைச் சேர்ந்த மக்கள் இல்லையெனினும் அருகிலுள்ள பேராவூரைச் சேர்ந்த மக்கள் குன்றின்மேல் அமைந்த அப்பாறைச் சிற்பத்திற்கு கருவறையை அமைத்து கதவிட்டு ஆலயம் போல் பாதுகாத்துள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை பொங்கல் தினத்தன்று மக்கள் வழிபடுகின்றானர்.
ஆட்சிப்பாக்கம் குன்று – தமிழ் விக்கி
வருகை, கடிதம்.
அன்புள்ள
ஜெ
,
ஒரு வருடத்திற்கு மேலாக உங்களை சந்திக்க வேண்டும் என்று ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன். இவ்வருட விஷ்ணுபுர விழாவில் அனேகமாக அதற்கான வாய்ப்புகள் அமையும் என்ற எண்ணம் சற்று ஆறுதலாக உள்ளது. எனக்கு 18 வயது, நான் பங்குக்கொள்ளும் முதல் விஷ்ணுபுர விழாவும் இதுவே.
தினமும் எப்படியாவது உங்களைப்பற்றிய, உங்கள் படைப்புகளைப் பற்றிய பேச்சு தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. இத்தனைக்கும், நீங்கள் எழுதிய கொற்றவை, பின் தொடரும் நிழலின் குரல், வெண்முரசு போன்ற பெரும் படைப்புகளை வாசிக்காதவன் நான். விஷ்ணுபுரம், காடு, கடல், இரவு, அறம் மட்டும்தான் இதுவரை நான் வாசித்தவை, நிறைய கட்டுரைகளை உங்கள் இணையத்தில் தினமும் வாசித்து வருகிறேன். சமீபத்தில் திசைகளின் நடுவே, குமரித்துறைவி நூல்களை வாங்கினேன்.
நண்பரும் நானும் டிசம்பர் குளிரில் பின் தொடரும் நிழலின் குரலை ஒன்றாக வாசிக்க முடிவெடுத்துள்ளோம். அதைத் தொடர்ந்து ஜனவரியில் நான் மட்டும் வெண்முரசை ஆரம்பிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். வெண்முரசைப் பற்றிய வாசகர் கடிதங்களே மிகப்பெரிய பிரமிப்பையும், தீராக்கனவையும் என்னுள் உருவாக்குகின்றன. எப்படியாவது அனைத்து நூல்களையும் வாங்கி படிக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் உள்ளேன், இணையத்திலோ kindle-இலோ படிப்பது எனக்கு பெரிதாக உவப்பளிக்கும் காரியம் அல்ல. இரண்டு நாட்களுக்கு முன், வெண்முரசை வாங்குவதற்கு ஒரு திட்டம் பகுத்தேன். பணம் நிறைய தேவைப்படும் என்பதால் ஒரு பகுதி நேர வேலைக்கு செல்ல முன்னரே தீர்மானித்தேன், அது கிடைத்தும் விட்டது. இப்பொழுது வாங்குவது மட்டுமே மிச்சம்.
காவியம் நாவலின் அச்சு வடிவத்திற்கும் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கிறேன்,
இன்சொல்.
அன்புள்ள இன்சொல்,
உங்களைப் போன்று மிக இளம் வயதிலேயே தீவிரத்துடன் கிளம்பி வருபவர்கள் ஒரு சிறந்த எதிர்காலத்தை எனக்கு காட்டுகிறார்கள். நான் பேச விரும்புவது முதன்மையாக அவர்களுடனேயே. அநேக ஒவ்வொரு நாளும் அவ்வாறு ஒரு வாசகரைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் ஒருவரும் எனக்கு மிக இனியவர்களே.
இன்று நம்மைச் சூழ்ந்து கொள்ளும் ஊடகப் பெருக்கத்தால் நமது கவனம் சிதறடிக்கப்பட்டு, தூசுப்பரப்பாகப் பரவிக் கொண்டிருக்கும் சூழலில் கூர்ந்த நீண்ட வாசிப்பை நாடுபவர்கள் மிக அரிதாகவே உள்ளனர். அந்த அரியவர்களே நம்முடைய இலக்கு .அவர்களே இணைத்துக் கொண்டு என் கனவுகளை நான் முன்னெடுக்க முடியும்
விழாவுக்கு வாருங்கள். நம் சந்திப்போம்.
ஜெயமோகன்
கோவை சொல்முகம் சுகுமாரன் கருத்தரங்கம்
நண்பர்களுக்கு வணக்கம்.
நமது சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் கருத்தரங்க நிரையின் 8வது நிகழ்வு இம்மாதம் 30 ஆம் தேதி ஞாயிறன்று விஷ்ணுபுரம் பதிப்பகத்தில் இடம்பெற உள்ளது. கவிஞரும் எழுத்தாளருமான திரு. நா. சுகுமாரன் அவர்கள் உடனிருக்க அவரது படைப்புகள் குறித்த வாசிப்பனுபவங்கள் பகிரப்படும். நண்பர்கள் அனைவரும்
இந்நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ் விக்கி பக்கம்
நா.சுகுமாரன்நாள் : 30 நவ 25, ஞாயிற்றுக்கிழமை,
நேரம் : காலை 10:00 – 1:00
இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.
Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9
தொடர்பிற்கு:
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954
பூன் தத்துவ முகாம்- கண்ணபிரான் நடேசன்
ஜே கற்றுகொள்ளலை கற்பிகிறார். சித்தத்தை கூர் தீட்டி, உறிஞ்சுதாளில் மையென பரவும் உள்ளத்ததை ஆசிரியனில் நிலைக்க வைக்கிறார். நினைவு தெரிந்த நாள் முதல் உள்ளே விழுந்த ஒவ்வொரு துளியையும் எதிர் திசையில் செலுத்தியே பழகியிருந்த சித்தத்தை அமைதிப் படுத்துகிறார். ஆசிரியன் ஆழ்ந்து கற்றதை சிதறாது உள்ளெடுக்க வைக்கிறார்.
I have been watching your philosophy classes in the USA and Europe. They seem to resemble family gatherings, as many attendees come with their families, and I noticed young children among them. It was a pleasant surprise. My question is, are you trying to create an exclusive community of readers?
A family of intellectuals
November 26, 2025
பிரிட்டன் பயணம்- கனவுகள், திட்டங்கள்.
இன்று, (26 நவம்பர் 2025) இரவு நானும் அஜிதனும் அவன் மனைவி தன்யாவும் சென்னையில் இருந்து லண்டன் கிளம்புகிறோம். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக திட்டமிடப்பட்டு இன்னொரு வகையில் உருமாறிப்போன ஒரு பயணம் இது. இந்த ஆண்டில் நிறைய வெளிநாட்டுப் பயணங்கள் ஆகிவிட்டன. பிரிட்டன், ஐரோப்பா, அமெரிக்கா, மீண்டும் இப்போது பிரிட்டன், திரும்பி வந்தபின் இன்னுமொரு பயணம் இருக்கலாம்.
இந்த ஆண்டில் கிட்டத்தட்ட மூன்றுமாதம் இந்தியாவுக்கு வெளியில் செலவழிப்பதுபோல ஆகிவிட்டது. அது என் எழுத்துப் பணிகளை பெரிதாகப் பாதிக்கவில்லை– எங்கிருந்தாலும் எழுதும் உளநிலையை இப்போது அடைந்துவிட்டிருக்கிறேன். ஆயினும் நாட்கள் மிக விரைவாகச் செல்வதுபோல ஓர் எண்ணம். எப்போது எந்த ஊரிலிருக்கிறேன் என்று எனக்கே தெரியாதது போல ஒரு குழப்பம் உருவாகிவிட்டது. ஜனவரியிலும் தொடர் பயணங்கள் உள்ளன. பிப்ரவரி, மார்ச்சில் தொடர்ச்சியாக ஊரில் இருக்கவேண்டும், தத்துவ வகுப்புகளை முழுமூச்சாக நடத்தவேண்டும் என எண்ணியிருக்கிறேன். ஏனென்றால் ஏப்ரலில் அடுத்த அமெரிக்கப்பயணம் உள்ளது. எங்கள் நியூயார்க் இலக்கிய மாநாடு.
ஜூலையில் ஐரோப்பியப் பயணம் முடித்தபின்னர் செப்டெம்பர் முழுக்க மூன்று வார இறுதிகளிலாக வகுப்புகளை நடத்தினேன். பெரும்பாலும் வெள்ளிமலையிலேயே இருந்தேன். பிப்ரவரியிலும் அப்படித்தான் ஆகுமென நினைக்கிறேன். ஜனவரி முதல்வாரம் இந்திய தத்துவ வகுப்புகளின் முதல்நிலையை ஆங்கிலத்தில் நடத்தவிருக்கிறேன். ஆங்கில வகுப்புகளுக்காக பலர் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். என் ஆங்கிலம் பற்றிய தயக்கம் இப்போதும் உள்ளது என்றாலும் நடத்திவிடலாம் என எண்ணுகிறேன். தொடர்ந்து பிப்ரவரியில் இந்திய தத்துவ வகுப்புகளை ஏழு நிலைகள் வரை முடிக்கவேண்டும் என்பது திட்டம்.
தொடர்ச்சியாக பல எதிர்காலத் திட்டங்கள். பெரும்பாலானவை பெரும் கனவுகளின் விளைவுகள். விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் ஒரு நட்புக்குழுமம் ஆக ஆரம்பித்து இன்று ஓர் அறிவியக்கமாக ஆகியுள்ளது. முழுமையறிவு என்பது அதன் பயிற்சிக்களம். அங்கே பயின்றவர்கள் ஆசிரியர்களாக ஆகுமிடமே அடுத்த கட்டம். அதற்கான அமைப்புகளை உருவாக்கும் கனவுகளுடன் முன்னகர்கிறோம். அதுவே எதிர்காலம், என் காலத்தை கடந்தபின்னரும் நீடிக்கும் பெருஞ்செயல் அது.
கூடவே என் தொழில். நான் திரைப்படங்களில் இருந்து நின்றுவிடலாம் என எண்ணும் காலம் இது, ஆனால் அப்படி எண்ணினால்தான் திரைப்பட வாய்ப்புகள் வந்து சூழ்ந்து கவர்ந்திழுக்கும். பல படங்களின் பணிகள், ஒவ்வொன்றிலும் அதே தீவிரத்துடன் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். இப்பணிகள் வழியாக நான் செய்து கடந்தாகவேண்டிய குடும்பப் பொறுப்புகளில் இனி ஒன்று மிஞ்சியுள்ளது, சைதன்யாவின் திருமணம்.
சென்றமுறை பிரித்தானியாவில் எந்நிகழ்ச்சியும் இல்லை. நானும் அருண்மொழியும் நண்பர் முத்துக்கிருஷ்ணனுடன் வடக்கு பிரித்தனையாவில் ஏரிமாவட்டத்தில் வேர்ட்ஸ்வொர்த் பிறந்து வாழ்ந்த மண்ணில் சில நாட்கள் தங்கியிருந்தோம். இம்முறை மூன்று நிகழ்வுகள். அன்று அஜிதன் நடத்தும் மேலைத்தத்துவ வகுப்புகள். அஜிதன் இவ்வகுப்புகளை வெள்ளிமலையில் மூன்றுமுறை நடத்தியிருக்கிறார். மேலைச்சிந்தனைதான் நம் கல்வி, வாழ்க்கைப்பார்வை அனைத்தையும் தீர்மானிக்கிறது. அதை அறிவதற்கான ஒரு தொடக்க வகுப்பு இது.
தத்துவத்தை அறிமுகம் செய்வதகான இரண்டு சிறந்த வழிகள் உள்ளன. ஒன்று, ஒட்டுமொத்த தத்துவத்தையும் ஒரே சித்திரமாக பார்த்துவிட்டு, ஒவ்வொரு புள்ளியாக விரிவாக்கம் செய்வது. இரண்டு, தத்துவத்தின் மையக்கேள்விகளுக்குள் நேரடியாகவே பாய்ந்துவிடுவது. நான் முதல் வழியை கடைப்பிடிக்கிறேன், அஜிதன் இரண்டாவது வழியை. ஏ.வி.மணிகண்டன் மேலைக்கலையின் கொள்கைகளை பயிற்றுவிப்பதும் நேரடியாக மையத்துக்குள் கொண்டுசெல்வதாகவே உள்ளது. ஜெயக்குமார் இந்தியச் சிற்பக்கலையை என்னைப்போல படிப்படியாகக் கற்பிக்கிறார். அவரவர் தெரிவு என்றுதான் அதைச் சொல்லவேண்டும்.
அஜிதனின் வகுப்பு நடுவே என்னுடைய ஒரு சிறு உரை– மேலைத்தத்துவக் கல்வி இந்திய தத்துவத்தை அறிய ஏன் முக்கியமானது என்ற தலைப்பில். மேலைத்தத்துவம் புறவயமான ஒரு பயிற்றுமுறையை உருவாக்கியுள்ளது. அதன் அடிப்படையில்தான் நாம் இப்போது நவீனக் கல்வியை கற்றுவருகிறோம். அதே பாணியில் இந்திய தத்துவ மரபை அறிவதுதான் எல்லாவகையிலும் பயனுள்ளது. அறிமுகமமேலைத்தத்துவ அறிமுகம் அந்த அணுகுமுறையை இன்னும் கூர்மையானதாக ஆக்கும்.
இன்னொரு நிகழ்வு என்னுடைய அறம் கதைகளின் தொகுப்பாகிய Stories of the True பற்றிய ஓர் அறிமுகக்கூட்டம். இம்முறை தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம் என வெவ்வேறு மொழிகளைச் சேர்ந்தவர்களின் பதிவுகளுடன் ஒரு தென்னிந்திய இலக்கிய விழாவாக இதை நடத்துகிறோம். இந்தவகையில் நிகழும் முதல் நிகழ்வு இது. அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளிலும் புலம்பெயர்ந்தோர் மொழிவாரியாகப் பிரிந்தே இருக்கிறார்கள். அவர்களை ஒருங்கிணைப்பதற்கான முயற்சியின் தொடக்கம் இது.
மூன்றாவது நிகழ்வுதான் இந்தப் பயணத்தின் முதன்மையானது எனலாம். வடக்கு பிரித்தானிய தமிழ்ச்சங்க அமைப்பு ஒருங்கிணைக்கும் இவ்விழாவில் . அஜிதன் எழுதத்தொடங்கி 3 ஆண்டுகளே ஆகின்றன. என் அறுபதாவது அகவைநிறைவை ஒட்டி எனக்கான ஒரு பரிசாக அவன் எழுதிய நாவல் மைத்ரி. அது தன்னிலுறையும் எழுத்தாளனை அவனே கண்டடைய வழிவகுத்தது. தொடர்ந்து இரண்டு சிறுநாவல்கள் (அல் கிஸா, மருபூமி) குறுநாவல் ( ஆயிரத்து கப்பல்கள்) மற்றும் சிறுகதைகள் எழுதியிருக்கிறான். முடியாட்டம், போர்க்ரோஸ்ட், ஆசீர்வாதம் ஸ்டுடியோஸ் என ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு களம் சார்ந்தவை. இரண்டாவது சிறுகதைத் தொகுதி வெளிவரவுள்ளது. பலவகையான கதைகள் அடங்கிய உயிர்த்துடிப்பான உலகம் அஜிதனுடையது. மிக எளிதான காட்சித்தீற்றல்கள் வழியாக கவித்துவம் நோக்கிச் செல்வது. இந்த ஏற்பு அவனுக்கு மேலும் ஊக்கத்தை அளிக்குமென நினைக்கிறேன்.
லண்டனில் இருந்து நாகர்கோயில் வந்து, இரண்டே நாள் இடைவெளியில் விஷ்ணுபுரம் விருது விழா. விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கான நிதிக்கோரிக்கையை விடுக்க காலதாமதமாகிவிட்டது. ஆகவே நிதி மிகக்குறைவாகவே இதுவரை வந்துள்ளது. வரும் என நம்புகிறேன், ஆயினும் ஒரு கவலையாகவே அது உள்ளே உள்ளது. அத்தகைய சிறுகவலைகளை கூடுகட்ட மென்பஞ்சு பொறுக்கி கொண்டுசெல்லும் சிறுகுருவி போல எப்போதும் அலகில் வைத்திருக்கிறேனா என்ன?
ஆசீர்வாதம் மரியதாஸ்
ஆசீர்வாதம் மரியதாஸ் அக்டோபர் 26, 1941-ல் இலங்கை குருநகரில் ஆசீர்வாதம் தம்பதிகளின் மகனாகப் பிறந்தார். சிறு வயது முதலே பாரம்பரிய நாட்டுக் கூத்தின் கலையில் ஈடுபட்டார்.
ஆசீர்வாதம் மரியதாஸ் – தமிழ் விக்கி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

