அரசைக் குற்றம் சாட்டினால்…

நண்பர் ஒருவர் இந்த திரைச் சொட்டை எனக்கு அனுப்பி ‘தமிழகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பாருங்கள்’ என்று எழுதியிருந்தார். அவருக்கு இந்தியாவெங்கும் அரசு அலுவலகங்கள் எப்படி செயல்படுகின்றன என்பது தெரியாது என்று நினைக்கிறேன் .நான் பி.எஸ்.என்.எல் ஊழியனாக பணியாற்றி காலத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திலேயே ஏறத்தாழ இந்தச் சூழல்தான் நிலவியது.

எனக்கு இரண்டு அனுபவங்கள் உண்டு. நான் 2000த்தில் கனடா செல்வதற்காக விசா விண்ணப்பம் செய்ய என்னுடைய ஊதியச் சான்றிதழைப் பெறுவதற்காக துறைஅதிகாரி என்னிடம் பணம் எதிர்பார்த்தார். அந்த அதிகாரியின் அணுக்கமான கடைநிலை ஊழியர் அவர் பணம் எதிர்பார்ப்பதை என்னிடம் சொன்னார். நான் பணம் அளிக்க முடியாது என்று சொன்னேன். நீங்கள் அந்த சான்றிதழ்களை பெறவே போவதில்லை என்று ஊழியர் சொன்னார்.

நான் நேரடியாக அந்த அதிகாரியிடம் போய்க் கேட்டேன். .’நான் என் ஊதியத்தில் ஒரு பங்கை என் மதத்துக்குக் கொடுப்பவள், ஆகவே எனக்கு லஞ்சம் பெறுவது பாவம் அல்ல’ என்று அந்த அதிகாரி என்னிடம் சொன்னார். நான் துறையின் உச்ச அதிகாரியிடம் நேரடியாக சென்று புகார் சொன்னேன். அவர் அந்த பெண்மணியை கூப்பிட்டு எச்சரித்தார். உடனடியாக சான்றிதழ் தரப்பட்டது .ஆனால் மூன்று நகல்கள் தரப்பட வேண்டும். இரண்டு நகல்களில் மட்டுமே கையெழுத்து போட்டு தந்திருந்தார். நான் டெல்லிக்குக் கிளம்பிச் சென்ற பிறகுதான் இரண்டு நகல்களில் கையெழுத்து இல்லை என்று கண்டறிந்தேன். ஆனால் நல்ல வேளையாக விசா விண்ணப்ப இடத்தில் பிற இரண்டிலும் கையெழுத்து இல்லை என்பதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அதில் என்னிடம் கையெழுத்திடச் சொல்லி, என்னுடைய சான்றுரையையே கணக்கில் கொண்டார்கள். எல்லா சான்றிதழ்களுக்கும் சொந்த சான்றே போதுமானதாக இருந்தது.

அதன்பின் நான் பணி ஓய்வுபெற்றேன். என் ஓய்வூதியப்பயன்கள் கிடைக்க இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியது. அதை இந்த தளத்திலேயே எழுதியிருந்தேன். ஏனென்றால் நான் அந்த ஓய்வூதியப்பயன்களுக்குப் பின்னால் செல்லவில்லை.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு ஊழியர்கள் இந்த உளநிலையிலேயே உள்ளனர். மக்களைச் சந்திக்கும் நிலையில் இருக்கும் ஊழியர்கள் எல்லாம் நேரடியாக பலவகையிலும் லஞ்சம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றும், தங்களுக்கு எதுவும் வரவில்லை என்றும் நிர்வாக அலுவலர்கள் நினைக்கிறார்கள. ஆகவே செயல் ஊழியர்கள் தங்களிடம் ஏதேனும் பணிக்காக வரும்போது நிர்வாக ஊழியர்கள் அவர்களிடம் பணம் எதிர்பார்க்கிறார்கள்.

உண்மையில் அதில் ஒரு நியாயமும் உள்ளது. மக்களைச் சந்திக்கும் ஊழியர்கள் பாதி என்றால் அலுவலகத்துக்குள்ளே இருக்கக்கூடியவர்கள்தான் எஞ்சியோர். மக்களைச் சந்திப்பவர்களில் 90 சதவீதம் பேரும் லஞ்சம் பெறுபவர்களே. சூறையில் ஒரு பகுதி பிறருக்கும் கிடைக்கவேண்டும் அல்லவா? இதில் சிக்கிக் கொள்பவர்கள் லஞ்சம் வாங்காத நேர்மையான ஊழியர்கள்தான். அவர்கள் அனைவருக்கும் லஞ்சம் கொடுத்தாக வேண்டும், நாங்கள் லஞ்சம் வாங்கவில்லை என்று சொன்னால் எவரும் நம்ப போவதில்லை.

இந்த புகாரில் என்ன நிகழும்? அரசு ஊழியனாக இருந்தவன் என்ற நிலையில் நான் ஒன்று சொல்ல முடியும், ஒன்றும் நிகழாது. பெரும்பாலும் இந்த குறிப்பிட்ட காகிதம் மட்டும் உடனடியாக பைசல் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஊடகச் செய்தி ஆகிவிட்டமையால் மேலிடத்தில் இருந்து அதைக் கூப்பிட்டு விசாரிப்பார்கள். ஆகவே அதை மட்டும் உடனடியாக அதை மேலே அனுப்புவார்கள். அல்லது வேண்டுமென்றே தவறான ஏதேனும் துறைக்கு அனுப்பி விடக் கூடும்.அல்லது ஏதேனும் உபரி விசாரணைகளுக்கான கேள்விகளைக் கேட்டு திருப்பி அனுப்பவும் வாய்ப்பு உண்டு.

ஒரு காகிதத்தை பல ஆண்டுகள் சட்டபூர்வமாக ஒத்தி போட்டுக் கொண்டே இருக்க அரசு அலுவலகங்களில் எல்லா வழிகளும் உண்டு. தவறான முகவரிக்கு ஒரு கடிதத்தை வழிநடத்தி விடுவது என்பது ஒரு பழக்கமான வழி. அது ஒரு கவன குறைவாகத்தான் கொள்ளப்படுமே ஒழிய ஒரு பிழையாக கொள்ளப்படாது. ஆகவே அதற்கு பெரிய தண்டனைகளும் இருக்காது.  ஆண்டுக் கணக்கில் சில விண்ணப்பங்களை, சில கடிதங்களை திசை திருப்பி நடவடிக்கைகளை தாமதப்படுத்தவோ அல்லது நிறுத்தி விடவோ கூட முடியும் .

இதே போன்று தமிழகத்தில் பலருக்கு தெரியாத ஒரு நிகழ்வு கேரளத்தில் நடைபெற்றது. திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சிறுநீரகத்துறை அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர் மருத்துவர் ஹாரிஸ் சிறைக்கல். அவர் இடதுசாரிச் சிந்தனை கொண்டவர், மாணவராக கட்சியின் இளைஞர் அணியில் பணியாற்றியவர், இணையத்தில் தொடர்ச்சியாக இடதுசாரி அரசுக்கு ஆதரவாக எழுதி வருபவர்.அவர் மிக நேர்மையானவர் என்றும், மிக மிகத் திறமையான அறுவை சிகிச்சை நிபுணர் என்றும், உண்மையிலேயே ஓர் ஏழை பங்காளர் என்றும் ஏற்கனவே பெரும் புகழ் பெற்றவர். அவர் ஒரு புகாரை முகநூலில் எழுதினார்.

திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சைக்கு தேவையான பல்வேறு கருவிகள் பழுதுபட்டுள்ளன என்றும்; நீண்டகாலமாக அவை பழுது தீர்க்கப்படவில்லை என்றும்; மிக அவசியமான சில கருவிகள் வாங்கப்படவே இல்லை என்றும்; மருந்துகள் மிக மிக குறைவாக இருப்பதினால் அறுவை சிகிச்சை அனேகமாக செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும்; இதை பலமுறை நேரிலும் கடிதம் வழியாகவும் புகார் செய்து கூட எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் ஹாரிஸ் முகநூலில் எழுதினார்.

உடனடியாக அவர் மீது கடும் விமர்சனங்களை இந்திய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும், அரசு சார்பாளர்களும் முன்வைத்தார்கள். ஆனால் அவர் இடதுசாரி என்பதனால் முதலில் அந்த எதிர்த்தாக்குதல் மிக மழுங்கியதாகவே இருந்தது. அவருடைய நேர்மையைச் சந்தேகப்படவில்லை என்றும், என்ன நடந்தது என்று விசாரிக்கப் போவதாகவும் அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். ஆனால் மெல்ல மெல்ல அவர் மீது இணையத்தாக்குதலும் கடும் நடவடிக்கைகளும் ஆரம்பித்தன. முதலில் அவதூறுகள் தொடுக்கப்பட்டன. பின்னர் அவரை சதிகளில் சிக்கவைக்கும் நடவடிக்கைகள் தொடங்கின. தன்னுடன் தோளோடு தோள்நின்றவர்களே சிறைக்கு அனுப்பி ஒழிக்க முயன்றனர் என ஹாரிஸ் மனம் கசந்து எழுதினார்.

என்னென்ன நிகழ்ந்தது என்பதை இப்போது எண்ணி பார்க்கையில் திகைப்புதான் ஏற்படுகிறது. ஒரு திரைப்படத்திற்கு நிகரான நிகழ்வுகள். அவருடைய அறை உடைக்கப்பட்டு அங்கு ஏதோ பொருட்கள் வைக்கப்பட்டன. ஆனால் அதை உடனடியாக அவர் தன்னுடைய கணிப்பொறியில் சிசிடிவி பதிவு வழியாக கண்டு இணையத்தில் அறிவித்தார். அந்த அறை உடனே பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஹாரீஸ் ஊழல் செய்ததாக அதிகாரிகள் பேட்டி கொடுத்தனர். (அப்போது எவரோ ஃபோனில் அழைத்து ஆணைகளை அளிக்க சார் சார் என்று அதிகாரிகள் தலையாட்டினர். ‘யார் அந்த சார்?’ என பெரிய விவாதம் நிகழ்ந்தது)

ஹாரீஸ்தான் அனைத்து ஊழல்களையும் செய்தார் என்றும், அவர்தான் கருவிகளை பழுதடைய வைத்தார் என்றும், அவர் அலுவலகத்திலிருந்து சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்றும் குற்றச்சாட்டுகள் உருவானயின. தொடர்ச்சியாக ஹாரீஸ் வேட்டையாடப்பட்டார். (இணையத்தில் முழுத்தகவல்களையும் தேடிப்படிக்கலாம்)

தொடர்ச்சியாக மருத்துவத்துறை அதிகாரிகள் அவரை அவதூறு செய்தனர், துறை சார் நடவடிக்கை ஒவ்வொன்றாக கடுமையாகிக் கொண்டே செல்ல ஒரு கட்டத்தில் மொத்த அரசு எந்திரமே அவருக்கு எதிராக திரும்பி அவரை வேட்டையாடத் தொடங்கியது. அதன் பிறகு அவர் முழுமையாக சரணடைந்தார். இடதுசாரி அரசிடம்  மன்னிப்பு கோரினார். ஆனால் இன்னும் அவர் தண்டனை நிலையிலே இருக்கிறார். இன்னும் என்னென்ன தண்டனைக்கு அவர் ஆளாவார் என்று சொல்ல முடியாது. உண்மையில் இப்போது அரசு வேலையை விட்டு தனியார் மருத்துவத்திற்கு நோக்கி செல்வதற்கு கூட அரசு தடை விதிக்கும் நிலைதான் உள்ளது.

ஒருபோதும் இந்த வகையான அக ஊழலை வெளிக்கொண்டுவரும் ஊழியர்களை அரசு விரும்புவதில்லை. ஏனெனில் மொத்த நிர்வாகத்திலே மிகப் பெரும்பாலானவர்கள் ஊழல் செய்பவர்கள்தான். ஒரு கடைநிலை ஊழியர் செய்யும் ஊழலில் ஒரு பகுதி அவருக்கு நேர் மேலே இருப்பவருக்கு செல்கிறது. அவ்வாறு படிப்படியாக தொகை கீழிருந்து அனைவருக்கும் செல்கிறது. ஒரு கடைநிலை ஊழியர் 100 ரூபாய் லஞ்சம் வாங்கினார் என்றால் அதில் ஐந்து ரூபாய் அந்த துறை சார்ந்த அமைச்சர் கையிலேயே சென்று விடுகிறது என்று சொல்லலாம்.

ஆகவே ஒருவர் அமைப்பை குற்றம் சாட்டுகிறார் என்றால் அந்த அமைப்பு அவரை வேட்டையாட தொடங்குவதில் ஆச்சரியம் இல்லை. திரு ஜெய்சனுக்கு எதிராக திமுகவினர் இன்னும் களமிறங்காததுதான் கொஞ்சம் ஆச்சரியமளிக்கிறது. ராஜன் குறையின் ஆய்வு, மனுஷ்யபுத்திரனின் ஆக்ரோஷமான கட்டுரையை எதிர்பார்க்கிறேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 17, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.